Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -3) - என்.சரவணன்


சிங்கள சமூக அமைப்பில் நிலவிய கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இந்த சம்பிரதாயம் இலங்கையில் சில பிரதேசங்களில் முஸ்லிம்களிடமும் பரவி புழக்கத்தில் இருந்தது என்கிறார் வினோதினி டி சில்வா (Cultural Rhapsody: Ceremonial food and Rituals of Sri Lanka, Vinodini De Silva, 2000). இந்த இந்த பழக்கம் சிலவேளை அரபு நாடுகளில் இருந்து 17 நூற்றாண்டில் வந்து சேர்ந்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அரபு தேசங்கள் சிலவற்றில் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது என்கிற கதையாடல்களையும் காண முடிகிறது முஸ்லிம் சமூகத்தில் இது எவ்வாறு இருந்திருக்கிறது என்பது பற்றி “இரு உலகங்களுக்கு இடையில்”  தலைப்பில் “முஸ்லிம் பெண்கள் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் விளக்கப்பட்டுள்ளது. (Between Two Worlds, published by the Muslim Women’s Research and Action Forum in 1999). அதில் இப்படி குறிப்பிடப்படுகிறது.
“முதலிரவின் போது படுக்கையில் விரிப்பதற்காக மணப்பெண்ணிடம் ஒரு வெள்ளைத்துணி கொடுக்கப்படும். மணமக்கள் பொதுவாக மணப்பெண்ணின் வீட்டில் தான் முதலிரவைக் கழிப்பார்கள். அதற்கடுத்தநாள் மணமகன் வீட்டார் கொழும்பிலுள்ள மணமகளின் வீட்டுக்கு காலை உணவுக்கு அழைக்கப்பட்டார்கள். சிகப்புப் பூக்களும் மஞ்சளும் மணமகனின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. மணமகள் “கற்புள்ளவள்” என்பதே அதன் பொருள். அம்பாறை போன்ற பிரதேசங்களில் “கற்புத்தன்மை” நிரூபிக்கப்பட்டதன் குறியீடாக மணமகளுக்கு தங்க நகைகள் பரிசளிக்கப்படும்.”
இப்படி திருமணத்தின் போது கன்னித்தன்மை நிரூபிக்கப்படுகையில் தாளம் இசைத்து கொண்டாடுவது மொரோக்கோ, துருக்கி, அசர்பைஜான் என பல நாடுகளிலும் இருந்திருக்கிறது (Encyclopedia of Islam, 1934). உலகப் பிரசித்திபெற்ற அரபுக் கதைகளின் தொகுப்பான “ஆயிரத்தொரு இரவுகள்” என்கிற இலக்கியத்திலும் இது பற்றி மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது. மணமகளின் தாயார் தனது மகள் கற்புள்ளவர் என்பதை தெரிவிக்க அந்த இரத்தக் கரைகளை அங்கு வந்திருக்கும் பெண் விருந்தினர்களுக்கு கொண்டு சென்று காட்டுவது அந்த நாடுகளில் சம்பிரதாயமாகவும் இருந்திருக்கிறது. பண்டைய யூதர்களிடமும் இப்படி வழக்கம் இருந்திருப்பதை வேதாகம “பழைய ஏற்பாட்டின்” மூலம் அறிய முடிகிறது. இது தண்டனை வழங்கக் கூடிய ஒன்று என்றும் அறிய முடிகிறது.


பைபிள் - உபாகமம்,  அதிகாரம் 22
15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.

20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,

21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
இது நீண்ட கால மரபாக சிங்கள சமூகத்தில் நிலவியிருக்கிறதா அல்லது இடைக்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பழக்கமா என்பது பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. 17 ஆம் நூற்றாண்டின் இலங்கையின் சமூக பண்பாடு குறித்து அறிய ரொபர்ட் நொக்ஸ்ஸின் நூலைப் பயன்படுத்துவது வழக்கம். அவரது நூலில் இத்தகையை சம்பிரதாயங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அதேவேளை அவரது நூலில் இதற்கு எதிர்மாறான விபரங்கள் காணக்கிடைக்கின்றன. அதாவது திருமணம் செய்துகொள்ளும் பெண்ணானவள்; அதற்கு முன் இன்னொருவரின் துணைவியாக இருந்தாரா இல்லையா என்பது முக்கியமான ஒன்றல்ல என்று ரொபர்ட் நொக்ஸ் பதிவிட்டிருக்கிறார்.

சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.

அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

“கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் “முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது.

எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக கடும் உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அவர்களின் அச்சம் அப்பெண்களுக்கு தொற்றிகொண்டிருக்கும். இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு வழியில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
”ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னித்தன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பார்க்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான் நம்ப முடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.

இலங்கையில் நிலவும் பல்வேறு கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.

இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். 
"ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்?”

உசாத்துணை:
 1. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்.
 2. The Island 2000 மே,யூன் பத்திரிகைகள்.
 3. Virginity test — The young woman’s nightmare –  Zanita Careem - The Island  04.11.2001
 4. Virginity – the facts - Dr. (Mrs.) Sriani Basnayake – The Island – 26.11.2000
 5. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு
 6. உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை
 7. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம்
 8. க்ரியா தற்கால தமிழ் அகராதி.
 9. http://www.suntimes.co.za/1998/05/17/news/nets05.htm
 10. Along the Pricked Line  by  Durga de Silva - Thesis submitted to the Faculty of Graduate Studies of The University of Manitoba – 2012
 11. Between Two Worlds, published by the Muslim Women’s Research and Action Forum in 1999

நன்றி - அரங்கம்


அனர்த்த காலத்தில் புறக்கணிக்கப்படும் பெருந்தோட்டப்பகுதி - சிவலிங்கம் சிவகுமாரன்


2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தம் இலங்கையையே திரும்பிப்பார்க்க வைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளிலும் இயற்கை அனர்த்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவமாக அது பதிவானது.

இலங்கையின் பல பாகங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வந்தாலும் நிரந்தரமாக இயற்கை அனர்த்த அச்சுறுத்தல்கள் கொண்ட அபாய வலயங்களாக பெருந்தோட்டப்பகுதிகள் இன்னும் விளங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கு நூறு வீதம் பாதிப்பை எதிர்நோக்கும் மக்களாக தோட்டத்தொழிலாளர்களே விளங்குகின்றனர். காரணம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் தொடர்ந்தும் இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாவது விடயம் அக்காலத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான எந்தப் பாதுகாப்பு வழிமுறைகளும் இல்லாது மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் அமைக்கப்பட்ட இவர்களது குடியிருப்புகள். பலத்த மழை , காற்றினால் நூறு வருடங்கள் பழைமையான இவர்களது குடியிருப்புகள் சேதமுறும் அதே வேளை அபாயகரமான மண் சரிவு பிரதேசங்களிலும் தமது உயிரை பணயம் வைத்து இன்று வரை இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீரியபெத்த அனர்த்தம் இடம்பெற்றபிறகே பெருந்தோட்டங்களையும் தாண்டி நகர்ப்புறங்களிலும் பாதுகாப்பற்ற குடியிருப்புகள் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றனவா என அரசாங்கம் கவனத்தை திருப்பியது. கடைத்தொகுதிகளோ அல்லது குடியிருப்புகளோ அமைப்பதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற நியதி கட்டாயமாக்கப்பட்டது. இதே நிறுவனத்தினால் மீரியபெத்த பிரதேசம் அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அங்கிருந்தவர்கள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு வேறோர் இடத்தில் குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவெனில், மீரியபெத்த போன்றே மண்சரிவு அபாய வலயங்களில் வாழ்ந்து வரும் மலையகத்தின் ஏனைய பகுதிகள் குறித்து ஏன் எவரும் அக்கறை கொள்ளவில்லை என்பதாகும்.

அரசியல் பிரமுகர்கள் பேசுகிறார்களா?

அனர்த்தங்கள் இடம்பெற்றவுடன் அவ்விடத்துக்குச் சென்று பார்வையிடுவதுடன் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து உலர் நிவாரணப்பொருட்களை வழங்கி அதை படங்களாக எடுத்து பத்திரிகைகளில் போட்டு விடுவதுடன் சிலர் தமது பணிகள் முடிந்து விடுகின்றன என்று நினைக்கின்றனர். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொடுப்பதை உறுதி செய்தல் , அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்து வரும் ஏனையோரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கைளை எடுத்தல், குறித்த பிரதேசத்தில் வேறு எங்கேயாவது அனர்த்தம் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ள இடங்களை இனங்காணுதல் போன்ற விடயங்களை இவர்கள் சீர்தூக்கிப்பார்ப்பதில்லை. அதாவது இம்மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் பாதுகாப்பு வலயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டால் மாற்றிடத்தைப்பெற்றுக்கொள்வதில் இழுபறிநிலைகள் உருவாகும் என்பதால் அது குறித்து கதைப்பதற்கு இவர்கள் விரும்புவதில்லை. அரசாங்கத்திடம் இம்மக்கள் எதிர்கொள்ளும் இயற்கை அனர்த்த விவகாரங்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கொஸ்லாந்தை சம்பவம்.

அனர்த்தம் இடம்பெற்ற பிறகு அக்கறை

கொஸ்லாந்தை மீரியபெத்த சம்பவத்துக்குப்பிறகு அங்கு படையெடுத்த அத்தனை அரசியல் பிரமுகர்களும் ஒரு மாதத்தில் அனைத்தையும் மறந்து விட்டனர். இதன் காரணமாக அங்கிருந்து வெளியேறியவர்கள் மாற்று குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கும் வரை சுமார் இரண்டு வருட காலம் வரை முகாம்களிலேயே தங்கியிருந்தனர்.

அவர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக்கொடுப்பதிலும் பாதுகாப்பான காணியை பெற்றுக்கொடுப்பதிலும் ஏற்பட்ட இழுபறி நிலைகளே அதற்குக்காரணம். பல உயிர்களைக் காவு கொண்ட அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து மனஉளைச்சலுக்குள்ளாகி முகாம்களிலேயே முடங்கிக்கிடந்ததை அப்பிரதேசத்தில் உள்ளவர்களைத் தவிர வேறு எவரும் அறிய சாத்தியமிருக்கவில்லை.

விசேட வேலைத்திட்டம்

இது இவ்வாறிருக்கையில் கடந்த மூன்று மாதங்களாக மலையகப்பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் இப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாகப் பாதித்திருந்தது. பெருந்தோட்டப் பகுதி வாழ் மக்கள் பணிக்கு செல்ல முடியாத நிலைமைகள் ஏற்பட்டதோடு அவர்களின் குடியிருப்புகளும் மண் சரிவு பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் அனர்த்த காலத்தில் இம்மக்களை பாதுகாக்கவென மலையக மக்களுக்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை பிரதமர் ஜனாதிபதியூடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் முன்வைத்திருந்தார். பருவகால மாற்றத்தின் போது அனர்த்தங்கள் ஏற்படுவதும் பாதிப்புகள் குறித்து அறிக்கைகளைப்பெற்று நடவடிக்கை எடுப்பதும் ஒரு தற்காலிக நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.

மழை விட்டதும் அனைவருக்கும் எல்லாம் மறந்து போய்விடும். ஆனால் நாம் பாதிப்புக்கு முகங்கொடுத்தவர்களின் எதிர்காலத்தை கவனத்திற்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களே இன்று மலையகத்துக்கு அவசியமாகவுள்ளன.

ஆய்வுகள் அவசியம்

சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் பல அனர்த்த வலயங்களிலேயே அமைந்திருக்கின்றன. அந்த காலகட்டத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் போன்ற அமைப்பு இருக்கவில்லை. மேலும் தொழிலாளர்களைப்பொறுத்தவரை அவர்களிடமிருந்து உழைப்பை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. ஆகவே, மனிதாபிமானம் என்ற ஒன்று அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அதனால் தான் 10X10 அடி என்ற அறையாக லயன் குடியிருப்புக்களை அவர்கள் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுத்தனர். ஆனால், இன்று அப்படியல்ல தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காரியாலயங்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றன. இவர்களுக்கு உரிய கோரிக்கைகளை விடுப்பதன் மூலம் மாவட்டத்தில் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்கள் குறித்து அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

பிரதேச செயலகங்கள் ஊடாக

இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கேசரி வார வெளியீட்டுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் குறித்த ஒரு பிரதேசத்தில் அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை. எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்கு அனர்த்தம் இடம்பெறப்போகின்றது என்பது குறித்து எமக்கு ஆரம்பத்தில் கூற முடியாது. தொடர்ச்சியான மழை காரணமாக ஒரு சில இடங்களில் நில வெடிப்புகள் மண் சரிவுகள் ஏற்பட்டால் அவ்விடத்திற்கு நாம் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவ்விடம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதா இல்லையா என்பது குறித்த அறிக்கைகளை வழங்குவோம். மற்றும் படி பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் மண் சரிவு அபாயங்கள் இடம்பெறுகின்றன. சில நேரங்களில் பிரதேச செயலகங்களில் உள்ள அனர்த்த நிவாரணப்பிரிவினர் அவ்விடங்களுக்குச்சென்று தகவல்களை சேகரித்து எமக்குத் தருவர். ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்களைத் தேடி அறிவது கடினம் எனினும் பிரதேச செயலகங்கள் ஊடாக எமக்கு அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

செய்வார்களா?

இன்று மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் மாவட்டத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்,எம்.பிக்கள் ,மாகாண அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அரசாங்க அதிபரும் பிரதான இடத்தை வகிக்கிறார். ஆகவே பிரதிநிதிகள் இவ் அனர்த்தம் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் படி பிரதேச செயலகங்களுக்கு ஏன் அறிவுறுத்த முடியாது? மட்டுமன்றி பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனர்த்தம் இடம்பெறும் பகுதிகள் பற்றிய தகவல்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாகப் பெற்று அதன் அறிக்கைகளை நேரடியாகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரலாமே? தற்போது மலையகத்தின் சகல விதமான அபிவிருத்திக்கும் மலையக அதிகார சபை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே இந்த அனர்த்த முகாமைத்துவ செயற் திட்டத்தையும் குறித்த மலையக அதிகார சபையின் ஊடாகவே கொண்டு வருவதற்கு முயற்சித்தால் நேரடி பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளனவே அவை குறித்து பிரதிநிதிகள் செயற்படுவார்களா?

நன்றி - வீரகேசரி

மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது! - என்.சரவணன்


மகாவம்சத்தின் ஆறாம் தொகுதி கடந்த 16.08.2018 அன்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி வியஜதாச ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருக்கிறது. பல பௌத்த பிக்குமார்களும், அரசியல் தலைவர்களும், சிங்கள பௌத்த கல்வியியலாளர்களும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரையாற்றுகையில் இதுவரை கண்டெடுக்கப்பட்டு வரும் பல்வேறு தொல்பொருள் சான்றுகள் மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டே வருகின்றன என்கிறார்.

அன்றைய தினம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச “மகாவம்ச விவகாரங்களைக் கவனிக்கவென தனியான நிறுவனத்தை அமைக்கப்போவதாக உறுதிமொழியளித்தார்.
கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மகாவம்சத்தை உறுதிபடுத்திவருகிறதா அல்லது மகாவம்சத்தில் எழுதப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு நிறுவ முயற்சிக்கிறார்களா என்கிற கேள்வி நமக்குள் எழும். ஏனென்றால் இலங்கையின் இனப்பிரச்சினையில்  மகாவம்சத்தின் வகிபாகம் அப்படி. மகாவம்சம் ஏராளமான புனைகதைகளையும், நம்பமுடியாத புரட்டுகளையும் கொண்டிருகிறது என்பதை பல்வேறு ஆய்வாளர்களும் உரியமுறையில் அம்பலப்படுத்தியே வந்திருக்கிறார்கள்.

விஜயனிலிருந்தே சிங்கள சமூகம் இலங்கையில் தோன்றியது என்று கூறுகிற மகாவசம்சத்தை ஏற்றுக்கொண்ட பலர் இன்று “இல்லை இல்லை விஜயனுக்கு முந்திய இராவணன் பரம்பரை நாங்கள். இராவணன் சிங்களவர்களின் தலைவர்” என்று இன்று நிறுவ முயற்சிப்பதையும் நாம் காண முடிகிறது. அதற்கான காரணங்களில் ஒன்று விஜயனின் வழித்தோன்றல் பற்றியது. உதாரணத்திற்கு விஜயனின் தந்தை சிங்கபாகு சிங்கத்துக்குப் பிறந்தவர் என்கிற கதையும், சிங்கள இனத்தின் தோற்றம் பற்றிய விபரங்களும். அடுத்தது “விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்த இராவணன் என்கிற பேரரசனின் வழித்தோன்றலே நாங்கள், நாமே மூத்த மண்ணின் மைந்தர்கள், மற்றவரெல்லாம் அந்நியர்” என்கிற கருத்துருவாக்கத்தை விதைப்பதற்கும் அது இன்று தேவைப்படுகிறது.

மகாவம்சத்தின் தோற்றம்

இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட கணிசமான அளவிற்கு மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்கிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.

சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதம் தான் “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம். எப்படி இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை எவ்வாறு பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” தான் என்று நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணம் மகாவம்சம்.

கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் வழிவழியாக வாய்மொழியாக பேசப்பட்டு வந்த தகவல்கள் என்கிற போது அதன் நம்பகத் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடியும்.

அதில் கூறப்படும் பல கதைகள் விஞ்ஞானத்துக்கு புறம்பான வரலாற்றுக் குளறுபடிகளைக் கொண்ட புனைகதைகள் என்பதை உணராலாம். அது மட்டுமன்றி ஆட்சிசெய்த அரசர்களின் வயது, ஆட்சி காலம் என்பன பல இடங்களில் நம்பத்தகுந்தவை அல்ல. அவை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன.

எழுதிய மகாநாம தேரர் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே தான் எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால்  சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.

இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.

மொழியாக்கம்

கி.மு 543ம் ஆண்டு இந்தியாவிலிருந்து விஜயன் என்கிற இளவரசனின் வருகை தொடக்கம், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் காலம் வரையான பதிவுகளை மகாவம்ச மூல நூல் கொண்டிருக்கிறது.

மகாவம்சம் எழுதப்பட்டு 13 நூற்றாண்டுகளாக அது சிங்கள சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. மேலும் இன்று கூட மகாவம்சத்தின் முதல் ஆங்கில பிரதி பற்றி குறிப்பிடுகிற போது கெய்கரைத் (Wilhelm Ludwig Geiger) தான்  குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் அதற்கு முன்னரே குறைபாடுகளுடனேனும் மொழியாக்கம் நடந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் (Sir Alexander Johnston) மகாவம்சத்தின் ஓலைச்சுவடிகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவுக்கு 1809 ஆம் ஆண்டு அனுப்பிவைத்தார். 1826 ஆம் ஆண்டு ஒரு தோராயமான மொழியாக்கம்  லத்தீன் மொழியில் யூகேன் பூர்னோப் என்பவரால் (Eugène Burnouf ) வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பல குறிப்புகளுக்கு பிழையான விளக்கம் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று கூட இருந்தது.

இலங்கையின் முதலாவது மதக் கலவரமான கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்த 1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA)  என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்த பிரதியொன்றை அன்றைய ஆங்கிலேய அரசாங்கமே வெளியிட்டிருக்கிறது. அதில் அன்றைய தேசாதிபதி சேர் வில்லியம் ஹென்றி ஜோர்ஜின் ஆணையின் பேரில் வெளியிடப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது.

இவற்றிலெல்லாம் மொழிபெயர்ப்பு குறைபாடுகள் இருந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிவில் சேவைத்துறையில் பணியாற்றியவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். முதலியார் விஜேசிங்கவுடன் சேர்ந்து மொழியாக்கத்தில் உதவியவர் தான் ஜோர்ஜ் டேர்னர். 1889இல் அது வெளிவந்த போது அன்றைய இலங்கை தேசாதிபதி ஆர்தர் ஹமில்டன் கோர்டன் (Arthur Hamilton Gordon) இன் ஒப்புதலுடன் வெளியிடுவதாக முதல் பிரதியில் மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது. அதிலும் 

அந்த மொழிபெயர்ப்பிலும் போதாமை இருந்ததை சுட்டிக்காட்டித் தான் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. வில்ஹெய்ம் கெய்கர் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சரி பார்த்து வெளியிட்டார். கெய்கர் மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி சூளவம்சம் (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். இன்றும் கெய்கரின் மொழிபெயர்ப்பையே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பிரதியாக காண முடிகிறது. வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று ஆசிரியராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது.

மகாவம்சம் தொடர்ச்சியாக இலங்கையின் வரலாறாக எழுதப்படவேண்டும் என்கிற சிங்கள பௌத்தத் தரப்பின் வேண்டுகோளுக்கிணங்க அரசு உத்தியோகபூர்வமாகவே அந்த பணியை முன்னெடுக்க முடிவு செய்தது. அதன்படி மகாவம்சம் இன்றும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கான நிரந்தர அரசப் பணியகம் இயங்கிவருகிறது.


பேராசிரியர் சந்திர விக்கிரமகமகே திருத்திய "மகாவம்சம்" பதிப்பு 2016 ஜூன் மாதம் 14 அன்று பிரதமர் ரணிலிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் ரணில் கூறினார் "மகாவம்சம் இன்றேல் இந்தியாவுக்கும் வரலாறு இல்லை. இந்தியக் கொடியில் அசோக சக்கரமும் இருந்திருக்காது, அசோக சக்கரவர்த்தியை யார் என்று அவர்கள் அடையாளம் கண்டதே நமது மகாவம்சத் தகவல்களைக் கொண்டு தான்." என்றார். அன்றைய தினம் பிக்குமார்களை அழைத்து பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வை நடத்தியபோது மகாவசத்தின் பிந்திய அத்தனை தொகுதிகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்கான குழுவொன்றை ஏற்படுத்தும்படியும் அதற்கு நிதியொதுக்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இதுவரை மகாவம்சம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதைத் தேடிப்பார்த்ததும் இல்லை அதைச் செய்யச் சொல்லி கட்டளை இட்டதுமில்லை. அதில் அக்கறை காட்டியதுமில்லை.

அந்த பதிப்பானது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தகவல் பிழைகள் திருத்தபட்டதாகவும் அங்கு குறிப்பிடப்பட்டது. குறிப்பாக புதிய ஆராய்ச்சிகளின் படி “சிஹல தீப”, “சிஹலே” போன்ற பெயர்களில் இலங்கை அழைக்கப்பட்ட விடயங்களை சேர்க்கப்பட்டிருப்பது பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வப்போது மகாவம்சத்தை திருத்தும் (திரித்தும்) பணிகளும் கூட நிகழ்கிறது என்பதைத் தான் இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.


இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு “மகாவம்ச மனநிலை” முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கிறது. அதனை விதைத்ததில் இலங்கையின் கல்வித்துறைக்கும் முக்கிய பாத்திரமுண்டு.  மேற்படி கூட்டத்தில் வைத்து ரணிலைப் பாராட்டி பேராசிரியர் எஸ்.பீ.ஹெட்டிஆராச்சி இப்படி கூறினார்.
“மகாவம்சத்தைப் போற்றி பல இடங்களில் நீங்கள் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை 2001 ஆம் ஆண்டு நீங்கள் மத்திய கலாசார நிதியத்துக்கு தலைவராக இருந்த போது தான் மகாவம்சத்தின் சிங்கள, பாளி பிரதிகள் உடனடியாக தயாரிக்கப்படவேண்டும் என்கிற யோசனையைச் செய்தீர்கள். இப்போது இதோ நம்மிடம் அவை இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வரலாற்றுப் பாடம் கல்வித்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் நீங்கள் 1983 இல் கல்வி அமைச்சராக இருந்தபோது மீண்டும் வரலாற்றுப் பாடத்திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தீர்கள். அப்போது ஒரு பத்திரிகை “இனத்துக்காக ரணில் எடுத்த தீர்மானம்” என்று தலைப்பிட்டது. இன்னொரு பத்திரிக்கை “சாவின் விளிம்பில் இருந்த வரலாறுக்கு உயிரளித்த ரணில்” என்று தலைப்பிட்டது. என்றார்.
ரணில் இனவாதமற்ற ஒரு தலைவர் என்கிற பொது அப்பிராயம் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த மகாவம்ச மனநிலையால் பீடிக்கப்பட்ட பலருக்கு அப்படி தாம் பீடிக்கப்பட்டதே தெரியாது இருப்பதும் அந்த நோயின் அறிகுறிகளில் ஒன்று தான். இல்லையென்றார் ரணில்; மகாவம்சத்துக்கும் இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கும் உள்ள உறவென்ன என்பதை அறிந்திருப்பார்.

புறமொதுக்கப்பட்ட தமிழர்கள்

மகாவம்சத்தின் மூலப் பிரதி தான் பல புனைவுகளைக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பின்னர் இதுவரை 6 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன என்பாத்து கவனிக்கத்தக்கது. 2010ஆம் ஆண்டு மகாவம்சத்தின் ஐந்தாவது தொகுதி (1956 - 1978) முடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆறாவது தொகுதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் உத்தியோகபூர்வ வரலாறு இது தான் என்கிற அரச ஆவணமாகவும், புனித நூலாகவும் கூறப்படும் மகாவம்சம் இலங்கையின் ஓரினத்துக்கு மட்டுமே இன்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். வலுக்கட்டாயமாக இலங்கைக்குள் இணைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்; தம்மைப் பற்றி “அரசு” எத்தகைய வரலாறைப் புரிந்து வைத்திருக்கிறது? என்ன வரலாற்றை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வந்திருக்கிறது என்பது பற்றி அறிய எந்த வாய்ப்புமில்லை. இன்று வரை தமிழ் மொழியாக்கம் பற்றி தமிழர் தரப்பில் இருந்து கூட எவரும் நிர்ப்பந்தித்ததாகவோ, கோரியதாகக் கூட தகவல்கள் இல்லை.


இன்றுவரை தமிழில் கிடைக்கப்படும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே. அதே வேளை அரச அனுசரணையுடன் மகாவம்சம் (தொகுதி 1,2), தீபவம்சம் உள்ளிட்ட ஐந்து பௌத்த இதிகாச நூல்கள் ஜப்பான் மொழியில் கடந்த 14 யூலை 2017 அன்று புத்த சாசன, நீதித்துறை அமைச்சரான விஜயதாச ராஜபக்சவினால் அவரது அமைச்சில்  வெளியிடப்பட்டது. அம்பாறையிலுள்ள ஒரு விகாரையின் விகாராதிபதியாக இருந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜி.அசாமி என்கிற ஒரு பௌத்தத் துறவி தான் இவற்றை மொழிபெயர்த்து முடித்திருக்கிறார். மகாவம்சத்தை மேலும் 8 மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள மொழியில் மகாவம்சத்துக்கு பலர் உரை எழுதியிருக்கிறார்கள். சிங்கள நூல் விற்பனை நிலையங்களில் அத்தகைய  பல நூல்கள் காணக் கிடைக்கின்றன.

ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?
மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழுவில் அங்கம் வகிக்கும் 15 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, கலை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத  நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி. 

இதைத் தவிர மகாவசத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரை 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்கள ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.


2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே இப்போது 6வது தொகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010 வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.

சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதம் தான் மகாவம்சம். அது இலங்கையில் இதுவரை ஏற்படுத்திய நாசம் போதும். இதற்கு மேல் தாங்காது. தமிழ் அரசியல் சக்திகள் இதற்கு உரிய முறையில் வினையாற்றுவது முக்கியம்.

இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.
 • தொகுதி  1 -  இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் எழுதப்பட்டது
 • தொகுதி  2 -  கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை
 • தொகுதி  3 -  1815 முதல் 1936 வரை
 • தொகுதி  4 -  1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை
 • தொகுதி  5 -  1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை
 • தொகுதி  6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம்  முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை
 1. ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி (1978-1989)
 2. ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி (1989-1994)
 3. சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி (1994-2005)
 4. மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி (2005-2010)
 நன்றி - தினக்குரல் - 1
 நன்றி - தினக்குரல் - 2

சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -2) - என்.சரவணன்

பட்டறிவு
சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பாhக்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில் வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்ற சாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதர வர்க்கத்தினரிடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாயபூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்திய தரவர்க்த்தினரிடமே திருமணச்சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது.

இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச் சமூகத்தில் வணணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து சுருங்கி வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே உடுதுணி துவைப்பது சாதித் தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் உடுதுணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். அதற்குக் கீழ் உள்ள சாதியினரின் உடைகளைத் துவைக்க “பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார்.

இந்த உடுதுணி துவைப்பதை விடவும் உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை வேறு வழிகளில் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.

திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்து இந்த வெள்ளை விரிப்பில் காணப்படுவதன் மூலம் அவள் கன்னி என நிரூபிக்க அதுவே மிகச் சரியான சான்றென கருதப்படும்.

எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.

கன்னிப்பரிசோதனை சடங்கு

கன்னிப்பரிசோதனை மேற்கொள்ளும் சடங்கை “இச திய மங்கல்ய” என்று அழைப்பார்கள். ஆனால் அந்த சடங்கின் உண்மையான பொருள் “தலையில் நீர் வார்த்தல்” என்று கூறலாம். சில பிரதேசங்களில் “இச திய பலன்ட யாம”  என்றும் கூறுவார்கள். அதாவது “தலையில் நீர் பார்த்தல்” என்று தமிழில் அதனை மொழியாக்கம் செய்யலாம். சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். “றெதி நெந்தா” சென்று அந்த விரிப்பை பார்வையிடுவார் அல்லது மணமகனின் தாயாரோ, மூத்த பெண்ணொருவரோ கூட அதனைச் சென்று பார்வையிடமுடியும்.   இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் “றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் “தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) அந்த வெள்ளைத்துணியை இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.
 • மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்படுவாள்.
 • மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.
 • மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்கொத்தை அனுப்பி வைப்பார்.
 • மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும்.
 • மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப்பெண்ணை வரவேற்பாள்.
 • “றபான்’ தாளம் இசைக்கப்படாவிட்டால் அந்தப் பெண் “கற்பற்றவள்’ என்கிற செய்தியை ஊர் வாசிகளும் அங்கு கூடியிருப்பவர்களும் அறிந்துகொள்வார்கள்.

குறிப்பிட்ட அந்த வெள்ளைத்துணியை “கிரிகடஹெலய” என்று அழைப்பார்கள். அந்த வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரீட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அந்த அப்பாவிப்பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தம் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது “பரிட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில..
 • இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.
 • மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.
 • வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.
 • சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.
 • மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.
 • உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.
 • அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங் சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள்.
 • வாழைப்பழத்தை அடியியிலிருந்து தோலுரித்தல்.
 • விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அரிதாகவே நடக்கும்.)

“தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் “கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்ளில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது வன்மம்கொள்ளும் நிலைமையும் இருந்திருக்கிறது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் எப்படி நிலவியது என்பது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் பிளவா? - மலையகத்தான்


தேர்தல் நெருங்கும் காலங்களில் தேசிய அரசியலிலும், மலையக அரசியலிலும் காட்சி மாற்றங்கள் கட்சித் தாவல்கள் என்பன மிகவும் சாதாரணமாக நடைபெறுகின்ற ஒரு சூழலில் இலங்கையின் அரசியல் களம் உள்ளது. மாகாண சபைத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கின்ற இந்த நேரத்தில் மலையக அரசியல் கடந்த சில வாரங்களாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள் பிளவா என்ற கேள்வியைக்கேட்கத்தூண்டுகிறது.

கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் ஒரு சில கருத்து முரண்பாடுகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இந்த முரண்பாடுகள் அல்லது கசப்புகளுக்கு பிரதான காரணமாக அனைவரும் தற்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பக்கம் கை நீட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களாக அவரின் செயற்பாடுகள் அப்படி அமைந்து விட்டனவாக அனைவரும் தெரிவிக்கின்றனர். சரி அவர் அப்படி என்னதான் செய்து விட்டார்?

இ.தொ.காவின் உதவியைக் கோரல் 

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மலையக கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஊவா மாகாண கல்வி அமைச்சர்கள் தங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும், அதற்கு ஆறுமுகன் தொண்டமான் அனுமதி வழங்க வேண்டும் என்று நிகழ்வொன்றில் பேசியிருந்தார். அது குறித்த செய்திகளும் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

இந்தச் செய்தி வெளிவந்த ஒரு சில நாட்களிலேயே ஆறுமுகன் தொண்டமான் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த இரண்டு மாகாண சபை அமைச்சர்களும் ஏன் இதுவரை இணைந்து செயற்பட வில்லை என கேள்வி எழுப்பியதுடன், அவர்களை இணைந்து செயற்படுவதற்கும் பணிப்புரைவிடுத்தார். அதுவும் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.

இந்தச் செயற்பாடுகள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மத்தியில் ஒரு வித சலசலப்பை ஏற்படுத்தியமை என்னவோ உண்மை தான். ஆரம்ப காலத்திலிருந்து மலையக அரசியலானது எதிர்ப்பு அரசியல் செய்தே பழக்கப்பட்டு வந்ததால் இணக்க அரசியல் செய்வது எப்படி என்ற கேள்வி எழுந்ததே இதற்குக்காரணம். கல்வி இராஜாங்க அமைச்சர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை செய்தால் என்ன? ஏனிவர் இ.தொ.காவின் உதவியைக் கேட்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

எனினும் மத்திய அரசாங்கத்திலிருந்து தனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் கோடிக்காணக்கான நிதியை ஏனைய சமூகங்கள் அரசியல் பேதம் மறந்து ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ளும் அதே வேளை, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாவட்டம் மட்டும் இதில் பின் நிற்கின்றதே என்ற ஆதங்கத்திலும் நுவரெலியாவிற்கு அடுத்து அதிக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகள் உள்ள ஊவா மாகாணமும் தன்னை பயன்படுத்திக்கொள்வதில்லை என்ற அர்த்தத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சர் அவ்வாறு கூறியிருந்தார்.

குறித்த இரு பிரதேசங்களிலும் என்ன காரணங்களுக்காக தன்னை எவரும் இவ்விடயத்தில் அணுகவில்லை என்பதை அமைச்சர் இராதாகிருஷ்ணன் நன்கறிவார். ஆகையால் தான் தனது பேச்சில் அவர் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு சார்பில் மாகாண அமைச்சர்களான ராமேஷ்வரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோருடனான சந்திப்பு ஒன்றும் ஏற்பாடாகி இருந்தது.

இதுவும் தமிழ் முற்போக்குக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களான அமைச்சர்கள் திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் உட்பட ஆதரவாளர்களிடையேயும் புகைச்சலை ஏற்படுத்தியது.வே.இராதாகிருஷ்ணன் இ.தொ.கா பக்கம் இணைவதற்கே பேச்சு நடத்தப்படுகின்றது என்றும் கதைகள் பரவலாயின. ஒரு கட்டத்தில் மலையக கல்வி அபிவிருத்திக்கே இந்தச் சந்திப்பு என காரணம் கூறப்பட்டதால் மௌனம் காக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து இடம்பெற்ற நிகழ்வுகள் மேலும் பல விமர்சனங்களை எழுப்பியது.

பாராட்டு விழாவில் மாயமான தலைவர்கள்

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமைக்கு மலையக மக்கள் முன்னணி பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கட்சி பேதம் இன்றி அனைவரும் அழைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் கலந்து கொண்டார்.அவருடன் இ.தொ.கா வின் இன்னும் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதன் காரணமாக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் பழனி திகாம்பரம் இடையில் திரும்பிச் சென்றதுடன் தனது கட்சியின் எந்த ஒரு உறுப்பினரும் கலந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக நிகழ்ச்சி மேடைக்கு அருகில் வந்த மாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் உட்பட அந்தக் கட்சியின் அங்கத்தினர்களும் திரும்பி சென்றுள்ளனர்.கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.அவர் சார்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கலந்து கொண்டார்.இவருடன் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.இதே வேளை மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அரவிந்தகுமாரும் கலந்து கொள்ளவில்லை.மேற்குறித்த சம்பவங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருப்பதை இவை வெளிப்படையாக்கின. இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமும் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கிய விடயம். கட்சியில் தனக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமை தொடர்பாக அறிவிக்கப்படவில்லை என்றும் அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் சார்பாக கூறப்பட்டது.

வீடமைப்பு திட்ட நிகழ்வை புறக்கணித்த தலைவர்கள்

முன்னைய நிகழ்வு கட்சி ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்றாலும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட மலையக வீடமைப்புத்திட்ட நிகழ்விலும் இந்த புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. 12.08.2018 அன்று நடைபெற்ற பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 404 வீடுகள் திறப்பு விழாவில் கூட்டணியின் தலைவர் மனோகணேசன்,பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை இதற்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட்டணிக்குள் பூசல்கள் இருப்பதை உணர்த்துவதாகவே உள்ளது. மலையகப்பகுதிகளில் எந்த தேசிய நிகழ்வுகள் இடம்பெற்றாலும் அதில் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் மூன்று அமைப்பின் தலைவர்களும் கூடவே அக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதை வழக்காகக்கொண்டிருந்தனர். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது போன்றுள்ளது. இந்தக் குழப்பங்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பாதிக்கும் என கூட்டணியின் ஆதரவாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தனி வழியில் செல்வார்களா? அல்லது மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகுமா?அது தேர்தல் கூட்டணியாக மட்டுமே இருக்குமா?இப்படி பல கேள்விகள் மக்கள் முன் எழுந்திருக்கின்றது.

தேர்தலை மையப்படுத்திய கூட்டணியா?
தமிழ் முற்போக்கு கூட்டணியும் தனியாக தேர்தலை மையப்படுத்தி அமைக்கப்பட்ட கூட்டணியாகவே செயற்படுவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அதற்கு பல காரணங்களும் இருக்கின்றன. இதுவரை காலமும் கூட்டணியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு காத்திரமான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.மாதாந்த கூட்டமோ கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் அல்லது முன்னெடுப்புகள் தொடர்பாக தலைவர்கள் இணைந்து கலந்துரையாடியதாக எந்தவிதமான தகவல்களும் இல்லை.கூட்டணியாக செயற்பட்ட ஒரு சம்பவம் கலைஞரின் மறைவுக்கு அனைவரும் சென்று வந்தது மாத்திரமே தவிர வேறு எதனையும் காண முடியவில்லை.பிரதமருடன் அல்லது ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றால் தனியே தலைவர் மனோகணேசன் மாத்திரம் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கருத்து தெரிவிக்கின்றார் என்ற விமர்சனங்களும் இருக்கின்றன.அப்படியானால் மற்ற பிரதி தலைவர்கள் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகக் கூட இதுவரையில் எந்தவிதமான கருத்தும் கூட்டணி சார்பாக விடுக்கப்படவில்லை.தனியே அந்தந்தக்கட்சிகள் மட்டும் தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலிலிருந்து வெற்றிக்கூட்டணியாக வலம் வந்துக கொண்டிருக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள்ளே நிலவும் பூசல்கள் தீர்க்கப்படல் வேண்டும் என்பதே அதன் ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கின்றது. இவர்கள் பிளவு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகப் போய் விடும் என்பதே உண்மை.

நன்றி - வீரகேசரி

சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -1) - என்.சரவணன்


இக்கட்டுரை பல வருடங்களுக்கு முன்னர் சரிநிகர் பத்திரிகையில் என்.சரவணன் எழுதிய கட்டுரையின் விரிவாக்கம். அரங்கம் பத்திரிகையில் மூன்று வாரங்கள் இத்தொடர் வெளியாகும்.
தென்னாசியாவில் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த விபரங்களை பல தடவைகள் டொக்டர் சிரியாணி பஸ்நாயக்க போன்றோர் பகிரங்கமாக வெளியிட்டு வந்திருக்கிறார்கள். அவர் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இன்னமும் சிங்கள சமூகத்தில் தொடரும் கன்னிப் பரிசோதனை பற்றிய உண்மைகளை தனது ஆய்வுக் கட்டுயொன்றின்  (Basnayake, Sriani. “Virginity – The Facts: The Hymen & Virginity” Lankalibrary Forum. 2007) மூலம் வெளிக்கொணர்ந்தார். அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே தி ஐலன்ட் பத்திரிகையில் “கன்னிப் பரிசோதனை – ஒரு இளம் பெண்ணின் கொடுங்கனவு” (Virginity test — The young woman’s nightmare) என்கிற கட்டுரையொன்றின்  மூலம் இதே விடயத்தைப் பற்றி அவர் எழுதிய போது சிங்கள சூழலில் பெரும் விவாதமே ஏற்பட்டது. அப்போது அது பற்றிய பல விவாதங்கள் பத்திரிகைகளிலும் வெளியானது. அக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.

சிரியாணி பஸ்நாயக்க பெண்களின் பால்நிலை, சுகாதாரம், ஆரோக்கியம், பாலியல் விடயம் என்பவை தொடர்பில் பல ஆய்வுகளை செய்து நிபுணத்துவம் பெற்றவர். ஒரு பெண்ணியவாதியாகவும் அறியப்படுபவர். இலங்கை குடும்பத் திட்ட சங்கத்தின் (The Family Planning Association of Sri Lanka (FPA Sri Lanka) பிரதித் தலைவராகவும் இயங்கி வருகிறார். கன்னித்தன்மையை பரிசோதிப்பது சிங்கள சமூகத்தில் இன்னமும் நிலவுகிறது என்று அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இப்படி விளக்குகிறார்.

வியப்பூட்டும் தகவல்

“தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவுபுரியும் போது இரத்தம் வெளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.”
டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

”சமீபத்தில் தயயொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித்தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வது ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.

பெண்களின் மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய தமது ஆய்வின்போது 32% வீதமானோர் கற்பு என்பது பற்றிய சரியான விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. நகர்ப்புற இளைஞர்களில் 44.2% வீதத்தினரும் கிராமப்புற இளைஞர்களில் 47.4% வீதமானோரும் “கன்னி கழியாதவர்களுக்கு” முதல் பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் என்று நம்பிக்கொண்டிருகின்றனர். என்கிறார் சிரியாணி.

முதல் பாலுறவின் போது கன்னித்திரை கிழிந்து இரத்தம் கசிந்தாகவேண்டும் என்கிற ஐதீகம் குறிப்பாக பல ஆண்களிடம் நிலவவே செய்கிறது. பெண்ணுக்கான கற்பின் அடையாளமாக கன்னித்திரை கிழிதலை கருதிவருவது குறித்து சிறியாணி குறிப்பிடுகையில் மருத்துவ விளக்கங்களின் படி கன்னித்திரை கிழியாமலும் கூட ஒரு பெண் கற்பந்தரிக்க முடியும் என்கிறார்.

சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர்.

யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Living together), ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் அவர் காட்டத் தவறவில்லை.

சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.

இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை. இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக்கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.


கற்பொழுக்க சோதனை
சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொருத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தெரியாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.

இந்த வகையில் தான் "கற்பொழுக்கம் பற்றிய மதவழிப் புனைவுகள்" இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி என்பவற்றுகூடாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.

கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.

அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது.


இலங்கையை ஒத்த வகையிலான முதலிரவின் பின் வெள்ளைத்துணி “இரத்தப்” பரிசோதனை சீனாவிலும் சில குழுமங்களில் மத்தியில் இருந்திருப்பதை சில நூல்கள் விபரிக்கின்றன. அந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் விதத்தைப் பற்றி சீன தொலைக்காட்சி நாடகங்களும் பதிவு செய்துள்ளன.  லின் ஜியாங் (Lin Jiang) என்கிற சீன எழுத்தாளர் இது பற்றி எழுதிய குறிப்பொன்றில் இரண்டு வினோதமான நம்பிக்கைகள் அவர்களிடத்தில் காணப்படுவதாக குறிப்பிடுகிறார்.
 1. பெண்கள் தமது “கற்பை” திருமண நாளில் தான் இலக்க வேண்டும் என்கிற பாரம்பரிய எதிர்ப்பார்ப்பு
 2. பெண்கள் எப்போது “கற்பை” இழக்கிறார்களோ அப்போது இரத்தம் சிந்தப்படும்
 3. சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.
அடுத்தவாரம் கன்னித்தன்மை பரிசோதிக்கும் சிங்கள பாரம்பரிய சடங்கு பற்றி பார்ப்போம்.50 வருடமாக சிலர் செய்யாததை நாம் 3 வருடங்களில் செய்துள்ளோம் - அமைச்சர் திகாம்பரம்


50 வருட காலமாக ஆட்சி செய்கிறோம் என்று கூறுபவர்கள் செய்த அபிவிருத்தித்திட்டங்களை முதலில் பட்டியலிடுங்கள் அடுத்ததாக மூன்று வருடங்கள் அமைச்சராக இருந்து நான் முன்னெடுத்த திட்டங்களை பெயரிடுங்கள் எது மக்களுக்கு உரிமைகளைப்பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை தீர்மானித்து அதன் பின்னர் முடிவெடுங்கள்.இது தான் நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது. வருடக்கணக்காக பரம்பரை அரசியல் செய்தவர்கள் மாளிகைகளை கட்டி சுகபோகம் அனுபவித்து இந்தியாவிலும் போய் பல தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்த்து விட்டார்கள் ஆனால் இன்னும் எமது மக்கள் லயன் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். நான் மூன்று வருடங்களில் இவ்வளவு செய்ய முடியும் என்றால் ஏன் அவர்களுக்கு முடியாது? இதை ஒவ்வொரு தொழிலாளியும் தன்னிடமே கேட்டுக்கொள்வார்களாக என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இந்திய நிதியுதவியுடன் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டத்தில் 404 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று பூண்டுலோயாவில் இடம்பெறுகிறது. மேற்படி வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய மலையக அபிவிருத்தி குறித்து அமைச்சர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல்.

கேள்வி: இந்திய வீடமைப்புத்திட்டம் தொடர்பில் ஆரம்பத்தில் இ.தொ.கா தானே பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது?

பதில்: நான் இல்லை என்று கூறவில்லையே? ஆனால் அதை செயற்படுத்தினார்களா இல்லையே எங்கே போனது அவர்களின் திறமை? மேலும் அவர்கள் 4 ஆயிரம் வீடுகள் தொடர்பிலேயே கதைத்திருந்தனர் நாம் இப்போது மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகளை கேட்டுப்பெற்றிருக்கிறோம். 4 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என இந்தியா அறிவித்து நான்கு வருடங்களில் ஒரு வீட்டுக்கு ஒரு செங்கல்லை கூட இவர்களால் வைக்க முடியவில்லையே? அந்நேரம் அமைச்சர்களாகக் கூட இருந்தனர். பலமிக்க அமைச்சரவை அந்தஸ்த்தை வைத்துக்கொண்டும் எவருக்கும் ஒன்றும் செய்யமுடியவில்லை. என்ன காரணம்? தொழிலாளர்களுக்கு படம் காட்டுவதற்காக ஒரு சில இடங்களில் பெக்ககோ எந்திரம் மூலம் நிலம் சுத்தப்படுத்தப்பட்டது. இப்போது அவ்விடம் காடு மன்டிக் கிடக்கின்றது. எல்லாவற்றிலும் இலாபம் பார்ப்பதே சிலரின் அரசியலாக உள்ளது. அதை விட தொழிலாளர்கள் தொடர்ந்தும் லயங்களிலேயே தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அதிகார மமதை சிலரிடம் இன்னும் இருக்கின்றது. ஆனால் நாம் 100 நாள் வேலைத்திட்டத்திலேயே அதை ஆரம்பித்துவிட்டோம்.. 4 ஆயிரம் வீடுகளின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக 10 ஆயிரம் வீடுகள் எங்கு அமைக்கப்படல் வேண்டும் என்பதை தெரிவு செய்து நிலங்களையும் பெற்றுள்ளோம். தோட்ட நிர்வாகங்கள் எமக்கு ஒத்துழைப்பை தந்து வருகின்றன. அதில் 404 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று டன்சினன் தோட்டத்தில் இடம்பெறுகிறது. இத்திட்டத்தை இந்திய அரசுடன் பேசி குறுகிய காலத்தில் எவ்வாறு நாம் முன்னெடுத்தோம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நாமே ஆரம்பித்தோம் என்ற கதைகளை எல்லாம் அவர்களின் பேஸ் புக் ஆதரவாளர்கள் நம்பக்கூடும் ஆனால் தொழிலாளர்கள் நம்பத்தயாராக இல்லை.

கேள்வி: அப்படியானால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்கிறீர்களா?

பதில்: நான் அப்படிக் கூறவில்லையே? இன்னும் எவ்வளவோ செய்திருக்கலாம் என்கிறேன். ஆரம்பத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் அவர் செய்த பணிகளை குறை கூற முடியாது. அவரது காலகட்டத்திற்குப்பிறகு மலையகத்தில் அடிதடி கலாசாரம் அராஜகம் உருவாகி விட்டன. கட்சிக்காக பல தியாகங்களை செய்தவர்களும் அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. அந்த வழியையே இன்று கட்சியின் தொண்டர்களும் பின்பற்றுகின்றனர். இது சரியா? எதற்கெடுத்தாலம் அடி தடி சண்டை என்பது தான் பாரம்பரிய கட்சியின் வரலாற்றுச் சாதனையா? தொழிலாளர்கள் யோசித்துப்பார்க்க வேண்டும். எல்லாமே நாம் தான் செய்தோம் என்றால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட லயன் குடியிருப்புகள் அப்படியே இருக்கின்றன. தோட்டங்களுக்குகொங்ரீட் பாதை அமைத்தது தான் அபிவிருத்தியா? தொழிலாளர்களுக்குத்தான் ஒன்றும் செய்யவில்லை கல்வித்துறையையாவது விட்டார்களா? அவர்களின் காலில் விழுந்து வணங்குபவர்கள் தான் அதிபர்கள் தேர்தல் காலங்களில் கட்சிக்கு வேலை செய்பவர்கள் தான் நகர பாடசாலைகளில் இருக்க முடியும்.. இவை தான் சாதனையா என்று கேட்கிறேன்.

கேள்வி: மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்: வீடுகளே அமைக்கப்படாத காலத்தில் மௌனமாக இருந்தவர்கள் இப்போது எனது அமைச்சினாலும் இந்திய அரசாங்கத்தின் நிதியினாலும் வீடுகளை அமைத்துக்கொண்டு செல்லும் போது வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர்.

இந்தப் புலம்பல்களை பேஸ் புக்கிலும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதையெல்லாம் ஏன் கடந்த காலங்களில் உங்கள் தலைவர்களிடம் கேட்கவில்லை என்று தான் நான் அவர்களிடமே கேட்கிறேன். அந்த தைரியம் இல்லாததால் தானே இன்னும் லயன் வீடுகளிலேயே இருக்கின்றீர்கள். தொழிலாளர் தேசிய சங்கத்தில் ஜனநாயகம் உள்ளது. யாரும் என்னிடம் கேள்வி கேட்கலாம். நான் எந்தத் தொழிலாளியையும் இது வரை அடித்ததில்லை. ஏசியதில்லை ஏனென்றால் அந்த வர்க்கத்திலிருந்து வந்தவர்களுக்குத்தான் வலி தெரியும். தொழிலாளிகளை வைத்து சொத்து சேர்ப்பவர்களுக்கு அது புரியாது. ஆகவே சில அரைவேக்காடுகளின் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருந்தால் என்னால் மக்களுக்குச் சேவையாற்ற முடியாது போகும் அதை தவிர்க்கிறேன்.

கேள்வி: அமரர் சந்திரசேகரனின் காலத்தில் தானே தனி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது அது குறித்து ஒன்றும் கூறமாட்டீர்களா?

பதில்: இது நல்ல கேள்வி அவர் தான் ஆரம்பித்தார் அதே வேளை இப்போது அதன் தொடர்ச்சியாக வீடுகளை அமைக்கும் திட்டத்தை நான் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அவர் தான் காரணம்.

எப்படி என்கின்றீர்களா? அவரால் தான் நான் இன்று அரசியலில் இருக்கின்றேன். அதற்குக்காரணம் மலையக மக்கள் முன்னணியில் நிலவிய ஜனநாயகத்தன்மை. சாதாரண திகாம்பரம் என்ற மனினுக்கும் அரசியலில் இடம் கொடுத்தவர் அமரர் சந்திரசேகரன். அக்கட்சியின் மூலமே நான் அரசியலில் பிரவேசித்தேன்.

அதை என்றும் மறக்க மாட்டேன். பாருங்கள் தலைவர் சந்திரசேகரன் முன்பு எங்கிருந்தாரோ அக்கட்சியினால் இந்த மக்களுக்கு நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று தானே பிரிந்து வந்தார்? பின்பு தனிக்கட்சி ஆரம்பித்து அமைச்சராகி தனி வீட்டுத்திட்டத்தின் பிதாமகனாக இன்று பேசப்படுகிறார். அதற்கும் அந்த காலத்திலேயே அவரை தூற்றியவர்கள் விமர்சித்தவர்கள் இன்று என்னை விமர்சிப்பது ஆச்சரியமில்லையே? காய்த்த மரத்துக்கு தான் கல்லடி விழும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கேள்வி: உங்கள் திட்டங்களுக்கு மலையகத்தில் உள்ள வரவேற்பு எப்படியாக இருக்கின்றது?

பதில்: தொழிலாளர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் நான் கூற வேண்டியது ஒன்று தான். எனக்கு வாக்களித்து அமைச்சராக்கியுள்ளீர்கள் அதற்கு நான் செய்ய வேண்டிய கடமையை பொறுப்பாக செய்து வருகிறேன். எனது 3 வருட காலத்தில் நான் செய்தவற்றை பட்டியலிடுங்கள் அதே போன்று பாரம்பரிய கட்சி என லேபல் குத்திக்கொள்பவர்கள் செய்ததையும் பட்டியலிடுங்கள். முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஆதரவை தாருங்கள். நாம் எதிர்கால மலையகத்தை கருத்திற்கொண்டு செயற்படுகிறோம். மலையகத்தில் சர்வாதிகாரத்தை இல்லாதொழித்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து எந்த வித தடைகளுமின்றி நிதி மற்றும் ஏனைய விடயங்களைப் பெற மலையக அதிகார சபையை உருவாக்கியுள்ளோம். இனி அடுத்து வரும் தலைமுறையினர் அதன் பிரதிபலனை பெறுவர். புதிய பிரதேச சபைகளை உருவாக்கியதன் மூலம் அப்பிரதேச சபைகளில் கடமையாற்றுவதற்கு உத்தியோகத்தர்களை அடையாளம் கண்டுள்ளோம். அடுத்து பிரதேச செயலகங்களும் உருவாக உள்ளன.

கேள்வி:தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க கூட்டமைப்பில் எத்தனை தொழிற்சங்கங்கள் உள்ளன? அவை எல்லாவற்றினதும் அங்கத்தவர்களை சேர்த்தாலும் அதை விட தனிப்பெரும் கட்சியான நாம் அதிக அங்கத்தவர்களைக்கொண்டிருக்கிறோம். அதை எம்மால் நிரூபிக்கவும் முடியும் ஆனால் நாம் உள்ளே வந்து விட்டால் எமது அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கும். தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நாம் பெற்றுக்கொடுத்து விட்டால் அவர்களின் அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்து விடும் என்ற பயத்தினால் எம்மை கண்டு நடுங்குகின்றனர். ஆனால் அதற்காக எமக்கு வாக்களித்தவர்களின் நிலைமையை கண்டு சும்மா இருக்கப்போவதில்லை. நிச்சயமாக இவர்கள் கேட்கும் தொகையை கம்பனிகள் வழங்காது. அவர்களுக்கு அழுத்தம் தரும் வகையில் நாம் செயற்பட போகின்றோமே ஒழிய பேச்சு வார்த்தையை குழப்பவில்லை. எமக்கும் தொழிலாளர்களின் பலம் உள்ளது என்பதை கம்பனிகள் மட்டுமல்ல நாடும் அறிய வேண்டும். ஆகவே தான் நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்போகின்றோம். அதைத் தவிர்க்க முடியாது.அது எமது உரிமையும் கூட.

கேள்வி: 7 பேர்ச் காணியில் அமைக்கப்பட்டு வரும் சில வீடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே?

பதில்: லயன் குடியிருப்புகளில் வாழ்க்கையை கொண்டு நடத்தியவர்களுக்கு இப்போது ௭ பேர்ச் காணி உரித்துடன் வீடு கிடைத்துள்ளது. எமது மலையகப்பிரதேசத்தின் காலநிலை எல்லோருக்கும் புரியும். கடுங்காற்று மழையினால் நாம் அமைத்த வீட்டின் கூரைகள் மட்டுமா அடித்துச்செல்லப்பட்டன என்று கேட்கிறேன். இதற்கு முன்னர் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் காற்றே வீசவில்லையா? குடியிருப்புகள் சேதமடையவில்லையா? இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு சில அரைவேக்காடுகள் முக நூலில் செய்தி போடுகின்றன. சில ஊடகங்களுக்கு இதை செய்தியாகப்போட்டால் தான் வியாபாரம் நடக்கும் என்பது தலை விதி. நான் என்ன சொல்ல இருக்கின்றது? 7 பேர்ச் காணியில் கடன் சலுகை அடிப்படையில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளுக்கு இரும்பிலான கூரைகளையா போட முடியும்? அல்லது இதற்கு முன் அப்படி வீடுகள் அமைக்கப்பட்டனவா? இப்படி எல்லாவற்றுக்கும் குற்றம் குறை சொல்பவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன் ஆகவே பட்டியலிடுங்கள் அவ்வளவு தான்.

கேள்வி: அடுத்த 2 வருடங்களில் எத்தனை வீடுகள் தான் அமைக்க முடியும்?

பதில்: 50 ஆயிரமோ ஒரு இலட்சமோ ஒரு இலக்கை வைத்துக்கொண்டு தான் பயணிக்க முடியும். மில்லேனிய இலக்குகள் போன்று குறித்த காலத்தில் அதை அடைய எடுக்கப்படும் முயற்சிகளே இப்போதைய தேவை.அதை அடைந்திருக்கின்றோமா இல்லையா அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை இலட்சியமாக இருக்கின்றது. நாம் இப்போது தான் ஆரம்பித்துள்ளோம் அதற்கிடையில் ஐந்து வருடங்களில் எப்படி 50 ஆயிரம் வீடுகள் கட்ட முடியும் என்று கேட்பவர்கள் 50 ஆண்டு அரசியல் செய்தவர்கள் எத்தனை வீடுகளை கட்டினார்கள் என்று தான் சற்றுக்கேட்டுப்பாருங்களேன்.

நேர்காணல்:சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி

பிரதமரின் பதவியைப் பறித்த 1953 ஹர்த்தால் : 65 வருட நிறைவு - என்.சரவணன்


கடந்த வாரம் புகையிரதத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தின் போது பொதுமக்கள் அவர்களை அடித்து விரட்டினார்கள் என்கிற செய்தியை மிகவும் மகிழ்ச்சியாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படி விரட்டியடித்தமையை மக்களின் போராட்டமாகவும் சித்திரித்திருந்தன. அதிகார வர்க்கத்துக்கு எதிராக நியாமான கோரிக்கைகளுடன் போராடும் போராட்டத்தை மக்கள் தமக்கான போராட்டத்தின் அங்கமாக எடுத்துக்கொள்ளாது; அறியாமையால் அதிகார வர்க்கத்தின் பக்கம் சார்ந்து இருந்த ஒரு சிறு சம்பவம் அது. தொழிற்சங்கப் போராட்டங்கள் சக தோழமை மக்களாலேயே  காட்டிக்கொடுக்கப்படும் ஒரு நிலை வளர்ந்து வருவது சுயதற்கொலை நிகழ்வன்றி வேறென்ன.

சரியாக 65 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தில் ஓகஸ்ட் 12 அன்று இலங்கை மக்களால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் போராட்டத்தை இங்கு நினைவுக்கு கொண்டு வருவோம். அந்தப் போராட்டம் இரயில்வே தொழிலாளர்களும், அரசாங்க ஊழியர்களும், மாணவர்களும், விவசாயிகளும் பொது மக்களும் என சகலரும் இணைந்து நடத்திய போராட்டம். இன்று வரை “53’ மாபெரும் ஹர்த்தால்” என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறது. அது புகட்டிய பாடத்தை நினைவுருத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அரிசி கவிழ்த்திய ஆட்சி

இலங்கையை உலுக்கிய ஹர்த்தால் அது. இலங்கையின் இடதுசாரி வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்லக்கூடிய மாபெரும் வெற்றியை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்த ஹர்த்தால் அது. அது மட்டுமன்றி அன்றயை ஹர்த்தால் என்பது இலங்கையின் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும், நாடிபிடித்தறியும் முக்கிய நிகழ்வாகவும், பாடமாகவும் அமைந்தது.

சுதந்திரம் கிடைத்து நான்கே வருடம் தான் ஆகியிருந்த மழலையாக இருந்தது இலங்கை. நேரடியாக அடக்கியாண்ட காலனித்துவம் போய்  மறைமுகமாக இலங்கையை கட்டியாளும் நவகாலனித்துவ செல்வாக்குக்குள் சிக்கவைக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயன்றன.

சோல்பரி பிரபுவுடன் டட்லி சேனநாயக்க
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நமது தேயிலை, இறப்பர் என்பவற்றுக்கு சர்வதேச சந்தையில் நியாயமான விலையைத் தர மறுத்தன. சர்வதேச சந்தையில் அரிசியின் விலையும் அதே காலத்தில் உயர்ந்தது. அரிசியை பிரதான உணவுக்கு பயன்படுத்தும் நம் நாடு சிக்கிக்கொண்டது. சிக்கவைக்கப்பட்டது.கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்த அரசு உலக நாடுகளிடம் கையேந்தி கடன்கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்களும், நாடுகளும் போட்ட நிபந்தனைகளுக்கு இலங்கை கட்டுப்பட நேர்ந்தது. புதிய தேர்தலையும் அவை நிர்ப்பந்தித்தன.

1952ஆம் ஆண்டு சேனநாயக்கவின் மறைவைத் தொடர்ந்து அந்த அனுதாபத்தின் காரணமாக அவரது மகன் டட்லி சேனநாயக்கா அந்தத் தேர்தலில் வெற்றியீட்டி பிரதமரானார். அப்போது நிதி அமைச்சராக ஆனவர் பிற்காலத்தில் இலங்கையில் அதிகாரத்துக்கு வந்ததுமே நாட்டை உலக வல்லரசுகளுக்கு சூறையாட திறந்தபொருளாதாரக் கொள்கையின் மூலம் வழிதிறந்துவிட்ட ஜே.ஆர்.  பிரதமர் டட்லி மக்களுக்கு இப்படி உறுதியளித்தார்.
“இந்த அரசாங்கம் இருக்கும்வரை அரிசி விலை 25 சதமாகத் தான் இருக்கும். உலக அரசி விலை எப்படி இருந்தாலும் இலங்கை மக்களை பட்டினி கிடக்க விடமாட்டோம். புதிய உணவுத்துறை அமைச்சர் (சேர் ஒலிவர் குணதிலக்க), உலகம் முழுவதுமிருந்து உணவை பெற்றுத்தருவார். அதற்கான நிதியை நமது னி அமைச்சர் (ஜே.ஆர்.ஜெயவர்தன) ஒழுங்கு செய்வார். உலக அளவில் நமக்கிருக்கும் நல்லுறவின் மூலம் நமது உணவுத்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் நமது மக்களுக்கு வரிச்சுமை எற்படாதவண்ணம் அவற்றை நிறைவுசெய்வார்கள்.” (ஐ.தே.க.வின் கட்சிப் பத்திரிகை “சியரட்ட” – 01-08.1952)
ஆனால் அரசாங்கம் அரிசி விலையை புதிய பட்ஜெட்டில் கூட்டுவதற்கான முடிவை எடுத்திருந்தது. பாராளுமன்ற பட்ஜெட் விவாதத்தில் அதனை நிறைவேற்றுவது தான் பாக்கி.பட்ஜெட் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே விலைகள் உயர்த்தப்பட்டன.

25 சதத்துக்கு இருந்த ஒரு கொத்து அரிசியின் விலையை ஒரேயடியாக 70 சதமாக உயர்த்தினார். அது மட்டுமன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டனபுரகையிரதக் கட்டணம், தபால் கட்டணம் என்பவற்றையும் அதிகரித்ததுடன் பள்ளிக்குழந்தைகளின் மதிய நேர உணவையும் ரத்துசெய்தது.

தன்னெழுச்சிக்குத் தலைமை

இந்த திடீர் சுமையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. அலுபோமுல்ல என்கிற பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது எதிர்ப்பை வெளிக்காட்ட  தலைமயிரை வெட்டி ஒரு பொதியில் வைத்து அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தார். பத்து பிள்ளைகளின் தந்தையான டி.அப்புஹாமி என்பவர் அரிசி விலைக்கு தனது எதிர்ப்பை வெளியிடுவதற்காக அசிட் குடித்து மரணமான செய்தி பத்திரிகையில் வெளியானது.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்பவற்றில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்துகொண்டிருந்தார்கள். யூலை மாதம் இந்த நிலை உக்கிரம்  பெற்றது. 

1953 - காலிமுகத் திடல் கூட்டம் - என்.எம்.பெரேரா உரை
மக்களின் இந்த உணர்வுக்கு தலைமை கொடுக்க இடதுசாரி இயக்கங்கள் முன்வந்தன. தனித்தனியாக இது பற்றி தமது கட்சிக் கூட்டங்களில் கதைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒன்றிணையும் காலம் வந்தது. தொழிலாளர் வர்க்கத்தையும் ஒரு சேர திரட்டி மக்கள் போராட்டமாக முன்னெடுப்பது பற்றி சண்முகதாசன் தலைமையிலான (செயலாளராக இருந்தார்) இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் தொழிற்சங்கத் தலைவர்களைத் திரட்டி ஒரு கூட்டத்தை நடத்தியது. ஒரு ஹர்த்தாலை நடத்துவது பற்றி அச் சம்மேளனம் ஒரு முன்வைத்த பிரேரணையை  லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), கொம்யூனிஸ்ட் கட்சி (CP), புரட்சிகர சமசமாஜக் கட்சி (VLSSP) ஆகிய மூன்று பிரதான இடதுசாரிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அரசாங்க விரோத ஜனநாயக சக்திகளையும் இணைப்பது பற்றிய முடிவும் எடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட முடிவுக்கு நடைமுறை வடிவம் கொடுக்கும் வகையில் அந்த கட்சிகள் இணைந்துஜூலை 19அன்று ஒரு மாபெரும் கூட்டத்தை கொழும்பு காலி முகத் திடலில் நடத்தப்பட்டது.

ஹர்த்தால் அறிவிப்பு

மலையகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் செல்வாக்கு காரணமாக நழுவியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக ரோஸ்மீட் பிளேசிலிருந்த பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு சண்முகதாசன் உள்ளிட்ட குழுவினர் சென்று உரையாடியபோது ஆதரவைத் தெரிவித்தபோதும் ஹர்த்தாலில் கலந்துகொள்ள சம்மதிக்கவில்லை. ஹர்த்தாலை மேற்கொள்வதற்காக அறைகூவல் மூன்று இடதுசாரிக் கட்சிகளும் கூட்டாக சேர்ந்து அரைகூவல் விடுத்தார்கள். அதற்கான பேரணிகளையும் முன்கூட்டியே நடத்தி ஒரே மேடையில் உரையாற்றினார்கள். ஹர்த்தாலை ஓகஸ்ட் 12ஆம் திகதி நடத்துவதாக பிரகடனப்படுத்தினார்கள். அரசாங்கம் இந்த ஹர்த்தால் அறிவிப்பால் பீதியுற்றது.

ஹர்த்தாலுக்கு முன் தயாரிப்பாக பல்முனை, பல்வடிவ திட்டங்கள் போடப்பட்டன. 20ஆம் திகதியன்று சகல தொழிற்சங்கங்களும், கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஹர்த்தாலுக்கான ஒரு ஒத்திகையாக 12,000 துறைமுகத் தொழிலாளர்களின்  மூன்று மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை செய்து காட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. அதுவே தொழிலாளர்களின் முதல் தாக்குதலாக திட்டமிடப்பட்டது. அன்றைய தினமே இரத்மலான இரயில்வே தொழிற்சாலைத் தொழிலாளர்கள் 4000 பேர் இஞ்சினியர் காரியாலயத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

அரிசி விலையேற்றத்துக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் வீடுகளை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமது கோரிக்கை அடங்கிய 60,000 பேரின் கையெழுத்து அறிக்கையை பிரதமரிடம் சேர்ப்பித்தனர்.

இவை எதற்கும் அரசாங்கம் செவி சாய்க்காத நிலையில் ஜூலை 23 அன்று சகல அமைப்புகளும் ஒன்று சேர்ந்து காலிமுகத் திடலில் மாபெரும் கூட்டமொன்றை நடத்தினார்கள். ஹர்த்தாலுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவு அளிக்க முன்வராத எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டமை அங்குள்ளவர்களுக்கு பெரும் பலமாக இருந்தது.

இதற்கிடையில் பாராளுமன்றத்தைச் சூழ நடத்திய ஆர்ப்பாட்டம் பொலிசாரால் அடக்குமுறையின் மூலம் நசுக்கப்பட்டது. 

12ஆம் திகதி ஹர்த்தாலுக்கு நாட்டின் சகல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோதும் ஆஸ்பத்திரி, வைத்தியர்மார், தாதிமார், மருந்துவழங்குனர், நோயாளிகளுக்கு உணவு தயாரிப்பவர்கள் போன்ற விடயங்களில் ஈடுபடுவோரை ஹர்த்தாலில் இணைத்துக்கொள்ளக்கூடாது என்கிற முடிவையும் ஏகமானதாக எடுத்திருந்தனர்.

டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க (கொம்யூனிஸ்ட் கட்சி),  லெஸ்லி குணவர்தன (நவலங்கா சமசமாஜ கட்சி), பிலிப் குணவர்தன (நவ லங்கா சமசமாஜக் கட்சி), கலாநிதி என்.எம்,பெரேரா (இலங்கை தொழிலாளர் சம்மேளனம்), பீட்டர் கெனமன் (இலங்கை தொழிலாளர் சங்க சம்மேளனம்), ஏ.ஈ.குணசிங்க (இலங்கை தொழிலாளர் சங்கம்), சீ.எச்.ஹிக்கடுவகே (அகில இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம்), பாலா தம்போ (இலங்கை வர்த்தக சேவகர் சங்கம்) ஆகியோர் தமது அமைப்புகளை முழுமையாக ஹர்த்தாலில் ஈடுபடுத்தினர். ஒன்றாக இயங்கினர்.

ஜே.ஆரால் வந்த வினை

ஓகஸ்ட் 07 அன்று ஜே.ஆர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பட்ஜெட் இரண்டாவது வாசிப்பின் பின் 23 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கம் ஹர்த்தாலை இரானுவகரம் கொண்டு முறியடிக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. அதுபோலவே 12ஆம் திகதி ஹர்த்தாலை நடத்துவது என்று முடிவு செய்திருந்தன ஹர்த்தால் ஏற்பாட்டு அமைப்புகள்.

11ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை கண்டியில் நடத்தினார்கள். போலீசாரைக் கொண்டு தாக்குதல் நடத்தி அது கலைக்கப்பட்டது. கொழும்பில் மக்கள் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தைத் தொடகினார்கள்.

அரசாங்கமும் அடக்குமறையை உடனடியாகவே ஆரம்பித்தது. வழமைபோல அனைத்தும் சகஜமாகவே இருக்கும் என்று 12ஆம் திகதி அரசாங்க ஏரிக்கரைப் பத்திரிகைகள் பெரிய எழுத்தில் தலைப்பிட்டன.

12ஆம் திகதி அதிகாலை ஹர்த்தால் தொடங்கியது. கருப்புக்கொடி உயர்த்தல், வேலைநிறுத்தம், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள் என நாடெங்கிலும் நடந்தன. நாடே ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது.

ஆரம்பத்தில் நேரடியாக ஆதரவு வழங்குவதை தவிர்த்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்னர் மலையகத் தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஹர்த்தாலில் ஈடுபடச்செய்தது.

தமிழரசுக்கட்சி ஆதரவு தெரிவித்து வடக்கில் பூரண ஒத்துழைப்பைக் கொடுத்தது. அங்கே கருப்புக்கொடி எங்கெங்கும் பறக்கவிடப்பட்டது. யூலை 18 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட ஊர்வலமும், கூட்டமும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இரயில் இரயில்கள் நிறுத்தப்பட்டு என்ஜினை இயக்கமுடியாதபடி எரிபொருளை வெளியேற்றினர். தண்டவாளங்களை கழற்றி போக்குவரத்தை நிறுத்தினர். கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் வெற்று வீதிகளில் கூடினர். அரசாங்கம் அன்றே மதியம் 12 மணிக்கு கலகச்சட்டத்தை பிறப்பித்தது.

கவர்னர் மாளிகை, அலரி மாளிகை, பாராளுமன்றம், பிரதான தபாலகம், தொலைதொடர்பு மத்திய நிலையம், லேக்ஹவுஸ் உள்ளிட்ட முக்கிய அரச மர்மஸ்தானங்கள் அடங்கிய கொழும்பு ஆத்திரமடைந்த மக்களால் சூழப்பட்டிருந்தது. தமக்கெதிரான பொய்ப்பிரசாரங்களைப் பரப்பிவந்த லேக்ஹவுஸ் நிறுவனம் ஊர்வலத்தின் போது கைப்பற்றப்படக்கூடும் என்று கூட நம்பப்பட்டது.

நடுக்கடலில் கூடிய அமைச்சரவை

ஹர்த்தால் உக்கிரமுற்று விபரீதங்கள் நிகழ்ந்துவிடும் என்று கருதிய அரசாங்கம் தமது அமைச்சரவைக் கூட்டத்தை அன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த எச்.எம்.எஸ்.நியுபவுன்ட்லேன்ட் (HMS Newfoundland) என்கிற பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பலில் நடத்தியது. அங்கு வைத்துத் தான் அவசரகால சட்டமும் பிறப்பிக்கப்பட்டதுடன் இராணுவத்தை இறக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

நடுக்கடலில் அரசாங்க அமைச்சரவைக் கூட்டம்  நடத்தப்பட்ட பிரித்தானிய கடற்படைப் போர்க்கப்பல் - HMS Newfoundland 

வீதிகளில் இதில் ஈடுபடுவோர் சுடப்படுவர் என்று அச்சுறுத்தியதுடன் மக்கள் கலைக்கப்பட்டார்கள். போலீசார் வெறித்தனமாக மக்களைத் தாக்கினார்கள். அன்று கலைய மறுத்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டார்கள். (அன்றைய டைம்ஸ் பத்திரிகை 21 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது) மக்கள் சரணடையவில்லை. அஞ்சவுமில்லை. அரசு திணறியது. அடுத்த நாளும் ஹர்த்தால் நீடித்தது.

ஆனால் பீட்டர் கெனமன், பிலிப் குணவர்தன, என்.எம்.பெரேரா ஆகியோர் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் இப்படி இருந்தது
“...அனைவரும் சேர்ந்து 12ஆம் திகதி ஹர்த்தாலை வெற்றிகரமாக சாத்தியப்படுத்திய மக்களுக்கு நன்றி கூறுகிறோம். நமது சக்தியை மெய்ப்பித்திருக்கிறோம். அரசாங்கம் பீதியுற்று அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அரசாட்சி தளம்பியதை வெளிப்படுத்தியிருக்கிறது. இனி பொலிசாரையும், அரசாங்கத்தையும் சீண்டாமல் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். முன்னர் அறிவித்திருந்த 24 மணிநேர ஹர்த்தால் இன்று அதிகாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இனி தாங்கள் தத்தமது அன்றாட வேலைகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்...”
ஹர்த்தால் முடிந்ததன் பின்னர் அதில் ஈடுபட்ட 500க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அதிகளவு விற்பனையான மவ்பிம, சிங்களே, சமசமாஜய போன்ற பத்திரிகைகளை விற்பனை செய்த இடங்களில் இருந்து இராணுவம்  அவற்றை பறிமுதல் செய்தன. தணிக்கை அமுல்படுத்தப்பட்டது.

பதவியை இழந்த பிரதமர்

இலங்கையின் வரலாற்றில் வெற்றிபெற்ற மாபெரும்  மக்கள் போராட்டம் இது. இந்தப் போராட்டத்தின் மூலம் அரிசியின் விலை பின்னர் 55சதமாகவும், பின்னர் 25 சதமாகவும் குறைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி பல முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியது. பிரதமர் டட்லி இந்த ஹர்த்தாலின் போது ஏற்பட்ட கொலைகள், படுகாயங்கள், சேதங்கள், இழப்புகள் என்பவற்றால் மனமுடைந்து போயிருந்தார். அதன் விளைவாக ஓகஸ்ட் 15ஆம் திகதி பதவி விலகினார்.

ஓகஸ்ட் 17இலிருந்து செப்டம்பர் முதலாம் திகதி வரை இந்த ஹர்த்தால் குறித்த வாத விவாதங்கள் உக்கிரம் பெற்றன. செப்டம்பர் முதலாம் திகதி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் உடன்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆளுநராக கடமையாற்றிய ஹெலன் ரோஸ் ஐ (ஆளுநர் சோல்பரி வெளிநாடு சென்றிருந்ததால் தற்காலிகமாக ஆளுனர் பதவி வகித்தவர் ரோஸ்) சந்தித்து அடுத்த பிரதமராக ஜே.ஆரின் பேரை பரிந்துரைத்த போதும் சோல்பரி வரும்வரை காத்திருக்க நேரிட்டது. செப்டம்பர் 10அன்று சோல்பரி இலங்கைக்கு திரும்பி பிரதமர் டட்லியை பதவி விலக வேண்டாம் என்றும் சற்று ஓயவெடுக்கும்படியும் ஆலோசனை வழங்கினார். ஒக்டோபர் 12ஆம் திகதி டட்லி பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்றார்.

சேர் ஜோன் கொத்தலாவல உடனடியாகவே ஜே.ஆரின் வரவுசெலவு திட்டத்தை ரத்து செய்ததுடன் ஜே.ஆரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து அகற்றி விவசாயத் துறை அமைச்சை ஒப்படைத்தார்.

"புதிய பிரதமர் ஜோன் கொத்தலாவல - டட்லி சேனநாயக்க இராஜினாமா
புதிய அமைச்சரவை நாளை"
ஏரிக்கரைப் பத்திரிகை - தினமின
ஓகஸ்ட் 17ஆம் திகதி கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி ஆகியவற்றின் அச்சகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

ஓகஸ்ட் 31அன்று பாராளுமன்ற விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டட்லி சேனநாயக்க ஹர்த்தாலில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானோர் 8 பேர் என்றும் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்.

இடதுசாரிகள் இழந்த சந்தர்ப்பம்
ஒரு நாள் ஹர்த்தாலை வாபஸ் பெற்றதாக இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த போதும் தன்னெழுச்சியடைந்திருந்த மக்கள் அதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தனர். மக்கள் போராடத் தயாராக இருந்தார்கள். போராட்ட ஓர்மம் சற்றும் குறையாது இருந்தார்கள். ஆனால் இடதுசாரிக் கட்சிகள் அந்த உணர்வுக்கு தலைமை கொடுக்க பின்வாங்கியது. இது ஒரு நாள் போராட்டம் என்றது. மக்கள் போராட்டத்தின் மூலம் அரசையே (அரசாங்கமல்ல) கவிழ்க்குமளவுக்கு சாதகமான சூழல் இடதுசாரிக் கட்சிகளுக்கு அன்று இருந்தது. புரட்சிகர கட்சிகளாக இயங்குவதற்குப் பதிலாக அவை அன்று சீர்திருத்தவாதக் கட்சிகளாக நடந்துகொண்டன என்கிற கடும் வரலாற்று விமர்சனத்துக்கு  ஆளாகின அவை. “யூ.என்.பி விரோத சக்திகளின் புரட்சி நடவடிக்கையின் உச்சக்கட்டமாக அந்த ஹர்த்தால் இருந்தது” என்பார் தோழர் சண்முகதாசன்.
இந்த ஹர்த்தாலோடு இடதுசாரிக்கட்சிகளின் தொழிலாளர் வர்க்க வரலாற்றுப் பாத்திரம் முடிந்து விட்டதென்று கூறுவார்கள். இடதுசாரிக் கட்சிகள் பிளவுற்றிருந்த நிலையில் ஓரணியில் இயங்க கிடைத்த அற்புதமான சந்தர்ப்பம் அது. 1952 வரை இலங்கையின் இரண்டாவது பெரும் அரசியல் சக்தியாக திகந்த இடதுசாரிக் கட்சிகள் 1956 ஆகும் போது மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு சில வருடங்களிலேயே பண்டாரநாயக்கவின் சிங்கள- பௌத்த தேசியவாத கொள்கைகளை ஆதரித்து போட்டித்தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சியிலமர ஒத்துழைத்தது. அதையே; கட்சி தேய தேய தொடர்ந்தும் மேற்கொண்டு அழிந்து போயினர். இந்த ஹர்த்தால் தந்த பாடத்தின் விளைவாகத் தான் இடதுசாரி சிந்தனையையுடைய இளைஞர்கள் புரட்சிகர பாதையை நோக்கி தள்ளப்பட்டதும், அதன் நீட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றதும் என்பதை கவனிக்க வேண்டும்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates