Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கையில் கல்வெட்டியல் ஆய்வுகள் : 1875 – 1975 ஒரு நூற்றாண்டு வரலாறு - பேராசிரியர் வி.சிவசாமி

பேராசிரியர் வி.சிவசாமி எழுதிய இக்கட்டுரை யூலை மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது. தமிழில் இதனை மொழியாக்கம் செய்தவர் க.சண்முகலிங்கம். நன்றியுடன் இங்கு வெளியிடுகிறோம்.
கல்வெட்டுக்களை நெறி - முறை சார்ந்த திட்டத்தின் படி முறைப்படி ஆராய்வு செய்வதைக் கல்வெட்டியல் ஆய்வு என்பர். கல்வெட்டுகளின் பெரும்பங்கு கற்களில் பொறிக்கப்பட்டவை. செப்பேடுகள் என்னும் உலோகப் பொறிப்புக்களான கல்வெட்டுக்களும் உள்ளன. மட்பாண்டங்களிலும் ஓடுகளிலும் கூடச் சில கல்வெட்டுப் பொறிப்புகள் உள்ளன. இலங்கையில் கி.மு 3ம் நூற்றாண்டில் எழுத்துக் கலை தோற்றம் பெற்றது. அக்காலத்தில் இருந்து கல்வெட்டுக்களை வெளியிடும் மரபும் தொடங்கியது. கி.மு. 3ம் நூற் றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக இலங்கையில் கல்வெட்டு கள் வெளிவந்தன. ஐரோப்பிய காலனிய ஆட்சியின் போது, குறிப்பாக போத்துக் கீசரும் டச்சுக்காரரும் ஆட்சி செய்தபோது கரையோர மாகாணங்களில் குறைந்தளவு கல்வெட்டுக்களே வெளியிடப்பட்டன. சுதந்திர அரசாக 1815 வரையிருந்த கண்டி இராச்சியப் பகுதியில் இக்காலத்திலும் கல்வெட்டுக்கள் வெளியிடப்படும் வழக்கம் இருந்து வந்தது.

இலங்கையின் முற்காலக் கல்வெட்டுகள் பிராமி வரிவடிவில் பொறிக்கப்பட்டன. இக்கல்வெட்டுக்கள் பெரும்பான்மை தானம் அல்லது கொடை வழங்கும் செய்தியை வெளிப்படுத்துவன. இவை பிராமிக்கல் வெட்டுகள் என அழைக்கப்படுவன. இலங்கையில் கிடைத்த பிராமிக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 1500 ஆகும். இவை இலங்கையின் மொத்தக் கல்வெட்டுகளின் சரிபாதி எண்ணிக்கையுடையவை. இக்கல்வெட்டுகள் பிராகிரு தம் (முற்பட்ட சிங்களம் - Proto - Sinhala) மொழியில் எழுதப்பட்டவை. அப்பிராமிக் கல்வெட்டுகள் 3ம் நூற்றாண்டுப் பழமை யுடையவை. இவை ஓரிரு சொற்களை உடைய சிறிய கல்வெட்டுகளாக , ஒரு வரியில் மட்டும் அமைந்துள்ளன. காலப்போக்கில் இக்கல்வெட்டுகளின் அளவும், உள்ளடக்கமும் ஓரளவுக்கு விரிவுற்றன. கி.பி. 3ம் 4ம், 5ம் நூற்றாண்டுகளின் பிராமிக் கல்வெட்டுகள் பல வெளியிடப்பட்டன. ஆயின் 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 

பின்னர் 9ம் 10ம் நூற்றாண்டுகளில் பிராமிக் கல்வெட்டுகள் பல தோன்றலாயின. அக்காலம் கல்வெட்டுக்கள் பெரும்பான்மை கற்தூண்களிலும் கற்பல கைகளிலும் வெட்டப்பட்டனவாக இருந்தன. இவற்றுள் சில பிரசாஸ்திகள் என்ற வகையினலாகும். பிரசாஸ்திகள் என்ற வடிவம் இக்காலத்தில் சிங்கள மொழியில் வழக்கில் வந்திருந்தது. 'கிராப்டி' (கிறுக்கல்கள் - Graffiti) என்ற வகை பொறிப்புகள் தனித்துவமான ஒரு வகையின. இவ்வகைக் கல்வெட்டுகளும் இக்காலத் தில் சிகிரியா குன்றின் கண்ணாடி போன்ற சுவர்களில் எழுதப்பட்டன. சோழர்களின் ஆதிக்கம் இலங்கையில் பரவிய காலத்தில் (985 - 1070) தமிழ்க் கல்வெட்டுக்கள் பலவும் வெளியாயின. இக்கால இடை - வெளியின் பின் மீண்டும் சிங்கள மொழிக் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெளிவந்தன. இவை முதலாம் விஜயபாகு காலம் முதல் கோட்டை இராச்சியத்தின் இறுதி வரையான காலத்திற்குரியனவாகும்.

கண்டிப்பகுதியில் 18ம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தமிழ்ச் சாசனங்களும் இக்காலத்தில் வெளியாகின. 12ம் நூற் றாண்டில் பிரசாஸ்திகள் என்ற வகைக் கல்வெட்டுகள் பெருவழக்காக இருந்தன. குறிப்பாக நிசங்க மல்லன் காலத்தில் பிரசாஸ்திகள் பல வெளியாயின. முதலாம் விஜயபாகு காலத்தில் செப்புப் பட்டயங்கள் பல வெளியிடப்பட்டன. விஜயபாகு காலத்தைய பனாக்கடுவ செப்பேடுகளும், நிசங்கமல்லனது அல்லைச் செப்பேடுகளும் இவற்றிற்கு உதாரணங்களாகும். கல்வெட்டுகளின் மொழி என்ற வகையில் கி.மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் முதலான முற்பட்ட சாசனங்களில் சிங்களம் பெரும் பான்மையான கல்வெட்டுகளின் மொழியாக உள்ளது. மிகப் பழைய இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகள் கி.பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

சோழர் காலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் பல பொறிக்கப்பட்டன. பொலன்நறுவகோட்டை காலங்களின் முக்கியமான அரசர்கள் சிலர் தமிழ்க் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இன்றுவரை யாழ்ப்பாண அரசர்களினது என்று சொல்லக்கூடியதாக ஒரே ஒரு கல்வெட்டே கிடைத்துள்ளது. அக்கல்வெட்டும் கூட யாழ்ப்பாணத்தில் இருந்து தூரத்தில் உள்ள கொட்டகம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. மகாயான பௌத்தத்தோடு தொடர்புடைய சில சமஸ்கிருதக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. தமிழ், சீனம், பாரசீகம் ஆகிய முன்று மொழிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று காலியில் கண்டெடுக்கப் பட்டது. இது தனித்துவம் மிக்கதோர் கல்வெட்டு என்பது குறிப்பிடப்பட வேண்டியது. போத்துக்கேயர்களும் டச்சுக்காறர்களும் கட்டிய கட்டடங்களில் பொறிக்கப்பட்டனவான கல்வெட்டுகள் சிலவும் உள் ளன. மேற்குறித்த வகைக் கல்வெட்டுகள் யாவும் இலங்கையின் அரசியல், சமூகம், சமயம், பண்பாடு , பொருளாதார நிலை போன்ற விடயங்கள் குறித்து விளக்குவனவாக உள்ளன. இந்திய வரலாற்றைப் பொறுத்த வரை பண்டைக் காலம், மத்திய காலம் ஆகிய இரு காலத்து வரலாறுகளையும் அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுகள் முதன்மையான ஆதாரங்களாக உள்ளன.

இலங்கையில் பாளி வரலாற்று நூல்கள் வரலாற்று மூலங்களாக இருப்பதால் கல்வெட்டுகள் இரண்டாம் நிலையான துணைச் சான்றுகளாகவே உள்ளன எனலாம். பாளி இலக்கியங்களில் இருந்து இலங்கையின் சமய நிறுவனங்கள் பற்றியும், பொருளாதார நிலை பற்றியும் பெற்ற தகவல்களை உறுதிப்படுத்தும் துணைச்சான்றுகளாக இலங்கைக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. அத்தோடு இக்கல்வெட்டுகளை ஆராய்வதன் மூலம் இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் வளர்ச்சியையும், அம்மொழிகளின் வரிவடிவங்களின் வளர்ச்சிகளையும் அறிந்து கொள்ளவும் முடிகிறது. இது வரை கூறியவை அறிமுகமாக கொள்ளப்படத்தக்கவை. அடுத்து கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கல்வெட்டு ஆய்வில் அடையப்பெற்ற வளர்ச்சிகளை நோக்குவோம்.

19ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதி வரை இலங்கையின் கல்வெட்டுகள் மூடுண்ட ஒரு புத்தகம் போன்றே இருந்தன. இதற்கு முந்திய காலத்தில் ஐரோப்பியர் சிலர் கல்வெட்டுகள் பற்றிக் கவனம் செலுத்தினார்கள் ஆயினும், அவர்கள் முறைப்படியான ஆய்வில் ஈடுபடவில்லை. உதாரணமாக பெர்ணா ஓடி குவெய்றோஸ் என்ற பாதிரியாரின் The Temporal and Spiritual Conquest of the Island of Ceylon என்ற நூலில் கல்வெட்டுகள் பற்றி உள்ள குறிப்பை எடுத்துக் காட்டலாம். குவெய்றோஸ் பிராமிக்கல் வெட்டுகள் பற்றிக்குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அவற்றைத் தவறாக கிரேக்க மொழிப் பதிவுகள் என்று கூறினார். எதிர்காலம் பற்றிய ஆருடம் என்று கூறத்தக்க திருகோணமலைத் தமிழ்க் கல்வெட்டுப் பற்றியும் குவெய்றோஸ் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கைதியாக வாழ்ந்தவரான றொபேர்ட் நொக்ஸ், அப்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் பற்றித்தம் நூலில் பட்டும் படாமலும் சொல்லிச் செல்வதையும் காணலாம்.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்வெட்டுக்கள் பற்றிய முறைப்படியான ஆய்வு தொடங்கியது. புராதனமான பொருட்களைக் கண்டுபிடித்தலும் பேணுதலும் தொடர்பாக பிரித்தானியாவிலும் இலங்கையிலும் அக்காலத்தில் ஏற்பட்டிருந்த ஆர்வத்தின் பின்னணியில் கல்வெட்டியல் கல்வி பற்றிய ஆர்வமும் வளர்ந்தது. புராதன பொருட்கள் பற்றிய ஆய்வு ஆர்வம் 'அன்டிகுவாரியன் ரிசேர்ச்' (Antiquarian Research) எனப்பட்டது. இது பிரித்தானியாவில் பேரார்வமாகப் பரவியிருந்தது. அங்கிருந்து இலங்கைக்கு ஆளுநராக வந்த வில்லியம் கிரகெரி இவ்விட யத்தில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார்.

அவர் கொழும்பு அருங்காட்சியகத்தை நிறுவினார். அருங்காட்சியகம் பற்றி சட்ட சபையில் உரையாற்றிய போது அவர் கல்வெட்டுக்கள் பற்றி "அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்களின் புகைப்படங்கள், அச்சுப்பதிவுகள், கையால் படியெடுக்கப் பட்ட பிரதிகள் என்பனவற்றை வைக்க வேண்டும், நாடு முழுவதிலும் காணப்படும் கல்வெட்டுகளை மீள்பிரதி செய்து இங்கு கொண்டுவரவேண்டும் என்பது என் திட்டம்" என்று குறிப்பிட்டார். இக்கல்வெட்டுகளின் இயல்புகளிலும், மொழி வழக்கிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இவை மொழி நூல் வல்லாரின் ஆழ்ந்த பரிசீலனைக்கும் அக்கறைக்கும் உரியவை. இவை பற்றிய ஆய்வு பண்டைய வழமைகள், சமயப் பண்பாடுகள், இலங்கையின் பண்டைய வரலாறு ஆகியன தொடர்பான விடயங்களை தெளிவு - படுத்தும் என்று அவர் கூறினார். மேலே தரப்பட்ட அவரது கூற்று, கல்வெட்டியல் தொடர்பாக அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. ஆங்கிலக் கல்வி கற்ற இலங்கையினர் அக்காலத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையினராகவே இருந்த போதும் அவர்கள் சக்திமிக்க ஒரு குழுவாக விளங்கினர். அவர்களுள் சிலராவது இலங்கையின் புகழ்மிக்க கடந்த காலம் பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாய் இருந்தனர். தொல்பொருட்கள் பற்றிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளை அவர்கள் எழுதிப் பருவ இதழ்களில் பிரசுரித்தனர். சிலோன் அல்மனாக், ஆசிய வேத்தியல் கழகத்தின் இலங்கைக் கிளையின் பருவ இதழ் ஆகியவற்றில் பலரது கட்டுரைகள் அக்காலத்தில் பிரசுரமாயின. அப்பருவ இதழ்களில் ஆர்மர், றேணர், ஹார்டி, ஜோர்ஜ்லி, காசிச் செட்டி, டி அல்விஸ், புரோடி, நிஸ் டேவிட்ஸ் என் போரும் பிறரும் எழுதியவை ஆர்வத்தைத் தூண்டுவனவாய் இருந்தன. இதன் பயனாக காலம் சென்ற ஆளுநர் வில்லியம் கிரகரி , காலம் சென்ற கலாநிதி போல் கோல்ட்சிமித் அவர்களின் சேவையை கல்வெட்டியல் ஆய்வுக்கு பெற்றுக் கொள்வதென முடிவு செய்தார். அவ்வறிஞர் மூலம் வடமத்திய மாகாணம், மேற்கு மாகாணம் தெற்கு மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளைத் திட்ட முறையாக ஆய்வு செய்வது (ஆளுநரின்) நோக்கமாக இருந்தது. போல் கோல்ட்சிமித், மொழி நூல் கீழைத்தேயவியல் கல்வி ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற யேர்மன் நாட்டு அறிஞராவர். அவரை பிரித்தானிய வேத்தியல் கழகம் சிபார்சு செய்திருந்தது.

கலாநிதி போல் கோல்ட்சிமித் அவர்களே கல்வெட்டியலாளர் என்ற உத்தியோகப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது நபர். அவர் யேர்மனி தேசத்தைச் சேர்ந்த இளம் அறிஞர். 1875ல் கடமையை அவர் பொறுப்பேற்ற போது அவருக்கு இருபத்தி நான்கு வயதே ஆகியிருந்தது. (இந்நிய மனம் இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்றது.) அவர் பதவி வகித்த இரு ஆண்டு காலத்தில் கல்வெட்டியல் தொடர்பாக முன்னோடியான பல பணிகளை செய்தார். கல்வெட்டுகளைச் சேகரித்தல், அவற்றை வாசித்து பொருள் கொள்ளுதல், விளக்கமளித்தல் என்பனவும் மொழியியல் விளக்கங்களுடன் அவற்றை பிரசுரம் செய்தலும் அவரது பணிகளாக இருந்தன. அவரது கல்வெட்டியல் ஆய்வுகள் 'செசனல் பேப்பர்ஸ்' (Sessional Papers) எனப்படும் பிரசுரங்களாக 1875, 1876 ஆண்டுகளில் வெளியாயின. சிங்கள கல்வெட்டுகள் பற்றிய அவரது குறிப்புகள் ஆசிய வேத்தியல் கழகத்தின் பருவ இதழ் 1879ல் வெளியாயின. இக்கட்டுரைகளின் ஆய்வுப் பெறுமதி கருதி இவை 'இன்டியன் அண்டிகுவரி' என்ற சஞ்சிகை யில் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. அவர் பணியில் இருந்த போது மலேரியா நோய் வாய்ப்பட்டு இறந்தார். இவ்வாறாக அவர் இலங்கையின் கல்வெட்டியலிற்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தார். ஆளுநர் கிரகரி இலங்கை சாசன மஞ்சரி (Corpus Inscriptionum Zeilanicarum) ஒன்றை வெளியிடுவதற்கு எண்ணியிருந்த திட்டம் நிறைவேறாது போயிற்று.

கோல்ட்சிமித் அவர்களின் அகால மரணத்தின் பின்னர், அவரின் பணியைத் தொடர் வதற்காக கலாநிதி நு.முல்லர் என்ற இன்னொரு யேர்மன் அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் தமக்கு முன்னர் பதவி யில் இருந்தவர் எழுதிய அறிக்கைகளை வைத்துக் கொண்டு மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஹம்பாந்தோட்டை மாவட்டம் வட மேற்கு மாகாணம், என்ப னவற்றிலும் இன்னும் பல இடங்களிலும் கல்வெட்டுகளைத் தேடிப் பரிசோதித்தார். இலங்கைக் கல்வெட்டுகள் பற்றிய அவரது ஆய்வுகள் 1878, 1880, 1881 ஆகிய ஆண்டுகளின் ஆசியவேத்தியல் கழகத்தின் இலங்கைக் கிளையின் பருவ இதழிலும் இன்டியன் அன்டிருவரி, பண்டைய இலங்கைக் கல்வெட்டுகள் நூல் இரு தொகுதிகளிலும் பிரசுரமாயின. பண்டைய இலங்கைக் கல்வெட்டுகள் நூல் 172 கல்வெட்டுகளை உரோம வரிவடிவத்தில் தந்திருப்பதோடு, அவற்றின் மொழிபெயர்ப்பு அச்சுருக்கள் என்பனவற்றையும் கொண்டிருந்தது. முல்லர் 1879ல் தமது பதவியில் இருந்து விலகினார். முல்லரின் ஆய்வுகள் கோல்ட்சிமித் எழுதியவற்றை விட திட்டமுறையில் அமைந்தவை. அவரது பண்டைய கல்வெட்டுக்கள் நூல் பின்னாளில் இன்னும் சிறப்பான முறை யில் வெளியிடப்பட்ட 'எபிகிறாபியா சிலனிக்கா ' (Epigraphia Zelanica) தொடர் நூல்களுக்கு முன்னோடியாக அமைந்தன.
இலங்கைக் கல்வெட்டுகளை புதியதொரு பதிப்பாக வெளியிடும் தேவை இருந்தது. 1890ல் தொல்லியல் திணைக்களத்தின் தலைவராக நியமனம் பெற்ற திரு எச்.சி.பி. பெல் புதிய பதிப்பின் தேவையை நன்கு உணர்ந்தார். அவர் தொல்லியல் ஆய்வுகளையும் தொடர்ந்து முறைப்படி நடத்தினார். அவர் நூற்றுக்கணக்கான பிராமிக் கல்வெட்டுகளைக் கண்டெடுத்துப் பிரசுரித்தார். அவற்றிற்கு வாசிப்பு செய்து விளக்கம் அளித்தல், மொழி பெயர்த்தல் என்பனவும் அவரால் செய்யப்பட்டன. 'எபிகிறாபியா சிலனிக்காவின் முதலாவது பதிப்பாசிரியரான டொன் மார்ட்டினோ டிசில்வா விக்கிரமசிங்க, யொன் ஸ்ரில் ஆகியோர் பெல் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அவரது உதவியாளர்களாவர்.

அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த எபிகிறாபியா இண்டிகா (EPI Graphia Indica) என்ற பருவ இதழினைப் போன்று கல்வெட்டியல். தொடர்பான பருவ இதழ் இலங்கையில் வெளியிடப்பட வேண்டும் என்பதை திரு. எச்.சி.பி . பெல் அரசாங்கத்திற்கு தமது ஆலோசனையாக முன்வைத்தார். இந்த ஆலோசனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது . லண்டன் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், சிங்களம், தமிழ் ஆகிய பாடங்களின் விரிவுரையாளராக இருந்த டொன் மார்டினஸ் சில்வா விக்கிரமசிங்கவை எபிகிறாபியா சிலனிக்கா என்ற பெயரில் இலங்கைக் கல்வெட்டுகளை பதிப்பித்து வெளியிடும் பணிக்கு அரசாங்கம் நியமனம் செய்தது. அப்பணியை லண்டனில் இருந்தவாறே அவர் செய்து கொடுத்தார். 1904ல் அதன் முதலாம் தொகுதி வெளியாயிற்று, 1929ல் அவர் பணி ஓய்வு பெறும் வரை அவர் தொடர்ந்து அதன் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளையும் வெளியிட்டார். இலங்கை சிவில் சேவை உத்தியோகத்தராக இருந்த திரு எச். டபிள்யு. கொட்றிங்டன் மூன்றாம் தொகுதியின் பதிப்பு வேலையில் விக்கிரமசிங்கவிற்கு ஒத்தாசையாக இருந்தார். கொட்றிங்டன் நான்காம் தொகுதியை வெளியிட்டார். கொட்றிங்டன் இலங்கையின் நாணயவியல் ஆய்வுகளிற்குப் புகழ்பெற்றவர். ஆயினும் இலங்கைக் கல்வெட்டியலுக்கும் அவரது பங்களிப்பு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

விக்கிரமசிங்கவிற்கு அடுத்து கல்வெட்டியலாளராக நியமனம் பெற்றவர் கலாநிதி. சேனரத் பரணவித்தான ஆவர். இவர் 1929ம் ஆண்டு கல்வெட்டியலாளராக நியமனம் பெற்றார். அதன் பின்னர் 1940 - 1956 காலத்தில் அவர் தொல்லியல் ஆணையாளர் பதவியில் கடமையாற்றினார். அவர் கல்விப் புலமையால் சிறந்தோங்கியவர். அவர் தொல்லியல் திணைக் களத்தில் இணைந்து கொண்ட பின்னர் கல்வெட்டியல் ஆய்வுத்துறையில் புதியயுகம் ஒன்று உதயமானது எனலாம். 1972ல் அவர் இறக்கும் வரை கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தல், அவற்றைப் பதிப்பித்தல், விளக்கமளித்தல் ஆகிய பணிகளைச் செய்தார். பெருந்தொகையான கல்வெட்டுக்களை வெளிக்கொணர்ந் தார். தமது தாய் மொழியாம் சிங்களத் தோடு பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளிலும் அவர் அறிவு பெற்றிருந்தார். அவர் சில தமிழ், சமஸ்கிருதக் கல்வெட்டுக்களையும் கூடப் பதிப்பித்துள்ளார். திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி என்னும் கல்வெட்டியல் நிபுணரிடம் இந்தியா சென்று இவர் பயிற்சி பெற்றார். பொலன்நறுவவில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் விஜயபாகுவின் தமிழ் கல்வெட்டே இவரால் பதிப்பிக்கப்பட்ட முதலாவது கல்வெட்டாகும். இலங்கையின் கல்வெட்டியலுக்கு அவரின் பங்களிப்பாக எபிகிறாபியா சிலனிக்கா' தொகுதி IV - V என்பனவற்றையும் சிகிரி கிராபிடி (Sigiri Graffiti) எனப்படும் சிகிரிய சுவரெழுத்துக்கள் பற்றிய இரண்டு தொகுதிகள், இலங்கைக் கல்வெட்டுகள் இரு தொகுதிகள் (கி.பி 4ம் நூற்றாண்டு வரை யானவை) ஆகியவற்றையும் குறிப்பிடலாம். கல்வெட்டுகளின் வரிகளுக்கு இடையில் வெளிப்படும் எழுத்துக்கள் (Interlinear Inscriptions) வகையான கல்வெட்டுக்க ளையும் படித்ததாக அவர் கூறினார். இவை பற்றியும் அவர் நிறைய எழுதியுள்ளார். ஆயினும் இவர் குறிப்பிடும் வரிகளுக்கு இடையிலான எழுத்துக்களின் உண்மைத்தன்மை குறித்து துறை சார் நிபுணர்களான வரலாற்று ஆசிரியர்களும், கல்வெட்டியலாளர்களும் ஐயம் தெரிவித்துள்ளார்கள். ஆகையால் இவ்விடயம் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் உண்மையானவை என நிரூபிக்கப்படும் வரை கல்வெட்டுகள் பற்றிய சுருக்க வரலாறான இக்கட்டுரையில் அவர் குறிப்பிடுவன பற்றிச் சேர்த்துக் கொள்ளவியலாது. வரிகளுக்கு இடையிலான எழுத்துக்கள் (Inter linear Inscriptions) பற்றிய இவர் கருத்துக்களைத் தவிர்த்து, இவரது கல்வெட்டியல் ஆய்வுகளை முழுமையாக தொகுத்து நோக்கும் போது இலங்கையின் கல்வெட்டியலாளர்களில் ஈடு இணை யற்றவராக இவர் விளங்குகிறார். கல்வெட்டியல் பற்றிய அவரது கட்டுரைகள் ஆசிய வேத்தியல் கழகத்தின் இலங்கைக் கிளையின் பருவ இதழிலும் இலங்கை விஞ்ஞான பருவ இதழ் பிரிவு G (Ceylon Journal of Science Sect- G) றிலும் வெளியாயின. பின்னர் யூனிவேர் சிட்டி ஒவ் சிலோன் ரிவியு (The University of Ceylon Review) இதழில் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆராய்ச்சிப் பேராசிரியராக (1957 -1965) இருந்த காலத்திலும் வெளியாயின. 1947ம் ஆண்டு தொல்லியல் திணைக்களத்தின் பணியில் சேர்ந்து கொண்ட கலாநிதி சி.ஈ. கொடகும்புற சில ஆண்டுகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந் தார். பின்னர், மீண்டும் திரும்பி வந்து காலாநிதி பரணவித்தானவின் இடத்தில் தொல்லியல் ஆணையாளராகப் ஐம்பதுகளின் பிற்பகுதியில் கடமையேற்றார். கொடகும்புற அவர்களும் ஒரு கல்வெட்டியலாளர் ஆவர். அவர் தனக்கு முன்னிருந்த கலாநிதி பரணவித்தானவுடன் இணைந்து எபிகிறாபியா சிலனிக்கா'வின் தொகுதி ஐந்தைப் பதிப்பித்து வெளியிட்டார். அத்தோடு Inscriptions of Ceylon (இலங்கைக் கல்வெட்டுகள் ) நூல் பதிப்பிலும் அவருக்கு உதவினார்.

தொல்லியல் திணைக்களத்தின் உதவி ஆணையாளராக இருந்த கலாநிதி சதா மங்கல கருணாரத்தின லண்டன் பல்கலைக் கழகத்தில் தமது கலாநிதிப் பட்ட படிப்புக்காக இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். ஒரு கல் வெட்டியலாளர் என்ற முறையில் அவர் தமக்கு முன்பு பணி செய்தவர்கள் கல்வெட்டியிலுக்கு செய்த பணியைத் தொடர்ந்தார்.

அரசாங்கத்தால் கல்வெட்டியலாளர்களாக நியமனம் பெற்றவர்கள் கல்வெட்டியலுக்குப் பணியாற்றியிருப்பதோடு வேறு, முழு நேரப் பணிகளில் இருந்தவாறே தமது விருப்புக்குரிய பணியாக கல்வெட்டியல் ஆய்வை மேற்கொண்ட சிலரையும் இவ்விடத்துக் குறிப்பிடுதல் வேண்டும். திரு. ஹென்றி பார்க்கர் (நீர்ப்பாசனப் பொறி யியலாளர்) என்பவரும், திரு. சி.டபிள்யு. நிக்கலஸ் (மதுவரித் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்) என்பவரும் விசேடமாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய கல்வெட்டியலாளர்கள் ஆவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் கற்கைக்குரிய ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்பட்டதும், கல்வெட்டியல் ஆய்வில் மாணவர்களில் ஒரு பகுதியினராவது கரிசனை கொள்ளும் நிலை ஏற்பட்டது. பண்டைய வரலாறு, சிங்களம், தமிழ் ஆகியவற்றில் சிறப்புக் கலைத்துறைப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களுக்கு இலங்கைக் கல்வெட்டியலும் தொல்லெழுத்தியலும் பற்றிய அடிப்படைகள் பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இத்துறையில் பயிலும் மாணவர்கள் சிலரில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமது பட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னர் அவர்களில் சிலர் சிறந்த கல்வெட்டியலாளர்கள் ளாக (உருவாகிக் கொண்டிருந்தனர்) / ஆயினர்.

தொல்லெழுத்தியல் (Palaeography) பற்றிய அறிவு இல்லாமல் கல்வெட்டியல் ஆய்வை முறைப்படி மேற்கொள்ளுதல் இயலாது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக்கள் தொடக்கம் சிங்கள் எழுத்து வரிவடிவம் வளர்ச்சியடைந்த வரலாற்றைக் காட்டும் நெறிமுறைப்பட்ட தொல்லெழுத்தியல் அட்டவணை தயாரிக்கப்படுதலும் மாற்றங்களை விளக்குதலும் மாற்றங்களுக்கான காரணங்களை எடுத்துக் காட்டுதலும் அவசியமான பணியாகும். இப்பணியை தகைமை உடைய அறிஞர்களான கலாநிதி சேனரத் பரணவித்தான, சி.டபிள்யு. நிக்கலஸ், கலாநிதி தெ.விமலானந்த, கலாநிதி பி.ஈ. பெர் ணாண்டோ , கலாநிதி ஏ.எச். டானி ஆகி - யோர் ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளனர். இலங்கையில் தமிழ் எழுத்து வரி வடிவம் வளர்ச்சியுற்ற வரலாறு இனிமேல் தான் எழுதப்பட வேண்டியுள்ளது.

இலங்கையின் கல்வெட்டியல் வரலாறு பற்றிய இச்சிறு ஆய்வுரையில் தமிழ் கல்வெட்டுக்கள் பற்றிக் குறிப்பிடப்படாதுவிடின் அது நிறைவுடைய ஒன்றாக அமைய மாட்டாது, தமிழ்க் கல்வெட்டுக்கள் பற்றி 1950களின் பிற்பகுதி வரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை . ஏறக்குறைய 200 தமிழ்க் கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆயினும் பெரும்பான்மையானவை இருபதாம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. வண குவெஸ்றோஸ் திருகோணமலையில் உள்ள கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை முன்னரே குறிப்பிட்டோம். கலாநிதி முல்லரின் கல்வெட்டுகள் பற் றிய அட்டவணையில் சில தமிழ் கல்வெட்டுக்களும் இடம்பெற்றுள்ளன. முல்லர் அட்டவணை வெளியான காலத்திலே ஹியு நெவில் கிழக்கு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இரு கல்வெட்டுகளை பிரசுரித்தார். 'தப்பிரபேனியன்' என்ற இதழில் பிரசுரமான அக்கல்வெட்டுகளின் உரோமானிய வரிவடிவ எழுத்துப் பெயர்ப்பும், ஆங்கில மொழிபெயர்ப்பும் ஹியு நெவில் அவர்களால் தரப்பட்டிருந்தன. அவரது வாசிப்பும், பொருள் விளக்கமும் குறையுடையதேனும், அவரது முயற்சி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தொல்லியல் திணைக்கள ஆணையாளராக இருந்த திரு. எச்.சி.பி. பெல் தமிழ்க் கல்வெட்டுக்களை திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி என்னும் புகழ்பெற்ற தென்னிந்தியக் கல்வெட்டியலாளரின் உதவியுடன் பதிப்பித்தார். இலங்கையின் இருபத்தியாறு தமிழ்க் கல்வெட்டுகள் திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி பதிப்பித்த 'தென்னிந் =தியக் கல்வெட்டுக்கள்' (South Indian Inscriptions) தொகுதி நான்கில் (1924) இடம் பெற்றன. திரு. பெல் அவர்களே முதற் தடவையாக கொட்டகம் தமிழ்க் கல்வெட்டைப் பதிப்பித்தார். விக்கிரமசிங்க இன்னொரு தமிழ்க்கல்வெட்டைப் பதிப்பித்தார்.

கலாநிதி. எஸ். பரணவிதான சில தமிழ்க் கல்வெட்டுக்களைப் பதிப்பித்துள்ளார். இவர் பதிப்பித்தவற்றுள் புதுமுத்தாவையில் கண்டுபிடிக்கப்பட்டவையும் அடங்கும். காலியில் கண்டெடுக்கப்பட்ட மும்மொழிக் கற்பலகையின் தமிழ் எழுத்துக்களையும் வாசித்துப் பரணவித்தான பதிப்பித்தார்.

முதலியார் இராசநாயகமும் சுவாமி ஞானப்பிரகாசரும் தமிழ் கல்வெட்டுக்களிலும் மிகுந்த ஆர்வத்தைச் செலுத்தினார். சுவாமி ஞானப்பிரகாசர் கல்வெட்டுக்கள் எவற்றையும் பதிப்பிக்கவில்லை. ஆனால் அவர் நயினாதீவுக் கல்வெட்டை வாசிப்பதற்கு முயற்சி செய்ததோடு அதனைப் புகைப்படம் எடுத்துள்ளார். முதலியார் இராசநாயகமும் யாழ்ப்பாணக் கல்வெட்டுக்கள் மூன்றை வாசிக்கவும், அவற்றை விளக்கவும் பதிப்பிக்கவும் முயன்றார். இம்மூன்று கல்வெட்டுகளில் ஒன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் கல்வெட்டாகும். இது பற்றி ஏலவே குறிப்பிட்டோம். ஏனைய இரண்டும் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலயக் கல்வெட்டுக்களாகும். அண்மைக்காலம் வரை யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட சில கல்வெட்டுக்களில் முதலியார் இராசநாயகம் கண்டெடுத்த மேற்படி மூன்று கல்வெட்டுகளும் அடங்கும். இவற்றுள் முதலாவதான நயினாதீவுக் கல்வெட்டின் வாசகத்தையும் அதன் மொழிபெயர்ப்பையும் தமது பண்டைய யாழ்ப்பாணம் ('Ancient Jaffna') என்னும் ஆங்கில நூலில் தந்துள்ளார். கலாநிதி எஸ். பரணவித்தான வெளியிட்ட சில தமிழ்க் கல்வெட்டுக்களை வாசித்தல், அவற்றை பதிப்பித்தல் ஆகிய பணிகளிலும் முதலியார் இராசநாயகம் உதவிபுரிந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து முன்னர் வெளிவந்து கொண்டிருந்த ஈழகேசரி பத்திரிகை, கல்வியங்காடு செப்பேடுகள் பற்றியும் நயினாதீவு தமிழ்க் கல்வெட்டுப் பற்றியும் 1930களில் சில கட்டுரைகளை வெளியிட் டது.

காலம் சென்ற கலாநிதி க. கணபதிப் பிள்ளை இலங்கைப் பல்கலைக் கழகத் தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அவர் தனது கலாநிதிப் பட்டத்திற்காக இடைக்காலப் பாண்டியர் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ந்து ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். இது லண்டன் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவர் பொதுவாக கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்விலும், தொல்லெழுத்தியல் பற்றிய ஆய்விலும் ஆர்வம் செலத்தினார் எனினும், கல்வெட்டுக்களின் மொழி பற்றியே பிரதான கவனம் செலுத்தினார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ், பண்டைய வரலாறு என்பனவற்றில் சிறப்புக் கலைமாணி பட்டப்படிப்பை மேற் கொண்ட மாணவர்களுக்கு அவர் தமிழ்க் கல்வெட்டியல், தமிழ் தொல்லெழுத்தியல் ஆகிய பாடங்களில் விரிவுரை நிகழ்த்தினார். இக்காலத்தில் அவர் இலங்கையின் தமிழ்க் கல்வெட்டுக்கள் மூன்றைப் பதிப்பித்தார். அத்தோடு தமிழில் எழுத்துக்கலையின் வளர்ச்சி பற்றியும் தமிழ் இலக்கியங்களை வாய்மொழி நிலையில் இருந்து எழுத்து வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டமை பற்றியும் கட்டுரையொன்றையும் எழுதினார். எழுதுவதற்குத் தமிழர்கள் பயன்படுத்திய சாதனங்கள் பற்றி இன்னொரு கட்டுரையும் அவர் எழுதினார்.

காலம் சென்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கல்வெட்டுக்கள் பலவற்றைப் பதிப்பித்தவர் அல்லரேனும் தனது மாணவர்கள் மத்தியில் கல்வெட்டியல் பற்றிய ஆர்வத்தை அவர் தூண்டிவிட்டார். அவரது மாணவர்களில் இருவர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர் தமிழ்ப் பேராசிரியராகிய ஆ. வேலுப்பிள்ளை ஆவர். மற்றவர் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்களாவர். வரலாற்றாய்வாளராகிய கா. இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலுக்கு அரிய சேவையை ஆற்றி வருகிறார். இவர்கள் இருவரும் மைசூரில் உள்ள மானச கங்கோத்திரி எனும் அசாங்க கல்வெட்டியல் அலுவலகத்தில் கல்வெட்டியல் துறையில் பயிற்சி பெற்றவர்கள், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கல்வெட்டியல் ஆய்வுக்காக இரு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர். ஒருபட்டத்தை இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இன்னொரு பட்டத்தை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் அவர் பெற்றார். அவர் ஏறக்குறைய ஐம்பது இலங்கைக் கல்வெட்டுக்களைப் பதிப்பித்துள்ளார். பருவ இதழ்களிலும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்திலும் சிதறிக் கிடந்த கல்வெட்டுக்களை இவர் தொகுத்து இலங்கைத் 'தமிழ்க் கல்வெட்டுக்கள்' (Ceylon Tamil Inscriptions) என்ற பெயரில் இரு நூல்களாக அவர் வெளியிட்டார். முதலில் 'எபிகிறாபியா சிலனிக்கா தொடர் வெளியிட்டுக்காக இவற்றை தயாரித்தார். ஆயினும் தமது சொந்தச் செலவிலேயே வெளியிட்டார். பின்னர் இவை எபிகிறாபியா சில -  (EPI Graphia Zeylanica) VIV தொகுதியில் சேர்க்கப்பட்டன. இவர் 'சாச னமும் தமிழும்' என்ற பெயரில் அரிய தொரு நூலை எழுதியுள்ளார். இதன் பின்னர் அவர் கல்வெட்டியல் பற்றிய பெறுமதி மிக்க இரு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் கல்வெட்டுக்களில் கிளைமொழி வழக்குகள் (Study of Dialects in Inscriptional Tamil (கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்). என்னும் நூல் 1976ல் அவரால் வெளியிடப்பட்டது. மற்றொரு நூலான 'தமிழியல் கல்விக்கான கல்வெட்டியல் சான்றுகள்' (Epigraphical Evidence for Tamil Studies - சென்னை , 1981) பின்னர் வெளியாயிற்று.

பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள் தொல்லியலுக்கு செய்த அரிய பங்களிப்பும் முக்கியம் வாய்ந்ததாகும். ஏற்கனவே அறியப்பட்டடிருந்த தமிழ் கல்வெட்டுக்கள் பருவ இதழ்களிலும், தொல்லியல் திணைக்களத்திலும் சிதறிக் கிடந்தன. இவற்றை அவர் தொகுத்துப் பதிப்பித்தார். அத்தோடு நில்லாது கள ஆய்வில் ஈடுபட்டு பல கல்வெட்டுக்களை அவர் கண்டுபிடித்தார். அக்கல்வெட்டுக்களின் அச்சுப்படிமங்களைப் பெறுதல், வாசித்துப் பொருள் கொள்ளுதல், பதிப்பித்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்ட அவர் முதலில் சிந்தனை' என்னும் இதழில் அவற்றை வெளியிட்டார். (சிந்தனை அவரால் வெளியிடப்பட்டு வந்த பருவ இதழாகும்). பின்னர் எபிகிறாபியா தமிழிக்கா' (இதுவும் அவரால் பதிப்பித்து வெளியிடப்பட்ட பருவ இதழாகும்) என்னும் பருவ இதழில் தாம் கண்டெடுத்த கல்வெட்டுக்களை வெளியிட்டார். இந்திர பாலா அவர்கள் ஏறக்குறைய ஐம்பது வரையான தமிழ்க் கல்வெட்டுக்களைப் பதிப்பித்துள்ளார். அவர் சிங்களக் கல்வெட்டுக்களை வாசித்துப் பொருள் கொள்வதிலும் திறமை மிக்கவராவர். 1972ம் ஆண்டில் அவர் வேறு இருவருடன் சேர்ந்து யாழ்ப்பாணம் தொல்லியல் கழகம் என்னும் அமைப்பினை நிறுவினார். அவ்வமைப்பின் அனுசரணையுடன் அவர் இலங்கையில் முதன் முதலாக 1972 முதல் 1976 வரை கல்வெட்டியல் பற்றிய தொடர் சொற்பொழிவுகளை நடத்தினார். கல்வெட்டியலில் ஆர்வம் காட்டியவர்களில் பேராசிரியர் எஸ். பத்மநாதன், கலாநிதி. எஸ். குணசிங்கம் ஆகியோரையும் குறிப்பிடுதல் வேண்டும். அவர்களிருவரும் தனித்தனியே யாழ்ப்பாணம் கல்வியங்காடு செப்பேடுகளை பதிப்பிப்பதில் பங்களிப்புச் செய்தனர். கலாநிதி. எஸ். குணசிங்கம் திருகோணமலை மாவட்டத்தின் கல்வெட்டுக்கள் சிலவற்றையும் வெளியிட்டார். பத்மநாதன், குணசிங்கம் ஆகிய இருவரும் வேறு சில கல்வெட்டுக்களை பதிப்பிப்பதிலும், மீள் பதிப்புச் செய்வதிலும் பங்களிப்புச் செய்துள்ளனர். இலங்கையின் எல்லாத் தமிழ்க் கல்வெட்டுக்களையும் ஒளிப்படங்களுடன் தனிநூலாக சிறப்புறப் பதிப்பித்து வெளியிடுதல் இன்னும் செய்து முடிக்கப்படாத பணியாகவே உள்ளது. அத்தகைய நூல் ஒன்றில் தமிழில் எழுத்து வரிவடிவம் வளர்ச்சியுற்ற வரலாறு பற்றியும் ஒரு குறிப்புச் சேர்க்கப்படுதலும் வேண்டும். தமிழ்க் கல்வெட்டுக்கள் தொகுத்துப் பதிப்பிக்கப்படுதலின் தேவை குறித்து திரு. டி.ரி. தேவேந்திர தமது 'இலங்கைத் தொல்லியலின் வரலாறு (Story of Ceylon Archaeology. 1969) என்னும் நூலில் பக்: 18ல் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் தொல்லியல் திணைக்களம் நிறுவப்பட்டதன் ஒரு நூற்றாண்டு நிறைவினை ஒட்டி வெளியிடப்பட்டதொரு நூலாகும். தமிழ்க் கல்வெட்டுக்கள் தொகுதி வெளிவருவதன் தேவை குறித்து தேவேந்திர 1969ல் குறிப்பிட்டதன் பின் னர், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையும் பேராசிரியர் கா. இந்திரபாலாவும் மேற்குறிப்பிட்ட தொகுதிகளை வெளியிட்டனர். இவை தேவேந்திர சுட்டிக் காட்டிய பணியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளன.

கலாநிதி எஸ். பரணவித்தானவும் வேறுசி லரும் கல்வெட்டியல் வளர்ச்சிக்கு உதவியதைப் போன்று, சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகளைப் படிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் கலாநிதி டி. பன்னசார, கலாநிதி. என். முதியான்சே ஆகிய இரு வர் குறிப்பிடக் கூடிய பங்களிப்பை நல் கினர்.

இன்று வரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 3,000 ஆகும். ஒவ்வோர் ஆண் டும் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கையின் வரண்ட வலயங்களின் காடுகள் பயிர்ச்செய்கைக்காக அழிக்கப்படும்போது, அப்பகுதிகளில் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. இலங்கையின் பண்டைய நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்கும் வேலை கலாசார முக்கோணத் திட்டப்பகுதியில் பெரும் அளவில் மேற்கொள்ளப்படுவதால் அங்கும் பெருந் தொகையான கல்வெட்டுகள் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் யெதனவனராமயவிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஏழு பொற்தகடுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கண்டுபிடிப்பாகும். இவை சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டவை. யெதவன விகாரய மகாஜன பௌத்தத்திற்குரிய விகாரையாகும். இப்பொற்தகடுகளில் பிரசித்தி பெற்ற பிரக்ஞா பாரமித்தி சூத்திரம் பொறிக்கப் பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இளம் தலைமுறையைச் சேர்ந்த அறிவாளர்கள் மத்தியில் நாட்டில் ஏற்பட்டு வரும் பண்பாட்டு மறுமலர்ச்சி காரணமாக கல்வெட்டியல் துறையில் ஆர்வம் மிகுந்து வருவதைக் காணமுடிகிறது. இதனை நல்லதோர் அறிகுறியாகக் கொள்ளலாம்.

உசாத்துணை: 
  • எபிகிறாபிக்கா செலனிக்கா (E.Z) 1 - VI 1904 - 1973 
  • தேவேந்திர . டி.ரி. தொல்லியல் கழகம் இலங்கை கொழும்பு 1969 • 
  • கொடகும்புற சி.ஈ. History of Archaeology in Ceylon. JARS இலங்கைக் கிளை தொகுதி XVIII, 1969 பக்: 1-38. 
  • எல்.எஸ். பெரரா. இலங்கையில் நிறுவன அமைப்புக்களின் வளர்ச்சி, பண்டைக்காலம் முதல் கி.பி. 1016 வரை, இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு 1949 கலாநிதிப்பட்ட ஆய்வு (ஆங்கிலம்) 
  • ரே.எச்.சி History of Ceylon Vol - I,  Part - 1960 66 - 71

ஸ்ரீலங்காவும் தொல்லியலும் - எழில்

வரலாறு என்பது எப்போதுமே தற்சார்பற்ற குறிக்கோளை கொண்டிருந்ததில்லை, அதிகார வர்க்கத்தின் விருப்பத்திற்கும், நலன்களுக்கும் ஏற்றவாறே தற்சார்பான முடிவுகளை எடுக்கும் விதத்தில் ஆராய்ச்சி முறைமையில் வடிவமைக்கப்பட்டது. தேசியவாத அரசியலில் எம்.ஜி. சுரேஷின் 'யுரேகா என்றொரு நகரம்' நாவல் மிகவும் நாசூக்காகவும், துல்லியமாகவும் தொல்லியலை மையப்படுத்திய வரலாற்றியல் கட்டமைப்பையும் அதன் அரசியலையும் சொல்ல முற்படுகின்றது. வரலாற்றுத் திரிபுகளுக்கு பஞ்சமிருந்ததில்லை வரலாற்றில். வரலாற்றை எழுதுவதற்கு யாரிடம் அதிகாரம் இருந்திருக்கின்றதோ, இருக்கிறதோ என்பதன் அடிப்படையில் வரலாற்றின் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன. சிறிலங்காவை பொறுத்தவரையில் வரலாற்றுப் புனைவுகள் அறிவுப்புல உத்தியோடும் முறைமையோடும் வரலாற்றியல் கோட்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பது தெரியாத இரகசியம் அல்ல. புனையப்பட்ட வரலாற்றின் முடிவுகளை கட்டவிழ்ப்பதும், பிரச்சனைக்குட்படுத்துவதும், மீள்வாசிப்புச் செய்வதும் காலத்தினுடைய கட்டாயமாகின்றது. நாவல் குறிப்பிடுகின்ற, வரலாற்று உண்மைகள் பேரம் பேசும் பொருளாக உள்ள அரசியல் சூழலில், காலனித்துவத்தினதும், நவீன காலனித்துவத்தினதும் முடிவுகள் முடிந்த முடிவுகளாக கொள்ளப்பட முடியாதவை.

இறந்த காலத்தை (வரலாறு) யார் சொந்தமாக்கின்றார்கள் அல்லது கையகப்படுத்துகின்றார்கள் என்பது தேசியவாத அரசியலில் மிகவும் முக்கியமானது. பின் - காலனித்துவ வரலாற்றில் காலனித்துவம் கையகப்படுத்திய தொல்லியல் சார்ந்த பொருட்களை காலனித்துவ நாடுகள் அவ் அவ் நாடுகளுக்கு வழங்கத் தொடங்கியிருந்தன. தொல்லியல் மற்றும் மரபுரிமைகள் பாதுகாப்பும், முகாமைத்துவமும் அரசுடைமையாக்கப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்டதன் மூலம் சட்ட அதிகாரத்தை அரசு கையிலெடுத்துக் கொண்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொல்லியல் பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். தொல்லியல் தடயங்களின் விளக்கங்கள், தெளிவுரைகள் அவற்றின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களில் தங்கியுள்ளது. மேற்கூறப்பட்டவைகளை அவதானிக்கும் போது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஓரளவிற்கு தெளிவாகின்றது. தொல்பொருளியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரமும், சட்டப்படியான நிலையும் ஒற்றை வரலாற்றியல் சொல்லாடல் கட்டமைப்பில் அதிகம் செல்வாக்கைச் செலுத்துவதோடு ஏனைய வரலாற்றியல் சொல்லாடல்களை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும். அரசமையப்படுத்திய தொல்லியல் நிகழ்ச்சித் திட்டங்கள், அரச்சார்பற்ற விளிம்பு நிலை வர லாற்றியல் சொல்லாடல்களை மேற்கூறப்பட்ட நிறுவனமயப்படுத்தல் புறந்தள்ளலாம்.

தொல்லியலுக்கும், தேசியவாதத்திற்கும் இடையிலான பிணைப்பு தவிர்க்கமுடியாதது அல்லது இயற்கையானது (P. L. Kohil + C. Fawcett 1995). தேச - அரச கட்டுமானத்தில் தொல்லியல் புள்ளி விபரங்கள், தகவல்கள் பரவலாக எல்லா நாடுகளாலும் பயன்படுத்தப்படுகின்றது (Silberman 1995). ஸ்ரீ லங்காவில் 1940க்கு பின்னர் கொண்டுவரப்பட்ட சட்ட ஒழுங்கின்படி தொல்லியல், மரபுரிமை சார்ந்த ஏகபோக உரிமையை அரசு கொண்டிருக்கின்றது. தொல்லியல் தேசியவாதத்தால் செல்வாக்குட்படுத்தப்படும் பொழுது அதிலுள்ள அபாயம், தொல்லியல் தன்னுடைய முதன்மை நோக்கிலிருந்து மாறுபட்டு, திசை திருப்பப்பட்டு தொல்லியல் ஆவணங்களை ஒரு குழுமத்தின் நலன்கள் சார்ந்து விபரிப்பதற்கு வழிகோலுகின்றது. பேராசிரியர் பரணவிதாணவின் மீது தமிழ் தொல்லியலாளர்கள் முன்வைத்த விமர்சனம் மேற்கூறப்பட்டதாக இருக்கின்றது. காலனித்துவ வரலாற்றில் தேசியவாத தொல்லியலின் எழுச்சி என்பது காலனித்துவத்திற்கு எதிராக சுதேசிகளால் காலனித்துவத்திற்கெதிரான சுதேசமை யப்படுத்தப்பட்ட தொல்லியலின் வகிபாகம் நேர்மறையானது, குறிப்பாக சுதேச இனங்களின் கலாசார, பாரம்பரியங்கள் தொடர்பில் (Ibid). ஆய்வுகளின் அடிப்படையில் பெரும்பாலான அரச தொல்லியலாளர்கள், அரசுக்கு சார்பாக தொல்லியல் தரவுகளை திரிபுபடுத்தியிருக்கின்றார்கள். தேசியவாத அரசியலில் குறிப்பாக நில உடைமை அல்லது நிலத்திற்கு உரித்துக் கொள்ளும்போது. வரலாற்றுக்கு முற்பட்ட trom time immeanoial) காலத்திலிருந்தே நிலம், அரசுக்கு (குறிப்பிட்ட இனத்திற்கு) சொந்தமாவிருந்ததாக குறிப்பிட்டு ஏனைய குழுமங்களின் மீது மேலாண்மையையும், அதிகாரத்தையும் பிரயோகித்திருக்கின்றனர். (C. Fawcett 1995)

சிறிலங்காவில் தேசியவாத தொல்லியல் எழுச்சியை மிக அண்மையது என குறிப்பிட முடியாது. அநுராதபுரத்தை புனித தலைநகராக மையப்படுத்தி அல்லது பௌத்தத்தின் தோற்றுவாயாக மையப்படுத்தி நிகழ்ச்சி த் திட்டங்கள் வகுக்கப்படும் போது தொல் லியல் தேசிய வாதம் ஆரம்பித்தது எனக் கொள்ளலாமா எனச் சரியாக கூறமுடியா விட்டாலும், தொல்லியல் தவிர்க்க முடியாதபடி அரசியல் சார்பானது' (Silberman 1995) தொன்மங்களுக்கூடாக கட்டமைக்கப்படுகின்ற வரலாற்றுக் கதைகள் ஒரு பக்கச் சார்பாக இருக்கும் போது குறிப்பாக ஒரு குழு மத்தின் கதையை மேன்மைக்குரியதாயும் பெருமைக்குரியதாயும் கட்டமைக்கும் போது மற்றமைகளின் தொன்மைகளுக்கூடாக கட்டமைக்கப்படும் கதைகள் புறந்தள்ளப்படுகின்றன. இதன் விளைவாக ஒன்றுக்கொன்று முரணான தொன்மங்களுக்கூடாக பேசுதல் முன்மொழியப்பட குழுமங்களுக்கிடைய முறுகல் நிலை ஏற்படுகின்ற து. (P.L. Kohl + C Fawcett 1995)

சிறிலங்கா தனது தொன்மங்களுக்கூடாக தன்னை ஆரியத்தின் வழித்தோன்றலாகக் கட்டமைத்திருக்கின்றது. திராவிடத்திலிருந்து தான் மேன்மையானதாகவும், தூய்மையானதாகவுமான புனைவை கௌதம தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் சொல்லாடல் சிங்களத்தின் மேன்மைத்தன்மையை வலியுறுத்துவதோடு அதனது புராதனத் தனிமைக்கும் வலுச் சேர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்களம் தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப தொல் லியலை அரசியல் பயன்படுத்தியுள்ளது. தொல்லியலை அரசியல்மயப்படுத்திய நாடுகளின் பட்டியலில் பலவற்றைச் சே ர்த்துக் கொள்ளலாம், சீனாவிலிருந்து இஸ்ரயேல் வரைக்கும் பட்டியல் நீண்டு செல்லும். அரசியல் மயப்படுத்தப்பட்ட தொல்லிய லிலிருந்து கட்டமைக்கப்படும் வரலாறும் நிச்சயமாக அரசியல் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. வரலாற்றாய்வாளர் தனது அரசியல் விருப்புக்கேற்பவும் தெரிவுக்கேற்வும் வரலாற்றியல் முறையைப் பயன்படுத்தி வரலாற்றுத் தரவுகளுக்கேற்ப வரலாற்றினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் (ShnirelIman 1995). அரசுடன் அடையாளப்படுத்தப்பட்ட தொல்லியல் சுயாதீனத் தன்மையை இழப்பதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாகவே தென்படுகின்றது.

அரசு சார்பான அல்லது அரசு மையப்படுத்திய தொல்லியல் நிகழ்ச்சித் திட்டங்கள் அதிகாரத்தில் உள்ள இனத்தின் பெருமைகளைக் கோடிட்டுக் காட்டி மேலாண் மையை உருவாக்க முனையலாம். அரச தொல்லியல் நிகழ்ச்சித்திட்டங்களுக்குள் உள்வாங்கப்படும் தொல்லியல் நிபுணர்களின் சுதந்திரமும், சுயாதீனமும் சிக்கலுக் குரியது என்பதை ஜப்பானையும் அதனது புதிய அடையாளக் கட்டமைப்பையும் ஆய்வு செய்த Fawcett (1995) குறிப்பிடுகின்றார். தொல்லியல் கட்டமைக்கும் அல்லது கட்டமைக்கு முற்படும் தேசிய அடையாளம் சிக்கலானது. அவ்வாறான அடையாளக் கட்டமைப்பு அதிகாரமையம் கொண்டது. அதிகார மையத்திற்கு ஏற்ற வகையில் நெகிழ்வுத் தன்மையையும் அதே நேரத்தில் அடிப்படைவாத இறுக்கத்தையும் கொண்டது. அரசினுடைய இனத்தேசியவாத அரசியல் செல்லாக்கு தேசியவாத தொல்லியல் ஆராய்ச்சிகளின் செல்நெறியை தீர்மானிக்கின்ற தன்மையை தவிர்க்க முடியாது.

Triggerன் கருத்துப்படி 19ம் நூற்றாண்டின் கடந்த மூன்று தசாப்தங்களாக தேசியவாதக் கருத்தியல் தொல்லியல்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இச் செல்வாக்கின் வீரியம் எவ்வாறெனில் தொல்லியலாளர்களின் தேடலுக்கான திசையையும் அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியையும் தேசியவாதம் தீர்மானிக்கின்ற அளவிற்கு அதன் செல்வாக்கு உணரப்பட்டது. ஏற்கனவே கூறப்பட்டது போல தொல்லியல் தேச-அரச கட்டுமானத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்கின்றது. தேச- அரச கட்டுமானம் - தேசியவாதம் - தொல்லியல் இவற்றிற்கிடையேயான இடைவெளி மிகக் குறுகியது. இவ்வுறவுகளின் அடிப்படையிலேயே சிறிலங்காவின் தொல்லியல் மீள்வாசிப்புச் செய்யப்பட வேண்டியதும், விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

இன மேலாண்மை செல்வாக்கினூடு வெளிவருகின்ற தொல்லியல் உண்மைகள் இன அதிகார நலன் சார்ந்தது. சிறிலங்கா தேச-அரச கட்டுமானத்தில் சிறிலங்காவின் தொல்லியல் ஏனைய இனங்களின் தொல்லி யல் உண்மைகளை மறுத்து ஒற்றை வரலாற் றியலை (homogeneous historiography) உருவாக்கிக் கொண்டே வந்திருக்கின்றது. 19ம் நூற்றாண்டின் தொல்லியல் அறிவுப்புல கற்கை நெறி எவ்வாறு விளங்கிக் கொள்ளப் பட வேண்டுமெனில், அது உருவாக்கும் தேசிய வரலாறு சார்ந்து. அதாவது தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும், சுயாதீன தேசத்தை உருவாக்குவதற்கும் (Diaz Andreu 1995) மேற்கூற்று பின்-காலணித்துவ வரலாற்றில் விளங்கிக் கொள்ளல் அவசிய மாகின்றது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் அவதானிப்பின்படி தொல்லியல் ஆராய்ச்சி என்பது சமூக செயற்பாடு (community engagement R. Coningham 2019) சிறிலங்காவில் இம் முறைமை செயலற்று, பிரத்தியேக முறைமை (exclusive) மட்டுமே பின்பற்றப்படுவதாக தோன்றுகின்றது. பரசூட் முறை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது. சமூக பரிச்சயமில்லாத ஆராய்ச்சியாளர்கள் கொண்டுவரப்பட்டு சமூகம் புறந்தள்ளப்பட்டு அல்லது அந்நியப்படுத்தப்பட்ட சூழலில் தான் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. சமுகத்தை அந்நியப்படுத்திய சூழல் மக்களுக்கும், மண்ணுக்கும், மதத்திற்கும், பூர்வீகத்திற்குமான தொடர்புகளை துண்டித்து தொல்லியலை வெறுமனே உதிரியான செயற்பாடாக காட்டும் (R. Coningham 2019).

வடக்கு கிழக்கின் பிரபல்யமான சைவ இந்துக் கோயில்களின் அருகே பௌத்த விகாரைகள் மிக வேகமாக கட்டப்பட்டு வருகின்றன. கண்ணியா , முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின் றது. வடக்கு - கிழக்கின் கண்டெடுக்கப்பட்ட பிரதானமாக சைவ இந்துக் கோவில்களில் கண்டெடுக்கப்பட்ட (ஏனைய பிரதேசங்க ளிலும் கண்டெடுக்கப்பட்ட) மரபுரிமைச் சின்னங்கள் வடக்கு - கிழக்கிலிருந்து பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளன. மரபுரிமைச் சின்னங்களுக்கு வெவ்வேறு விழுமியங்கள் உண்டு அவற்றில் அவ் மரபுரிமைச் சின்னங்கள் கொண்டுள்ள கலாச்சார விழுமியம் அச் சமூகத்திற்கு மிக அவசியமானது. அந்த இடம் அமைந்திருக்கும் இடத்தினு டைய தொன்மைக்கும் அப்பால், அதைச்சூழ கட்டமைக்கப்பட்டிருக்கும் வழிபாட்டிடம், மத அனுஷ்டானங்கள், மத நம்பிக்கைகள் அது கொண்டிருக்கும் சகவாழ்வுத் தன்மையை கட்டமைக்கும் அடையாளம், சுயமரியாதை அச் சமூகத்தின் பெருமை (James O. Young 2012) என்பவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இம்மரபுரிமைதக் கலாச்சாரப் பெறுமதி-விழுமியம் (cultural value) என்பது அதை இடப்பெயர்த்தும் போது ஏனையவர்களுக்கு புரிய வாய்ப்பிருக்காது. மரபுரிமைச் சின்னங்கள் வடக்கு-கிழக்கிலிருந்து அகற்றப்படும் போது அதைச்சூழ கட்டமைக்கப்பட்டிருந்த கலாச்சாரப் பெருமையும், சுய மதிப்பும் சிதைக்கப்படுகின்றது. மரபுரிமைச் சின்னங்களைக் கையகப்படுத்தல் என்பது ஒரு சமூகத்தின் இறந்த காலத்தைக் கட்டுப்படுத்தலாகும்.

எந்தவொரு மரபுரிமைச் சின்னத்திற்கும் அறிவிப்புல விழுமியம் (cognitive value) உண்டு அவ் அறிவுப்புல பெறுமதி, அதன் அகநிலை சார்ந்தும், புறநிலை சார்ந்தும் அமையலாம். அகநிலை சார்ந்த அறிவிப்புல விழுமியம் இறந்த காலகட்டத்தைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மரபுரிமைச் சின்னங்க ளின் கைப்படுத்தலை ஊக்குவிப்பதில்லை (Ibid).

என். சரவணன் குறிப்பிடுகின்ற சிறி லங்காவின் வரலாற்றுப்புனைவு என்பது மகாவம்சம் குறிப்பிடுகின்ற இரு புனைவுகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது. முதலாவது சிங்களவர்கள் சிங்களத்தின் வழித் தோன்றல் என்பது, இரண்டாவது, வங்கத் தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகின்றது சிங்களவரின் வரலாறு. இந்த பூர்வீக இருமைப்புனைவுகளுக்கிடையே சிறிலங்கா பெரும்பாண்மையினரின் தேச - அரச கட்டுமானம் நிச்சயமற்ற தன்மையை எப்போதும் சுட்டிக் கொண்டேயிருக்கும். இவ்விரு புனைவுகளின் பூர்வீக நிச்சய மற்ற தன்மை சிங்களத்தை ஒன்று புதுப் புனைவை நோக்கிய தேடலுக்கு இட்டுச் செல்லும். அந்த தேடலின் கண்டு பிடிப்பு என். சரவணன் கூறுகின்ற 'இராவணனை சிங்களமயப்படுப்படுத்துவது, இரண்டாவது சிங்களப் பூர்வீக புனைவை சிக்கலுக்குட்படுத்துகின்ற இன்னொரு இனத்தின் பூர்வீகத்தைக் கட்டுடைப்பது. தமிழர்களின் பூர்வீகத்தை கட்டுடைப்பதன் மூலம் சிங்களம் தனது தொன்மையைக் கட்டமைக்க முயலுகின்றது. தொல்லியல் ஆய்வாளர்கள் தேசத்திற்கான தொல்லியல் (National archaeology), தேசியவாத தொல்லியல் (Nationalist archaeology &P. L. Kohl 1998) இவ்விரண்டிற்கும் இடையேயான இடைவெளி வெவ்வேறானது எனக் குறிப்பிடுகின்றனர். சிறிலங்காவைப் பொறுத்தவரையில் இவ் இடைவெளி மிக நுண்ணியது, வேறுபாடு இல்லை, இரண்டுமே ஒன்று தான் என்றும் கூறலாம்.

2009க்கு பின்னரான அரசியல் வரலாற்று வெளியில் சிறிலங்கா முன்னெடுக்கின்ற தேச- அரச (nation state) கட்டுமானம் தொல்லியலை மையப்படுத்தியதாக அமைகின்றது. அரசு - தொல்லியல் - இனம் - மதம் இவற்றின் கூட்டு இணைவின் மையம் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும் அந்த ஓற்றை சிறிலங்கா (Homogenous Sri Lanka) விற்கான அடித்தளம் தான் தற்போது முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள். சிறிலங்கா முன்னெடுக்கின்ற தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் எல்லாமே சிறிலங்காவின் தேச - அரச (nation State) கட்டுமானத்தில் மிக காத்திரமான பங்களிப்பை வழங்கப்போகின்றது. தொன்மங்களுக்கூடாக வரலாற்றுக் கதை சொல்லல் சிறிலங்காவின் தேசியவாதத்தை வலுக்கட்டமைப்பு செய்வதுடன் மட்டுமல்லாது இன்னொரு தேச கட்டுமானத்தை கட்டவிழ்ப்புச் செய்கின்றது.

(சிறிலங்கா) சிங்கள அரசின் தொல்லியல் முயற்சிகள் தமிழினத்தின் பூர்வீகத்தைச் சிக்கலுக்குட்படுத்தி, தமிழர்கள் வந்தேறிய குடிகள் என்ற ஆதாரமற்ற வரலாற்றுச் சொல்லாடலுக்கு வலுச்சேர்த்து தமிழர்களின் பூர்வீக மையத்தை வடக்கு - கிழக்கிலிருந்து இடம் பெயர்த்தி, பூர்வீகத் தன்மையை பலவீனமாக்குவதே முதன்மை நிகழ்ச்சி நிரலாகும். தொல்லியல் நிகழ்ச்சி நிரலோடு முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கலை தவிர்க்க முடியாதபடி செய்கின்றது. தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சிங்கள - பௌத்த மயமாக்கல் தமிழர் நிலத்தை துண்டாடுகின்றது. மேற்கூறிய நிகழ்ச்சிகள் தமிழர்களின் தேச கோரிக்கையை பலவீனமாக்கி தேச நீக்கம் செய்கின்றது.

நன்றி - தினக்குரல் (12.07.2020)

இராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்


இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை அதிகார சபை” ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது.

“இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது “சிவில் விமான சேவை அதிகார சபை.

இது இலங்கை அரச விளம்பரம் என்பதை கவனத்திற்கொள்க:
இதனை 2020 யூலை 31 க்கு முன்னர் 0766317110 என்கிற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ  mgrrdp@caa.lk என்கிற மின்னஞ்சல் மூலமோ அல்லது குறிப்பிட்ட விலாசத்துடன் தொடர்பு கொண்டோ அறியத்தந்தால் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது இலங்கை அரசு.

இராவணனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை சிங்களவர்களின் முப்பாட்டனே இராவணன் என்று நிறுவுகிற அவசரத்தில் இந்த புஷ்பக விமான புனைவில் அரசே நேரடியாக இறங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மறுபுறம் இந்தக் கண்மூடித்தனத்தின் ஆபத்தின் எச்சரிக்கையையும் நமக்கு மிச்சம் வைக்கிறது.

உலகின் முதலாவது விமானத்தைத் தந்தவன் இராவணன் என்றெல்லாம் கட்டுரைகள் உள்ளன. 

இராவணனை தற்போது சிங்களவர்கள் தமது நாயகனாகவும், சிங்கள பௌத்தர்களின் மூதாதையாராகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள். இராவணன் வாழ்ந்ததாக கூறி வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள நிலங்களை சுவீகரிக்கும் முன்னெடுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். இராவணன் என்கிற கற்பனைக் காவியத்தில் உள்ளதையெல்லாம் இருந்ததாகக் கூறி இப்போது புஷ்பகவிமானத்தையும் தேடத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே புஷ்பக விமானம் வந்திறங்கிய பகுதிகளாக சிகிரிய மலை உள்ளிட்ட இன்னும் பல இடங்களை குறித்து புஷ்பக விமானம் வந்திறங்கிய தளங்கள் என்று நிறுவுகிற நூல்களும், ஆவணப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதை அறிவீர்கள்.

1921 இல் U.D. Johannes Appuhami’s என்பவர் வாய்மொழிக் கதையை வைத்து எழுதிய கவிதை நூலான “The Story of the Wooden Peacock,” என்கிற நூலின் அட்டைப்படம்
இராவணன் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இதுவரை அதிகாரபூர்வமாக எங்கும் வெளியானதில்லை. ஆனால் இலங்கையில் ஆயிரகணக்கான இடங்களை இராவணனின் அடையாளங்களாக கற்பிதம் செய்து புனைந்து நிறுவுகின்ற போக்கை தொடர்ச்சியாக காண முடிகிறது.

இலங்கையின் முக்கிய சர்வதேச விமான ஒட்டி பயிற்சி நிலையத்தின் பெயர் கூட இராவணன் விமான பயிற்சி நிலையம் (Ravana Aviation Academy) (https://ravanaaviation.com/) இது களனியில் இயங்கி வருகிறது.

ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிராக தொல்லியல் போர் தொடங்கியாயிற்று. இம்மாதம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வடக்கு கிழக்கில் தமிழர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆரம்பித்த “தொல்லியல் செயலணி” சிங்கள பௌத்தர்களை மட்டுமே கொண்ட ஒரு ஆபத்தான குழு. இராணுவத் தளபதி, பிக்குமார், ஆகியோரை தலைமையாகக் கொண்ட அந்தக் குழு ஒரு இராணுவவாத, இனவாத குழுவென்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தொல்லியல் திணைக்களமானது கலாசார அமைச்சின் கீழ் இயங்குகிறது. பிரதம மகிந்த ராஜபக்சவே கலாசார அமைச்சராக இருக்கிறார் என்பதையும் கவனித்திற்கொள்க.


"இலங்கை மலையகத் தமிழர்கள் : நூல் விபரப்பட்டியல்" நூல் வெளியீடு - 18.07.2020

"இலங்கை மலையகத் தமிழர்கள் : நூல் விபரப்பட்டியல்" என்கிற நூல் வெளியீட்டு விழா 18.07.2020 அன்று முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடக்கவிருக்கிறது.
மலையக படைப்புகளை ஆவணப்படுத்தும் செயற்பாட்டில் முக்கிய மைற்கல்லாக இந்த நூலைக் குறிப்பிடலாம். இந்த நூலை பேராசிரியர் சே.சந்திரசேகரன், கலாநிதி இரா.ரமேஷ் ஆகியோர் தொகுத்துள்ளனர். இந்த நூலில் என்.சரவணன் எழுதிய "கள்ளத்தோணி" என்கிற நூல் பற்றி சிறு குறிப்பை இங்கே பகிர்கிறோம்.
இலங்கை மலையகத் தமிழர்கள் : நூல் விபரப்பட்டியல் 
நூலின் பெயர் : கள்ளத்தோணி
ஆசிரியர் : என்.சரவணன்
வெளியீடு : குமரன் புத்தக இல்லம், கொழும்பு
ஆண்டு : 2019
பக்கங்கள் : 239
என்.சரவணன் சரிநிகர் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். இவர் பத்திரிகைத் துறையில் காத்திரமான பதிவுகளை வெளிப்படுத்தி வருபவரும் தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளில் தீவிரமான பங்கு கொண்டவருமாவார். அரசியலில் பெண்களும், 'பெண்களின் அரசியலும்', '1915 கண்டிக் கலவரம்', 'அறிந்தவர்களும் அறியாதவையும்', 'தலித்தின் குறிப்புக்கள்' ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். சமூக பண்பாட்டு அரசியல் தளத்தில் முனைப்பான பதிவுகளை ஏற்படுத்தி வருபவர்.

'நமது மலையகம்' என்ற இணையதளத்திணையும் உருவாக்கி மலையகம் குறித்த ஆழ்ந்த தேடல்களை வெளிப்படுத்தி வருகின்றார். 'கள்ளத்தோணி' எனும்; இந்நூலில் மலையகம் குறித்து பல்வேறு விரிவான கட்டுரைகளை எழுதியுள்ளார். 'கள்ளத்தோணி' எனும் கருத்தாக்கம் உருப்பெற்ற விதம், அதன் பின்னணி, கருத்தியல் தளங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

மலையக அரசியலில் நேருவின் வகிபாகம், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற கட்டுரைகள் மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதனை சான்றுகளுடன் பதிவு செய்துள்ளன. உருளுவள்ளி போராட்டம், முல்லோயா கோவிந்தன், 1983ஆம் ஆண்டு கலவரம், சம்பள உயர்விற்கான அக்டோபர் தன்னெழுச்சிப் போராட்டங்கள் போன்ற கட்டுரைகள் விரிவான தளங்களில் ஆராயப்படுகின்றன.

இலங்கையின் பெருந்தோட்டப் பகுதியில் வேலை செய்த வெள்ளைக்கார துரையான ப்ரஸ்கேர்டல் அவர்கள் இந்திய தொழிலாளர்களுக்காக செய்த சேவைகளையும் அவரது இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளையும் விளக்கியுள்ளது ஒவ்வொரு காலப்பகுதியிலும் மலையக மக்கள் மீது ஏவி விடப்பட்ட வன்முறைகள், கருத்தியல் தளங்கள் பண்பாட்டு அடக்குமுறைகளை ஆதாரமாகக் கொண்டு பல விடயங்களை இந்நூல் ஆராய்கின்றது.

மலையக மக்கள் பெரும்பாலானோர் தலித் என்ற அடையாளத்துடன் சில புரிதல்களை முன்வைத்திருப்பது விவாதத்துக்குரிய கட்டுரைகளாக மிளிருகின்றன மலையக மக்களில் வாலாற்ற சம்பவங்கள் தீர்க்கப்படாத பிரச்சினைகள், தேசியம் தொடர்பான விடயங்கள் என்பவற்தை முன்னிறுத்தியதாக அமைந்திருக்கும் இந்த பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன?


26.11.1831 வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் 1968 இல் சுதந்திரனில் வெளியானது. அதன் மூல தலைப்பு என்ன என்கிற விபரம் அதில் இல்லை. ஆனால் எழுதியவர் யார் என்கிற விபரங்கள் தமிழில் உள்ளது. கட்டுரையின் இறுதியில் உள்ள பெயர்களும் (இன்டியோபைலஸ், கல்பென்ரின், சி. ரெய்மரா) தமிழ்படுத்தப்பட்டிருப்பதால், சரியான ஆங்கிலப் பெயர்களையும் அறிய முடியவில்லை, ஆங்கில மூல கட்டுரையையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆனால் 1849 இல் சைமன் காசிச்செட்டி The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society யில் எழுதிய கட்டுரையில் "An account of the King Kulakkotu Maharaja founding and endowing a temple in honor of Siva or Koneswara at Trinkomalie." என்கிற கட்டுரை மேற்படி வர்த்தமானியில் தன்னால் வெளியிடப்பட்டது என்கிற குறிப்புகளைக் காண முடிகிறது. 
தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் கருவிகளாக புத்தர் சிலைகளும், அரச மரங்களுக்கும், பௌத்த விகாரைகளும் தான் பேரினவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. யுத்தத்தின் பின்னர் "தொல்பொருள்" பேரால் பாரிய அளவில் நேரடியாகவும், உத்தியோகபூர்வமாகவும் அரச அனுசரணையுடன் அவ்வாக்கிரமிப்புகள் பேரெடுப்பாக கிளம்பியுள்ளன. "கோணமலை கோவில்" அல்ல "கோகர்ண விகாரை" அது என்கிற உரிமை கொண்டாடல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லி வருவது தான். ஆனால் இப்போது அம் முன்னெடுப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. சுதந்திரனில் வெளியான இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் முக்கியமானது. சுதந்திரனில் வெளிவந்த அந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை இது.
திருமலை கோணேசுவர ஆலயம் 137 ஆண்டுகளுக்கு  முன் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளிவாத சுவையான தகவல்கள்!
பேரறிஞர் சேர். வில் பலியம் ஜோன்ஸ் "இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த இலங்கையில் காணப்படும் இந்துக்களின் பல்வேறு பழம்பெரும் நினைவுச் சின்னங்களில் திருமலையில் இருக்கும் கோவில் என்றுமே மறக்க முடியாதது.

மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது.

சிலகாலத்திற்கு முன் ஓர் தண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புலவரால் தமிழில் எழுதப்பட்ட சிறிய பாடலொன்றின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இக் கவிதையில் நம்பத்தகாத சில அம்சங்கள் இருந்தாலும் இப்புனித ஆலயத்தின் ஆரம்பகாலத்தையும் வரலாற்றையும் இது விளக்குகின்றது. எனவே இக்கவிதையிற் சொல்லப்பட்ட வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆவல் எனக்கேற்பட்டது. பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக அத்தகவலை இங்கு சமர்ப்பிக்கிறேன்..

சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த மனு நீதி கண்ட சோழன் என்ற அரசன் கைலாச புராணத் திலிருந்து திருகோணமலையின் அற்புதங்களையும் அங்கு வாழும் மக்களின் சிறப்புக்களையும் அறிந்து அவ்விடத் துக்கு வந்தான். அவனைப் பின் தொடர்ந்து வந்த அவனது மகன் குளக்கோட்டு மகாராஜாகலியுக வருடம் 512 வது ஆண்டு (கிறிஸ்துவுக்கு முன் 1589-ம் ஆண்டு ) வைகாசி மாதம் பத்தாம் நாள் திங்கட்கிழமை, தெப்பக்குளம் போன்றவற்றை ஏற்படுத்தி இக் கோவிலைப் புனருத்தாரணம் செய்வித்தான்.

கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின் கோவிலின் நாளாந்த தேவைக்கு அரிசி மற்றும் பொருட்களை சோழ மண்டலத்திலிருந்து வரவழைப்பதிலுள்ள கஷ்டங்களை அரசன் உணர்ந்தான். அதனால் 2800 அமோனம் காணியை நெல் விளைச்சலுக்காக பண்படுத்தி அக்காணிக்கு நீர்ப்பாசன வசதி செய்வதற்காக ஓர் குளத்தையும் கட்டுவித்து கோணேசர்சுவாமிக்கு அதைக் காணிக்கையாக்கினான்.

அதன் பின் அவன் வடக்கேயுள்ள மருகூர் என்னும் கிராமத்திற்கு சென்று கலியுகம் 516ம் ஆண்டு பங்குனி 24ம்தேதி ஏழு வேளாள குடும்பத்தினரை திருக்கோணமலைக்கு அழைத்து வந்து குடியமர்த்தினான். அவர்களுக்கு கோவிலும் அதற்குச் சொந்தமான காணிகளும் மரபு வழியாகச் சேர வேண்டியது என்பதை உறுதிப்படுத்தினான்.

கோவில் சொத்துக்களை பராமரிக்கவும் வரவு செலவுகள் விழாக்கள் நடத்துதல் அரசர்களுக்கு பட்டுடை தரித்தல் போன்றவற்றை கவனிக்கும் பொறுப்புக்களும் இக்குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவில் தொண்டுகளுக்கு மேலும் ஆட்கள் தேவைப்பட்டதால், குளக்கோட்டு மன்னன், காரைக்காடு என்னும் கிராமத்துக்கு சென்று கட்டாயமாக 20 குடும்பங்களை கொண் டுந்து மேற்கூறப்பட்ட அதே ஆண்டில் வைகாசி 10ம் நாள் குடியேற்றி சிவலிங்கத்தை அலங்கரித்தல் ஆலயத்துக்கு மலர்கள் சேகரித்தல் ஆலயத்தை தினசரி பெருக்கி சுத்தமாக்குதல், அபிஷேகத்துக்கு தண்ணீர் அள்ளிக் சொடுத்தல், நெல்லுக்குத்துதல், கோவிலை' சாணி கொண்டு மெழுகுதல் தேவாரம் ஓதுதல் மேள வாத்தியம் நாதஸ்வரம் வாசித்தல், வேள்விக்கு உதவி செய்தல், விசேட கனங்களில் கொடி ஏற்றுதல் இறக்குதல், சந்தனம் அரைத்தல், கோவில் ஆபரணங்களை புடம் போடுதல் போன்ற வேலைகளுக்கு நிய மித்தான். இம்மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய நிலம் அளிக்கப்பட்டதுடன், இவர்களில் ஐந்து பேர் தெரிந்தெடுக்கப்பட்டு பண்டாரத்தார்' என சிறப்பாக அழைக்கப்பட்டனர்.

முதல் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட ஏழு குடும்பத்தினரும் தானாட்டார்' என்றும், அதற்கு பின் குடியமர்த்தப்பட்ட 20 குடும்பத்தினரும் வாரி பட்டர்' என்றும் குறிப்பிடப்பட்டனர்.

"வாரிபட்டர்களுக்கும் தானாட்டாருக்குமிடைமிடையே ஏதாவது தகராறு ஏற்படும் போது நீதி வழங்குவதற்கு ஒரு வருமில்லையென்பதை உணர்ந்த அரசன், அவர்களுக்குத் தலைவராக ஒருவரை நியமனம் செய்ய முடிவு செய்தான். அதனால் மதுரை சென்று தனியுண்ண பூபாலன் என்ற பேரறிஞரை அழைத்து வந்து அவருக்கு வன்னியன் பட்டம் சூட்டி திருக்கோணமலையின் கவர்னராக நியமித்தான். குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கவும், சிறைக்கனுப்பவும் தேவையானால் மரண தண்டன விதிக்கவும், கோவில் காரியங்கள் தவறேதுமின்றி நடைபெற வேண்டிய நடவடிக்கையெடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது
1635 இல் வரையப்பட்ட கோணேஸ்வரர் கோவிலை சுற்றிய வரைப்படம். 
அத்துடன் கட்டுக்குளம் மக்கள் தங்கள் சேவையை கோவிலுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டுமென்றும், நிலா வெளிமக்கள் கோவில் விழாக்களுக்கு தலைமை தாங்க வேண்டுமென்றும், கோவிலுக்கு ஆறு அமோனம் நெல்லும், கிடைக்கும் வரிப்பணத்திலும் வாணிக வரிப்பணத்திலும் பத்திலொருபங்கும் கோவிலுக்கு கொடுக்க வேண்டுமென்றும் கொட்டியாரத்து கிராம மக்கள், கோவிலுக்கு வெ ற்றிலை, வாழைப்பழம் சந்தனக் கட்டை , தயிர், நெய், 100 அமோனம் அரிசி, ஆமணக்கு, புன்னை, இலுப்பை விதைகள் வழங்க வேண்டுமெனவும் அரசன் கட்டளையிட்டான். கடைசியில் குறிப்பிடப்பட்ட விதைகள், ஐரதீவு மக்களிடம் கொடுக்கப்பட்டு எண்ணையாக்கப்பட்டவுடன், அந்த எண்ணை செவுளி முனை தொட்டியனிடம்" தரப்படவேண்டும். அவன், எண்ணையின் அளவை கோவில் கணக்கில் பதிந்த பின்னர் எண்ணையை கோயில் களஞ்சியத்தில் ஊற்றிவைக்க வேண்டும். இவ்வெண்ணை கோவில் விளக்குகள் எரிக்கப் பயன்படுத்தப்படும்.

'கோவிலின் தெற்கு புறத்தில் எண்ணையை ஊற்றி வைப்பதற்காக ஏழு களஞ்சியங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தான்,

இந்த உத்தரவுகள் விடப்பட்ட பின்னர் மன்னன் கோவில் உள் விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கினான். தினசரி 1000 நெய் விளக்குகளும், 11,000 எண்ணெய் விளக்குகளும் கோவிலின் உள்ளும் புறமும் ஏற்றப்பட வேண்டும் என்று கோவில் ஊழியர்களுக்கு கட்டளையிட்டான் கோவில் மண்டபமெங்கும் கஸ்தூரியும் சந்தனமம் கலந்த ரோஜாப்பூ பன்னீர்தெளிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட காலங்களில் நிவேதனத்துக்கு தயிர் சாதம் தயாரிக்க வேண்டுமென்றும், சுப் பிரமணியருக்கு 12 வெள்ளித் தாம்பாளங்களிலும், பிள்ளையாருக்கு 6 வெள்ளித் தாம்பாளங்களிலும், மீதியுள்ள தெய்வங்களுக்கு 128 செப்புத்தாம்பளங்களிலும் நிவேதனம் படைக்கவேண்டுமெனவும் உத்தரவிட்டான்.

அத்துடன் நிவேதனத்துக்கு பல ஆயிரக்கணக்கான அமுது உருண்டைகள் தயாரிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்ட விசேட தினங்களில் ஆயிரம் தகழிகளையுடைய கற்பூர ஆரத்தி காட்டப்பட வேண்டுமென்றும் பணித்தான்.'

(மேற் கூறப்பட்ட கோவில் நிறுவப்பட்ட விபரங்களையும் கோவிலில் நடை பெற்றுவந்த நிகழ்ச்சிகளையும் விளக்கமாகச கூறிய கவி ராஜவரோதயன் கோவில் சிறப்புற்றோங்குவது பற்றியும், பின்னர் வெளிநாட்டுக்காரர்களால் கைப்பற்றப்படும் என்றும் மன்னன் கூறிய தீர்க்க தரிசனங்களைக் குறிப்பிட்டு விட்டு மேலும் கூறுவதாவது)

அரசன் ஒரு நாள் கோவில் புனித குளத்தில் நீராடி தனது பூஜை பிரார்த்தனைகளை முடித்து விட்டு, தனது தலையில் ஓர் உருத்திராட்ச மாலையணிந்து நெற்றியில் திரு நீறணித்து, இருகைகளிலும் மலர்கள் ஏந்தியபடி கோவில் பிரசாரத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்துள் நுழைந்தான். உள்ளே நுழைந்த அரசன் வெகு நேரமாகியும் வெளியே வராததைக்கண்ட அவனது மெய்காப்பாளர்கள், சந்தேகங்கொண்டு உள்ளே நுழைந்த போது கடவுளின் திருவுருவத்தின் முன்னே அவன் ஓர் தாமரை மலராக உருமாறியிருந்ததைக் கண்டு பிரலாபிக்கத் தொடங்கினர்.

திருமூலர் மறைந்ததற்கும் அரசன் மலராக உருமாறியதற்கும் ஒரு இரத்த தொடர்பு இருக்கிறது. அதே போல குளக்கோட்டு மகாராஜாவும் கடவுளில் ஒருவராகி விட்டார். திருகோணநாதமலை மக்கள் அவருக்கு தங்கள் நன்றியைக்காட்டத் தயங்கவில்லை.

குளக்கோட்டு மகாராஜாவின் உருமாற்றம் நிகழ்ந்து பல வருடங்களின் பின், கஜ பாகு மகாராஜா என அழைக்கப்பட்ட மன்னன் ஒருவன் திரு கோணாமலைக்கு யாத்திரை வந்தான். வந்த இடத்தில் கோவில் அதுவரை நிர்வகித்து வந்த பாசபட்டர் (பாசுபதர்) இறந்து விட்டதையும் அவருக்கு பின் அதை ஒருவரும் கவனிக்காததையும் கண்டு துக்கித்தான் கோவில் குருக்களின்றி பூசையில்லாமலிருந்த நிலையை மாற்றியமைக்க முடிவு செய்தான்.
1870 இல் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்
அரசன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது இரு பிராமணச் சிறுவர்கள் கையில் வேதத்துடன் சமுத்திரத்தில் மிதந்து வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டவுடன் மகிழ்ச்யடைந்து, தன்னிருக்கை விட்டெழுந்து அவர்களை நோக்கி கடலில் இறங்கிச் சென்று இருகைகளிலும் ஒவ்வொருவரைப் பிடித்து கரைக்கு அழைத்து வந்தான். அவர்களை இருபாதி என்று அழைத்தான்.

அவர்கள் இருவரையும் கோவில் குருக்களாக நியமித்து அவர்களுக்கு மரியாதை செய்து கீழ்ப்படிந்து நடக்கும்படி வன்னியருக்கும், தானாட்டார், வாரியப் பட்டருக்கும் உத்தரவிட்ட துடன், அவர்களது சேவையை முன்போல அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.

கஜபாகு மகராஜா, ஐந்து வகையான நகர சேவையாளர்களை (பொற் கொல்லர், மட்பாண்டம் செய்வோர், நாவிதர், வண்ணக்கர், பறையர்) திருமலையில் குடியமர்த்தி அவர்களுக்கு. நிலமும் நெல்வயலும் வழங்கினார். 

அடுத்ததாக மகாவலிகங்கைக்கு அணித்தாக உள்ள கொட்டியாரத்தில் ஓர் குளம் கட்டுவிக்கவும் , 6350 அமோனம் நெற் காணிகளில் விளைச்சலைப் பெருக்கவும், புன்னை இலுப்பை ஆமணக்கு, கொக்கோ மரங்களைப் பயிரிடவும் கஜபாகு ஏற்பாடு செய்தான். இவற்றின் வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தை கோவிலுக்கு அளிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டான்

சைவ வணக்க ஸ்தலத்தை இத்துத்தள்ளிவிட்டு அவ்விடத்தில் ஓர் பௌத்த ஆலயத்தை நிர்மாணிப்பதென தான் முன்பு திட்டமிட்ட பாவத்துக்கு கழுவாய் தேடிக்கொள்ளுமுகமாகவே கஜபாகு மன்னன் கோணேசர் சுவாமிக்கு மேற்கண்ட தொண்டுகளைப் புரிந்தான்.

அதன் பின்னர் கஜபாகு மகராஜா, நாட்டுப் பிரஜைகளை அழைத்து குளக்கோட்டு மகாராஜா ஸ்தாபித்த நிறுவவனங்களை அழித்துவிடாதபடி பாதுகாக்கும்படி கட்டளையிட்டதுடன் இரு பாதி பிராமணர்களுக்கு ராஜகுரு, என்ற பட்டமளித்ததுடன் கோவிலுக்கு சொந்தமான நகைகளையும், செல்வங்களையும் அவர்களிடமே ஒப்படைத்தான்.

பின்னர், தனது தலைநகராகிய அனுராதபுரம் திரும்பி நீண்டகாலம் ஆட்சிபுரிந்ததன் பின்னர் சிவன
டி சேர்த்தான்''

குறித்த கையெழுத்துப் பாடலில் கூறப்பட்டுள்ள கருத்தை ஓரளவு மொழி பெயர்த்து மேலே தந்துள்ளேன். இலங்கையின் பழைய வரலாற்றை ஆராய்பவர்களுக்கு இது ஒரு தூண்டுதலாக அமையும் என்பது எனது நம்பிக்கை .

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள
இன்டியோபைலஸ், 
கல்பென்ரின், 21 நவம்பர்,
-1831 உண்மைப் பிரதி.
ஒப்பம்: சி. ரெய்மரா
அரசாங்கப் பதிவாளர்.
குடியேற்ற நாட்டு செயலாளர் அவவலகம்,
கொழும்பு, 23 மே 1928.

நன்றி சுதந்திரன் - 29.09.1968


இப்பத்திரிகை நூலகம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

இராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்! | என்.சரவணன்


மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது
2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது சிங்களவர்களின் வரலாறு என்பது

சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆக மிருகத்தின் வம்சாவளி என்று ஒத்துக்கொள்ள வேண்டிவரும். ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரித்ததாக ஆகும். மகாவம்சத்தை நிராகரிப்பது என்பது அவர்களின் இனவரலாற்றுப் பெறுமதியை இழப்பதாகும்.

எனவே விஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும், சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆகவே தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, அதற்கும் முந்திய இராவண வம்சம் என்கிற இன்னொரு கதையை கட்டியெழுப்ப நேரிடுகிறது.

ஐயாயிரம் வருடங்களுக்கு முந்திய பூர்வீகக் குடிகள் சிங்களவர் என்கிற புனைவை நிலைநாட்ட இராவணன் இப்போது அவசியப்படுகிறார். இதுவரை தாம் ஆரியர் பரம்பரை என்றும்  கூறி வந்தவர்கள் இப்போது திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறியாகவேண்டும். ஆனால் அதில் அரசியல் சங்கடங்களும் சர்ச்சைகளும் நிறைந்துள்ளன. தமிழர்களை சிங்கள மொழியில் “திரவிட” (திராவிடர்) என்று தான் பொதுவில் அழைத்து வருவதை நாம் அறிவோம்.

அதைவிட அடுத்த சிக்கல் இக்கதைகளின் பிரகாரம் விஜயன் ஒரு அந்நியனாக இருக்கிறான். அவன் வட இந்தியாவிலிருந்து இன்னும் சொல்லப்போனால் வங்க தேசத்திலிருந்து வந்ததாக ஒத்துக்கொள்ளவேண்டும். தாம் அந்நியர் என்று ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். அது மண்ணின் மைந்தன் கருத்துருவாக்கத்துக்கும் பெருந்தடையாக ஆகிவிடுகிறது. 

எனவே தான், தாம் வங்கத்திலிருந்து வந்த ஆரியர் என்கிற கதைகளையும் புறந்தள்ளி, கைவிட்டுவிட்டு இராவணக் கதைகளுக்கு உயிர்கொடுத்து இராவணனை தமது தலைவனாக ஏற்பதன் மூலம் முழு இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்கிற இடத்துக்கு வந்து சேருகிறார்கள். இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் பின்புலம் இதுதான்.

ஒரு கற்பிதக் காவியத்துக்கு வரலாற்றுப் பெறுமதியையும், அரசியல் பெறுமதியையும், இனப்பெருமதியையும், மதப் பெருமையையும் கொடுத்து வெகுஜன அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் காவியமாக இன்று ஆக்கப்பட்டிருக்கிறது இராமாயணக் கதை. அந்தக் கதைக்கு தொல்பொருள் சான்றில்லாததால், காணக்கிடைக்கிற தொல்பொருள்களையெல்லாம் வலிந்து அவற்றுடன் தொடர்புபடுத்திப் புனைகிற செயற்பாடுகள் இலங்கையில் வெகுவாக வளர்ந்திருக்கிறது.

ஆய்வணுகுமுறையில் இரு வகையுண்டு. முதலாவது கிடைக்கப்பெறும் சான்றுகளைக் கொண்டு முடிவுக்கு வருதல். அடுத்தது எடுத்த முடிவை நிறுவுவதற்கு ஆதாரம் சேர்ப்பது. முற்கற்பித முடிவுகளை நிறுவுவதற்கு வலிந்து ஆதாரம் கோர்க்கும் பணிகளே இலங்கையில் தற்போது நிறைந்துள்ளது. இதில் உள்ள சோகம் என்னவென்றால் நிபுணத்துவம் பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்கள் இதில் இறங்கியிருப்பது தான். அவர்களின் இனவாத பின்புலம் அவர்களை இப்பணிகளை நோக்கி உந்துகிறது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று திவயின பத்திரிகைக்கு வீரசேன அல்கெவத்த என்பவர் எழுதிய “இராவணன் வரலாற்றுப் பாத்திரமா? என்கிற கட்டுரையில் இப்படித் தெரிவிக்கிறார்.
“மகாநாம தேரர் மகாவம்சத்தில் பல தகவல்களை திட்டமிட்டே மறைத்துவிட்டார். விஜயன் வந்திறங்கிய தினத்தில் தான் புத்தரின் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. அதே வேளை புத்தர் இறப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அப்போது இயக்கர்களும் நாகர்களும் இருந்திருக்கிறார்கள். அரசர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்திருக்கிறார். அப்படியென்றால் அவர் வரும்போது இந்தத் தீவு வெற்றுத் தீவாக இருக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதன் பின் பல ஆண்டுகள் கழித்து வந்த விஜயனில் இருந்து தான் சிங்கள இனத்தின் பூர்வீகம் தொடங்கியது என்றது எதற்காக? தனது இந்தியப் பூர்வீக உரிமையை எழுத்தில் நிலைநாட்டவா மாநாம தேரர் முயற்சித்திருக்கிறார்...
இலங்கையில் அதற்கு முன்னர் இருந்தே பண்டைய காலத்தில் வாழ்ந்த ராவண ராஜ்ஜியம் பற்றி இந்தியாவில் இருந்து கூறும்போது நமது வரலாற்றாசிரியர்கள் ஏன் அதைக் கண்டுகொள்ளவில்லை. விஜயன் வரும்போது எந்தக் குடிகளும் வாழவில்லை என்பது ஏன்? மகாவம்சம் இராவணனை இருட்டடிப்பு செய்துவிட்டது”
என்கிறார்.

இராவண உயிர்ப்பு எங்கிருந்து தொடங்கியது?
இராமாயணம் பற்றிய தேடல்கள் இலங்கையில் உயிர்த்த காலம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான். ஆங்கிலேய அறிஞர்கள்களின் இலக்கிய-வரலாற்றுத் தேடல்களின் மூலம் அது நிகழ்ந்தது எனலாம். ராஜரீக ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையில் இது பற்றிய பல விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகளின் சமர்ப்பிப்புகளைக் காண முடிகிறது.

இதேவேளை இலங்கையின் பாட நூல்களில் இராமாயணம் பற்றி இந்தியாவில் நிலவுகிற அதே இராமாயணக் கதையின் சுருக்கத்தைத் தான் கற்பித்து வந்தார்கள். ராமனை நாயகனாகவும், சீதையை நாயகியாகவும், சீதையைக் கவர்ந்து கடத்தி வந்து சிறைவைத்து சண்டையிட்ட இராவணனை வில்லனாகவும் சித்திரிக்கிற கதை தான் நெடுங்காலமாக சிங்களப் பாடநூல்களில் இருந்தன. இராவணன் இலங்கையில் வாழ்ந்தான் என்றும் இலங்கைத் தவிர வேறெங்கும் வாழவில்லை என்கிற கருத்தே உறுதிபட அக்கதைகளின் மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. சிங்கள அரசர்களான விஜயன், துட்டகைமுனு போன்ற வரலாற்றுப் பாத்திரங்களுக்கு முன் இராவணன் ஒரு சிங்கள வீரன் அல்லன். இராவணனுக்கு எந்த மரியாதைப் பெறுமதியும் கொடுக்கப்படவில்லை. ஒரு வகையில், மாற்றான் மனைவியைத் திருடிய திருடனாகவே இராவணன் உருவகப்படுத்தப்பட்டிருந்தான்.

இராவணின் வீரதீரச் செயல்கள் பற்றியோ, இராவணின் இராஜ்ஜியம் பற்றியோ, இராவணின் போர் முறைகள் பற்றியோ, இராவணின் பறக்கும் வானூர்தி பற்றிய கதைகளோ கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. கணக்கில்கொள்ளப்படவில்லை. 

வீரம் செறிந்தவர்களாக இராமனும் அனுமானும் முக்கியப்படுத்தப்பட்டிருந்தனர்.  கதஹ்யின் படி இவர்கள் இராவணனைத் தோற்கடித்துச் சீதையை மீட்டுக்கொண்டனர். சுப்பர்மேன் (Superman) பற்மன் (Batman) ஆகிய இருவரும் செய்கிற தீரச் செயல்களைத் தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ஒரு காலத்தில் இராவணனின் இராவணனின் பறக்கும் வானூர்தி பற்றிய உருவகம் நிச்சயமாக பலரைக் கவர்ந்திருந்தது. அப்படியான உருவகங்கள் வழியாகத்தான் இராவணன் முற்றுமுழுதாக நீங்காமல் பலரது நினைவில் இருந்தான் என்று நான் நினைக்கின்றேன். சிங்கள இனத்தின் மாவீரனாக இராவணன் உணரப்பட்டதில்லை.

“ஹெல ஹவுல” இயக்கம்
இலங்கையின் மிகப் பிரசித்திபெற்ற சிங்கள மொழிப் பண்டிதராகவும், இலக்கியவாதியாகவும் கருதப்படுபவர் குமாரதுங்க முனிதாச. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 11 அவரின் தலைமையில் அவரின் வீட்டில் வைத்து உருவாக்கப்பட்ட இயக்கம் தான் “ஹெல ஹவுல” (Hela Havula) என்கிற இயக்கம். ஒரு வகையில் இதை மொழித் தீவிரவாத இயக்கம் என்றும் அழைப்பார்கள். (1)

“ஹெல” என்பதே சிங்கள மொழியின் மூல மொழி என்றும் அதை பலப்படுத்தும் வகையில் தான் “ஹெல ஹவுல” என்று பெயர் வைத்துக்கொண்டார்கள்.

சிங்கள இனத்தை தூயமைப்படுத்தவேண்டும் என்றால் சிங்கள மொழியும் அந்நிய கலப்பில்லாத தூய்மையான சிங்கள மொழியாக இருத்தல் வேண்டும் என்று அந்த இயக்கத்தவர்கள் கூறினார்கள். சிங்களத்தில் கலந்துள்ள பாலி, சமஸ்கிருதம் என்பவற்றின் செல்வாக்கை நீக்க வேண்டும் என்று இயங்கினார்கள். அது மட்டுமன்றி காலனித்துவ போத்துக்கேய, ஒல்லாந்து, ஆங்கிலேயக் கலப்புகள் கூட இல்லாத சிங்களத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற இயக்கத்தை முன்னெடுத்தார்கள். ஹெலியோ (The Helio) என்கிற ஒரு சஞ்சிகையும் 1941 இல் தொடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தினார்கள்.(2) குமாரதுங்க முனிதாச எழுதிய சிங்கள இலக்கணம் குறித்த நூல் ஒரு தலையாய நூலாக திகழ்கிறது.(3)

இந்திய ஆரியவாத செல்வாக்கிலிருந்து சிங்கள மொழியையும், இலக்கியங்களையும் மீட்கவேண்டும் என்று இயங்கியது இவ்வியக்கம். அதுபோல ஒரு இனம் பூரணப்படாமல் மொழி மட்டும் தனித்து எப்படி வாழும் என்றார்கள்.

இலங்கையின் பிரபல நாடகாசிரியர் ஜோன் த சில்வா 1886 இல் முதற் தடவையாக இராமாயணத்தை இலங்கையில் மேடையேற்றினார். அந்த இராமாயண நாடகத்தின் பிரதி பல ஆண்டுகளாக மேடையேற்றப்பட்டு வந்தது. அந்த பிரபலமான இராமாயணக் கதை இலங்கையின் சுயத்துக்கு இழுக்கு என்று “ஹெல ஹவுல” தீர்மானித்தது. இராமாயணத்துக்கு மாற்றாக அவர்கள் “சக்வித்தி ராவண” என்கிற ஒரு நாடகத்தை இயக்கினார்கள். அது 1946முதன் முதலில் மேடையேற்றப்பட்டது. சிங்கள சமூகத்தில் பிரசித்திபெற்ற இந்த நாடகம் இன்றும் ஆயிரக்கணக்கான தடவைகள் மேடையேற்றப்பட்டு வருகிறது. அந்த நாடகத்தில் வரும் “பொம்புளே மேக் பொம்புளே” என்கிற பாடல் தமிழர்கள் பலரும் அறிந்த பிரசித்தமான பாடல்.

ஹெல ஹவுல இயக்க திட்டத்தின் ஓர் அங்கமாக, இதிகாச வாயிலாகக் கூறப்பட்ட சிங்களவர்களின் மூதாதையரான விஜயனின் வருகைக்கும் முற்பட்ட காலத்தைப் பற்றிய கண்ணியமான வரலாறொன்றினை கட்டியெழுப்ப்புவதன் முக்கியத்தை உணர்ந்தார்கள். விஜயனின் வருகைக்கு முன்னரும், அதன் பின்னர் இந்தியச் செல்வாக்குகள் ஊடுருவுவதற்கு முன்னரும், இலங்கையில் தூய்மையான வரலாற்றைக் கொண்ட பாரம்பரியமும் நாகரிகமும் இருந்தன என்பதை வலியுத்தினார்கள்.

இராவணனின் கற்பனைக் கதைக்குப் புத்துயிர்ப்பு அளிக்கும் போது இராவணனை இயக்கன் என்றும் இராட்சத அரசன் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஆரம்பத்தில் இயக்கர்களும் (Yakshas), இராட்சதர்களும் (Rakshas) இலங்கையில் வாழ்ந்தனர் என்றும் அவர்கள் மனிதர்கள் அல்லர் என்றுமே சிங்களப் புராணக் கதைகளில் காணப்படுகின்றது. “இயக்கர்', இராட்சதர்'' என்ற பதங்களின் வர்ணனைகளின் மூலம் அவர்கள் மனிதர்களை விழுங்கி தீங்கு விளைவிக்கிற பேய்களைப் போலத்தான் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான இராவணனின் பேய்த்தோற்றத்தையும், இயக்கர்களின் பேய்த் தோற்றத்தையும் மாற்றி, மானிட உருவம் கொடுத்தது இந்த இயக்கம். 

2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணி எலிசபத் இராணியாக பதவியேற்று 50 வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக பக்கின்ஹோம் மாளிகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்த நாடகமும் தெரிவானது. அந்நாடகத்தை இராணி மிகவும் இரசித்தார் என்கிற பதிவுகளையும் காண முடிகிறது. (4)

இந்த நாடகத்தில் தான் இராவணன் முதற் தடவையாக ஒரு கதாநாயகனாக மாற்றப்படுகிறான். இந்த நாடகம் இராவணனை பற்றி புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. அதுவே இராவணனைப் பற்றிய தேடலையும் தூண்டியது. இராவணன் இலங்கையின் தலைவன் தானே, நமது தலைவன் அல்லவா? சிங்களத் தலைவன் அல்லவா என்கிற முடிவுக்கும் வந்தார்கள்.

இராவணப் புனைவின் முன்னோடி நூல்
இராவணன் பற்றிய புனைவுகளை வரலாற்று உண்மை போல சித்திரிக்கும் வகையில் வெளியான முன்னோடி நூல் ஆரியதாச செனவிரத்ன என்பவர் 1991இல் எழுதிய (ශ්‍රී ලංකා - රාවණ රාජධානිය - ஸ்ரீ லங்கா : இராவண ராஜ்ஜியம்) என்கிற நூல். 

இன்று இராவணனைப் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள நூல்கள் வெளிவந்திருந்தாலும் இராவணனை சிங்களவர்கள் மத்தியில் மீளுயிர்த்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நூல் பின்னர் பல (திருத்திய) பதிப்புகளைக் கண்டது. அந்நூலில் இராவணனின் உயில். (இறுதி ஆசை) என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைந்த அத்தியாயங்கள் உள்ளன. இந்நூல் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவை கௌரவிக்குமுகமாக வெளியிடப்பட்டது. அப்போது இந்தியாவை கடுமையாக எதிர்த்தபடி இருந்தார் பிரேமதாச. 

இராவணன் இந்தியாவிற்கு எதிராகக் கொண்டிருந்த உணர்வலைக்கும், பிரேமதாச கொண்டிருந்த உணர்வலைக்கும் இடையிற் காணப்பட்ட நேரடி ஒருமைப்பாட்டினை இந்நூலில் அவர் விளக்குகின்றார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், உண்மையில் பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்தன என்கிறார்.
"இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்ததாக அந்நூலின் முகவுரையில் அவர் குறிப்பிடுகிறார். அப்போது பிரேமதாச துணிச்சலுடன் இந்தியாவை பகைத்துக்கொண்டார். IPKF ஐ வெளியேறச் சொன்னார்.
சமாதானத்தை நிலைநாட்டுவது என்ற பொய்யான போர்வையில், இந்தியாவின் புதிய அவதாரமான இராமரினால் அனுப்பப்பட்ட அந்நியப் படைகளை (IPKF) பிரேமதாச தனது சொற்போரினால் விரட்டியடித்தார்'' 
என்கிறார்.

1995 இல் சசங்க பெரேரா எழுதிய கட்டுயொன்றில்; விஜயன் பற்றி புனைந்து சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மகாவம்சக் கதைகளை இல்லாமல் செய்வதோ இராவண கதைக்கு புத்தியிரப்பளிப்பதோ வெற்றியடையமாட்டாது என்றும் அவர்களின் கற்பனையில் கூட இராவணனின் கதை பதியவில்லை என்றும், அது சாத்தியமில்லை என்றும் குறிப்பிடுகிறார்.(5) ஆனால் சரியாக இப்போது 25 வருடங்கள் ஆகும் போது அந்த கணிப்பு தகர்ந்திருக்கிறது பேரினவாத நிகழ்ச்சிநிரல் என்று தான் கூறவேண்டும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் நில ஆக்கிரமிப்பையும் அதன் வழியாக ஒட்டுமொத்த தமிழர் அபிலாஷைகளை நிறைவுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சிநிரலின் அங்கமே இந்த இராவணக் கடத்தல் எனலாம்.
வெகுஜனமயப்படுத்தப்படும் இராவணன்
ராவணன் பற்றிய கதைகளும் அல்லது இராவணப் புனைவுகளும் இராமாயணக் காவியம் உருவாக்கப்பட்ட இந்தியாவிலும், இலங்கை வாழ் சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி இந்திய உபகண்ட நாடுகளிலும் தாய்லாந்து, மியான்மார், பாலித்தீவு போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் பாரம்பரிய நாட்டார் கதைகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும், நம்பிக்கைகளின் மூலமும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.  மேற்கு நாட்டு நாட்டு அறிஞர்களையும் கலைஞர்களையும் கூட ஈர்க்கிறது, ஏனெனில் இதற்கு ஒரு இலக்கியக் காவியப் பெறுமதி உண்டு என்பது உண்மை. இது மாய, மந்திர, போர், காதல், பழிவாங்குதல் மற்றும் கதாநாயக வழிபாடு என ஈர்க்கிறது.

அந்த வகையில் காவியப் பெறுமதிக்கப்பால் அதற்கென்று ஒரு நம்பகப் பெறுமதி கிடையாது. ஆனால் அக்காவியம் மக்களின் செவி வழிக்கதைகளினூடாகவும், நாடகம், கூத்து என இன்னும் பல கலை இலக்கிய வடிவங்களின் ஊடாகவும் வழிவழியாக வெகுஜன செல்வாக்கை நிறுவியிருக்கிறது.

இராமாயணத்தையும், இராவணனையும் வரலாற்று, தொல்லியல் வழிமூலம் எவரும் நிறுவியது கிடையாது. ஆனால் இன்று வரை இந்தியாவில் இந்துத்துவ பாசிச சக்திகளால் புனிதப்படுத்தப்பட்டு இராமனை தெய்வமாக கோவில் கட்டி வழிபடுவதோடு நிற்காமல் இராமனை இன்றையை இந்துத்துவ போரின் தலைமை வடிவமாகவும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். அதே இந்தியாவில் இராவணனின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தி இராவணனைக் கொன்ற நாளாகக் கொண்டாடுவதை இந்திய வட மாநிலங்களில் இராமலீலா என்கிற பேரில் பண்டிகையாக நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது.

வெகுஜனத் தளத்தில் இராமாயணமும், இராமனும், எப்படி வட இந்தியாவில் நம்பகமான கதையாக நிறுவப்பட்டுள்ளதோ அதுபோலவே இலங்கையில் இராவணன் சிங்களவர்கள் மத்தியில் சீமீபகாலமாக நம்பகமானதாக நிறுவப்பட்டுவருகிறது. ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் இராவணனைக் கொண்டாடிய அளவுக்கு இராமாயணத்தை கொண்டாட முற்பட்டதில்லை. ஏனென்றால் இராமாயணத்தில் வில்லன் “சிங்களத் தலைவன் இராவணன்”. ஆனாலும் இராமாயணத்தை தவிர்த்து இராவணக் கதைகளை நிறுவமுடியாததால் இராமாயணத்தை சில சிங்கள தொலைகாட்சி சேனல்கள் வெளியிட்டன. இந்தியாவில் இந்தி மொழியில் வெளியான இராமாயணத் தொடரை சிங்கள டப்பிங்குடன் வெளியிட்டு வந்தார்கள் அவர்கள். அதை மீண்டும் மீண்டும் வெளியிட்டார்கள்.

அதன் பின்னர் 2018இல் இராவணன் பற்றிய மெகா தொலைகாட்சி “உரையாடல்” தொடரொன்றை சிங்கள மொழியில் “ராவண” (රාවණ) என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் இனவாத தொலைக்காட்சிச் சேனலாக இயங்கிவரும் “தெரண” என்கிற சேனலில் இந்தத் தொடர் 100 தொடர்களையும் கடந்தது. இராவணன் பற்றிய ஊகங்களையும், புனைவுகளையும், கட்டுக்கதைகளையும் பேச பல சிங்கள வரலாற்றாசிரியர்கள், இலங்கையின் அதி பிரசித்திபெற்ற தொல்பொருள் நிபுணர்கள், பாரம்பரிய கலைஞர்கள் பலர் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தக் கற்பிதங்களை தொழில்சார் நிபுணர்களாக (Professionals) எப்படி இது முடிகிறது என்றே நமக்குத் தோன்றும்.

பின்னர் கடந்த நவம்பரிலிருந்து தொலைகாட்சி நாடகத் தொடராக இன்னொரு “ராவண” என்கிற பேரில் தெரண தொலைக்காட்சிச் சேவையில் ஞாயிறு நாட்களில் 8.30 மணியளவில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரம் Hi peak என்று சொல்லக்கூடிய அதிக பேர் பார்க்கக் கூடிய நேரம் என்பதால் ஒளிபரப்பு செலவும், விளம்பரக் கட்டணமும் உயர்ந்த நேரம் என்பதும் கவனிக்கத்தக்கது. இம்மாதம் (2020 யூன் மாதம்) அது 21 வாரங்களையும் கடந்து போய்க்கொண்டிருகிறது. துஷார தென்னகோன் என்பவர் இதனை இயக்கிவருகிறார். 100 வாரங்கள் வரை எட்டுவதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் இது பற்றிய ஆய்வுகள் பல நிகழ்த்தியவர் என்கிற செய்தியுடன் தான் அதன் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.

இது வெளிவர முக்கிய பாத்திரம் வகித்த “தெரண” தொலைக்காட்சியின் உபதலைவரான லக்சிறி விக்கிரமகே கதையின் மூலத்தைப் பற்றி இப்படி தெரிவிக்கிறார்.
“இராவணன் ஒரு அதிசயிக்கத்தக்க அரசன். அப்பேர்பட்ட ஒரு ஒரு தலைவனைப பற்றிப் பேச வான்மீகியின் இராமாயணத்தை ஒரு “மூலமாக” நாங்கள் பயன்படுத்தவில்லை. வால்மீகியின் இராமாயணத்தில் இராவணன் ஒரு துஷ்டனாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நிகழ்ந்தது பாரதத் தரப்பை அவர் தோற்கடித்தார். அதனால் தான் அவர்கள் இராவணனை துஷ்டனாக காண்பிக்கிறார்கள்.” (6)
இராவணன் என்கிற திரைப்படமாகத் தயாரிப்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டம் என்கிறார் மேலும் அவர்.

இதைத் தவிர அரச தொலைக்காட்சி சேவையான ITNஇல் (சுயாதீன தொலைக்காட்சிச் சேவை) “இராவண புராணம்” (ராவண புராணய රාවණ පුරාණය) என்கிற ஆவணப்படத் தொடர் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு 21 வாரங்கள் காண்பிக்கப்பட்டன. இத்தொடரில் இராவணன் புலங்கியதாக சொல்லப்படும் இலங்கையின் பல பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள குகைகள், மலைகள், காடுகள், நதிகள் என்பவற்றைகே காட்டி பல கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இங்கு உறங்கினார், குளித்தார், சீதையை மறைத்துவைத்திருந்தார், ஐந்து வானூர்திகளை வைத்திருந்தார். இங்கு தான் இறக்கினார், என்றெல்லாம் கதை விடுகிறார்கள். இது ஒரு அரச தொலைக்காட்சியின் சொந்த நிகழ்ச்சி என்பதை கவனிக்க.

இந்த புனைவுகளின் உச்சம் என்னவென்றால் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்

“இராவணனின் உடல் இன்னும் பக்குவமாக இருக்கிறது. ஆனால் தயவு செய்து எங்கே இருக்கிறது என்று தேடப்போகாதீர்கள். அது ஆபத்தானது. அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு என்ன ஆனது என்பதை நாங்கள் அறிவோம் அதனால் தான் கூறுகிறோம்” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான கயான் சந்தகெலும். இவரின் இன்னொரு காணொளியும் காணக்கிடைத்தது அதன் தலைப்பு “இராவணன் பௌத்தனா? இந்துவா?” அதில் அவர் “புத்தருக்கு முற்பட்ட காலத்து இராவணனை” பௌத்தன் என்று நிறுவ அதிக சிரத்தை எடுக்கிறார். புத்தர் பௌத்தத்தைத் தந்தவர்களில் இடைப்பட்டவர் தான் என்றும் அதற்கு முன்னரே அத்தத்துவத்தை தந்துவிட்டு சென்றவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஆகவே இராவணன் ஒரு பௌத்தன் தான் என்றும் நிறுவ முற்படுகிறார்.
இந்திரஜித்தின் கிரியோடிஷ்ய (ඉන්ද්‍රජිත්ගේ  ක්‍රියොඩ්ඩිශය) என்கிற தலைப்பிலான சிங்கள நூலொன்றின் விமர்சனத்தை யூடியூப் சேனலில் சமீபத்தில் கண்டேன். இந்த விமர்சனத்தைச் செய்தவர் பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி. இராவணனின் மகன் இந்திரஜித் கையாண்ட போர் நுட்பங்கள் பற்றியதாம் இந்த நூல். இது தேவநாக எழுத்து வடிவத்தில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அச்சுக்கு கொணரப்பட்ட நூல் என்று அறிமுகம் செய்கிறார். பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி பாரம்பரிய சிங்கள தற்காப்புக்கலைகளை கற்றுக் கொடுப்பதில் பிரசித்தி பெற்றவர். இலங்கை இராணுவத்துக்கு சிறப்புப் பயிற்சிகளை அவர் செய்பவர் என்பதை அவரின் இணையத்தள விபரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

மேற்படி கூறிய அனைத்து நாடகங்களும், ஆவணப்படங்களும், உரையாடல்களும். நூல் விமர்சனமும் youtube இல் காணக்கிடைக்கிறது. இக்கட்டுரைக்காக அங்கிருந்துதான் அவற்றை ஆதாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன். இராவணனைப் பற்றி ஒருதொகை வீடியோக்கள் சிங்களத்தில் அங்கு உள்ளன.

மேலும் சிங்களச் சூழலில் இராவணன் பற்றிய அலை மேலெழுந்திருக்கிற இந்தக் காலத்தில்; சிங்களச் சந்தையில் இராவணன் ஒரு பெரும் விற்பனைப் பண்டமாக ஆக்கப்பட்டிருப்பதைத் தான் அவதானிக்க முடிகிறது.

இராணவன் பற்றி சிங்களச் சூழலில் இதுவரையான எனது அவதானிப்பில் கண்டு கொண்ட சில புள்ளிகள்:

இராவணின்  வழித்தோன்றல் தாங்கள் தான் என்று உரிமைகோரி சிங்களக் கிராமங்களே உள்ளன. அதன் தொடர்ச்சியாக இராவணின் உறவுகாரர் தாங்கள் தான் என்று அறிவித்துக்கொண்டு வாழ்வோர் இலங்கையில் உள்ளனர்.

இராவணன் மீண்டும் எழுவார் என்றும் இன்னும் சிலர் இராவணன் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் என்றும் நம்மைச் சுற்றி இருக்கிறார் என்கிற ஐதீகங்களும் உள்ளன.

இலங்கையின் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சீகிரிய மலைக் கோட்டையை செய்தது இராவணன் என்கிற நம்பிக்கை உண்டு. அந்த மலையின் மேல் இராவணின் விமானம் இறங்கும் இறங்குதளத்தின் தடங்கல் இருப்பதாக நம்பப்படுகிறது.

சீகிரிய ஓவியத்தில் காணப்படுகிற ஓவியத்தில் இருப்பது இராவணின் மனைவி மண்டோதரியும், மண்டோதரியின் பரிவாரப் பெண்ணும் தான் என்கின்றனர். இதைப்பற்றிய செவிவழிக் கதைகள் இப்போதும் அந்த ஊர்களில் நிலவுகின்றன.

சிகிரியவைச் சுற்றி உள்ள ஊர்களில் கிராமிய மரபுவழிப் பாடல்களாக இன்னும் இப்படி ஒரு பாடல் பாடப்படுவதுண்டு. 
සීගිරි ගලේ විල සැදුවේ      කවුරුන්දෝ
සීගිරි ගලේ රූ ඇන්දේ       කවුරුන්දෝ
සීගිරි රුවෙන් දිස් වන්නේ  කවුරුන්දෝ
මෙතුන් පදේ විසඳන්නේ   කවුරුන්දෝ
පිළිතුර:
සීගිරි ගලේ රාවණ දෙවි විල   සැදුවා
සීගිරි ගලේ විස්කම් සිත්තම් කෙරුවා
සීගිරි රුවෙන් මන්දෝදරී  දිස්වෙනවා
මෙතුන් පදේ නිසි ලෙස මම විසඳනවා
சிகிரியா பாறையின் ஏரியை கட்டியவர் யார்
சிகிரிய ஓவியத்தை வரைந்தவர் யார்
சிகிரிய தோற்றத்தில் இருப்பவர் யார்
இம்முக்கேள்விக்கு விடை தருவார் யார்
பதில்:
ராவணன் கடவுள் சிகிரிய பாறையில் ஏரியைக் கட்டினார்
அவர் சிகிரியா பாறையில் ஓவியம் வரைந்தார்
சிகிரிய உருவத்தில் மண்டோதரி வியப்பூட்டுகிறார்
இம்முக்கேள்விக்கும் விடை தீர்த்தேன் நான். (7)
(இப்பாடல் எக்காலத்தில் இருந்து தொடரப்பட்டது, யாரால் இயற்றப்பட்டது போன்ற விபரங்களை அறிய முடியவில்லை. ஆனால் இப்பாடலை பல சிங்கள கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டுகிறார்கள்.)

இராமனையும், இராமாயணத்தையும், அதன் வழியாக வைணவத்தையும் கொண்டாடுவதும், வழிபடுவதும், நீட்சியாக இராவணனைக் கொண்டாடும் வெகுசிலராக தமிழர்கள் குறுகிவிட்ட நிலையில் இராவணன் தமது தலைவனே என்று சிங்களவர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இராவணன் அரக்கர் இனத்தில் இருந்து வந்த“ஹெல” இனத்துத் தலைவன் என்றும், அந்த இராவணின் வழித்தோன்றல் குவேனி என்றும் குவேனியை கரம்பிடித்தவர் விஜயன் என்றும் அவர்களின் வழித்தோன்றலே சிங்களவர்கள் என்றும் நிறுவுகிற நூல்களை இப்போதெல்லாம் நிறையவே காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இராவணனைக் கொண்டாடுகின்ற சிங்கள நூல்கள் கடந்த பத்தாண்டுக்குள் மாத்திரம் 500 க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்திருப்பதாகக் கணிக்க முடிகிறது. ஒரு அரை மணி நேர இணையத் தேடலில் இராவணன் பற்றிய 50க்கும் மேற்பட்ட சிங்கள நூல்களின் அட்டைப் படங்களை தேடியெடுக்க முடிந்தது. உதாரணத்திற்கு 15 நூல்களின் தலைப்புகளை இங்கு தருகிறேன்.  இவை அனைத்தும் 2012க்குப் பின் வெளிவந்தவை தான்.
  • இராவணன் மீள எழுகிறான்
  • இலங்கையில் ராவண அரசனின் பின்னர் தோன்றிய நமது அரச பரம்பரையினர்
  • சிங்களவர்களின் தலைவன் இராவணன்
  • இராவண சக்கரவர்த்தியின் திதுலன பம்பர கோட்டை
  • இராவண நடவடிக்கை (Ravana operation)
  • சிங்களவர்களின் முன்னோடி இராவணன்
  • மகாராஜா இராவணன் கட்டியெழுப்பிய பண்பாடு
  • புனைவற்ற இராவண புராணம்
  • இராவணனின் தளம்
  • இராவணக் கோட்டை
  • இலங்கையில் இராவண இராஜதானியும் சீகிரிய புராணமும்
  • இலங்கையின் இராவண சக்கரவர்த்தியின் கலாசார மரபு
  • இராமாயணம் என்கிற மூவுலகையும் வென்ற நமது தலைவன் இராவணன்
  • சிங்கள வம்சத்தின் இராவணவாதம்
  • ஸ்ரீ லங்கேஷ்வர மகா இராவணன்


இராவணன் பற்றிய விசித்திரமான – வியப்பான சமீப கால சிங்களக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பாருங்கள்
  • இராவணனின் வரலாற்றை மூடி மறைக்க முடியாது
  • இராவணனின் விமானத் தொழினுட்பமும் பண்டைய விமானமும்
  • வெள்ளையருக்கு முன்னரே இராவணன் மேலே பறந்த இரகசியம்
  • இராவண அரசனின் போர் முறை
  • இராவணனின் இரத்தச் சொந்தங்களைக் காண ஒரு கிராமத்துக்குச் சென்றோம்.
  • இராவண வரலாற்றைப் புதைத்துவிட முடியாது
“வரிக பூர்ணிகா”
இயக்கர்களைப் பற்றிய பல விபரங்களை உள்ளடக்கியதே “வரிக பூர்ணிகா” (වරිග පූර්ණිකාව - Vargapurnikawa அல்லது Wargapurnikawa) என்கிற ஓலைச்சுவடிகள். இது இராவணன் காலத்திலிருந்து வாய்மொழியாகவும், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் வழியாகவும் இராவணப் பரம்பரை காத்து வந்த தகவல்களை ஒன்றிணைத்து எழுதப்பட்ட ஒன்று நம்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சத்துக்கும் முந்தியது இது. கண்டி ராஜ்ஜியத்தில் ராஜாதிராஜசிங்கன் ஆட்சியின் போது “மனாபவி அருணவெசி நீலகிரிக போதி வங்க்ஷாபய” என்கிற ஒரு பௌத்த துறவியால் ஓலைச்சுவடிகளாக தொகுக்கப்பட்டது.

இயக்கர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள் மட்டுமன்றி பல கதைகளையும் குறிப்பாக இராவணன் பற்றிய கதைகளையும் கொண்டது அது என்கின்றனர். “வரிக பூர்ணிகா” பற்றி எழுதியிருப்பவர்கள்  கௌரான மண்டக்க (කෞරාණ මන්ඨක) என்று அதில் குறிப்பிடப்படுவது இராவணனைத் தான் என்று அடித்துச் சொல்கின்றனர். கௌரான என்பதன் சிங்கள அர்த்தம் “பூரணமானவர்”. “மண்டக்க” என்பதன் அர்த்தம் “அரக்கர்” என்பதாகும். இதன்படி இராவணனை “பூரணத்துவமுடைய அரக்கன்” என்றே அழைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

“வரிக பூர்ணிகா” ஓலைச்சுவடிகள் தற்போது மெனேவே விமலரதன தேரர் வசம் உள்ளது. பரம்பரை பரம்பரையாக இறுகல் பண்டார ரவிஷைலாஷ ராஜகருணா என்கிற வம்சத்தவர்கள் தான் பேணி வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தான் மெனேவே விமலரதன தேரர் (මානැවේ විමලරතන හිමි) இவர் வசம் ஏராளமான ஓலைச்சுவடிகள் உள்ளன. அவரால் ஆராயப்பட்ட சில ஓலைச்சுவடிகளை அவர் நூல்களாகவும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.


அப்படி அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று தான் “இயக்கர்களின் மொழியும் ரவிஷைலாஷ வம்சத்தின் கதையும்” (යක්ෂ ගෝත්‍රික භාෂාව හා රවිශෛලාශ වංශ කථාව) என்கிற நூல். 2012 இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த நூலில் தான் அவர் “வரிக பூர்ணிகா” பற்றிய விபரங்களையும் வெளியிட்டிருந்தார். அதற்கு முன்னர் இந்த விபரங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

இந்த நூல் வெளிவந்ததன் பின்னர் தான் இராவணனை சிங்களத் தலைவராக முன்னிருந்தும் பல முனைப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. அதுவரை இராவணன் பற்றிய கதைகள் மிக மெல்லியதாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழர்களின் மீதான நில ஆக்கிரமிப்பை செய்வதற்கும், நிலத் துண்டாடலைப் புரிவதற்குமான பேரினவாத முஸ்தீபுக்கு “சிங்கள இராவண” பிம்பத்தை உயிர்ப்பிப்பது வாய்ப்பாக ஆனது. சிங்களவர்கள் மத்தியில் இராவணப் புனைவை கருத்தேற்றுவதும், தமிழர்கள் மத்தியில் இராவண வழிபாட்டை பறித்தெடுப்பதுமான ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு அவர்களுக்கு அவசியமாக உள்ளது என்றே கருது வேண்டியிருக்கிறது.

அது மட்டுமன்றி இராவணனின் பெயரில் அமைப்புகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் அத்தனையும் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான முன்னெடுப்புகள் நகர்ந்தன. இலங்கையில் இப்போது இயங்கிவரும் சிங்கள பௌத்த பாசிச இயக்கமான “பொதுபல சேனா” இயக்கத்துக்கு நிகராக “ராவண பலய” என்கிற பேரினவாத அமைப்பும் இந்த நூலைத் தொடர்ந்து தான் உருவாக்கப்பட்டது.

இப்போதும் இராவணன் பற்றிய பல முகநூல் பக்கங்களையும், இணையத்தளங்களையும், youtube சேனல்களையும், பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளையும், ஆய்வுகளையும், விவாதங்களையும், கலைப் பண்பாட்டு படைப்புகளையும் காண முடிகிறது.

“வரிக பூர்ணிகா” 20 பக்கங்களைக் கொண்ட நூல் என்கிறார். அதேவேளை அதன் உப நூல்களாக “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  கிரிதெலம்பு பெந்தி அனபத்த (රංතෙලඹු බැදි අණපත, කිරි තෙළඹු බැදි අණපත) என்கிற இரண்டு உள்ளதாகவும் அவை முறையே 500, 300 ஓலைப் பக்கங்களைக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இவற்றில் “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  என்பதானது “ரவிஷைலாஷ இயக்கர் மொழி”க்கான வழிகாட்டுவதற்கான அகராதியாக இருப்பது அதன் விசேடத்துவம். கடைசி அத்தியாயத்தில் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழ்ந்த “கேவேசஷ்ட இயக்கர்” பற்றிய விபரங்கள் உள்ளடங்கியிருகிறது. ஆனால் இவை எதுவும் தமிழ் ஆய்வுகளுக்கு கிட்டாதவை என்பதை இங்கு கூறியாகவேண்டும்.

ஆனால் இராவணனைப் பற்றியும், இயக்கர்களைப் பற்றியும், குவேனியைப் பற்றியும் ஏராளமான விபரங்கள் உள்ளதாக கூறப்படுவதில் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

“வரிக பூர்ணிகா” வை எழுதியவர் நீலகிரிக போதி வங்க்ஷாபய என்கிற ஸ்ரீ போதி வங்ச விதான என்கிற ஒரு பௌத்த துறவியாவார். கண்டி மன்னன் ராஜாதிராஜசிங்க ஆட்சியின் போது வாழ்ந்த பௌத்த துறவி அவர். ராவணன் காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக பரம்பரையாக பாதுகாக்கப்பட்ட நூல்களைத் தொகுத்தே இந்த நூல் உருவாக்கப்பட்டதென்கிறார் மெனேவே விமலரதன தேரர்.

மெனேவே விமலரதன தேரர் ஒரு “திபிடக பண்டிதராக” உயர் நிலையில் வைத்து போற்றப்படுபவர் என்பது இன்னொரு தகவல்.

இராவணன் உருவாக்கிய சிங்கள ஆயுள்வேத மருத்துவ முறைகள் என்றே பல மருத்துவ முறைகளை அழைத்து வருகிறார்கள். ஆயுள்வேத வைத்தியர்கள் இராவணனை வணங்கிவிட்டு மருத்துவம் செய்யும் மரபும் இருக்கிறது. ஆனால் அது எப்போதிலிருந்து கடைபிடிக்கத் தொடங்கினார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

சமீபத்தில் மெனேவே விமலரதன தேரர் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தன்னிடமுள்ள பல ஓலைச்சுவடிகள் குறித்து விபரித்திருந்தார். பல ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரகணக்கான குறியீடுகளை தான் இன்னமும் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை என்கிறார். அந்த நேர்காளில் 26 வது நிமிடத்தில் ஒரு ஓலைச்சுவடியை எடுத்து உதாரணத்துக்கு விளக்குகிறார்.
“இது இயக்கர்கள் பற்றிய ஓலைச்சுவடி இல்லை. ஆனால் இது தமிழில் எழுதப்பட்டிப்பது தெரிகிறது. நாம் அதையிட்டு குழப்பமடையத் தேவையில்லை. எனது தகப்பனார் இவற்றை வாசிக்கக் கூடியவர். என்னால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதை வாசித்தறியும் அறிவு இன்று இல்லாமல் போய் விட்டது. சில வல்லுனர்களின் உதவியுடன் அவற்றில் சில ஆராயப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருகின்றன.” 
என்கிறார் அவர்.

மகாவம்சமும் சொல்லாத “வரிக பூர்ணிகா” சொல்லியுள்ள “சிங்களவர் கதை” என்ன என்பதைத் தேடி இன்று வரலாற்று ஆய்வாளர்களும், தொல் பொருள் ஆய்வாளர்களும் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர். சில மதங்களுக்கு முன்னர் எழுத்தாளர் பிரபாத் அத்தநாயக்க என்பவர் அப்படி ரிட்டிகல என்கிற இடத்தில் இராவணனின் அடிச்சுவட்டைச் தேடிச் சென்றதாக கூறி ஒரு கட்டுரையை எழுதினார். 29.02.2020 அன்று வெளியான அந்தக் கட்டுரையின் தலைப்பு கூட “மகாவம்சத்தில் இல்லாத “வரிக பூர்ணிகா”வில் இருக்கிற இராவணனின் வரலாற்றைத் தேடி ரிட்டிகல பயணம்” என்று இருந்தது.

“வரிக பூர்ணிகா”  புனைவுகளைக் கொண்ட பெரும் திரிபு என்று வாதிடும் ஆய்வாளர்களும் உள்ளார்கள். ஆனால் இதுவரை இராவணன் பற்றி எழுதிய தமிழ் ஆய்வாளர்களின் பார்வைக்கு இந்த விபரங்கள் எட்டியதாகத் தெரியவில்லை.

இராவணனின் தற்காப்புக்கலை !?
அதேவேளை சிங்களவர்களின் தற்காப்புக் கலையாக இன்று போற்றப்படும் “அங்கம்பொற” கலையை கற்பவர்களும், கற்பிப்பவர்களும் இராவணனை வணங்கிவிட்டு தொடருகின்றனர். அது இராவணனின் கலை என்கின்றனர். ஆனால் சமீப காலம் வரை அக்கலை கேரளாவிலிருந்து இலங்கைக்கு வந்த களரி இலங்கைக்கான வடிவமெடுத்தே “அங்கம்பொற” ஆனது என்றே கூறி வந்தனர். 2019 மார்ச் மாதம் இலங்கையின் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் “அங்கம்பொற” கலையை மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முடிவை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பெரிய விழாவெடுத்து இலங்கையின் “மரபுரிமையாக” அதை பிரகடனப்படுத்தியதும் நினைவிருக்கலாம்.


இராவணனைப் பற்றி அதிகம் எழுதி அக்கருத்துக்களை வெகுஜனமயப்படுத்தியதில் பேராசிரியர் மிராண்டோ ஒபேசேகரவின் ஆராய்ச்சிகளைப் பற்றி லங்காதீப பத்திரிகையில் “இராவண அரசனின் போர்முறை” என்கிற தலைப்பிலான கட்டுரையில் “அங்கம்பொற” கலையானது இராவணன் நமக்கு விட்டுச் சென்ற தற்காப்புக்கலை என்று நிறுவ முயல்கிறார். இராவணனுக்குப் பின்னர் விபீஷணன் போன்றோர் அக்கலையை முன்னெடுக்காததன் விளைவு அது “அங்கம்பொற” கலையைக் கற்றிருந்த குலமொன்று இந்தியாவுக்குச் சென்று விட்டதென்றும் அவர்கள் தென்னிந்தியாவில் “அகம்படியார்” என்கிற சாதியாக மாறிவிட்டனர் என்றும், இந்த அகம்படியார் சாதியானது இராவணனின் வழித்தோன்றலே என்றும், முதலாவது விஜயபாகு அரசர் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து அவர்களுக்கு கிராமங்களை பரிசளித்து குடியேற்றினார் என்றும், அவர்கள் குடியேற்றப்பட்ட வெளிதொட்ட என்கிற பகுதி தான் இப்போது தெற்கில் பலபிட்டிய என்கிற பிரதேசம் என்கிறார்.

இராவணனின் மருத்துவ முறைகளை இவர்கள் “அங்கம்” கலையோடு சேர்த்து பேணி வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதைவிட அடுத்த புரட்டு என்னவென்றால்
“இராவணனின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் இராவணனைக் காண நான்கு சில்லு பொருத்திய வாகனத்தில் தான் வந்து போனார். இந்த வாகனத்துக்கு என்று அதிசயிக்கத்தக்க எஞ்சின் பொருத்தப்பட்டிருந்ததுடன், அது சூரிய ஒளியில் இயங்கியது. இவை ஓலைச்சுவடிகளிலும், செய்திகளிலும் காணக்கிடைக்கின்றன. இதன்படி சக்கர வண்டிகளின் தோற்றம் இராவண காலத்தில் இருந்தா? இந்த நாற்சக்கர வண்டியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இலங்கையா என்கிற கேள்வி புதிய தேடலுக்கு வழிவகுக்கும்”
என்கிறார். (8)

இலங்கையில் இராவணனின் அடையாளங்கள் இருப்பதாக நம்பப்படும் பல இடங்களை குறிப்பிட்டு வருகின்றனர். அவ்வாறான பல இடங்களுக்கு உல்லாசப் பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல என்கிற ஒரு ஊர் உண்டு. அங்குள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் ஒரு பலகையின்  அடையாளக்குறிப்பில் “நீங்கள் வாரியபொல நகரினுள் பிரவேசிக்கிறீர்கள். இராவணனின் ஆட்சிக்காலப் பகுதியில் இந்நகரம் காற்றிலும் பார்க்க அதிவேகம் கூடிய வாகனங்கள் தரையிறங்கும் பகுதியாக விளங்கியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பலகை வாரியபொல பிரதேச சபையினால் பல சில தசாப்தங்களாக அங்கு வைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அந்த நகருக்கு அந்தப் பெயர் வரக் காரணமாக இப்படிச்  சொல்லப்படுகிறது. 'வா' என்பது காற்றையும், ரிய' என்பது வாகனத்தையும், 'பொல' என்பது இடப்பரப்பையும் குறிக்கின்றன. இவ்வாறு . இம்மூன்று கருத்துக்களையும் ஒன்று சேர்க்கையில், இந்த ஊகம் காற்றினால் இயங்கும் அல்லது காற்றின் வேகத்தில் பறக்கும் வாகனங்கள் தறையிரங்கிய இடத்தைக் குறிக்கின்றது எனலாம்.

இராவண கற்பனைக்கதையை வரலாற்றுண்மைகளாக மாற்றியமைப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று.

“வன்னி ராஜாவலிய”வும் “மகாசம்மத” மன்னனும்
இராவணன் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றுக்கான தேடல்களின் போது “வன்னி ராஜாவலிய” (වන්නි රාජාවලිය) என்கிற ஓலைச்சுவடி குறித்து பல இடங்களில் அறிய முடிகிறது. தமிழில் தேடினால் அப்படி ஒன்றைப் பற்றிய விபரங்கள் எங்கும் பதிவுசெய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. சிங்கள ராஜாவலிய என்பது சிங்களவர்களின் அரச வழிமுறை பற்றிய விபரங்களை அடக்கியது என்பதை அறிவீர்கள். பல நூல்களில் உள்ள அடிக்குறிப்புகளின் படி இந்த “வன்னி ராஜாவலிய” ஓலைச்சுவடியை கொழும்பு நூதனசாலையின் நூலகத்தில் இருந்து பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சிங்களத்தில் பேராசிரியர் கணநாத ஒபேசேகர நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். அவர் இது பற்றி வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.

“வன்னி ராஜாவலிய” நூலில் குறிப்பிடப்படுகின்ற “மகாசம்மத்த” என்கிற அரசன் இராவணனைத் தான் குறிப்பிடுகின்றனர் என்றும், அதன்படி விஜயனுக்கு முன்னர் இருந்தே தமது சிங்கள அரச வம்சாவழி தொடங்கிவிட்டதாகவும் உறுதியாகவும் கூறுகிறார்கள்.

வன்னி பற்றிய விபரங்களை சிங்களத்தில் பேசுபவர்கள் இதைத் தவிர “வன்னி உபத்த” (වන්නි උපත,), “வன்னி வித்திய” (වන්නි විත්ති), “வன்னி கடைய்ம் பொத்” (වන්නි කඩයිම්) போன்ற ஓலைச்சுவடிகளையும் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்த ஓலைச்சுவடிகள் பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக கூறுகின்றனர். வன்னி உள்ளிட்ட பகுதிகள் சிங்களப் பிரதேசமாக உரிமைகொண்டாடுவதற்கும் இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழருக்கா சிங்களவருக்கா இராவணன் சொந்தம்
இப்போது உள்ள வாதம் இதுதான்; இராவணனை தமிழர்கள் தான் கொண்டாடி வந்தார்கள். தமிழர்களின் தலைவனாகத் தான் பெருமிதமடைந்து வந்தார்கள். கோவில் கட்டினார்கள். சிலைகள் எழுப்பினார்கள். தொல்பொருள் ஆதாரங்களை தமதேன்றே கூறிவந்தார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் இராவணன் தமது புராண தமிழ் – இந்துத்துவ தலைவனாகவே கொண்டாடி வந்திருக்கிறார்கள்.

இப்போது சிங்களவர்கள் தமது தலைவர்கள் என்று வாதிடத் தொடங்கியிருப்பதுடன், தமது பெரும்பான்மை பலத்துடனும், அரச அதிகாரத்தின் அனுசரணையுடனும் அதை பலமாக நிறுவி வருகிறார்கள். வெகுஜனப் புனைவுப் பரப்புரை தொடக்கம், தொல்பொருள் புனைவுகள் வரை அது நீண்டுவிட்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதியில் நில அக்கிரமிப்புக்காகவும், பண்பாட்டு ஆக்கிரமிப்புக்காகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவமாகவும் இராவணனின் இடங்கள் தான் இவை எனவே இது சிங்களவர்கள் நிலமே என்கிற தர்க்கத்தை முன் வைக்கத் தான் போகிறார்கள். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்கெனவே கண்டெடுக்கப்படுகின்ற பௌத்த தொல்பொருள் எச்சங்களை காண்பித்து “பௌத்த எச்சங்கள் ஆகவே இது சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது” என்று உரிமை கோரத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் அங்கு பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதையோ, பௌத்தம் தமிழர்களிடம் தலைத்தோங்கியிருந்தது என்பதையோ கொண்டாடாததன் விளைவு அந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப தலைப்பட்டிருக்கிறார்கள். அதே கதி தான் இன்று இராவணனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் வரலாறும், தொன்மம் பற்றிய மரபும், அதன் முதுசமும் இருவேறு மொழிகளில், இரு வேறு வழிகளில், இருவேறு அர்த்தங்களில், இருவேறு வியாக்கியானங்களில் நெடுங்காலமாக பயணித்தபடி இருப்பதை அவதானித்தாக வேண்டும். இப்போதும் தமிழில் பேசப்படுகிற வரலாற்றுத் தொன்மை பற்றி சிங்களவர் அறியார். சிங்களவர் மத்தியில் ஊன்றியிருக்கும் வரலாற்று மரபு குறித்து தமிழர் அறியார். இந்த இரண்டும் தற்செயலாக ஆங்காங்கு சந்தித்துக்கொள்ளும்போது திடுக்கிட்டு வியக்கின்றன. மோதிக்கொள்கின்றன. ஈற்றில் பெருமிதத் தொன்மை பேசி இருப்பைத் தக்கவைக்கும் அவசர நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. குறிப்பாக இனத்துவ முறுகலின் உச்சத்தில்  இருக்கிற இந்த நாட்டில் இந்த துருவமயப் போக்கு ஆபத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஆபத்தை தூண்டிக் கொண்டிருக்கிறது. வெடித்து வெடித்துத் தணிகிறது.

இப்போது இராவணனை தங்கள் பாரம்பரிய புராதன பண்பாட்டின் நாயகன் என்று பரஸ்பர பகைமையுணர்வு கொண்ட சிங்களவர்களும், தமிழர்களும் கொண்டாடுகின்றனர். புராணக் கதைகளுயும் இதிகாசங்களும் இப்போது அரசியல்வாதிகள், தேசியவாதிகள், இனவாதிகள் அனைவருக்குமே தமது கைகளில் சூழ்நிலைக்கிசைந்த கருவியாக மாறியுள்ளது. இவற்றை இன-மத தேசியவாதத்துடனும் இணைத்து அவற்றின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக பயன்படுத்திகொள்கின்றனர். புனித மேன்மைக்கு அவற்றைக் கொண்டு வைப்பதன் மூலம் அதற்கு ஒரு ஆன்மீக அந்தஸ்தையும் கொடுத்துவிடுகின்றனர்.

இராவணனை சொந்தம் கொண்டாடுவதில் இன்னமும் இரு இனங்களுக்கும் மத்தியில் இதுவரை சண்டைகள் வெடிக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குள் தற்போது இந்த உரிமைகோரல் நெருங்கிக்கொண்டிருப்பதாக அச்சம் கொள்ள முடிகிறது. 

இராவணனை விட்டுக்கொடுப்பதை விட, அல்லது போனால் இராவணனை உரிமை கூறுவதைவிட செய்யவேண்டியது என்னவென்றால் இராவணன் நம் தலைவன் இலங்கையின் தலைவன். நீயும் நானும் வேறல்ல. நாம் இரு சாராருமே மண்ணின் மைந்தர்கள் தான், நாம் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல என ஒப்புக்கொள்வதே இனப்பிரச்சினைக்கு முடிவைக் கட்டும். இனங்களுக்கிடையிலான புரிதலையும் எட்டச் செய்யும். ஈற்றில் இனப்பிரச்சினையும் தீர்க்க உதவும்.

இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அடிக்குறிப்புகள்
  1. இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
  2. A. Jeyaratnam Wilson - Politics in Sri Lanka, the Republic of Ceylon: A Study in the Making of a New Nation - Macmillan; 1st ed 1st printg edition (9 May 1974)
  3. K. E. O. Dharmadasa, - Language, Religion, and Ethnic Assertiveness: The Growth of Sinhalese Nationalism in Sri Lanka - University of Michigan Press, 1992
  4. Professor of Linguistics James W Gair, - Studies in South Asian Linguistics: Sinhala and Other South Asian Languagesir - Oxford University Press, 1998
  5. ஜினதாச நிவித்திகல - இங்கிலாந்து மகாராணியை மகிழ்வூட்டிய ஹனுமான் – திவயின – 21.04.2019
  6. சசங்க பெரேரா - இராவணன் புத்துயிர் பெறுகின்றான் - தேர்ந்த கட்டுரைகள் தொகுதி - 33 - விடுதலைப் புலிகளின் அரசியல் பிவி வெளியீடு - யூலை 1995
  7. “இலங்கையின் தொலைகாட்சி நாடகத்துறையை உயர் தரத்துக்கு கொணர்வதே எமது இலக்கு” என்கிற தலைப்பில் வெளியான நேர்காணல் http://www.saaravita.lk/ 4 දෙසැම්බර් 2018 (நேர்கண்டவர் – நிதுன் மதுஷிக)
  8. ஹன்சி சந்தமாலி “රාවණාගේ අපරිමිත ප්‍රේමයේ හිමිකාරී, මන්දෝදරී” (இராவணனின் எல்லையில்லாக் காதலுக்கு உரிமைக்காரி மண்டோதரி) - https://roar.media
  9. அசங்க ஆட்டிகல - “இராவண அரசனின் போர்முறை” – லங்காதீப – 09.09.2014
நன்றி : காக்கைச் சிறகினிலே யூலை - 2020

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates