Headlines News :
முகப்பு » » நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு தயாராகிவிட்டார்கள்

நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு தயாராகிவிட்டார்கள்நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிறுபான்மை மக்களுக்கு பல பிரச்சினைகள் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால், எந்த ஒரு அரசாங்கத்திலும் இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சினைகள் மகிந்த அரசு ஆட்சிக்கு வந்த 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரித்துள்ளது.

2005ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மலையக மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால், அவர் இந்த ஒன்பது வருட ஆட்சியில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால் இன்று மலையக மக்கள் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைவருமே இந்த அரசின் மிது பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, அரசியல்வாதிகள் கட்சி மாறினாலும் மாறாவிட்டாலும் மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையிழந்து நாட்டில் ஆட்சிமாற்றம் ஒன்றுக்கு தயாராகிவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருடனான பேட்டி வருமாறு;

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி மாறியமைக்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகவும் அரசாங்கத்தின் மீதுள்ள கோவம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உண்மையில் உங்களது கட்சித்தாவலுக்கு என்ன காரணம்?

பதில்: நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக மலையக மக்களுக்கு விசேடமான பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பிரச்சினைகளில் ஒன்றைக் கூட மாறி மாறி நாட்டை ஆண்டுவந்த அரசாங்கங்கள் கவனத்தில் எடுக்கவில்லை.

200 வருடங்களுக்கு முன்னார் ஆங்கிலேயர் கட்டிக்கொடுத்த லயன் வீடுகளிலேயே இன்றுவரை மலையக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட, மலையகம் கல்வியில் பின்தங்கியுள்ளது.

இன்று ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மலையக இளைஞர், யுவதிகள் கல்வித் தகைமைகள் இருந்தும் தலைநகரில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் அரச நிர்வாகம் மக்களிடம் சென்றடைவதற்கான சீரான ஒரு படிமுடிறை இல்லை. இவ்வாறு மலையகத்திலுள்ள பிரச்சினைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இன்றுவரை இந்தப் பிரச்சினைகளில் ஒன்றுக்குக்கூட தீர்வு எட்டப்படவில்லை.

1978ஆம் ஆண்டுமுதல் இந்த நாட்டை ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சி செய்துவரும் அதேவேளை, இவ்விரு கட்சிகளுடன் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தலைவர்கள் பலர் இருந்து வந்துள்ளனர் வருகிறார்கள். ஆனால், இவர்களால் மலையக மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கம்.

இன்று உள்ள மகிந்த அரசாங்கமும் மலையக மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக  தேர்தலுக்கு முன்னர் கூறியது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருந்த மகிந்த சிந்தனையில் மலையக மக்களினுடைய ஒவ்வொரு தோட்டத் தொழிலாளிக் குடும்பங்களுக்கும் காணி உறுதிப்பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச்சர்ஸ் காணி சொந்தமாக்கி தரப்படும் என்றும் அந்தக் காணியில் சொந்தவீடு அமைத்துக் கொடுப்போம் என்றும் கூறியிருந்தார். அதேபோல் 2010ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறிய பொழுது அதே கொள்கையை முன்வைத்தார். மகிந்த சிந்தனை வந்து 10 வருடங்கள் ஆகியும் கூட மலையகத்திலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளிகளுக்கு இற்றைவரைக்கும் காணி உரிமை கிடைக்கவில்லை. தனிவீடு கட்டிக் கொடுக்கப்படவுமில்லை. இவ்வாறு தேர்தலுக்கு முன்னர் பல விடயங்களை கூறிவிட்டு பின்னர் அவை தொடர்பில் அக்கறை காட்டாத இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையில்லா நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மாற வேண்டும், இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும், பாராளுமன்ற ஆட்சிமுறையை உருவாக்க வேண்டும் என்ற கோஷம் இன்று மேலெழும்பியுள்ளது. இதனையே நாமும் எதிர்பார்த்திருந்தோம். நாட்டுக்கு பயன்தரக்கூடிய இவ்வாறான நிலைமை ஏற்படும் பொழுது, அதைவிட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான ஒருவர் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டு நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி மலரவுள்ள சூழலில் எங்களுடைய மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தே அரசிலிருந்து விலகி ஐ.தே.க.வில் இணைந்துள்ளேன்.

கேள்வி: மலையக மக்களுக்கு பலர் வாக்குறுதிகளை வழங்கியிருந்த இந்த அரசு எதனையும் செய்யவில்லை என்று கூறியிருந்தீர்கள். ஆனால், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்களே! மலையக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசுடன் இவர்கள் ஒட்டியிருப்பது ஏன்?

பதில்: உண்மையில் இந்தக் கேள்வியை அந்த அரசியல்வாதிகளிடம் தான் கேட்க வேண்டும். மலையகத்தைப் பொறுத்தவரை மக்களுக்காக அரசியல்வாதிகள் வாழ்வதை விட, அரசியல்வாதிகளுக்காக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமேயே தற்போது காணப்படுகிறது.

பாதைகளைப் போட்டுவிட்டோம், மின்சாரம் பெற்றுக் கொடுத்துவிட்டோம், சிறு சிறு பாடசாலைகளை கட்டிக் கொடுத்துவிட்டோம் என்று கூறும் கோஷங்கள் மூலம் மலையகம் அபிவிருத்தியடைந்துவிடாது.

ஒரு ஜனநாயக நாட்டில் அபிவிருத்தி என்பது மக்களின் உரிமை. அதனைச் செய்து கொடுப்பது அரசின் கடமை. எனவே, இந்த அரசின் கடமை கூட மலையகத்துக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

இன்று மலையக அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் இல்லாதிருந்தாலும் அரசு ஏனைய பிரதேசங்களுக்குச் செய்யும் அபிவிருத்திகளை மலையகத்துக்கும் செய்திருக்கலாம். ஆனால், துரதிர்டவசமாக பல அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டும் நாம் குறைவான அபிவிருத்தியையே பெற்றிருக்கின்றோம்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் அரசுக்கு கிடைக்காது என்று தெரிந்தும் கூட, அங்கு பாரிய உட்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து கொண்டிருக்கிறது. ஆனால், மலையக மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தும் கூட அரசு அபிவிருத்தியில் மலையகத்தை கைவிட்டுவிட்டது.

எனவே, மலையக மக்கள் இன்று விழித்திருக்கிறார்கள். நிச்சயமாக அவர்களை இனி வெறும் வாய்ச் சொல்களால் மாற்றமுடியாது. அதன் பிரதிபலிப்பு நடைபெறவுள்ள தேர்தலில் வெளிப்படும்.

கேள்வி: மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதன் ஊடாக நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

பதில்: கடந்தவாரம் நாம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தோம். இச்சந்திப்பினூடாக அவர் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் பாரிய அக்கறை கொண்டிருப்பதை உணரமுடிந்தது. உதாரணமாக மலையகத்தின் கல்வி, வீடு காணி போன்ற விடயங்களில் அவர் பெரியளவில் அக்கறை கொண்டிருப்பதுடன், நவீன உலகுக்கு ஏற்றவாறான திட்டங்களை வைத்துள்ளார். அது எமக்கு சாதகமாக அமைந்திருந்ததுடன், ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டங்கள் ஆரம்பமாகும் என்றும் எமக்கு உறுதியளித்திருக்கிறார்.

எனவே, மைத்திரிபால சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதனூடாக அவருக்கு பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைக்கும் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஒரு கடப்பாடு ஏற்படும்.

எனவே, ஏதேச்சதிகாரம் கொண்ட தனிப்பட்ட ஒரு ஜனாதிபதியாக செயற்படாது அவர் இத்தேர்தலில் வெற்றியடைகின்ற போது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டு அவர்களுடைய கொள்கை, கோட்பாடுகளுக்கு தீர்வினை காணமுடியுமாக இருக்கும்.

அத்தோடு மலையக சமூகத்துடன் நான் நடத்திய சந்திப்புகளினூடாக நாட்டில் ஒரு மாற்றத்தை அவர்கள் விரும்புவதாக கூறியிருந்தார்கள். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை ஆதரிப்பதனூடாக எம்மக்களினுடைய அபிலாஷைகளுக்கு அடிகோலாக அமையும்.

எதிர்க்கட்சித் தலைவரின் திட்டம்

* நுவரெலியா ஐலண்ட்ஸ் கல்லூரி போன்று 25 கல்லூரிகளை மலையகத்தில் உருவாக்குதல்.
* 34 தோட்டங்களுக்கு இடையில் நகர்மயம் போன்ற கிராமத்தை உருவாக்கி அதைச் சுற்றி வீடுகளை அமைத்தல்

கேள்வி: சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு மகிந்த அரசில் தீர்வே இல்லையா?

பதில்: சிறுபான்மையின மக்களுக்கான பிரச்சினைகள் இன்று, நேற்று தோன்றியதல்ல. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சினைகள் இருந்த வண்ணமே உள்ளன. ஆனால், 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறுபான்மையின மக்களினுடைய பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

எனவே, மகிந்த அரசின் கடந்த ஒன்பதுவருட ஆட்சியில் பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றவே தவிர, குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, இந்த அரசாங்கத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எந்தக் காலத்திலும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அமையும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக இம்முறை தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கேள்வி: உங்களது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓரிருவர் மாத்திரம்ஆளும் கட்சியை விட்டு எதிரணியில் வந்து சேர்வதனூடாக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமா?

பதில்: மாற்றம் என்பது தலைவர்களை வைத்து ஏற்படுவதல்ல. அது மக்களை வைத்துத்தான் ஏற்படும். இன்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். மலையக மக்களுக்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனுடன் சேர்த்து நாட்டு மக்களை உலுக்கிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வும் இன்று மலையக மக்களின் வாழ்வை மிக மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தக் கஷ்டங்கள் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிது சிறிதாக உயர்ந்து இன்று எட்டமுடியாத நிலையை அடைந்துள்ளது.

எனவே, இதனால் அரசியலுக்கும் எமது மக்களுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பொன்று ஏற்பட்டுள்ளது. மக்கள் இன்று மாற்றம் ஒன்று இந்த நாட்டில் ஏற்பட வேண்டுமென்று விழிப்படைந்துள்ளார்கள். நாம் கட்சி மாறினாலும் மாறாவிட்டாலும் மக்கள் மாறிவிட்டார்கள்.

எனவே, மக்களினுடைய முடிவிற்கிணங்க அரசு எனக்கு கொடுக்கவிருந்த பதவி மற்றும் சுகபோகங்களை உதறித்தள்ளிவிட்டு நான் என்னுடைய முடிவினை துணிகரமாக எடுத்திருக்கிறேன்.

எனவே, நாம் மாறினாலும் மாறாவிட்டாலும் மக்கள் இன்று ஒரு மாற்றத்தை விரும்பி தங்களுடைய எண்ணங்களை மாற்றிவிட்டார்கள் என்பதே இன்றைய நிலைவரம்.

நன்றி - தினக்குரல் 2014-11-30 - பேட்டி - ஜெயசூரியன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates