Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கை முடியாட்சியிலிருந்து விடுதலை அடைந்தது 1972 இல். 1948இல் அல்ல - என்.சரவணன்

குடியரசு பொன் விழா நினைவாக (1972 - 2022)

இலங்கையில் இருந்த முடியாட்சிகளை கைப்பற்றி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மாறி மாறி அவர்களின் முடியாட்சிக்குள் இலங்கைத் தீவை 450 ஆண்டுகளுக்கும் மேல் வைத்திருந்தார்கள். இலங்கை முடியாட்சிலிருந்து முற்றாக நீங்கி குடியாட்சிக்கு மாறிய நாள் தான் குடியரசு நாளான மே.22. சரியாக 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் 1505 – 1948 வரையான 443 ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டாலும், உண்மையில் 443 ஆண்டுகள் அல்ல. மொத்தமாக 467 ஆண்டுகள் என்றே கூற வேண்டும். ஏனென்றால் இலங்கை பிரித்தானிய முடியிடம் இருந்து முழுமையாக விடுதலை அடைந்தது 1972 குடியரசாக ஆனதன் பின்னர் தான். அதுவரை பிரித்தானிய முடியின் கீழ் தான் இலங்கை ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறினாலும் பிரித்தானியா டொமினியன் அந்தஸ்தைத் தான் வழங்கியது. பூரண சுதந்திரத்தை அல்ல. “சுதந்தர”த்தின் பின்னர் 24 ஆண்டுகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் தான் இலங்கை இருந்தது. 1795 – 1948 வரை பிரித்தானிய ஆண்டது என்பது பிழையான கணக்கு. 1795 – 1972 வரை பிரித்தானியாவின் முடியின் கீழ் இருந்தது எனும் போது மொத்தம் 178 ஆண்டுகள் என்று தான் கூற முடியும்.

இந்து சமுத்திரத்தில் பிரித்தானியாவின் பெரிய காலனித்து நாடான இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது அப்படியல்ல. டொமினியன் அந்தஸ்தைத் தான் இந்தியாவுக்கும் 1947 ஆம் ஆண்டு கொடுத்தார்கள். பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26  தான் இந்தியா டொமினியன் அந்தஸ்திலிருந்து முழுமையாக விடுதலை அடைந்தது. இந்தியா ஆண்டு தோறும் ஓகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாகவும், ஜனவரி 26ஐ குடியரசு தினமாகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள்.

ஆனால் இலங்கை அவ்வாறு குடியரசாவதற்கு அதை விட காலம் எடுத்தது. இந்தியா பூரண சுதந்திரம் வேண்டி கடுமையான சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நாடு. ஆனால் இலங்கையில் பூரண சுதந்திரம் என்பது வீரியமாக இருக்கவில்லை. அரசியல் சீர்திருத்தங்களைத் தான் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கோரினார்கள். சுதேசிகளுக்கு அதிக அதிகாரங்களுடனான பிரித்தானிய முடியின் ஆட்சியை ஏற்றிருந்தார்கள். எனவே பிரிட்டிஷாருக்கும் இலங்கையின் மீதான வல்லாதிக்கத்தை இன்னொரு முகமூடியுடன் தொடர வாய்ப்பு கிட்டியது. அது தான் டொமினியன். டொமினியன் என்பது முடியின் அதிகாரத்தின் கீழான ஆட்சியைத் தான்.

பிரித்தானிய முடியின் கீழான ஆளுநரின் பிடி இருந்தது. அரச தலைவராக பிரித்தானிய மகாராணி தான் இருந்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநரின் கையெழுத்துடன் தான் சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இலங்கையின் உச்ச நீதிமன்றம் என்பது பிரித்தானியாவின் கொமரைக் கழகம் (பிரிவிக் கவுன்சில்) தான் இருந்தது. பிரிட்டன் படைகள் வரலாம், அனுமதியின்றி வான் பரப்பை பயன்படுத்தலாம் என்பது உட்பட பல நடைமுறைகள் அமுலில் இருந்தன.

1948 இல் பூரண சுதந்திரம் அடையவில்லை

இவ்வாறு இலங்கையில் பிரித்தானியாவிடமிருந்து முழுமையாக விடுதலையடைந்த குடியரசு நாளை ஆண்டு தோறும் குடியரசு நாளாகவும், தேசிய வீரர்கள் தினமாகவும் விமரிசையாக 1973 - 1977 வரை கொண்டாடப்பட்டது. அது அரச பொது விடுமுறையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை இக்காலப்பகுதியில் பெப்ரவரி 4ஆம் திகதியை சுதந்திர தின விழாவாக கொண்டாடுவதை நிறுத்தியிருந்தது.

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததும் மே 22 குடியரசு கொண்டாட்டத்தை நிறுத்தினார். விடுமுறை நாளையும் இரத்து செய்தார். அதற்குப் பதிலாக மீண்டும் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதியையே சுதந்திர நாளாக விமரிசையாக கொண்டாடும் வழிமுறையைத் தொடர்ந்தார். இதனால் பலருக்கு குடியரசு தினமே மறந்து போனது. இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம் எப்பேர்பட்ட கொண்டாட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முடியின் கீழ் 1972 வரை

72 வரையான அரசு பிரித்தானிய இராணியின் கீழான அரசாக இருந்ததால் 1962 ஜனவரி 24 அன்று இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் சில அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த அரச கவிழ்ப்புச் சதியைக் கூட இராணியின் ஆட்சிக்கு எதிரான சதியாகவே அது உலகெங்கும் அழைக்கப்பட்டது. அந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்தது. அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் அது தொடர்பான மேன்முறையீடு பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் நடந்தது. அங்கே இராணியின் நீதிமன்றத்தில் (பிரிவிக் கவுன்சிலில்) அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்வது முக்கியம்.

1971 கிளர்ச்சியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய போது கூட இராணியின் சட்டத்தை மீறியமைக்காக தண்டனை அளிக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டது. 

அதுவரையான அரசாங்கமும், அமைச்சரவையும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் போது மகாராணிக்கு விசுவாசமாக இருப்பதாகவே உறுதிமொழி எடுத்தனர். 1972 குடியரசின் பின்னர் தான் இலங்கை ஜனநாயக சோசலிசக் “குடியரசுக்கு” விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்கும் சந்தர்ப்பம் வரலாற்றில் முதல் தடவை வாய்த்தது.

இந்த தோல்வியுற்ற சதியில் சந்தேகநபராக க்ருதப்பட்டவர்களில் ஒருவர் அன்றைய பிரித்தானிய ஆளுநர் ஒலிவர் குணதிலக்க. அவருக்குப் பின் அந்த இடத்துக்கு ஆளுநராக தெரிவான வில்லியம் கொபல்லாவ நியமிக்கப்படுவதை 26.02.1962 அன்று இங்கிலாந்தில் பகிங்க்ஹோம் மாளிகையில் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும் அதே அறிவித்தல் விடுக்கப்பட்டது. இப்படித்தான் டொமினியன் ஆட்சி இலங்கையில் இயங்கியது.

சகல இராணுவ பொலிஸ் அதிகாரிகளின் சீருடை களிலும், தொப்பியிலும் பிரித்தானிய அரச சின்னம் கட்டாயமாக அணியப்படிருந்தது. கடும் மழையில் கூட எந்தவொரு இராணுவத்தினரும், பொலிசாரும் குடையொன்றை வைத்திருக்கும் அனுமதியைக் கூட கொண்டிருக்கவில்லை. அது பிரித்தானிய அரச முடியை அகௌரவப்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டது. 


1970 ஆம் ஆண்டு தேர்தல்

1970 ஆம் ஆண்டு 7வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமமாசக் கட்சி போன்ற இடது சாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தேர்தலில் களம் இறங்கியது.

ஐக்கிய முன்னணிக் கூட்டணியை உருவாக்கிக் கொள்வதற்காக 06.06.1968 அன்று கண்டி போகம்பரை மைதானத்தில் வைத்து அக்கட்சிகள் மூன்றும் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுக் கொண்டனர். 27 விடயங்களைக் கொண்ட அந்த கொள்கைத் திட்டத்தில் ஒன்று தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பிரித்தானியாவிடமிருந்து பூரணமாக விடுதலை பெறுவது என்கிற ஒப்பந்தம். 1935 இல் என்.எம்.பெரேரா தலைமையில் நவ சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கபட்டபோதே இலங்கையை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நீக்குவது என்கிற கொள்கையுடன் தான் ஆரம்பித்தார்கள் என்பதையும் இங்கே நினைவுக்கு கொண்டு வரலாம்.

1970 தேர்தலில் வெற்றி ஈட்டினால் இங்கிலாந்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்கிற வாக்குறுதியை அந்தக் கூட்டணி மக்களுக்கு அளித்திருந்தது. இறுதியில் ஐக்கிய முன்னணி மூன்றில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால்

இந்தத் தேர்தலில் ஐக்கிய முன்னணி நாடளாவிய எடுத்த வாக்குகள் 49 வீதம் மட்டும் தான். அதிலும் சுதந்திரக் கட்சி 36.86 வீத வாக்குகளை எடுத்து 91% ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அதை விட அதிகமாக அதாவது 37.91% வீத  வாக்குகளை எடுத்து வெறும் 17 ஆசனங்க்லாய் மட்டும் தான் பெற்றிருந்தது. தொகுதிவாரித் தேர்தல் என்பதால் இது நிலைமையாக பாராளுமன்றத்தில் அதிக ஆசனத்தைக் கொண்டிருந்தாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாத ஒரு அரசாங்கத்துக்கு எவ்வாறு ஒரு அரசியலமைப்பை மாற்றும் அதிகாரத்தைக் கையிலெடுக்கலாம் என்கிற வலுவான கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது உண்மை.

அத் தேர்தலில் ஐக்கிய முன்னணி 116 ஆசனங்களைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களையே பெற்றது. தமிழரசுக் கட்சி 13ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றது. சுதந்திரத்தின் பின்னர் முதலாவது தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த முதல் தடவை இதுவாக இருந்தது. சிறிமா பண்டாரநாயக்க பிரதமராக தெரிவானார். 



குடியரசின் அரசியலமைப்புருவாக்கம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1970 ஆம் ஆண்டு யூலை 19 ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியின் நவ ரங்கஹால மண்டபத்துக்கு வரும்படிசகல பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். சகல உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்கினார். அதற்கு நீதி அமைச்சரான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவை தலைவராக நியமித்தார்.

அடுத்த பத்தாவது நாளான யூலை 29 ஆம் திகதியும் அச்சபை கூடியது. இடையில் யூலை 22ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையின் விவாதத்தில் அவர் உரையாற்றும் போது

“ பிரித்தானிய முடியுடன் எவ்வித தொடர்பும் இன்றி எமது நாட்டில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஆட்சி முறையை நிறுவுவதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள. இந்த ஆண்டின் இறுதிக்குள், சுதந்திரமான, இறையாண்மையுள்ள ஒரு தேசமாக நாம் அங்கீகரிக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்.” என்றார்.

இலங்கை பொதுநலவாய உறுப்பு நாடாக செயற்பட்ட போதிலும் இறைமையும் சுதந்திரமும் கொண்ட நாடாக இருந்தது. குடியரசாக ஆனதிலிருந்து இலங்கை அரசியல் ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு தலைமை தாங்கிய கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, அரசியலமைப்புச் சபையை உருவாக்குவது தொடர்பாக கருத்து கூறியபோது 

“இதுவரை காலம் மக்களாக நாம் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்நிய சக்தியான பிரித்தானியாவும் இராணியும் தான் அந்த வீட்டை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பதிலாக இன்று நாம் முழுமையாக புதிய அத்திவாரமிட்டு நமக்குத் தேவையான வீட்டைக் கட்டி அதில் குடிபுகுவதற்கான கட்டமைப்பைத் தான் இந்த அரசியலமைப்பு உருவாக்கச் சபையின் மூலம் மேற்கொள்ளப் போகிறோம்” என்றார்.

இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்தம் 35 தடவைகள் கூடி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் என்பவற்றின் அபிப்பிராயங்களையும் அறிந்தது..

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான இந்தக் கமிட்டியில் சட்டவாக்க அலுவல்கள் அமைச்சர் டொக்டர் கொல்வின் ஆர்.டி சில்வா, சபைத் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, கல்வி அமைச்சர் பதியுதீன் மொஹமட், உள்ளூராட்சி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, வர்த்தக அமைச்சர் டி.பி. இளங்கரத்ன, வீடமைப்பு அமைச்சர் பீட்டர் கெனமன், காணி அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவ, நிதி அமைச்சர் கலாநிதி என்.எம். பெரேரா, மீன்பிடி அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்ஷ, சமூக சேவைகள் அமைச்சர் டி.பி. சுபசிங்க, கலாசார அமைச்சர் டி.பி தென்னகோன், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் டி. அக்ஸ் மார்டின்ஸ், தெடிகம பாராளுமன்ற உறுப்பினர் டட்லி சேனாநாயக்க, காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.வி.ஏ. செல்வநாயகம் ஆகியோர் அங்கம் வகித்தார்கள்.

பின்னர் இதில் இருந்து சிலர் வெளியேறினார்கள். உதாரணத்துக்கு ஜே.ஆர். “இலங்கை சுதந்திர இறையாண்மையுள்ள சுயாதீன ஜனநாயக சோஷலிச குடியரசு” என அழைக்கப்பட வேண்டும் என்று யோசனை சொன்னார். ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. “ஸ்ரீ லங்கா குடியரசு” என்றாலே போதும் என்றார்கள். 1971 யூலை 10ஆம் திகதி அரசியலமைப்பு முழுவதும் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டும் விட்டது. அதனை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தி அறிவிக்கும் நாளாகத் தான் 1972 மே 22ஐத் தெரிவு செய்திருந்தார்கள்.

புதிய அரசியலமைப்பை உருவாக்க உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. 1972 மே 4 ஆம் திகதி இந்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மே 22, 1972 இல் "குடியரசு அரசியலமைப்பு" தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இவர்களில் யாழ்ப்பாணப் பிரதிநிதி சி.எக்ஸ்.மார்ட்டின், நல்லூர் பிரதிநிதி சி.அருளம்பலம், வட்டுக்கோட்டைப் பிரதிநிதி ஆ.தியாகராஜா, மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி ராஜன் செல்வநாயகம், நியமனப் பிரதிநிதி எம்.சி.சுப்பிரமணியம், தபால் தந்தி அமைச்சர் செல்லையா, குமாரசூரியர், ஆகிய தமிழ் பிரதிநிதிகளும், ஜனாப் ஏ.அஸீஸும் ஆதரித்து வாக்களித்தார்கள்.

இந்த அரசியலமைப்பை ஏன் ஏற்கமுடியாது என்று முன்னால் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான டட்லி சேனநாயக்க பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அரசியலமைப்பை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்த போதும் அவர்கள் அனைவரும் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.

குடியரசு அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பின் திருத்தம் அல்ல, அது ஒரு புதிய அரசியலமைப்பாகும். சோல்பரி சட்டத்தின் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த 29வது பிரிவை நீக்கியது தொடர்பாக தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்த போது, அதற்குப் பதிலளித்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா; அப் பிரிவுக்குப் பதிலாக புதிய அரசியலமைப்பின் 6வது அத்தியாயம் அடிப்படை உரிமைகள் கொண்டு வரப்படுகிறது என்றும் அவற்றின் மூலம் அவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.

“சுப முகூர்த்தத்தில்” குடியரசு

குடியரசுக் கட்சியின் அரசியலமைப்பை கொழும்பு ரோயல் கல்லூரி “நவ ரங்கால” மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.  பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்கவும், அரசியலமைப்பு வரைவு அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவும் வருகை தந்தனர்.

அன்றைய தினம் மதியம் சரியாக 12.43 மணியளவில் புதிய அரசியலமைப்பை முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவித்த அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் தலைவர் ஸ்டான்லி திலகரத்ன 12.43க்கு கையெழுத்திட்டு அறிவித்தார். மங்கள மேளதாள பேரிகை முழக்கங்களுடன் இது நிகழ்ந்தது. அதன் பின்னர் புதிய அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது குடியரசின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க பகல் 12.56க்கு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சோதிடரின் பஞ்சாங்கத்தின் பிரகாரம் அந்த நேரத்தை அவர் தெரிவு செய்திருந்தார் என்று அன்று பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. சுபநேரம், சுபமுகூர்த்தம் பார்த்து பக்தி சிரத்தையுடன் அது நடைபெற்றது உண்மை. அரசியலமைப்பின் கீழ் தனது முதல் கடமையை நிறைவேற்றியதாக அறிவித்து, வில்லியம் கோபல்லவவை குடியரசின் முதல் ஜனாதிபதியாக நியமித்தார் பிரதமர்.

புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொண்டதன் மூலம், பிரித்தானியாவின் பல காலனி நாடுகளைப் போலவே இலங்கையும் குடியரசாக மாறியது. குடிகளின் ஆட்சியாக ஆனது.

1956 இல் பண்டாரநாயக்கவின் முயற்சி

காலனி ஆதிக்கத்தில் இருந்து நாட்டை விடுவித்து நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவது இதன் நோக்கமாக இருந்தது. 1956ல் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது பிரதமர் எஸ் டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையில் கட்டுநாயக்கா விமானத்தளமும் கொழும்பில் உள்ள பிரித்தானிய கடற்படைத் தளங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அதுவரை இலங்கையின் விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் பிரிட்டிஷ் முடியின் கட்டுப்பாட்டில் தான் (Royal Navy) இருந்தன. அப்போதிருந்தே காலனி ஆதிக்கத்தில் இருந்து முற்றாக விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை மீண்டும் தலைதூக்கியிருந்தது. ஆனால் அது பத்தாண்டுகளுக்கு பின்னர் தான் பண்டாரநாயக்கவின் துணைவியின் தலைமையிலான ஆட்சியில் சாத்தியப்பட்டது. பிரதமர் பண்டாரநாயக்க மூன்றில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்காத போதும் சோல்பரி அரசியலமைப்பை திருத்தி குடியாட்சி அரசிலமைப்பை உருவாக்குவதற்காக செனட் சபை, பிரதிநிதிகள் சபை என்பவற்றின் கூட்டுக் குழுவொன்றை  07.11.1958 அன்று நியமித்தார். ஆனால் ஓராண்டு ஆவதற்குள் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அம்முயற்சியானது பண்டாரநாயக்காவின் படுகொலையின் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் சுருக்கப்பட்ட ஆட்சியால் வெற்றியளிக்கவில்லை. குடியரசு தின வைபவத்தை கொண்டாடுமுகமாக 24 ஆம் திகதி புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் விசேட ஆராதனைகளை செய்து விட்டு வெளியே வந்து உரையாற்றிய பிரதமர் சிறிமா,

“எனது கணவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் குடியரசு எப்போதோ உதயமாகியிருக்கும். 1956 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் இலங்கைக் குடியரசாக்கும் அபிப்பிராயத்தை அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். அதன் பின்னர் அவர் கஷ்டப்பட்டு எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை. அதைத் தான் 1970 ஆம் ஆண்டு எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்திருந்தோம். இன்று அவரின் கனவு நனவாகியுள்ளது. இக்குடியரசின் மூலகர்த்தாவான அவருக்கு கிடைக்கவேண்டியது இந்தக் கௌரவம்...” என்றார்.

1972 வரை, மேல்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலால் தான் தீர்மானிக்கப்பட்டன. குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நிலையும் மாறியது.

அதுவரை சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கை அதிலிருந்து ஸ்ரீ லங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. இதன்பிரகாரம் இலங்கையானது தன்னாதிக்கமும், இறைமையும் கொண்ட சுயாதீன குடியரசாக உதயமானது.  

பாரிய விவசாயப் போர்

இலங்கை சுதந்திரக் குடியரசாக மாறியதும், போகல சுரங்கத் தொழிற்சாலை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு அரச மாணிக்கக்கல் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டு அதற்காக முதற்தடவை கொண்டுவரப்பட்ட கப்பலுக்கு “லங்கா ராணி” என்று பெயரிடப்பட்டது. சரசவி மண்டபம் அரசுடமையாக்கப்பட்டது. வித்யோதயா, வித்யாலங்கார மற்றும் கட்டுபெத்த ஆகிய பல்கலைக்கழக வளாகங்களை ஒன்றிணைத்து இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

இலங்கைக் குடியரசின் முதலாவது கொள்கை அறிக்கை 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் தேசிய அரசுப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு “உற்பத்தி ஆண்டாக அறிவிக்கப்பட்டது. உலகப் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஒன்று உருவாகத் தொடங்கியிருந்ததால்; நாடும் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து அந்த நிலைமையை எதிர்கொள்ள தயார் செய்ய வேண்டியிருந்தது. இதனால் ஒரு பாரிய பெரிய விவசாயப் போர் ஒன்று தொடங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்காகவும், தன்னிரைவுக்காகவும் அன்று எடுக்கப்பட்ட முடிவுகளும், முயற்சிகளும் அன்று விமர்சிக்கப்பட்டது. 77ஆம் ஆண்டு தேர்தலிலும் தோல்வியடைய அதுவே ஒரு பெரும் காரணமானது. ஆனால் அந்த திட்டங்கள் தொடர்ந்திருந்தால் நிச்சயம் இன்று நாடு எதிகொண்டிருக்கும் நிலை நேர்ந்திருக்காது.


சிலோன் ஸ்ரீ லங்கா ஆனது

குடியரசு தினம் பிரகடனப்படுத்தப்பட்ட அன்று சிலோன் என்கிற காலனித்துவம் சூட்டிய பெயரை நீக்கியதன் நினைவாக 15 சத பெறுமதியுள்ள ஒரு முத்திரையும் வெளியிடப்பட்டது. அது வரை சிலோன் என்று இருந்த முத்திரைகள் அன்றிலிருந்து ஸ்ரீ லங்கா என்று மாறியதன் நினைவாக அதில் ஸ்ரீ லங்கா என்று குறிக்கப்பட்டது.

சிறிமாவின் அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு நிறைவடைந்திருக்கவேண்டும். ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதனை சாட்டாக வைத்து தமது ஐந்தாண்டுப் பதவியை மேலதிகமாக இரண்டு ஆண்டுகளைச் சேர்த்து 7 ஆண்டுகள் ஆட்சிபுரியும் வகையில் சட்ட ஏற்பாடுகளை கொண்டு வந்தது சிறிமா அரசாங்கம். அதன்படி 1977 வரை சிறிமா அரசாங்கம் ஆட்சி செய்தது. பதிலுக்கு 1977 இல் ஆட்சியேறிய ஜே.ஆறும் 1978இல் புதிய குடியரசு அரசியலமைப்பைக் கொண்டு வந்து புதிய பொதுத்தேர்தலுக்குப் பதிலாக பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான விருப்பைக் கோரி டிசம்பர் 22, 1982ஆம் திகதி ஒரு தேர்தலை நடத்தி  வெற்றி பெற்று; 1989 வரை பொதுத் தேர்தலை நடத்தாமல் ஆட்சியை நீடித்துகொண்டத்தை அறிவீர்கள்.

1972 குடியரசு யாப்பும் சிறுபான்மை இனங்களும்

மே 22 ஆம் திகதியை குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்ற போதும் தமிழர்கள் அதனை பொருட்டாக மதிப்பதில்லை என்பதுடன் அந்த நாள் ஒரு கரி நாளாகவே கொள்கின்றனர்.

குடியரசு பிரகடனப் படுத்தப்பட்ட நாள் தமிழ்ப் பிரதேசங்களில் கடைகள் மூடப்பட்டு, கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் மேற்கொண்ட பகிஸ்கரிப்பால் பாடசாலைகள் பல இயங்கவில்லை. 75 வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.குடியரசு தினத்தன்று 40 பஸ்களும், அடுத்த் நாள் நான்கு பஸ்களும் சேதமாக்கப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் 15 பேர் கைதாகியுள்ளதாகவும்,  24 ஆம் திகதி வெளியான ஈழநாடு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த குடியரசு யாப்பின் மூலம் தான் இலங்கை பௌத்த மதம் அரச மதமானது. 


பறிக்கப்பட்ட உரிமைகள்.

இந்த அரசியமைப்புக்கு தமிழர் தரப்பில் இருந்து நெருக்கடி தரக்கூடிய ஒரு வழக்கை சி.சுந்தரலிங்கம் மட்டுமே தொடுத்திருந்தார். அதற்கான தீர்ப்பை வழங்கிய  ஜே.அலஸ், ஜே.சில்வா ஆகியோர் 1972க்கு முன்னர் சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது அதிகாரப் பரவலாக்கம் அல்லது அலகுகள் கொடுக்கக் கூடிய தகுதி அல்லது வலிமை இருந்தது என்றும் கூறியிருந்தனர்.

இந்த அரசியலமைப்பைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தமது எதிர்காலம் பற்றிய சோகத்துடன் ஆத்திரமாக கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள். இந்த அரசில் இனிமேல் வாழ முடியாது தனி நாடே ஒரு தீர்வு என இளைஞர்களும் தங்களுக்குல் சபதமெடுத்துக் கொண்டார்கள்.

சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட வேளை இனி இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை எவரும் பெறப்போவதில்லை என்று சோல்பரி கருதியிருந்தார். அதையெல்லாம் பொய்க்கச் செய்தது இலங்கையின் இனவாத அரசியல் கள நிலைமை.

பேரினவாதிகளுக்கு உரத்தையும், உற்சாகத்தையும் ஊட்டிய தேர்தல் வெற்றி பேரினவாதத்தின் கூட்டுச் சிந்தனையை வலிமைப்படுத்தியது. அவர்களின் அபிலாசைகளுக்கு சட்ட வடிவத்தையும், நடைமுறை வடிவத்தையும் முழுமையாக்க காலம் கனிந்தது.

சோல்பரி அரசியல் யாப்பில் வழங்கியிருந்த குறைந்தபட்ச ஏற்பாடுகளையும் நீக்கி பேரினவாத அரசைப் பலப்படுத்துவது அவர்களின் இலக்காக இருந்தது. சோல்பரி அரசியல் யாப்பில் பெயரளிவிலேனும் இருந்த சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பேணும் உத்தரவாதங்களை நீக்கினார்கள்.

  • 29 (2) பிரிவு
  • செனற்சபை
  • நியமன உறுப்பினர் முறை
  • கோமறைக் கழகம்
  • அரசாங்க நீதிச் சேவை ஆணைக்குழு

ஆகியவை பெயரளவுக்காவது சிறுபான்மையினரை பாதுகாக்கும் ஏற்பாடுகளாக இருந்தன. உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவற்றின் அடிப்படியிலேயே சட்ட ரீதியில் எதிர்கொள்ள வாய்ப்பு கிட்டியிருந்தன. இவை அனைத்தும் புதிய யாப்பில் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.

அரச மதம் பௌத்தம்

இந்த அரசியலமைப்பின் மூலம் முதன் முதலாக பௌத்த மதம் அரச மதமாக முதல் தடவை ஆக்கப்பட்டது. 6ஆம் பிரிவு பௌத்த மதத்தைப் பற்றி இப்படி கூறுகிறது.

“இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மைதானம் வழங்குதல் வேண்டும். ஏனைய மதங்களின் உருமைகளுக்கு உத்தரவாதமளிக்கின்ற அதே வேளை பௌத்த மதத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாதல் வேண்டும்.”

பல்லின, பல்மத நாட்டில் தனியொரு மதத்தை அரச மதமாக பிரகடனம் செய்தது மட்டுமன்றி ஏனைய மதங்களுக்கு அதன் மத உரிமைகளோடு மாத்திரம் மட்டுப்படுத்துகின்ற சதியை கச்சிதமாக முடித்தது இந்த யாப்பு.

சிங்கள மொழி

சிங்கள மொழிக்கு அதுவரை சட்ட ரீதியில் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவரை சிங்கள மொழி சட்டம் சாதாரண பெரும்பான்மையுடன் மாற்றும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் 9, 10, 11 ஆகிய சரத்துக்களின் மூலம் சிங்கள மொழிக்கு அரசியமைப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டதன் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி அந்த சிங்கள மொழி ஏற்பாட்டை மாற்றும் வாய்ப்பை இழந்தனர் தமிழர்கள். இதன் விளைவாக வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழியில் தமது கருமங்களை ஆற்றும் உரிமைகளை இழந்தனர். அரச சேவைகள் நடைமுறையில் சிங்களமயப்பட இந்த யாப்பு முழு வாய்ப்புகளையும் கொடுத்தது.

சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டவற்றை மட்டுமே சட்டமாக கொள்ளுதல் வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் இருந்தால் கூட சிங்களத்தில் உள்ள சட்டங்களே மேலானதாக கருதப்படும் என்றும் ஏற்பாடானது. தமிழ் மொழிக்கு வெறும் மொழிபெயர்ப்பு அந்தஸ்து மாத்திரமே வழங்கப்பட்டதால் சட்டபினக்குகளின் போது மொழிபெயர்க்கப்பட்ட சட்டங்கள் வலு குறைந்ததாகவே கருதப்பட்டது.

நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள், கட்டளைகள், சட்ட நிர்வாகச் செயல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருத்தல் வேண்டும் என்றும் ஏற்பாடானது. வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழில் நடாத்த முடியாத நிலை உருவானது. வடக்கு கிழக்கில் சில பிரதேசங்களில் மட்டும் விதிவிலக்கு இருந்தது.

சிங்கள – பௌத்தம்

சிங்கள மொழி ஏற்பாட்டின் மூலம் பன்மொழித் தன்மையை நிராகரித்தும், பௌத்த மதம் அரச மதம் என்பதன் மூலம் பன்மதத் தன்மையையு நிராகரித்ததன் மூலம் இந்த யாப்பு இலங்கை குடியரசை ஒரு “சிங்கள – பௌத்த” நாடாக பிரகடனப் படுத்தியது என்றே கூற வேண்டும்.

அரசாங்க சேவை, நீதிச்சேவை என்பனவற்றில் நியமனம், இடமாற்றம்,பதவி உயர்வு, பதவி நீக்கம் என்பவற்றை மேற்கொள்ளும் போது இன மத மொழி பாரபட்சம் காட்டுவதை தடுக்கு வகையில் அரசாங்க சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, என்பன சோல்பரி யாப்பில் உருவாக்கபட்டிருந்தன. 1972 யாப்பில் அவற்றை மேற்கொள்ளும் பணிகளை அமைச்சரவைக்கு வழங்கியது. அந்த ஆணைக்குழுக்கள் வெறும் ஆலோசனை சபைகளாக மாற்றப்பட்டன. அரசியல் வாதிகளிடம் ஒப்படக்கப்பட்ட இந்த பணிகளால்  என்ன நியாயம் கிடைத்திருக்கும்.

பல வருடங்களின் பின்னர் யுத்தமும் தொடங்கிவிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் கொல்வின் ஆர்.டீ.சில்வா  “29(2)க்கு மாற்று ஏற்பாடு 1972 யாப்பில் இடம்பெறாத போதும் அந்த யாப்பில் கொண்டுவரப்பட்ட அடிப்படை உரிமை ஏற்பாடு மேலும் பாதுகாப்பை வழங்கக்கூடியது” என்றார். (1986 நவம்பரில் கார்ல் மாக்ஸ் நினைவு கூட்டமொன்றில் விரிவுரையாற்றிய போது) இந்த கருத்து எத்தனை அபத்தமான கருத்து என்பது அந்த அரசியலமைப்பு நடைமுறையிலிருந்த ஐந்தே ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த தமிழர்களுக்கு எதிரான அநீதிகளே சாட்சி.

இலங்கைக் குடியரசுக்கு என ஒரு புதிய அரச இலட்சினையை உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு தலைவராக நிஸ்ஸங்க விஜயரத்ன நியமிக்கப்பட்டார். தேசியக் கொடியையும் உருவாக்குவதற்கான கமிட்டியின் தலைவராகவும் அவர் தான் நியமிக்கப்பட்டார். இலங்கையின் தேசியக் கொடியின் நான் மூலைகளிலும் அரச மர இலையைப் புகுத்தி தேசியக் கோடிக்கு பௌத்த முகத்தைக் கொடுத்தவரும் இவர் தான்.


குடியரசின் அரச இலட்சினை

இவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் ‘மாபலகம விபுலசார தேரர்’ அரச இலட்சினையை வடிவமைத்தார். அது ஒரு சிங்கள பௌத்த இலட்சினையாகவே அமைக்கப்பட்டது. தேசியக் கொடி சிங்கள பௌத்த கொடியென விமர்சிப்போர் பலரின் கண்களுக்கு படாத ஒன்று அந்த அரச இலட்சினை. இன்று வரை அது தான் அரச இலட்சினை. கலாசார அமைச்சின் செயலாளராகவும் அப்போது அவர் இருந்தார்.

இலட்சினையை உருவாக்கும் தனிச்சிங்களக் குழுவில் அப்போதைய கலாசார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர, செனரத் பரணவிதான, எம். ஆர். பிரேமரத்ன, ரோலண்ட் சில்வா, மெக்கி ரத்வத்த உள்ளிட்டோர் அங்கம் அங்கம் வகித்தனர்.

அரச இலட்சினையில் உள்ளவற்றின் அர்த்தம்: சிங்கம் (தேசியக் குறியீடு), சிங்கத்தின் வாள் (தேசிய இறைமை), சிகப்பு பின்னணி (சிங்கள இனம்),  தாமரை மொட்டு (புனிதம்), பூச் சாடி (தன்னிறைவு),  நெல்மணி (செழிப்பு), தர்ம சக்கரம் (பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த தர்மம்), நடுவில் இருக்கும் பெரிய சக்கரம் (இலங்கை), சூரியன், சந்திரன் (இருப்பின் உறுதித்தன்மை), சந்திரனை இடது புறமாக வைத்திருத்தல் (மென்மை), இலட்சினையை சுற்றி இருக்கும் எல்லைக் கோடு (இவை அனைத்தும் ஒற்றையாட்சிக்குள் இருப்பதை உறுதி செய்வது).

குடியரசு கீதத்துக்கு ஆனதென்ன?

இலங்கையின் தேசிய கீதம் சுதந்திர தினத்திற்காக உருவாக்கப்பட்டது போல குடியரசு கீதம் என்கிற கீதத்தையும் சிறிமா அரசு உருவாக்க எத்தனித்தது. அதற்காகவே ஒரு குழுவையும் நியமித்தது. ஆனால் அதன் பணிகளில் திருப்தியுறாத அரசு; நாட்டின் பிரபல கவிஞர்களுக்கு அதற்காக அழைப்பு விடுத்தது.இறுதியில் பிரபல சிங்களப் பண்டிதர் மஹாகமசேகர இயற்றிய “ரத்ன தீப ஜன்ம பூமி” என்கிற பாடல் தெரிவானது. ஆனால் அப்பாடலில் குடியரசு பற்றிய எந்த விபரத்தையும் காணோம் என்று கலாசார அமைச்சின் உயர் மட்டத்தினர் கருத்து தெரிவித்தனர். “அப்படியானால் குடியரசு அரசியலமைப்புக்கு ஒரு ட்யூன் போட்டுக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்து விட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாராம் மஹாகமசேகர. ஆனாலும் பேராசிரியர் அனுராத செனவிரத்ன குடியாயரசுக்காக இயற்றி, பண்டித் டபிள்யு.அமரதேவ இசையமைத்த “ஜயது, ஜயது ஸ்ரீ லங்கா...” என்கிற பாடல் ஒன்று உள்ளது. அந்த மூலப் பாடலைப் பாடியவரும் அமரதேவ தான்.

இதில் தமிழர்களும் சம்பந்தப்படவில்லை. தமிழ் பேசும் மக்கள் கண்டுகொள்ளபடவுமில்லை. தமிழில் மொழிபெயர்ப்பு கூட கிடைத்ததில்லை. எப்படியோ அப்படியொரு கீதத்தை இறுதிவரை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றிவிடவும் முடியவில்லை.

குடியரசு தினம் தமிழர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் சுதந்திர தினமும் கூட அவர்களுக்கு பொருட்டாக இருந்திருக்கவில்லை. 

ஆனால் இலங்கை முடியாட்சியில் இருந்து முற்றாக விடுபட்ட நாள் எனும் அர்த்தத்தில் இலங்கை மக்களுக்கு குடியரசு தினம் ஒரு முக்கியமான தினம். அது அரசியல் சித்து விளையாட்டுகளின் காரணமாக இலங்கை மக்களால் மறக்கடிக்கப்பட்டது. அந்த மறக்கடிப்பு அதன் 50வது பொன் விழாவைக் கூட கணக்கிற்கொள்ள முடியாத அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

2022 அதன் பொன்விழா கொண்டாடப்படாமைக்கு இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடியைக் காரணமாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் அந்த நாளுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச முக்கியத்துவத்தை ஊடகங்கள் கூட கொடுக்கவில்லை.

வழித்தடம்

  • 15.08.1947  டொமினியன் அந்தஸ்தின் கீழ் முதல் தேர்தல் நடத்தப்பட்டது
  • 26.09.1947  அமைச்சரவை நியமிக்கப்பட்டது
  • 25.11.1947  பாராளுமன்றம் திறக்கப்பட்டது
  • 13.02.1950  தேசிய கொடி உருவானது
  • 07.11.1958 அரசியலமைப்பு சீர்திருத்த குழுவொன்று பண்டாரநாயக்கவால் உருவாக்கம்.
  • 24.01.1962 இராணுவ அரச கவிழ்ப்புச் சதி
  • 26.02.1962 புதிய ஆளுனர் வில்லியம் கொபல்லாவ நியமனம்
  • 06.06.1968 கண்டி போகம்பரையில் ஐக்கிய முன்னணி தோற்றமும், குடியரசாக ஆக்கும் பிரகடனமும்
  • 23.04.1970 ஏழாவது பாராளுமன்றத்துக்கான வேட்மனு தாக்கல்
  • 27.05.1970 பொதுத் தேர்தல்
  • 19.07.1970 அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கம்
  • 10.07.1971 அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது.
  • 04.05.1972 அரசியலமைப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
  • 22.05.1972 குடியரசு தின பிரகடனம்

நன்றி - தாய்வீடு

குடியரசு பொன் விழா நினைவாக (1972 - 2022) - என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

தோழர் 'TAMIL TIMES' ராஜநாயகம் - நா.ஸ்ரீகெங்காதரன்

சென்று வாருங்கள் தோழரே!

1936ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ம் திகதி சுன்னாகத்தில்  பிறந்தவர் பெரியதம்பி ராஜநாயகம். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்வியில் சிறந்ததுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். கிரிக்கட்டில் ஆரம்ப பந்து வீச்சாளனாக பல வெற்றிகளின் பின்னால் இருந்ததுடன் பாட்மின்ரன் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். கல்லூரியில்  என் எஸ் கந்தையா, அதிபர் ஒரேட்டர் சுப்ரமணியம் ஆகியோரின் விருப்பத்துக்குரிய மாணவன். கல்லூரி மாணவனாகவே லங்கா சமசமாஜ கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து வேலை செய்தார். 

1957இல்  போட்டிப் பரீட்சையில் தேறி இலங்கை அரசாங்க சேவையில் சேர்ந்தார். GCSU  எனப்படுகின்ற அரசாங்க லிகிதர் சேவை சங்கத்தில் இணைந்து தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டார். அப்போது GCSU அரச சேவையாளர்கள் எல்லோருக்கும் பொதுவான, பெரிய சங்கமாக இருந்தது. இவர் சேர்ந்த வேளையில் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சங்கம் பண்டாரநாயக்கா அரசுக்கு எதிராக இடம்பெற்ற வேலை நிறுத்தப் போராட்ட  தோல்வியின் பின்பாக சமசமாஜ கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அன்றிலிருந்து கட்சியை விட்டு விலகும்வரை கட்சியின் சார்பிலேயே தீவிரமாக தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டார். 

லங்கா சமசமாஜ கட்சி தமிழர்களுக்கு சம அந்தஸ்து என்றும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்றும் கொள்கை கொண்டவர்களாக இருந்தார்கள். பண்டாரநாயக்க கொண்டுவந்த சிங்களம் அரசமொழி என்ற சட்டதுக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவர்கள் பெரிய போராட்டங்களை நடாத்தினார்கள். பாராளுமன்றத்தில் 'பிரஜா உரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டம், சிங்களம் அரசமொழி சட்டம்  ஆகியவற்றுக்கு எதிராக வாக்களித்தவர்களில் இவர்களே பெரும்பான்மையானவர்கள். இன்றைய தமிழ் அரசியல் சந்ததி தெரிய விரும்பாத சரித்திரம்.

தோழர் ராஜநாயகம்  இந்த வேளையில் இலங்கை அரசியலின் மூன்றாவது பெரிய சக்தியாக இருந்த லங்கா சமசமாஜக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். இவருடைய அண்ணர் காலம்சென்ற Dr அரசரட்ணம் (அரசர்) அவர்களும் கட்சியின் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். 

லங்கா சமசமாஜ கட்சி 1960 மார்ச் மாதம் இடம்பெற்ற இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய சகல தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசைக் கைப்பற்றும் தீர்மானத்துடன் கடுமையாக வேலை செய்தனர். அவர்களின் எண்ணம் எதிர்காலத்தில் சாத்தியப்படும் சூழ்நிலை இல்லாத வகையிலேயே தேர்தல் முடிபுகள் இருந்தன. கட்சித் தலைமை 'கூட்டணி அரசியல்' என்ற புதிய சிந்தனைக்குள் வரத் தொடங்கியது.

இந்த சிந்தனையை கட்சியின் திட்டமாக மாற்றும் எண்ணத்துடன் 1963 ஆரம்பத்தில் கொழும்பு நகரசபை மண்டபத்தில் சமசமாஜ கட்சியின் பொதுக் குழு கூடியது. 1000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தமாநாட்டில் கட்சித் தலைமையின் இந்த தீர்மானத்துக்கு எதிராகப் பேசி வாக்களித்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறியவர் மரணிக்கும் வரை கட்சியின் பக்கம் போகவில்லை. 1970இல் இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிபெற்று சிறிமாவோ ஆட்சியின் முக்கிய உறுப்பாக என் எம் பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா போன்றவர்கள் இருந்த வேளையிலும் அவர்கள் வேண்டியும் அந்த அரசியலைத்திரும்பிப் பார்க்கவில்லை. 

அனால் இவரின் அண்ணர் காலம்சென்ற Dr அரசரட்ணம் அந்த மாநாட்டில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து கட்சியில் தொடர்ந்தும் இருந்ததுடன் அரசுகளையும் ஆதரித்து நின்றார். இவரின் கடைசித் தம்பி காலம்சென்ற பெரி சண்முகம் இவர்களின் அரசியலுக்கு எதிராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து வேலைசெய்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்து இளம் வயதில் காலமாகிவிட்டார். தம்பியார் பெரி சண்முகத்தின் எழுத்தாற்றலையும் பங்களிப்பையும் தெரியாதவனாகவே இருந்துவிட்டேனே என்று வருந்துவார்.

1958ம் ஆண்டு அக்குயனாஸ் பல்கலைக்கழக கல்லூரியின் மூலம் லண்டன் பல்கலைக்கழகத்தின் BSc பட்டதாரியானார். இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1st Class Honours 1968 இல் சட்டத் தரணியானார்.

இலங்கையில் அரசியல், தொழிற்சங்க வேலைகளுடன் சட்டத் தரணியாகவும் சிலகால வேலை செய்தார்.  

இலங்கையில் இருந்து வெளியேறும்வரை சமமஜாக் கட்சியில் இருந்து இவருடன் பிரிந்து வந்த பாலா தம்பு வுடன் சேர்ந்து வேலை செய்தார். அவருடைய தொழிற் சங்க வேலைகளிலும் அரசியல் வேலைகளிலும் உதவி செய்து வந்தார். 1971இல் ரோஹன விஜயவீரா தலைமையில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவர்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன் விளைவான நிலைமைகளினால் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு வந்தார். லண்டன் வந்தவர் சிலகாலம் சட்டத் தரணியாக வேலைசெய்தபின் Bexley Councilஇல் இணைந்து சிரேஷ்ட சட்ட ஆலோசகராக ஓய்வு பெற்றார். 

இங்கு வந்த காலம் முதல் இலங்கை சம்பந்தமான அரசியல், சமூக, மனித உரிமை அமைப்புக்களில் கடந்த 45 ஆண்டுகள் தனது பங்களிப்பை  வழங்கி வந்தார் 

Ceylon Solidarity Campaign

Campaign for the Release of Eelam Political Prisoners 

Eelam Solidarity Campaign 

SCOT Human Rights Council  

Campaign for Democracy & Justice in Sri Lanka 

Sri Lanka Democracy Forum 

என்கின்ற அரசியற்பிரச்சார, மனித உரிமை அமைப்புக்களின் காத்திரமான செயற்பாடுகளின் பின்னணியில் இவரின் பங்களிப்பு காத்திரமானது.

SCOT  என்கின்ற அமைப்பின் செயற்பாடுகளை தன்னை இணைத்துக் கொண்ட தோழர் ராஜநாயகம் அதனது செயலாளராகவும் தலைவராகவும் செயலாற்றியதுடன் அதன் கீழ் மனித உரிமை அமைப்பு ஒன்றை உருவாக்கி  (SCOT Human Rights Council) அதன் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார். அதன் மூலம் எம்மவர் யாரும் போகாத, நினைக்காத காலத்தில் ஜெனிவாவில் இடம்பெறும் UN  மனித உரிமைக் கழக மாநாடுகளில் பங்குபற்றினர். அங்கு இலங்கையின் மனித உரிமை அவலங்களை பாகுபாடின்றி எடுத்துரைத்தார். இது சம்பந்தமான இரண்டு நூல்கள் வெளிவந்தன.

  1. Law and Practice of Arbitrary Detention in Sri Lanka    
  2. Arbitrary Killings in Sri Lanka (Reports)  என்பன அவை.

தனது பாடசாலையான ஸ்கந்தவரோதய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஒன்றை தனது ஆசிரியர் என் எஸ் கந்தையா அவர்களுடன் இணைந்து உருவாக்கி அதன் செயலாளராக நீண்ட காலம் செயற்பட்டார். இந்த மண்ணின் பெருமைக்கு உரிய அமைப்பு TSSA எனப்படுகின்ற தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம். இன்று ஏறக்குறைய 100  இலங்கையின் தமிழ்ப் பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்களை உள்ளடக்கி இருக்கும் இதன் நிர்வாகத்தில் ஆரம்ப காலங்களில் செயற்பட்டார். TSSA UK வருகிற புதன்கிழமை (22.06.22) அன்று தனது  30வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது. அதன் யாப்பை (Constitution) எழுதி நீண்டகாலவெற்றிகரமான  செயற்பாட்டுக்கு வித்திட்டவர் தோழரே. இந்த மண்ணில் இடம்பெறுகின்ற முற்போக்கு கலை, இலக்கிய முயற்சிகளின் ஆதரவாளராக இருந்துவந்தார்.

தோழர் ராஜநாயகம் அவர்கள் இலங்கையின் வரலாறு நாயகர்களாக கருதப்படும் தோழர் என் எம் பெரேரா, தோழர் கொல்வின் ஆர் டி சில்வா, தோழர் பாலா தம்பு, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா, மஹிந்தா, தோழர் வாசுதேவ நாணயக்கரா போன்ற பலருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். ஆனால் அந்த நட்பு தனிப்பட்ட இலாபங்கள் எதற்கும் பயன்படுத்தாமல், அவர்களுடைய அரசியலை முழுமையாக ஏற்காமல் கவனமாகப் பேணிவந்தார்.

இத்தகைய பெறுமதிமிக்க மனிதன் ஒருவனின் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது எமக்குப் பெருமை. அதனோடு அவருடன் நீண்ட காலம் இணைந்து பயணித்து இருக்கிறோம் என்பதும் மிகப் பெருமையான விடயம்.

இந்த இனிமையான நினைவுகளுடன்  

சென்று வாருங்கள் தோழரே என்று தலைசாய்த்து 

செவ்வஞ்சலியை செலுத்துகிறோம்.

(முகநூலில் இருந்து நன்றியுடன் பகிர்கிறோம்)

ஜப்பானுக்கு பயந்து இடம்பெயர்ந்த யுத்த வெற்றிக் கோபுரம் ( கொழும்பின் கதை – 30) என்.சரவணன்

முதலாம் உலகப் போர் முடிந்ததும் அதன் நினைவாக 120 அடிகள் உயரமுள்ள வெற்றிக் கோபுரம் ஒன்று 1923ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cenotaph War Memorial என்று அழைப்பார்கள். செனடேப் (Cenotaph) என்பது கிரேக்கச் சொல். வெற்றுக் கல்லறை என்பது அதன் அர்த்தம். போரில் இறந்தவர்களை அங்கிருந்து சடலங்களை மீட்டு வர முடியாத நிலையில் அருகில் எங்கேயாவது புதைத்து விட்டு வருவது வழக்கம். அவ்வாறு அவர்களின் உடல்கள் இல்லாமல் அவர்களின் நினைவாக எழுப்பப்படும் நினைவிடங்களைத் தான் செனடேப் என்பார்கள்.


முதலாம் உலக யுத்தம் முடிவடைந்ததும், 1920 களில் பிரித்தானியாவிலும் அதன் குடியேற்ற நாடுகளிலும் பிரித்தானியாவுக்காக போரில் இறந்தவர்களின் நினைவாக இந்த “செனடேப்” கல்லறைகள் நிறுவப்பட்டன. பின்னர் 1939 – 1945 வரையான இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததும் பிரித்தானிய குடியேற்ற நாடுகளைக் கொண்ட பொதுநலவாய நாடுகளிலெல்லாம் தலைநகரங்களில் இத்தகைய “செனடேப்” கல்லறைத் தூபிகள் நிறுவப்பட்டன. இதன் அமைப்பு ஏறத்தாள எல்லா நாடுகளிலும் ஒரே வடிவத்தில் தான் அமைக்கப்பட்டன.

உலக நாடுகள் எங்கிலும் போரின் வடுக்களையும், போர் வரலாற்று நினைவுகளையும் கடந்து வந்துள்ளன. இதில் எந்தவொரு நாடும் விதிவிலக்கில்லை என்றே கூறலாம். போரின் வடிவங்களும், காலங்களும், காரணங்களும் மாறினாலும் போர்களைக் கடந்து வராத நாடு என்றொன்றில்லை.

இலங்கையில் அவ்வாறு முடியாட்சி காலத்துப் போரின் நினைவுகள் நிறையவே உள்ளன. எல்லாளனுக்காக துட்டகைமுனு அனுராதபுரத்தில் கட்டிய “தக்கின நினைவுத் தூபி” அவற்றில் முக்கியமானதாகக் கொள்ளலாம். அதுபோல, ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் நினைவாக உள்ள நினைவுத் தூபிகள், முதலாம், இரண்டாம் உலக யுத்த கால நினைவுத் தூபி, ஜே.வி.பி கிளர்ச்சி நினைவாக அமைக்கப்பட்ட தூபிகளையும் கூட கூறலாம். 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தபோது இலங்கையில் கொல்லப்பட்ட IPKF படையினருக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கொட்டேவில் அமைந்துள்ள நினைவுத் தூபியை வணங்கிச் சென்றதையும் கூறலாம். முப்பது வருட யுத்தத்தில் கொள்ளப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் நினைவாக நாடெங்கிலும் நினைவுத் தூபிகளும், நினைவிடங்களும் அரசால் உருவாக்கப்பட்டிருப்பதையும் அறிவீர்கள். இவை அனைத்தும் போரிலும், சமர்களிலும் வெற்றி பெற்ற தரப்பாலும், அதிகாரமுள்ள தரப்பாலும் நிறுவப்பட்ட நினைவிடங்கள் என்பதையும் அறிவீர்கள். இந்த வரிசையில் இலங்கையில் தமிழர் தரப்பில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நினைவுத் தூபிகள் ஒன்று விடாமல் அழிக்கப்பட்டுவிட்டதையும் சேர்த்தே நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது. 

இந்த வரிசையில் காலனித்துவ ஆட்சிக் காலத்து நினைவுத் தூபிகளில் முக்கியமானதாக இந்த “வெற்றிக் கோபுர”த்தைக் கொள்ளலாம்.


1918 ஆம் ஆண்டு முதலாவது உலக யுத்தம் நிறைவடைந்த பின்னர் அப்போதைய இலங்கைக்கான பிரித்தானிய தேசாதிபதி மனிங் பிரபுவால் (Brigadier General Sir William Henry Manning) இதற்கான அடிக்கல் கொழும்பின் மையமான காலி முகத் திடலில்  டிசம்பர் 7, 1921 அன்று நாட்டப்பட்டது. இங்கிலாந்தில் சேர் எட்வின் லுடியன்ஸ் (Sir Edwin Lutyens) என்பவரால் வடிவமைப்பட்ட பொது வடிவத்தைத் தான் பல நாடுகளிலும் ஒன்றுபோல் உருவாக்கினார்கள்.

உண்மையில் வெற்றி கோபுரமானது இந்து மகா சமுத்திரக் கடலில் வெகு தொலைவில் இருந்து காணக்கூடிய மெல்லிய தூபி என்று கூறலாம். லுடியன்ஸ் முதலில் கோபுரத்தின் உயர உச்சியில் பகலில் புகையும், இரவில் நெருப்பும் வரத்தக்க வகையில் வடிவமைத்திருந்தார். அவரது மனைவி, எமிலி அம்மையார் 1925 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வரும் வழியில் கொழும்பில் இருந்தபோது அதைப் பார்த்து தனக்கு அந்த அமைப்பு பிடிக்கவில்லை என்று லுடியன்ஸிடம் கூறியிருக்கிறார். " இது ஒரு சுடர் என்கிற அர்த்தத்தில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இது ஒரு ஊசியின் கண் போல் இருகிறது. வெளிச்சம் இல்லாமல் அது மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. எனக்கு அது அவ்வளவு பிடிக்கவில்லை.” என்றிருக்கிறார்.

முதற் தடவை இந்த செனடேப் கோபுரம் லண்டனில் உள்ள வைட்ஹாலில் தான் “போர் நினைவுக் கல்லறை”யாக நிறுவப்பட்டது. இந்தியாவின் இன்றைய ஜனாதிபதி இல்லமான ராஷ்டிரபதியின் அருகிலும் இதே போன்று அன்று நிறுவப்பட்டது.

ஆளுநர் பிரிகேடியர் ஜெனரல் சர் வில்லியம் ஹென்றி மனிங் அவர்களால் டிசம்பர் 7, 1921 அன்று நாட்டப்பட்டதை அடிக்கல் பொறிக்கப்பட்ட பலகை உறுதிப்படுத்துகிறது. அதே நாளின் சிலோன் டெய்லி நியூஸ் 'சிலோனின் போர் நினைவுச் சின்னம், அடிக்கல் நாட்டுதல்! காலி முகத்திடலில் இன்று வைபவம்' என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் பற்றியும் அதன் வடிவமைப்பு குறித்தும் விரிவான விபரங்களுடன் அந்த செய்து காணப்படுவதுடன், இதற்கான சிறந்த கிரானைட் கற்கள் மெட்ராஸுக்கு வடக்கே 30 மைல் தொலைவில் உள்ள பிரதேசமான சோளிங்கரிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. 119 அடி உயரத்தையும் ஏழு அடி விட்டத்தையும் இது கொண்டிருக்கிறது. என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1920ஆம் ஆண்டு 11,ஆம் திகதி வெளியான “The Ceylon Independent” பத்திரிகையின்படி இந்த கோபுரத்தை நிறுவ அப்போதே 150,000 ரூபா செலவழிந்திருக்கிறது.

காலிமுகத்திடலில் இந்தக் கோபுரம் இருந்தபோது

அடுத்த நாள் சிலோன் டெய்லி நியூஸ் இந்த விழாவைப் பற்றிய சுவாரஸ்யமான விபரங்களை வெளியிட்டுள்ளது. "வெள்ளிக் கிண்ணத்தால் ஈரமான சிமெண்டைத் தொட்ட பின்னர், வெற்றிக் கோபுரத்தை கட்டும் மூன்று வேலையாட்கள் - ஒரு சிங்களவரும், ஒரு தமிழரும், ஒரு முஸ்லிமும் சேர்ந்து கற்களை அங்கே நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆளுநரின் அறிவிப்பும், உரையும் நிகழ்த்தப்பட்டது. விழாவைத் தொடர்ந்து பிரார்த்தனை நடந்தது.”

பின்னர் ஒக்டோபர் 27, 1923 ஆம் நாள் “வெற்றிக் கோபுரம்” (Victory tower) என்கிற பெயரில் இது திறக்கப்பட்டது. 

இதன் பின்னர் சிலோன் டெய்லி நியூஸ் அக்டோபர் 27, 1923 அன்று வெளியிட்டுள்ள பதிவுகளின்படி இந்த நினைவுதூபி ஆளுநர் மானிங்கால் காலை 7.45 மணிக்கு திறக்கப்பட்டது. அச்செய்திகளின் படி இந்தியாவில் இருந்து 'ஸ்டீமர்களின்' மூலம் கொண்டுவரப்பட்ட ஒன்று முதல் நான்கு டன் வரை எடையுள்ள பெரிய கற்கள் அனைத்தும், திறமையான இந்திய பணியாளர்களால் நிலைநிறுத்தி, வடிவமைத்து, நிறைவுசெய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டிய ஆளுநர் மானிங் அன்றைய தினம் கூட்டத்தில் உரையாற்றுகையில், “அந்த மாபெரும் போராட்டத்தில் இலங்கை, பிரித்தானிய ஆண்கள் ஆற்றிய பங்கிற்கு இது சாட்சியாக இருக்கும். போரிட்டு மடிந்த அந்த வீரர்கள் அமைதியாக ஓய்வெடுக்கும் அனைவரினதும் நினைவிடமாக இது திகழும்.”


ஜப்பான் தாக்குதல்

ஜப்பான் 1941 டிசம்பரில் அமெரிக்க பேர்ல் துறைமுகத்தின் மீது பாரிய விமானத் தாக்குதல்களை நடத்தி உலகையே அதிரவைத்துக் கொண்டிருந்த காலம். ஜேர்மன், ஜப்பான், இத்தாலி கூட்டு உலக நாடுகளில் பரவலான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ நாடுகளின் மீதெல்லாம் அடி விழுந்தன. இலங்கை எந்த வேளையிலும் அப்பேர்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை கொண்டிருந்தது.

1942 ஏப்ரல் 5ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினத்தன்று அது நிகழ்ந்தது. ஜப்பானிய விமானங்கள் இலங்கைக்கு மேலாக பறந்தன. பேர்ல் துறைமுகத்தின் மீதான தாக்குதலில் 360 ஜப்பானிய விமானங்கள் பங்குபற்றியிருந்ததையும் இங்கு கூறவேண்டும். இலங்கை இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதை ஜப்பானும் அறியும். பிரித்தானியாவின் பலத்தைக் குறைக்க இலங்கையைத் தாக்குவது முக்கியமானதாக இருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை, கொழும்பு ஆகினவற்றையும், ஆசியாவின் பெரிய கடல்விமானத் தளமான கொக்கல கடல்விமானத் தளத்தையும், இரத்மலான சிவில் விமானத் தளத்தையும் தாக்கியழிக்க திட்டமிட்டிருந்தது ஜப்பான். ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பையும் 9ஆம் திகதி திருகோணமலையையும் ஜப்பான் தாக்கியது.

இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், உள்ள வெற்றித் தூண் எதிரி விமானங்களுக்கு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கும் என்றும், ஜப்பானின் வான்வழித்தாக்குதலுக்கு இலகுவாக அடையாளம் காணப்படக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாக  அதை இடம் மாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதை எங்கு மாற்றுவது என்பது குறித்து நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, இறுதியாக விக்டோரியா பூங்கா என்று அழைக்கப்படும் தற்போதைய இடத்தில் அதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.


விகாரமகாதேவி பூங்காவில் நிறுவல்

அந்தக் கோபுரம் காலி முகத்திடலில் இருந்து கழற்றப்பட்டு விகாரமகாதேவி பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட 440 பேரின் பெயர்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளன. இன்றும் அது விகாரமகாதேவிப் பூங்காவின் பின்னால் அமைந்துள்ள கொழும்பு பொதுநூலக நுழைவாயின் அருகில் காணலாம். அது அப்போது எங்கு இருந்தது என்பதை சரியாகச் சொல்வதானால்; இன்று பண்டாரநாயக்கவின் பெரிய சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் அந்த நினைவுக் கோபுரம் இருந்தது என்கிறார் வரலாற்றாசிரியர் பேராசிரியர் கே.டி.பரணவிதான.  அதை உறுதி செய்யக் கூடிய படங்களும் நமக்கு கிடைத்துள்ளன.

1939 - 1945 க்கு இடையில் நிகழ்ந்த இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை இணைக்கும் யோசனையை பிற்காலத்தில் ஆளுநர் சோல்பரி முடிவு செய்தார். அதன் பிரகாரம் இந்த தூபி அகற்றப்பட்டு மீண்டும் விகாரமகாதேவி பூங்காவின் ஒரு பகுதியில் (இன்றைய பொது நூலகத்துக்கு அருகில்) அப்படியே நிறுத்தப்பட்டது. அந்தத் தூபியை சுற்றி மேலதிக தூண்களுடன் அழகாக நிறுவப்பட்டது. ஆனால் அது முதற் தடவை கட்டப்பட்டதற்கு எடுக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலத்தை இதை மீள நிறுவ எடுத்தது. அது மட்டுமன்றி இலங்கைக்கு சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது.

மீண்டும் திறக்கப்பட்டது பற்றி பிப்ரவரி 6, 1952 அன்று வெளிவந்த சிலோன் டெய்லி நியூஸ் இப்படி தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. 'போர் நினைவுச்சின்னம் நிறைவடைந்தது'. இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இளவரசி எலிசபெத் மலர்வளையம் வைப்பார்' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், மன்னர் ஆறாம் ஜார்ஜ் திடீரென இறந்தபோது எதிர்பாராத நிகழ்வுகளின் காரணமாக இலங்கைக்கான அரச குடும்பத்து விஜயம் இரத்து செய்யப்பட்டது. 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் சிலோன் டெய்லி நியூஸ் தலைப்புச் செய்தியாக “அரசர் நித்திரையில் இறந்துவிட்டார், இளவரசி எலிசபெத் இங்கிலாந்தின் அரியணை ஏறுகிறார்' என்று செய்தி வெளியிட்டிருந்தது.


ஆறாவது ஜார்ஜ் மன்னரின் எதிர்பாராத மறைவிண் போது இளவரசி கென்யாவில் இருந்தார். அவர் அங்கிருந்து இங்கிலாந்து திரும்ப வேண்டியிருந்ததால், இலங்கைக்கான அரச பயணத் திட்டம் மாற்றப்பட்டது. பொதுநலவாய நாடுகளில் சுற்றுப்பிரயாணத்தை மேற்கொண்டிருந்த ஆளுநர் சோல்பரி பின்னர் ஒரு பொப்பி மலர் மாலையை இந்த போர் நினைவுத்தூபியில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


இந்த கோபுரத்தின் ஒரு பக்கத்தில் கவிதையொன்றின் ஒரு பகுதி பொறிக்கப்பட்டிருக்கிறது.

“நாம் முதுமை அடைவது போல

அவர்கள் முதிர்வடைய மாட்டார்கள்:

வயதினால் அவர்களைச் சோர்வடையச் செய்யவும் முடியாது.

வருட ஓட்டங்கள் அவர்களைப் பாதிக்காது.

சூரியன் உதிக்கிற காலையிலும்,

அஸ்தமிக்கிற மாலையிலும் கூட

நாம் அவர்களை நினைவு கூர்வோம்.”

இந்த மூலக் கவிதையை எழுதியவர்  பெனியோன் (Robert Laurence Binyon) என்கிற பிரிட்டிஷ் கவிஞர். முதலாவது உலக யுத்தம் 1914 ஓகஸ்ட்டில் தொடங்கிய போது, ஜேர்மன் படையினரால் கொல்லப்பட்ட பிரித்தானிய படையினரின் நினைவாக அடுத்த மாதம் செப்டெம்பர் மாதம் எழுதப்பட்ட நெடுங்கவிதையின் ஒரு பகுதி இது.

இதே கவிதையின் கீழ் இன்னொரு கவிதையின் வரிகளும் காணப்படுகிறது அதை எழுதியவரும் புகழ் பெற்ற பிரிட்டிஷ் கவிஞரும், இலக்கியவாதியுமான ஜோன் மெக்ஸ்வெல் எட்மன்ட்ஸ் (John Maxwell Edmonds). 

நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது,

அவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்,

நாளைய உங்கள் நாளுக்காக

எங்கள் இன்றைய நாளைக் கொடுத்தோம் என்று.


உலக யுத்தத்தின் நினைவாக ஆண்டு தோறும் நவம்பர் 11 ஆம் நாளை போரில் இறந்தவர்களுக்காக நினைவு கூறப்படுகிறது. அவ்வாறு உலகெங்கும் நினைவு கூறப்படும் அதே நாளில் இலங்கையிலும் இந்த இடத்தில் இராணுவ மரியாதையுடன் தேசிய வீரர்கள் தினம் நினைவு கூறப்படுவது வழக்கம்.

தொல்லியல் பெறுமதி மிக்க இந்த போர் நினைவுச்சின்னம் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தினால் (SLESA) இலங்கை கடற்படையின் உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நினைவுச்சின்னத்தை இரவில் ஒளிரச் செய்ய வான வெளிச்ச விளக்குகளும் நிறுவப்பட்டன.

ஒரு பாரிய நினைவுச் சின்னமொன்று 80 ஆண்டுகளுக்கு முன்னரே சிதைவுறாமல் பெயர்த்து எடுத்துச் சென்று இன்னோரிடத்தில் நிறுவப்பட்ட சாதனையையும் கொண்ட இந்தத் தூபி அடுத்த வருடம் நூற்றாண்டு வயதைக் கொண்டாட இருக்கிறது.

நன்றி - தினகரன் 05.06.2022


போர்த்துகேய கல்வெட்டு எங்கே? (கொழும்பின் கதை – 29) என்.சரவணன்

ஆண்டு 1875. இடம் கொழும்பு துறைமுகம்:

கொழும்புத் துறைமுகத்தின் தென்மேற்குப் பகுதியை இணைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். அவர்கள் அங்கிருந்த மணல் மேடுகளை அகற்றிக்கொண்டிருந்த போது விசித்திரமான கல்வெட்டொன்றின் அடையாளங்களைக் கண்டார்கள். உடனடியாகவே அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதனைத் தெரியப் படுத்தினார்கள். கட்டுமானப் பணிகளுக்கான தோண்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

பின்னர் சில மேலதிக அதிகாரிகளின் கண்காணிப்பில், அவர்களின் ஆலோசைனைக்கிணங்க அது கவனமாக சுத்தப்படுத்தப்பட்டது. அதிலிருந்த மணல் தூசு அனைத்தையும் அப்புறப்படுத்தினார்கள். கொழும்பு துறைமுகப்பகுதியில் இருந்த அந்த மேடுக்குள் ஒரு பெரும் பாறை. அந்தப் பாறையில் செதுக்கபட்டிருந்தது போர்த்துகேய சின்னம். அந்த சின்னம் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்து சமுத்திரத்தை நோக்கிய திசையில் பார்த்தபடி இருந்தது.

தொல்லியல் நிபுணர்களும், பத்திரிகையாளர்களும், அதிகாரிகளும் வந்து பார்த்து வியப்பாகவும் பல குழப்பகரமான ஐயங்களுடனும் திரும்பிச் சென்றார்கள்.

இந்தச் சின்னத்தின் தொல்லியல் பெறுமதியை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1898 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி அந்தச் சின்னம் பொறிக்கப்பட்ட 20 டன் எடையுள்ள பாறையைத் தகர்த்து துறைமுக சுங்கக் கட்டிடத்தின் முன் வைத்தனர். 1912 ஆம் ஆண்டு, இதை கொழும்பு கோட்டையில் உள்ள இராணி மாளிகையோடு உள்ள கோர்டன் பூங்காவுக்கு அன்றைய காலனித்துவ செயலாளர் சேர் ஹியுஜ் கிளிபோர்ட்டால் (Sir Hugh Clifford) வெட்டிக் கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது. “அந்தக் கல்வெட்டு அப்போது வந்திறங்கியவர்கள்  வந்திறங்கியதன் நினைவாக அதனை செதுக்கியிருக்கவேண்டும்” என அவர் கருத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கோர்டன் கார்டனிலிருந்து அகற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கேயர்கள் வந்திறங்கியது 1505 ஆண்டு இறுதியில் ஆம் ஆண்டாக இருந்தாலும், இந்த கல்வெட்டு 1501 ஆம் ஆண்டே நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறுகிற சில வரலாற்று சர்ச்சைகள் நீண்டுகொண்டே இருந்தன.

இந்த கல்வெட்டுச் சின்னம் பற்றி அதிகம் கவனமெடுத்தவர்களில் முக்கியமானவர்கள்; அன்று சமூக விஞ்ஞானிகளின் கேந்திர அமைப்பாக திகழ்ந்த ஆசிய இராஜரீக சங்கத்தினர் (Royal Asiatic Society Ceylon Branch) தான். இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொல்லியல், என பன்முகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த சந்ததியினருக்கு பல ஆய்வு மூலங்களை விட்டுச் சென்றவர்கள் அவர்கள் தான். ஆளுனரிலிருந்து, அரசியல்வாதிகள், துறைசார் அறிஞர்கள் என பல கல்விமான்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கிய நாட்டின் தலையாய புத்திஜீவிகளின் அமைப்பு அது.

கொழும்பு ஜனாதிபதி மாளிகையோடு அமைந்துள்ள கோர்டன் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த போது...
இந்த தொல்லியல் பெறுமதி கொண்ட பாறையையும் அதன் கல்வெட்டையும் பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். அதன் பிரகாரம் 1889 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி கூடிய கூட்டத்தில் அதைப் பற்றிய விபரங்களை சமர்பித்து உரையாடினார்கள். அங்கு உரையாடியவற்றையும் அங்கே சமர்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அவர்கள் 1901 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுச் சஞ்சிகையில் (Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society - 1899 -1900- vol-16) வெளியிட்டார்கள். இந்தக் கட்டுரைக்காக அந்த உரையாடலில் கலந்துகொண்டவர்கள் பற்றி தேடி அறிந்த போது மிகவும் வியப்பாக இருந்தது. A. E. Buultjens, D. W. Ferguson, G .A. Joseph, F.H.D. Vos, Ladislaus Michael (பேராயர்) மட்டுமன்றி ஆளுநரும் கலந்துகொண்டிருந்தார்.

இந்த உரையாடலில் தான்  அந்த கல்வெட்டு பற்றிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அந்தக் கல்வெட்டை 1501 ஆம் ஆண்டு செதுக்கியதாக இருப்பதால் போர்த்துகேயர் 1501 இலேயே வந்து விட்டார்களா என்கிற வாதம் எழுப்பப்பட்டபோது அது 1501 அல்ல 1561 என்று விளக்கப்பட்டது. அப்படி என்றால் அதன்படி லோரன்ஸ் அல்மேதாவால் அவரின் காலத்தில் இது செதுக்கப்படவில்லை என்றல்லவா பொருளாகும் என்கிற கேள்வி வந்தது.

அந்தக் கல்வெட்டில் உள்ள பிரதான சின்னம் உள்ளிட்ட அத்தனையையும் செதுக்கியவரும், ஆண்டை செதுக்கியவரும் ஒரே நபரல்ல என்றும், ஒரே காலமும் அல்ல என்றும் நிரூபிக்கப்பட்டது. அதாவது 1505 இல் இது செதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 1561 இல் இந்த வருடம் வேறு நபரால் செதுக்கப்பட்டிருக்கிறது என்பதை நிறுவினார்கள்.

இந்த விடயத்தில் அதிகம் சிரத்தையெடுத்து அக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த பெர்குசன் (Donald William Ferguson) பின்னர் “ 1506 இல் போர்த்துகேயரால் இலங்கை கண்டுபிடிப்பு” (The Discovery of Ceylon by the Portuguese in 1506) என்கிற தலைப்பில் ஒரு பெரும் ஆய்வுக் கட்டுரையை 1907 ஆம் ஆண்டு ஆசிய ராஜரீக சங்கத்தின் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அதில் போர்த்துக்கேயரின் வருகை பற்றியும், இந்த கல்வெட்டு பற்றியும் விரிவான குறிப்புகள் உள்ளடங்கியுள்ளன. அது 1908 ஆம் ஆண்டு 135 பக்கத்தில் நூலாக வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 

அதில் இந்த ஐயங்களுக்கும், சர்ச்சைகளுக்கு எல்லாம் பல முடிவுகளைத் தந்திருக்கிறார் பெர்குசன்.

இதில் போர்த்துக்கேய மன்னரின் அரச கிரீடமும் சிலுவையும் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னரின் கிரீடத்தின் உருவத்தைக் கொண்ட போர்த்துக்கேய Coat-of-Arms சின்னம் அது. மேலும் பிரதான கேடயத்தின் உட்புறத்தில் சிலுவை வடிவத்தில் ஒரு சிறிய கவசம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து கேடயங்களின் உள்ளே தலா 5 தங்க நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உடலில் ஏற்பட்ட ஐந்து காயங்களை இது காட்டுகிறது. ஐந்து கேடயங்களும் அபோன்சோ பிரபுவை போரில் தோற்கடித்த ஐந்து தளபதிகளை அடையாளப்படுத்துகின்றன. இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக யூதாஸ் எடுத்த 30 காசுகளை அடையாளப்படுத்தும் வகையில் தங்கக் காசுகள் காண்பிக்கின்றன.

போர்த்துகேயரின் முதல் நான்கு தசாப்த காலத்தில் சமய நடவடிக்கைகள் பற்றிய போதிய அடையாளங்கள் கிடையாது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் துறைமுகத்துக்கு அண்டிய பகுதியில் சிறிய புனித லோரன்ஸ் தேவாலயம் (St. Lawrence church) கட்டப்பட்டிருந்தது. இன்னொன்று கோட்டை அரசின் தலைநகரில் 1528 இல் இருந்து இருந்திருக்கிறது.  இவை போர்த்துகேய படையினரின் வழிபாட்டுக்காக இருந்தனவே அன்றி மத விஸ்தரிப்பாக அப்போது இருந்திருக்கவில்லை. இதில் புனித லோரன்ஸ் தேவாலயம் இருந்த பகுதி கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் உள்ள; கோர்டன் பூங்காவுக்கு அருகாமையில் இருந்திருக்கிறது. அதன் அருகில் தான் இந்தக் கல்லும் இருந்திருக்கிறது. 

தற்போது கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் வைக்கப்பட்டிருக்கிற விதம்

உறுதிபடுத்தல்

1506 இல் போர்த்துகேயர் கோட்டை அரசனின் அனுமதியுடன் கொழும்புக்கு அண்மையில் ஒரு தொழிற்சாலைக் களஞ்சியத்தையும், கத்தோலிக்க தேவாலயத்தையும், நினைவுச் சின்னத்தையும் நிறுவினர். 

1506 இல் போர்த்துகேயர் இலங்கையைக் கண்டுபிடித்தல் என்கிற நூலில் டொனால்ட் பெர்குசன் முக்கியமான பல விபரங்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் தொன் பிரான்சிஸ்கோ த அல்மேதா (D. Francisco de Almeida); போர்த்துகேய அரசர் மனுவலுக்கு 1508ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் அனுப்பிய கடிதங்களைப் பரியும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் இப்படி இருக்கிறது:

"சிலோனைப் பற்றி அங்கே சென்று திரும்பியவர்களின் மூலம் தங்களுக்கு தகவல்களை அறியத் தந்திருக்கிறேன். என் புதல்வன் அங்கே நிறுவிய கல்வெட்டு நினைவுச் சின்னத்தையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள்.  தெற்கிலிருந்து, அதாவது மலாக்கா, சுமாத்திரா, வங்காளம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் அனைத்து கப்பல்களும் வடக்குப் திசையாக செல்லும்போது இந்த இலங்கையைக் கடக்காமல் செல்ல முடியாது. மேலும் அரை டஜன் கப்பல்கள் இங்கே நிறுத்தலாம். அவற்றை கவனிப்பதற்காக ஒரு கோட்டையை எந்தவித சிக்கலும் இல்லாமல் உருவாக்க முடியும். உங்களின் சேவையை அதிகரிக்க கடவுள் எங்களை வழிநடத்திச் செல்லட்டும்.” 

பர்னவோ லோபேஸ் த காஸ்தன்ஹேதா (Castanheda  1528 அளவில்) இப்படி எழுதுகிறார்

“அரசனின் அனுமதியுடன் அவர் (தொன் லோறன்சோ த அல்மேதா) கடற்கரையோரத்தில் பாறையின் ஒரு மூலையில் போர்த்துகேய அரச சினத்தையும், இன்னொரு மூலையில் வாள் சின்னத்தையும் உடைய கல்வெட்டை நிறுவ ஆணையிட்டார்.” 

இந்த கல்வெட்டுடன் சேர்த்து JSOI என்கிற எழுத்துக்கள் பெரிதாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் விரிவை ஆங்கிலத்தில் (Jesus Salvator Orientalium Indiorum) என்று அர்த்தப்படுத்துகிறார்கள். அதாவது கிழக்கிந்திய மீட்பரான இயேசு கிறிஸ்து என்று அர்த்தப்படும். போர்த்துகேயரால் கீழைத்தேய நாடுகளில் கத்தோலிக்க விஸ்தரிப்பின் போது பயன்படுத்தப்பட்ட சுலோகம் அது. அப்படியான நாடுகளில் எல்லாம் இப்படியான கல்வெட்டை நிறுவியிருப்பதை அறிய முடிகிறது. அங்கெல்லாம் ஒரு சிலுவையுடன் நினைவுத் தூபி. அரச இலட்சனை என்பன நிறுவப்பட்டுள்ளன.

போர்த்துகேயர் இலங்கை வந்தது பற்றிய இன்னும் புரியாத புதிராக இருகின்ற இரு சர்ச்சைக்குரிய விவாதங்கள் பலமாகவே உள்ளன. முதலாவது அவர்கள் வந்திறங்கிய உறுதியான ஆண்டு, அடுத்தது அவர்கள் வந்திறங்கிய இடம்.

போர்த்துகேயரின் வருகையும் கொழும்புத் துறைமுகமும்

16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியப் பெருங்கடலில் வளமான தீவுகள் இருப்பதை போர்த்துகேயர்கள் அறிந்திருந்தனர். அத்தகைய தீவுகளைக் கண்டுபிடிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இந்தியாவின் கொச்சியில் முகாமிட்டிருந்த தளபதி பிரான்சிஸ்கோ த அல்மேதா இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார். பிரான்சிஸ்கோ அல்மேதா தனது மகன் லோரென்சோ த அல்மேதாவின் தலைமையில் ஒரு இராணுவத்தை இந்தப் பணிக்காக அனுப்பினார்.  லோரென்சோவும் அவரது இராணுவமும் புதிய தீவுகளைத் தேடிக் கப்பலில் சென்றுகொண்டிருந்த வேளை காலி பகுதியில் ஏற்பட்ட அலைகளின் பேரெழுச்சியாலும், புயலாலும் சிக்கி கொழும்பில் அக்கப்பல்கள் கரையொதுங்கியன.  கம்போடியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏற்றப்பட்டிருந்த கறுவா, குட்டி யானைகள் என்பவற்றைக் கொண்ட கப்பல்கள் அப்போது துறைமுகத்தில் நங்கூரமிடபட்டிருந்தன. லோரென்சோவும் அவரது ஆட்களும் முஸ்லிம்களை பயமுறுத்தி அவர்களை விரட்டினர். கப்பலில் இருந்து வந்த மாலுமிகள் கரையோரத்தில் கண்ட சுதேசிகளிடம் அனுமதி பெற்று ஒரு கல்லில் தாம் வந்திறங்கியதன் நினைவாக தமது நாட்டின் அரச இலட்சினையை செதுக்கினார்கள். அதை செதுக்கிய கோன்சலேஸ் கொன்ஸ்வலேஸ் (Goncalo Goncalves) என்கிற போர்த்துக்கேய படையினன் தனது பெயரையும் அதில் பொறித்தார். 

இந்தப் புகைப்படம் கொழும்பு வரைபடங்களில் மிகவும் பழமையான (1526) வரைபடம் இது எனலாம். Lendas da Ïndia என்கிற போர்த்துகீச மொழி நூலில் வெளிவந்த புகைப்படம் இது. இந்த நூல்கள் 12 தொகுதிகளாக வெளிவந்தன. இதை எழுதியவர் கெஸ்பர் கொறையா (Gaspar Correia 1492–1563 ). கெஸ்பர் கொறையா போர்த்துக்கேய வரலாற்றாசிரியர். போர்த்துகேயர் கோவாவில் நிலைகொண்டிருந்த போது இளம் வயதில் போர்த்துக்கேய படையுடன் இந்தியா வந்து சேர்ந்து பணி புரிந்தவர். இந்தியாவில் இருந்த காலத்தில் அவர் இந்தியா பற்றியும் சூழ உள்ள பிரதேசங்களைப் பற்றியும் எழுதிய 3500 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகள் அவரின் இறப்புக்குப் பின்னர் கோவாவிலிருந்து போர்த்துக்கலுக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதியெடுத்து முக்கியமானவர்களுக்கு மட்டுமே சில பிரதிகள் விநியோகிக்கபட்டிருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டு வரை அது நூலாக வெளியிடப்படவில்லை.

அப்போதைய இலங்கை மன்னர் ‘கோட்டே’யில் இருப்பதை அறிந்த போர்த்துகேயர்கள் பின்னர் மன்னரைச் சந்திக்க கோட்டே சென்றனர். போர்த்துகீசியர்களைப் கண்ட சுதேசிகள் 8வது வீரபராக்கிரமபாகுவிடம் சென்று பின்வருமாறு கூறினார்கள்.

“அரசே, ஒருவித விசித்திரமான மனிதர்கள் கொழும்பில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் இரும்பு தொப்பிகளையும் இரும்பு கவசங்களையும் அணிந்திருக்கிறார்கள். கற்களைத் தின்று இரத்தம் குடிப்பதை நாங்கள் பார்த்தோம்.”

அதைக் கேட்ட அரசன் அவர்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டான். அரசரின் கட்டளைப்படி போர்த்துகீசியர்கள் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் வழமையான வழியில் அல்ல. தூரப் பாதையால் அரச மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இப்படி வேடிக்கையாக அழைத்துச் செல்லப்பட்ட கதை சிங்களத்தில் பிரபல்யம். எனவே "பறங்கி கோட்டே சென்றது போல" என்கிற சொலவடை உருவானது. பின்னர் அரண்மனைக்கு வந்த மன்னருக்கும் போர்த்துகேயர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி போர்த்துக்கேயருக்கு ஆண்டுதோறும் 400 பஹார் கறுவாவை மன்னர் வழங்குவதாகவும் அதற்குப் பதிலாக போர்த்துக்கேயர் அரேபியர்களிடம் இருந்து இலங்கைத் துறைமுகங்களை பாதுகாப்பதாகவும் உடன்பாடு கண்டனர். இப்படித் தான் கொழும்பு துறைமுகம் வளர்ச்சி பெற்றது. 

லோறன்சோ த அல்மேதா

இலங்கையில் உள்ள துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் கப்பல்களை நிறுத்தி கொழும்பு நகருக்கு அருகில் ஒரு கப்பல் துறையை நிறுவ முடிவு செய்தனர். அதன்படி, போர்த்துகீசியர்கள் கப்பல்துறைக்கு கொழும்பு கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய மேட்டைப் பயன்படுத்தினர். இன்று அந்த இடம் தான் கொழும்பு துறைமுகமாக உருவாகியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் ஒரு போர்த்துகேய எழுத்தாளர் ஒருவர் கொழும்பு நகருக்கு அருகிலுள்ள துறைமுகத்தைப் பற்றி இப்படி எழுதினார்:

“துறைமுகத்திற்குள் நுழைய ஒரு பெரிய வாயில் உள்ளது. இப்பகுதிக்கு அருகே கால்வாய் ஒன்றும் ஓடுகிறது. துறைமுகத்தின் முனை ஒரு மீன்பிடி கம்பியின் முனை போல் உள்ளது. இது தரைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. அது ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் கல்லை எறியும் அளவுக்கு சிறியது. போர்த்துகேய வணிகர்களும் மாலுமிகளும் அந்த இடத்தைச் சுவரால் எழுப்பி தங்கள் வணிகத்தின் மையமாக மாற்றினர். போர்த்துகேயர்கள் 1517 இல் இருந்து இந்த துறைமுகத்தில் வர்த்தகம் செய்யத் தொடங்கினர். பின்னர் சுமார் 139 ஆண்டுகள் போர்த்துகீசியர்களால் இலங்கை ஆளப்பட்டது. இருப்பினும், 17 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் ராஜசிங்க மன்னரின் உதவியுடன், டச்சுக்காரர்கள் போர்த்துகீசியப் பகுதிகளைக் கைப்பற்றினர். அதன்படி 1656 இல் கொழும்பு துறைமுகம் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

போர்த்துகேயர்களால் இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் நினைவுச்சின்னமும் இதுவே. காலனித்துவத்தின் முதல் அடையாளமும் இது தான்.

காலனித்துவத்தின் அடையாளமாக இருக்கும் அதி பழமையான ஒரே கல்வெட்டு இது தான். 500 ஆண்டுகளையும் கடந்து இன்றும் எஞ்சியிருப்பது வியப்பான விடயம். அது மட்டுமல்ல போர்த்துகேயர் முதலாவது வந்திறங்கியது காலியிலா, கொழும்பிலா என்கிற குழப்பத்துக்கும் இந்த கல்வெட்டின் மூலம் நமக்கு விடை கிடைக்கிறது.

நன்றி - தினகரன் 29.05.2022

பி.கு: இக்கட்டுரைக்கு பயன்படுத்திய உசாத்துணைப் பட்டியல் இது நூலாக வெளிவரும்போது இணைத்துக்கொள்ளப்படவிருக்கிறது

கண்டிராசன் கதை - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

கண்டியின் கடைசி ராசன் விக்கிரம ராஜசிங்கனின் கதையை சொல்லப்போகிறேன். அவரின் முழு வரலாறு அல்ல. ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் பற்றியது. நீங்கள் வாசிக்கப்போகும் இந்த வியாசத்திற்கு இரண்டு காலனிய கால ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதில் ஒன்று ஆங்கிலேயத் துருப்புகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த ஒருவரின் நினைவுகூரல்; மற்றையது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், தனது அரச குவத்தினருடனும் சேவகர்களுடனும் கொழும்பிலிருந்து மதராஸ் பட்டினத்திற்குக் கொர்னவாலீஸ் என்ற கப்பலில் நாடு கடத்தப்பட்டதைப் பற்றிய ஆங்கிலச் சேவைத்துறை அதிகாரியின் நாட்குறிப்பு.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கைதானதை நேரில் பார்த்ததாகச் சொல்லுகிறவர் டி.வீ.ஏ. டியஸ். இதுபற்றி இவர் எழுதியது அந்த நாட்களில் பிரபலமான பத்திரிகையான சிங்கள சங்கரவாவில் 1861ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்தது. கைதான சம்பவம் கிட்டத்தட்ட இவரால் நாற்பது வருடங்கள் கழித்து நினைவுகூரப்பட்டிருக்கிறது. இதை நேரில் பார்த்த சிங்கள நினைவூட்டலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முப்பது வருடங்களுக்குப் பின் டி. பி. பொகத் என்பவரால் Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain and freland என்ற ஏகாதிபத்திய ஆய்விதழில் பிரசுரமாகியது. அதன் தவைப்பு: How the last King of Kandy was Captured by the British பொகத் தெரிவிக்கும் அதிர்ச்சியான செய்தி, டியஸ் என்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இருந்ததாக அரச கோப்புகளில் குறிப்பு இல்லை. டியஸ் எழுதியதாகச் சொல்லப்பட்ட இது வாய்வழிப் புனைவுகளின் திரட்டு.

மற்றைய ஆவணம், ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும் பரிவாரமும் கப்பலில் கொண்டுபோகப்பட்டது. பற்றி வீலியம் கிரன்வில் என்ற அரசாங்கப் பணித்துறைவர் எழுதியது. Deportation of Sri Vikram Rajasingha, Ceylan Literary Review 3 (II) 1936 & 3 (12 ) 1936: இவரின் குறிப்பின்படி அரச கைதிகள் கொழும்பிலிருந்து ஆங்கில முதலாம்மாதம் 25,1816 அன்று கொண்டுசெல்லப்பட்டனர். அடுத்த மாதம் 21ஆம் தேதி மதராஸ் துறைமுகத்தைச் சென்றடைந்தார்கள். முடியிழந்த மன்னருடன் இன்னும் அறுபது பேர் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கிரன்வில் தகவல் தருகிறார். அரசர், அவருடைய நான்கு மனைவிகள், அவருடைய தாயார், அவரின் சேவகர்கள், அவரைச் சார்ந்திருப்பவர்கள் எனப் பலரும் இவர்களில் அடக்கம். அன்றைய ஆணாதிக்க எழுத்து ஆசாரப்படி மனைவீயரின் பெயர்கள் தரப்படவில்லை. அவர்களின் பெயர்களை இங்கே தந்திருக்கிறேன். ஸ்ரீ வெங்கட ரங்கம்மாள் தேவி, ஸ்ரீ வெங்கட ரங்கம்மாள் ஆகிய இருவரும் சகோதரிகள். அத்துடன் தென்கள் சாமியின் இரு புதல்விகளான முத்துக்கண்ணம்மாள் தேவி, வெங்கட அம்மாள். இருவரும் பூப்பெய்தாத வயதில் மணய் முடிக்கப்பட்டனர். மன்னரின் தாயார் பெயர் சுப்பம்மா. இந்தப் பெண்கள் பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. ஸ்ரீ வெங்கட ரங்கம்மாள் தேவியின் உருவப்படத்தைக் கொழுப்பு அருங்காட்சியகத்தில் காணலாம். மன்னர் குடும்பத்தினர் பதினொரு மாத காலம் கொழுப்பில் தடுப்புக் காவலில் கைதிகளாக இருந்த நேரத்தில் ஆங்கிலேய ஓவியரான வில்லியப் டானியேல் அதனை வரைந்திருக்கிறார். நெற்றிப் பொட்டுடன் காணப்படும் ரங்கம்மாள் தேவி ஆங்கில, தென் இந்தியக் கலவையாகக் காட்சியளிக்கிறார்.

இந்த இரண்டு ஆவணங்களிலும் அதிகமாக வெளிப்படும் கேள்வி கைதியாக்கப்பட்ட மன்னர் எவ்வாறு நடத்தப் பட்டார் என்பதாகும். கிரன்வில்லும் டியஸும் அரசரைப் பற்றிப் படர்க்கையில் எழுதும்போது பரியாதைத் தன்மையாக மாட்சிமை தங்கிய', 'மேன்மை தங்கிய' என்ற முன்னொட்டுகளை உபயோகிக்கிறார்கள். கிரென்வில் அரசரை நேரில் அழைத்தபோது 'ஐயா' என்றார். ஆங்கில அதிகாரிகள் இவருக்குக் காட்டிய கண்ணியம், உபசாரம், பெருந்தன்மைகள் சிங்கள் முதலிகளிடையேயும் கண்டி மூப்பர்களிடையேயும் காணப்படவில்லை. அரசரைக் கைதுசெய்ய வந்த கண்டி குடி முதல்வர்களில் ஒருவரான எக்னெலிகொட அரசனின் கைகளைப் படர்கொடிகளினால் கட்ட முயன்றான். இவன் அரசரை 'பன்றி' என்று திட்டினான். அந்த நாட்களில் மலையக இந்தியர்களுக்குக் 'கள்ளத்தோணி' என்ற அவபதிப்புச் சொல் சிங்களப் பொது உரையாடலில் பிரயோகிக்கப் படவில்லை. அப்படி புழக்கத்திலிருந்திருந்தால் கட்டாயம் ஸ்ரீ விக்கிரய ராஜசிங்கனைக் கள்ளத்தோணி என்று எக்னெலிகொடை திட்டியிருப்பான். டியஸுக்கு இந்த மூர்க்கத்தனமான செய்கை பிடிக்கவில்லை. தன் தோளிலிருந்த சால்வையை எடுத்துக் கொடுத்து அரசரைக் கட்டும்படிச் சொன்னார். கடவுள்போல் பதித்தவரை இப்படிச் செய்யலாமா என்றும் கேட்டிருக்கிறார். அரசரை மட்டுமல்ல இரண்டு ராணிகளையும் கண்டி மூப்பர்கள் மிகக் கேவலமாக நடத்தினார்கள். அவர்களுடைய ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவர்களின் தோடுகள் பிடுங்கப்பட்டன. இந்த டியஸுதான் ஆங்கில அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி அரசரையும் ராணிகளையும் மீட்டார்.

கிரன்வீல் நாடகுறிப்பில் காணப்படும் அரசர் எல்லா மனிதர்களையும் போலவே முரண்பாடுகளின் கலவை.

அறிவாளியாகவும் ஆத்திரக்காரராகவும் அதிகாரம் செலுத்துகிறவராகவும் காணப்படுகிறார். முடியை இழந்தாலும் அரசகம்பீரத்துடன் நடக்கிறார். இங்கிலாந்து அரசவை பற்றிய பரபொழுக்கங்களை அதிகம் அறிந்திருந்தார். இவை எப்படி தெரியும் என்று கிரன்வில் கேட்டதற்குச் சரித்திரம், ஆராய்ச்சி என்ற இரண்டு வார்த்தைகளில் பதில் சொன்னார். "வாசிப்பீர்களா" என்று கிரன்வில் கேட்டார். "சிலவேளைகளில் வாசிப்பதுண்டு. என்னுடைய சேவகர்கள் எனக்கு வாசித்துக்காட்டுவார்கள்" என்றார். "எழுதுவது உண்டா” என்ற கேள்விக்கு அதிகாரம் செலுத்திப் பழகிப்போனவர்களின் பதிலைச் சொன்னார்: "அது காரியதரிசிகளின் வேலை." இந்த பன்னரின் கடுஞ்சினத்திற்கு ஒரு வெட்கங்கெட்ட உதாரணம்: அரசருக்குப் பணியாற்றிய ஒருவர் ராச படுக்கையில் இருந்ததற்காகக் கோபத்தில் கட்டிலையே தூளாக்கினார்.

அரசர் ஆங்கிலேயர்களுக்குக் கொடுத்த தளத்தகையான (Strategic) தகவல் "சிங்கள முதலிகளான' எஹலபொல், பொலிகொட போன்றவர்களை நம்பாதீர்கள் என்னை இவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள். உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். இவை மன்னரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள் பின்னர் நடந்த கண்டிப் போரில் கெப்பட்டிபொலவுக்கு எஹலபொல பின் துணையாக இருந்திருக்கிறார்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கும் கிரன்வில்லுக்குமிடையே நடந்த சங்கடயான சம்பாஷணை அரசரின் கொடுங்குரூரமான செயல்கள் பற்றியது. ஆங்கிவ வணிகர்களின் உறுப்புகளை ஏன் சிதைத்தீர்கள் என்றதற்கு அரசன் கொடுத்த வீடை, "இவர்கள் எஹலபொலவின் உளவாளிகள்..." அப்போது போர்க் குற்றங்கள் கோவிட்-9 போல் மக்களின் கரிசனைக்கு வந்திருக்கவில்லை.

கிறித்துவம் பரவ அனுமதி அளித்திருந்தால் நாடு நாகரிகம் அடைந்திருக்கும் என்று கிரன்வீல் சொன்னபோது மன்னரின் மறுமொழி, 'நாட்டின் பாதுகாப்பு முக்கியம்.' இவர் நாட்டின் பாதுகாப்பு என்று சொன்னது பௌத்த மதம். சைவ பதத்திற்கு நாயக்கர்கள் ஒன்றுமே செய்யவில்லை. இவர் தலதா மாளிகையில் கட்டிய எண்கோண மண்டபம் பௌத்தத்தின் தாஜ்மகால் இந்த ஒப்பிடல் கொஞ்சம் மிகையாகத் தெரியும் ஷாஜகானின் மனைவியை நினைவுகூராபல் இந்த வியத்தகு கட்டடங்களின் வெளித் தோற்றங்களை மட்டும் பாருங்கள். இந்த ஒப்பீட்டு மதிப்பீடு விளங்கும்.

கிரன்வில்லின் நாட்குறிப்பு காவனிய கால எழுத்துகளில் சற்று வித்தியாசமானது. கீழைத் தேசத்தவர்களைக் குறைவுபடுத்தும், இழிவுபடுத்தும் வரிகள் அதிகம் இல்லை. அரசர் அறிவுக்கூர்மையானவர் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆக்கமுறையான கணிப்புக்குக் காரணம் ஆங்கில கம்பனியார் வியாபாரிகளாக வந்ததுதான். கொம்பனிக்காரர்கள் இந்தியர்களையும் இலங்கையினரையும் சரிநிகராகப் பார்த்தார்கள். 1857 இந்தியச் சிப்பாய்களின் கிளர்ச்சிக்குப் பின் இந்தியத் துணைக் கண்டம் பிரித்தானிய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்தான் ஆண்டகைகள், ஆளப்படுவோர் என்ற துவித எண்ணய் உருவாகியது. அந்நியர்கள் பற்றிய இனம்சார்ந்த வெறுப்பு அதிகரித்தது.

கண்டி ஒப்பந்தத்தில் பன்னிரண்டு பேர் கையொப்ப மிட்டிருந்தார்கள். அவர்களில் நான்கு பேர் தமிழிலும், நான்கு பேர் சிங்களத்திலும் பீதியானோர் தமிழிலும் சிங்களத்திலுமாகக் கையொப்பம் போட்டிருந்தார்கள். தமிழில் கையொப்பமிட்ட நாயக்கர்களைத் தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்தவில்லை. இந்தக் கையெழுத்துப் போட்டவுடன் நாயக்கர்களின் மேலாதிக்கம் முடிவுக்கு வந்தது. இத்துடன் 2,357 வருட காலத் தீவின் சுதந்திரம் பறிபோயிற்று. இந்த 1815 கண்டிப் பந்தத்தைவிட மிக மோசமானது 1817 உடன்படிக்கை. இதன்படி ஆங்கிலேய அதிகாரிகளுக்கு முன்னால் சிங்களவர்கள் கைகட்டி நிற்க வேண்டும் தெருவில் ஆங்கிலேயர்களோ அல்லது அவர்களின் வாகனங்களோ வரும்போது நடுப்பகுதியை அவர்களுக்கு வீட்டுக்கொடுக்க வேண்டும். சிங்கள் மறுதலிப்பாளர்கள் செய்த இழிவுக்குரிய செயல் நாயக்க வம்சத்தினரிடமிருந்து தீவைக் கைப்பற்றி இன்னுமொரு அந்நிய ஹனோவேரியன் அரச குலத்திற்கு மாற்றியது. திராவிட ஆட்சி நீக்கப்பட்டு ஆரிய ஆட்சி மாற்றீடு செய்யப்பட்டது.

விலியம் கிரன்வில்லின் பதிவில் என் கவனத்தை ஈர்த்தது அரசன் அணிந்த உடைபற்றிய விவரங்கள். மணி வேலுப்பிள்ளையின் இலக்கிய மேதையையான மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறேன்: "மஞ்சள், சிவப்பு, பச்சை வரிகள் கொண்ட அகலமான பட்டுக் காற்சட்டை கணுக்காலில் குறுக்கப்பட்டிருந்தது. இருபுறமும் இடுப்பிலிருந்து கீழிறங்கும் பொன்மணிகள். மேற்புறம் பொன்மலர் வேலைப்பாடு கொண்ட வெண்பட்டு மேற்சட்டை அதன் கழுத்தைச் சூழ்ந்த பொன்விளிப்பு. ஸ்பானியரின் பாணியில் மிகுந்த பூவேலைப்பாடும் வெண்சரிகை விளிப்புகளும் கொண்டு குறுகி, அகன்று பொருமி, ஒடுங்கிய சட்டைக்கை கழுத்தைச் சுற்றி அகன்று கூர்ந்த சரிகைக் கொச்சகம். அதன் கீழே கஞ்சிப்பசை ஊறி மொறமொறப்பான, நேர்த்தியான சரிகைத் தோளணி பின்புறம் பிறைவடிவில் தொங்கியது. பணிகள் பதித்த பொன்வீளிப்புடன் கூடிய தொப்பி ஒன்று சிங்களப் பாணியில் தலையை மூடியிருந்தது. அதன் உச்சிக் கூம்பீல் பதித்த பொன்னணியில் அரிய மாணிக்க பணிகள், நீல மணிகள், பரகத பணிகள் சில தொங்கிக் குலுங்கின. அரசன் கைக்குட்டை ஒன்று வைத்திருந்தான். பொன் வேலைப்பாடு கொண்ட மென்பட்டுக் காலணிகள் பாதங்களை மூடி விரல்களுக்கு மேலே வளைந்திருந்தன."

இதே உடுப்புகளுடன்தான் மன்னர் கொழும்பிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டார். மதராஸ் அடைந்ததும் மன்னர் இதே அலங்காரங்களுடன்தான் கப்பலை விட்டு வெளியே வந்தார். அரசரும் அவரின் குலத்தினரும் பல்லக்கில்தான் வேலூருக்குத்தூக்கிப்போகப்பட்டார்கள். புகையிரத வண்டியில் பயணம் செய்ய ஆய் அந்த நாட்களில் நிலக்கரியில்தான் வண்டிகள் இயங்கின. மதராஸ்வாசிகள் இன்னும் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மன்னருக்கும் அவருடைய சந்ததியாருக்கும் ஆங்கில ஆட்சியாளர்கள் வசதியான ஓய்வூதியம், மானியம் கொடுத்தார்கள். இது 964இல் நிறுத்தப்பட்டது. இதைச் செயலாற்றியவர் இடதுசாரி நிதி அமைச்சர் என். எம். பெரெரா. இது மட்டுமல்ல அந்த நாட்களில் என் போன்றவர்களின் ஆசைத் தின்பண்டங்களான Cadbury's Chocaiare, Huntly and Paimers Biscuits, Krafi Cheese ஆகியவற்றைத்தடைசெய்தவர் இவர். இவற்றைத் தமிழ்ப்படுத்தி எழுதினால் உங்கள் நாக்கில் சுவை ஊறாது. ஆகையினால்தான் ஆங்கிலத்தில் வர்த்தகப் பெயருடன் தந்திருக்கிறேன். ஏழு ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி இந்திய அரசர்களுக்குக் கொடுக்கப்பட்ட மானிய வாக்குறுதியைத் துறப்பு செய்தார்.

மன்னரை வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது ஒரு முரணான நகைச்சுவை, இதே சிறைச்சாலையில்தான் சிப்பாய்கள் ஆங்கில கம்பனியருக்கு எதிராக 1803இல் கொதித்து எழுந்தார்கள். சாவர்க்கார் தன்னுடைய புத்தகத்தில் 1857தான் முதல் இந்திய விடுதலைப் போர் என்று உணர்வுப் பெருக்கோடும் சரித்திர நினைவு இழப்புடனும் வாதாடுகிறார். இவரின் நூலில் வேலூர் என்ற சொல்வே இல்லை. இந்த விடுபடல் அவரின் குறுகிய கருத்தியல் பார்வைக்கும் மூர்க்கத்தனத்துக்கும் வெளிப்படையான எடுத்துக்காட்டு.

ஏகாதிபத்தியம் செய்யும் மூலோபாயங்களில் ஒன்று, பதவி நீக்கப்பட்ட மன்னர்களை பேற்கத்தியர் தான் கைப்பற்றிய மற்றைய நாடுகளுக்குக் கடத்திவிடுவது. கடைசி மொகலாய மன்னர் ஷா பகதூர் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு பர்மாவுக்கு - இன்றைய மியன்மார்நாடு கடத்தப்பட்டார். அதே போல் மூன்றாம் - ஆங்கில பர்மா போருக்குப் பின் 1885இல் பர்மாவின் கடைசி ஆட்சியாளர் தீபாவ்வும் அவருடைய மனைவி சுப்லாத்தும் அவர்களின் இரண்டு மகன்களும் மகாராஷ்டிரத்தின் நிரந்தரத் துயில்நிலையில் இருக்கும் கடலோரக் கிராமமான ரத்னகிரிக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களுடைய கதையை The Glass Palace' என்ற நாவலில் அமிதாப் கோஷ் சுவையாக எழுதியிருக்கிறார்.

அரசியல் கைதிகளை நாடு கடத்துவது ஆங்கிலேயரின் சுயமான, அசலான செய்கை அல்ல. இதற்கு முன்பு டச்சுக்காரர்கள் செய்திருக்கிறார்கள். 1703இல் இந்தோனேசிய மன்னரான மூன்றாம் அமன்குராட் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒவ்வாந்தரிடம் சரணடைந்த போது அவர் தன் குடும்பத்தினருடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவர்கள் சிறையிருந்த இடம் யாழ்ப்பாண டச் கோட்டை. இரு நூறாண்டுகள் கழித்து ஓர் அந்நிய நாட்டின் பாதுகாப்புக்குக் கட்டப்பட்ட ஒரு கோட்டைக்கு விடுதலைப் புவிகளும் இலங்கை இராணுவமும் சண்டை போடுவார்கள் என்று மூன்றாம் அயன்குராட் என்ன, தொலைநோக்குப் பார்வையாளர் நொஸ்ரட பஸ்கூட நினைத்துப் பார்த்திருக்க யாட்டார். யாழ்ப்பாணப் பட்டணத்தின் கடைசி அரசனான இரண்டாம் சங்கிலி போர்த்துக்கீசியரால் கோவாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு !623இல் அவருடைய தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவதற்கு முன் அவர் டோன் பிலிப்பு என்ற பெயருடன் கிறிஸ்தவரானார். இவருடைய சகோதரர்கள் வலுக்கட்டாயமாகக் கத்தோலிக்கத் துறவிகளாக மாற்றப்பட்டார்கள். சகோதரிகள் கன்னியாஸ்திரிகள் ஆக்கப்பட்டார்கள். இதற்கு அரச குடும்பயே இனி துளிர்விடக்கூடாது என்ற நோக்கப்தான் காரணம்.

கண்டி அரசனைப் பற்றிய கட்டுரையானாலும் அவருக்குத் துரோகம் செய்தவர்களையும் சில வரிகள் சொல்ல வேண்டும். இது விடுபட்டுப் போவது காந்தியின் கொவை பற்றிப் பேசும்போது கோட்சேயைத் தவிர்ப்பது போன்றது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆட்சியில் அரசரை மறுதலித்தவர்கள் இன்று யாவீரர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சரித்திரத் திருத்தல் பற்றி என்.சரவணன் தினக்குரலில் டிசம்பர் 11,2018 அன்று எழுதிய புலமைசார்ந்த கட்டுரையில் காணலாம். இதைவிட மோசமானது, ராஜபக்ஷவை இன்றைய எஹலபொல என்று அவருடைய அரசியல் பக்தர் ஒருவர் கூறியிருப்பது, ஒருவீதத்தில் இது சரியான ஒப்புவமை பழைய எஹலபொல தன்நாட்டை ஆங்கிலேயர் கைக்குக் கொடுத்தார். இன்றைய எஹலபொல சீனாவின் கையில் தீவைக் கொடுத்திருக்கிறார். அந்த நாளைய எஹலபொலவுக்கு ஆங்கில பிரடரிக் பிரவுன் ஆதரவாளர். இன்றையவருக்கு அனாமதேய சீனத் தூதர்கள். எஹலபொல பொரீஷியஸுக்கு நாடு கடத்தப்பட்டவர். அந்தத் தீவில் இவர் கழித்த நாட்கள் பற்றி ரோமேஷ் குணசேகரா 'The Prisoner of Paradise என்ற தலைப்பீல் அவருக்குச் சாதகமான நாவலாக எழுதியிருக் கிறார். ராஜபக்ஷ போக வேண்டிய இடம் சொரூசுத் தீவுகள் அல்ல, சர்வதேச நீதிமன்றம். பிலிப்பின்ஸ் பெரிண்ணட் மாக்கோசின் மகன், தனது தந்தையின் வரலாற்றைத் திருத்தி எழுதியதுபோல் 2080களில் நடக்கப்போகும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஷவின் வாரிசுகள் அவரின் காலத்தில் இலங்கையில் பாலும் தேனும் வழிந்தோடியது என்று பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உண்டு.

இந்தப் போர்களில் ஈடுபட்ட படைகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு இராணுவப் வருவதற்கு முதலே காலனிய காலத்தில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்காற்றிய படைகள் இருந்திருக்கின்றன. கண்டி அரசனை எதிர்த்துப் போராடியவர்கள் முழுக்க முழுக்க ஆங்கில இராணுவத்தினர் அல்லர். அந்தப் படையில் வங்காளிகள், மாவா நாட்டவர்கள், ஏன் கறுப்பர்களும் இருந்தார்கள். இந்தக் கறுப்பர்கள் கோவாவிலிருந்த அடியைச் சந்தையில் வாங்கப்பட்டவர்கள். இவர்களை ஆளுநராக இருந்த பிரடரிக் நோர்த் வாங்கியிருந்தார். எழுநூறு கறுப்பர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். அன்றைய நாணய பதிப்பில் ஒருவருக்கு நாற்பத்தைந்து பவுண்டுகள் கொடுக்கப்பட்டன. ஆங்கிலேயர் சார்பாக காரங் முகமது நுரூடீன், காரங் சைவுடீன் என்ற இரண்டு யாவானியச் சகோதரர்கள் பங்குகொண்டார்கள்.

இந்த யாவானியர்கள் இன்றைய புவியியலில் இந்தோனேசியர்கள். கண்டி அரசர் இவர்களைத் தன் பக்கம் மாறும்படிக் கேட்டபோது இவர்கள் அசையவில்லை. கண்டி அரசனின் படையை நடத்தியவர் சங்கலு என்ற பெயர்கொண்ட இன்னுயொரு யாவா நாட்டினர். இதையும் சொல்லியாக வேண்டும். ஆங்கிலேயர் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு எதிராகப் போர் தொடுத்தபோது அவர்கள் படையில் யாவா தேசத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். சினிமாக் கட்டபொம்மன் பேசிய "எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா? நாற்று நட்டாயா?" என்ற விசுவரூப வசனங்களை இன்னுமொரு காலகட்டத்தில் பிறந்திருந்தால் இதைக் கேட்கும் அரிய வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்திருக்கும். கட்டாயம் கட்டபொம்மன் பக்கம் சேர்ந்திருப்பார்கள்.

பொதுவாக ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லை. அந்த நாட்களில் எல்லா அரசர்களும் கெட்டவர்கள்தான், உன்னதமானவர் என்று கொண்டாடப்படும் அசோகர் அரை அரக்கர் தன்னுடைய முதலாவது மனைவி தனக்கெதிராகச் சதிசெய்தபோது ஏதோ தீபாவளிப் கொளுத்துவது போல் தனது மனைவியை எண்ணெய்யில் எரித்தவர், சிங்களவர்கள் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை பட்டாசு அந்நிய எதிரியாகப் பார்த்தார்கள்; இலங்கைத் தமிழர்கள் இவர் நம்பவர் அல்லர் என்று ஆர்வம் காட்டவில்லை உண்மையில் தமிழர்களுக்கு நாயக்கர்கள் ஏதும் செய்ததாகத் தகவல்கள் இல்லை. இந்த இரு சாரார் புறக்கணிப்பில் வீடுபட்டுப்போன முக்கியத் தகவல் காலனிய எதிர்ப்பில் இவர் வகித்த பெரிய பாகம் 'Legacy <fVailence நூலில் என்ற Caraline Elkins சரித்திர ஆசிரியரின் கணக்குப்படி 19 ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 250 வருட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகளில் இவரின் வெறுப்பெதிர்ப்பும் ஒன்று. சின்ன அப்பு என்ற இலங்கைப் புரட்சியாளர் ஆங்கில ஆட்சியின் முதல் ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்தபோது கண்டி அரசரின் ஆதரவு இவருக்கு இருந்தது. முதலாம் கண்டிப் போரில் ஆங்கிலப் படைகளை விரட்டியடித்தவர் இவர்.

எந்த ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டாரோ அதே ஆங்கிலேயர்கள்தான் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கைதான அதே பெத மகாநுவரை கிராமத்தில் அவர் நினைவாக ஒரு ஞாபக நடுகல்வை 1908இவ் நிறுவியிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் வாகை சூடி, புதிய எஹலபொல், புதிய துட்டகைமூனு என்று தன்னை அறிமுகப்படுத்திய ராஜபக்ஷவின் சிலை இன்று அவமானகரமாக அழிக்கப்பட்டிருக்கிறது. சரித்திரம் தரும் மகத்தான பாடம்: மகிமையானவர் என்று ஒரு காலத்தில் விழா எடுக்கப்படுகிறவர் இன்னொரு காலகட்டத்தில் மாசுள்ளவராக மதிக்கப்படுவார்; தென்படுவார். இந்த வரியை கோத்தபய ஏன் மோடிகூடப் படிக்கப்போவதில்லை; இது அவர்களின் கனிவான கவனத்திற்கு.

பின் குறிப்பு: நான் கேட்ட கேள்விகளுக்கு மூக்குச் சுளிக்காமல் தாராளமாகக் கவ்வித் தகைமையோடும் நகைச்சுவையோடும் தகவங்களைப் பகிர்ந்துகொண்ட என்.சரவணனுக்கு நன்றி.

மின்னஞ்சல்: rssugi@blueyonder.co.uk

நன்றி - காலச்சுவடு ஜுன் 2022



 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates