கடந்த 08.10.2014 அன்று மலையக ஆசிரியர் முன்னணியால் நுவரெலியா சௌமிய கலையரங்கில் நடத்தப்பட்ட ”ஆசிரியர் தின விழா” விழாவின் பொழுது மலையக கல்விக்கு சேவையாற்றிய சில கல்வியாளர்களுக்கு, மலையக கல்வி முன்னோடிகளில் ஒருவரான அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் பெயரால் , ”இரா.சிவலிங்கம் விருது ” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அமரர் இரா.சிவலிங்கத்தைப் பற்றி அறியாதோர் அதிகம் பேர் இருக்கின்றார்கள். அவர்கள் அறிந்துக்கொள்ளும் வண்ணம்,அன்பர் உயர்திரு . ஷன் சந்திரசேகர் (ShanChandrasekar ) அவர்கள் மின்னஞ்சல் வாயிலாக ’சொல்லின்செல்வர் இர.சிவலிங்கம்’ எனும் தலைப்பில் தகவல்களை தந்துதவினார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
சொல்லின்செல்வர் இர.சிவலிங்கம்
தனது இறுதி மூச்சு வரை மலையகம் பற்றியே சிந்தித்து வாழ்ந்த பெருமகன் இர. சிவலிங்கம் அவர்கள். 17-05- 1932 ல் மலர்ந்து 09-07-1999 ல் உதிர்ந்தார். தனது பட்டப் படிப்பை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் முடித்த அவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்து அங்கேயே அதிபராகக் கடமை புரிந்தார்.அவரும் திருச்செந்தூரனும் இணைந்து மலையக மக்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கினார்கள். “மலையக மக்கள் முன்னணி “ என்ற அமைப்பினை ஏற்படுத்தி எம்மை இந்திய வம்சாவளி என்று அழைக்காமல் “மலையகத் தமிழர்கள் “ என்று அழைக்கப் பட வேண்டும் என்று போராடி அங்கீகாரம் பெற்றார்.
அவரது முகத்தில் எப்போதும் புன்சிரிப்பே தவழும். மலையக இளைஞர்களை அவர் கவர்ந்தார். மலையகத்தின் சமூக, கலை, இலக்கியத் துறைகளின் எழுச்சியின் அடிநாதம் சிவா அவர்களாகும்.மூன்று மொழிகளிலும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அவரின் கம்பீரமான ஆளுமையும் கவர்ச்சிகரமான மொழியும் கூர்மையான விஷய ஞானமும் தெளிவான வெளிப்பாடும் அவரது தலைமைப் பண்புக்குத துணை சேர்த்தன. மலையகத்தின் பட்டி தொட்டி எல்லாம் அவர் முழக்கம் இட்டு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கினார். மலையகம் முழுவதும் கிளை விட்டிருந்த எல்லா மன்றங்களிலும் சிவாவின் காலடி பட்டது. சிவா மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம், மலையக இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்து மலையகத்தின் புதிய தலைமுறை மக்களிடையில் சமூக விழிப்புணர்வை உண்டாக்கினார் .
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மலையகப் பாடசாலைகளில் இருந்து பயின்று வெளியேறிய பல இளைஞர்கள் சிவாவின் எழுச்சி மிகு உரையைக் கேட்க கடல் அலை போலத்திரண்டனர். இன்று மலையகத்தில் பரவலாக ஏற்பட்டிருக்கும் உத்வேகத்துக்கு ஊற்றாக இருந்தவர் சிவா ஆகும்.வெவ்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்தவர்களையும் சிவா ஒன்றாக இணைத்துச் செயலாற்றினார். மலையகச் சமூக முன்னேற்றம் ஒன்றே அவரது லட்சியமாக இருந்தது. இலங்கை வானொலியில் “குன்றின் குரல்” என்ற நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார்.
அன்று இருந்த மலையகத்தின் பெரிய தொழிற்ச் சங்கத் தலைவர் இவரது வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை அதிபர் பதவியில் இருந்து பணி நீக்கம் செய்தார். ஆனாலும் சிவா துவண்டு விடவில்லை. சட்டக் கல்லூரியில் சேர்ந்து சிறந்த சட்டத்தரணியாக வெளிவந்தார். அரசு மாறியதும் மீண்டும் ஹைலண்ட்ஸ் அதிபராக நியமிக்கப் பட்டார்.பின்னர் கல்வி இயக்குனராகப் பதவி உயர்வு பெற்று மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். பல மலையக மக்கள் ஆசிரிய நியமனம் பெற்றனர். தோட்டப் பாடசாலைகளை அரசு ஏற்று நடத்துவதற்கும் வழி வகுத்தார். குடியுரிமை ,வாக்குரிமை ,தொழில் உரிமை அனைத்தும் நிராகரிக்கப் பட்டு இருந்த மலையகத் தமிழர் மத்தியில் ஒரு போராட்ட உணர்வை விதைத்தவர் சிவா அவர்களே. மலையக மக்களின் உரிமைக்குப் போராடாது சும்மா இருந்த மலையக அரசியல் தலைமை குறித்து அவர் சினம் கொண்டு இருந்தார்.
வன்செயல் காரணமாகத் தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்து சென்றும் லட்சக் கணக்காக தாயகம் திரும்பிய மலையக மக்களின் துயரிலேயே அவரது இதயம் இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமைகளாக நடத்தப் பட்ட தாயகம் திரும்பிய மலையக மக்களின் உரிமைக்காகப் போராடினார். அதன் பலன் இரண்டு முறை சிறை வாசம் அனுபவித்தார். 1991 ல் 21 நாட்கள் கோவை சிறையில் அடைக்கப் பட்டார். 1993 ல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 120 நாட்கள் சங்கிலியால் பிணைக்கப் பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் எந்த மலையகத் தலைமையோடு முரண் பட்டாரோ அவரின் அழைப்பினை ஏற்று மலையக மக்களின் நன்மை கருதி இலங்கை திரும்பினார். ஆனால் நோய்வாய்ப் பட்ட அவர் மீண்டும் தமிழகம் திரும்பினார். காலன் அவரை அழைத்துக் கொண்டான்.
அவரது சமூகத் தொண்டும் கல்வித் தொண்டும் எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது மலையக சமூகத்தின் கடமை ஆகும்.
s.ரவிந்திரன் . பொதுசெயலாளர்.
நன்றி - Upcountry Teachersfront
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...