Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அரசியலில் முதுமையும் முதிர்ச்சியும் - ஜீவா சதாசிவம்


மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்  மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் வரை அரசியலில் தொங்கிக் கொண்டிருப்பதை   நாம் அவதானிக்கின்றோம். இதனால், பல அவதூறுகளையும் அவர்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஒருவருக்கு அரசியலில் முதிர்ச்சி இருக்கின்றதோ இல்லையோ ஆனால், அவர்கள் தாங்கள் முதுமை அடையும் வரை தொடர்ச்சியாக அரசியலில் தம்மை தக்க வைத்துக்கொள்வதற்கான முஸ்தீபுகளை கையாள்வதை  இலங்கை,  அரசியலில் நீண்ட காலமாக  அவதானிக்கலாம்.

 இதனை ஏன் அலச வேண்டிய தேவை ஏற்பட்டது என்று நினைக்கின்றீர்களா?
நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ஜோன் கீ கடந்த வருட இறுதியில் தான் பதவி விலக வேண்டும் என்று தீர்மானித்தார். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்நாட்டின் 38ஆவது பிரதமராக தெரிவு செய்யப்பட்ட இவர் 2016 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.  நியூசிலாந்து தேசியக் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். இதனை அறிந்த வேறு சில  பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களும் இவ்வாறு விலகுவதாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் மூலம் அறியக்கிடைத்தன. 

இதற்கு இவ்வாறான காரணம் ஒன்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'மக்கள் செல்வாக்-குப்பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு செல்வாக்கு இருக்கின்ற காலத்திலேயே உரிய சேவைகளை செய்து விலகிவிட்டால் அதற்கான பெறுமதி அதிகமே' என்று குறிப்பிடப்படுகிறது. இதனை வாசித்து கொண்டிருக்கும் போது இலங்கையை பற்றியும் இங்குள்ள பாராளுமன்ற நடைமுறைகள்இ கட்டமைப்புக்கள் பற்றியும் அதன் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் பற்றியும் அண்மைய கால செயற்பாட்டு பின்னணியுடன்  தேட வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளைவே இன்றைய 'அலசல்'...

ஒரு மனிதனின் தன்மையை அறிய வேண்டுமாயின் , அதிகாரத்தை கொடுத்துப்பார்த்தால் தெரியும். அவரை பற்றி  நாம் தெட்டத்  தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம் என்பார்கள். அதிகார  துறை சார் அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான கூற்றாகவே  கொள்ளலாம்.  அதிகாரத்தை அனுபவிப்பதற்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?  

1977ஆம் ஆண்டு தனது 69ஆவது வயதில் அதிகாரத்துக்கு வந்த காலஞ்-சென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தனா தனது அரசியல் வாழ்வின் எல்லைகளை அடிப்படையாக வைத்தே சகல விவகாரங்களையும் அணுகினார்.  அதன் தொடர்ச்சியாகவே  பிற்பகுதியில் வந்த பலர் அணுகினார்கள். தங்கள் வசதிக்கேற்ப அணுகிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுவும் மறுப்பதற்கில்லை.  அவர்கள் தங்கள் 'முதுமை' யின் போதான அரசியலையும் தக்கவைத்துக்கொள்ள தமக்கேற்றவகையில் கையாண்ட உத்திகள் இலங்கை அரசியலை பொறுத்தவரையில் மிக சுவாரஷ்யமானதே. இதற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவை  இங்கு குறிப்பிடலாம். தாம் பதவியில் இருப்பதற்காகவும் தனது குடும்ப அரசியலை ஆதிக்கப்படுத்துவதற்காகவும் தமது கட்சி சார், சாராத  பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை தன்னகப்படுத்தி மூன்றில் இரண்டு   பெரும்பான்மை என்ற போர்வையில் அரசியல் அமைப்பையே மாற்றியமைக்கும் முதிர்ச்சியற்ற ஒரு செயற்பாட்டை அவதானித்தி-ருப்பீர்கள். இவ்வாறானதொரு தொடர்ச்சியான போக்கு இளம் தலைமுறையினரை அரசியலுக்குள் எவ்வாறு  உள்வாங்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம். இளம் தலைமுறையினர்   உள்வர வேண்டுமாயின் அவர்கள்   முதுமை அடையும் வரை  காத்திருக்காமல் முதிர்ச்சியுடன் உள்வாங்கப்பட வேண்டியதொரு தேவை இருக்கின்றது. 

 அயல் நாடான இந்தியாவை நோக்கினால் அரசியலில் பெரும்பாலானவர்கள் முது-மையாகவே தெரிகிறார்கள். இளமையானவர்கள் உள்வாங்கப்பட்டாலும் அவர்கள் அரசியல் முதிர்ச்சிப்பெற்றவர்களாக அன்றி பரம்பரை அரசியலிலோ சினிமாவிலோ புகழ்பெற்றதனால் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். 

இலங்கையில் இவ்வாறான சுவாரஷ்ய போக்கிற்கு காரணம் அதன் பின்னணி என்ன? அதிகாரத்திற்கு வந்த பல தலைவர்கள் பதவிக்கு வரும் முன்னர்இ பதவிக்கு வந்தப்பின்னர் என்று பார்க்க வேண்டியதொரு தேவை இங்கு எழுகின்றது. அரசியலில் முத்திர்ச்சிபெற்று இருப்பது என்பது வேறு முதுமை வரைக்கும் இருப்பது என்பது வேறு. முதுமை வரைக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறே தவிர முதிர்ச்சி வரைக்கும் இருப்பது தவறு அல்ல. 

இந்த இடத்தில் சிக்மண்ட பிரைய்ட் (Sigmund Freud)  என்ற புகழ்பெற்ற உளவிய-லாளர்  இந்த முதுமை – முதிர்ச்சி பற்றி கூறியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்-டலாம்

ஒரு மனிதனைIQ  (Intelligence Quotient) அளவிடுவதற்கு உளவியலில் ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. ஒருவரது Mental age, Chronological / Biological age இவை இரண்டையும் தொடர்பு படுத்திப்பார்ப்பது சிறந்தது.  இங்கு Biological age ஒருவருக்குரிய வயது அதற்குரிய செயற்பாடுகளை குறிப்பதாக அமைகின்றது.  Mental age எனும் போது  மனித வயதுக்கு மேலான மூளை வயதைப் பற்றி குறிக்கின்றது. இவ்வாறான செயற்பாடே ஒருவரின் IQ நிலைமையை தீர்மானிக்கின்றது.

இந்த வாய்ப்பாட்டின் அடிப்படையில், அரசியலை நோக்கினால் தம்மை மூத்தவர்கள் என பிரசாரப்படுத்திக்கொள்பவர்கள் வயதில் முதுமையானவர்களாக இருப்பார்களேயன்றி  மூளை வயதிலும் முதிர்ச்சிப்பெற்றவர்களாக இருக்கிறார்களா? எனும் கேள்வியைத் தோற்றுவிக்கிறது.  அரசியலில் முதிர்ச்சிபெற்ற மக்கள் பிரதிநிதியை உருவாக்குவது என்பது கட்சியின் கட்டமைப்பிலேயே தங்கியுள்ளது.  கட்சி கட்டமைப்பு அதற்கு வழிவகுப்பதாக அமைய வேண்டும். இவ்வாறான நிலைமையே பிற்கால அரசியலில் முதிர்ச்சிப்பெற்றவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். 

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எடுத்துக்கொண்டால், அரசியல்வாதி என்ற ரீதியில் அவர் சிறந்த முதிர்ச்சிபெற்றவராக இருப்பதைக் காணலாம்.   பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும் அதனையும் தாண்டி இன்று பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அவர் இளைஞராக இருந்த  காலத்திலேயே கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு அந்த அரசியலுக்குள் நுழைந்தமையே பிரதான காரணமாக அமைகின்றது. திடீரென  வெற்றிடத்துக்கு நிரப்பப்பட்டவராக அவர் வரவில்லை.

பல்கலைக்கழக காலத்தில் இருந்தே அரசியல் செயற்பாட்டில் இருந்து வந்தமையால் இன்று வரைக்கும் அவர் வந்த வழியிலேயே ஏனைய அரசியல்வாதிகளையும் உருவாக்கும் எண்ணத்தைக்கொண்டவராகவும் இருக்கின்றார். 

சமகால இலங்கைத்  தமிழ் அரசியல்  பின்னணியில் இரா. சம்பந்தனின் முதுமையும் முதிர்ச்சியும் குறித்து இங்கு அலசுவது பொருத்தமாகும். சம்பந்தன் முதுமை அடைந்திருப்பதால் அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என குரல்கள் ஒலிப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம். அவ்வாறு ஓரம் கட்டப்பட்டுவிட்டால் அவரை ஈடுசெய்யக்கூடிய அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் யார் இருக்கின்றார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.  அவரது முதிர்ச்சியே இன்றைய  தமிழ் மக்கள் அரசியலில் சில நகர்வுகளை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. 

ஆனால்,  தமிழ் அரசியலில் எந்தளவு முதிர்ச்சி பெற்றவராக சம்பந்தன் திகழ்கிறாரோ அதே முதிர்ச்சியினை எதிர்க்கட்சித்தலைவராக நாம் அவரிடத்தில் பார்ப்போமெனில், எதிர்க்கட்சித்தலைவரைவிட அதன் பிரதம கொறடாவாக  செயற்படக்கூடிய  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார முன்நிற்பதையும் மறுப்பதற்-கில்லை. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடுத்தபின்னரும் தான் கட்சி சார்ந்த, மக்கள் சார்ந்த பிரச்சினைகள்  பற்றி மாத்திரம் பேசுகின்றாரே தவிர தேசிய அரசியலை முன்வைப்பதில் ஒரு தேசிய எதிர்க்கட்சித்தலைவராக செயற்படுவதில் அவரது முதிர்ச்சி குறித்த கேள்வி எழுகிறது. 

மலையக அரசியல் சூழலில் காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான் முதுமை வரைக்கும் அரசியலில் இருந்ததோடு  அவர் ஒரு முதிர்ச்சிப்பெற்ற அரசியல்வாதியாகவே இறுதிநாள் வரை செயற்பட்டார் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால், அவருக்கு பின்னால் முதிர்ச்சி பெற்ற ஒருவரிடம் அவரது கட்-சியின் பொறுப்பை வழங்காமல் அவரது பரம்பரை சார்ந்த ஒருவருக்கு வழங்குகின்ற அவரது எண்ணப்பாடு  இன்றைய நிலையில் இலங்கை அரசியலில் இ.தொ.க வை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்ற வினாவுக்கு  இட்டுச் செல்கின்றது. மறுபுறத்தில் த.மு.கூ. புதிய அமைப்பாக உருவெடுத்தபோதும் அதிலும் ஏற்றத்தாழ்வு இருந் தாலும் அதற்குள் ஒரு அரசியல் முதிர்ச்சி தன்மை வெளிப்படுத்தப்படுவது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

இலங்கை முஸ்லிம் அரசியலின் பின்னணியை பார்தாலும் கூட அதன் பிரதான  கர்த்தாவான மர்{ஹம் அஷ்ரப்  முஸ்லிம் அரசியலை தோற்றுவிக்கும் போதே முதிர்ச்சி பெற்றவராக இருந்துள்ளார். தமிழரசுக்கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக இருந்துள்ளமையினால் அவர் முஸ்லிம்களுக்கான அரசியலை கட்டமைப்பதில் முன்னிலையில் செயற்பட்டிருக்கின்றார். அவரது மறைவுக்குப்பின்னர் கட்சியின் உள்ளேயும் வெளியேயும் பல பிரச்சினைகள் விமர்சனங்கள் வந்தபோதும் அஷ்ரப்பின் அரசியலின் ஊடே பயணித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று வரை கட்சியை வழிநடத்திச் செல்கின்றார். அதேநேரம் அவருக்கு ஈடாக செயற்பட்ட தலைமைப்பதவியையும் பொறுப்பேற்ற அம்மையார் பேரியல் அஷ்ரப்பை இன்று அரசியலில் காணக்கிடைக்கவில்லை. இது அரசியலில் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

 இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய முதுமை வரைக்குமான அரசியலையும் முதிர்ச்சியுடனான அரசியலையும் தீர்மானிக்கையில் பாராளுமன்ற கட்டமைப்பும் அதன் உறுப்பினர்களுக்கான சம்பளத்திட்டங்களும் செல்வாக்கு செலுத்துவதனையும் அவதானிக்கலாம். அதனை பிறிதொரு பத்தியில் பார்க்கலாம். இந்நிலையில் பொருளாதார ரீதியில் தம்மை தக்க வைத்துக்கொள்ள முடியாத புதுமுகங்கள் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகின்றார்கள் அல்லது தோல்வியை தழுவிக்கொள்கின்றார்கள். இவ்வாறான நிலையைப் பார்க்கும் போது செல்வாக்குப் பெற்ற பரம்பரையே தொடர்ச்சியாக நிலைத்திருக்கக் கூடிய தன்மையை  இந்த கட்டமைப்பு உருவாக்கியுள்ளது என்று கூறலாம். இதன் காரணமாகவே புது முகங்களும் வருவதற்கு தயங்குகின்றன. இதுவே   முதுமை அரசியலுக்கும் ஒரு  வாய்ப்பாக அமைந்து விடுகின்றது என்பது மறுப்பதற்கில்லை.

அரசியலை பிழைப்புக்கான தொழிலாகக் கொள்வதானால் ஆரோக்கியமான போக்குகள் ஒருபோதும் வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்காது.

நன்றி - வீரகேசரி


எங்கள் இனத்துக்குள்ளும் பல ஒடுக்குமுறைகள் இருப்பது கவலையளிக்கிறது - மல்லியப்பு சந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 11)

முள்ளுத் தேங்காய் பத்தாம் அத்தியாயத்தில் வன்னிவாழ் மலைகய மக்கள் தொடர்பில் அதற்கு முன்னர் எழுதப்பட்டவையும் அதற்கான பதிற்குறிகளுமாக தொகுக்கப்பட்டிருந்தது. கடந்த  வாரத்தில் முகநூலில் இடம்பெற்ற பதிற்குறிகள்  பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.  விடைகளை காண்பதற்கு விவாதங்கள் அவசியமானவை என்கிற அளவில் அந்த விவாதங்களை அவ்வாறே  விட்டுவிட்டு விடைதேடும் செயற்பாடுகள் தொடர்பில் இந்த அத்தியாயத்தில் கவனம் செலுத்தவும்.

கடந்த வாரம் வடமாகாண  மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து தமது  பிரச்சினைகள் தொடர்பான மனுவினை  சந்தித்து கையளித்துள்ளார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல்வாதி என்கிற அடிப்படையில் மலையகத்தோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் அவரை அரசியலுக்குள் அழைத்து வந்தவர்கள் பட்டியலில் ஜனநாயக மக்கள்  முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் முக்கியமானவர். இதனால் விக்னேஸ்வரன் அரசியலில்  தனக்கு மாணவர் என்கிற தொணியில் அமைச்சர் மனோ கணேசன் ஒரு முறை கருத்து கூறியிருந்தமை நினைவுக்கு வருகிறது.


அதே போல மீரியபெத்தை மண்சரிவு அனர்த்த்தின்போது  முதலமைச்சர் மலையத்திற்கு பயணித்து நிவாரண  உதவிகளை வழங்கியிருந்ததோடு  அதன்போது  பிரதேச அரசியல்வாதியொருவர் 'அவர் வேலையை அவர் பார்க்கட்டும் எங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என்கிற அடிப்படையில் பத்திரிகை அறிக்கை விட்டிருந்தமை பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.  மறுபுறத்தில் 'மலையக மக்கள் இயற்கை பாதிப்புக்குள்ளாகி  வாழ இடமின்றி தவித்ததால் வடக்கில் குடியேறலாம். நாங்கள் அவர்களை வரவேற்கிறோம்' என்ற முதலமைச்சரின் கருத்தும் கூட  வாதப் பிரதி வாதங்களுக்கு உள்ளானது  காரணம்  காந்திய இயக்கச் செயற்பாடுகளின் ஊடாக வன்னியில் குடியேறிய மக்கள்  முறையான வாழ்க்கைக்குள்  கொண்டுவரப்படாத நிலையில் முதலமைச்சரின் அழைப்பினை எவ்வாறு  நேரடியாக ஏற்பது என்பதே அந்த விவாதமாக இருந்தது.

இந்த விவாதத்தின் பின்னர்தான்  அது பற்றிய கவனத்தை முதலமைச்சம் பெற்றாரோ என்னவோ இடையில் வன்னியில் வாழும் மலையக மக்கள் வடமாகாண அதிகாரிகளினால் ஓரம் கட்டப்படுகிறார்கள் எனும் கவலையுடன் ஒரு முறை பேசியிருந்தார்.  அதன் பிறகாவது அவருடைய கவனம் வன்னி வாழ் மலையக மக்கள் மீது இன்னும் ஆழமான பார்வையாக விழுந்திருக்க வேண்டும்.  அதற்கிடையில் 'எழுக தமிழ்' போன்ற மரபு சார்ந்த எழுச்சிகளில் அதிகம் ஈடுபட்டதனால் என்னவோ வன்னிவாழ் மலையகத் தமிழ் மக்கள் குறித்த குரல் அவரிடத்தில் எழும்பவில்லை. ஆனால் வன்னிவாழ் மலையகத் தமிழ் எழுந்து சென்று அவரது  பிரச்சினைகள் அடங்கிய மனுவை கோரிக்கையாக முன்வைத்து தீர்வு கேட்டு நிற்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.  அது பற்றிய செய்திகள் புகைப்படங்களுடன் பிரதான நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்க குறிப்பாக அந்த மாகாண சபை முறைமைகளின் அதிகாரங்கள் குறித்த வட மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை சார்ந்து அதிகார அதிகரிப்பு குறித்து எழுகின்ற குரல்களுக்கு மத்தியில் வடமாகாண சபையானது வட மாகாணத்தின் முக்கிய அரசியல் தரப்பால் ஆளப்படுகிறது என்பது  அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகிறது.  அதே போல கிழக்கு ஆட்சியில் பங்காளிகளாகவும் உள்ளனர்.  இந்த ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு வன்னிவாழ் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட கூடியதா?  அல்லது இப்போதைக்கு இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட கூடியதா என்பது விவாதத்திற்கான இன்னுமொரு புள்ளி.  அது 'வடமாகாண மலையக மக்கள்  ஒன்றியம் முன்வைத்திருக்கும் கோரிக்கையின் உள்ளடக்கத்தின்  அடிப்படையில் தங்கியிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் வன்னியில் வாழும் எழுத்தாளர் கருணாகரன் நாளிதழ் ஒன்றுக்காக எழுதியுள்ள ஒரு பத்தியில் வடக்கில் அவயவங்களை இழந்ததனால மலம் கழிப்பதற்கு சிரமப்படும் ஒரு மாற்றுத்திறனாளி  தனக்கான தேவை குறித்து கருத்து  தெரிவிக்கையில்   'அரசியல் தீர்வு கிடைக்காததால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்  எண்டு சொல்லிணம்.  அரசியல் தீர்வு  வாறவரைக்கும் கக்கூசுக்கு போகாமல் இருக்க முடியுமோ? எனும் கேள்வியை  முன்வைத்தார் எனபதை  நினைவுப்படத்திச்   சொல்ல வேண்டியிருக்கிறது.

அதேநேரம் வடமாகாண மலையக மக்கள் ஒன்றியப்பிரதிநிதிகளை சந்தித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  'கூறியிருக்கும்  கருத்து அவதானத்துக்கு உரியது எங்கள் கூற்று இதனை ஒரு பத்திரிக்கை தலைப்பு செய்தியாகவே இட்டிருந்தது, நாமும்  அத்தியாயம்  பதினொன்றுக்கான தலைப்பாக அதனையே கொள்வோம்.

ஏனெனில் மேற்படி சந்திப்பு பற்றிய பதிவுகளை முகநூலில் இடுவதற்கு  முன்னர் சமூக ஆய்வாரள் ஏ.ஆர்.நந்தகுமார் முள்ளுத் தேங்காய் பத்தாம் அத்தியாயத்தை தனது முகநூலில் பதிவேற்றியிருந்தார். அதில் பதிற்குறியிட்டிருந்த யோகேஸ் ஜோ எனும் பதிவரின் வாதம் இவ்வாறு இருந்தது.

அவ்வாறான எந்த வேறுபாடுகளும் அற்றவகையிலேயே இங்கு மக்கள் வாழ்கின்றனர். விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறான சொற்பதம் பயன்படுத்தப்பட்டதே கிடையாது.  இன்று  தமது அரசியல் லாபத்திற்காக மக்களை சமூக அடுக்கமைவு ரீதியாக பிளவுபடுத்த முயற்சிப்பது உங்களைப் போன்ற கல்வியியளார்களுக்கு பொருத்தமற்றது. வடகிழக்கில் உள்ள  தமிழ் மக்கள் தொடர்பாக பிரதச நீதியிலான கட்டமைப்பினை உடைக்காமல்  உங்கள  வதிவிடம்சார் அபிவிருத்தி நோக்கிய வளர்ச்சிக்கு  உதவுங்கள்' என அந்த முகநூலில்  பதிவர் குறிப்பிடுகிக்றார். இது அவருடைய கருத்து மாத்திரமல்ல. பெரும்போக்கில் தமிழ்  ஒற்றுமை தமிழ்தேசியம் பேசும் மனநிலை கொண்டடோரது வெளிப்பாடு என்றும் கொள்ளலாம்.  அவருடனான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த கட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்த சி.வி. விக்னேஸ்வரன் கூறிய கருத்து இந்த பெரும்போக்கு தமிழர் ஒற்றுமை அல்லது தமிழ்த் தேசிய மனநிலை கொண்டோருக்கு ஒரு பதிலினை வழங்கியிருக்கக்கூடும்   அதுதான் வடமாகாண  முதலமைச்சரே 'எங்கள் இனத்திற்குள்ளும் பல ஓடக்குமுறைகள் இருப்பது கவலையளிக்கின்றது' என்று கூறுவதாகும்.  இவ்வாறு அவர் கருத்து கூறுவது முதற்தடவையுமன்று என மேலே கூறியிருந்தோம். ஆனால் இப்போது இந்த கருத்து எழுந்திருக்கும் தருணம் வித்தியாசமானது.  முதலமைச்சர் தாமாகவே ஒரு கருத்தினை முன்வைக்காமல் 'வட மாகாண மலையக மக்கள் ஒன்றியத்திடம்;'  இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.  எனவே அவரது கூற்றின் பின்னணியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பும் அவருக்குண்டு.

வடமாகாண மலையக மக்கள் ஒன்றியம் பற்றி அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கூறுகின்ற கருத்துகள் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியதே. முருகையா தமிழ்ச்செல்வன் எனும் முகநூல் பதிவர் அமைப்பைச் சேர்ந்த தங்கராசா என்பவர் சொன்னதாக எழுதும் பதிவில் 'யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கிளிநொச்சியில் குடியேறிய மக்களிடம் கேட்டால் தான் நெடுந்தீவு, புங்குடுதீவு, வடமராட்சி, தென்மராட்சி என்று தங்கள் பூர்வீகத்தை கூறுவார்கள்.  அவ்வாறுதான் நாங்கள் மலையகம் என எங்கள் பூர்வீகத்தை கூறுகின்றோம். இதில் என்ன பிரதேசவாதம் இருக்கிறது? இது எந்தவகையில் ஒற்றுமையைப் பாதிக்கப் போகிறது. ஆசிரிய சங்கம், கடற்றொழிலாளர் சங்கம், ஆட்டோச் சங்கம் போன்று இது எங்களுடைய  அமைப்பு. நெடுந்தீவு மக்கள் அமைப்பு என்று ஒரு அமைப்பு இருக்கிறது.  அவ்வாறே இதுவும் பிரிந்து செல்லுதல், பிரதேசவாதம் பேசுதல் போன்ற எந்த நோக்கமும் இல்லை. தமிழ் மக்களின்  தேசிய பிரச்சினைக்கு ஒற்றுமையாக சேர்ந்து உழைக்கும்  அதேவேளை எங்கள் மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பதே  பிரதான  நோக்கம். ஆசிரிய  சங்கம் எப்படி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கிறதோ அவ்வாறுதான்  எங்கள்  அமைப்பும்'  என்பதாக அந்த  பதிவு  அமைகிறது.  தங்கராசாவின் கூற்றில்  உள்ள  நியாயம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.


பழ.நாகேந்திரன் எனும் முகநூல் பதிவர ;இவ்வாறு  எழுதுகிறார். இனக்கலவரங்களினால் பிரிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக  மக்களின் நிலையை பன்னங்கண்டி காணி பிரச்சினை வெளிக்காட்டும் இவ்வாறான நிலையில்தான் கிளிநொச்சிப் பகுதியில், பல்வேறு இடங்களில் பெரும் நிலவுடமையாளர்களின் காணியில் கூலி வேலை செய்ய 'ஏதுவாக' குடியேறப்பட்டு மூன்று ;தசாப்பதங்களுக்கு மேலாகவும் அக்காணிகளில் வாழ்ந்தாலும்  இன்னும் நிலவுரிமையில்லை. அரச உதவிகள் பெறுவதில் சிக்கல் என பல்வேறு  பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறான  பிரச்சினைகளை இம்மக்கள் வடக்கு கிழக்கில்  எதிர்கொண்டுள்ளனர்.  தீர்வினைப் பெற்றுத்தர  அவர்களுக்கு துணை நிற்க  யாருமற்ற நிலையில்  இருப்பதை அவதானித்து அதற்கான தீர்வினை நோக்கியதே.  உரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழ் சமூகத்தின் விடுதலைப் போராட்டம் அழிவுகள் பாதிப்புக்கள்  என அனைத்திற்கும் பங்குகொண்ட இந்த  மக்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும்  நிலையினை  ஆட்சியாளர்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் எடுத்துக் கூற அமைக்கப்பட்டதே இந்த அமைப்பு என விளக்குகிறார்.

இந்த முகநூல் பதிவுகளை  முகநூல் அல்லாத வாசகர்களுக்காக பத்திரிகையிலே கொண்டுவருவதே இந்த பத்தியின் பிரதான இலக்கு.  ஏனெனில் தமது கோரிக்கையின் நியாயத்தை கோரும் தங்கராசா, பழ.நாகேந்திரன் போன்றவர்களின்  எழுத்துக்களை  பதிவுசெய்யும் ஊடக கலாசாரம் இன்னும் எழவில்லை என கொள்ளலாம். பிரமுகர்களின் மயிர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இன்னும் சாமான்யர்களின் உயிர்களுக்கு இன்னும் வழங்கப்படுவதில்லை மட்டுமல்லாது பிரமுகர்கள் கூறிவிடும் எல்லாத் தகவல்களும் கூட பிரசுரமாகியிடுவதில்லை.

வடமாகாண மலையக மக்கள் ஒன்றியத்தை சந்தித்த முதலமைச்சர்; 'தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு அமைப்புகள் இருப்பது போன்று வடக்குவாழ் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஒரு ஒன்றியம் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது.  ஆனால் இந்த மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவும், அதே வேளை தங்கள் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவும் இருக்க வேண்டும். என கேட்டுக்கொண்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. 

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் போன்று ' தனி அலகு' கேட்கிற அளவுக்கு போய்விடக் கூடாது என அவர் தரப்பில்  கோரிக்கை வைத்ததாகவும் அறிய முடிகின்றது.  அது பற்றி ஊடகங்கள் ஏதும் பேசியதாக தெரியவில்லை. ஆனால் அப்படி அவர் கருத்து கூறியிருந்தால்  மலையக மக்களின் கோரிக்கைகள் ஒரு எல்லைக்கு உட்பட்டதாகததான் இருக்க வேண்டுமா எனும் கேள்வியை தோற்றுவிக்கின்றது.  உத்தேச அரசியலமைப்புக்கு யோசனைகளை முன்வைத்த தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார். அதில் மலையக மக்களுக்கான  அதிகார பகிர்வு பேசப்பட்டுள்ளது. அது வடக்கு கிழக்;குக்கு வெளியே  வாழும் மலையக மக்களுக்கானது.  ஆனால் வடக்கு கிழக்குக்கு  உள்ளே  வாழ்பவர்கள் ஒரு எல்லைக்குள் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றதா எனும் கேள்வி  எழுகின்றது.

ஆனாலும் முதலமைச்சரின் கூற்றில் வெளியாகியிருக்கும் பின்வரும் பகுதி முக்கியமானது 'பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற போது எங்கள் இனத்திற்குள்ளுயும் பல ஒடுக்குமுறைகள்  இருப்பது  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றதா  எனும் கேள்வி  எழுகின்றது.

ஆனாலும் முதலமைச்சரின் கூற்றில் வெளியாகியிருக்கும் பின்வரும் பகுதி முக்கியமானது. பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற போது எங்கள் இனத்திற்குள்ளுயும் பல ஒடுக்குமுறைகள்  இருப்பது  
கவலையளிக்கின்றது.

என்கின்ற ஒப்புதல் வாக்குமூலம் முதலமைச்சர் என்கின்ற  பொறுப்பில் இருந்து கொண்டு சொல்கிறார் என்பது வன்னியில் வாழும் மலையக மக்கள் தனித்துவமான  பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்று மாத்திரமல்ல முள்ளுத்தேங்காய் தொடர் வெளிப்படுத்திவரும் விடயங்கள் யதார்த்தபூர்வமானவை என்பதை உறுதிப்படுத்துவனவாக உள்ளன.

அந்த வகையில் பெரியம்மா பற்றிய தென்னிந்திய வாழ்க்கை குறித்த பதிவுகள் இன்னும் கொஞ்சம் தாமதித்தே  வரும்போல தெரிகிறது.  அதுவரை வன்னியில் உள்ள கிராமங்களின்  பெயர்களே அங்கு வாழ்பவர்கள் மலையக மக்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருப்பதையும் அவர்களின் வீதாசார பரம்பலையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். அதுவரை தலைப்பினை மீண்டும் வாகிக்க
தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத் தேங்காய் எண்ணைக்கு..

உருகும்.

நன்றி - சூரியகாந்தி

டட்லி – செல்வா ஒப்பந்தம்: சந்தர்ப்பவாத ஒப்பந்தம் - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 9

1960 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பின்னர் இடதுசாரிக்கட்சிகளும் வந்து இணைந்ததும் மேலும் பலமடைந்தது.  அதன் பின் அவர்களின் ஆட்சியிருப்புக்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவு கூட தேவைப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் வழமைபோல காற்றில் பறக்கவிதுவதற்கு அரசாங்கத்துக்கு எளிமையாக இருந்தது.

சிறுபான்மை இனங்களின் உரிமைகளை எப்போதும் வற்புறுத்தி வந்த இடதுசாரி இயக்கங்கள் இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும், தமது அரசாங்கத்தில் தமது இருப்பை தக்கவைத்திருப்பதற்காகவும் தமிழர் விரோத போக்குகளை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமன்றி பல இடங்களில் சிங்கள இனவாத போக்கையும் கடைபிடித்தது.

இராணுவச் சதி
இன்றளவும் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் சிங்கள பௌத்தர்களல்லாதோர் இலங்கையின் மீது தேசப்பற்றில்லாத சதிகாரர்கள் என்கிற அபிப்பிராயத்தை வளர்த்து வைத்திருக்கிறார்கள். இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவமொன்றும் இதற்குக் காரணம்.

27.01.1962 நிகழவிருந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை சிறிமா அரசாங்கம் முறியடித்தது. இந்த இராணுவச் சதியில் பல கேர்னல்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். குறிப்பாக கடற்படை, தரைப்படை மற்றும் பொலிசைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இதன் பின்னணியில் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் சிங்கள கிறிஸ்தவர்களாகவும், தமிழர்களாகவும் இருந்தது தெரியவந்தது. இது சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான சதி என்று வியாக்கியானபடுத்தினாளும் இந்த சதியின் பின்னணியில் சேர் ஜோன் கொத்தலாவல உள்ளிட்ட ஐ.தே.க தலைவர்களின் ஆசீர்வாதம் இருந்தது. இதனை கே.எம்.டீ.சில்வா எழுதிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வாழ்க்கைச் சரிதத்தில் விளக்கிச் செல்கிறார்.

இந்த சதி நிகழும் முன்னரே தகவல் கசிந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிறிமா அரசாங்கம் அதிர்ந்து போயிருந்தது. பிற் காலத்தில் அதே சிறிமா 1971 இல் ஜே.வி.பி கிளர்ச்சியை இந்தியப் படைகளையும் அழைத்து  மோசமாக அடக்கியதன் பின்புலத்தில் இருந்த பீதியும் இந்த சதி அனுபவம் தான்.

லேக் ஹவுஸ் கவிழ்த்திய ஆட்சி
சிறிமா அரசாங்கத்துக்கு இருந்த இன்னொரு தலையிடி லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனம். அது ஐ.தே.க வுக்கு ஆதரவாகவும் சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வருவதாக கருதியது. ஐ.தே.கவுக்கும் லேக்ஹவுசுக்கும் இடையில் இருந்த குடும்ப உறவும் ஒரு காரணமாக அமைந்தது. லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரச உடமையாக்கும் முடிவு தனது ஆட்சிக்கே முடிவைத் தேடித்தரும் என்று சிறிமா அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.

இந்த தீர்மானத்துக்கு உடனடிக் காரணமாக இருந்தது ஒப்சர்வர் பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரம். சமசமாஜ கட்சி அப்போது சுதந்திரக் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பம் அது. அது பற்றிய கேலிச்சித்திரத்தில் என்.எம்.பெரேராவால் பிரதமர் சிறிமா  கர்ப்பிணியாக ஆக்கப்பட்டிருப்பதாக அந்தக் கேலிச்சித்திரம் அமைத்திருந்தது. இந்த கார்ட்டூன் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பத்திரிகையின் அறம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இடது சாரிக் கட்சிகளுக்கும் லேக் ஹவுஸ் பற்றிய நீண்ட கால பகை இருந்தே வந்தது.

03.12.1960 இரவு சிம்மாசனப் பிரசங்கத்தின் போது லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரசுடமையாக்கும் சட்டமூலத்தை பிரேரித்தது அரசாங்கம். இதே காலத்தில் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் செய்துவிட்டு வெற்றியுடன் திரும்பிய சிறிமாவுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருந்தது. அதே வெற்றிக் களிப்பிலேயே ஒரே மாதத்துக்குள் இந்த லேக்ஹவுஸ் தீர்மானத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட முயற்சிக்கு பலத்த அடி விழுந்தது.

இந்த வாக்களிப்புக்கு முன்னர் கொல்வின் ஆர்.டீ .சில்வா அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், துரைரத்தினம் ஆகியோரை பிரதமரின் அறைக்கு அழைத்து தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும்படியும் கோரியிருந்தார். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு கூடி இது குறித்து ஆராய்ந்தபோது அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று பெரும்பாலோனோர் எடுத்த முடிவின் படி எதிர்த்து வாக்களித்தனர்.

பலி தீர்த்த சாதியம்
சிறிமா அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சீ.பீ.டீ.சில்வா தலைமையில் 13 பேர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தனர். ஆதரித்து 73 பேரும் எதிர்த்து  74 பேரும் வாக்களித்தனர். ஒரே ஒரே ஒரு மேலதிக வாக்கினால் அரசாங்கம் கவிழ்ந்தது. பண்டாரநாயக்காவின் மறைவின் பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைவராக வரவேண்டிய தலைவர் சீ.பீ.டீ. சில்வா. அவரின் சாதி காரணமாக அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். அன்றைய தினம் அவர் உரையாற்றும் போது. “முதுகில் குத்தி விட்டார்கள்” என்று வேதனையுடன் உரை நிகழ்த்தினார். சுதந்திரக் கட்சியில் இருந்து அவருடன் வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் அவரது சாதியைச் சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும். இதன் போது குடும்ப உறவு எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பது பற்றி திவிய்ன (14.01.2014) பத்திரிகையில் அனுர யசமின் சுவாரசியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

இந்த தோல்வியைத் தொடர்ந்து சிறிமா அராங்கம் உடனடியாக இராஜினாமா செய்யவில்லை மீண்டும் பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதற்காக ஆதரவு தேடி கொல்வின் ஆர்.டீ.சில்வா அமிர்தலிங்கத்தை சந்தித்தார். உங்கள் கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறோம் அரசாங்கத்தைக் காப்பற்றுங்கள் என்றார். சிரேஷ்ட அமைச்சரொருவர் அதற்கான உத்தரவைக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். சுதந்திரக் கட்சியை நம்ப நாங்கள் தயாரில்லை என்று அமிர்தலிங்கம் உறுதியாக பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 7 அன்று பிரதமர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 22.03.1965 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது.
எஸ்மண்ட் விக்கிரமசிங்க
எவருக்கும் பெரும்பான்மை இல்லை
1965 மார்ச் 22 தேர்தலில் தமிழரசுக் கட்சி 20 தொகுதிகள் போட்டியிட்டது.  யு. என். பி. 66, எஸ். எல். எவ், பி. எஸ். ஏஸ். பி. 10, கம்யூனிஸ்ட் கட்சி 5 தமிழரசு 14 தமிழ் காங்கிரஸ்-3 ஏனையோர் 5 மொத்தம் 151. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. லேக் ஹவுஸ் எடிட்டோரியல் இயக்குனராக இருந்த  எஸ்மண்ட் விக்கிரமசிங்க யு. என். பி. யின் ஆலோசகராக இருந்தார். ஆட்சியமைப்பது பற்றிய இடைத்தூதராக அவர் செயற்பட்ட அவர் தமிழரசுக் கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் வந்திறங்கிய தந்தை செல்வா தன் வீட்டுக்குப் போனதும் விக்கிரமசிங்க அவரை சென்று சந்தித்தார். விக்கிரமசிங்கா தந்தை செல்வாவின் கீழ் வழக்கறிஞர் தொழில் பழகியவர். எனவே. அவரிடம் தந்தை செல்வா நேரடியாகச் சொன்னார். “உதவி தேவைப்படும் போது உதவியைப் பெற்று விட்டு பின்பு கைவிடுவது சிங்களத் தலைவர்களின் வழக்கம் இப்பொழுதும் அதையே செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேட்டார். இந்த முறை அப்படி நடக்காது என்று நான் உத்தரவாதமளிக்கின்றேன் என்றார் விக்கிரமசிங்க. டட்லியின் சார்பில் பேச விக்கிரமசிங்க அதிகாரம் பெற்றுள்ளார் என்பதை உறுதி படுத்திய பின் தமிழரின் முக்கிய நான்கு பிரச்சினைகளுக்கும் தீர்வு" டட்லி உதவுவாரா என்று கேட்டார். அதற்குரிய உத்தரவாத விக்கிரமசிங்க தந்தைக்குக் கொடுத்தார். அவர் கிளப்பிய பிரச்சினைகளும் இவை:
1.மொழிப் பிரச்சினை தமிழ் மொழி வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
2 நீதிமன்ற மொழி வடக்கு கிழக்கு மாகாணங்கவில் நீதிமன்றங்கள் தமிழ் மொழியில் இயங்க வேண்டும்.
3. மாவட்ட சபைகள் நிறுவப் படவேண்டும் அவற்றின் அதிகாரங்களை யு.என். பி. தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டும்.
4.குடியேற்றப் பிரச்சினையும் தமிழ் அரசாங்க ஊழியர் பிரச்சினையும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வதியும் பகுதிகள் சிங்களவர் மயமாக்கப்படலாகாது.
ஒப்பந்தம்
இந்த நான்கு விடயங்களிலும் தீர்வு காண விக்கிரமசிங்க இனங்கியதன் பின்புதான் டட்லி தந்தை செல்வா சந்திப்பு டாக்டர் எம். வி. பி. பீரிசின் வீட்டில் இடம் பெற்றது. தந்தை செல்வாவுடன் நாகநாதன், இராசமாணிக்கம், திருச்செல்வம். வி. நவரத்தினம் ஆகியோர் பேச்சில் கலந்து கொண்டனர். டட்லிக்கு ஜெயவர்த்தன. சுகதாச, விக்கிரமசிங்க ஆகியோர் உதவினர். முதல் மூன்று விடயங்களிலும் அதிகம் விவாதம் இடம் பெறவில்லை. குடியேற்றத் திட்டம் பற்றிய விடயத்துக்கு வந்ததும் டட்லி இணங்க மறுத்தார். இந்த சர்ச்சை நள்ளிரவு வரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது டெலிபோன் மணி ஒலித்தது. கவர்னர் ஜெனரலைச் சந்திக்க திருமதி பண்டாரநாயக்கா போய்க் கொண்டிருக்கிறார் என்கிற செய்தி எட்டியது.. தமிழரசுக் கட்சியினர் தன்னை ஆதரிக்கப் போவதாக சிறிமா கூறப் போகிறாராம் என்று சொன்னார். திருமதி பண்டாரநாயக்காவை ஆதரிப்பதாகச் சொன்னீர்களா என்று டட்லி கேட்டார். அப்படி ஒரு உடன்பாடும் இல்லை என்பதை உறுதிபடுத்தினர். ஆனால் டட்லியை அந்த செய்தி சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. தமிழரசுக் ஆதரித்தால் சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு இருந்தது டட்லிக்குத் தெரியும்.

இறுதியில் தமிழ்ப் பிரதேசங்களில் இனிமேல் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதில்லை என்கிற வாக்குறுதியைக் கொடுத்தனர். அதன்படி விக்கிரசிங்கவும், நவரத்தினமும் சேர்ந்து வாசகங்களைத் தயாரித்தனர். விக்கிரமசிங்கவே அதனை அங்கிருந்து தட்டச்சு செய்தார். அது தான் டட்லி – சேனநாயக்க ஒப்பந்தம். டட்லியும் – செல்வநாயகமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு எழுந்து நின்று கை குலுக்கி பரிமாறிக்கொண்டனர்.
தம்மை ஆதரிப்பதாக கவர்னரிடம் ஒப்படைப்பதற்கான ஒரு கடிதத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க செல்வநாயகம் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தையும் பெற்றுக்கொண்டனர். டட்லியின் கண்களைப் பார்த்து “நான் உங்களை நம்புகிறேன்” என்று சொன்னார். அதற்கு பதிலளித்த டட்லி “மூன்று தசாப்தங்களாக நான் அரசியலில் இருக்கிறேன் . கொடுத்த வாக்குறுதியில் என்றுமே பின் வாங்கியதில்லை” என்றார்.
கூடவே டட்லி ஒரு கோரிக்கையை வைத்தார். தேசிய அரசாங்கத்தை அமைக்கப்போவதாகவும் அதில் தமிழரசுக் கட்சி அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கூறினார். “சமஷ்டி ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தான் அமைச்சில் பங்கு பெறுவதாக முடிவு செய்துள்ளபடியால் அதனை மீற முடியாது” என்றார்.

அமைச்சில் பங்குபெற வேண்டும் என்று டட்லி தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து இறுதியில்; ஒருவரைத் தருகிறோம். அவருக்கு மாவட்ட சபைகளை உருவாக்குவதற்கான பொறுப்பைக் கையளியுங்கள் என்றார். டட்லி அதற்கு இணங்கினார்.

இது நிகழ்ந்து அடுத்த நாள் மார்ச் 25 அன்று சிறிமா சார்பில் என்.எம்.பெரேராவும் அனில் முனசிங்கவும் தந்தை செல்வாவின் வீட்டுக்குச் சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை அமுல்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் சிறிமாவுக்கு ஆதரவளிக்கும்படியும் கோரினார்கள். 1960 இலும் இதே வாக்குதியைத் தான் தந்தார்கள் அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று திருப்பி அனுப்பினார்.

கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தில் டட்லி, செல்வநாயகம், சீ.பீ.டீ.சில்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம், பிலிப் குணவர்த்தன ஆகியோர் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.  அதனைத் தொடர்ந்து டட்லியை ஆட்சியமைக்கும்படி கவர்னர் அழைத்தார்.

“சமஷ்டிக்குப் பின்பே பங்கு”
தமிழரசுக் கட்சி மந்திரிப் பதவிக்காக தம் தரப்பில் மு.திருச்செல்வத்தை
தெரிவு செய்தது. உள்நாட்டு அமைச்சர் பதவியைக் கோருவது என்று முடிவானது. ஆனால் அதனை தஹாநாயக்கவுக்கு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக உள்ளூராட்சி பதவியை எடுக்கச் சொன்னார்கள். அதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டது. கூடவே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் தொண்டமானை நியமன எம்.பி யாக நியமிக்க வேண்டும் என்ற தந்தை செல்வாவின் கோரிக்கையும் டட்லி ஏற்றுக் கொண்டார்.

பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கும் டட்லி – செல்வா ஒப்பந்தத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் போது ஸ்ரீ.ல.சு.க தரப்பில் இடதுசாரிக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பெரும் எடுப்பில் எதிர்த்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா, பீட்டர் கெனமன், என்.எம்.பெரேரா போன்ற இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தனர். இடது சாரிக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, இனப் பாரபட்ச போக்கும் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டப்பட்ட சந்தர்ப்பம் இது.

“டட்லியின் வயிற்றில் மசலே வடை”
தனிச்சிங்கள சட்டத்துக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்துக்காகவும் அன்று குரல் கொடுத்த அதே இடதுசாரிக் கட்சிகள் பின்னர்; தமிழ் மொழி பாவனை குறித்து டட்லி சேனநாயக்க உடன்பட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து “டட்லியின் வயிற்றில் மசலே வடை” (“டட்லிகே படே மசல வடே”) என்று கொசமெழுப்பியபடி தொழிலார் தினத்தில் ஊர்வலம் சென்றார்கள்.

டட்லி – செல்வா ஒப்பந்தமும் ஒரு சந்தர்ப்பவாத ஒப்பந்தம் என்பது குறுகிய காலத்தில் வெளிப்பட்டது. கூட்டரசாங்கத்தில் இருந்த கே.எம்.பி.ராஜரத்னா வின் ஜாதிக விமுக்தி பெரமுன (JVP - தேசிய விடுதலை முன்னணி), பிலிப் குணவர்த்தனவின் ‘மக்கள் ஐக்கிய முன்னணி” உள்ளிட்ட 7 அமைப்புகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து இருந்தன. அவை மோசமான சிங்கள தேசியவாத கட்சிகளாக இருந்தன. டட்லி ஆட்சியில் அடுத்தடுத்து நிகழ்ந்த வாக்குறுதி மீறலை அடுத்த இதழில் காண்போம்.

துரோகங்கள் தொடரும்...
டட்லி - செல்வா   ஒப்பந்தம் - 1965 மார்ச் 24

(மாவட்ட சபைக்கான ஒப்புதல்)
திரு. டட்லி சேனநாயகா அவர்களும், திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களும் 2431965ஆந் திகதி சந்தித்துத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக நடாத்திய பேச்சுவார்த்தைகளுக்கமைய, ஒரு நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் நிமித்தம் - கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள வற்றிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று - திரு. சேனநாயக்கா ஒப்புக்கொள்கின்றார். 
1. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும், அவற்றைத் தமிழிலேயே பதிவதற்கும் தமிழ்மொழி விஷேட விதிகளுக்கமைய - உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் - நாடு முழுவதிலும் தமிழிலேயே காரியமாற்ற உரிமையுள்ளவன் என்பதே - தன் கட்சியின் கொள்கை என்பதையும் திரு. சேனநாயக்கா விளக்கினார். 
2. வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள சட்டபூர்வமான நடவடிக்கைகளை நடாத்தவும், அவற்றைப் பதிவதற்குத் தமிழே நீதிமன்ற மொழியாக இருப்பதுதான் - தன் கட்சியின் கொள்கை என்று திரு. சேனநாயக்கா ஏற்றுக் கொள்கிறார். 
3. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரில், மக்கள்பாலுள்ள அதிகாரங்களுக்கேற்ப - இலங்கையில் மாவட்டசபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் தேசிய நன்மை கருதி, சட்டங்களுக்கமைய - மாவட்டசபைகளுக்கு மேலான அதிகாரங்கள் அரசாங்கத்துக் குண்டென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
இலங்கைப் பிரஜைகள் காணிப் பங்கீடுகளில் காணி பெறும் வண்ணம் - காணி அபிவிருத்தி விதிகள் திருத்தியமைக்கப்படும். 
குடியேற்றத் திட்டங்களில் காணிகள் வழங்கப்படும்போது - வட, கிழக்கு மாகாணங்களில் கீழ்காணும் விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும் எனவும் திரு. சேனநாயக்கா ஏற்றுக்கொண்டார். 
(அ) வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் - அம்மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கே முதலில் வுழங்கப் படல் வேண்டும். 
(ஆ) இரண்டாவதாக - வட, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ்பேசும் மக்களுக்கே வழங்கப்படல் வேண்டும். 
(இ) மூன்றாவதாக – இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கே முதலிடங்கொடுத்து ஏனையவர்களுக்கும் வழங்கலாம். 
(ஒப்பம்) டட்லி சேனநாயகா - 24-3-1965
(ஒப்பம்) எஸ்.ஜே.வி. செல்வநாயகம் - 24-3-965


புரோஹியர் கண்ட இலங்கை : (“அறிந்தவர்களும் அறியாதவையும்”) - என்.சரவணன்

ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர் (Dr. Richard Leslie De Boer Brohier)
ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர் (Dr. Richard Leslie De Boer Brohier 1892-1980) இலங்கை பற்றிய ஆய்ந்த முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். அவர் பறங்கி இன வம்சாவளி இலங்கையர்.

புரோஹியரின் பாட்டனார் 1777 இல் டச்சு கிழக்கிந்திய கம்பனியில் சேவையாற்ற வந்த கேப்டன் ஜீன் புரோஹியர். அவரது மகன் பீட்டர் ஐசாக் புரோஹியர் (Pieter Isaac Brohier). அவரது மகன் ரிச்சர்ட் அன்னஸ்லி புரோஹியர். அன்னஸ்லிக்கு 05.10.1892 அன்று பிறந்தவர் தான்  தான் ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர். இலங்கையில் ஐந்து தலைமுறைகளைக் கொண்டது அவர்களின் குடும்பம்.

ஆரம்பத்தில் றோயல் கல்லூரியில் கற்று பின்னர்  பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டம்பெற்று கலாநிதி பட்டமும் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த முதலாவது நில அளவையியலாளர் இவர் என்று கூறலாம். பிரித்தானிய இலங்கையின் கீழ்  பிரதி நில அளவை அத்தியட்சகராக 40 வருட காலம் கடமையாற்றினார். அதன் பின்னர் அப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு சுதந்திர இலங்கையில் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க கல்லோயோ அபிவிருத்தித் திட்டத்தின் தலைமை நில அள வையியலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவரது நிபுணத்துவம் காரணமாக தொல்லியல் ஆராய்ச்சிக்கென நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணைக்குழுவுக்கும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மொத்தம் 17 ஆய்வு நூல்களை அவர் வெளியிட்டார். அவை இலங்கைக்கு மிகப் பெரும் சொத்துக்கள். இவற்றில் பெரும்பாலானவை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல பதிப்புகளையும் கண்டிருக்கின்றன. அவற்றில் “இலங்கையைக் காணல்” (Seing Ceylon) என்கிற நூல் முக்கியமானது. அதில் அவர் எழுதிய முன்னுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“எனது தொலைநோக்கிக் கருவியையும், அளவெடுக்கும் கருவியையும் எடுத்துக்கொண்டு இலங்கையிலுள்ள சந்து பொந்துகளெங்கும் 40 வருடங்களாக திரிந்து சேகரித்ததன் விளைவு தான் இந்த நூல்....
இந்த அழகான தீவின் மீது நான் கொண்டிருக்கும் பக்தியும், கௌரவமும் மட்டுமன்றி இதன் வரலாறு, பண்பாடு குறித்து நான் கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாகவும் இந்த நூலில் எனது தனிப்பட்ட எண்ணங்களும் வெளிப்படுமாயின் மன்னித்தருளுங்கள்....”
நில அளவையியலாளராக நீண்ட காலம் சேவையில் இருந்த நிபுணர் என்பது மாத்திரமல்ல. இலங்கை பற்றி விரிவான பல ஆய்வு நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார். இலங்கை முழுவதும் மூலை முடுக்கெங்கும் அலைந்து திரிந்து அவர் ஏற்படுத்தித் தந்த தரவுகளை வைத்துத் தான் இன்றும் நில அளவையியல் திணைக்களமும், பல்வேறு ஆய்வாளர்களும் மேலதிகப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.


இலங்கையின் புவியியல் விவகாரங்களை அரசியல், வரலாற்று கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தவர் அவர். அவரது நூலில் 1833 இல் தமிழர் பிரதேசம் என்பது நாட்டின் அரைவாசிக்கும் மேலிருந்தததாக ஆய்வுகளின் மூலம் வரைபடமாக தனது நூலில் விவரித்திருக்கிறார். கிழக்கில் உள்ள பிரதேசங்கள் எவ்வாறு சிங்கள குடியேற்றங்கள் மூலம் புதிய சிங்கள ஊர் பெயர்கள் அதிகரித்தன என்பது குறித்தும் விளக்குகிறார். இன்றைய சிங்கள பிரதேசங்களாக இருந்தவை பல அன்று தமிழ் பிரதேசங்களாக இருந்தவையே என்பதை ஆராயும் பலருக்கு மூலாதாரங்களை அவரின் நூலிலிருந்து ஏராளமாக கையாளலாம். புரோஹியரைக் கொண்டாடும் சிங்களத் தரப்பினர் அவர் தமிழ் பிரதேசங்கள், தமிழர் வரலாறு பற்றிய தொல்பொருள் ஆதாரங்கள்  குறித்து கூறியவற்றை மூடிமறைத்தே வருகின்றனர்.

தமிழீழ பிரதேசமாக இன்று பேசப்படும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள எல்லைகள் உருவான விதம் குறித்து விபரமாக பல தகவல்களையும் தரவுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

"கொழும்பின் முக மாற்றம்" (“Changing Face of Colombo”) என்கிற நூலில் கொழும்பின் அமைப்பு தோற்ற மாற்றம் மட்டுமின்றி, குடிப்பரம்பலிலும், பொருளாதாரம் சார்ந்த மாற்றங்களையும் கூட விபரிக்கிறார். கொழும்பில் தமிழ் பரம்பலின் உருவாக்கம் பற்றி கூறும் விபரங்கள் கூட சுவாரஸ்யமானவை. இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் கொழும்பின் அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி பேசுகையில் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வரவு, அரேபிய சோனகர்களின் வரவு, சிங்கள முதலியார் மாரின் இடப்பெயர்வு என்பன கொழும்பின் மைய வியாபார, வர்த்தகத் தளத்தை  மாற்றியமைத்த விதத்தையும் குறிப்பிடுகிறார். இதன் போது சாதியத்தின் பாத்திரத்தையும் ஆங்காங்கு குறிப்பிடத் தவறவில்லை அவர்.

அவரது நூல்களில் கையாளும் தரவுகள், பட்டியல்கள், அட்டவணைகள், வரைபடங்கள் என்பன அந்த ஆய்வுகளின் ஆழத்தை பறைசாட்டுபவை.

பண்டைய நீர் பாசன திட்டம் பற்றி ஆராய்ந்த அவர் 13 ஆம் நூற்றாண்டுகளிலேயே குழாய் வழியாக நீர் செலுத்தும் (hydraulic) முறை இலங்கையில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்துப்போனார். மகாவலி கங்கை நீர் மட்டம் பெருகும் காலங்களில் அவற்றை திசைதிருப்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கையாண்டிருக்கிற வழிகளும் அவருக்கு வியப்பைத் தந்தது. அதன் விளைவாக அவர் மேற்கொண்ட ஆய்வையும் நூலாக வெளியிட்டார்.  அந்த ஆய்வு பற்றி வேறு பல நாடுகளும் அவரை அழைத்து விளக்க விரிவுரை நடாத்த கோரியது.

A map of the Gallefort designed by R. L. Brohier
1933இல் இலங்கையின் பண்டைய நீர்பாசன முறை பற்றி எழுதும் படி அன்றைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த டீ. எஸ்.சேனநாயக்க கோரியதன் பேரில் புரோஹியர் “The Ancient Irrigation Works of Ceylon” என்கிற நூலை எழுதினார். ஐந்தாண்டுகளில் மூன்று பாகங்களாக அவை வெளிவந்தன. அவை அரசாங்க வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டது. அந்த நூல் இலங்கையின் நீர் வள இயல் பற்றிய “பைபிள்” என்பார்கள் அத்துறை சார்ந்தவர்கள்.

1908 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை டச்சு பறங்கியர் ஐக்கிய கழகத்தில் 1953-1955 காலப்பகுதியில் அவர் தலைவராக இருந்திருக்கிறார்.

1703 இல் வெளியான பால்டஸ் பிலிப்புஸ் (Baldaeus, Philippus) இலங்கை பற்றி டச்சு மொழியில் எழுதிய முக்கிய நூலான “மலபார், கோரமண்டலம், இலங்கை தீவு பற்றிய உண்மைத் தகவல்” என்கிற நூலை புரோஹியரின் பாட்டனார் பீட்டர் ஐசாக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த முக்கிய நூலையும் நூலாசிரியரைப் பற்றியும் நிச்சயம் பின்னர் பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆவர் ஆற்றிய மாபெரும் சேவைகளின் காரணமாக இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்தின் சார்பில்  பட்டமும் விருதும் கொடுத்து கௌரவித்தது. அதுபோல ஒல்லாந்து அரசியால் அவரின் சேவைகளுக்காக பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.

இலங்கையின் வடிகாலமைப்பு, கால்வாய்கள், குளங்கள், காடுகள், நதிகள், மலைகள் பற்றிய அவரது ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மகத்தானவை. வடக்கில் உள்ள பல குளங்கள் கி.மு.வுக்கு முற்பட்டது என்கிற அவரின் தகவல்கள் மேலும் பல ஆய்வுகளுக்கு வழி திறந்து விட்டது.

ராஜரீக  ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Journal of the CEYLON BRANCH of the Royal Asiatic society) வெளியிட்ட பல இதழ்களில் அவரின் கட்டுரை பிரசுரமானது. ஆய்வாளர்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட அந்த கழகத்தின் ஆயுட்கால உறுப்பினர் மாத்திரமல்ல, முதல் பறங்கி இனத் தலைவராக புரோஹியர் இயங்கியிருக்கிறார். அவர் தலைவராக இயங்கிய காலத்தில் 1795-1800 காலப்பகுதியைச் சேர்ந்த இலங்கை பற்றிய அறிக்கைகளையும், ஆவணங்களையும் சென்னை (எக்மோர்) ஆவணப் பாதுகாப்பகத்திலிருந்து எடுத்து வந்து அதனை கால வரிசைப்படுத்தி தொகுத்து ஆவணப்படுத்தினார். ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயர்களிடம் கைமாறிய ஆட்சியதிகாரம் பற்றிய முக்கிய ஆவணங்கள் அவை.  “Chronological Catalogue of Letters and Reports on Ceylon Affairs” என்கிற தலைப்பில் புரோஹியர் பெருங் கட்டுரையொன்றையும் வெளியிட்டார். கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா எழுதிய “பிரித்தானிய ஆக்கிரமிப்பின் கீழ் இலங்கை” (Ceylon under the British Occupation) என்கிற நூலில் இந்த ஆவணங்களை அதிகம் கையாண்டிருக்கிறார்.

புரோஹியரின் மூன்று பிள்ளைகளும் இலங்கையில் பிறந்தவர்கள். அவரது மகள் யிவேத்த ஹெர்மன் கற்று மருத்துவராக சேவையாற்றி வந்த வேளை 1956இல் இலங்கையின் சிங்கள மட்டும் சட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி நியூ சீலாந்தில் குடியேறிவிட்டார் (இப்போது அவருக்கு வயது 98). ஒரு மகன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார். கடைசி மகள் டெலோரின் புரோஹியர் (Ms. Deloraine Brohier) இன்னமும் இலங்கையில் தான் வாழ்ந்து வருகிறார். அவரும் சில ஆய்வு நூல்களை வெளியீடுகளுக்கு சொந்தக்காரி.  இலங்கையில் பல பதவிகளை வகித்தவர். நெதர்லாந்தின் அரச வம்சத்து உயரிய விருதொன்று கூட அவருக்கு வழங்கப்பட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தின் விளைவாக தமிழர்களை விட பாரபட்சத்துக்கு உள்ளான சமூகம் பறங்கியர் சமூகம் தான் என்றால் மிகையில்லை என்றே கூறலாம்.
“சிங்களம் மட்டும் சட்டம் வந்த போது நான் மருத்துவராக கடமையாற்றிக்கொண்டிருந்தேன். சுகாதார திணைக்களம் எனது பணிகளுக்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்தது. சகலவற்றையும் இரு வழிகளிலும் மொழிபெயர்த்த பின்னர்தான் நான் கையெழுத்திட வேண்டி வந்தது. காலப்போக்கில் இது அசௌகரியமாக இருந்தது. ஆங்கிலச் சூழலில் பணிபுரிவது தான் உசிதம் என்று முடிவுக்கு வந்தோம். அதன் படி கணவருடன் நியுசீலாந்துக்கு இடம்பெயர்ந்தோம்.”
பறங்கி வம்சாவளியைச் சேர்ந்தவரான புரோஹியர் தான் பிறந்த இலங்கை மண்ணை அதிகம் நேசித்தார். தனது வாழ்நாளுக்குள் அவர்  இலங்கையர்களின் எதிர்காலத்துக்காக ஆற்றிவிட்டுச் சென்ற பணிகள் மகத்தானது.

இலங்கையின் பண்டைய கால வாழ்க்கை முறை, பண்பாட்டுமுறை என்பவற்றை அவர் சார்ந்த துறையின் வழியாக ஆழ்ந்தாய்ந்து நமக்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு வழி காட்டியவர் புரோஹியர்.

14.02.1980 இல் தனது 88 வது வயதில்புரோஹியர் காலமானார். 1987 ஆம் ஆண்டு அவரின் நினைவாக இலங்கை அரசு அவரின் முகம் பதித்த முத்திரையை வெளியிட்டது.

கீழே அவர் எழுதிய நூல்களின் பட்டியல் உண்டு. அவர் எழுதியா பல நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு ஆங்கில வெளியீடுகளில் உள்ளன.


  1. The golden age of military adventure in Ceylon : an account of the Uva rebellion 1817-1818 in 1933
  2. The Ancient Irrigation Works of Ceylon in three parts (1934/35), which was reprinted in 1949 and 1979.
  3. De Wolvendaalsche Kerk in 1938 and reprinted in 1938 and 1957.
  4. History of Irrigation and Colonisation in Ceylon in 1941.
  5. Lands Maps and Surveys Vol I and Vol II in 1951.
  6. The Gal Oya Valley Project in Ceylon in 1951.
  7. Seeing Ceylon in 1965 reprinted in 1971 and reprinted in 1981.
  8. Furniture in Dutch Ceylon in 1969 and reprinted in 1978.
  9. Discovering Ceylon in 1973 and reprinted in 1982.
  10. Food and the People in 1975
  11. Links between Sri Lanka and the Netherlands in 1978
  12. Changing Face of Colombo in 1984 (Posthumously)
  13. The Golden Plains in 1992 (Posthumously)
நன்றி - வீரகேசரி - சங்கமம்


"இலங்கையைக் காணல்" நூலை pdf வடிவில் இணைத்திருக்கிறேன்.
முழுமையாக வாசிக்க முடியும்.

Seeing Ceylon - Brohier R. L by SarawananNadarasa on Scribd

புதிய அரசியலமைப்பு; விழிப்புடன் செயற்பட வேண்டிய சமூகம் - சிலாபம் திண்ணநூரான்


புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான மாற்றுத்திட்டங்கள் மிகவேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மலையக அரசியல் வாதிகள், சமூகவியலாளர்கள், மலையகம் சார்ந்த அமைப்புக்கள், கல்வி சமூகம், மக்கள் என அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய காலகட்டத்தில் இருக்கின்றனர். மலையக அரசியல் கட்சிகள் அனைத்தும் பிளவுபட்டுள்ள நிலையில் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். சமூக அரசியல் நிலையை புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை 1948 இல் பேரினவாத ஆட்சியினரால் பறிக்கப்பட்டதன் பின்னர், 1977 முதல் 1987 வரை பெருந்தோட்ட மக்கள் மேற்கொண்ட அமைதிப் போராட்டத்தின் மூலம் மீளவும் கிடைக்கப் பெற்றதே வாக்குரிமையாகும்.

கடந்த பொதுத் தேர்தலின் போது பெருந்தோட்ட மக்கள் வழங்கிய வாக்குகளின் பயனாகவே ஒன்பது உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்கள். தமது அரசியல் இருப்பை அடையாளப்படுத்த இந்த மக்கள் கடந்து வந்த பாதை மிகவும் கஷ்டமானதாகும். எதிர்காலத்திலும் இச்சமூகம் கடக்கப் போகும் பாதையும் மிகவும் கரடுமுரடானதாக தோன்றும் நிலை உள்ளது.
21.07.1977இல் இடம் பெற்ற தேர்தலில் நுவரெலியா –மஸ்கெலியா தொகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 35743 வாக்குகளைப் பெற்று மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.ஐயாதுரை 3026 வாக்குகளை மட்டுமே பெற்று 4 ஆவது இடத்தைப் பெற்றார். இத் தெரிவின் பின்னரே இச்சமூகத்தினர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. 1977 ஆம் ஆண்டின் பின்னரும் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தப்படி நாடற்றவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் வாக்குரிமை கேட்டு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டம் காரணமாக 1986 இல் நாடற்ற ஆட்களுக்குப் பிரஜாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்டது. 1988 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க நாடற்ற ஆட்களுக்குப் பிராஜாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழான இலங்கைப் பிரஜாவுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மலையகத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வுத் தாக்கத்தின் பிரதிபலனாக மலையக பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடி வந்த தொழிற்சங்கங்கள் மலையக மண்ணை விட்டு தொலைந்து போயின. இன்றும் இச் சமூகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் காணப்பட்டாலும் தொழிற்சங்க தலைவன் இல்லாத ஒரு வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கமாக இச்சமூகம் உள்ளது.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் கணிப்பீட்டின் படி இம்மாவட்டத்தில் 5 இலட்சத்த 56 ஆயிரத்து 936 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். 2015 இல் இதே மாவட்டத்தில் 5 இலட்சத்து 48 ஆயிரத்து 971 வாக்காளர்கள் பதிவு இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரை 7 ஆயிரத்து 965 வாக்காளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்துள்ளனர். மலையக மக்கள் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் அடையாளப்படுத்தும் மாவட்டங்களாக களுத்துறை, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருந்தாலும் அரசியல் அவதானிகளின் பார்வையில் நுவரெலியா மாவட்டமே விழுகின்றது. பெரும்பான்மை இனக்கட்சிகள் இன்று விகிதாசாரத் தேர்தலை முற்றாக வெறுக்கின்றன.

புதிய அரசியல் சீர்திருத்தப்படி தொகுதிவாரியாக தேர்தல் இடம்பெற்றால் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரே தெரிவாகலாம். இதற்கான காரணங்களை பலவகையில் முன்வைக்கலாம். பழைய முறைப்படி மூவர் தெரிவு இடம்பெற்றால் இரு தமிழர் பெரும் கஷ்ட சூழலுக்கு இடையே தெரிவு செய்யப்படலாம்.

இன்றைய இச்சமூக அரசியல் வளர்ச்சியின் வேகத்தின் வாயில்படி நுவரெலியா– மஸ்கெலியா தொகுதி பல தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாக மாற்றம் பெற வேண்டும். நுவரெலியா, மஸ்கெலியா, கொட்டகலை, அட்டன், நோர்வூட் ஆகிய பிரதேசங்களின் நிலப்பரப்பு வாக்காளர் தொகைக்கு ஏற்றவகையில் பிரிக்கப்படல் வேண்டும். கொத்மலை– வலப்பனை, இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்படல் வேண்டும். இவ்வாறு கண்டி, பதுளை மாவட்டங்களிலும் மலையகப் பிரதிநிதிகள் தெரிவுக்காக இரட்டை அங்கத்தவர் தொகுதிகளை ஏற்படுத்தல் அவசியமாகும்.

இச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் மலையக அரசியலின் முகவரி தொலைந்து போய்விடும். இவ்வாறு செயற்பட்டால் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களை மிகவும் போட்டிக்கு மத்தியில் பெறலாம்.

இன்று சிறுபான்மைக் கட்சியினரின் இருப்பை உடைப்பதில் இனவிரோத சக்திகள் மிகவும் பிரயத்தனத்தையும் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகின்றன. மலையக கட்சிகள் தங்களின் அரசியல் விரோதத்தை விடுத்து சமூக இணக்கப்பாட்டை மேற்கொள்வதிலேயே சமூக அரசியலின் விடிவுகாலம் தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி

படித்தவர்களும் - பாராளுமன்றமும் - ஜீவா சதாசிவம்


இவ்வார பத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி நிலை பற்றி சில விடயங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 25பேர் மாத்திரமே பட்டதாரிகள் என்றும் 94 பேர்  சாதாரண தரத்தில் கூட சித்தியடையவில்லை என்றும் அண்மைய ஆய்வொன்றில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.ஓ.ஏ. டீ. சொய்ஸா இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு தொடர்பான விடயங்கள் வெளி வந்த பின்னர், ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை சீருடையில் மாணவர்களாக தம்மை உருவகித்துக்கொண்டு கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றிருந்தார்கள். இதனை முகநூலில் வெளியான சில புகைப்படங்கள் மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு சீருடையை அணிந்து விட்டால் மாத்திரம் தமது கல்வித்தரம் உயர்ந்து விடுமா?

 பாராளுமன்றத்தில், விமல் வீரவன்ச எம்.பி. தொடர்பில், பெரும் சர்ச்சையை கிளப்பிய தினேஷ் குணவர்த்தன  எம்.பி.க்கு  ஒரு வார கால தடை விதிக்கப்பட்டது. இது இம்மாத ஆரம்பத்தில் நடந்த சம்பவம். அன்றைய தினம் பொலிஸாரும் சபையின் உள்ளே பிரவேசித்தனர். பொலிஸார் உட்பிரவேசிக்கும் அளவுக்கு அமளி நிலவியது. இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இரண்டாவது தடவையாக இடம்பெற்றிருந்ததாக சபாநாயகர் இதன்போது எச்சரித்திருந்தார் என்பது சகலரும் அறிந்ததே. 

இவ்வாறான கூச்சல் சம்பவங்கள் இடம்பெறும் போது,  பாராளுமன்றத்தில் படித்தவர்களாக இருக்கின்றார்கள். இப்படி ஏன் மோசமாக நடந்துகொள்கின்றார்கள் என்பது பலரது கேள்வியாகவே இருக்கின்றது. இவ்வாறான சம்பவங்களின் பின்னர் தான் மேற்படி ஆராய்ச்சி தகவல்களும் அண்மையில் வெளிவந்தன. இதனை பற்றி அலசுவதே இந்தப்பத்தியின் நோக்கமாகிறது.  பொதுவாக பாராளுமன்றத்தில் எல்லோரும் படித்தவர்களாக  இருந்துவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது மக்களின் பிரச்சினைகள் பற்றி முழுமையாக பேசப்பட்டுவிடுமா? 

பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் கல்வித்தரம் என்று பார்க்கும் போது... க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரம் என்பது   கல்விக்கான ஒரு அளவுகோல் அல்ல. அவை ஒரு தடை தாண்டல் மாத்திரமே.  தலைமைத்துவ  ஆளுமைகள் உரிய இடத்திற்கு வரலாம். ஆனால், அவ்விடத்திற்கு வந்தபின்னர் அவர்களது ஆளுமையை தக்க வைத்துக்கொள்ள மக்களின் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றிய 'கற்றல்' என்பது இங்கு மிகவும் அவசியப்படுகின்றது.  எனவே பாடசாலை கல்வியை பெறுதல் என்பதும் ஒரு விடயம் பற்றி கற்றல் என்பதும் வெள்வேறான விடயங்களாகும். இதனை ஆங்கிலத்தில் சொல்லும் போது நுனரஉயவழைn என்றும்டுநயசniபெ என்றும் வகைப்படுத்தலாம். எனவே மக்கள் சபைக்கு வருபவர்களிடம் எதிர்பார்க்க வேண்டியது கற்றலே அன்றி கல்வித்தகைமை அல்ல. 

இன்று பட்டதாரியான பாராளுமன்ற உறுப்பினர்களில் எல்லோரும் திறமையானவர்களாக இருக்கின்றார்களா?   சாதாரண தரம் இல்லாதவர்கள் கூட சிறந்த அமைச்சர்களாக இல்லையா? ஒருவர் ஒரு துறைக்கு  வந்த பின்னர்  அதற்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொள்ளத் தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  இது எந்தவொரு  தொழில்துறைக்கும் பொதுவானதே.

அதேநேரம், அரசியலுக்கு இது மிகவும் பொருத்தமான விடயம். ஏனெனில், மக்கள் செல்வாக்கு பெற்ற எவரும், அரசியலுக்கு வரலாம் என்பதுதான் எமது   அரசியலின் தன்மையாக  இருக்கின்ற நிலையில் இங்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் எவரும் தெரிவு செய்யப்படுவதில்லை என்பதை நாம் அவதானித்து வருகின்றோம்.  தேர்தல் வேட்பு மனுவிலும் கூட கல்வித்தகைமை ஒரு கேள்வியாக முன்வைக்கப்படுவதில்லை.  இது ஒரு ஜனநாயக பண்பும் கூட. பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க சபை என்கின்ற வகையில் அங்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அத்துறை சார்ந்து பக்குவப்படுத்திக் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

 உதாரணமாக பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் உயர் தரத்தில் தேர்ச்சிபெற்றவர்களாக இருக்கின்றனர்.  ஆனால், அங்கு கூச்சல் குழப்பம் இல்லையா? குழுமோதல், சண்டை, சச்சரவுகள் இல்லையா?  அவ்வாறு இயங்குகின்றது என்று உத்தரவாதம் தரமுடியுமா? கடந்தவாரம் 'தூய்மையான அரசியல் ' பிரசார வார முன்னெடுப்பு ஆ12ஆ நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஏ ன்அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் சண்டை பிடித்துக்கொள்கின்றார்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் பாரhளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்பதாகும். 

இதன் மூலம் தெரியவருவதாவது, இவ்வாறு தெரிவாகின்ற 225 பேரும் படித்தவர்களாக ஒழுக்க சீலர்களாக இருந்து விடுவதனால் மாத்திரம் முழுநாடும் தூய்மையாகிவிடுமா?

கடந்த பாராளுமன்றத்தில்  இருந்த பட்டதாரியொருவர் அரசியல் நிகழ்ச்சியொன்றை தொகுத்தளித்து வருகிறார். அதில் உள்ள அரசியல் நாகரிகம் ஊடக விழுமpயங்கள் தொழில் வாண்மையானதா?
பாராளுமன்றம் என்றால் என்ன? அங்கு தெரிவாகி சென்றுள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று  அங்குள்ள கட்டமைப்புக்களை அறிந்து அதற்கேற்றாற்போல செயற்பட வேண்டும். தாம் தெரிவு செய்த துறை தொடர்பில் தேர்ச்சி பெறாத போதே அங்கு பிரச்சினை தலைதூக்குகிறது. 

பிரதேச ரீதியாக சற்று நோக்கும் போது, வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அங்குள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் படித்தவர்களாக இருக்கக் கூடும் ஆனால், அத்தனை பேரும் சேர்ந்து முன்வைக்கின்ற அரசியலின் ஊடாக பல வருடங்களாக   பேசப்படுகின்ற அவர்களின் மையச் சரடான  இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்ததா? அண்மைய தீர்வுகாண கூடிய சாத்தியம் இருக்கிறதா? முஸ்லிம் தரப்பிலும் இதே  நிலை.

இன்று மலையகத்தை பொறுத்தவரையில் படித்தவர்களின் அரசியல் பாராளுமன்றத்தில்  ஓரளவு பிரதிபலிப்பதாக சொல்லப்படுகின்றது. உண்மைதான். ஏனெனில் கடந்தகால பாராளுமன்றங்களைவிட இப்போது இடம்பெறுகின்ற காத்திரமான உரைகள் மூலம் இதனை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இதற்கு முன்னரான பாராளுமன்றத்தில் பட்டதாரி பாராளுமன்ற உறுப்பினர்கள்  இருக்கவில்லையா? கடந்த பாராளுமன்றத்திலும் கூட சட்டத்தரணியொருவர் எம்.பி.யாக இருந்தார். அவரால் உருப்படியாக எதையாவது செய்யக்கூடியதாக இருந்ததா?

உதவி தொழில் ஆணையாளராகவும் சட்டத்தரணியாகவும் இருந்தவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரும் தொழிலாளர் பற்றியதான சட்டரீதியான விடயத்தை முன்வைத்திருக்கின்றாரா?  

 இவ்வளவு காலமாக மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைபற்றிப் பேசப்படுகின்றது.   கடந்த காலங்களில்  பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்து நீண்ட அரசியல் பரம்பரையில் வந்த ஆங்கிலப்புலமை கொண்டவர்கள் முன்வைத்த தீர்வு  என்ன? தற்காலத்தில் தொழிலாளர் பரம்பரையில் இருந்து வந்த ஒருவர் வீட்டுரிமை, காணியுரிமை விடயத்தில் முன்னெடுத்திருக்கும் அரசியல் முனைப்புகள் என்ன?

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் நடத்தைகள் ' மக்கள் பிரதிநிதிகள்' என்ற அந்தஸ்துக்கு பொருத்தமற்றவையாக இருந்து வருகின்றன. இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகள் அவர்களின் கல்வி நிலை பற்றியதாகவே அறிய வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமா? எதிர்கால சந்ததியும் அதனை மோசமாக பார்க்கும் சூழல் கூட உருவாகின்றது. 

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பின்னர் அவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டு பெரும் பணம் சம்பாதித்து பின்னர் பாராளுமன்றத்திற்கு சென்று விட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றி இருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.  
இதே கருத்தினை இப்போதைய ஜனாதிபதியும் வலியுறுத்தி வருகின்றார். இதற்காக மதுஒழிப்பு, சூழலியல், போன்ற பல தேசிய சமூக விழிப்புணர்வுத் திட்டங்களை  தனது நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்திவரும் இவர் தனது வாழ்வை ஒரு கிராம சேவகராகவே ஆரம்பித்திருக்கின்றார். இதிலிருந்து அவரது பாடசாலைக் கல்வி எத்தகையானதாக இருக்கின்றது என்பதை ஊகிக்க முடியும். ஆனால், அதிக மக்கள் விருப்பில் தெரிவுக்குள்ளான ஜனாதிபதியாகவே இவர் திகழ்கின்றார்.  

இலங்கையில் ஜனாதிபதிகளாக இருந்தவர்களில் முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாஸவைப்பற்றி இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். கல்வித்தகுதி பற்றி பேசினால் அதற்குரிய தகைமை கொண்டவராக இருந்தாரா? இவர் தேர்ச்சிபெற்ற கல்வியியலாளராக இல்லாத போதும் அவரது தலைமைத்துவம் ஏனைய தலைவர்களை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக அமைந்திருந்ததை யாவரும் அறிவர்.  

தீய பிரகிருதிகளுக்கு வேட்பாளர் நியமனங்களை வழங்குவதில்லையென்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் பாராளுமன்றத்தில் பல துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் தோன்ற வாய்ப்பே இல்லை. 

எனவே பாராளுமன்றத்தில் படித்தவர்கள் என்று வரும்போது பாடசாலைக்கல்விக்கும் அதன் அடைவு மட்டங்களுக்கும் பொருத்தி பார்ப்பதல்ல முக்கியம். அது தனிப்பட்ட தலைமைத்துவப் பண்பு, வாழ்க்கை விழுமியங்கள், கற்றுக்கொள்ளும் ஆர்வம், நன்னடத்தை என்பதிலேயே தங்கியுள்ளது. 

நன்றி வீரகேசரி


'மலையக மக்கள் என்பதால்தான் எங்களின் விடயத்தில் அக்கறையில்லையா? - மல்லியப்பு சந்தி திலகர்

 (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 10) 

பாகம் 9 'பின்னபாருங்கோ' பலரையும் பின்னோக்கிப் பார்க்கச் செய்திருக்கிறது. அந்த அத்தியாயத்திற்கு வந்த பதிற்குறிகளில் சிலதினை மீட்டிப்பார்த்துக்கொண்டே பத்தாம் அத்தியாயத்திற்குள் செல்வோம். 

இந்த தொடரை ஆவலுடன், ஆர்வத்துடன் பிரசுரித்து வரும் 'சூரியகாந்தி' பத்திரிகையின்  பொறுப்பாசிரியர் சிவலிங்கம் சிவகுமாரின் முகநூல் பதிற்குறி இது: 

'காடுகளை அழித்து உயிர்கொடுத்து, பயிர் நாட்டு மலையகம் எனும் தேசத்தை உருவாக்கியவர்கள் என்றுதான் இத்தனை நாளும் அறிந்திருந்தோம். இப்போது என்னவென்றால் இவர்கள் வடபகுதிகளிலும் காடுகளை அழித்து உயிரைக்கொடுத்து விவசாய நிலங்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற வரலாறு இளையோருக்குப் புதியது. வடபகுதியில் குடியேறிய இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய ஆவணம் இதுவரை எவராலும் எழுதப்படவில்லை. இது முக்கியமான தொடர் (முகநூல் மார்ச் 15)

அதேபோல 'கருடன்' இணையத்தள ஆசிரியர் வரதன் கிருஷ்ணா பதிவு செய்திருக்கும் குறிப்பும் இங்கே குறிக்கத்தக்கது. அவர் இப்படி கூறுகிறார்:

'ஒரு அருமையான சரித்திர தொடராக இருக்கிறது. இந்த பதிவில் எந்த மாற்றத்தையும் சொல்ல முடியாது. அந்த வன்னி நிலப்பரப்பில் நானும் நீண்ட பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். உண்மையில் இந்த தொடர் ஒரு கருவாச்சி காவியமாக உருப்பெற வேண்டும். (முகநூல் மார்ச் 15). 

வரதன் மலையகத்தையும் தழுவியதான விடுதலை இயக்கமான ஈரோஸ் இயக்க செயற்பாட்டாளராக இருந்தவர். பி.ஏ.காதர் சிறையிலிருந்த காலத்தில் இவரும் சிறையிலிருந்தவர். எனவே இந்த வன்னி- மலையகத் தொடர்புகள் பற்றிய அவரது பதிவுகள் இந்த தொடருக்கு வலுசேர்ப்பன.

இதே கருத்தினை ஒட்டியதாக நமது மலையகம்.கொம் இணையத்தள ஆசிரியர் என்.சரவணன் மின்னஞ்சல் வழி செய்தியாக அனுப்பிய பதிற்குறியில் 'பல்வேறு புதிய தகவல்களுடன் தொடர் சென்றுகொண்டிருக்கிறது. இதனை நூலுருவாக்கும் எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள்' என அன்பாகக் கேட்டிருந்தார். 

உண்மையில்  இந்தத் தொடர் நூலுருவாக்கம் பெற வேண்டியது என்பதை மூன்று செய்தி ஆசிரியர்கள் அனுபவமிக்கவர்கள் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தருகின்றது. ஆய்வுக்கட்டுரை என்ற அடிப்படையில் சில இடங்களில் விஞ்ஞானபூர்வ தன்மை குறைவாக இருப்பதாக நான் உணர்கிறேன். இருந்த போதும் ஆரம்ப கட்டத்தில் தகவல்களாகச் சொல்லிச் சென்று அடுத்து நூலுருப் பெறும்போது அந்த குறைபாடுகளை நீக்க எண்ணுகிறேன். அதற்கு வாசகர்களின் பதிற்குறிகளாக் நான் எழுதிச்செல்லும் விடயங்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் குறிப்புகள் இருந்தால் பகிர்ந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். (அத்தகைய ஆவணங்களை 'சூரியகாந்தி' அலுவலகத்திற்கே அனுப்பிவைக்கலாம். பிரதி செய்துகொண்டு மீளவும் கையளிக்கப்படும்)

உதாரணமாக வட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானம் எனும் அத்தியாயத்தில் நான் குறிப்பிடுகின்ற 'ஹட்டன் தீர்மானம்' வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம். அது தொடர்பில் அந்த தீர்மானம் நிறைவேற்றுதலுடன் பங்கேற்றுக்கொண்ட சிலர் உயிரிழந்திருந்தாலும் பலர் வாழ்கிறார்கள். சமூக இயக்கத்தில் இணைந்திருப்பவர்களாகவும் உள்ளார்கள். அந்த மாநாடு இடம்பெற்ற இடமும் தெரிகிறது. திகதியும் ஆவணமும் மாத்திரமே அவசியமாகிறது. 

இதுதொடர்பில் நான் அறியக்கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் எழுத்தாளர் மு.சிவலிங்கத்திடம் இருந்து அவர் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உப பீடாதிபதி வ.செல்வராஜாவும் அந்த தீர்மானம் நிறைவேற்றலில் பங்கேற்றுக்கொண்டார் என்கிற செய்தியையும் சொல்லியுள்ளார். இந்த இருவரும் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் என்ற வகையில் 'ஹட்டன் தீர்மானம்' குறித்த முக்கியமான பதிவினை அவர்களின் நினைவுப்பெட்டகத்தில் இருந்து எழுதவேண்டிய வரலாற்று கடமை இருக்கிறது. பல தடவை பகிரங்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்து வருகிறேன். 

அண்மையில் , லன்டன் சென்றிருந்த போது மலையக மக்கள் முன்னணி ஸ்தாபக செயலாளர் நாயகம் பி.ஏ.காதருடன் அதிகமாகவே உரையாடக் கிடைத்தது. அந்த உரையாடல் 'ஹட்டன் தீர்மானம்' தொடர்பில்  பல்வேறு முன்னேற்றங்களைத் தந்தது. அவர் பகிர்ந்துகொண்ட பல விடயங்களை இதற்கு முன்னதான அத்தியாங்களில் சேர்த்திருந்தேன். அவரும் நானுமாக லன்டனில் அவரது இல்லத்தில் இருந்த நூலகத்தில் ஒரு தேடுதலை நடாத்தியும் உரிய ஆவணம் கிடைக்கவில்லை. அவர் சிறைவாழ்வு புலப்பெயர்வு மாறிச்சென்றதில் கை நழுவியிருக்கலாம். 

ஆனாலும் தனது நினைவுப்பதிவுகளில் இருந்து அவர் கூறிய சில விடயங்கள் 'ஹட்டன் தீர்மானம்' தொடர்பிலான சில பெயர்களும் சம்பவங்களும் ஹட்டன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  திகதியையும் ஆவணத்தையும் பெறுவதற்கான ஆர்வத்தைத் தந்துள்ளது. பி.ஏ காதரின் கூற்றுப்படி அ.லோரன்ஸ் (மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம்) ஆசிரிய போதனாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான தேவசிகாமணி ஆகிய இருவரும் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்வதில் தீவிர அக்கறை காட்டியதாக சொல்கிறார். 

அதேநேரம் பத்தனை பகுதி ஆசிரியர் சமூக ஆர்வலர் டேவிட் மற்றும் கண்டியில் இருந்து இடம்பெயர்ந்து  கொட்டகலையில் வாழ்ந்த பிரான்ஸிஸ் ஆகியோரிடத்தில் இந்த ஆவணம் இருக்கக் கூடும் என்பதாகவும் சொல்கிறார். அதேநேரம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸி ல் பிரசுர பகுதிக்கு பொறுப்பாக இருந்த நாகலிங்கம்   என்பவரால் தன்னார்வமாக இந்த கையேடு அச்சிடப்பட்டு பகிரப்பட்டதாகவும் காதர் தெரிவிக்கின்றார். 

தேவசிகாமணியும் பிரான்ஸுசும் மறைந்துவிட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான் குறிப்பிடும் இந்த ஆவணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அவர்களது நூல் சேகரிப்பில் சிறிது நேரத்தைச் செலவழிப்பார்கள் எனின் அது கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதேநேரம் அந்த ஆளுமைகளின் வரலாற்று முக்கியத்துவமும் பதிவுக்குள்ளாகும் என நம்புகிறேன். 

இந்த ஆவணம் மற்றும் விவாதங்கள் கூட்டங்கள் சம்பந்தமாக இடம்பெற்ற இன்னுமோர் சுவாரஷ்யமான நிகழ்வும் இங்கு எழுதிச் செல்வது பொருத்தமானது. ஹட்டன் தீர்மானம் தொடர்பான விவாதங்கள் பல இடங்களில் இடம்பெற்றபோது யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றமை பற்றியும் அதில் மாவை சேனாதிராஜாவும் (தற்போதைய தமிழரசு கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்) பி.ஏ.காதரும் விவாதித்திருந்தமை பற்றியும் கூட கடந்த அத்தியாங்களில் குறிப்பிட்டிருந்தேன். 

இந்த விவாதத்தின்போது காதர் என்பவர் மலையகம் குறித்தும் மலையகமே எங்கள் தேசியம் என்பது தொடர்பிலும் விவாதித்திருக்கிறார் என கேள்வியுற்று அப்போதைய இளம் அரசியல்வாதியான வீ.புத்திரசிகாமணி காதர் பற்றிய விபரங்களைக் கேட்டு யாழ்ப்பாணத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதன்படி நுவரெலியாவில் இடம்பெற்ற கூட்டத்திற்கு வருகைதந்த பி.ஏ.காதர் தான் ராகலையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும்  ராகலையில் இருந்துதான் யாழ்ப்பாணம் சென்று பேசியிருக்கிறார் என்கிற செய்தியும தெரியவந்திருக்கிறது. இந்த தகவலை இப்போதும் அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டில் பங்குகொள்ளும் முன்னாள் அமைச்சர் வீ.புத்திரசிகாமணியும் உறுதிப்படுத்தினார். 

அத்தகைய ஒரு கூட்டத்திற்காக புத்திரசிகாமணி ஏற்பாடு செய்திருந்த நுவரெலியா நகரில் இடம்பெற்ற பேரணி தொடர்பான நிழற்படங்கள் அவரிடம் இருக்கின்றது. அதில் நாம் மலையகத் தேசியத்துக்கு உரியவர்கள் என்கின்ற பதாகைகளை ஏந்திச்செல்வது போன்ற நிழற்படங்கள் மிக முக்கிய ஆவணமாகிறது. 

இந்த நிழற்படங்களுடன் வீ.புத்திரசிகாமணியின் அரசியல் பயணப்பதிவுகளைப் பதிவு செய்யும் பெ.ஸ்ரீதரன் தொகுத்த 'மலையக தேசியம்' எனும் பத்திரிகை செய்திகளின் தொகுப்பு நூல் முக்கியமானது. 

குறித்த காலப்பகுதிகளில்தான் இலங்கை ஆசிரிய சங்கத்தில் உப செயலாளராக பொறுப்பேற்றிருந்த பி.ஏ.காதர் அவர்களுக்கும் ஆசிரியராக இருந்த வி.டி.தர்மலிங்கம் அவர்களுக்கும் கூட தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் மலையக வெகுசன இயக்கத்தின் தேற்றமும் பின்னாளில் இந்த உரையாடல்களின் தொடர்ச்சி மலையக மக்கள் முன்னணி என்கிற கட்சியின் உருவாக்கத்தில் எத்தனை செல்வாக்கு செலுத்தி இருக்க முடியும் என்பதை உணரக்கூடியதாக இருந்திருக்கின்றது. 

இன்றைய நாளில் ஏன் வட்டுக்கோட்டை தீர்மானம்போல் அமைந்த ஹட்டன் தீர்மானத்தின் ஆவணம் அவசியமாகிறது எனில் மலையகத் தேசியம் கூர்மைப்பெற்று நாம் 'மலையகத் தமிழர்' எனும் அடையாளத்தை அரசியல் ரீதியாக உறுதி செய்யும் காலம் இப்போது சூழ்கொள்கிறது. ஆனால், அதனை ஏற்க மறுக்கும்,  மலையகத் தமிழ் மக்களை தனித்தேசிய இனமாக அங்கீகரிப்பதை தவிர்க்கச்செய்யும் தரப்புகள் தங்களது காழ்ப்புணர்வுகளை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் தமிழ் மிரர் ஆசிரியர் மதனின் 'தணிக்கை தகர்க்கும் தனிக்கை' நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்த 'இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிகராக மலையகத் தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான்.

 இதனை ஏற்றுக்கொள்கின்றபோதுதான் இலங்கையின் முழுமையான தேசிய பிரச்சினை சரியான தீர்வினை நோக்கியதாக இருக்கும்' என்கிற அவரின் கூற்றினை ஏற்றுக்கொள்வதில் சிலருக்கு சிக்கல் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கடந்தவாரம் முழுவதும் அமைச்சர் மனோகணேசனின் பதிவுகளில் மலையக தேசியம் குறித்த விவாதத்தினை அதிகம் அவதானிக்கலாம்.

எனவே மலையகத் தமிழர் மலையகத் தேசியம் சம்பந்தமான உரையாடல் இன்று, நேற்று உருவானதல்ல அதற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது என்பதனைக் காட்ட வேண்டிய தருணத்தில் 'ஹட்டன் தீர்மானம்'  தொடர்பான ஆவணங்கள் அவசியமாகின்றன. ('வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான ஆவணம்' இங்கே இணைக்கப்படுகின்றது). 

எனவேதான் இந்த தொடரின் விஞ்ஞான பூர்வதன்மை தொடர்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தேன். ஆவர்வமுள்ள வாசகர்கள் யாராயினும் இதுவிடயத்தில் பங்கேற்க முடியும்.

எது எவ்வாறொனினும் வாழும் ஆவணங்களாக அவ்வப்போது சிலர் தங்களது பதிற்குறிகளை தருவது இந்த தொடரை இன்னும் விரிவானதாக எடுத்துச்செல்ல வாய்ப்பாக அமைகிறது. 

பழ.நாகேந்திரன் எனும் முகநூல் பதிவர் இந்தத் தொடரின் 'பின்னபாருங்கோ' பகுதியயை வாசித்துவிட்டு தன்னை மலையக வம்சாவளி தமிழராக வன்னியில் வாழ்பவராக அறிமுகம் செய்துகொண்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 

'காந்தியத்தின் மூலமாக குடியேற்றப்பட்டவர்கள் வடக்கு – கிழக்கின் எல்லைக்கிராமங்களில் யானைக் காவலாளிகளாகவும் குடியேற்றங்களைத் தடுக்கும் அரண்களாகவுமே தொடக்க காலங்களில் செயற்பட்டு வந்துள்ளனர். அவர்களைக் குடியேற்றிய பகுதிகளைப்பார்த்தால் வளமான நிலமாக இருந்தாலும் நீர்ப்பாசன வசதியோ நிலத்தடி நீர்வசதியோ இருக்காது. நீர் வசதி இருந்தால் பயிரச்செய்கைக்கு உதவாத மண்ணமாக இருக்கும்'. 

'மலையகத்தில் இருந்து செல்வச் செழிப்புடன் இங்கு குடியேறி காணிகளை வாங்கி விவசாயம் செய்தவர்களும் இருக்கிறார்கள். 
பல்வேறு கால கட்டத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு வடக்கில் குடியேறியவர்கள் பெரிய முதலாளிகளின் கூலிகளாகவே வாழ்வை ஆரம்பித்தனர். கூலிகளாக வேலை செய்துவிட்டு சம்பளம் கேட்டபோது 'கள்ளத்தோணி' என காவல்துறையில் பிடித்துக்கொடுத்த கதைகளும் உண்டு'. (முகநூல் மார்ச் 15) 

இந்த வாக்குமூலம் முன்னைய அத்தியாத்தில் இந்தியாவில் அகதியாக வாழும் செல்லையா கொடுத்த வாக்குமூலத்திற்கு சமமானது. அவரது வாக்கு மூலத்தின் வீடியோ பதிவு www.namathumalayagam.com  இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

இளம் சமூக ஆய்வாளரான ஏ.ஆர். நந்தகுமார் இதற்கு இவ்வாறு பதிற்குறியிட்டிருந்தார்:

'வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் தங்களுடைய தேவையை உணர்ந்து 'வடமாகாண மலையக மக்கள் ஒன்றியம்', 'கிழக்கு மாகாண மலையக மக்கள் ஒன்றியம்' என அமைப்பு ரீதியாக தற்போது தங்களுடைய பிரச்சினைகளை முன்வைக்கும் வேளை இவ்வாறானதொரு பதிவு மேலும் விழிப்படையச்செய்யும் என்பதில் ஐயமில்லை. இனமோதல்களில் இடம்பெயர்ந்த அவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்ததுடன் தங்களுடைய வாழ்வாதாரங்களுக்காக இன்றும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். நாங்கள் எங்கு இருப்பினும் எங்கள் இன இருப்பைப் பேண போராட வேண்டியிருக்கின்றது' ( முகநூல் மார்ச் 15)

நந்தகுமாரின் இறுதி வரிகளுக்கு கட்டியம் கூறுமாப்போல் 'மலையக மக்கள் என்பதால்தான் எங்களின் விடயத்தில் அக்கறையில்லையா? ' - அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் பன்னங்கண்டி (கிளிநொச்சி) மக்கள் கேள்வி எனும் தலைப்பில் தினக்குரல் நாளிதழ் 17-03-2017 செய்தி வெளிட்டிருக்கின்றது. (இணைக்கபட்டுள்ளது). 
பன்னங்கண்டி கிராமத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இதுபோன்ற பல வன்னிக்கிராமங்களில் மலையகப் பின்புலங்களையும் அறிந்துகொள்ள அடுத்து வரும் அத்தியாயங்களை வாசிப்போம்.

 மட்டக்களப்பில் பன்சேனை எனும் எல்லைக்கிராம பகுதிகளில் 350 மலையகத் தமிழ் குடும்பங்கள் அரண்களாக குடியேற்றப்பட்டு அப்படியே அத்திப்பட்டிபோல அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியையும் பொறுப்பு வாய்ந்த ஒருவரூடாக அறியக்கிடைத்தது. இதுபோன்ற இன்னும் பல கிராமங்கள் பற்றிய பதிவுகளை வாசிகக் காத்திருங்கள்.

 அதுவரை தலைப்பை மீண்டும் வாசிக்க... (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய்க்கு)


நன்றி - சூரியகாந்தி

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates