மீரியபெத்த அனர்த்தம் இடம்பெற்ற தினமான ஒக்டேபர் 29ஆம் திகதியை மலையக மக்களின் காணி வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழு கடந்த 30ஆம் திகதி கொழும்பில் நடத்திய மீரியபெத்த ஒரு மாத நினைவு நிகழ்வில் பிரகடனம் செய்யப்பட்டது. மீரியபெத்த பிரகடனம் என்று மகுடமிடப்பட்ட பிரகடனம் மலையக மக்களின் வீட்டுக் காணி உரிமையை வென்றெடுப்பதற்கான நீண்டகால பிரகடனங்களையும் மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு தேவையான குறுகியகால பிரகடனங்களையும் கொண்டிருந்தன. மலையக மக்களுக்கான தனிவீடுகளை அமைத்துக் கொள்வதற்காக குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியையும் அதனைக் கட்டிக் கொள்வதற்கான வசதிகளையும் வென்றெடுப்பதற்கான பிரகடனம் பிரதானமாக அமைந்திருந்தது.
பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக்கு குழுவின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரணி இ. தம்பையா, பாராளுமன்று உறுப்பினர் ஆர். யோகராஜன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 'மீரியபெத்த - அன்றும் இன்றும்' என்ற ஆவண காணொளி திரையிடப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் 1964ஆம் ஆண்டு பெரகல தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவில் தாயை தவிர அனைத்து குடும்ப அங்கத்தவர்களையும் இழந்த ஓய்வுபெற்ற சிவில் சேவையின் உயர் அதிகாரியான எம். வாமதேவனும் மெழுகுவரத்;தியெற்றியமை குறிப்பிடத்தக்கது.
தலைமையுரையில் ஆர். யோகராஜன் கவனத்தில் கொள்ள வேண்டிய மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான காணி வீட்டுப் பிரச்சினை, சுகாதாரம், கல்வி, மொழியுரிமை, அரச சேவைகளை வினைத்திறனாக பெற்றுக் கொள்வதில் உள்ள நிர்வாக கட்டமைப்பு பற்றி விபரித்ததுடன் மிகவும் அடிப்படையாக வீடில்லாப் பிரச்சினையை எடுத்துக் காட்டியதுடன் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தினார். மலையக மக்களுக்கு தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இ.தம்பையா தனது தலைமையுரையில் மலையக மக்களுக்கான வீட்டுக் காணி உரிமைப் பற்றி நீண்டகாலமாக பலரும் பேசி வருகின்ற போதும் அவ் உரிமையை வென்றெடுப்பதற்காக பல அமைப்புகளையும் தனி நபர்களையும் கொண்ட பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. அவ் உரிமைகளை உறுதி செய்யப்படாததன் எதிரிடை விளைவாகவே மீரியபெத்த மண்சரிவில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உயிர்களையும் உடைமைகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீரியபெத்த சம்பவம் மலையக மக்கள் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் உள்ளடக்கப்படாது சாதாரண உரிமைகள், சலுகைகள் கூட இல்லாமல் ஓரங்கட்டப்பட்டு பாரிய பாரபட்சத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் உயிர் நீத்தவர்களுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்துவதாயின் மலையக மக்களின் காணி வீட்டு உரிமையை வென்றெடுக்க வேண்டும். அதற்கான பயணம் மிகவும் நீண்டதாகும். வெறும் கோரிக்கைகளால் மட்டும் அவற்றை வென்றெடுக்க முடியாது. ஐக்கியப்பட்ட பல நடவடிக்கைகள் அவசியமாகிறது. அவற்றை வென்றெடுப்பற்காக பல சவால்களுக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும் பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவில் தொழிற்சங்க, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் எல்லோரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகிறது என குறிப்பிட்டார்.
மீரியபெத்த அனர்த்தம் - புவியியல் பார்வை என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய சட்டத்தரணி இரா. சடகோபன் மண்சரிவு ஏற்படுவதற்கு இயற்கை காரணிகளும் சூழல் பாதுகாப்புக்கு எதிரான மனிதர்களின் நடவடிக்கைகளும் அடிப்படையாகின்றன என விபரித்தார். இயற்கையான காணிகளின் தாக்கத்தில் இருந்து தப்பி வாழ்வதற்கு மாற்று நடவடிக்கைகளை எடுப்பதுடன் சூழலை பாதுகாப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மீரியபெத்த அனர்த்தம் - சமூகவியல் பார்வை என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய ஆசிரியர் சார்ல்ஸ் மேர்வின் அவ்வனர்தத்தினால் ஒரு தோட்டமே அழிவுற்றமையினால் அங்கு வாழ்ந்த மக்களின் பொருளாதார வாய்ப்புகள் முற்றாகவே இல்லாமல் போயுள்ளதுடன் வாழ்வதற்கான பாதுகாப்பான இடத்தை தேடிக் கொள்ள முடியாத நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள சமூகவில் பிரச்சினைகளை எடுத்துக்காட்டியதுடன் அவற்றை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளையும் நீண்டகாலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளையும் பட்டியலிட்டுக் காட்டினார். நீண்டகால பிரச்சினையாக பாதுகாப்பான இடங்களில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
ஊடகவியளாளர் பழனி விஜயகுமார் மீரியபெத்த அனர்த்தம் - மன்சரிவும் மலையக மக்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய போது ஊவா மாகாண சபையை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் மலையக மக்களுக்கு தனி வீடு கட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை காணியும் கொடுக்கப் போவதுமில்லை மாடி வீடுகளையே கட்டிக் கொடுப்போம் என்று கூறியிருப்பது மலையக மக்களின் அடிப்படை உரிமையான காணி வீட்டு உரிமையை நிராகரிப்பதாகும். மீரியபெத்த சம்பவத்திற்கு பின்னர் மக்கள் தாமாகவே முன்வந்து காணி வீட்டு உரிமைக்கான கோரிக்கையை கையில் எடுத்துள்ளனர். இதற்கான சரியான தலைமைத்துவம் தேவைப்படுவதை நாம் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் செல்வகுமார் மற்றும் நெல்சன் மோகன்ராஜ் ஆகியோர் மீரியபெத்த அனர்த்தத்தை நினைவுகூர்ந்து பாடல்களை இசைத்தனர்.
மீரியபெத்த பிரகடனத்தை சட்டத்தரணி நேரு. கருணாகரன் தமிழ் மொழியிலும் சட்டத்தரணி முதித் திசாநாயக்க சிங்கள மொழியிலும் த. பிரதீஷ் ஆங்கில மொழியிலும் சமர்ப்பித்தனர்.
பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக்குழு
நன்றி - மக்கள் தொழிலாளர் சங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...