பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின் வருகின்ற தரம் 6 9 வரையான வகுப்புக்களில் இவர்களின் கற்றல் நடவடிக்கைகளானது மந்த நிலையில் செல்வதைக் காணலாம். இதன் காரணமாக தரம் 11இல் நடைபெறுகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியாதுள்ளனர். அநேகமான மாணவர்கள் தாய் மொழியில் கூட சித்தியடையத் தவறி விடுகின்றனர். சிலர் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறி விடுவதை பல பாடசாலைகளிலும் காணலாம். 2013 ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகளின்படி 11,000 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் பல காரணங்கள் வருடாந்தம் சுட்டிக் காட்டப்படுகின்றன.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மிகவும் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் மாணவர்களை தயார்படுத்தும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் சேவையானது பாராட்டத்தக்கது. இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் இந்த ஆசிரியர்களை பல்வேறு மட்டங்களிலிருந்தும் ( பாடசாலை, பெற்றோர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக நலன் விரும்பிகள், சங்கங்கள், மன்றங்கள், வங்கிகள், பழைய மாணவர்கள்) பாராட்டப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் இம் மாணவர்கள் தரம் 6 – 9 வகுப்புக்களில் ஆரம்பத்தில் இருந்த கவனிப்பும், ஊக்குவிப்பும், தயார்படுத்தும் நடவடிக்கைகளும் சகல பாடசாலைகளிலும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றதா? எனப் பார்த்தால் இதில் பல குறைபாடுகளும், தவறுகளும் பல்வேறு மட்டங்களிலும் காணப்படுகின்றன என்பதை அவதானிக்கலாம்.
இவ்வகுப்பு மாணவர்களிடம் இக்காலத்தில் இயல்பாக ஏற்படுகின்ற பருவ மாற்றங்கள், உடலியல் மாற்றங்கள் போன்றன இவர்களை புதிய உலகிற்கு இட்டுச் செல்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தான் கவனிப்பும், பாதுகாப்பும், வழிகாட்டல் ஆலோசனையும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. எனவே இவ்வகுப்பு மாணவர்களின் நடத்தை பிறழ்வாக அமையாதபடி ஆலோசனை, வழிகாட்டல் வழங்க வேண்டியது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கடமையாகும்.
இப்பருவத்திலேயே அதிகமான சகபாடிகள் தொடர்பும் சினிமா, தொலைக்காட்சி, வானொலி, எதிர்பாலர் கவர்ச்சி, புதிய விடயங்களில் ஈடுபாடு, இணையப் பாவனை, முகப்புத்தகப் பாவனை போன்றன ஏற்படுகின்றன. இதனால் இவர்களை கல்வி சார் செயற்பாடுகளுக்கு கொண்டு வருவது சற்று கடினமான காரியமாகும்.
இன்றைய வாழ்க்கைச் செலவு போராட்டத்தில் பெருந்தோட்டப் பெற்றோர்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சினைகளை பின்வருமாறு வரையறுக்கலாம்.
வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, மேலதிக வருமானம் இன்மை, வீட்டு வசதியின்மை வீட்டுச் சூழல் (லயன் அமைப்பு முறை) மின்சார வசதியின்மை, போக்குவரத்துப் பிரச்சினை, சிறந்த ஆலோசனை வழிகாட்டல் இன்மை, கற்றலில் போட்டியின்மை, வறுமை காரணமாகப் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புதல், குறிப்பாக பெண் பிள்ளைகளை பிள்ளைப் பராமரிப்பிலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபடச் செய்தல், பூப்பெய்தும் காலத்தில் நீண்ட நாட்களுக்கு பாடசாலைக்கு அனுப்பாத நிலை, இதனால் பாடசாலை வரவு குறைவுறுதல், பிள்ளைகளின் மந்தப்போசணைக் குறைபாடு, சுயமாக பிள்ளைகளைப் படிப்பதற்குத் தூண்டாமை, சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மீறப்படுகின்றமை ஆசிரியர்களின் கற்பித்தல் குறைபாடுகள் போன்ற பல பிரச்சினைகளை முன் வைக்கலாம்.
இருப்பினும் இவற்றில் இம்மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். இது ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெற்றோர்களுடைய கவனிப்பு மிக அதிகமாக இப் பருவத்திலேயே தேவைப்படுகின்றது. பிள்ளைகளைத் தொடர்ச்சியாக கவனிக்க வேண்டும்.
பாட ஆசிரியர்களோடு தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கற்றலில் ஈடுபாடு அதிகரிக்கக் கூடிய வகையிலான செயற்பாடுகளை பாட ஆசிரியர்களும், வீடுகளிலும் வழங்க வேண்டும். உதாரணமாக சுய ஆக்கச் செயற்பாடு, விளையாட்டு, கணினி, வரைதல், கலை நிகழ்ச்சி, இசை, எழுத்து வாசிப்பு, ஓவியம், பொழுது போக்கு, வீட்டுத் தோட்டம் அமைத்தல், அலங்காரத் தாவரங்கள் வளர்த்தல், செல்லப்பிராணிகள் வளர்த்தல் போன்ற துறைகளில் ஈடுபடச் செய்வது மிகச் சிறந்ததாகும். இம் மாணவர்களின் இடை விலகளுக்கு மாணவர்களிடத்திலும் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.
உதாரணமாக தேடுதல் குறைவு, கற்றலில் ஆர்வமும் முயற்சியும் குறைவு, வீட்டுக்கும் பாடசாலைக்குமிடையிலான அதிக தூரம், வீட்டுச் சூழல் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருத்தல், போட்டியான ஒரு சூழல் தோட்டப் பிரதேசத்தில் இன்மை, பெற்றோர்களின் வறுமை நிலை, போசணைக் குறைபாடு, தேவையான கற்றல் உபகரணங்கள் கிடைக்காமை, பாடசாலை வரவு குறைவு, வீட்டில் தொடர்ந்து படிக்காமை, பாடத்திற்கான துறைசார் ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பில் பாடத்தில் கவனமின்மை, பாடசாலை கவர்ச்சிகரமாக இன்மை, வகுப்பறை சூழல் போன்ற விடயங்களை மாணவர்கள் பக்கம் குறிப்பிடலாம்.
தரம் 6–9 வரையான காலப்பகுதியில் மாணவர்களின் இடைவிலகல்களுக்கான காரணங்களை அனைத்துப் பக்கமும் பார்க்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலைச் சூழல், வகுப்பறைச் சூழல் என வகுத்து நோக்க முடியும். பெற்றோர்கள், மாணவர்கள் பற்றியும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதால் இங்கு ஆசிரியர்கள் பற்றி குறிப்பிட வேண்டும்.
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தும் ஆசிரியர்களுக்கும் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் போன்ற வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பெற்றோர்கள் மத்தியிலும் சமூகத்திலும் ஓர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகின்றது. இதேபோல் தரம் 11 தரம் 13 வகுப்பாசிரியர்களுக்கும் ஏதோ ஒருவகையில் பாராட்டுக்களும் ஊக்குவிப்புக்களும் வழங்கப்படுகின்றன.
ஆனால் தரம் 6–9 வரையான வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இக்காலப்பகுதியில் அங்கீகாரம் வழங்கக் கூடிய திட்டமெதுவும் இதுவரை காலமும் காணப்படாமை ஒரு பாரிய குறைபாடாக உள்ளது.
தரம் 6–9 வரையான வகுப்புகளுக்கு அரசாங்க பொதுப் பரீட்சைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. இதுவும் மாணவர்களின் அடைவு மட்டப் பரீட்சைக்கு ஒரு காரணமாகும். எனவே தேசிய ரீதியில் ஒரு பொது பரீட்சை நடத்தப்பட்டு சகல பாடங்களிலும் 40 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெறும் மாணவர்களை தெரிவு செய்து மேல் வகுப்புக்களுக்கு அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் இடைவிலகல்களைக் குறைக்கக் கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிரியர்களின் வழிகாட்டல், ஆலோசனைகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்க வேண்டும். வகுப்பறைச் சூழலானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். 6–9 வரையான வகுப்புக்கள் அநேக பாடசாலைகளில் ஒரு திறந்த வகுப்பறையாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் கற்பிக்கும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
ஆசிரியர்கள் எதிர்கால தேவையை உணர்ந்து தியாக சிந்தனையோடு வேலை செய்ய முன்வர வேண்டும். இடைவிலகும் மாணவர்கள் மீண்டும் இச்சமூகத்திற்கே செல்வதால் இச்சமூகமானது பின்தள்ளப்படுவதற்கு இது ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையாமைக்கு இந்தக் குறிப்பிட்ட வகுப்புக்களில் விடும் தவறுகளும் பிழைகளும் கூட வாய்ப்பாக அமைந்து விடலாம்.
ஆர்வத்தோடு வந்து கற்கக்கூடியவாறு பாடசாலைச் சூழல் அமைய வேண்டும். ஆசிரியர்களின் திறமைக்கேற்ப ஊக்குவிக்க வேண்டும்.
ஆசிரியர் தொழிலுக்கான அங்கீகாரமும், சலுகைகளும், ஊக்குவிப்புக்களும் வழங்கப்படும் போது ஆசிரியர்களது சேவையானது மிகப் புனிதத் தன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஓர் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட பலர் இன்று பொருளாதார ரீதியாக நல்ல நிலையிலும் மிக உயர்ந்த தொழில்களிலும் இருக்கின்றார்கள்.குறிப்பிட்ட ஆசிரியர் மட்டும் தொடர்ந்து அதே நிலையில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
நன்றி - வீரகேசரி - 28-12-2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...