Headlines News :

காணொளி

சுவடி

'லயம்' என்ற சொல்லே இல்லாத யுகம் ஒன்று மலையகத்தில் மலருமா?ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரெண்டாம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தில் தோட்ட கைத்தொழில் அமைச்சராகவிருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வா இரத்தினபுரி பிரதேச தோட்டங்களுக்கு விஜயம் செய்தார். அப்பொழுது தோட்டங்கள் அரச மயமாக்கப்பட்டிருந்தன. எங்களுடைய தோட்டத்துக்கு வருகை தந்தார்.

தோட்ட காரியாலயத்துக்கு தொழிலாளர்கள் அனைவரையும் வரவழைத்து தமது அமைச்சு சார்பான கருத்துக்களையும் தோட்டத் துறைக்கான தனது எதிர்கால திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். மொழி பெயர்ப்பாளரும் அச்சொட்டாக தமிழில் மொழிபெயர்த்தார். அந்த காலகட்டத்தில் எங்கள் தோட்ட தொழிற்சங்க காரியதரிசியாக இருந்த என்னை அமைச்சருடன் பேசவும் தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகளை அவருக்கு எடுத்துக்கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது தோட்டங்களிலிருந்த பிரதான பிரச்சினைகளில் குடியிருப்பு, சுகாதாரம் ஆகிய இரண்டினைப்பற்றியும் அமைச்சருக்கு எடுத்துக்கூறினேன். அமைச்சரும் மிக பொறுமையாக அனைத்தையும் கேட்டு விட்டு அவருடைய எதிர்கால திட்டங்களைப்பற்றி விளக்கினார்.

தனது இருபது வருட கால திட்டமொன்றின் ஊடாக நாட்டிலுள்ள சகல தோட்டங்களிலுள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்போவதாக உறுதிபட சொன்னார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிதியை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு இறாத்தல் (அப்போது இறாத்தல்) தேயிலையிலும் பத்து சதவீதம் சேமித்து அதை நாட்டின் திறைசேரிக்கு வழங்கி முற்றாக தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையை இருபது வருட காலத்துள் தீர்த்து விடுவதாக கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட தொழிலாளர்களின் கை தட்டலும் ஆரவாரமும் அடங்க சிறிது நேரமெடுத்தது. அந்த நேரத்தில் அவரின் பேச்சை நானும் நம்பினேன். இடதுசாரி கொள்கையைக் கொண்ட அரசாங்கம் பிரபல தொழிற்சங்க அமைப்புக்களிலிருந்து வந்த தொழிற்சங்க தலைவர்களின் கூட்டுடனான அரசாங்கம். இதன்மூலம் கட்டாயம் தொழிலாளர்களின் பிரதான பிரச்சினையான இந்த குடியிருப்பு பிரச்சினை தீர்ந்தே விடும் என்று நம்பினேன். ஆனால் நடந்ததென்ன? பொதுவுடமை கொள்கையாளர்கள் கூடி வகுத்த பொருளாதார திட்டங்களால் நாட்டில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டு மக்கள் எல்லோருக்கும் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டன. அரசாங்கம் ஆட்டம் கண்டது. அம்மையார் சிறிமா தனது இடது சாரி கூட்டாளிகளை அரசிலிருந்து துரத்தி விட்டு தனது சொந்த பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டில் நிலவிய பஞ்ச நிலைமையை ஓரளவு மாற்றினார். என்றாலும் எதிர்க்கட்சி பஞ்சத்தை வைத்து அடுத்து வந்த பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எட்டு ஆசனங்களுக்கு இறக்கி வைத்து விட்டு அமோக வெற்றி பெற்றது. அப்பொழுது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை மலை போல நம்பினார்கள். பெரும்பாலான மலையக மக்களும் மலையக தலைவர்களின் தலைவர்களும்.

இந்த முறையென்றால், மலையக மக்கள் பிரச்சினைகளில் பெரும்பாலானவை தீர்ந்தே விடும் என்று தீர்க்கமாக நம்பினார்கள். அந்த ஆட்சியிலும் மலையக மக்கள் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையான குடியிருப்பு பிரச்சினை தீர்ந்த பாடில்லை. கடைசியாக பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்றார். அப்பாடா இனி பிரச்சினையே இல்லை. நமக்கெல்லாம் விடிவு காலம் வந்துவிட்டது என்று தொழிலாளர்கள் நம்பினர். அவர் ஒரே போடாக போட்டு விட்டார். தொழிலாளர்களின் லயன் காம்பிராக்கள் அவர்களுக்கு சட்டபூர்வமாக உரிமையாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

மலையக தலைவர்கள் கண்ட கனவை நமக்கும் திணித்தார்கள். முடிவில் ஆட்சியாளர்கள் அவர்களது தலையிலும் மிளகாய் அரைத்து விட்டு போய்விட்டார்கள். அடுத்து வந்த அரசாங்கமும் மலையக தொழிலாளர்களை அம்போவென்று விட்டு சென்றது.

முடிவாக மஹிந்த சிந்தனை முன்வைக்கப்பட்டது. சரி அதிலாவது ஏதாவது இருக்கிறதா என்று துலாவி பார்த்தால் அதிலும் எதுவுமில்லை. கூடவே இருந்தால் அதிகமாக தருவேன் என்று நமது மலையகத் தலைமைகளை ஏமாற்றி கூட்டிச் சென்ற அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை சந்தித்தது. மலையக மக்களும் தமது ஜனநாயக உரிமை பலத்தை காலமறிந்து காட்டி விட்டார்கள். தலைமை மாற்றம் ஏற்படுத்திய புதிய அரசாங்க தோற்றப்பாட்டில் புதிய அரசாங்கம் போல் தோன்றினாலும் காரியாலயங்களில் சதா குளறுபடியான விளக்கங்களே மக்களை சென்றடைகின்றன. மக்களும் ஏதோ வாக்களித்து விட்டோம் சரி வருவதை எதிர்கொள்வோம் என்று வாளாவிருக்கின்றனர். விலைக்குறைப்பு என்ற விசிறியை கொடுத்து விட்டு அரசு அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. மக்கள் அனல் காற்றில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில்தான் மலையக மக்களுக்கு சிறு நிலத்துண்டும் தனி வீடும் தரப்போவதாக சர்வதேசத்தின் காதுகள் செவிடு படும்படியான தம்பட்ட சத்தம் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. இந்த தனி வீட்டு பிரச்சினை சரியான முறையில் தீர்க்கப்படுமா? இங்கே ஒரு கேள்வியும் எழுகின்றது. இந்தியா கட்டிக்கொடுக்க இணக்கம் தெரிவித்த வீடுகள்தான் முதலில் கட்டப்படும் என்று சொல்லப்படுகின்றது. அப்படியானால் இலங்கை அரசு கட்டப்போகும் வீடுகள் எத்தனை? அது தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளி வரவில்லை. அப்படியானால், அதுவும் ஏதாவது தேர்தல் நடந்து அதில் ஆட்சி மாற்ற முறைகளால் திட்டங்கள் பின் தள்ளப்பட்டு போய்விடுமா?

தோட்டத் தொழிலாளர்கள் பக்கத்திலிருந்து நியாயமாக எழக்கூடிய சந்தேகங்களும் உண்டு.

ஆகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடு அமைத்துக்கொடுக்கும் திட்டமானது சரியான முறையில் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாவிடி,ன் தனி வீடு திட்டமும் லயக்காம்பிராவை உரிமையாக்கி தருவதான திட்டம் போன்று ஏமாற்று வித்தையாகி விடும். அரசை நம்பிச் சென்ற மலையக அரசியல் தலைமைகள் முன்பு ஏமாற்றப்பட்டது போல் இனியும் ஏமாற்றப்படக்கூடாது.

ஆகவே, தொழிலாளர்கள் விழித்துக்கொண்டது போல தொழிலாளர்களின் தலைமைகளும் தனி வீட்டுத் திட்டத்தில் கண்களில் எண்ணெய்யை விட்டுக் கொண்டுதான் பார்த்திருக்க வேண்டும்.

எப்படியோ லயம் என்ற சொல்லே இல் லாத யுகம் மலர வேண்டும்.

நன்றி - வீரகேசரி

ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு 2015 - நிகழ்ச்சிகள்

04.04.2014
“21ஆம் நூற்றாண்டில் அம்பேத்கர் சிந்தனையின் பங்கு”
- சாக்கியமோகன்
தேநீர் இடைவேளை
“தலித் விடுதலையை முன்னெடுப்பதில் சமகால சவால்கள்”
கரவைதாசன் (டென்மார்க்), தேவதாசன் (பிரான்ஸ்)
சரவணன் (நோர்வே), முரளி (ஜெர்மன்)
தலைமை - ராகவன் (இங்கிலாந்து)
“நடைப்பயணக் குறிப்புகள்”
சஞ்சயன்
பகல் உணவு
“புலம்பெயர் தமிழ்ச் சூழலில் ஊடக அறம்”
- ராஜன் செல்லையா (நோர்வே)
தேநீர் இடைவேளை
மைத்திரியோடும் மாகாணசபையோடும்
மௌனமாகுமா தமிழர் அரசியல்?
- எம்.ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்)
இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்
- உமா (ஜேர்மன்)
“எனது மாற்று பரீட்சார்த்த அரங்க முயற்சிகள்”
-விஜயன்


05.04.2014

“புகலிட நாட்டியத்துறையில் மாற்று முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்”
மாலதி, மேரி சூசை, கவிதா, மைதிலி, துஷா
தேநீர் இடைவேளை
“சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் - 50 வருட நினைவு”
-மு.நித்தியானந்தன்
“கூலித் தமிழ்” நூல் அறிமுகம்
-சத்தியதாஸ்
பகலுணவு இடைவேளை
1915 முஸ்லிம் - சிங்கள கலவரம் : 100 ஆண்டுகள் நினைவு 
- ஸஹீர்
“சம்பூருக்குத் திரும்புதல்”
-பாலசுகுமார்
தேநீர் இடைவேளை
புகைப்படத் தொகுப்பு காணொளி
சுசீந்திரா
உலகமயமாக்கலும் சிறுவர் அரங்கும்
-ஆதவன்

தொழிலாளரின் சம்பள உயர்வு: இலாப - நட்டகணக்கில் பிரசாரபோர் - ஏ.எஸ்.சந்திரபோஸ்


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெருந்தோட்டத் தொழில்களை நடத்தும் முதலாளிமார் சம்மேளனம் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குவதாகவும், கடந்த வருடம் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலை விற்பனையின் போதும் 25 ரூபா நட்டத்தை எதிர்நோக்கியதாகவும் துரிதமான பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளன.

இந்நிலையில் 1000 ரூபா சம்பளம் என்பது எப்படி சாத்தியமாகலாம் தோட்ட வேலைகளில் வழங்கப்படும் சம்பளத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிைலவரங்கள் எப்படி காணப்படுகின்றன. தொழிலாளர்கள் தோட்டங்களில் நிர்ணயிக்கப்படும் சம்பளத்தில்தான் தொடர்ந்து வாழ வேண்டுமா போன்ற விடயங்களை அவதானிக்க வேண்டியது அவசியமாகும்.

மேற்குறிப்பிட்ட இவ்விடயங்களை அறிவதற்கு அரசாங்கத்தினால் 2009/10 காலப்பகுதியில் வெளியிடப்பட்ட குடும்ப வருமானம், செலவுகள் பற்றிய அளவீடு (House hold income and expenditure salary 2009/10) மற்றும் மத்திய வங்கியின் ஆண்டறிக்கை என்பவற்றில் வெளியிடப்பட்ட தகவல்களையும் மிக அண்மையில் இம்மக்களுடன் மேற்கொள்ளக்கூடியதாக இருந்த தொடர்புகளையும் மட்டும் பின்னணியாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தேயிலையில் உற்பத்திச் செலவு வருடா வருடம் அதிகரித்து வந்துள்ளது என்பது உண்மையானதாகும். உதாரணமாக அண்மைக் காலப்பகுதியில் இதன் உற்பத்தி செலவு வருடாந்தம் 10 வீதத்திற்கு அதிகமாக அதிகரித்து வந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

2012இல் ஒரு கிலோ கிராம் தேயிலையின் உற்பத்தி செலவே 390 ரூபாவாக காணப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டில் சுமார் 13 வீத அதிகரிப்புடன் 48 ரூபாவாகக் காணப்படுகின்றது.

உற்பத்திச் செலவில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலும் விற்பனையின் போது உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த விலையில், நட்டத்தில் விற்பனை செய்துள்ளதாக எத்தகைய தகவல்களும் இலங்கை மத்திய வங்கியில் ஆண்டறிக்கையில் குறிப்பிடவில்லை. எடுத்துக் காட்டாக மேற்குறிப்பது போல 2012இல் உற்பத்தி செலவு 390 ரூபாவாக இருந்த போதும் அதனை ஏல விற்பனையின் போது ஒரு கிலோ கிராம் 392 ரூபாவாக விற்பனை செய்துள்ளனர். இதைவிட ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் 563 ரூபாவாக ஏற்றுமதி செய்துள்ளனர். இதுபோல 2013 இல் மேற்கொண்ட உற்பத்தியிலும் உற்பத்தி செலவு 418 ரூபாவாக காணப்பட்டாலும் ஏல விற்பனையின் போது ஒரு கிலோ கிராம் 445 ரூபாவாகவும் ஏற்றுமதியின்போது ரூபா 625/=க்கும் விற்பனை செய்துள்ளனர்.

மத்திய வங்கி காட்டும் புள்ளிவிபரங்களில் கம்பனிகளின் உற்பத்திகள், அது தோட்டங்களின் உற்பத்தி என்று வேறுப்படுத்தி காட்டுவதில்லை. இப்புள்ளிவிபரங்கள் இலங்கையில் வேறுபட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் தேயிலையின் சராசரி விலைகள் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் இப்புள்ளி விபரங்கள் சராசரியல்ல என்பதால் கம்பனிகளின் விலைகளிலிருந்து பெருமளவு வேறுப்பட்டதாக இருக்க முடியாது. எனவே, கம்பனிகள் தமது உற்பத்தியின் போது ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் ௨௫ ரூபா நட்டம் ஏற்படுகிறது என்பதற்கு அரசாங்க புள்ளி விபரங்களில் போதுமான தரவுகள் இல்லை என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வது என்பது விமர்சனத்திற்குரிய விடயமாகும்.

இதைவிடத் தொடர்ச்சியாகவே அதாவது, 10 வருடங்களுக்கு மேலாக நட்டத்தில் இயங்குகின்ற கம்பனிகள் தொடர்ந்தும் நட்டத்தில் தமது தொழிலை நடத்துவதற்கு எப்படி முடியும் முகாமைத்துவ ஒழுங்குவிதிகளின் படி குறைந்த பட்சம் 40 வீதத்தையாவது இலாபம் பெற்றுக்கொள்ள முடியாத கம்பனிகள் உடனடியாக மூடப்பட்டு, அதனை இலாபமீட்டும் தொழிற்றுறையாக மாற்றுவதற்கு உபாயங்களை பின்பற்ற வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்.

இதைவிடத் தோட்ட முகாமையே தொழிற்சட்ட விதிகளின்படி அங்கு வாழும் தொழிலாளர்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும். இதுவிடயமாக கூறப்படும் விடயம் என்ன வென்றால், தோட்டங்களில் ஒரு தொழிலாளியின் உழைப்பில் அவர்களில் பின்னுள்ள நான்கு குடும்ப அங்கத்தவர்களின் நலன்களையும் தோட்டக் கம்பனிகளே பராமரிக்கின்றன என்பதாகும் உண்மையில் தோட்டங்களில் நிரந்தர பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் தொழிலாளர் ஒரு குடும்பத்தில் ஒருவராக இருக்கலாம்.

ஆனால் மற்றுமொருவர் தற்காலிக தொழிலாளர்களாக தோட்டத்திலேயே  தற்காலிக தொழிலாளருக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் அலுவலர் தோட்டங்களில் வழங்கப்படுவதில்லை. ஆனால் அவர்களது உழைப்பு அயராது தொழிலாளர்களின் பங்களிப்பினை எந்த வகையிலும் குறைந்துள்ளதாக கூறமுடியாது.

தோட்டங்களில் இப்போது சுமார் 332,000 நிரந்தர தொழிலாளர்களும் ஏற்கனவே நிரந்தர தொழிலாளர்களாக இருந்து தோட்ட வேலைகளில் இருந்து விலகி தற்காலிக தொழிலாளர்களாக சுமார் 200,000 மொத்தமாக சுமார் 430,000 பேர்  இவர்கள் பெருந்தோட்ட கம்பனிகளிடம் இருந்து சுமார் 118,000 ஹெக்டேயர் தேயிலைக் காணிகளிலும் சுமார் 92,000 ஹெக்டேயர் றப்பர் காணிகளிலும் தொழில் புரிபவர்களாக உள்ளனர். இந்நிலையில் கம்பனியால் தொழிலாளர்கள் யாவருக்கும் இலவச மருத்துவம் வீடு குடிநீர் என்று இந்த சலுகைகள் வழங்குவதால் நட்டம் ஏற்படுகின்றது என்று உறுதியான போதுமான ஆதாரங்கள் இல்லை.

இதைவிட தேயிலையில் மொத்த உற்பத்தி செலவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சலுகைகள் என்பன சுமார் 6070 வீதமாக காணப்படுகின்றது என்றும் எவ்வாறாயினும் மேலதிகமாக சம்பள அதிகரிப்பு என்று உற்பத்தி செலவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு உடன்படுவது இயலாது என்பது பொதுவாக முன்வைக்கப்படும் விவாதமாகும்.

உண்மையில் தேயிலையின் உற்பத்தி செலவினை கணிப்பிடுதல் போதுமான தகவல்கள் இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை. உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தாமே ஒரு கணக்கை போட்டு அதில் தொழிலாளர்களுக்கான செலவு அதிகமானது என்று குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். உற்பத்தி செலவு பற்றி தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் சுதந்திரமாக கணிப்பீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள் கிடைக்கும் போதே அதன் உண்மைத் தன்மையை அறியலாம். இந்தியா பங்களாதேஷ்  போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக உற்பத்தி செலவுகள் பற்றி சுதந்திரமாக மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொண்டு உற்பத்தி செலவு பற்றி தர்க்கரீதியாக மதிப்பீடு செய்யக்கூடிய தகுதி வாய்ந்தவர் அல்லது நிறுவனங்களிடம் மதிப்பீடு செய்வது தேயிலை இறப்பர் உற்பத்தியில் எதிர்காலத்துக்கு பயன்தரக்கூடிய செயலாகும்.

இப்போதைய நிலையில் தோட்டங்களை விட்டு வெளியேறும் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள்   விவசாய தொழில் துறைகளில் நாளாந்தம் 1000 முதல் 1500 ரூபா வரையிலான வருமானத்தைப் பெற்றுகொள்கிறார். House hold income.....   பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களின் சராசரி வருமானம் சுமர் 17000 ரூபாவாகும்.  கிராமங்களில் இவ்வருமானம் 23000 ரூபாவாக காணப்படுகிறது.

இதன்படி இரா தேர்தல்  மாதாந்த வருமாம் 85000 ரூபா என்பதாகும். ஆனால்  இது 11500ரூபா ஆக காணப்படுகிறது.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க வேண்டும். பெருந்தோட்டத்தில் காலப் சராசரி வருமானம் அங்கு வாழ்ந்த நாளாந்த வேலைக்கு வேதனம் பெற்றுக் கொள்கிறார். தொழிலாளர்களில் வருமானத்தினால் மட்டும் கொண்டதாக காணப்பட்ட தோட்டப் பகுதியில் தொழில்புரிய சகலராலும் உள்ளடக்கிய சராசரி கணிப்பாகும்.
இவ் பெருந்தோட்ட மாவட்டங்களை பெறுத்தவரையில் நுவரேலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை என்பவற்றுடன் குருநாகல், கண்டி, மாத்தறை, தலவாக்கலை உள்ளடக்கப்பட்டுள்ளன. குருநாகல், கண்டி, மாத்தளை மாவட்டங்கள் தேயிலை இறப்பர் போன்ற பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் வாழ்க்கையை முழுமையாக பிரதிபலிக்கும் மாவட்டங்களாக முடிவு செய்தல் பொருத்தமாக இருக்கமாட்டாது.

இப்போது தேயிலை என்பது பெருந்தோட்ட கம்பனிகளிடம் முழுமையாக  மொத்த உற்பத்தியை 70 வீதம் சிறுதோட்டங்களிலேயே மேற்கொள்கிறார்கள். இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் பிரதான தொழிலாளர் தேவை. தொழில் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. கம்பனிகள் சிறு தோட்டங்களை  கொண்டு தொழில் துறையை முன்னேற்ற வேண்டும். இதில் தொழிலாளர்களும் பங்காளிகளாக மாற வேண்டும். இந்நிலையில் சம்பளம் தீர்மானம் என்பது சந்தைகளில் கேள்வி நிரம்பல் கோட்பாட்டின்படி தீர்மானிக்கப்படும்போது அது   அபிவிருத்தியாக மாறலாம்.

நன்றி - வீரகேசரி

கொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்

 

இலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த 83 இனப்படுகொலைச் சம்பவம் ஆயுதப் போராட்டத்தை கூர்மையடையச் செய்ததும் நாமறிவோம். ஆனால் அந்த வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்த்தப்பட்ட ஆண்டில் இருந்து சரியாக 100 வருடங்களுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள். இந்த மாதம் மார்ச் 25ஆம் திகதியோடு அந்த கலவரம் நிகழ்ந்து 132 வருடங்கள் நிறைவடைகின்றன.

“கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் வெளியிட்டது.

இலங்கையில் இன நல்லிணக்கத்தை சிதைத்துவிட்ட பாத்திரத்தையும் அன்றே தொடக்கிவிட்டிருந்தது இந்த சம்பவம். அது எப்படி என்பதை அறிய அந்த சம்பவத்துக்கு சற்று முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகளை உன்னிப்பாக அலசுவது அவசியம்.

கிறிஸ்தவ விரிவாக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிசனரிமார்களது மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக விஸ்தரிக்கப்பட்டது. ஒல்லாந்தரே முதன்முதலாக 1736 இல் சிங்கள அச்சகத்தை முதலில் நிறுவிய போதும் பிரித்தானிய மிசனரிமாரே அதனை அதிகம் மதப் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்கள். கிறிஸ்தவ பிரச்சாரங்களோடு நின்றுவிடாமல் பௌத்த மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் எதிராகவும் பிரச்சாரம் செய்தார்கள். மிசனரிமாரது பிரசார வெளியீடுகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்பட்டன. மதம் மாற்றத்துக்காக அவர்கள் ஏனைய மதங்களைத் தாக்கத்தொடங்கியதும் பௌத்த மதத்தினர் இதனை எதிர்த்து கிளர்ந்தார்கள். இதனை முறியடிக்க பல வழிகளை திட்டமிட்டார்கள்.

பிரசுரங்கள், பிரசங்கங்கள் மற்றும் விவாதங்கள் வாயிலாக, மற்றும் கல்வியின் மூலமாக இவர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினார்கள். கொழும்பில் முதலில் ஒரு அச்சகம் 1855 இல் நிறுவப்பட்டது. பின்பு காலியில் 1862 இல் இன்னொன்று தொடங்கப்பட்டது. இந்த அச்சகங்கள் பௌத்த மதம் தொடர்பான பிரசுரங்கள், விவாதங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை வெளியிடுவதற்கென்றே முற்றாக செயற்பட்டன. அத்தோடு பௌத்த மறுமலர்ச்சியை முன்னெடுத்த பௌத்த பிக்குகள் மிசனரிமாருடன் பகிரங்கமான தொடர் விவாதங்களை ஏற்பாடு செய்து நடத்தினார்கள். 1873 இல் பாணந்துறை நகரத்தில் நடைபெற்ற விவாதமானது மிகவும் பிரபல்யமானது. “பாணந்துறை விவாதம்” என்கிற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் உள்ளது.

பாணந்துறை விவாதம்
இந்த விவாதம் பிரபல பௌத்த பிக்கு மீகெட்டுவத்தே குணானந்த தேரரின் (மொஹட்டிவத்தே குணானந்த என்றும் அழைப்பார்கள்) தலைமையில் ஹிக்கடுவ சிறீ சுமங்கல தேரர் போன்றோரும் இணைந்து கிறிஸ்தவ மதப் போதகர்களுடன் நடந்தது. அந்த விவாதத்தின் உள்ளடக்கம் பல நூல்களாக வெளிவந்துள்ளன. மிசனரி மதமாற்ற நடவடிக்கையை முறியடிக்க பௌத்த பாடசாலை இல்லாததும் பெரிய குறைபாடாக பௌத்தர்கள் கருதினர். 1880 இல் பிரம்மஞான சங்கத்தைச் (Theosophical Society) சேர்ந்த கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வரும் வரையில் இந்த நிலைமைகளில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. "1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற பிரபல்யமான பகிரங்க விவாதமே கேர்ணல் ஒல்கொட் இலங்கை வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அவர் இலங்கை வந்ததும் நேராக கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரை வந்து குணானந்த தேரரை சந்தித்தார். கூடவே அவர் பௌத்த மதத்தை தழுவவும் செய்தார்.

கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம் ஒருபுறம் பலமடையத் தொடங்கியது. ஆரம்பத்தில் காலனித்துவ எதிரிப்பின் சாயலைக் கொண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் பௌத்த மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ எதிர்ப்புமே என்று குமாரி ஜெயவர்த்தனா தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள், மது ஒழிப்பு உட்பட பல்வேறு பொது பிரச்சினைகளையும் கையில் எடுத்தார்கள். சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெற்றன.

அநகாரிக்க தர்மபால
ஒல்கொட் இலங்கையில் பன்னிரண்டு கல்லூரிகளையும் நானூறுக்கும் அதிகமான பாடசாலைகளையும் நிறுவியதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் பௌத்த மறுமலர்ச்சியில் மிகவும் முக்கிய பங்காற்றிய முதன்மையான நபர் அநாகரிக தர்மபால. கிராமப்புறத்திலிருந்து கொழும்பிற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து, அங்கு வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்ட ஒரு தீவிர பௌத்த குடும்பத்தில் பிறந்தவர். அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் டேவிட் ஹேவவிதாரன. ஒல்கொட்டின் இலங்கை வருகை டேவிட்டின் வாழ்க்கையை மாற்றியது. கூடவே கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தொடர்ந்து டேவிட்டை அதுவரை கல்வி பயின்ற கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரியிலிருந்து நீக்கிய அவரது தகப்பனார் டொன் கரோலிஸ் “மகனே இனிமேல் நீ கிறிஸ்தவ பாடசாலைக்குப் போவதை நான் விரும்பவில்லை” என்றார். அங்கிருந்து விலகி ஒல்கொட்டால் உருவாக்கப்பட்ட பரமவிஞ்ஞான சங்கத்தில் கல்வி கற்றார். அங்கு மேலும் பௌத்த உணர்வூட்டப்பட்டவராக டேவிட் என்கிற தனது பெயரை தர்மபால என்று மாற்றிகொண்டார்.

பின் வந்த காலங்களில் இலங்கையின் போக்கை இனவாத திசையில் வழிநடத்தியதில் அநகாரிக தர்மபாலாவின் வகிபாகம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே. இன்று வரை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு வழிகாட்டும் தத்துவத்தின் தந்தை அநகாரிக என்றால் அது மிகையாகாது. அந்த அநகாரிகவை உருவாக்கிய சம்பவம் இந்த கொட்டாஞ்சேனைக் கலவரமாகும். இதன் பின்னர் 1915இல் சிங்கள-முஸ்லிம் கலவரத்துக்கு சித்தாந்த அடித்தளம் போடப்பட்டதும் இதன் நீட்சி தான். 

கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமய
இத்தகைய பின்னணியில் வளர்ச்சியடைந்த பௌத்த மறுமலர்ச்சியின் உந்துதலால் பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் விரிசல் அதிகரித்ததுடன், பரஸ்பர சந்தேக உணர்வும், ஆங்காங்கு முறுகல் நிலையும் வளரத் தொடங்கின. பௌத்த வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் பௌத்த எழுச்சியை ஆதரிக்கத் தொடங்கியதுடன் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்கு எதிர்த்து செயல்பட்டனர்.

கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமயவில் தலைமை மதகுருவாக இருந்த மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அந்த விகாரையில் உள்ள புத்தர் சிலைக்கு கண்களை வைப்பதற்கான வைபவத்தை 1883 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிருந்தபோது பிரதான அரச வைத்திய அதிகாரி ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பரவி வரும் நோயொன்றின் காரணமாக இந்த வைபவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பதற்கு குணானந்த தேரர் ஒப்புக்கொண்டபோதும் இந்த செய்தியின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகித்தார்.

இதற்க்கு முன்னரும் 1872இல் கொச்சிக்கடையிலும் 1880இல் மாதம்பிட்டியிலும் பௌத்த பெரஹரவின் போது கல் எறிந்து குழப்ப முயற்சித்ததையும் முகத்துவாரத்தில் பாதையை மறித்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார். சிலைகளுக்கு கண் வைக்கும் வைபவத்துக்கு ஊர்வலமாக வந்து பூஜைகளை செய்யும்படி பெளத்தர்களைக் கேட்டுக்கொண்ட குணானந்த ஹிமி அதற்கான போலிஸ் ஒப்புதலையும் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் தீபதுத்தமாறாமய விகாரைக்கு சென்றார்கள். அந்த விகாரையின் ஒரு பகுதியில் கந்தசுவாமி கோவில் ஒன்று இருந்ததாகவும் அதற்கும் பௌத்த துறவிகள்  திருவிழா நடத்தியதாகவும் 1887இல் வெளிவந்த ரிவிரெச பத்திரிகை  கூறுகிறது. இப்படி பெளத்தர்கள் அணிதிரள்வது தம்மை சீண்டும் நடவடிக்கையாக சந்தேகித்தனர்.

ஏற்கெனவே பாணந்துறை விவாதத்தில் குணானந்த தேரர் தலைமையிலான பௌத்த தரப்பே வென்றிருந்ததும் அதிருப்தி நிலையை உருவாக்கியிருந்தது.

கொட்டாஞ்சேனை தேவாலயம்
கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயம் 16ஆம் நூற்றாண்டிலிருந்து சிறியதாக இயங்கி வந்தது. 10 ஏக்கர்களைக் கொண்ட இந்த காணி ஒல்லாந்தர்களால் 1779இல் உரித்தாக்கப்பட்டிருக்கிறது. 1818இல் ஒரு சந்தர்ப்பத்தில் இது பீரங்கிக் குண்டால் தாக்கப்பட்டிருக்கிறது. அப்படி நிகழ்ந்தபோது குணானந்த தேரர் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்காக மணியோசை எழுப்பி பலரைத் திரட்டி அந்த தேவாலயத்தை பாதுகாத்ததாக சில சிங்கள நூல்கள் கூறுகின்றன. இந்த தகவலின் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. தற்போதைய தேவாலயம் 1870இல் கட்டத்தொடங்கப்பட்டு 1903இல் முடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது தேவாலயம் கட்டப்பட்டுகொண்டிருந்த காலத்தில் தான் இந்த கொட்டாஞ்சேனை கலவரம் நிகழ்ந்திருக்கிறது. தீதீபதுத்தமாறாமய விகாரைக்கும் புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது.

அன்றைய மிசனரி திருத்தூதர் ஜே.மாசிலாமணி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 6ஆம் திகதியே சில எச்சரிக்கையை எழுத்து மூலம் செய்திருந்தார்.  ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் பெரிய வெள்ளி மற்றும் குருத்து ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்த பெரஹரவுக்கு அனுமதி வழங்குவது முறுகலை ஏற்படுத்தும் என்றும் சில அசம்பாவிதங்கள் நடக்கவிருப்பதாக கதைகள் உலவுவதாகவும், வழமைபோல ஈஸ்டர் காலத்து புனித ஊர்வலத்தை இடையூறு இல்லாமல் நடத்திமுடிக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடித விபரங்கள் “The Kotahena Riots” அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறன.

பெரிய வெள்ளிக்கு முன்னர் நடந்த பெரஹர நிகழ்வுகளுக்கு போலீசார் பந்தோபஸ்து வழங்கியிருக்கிறார்கள். சில கத்தோலிக்கர்கள் கல்லெறிந்தார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டிருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரிய வெள்ளியன்று நடத்தப்படவிருந்த புனித ஊர்வலத்துக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 25 குருத்து ஞாயிறன்று மதியம் 12 வரை தேவாலய பூஜைகளுக்குப் பின்னர் பெரஹரவுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இலங்கையில் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் பௌத்த பெரஹர நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய இராணியிடமிருந்து குணானந்த தேரர் பெற்று வந்திருப்பதாகவும் நாடு முழுதும் வதந்தி பரப்பப்பட்டதுடன் அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது.

கலவரம்
அன்று இரவு பொலிஸ் பந்தோபஸ்துடன் பெரஹர பொரல்லையிலிருந்தும் கொள்ளுப்பிட்டியிலிருந்தும் வந்த ஊர்வலம் மருதானையில் இணைந்துகொண்டு கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரையை நோக்கி நகர்ந்தது. இதனை தடுத்து நிறுத்த கத்தோலிக்க தரப்பு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் இருந்துள்ளனர்.

குணானந்த தேரர் இந்த பெரஹரவில் பல வித ஆட்டங்களை சேர்த்துக்கொண்டார். தாள வாத்திய அணி, சாட்டையடி, புலியாட்டம், மரபான பேயாட்டம், தீ விளையாட்டு, வில் அம்பு தரித்தவர்கள், பெரிய உருவப்பொம்மை என பலதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 

இதற்கிடையில் பெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.

பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த மணியை யார் எதற்காக அடித்தார்கள் என்பது பற்றி போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனால் அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கிக்கொண்டனர். கட்டுப்படுத்துவதர்க்காக அழைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் வந்து சேர்ந்தபோது அனைத்தும் ஓய்ந்திருந்தது.

இந்த கலவரத்தில் பௌத்த தரப்பை சேர்ந்த ஜூவன் நைதே என்பவர் கொல்லப்பட்டார். 12 உட்பட 30 பேர் மோசமான காயத்துக்கு உள்ளானார்கள். அதே நாள் பலங்கொட, கண்டி போன்ற இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அன்றைய தேசாதிபதி கொட்டாஞ்சேனை விகாரைக்கு விரைந்து குனானனந்த தேரருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தொடர்ந்தும் 30ஆம் திகதி வரை பெரஹர நடத்த அனுமதி வழங்கினார்.  

சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்த சிறு தேவாலயங்கள் தீயிடப்பட்டன. அதுபோல பௌத்த பெரஹரக்களும் குழப்பப்பட்டன. தீபதுத்தமாறாமய விகாரையை கொளுத்தி குணானந்த தேரரை கொல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து 3000 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்தியும் வேகமாக பரப்பபட்டிருந்தது. இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை வெளியிட்டதோடு சரி. இந்த சம்பவத்துக்காக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குணானந்த தேரர் பௌத்தர்களை மத ரீதியில் தூண்டுவதற்கு எப்படிப்பட்ட பிரசாரங்களை எல்லாம் மேற்கொண்டார் என்பதற்கு அதன் பின் வெளிவந்த அவரது வெளியீடுகள் சாட்சி. 

கொட்டாஞ்சேனை சந்தியில் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் குணானந்த தேரருக்கு சிலை கட்டப்பட்டது. “மீகெட்டுவத்தே குணானந்த ஹிமி” பற்றிய திரைப்படத் தயாரிப்பு கடந்த மாதம் பெப்ரவரி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவரின் பாத்திரத்தில் நடிப்பவர் இன்று இனவாத முகாமில் இருக்கும் பிரபல நடிகர் ரோஜர் செனவிரத்ன.

கொட்டாஞ்சேனை - தீபதுத்தமாறாமய விகாரை பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விகாரை. பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இந்த விகாரையிலிருந்து தான் தொடங்கியது. இலங்கையின் முதலாவது கலவரத்துக்கு காரணமான விகாரையும் இது தான். இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கேர்னல் ஒல்கொட் முதலில் வந்தது குணானந்த தேரரை சந்திக்கத்தான். அது இங்கு தான் நிகழ்ந்தது. அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்கு தான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான் அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான். தாய்லாந்து இளவரசர் பௌத்த மத பிக்குவாக ஆனதும் இங்கு தான். இப்படி பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தம் இந்த விகாரை.

இந்த சம்பவத்தின் பின்னர் பௌத்த மறுமலர்ச்சியின் பேரால் பௌத்த தரப்பு பலமடைந்தது. அவர்கள் நடத்திய அணிதிரள்வின் விளைவாக வெசாக் தினத்தை விடுமுறை நாட்களாக 27.03.1887 அன்று அறிவித்தது அரசு. 1770 இல் இருந்து இந்த வெசாக் விடுமுறை ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம  விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956இல் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அம்கீகரிக்கப்பட்டது.

கத்தோலிக்கர்களுக்கு எதிராக அன்று இட்ட தீப்பொறியே இன்றுவரை கத்தோலிக்கர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்ச்சியாக பேணப்பட்டு வருகிறது. இன்று வரை பேரினவாத இயக்கங்கள் கத்தோலிக்க நிறுவனங்களையும், தேவாலயங்களையும், ஏனைய சபைகளையும் எதிர்த்து வருவதுடன் ஆங்காங்கு பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும் மேற்கொண்டு வருவதை அறிந்து வருகிறோம்.

மேலோட்டமாக பார்த்தால் கொட்டாஞ்சேனைக் கலவரமும் அதற்கான சித்தாந்த தயாரிப்பும் காலனித்துவ மிசனரி மதத்துக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டதைப் போன்று தோற்றமளிக்கலாம். ஆனால் இந்த சிங்கள பௌத்த சக்திகள் நாளடைவில் சொந்த நாட்டுக்குள் சொந்த சகோதர இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிராக அந்த சித்தாந்தத்தை உருமாற்றம் செய்து நாட்டை பாரிய படுகுழிக்குள் தள்ளியது. கொட்டாஞ்சேனைக் கலவரம் அந்த வகையில் மேலும் விரிவாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

நன்றி - தினக்குரல் - 29.03.2015

இலங்கையின் முதலாவது கலவரத்தின் சுவட்டைத் தேடிய பயணம் – என்.சரவணன்


இலங்கையின் முதலாவது வகுப்புக் கலவரம் ஒரு மதக் கலவரமே. அது நிகழ்ந்தது 1883 அதாவது சரியாக 1983 இனப்படுகொலை நடப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர். இந்தக் கலவரத்தை கொட்டாஞ்சேனை கலவரம் என்று அழைப்பார்கள். அன்றைய ஆங்கிலேய ஆட்சி இந்த கலவரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையை “The Kotahena Riots” என்றேஅழைத்தது.

இந்த கலவரம் பற்றி போதிய அளவு தகவல்கள் தமிழில் வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் கூட சிறிய அளவே தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

அரச சுவடிகள்

இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மற்றும் குறிப்பான படுகொலை சம்பவங்கள் குறித்து பல்வேறு கட்டுரைகளை சரிநிகரில் வெவ்வேறு பெயர்களில் எழுதி வந்திருக்கிறேன். அக்கட்டுரைகளுக்காக கள வேலைகள் நிறையவே செய்திருக்கிறேன். சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு சென்று தகவல்கள் திரட்டியிருக்கிறேன், பேட்டிகள் எடுத்திருக்கிறேன். அதுபோல மேலதிக தகவல்களுக்காக அப்போது வெளிவந்த பத்திரிகைகள், பிரசுரங்களை தேடி எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன். 1977க்கு முன்னரான பத்திரிகைகள் வெளியீடுகளை இலங்கை தேசிய சுவடிகூடத் திணைக்களத்திலும், (National Achives) மியூசியம் நூலகத்திலும் தேடிப் பார்க்க இயலும். 1977க்குப் பிந்திய வெளியீடுகள் பிரசுரங்களை தேசிய நூலக சேவைகள் சபை (National Library service board) இலும் பார்க்கலாம். இந்த மூன்று இடமும் ஏறத்தாழ நடந்து போகக் கூடிய தூரங்களில் அருகாமையில் தான் உள்ளன. தேவையான பகுதிகளை பிரதி எடுத்து வரமுடியும். 10 வருடங்களுக்கு முன்னர் வரை நூலொன்றில் இருந்து மூன்றில் ஒரு பகுதி வரை பிரதி எடுக்க அனுமதித்தார்கள். இப்போது அதனை நான்கில் ஒரு பகுதி மட்டுமே பிரதி எடுக்கலாம் என்கிற விதிமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவற்றைப் பயன்படுத்தியதில் எனக்கு ஏறத்தாழ 24 வருட அனுபவம் உண்டு. தமிழ் ஆவணங்கள் பல திட்டமிட்டே காணாமல் போக செய்யப்பட்டிருக்கின்றன. அது  குறித்து விரிவாக சில கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறேன். அதுபற்றி விரிவான கட்டுரையொன்றும் எழுதப்பட வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த இடங்களை போதிய அளவு பயன்படுத்தியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். இவற்றுக்குள் நுழைவதில் தமிழர்களுக்கு இருந்த கடும் நெருக்கடிகள்  முக்கிய காரணம். குறிப்பாக யுத்தம் நடந்த காலப்பகுதியில் இதற்குள் நுழையும் தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டார்கள். அங்கே சிவில் உடை தரித்த புலனாய்வுப் பிரிவினர் எப்போதும் இருந்து வந்தார்கள். 20வருடங்களுக்கு முன்னர் சிவராம், வ.ஐ.ச.ஜெபாலன் போன்றோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அங்கே போனபோது அப்படி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனக்கு இருந்த சிங்கள மொழிப் பரீட்சயத்தாலும் எனது ஊடக அடையாள அட்டையின் பாதுகாப்பிலும் என்னால் அவ்வப்போது சென்று எனது ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

கொட்டாஞ்சேனைக் கலவரம் குறித்த தகவல்களை சென்ற வருடம் 2014 இல் சென்று கண்டெடுத்த தகவல்கள் முக்கியமானவை. குறிப்பாக அப்போதைய ஆங்கிலேய அதிகாரிகளின் எழுதிய அறிக்கை குறிப்புகள் அவர்களின் கையெழுத்திலேயே கிடைத்தன. உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட “The Kotahena Riots” அறிக்கையையும் பெற்றுக்கொண்டேன். அவற்றை போட்டோகொப்பி பிரதி எடுக்க முடியாது. மிகவும் பழமையான ஆவணங்களின் தாள்கள் சற்று உக்கி பலவீனமாக இருப்பதால் அவற்றை போட்டோகொப்பி எடுத்து தரமாட்டார்கள். அப்படியான பழமையான ஆவணங்களை micro film எடுத்து தொகுக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளாக நடக்கின்றன. அதற்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரி எனக்கு கருப்பு வெள்ளை புகைப்படக்கலை கற்றுத்தந்த ஆசிரியர். அவரின் தகவலின் படி இன்னும் பல ஆண்டுகள் இந்த பணி நீடிக்கும். இன்னும் micro film எடுக்காத ஆவணங்கள் நமக்கு தேவைப்படும் பட்சத்தில் அப்படி micro film எடுக்கும் செலவை எம்மிடம் சுமத்துவதன் மூலம் அந்த பிரதிகளை சீடி ஒன்றில் பதிந்தே பெற்றுக்கொள்ளலாம். உடனடியாக அதனை பெற்றுக்கொள்ள முடியாது. ஒரு சில நாட்களின் பின்னர் அவர்கள் குறித்த தினத்தில் ரசீதைக் கொண்டு போய் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.

2014 இல் சென்ற போது எடுத்தது
தீபதுத்தமாறாமய

எனது பிரதேசமும் கொட்டாஞ்சேனையே. கொட்டாஞ்சேனையின் பல மூலை முடுக்குகளும் எனக்கு நன்றாக பரீச்சயமுள்ளவை. கொட்டாஞ்சேனை கலவரத்துடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பிலுமிருந்து தகவல்களை அறிவதற்காக அலைந்தேன். முதலில் தீபதுத்தாமாறாமய விகாரைக்கு செல்ல வேண்டும். கொட்டாஞ்சேனை போலிஸ் நிலையத்துக்கு வலப்புறமாக அதனை அண்டியபடி இருக்கிறது இந்த விகாரை. இந்த விகாரைக்கு நேரெதிரில் உப்புக்குளம் தமிழ் பாடசாலை முன்னர் இருந்தது. அங்கே தான் எனது தங்கைகள் இருவரும் படித்தனர். பின்னர் அது பிக்கரிங்க்ஸ் வீதிக்கு மாற்றப்பட்டது. நான் படித்த கெதீற்றல் கல்லூரியும் சற்று தள்ளி இருந்தது. 83 கலவரத்துடன் அந்த கல்லூரியின் தமிழ் பிரிவை முற்றாக மூடிவிட்டு சிங்கள பாடசாலயாக்கியதும் நாங்கள் நட்டாற்றில் விடப்பட்ட கதை தனியானது.  சிறு வயதில் நான் பாடசாலை முடிந்து வரும்போது தங்கை கல்யாணியை அழைத்துக்கொண்டு செல்வது வழக்கம். எனவே அப்படி காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த தீபதுத்தாமாறாமய விகாரையில் தான் நண்பர்களோடு விளையாடுவோம். ஆனால் இப்போது அப்படி அல்ல யுத்தம் இந்த சூழலை எல்லாம் குழப்பிவிட்டது. அந்த விகாரையில் இருக்கும் இந்துக் கடவுளைக் கும்பிடக் கூட தமிழர்கள் செல்வதில்லை. அப்படிப்பட்ட அந்த விகாரைக்கு பல வருடங்களுக்குப் பின் தகவல் திரட்டுவதற்கு எப்படி செல்வேன். எனது பள்ளிக்கால சிங்களத் தோழி அந்த விகாரைக்கு சென்று வருபவர். அவர் பெயர் சாந்தி. சாந்தியின் துணையுடன் தற்போதைய விகாராதிபதியுடன் ஒரு நேரத்தை குறித்துக்கொண்டு சென்றோம்.

அங்கே அவரிடம் எனக்கு வாய்க்கப்பெற்ற சிங்கள மொழியிலேயே எனது தேவையை அறிவித்தேன். ஆனால் அந்த கலவரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த விகாரையின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக அறிய விரும்பும் நோக்கத்தை சொன்னேன். கூடவே அந்த கலவரத்தைப் பற்றியும் கேட்டேன். குனானந்த தேரோ தனது பணிகளை மேற்கொண்ட அந்த கட்டடத்தினுள் சென்று காட்டினார். எங்கள் வீடு இருக்கும் தெருவின் பெயரும் அவர் பெயரிலேயே உள்ளது. சில பிரசுரங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதனை நான் பிரதி செய்துவிட்டு தர அனுமதி கேட்டேன். அவர் சாந்தியின் முகத்தைப் பார்த்தார். சாந்தி தான் அதற்க்கு பொறுப்பு என்றார். இந்த சம்பவம் குறித்த முழுமையான பின்னணி குறித்தும் ஒரு நூல் ஒன்று வெளிவந்ததாகவும். அந்த நூல் இந்த விகாரையில் இருக்கிறது. எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார். அதனை பார்ப்பதற்கு கேட்டேன். அவர் மேலே சென்று சில நிமிடங்களுக்குப் பின் கொண்டு வந்தார் அந்த நூலை. “மொஹட்டிவத்தே குணானந்த வாழ்க்கை சரித்திரம்” என்கிற அந்த சிங்களநூலை எழுதியவர் விமல் அபயசுந்தர. நூலை வெளியிட்டது கொடகே சகோதரர்களின் பதிப்பகம். அந்த நூலை தயவு செய்து தாருங்கள் நான் தேவையான பக்கங்களை பிரதி செய்துவிட்டு மீண்டும் தந்து விடுகிறேன் என்று பவ்வியமாக கேட்டேன். சற்று யோசித்தார். இறுதியில் எப்போது தருவேன் என்று கேட்டார். மூன்று நாள் அவகாசம் தாருங்கள் என்றேன். மீண்டும் சாந்தியைப் பார்த்தார். சாந்தி தான் அதற்கு பொறுப்பு என்றாள். அதன்படி அந்த நூலையும் எடுத்துக்கொண்டு அவருடனான பேட்டியையும் முடித்துக்கொண்டு வெளியே வந்தோம். சுற்றி சுற்றி பல புகைப்படங்களை எடுத்தேன்.

சும்மாவா... பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இங்கிருந்து தான் தொடங்கியது. முதலாவது கலவரத்துக்கு காரணமான விகாரையும் இந்த தீபதுத்தாமாறாமய விகாரை தான். இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கேர்னல் ஒல்கொட் முதலில் குனானந்த தேரரை சந்திக்க இங்கு தான் வந்தார். அது இங்கு தான் நிகழ்ந்தது. அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்குதான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான் அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான். தாய்லாந்து இளவரசர் பௌத்த மத பிக்குவாக ஆனதும் இங்கு தான். இப்படி பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தம் இந்த விகாரை.

“மொஹட்டிவத்தே குணானந்த வாழ்க்கை சரித்திரம்”  நூலை பிரதி செய்வதற்கு முன்னர் பல இடங்களில் தேடித் திரிவோம் என்று முடிவெடுத்தேன். என் தம்பி அரவிந்தனிடம் சிங்கள பௌத்த நூல்கள் கிடைக்கும் இடங்களின் பட்டியல் ஒன்றை கொடுத்து அங்கெல்லாம் போய் இந்த நூலை விசாரிக்கும்படி அனுப்பினேன்.

மருதானையிலுள்ள கொடகே பதிப்பகத்தில் இருப்பதாக தம்பியிடமிருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்தது. மிகவும் மகிழ்ச்சியுடன். “இப்பவே தூக்கிருடா. கிடைக்காம போயிடலாம்” என்றேன். அடுத்த சில நிமிடங்களில் எனது கைகளில் அந்த நூல் இருந்தது.


புனித லூசியாஸ் தேவாலயம்

இனி அடுத்தது கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்துக்கு விரைந்தேன். எனது வாழ்க்கையில் மறக்க இயலாத நினைவுகளைக் கொண்டது இந்த தேவாலயம். பின்னேரங்களில் நண்பர்களை சந்திக்கும் டைம் அது. பல அரசியல், சமூக சண்டைகள், விவாதங்கள், உறவுகள், பிரிவுகள் எல்லாமே கிடைத்த இடம். மிகவும் பரீச்சயமான இடம்.

தேவாலயத்தின் பாதிரிமார்களை அணுகினேன். ஒரு பெரிய சிங்கள பாதிரியார் இது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் தெரியாது என்று கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் இறுதியில் ஒரு தமிழ் பாதிரியாரின் பெயரைச் சொல்லி அவரை அணுகச் சொன்னார். அவருக்காக காத்திருந்து சந்தித்தபோது என் பற்றி விரிவான அறிமுகத்தை செய்யவேண்டியிருந்தது. இப்படியான தகவல்கள் தொகுக்கும் வேளைகளில் எம்மைப்பற்றிய நம்பிக்கையை அவர்களுக்கு கொடுப்பது முக்கியம். அவரும் இது பற்றிய செய்தியை நானும் சற்று அறிவேன் ஆனால் இந்த தேவாலயத்தில் அதற்க்கான எந்த ஆவணங்களோ தகவல்களோ இருப்பதாகத் தெரியவில்லை என்று இறுதியில் கூறினார்.


நான் அவரிடம் எடுத்துச் சொன்னேன். “இதோ பாருங்கள் இந்த கலவரம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆவணங்களை நான் சேகரித்து இருக்கிறேன். அவற்றில் 99சதவீதமான தகவல்களும் கருத்துக்களும் ஒரு தலைப்பட்சமானவை. பெரும்பாலும் சிங்கள பௌத்தர்கள் தரப்பிலிருந்து வெளியானவை. அவற்றைப் பயன்படுத்தினால் முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களின் அடாவடித்தனமே இதற்க்கு காரணம் என்று தான் முடிக்க நேரிடும். எனவே உதவி செய்யுங்கள்.” கத்தோலிக்க தரப்பு கருத்து என்ன. தகவல்கள் என்ன என்பதை எங்கிருந்து பெறலாம் என்றாவது சொல்லுங்கள் என்றேன்.

இறுதியில் அவர் மருதானையிலுள்ள CSR “சமய சமூக நடுநிலையத்தில்” பல ஆய்வு நூல்களும், ஆவணங்களும் இருக்கின்றன. அங்கு விசாரியுங்கள் என்றார். கிடைக்கக்கூடும் என்றார். CSR எனக்கு நன்கு பரீட்சயமான இடம். அங்கு ஒரு பாதிரியாரை அணுகினேன். அந்த வாரத்துக்கு முன்னர் தான் இங்கு நடந்த ஒரு மனிதஉரிமை கூட்டமொன்றை பொது பல சேனா ஒரு கூட்டத்தை குழப்பி தடுத்தனர். எனவே நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அவரிடமும் தெளிவாக தேவையை குறிப்பிட்ட போதும் அங்கே அப்படி எதுவும் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார். ஆனால் என் விளக்கத்தை கேட்ட அவர் இன்னொரு ஆலோசனை கூறினார். போறல்லையிலுள்ள Bishop House போங்கள். அங்கே நான் சொல்லும் பாதிரியாரை சந்தியுங்கள் அவர் தான் பல கத்தோலிக்க ஆவணங்களுக்கு அங்கு பொறுப்பானவர். அங்கு நீங்கள் தேடியது கிடைக்கலாம்.

சரி இப்போது நேரம் மதியம் தான் இப்போதே கிளம்பிவிடுவோம் என்று தம்பி அரவிந்தனின் மோட்டார் சைக்கிள் என்னை பின்னால் வைத்துகொண்டு அடுத்த இடத்துக்கு மிதித்தது. அங்கு உள்ளே சென்று அந்த பாதிரிக்காக காத்திருந்தோம் தொலைபேசி மூலம் அவருக்கு தகவல் அனுப்பட்டிருந்தது. தான் அங்கு வருவதாக எமக்கு தொலைபேசியின் மூலம் அறிவித்தார். சில நிமிடங்களின் பின் வந்தவர். ஏன் எங்களுக்கு அந்த விபரங்கள் என்று சில விசாரணைகளை செய்தார். மீண்டும் அவர் நம்பக்கூடிய அளவுக்கு விளக்கினேன்.
“அந்த சம்பவம் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். அது ஒரு ஈஸ்டர் பண்டிகை காலத்தில் அல்லவா நடந்தது. போறல்லையிலிருந்து போன பௌத்த ஊர்வலத்தினரும் சிங்கள பெரஹரவும் மோதிக்கொண்டன அல்லவா.”
என்றவர் தொடர்ந்து சில விடயங்களைக் கூறினார் அவரிடமிருந்து புதிதாக எந்த தகவல்களும் கிட்டவில்லை. நிச்சயமாக அப்படியான ஆவணங்கள் எதுவும் இங்கு எம்முடைய சேகரிப்பில் இல்லை. என்று கூறிவிட்டார். தடவிப் பார்க்கிறேன் சில வேலை கிடைத்தால் அறிவிக்கிறேன் என்று எனது தொடர்பு விபரங்களை குறித்துக்கொண்டார். இது நடக்கிற காரியமில்லை என்று எனக்கு தெரியும். அடப்போங்கப்பா இலங்கையின் வரலாற்றில் முக்கிய ஒரு சம்பவம் பற்றி உரிய இடங்களில் எதுவும் இல்லை என்றால் எங்கு போவது. எவ்வளது அலட்சியமாக இருக்கிறார்கள். பொறுப்பற்று இருக்கிறார்கள் என்று தோன்றியது.

இறுதியில் கிடைத்த பல ஆவணங்களை எடுத்துக்கொண்டு நோர்வே வந்து சேர்ந்தேன். இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் சிங்கள பௌத்த போக்கின் வகிபாகம் குறித்த எனது நூல் விரைவில் வெளிவரப்போகிறது. சரிநிகரில் அது குறித்து எழுதிவந்த கட்டுரைகளையும் அதன் பின்னர் வேறு வெளியீடுகளிலும், தற்போது தினக்குரலிலும் எழுதி வரும் கட்டுரைகளும் அந்த நூலில் தொகுக்கப்படுகின்றன. இந்த வாரம் கொட்டாஞ்சேனை கலவரம் நிகழ்ந்து 132 வருடங்கள் ஆகிவிட்ட நினைவை முன்னிட்டு தினக்குரலில் அந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். கட்டுரைக்காக சுருக்கியிருக்கிற போதும். ஒரு நூலை எழுதுமளவுக்கு பல தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.

கொட்டாஞ்சேனைக் கலவரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம். ஆனால் வழமை போல வராலாற்று ஆவணங்கள் எல்லாமே சிங்கள சாய்வைக் கொண்ட ஆவணங்களாகவே இருகின்றன. ஏனைய இனங்களுக்கு எதிரானவையாகவே உள்ளன. ஏனைய இனங்களின் வரலாற்று ஆவணங்களும், அவர்களுக்கு சார்பான ஆவணங்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. அவை கிடைக்க முடியாதபடி இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.


கூடைக்குள் தேசம் தேசம் வெளியீடு


அன்புள்ளம் கொண்ட நன்பர்களே !
எங்கள் முயற்ச்சி உங்களை நம்பி கரம்கொடுபீர்..
29 ஆம் திகதி கூடைக்குள் தேசம் நூல் வெளியீடு .
பதுளையிலுள்ள ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில்
மலையத்தின் எழுத்துக்களை உலகரிய செய்வோம்.
இவ்விழா சிறப்புற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-கூடைக்குள் தேசம் தேசம்-

கூட்டு ஒப்பந்தமும் சம்பள உயர்வும் - பி.செல்வநாதன்


கூட்டு ஒப்பந்தம் இறுதியாக 2013ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கமைய நாளொன்றுக்கு தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 450 ரூபாவும், வேலை நாட்களில் 75% வருகை கொடுப்பனவாக 140 ரூபாவும் தேயிலை விலைக்கு ஏற்ப 30 ரூபாவாகவும் மொத்தமாக 620 ரூபா வழங்கப்படுகிறது. தோட்டங்களில் வேலை வழங்கப்படும் நாட்களில் 75% வருகை தராதவர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்காது.

2013ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் ஏப்ரல் அல்லது மே மாத முற்பகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மூன்று பிரதான தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியனவே பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகின்றன.

இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கருத்தில் கொண்டு தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஒரு தொழிலாளியை எடுத்துக் கொண்டால் சுபகாரியம் அல்லது மரணம் ஏற்பட்டாலோ சுகவீனமாக இருந்தாலோ கட்டாயம் வீட்டிலிருந்துதான் ஆக வேண்டும். அக்காலப் பகுதியில் 75% வேலைக்குச் செல்லாவிட்டாலும் அவர்களுக்கு 4000 முதல் 5000 வரை இழப்பு ஏற்படுகின்றது. எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பெருந்தோட்டத் துறையின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு முன்பு அது பற்றி நன்றாக ஆராய்ந்து தீர்மானம் எடுத்துச் செல்ல வேண்டும். சம்பள உயர்வோடு நின்று விடாமல் அவர்களுடைய நலன் தொடர்பாக சில விடயங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1. தோட்டத் தொழிலாளி ஒரு நாளைக்கு வேலைக்குச் சென்றாலும் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து முழுச் சம்பளம் வழங்கப்படல் வேண்டும்.
2. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்குச் சென்றால் அவர்களுக்கு 1 1/2 நாள் சம்பளம் வழங்கப்படல் வேண்டும். இதையே 1978 ஆம் ஆண்டின் 17ஆவது பிரிவுச் சட்டப்பிரிவு (08.01) கூறுகிறது. இன்றைய நாட் சம்பளப்படி 620+310=930 ரூபா வழங்கப்படல் வேண்டும்.

ஒரு பொது விடுமுறை தினத்தன்று தோட்ட நிர்வாகம் வேலை வழங்குமாயின் (போயா விடுமுறை, அரச விடுமுறை) அன்றைய தினம் வேலைக்குச் செல்லும் தொழிலாளிக்கு அனைத்துக் கொடுப்பனவுகளையும் சேர்த்து இரண்டு நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இன்றைய சம்பளப்படி 1240 ரூபா வழங்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக 450 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. சட்டரீதியாக நோக்குவோமாயின், இந்த இரண்டு வருடங்களுக்கான சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

3. தோட்டத் தொழிலாளருக்கு தோட்ட நிர்வாகம் 60 வயதைப் பூர்த்தி செய்தவுடன் ஓய்வு வழங்குகின்றது. ஆனால், அவர்களுடைய ஓய்வூதியப் பணம் உடனடியாக வழங்கப்படாமல் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. தோட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் அவர்களுக்குரிய பணத்தைப் பெற்றுக் கொடுப்பதில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டக் காரியாலயங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது. எனவே அவர்களுக்கு பணம் வழங்கும் போது தாமதமாகும். மாதத்துக்கு 10% மேலதிகமாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தோட்ட பெண் தொழிலாளருக்கு பிரசவ சகாய நிதியை முழுமையாக வழங்க ஆவன செய்தல் வேண்டும். இதனையே பிரசவ சகாய நிதி சட்டவாக்கம் (1930 அத்தியாயம் 140) 1978 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க திருத்தச் சட்டம் கூறுகிறது.

5. தோட்டங்களில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு உகந்தவாறு புல் வெட்டுதல், முறையான கவ்வாத்து வெட்டுதல், மருந்து தெளித்தல், உரம் போடுதல் போன்ற பிரதான வேலைகளை முழுமையாகச் செய்தல் வேண்டும்.

6. தோட்டத் தொழிலாளிகளுக்கு பங்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது வரைக்கும் ஒருசில தோட்டக் கம்பனிகளால் பங்குப் பணம் வழங்கப்படவில்லை. ஒரு சில கம்பனிகளில் மாத்திரமே இப்பணம் வழங்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. இதனையும் பெற்றுக்கொடுக்க ஆவன செய்தல் வேண்டும்.

சுகாதார வசதிகள், தோட்டங்களில் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன. இது தொடர்பிலும் கூடிய கவனம் எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

7. தோட்டத் தொழிலாளரின் குடியிருப்புகளுக்கு கூரைத்தகடுகள் மாற்றப்பட வேண்டும். தோட்ட மருத்துவமனைகளில் போதியளவு மருந்துகள் இல்லை. தோட்டத் தொழிலாளி ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கொடுக்க வேண்டிய பெட்டி காசு கூட இரண்டு மாதங்களின் பின்னரே வழங்கப்படுகிறது.

இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகை யில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்பதே தொழிலாளரின் எதிர்பார்ப்பாகும்.


 நன்றி - வீரகேசரி 22.03.2015

தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் நியாயமான கோரிக்கையே - பேராசிரியர் மு.சின்னத்தம்பிஇரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும் கூட்டு ஒப்பந்தத்தினூடாக தோட்டத் தொழிலாளரின் வேதனங்களை நிர்ணயிக்கும் முறையானது 1998 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. தோட்டத்தொழிலாளரது வேதனங்களை நிர்ணயிப்பதில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றகரமான விடயம் என்று இதனைக் கூறலாம்.

தொண்ணூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் வேதனங்கள் தொழில் நிலைமைகள் என்பன தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையிலேயே அது மேற்கொள்ளப்பட வேண்டுமென தோட்டத்தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

1994 இல் பதவிக்கு வந்த மக்கள் ஐக்கிய இடது சாரி முன்னணி அரசாங்கம் வேதனங்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றினைத் தயாரிக்குமாறு தொழிற்சங்கங்களையும் தோட்டக்கம்பனிகளையும் கேட்டுக் கொண்டது. இதற்கிணங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்து கூட்டு ஒப்பந்தம் ஒன்றினைத் தயாரித்தன. 1995 ஆம்,1996 ஆம் ஆண்டுகளில் இந்த நகல் ஒப்பந்தம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் அது கைச்சாத்திடப்படவில்லை. மறுபக்கத்தில் வேதனங்களை உயர்த்துமாறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன. இறுதியாக 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இதன்கீழ் நடைமுறையில் இருந்த 95 ரூபா நாளாந்த வேதனத்துடன் வேலை வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 6 ரூபா சேர்க்கப்பட்டு நாளாந்த வேதனம் 101 ரூபாவாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2000 ஆம் ஆண்டு அறிமுகமான 9 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் படி 'விலைபங்கு ஆதாரப்படி' என பெயர் மாற்றப்பட்ட விலை வேதன ஆதாரப்படியாக மேலும் 6 ரூபாவையும் சேர்த்து நாளாந்த வேதனம் 107 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக வேலை வழங்கப்படும் நாட்களில் 90 வீதத்திற்கும் அதிகமான நாட்களில் வேலைக்கு சமுகமளிப்போருக்கு வேலை வரவு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 14 ரூபா வழங்கப்பட்டு நாளாந்த வேதனம் 121 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் 90 வீதத்திற்கும் குறைவான நாட்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவு 8 ரூபாவாக குறைந்த மட்டத்தில் வழங்கப்பட்டதால் அவர்களது நாளாந்த வேதனம் 115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வேதனங்கள் மீளமைக்கப்பட்டன. இவ்வாறான மீளாய்வு 2002, 2004, 2006, 2007, 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றன. இதன்படி 2009 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி நாளாந்த வேதனம் 405 ரூபாவாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவ் ஒப்பந்தம் முடிவிற்கு வந்த போது அதே ஆண்டு ஜூன் மாதம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளின் பின்னர் கைச்சாத்தான ஒப்பந்தத்தின் படி நாளாந்த வேதனம் 515 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

நாளாந்த வேதனம் ரூபா 380.00
வேலை வரவு ஊக்குவிப்புக்
கொடுப்பனவு ரூபா 105.00
விலை பங்கு ஆதாரப்படி ரூபா 30.00
மொத்தம் ரூபா 515.00

தொழிலாளி ஒருவரின் வேலை வரவு 75 வீதத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டதால் எல்லாத் தொழிலாளருமே 515 ரூபாவை வேதனமாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2013 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளின் முடிவில் நாளாந்த வேதனம் 515 ரூபாவிலிருந்து 620 ரூபாவாக 20.4 வீதத்தால் உயர்த்தப்பட்டது.

நாளாந்த வேதனம் ரூபா 450.00
விலை பங்கு ஆதாரப்படி ரூபா 30.00
வேலை வரவு ஊக்குவிப்புப்படி ரூபா 140.00
மொத்தம் ரூபா 620.00

இந்த வேதன அதிகரிப்பின் விளைவாக தொழிலாளருக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்கால கொடுப்பனவு என்பன 81 ரூபாவாக அதிகரித்ததால் மொத்த வேதனத்தின் பெறுமதி 701 ரூபாவாக உயர்ந்தது. இதற்குப்புறம்பாக மேலதிக தேயிலைத்தளிர் பறிப்பதற்கான கொடுப்பனவும் கிலோவுக்கு 3 ரூபாவால் உயர்த்தப்பட்டு அது 20 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

மேற்படி ஒப்பந்தம் இம்மாதம் முடிவிற்கு வருவதால் அதனை திருத்தி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் இடம்பெற உள்ளன. இன்றைய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூன்று மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்களும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதோடு சுமார் 50 தொழிற் சங்கங்களுடன் கலந்தாலோசிக்கவும் கம்பெனிகளுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சியில் இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியது ஒரு விடயமாகும்.

புதிய வேதனங்கள் பேச்சுவார்த்தைகளின் மூலம் எப்பொழுது தீர்மானிக்கப்படும் என்பதை கவனத்திற் கொள்ளாது இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் அமுலாக்கப்பட வேண்டும் எனவும் கோரப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு வீட்டுத்துறை வரவு செலவுக் கணிப்பீட்டின்படி நகர்ப்புறத்துறையிலும் கிராமியத்துறையிலும் தேசிய வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளோரில் (அதாவது வறிய மக்களின் தொகை) 50 வீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தோட்டதுறையிலும் வறியோரின் விகிதாசாரம் குறைந்துள்ளபோதும் இதே அளவிற்கு அது குறையவில்லை. 1990 இல் 20.5வீதமாக இருந்தது. அது 2009 இல் 11.4 வீதமாக 11.4 வீதத்தால் மட்டுமே குறைந்தது. எனவே நகர்புற கிராமியத்துறை என்பவற்றிலும் பார்க்க தோட்டத்துறையில் வறியோரின் விகிதாசாரம் உயர்வாக உள்ளது.

இதனைக் கவனத்திற்கொண்டு தோட்டத் தொழிலாளரின் நாளாந்த வேதனங்கள் 1000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமெனக் கோருவது நியாயமானதாகும்.

நன்றி - வீரகேசரி 22-03-2015

பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீட்டுத்திட்டம் சமூக அடையாளத்தை மாற்றுமா? - இரா. ரமேஷ்காணி மற்றும் வீட்டுரிமை ஆகியன ஒரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் அவனது சமூக மற்றும் குழு அடையாளத்திலும் (Social and group identity) பெரிதும் செல்வாக்கு செலுத்தும் காரணியாக காணப்படுகின்றது. மறுபுறமாக வீட்டுரிமை என்பது சர்வதேச ரீதியில் அடிப்படை மனித உரிமையாகவும் மனித கௌரவத்தை ஏற்படுத்தும் ஒரு கூறாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை நோக்கில் பார்க்கின்ற போது வீட்டுரிமை மற்றும் காணியுரிமை இன்மையானது பல அடிப்படை மனித உரிமைகளை அனுபவிக்கத் தடையாக அமைகின்றது. இவை அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு என்பவற்றுக்கு அவசியமானதுடன் பல சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை அனுபவிக்கவும் திறவு கோலாக அமைகின்றது.

குறிப்பாக தனிவீடு என்பது தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை மற்றும் இருப்பை பிரதிபலிப்பதில் பெரிதும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் லயன் வீடுகளில் இருப்பவர்களை விட தனி வீடுகளில் வாழ்பவர்களின் ஆளுமை விருத்தி ஒப்பீட்டளவில் மேம்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அந்த அடிப்படையில் நோக்கும்போது தற்போதைய குடியிருப்பு முறை, பெருந்தோட்ட மக்கள் மத்தியில் எண்ணப்பாங்கு ரீதியான முரண்பாட்டையும் (Attitudinal conflict) தாழ்வு மனப்பாங்கையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம். குறிப்பாக தனி வீட்டுச்சூழல் சமூக அந்தஸ்து சமூக ஏற்புைடமை மற்றும் சமூக அடையாளம் என்பன உளவியல் ரீதியான மாற்றங்களை தோற்றுவிக்கின்றன. மறுபுறமாக அது சமூக அசைவியக்கத்துக்கு வழி செய்கின்றது. அந்த வகையில் இக்கட்டுரையானது பெருந்தோட்ட மக்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு திட்டமானது பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு சில விடயங்களை ஆராய்வதாக அமைகின்றது.

பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு என்பது நீண்ட காலக் கனவு என்பதில் ஐயமில்லை. அந்த நீண்ட காலக் கனவு நிறைவேறும் தருணம் கிட்டியுள்ளமை பெரிதும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். மலையக மக்களின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இதனை நோக்க முடியும்.

பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகள் அப்போது தற்காலிக வதிவிடங்களாகவே கருதப்படுகின்றன. ஆயினும் அவை கால ஓட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நிரந்தர வதிவிடங்களாகவே மாறின. இதற்கு தோட்டங்களை முகாமை செய்த வெள்ளையர்களிடம் பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு திட்டம் காணப்படாமை மற்றும் இலாப நோக்கத்தினைக் கொண்ட நிர்வாக மனோநிலை ஆகியன முக்கிய காரணங்களாகும். லயன் வாழ்க்கை முறை பெருந்தோட்ட மக்களின் சமூக அடையாளத்திலும் அவர்கள் குறித்த வெளியுலக பார்வையிலும் பெரிதும் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆகவே புதிய வீடமைப்புத் திட்டமானது சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்பதில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்களாக அமைந்து விடக்கூடாது என்பது மனங்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக புதிய வீடமைப்பு, அவர்களின் சமூக அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து அவசியமாகும்.

இன்று வீட்டுரிமை என்பது தனிப்பட்ட வாழ்க்கை நடைமுறை மற்றும் சமூக ஊடாட்டம் என்பவற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக மாறியுள்ளது. கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவ சமூகத்தில் வீட்டுரிமை என்பது நாணய பெறுமதியினை (Exchange value) கொண்ட சொத்து எனக் குறிப்பிடுகின்றார். அது அவர்களிடத்தில் சொத்துரிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் ஒரு தனி மனிதனின் சுய மதிப்பீட்டிலும் சுய மரியாதையிலும் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது. பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரை அவர்களுக்கெனத் தனியான வீடு மற்றும் காணி உரிமை இன்மையானது அவர்கள் குறித்த மதிப்பீடு மற்றும் சுய கௌரவத்தில் எதிர்மறையான எண்ணப்பாங்கினையே ஏற்படுத்தியுள்ளது.

தனியான வீட்டினை உரித்தாக்கிக்கொள்ளல் என்பது ஏனையவர்களின் கட்டுப்பாடு மற்றும் அறிவுறுத்தல்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு வழி செய்கின்றது. மிக முக்கியமாக தமக்கான வீடொன்றில் உரித்துடன் வாழும்போது தமக்கென ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மற்றும் தனிப்பட்டவர் என்ற வகையில் சுயபூர்த்தியினை அடைந்து கொள்ள வேண்டும் முதலான மனப்பாங்கு உருவாகும்.

புதிய வீடமைப்புத் திட்டம் ஒட்டுமொத்த பெருந்தோட்ட மக்களின் சமூக வாழ்விலும் அவர்கள் குறித்த முழு அடையாளத்திற்கும் தோட்ட தமிழர்கள் (Estate Tamils) மாற்றத்தினை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். வீடு உணவு, உடை மற்றும் வாழ்க்கை முறை என்பன ஒரு தனி மனித அல்லது குழு அல்லது சமூகம் குறித்த மதிப்பீட்டை செய்வதிலும் அவர்களை அடையாளப்படுத்துவதிலும் செல்வாக்கு செலுத்துகின்றன.

வீட்டுரிமையுடன் பிறிதொரு முக்கிய விடயத்தினையும் ஒப்பீட்டு நோக்கப்பட வேண்டும். அதன்படி பெருந்தோட்ட மக்களை பெரிதும் பாதிக்கும் ஒரு பிரதான காரணி வறுமையாகும். ஆகவே வீட்டுரிமை வழங்குவதன் மூலம் அவர்கள் மத்தியில் காணப்படும் வறுமை நிலையினை ஒப்பீட்டளவில் குறைக்க முடியும். வறுமைக்கு வெறுமனே தொழில் மற்றும் வருமானம் மாத்திரம் செல்வாக்கு செலுத்துவதில்லை. அதனையும் தாண்டி குறைந்த சுகாதார வசதிகள், கல்வி, வீடு, காணி, உரிமையின்மை, குடிநீர், அரச நிறுவனங்களின் தொடர்ச்சியான பாகுபாடு, புறக்கணிப்பு, அரச நிர்வாக சேவை மறுக்கப்படல் ஆகியனவும் செல்வாக்கு செலுத்துகின்றன. இவற்றை பொருளாதாரம் சாராத வறுமை (Non Ecnomic form of poverty) என அடையாளப்படுத்த முடியும்.

ஆகவே, தனி வீட்டுத்திட்டம் மற்றும் காணியுரிமை வழங்கப்படுகின்றமையானது பெருந்தோட்ட மக்கள் வறுமையில் இருந்து ஓரளவு விடுபடுவதற்கு வழி செய்யும் என்பதில் ஐயமில்லை. பொருளியல் நிபுணரான அமார்த்தியா சென் (1999) வறுமையை வெறுமனே வருமானம் மற்றும் போசணை மட்டத்தினை அதிகரிப்பதன் ஊடாக மாத்திரம் மேற்கொள்ள முடியாது.

அது குறிப்பாக பிற்பட்ட சமூகங்களுக்கு உரிமைத்துடமையினை வழங்கல் மற்றும் ஆற்றல் விருத்தி செய்தல் என்பவற்றிலேயே தங்கியுள்ளது எனக்குறிப்பிடுகின்றார். இக்கருத்து பெருந்தோட்ட மக்களுக்கு பெரிதும் பொருத்த முடையதாக இருக்கும். உண்மையில் இம்மக்களின் வறுமை நிலைக்கு வீடு காணியுரிமை இன்மை மற்றும் தேசிய அபிவிருத்தி முழுமையாக உள்வாங்கப்படாமை உரிமை மறுப்பு பலயீனம் மற்றும் இயலாமை என்பன முக்கிய காரணங்களாகும்.

எல்லாவற்றுக்கும் அப்பால் புதிய கட்டப்படும் வீடுகள் போதிய வீட்டு வசதி என்ற தத்துவத்தை (adequate housing) உறுதி செய்வதாக அமைய வேண்டும். அன்றில் அவை மீண்டும் அவர்களை பழைய வாழ்க்கை முறைமைக்குள் தள்ளுவதாக அமைந்து விடும். 1966 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார சமூக கலாசார உரிமைகள் மீதான சர்வதேச மனித உரிமை சமவாயமானது (ICESCR) போதிய வசதியுள்ள வீடு என்பது பற்றிக்கூறியுள்ள கருத்துக்களை இங்கு கவனத்திற்கொள்வது அவசியமானது. போதிய வசதியுள்ள வீடு பின்வரும் பண்புகளை கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை சமவாயமானது (ICESCR) குறிப்பிடுகின்றது.

1. சட்டப்பாதுகாப்பு அல்லது சட்ட உறுதியை வழங்கல்.
2. தேவையான சேவைகள் வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்தல்
3. வாழக்கூடிய சூழ்நிலைகளை கொண்டிருத்தல் (குடும்ப அந்தரங்களை பேணிக்கொண்டு வாழக்கூடிய வசதி காணப்படல் வேண்டும்
4. அமைவிடமானது சகல தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதாக இருத்தல்
5. கலாசார விழுமியங்களை பேணக்கூடியதாக இருத்தல்
6. சமமானது பாகுபாடற்றதுமான வீட்டு வசதியை வழங்கல் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான தீர்மானம் எடுத்தலில் மக்களின் பங்கேற்பு கருத்துக்களை உறுதி செய்தல் மிக முக்கியமான விடயமாகும்.

உண்மையில் மேற்கூறிய விடயங்கள் புதிய வீடமைப்பு திட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில வீடமைப்பு திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியினை தராமைக்கு மேற்கூறிய விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படாமை பெரிதும் செல்வாக்கு செலுத்தின என்ற யதார்த்தத்தினை மனங்கொள்ள வேண்டும். அதே வழிமுறைகள் அல்லது உபாயங்கள் புதிய வீடமைப்பு திட்டத்தில் பின்பற்றப்படுமாயின் அவை பெருந்தோட்ட மக்களின் சமூக அடையாளத்தை மாற்ற துணை புரியாது. மேற்கூறிய பண்புகளுக்கு மதிப்பளித்து தனி வீடுகள் கட்டப்படுமெனில் அவை பெருந்தோட்ட மக்களின் மேல் நோக்கிய நகர்வில் (Upward mobility) நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எல்லாவற்றிற்கும் அப்பால் அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமை மற்றும் காணியுரிமையினை மதிக்க வேண்டும். அதற்கிணங்க தேவையான சட்ட நீதி நிர்வாக மற்றும் ஊக்குவிப்பு ஏற்பாடுகளை அல்லது சட்டகத்தை உருவாக்க வேண்டும்.

இது தொடர்பில் மலையக அரசியல் தலைவர்களின் தூரநோக்கு சிந்தனை மற்றும் அறிவுசார் அரசியல் செயற்பாடு அவசியமாகும். மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டம் வெறுமனே தேர்தல் கால பணியாக அமைந்து விடக்கூடாது. அது பெருந்தோட்ட சமூகத்தின் நலன் மற்றும் கௌரவம் என்பவற்றை மனங்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். கிடைக்க பெற்றுள்ள நல்ல சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி லயன் வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒருங்கிணைந்த அணுகு முறையினை மலையக அரசியல் தலைவர்கள் பின்பற்ற வேண்டும். இதற்கு மலையக மக்களின் நலன் சார்ந்த செயற்படும் அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

இவ்விடத்தில் பிறிதொரு முக்கிய விடயத்தினை குறிப்பிட வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினை முழுமையாக 2003 ஆம் ஆண்டு தீர்க்கப்பட்ட போதும் அவர்கள் இன்னும் சமூக பிரஜாவுரிமையின் (Social citizenship rights) பயன்களை அனுபவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பாக பிரஜாவுரிமையினை நான்கு முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். அவை அரசியல் சிவில் சமூக மற்றும் கலாசார பிரஜாவுரிமை என்பனவாகும். இதில் அரசியல் பிரஜாவுரிமை என்பது அரசியல் சார்ந்த உரிமைகளையும் சிவில் பிரஜாவுரிமை என்பது சிவில் உரிமைகளையும் கலாசார பிரஜாவுரிமை கலாசாரம் சார்ந்த உரிமைகளையும் வலியுறுத்துகின்றது. மிக முக்கியமாக சமூக பிரஜாவுரிமை என்பது கல்வி சுகாதாரம் வீட்டுரிமை காணியுரிமை போக்குவரத்து தொழில் ஓய்வூதியம் மற்றும் அரச பொதுச்சேவைகளை பெறுவதற்குள்ள உரிமையினை வலியுறுத்துகின்றது. இவை சமூக உரிமைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு மனிதன் சமூக பிரஜா உரிமையினை அனுபவிக்கும் பொழுதே ஏனைய சிவில் அரசியல் கலாசார உரிமைகளை அனுபவிக்க முடியும் என்பது பல ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில் பார்க்கும்போது பெருந்தோட்ட மக்கள் சமூக அபிவிருத்தியில் பின்னடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமூக பிரஜாவுரிமையினை முழுமையாக அனுபவிக்காமையாகும். இதன் விளைவாக சிவில் அரசியல் மற்றும் கலாசார உரிமைகளையும் பூரணமாக அனுபவிக்க முடியாதுள்ளனர். இதன் மூலம் சமூக பிரஜாவுரிமைக்கும் ஏனைய சிவில் அரசியல் கலாசார உரிமைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. சமூக பிரஜாவுரிமை விடயத்தில் ஒரு சில முன்னேற்றங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள போதும் தேசிய அபிவிருத்தி குறிகாட்டிகளுடன் ஒப்பிடும் போது பெரிதாக பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆகையால் தற்போதைய அரசியல் தலைமைத்துவங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் புத்திஜீவிகள் பெருந்தோட்ட மக்களின் சமூக பிரஜாவுரிமை குறித்த பெரியளவிலான கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நியாயப்பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏனைய பிரஜைகளை போன்று பெருந்தோட்ட மக்களும் சமூக பிரஜா உரிமையினை அனுபவிக்க கொள்கை ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அது முழுமையான பிரஜை (Complete citizen) என்ற அந்தஸ்துடன் மற்றும் சகல உரிமைகளுடன் வாழ வழி செய்யும் என்பது திடமான நம்பிக்கையாகும். உண்மையில் பெருந்தோட்ட மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து காட்டப்பட்ட அக்கறை சமூக உரிமை அல்லது சமூக பிரஜை உரிமை குறித்து காட்டப்படாமை வருந்தத்தக்கது. பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமை தொடர்பான பிரச்சினை சட்ட பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னரும் தொடர்வதற்கு சமூக பிரஜாவுரிமையின் பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளமையே முக்கிய காரணம் என்பதனை மனங்கொள்ள வேண்டும்.


நன்றி - வீரகேசரி - 22.03.2015

பெருந்தோட்டப்புற பாடசாலை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவது அவசியம் - இரா .சிவலிங்கம்''ஆசிரியப்பணியே அறப்பணி அத ற்கு உன்னை அர்ப்பணி'' என்ற கருத்துக்கு ஏற்ப பெருந்தோட்ட ஆசிரியர் சமூகம் செயற்படுகின்றதா என்பது கேள்விக்கு றியே. ஆசிரியர்கள் தங்களுடைய கடமையை அல்லது தொழிலை வியாபாரமாகக் செய்ய முடியாது. அது ஒரு சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக சமூத்தின் உயர்ச்சி – வளர்ச்சி முன்னேற்றம், அபிவிருத்தி இவை அனை த்தும் ஆசிரியரின் சேவை மனப்பான்மையிலேயே தங்கியிருக்கின்றது.

ஓர் ஆசிரியரின் மனப்பாங்கிலும் தன் சேவையின் அர்ப்பணிப்பிலும் மாணவர்களின் தேர்ச்சி மட்டங்கள், அடைவு மட்டங்கள் தங்கியுள்ளன. எந்தவொரு ஆசிரியர் இதனை தொழிலாகக் கருதாமல் ஒரு சேவையாகக் கருதி தன்னுடைய சமூகத்தி ற்கு தன்னை அர்ப்பணிக்கின்றாறோ அந்த சமூகம் விழிப்படையும் என்பதில் ஐயமி ல்லை.

இன்று ஆசிரியர்களுக்கு சமூக, அரசியல் ரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இன்றைய வாழ்க்கைச்செலவை சமாளிக் கக் கூடிய வகையில் ஆசிரியர்களுடைய சம்பளத்திட்டம் அமைவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. காலத்திற்கு காலம் வரவு–செலவுத்திட்டத்தில் அடிப்படைச் சம்பள உயர்ச்சியை அரசு பெற்றுக் கொடுத்தும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாதுள்ளது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற ஆசிரியர் சமூகம் இன்று சந்தோசமாக பாடசாலைகளில் தன்னுடைய சேவைகளை வழங்குகின்றதா? என்பதை ஆய்வு செய்து அறிய வேண்டிய காலத்தின் தேவையா கும்.

பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற ஆசிரியர் சமூகம் மத்திய தர வகுப்பினராக பெருந்தோட்டச் சமூகத்தில் வாழ்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ இவர்களின் வாழ்க்கை நிலைமைகளையும் அன்றாட சமூகச் செயற்பாடுகளையும் பாடசாலை நடவடிக்கைகளையும் ஒவ்வொரு தனி நபரும் அவதானித்துக் கொண்டு இருப்பதோடு காலத்திற்கு காலம் பல்வேறு விமர்சனங்களையும் செய்து கொண்டு இருப்பதைக் காணலாம்.

ஒரு ஆசிரியரின் பொது நிலையை அவதானித்தால் இவருக்கு கிடைக்கின்ற மாதாந்த சம்பளம் இவர்களின் ஆசிரியர் தரத்திற்கு ஏற்ப  SLTS – 1, SLTS – 2 :1, SLTS – 2 :11, SLTS – 3 : 11, SLTS – 3 : 1 அமைந்துள்ளது.

இந்த அடிப்படைச் சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கைச் செலவை ஈடு செய்து கொண்டு ஒரு மத்தியதர வகுப்பினராக வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே.
இன்றைய ஆசிரியர் சேவையில் இருக் கும் பெரும்பாலானோர் கடனில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. அநேகமான ஆசிரியர் கள் தங்கள் சமூகத்தில் பல அடிப்படைவசதிகளோடு வாழவேண்டும் என்பதற்காக பல நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக EDCS, SANASA, கல்வித்திணைக்களத்தால் வழங்கப்படும் 10 மாத சம்பளக்கடன், Credit Cards, 25 வருட வீடமைப்புக் கடன் (Housing Lone), வீட்டு வாடகை, விழா முற்பணம் (Festival Alavance), எனைய முற்பணம் (other alavance), வங்கிக்கடன்கள், குருசித்தக்கடன், சில அரசசார்பற்ற நிறுவனங்களின் கடன்கள் தவணை முறையில் பொருள் கொள்வனவு பாடசாலை ஆசிரியர் நலன் புரிச்சங்கத்தின் கடன், தனியார் கடன்கள், வட்டிக்கு கடன் வாங்குதல், விழாக்காலங்களில் புடைவைக்கடைகளில் மாதாந்த கொடுப்பனவு அடிப்படையில் கொள்வனவு, தவணை முறையில் பொருட்களை கொள்வனவு செய்தல், Motorbike leasing கடன் போன்ற பல்வேறு வகையான முறையில் கடன்களை பெற்றுக் கொண்டு தமது தொழிலை செய்யவேண்டிய காலகட்டத்தில் ஆசிரியர் சமூகம் உள்ளது.

இன்றைய சமூகத்தில் ஆசிரியர் தொழிலுக்கான மதிப்பும் மரியாதையும் கெளரவமும் குறைந்து செல்கின்ற ஒரு போக்கு காணப்படுகின்றது.

இதற்கு பல்வேறு சமூகக் காரணிகள் காரணமாக உள்ளன. இன்றைய சினிமா, நாகரிக வளர்ச்சி, சமூக கட்டமைப்பு மற்றும் உலக மயமாதலின் தாக்கம், நவீன தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி, கையடக்க தொலைபேசி பாவனை, வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு, பாதுகாப்பற்ற குடும்ப சூழல், தனிக்குடும்பத்தின் அதிகரிப்பு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்மை, தாய் தந்தை இருவரும் தொழிலுக்கு செல்லுதல், வேலைப்பளு, சமூகத்தின் பாதுகாப்பற்ற நிலை, பிள்ளைகளின் செயற்பாடுகளிலும் வளர்சியிலும் கற்றல் செயற்பாடுகளிலும் பெற்றோர்களின் ஈடுபாடு இன்மை. புதிய புதிய நோய்கள், பரீட்சையை மையமாக கொண்ட கல்வி, பொழுது போக்கு வசதியின்மை, பிள்ளைகளை அவர்களுடைய வயதுக்கேற்ப தயார்படுத்தாமை, விழுமி யக் கல்வி பாடசாலைகளில் முறையாக கற்பிக்காமை, குடும்பங்கள் ஆசிரியர்கள் தங்களுடைய கடமையை பாடசாலை நேரங்களில் செய்யாமை, ஆசிரியர்களே மாணவர்களுக்கு பாதுகாப்பற்றவர்களாக விளங்குதல், இன்றைய பாடசாலை கல்வித்திட்டம் மாணவர்களுக்கு பொருத்தமற்றதாகக் காணப்படல், ஆசிரியர்களுக்கான பறிற்சிகள், தொழில்வாண்மை விருத்திக்கு போதிய ஊக்குவிப்பின்மை போன்றவற்றை குறிப்பிடலாம்.

எனவே, அடிப்படைச் சம்பளத்தில் கடன்கள் போக மிஞ்சுவது மிகச்சிறிய அளவு சம்பளமே. இதில்தான் இவர்களின் அன்றாட குடும்பச் செலவு, சுக துக்கங்களுக்கான செலவு, திருமணம் விழாக்கள், பாடசாலையில் நடைபெறும் நலன்புரி விடயங்கள், தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கான செலவு, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரக்கட்டணம், தொலைபேசிக்கட்டணம், நீர்க்கட்டணம், Mobile Phone reload காசு. நாகரிகமான உடைகள், கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு விடயங்களையும் செய்ய வேண்டி யவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வகையான ஒரு மன அழுத்தத்தின் பின்னணியிலேயே ஆசிரியர்கள் தங்களு
டைய தொழிலை செய்கின்றார்கள். இவர்க ளுக்கென ஒரு வீடமைப்புத்திட்டம் இல்லை.

பெரும்பாலனோர் வாடகை வீடுகளிலேயே வசிக்கின்றார்கள். எந்தவிதமான ஊக்குவிப்பு கொடுப்பனவோ அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை. அர்ப்பணிப்போடு சேவை செய்து ஓய்வு பெற்றவர்களும் தற்போது சேவையில் இருப்பவர்களையும் கூட பாரட்டி கெளரவிப்பதற்கு வலய, மாகாண, தேசிய மட்டத்தில் ஒரு முறையான வேலைத்திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு புலமைப்பரிசில், உயர்கல்விக்கான புலமைப்பரிசில் போன்றன அனைவருக்கும் கிடைப்பது மிகவும் குறைவு. எனவே, ஆசிரியர்களின் பொதுப் பிரச்சினைகள் என்று முழுமையாக தீர்க்கப்படுகின்றதோ அன்றுதான் அவர்களுடைய சேவையானது பாடசாலையில் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று பாடசாலை முடிந்தவுடனயே பிரத்தியேக வகுப்பை நோக்கி ஓடுகின்ற ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. கல்வியை வியாபாரமாக வழங்கும் தனியார் வகுப்புக்களும் பெருந்தோட்ட பிரதேசத் தில் அதிகரித்துக்கொண்டு வருவதையும் காணலாம். இதனை குறைத்துக் கொள்வ தற்கு பாடசாலையில் பாடங்கள் முழுமை யாக நடைபெறுவதற்கு உறுதிப் படுத்த வேண்டும்.

எது எவ்வாறாயினும் ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு எப்போது செய்யத் தொடங்குகின்றார்களோ அன்றுதான் மலை யகச் சமூகம் முழுமையாகக் கல்வியில் உயர்ச்சியடையும். தான் பிறந்த சமூகத்திற் கும், இனத்திற்கும், மொழிக்கும் மண்ணுக் கும் பிரதேசத்திற்கும் ஆசிரியர்களை இனம் கண்டு அவர்களையும் பாராட்டுவதற்கு சமூக பிரதிநிதிகள் தொடக்கம் கல்வியாளர் கள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

நன்றி - வீரகேசரி 22.03.2015
 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates