Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா? பலவீனமா? - கௌஷிக்


நாட்டில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதால் அரசியல் கட்சிகள் விழித்தெழுந்துள்ளன. தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

மலையகத்திலும் இப்போது தேர்தல் காய்ச்சல் வைரசு பரவி வருகின்றது. “நீயா? நானா? பார்த்துவிடுவோம் ஒரு கை” என தலைவர்கள் சவால்விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்களை ‘உசுப்பி’ விடும் கைங்கரியத்தில் கட்சிகளுக்குள் உள்ள குட்டித் தலைவர்கள் மிக மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்களும் உள்ளடங்க வேண்டும் என துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பிளேன்டீக்குக் கூட வழியில்லாமல் உழன்று கொண்டிருந்த பலர் தலைவர்களின் தயவால் சபைகளில் தெரிவு செய்யப்பட்டு இன்று கோடீஸ்வரர்களாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். இதன் காரணமாக கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் தங்களையும் இணைத்துக்கொள்ள எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதை இத்தகைய பேர்வழிகள் விரும்புவதில்லை. கூட்டாகப் போட்டியில் இறங்கினால் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே இடம் கிடைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும் என தூபம் போடுகிறார்கள். கடந்த தேர்தல்களில் வெற்றிபெற முடியாதவர்கள் எதிரணி பலமாக இருப்பதை விரும்பவில்லை. எப்படியாவது ஐக்கியத்தை சீர்குலைத்துவிட பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், தனியாக போட்டியிடுங்கள் என்ற அறைகூவல் எழுந்துள்ளது. ஒத்தைக்கு ஒத்தை நில்லுங்கள். நீயா? நானா? பார்த்து விடுவோம். என சில தலைவர்களிடமிருந்து குரல் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையின் மூலம் ஒரு உண்மை தெளிவாகின்றது. தனித்தனியாக மோதினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எதிரணி கூட்டுச் சேர்ந்தால் நிச்சயம் அவர்களை தோற்கடிக்க முடியாது என பெருந்தலைகள் கருதுகின்றன. தேர்தல் வருவதற்கு முன்பே அவர்களுக்கு உதறல் எடுத்துவிட்டது.

இங்கே வேறு ஒரு விடயத்தையும் எண்ணிப் பார்க்கவேண்டும். தேர்தல் என்றால் என்ன? தொழிற்சங்கம் என்றால் என்ன? யார் யாரோடு மோதுவது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. முன்னாள் தலைவர் ஒருவர் கூட்டங்களில் பேசும் போது, “ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இது, சில்லறைக் கடைக்காரர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இந்த பெட்டிக்கடைகள் காலப்போக்கில் இல்லாமல் போய் விடும். இப்படி பல வருடங்களுக்கு முன் பேசியிருந்தார். பரதன் இராமனின் காலணியை வைத்து ஆட்சி செய்தான். அது போல் “நான் ஒரு கழுதையை நிறுத்தினாலும் அது தேர்தலில் வெற்றிபெறும்” என்று ஒரு தேர்தலின் போது பேசியிருந்தார். ஆனால் அப்போதே நிலைமை மோசமாகி லயம் லயமாக ஏறி இறங்கி வாக்கு கேட்கும் நிலை உருவானது.

கடந்த தேர்தலின்போது கூட்டு அணியினரின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. சுனாமி போல் வந்த அலையால் விளைந்த பயன் என்று கூறுகிறார்கள். எந்த அலையால் பெற்ற வெற்றி என்றாலும் அது வெற்றிதான். அந்த வெற்றியை எப்படித் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கூட்டுத் தலைவர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

வலுவான கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்வதென்பது எளிதான காரியமல்ல. கூட்டணிகள் வெற்றிபெற்றமைக்கு பல சம்பவங்களைக் கூறலாம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆளுமை செலுத்துவதற்குக் காரணம் 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மாபெரும் கூட்டணிதான். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழகத்தில் அசைக்கமுடியாத காங்கிரஸ் ஆட்சி நிலவிவந்தது. இந்தியாவின் பிரதமர்களை நியமிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக இருந்த காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியை இல்லாமல் செய்வதென்பது கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே இருந்தது. பேரறிஞர் அண்ணா தனது சாமர்த்தியத்தால் மாபெரும் கூட்டணியொன்றை அமைத்தார்.

நாத்திகவாதிகளான தி.மு.க வினர், பழுத்த ஆன்மீக வாதியான ராஜகோபாலாச்சாரியாரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும், பார்வார்ட் புளக் போன்ற பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கினர். தேர்தலில் அக்கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது. தனிப்பெரும்பான்மையோடு தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது. அண்ணா முதலமைச்சரானார். இருபது வயதும் நிரம்பாத பல மாணவத் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், சுப்ரமணியம் போன்ற தலைவர்களை கட்டுப்பணம் இழக்கச்செய்தனர். குப்புற விழுந்த காங்கிரஸால் இன்றுவரை மேலெழும்ப முடியவில்லை. சொற்ப இடங்களுக்காக தி.மு.கவை நாடிக்கொண்டு இருக்கிறது.

இந்த வரலாறு தெரிந்த காரணத்தினாலேயே கூட்டணிகள் குறித்து எதிரணிகள் கலங்கி நிற்கின்றன. எதிரியின் பலம் எதிரிக்குத்தான் தெரியும் என்பார்கள். ஆனால் கூட்டணிக் கட்சிகள் குழம்பி நிற்கின்றன. யானைக்கு தன் பலம் தெரியாது என்பதைப் போல இவர்களுக்கு தங்கள் பலம் என்ன என்பது புரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தனி ஆவர்த்தனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒன்றாகக் கூடி காட்சியளித்தவர்கள் இன்று பிரிந்து நிற்கிறார்கள்.

பெரும்பான்மையின அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூட்டணிக்குள் உள்ளவர்களுக்கு தரப்படுவதில்லை.

கடந்த தேர்தலின் போதே பெரும்பான்மை வாக்குகளைப்பெறுவதில் குத்து வெட்டுகள் நடந்தன.

அதிகப்படியான ஓட்டுக்களைப் பெறுபவரே கபிநெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியைப் பெறலாம் என்ற முனைப்பில் இறுதிநேர பிரசாரங்களில் அனல் பறந்தது. பணமும் பாதாளம் வரை பாய்ந்தது.
இந்த முறை அந்த வாய்ப்பைப் பெற்றுவிட ஒரு சாராரும், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு சாராரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

 ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடக்கூடாது’ என்பதே ஆதரவாளர்களின் ஏக்கமாக இருக்கிறது.

இதைத்தவிர தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க படும்பாட்டைப் போல இங்கும் ஒரு சாராரின் கட்சிக்குள்ளேயே உட்கட்சி மோதல்கள் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிகளும், ஓ.பி. பன்னீர்செல்வங்களும், டி.டி.வி.தினகரன்களும் கட்சிக்குள் கச்சை கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

கடந்த தேர்தலின் போது சாமானியர்களும் தலைமையைப் பிடிக்க முடியும், அமைச்சர்கள் ஆக முடியும் என்பதை மக்கள் நிருபித்தார்கள். ஐந்து வருடங்களுக்குள் அதனை இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆவலாகும். இவற்றைத் தெரிந்து கொண்டு செயலில் இறங்குவார்களா கூட்டணித் தலைவர்கள்?       

 நன்றி - வீரகேசரி

”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு! - என்.சரவணன்

தற்போதைய சிங்கள அரசியல் தலைவர்களில் சிங்கள பௌத்த இனவாத பிக்குகளை அன்று தொடக்கம் இன்று வரை பகிரங்கமாக சாடும் துணிச்சல் மிக்க ஒருவராக மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம். கல்கிஸ்ஸவில் ரோஹிங்கியா அகதிகளை இரக்கமின்றி விரட்டியடித்த பிக்குமாரை பௌத்த “சீருடை அணிந்த ரஸ்தியாதிகாரன்கள்” என்று திட்டுகிறார். அந்த துணிச்சல் இன்றைய பாராளுமன்றத்தில் எவருக்கும் இல்லையென்றே கூறலாம்.
சந்திரிகா அரசின் அரசியல் தீர்வு யோசனையை தோற்கடிப்பதற்காக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள அணைக்குழு அறிக்கை 1997இல் வெளியான போது அது வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் போகவேண்டிய ஒன்று என்று மங்கள சமரவீர சொன்னதற்காக அவருக்கு எதிராக பெறும் ஊர்வலமும்  கூட்டமும் நடத்திய மகாசங்கத்தினர் ”பத்த நிக்குஜ்ஜன கர்மய” என்கிற தண்டனையை அறிவித்தார்கள். அதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே.  அந்த சம்பவம் பற்றி சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் அன்றைய சரிநிகரில் "சிங்கள ஆணைக்குழுவும் மங்கள சமரவீரவும்" தலைப்பில் கோமதி என்கிற புனைபெயரில் எழுதிய கட்டுரை இது. காலப் பொருத்தம் கருதி மீண்டும் உங்களிடம்.

கல்கிஸ்ஸ சம்பவம் பற்றிய மங்களவின் உரை
''நீங்கள் பிக்குமார். அன்னச் சோறு சாப்பிடுவதும் மோட்சத்தை அடைவத­ற்கு பண (பௌத்த உபதேசம்) சொல்வதுமே உங்கள் வேலை. அன்று மன்னர்காலத்தில் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அப்படியே இன்று நான் பிரதிபண்ண பண்ணமுடியாது. அரசியலமைப்பின் படியே நான் ஆட்சி நடத்த முடியும். உங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவ­தென்பது அரசியலமைப்புக்கு விரோத­மானது. அரசியலமைப்புக்கு விரோத­மா­வதென்பது ஜனநாய­கத்துக்கு விரோதமானது. ஜனநாயகத்­துக்கு விரோதமாவதென்பது மக்களுக்கு விரோதமானது. அப்படியான ஒன்றை என்னால் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்”
இப்படி யார் கூறியிருந்தார் என யோசிக்கிறீர்களா? மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். தான் இப்படி கூறியிருக்கிறார். 1977இல் பதவிக்கு வந்து சில காலத்தில் பிக்குமார், தங்களுக்கும் பௌத்தத்­துக்கும் மன்னர்கள் அளித்த முக்கியத்து­வத்தை தற்போதைய அரசாங்கம் அளிக்கவில்லையென கூட்டம் கூடி அறிவித்த பின் அவர்களெல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை வைத்து உரையாற்று­கையிலேயே இவ்வாறு ஜே.ஆர். தெரிவித்திருந்தார். ஜே.ஆ­ரின் மக்கள் நேசிப்பு, ஜனநாயகம் என்பன ஒருபுறமிருக்க, பௌத்தத்து­க்கு அரசியலமைப்பு ரிதியாகவே அந்தஸ்தெல்லாம் வழங்கிவிட்டு அதே பௌத்த சக்திகள் தனது எதிரணி அரசியல் சக்திகளுடன் சேர்ந்து தனக்கு எதிராகப் புறப்பட்டு விடாதபடி­யிருக்க அதற்கு ஒரு எல்லைக் கோட்டைப் போட்டுவிட்டிருந்தார்கள்.

'1978ஆம் ஆண்டு அரசியலமைப்­பின் மூலம் பௌத்தமதத்தை அரசமதமாக மீண்டும் ஜே.ஆர். பிரகடனப்படுத்தியதானது வெறுமனே ஜே.ஆர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. 1972ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியிலேயே அது கொண்டு வரப்பட்டு விட்டதால் அதனை ஜே.ஆரால் நீக்கிவிடுவது என்பது சாத்தியமான­தல்ல என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.

பௌத்த மதத்துக்கு அரசியல­மைப்பின் மூலம் கொடுத்த முக்கியத்து­வம் என்பது சிங்கள பௌத்த சக்திகள் அரசையே தமது பொம்மையாக ஆட்டி வைக்குமளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. தமது பிழைப்பரசிய­லுக்கு பௌத்தத்தை எப்படி பயன்படுத்த­லாம் என ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசை தமக்கு ஏற்றாற் போல் எப்படி நடத்துவது என்பதில் சிங்கள பௌத்த தரப்பு வெற்றி கண்டு விட்டது. அதன் தொடர்ச்சிப் போக்குகளில் ஒன்றாகவே இன்று மங்கள சமரவீரவுக்கு நேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சிங்கள ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டியிலேயே போடப்படும் என தபால் தொலைதொடர் அமைச்சர் கூறியிருந்த கருத்துக்கு எதிராக இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எழுப்பியிருக்கும் பிரச்சினையும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடந்த இருவாரங்க­ளாக சகல தொடர்பு ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள விடயம். இது சமகாலத்தில் அரசுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் பிரதான பிரச்சினை­யாக­வும் ஆகியிருக்கிறதெ­ன்றால் மிகையில்லை.

சிங்கள ஆணைக்குழு:

1996 டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 'தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி” எனும் அமைப்பால் தொடக்கப்பட்டதே சிங்கள ஆணைக்குழு. இந்த கமிட்டி­யின் கீழ் 47 சிங்கள பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


காலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நேர்ந்த சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முக்கிய 14 தலைப்புகளில் அவ் அநீதிகளை ஆராய்வதாகவும் அது தெரிவித்திருந்தது.

அவ் ஆணைக்குழுவின் உறுப்பி­னர்கள் எல்லோரும் மிகவும் முக்கிய­மான­வர்கள். முன்னாள் பிரதம நீதியரசர், பேராசிரியர்கள் உயர் அரச அதிகாரிகள் என்போர் அடங்குவர்.

இவர்கள் மாவட்டம் மாவட்டமாகப் போய் சாட்சியங்களை விசாரித்தனர். பல அரசியல்வாதிகள், பொலிஸ், மற்றும் படை அதிகாரிகள் அரச உத்தி­யோகத்தர்கள், பௌத்த பிக்குமார், சிங்கள பௌத்த அமைப்புகள் எனப் பலர் தனிநபர்களாகவும், அமைப்பு­களாகவும் சாட்சியமளித்தனர்.

தமிழ், முஸ்லீம், மலையக மக்களு­க்கு எதிராக பலர் ஆணைக்குழுவின் முன் உரையாற்றினர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில் சாட்சியமளித்தனர்.(மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருனா சாட்சியம் அளித்திருந்தார்) தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்­துவம் வழங்கின ஆணைக்குழுவின் முன் நிகழ்த்தப்படும் உரைகளெல்லாம் அடுத்த நாளே சகல சிங்கள, ஆங்கில தினசரிகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்­பட்டு வந்தன.

ஆணைக்குழுவின் விசாரணைகள் எல்லாம் பௌத்த நிலையங்களிலேயே நடத்தப்பட்டன. இந்த ஆணைக்குழு சாட்சியங்கள் சகல தொடர்பு­சாதனங்களுக்கூடாகவும் வெளிவந்த­மை­யானது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கெதிராக பெரும் பிரச்சா­ரத்தையும் இனத்துவேஷத்தை­யுமே அதிகரிக்கச் செய்திருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே விதமான துவேஷக் கருத்துக்களும் வரலாற்றுப் பொய்க­ளும் சொல்லப்பட்டமையால் பேரினவா­தத்தை அது ஆழப்படுத்தியது.


ஏன் ஆணைக்கு?

ஆணைக்குழு அவசர அவசரமாக தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அரசாங்கம் முன்வைத்த உத்தேச தீர்வுப்பொதியை முறியடிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. அரசாங்கம் முன்வைத்து­ள்ள தீர்வுப்பொதி நாட்டை துண்டாடும் ஒன்று என்றும் சிங்கள நாட்டை பிரபாகரனுக்­கும், அஷ்ரப்பிற்கும், தொண்டமானுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சி என்றும் சிங்கள இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்து வந்தன.

பல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்­தின. படிப்படியாக இந்த எதிர்ப்புகள் எல்லாமே ஓரணியில் திரண்டன. ஏலவே வளர்த்து விடப்பட்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாத கருதியலும் , தொடர்பூடகங்கள், பௌத்த உயர் பீடம், அரசாங்கத்தை எதிர்க்கும் தொலைக்­காட்சிகள் என அனைத்தி­னதும் உதவிகளால் பேரினவாதம் பலமாக நிறுவனமயப்படுவது கடினமாக இருக்கவில்லை.

குறிப்பாக தேசிய பௌத்த மகாசங்கத்தினரின் ஆசி இந்தபேரின­வாத சக்திகளுக்குக் கிடைத்தது. அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்­கத் தொடங்கிய மகா சங்கத்தினர் ஒரு கட்டத்தில் 'தீர்வுப்பொதியை” வாபஸ் வாங்காது போனால் மகாசங்கத்தை விட்டு தாங்கள் விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்­தனர். அதன் படி சிலர் செய்தும் காட்டினர் அதனைத் தொடர்ந்து பல பாத­யாத்திரை, சத்தி­யாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என நடாத்தினர். இறுதியில் அரசு இறங்கிப்போய் அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் என்ன உடன்பா­டுகள் காணப்பட்டன என்பது வெளிவர­வில்லை. ஒரு சில மாதங்கள் அமிழ்ந்திருந்த இந்த எதிர்ப்புகள் அரசு புதிதாகத் திருத்திய உத்தேச அரசியல் திட்டத்தை முன் வைத்த­தோடு திடீரென மீண்டும் வெளிக் கிளம்பின. இதற்கு அரசு பேரினவா­திகள் கேட்டபடி அத்தனையும் அரசியல் திட்டத்தில் கொண்டிராதது காரணமாக இருக்கலாம். இறுதியில் இந்த ஆணைக்குழுவில் போய் முடிந்தது.


ஆணைக்குழுவின் அறிக்கை
ஆணைக்குழு தனது விசார­ணையை முடிக்கும் முன்னமே தனது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டியேற்பட்டதற்கு சில காரணங்­கள் உண்டு. குறிப்பாக அரசாங்கம் தனது உத்தேச அரசியல் திட்டத்தை பட்ஜட்டுக்கு முன்பு பாராளுமன்றத்­துக்கோ அல்லது நேரடியான சர்வஜன வாக்கெடுப்புக்கோ விடப்போவதாக அறிவித்திருந்ததே அதன் காரணம். எனவே தீர்வுத்திட்டத்தை முறியடிக்க அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டதே ''சிங்கள ஆணைக்குழுவின் இடைக்­கால அறிக்கை”

இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 17ந் திகதியன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. அறிக்கையை யானையின் மேல் வைத்து (பெரஹர) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பொரளை பௌத்த இளைஞர் காங்கிரசில் இருந்து பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த மகா சம்மேளனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பல பிக்குகள் உட்பட பெருந்திரளானோர் ஊர்வலமாக வர ஊர்வலத்தின் முன் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்தபடி (கண்டி நிலமே சீருடையில்) சிங்கள ஆணைக் குழுவின் செயலாளர் பத்மஷாந்த விக்கிரம சூரிய ஆணைக்­குழு அறிக்கையை ஏந்தியபடி வந்தார். கூட்டம் நிரம்பி வழிய பௌத்த சடங்கு முறைகளுடன் கூட்டம் நடந்தது. அறிக்கை சிங்களத்திலும், ஆங்கிலத்­திலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. (ஆங்கிலம்: ரூ.150 சிங்களம்: ரூ. 125) அறிக்கையை நீண்ட வரிசையில் நின்று வாங்கினார்கள். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய ஏனையோர் மற்ற கட்டிடங்களிலும், வெளி மைதானத்தி­லும், பாதையிலும் நின்று ஒலிபெருக்கி­யில் கேட்டுக்­கொண்டிருந்தனர். தொலைக்காட்சிப்­பெட்டிகள் ஆங்கா­ங்கு வைக்கப்பட்டு மண்டபத்தில் நடப்பவை நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆணைக்குழு அறிக்கையை வெளியிடு­வதற்கு செப்டம்பர் 17ம் திகதியை தெரிந்தெடுத்ததற்கு காரணம் அது அநகரிக்க தர்மபால­வின் சிரார்த்ததினம் என்பதே. அநகாரிக்க தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என சிங்கள பௌத்தர்கள் குறிப்பிடுவர். அவர் சிங்கள பௌத்த பேரினவாத­த்தை பரப்புவதில் எந்தளவு பங்காற்றி­யிருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டிய­தில்லை.

இந்தக் கூட்டத்திற்கு முன்னைநாள் எம்.பி. தினேஸ் குணவா;த்தன, ஸ்ரீமணி அத்துலத்முதலி மற்றும் அமைச்சர் தி.மு.ஜயரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் அமைச்சர் தி.மு.ஜயரத்ன அறிக்­கையை மகாசங்கத்தினரிடமிருந்து மேடையில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.

ஆணைக்குழுவின் உள்ளடக்­கத்தைப் பொறுத்தவரை­யில் அதில் முழுக்க முழுக்க தீர்வுத்திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சிங்கள பௌத்தர்களுக்கு பிரயோசனப்படக் கூடிய வகையில் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணக்கூடிய, சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையிலும் சட்டப் புத்தகம் போல் தொகுக்கப்பட்டிருந்தது.

அன்றைய பத்திரிகைகளில் வெளியீட்டுச் செய்தியை விளம்பரங்கள், வாழ்துக்கள், செய்திகள் என அமர்க்களப்படுத்தியிருந்தன.

அடுத்தடுத்த நாட்களில் அறிக்கை முழுவதும் தொடராக திவய்ன, லங்காதீப, ஐலண்ட் ஆகிய பத்திரிகை­களில் வெளிவரத் தொடங்கின. ஆணைக்குழு அறிக்கைக்கு ஆதர வாக பொதுவாக அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு எதிராக எந்த குரலும் இருக்கவில்லை.


வரலாற்றுக் குப்பைக்கூடைக்குள்

சிங்கள பௌத்த சக்திகளை பகைத்துக் கொள்ள பலர் விரும்ப­வில்லை. ஆனால் இது பற்றி ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியின­தும் அபிப்பிராயத்தை அறிய பலர் ஆர்வமாக இருந்தனர். செப்டம்பர் 25ம் திகதியன்று அமைச்சரவை தீர்மானங்­களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் கூட்டம் நடந்தபோது ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளரான மங்கள சமரவீரவிடம் கேட்டு விட்டார். அவரும் உணர்ச்சி வசப்பட்ட­வ­ராக ''சிங்கள ஆணைக்­குழுவின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போடப்படும்” என அறிவித்து விட்டார். அன்றைய தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் இது கூறப்பட்டதோடு அடுத்த நாள் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முன்பக்க முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.

தமது தீர்வுத்திட்டத்துக்கு எதிராகவே திட்டமிட்டு முன்னெடுக்­கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பதிலளிக்க வேண்டும் எனும் நோக்கம் தான் இருந்ததேயொழிய சிங்கள பௌத்த பேரினவாத போக்குக்கு பதிலளிக்கும் தைரியம் மங்களவிடம் இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்?பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? எந்த அளவில் இருக்கக் கூடும்?

மங்களவின் ”குப்பைக் கூடை” கதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பேரினவாத சக்திகள் காட்டத் தொடங்கின. பௌத்த மகா சங்கத்தினர், இவை மகா சங்கத்தி­னரை அவமதிக்கும் ஒன்றெனக் கூறி பிரச்சாரம் செய்தனர். மகா சங்கத்தினரை அவமதிப்பதென்பது சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தள­வில் சாதாரண விடயமல்ல. பலர் மங்களவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். (பார்க்க பெட்டி செய்தி) எதிர்ப்பு செய்தி சூடு பிடித்தது. செப்டம்பர் 30-ம் திகதியன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் 1500க்கம் மேற்பட்ட பிக்குமார்கள் உட்பட பலர் ஒன்று கூடி எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடாத்தினர். உள்ள புத்தர் சிலைக்கு பூசை செய்துவிட்டு அங்கிருந்த அநகாரிக்க தர்மபாலவின் சிலைக்­கருகில் அமர்ந்து தமது எதிர்பார்ப்­பாட்டத்தை நடாத்தினர்.

அவ் வார்ப்பாட்டத்தில் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகர, ஐ.தே.க பா.உ. சுசில் முனசிங்க, முன்னாள் பா.உ.க்களான தினேஷ் குணவர்தன, எஸ்.எல்.குண­சேகர, சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் தனது அறிக்கையை வாபஸ் பெற 42 மணிநேர கெடு கொடுத்தனர். எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மேலும் 72 மணி நேரம் வழங்கினர்.

அதே வேளை சகல விகாரைகளி­லும், மதச் சடங்குகளிலும் அமைச்சர் மங்கள சமரவீரவை நிராகரிக்கின்ற வகையில் ”பத்த நிக்குஜ்ஜன கர்ம” தண்டனையை விதிப்பதாக தேசிய பௌத்த மகா சங்கத்தினர் தீர்மான மெடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தின் படி ”மங்கள உட்பட நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சதிகாரர்க­ளிட­மிருந்து நாட்டை பாதுகாக்க தெய்வத்துக்கு முறையிட்டு தெய்வ சந்நிதிகளில் ஆயிரம் தேங்காய்கள் உடைக்கவும் தீர்மானித்துள்ளோம் என மகா சங்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோஹித்த தேரர் அறிக்கை வெளியிட்டார்.


"பத்த நிக்குஜ்ஜன கர்மய”

இந்த தண்டனையை மங்களவுக்கு மகா சங்கத்தினர் அளித்துள்ளனர். இதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ள­மாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்­கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே.

காசியப்பன் தனது தகப்பன் தாதுசேனனை கொன்றுவிட்டு அரசமர்ந்தவன். ஒருமுறை காசியப்பன் அன்னதானத்துக்கென பிக்குமாரை அழைத்திருந்தான். பிக்குமார் அமர்ந்தனர். அன்னதானத்தை வழங்க முற்பட்டபோது அன்னப் பாத்திரத்தை பிக்குமார் திருப்பிக் கொண்டனர்.  
"தந்தையைக் கொன்ற தனயனின் அன்னதானம் எமக்கு தேவையில்லை என்றனர்...”
மங்கள சமரவீர அளித்திருந்த ஒரு பேட்டியில் ” காசியப்பனுக்குப்பின் தண்டனை பெறுவது மங்கள சமரவீர என்று வரலாற்றில் பதிவாவதானது எனக்கு மகிழ்ச்சியே” என தெரிவித்­திருந்தார்.

அரசாங்க சார்பு பிக்குவான ”ஸ்ரீ ரோஹணபிக்கு பெரமுன”வின் செயலாளர் கெட்டமான்னே தம்மாலங்­கார தேரர் தினமினவில் வெளியிட்ட அறிக்கையொன்றில்...
”பத்த நிக்குஜ்ஜன கர்மய'வை அமைச்சருக்கு எதிராக எப்படிவிதிக்க முடியும். இன்று அன்னப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு எந்த பிக்கு போகிறார். அந்த தண்டனை விதிக்கப்பட்ட எவரேனும் அன்னமிட வந்தால் அவ் அன்னத்தை பெறாது பாத்திரத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். பௌத்த தர்மம் சொல்லிக் கொடுத்துள்ள 'நிக்குஜ்ஜன கர்மய' சரி என அவர்கள் எண்ணுவதாயின் பௌத்த தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளபடி பாத்திரமேந்தி பிச்சையெடுத்து பசி தீர்ப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்."என்கிறார்.

”மங்களவுக்கு நீங்கள் என்ன தன்டனை விதிப்பது இதோ பாருங்கள்” எனும் தொணியில் 4ஆம் திகதியன்று வெளியான ஏரிக்கரை பத்திரிகையான தினமின (அரச கட்டுப்பாடு பத்திரிகை) மங்கள சமரவீர பௌத்த சடங்குகள் செய்வதை பெரிய படமாக போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது.

விசாரமாகா தேவி ஆர்ப்பாட்டத்­துக்கு முன்னைய நாளான 29ஆம் திகதியன்றுஅமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. அதன் போது ஜனாதிபதி சந்திரிகா ”ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை வாபஸ் வாங்கி அந்த பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்” என கூறியதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்தி­ருந்தது. இதன் மூலம் அரசின் சரணடைவையே இங்கு வெளிப்படுத்து­வதைக் காணலாம். ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தாலும் அமைச்சர­வை­யைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் மங்களவிடம், ”அரசாங்க­த்தை பாதுகாக்கின்ற வகையில் அவ்வறிக்­கையை மங்களவின் 'சொந்தக் கருத்தாக­ஆக்கி' தனிப்பட்ட முறையில் தீர்க்குமாறு தொவித்ததைத் தொடர்ந்து மங்களவும் அதனை ஏற்றக்கொண்டுள்­ளார். அதன்படி மங்கள சமரவீர ஒக்டோபர் முதலாம் திகதியன்று பத்திரிகை அறிக்கையொ­ன்றை வெளியிட்டு தனது பேச்சு மகாசங்கத்தினரை புண்­படுத்தியிருந்­தால் அதற்காக தான் வருந்துவதாக தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்­தினர் அதனை ஏற்கவில்லை. சிங்கள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதோடு தீர்வுத்­திட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டுமென்றும் அறிவித்தனர். தொடர்ந்தும் தமது எதிர்ப்­பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அரசாங்கமோ இந்த எதிர்ப்புகள் தமது தீர்வுத்­திட்டத்துக்கு உலை வைக்கப்போகிறது எனப் பயந்ததில் வேறு சில பிக்குமாரையும் பௌத்த அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு மகாசங்கத்தினரின் நடவடிக்கைக­ளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. தொலைக்காட்சி செய்திகளில் அதிக நேரம் இந்த எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன் பௌத்த பிக்குமாரைக் கொண்டே பதிலளித்தது. ஒக்டோபர் 7ஆம் திகதியன்று விகாரமகா­தேவி பூங்காவினருகில் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஆதரித்து ஒரு பெரும் ஆர்ப்பாட்ட­த்தை அரச சார்பு பௌத்த அமைப்பு­கள் நடத்தின. பெருமளவில் இதற்குக் கூட்டம் இருந்தது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும், புத்தி­ஜீவிகளும் ”பேரினவாதிகளுக்கு எதிராக” ஒன்று சேர வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கத்தை ஆதரித்து வருவது வேடிக்கையாக இருக்கம் அதே நேரம் தீர்வுத் திட்டத்தையும் ஆதரித்து தமது வேலைத்திட்டங்களை அமைத்து வருகின்றன. இந்த கண்மூடித்தனமான போக்கு ஒட்டுமொத்தத்தில் பேரினவாதத்துக்கு பலி கொடுக்கும் ஒரு போக்கேயன்றி வேறில்லை.


பேரினவாதிகளின் நடவடிக்கை­களுக்கு மறைமுகமாக நிதியளித்து அதரவளித்து வருவதாக ஐ.தே.க சார்பு சிங்கள வார பத்திரிகையொன்று தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்­தக்கது. ஆர்ப்பாட்டத்­தில் கலந்து­கொண்ட ஐ.தே.க.வினர் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்கட்டி­வித்தையே. ”சிங்கள ஆணைக்குழு­வின் அறிக்கை பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கூறியிருப்பதைக் கொண்டு அதன் உள்நோக்கத்தை அறியலாம். ஐ.தே.க. இது பற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பூரணமாக உடன்பாடி­ல்லாவிடினும் ஒற்றையாட்சித் தன்மை மாறாதிருக்க வேண்டும். எனும் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு தமக்கும் உடன்பாடு உள்ளது” என ரணில் தெரிவித்திருப்ப­தையும் கொண்டு அதன் உண்மையான சுயரூபத்தை அறியலாம்.

அரசாங்கத்தைப் பொறுத்தளவில் பேரினவாதிகளின் இந்த எதிர்ப்புகள் ஒரு வகையில் தமக்கு வாய்ப்பானதே. ஏனெனில் ஏற்கெனவே அரசு சார்பற்ற அமைப்புகள், புத்திஜீவிகள் பலரையும் பேரின­வாதிகளைக் காட்டித்தான் தம்பக்கம் இழுத்துக்கொண்டது. அதே போல் பாராளுமன்ற தமிழ் அரசியல் சக்திகளையும் தம்பக்கம் இழுத்து­விடலாம். ”சின்ன, சின்ன பிழையிருந்­தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க விடமாட்டோம்.” எனும் பாராளு­மன்ற இடதுசாரிகளின் நிலைப்பாடும் இந்த வகையைச் சார்ந்ததே.

உண்மையில் பேரினவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்­திலும் எந்த வித அர்த்தமுமில்லையென கூறலாம். அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களுக்கும் எதையும் வழங்கிவிடாத பொதியையே முன்வைத்துள்ளது. அந்த வகையில் பேரினவாதிகளின் கடமையைத் தானே அரசாங்கமும் செய்துள்ளது.

பேரினவாதத்தை வளர்ப்பதில் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இருந்த கடந்த கால பாத்திரம் பாரியது. அரசாங்­கங்களே வளர்த்துவிட்ட பேரினவாதப் போக்கானது குறிப்பிட்ட வளர்ச்சியின் பின் அரசே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டாலும் கட்டுப்­படாதது மாத்திரமன்றி பேரினவாதமே அரசை வழிநடத்துமளவுக்கு சென்று­விடும். அந்த நேரம் அரசு கூட பேரினவாதத்திடம் மண்டியிட்டு, சமரசம் செய்துகொள்ளவும், சரணடையவும் நேரிடும் என்பதற்கு இந்த ஒரு சில போக்குகளே சிறந்த ஆதாரம்.

மங்கள சமரவீர லங்காதீபவுக்கு அறித்த பேட்டி இதற்கு நல்ல உதாரணம். அப்பேட்டியில்...
”சிங்கள ஆணைக்குழுவின் நோக்கமான சிங்கள மக்களக்கு நேர்ந்த அநீதிகளை ஒழிப்பது எனும் அதே இலக்கிலேயே அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது. யுத்தத்தினால் அதிகமாகக் கொல்லப்படுபவர்கள் எமது சிங்கள பௌத்த இளைஞர்களே. இது பற்றிய வருத்தம் இருப்பதாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று சிங்கள இனத்தைப் பாதுக்காக நாம் செய்யக்கூடிய உயரிய விடயம் யுத்தித்தினால் கொல்லப்படும் சிங்கள பௌத்த இளைஞர்களின் உயிர்களை பாதுகாப்பதே”
(லங்காதீப-5-10-97)
சிங்கள பௌத்த பேரினவாதத­்துக்கு நேருக்கு நேர் நின்று எதிர்­கொள்ள முடியாமல் தாஜா பண்ணு­வதையே இங்கு காண முடிகிறது.

இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு இதுவரை சிங்கள ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு அமைத்தால் அதன் எதிரொலி என்னவாயிருக்கும்? முதலில் அப்படி­யொன்றை அனுமதித்து விடுவார்களா? மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்­கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும்? அனுராதபுரத்தில் சிங்கள விசசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அமைக்கப்படாத சிங்கள ஆணைக்குழு­தென்னிலங்கை­யில் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அமைக்கப்படாத ஆணைக்குழு, 600க்கும் மேற்பட்ட பிக்குகள் சிங்களத் தலைவராலேயே டயருக்கு இரையாகிய போது அமைக்கப்படாத ஆணைக்குழு இப்போது எங்கிருந்து வந்து முளைத்தது?
இனவாதத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?



1915: கண்டி கலவரம்: (முடிவுரை) நூற்றாண்டு பாடம்! - என்.சரவணன்


“1915 – கண்டி கலவரம்” என்கிற நூல் வெளிவந்திருக்கிறது. நூற்றாண்டுக்கு முன்னர் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த கண்டி கலவரம் பற்றி 2015இல் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு அந்த நூல். அக்கலவரம் பற்றி 400 பக்கங்களில் பல உண்மைகளை முதல் தடவையாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான ஆதாரங்களை நூலாசிரியர் என்.சரவணன் வெளியிட்டுள்ளார்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வேர்கள் எங்கெங்கிருந்து உருவானது, அதன் நீட்சி, வளர்ச்சி, என்பன பற்றியும் அது எப்படி 1915ஆண்டு கலவரத்துக்கு வித்திட்டது என்பது பற்றியும் பின்னர் அதனை நசுக்கும் சாட்டில் ஆங்கிலேயர்களால் பிறப்பிக்கப்பட்ட இராணுவ சட்டம் கலவரத்தை விட மோசமான அழிவுகளை எப்படி உருவாக்கியது என்பது குறித்தும் அலசப்பட்டுள்ளது. தேசியவாதம் எப்படி சிங்கள பௌத்த தேசியவாதமாக பரிமாணம் பெற்று அது பேரினவாதமாக பரிணாமம் அடைந்தது பற்றி அழகாக விளக்கப்பட்ட இந்த நூலில் ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளன. அடுத்த மட்ட ஆய்வுக்கு நிறைய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றே கூறலாம். அந்த நூலில் வெளிவந்த இறுதி அத்தியாயம் இது.

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க நலன்களை சமரசத்துடன் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் பேணிக்கொள்ள முடியும் என்று நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கியது 1915 கலவர நிகழ்வுகள்.

முதலாம் உலக யுத்தத்தில் பிரித்தானியா எதிர்கொண்ட பீதி என்பது தமது ஏகாதிபத்திய இருப்புக்கே ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்தது. அந்த சர்வதேச கெடுபிடிக்கு முன்னால் இலங்கையில் இருந்த தமக்கு சாதகமான சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் எம்மாத்திரம். ஆக அன்றைய உலக யுத்த கால உடனடி நிலைமைகளின் கீழ் இத்தகைய வர்க்கப் பிரிவினரை விட்டுகொடுக்கவும், விலைகொடுக்கவும் தயாராகவே இருந்தது என்றே கூற வேண்டும்.

இதனை உள்ளூர் சுதேசிய அரசியல் சக்திகள் முன்னெச்சரிக்கையாக விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிக்கொள்ள விருப்பமும் இருக்கவில்லை.
1915 கலவரமும் அதன் பின் விளைவுகளும் உள்ளூர் அரசியல் தலைவர்களின் அரசியல் அசட்டைத்தனத்துக்கு கிடைத்த பெருத்த அடி. இந்த படித்த மேற்தட்டு பூர்ஷுவா வர்க்கம் இன, மத, அரசியல், சாதி பேதமின்றி ஆங்கிலேயர்களின் இராணுவச் சட்ட நடவடிக்கைகளையும், அதன் தண்டனைகளையும் எதிர்த்து நின்றதுடன் பரஸ்பரம் ஆதரவையும், உதவிகளையும் செய்து உணர்வுபூர்வமாக கைகோர்த்துக்கொண்டார்கள். இந்த கலவரம் அனைவரையும் இலங்கையர்களாக ஒன்றிணைவதன் அவசியத்தை உண்டுபண்ணியது.

முதற் தடவையாக இனத்தலைமைகள் ஐக்கியப்பட்டன. இலங்கையின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றுபட்ட தேசிய அரசியல் இயக்கத்தின் தேவையை வலுவாக உணர்த்தியது.

அதன் விளைவாகவே இலங்கை தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பிலிருந்த சேர் பொன் அருணாச்சலம் தலைமையிலான குழு இங்கிலாந்துக்கு சென்று காலனித்துவ செயலாளரைச் சந்தித்து அரசியல் சீர்திருத்த யோசனைகளை முன்வைத்தனர். அதன் விளைவாகவே மனிங் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவே படிப்படியாக அடுத்தடுத்த சீர்த்திருத்தங்களையும் நோக்கி நகர்த்தியது. சுதேசிகளின் பேரம் பேசும் ஆற்றலை வளர்த்தெடுத்தது. ஈற்றில் காலனித்துவத்திலிருந்து இலங்கையின் விடுதலையை இலகுபடுத்தியது.

முஸ்லிம் - சிங்கள முறுகல்
இன்றுவரை இந்தக் கலவரத்தைக் காட்டி சிங்களவர்களும், இலங்கைக்கும் முஸ்லிம்கள் அச்சுறுத்தலான இனம் என்கிற புனைவை பரப்பிவரும் சிங்களப் பேரினவாதத் தரப்பினர் 1915 நிலைமைகளைப் பற்றி பிழையான ஐதீகங்களையே நிறுவி வந்துள்ளனர். நிறுவி வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தினர் இன்று முஸ்லிம்களாக ஒரே அடையாளத்தின் கீழ் இருப்பதைப் போல அன்று இருக்கவில்லை என்பதையும், முஸ்லிம்களுக்குள்ளேயே அன்று இருந்த வேறுபாடான பிரிவினர் பற்றியும், அவர்களின் தனித்துவமான தன்மைகள் பற்றியும், பின்புலத்தைப் பற்றியும் உரிய வகையில் சிங்கள தேசியவாதிகள் சிங்கள சமூகத்துக்கு எடுத்துச் சொல்வதில்லை. அப்படி சொல்லாமல் இருப்பது அவர்களின் இன்றைய இனவாத போக்குக்கும், இருப்புக்கும் சாதகமானது.

கண்துடைப்பு விசாரணை
ஒரு நீதியான முழு விசாரணை கோரிய இலங்கை மக்களுக்கு அந்த விசாரணை மறுக்கப்பட்டு வெறும் கேகாலை சம்பவங்களை விசாரிக்கும் ஆணைக்குழுவாக குறுக்கப்பட்டது. அதுவும் நீதியற்ற நீதி விசாரணையாக நடந்து 6 பேர் மட்டும் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை கூட வெறும் பதவி விலத்தல்களாக மட்டுமே சுருங்கியது. இந்தக் கேலிக்கூத்து வெறும் கண்துடைப்பு என்பதை உலகமே அறிந்தது. வெறும் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்களையெல்லாம் முறையான விசாரணையே இன்றி தான்தோன்றிதனமாக வீதிகளில் பகிரங்கமாக சுட்டுத் தள்ளியவர்கள் அவர்கள். ஆனால் அவர்களின் மீது நீதித்துறை விசாரணை செய்து மென்மையான தண்டனையை அளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியளித்து விட்டதாக கைகளைக் கழுவிக் கொண்டது ஆங்கில அரசு.

இராணுவச் சட்டம் ஏற்படுத்திய அகோரம்; சிங்கள – முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசலைப் பற்றிய ஆராய்வுகளின் முக்கியத்துவத்தை பின்னுக்குத் தள்ளியது என்றே கூறவேண்டும். ஏனென்றால் கலவரப் பாதிப்புகளை விட மோசமான பாதிப்புகளாக இருந்தது இராணுவச் சட்டத்தின் கீழ் நிகழ்ந்த அரச அட்டூழியங்கள் தான். இராணுவச் சட்டம் கொடுத்த பீதியோடு ஒப்பிடும் போது கலவரம் கொடுத்த பீதி சொற்பமே என்று கூறவேண்டும்.

ஆக இறுதியில் இராணுவ சட்டத்தின் கீழ் நிகழ்ந்த கொடுமைகளை விசாரிப்பதில் செலுத்தப்பட்ட கவனம்  இந்த கலவரத்துக்கு அடிப்படை காரணமாக இருந்த இனத்துவ முறுகளுக்கான காரணிகளை முறையாக ஆராயப்படவுமில்லை. அதற்கான தீர்வு தேடப்படவுமில்லை. அதுவே ஈற்றில் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கப்பட்ட இனக்குரோதத்துக்கு வழிவிட்டது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக இனவெறுப்புணர்ச்சிக்கு அடித்தளமிட்டு, அப்படியே பேணி பாதுகாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டு தலைமுறை தலைமுறைக்கும் கடத்தப்பட்டு இன்று ஆபத்துமிக்க  சிங்கள – முஸ்லிம் கெடுபிடி நிலைமையை எஞ்சச் செய்திருக்கிறது.

அதுமட்டுமன்றி சிங்கள பௌத்த பெரும்போக்குவாதம் கடந்து போன அந்த நூற்றாண்டுக்குள் தன்னை சரி செய்வதற்குப் பதிலாக அடுத்தடுத்த கலவரத்துக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டது. அதற்கான ஒரு அரசையும் தனக்கு நிறுவிக்கொண்டது. சிங்கள – பௌத்தம் நிறுவனமயப்பட்டு, மக்கள் மயப்பட்டு தான்தோன்றித்தனமாக சிங்கள- பௌத்தர் அல்லாத ஏனைய சகல இனங்களின் மீதும் பாய்ந்துகொண்டே இருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாத சித்தாந்தம், படிப்படியாக பல்வேறு பரிமாணங்களில் பரிணாமமடைந்து இனவாதமாகவும், பேரினவாதமாகவும் ஈற்றில் பாசிசமாகவும் வடிவம் எடுத்துவிட்டதன் நீட்சியை இந்த வழித்தடத்திலிருந்தே ஆராய வேண்டும்.

இந்த சிக்கலை சித்தாந்த ரீதியில் கண்டடைந்தால் மாத்திரமே அதற்கான தீர்வை நோக்கியும் நகர முடியும். மாறாக நபர்களாக, அமைப்புகளாக, கட்சிகளாக, அரசாங்கங்களாக சுருக்கி விட்டால் அதனைத் தாண்டி உறுதியான தீர்வை கண்டடைய முடியாது.

அப்படி நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை பாதுகாக்க மறைமுகமாக ஒரு அரசு இருப்பதால் அரச இயந்திரம் சகல மட்டத்திலும் அந்த சிந்தாந்தத்தை பாதுகாத்து, வளர்த்தெடுத்து வருகிறது. இன்றைய கல்வி முறை, நீதி - நிர்வாகத்துறை, ஆட்சித்துறை உள்ளிட்ட அத்தனையிலும் இதன் வகிபாகத்தையும், வியாபகத்தையும் நாம் நேரடியாக காண முடியும்.

ஒரு பல்லின, பன்மத, பன்மொழி தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருப்பது இந்த நிறுவனமயப்பட்ட சித்தாந்தமே.

கலவரங்களாலேயே கறை படிந்த அரசியல் வரலாற்றை கடந்து வந்த நம் தேசம் இனியும் தாங்குமா? நூற்றாண்டு அனுபவம் சொல்லித்தந்த பாடம் அது.

தமது கட்சிகளை பலப்படுத்தும் மலையகத் தலைமைகள் - என்னென்ஸி


தேசிய கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் தத்தமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதை அண்மைக் காலமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தேசிய கட்சிகள் இவ்வாறான கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

தற்போதைய நல்லாட்சி அரசில் பிரதான கட்சிகளாக ஸ்ரீல.சு.கவும், ஐ.தே.க.வுமே இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியில் பங்கு கொண்டிருந்தாலும், தத்துமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இரண்டு கட்சிகளுமே தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்திவரும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. இரண்டு கட்சிகளுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் என்பவற்றை இலக்காகக் கொண்டும், தனித்தனியாக போட்டியிட்டு பெரும்பான்மை பலத்தை அடைவதை கருத்திற் கொண்டுமே இவ்வாறு செயல்படுகின்றன.

மலையகத்திலும் கூட இதுபோன்றதொரு நிலைமையே காணப்படுகின்றது. மலையகத்தின் பிரதான கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சிகளைப்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடியும்.மலையகத்தில் பிரதான கட்சிகிளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன செயற்பட்டு வருகின்றன.
இ.தொ.கா.தனியாக செயற்பட்டுவரும் அதேவேளை, தொ.தே.ச., ம.ம.மு., ஜ.ம.மு, ஆகிய மூன்றும் ஓரணியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

அந்தவகையில், மலையகக் கட்சிகள் அனைத்தும் பல்வேறுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர் அமைப்புகளை உருவாக்குவது, பழைய இளைஞர் அமைப்புகளை மறுசீரமைப்பது, புதிய அங்கத்தினர்களை சேர்த்துக் கொள்வது பிற கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வது போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றன. இது காலத்துக்குக்காலம் நடந்து வருவது வழக்கம்தான்.

ஆனால், தற்போது இதில் வேகம் காட்டப்படுகின்றது.இதற்குக் காரணம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தான் என்பதை மிக இலகுவில் புரிந்து கொள்ளமுடியும்.மலையக மக்கள் முன்னணி நீண்டகாலத்திற்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் தனது இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது.

மலையக மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் பெ.சந்திரசேரன், மறைந்த வி.டி.தர்மலிங்கம், பி.ஏ.காதர், ஏ.லோறன்ஸ் மற்றும் சரத் அத்துக்கோரள போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்ததாக மலையக தொழிலாளர் முன்னணி, மலையக இளைஞர் முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி போன்ற துணை அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

மலையக தொழிலாளர் முன்னணி தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் மலையக மக்கள் முன்னணி அரசியல் உரிமைகளுக்காகவும், இளைஞர் முன்னணி இளைஞர் அபிவிருத்திக்காகவும், ஆசிரியர்களின் உரிமைகளுக்காக ஆசிரியர் முன்னணியும் தோற்றுவிக்கப்பட்டாலும், இவற்றுள் முதலிரண்டு அமைப்புகள் மாத்திரமே தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்டிருந்தன.

எவ்வாறாயினும், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் காலத்துக்குப் பின்னர் புதிய தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இளைஞர் முன்னணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தமாநாட்டில் உரையாற்றிய ம.ம.மு. தலைவர் வே.இராதாகிருஷ்ணன், ‘இளைஞர்களை ஒன்றிணைத்து மலையகத்தில் ஒருசிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நடத்தப்படுவதாகவும், மாறாக இதனை அரசியிலை நோக்காகக் கொண்ட ஒரு நிகழ்வாகக் கருதவேண்டாம்.மலையக இளைஞர், யுவதிகளை நல்வழிப்படுத்துவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் ம.ம.மு. தலைவர்களுடன் அதிதிகளாக பிரதியமைச்சர் அமீர் அலி, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் மலேஷியப் பிரமுகர்கள், கொரிய இளைஞர்கள் என பலரும் அழைக்கப்பட்டுக் கலந்துகொண்டனர்.

மலையகத்தைச் சாராத கட்சிகளின் பிரமுகர்கள், தலைவர்கள், எம்.பி.க்கள் போன்றோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட போதும், மலையகத்தின் ஏனைய கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை. குறிப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய கட்சிகளான தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்களையோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளையோ காணக்கிடைக்கவில்லை.

இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லையா அல்லது முரண்பாடுகள் காரணமா என்பன புரியவில்லை.  இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.  

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், ‘மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் பக்கச்சார்பின்றி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்றத்தின் கெப்டன்களாக பதவியேற்றுள்ள இளைஞர்களின் கைகளிலும், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் கைகளிலுமே அது தங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரமுகர்களுடன், ஸ்ரீல.சு.க.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.

அதேவேளை ஏனைய மலையகக் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒவ்வொரு மலையகக் கட்சியும் தனித் தனியாக தங்களது கட்சிகளையும், இளைஞர் அமைப்புகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கூடுமானவரை தோழமைக்கட்சிகள் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றதாகவே சந்தேகிக்கவேண்டியுள்ளது.  
சில மாதங்களுக்கு முன்னர், தமிழ் முற்போக்குக் கூட்டணியிலுள்ள தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிடப்படுவதாக சில முக்கிய பிரமுகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

அதேபோன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இப்போது அதையெல்லாம் கைவிட்டுள்ளதாகவும், தத்தமது கட்சியை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் மலையக மக்களிடையே ஒரு நம்பிக்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்படுத்தியது. 7 பேர்ச் காணி, தனிவீடு, கல்வி, சுகாதாரம் (வைத்தியசாலை), வீதி அபிவிருத்தி, நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் என பலவற்றைக் கூறலாம். ஒன்றுபட்ட சக்தி, மக்கள் ஆதரவு, அரசியல் தூரநோக்கு என்பவை காரணமாகவே இவையெல்லாம் சாத்தியமானது.

தனித்தனியாக செயல்பட்டிருந்தால் எதுவும் கிடைத்திருக்காது. கிடைக்கவும் மாட்டாது. இதனை கருத்திற்கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்பட வேண்டும்.

அதுவே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பாக அமையும். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள பங்காளிக்கட்சிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்வுகள் திறப்பு விழாக்கள் என்பவற்றில் முன்னெல்லாம் சகல தலைவர்களும் அல்லது முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.

ஆனால் தற்போது அவ்வாறு காணப்படுவதில்லை. எனினும் ‘பெயருக்காக’ யாராவது ஒருவரை அனுப்பி வைக்கும் நிலைமையே காணப்படுகிறது.இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி மலையக மக்களிடம் எழுந்துள்ளது. கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் என்பவற்றில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பு. அவ்வாறிருந்தால், அது உடனடியாகக் களையப்பட வேண்டும். ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்தவருட முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியமாகும்.

நன்றி - வீரகேசரி

'20' க்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றது - பி. பார்த்தீபன் -


"தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கியதேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தபோதும் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றபோதும்  தேவையான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக்கொடுத்து பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சாத்தியமான சூழலை உருவாக்க பின்னிற்கவில்லை."


"தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களுக்கு எல்லை மீள் நிர்ணயமோ அல்லாது தொகுதிவாரி முறையோ பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்ற நிலைப்பாட்டில் அதன் மூலம் பாதிப்படையக்கூடிய சகோதர முஸ்லிம் , மலையக மக்களுக்காக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் எத்தகைய அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் பரபரப்பாகக் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம், அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை என்பன தொடர்பில் ‘ஞாயிறு’ தினக்குரலுக்கு அளித்த பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்தார். 
அவரது பேட்டியின் விபரம் வருமாறு:

கேள்வி: அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையின் தேர்தல் முறை மாற்றம் முன்வைக்கப்ப டவுள்ளதாக  இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே நீங்கள் தினக்குரல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தீர்கள். தற்போது 20 ஆவது திருத்தம் தொடர்பில் பேசப்பட்டது. ஆனால், அது மாகாணசபையின் ஆயுட் காலம் பற்றியதாகவுள்ளது இது பற்றி கூறுங்களேன்....

2015 ஜனவரி  8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் 19வது திருத்தம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பில் பேசப்பட்டது. அதாவது ஒரு ஜனாதிபதியாக இரண்டு தடவைக்கு மேல் போட்டியிட கூடிய வாய்ப்பை வழங்கிய 18 வது திருத்ததத்தை இல்லாமலாக்கி நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய இன்னும் சில அதிகாரங்களைக் குறைத்து அதனை பாராளுமன்றத்துக்கு வழங்குவதே 19 ஆவது அரசியலமைப்பாக அமைந்தது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து வெற்றிபெறச்  செய்வதற்கு அப்போதைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிறுவப்பட்ட புதிய அரசு போதிய பலம் கொண்டதாக இருக்கவில்லை. 

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் மைத்திரி ஆதரவு அணியினரின் ஆதரவுடனேயே 19வது திருத்தத்தை றிறைவேற்றக்கூடிய சூழல் இருந்தது. எனவே 19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவது எனில் 20 ஆவது திருத்தமாக 'தேர்தல் முறையை மாற்றுவது' எனும் திருத்தமும் நிறைவேற்றப்படல் வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது. அதற்கு உடன்பாடு எட்டப்பட்டே 19 வது திருத்தம் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 

அதே நேரம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வரும் நோக்கோடு பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. சிறுகட்சிகள், சிறுபான்மை கட்சிகளின் அரங்கம் என்ற ஒன்று கூட உருவாகியிருந்தது. இந்த காலப்பகுதியிலேயே புதிய தேர்தல் முறை குறித்தும் 20 வது திருத்தம் குறித்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் கூட வெளியானது.  அதேநேரம் 100 நாள் ஆட்சிக்காலம் 100 நாட்களைக்கடந்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டிய காலகட்டமும் வந்த நிலையில் 20வது திருத்தம் செய்து தேர்தல் முறையை மாற்றாமலேயே நடைமுறையில் உள்ள விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தலை நடாத்துவது என்றும் தேர்தலுக்கு பின்னதாக அமைகின்ற அரசாங்கத்தில்  தேர்தல் முறையை மாற்றுவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. 

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தீவிரமாக இடம்பெற தேர்தல் முறைமை மாற்றத்தையும் அதனூடாகவே கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. ஒரு புறம் புதிய அரசியலமைப்புப் பணிகள் தாமதமடைந்த அதேவேளை கலைக்கபட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தக் கோரிய கோரிக்கைகளும் வலுப்பெறவே எல்லை மீள்நிர்ணய சிக்கல்களை சரி செய்து விகிதாசாரமும் தொகுதிவாரியும் இணைந்த கலப்பு முறையை தேர்தல் முறையாக அறிமுகம் செய்யும் பொருட்டு 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தத்தை நிறைவேற்றி புதிய தேர்தல் முறைமை ஒன்றில் நடாத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேபோல மாகாணசபைகள் சில கலைக்கப்பட வேண்டிய காலம் நெருங்கியபோது அதற்கும் புதிய முறையில் தேர்தலை நடாத்தும் நோக்குடனும் கூடவே ஒரே நாளில் அனைத்து மாகாண சபைக்குமான தேர்தலை நடாத்துவது என்பதையும் இணைத்து 20ஆவது திருத்தம் என்ற ஒன்றை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்தது. இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என நீதிமன்றம் தீர்பப்ளித்த நிலையில் 1988 ஆம் ஆண்டு மாகாண சபைகள் சட்டத்தினை திருத்துவதன் ஊடாக தற்போது மாகாண சபைகளுக்கும் கலப்பு முறை தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இப்போது எஞ்சியிருப்பது நாடாளுமன்ற தேர்தல்கள் முறையை தற்போதைய முறையில் இருந்து மாற்றியமைப்பதே. அதனை புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக கொண்டு வரவேண்டும் என்பதே சிறுகட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இடையில் ஏதேனும் மாற்றுவழிகள் கையாளப்படுமா என்கிற சந்தேகங்களும் இல்லாமல் இல்லை.  அப்படி இருக்கக்கூடிய ஒரே மாற்றுவழி 20வது திருத்தம் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விடயம்தான். 

இப்போது வெவ்வேறு மாற்று வழிகளில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டம் திருத்தப்பட்டு கலப்பு முறை அறிமுகப்படுத்தப் பட்டுவிட்ட நிலையில், தேர்தல் முறை மாற்ற நடவடிக்கைகளில் அதிக அழுத்தத்தை பிரயோகித்து ஏதேனும் வடிவத்தில் அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஜனாதிபதி மைத்திரியின் அணியான சுதந்திரக்கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தை கையாளக்கூடிய மாற்றுவழியொன்றாக 20 ஆவது திருத்தம் என்ற ஒன்றை முன்வைக்கும் சாத்தியம் இல்லாமல் இல்லை. 

கேள்வி: இப்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் முறைமையை திருத்தும் யோசனைகள் உள்வாங்கப்ப ட்டுள்ளனவா?

ஆம், ஏற்கனவே குறிப்பிட்டவாறு அந்த யோசனைகள் அறிக்கையில் உள்வாங்கப் பட்டுள்ளன. அதேநேரம் இந்த அறிக்கையின் உப இணைப்புகளாக சேர்க்கப்பட்டுள்ள பிரதான கட்சிகளினதும் கூட்டணிகளினதும் முன்மொழிவுகளில் வெவ்வேறு வகையான நாடாளுமன்ற தேர்தல் முறைமைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மாகாண சபைகளுக்கும் கலப்பு முறை தேர்தல்கள் உறுதியாகிவிட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கும் இதே முறை கொண்டுவரப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தெரிகின்றன. ஆனால்,  கலப்பு முறையாயினும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் அதனை கையாள்வதில் வெவ்வேறு வீதாசாரங்கள் பேணப்படுகின்றன. எனவே நாடாளுமன்ற தேர்தல்கள் இதுபோன்ற ஏதாயினும் மாற்று ஏற்பாடுகள் ஊடாக பிரதிபலிக்க முடியும். 

இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கபட்ட நாளில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவையில் ஆற்றிய உரையில் புதிய அரசியலமைப்பு மாற்றங்களின் ஊடாகவே நாடாளுமன்ற தேர்தல்களை மாற்றுவதற்கு உடன்படுவோம் என்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைகளுக்கும் செய்யப்பட்டது போன்ற மாற்றுவழிகளுக்கு இடமளிக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரக்கட்சியும் கலப்பு முறை தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சிறு கட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் நிலைப்பாடு எவ்வாறு அமையப்போகின்றது என்பதனை அரசியல் நகர்வுகளின் ஊடாகவே தீர்மானிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 

கேள்வி: உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் இரண்டிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. இவையிரண்டின்போதும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் செயற்படும் சூழ்நிலை நிலவியதா?

ஒவ்வொரு கட்சியாக எடுத்து நோக்கினால் ஒவ்வொன்றும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் நின்றே மேற்படி தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேற்படி தேர்தல் முறையில் தொகுதிவாரி என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போதைய மாவட்ட விகிதாசார முறையில் இருந்து மாற்றம் பெற்றாலும் தொகுதிகளை அமைக்கும்போது தங்களுக்கு பாதகம் ஏற்படாது என்கின்ற நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு அலட்சியப் போக்குடனேயே இதனை எதிர்கொண்டுள்ளது எனலாம். 

வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் அவர்கள் செறிவாக வாழ்கின்ற நிலையில் பிரிக்கப்படுகின்ற தொகுதிகளில் தங்களது பெரும்பான்மை அதிகமாக இருக்கும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடனும் சில பகுதிகளில் சிங்கள மக்களுடன் தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்ள நேரிடும் என்பது தொடர்பாகவோ தற்போது வடக்கில் பல்வேறு குடியேற்ற முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது பின்னாளில் தொகுதிகளை எவ்வாறு பாதிக்கும் என்ற எதிர்வுகூறல்கள்களோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

முஸ்லிம் கட்சிகளைப்பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக தென்கிழக்கு பகுதியில் செறிவாகவும் ஏனைய பகுதியில் சிதறியும் வாழ்வதன் காரணமாக மிகுந்த அக்கறையோடு இந்த தேர்தல்கள் திருத்தத்தை உணர்ந்து செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளார்கள். மலையக கட்சிகளின் நிலைமையும் இதனை ஒத்ததுதான். நுவரெலியா மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய மாவட்டங்களில் சிதறியும் வாழ்வதனால் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள அதிக அக்கறையுடன் செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இதில் முஸ்லிம் கட்சிகளிடையே காணப்பட்ட கருத்தொற்றுமை செயற்பாட்டு ஒற்றுமை போன்று மலையகக் கட்சிகளிடையே கருத்தொற்றுமையும் செயற்பாட்டு ஒற்றுமையும் காணப்படுகின்றது என்று சொல்வதற்கில்லை. வெவ்வேறு அரசியல் கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற போதும் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் இது விடயத்தில் ஓரளவு இணக்கப்போக்குடன் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக கலந்துகொண்டு தீர்மானங்களை எடுத்து வருகின்றன. இங்கு இவர்களின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வலுசேர்ப்பதாகவுள்ளது.

 ஆனால் மலையக நிலையமையில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படும் நாங்கள் ஆறு உறுப்பினர்கள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து ஏதேனும் பொது தீர்மானங்களை எடுத்து அழுத்தங்களை கொடுக்க முன்வருகின்ற நிலையில் ஏனையவர்களின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது. இதில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஸின் நிலைமை வேறு. அவர் ஐக்கிய தேசிய கட்சி எடுக்கும் நிலைப்பாட்டுக்கு உடன்படவேண்டிய நிiலையில் உள்ளார். மறுபுறம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த இரண்டு சந்தரப்பங்களிலும் எத்தகைய கருத்து நிலைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை. ஆனால், பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். 

குறிப்பாக மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்போது முஸ்லிம் கட்சிகளின் 12 உறுப்பினர்களும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்களும் இறுதிநேரம் வரை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக்கொடுத்தோம்.  கலப்பு முறையில் 50க்கு 50, எல்லை மீள் நிர்ணய அறிக்கைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வலியுறுத்தல், எல்லை மீள்நிர்ணய குழுவில் அனைத்து இனங்களினதும் பிரதிநிதிகள், இனத்துவ சனத்தொகையில் குறைந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்குதல் அதன்போது இன மத அடையாளங்களைக் கவனத்தில் கொள்ளுதல் போன்ற முக்கியமான திருத்தங்களை நாம் வலியுறுத்திய போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்விதத்திலும் இது தொடர்பில் சக சிறுபான்மை இன கட்சிகளிடமோ அல்லது எமது கூட்டணியிடமோ தமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோ அல்லது சபையில் உரையாற்றி கருத்துக்களைத் தெரிவிக்கவோ இல்லை. 

அதே நேரம் அவர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் என சொல்லியிருந்தேன். இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்காவிட்டாலும் இவர்கள் ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரிகின்றது. ஆனால் சுதந்திரக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானபோதும் கூட ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தீர்மானம் எடுப்பதற்கு பூரணமாக ஒத்துழைத்ததை அவதானிக்க முடிந்தது. அவர் ஜனாதிபதி சார் சுதந்திரக்கட்சியின் சார்பானவராக உள்ளபோதும் இது விடயத்ததில் அவர் அந்த அணியின் சார்பானவராக இருக்கவில்லை. 

இன்று தமிழ்முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தபோதும் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றபோதும் தேவையான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுத்து பிரதிநித்தித்துவத்தை உறுதிப்படுத்தும் சாத்தியமான சூழலை உருவாக்க பின்னிற்கவில்லை. இவ்வாறெல்லாம் நாம் உருவாக்குகின்ற சூழல்களின் ஊடாக நாளை நன்மையான விளைவுகள் உருவாகுகின்றபோது இ.தொ.காவினர் தாம்தான இதனை முன்வைத்தோம் என்பார்கள். பிரதேசசபை அதிகரிப்பு, பிரதேச சபைச் சட்டத் திருத்தம் போன்ற விடயங்களில் இதனை அவதானிக்கலாம். 

அவற்றில் கூட அவர்கள் குறைந்தபட்சம் அமைச்சர்களை சந்தித்தது பத்திரிகை அறிக்கைகள் விட்டமை இடம்பெற்றன என்று கூட சொல்லலாம். ஆனால் உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தின்போதோ, மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தன்போதோ கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு அவர்களது இரண்டு நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகாரங்களும் எந்தவித்தத்திலும் பேரம்பேசலுக்குத் துணை நிற்கவில்லை. ஆனால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களுக்கு எல்லை மீள்நிர்ணயமோ அல்லாது தொகுதிவாரி முறையோ பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்ற நிலைப்பாட்டில் அதன் மூலம் பாதிப்படையக்கூடிய சகோதர முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்காக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் எத்தகைய அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை. நாங்கள் திருத்தங்களை சமர்ப்பித்து அரசாங்கத்துடன் போராடிக்கொண்டிருக்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த திருத்தச்சட்டம் மிகச்சிறந்தது என்றும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதை மாத்திரம் வரவேற்று ஆதரவளித்து பேசிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக சட்டமூலம் சமர்ப்பிக்கபடப்டவுடன் விவாதத்தை ஆரம்பித்துவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆணித்தரமாக வரவேற்று பேசிவிட எங்களது பேரம் பேசுதலுக்கு அது தடங்கல்களை ஏற்படுத்துவிடுகின்றது. 

எதிர்க்கட்சியான தமிழ் கட்சியே ஏற்றுக் கொள்கின்றபோது ஆளும் கட்சி பங்காளிகளான நீங்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் எம்மை கேள்விக் கேட்கும் நிலை உருவாகிவிடுகின்றது. முஸ்லிம் கட்சிகளுடன் அவர்களுக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், சகோதர தமிழ் இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதையே காட்டுகின்றது.

இந்த அரசியல் போக்கு ஆரோக்கியமானதல்ல. கடந்த கால வரலாற்றில் இலங்கைத் தமிழர் தரப்பு மலையக மக்களின்  அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எடுத்த தீர்மானங்களை நாங்கள் மீளவும் நினைத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றோம். எதிர்வரும் காலங்களில் அவர்கள் சார்பான ஏதேனும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இத்தகைய சூழல் உருவாகின்றபோது நாமும் எவ்வாறு நடந்துகொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் ஆதரவாக வாக்களிப்பதும் கூட இந்த நிலைமைக்கு ஒப்பானதுதான். அவர்கள் வெறுமனே வாக்களிக்கத் தயாராகிவிடுகின்றபோது அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு மக்களின் உரிமைக்காக பேரம்பேசும் எங்கள் மீது அழுத்தத்தைக்கொடுக்கலாம் என நினைக்கிறார்கள் போலும். ஆனால் மலையக சமூகம் என்கின்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு உண்டு. 

மக்கள் விடுதலை முன்னணி சிறுபான்மை கட்சியல்லாத சிறு கட்சி என்கின்ற அடிப்படையில் இந்த கலப்பு முறை அவர்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கும் என்கின்றபடியால் நேரடியான ஆதரவினைத் தெரிவிக்கின்றார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உரைகளிலும் மேடைகளிலும் மலையக மக்களுக்காக வருத்தங்களைத் தெரிவிக்கும் இவர்கள் இவ்வாறான சட்டத்திருத்தங்களின்போது மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் உணரவேண்டும்.  

கேள்வி: உள்ளூராட்சி, மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின்போது  நீங்கள் கொடுத்த அழுத்தங்களின் ஊடாக மலையக மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடிந்ததா?

நடைமுறையில் உள்ள அரசியல் சூழலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாங்கள் தனித்தும் சக முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தும் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநித்ததுவத்தை தக்கவைத்துக்கொள்ள முழுமையான பங்களிப்பைச் செய்துள்ளோம். இப்போதைய நிலையயில் முஸ்லிம் மற்றும் மலையக சமூகம் எதிர்நோக்கும் பிரதான சவால்தான் விகிதாசாரத்தில் தமக்கு இருந்த 100 சதவீத வாய்ப்பு அதைவிட குறைகின்றபோது அந்த குறைகின்ற அளவை இயலுமானவரை குறைத்து வீதாசார வாய்ப்புகளை உச்சமாக்கிக்கொள்வதும் மீதமுள்ள தொகுதிவாரி வாய்ப்புகளில் தமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் சாத்தியமான வழிகளில் தொகுதிகளை உருவாக்கிக்கொள்வதும் ஆகும். 

2012 ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின்படி, அது அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் விகிதாசாரத்தில் வெறும் 28 சதவீத வாய்ப்பே எமக்கு கிடைத்திருக்கும். ஆனால், நாம் அழுத்தங்களைக்கொடுத்ததன் ஊடாக அது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே திருத்தப்பட்ட 2017ஆண்டு உள்ளுராட்சி மன்ற சட்டத்தின்படி அறுபது சதவீதம் தொகுதிவாரியாகவும் 40 சதவீதம் விகிதாசார ரீதியாகவும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியும். 

இந்த அறுபது சதவீத தொகுதிகளைத் தெரிவு செய்வதிலும் மலையக மக்களின் பிரதிநிதிகள் தெரிவாகக் கூடிய வகையில் வட்டாரங்களை மீளமைப்பதிலும்  நாம் பங்களிப்பு வழங்கியுள்ளோம். மத்திரமல்லாது அதிகரிக்கப்படும் வட்டாரங்களுக்கு ஏற்ப புதிய பிரதேச சபைகளை உருவாக்குவதிலும் எமது பேரம்பேசுதல் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துகின்றபோதும் அரசாங்கத்தின் முன்மொழிவு அறுபதுக்கு நாற்பது என்பதாகவே அமைந்தது. அதனை நாங்கள் ஐம்பதுக்கு ஐம்பது என கோரிக்கை வைத்து வென்றெடுத்துள்ளோம். இதன்மூலம் விகிதாசார முறையில் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு பத்து சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. எஞ்சிய ஐம்பது சதவீத தொகுதிவாரி முறையிலும் தொகுதிகளை வடிவமைக்கும் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிரயணத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு அவற்றைச் சரி செய்யும் வகையில் சில முன்மொழிவுகளை சட்டத்திருத்தத்தின்போது உள்ளடக்கியிருக்கிறோம்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை மீள்நிர்ணயம் கடந்த ஆட்சியின்போது மிகவும் பாரதூரமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதனை புதிய அரசாங்கத்தில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் ஏற்கனவே செய்யப்பட்ட எல்லை மீள் நிர்ணயத்தில் இருந்து பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. 

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனும் கட்டாய நிலையில் திருப்தி அற்ற நிலையிலும் கூட நாம் உள்ளுராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் இணக்கப்பாடுக்கு வரவேண்டியிருந்தது. எனவேதான் மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை மீள்நிர்ணயத்தின் போது சில முக்கிய விடயங்களில் நாம் உறுதிப்பாட்டைப் பெறவேண்டியிருந்தது. எல்லை மீள்நிர்ணய குழுவில் அனைத்து இன மக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்புடுத்துவது. 

அவர்கள் அனைவரதும் இணக்கப்பாட்டுடன் இறுதி அறிக்கைத் தயாரிப்பது அவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கையை முன்புபோல வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக மாத்திரம் உறுதிப்படுத்துவதாக அல்லாது அந்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படல்வேண்டும் எனும் சரத்தினை சட்டத்திருத்தத்தில் கொண்டுவருவதற்கு நாம் அதிக பிரயத்தனங்களை எடுத்திருந்தோம். சட்டத்திருத்தத்துக்கான வாக்களிப்பு தாமதமானத்துக்கு இதுவே பிரதான காரணமாகும். 

சோல்பெரி அரசியலமைப்பில் காணப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் மீதான அக்கறை தொடல்பிலான விதப்புரை இந்த திருத்தங்களின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அரசியலமைப்பு உருவாக்க முன்மொழிவுகளில் நாம் வலியுறுத்தியிருந்தோம். இனம் மதம் இன்னும் பிற காரணங்கள் அடிப்படையில் செறிவு குறைவாக வாழும் குழுக்களுக்காக தேசிய மட்ட தொகுதித் தெரிவுகளில் இருந்து மாறுபட்ட ஒரு அளவுகோளை எல்லை மீள்நிரண்யக்குழு கடைபிடிக்க இந்த திருத்தச் சட்டம் வாய்ப்பளிக்கின்றது. 

அதேபோல பல அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எனவே, மலையக மக்களின் பிரதிநிதித்துவம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அல்லாது அவர்கள் செறிவு குறைவாக வாழும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படக்கூடிய சாத்தியமான சூழலலை உருவாக்குவதில் எமது முயற்சி பலனளித்துள்ளது. 

எது எவ்வாறாயினும் தேர்தல் காலங்களில் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைகளுக்கு அமைவாக கட்சிகள் தமது தேர்தல் நடத்தைகளை வெளிப்படுத்துவதில் இருந்தும் மக்கள் தமது வாக்களிப்பு நடத்தையை வெளிப்படுத்துவதிலும் இருந்துதான் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியும். எனவே இக்கட்டான காலகட்டங்களில் சட்டத்திருத்தங்களின்போது எந்தக் கட்சி எவ்வாறு நடந்துகொள்கிறது? யாரிடம் தூநோக்கம் இருக்கின்றது போன்ற விடயங்களை மக்கள் கவனத்தில் எடுத்து வாக்களிப்பதன் மூலமே மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எல்லா சபைகளிலும் உறுதிப்படுத்தப்படும். 

கேள்வி: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தினூடாகவும் குறிப்பாக மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேர்தல்களை பிற்போடுவது உள்ளிட்ட வேறு அரசியல் நிகழ்ச்சி நிர்லகள் அரசாங்கத்துக்கு இல்லை என சொல்ல முடியுமா?

 அரசாங்கம் என்று வருகின்றபோது எந்தவொரு அரசாங்கத்துக்கும் நேரடி மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு அல்லாமல் எல்லாமே வெளிப்படையாக செய்யப்டுமானால் இந்த நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.  மலையக மக்களைப் பொறுத்தவரையில் இந்த மறைமுக நிகழ்ச்சிநிரல்கள் மூலம் அதிகம் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மக்களாக இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலே உள்ளது. 

மலையக மக்கள் சார்பில் நாடாளுமன்றில் ஏழு பேர் அங்கம் வகித்துக்கொண்டிருக்கத்தக்கதாகவே அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கிய வரலாற்றை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. அதேபோல இரண்டு பிராந்திய வல்லரசு நாடுகளிற்கிடையேயான  முறுகலின்போது தாம் சாரந்திருக்கவேண்டிய அணி தொடர்பில் தீர்மானம் எடுக்க இலக்கை அரசு நாடற்றவர்களாக இருந்த மலையக மக்களை கொத்துக் கொத்தாக நாடுகடத்தியமையையும் மறந்துவிட முடியாததது. 

இன்றைய மலையக சமூகம் என்பது தமது இருநூறு வருடகால வரலாற்றில் முதல் நூறுவருடம் அரசியல் சூனியநிலையிலும் அடுத்த நூறு வருட வரலாற்றை அதற்கு மாறான அரசியல் போராட்ட வரலாற்றையும் கொண்டவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இறுதி நூறு வருடகாலத்தில் பல்வேறு அரசியல் நெருக்குவாரங்கள், இன வனமுறைகள், பொருளாதார ஒடுக்குமுறைகள், நிர்வாக பேதப்படுத்தல்கள், கல்வியில் புறந்தள்ளல் என பல்வேறு பாரபட்சங்களுடனேயே தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளார்கள். இருந்தும் நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் போட்டியிடக்கூடிய அரசியல் நாகரிகத்தையும் கண்டடைந்துள்ளார்கள். 

இந்த நிலையில் நின்றே இன்று நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒன்பது உறுப்பினர்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு உறுப்பினர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக நின்று எமது மலையக சமூகத்திற்காக குரல்கொடுக்கின்றோம், செயற்படுகின்றோம். மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் கொண்டுவந்த நாளில் மலையக மக்களிடையே தோன்றியிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்தைக் கண்டு ஏனைய கட்சி உறுப்பினர்கள் வியந்தமையை அவதானிக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தக்கவைக்க மலையக சமூகம் இந்த அரசியல் செல்நெறியைத் தொடரவேண்டும். பெருந்தேசிய கட்சிகளினதோ அல்லது பெரும்பான்மை அரசினதோ நேரடி மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமது அரசியல் பலம் எத்தகையது என்பதை நாம் உணர்ந்துகொண்டுள்ளோம். அதேநேரம் சாணக்கியமான வழிமுறைகளில் எமது உரிமைகளைப் பாதுகாக்க நாம் எமது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றோம். எது எவ்வாறாயினும் இந்த மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தின்போது சிதறிவாழும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல்பலம் உரசிபார்க்கப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல் (ஞாயிறு)



1982: முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 30

1982 ஆம் ஆண்டு இரண்டு முக்கிய தேர்தல்களை இரு மாத இடைவெளியில் நடத்தியது அரசாங்கம். அரசாங்கம் பதவியேற்று 5 ஆண்டுகளைக் கடந்திருந்தது.

எதிர்க்கட்சியிடமிருந்தும், தமிழ் கட்சிகளிடமிருந்தும் தற்காத்து ஆட்சியை நீடிப்பதற்கான சூழ்ச்சி அது. 78இல் கொணரப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அது நடத்தப்பட்டது. தேர்தல் முறைகேடுகளில் அரசாங்கம் தாரளமாக ஈடுபட்டது.  

அரசியலமைப்பின் படி 1978 பெப்ரவரி 04  அன்று  இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். பதவியேற்றுக்கொண்டார்.

அரசியலமைப்பின் ஆம் சரத்தின் மூன்றாம் பிரிவின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதத்துக்குக் கூடாத காலப்பகுதியிலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜே.ஆர்.  தான் நினைத்த வேளையில் அத தேர்தலை நடத்தவதற்கு முடியாத நிலைமை இருந்தது.  இந்த ஏற்பாட்டை மாற்ற வேண்டிய தேவை ஜே.ஆருக்கு வந்தது.

ஏனென்றால் பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் பலமடைந்து வந்துகொண்டிருந்ததையும் ஜே.ஆரால் உணர முடிந்தது. குடியியல் உரிமை பறிக்கப்பட்டிருந்த சிறிமாவும் தனது சரிவில் இருந்து நிமிர்ந்துகொண்டிருந்தார். சுதந்திரக் கட்சி தலைதூக்கிவிட்டால் தனது கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏற்படக்கூடிய அபாயத்தையும் உணர்ந்திருந்தார். அதற்கு முன்னர் ஒரு வழியை மேற்கொண்டாக வேண்டும்.

ஜே.ஆரிடம் 5/6 பெரும்பான்மைப் பலம் இருந்தது.  அப்படிப்பட்ட பலத்தை அடுத்த தேர்தலில் பெற முடியாதுபோகும் என்பதையும் உணர்ந்து இருந்தார். அவரிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அதைக் கவனமாக தக்கவைத்துக் கொண்டாலே ஆட்சியைப் பாதுகாக்க பல கைங்கரியங்களையும் செய்யலாம். 5/6 பெரும்பான்மை பலம் இருக்கும்போதே தனக்கு தேவையான அரசியலமைப்பு மாற்றங்களையும் கொண்டு வர முடியும். அரசியலமைப்பின் 30 (2) பிரிவின் பிரகாரம் ஜே.ஆரின் ஜனாதிபதிப் பதவி காலம் 1984 பெப்ரவரி  04 அன்று முடியவேண்டும்.

3வது திருத்தச் சட்டம் ஏன்?
ஆக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைச் செய்து, தனது பதவிக் காலம் முடிவடையுமுன்னமே ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஜே.ஆர் முடிவெடுத்தார்.  அதனை செய்வதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் இடம்தராது. எனவே தான் 3வது திருத்தச் சட்டத்தை 26.08.1982 இல் கொண்டுவந்தார்.

பதவிக்காலம் முடிந்தும் இரண்டாவது பதவிக்காலத்துக்கான மக்களாணையை தேர்தல் மூலம் பெறுவதற்கான ஒரு பிரகடனமொன்றைச் செய்ய முடியும் என்பதே அந்த திருத்தம்.

இது மக்களின் இறைமையை மீறும் செயல் என்றும் இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் தீர்ப்பையும் பெறவேண்டும் என்று கோரி சிவில் உரிமைகள் பாதுகாப்பு முன்னணி என்கிற அமைப்பு உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மனுவை கொடுத்தது. அது மக்களின் இறைமையைப் பாதிக்காது என்று தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம். 

இரண்டு வருடங்கள் மேலதிகமாக பதவியில் நீடிக்க முடிந்தும் கூட தனக்கு ஏதுவான புதிய திருத்தத்தை செய்து தேர்தலுக்குத் தயாரானார் ஜே.ஆர்.

இதற்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு பெரும் பிளவு நிகழ்ந்தது. மைத்திரிபால – அனுரா பண்டாரநாயக்க தலைமையில் தலைமையில் ஒரு குழுவும் சிறிமா தலைமையிலான ஒரு குழுவுமாக பிளவுபட்டிருந்தார்கள். சுதந்திரக் கட்சியும், அதன் சின்னமும், தலைமைக் காரியாலயமும் யாருக்குச் சொந்தம் என்கிற சண்டை நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு வாரம் இருக்கையில் 09.09.1982 அன்று சிறிமா குழுவினருக்கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சாரும் என்று தீர்ப்பானது. இந்த பிளவை மேலும் மோசமடையச் செய்வதில் அரசாங்கமும் தனது பங்கை மேற்கொண்டது. இப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் உள்ள சாதகத்தை ஜே. ஆர். உணர்ந்திருந்தார்.

ஜே.ஆருடன் இருப்பவர்கள் கொப்பேகடுவ, விஜேவீர, ரத்னசிறி விக்கிரமநாயக்க வேட்பு மனு தாக்கலின் போது
செப்டம்பர் 17 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன (ஐ.தே.க.), ஹெக்டர் கொப்பேகடுவ (ஸ்ரீ.ல.சு.க), வாசுதேவ நாணயக்கார (ந.ச.ச.க), கொல்வின் ஆர். டி சில்வா (ல.ச.ச.க), ஜீ.ஜீ.பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), ரோகன விஜேவீர (ஜே.வி.பி) உட்பட 9 பேர் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இந்த 6 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 சுயாதீன அபேட்சகர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஜே.வி.பி.யின் பாராளுமன்றவாத அரசியல் பிரவேசம் 1981மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின் மூலம் தொடங்கப்பட்டிருந்தது. அதேவேளை இந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜே.ஆரை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் போது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதற்கு ஜே.வி.பி பல கட்சிகளுடனும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அம்முயற்சி தோல்வியடைந்த நிலையில் விஜேவீர ஜே.வி.பி சார்பில் களமிறங்கினார்.

இது முதலாவது ஜனாதிபதித் தேர்தல். ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தது. வழமையான பொதுத் தேர்தலை விட இது வேறு விதமாக அவர்களுக்கு இருந்தது. இலங்கை முழுவதும் ஒரே தேர்தல் தொகுதியாக கருதப்பட்டது. முதலாவது தடவையாக ஒரே இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது தடவையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை மக்களுக்கு இதன் மூலம் அறிமுகமாகிறது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்பத்துக்குரியவர்கள் என்கிற விருப்புத் தெரிவு முறை அறிமுகமானது.

தேர்தலுக்கு முன்னரே அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தது. அந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் இந்தப் போக்கை வெறுத்தன.

தம்முடனான சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கும் கூட்டணியை மெதுவாக தமக்கு ஆதரவு தரும்படி கோரினார் ஜே.ஆர். அமிர்தலிங்கத்தை அந்த கோரிக்கை தர்மசங்கடத்தில் கொண்டு போய் நிறுத்தினாலும் தமிழ் மக்களின் எண்ணங்களை ஒரு கட்டத்திற்கு மேல் மீற முடியாத நிலை. 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் முடிவை எடுத்தது. தேர்தல் புறக்கணிப்பை கூட்டணி அறிவிக்காமல் ஜே.ஆருக்கு வாக்களிக்க கோரியிருந்தால் கூட்டணி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட தீர்மானித்திருந்தார். வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியிலும் தமிழீழத்துக்கான மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என்றும், தமிழீழத்துக்கான மக்கள் ஆணையை பெற்ற கூட்டணி அதற்காக எதையும் செய்யவில்லை என்றும் கூறி அதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக குமார் பொன்னம்பலம் அறிவித்தார்.

இந்தத் தேர்தலில் குட்டிமணியை கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை இன்னொரு புறம் இருந்தது. டெலோ இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான குட்டிமணி என்று பலராலும் அறியப்பட்ட  செல்வராஜா யோகசந்திரன் பொலிசார் மீதான தாக்குதல், வங்கிக் கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த நிலையில் 01.04.1981அன்று படகொன்றில் தமிழகத்துக்கு செல்ல முயற்சிக்கும் போது தங்கத்துரை, தேவன் ஆகியோருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாகியிருந்தார்கள் அவர்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்ற 13.08.1982 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. குட்டிமணி நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பிரசித்தமானது.

எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு வாக்குமூலத்தை வழங்கினார்கள் என்பதையும் அதில் அவர் விளக்கினார். தான் சிங்கள மக்களின் மக்களின் எதிரி இல்லை என்பதையும் இந்த பயங்கரவாத சட்டம் நாளை சிங்கள இளைஞர்களையும் பாதிக்கும் என்பதையும் தெரிவித்த அவர் தனது இறுதி வேண்டுகோளையும் முன்வைத்தார்.

“என்னை தமிழீழத்திலேயே தூக்கிலிட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என்னுடைய கண்கள், கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நனவாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.


குட்டிமணி வேட்பாளராக..!?
இந்த நிலையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக குட்டிமணியை தெரிவு செய்யவேண்டும் என்கிற அழுத்தம் கூட்டணிக்குள் எழுந்தது. 78 அரசியல் யாப்பை புறக்கணித்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலையும் நிராகரித்துத் தான் ஆக வேண்டும் என்று அமிர்தலிங்கம் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நேரத்தில் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இறந்துபோனார். வட்டுக்கோட்டை தொகுதியின்  அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு குட்டிமணியை தெரிவு செய்யும் முடிவை கூட்டணி 14.10.1982 அன்று எடுத்தத்துடன் அதை தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்தது.

குடிமணியை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தோம் என்பது தொடர்பில் கூட்டணி வெளியிட்ட நீண்ட அறிக்கையில்..

“...குட்டிமணியின் நியமனமானது நாடெங்கிலும் அவ்வப்போது அரசாங்க முகவர்களான பொலிஸாரினாலும் அரசாங்கப் படைகளினாலும் தமிழ் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசாங்க பயங்கரவாதத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.   

மேலும், எல்லா நியாயங்களுக்கும் முரணாக ஜூரி முறை வழக்காடலை நிராகரிக்கும், நீண்ட தடுத்துவைப்பை ஏற்படுத்தும், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளும், அதற்காக தமிழ் இளைஞர்களைப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் கொடூரச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதொரு அடையாள நடவடிக்கையாக இந்நியமனத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.

அத்தோடு, குட்டிமணி மற்றும் ஜெகன் மீது விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான குரலாகவும் இந்நியமனத்தைப் பார்க்கிறோம். மேலும், ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதற்காக பனாகொடை இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம் மற்றும் குருநகர் இராணுவ முகாம் ஆகியவற்றில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த நியமனத்தைக் காண்கிறது.

மேலும், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் அழுத்தமாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்நியமனத்தைக் காண்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால் மரண தண்டனைக் விதிக்கப்பட்ட கைதி நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு சிறைச்சாலை ஆணையாளர் அனுமது கொடுக்க மறுத்தார்.

குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராக தான் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு அனுமதி கோரி மேன்முறையீடு செய்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அது தொடர்பில் உத்தரவிடும் அதிகாரம் இல்லையென்று சிறைச்சாலை தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில் குட்டிமணியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவேண்டும். அந்த மூன்று மாதங்கள் நிறைவடையுமுன் அந்த நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக குட்டிமணி அறிவித்தார்.

குட்டிமணியை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்குவதில் உள்ள சகல சட்டச் சிக்கல்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞரான அமிர்தலிங்கம் அறிந்திருந்தும் அவர் இந்த விளையாட்டில் இறங்கியது ஒரு அரசியல் நாடகமென பரவலாக விமர்சிக்கப்பட்டது.

புறக்கணிப்பின் சாதக பாதகம்
ஜனாதிபதித் தேர்தலில் தம்மால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருந்தாலும் ஒரு அடையாள நிமித்தம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதே இலக்காக இருந்தது. அது தவிர ஒரு தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் காலத்தில் மக்களிடம் சென்று கொள்கைப் பிரசாரங்கள் செய்வதற்கான பல வாய்ப்புகள் திறக்கும். அந்த வாய்ப்புக்காகவே பாராளுமன்றப் பாதையை நிராகரிப்பவர்கள் கூட தேர்தலில் பங்குபற்றுவதாக அறிவித்துவிட்டு அதனை பயன்படுத்திக்கொள்வது வழக்கம்.

ஜே.ஆர். தனது வெற்றிக்காக ஊடகங்களை முழு அளவில் பயன்படுத்தினார். குறிப்பாக அரச வானொலி, தொலைகாட்சி, லேக் ஹவுஸ் நிறுவன பத்திரிகைகள் அனைத்தும் தனது பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியதுடன் டைம்ஸ், தவச, உபாலி நிறுவன பத்திரிகைகளும் ஜே.ஆரை ஆதரித்து செயற்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி “ஜனதின”, கொம்யூனிஸ்ட் கட்சி “எத்த”, ஜே.வி.பி “நியமுவா” ஆகிய தமது சொந்தக் கட்சிப் பத்திரிகைகளில் தங்கியிருக்க நேரிட்டது. அவை தேசிய அளவில் பரவலாக போய் சேரக் கூடிய பத்திரிகைகளாக இருக்கவில்லை.

இறுதியில் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதாக கூட்டணி விலகி நின்றது. ஜே.ஆர் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜே.ஆரை ஆதரித்தது. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் கொப்பேகடுவ தொண்டமானுக்கு எதிரான துவேசம் மிக்க பிரசாரங்களை மலையகப் பகுதிகளில் முன்னெடுத்தார்.

வடக்கில் ஒரேயொரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்ட ஜே.ஆர். தமிழ் மக்களிடம் நீங்கள் எவருக்கும் வாக்களியுங்கள் ஆனால் கட்டாயம் வாக்களியுங்கள் என்றார். கூட்டணி தேர்தலை புறக்கணிக்கக் கோரியிருந்தது. தான் சொள்வதற்கு எதிர்மாறாக தமிழ் மக்கள் இயங்குவார்கள் என்று ஜே.ஆர். நம்பியிருக்கலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் புறக்கணிப்பது தனக்கு வாய்ப்பானது என்று ஜே.ஆருக்கு தெரியும்.  தமிழ் மக்களின் வாக்குகள் எதிர் வேட்பாளர்களுக்கு போய் சேருவதைவிட, அந்த வாக்குகள் எவருக்கும் போய் சேராமல் இருப்பது தனக்கான வாக்கு வீதத்தை அதிகரிக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.


தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தால் அது ஜே.ஆருக்கு சாதகமாக அமையும் என்றும் அதுதான் கூட்டணிக்குத் தேவை என்றும் வாக்களிப்பில் மக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் குமார் பொன்னம்பலம் பிரச்சாரம் செய்தார். 

இந்தத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 81 சதவீதமாக இருந்தது அரசுக்கு ஒரு வெற்றி. ஜே.ஆர். 52.91% வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். அதேவளை அதன் மறு அர்த்தம் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலேயே அவர்க்கு எதிராக 47.09% வாக்களித்திருக்கிறார்கள் என்கிற உண்மையும் உணரப்படவேண்டும். 

இந்த தேர்தல் காலத்தில் தமிழ் பிரதேசங்களில் நிகழ்ந்த பல்வேறு அரச அட்டூழியங்கள் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் கொப்பேகடுவைக்கு அதிகமான வாக்குகளை அளித்து ஜே.ஆருக்கு தமது எதிர்ப்பலையை வெளிக்க்காட்டினர் தமிழ் மக்கள்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜே.ஆரை விட கொப்பேகடுவ அதிகமான வாக்குகளைப் பெற்றார். அங்கு ஜே.ஆர் 44,780 (20.54%), கொப்பேகடுவ 77,300 (35.46%) ஆகிய வீதங்களில் வாக்குகளைப் பெற்றார்கள். குமார் பொன்னம்பலத்துக்கே யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளாக  87,263 (40.03%) கிடைத்தன. ஜே.ஆருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்த மாவட்டம் நுவரெலிய மாவட்டம். அங்கு அவருக்கு 109,017 (63.10%) வாக்குகள் கிடைத்திருந்தன. தொண்டமானின்றி அந்த வெற்றி ஜே.ஆருக்கு சாத்தியப்பட்டிருக்காது.

அந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இன்று உயிருடன் இருப்பவர்கள் வாசுதேவ நாணயக்கார மட்டுமே.

ஜே.ஆரின் ஒரு இலக்கு முடிந்தது. இனி அடுத்த முக்கிய இலக்கொன்றுக்கு தயாரானார். அது இந்தத் தேர்தலை விட விசித்திரமானது. இலங்கையின் வரலாற்றில் ஒரே தடவை தான் நிகழ்ந்தது.

அடுத்த இதழில்...

நன்றி - தினக்குரல்


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates