Headlines News :
முகப்பு » , » மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்- II லெனின் மதிவானம்

மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்- II லெனின் மதிவானம்

மலையக மக்களின் வாழிடம் தொடர்பில் எழுந்த பிரச்சனைகள்:

மலையக மக்களின் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களின் பின்னணியில் அடிப்படை உரிமைகளும் தன்மான உணர்வுகளும் மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட நிலையில் மலையக மக்களின் முன்னால் மூன்று தீர்வுகள் முன் வைக்கப்பட்டன.

1. இந்தியாவிற்கு திரும்புதல்
2. வடக்கிழக்கிற்கு திரும்புதல்
3. மலையகத்திலே வாழ்தல்

2. 1. இந்தியாவிற்கு திரும்புதல் வாதம்

 இலங்கையில் அடக்கு முறைகளும் வஞ்சனைகளும் யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் இந்நாட்டில் கொண்டு வரப்பட்ட சட்டங்களும், மலையக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவன்முறைகளும் இவர்களை இ;ங்கிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர வைத்தது. ஒருவகையில், இந்த புலம் பெயர்வு பலாத்காரத்தின் அடிப்படையிலே நடந்தேறியது எனலாம். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இம்மக்கள் நாடு கடத்தப்பட்டபோது அவர்களின் உணர்வுகள் எத்தகையதாக இருந்துள்ளது என்பதை இலங்கையிலிருந்து  இந்தியாவிற்கு திரும்பிய கவிஞர்களான அரு. சிவானந்தன், சி.பன்னிர் செல்வம், மு.சி. கந்தையா முதலானோரின் கவிதைகளிலும் இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் முதலானோரின்  ஆய்வுகளிலும் காணமுடிகின்றது.

 இவ்வகையில் நோக்குகின்ற போது, மலையக மக்களின் மீதான இனவொடுக்கு முறைக்கான தீர்வு இந்தியாவிற்கு திரும்பி செல்லுதல் என்ற அம்சம் பொருத்தமற்றதாகவே காணப்பட்டது. இந்தியா வளர்ந்து வருகின்ற ஒரு வல்லரசு என்ற வகையில் ஏழை விவசாயிகளும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்குட்பட்டுள்ளதைக் காணலாம். வேலையில்லாத பிரச்சனை இங்கு முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்றது.  சாதாரண கூலி தொழிலுக்குக் கூட கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. அத்துடன் இங்கிருந்து திரும்பிச் சென்றவர்கள் “தாயகம் திரும்பியவர்கள்” என்ற பெயரிலும் “சிலோன்காரர்கள்” என்ற பெயரிலுமே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இவ்விடயம்  தொடர்பில் வெளிவந்த "என்றென்றும் அந்நியமாக்கப்பட்டவர்கள் (ஊநுசுயுஊ Pரடிடiஉயவழைnஇ வுயஅடை யேனரஇ 1980)," "தாயகம் திரும்பியவர்கள்" (தோட்ட பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகம், கண்டி, 1986) திரு எம். வாமதேவன் எழுதிய ளுசi டுயமெயn சுநியசவசயைவநள in வுயஅடை யேனர (ணுநn Pரடிடiஉயவழைளெஇ வுயஅடை யேனரஇ 2000)  ஆகிய நூல்களும்  மல்லியப்பு சந்தி திலகர்; சூரியகாந்தி பத்திரிகையில் எழுதி வரும் தொடர் கட்டுரையும் அவதானத்திற்குரியது. மேலும்;; இந்தியாவில் நிலவும் சாதிய அமைப்பு முறையானது  மலையத்தில் நிலவும் சாதிய அமைப்பு முறையை விட இறுக்கமானது. மலையக சமூகத்தில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட சாதியினர். அந்தவகையில் இங்கிருந்து தாயகம் திரும்பி செல்கின்றவர்கள் சந்திக்க நேர்ந்த கொடுமைகள் போக, சாதி சான்றிதழை பெறுவதில் காணப்படுகின்ற நடைமுறை சிக்கல்கள்- அத்தலைமறையினரின் வாரிசுகள் பாடசாலை அனுமதி பெறுவதில் பல தடைகளை தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு திரும்பி செல்லுதல் என்ற முன்மொழிவை பொது மக்கள்-பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் சார்ந்து நோக்குகின்றபோது  பொருத்தமற்றதொரு தீர்வாகவே காணப்பட்டது.

இவ்வம்சம் இவ்வாறிருக்க இம்மக்களின் தாயகமாகவும் பாதுகாவலனாகவும் இந்தியாவை சித்திரித்துக் காட்டுகின்ற புனைவுகள் எம்மத்தியில் இல்லாமலில்லை. இலங்கையில் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கக் கூடிய, அதே சமயம் மலையகத் தமிழருடைய எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு வர்க்கப்பிரிவினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் இலங்கையில் தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவர். இந்திய இலங்கை நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகல விதமான  சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில் தான் மலையக தமிழர் சமுதாயத்தில் தோன்றிய மத்தியதர வர்க்கம் அவ்வப்போது வந்து குடியேறும் இந்தியத் தமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரைத் தமக்கு சாதகமாகக் காட்டி தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ‘இந்திய வம்சாவழித் தமிழர்” என்ற பதத்தைப் பிரயோகிக்கின்றனர்.  மலையக தேசியத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன் சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும்.

மலையகத்தில் எண்பதுகளின்; பின்னர் ஏற்பட்ட சமூக  அரசியல் பொருளாதார மாற்றம் காரணமாக வர்க்க நிலையிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாகவே இன்று மலையகத்தில் பலம் பொருந்திய மத்தியதரவர்க்கம் ஒன்று உருவானது. அவ்வர்க்க மாற்றமானது ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள் எனப் பல்துறைகளில் அதன் வளர்ச்சி பரவல் அடைந்து வருவதனைக் காணலாம்.

இச்சூழலானது இரு நிலைப்பட்ட பண்புகளை-குணாதிசயங்களைக் கொண்ட வர்க்கங்களை உருவாக்கியது. இந்தப் பிரிவினரில் மலையக மக்களுடன் இணைந்து செயற்படுகின்ற புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையே உபயோகிக்க முற்படுகின்றனர். மறுபுறத்தில் தமது நலன்களை முதன்மைப்படுத்தி  மக்களை விட்டுப் பிரிந்து - அதேசமயம் தேவைப்படுகின்ற மக்களை பகடைக் காய்களாக்கி நயவஞ்சகமாய் ஓலமிடுகின்றவர்களே இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான தலை வீங்கிகள் சிலர் தமது பிழைப்பிற்காகவும் விளம்பரத்திற்காகவும் இந்தியாவை அண்டி உல்லாச கேளிக்கைகளில் பங்கு கொண்டு இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த முயல்வதும் போலித் தனமான முழக்கங்களின் ஊடே பொது மக்களின் இரத்தத்தை சூடேற்றி வருவதும் ஆபத்தானது என்பதை நாம் உணர உணர வேண்டியுள்ளது.  இந்திய நலன் காக்கும் மூன்றாம் தரப்பொன்றினை மலையகத்தில் நிறுவ முயல்வதும் இவர்களின் தார்மீக கடமையாகின்றது.  இலங்கையில் வாழுகின்ற இந்திய முதலாளிகளுக்கு எதிரான இனவாதம் மலையக மக்களுக்கு எதிராக திருப்படுகின்ற போது அது பார தூரமான விளைவுகளை கொண்டு வருவதாக உள்ளது. ஓர் உறுதியான இன, மத, மொழி அரசியல் பொருளாதார, பிரதேச வேறுபாடுகளை கொண்டிருக்கின்ற இம்மக்கள் மலையக தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப்படுகின்றனர்.



2.2 வட கிழக்கிற்கு திரும்புதல் என்ற வாதம்

வடக்கிற்கு வாருங்கள் என்ற கோசத்தின் பின்னணியில் மலையக மக்களில் ஒரு பகுதியினர் வட கிழக்கில் சென்று குடியேறினார்கள். யாழ், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு முதலிய மாவட்டங்களில்; குடியேறி வாழ்கின்றனர். இவ்வாறு இவர்கள் குடியேறிய பகுதிகளில் யாழ் மாவட்டமும் அதனை அண்டிய பகுதிகளும் முக்கியமானவையாக காணப்படுகின்றன. இவ்விடத்தில் மலையக மக்களுக்கும்  யாழ்ப்பாண சமூகத்தினருக்கும் இடையிலான உறவுகள் பற்றி நோக்குதல் அவசியமானதாகின்றது.  மலையகத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் துரைகளாகவும், சின்னத் துரைகளாகவும் தொழில் புரிந்துள்ளார்கள் என்ற போதிலும் அவர்களின் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருந்துள்ளது. அவ்வாறு தொழில் புரிந்தவர்களுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு மிக மிக மிக குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்களே மலையகத்தவருடன் பொதுவான தொடர்புகளை வைத்திருந்தவர்கள். மலையக சமூகம் அறிந்த யாழ்ப்பாண ஆசியர்கள் இரு தரப்பட்டவர்கள். ஒன்று தங்களுடைய சுய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டவர்கள். இவர்களின் பார்வையில் மலையக சமூகம் மிக இழிவாகவே நோக்கப்பட்டது. இவர்கள் மலையக மாணவர்களை தமது வீட்டு வேலைகளுக்காகவும் இன்னும் இது போன்ற அடிமை வேலைகளுக்காகவுமே பயன்படுத்தினார்கள். இப்பிரிவினரே எண்ணிக்கையில் அதிகமானோராக் காணப்பட்டார்கள். அதேசமயம் மலையகத்தில் ஆசிரியர்களாக கடமையாற்றிய யாழ்ப்பாண சமூகத்தவரில் இன்னொரு பிரிவினரும் காணப்பட்டனர். அவர்கள் ஜனநாயக முற்போக்கு மார்க்சிய சிந்தனையினால் கவரப்பெற்றவர்கள் (இந்தப்பட்டியலுக்குள் அடங்காத சில மனிதநேயரும் இப்பிரிவில் அடங்குவர்). இவ்வணியினர்  இம்மக்களை கரிசனையுடன் நோக்கியதுடன் மலையகத்தில் கல்வி வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மலையகத்தில் உருவாகி வந்த சமூக செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள் இவர்களிடமிருந்துதான் தமது மார்க்சிய முற்போக்கு சிந்தனைகளை பட்டை தீட்டிக் கொண்டார்கள் என்பதும் நன்றியுடன் நினைவுகூரதக்கதொன்றாகும்.

இது இவ்வாறிருக்க, வடக்கிற்கு மலையக மக்களின் புலம்பெயர்வு வௌ;வேறு காலங்களில்; வௌ;வேறு நிர்ப்பந்தங்களினால் இடம்பெற்றுள்ளன.  இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் மழைக்காலத்தில் குறைவாக காணப்பட்டது. அக்காலங்களில் அவர்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு சென்று வயல்களில் மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று  பின் மலையகத்திற்கு திரும்புவதுமாக பகுதி நேர தொழில்களில் ஈடுபட்டனர். இவ்வாறான காலங்களில் இவர்கள் வட பகுதியில் நிரந்தரமாக குடியேறுவதற்கான  சாத்தியப்பாடுகள் காணப்படவில்லை. ஆனால் 1956 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக் கலவரம் காரணமாக மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் நிரந்தரமாகவே அங்கு சென்று குடியேறினர்.

1974 - 75 காலப்பகுதியில் இந்தப் போக்கு ஒரு திருப்பத்தை அடைந்தது. இக்காலப்பகுதியில் நிலவிய பஞ்சத்தை மலையக மக்கள் எளிதில் மறந்து விட மாட்டார்கள். அதே போல இக்காலப் பகுதியில் கொப்பேகடுவ நிகழ்த்திய இனவாத்ததுடன் கூடிய பெருந்தோட்ட சுவீகரிப்புகளையும் சுலபமாக மறந்துவிட முடியாது. சொய்சி போன்ற தோட்டங்களில் இருந்த மலையக தொழிலாளர்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள்.... மலையகத்தில் பஞ்சமும், இனவாதமும் தலைவிரித்தாடிய போது வடக்கே பசுமைப்புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போதைய அரசாங்கம் உப உணவுப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்தததால் வடக்கு மக்களிடையெ உப உணவு உற்பத்தி மீது ஆர்வம் பிறந்தது. இன ரீதியாகவும் பின்னர் மாவட்ட அடிப்படையிலும் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் காரணமாக பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டோர், உத்தியோகம் கிடைக்காதோர், வியாபாரத்தில் நம்பிக்கை இழந்தோர் அனைவரது கவனமும் நிலம் நோக்கி சென்றது. இவர்கள் கைகளில் மூலதனம் இருந்தது அல்லது வட்டிக்கு வாங்க முடிந்தது. ஆனால் உழைப்பு தேவைப்பட்டது. வடக்கே வாருங்கள் கோசம் பிறந்தது 5.    


 இத்தகைய, புலம்பெயர்வு காரணமாக  தர்மபுரம், பாரதி புரம், அமைதிபுரம், மலையாளபுரம், ஜெயபுரம்,கிருஸ்ணபுரம், சாந்தபுரம், ஆரோக்கியபுரம், தொண்டமான் நகர், அம்பாள்புரம், விவேகானந்த நகர்  போன்ற குடியிருப்புகள் உருவாகின.  இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் அவதானத்திற்குரியது. அதாவது மலையகத் தமிழர்கள்  கிழக்கு பகுதியில் குடியேறியிருந்தாலும் அவர்கள் தமது அடையாளத்துடன் கூடிய குடியிருப்புகளை அமைக்கவில்லை. குறைந்த விலையில் கூடிய உழைப்பு என்ற விடயம்  வடக்கில் தேவைப்பட்டளவிற்கு கிழக்கில் தேவைப்படாமலிருந்தமை இதற்கான காரணியாகும்;. இந்தப் பின்னணியில், அதிகமானவர்கள் வடக்கில் தான் குடியேறினார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறிய பகுதிகள்; கிரவல் ப+மியாகவும், எல்லைப்புறங்களுமாகவே காணப்பட்டன. அப்ப+மியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறு குடியமர்த்தப்பட்ட  எல்லைப்புறங்கள் மேட்டு நிலங்களாகவும் காடுகளை அண்டிய பகுதிகளாகவும் காணப்பட்டமையினால் விலங்குகளின் தாக்குதல்களுக்கு உட்பட வேண்டிய நிலையும் உருவாகியது. இதன் மூலமாக வடக்கில் இருந்த மேட்டு குடியினர் இரண்டு விதமான நன்மைகளைப் பெற்றனர். ஓன்று விலங்குகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். மற்றது கிரவல் நிலங்களில் பயி;ர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள் தொடர்ந்து கூலியடிமைகளாக இருக்க கூடிய நிலைமையை உருவாக்கியது. இந்தப் பின்னணியில்  இவர்களின் உழைப்பு ஈவிரக்கமற்ற நிலையில் சூறையாடப்பட்டது. தர்மபுரம் என்ற இதயராசனின் கதை இதனை சிறப்பாகவே பதிவு செய்துள்ளது. அவ்வாறே இ. முருகையன், வதிரி. சி. ரவீந்திரன் முதலானோரும் தமது கவிதைகளில் இவற்றைப் பதிவாக்கியுள்ளனர்.  ‘மண்|‘ திரைப்படம் மலையக மக்களுக்கு வடக்கில் நடந்தேறிய கொடுமைகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது.

 மிக முக்கியமாக,  மலையகத்தவர்கள் தமக்கான பாதுகாப்புத் தேடி வடகிழக்கில் குடியேறிய போது அவர்கள் இழிவாகவே பார்க்கப்பட்டதுடன் அவர்கள் மிக மோசமான துன்பங்களுக்கு ஆளானார்கள். அத்துடன் அங்கு குடியேறிய மலையகத் தமிழரின் பண்பாட்டு பாரம்பரியங்கள் வடகிழக்கு தமிழரிலிருந்து வேறுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது. மலையக மக்கள் வடக்கில் குடியேறி குடியிருப்புகளை அமைத்து வாழ முற்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் மலையகத் தமிழர்களாகவே அடையாளம் காணப்பட்டனர்.

2.3. மலையகத்திலே வாழ்தல் என்ற தீர்வு:

மலையக மக்கள் மீதான இன அடக்கு முறைகள்- வர்க்க அடக்கு முறைகள்- பிரதேச அடக்குமுறைகள்; காரணமாக அம்மக்களிடையே தாம் தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வு உருவாகியது. இந்நிலையில் மலையக தமிழர்களின் இருப்புக்கான தீர்வானது மலையகத்திலே தங்கியிருத்தல் என்பதே யதார்த்தமானதாக இருந்தது. இவ்வுணர்வை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பார்க்கின்றபோது அவை குறுகிய வாதமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் அவ்வுணர்வு வெறுமனே நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல் பொருளாதார கலாசார பாரம்பரியம் என்ற குறுகிய எல்லையை கடந்து அது ஒரு கலகக் குரலாகவும் வெளிப்பட்டுள்ளதை காணலாம். மலையக மக்கள் தேசிய இனம் என்ற உணர்வு பிரதானமாக அவர்களது இன அடக்கு முறைக்கு எதிரான குரலாகவே வெளிப்பட்டு நிற்கின்றது.  தேசியம் என நாம் கூறுகின்ற போது அதனை பிரதிபலிக்கின்றவர்களின் இலட்சியம், நோக்கம் முதலியவற்றையும் சேர்த்தே எடைபோடவேண்டியுள்ளது. அந்தவகையில் தேசிய உணர்வு முற்போக்கானதா அல்லது பிற்போக்கானதா என்பதை தீர்மானிப்பதில்    மனித வாழ்வும் அவற்றை தீர்மானிக்கும் சமூக சக்திகளும் முக்கியத்துவம் உடையதாக காணப்படுகின்றது. மலையகத் தேசியத்தைப் பொறுத்தமட்டில் அம்மக்கள் தங்களுடைய உழைப்பை தாரைவார்த்து உருவாக்கப்பட்ட மனித வாழ்வை பற்றியதாகவே உள்ளது. தாங்களும் மனிதப் பிறவிகள் என்ற குரலே மலையக தேசியத்தின் ஆன்மாவாக விளங்குகின்றது.
தொடரும்...... 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates