இப்போது ஆட்சிக் கவிழ்ப்புச் சதி பற்றிய பேச்சே நாட்டின் பிரதான பேசுபொருள். சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1962 இலங்கையில் இராணுவ ரீதியிலான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியொன்று நிகழ்ந்தது. அது ஒரு தோல்வியுற்ற புரட்சியாக இருந்தாலும் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்னும் நினைவு கொள்ளப்படுகிறது.
S.W.R.D.பண்டாரநாயக்க சதி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் சிறிமாவோ பண்டாராநாயக்க பிரதமரானார். அவரும் 1962இலும், 1971இலும் இரண்டு தடவைகள் அரச கவிழ்ப்புப் புரட்சிக்கு முகம்கொடுக்க நேரிட்டது.
முன்னர் வருடாந்த ஆரம்பத்தில் நிகழும் முதல் பாராளுமன்ற கூட்டத்தில் அரசின் இலக்குகளையும், கொள்கைகளையும் அறிவிக்கும் சிம்மாசனப் பிரசங்கம் ஆளுனரால் நிகழ்த்தப்படும் அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் மரபும் கைக்கொள்ளப்பட்டது.
அன்றைய சுதந்திரக் கட்சியின் உபதலைவராக இருந்தவர் பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய தொகுதி உறுப்பினர் சீ.பீ.டி சில்வா. அவரின் தலைமையிலான நால்வர் கொண்ட கும்பல் இரகசியமாக சதி செய்து 03.12.1964 அன்று எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து அந்த சிம்மாசனப் பிரசங்கத்தை தோற்கடித்ததன் மூலம் ஆட்சியைக் கவிழ்த்தனர். அப்போதைய அரசியல் களத்தில் இந்த நிகழ்வு “முதுகில் குத்துதல்” என்றே பிரபல்யமாக அழைக்கப்பட்டது.
சபாநாயகரின் வாக்கையும் சேர்த்தே வாக்கெடுக்கப்பட்டது. ஒரு வாக்கால் தான் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. 1965 தேர்தல் நிகழ்ந்தது இதன் காரணமாகத்தான். ஆனால் 1962 சதி சற்று வித்தியாசமானது. அது இராணுவச் சதி முயற்சி.
அதிருப்தியுற்ற கிறிஸ்தவர்களின் கிளர்ச்சி?
1960ஆம் ஆண்டு பதவியேற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சி 18 மாதங்கள் கூட நிறைவுறாத நிலையிலேயே 1962இல் அவரின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான கூட்டுச்சதி நடந்தது.
27.01.1962 அன்று கிறிஸ்த்தவ உயர்குடி மூத்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சியை இராணுவ பலத்துடன் கவிழ்க்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்த முயற்சி திட்டமிடப்பட்ட இரவன்று; புரட்சி முன்னெடுக்கப்படும் முன்னரேயே முக்கிய கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
1956 ஆம் ஆண்டு பண்டாராநாயக்காவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சிங்களமயமாக்கல் நிகழ்ச்சிநிரலில் பாதிக்கப்படவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள – பௌத்தர்கள் அல்லாத அனைத்து சிறுபான்மை இனங்களும் மதங்களும் தான். இத்தனைக்கும் பண்டாரநாயக்கா ஆங்கிலிக்கன் கிறிஸ்தவத்தில் இருந்து பௌத்தத்திற்கு மதம் மாறியவர். பண்டாரநாயக்க தன்னை ஒரு சிறந்த சிங்கள – பௌத்தனாக வெளிக்காட்டுவதற்காக அதிக விலையைக் கொடுக்க தயாராக இருந்தார். அதுவே 1956இல் நிகழ்ந்த சிங்கள பௌத்த மறுமலர்ச்சி மாற்றம். அப்படியிருந்தும் சிங்கள பௌத்த சக்திகள் அவரின் செயற்பாடுகளில் போதாமையைத் தான் கண்டன. அவரது ஆட்சியில் ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அவருக்கெதிரான சதி முயற்சிகள் பின்னப்பட்டன. அந்த சதியின் இறுதியில் அவர் பௌத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் படிப்படியாக கிறிஸ்தவர்களின் செல்வாக்கு குறைந்துகொண்டே போன நிலையில் 1956 ஆட்சிமாற்றத்தால் மேலும் கிறிஸ்தவர்கள் தம்மீதான புறக்கணிப்பை உணரத் தொடங்கினர்.
அப்போது இராணுவ உயர் பதவிகளில் ஐந்தில் மூன்று பங்கு கிறிஸ்தவர்களும், ஐந்தில் ஒன்று தமிழரும், ஐந்தில் ஒன்று பரங்கியரும் இருந்த நிலையை பண்டாரநாயக்கா மாற்றி அமைத்தார். பௌத்த சிங்கள அதிகாரிகளை நியமித்தார். மூன்று கிறித்தவ உயர் அதிகாரிகள் பணியில் இருந்த போதிலும், ஒரு பௌத்தரை காவல்துறை மா அதிகாரியாக நியமித்தார்.
1961 அளவில் தாம் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதாக கருதிய உயர்குடி கிறித்தவர்கள் மனதில் மனக்கசப்பு மேலிட்டிருந்தது. இலங்கை அரசு சிறுபான்மையின கத்தோலிக்கப் பாடசாலைகளை அரசமயப்படுத்தியது. அதே வேளையில் சில உயர்குடி ஆங்கிலிக்கப் பாடசாலைகளை அவர்கள் விட்டு வைத்தனர். இந்நிலையில் பல கிறிஸ்த்தவர்கள் இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். உயர் உத்தியோகத்தில் இருந்த ஆங்கிலம் கற்ற கணிசமானோரும் இப்படி இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். நாட்டின் வளர்ச்சியிலும் இது கணிசமான பாதிப்பை ஏற்படுத்தவே செய்தன. உள்ளூர் கிறிஸ்தவர்களின் அதிருப்தி தலைதூக்கத்தொடங்கியிருந்தது.
இதே காலப்பகுதியில் பாகிஸ்தானில் இராணுவத் தலைவர் அயூப் கான் நடத்திய இராணுவப் புரட்சி இத்தகைய அதிருப்தியாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.
"வன்பிடி நடவடிக்கை"
இந்த இராணுவப் புரட்சிக்கு "வன்பிடி நடவடிக்கை" (Operation Holdfast) எனப் பெயரிடப்பட்டது. பிரதமர் சிறிமா, அமைச்சர்கள், பாதுகாப்புக்கான நாடாளுமன்றச் செயலர் (பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா), இராணுவத் தளபதி, கடற்படையின் பதில் தளபதி, காவல்துறை உயர் அதிகாரி, புலனாய்வுத்துறை உயர் அதிகாரி (ஜோன் ஆட்டிகலை) ஆகியோரைக் கைது செய்து இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் (இந்த இராணுவக் களஞ்சியம் காலிமுகத்திடலுக்கடியில் ஒரு பாரிய கொங்கிரீட் பங்கர் போன்று இருந்தது.) சிறை வைப்பதே பிரதான நடவடிக்கையாக திட்டமிட்டிருந்தனர்.
அதை விட கொழும்பு நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், தொலைதொடர்புச் சேவை, வானொலிச் சேவை என்பவற்றையும் கையகப்படுத்தவேண்டும் என்றும் திட்டமிட்டனர்.
அப்போது கதிர்காமத்தில் விழாவொன்றுக்கு குடும்பத்துடன் செல்லவிருந்த பிரதமர் சிறிமாவை இடைநடுவில் குடும்பத்துடன் சிறைபிடிப்பதும் பின் அவரின் மூலம் ஆட்சிமாற்றம் செய்யப்பட்டதாக கடிதம் ஒன்றைப் பெற்று ஆளுநர் ஒலிவர் குணதிலகவுக்கு ஊடாக அரசு கலைக்கப்பட்டதை ரேடியோ மூலம் நாடு முழுவதும் அறிவிப்பது என்று திட்டமிட்டனர். அதேவேளை அந்த ஆட்சிக்கவிழ்ப்பை “ஒரு துளி இரத்தமும் சிந்தாமல்" நடத்தி முடிக்கவேண்டும் என்றும் எண்ணினர்.
ஸ்டேன்லி சேனநாயக்க என்கிற பொலிஸ் அதிகாரி ஒருவர் மாத்திரம் தான் இந்த சதிக்கும்பலில் இருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்தர். இந்த சதிமுயற்சி பற்றிய செய்தியும் இவரால் தான் கசிந்தது.
கசிந்த தகவல்
இப்படி ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு நிகழப்போகிறது என்றும் அதன் பின்னர் தனக்கு பொலீசில் மிகப் பெரும் பதவியுயர்வு கிடைக்கவிருப்பதையும் அவர் தனது மனைவிக்கு தெரிவித்திருக்கிறார். ஸ்டான்லியின் மனைவி சிறிமாவுக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினரான பீ.த.எஸ்.குலரத்னவின் மகள். மகள் தனது தந்தைக்கு இந்த இரகசியத்தை பட்டும்படாமலும் அறிவித்திருக்கிறார். குலரத்னவின் மூலம் இந்தத் தகவல் பிரதமர் சிறிமாவைச் சென்றடைந்தது. அந்தத் தகவல் கிடைக்கும்போது சம்பவம் நிகழ ஒரு சில மணித்தியாலங்கள் மாத்திரம் தான் இருந்தன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப்பொலிஸ் அதிபர் எஸ்.ஏ.திசாநாயக்க சதியில் சம்பந்தப்பட்டவர்களோடு நட்புகொண்டு தகவல் திரட்டியிருந்தார். அவர் பொலிஸ் அதிகாரி ஜோன் ஆட்டிகலவையும் அழைத்துக்கொண்டு பிரதமர் சிறிமாவை சந்தித்து நிலைமையை விபரித்தார்.
உடனடியாகவே அரசாங்கத்திற்கு விசுவாசமான பொலிஸ், முப்படை அதிகாரிகளை அழைத்து சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது பம்பலபிட்டியில் இருந்த ஆயுதக் களஞ்சியச்சாலையை சீல் வைத்து மூடி எந்த ஆயுதங்களும் அங்கிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான வழிகளும் நிறுத்தப்பட்டன. அதுபோல பொலிஸ் மா அதிபரின் ஆணையைத் தவிர வேறெந்த அதிகாரிகளினதும் ஆணையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நாட்டில் சகல இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு வேகமாக அறிவிக்கப்பட்டது.
அரசுக்கு உறுதியாக விசுவாசமான பாதுகாப்பு அதிகாரிகளாக கருதப்பட்ட கடற்படைத் தளபதி ராஜன் கதிர்காமர் (லக்ஷ்மன் கதிர்காமரின் மூத்த சகோதரர்), இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விஜேகோன், விமானப்படைத் தளபதி பாக்கர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதமர் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
அலரி மாளிகைக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டதுடன் ஜனவரி 27 அன்று வானொலிச் சேவையும் நிறுத்தப்பட்டது. பிரதமர் சிறிமாவை ரோஸ்மீட் பிளேசிலிருந்த அவரது இல்லத்திலிருந்து அலரி மாளிகைக்கு யுத்த டாங்கிகள் சகிதம் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அலரி மாளிகையைச் சூழ யுத்த டாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்திருந்தன. இரவு பொலிஸ் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் எவரும் வெளிய வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை முற்றிலும் விசாரணை செய்யும்படி அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதம் சிறிமா. அவர் இந்த சதியோடு தொடர்புடையவர்கள் என்று சதேகப்பட்ட பலரைக் கைது செய்து அலரி மாளிகைக்கு அழைத்துவந்து அவரே விசாரணை செய்து ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார். குறுகியநேர விசாரணையின் பின்னர் அவர்கள் அருகில் இருந்த ஆயுதக் களஞ்சிய சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட பிரதான பொலிஸ் தலைமையகங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த விபரங்கள் எதுவும் நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மக்கள் உறக்கத்தில் இருந்த வேளை இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் பெரும்பாலான நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருந்தன.
பிரதான சந்தேகநபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.சீ.தஹாநாயக்க அலரி மாளிகைக்கு கொண்டுவரப்பட்டார். உதவிப் பொலிஸ் புலனாய்வாளரான எஸ்.ஜோன் புள்ளேயின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடனடியாக சிறைசெய்யப்பட்டார்.
இந்த சதி பற்றி அரை நூற்றாண்டு காலம் சிவில் சேவையில் கொடிகட்டிப்பறந்த மூத்த அறிஞரான பிரட்மன் வீரக்கோன் (அப்போது பிரதமரின் செயலாளராகவும் இருந்தவர்) “அலரி மாளிகையின் நாடித்துடிப்பு” என்கிற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அதில் இந்த சதி முயற்சி பற்றிய அவரது நேரடி அனுபவங்களையும் விபரிக்கிறார்.
“...இளம் அதிகாரிகள் மன்னிப்பை எதிர்பார்த்தபடி ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தனர். அதன் மூலம் தான் பல உண்மைகள் வெளியாகின. பீலிக்ஸ் அலரி மாளிகையின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக இருந்தார். நீல நிற கடற்படை சீருடையில் கடற்படைத் தளபதி ராஜன் கதிர்காமர் பாதுகாப்பு கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டே தானியங்கி துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு அந்த தாழ்வாரப்பகுதியில் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருந்ததை நான் கவனித்தேன். இந்த சதிக்குள் உள்ளவர் யார்? வெளியில் இருப்பவர் யார்? என்று குழம்பிப் போய் இருந்தார்.” என்கிறார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுற்றது பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் வேகமாகவே அறிந்துகொண்டார்கள். தாம் பெரும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டதையும் உணர்ந்தார்கள். அந்த சதியில் சம்பந்தப்பட்ட; இராணுவத்தில் கெப்டன் தரத்தில் இருந்த போலியர் என்கிற இளைஞர் தனது ரிவோல்வரை எடுத்து தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியும் பதிவானது.
மொத்தம் 31பேர் கைது செய்யப்பட்டு நீதி விசாரணை நடத்தப்படுவரை வெலிக்கடையில் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
விடுதலை செய்த பிரித்தானிய சட்டம்
பீரங்கிப்படையைச் சேர்ந்த கேர்னல் பெட்ரிக் த சேரம், பிரதிப் பொலிஸ் மா அதிபர். சீ.சீ.தஹானாயக்க, இராணுவ நடவடிக்கைச் சபையின் தலைவர் கேர்னல் மொரிஸ் த மெல், ரியல் அட்மிரல் ரொயிஸ் த மெல், இலங்கை சிவில் சேவையில் இருந்த டக்ளஸ் லியனகே போன்றோர் உள்ளிட்ட 29 பேர் இந்த சதியின் பிரதான சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
அதுவரை காலம் இலங்கையில் ஒரு இராணுவச் சதிக்கான தண்டனை குறித்த எந்த சட்டங்களும் முறையாக இருக்கவில்லை. எனவே 1962 ஆம் ஆண்டின் இலக்கம் 1 என்கிற விசேட சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றித் தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
அதன்படி பிரதான சதிச் சூத்திரதாரிகள் அனைவரினதும் சொத்துக்களை அரசு சுவீகரித்ததுடன் அவர்களுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் அன்று இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றமாக இருந்த பிரித்தானிய பிரிவுக்கவுன்சிலுக்கு குற்றவாளிகள் மேன்முறையீடு செய்தனர். ஒரு குற்றம் நிகழ்ந்ததன் பின்னர் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தால் தண்டிப்பது என்பது அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதாவது இலங்கை சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் பிரித்தானிய சட்டத்தால் விடுவிக்கப்பட்டனர்.
சதியில் அரசியல் தலைவர்களும்...
ஒப்புதல் வாக்குமூலங்களின் போது கடந்த கால ஆட்சியாளர்களின் ஆதரவுடன் தான் இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. அதன்படி ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க, முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோர் மீது அரசாங்கத் தரப்பு பழிசுமத்தியது. பெப்ரவரி 12, 13 ஆகிய தினங்களில் இந்த சதி பற்றிய விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடந்தபோது பீலிக்ஸ் டயஸ் பகிரங்கமாக அவர்கள் தான் சதியின் பிரதான சூத்திரதாரிகள் என்று குற்றம்சுமத்தினார். ஆனால் அதனை நிரூபிப்பதற்கு அவர்களால் முடியாதிருந்தது. நீதிமன்ற விசாரணைகளிலும் அவர்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த சம்பவத்தின் பின் ஆளுனர் ஒலிவர் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். அவரது இடத்துக்கு அன்றைய ஐ.நா.வுக்கான சிறப்புத் தூதுவராக இருந்தவரும் சிறிமாவின் மாமனாருமான வில்லியம் கொப்பல்லாவ நியமிக்கப்பட்டார்.
இந்த சதி பற்றிய சுவாரஸ்யமான இரகசியங்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சுயசரிதை நூலில் (J.R. Jayewardene of Sri Lanka: A Political Biography - from 1956 to His Retirement 1995 by K. M. De Silva (Author), Howard Wriggins) முக்கிய குறிப்புகளைக் காண முடிகிறது. 1966ஆம் ஆண்டு புத்தாண்டின் நிமித்தம் இரத்மலானையிலுள்ள சேர் ஜோன் கொத்தலாவலவின் வீட்டுக்கு அவரை சந்திக்கச் சென்றிந்தபோது தான் முதற் தடவையாக அவரும் (கொத்தலாவல) டட்லி சேனநாயக்காவும் அந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஜே.ஆர். அறிந்துகொண்டார்.
ஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டமிடப்பட்டிருந்த நாளுக்கு முன்னைய நாளான 26 அன்று சேர் ஜோன் கொத்தலாவலவின் வீட்டில் சதிக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
இந்த விபரங்களை ஜே.ஆர். வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் சினம் கொண்டார்கள் என்று அந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. (மேற்படி நூலாசிரியர் ஜே.ஆருடன் 15.10.1979அன்று நடத்திய உரையாடலில் இருந்து)
“...சதித்திட்டத்துக்கான கூட்டங்கள் டட்லி சேனநாயக்கவின் பொரல்லை வீட்டுக்கு அருகில் கித்துல்வத்தையில் அமைந்திருந்த கைவிடப்பட்டிருந்த களஞ்சியத்தில் டட்லியின் தலைமையில் சதித்திட்டத்துடன் சம்பந்தமுள்ள மற்றவர்களுடன் சந்திப்புகள் நடந்திருக்கின்றன. 27ஆம் திகதி இந்தச் சதி வெற்றிபெறும் பட்சத்தில் சதித்திட்டத் தலைவர்களை சுதந்திர சதுக்கத்தில் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையிலேயே டட்லி சேனநாயக்க 27ஆம் திகதியன்று நல்ல செய்திக்காக காத்துக்கொண்டு சுதந்திர சதுக்கத்துக்கு அருகாமையில் இருந்த தனது உறவினரான டபிள்யு சேனநாயக்கவின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். முயற்சி கைவிடப்பட்டு தோல்வியடைந்ததை அறியாத அவர்; ஊர் நிலைமையை அறிவதற்காக தனது மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்." (ஜே.ஆரின் மேற்படி நூலில் 203-204ஆம் பக்கங்களில்)
பிரதான குற்றவாளியாக கருதப்பட்ட டக்ளஸ் லியனகேவுக்கு பின்னர் ஐ.தே.க அரசாங்கத்தில் அரச அமைச்சொன்றின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு சதி பற்றி ஆராய்வதற்காக இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இலங்கை வந்த அமெரிக்க நிபுணர் டொனால்ட் எல் ஹோரோவிட்ஸ் (Donald L Horowitz) இந்த சதியை “கேர்ணல்களின் சதி” என்றே அழைத்தார். சந்தேகநபர்களுடன் அவர் நடத்திய விசாரணையில் டட்லி சேனநாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டது பற்றி வெளியிட்டார்.
ஒட்டுமொத்தத்தில் இந்த ஆட்சிக்கவிழ்ப்புச் சதி கிறிஸ்தவர்களின் சதி என்றும், இராணுவத்தின் சதி என்றும், டட்லி, கொத்தலாவல போன்றோரின் சதி என்றும் தனித்தனியாக அழைக்கப்படுகின்ற போக்கை காண முடிகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் தத்தமது இலக்குகளை அடைவதற்காக பொது உடன்பாடொன்றைக் கண்டு இந்த சதியை திட்டமிட்டிருப்பதாகவே மொத்த சம்பவங்களில் இருந்தும் அறிய முடிகிறது.
சதியில் சம்பந்தப்பட்டவர்கள்
இராணுவம்
1. கர்னல் F.C. த சேரம்: ஸ்ரீலங்கா இராணுவ தொண்டர் பிரிகேடியின் துணை கட்டளை மற்றும் இலங்கை பீரங்கிப் படையின் தளபதி.
2. கேணல் மோரிஸ் த மெல்: இலங்கை இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி.
3. லெப்டினன்ட் கேணல் வில்மட் (வில்லி) எஸ். ஆபிரகாம்: - கட்டளை அதிகாரி, 3 வது படையணி, இலங்கை பீரங்கிப்படை.
4. லெப்டினன்ட் கேணல் J.H.V. த அல்விஸ் - கட்டளை அதிகாரி, இரண்டாம் தொண்டர் பொறியாளர் பிரிவு, சிலோன் இன்ஜினியர் ரெஜிமன்ட்.
5. லெப்டினன்ட் கர்னல் பசில் ஆர்.ஜெசுதாசன்: கட்டளை அதிகாரி, 2வது தொண்டர் சமிக்ஞை பட்டாலியன்
6. லெப்டினன்ட் கேணல் நோயல் மத்தியாஸ்: - லங்கா மின்சார மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ரெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி.
7. மேஜர் பி.ஐ. லொயலா: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.
8. மேஜர் டபிள்யூ ஜி. வைட்: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிபடை.
9. மேஜர் விக்டர் ஜோசப்: - சதித்திட்ட நாளன்றுக்கான நடவடிக்கை அதிகாரி, இலங்கை ஆயுதப்படைத் தலைமையகத்தின் பொறுப்பாளராக இருந்தவர்.
10. கேப்டன் J.A.R. பீலிக்ஸ்: - இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தின் மண்டல அதிகாரி.
11. கேப்டன் டோனி அங்கி: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.
12. கேப்டன் தொன் வீரசிங்க: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.
கடற்படை அதிகாரி
1. ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜெரார்ட் ரோய்ஸ் மேக்ஸ்வெல் த மெல் - இலங்கையின் கடற்படையின் முதலாவது சிங்களக் கடற்படைத் தளபதி. மேலே குறிப்பிட்ட கேர்னல் மொரிஸ் த மெல்லின் உடன்பிறந்த சகோதரன்.
பொலிஸ் அதிகாரிகள்
1.மூத்த DIG C.C. திசாநாயக்க ('ஜங்கல்' என்றும் அழைக்கப்பட்டவர்): - 1ஆம் தர பொலிஸ் பொறுப்பதிகாரி.
2. மூத்த டிஐஜி (ஓய்வுபெற்ற) சிட்னி த சொய்சா: - போலீஸ் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக அலுவலர். 1962 வரை.
3. SSP V.E. பெரேரா -கொழும்பு மேற்கு பொலிஸ் பிரிவு.
4. SP W.E.C. ஜெபநேசம்: - கொழும்பு
5. ASP கொலின் வான்டென்டிஸன்: - திம்பிரிகஸ்யாய பொலிஸ் படைத் தலைமையகத்தின் பொறுப்பான அதிகாரி.
6. பொலிஸ் உதவியாளர் பொலிஸ் J.F. பெடே ஜோன் பிள்ளே: - போக்குவரத்து பிரிவு
7. பொலிஸ் உதவிப் பொலிஸ் டெரி வி. விஜேசிங்க: - பிரதிப் பொலிஸ் மா அதிபர்.
8. ASP லயனல் சி. எஸ். ஜீரசிங்க
அரசாங்க உத்தியோகத்தர்கள்
1. டக்ளஸ் லியனகே (அரசாங்க சேவை): - காணி அபிவிருத்தி பிரதி பணிப்பாளர்
2. ரொட்னி த மெல்: - தோட்ட உரிமையாளர்