பெருந்தோட்டப்பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதானது ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. அதே வேளை, பெருந்தோட்ட பிரதேச மக்களின் அபிவி ருத்திக்கு கடந்த 30 வருடங்களாக தடையாக இருந்த 1987 ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க ஷரத்தும் (பிரதேச சபை சட்டமூலம்) திருத்தப்பட்டிருக் கின்றமையானது, இத்தனை காலமும் தேர்தல்களில் பங்களிப்புச் செய்து அதன் மூலம் பயன் எதையும் பெறாது இருந்த மக்களுக்குக் கிடைத்த வெற்றியா கவும் கருதலாம். இந்நாட்டில் உழைக்கும் வர்க்கமாக குடியேறி இருநூறு வருடங்களைப் பூர்த்தி செய்யவிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்டச் சமூகத்தின் ஆறாவது தலைமுறையினருக்கே இந்த வரப்பிரசாதம் கிடைத்திருக்கின்றது.
பெருந்தோட்ட மக்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தவே பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக இச்சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு பேசிய உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தி ருந்தார். கடந்த காலங்களில் பெருந்தோட்டப்பகுதி களின் உட்கட்டமைப்பில் எந்தவித தாக்கத்தையும் செலுத்த முடியாதவாறு பிரதேச சபை சட்டமூலம் ஒரு தடையாகவே இருந்த வந்தது. பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்தாலும் கூட அப்பிரதிநிதிகளால் பெருந்தோட்ட பிரதேச மக்களுக்கு குடிநீர்க்குழாய் வசதி ஒன்றைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையே இருந்தது.
அதேவேளை இதற்கு அப்பாற்பட்டு மலையக மக்களுக்கான வீடமைப்பு உட்பட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பெருந் தோட்ட மனித வள நிதியம் மட்டுமே முனைப்பு காட்டியது. ஆனால் காணிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் இதற்கு இருக்கவில்லை. தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மலையகப் அதிகார சபையின் மூலம் மத்திய அரசாங்கத்திலிருந்து ஒதுக்கப்படும் அனைத்து வளங்களும் நேரடியாக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது, மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட மூல திருத்தம் பற்றிய விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மலையக பிரதிநிதிகள் மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள இவை வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால், இவ்விவாதத்தில் உரையாற்றிய மலையகத்தைச் சாராத பிரதிநிதிகளில் குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் இம்மக்களின் வாழ்வாதார பிரச்சினையான ஊதியம் பற்றி பேசியிருந்தமை முக்கிய விடயம்.
பெருந்தோட்ட பிரதேச வாழ்விடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும் அவர்கள் கௌரவமான வாழ்க்கை நிலைக்கு வந்து விடப்போவதில்லை என்பதாக அவரது உரை அமைந்திருந்தது. அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரமாக இருக்க தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் வெறும் 500 ரூபா வாகவே இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் கடந்த 19 வருடங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 300 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ள தாக புள்ளி விபரங்களை முன்வைத்திருந்தார்.
இதை ஏனைய மலையக பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு இனி அடுத்த தேர்தல்கள் வரை மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்டத்திருத்தம் பற்றியே பேசிக் கொண்டிராமல், தொழிலாளர்களின் ஊதியம் பற்றியும் பாராளுமன்றில் விவாதம் நடத்தி அதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள வழிசமைக்க வேண்டும். தொழிலாளர்களின் உண்மையான கெளரவம் அவர்களின் வருமானத்திலேயே தங்கியுள்ளது என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தல் அவசியம். எவ்வித கெளரவமும் பாராது இந்நாட்டின் உயர்விற்காய் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் இம்மக்களுக்கு இத்தனை காலம் கடந்தும் சில நல்ல விடயங்கள் இடம்பெறுவதை வரவேற்கத்தான் வேண்டும். அதே போன்று அவர்களின் ஊதிய விடயத்திலும் பிரதிநிதிகள் தமது அக்கறையை செலுத்துவார்கள் என்று நம்புவோமாக!
தொழிலாளர் வேதனம் தொடர்பான கருத்தாடல்கள் சூடுபிடிக்கும் இக்காலப்பகுதியில் தேயிலையின் எதிர்காலம் குறித்தும் பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரம் குறித்தும் மாறுபட்டுச் சிந்திப்பது அவசியம். கம்பனிகள் காலங்காலமாக சொல்லும் நட்டக்கணக்கும் அசாத்தியத்தன்மையும் ஒருபுறம் இருக்க, தேயிலையின் வீழ்ச்சிப்போக்கும் உற்பத்திச் செலவினமும் கவனத்திற்கொண்டு மாற்றுப்பயிர்ச் செய்கைகள் இனங்காணப்பட வேண்டியது அவசியம். தேயிலையை அழித்து விட்டுத்தான் இதனை செய்யவேண்டுமென்பதில்லை. இன்று அநேகமான பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் வெறுமனே பயனற்றுக்கிடக்கின்றன. அதே போல் உற்பத்திக்குத் தேவையான நீர், தொழிலாளர் என்பனவும் சாத்தியமான இயற்கையும் மலையகத்தில் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் பயன்படுத்தும் முறை ஒன்றை காலத்தின் தேவை கருதி இனங்காண வேண்டும்.
தேயிலை உற்பத்தியானது காலத்திற்குக் காலம் குறைவடைந்து செல்கின்றது. பராமரிப்பின்மை, மீள்நடுகை இன்மை, அலட்சியம், அதிகரித்தச் செலவினம், காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் உற்பத்தியானது வீழ்ச்சியடைந்துள்ளது. பெருந்தோட்டக்கம்பனிகள் தொழிலாளர்கள் பற்றாக்குறை, உற்பத்திச்செலவு,கேள்விக்குறைவு போன்றனவற்றைக் காரணம் காட்டி இத்தொழில் துறையை சவாலான ஒன்றாக காட்டுகின்றன. எனினும் இவற்றுக்கான மாற்றுத்திட்டங்களை கம்பனிகளோ, அரசாங்கமோ, தொழிற்சங்கங்களோ முன்வைப்பதில்லை. முடிந்தளவு இலாபம் கிடைத்தால் போதும் என்று கம்பனிகளும், தேயிலையின் அழிவோடு இனத்தின் செறிவையும் குறைக்கலாம் என்று அரசாங்கமும் சந்தா கிடைத்தால் போதும் என்று தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. எனினும் இலாபகரமான முறையில் தேயிலைத் தொழிற்துறையை மாற்றியமைக்கக் கூடிய திட்டங்களை பலர் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களும் இதன்மூலம் பலனடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான ஒரு முன்மொழிவே மாற்றுப்பயிர்ச் செய்கையாகும். குறிப்பாக, சாத்தியப்பாடான மாற்றுப்பயிர்கள் தொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டும். மலையகத்தின் மாறுபட்ட காலநிலை, மண் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாக வைத்து இவை முன்னெடுக்கப்படல் அவசியம்.
எனவே, பயிரிடப்படும் மாற்றுப்பயிருக்கு தகுந்த பிரதேசம் இனங்காணப்பட வேண்டும். விஷேடமாக மாற்றுப்பயிர்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வியாபார பெறுமதியும், உள்நாட்டு,வெளிநாட்டு சந்தை வாய்ப்பும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அரசு தலையிடுவதன் மூலம் உற்பத்திகளின் அறுவடையை பன்னாட்டு சந்தைகளுக்கும் விஸ்தரிக்க முடியும். இன்றளவில் மிளகு, கறுவா, மரமுந்திரிகை, அன்னாசி, கற்றாளை, பப்பாசி, தோடம்பழம், மெகடாமியா, செம்பனை போன்றன சில பிரதேசங்களில் சிறியளவில் பயிரிடப்படுகின்றன. இவற்றில் செம்பனை (palm tree) உற்பத்தி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. போதுமான ஆளணி, முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை போன்ற காரணங்களினால் இவை பெரியளவில் முன்னேற்றம் அடையவில்லை. இவற்றை அபிவிருத்திச் செய்ய வேண்டியதும் கட்டாயமாகும்.
கோப்பி, கொக்கோ, கரும்பு,வாழை, வெனிலா, டிராகன் பழம் ((dragan fruit)
கொய்யா, ஸ்ரோபரி, போன்றனவும் ஏற்றுமதி நோக்கத்தோடு சில பெருந்தோட்ட கம்பனிகளும் சிறுதோட்ட உரிமையாளர்களும் உற்பத்திச் செய்கின்றனர். தேயிலையின் ஊடுபயிராக மிளகு மற்றும் பிரத்தியேகமான நிலப்பரப்பில் மேற்குறிப்பிட்ட பழப்பயிர்ச்செய்கைகளும் பயிரிடப்படுகின்றன. சில பெருந்தோட்டக் கம்பனிகளால் டிராகன் பழப் பயிர்ச்செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையிலும் இப்பழங்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாக அறியமுடிகின்றது. இதன் அலகொன்றுக்கான உற்பத்திச் செலவு ரூ. 2000.00 (ஆகக்கூடியது) ஆகவும் மரமொன்றின் ஆயுட்காலம் சுமார் 25 வருடங்களாகவும் இருக்குமென்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பைப் பொறுத்து டிராகன் பழ அறுவடையை அதிகரித்துக்கொள்ள முடியும். உள்நாட்டு சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் இப்பழத்துக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. இவ்வாறான முயற்சிகளில் முதலிடுவதற்கு பெருந்தோட்டக்கம்பனிகள் முன்வர வேண்டும்.
மாற்றுப்பயிர்ச் செய்கைகளுக்கான அரச தனியார் முதலீடுகள் அவசியமானதாகும். காலங்காலமாக தேயிலை விலைவீழ்ச்சி என மக்களை ஏமாற்றும் கம்பனிகள் கைவிட்ட நிலங்களில் எந்த முயற்சிகளும் முன்னெடுக்காததும் அரசுக்கு சாத்தியமான மாற்றுப்பயிர் யோசனைகளை முன்வைக்காமையும் வருந்தத்தக்கன.
இவ்வாறான முறைகள் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வர். அதே போல் பெருந்தோட்டங்களில் உள்ள ஆளணியையும் பயனுள்ள வகையில் மாற்றியமைக்கலாம்.
மலையக இளைஞர், யுவதிகள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு தினக்கூலிகளாக செல்லும் நிலைமை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கைவிடப்படும் பெருந்தோட்டக் காணிகளை இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளித்து மாற்றுப்பயிர்ச் செய்கைகளுக்கான ஆலோசனைகளையும் முதலீடுகளையும் வழங்குவதன் மூலம் அவர்களை நிலவுடைமையாளர்களாகவும் சுயதொழில் முயற்சியாளர்களாகவும் உருவாக்கலாம். தொழிற்சங்கங்கள் செய்யக்கூடிய நன்மைகளில் இது பிரதானமானது.
மொனராகலை மாவட்டத்தில் இறப்பர் பயிர்ச்செய்கைக்கு மாற்றீடாக கரும்பு, பப்பாசி, வாழை என்பன பயிரிடப்படுகின்றமை வழக்கம். அதே போல் தனியார் நிறுவனங்கள் பல மொனராகலைப் பிரதேசத்தில் நிலங்களை குத்தகைக்கும், உபகுத்தகைக்கும் பெற்று இப்பயிர்களை பயிரிடுகின்றன. இதன்மூலம் சொற்ப தொகையினருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது. எனினும் நிலங்களை முன்னிறுத்திச் சிந்திக்கும் போது நிலங்கள் தனியார் மயமாகும் அபாயம் இருக்கின்றது. பெருந்தோட்டப்பிரதேசங்களில் ஒருசில தோட்டக்கம்பனிகள், தேயிலையின் வீழ்ச்சிப்போக்கு தொழிலாளர் பற்றாக்குறை, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றைக் காரணம் காட்டி மாற்றுப்பயிர்களாக கருப்பந்தேயிலை ((Turpentine Tree) ஊசியிலை மரம் ((Pine Tree) போன்ற நெடுங்கால மரங்களை பயிரிடுகின்றன. இவ்வாறான மரங்கள் மூலம் தொழிலாளருக்கு எவ்வித நேரடி வருமானமும் இல்லை. அறுவடைப்பருவம் வந்ததும் கம்பனிகள் அம்மரங்களை வெட்டி விற்று இலாபமடைகின்றன. இதன்மூலம் கொள்ளை இலாபம் ஈட்டப்படுகின்றது. தோட்டக்காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளித்து மாற்றுப்பயிர்களையோ அல்லது தேயிலையையோ பயிரிடலாம் என்று அவ்வப்போது கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவை நடைமுறைச் சாத்தியமாவது குறைவு. அவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களில் அவர்களின் அனுபவத்திற்கும் அறிவிற்கும் ஏற்ற வகையில் மரக்கறிகளையாவது பயிரிட்டு வருமானம் ஈட்டுகின்றனர். கம்பனிகள் நிலங்களை வைத்துக்கொண்டு அவற்றை காவல் காத்துக்கொண்டு இருப்பதில் எவ்வாறான உற்பத்திகள் முன்னெடுக்கப்பட்டாலும் இந்நிலங்களின் உரிமையாளர்களாக எம்மவர்களே இருக்க வேண்டும்.
சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக 20 ஆண்டுகளுக்கு முன் சரிநிகரில் வெளியான இந்த நேர்காணல் மீண்டும் உங்களுடன் பகிரப்படுகிறது.
சோசலிஸ பெண்ணிலை வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சுனிலா ஒரு மனித உரிமையாளரும் கூட. முன்னர் ஜே.வி.பி. இயக்கத்தில் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர். தற்போது பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு (Women & Media Collective), இன்போர்ம் (Inform) என்பவற்றின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர். நான்கு பிள்ளைகளின் தாயாரான சுனிலா தனியொருவராக பிள்ளைகளை வளர்த்து வருபவர். இலங்கையின் பெண்ணிலைவாதிகளில் மிகவும் தீவிர செயற்பாட்டாளராக இருந்துவரும் இவர் தனது வாழ்க்கையிலும் பெண்ணிலைவாதி யாகவும் மாதிரிப் பெண்ணாகவும் வாழ்ந்து வந்தவர். இவரை தவிர்த்து விட்டு செய்யப்படும் இலங்கையின் பெண்ணிய சூழலைப் பற்றிய எந்த ஆய்வும் பூரணமாகாது. சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு சரிநிகர் பத்திரிகைக்காக அவரிடமிருந்து பெறப்பட்ட நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.
பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகர்வதில்லை. இருக்கின்ற பெண்கள் அமைப்புகள் எல்லாமே அரசு சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. அதற்கு வெளியில் சுயாதீனமான பெண்கள் அமைப்புகள் எதுவுமே இல்லை. அப்படி தோன்றினால் கூட என்.ஜீ.ஓ.க்கள் அவற்றை உள்வாங்கி ஏப்பமிடுவதற்கூடாக அவற்றின் தீவிரத் தன்மையைக் கூர்மங்கச் செய்வது ஒரு காரணமாக இருக்க முடியாதா?
இது பெண்கள் அமைப்புகளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே இந்த போக்கு நிலவுகிறது. சிவில் சமூக செயற்பாடுகளில் காணப்பட்டு வரும் மாற்றங்களையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். 90களைப் பார்த்தோமானால் சிவில் சமூக செயற்பாடானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. 30களிலிருந்து தீவிரப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும், இடதுசாரி செயற்பாடுகளுக்கும் கூட இந்த நிலைமை தோன்றியுள்ளன எனலாம். சித்தாந்த வீழ்ச்சியும் காணப்படுகிறதல்லவா? சமூக மாற்றத்துக்கான சித்தாந்த சூத்திரங்களை எம்மால் மாற்றத்துக்குள்ளாக்க நேரிட்டதல்லவா? இதன் காரணமாகவே தீவிரமடைதலுக்கும் பீதி நிலவுகிறது. சிவில் சமூகத்தில் செயற்பாட்டுச் சக்திகளாகவும் நிர்ப்பந்தச் சக்திகளாக பத்திரிகையாளர்களும், கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்களுமே காணப்படுகின்றனர் என்றே நான் கருதுகிறேன்.
நீங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அதில் நீங்கள் கண்ட அனுபவங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினை குறித்த அவதானங்களைப் பகிர முடியுமா?
ஜே.வி.பி.யினர் இன்றும் நான் ஒரு உறுப்பினராக ஒருபோதும் இருந்ததில்லை என்றே கூறி வருகின்றனர். நான் ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்திருக்கிறேன். சோஷலிச கலைச் சங்கத்தின் கீழ் 1977இல் தோற்றுவிக்கப்பட்ட விமுக்தி கீ (விடுதலை கீதம்) குழுவில் பாடல்கள் பாடி வந்தேன்.
நீங்கள் ஜே.வி.பி.யின் சோஷலிச மகளிர் சங்கத்தில் இருக்கவில்லையா?
இல்லை, நான் அதில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அப்போது அதன் கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஜே.வி.பி. ஆங்கில மொழியில் வெளியிட்டு வந்த Red Power பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தேன். தொகுத்துமிருக்கிறேன். அதற்குப் பொறுப்பாக சில காலம் இருந்திருக்கிறேன். ஆங்கில மொழியிலான விடயங்கள் பலவற்றை நானே செய்ய நேரிட்டது. கொழும்பு கிழக்கின் அமைப்பாளராக செயற்பட்டிருக்கிறேன். நான் விஜேவீர, கெலி சேனநாயக்க உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அப்போது கியுபாவில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கும் சென்று வந்தோம். அப்போது ஜே.வி.பி.க்கு அங்கு நல்ல வரவேற்பிருந்தது. அதனைத் தவிர அப்போது ஜே.வி.பி.யின் மனித உரிமைகள் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட போது அதன் தலைமைப் பொறுப்பையும் நானே வகித்து வந்தேன்.
ஜே.வி.பி.யுடன் இணைவதற்கு உந்துதலாக இருந்த சூழலை விளக்குவீர்களா?
நான் இன்றும் நம்புகிறேன். இலங்கையில் தீவிர இடதுசாரித்துவத்திற்கான தேவை தொடர்ந்துமிருக்கிறது. 1976இல் தான் நான் மார்க்சிய அரசியலில் அக்கறை காட்டினேன். நாட்டில் ஒரு சமூக மாற்றமென்றை உருவாக்கும் ஆற்றல் ஜே.வி.பி.க்கு இருப்பதாக நம்பினேன். அன்று 71 கிளர்ச்சியில் பங்கு பற்றியவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது நானும் சென்று ஆர்வமாக அவதானித்து வந்தேன். இதற்கூடாகவே ஜே.வி.பி.யுடனான தொடர்பு ஏற்பட்டது. ஜே.வி.பி. தோழர்கள் என்னை அடையாளம் கண்டு தொடர்பு கொண்டனர். அவர்களின் வேலைகளில் நானும் பங்கேற்றேன். 78இல் தோழர் விஜேவீர விடுதலையான பின் 71 கிளர்ச்சியில் படுகொலை செய்யப்பட்ட பிரேமவதி மனம்பேரி நினைவாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது தோழர் விஜேவீர என்னைச் சந்தித்து உரையாடினார் அதன் பின் ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன்.
ஜே.வி.பி.யில் இருந்து ஏன் விலகினீர்கள்?
ஒரு விதத்தில் என் தனிப்பட்ட பிரச்சினைகளும் எனது விலகலுக்குக் காரணமாகியிருந்தன. அதை விட தொடர்ந்தும் பல கருத்துப் பிரச்சினைகள் இருந்து வந்தன. குறிப்பாக பெண்கள் விடயம் தொடர்பானது. சோஷலிச மகளிர் சங்கம் சுயாதீனமாக இயங்க முடியாதிருந்தது. ஆண் தோழர்களின் வழிநடத்தலிலேயே, அவர்கள் இடும் ஆணைகளே சோ.ம.ச.வை இயக்கின. இது தொடர்பாக கட்சிக்குள் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தன. சோ.ம.ச. வின் தலைவியாக செயற்பட்ட நந்தசீலி சகோதரியின் பிரசவ விடுமுறை கூட அன்று வழங்க மறுக்கப்பட்டது. இது தொடர்பான பிரச்சினைகள் கிளப்பப்பட்ட போது. என் மீது மத்திய தர வர்க்க முத்திரை குத்தப்பட்டது. நான் ஆங்கில மொழி மூல விடயங்கள் பெருமளவு செய்து வந்ததால் இது இம்முத்திரை குத்தலுக்கு சாதகமாகப் போனது. இந்த நிலைமையை சமாளித்து நீடித்திருக்க முடியாது போனது. படிப்படியாக அதிலிருந்து அந்நியப்பட வேண்டி வந்தது. இன்று கூட நான் கெலி சேனநாயக்கவுடன் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாகவே விலகினேன் என பிரச்சாரப்படுத்தி வருகிறது. கியூபாவுக்கு சென்றிருந்த வேளையில் அங்கு நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு போவதற்கு எம்மோடு வந்த சில தோழர்களை அழைத்திருந்தேன். ஆனால் எல்லோரும் மறுக்கவே என்னோடு கெலி மட்டுமே வரத் தயாராக இருந்தார்.
அங்கு போனதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கண்டிக்கப்பட்டோம். கெலியையும் என்னையும் சம்பந்தப்படுத்தி அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அது இறுதியில் எங்கள் இருவரையும் உண்மையிலேயே ஒன்று சேர நிர்ப்பந்தித்திருந்தது. அக் குற்றச் சாட்டையே இன்றும் கூறி வருகிறது. இன்று வரை என்னால் எழுப்பப்பட்ட கருத்து ரீதியான பிரச்சினைகளை மூடிமறைத்துக் கொண்டே வருகிறது. பெண்கள் பிரச்சினை போலவே ஜனநாயகம் பற்றிய பிரச்சினையும் கட்சிக்குள் எழுந்தது. குறிப்பாக 1979ஆக இருக்கும் கம்போடியாவில் பொல்பொட் அரசாங்கம் பற்றிய சிக்கல்கள் எழுந்தன. கம்போடியப் போராட்டத்தை ஒரு புரட்சிகர எழுச்சியாக கருத முடியுமா என்ற விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பி.யின் நியமுவா பத்திரிகையில் பொல்பொட் அரசாங்கம் ஒரு புரட்சிகர அரசாங்கம் என்றே வாழ்த்தி வந்தது. ஆனால் பொல்பொட் அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கம் என்ற கருத்து என்னிடம் இருந்தது. சீ.ஐ.ஏ.வின் செய்தி ஸ்தாபனங்கள் பரப்பி வரும் பிரச்சாரங்களைக் கொண்டே நான் வாதிடுவதாகவும் பொல்பொட் அப்படியான கொலைகளைச் செய்யவில்லை என்றும் விஜேவீர தோழரும் எதிர்த்தார். நான் சீ.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் பிரச்சாரப்படுத்தினர். ஆனால் இன்று பொல்பொட் யார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்படியான கருத்து ரீதியான பிரச்சினைகளை சரியான பொறிமுறைக் கூடாக முகம்கொடுக்க ஜே.வி.பி. தயாராக இருக்கவில்லை.
இன்றும் கூட சமூக மாற்றமொன்றுக்காக தொடர்ச்சியாக முயற்சி செய்கின்ற ஜே.வி.பி.யின் மீது எனக்கு அக்கறை உள்ளது. ஆனால் இன்றும் பெண்கள் தொடர்பான விடயம் உள்ளிட்ட பல விடயங்களில் கருத்து ரீதியான வளர்ச்சி காணப்படுவதாகத் தெரியவில்லை. பொருளாதார விடுதலையிலேயே பெண்களின் விடுதலை தங்கியிருக்கிறது என்கின்ற கருத்துடனேயே இன்றும் இருப்பதாகத் தெரிகிறது. நவீன பெண்ணிய சிந்தனை தொடர்பான கருத்தாடல் கட்சிக்குள் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.
மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தனிவீட்டுத்திட்டங்கள் மலையகமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே.
07 பேர்ச்சஸ் காணி என மட்டுப்படுத்தப்பட்ட நிலவுரிமையுடன் பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. சுமார் 198 வருட லயன் வாழ்க்கை முறைக்கு விடுதலை அளித்து கௌரவமான வாழ்க்கை முறைக்கு எம்மக்கள் முன்னேறும் காலமிது.
பெருந்தோட்ட பொருளாதாரத்தின் அடிப்படையாக தேயிலையை மட்டுமே நம்பியிருந்தது போக எம்மவர்களின் பொருளாதாரத்தை லயன்களைச் சுற்றியிருந்த நிலங்களே தீர்மானித்தன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுயதொழில்கள் என எம்மவர்களின் பொருளாதாரம் சற்று ஸ்திரமானது. குறிப்பாக விவசாயம் மூலம் மேலதிக நேரத்தை பயனுடைய வகையில் எம்மக்கள் இன்றும் மாற்றியமைத்து நன்மையடைகின்றனர்.
பெருந்தோட்டத்தில் வேலை நாட்கள் குறையும் சந்தர்ப்பங்கள், போதிய சம்பளம் கிடைக்காத நிலைமைகளில் இவ்வாறான மேலதிக வருமானங்கள் குடும்பங்களின் வாழ்க்கைச் சுமையை சமாளிக்க இன்றியமையாதவையாகும். தோட்டங்களில் வேலை செய்யாதோரும், ஓய்வு பெற்றவர்களும் முழு நேரமாக மரக்கறி, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களின் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.
அதாவது காடாகிக் கிடந்த நிலங்களை பணத்தை முதலீடு செய்து விளைநிலங்களாக ஆக்கி வருமானம் தேடுகின்றனர். குறிப்பாக வடிகால் வசதிகள், பாத்தி அமைப்பு போன்றவற்றுக்கு அதிகமான பணம் முதலீடுச் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் கால்நடை வளர்ப்புக்கு தொழுவங்கள் அமைத்தல், பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான தேவைகளுக்கும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பால் உற்பத்தி, (மிருகக்கழிவுகள்) சேதனப்பசளை உற்பத்தி போன்ற செயற்பாடுகள் மூலம் சாதகமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளனர்.
இவையனைத்தும் லயன் குடியிருப்புகளை அண்டியே அமைந்திருந்தமையால் சாதகமாக இருக்கின்றது. மறுபுறம் தனிவீட்டுத்திட்டங்கள் மூலம் நிலப்பரப்பு மட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான தொழில்களை செய்வது சாத்தியமற்றதாக மாறலாம். குறிப்பாக தனிவீட்டுத்திட்டங்களுக்கான காணிகளை ஒதுக்கும் போது பெருந்தோட்டக் கம்பனிகள் தேயிலை விளைச்சல் குறைவாக அல்லது தரிசாக காணப்படும் நிலங்களே வழங்கப்படுகின்றன. இவ்வாறான பிரதேசங்களில் குடியிருப்பு தொகுதிகளை அமைக்கும் போது வீதி, குடிநீர், பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காக அதிகமாகச் செலவு செய்ய வேண்டியேற்படுகின்றது.
தனிவீட்டுத்திட்டங்களை காரணம் காட்டி பெரும்பாலான தோட்டக்கம்பனிகள் மக்களை தோட்டங்களினுள், மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மட்டும் கட்டுப்படுத்தி வைக்க முற்படுகின்றன.
லயன்களையும் அது சார்ந்த நிலங்களையும் விட்டு வெளியேறும் தொழிலாளர்களின் விவசாய நிலங்களையும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் விபரீதமும் ஏற்பட வாய்ப்புண்டு.
சில பெருந்தோட்டக்கம்பனிகள் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் காணப்படும் லயன்கள் மற்றும் விவசாய நிலங்களில் நெடுங்கால மரங்களை பயிரிட திட்டமிட்டு வருகின்றன. இது மண்சரிவுக்கு மாற்றீடான யோசனையாக இருப்பினும் கூட, தேயிலை மலைகளைப்போலவே விவசாய நிலங்களிலும் எம்மவர்களின் உழைப்பு உண்டு என்பதை உணர வேண்டும். எனவே எம்மவர்களின் மேலதிக வருமானத்துக்கான அடிப்படைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
நிச்சயத்தன்மை அற்ற பொருளாதாரமாக இன்று பெருந்தோட்டத் தொழில் துறை பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. பெரும்பாலான தோட்டங்கள் மூடப்பட்டும், திட்டமிட்டு காடாக்கப்பட்டும் வருகின்றன. தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மாற்றுப்பொருளாதார வாய்ப்புகள் மிகவும் அவசியமாகும். அதேபோல் நாட்டின் உணவு உற்பத்தி, பசும்பால் சார்ந்த உற்பத்திகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதால் அவர்களின் முயற்சிகள் அரசினால் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அதே போல் சுயதொழில்கள் மூலமும் எம்மவர்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.
அதற்கு நிலமும், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் இன்றியமையாததாகும். மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் (தனிவீடு) இவ்வாறான சுயதொழில்களை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால் அங்கு அவர்களுக்கு சுயதொழில் மானியமும், உதவுத்தொகைகளும் இழப்பீடுகள், காப்புறுதி என்பனவும் வழங்கப்படுகின்றன. ஆனால் எம் இளைஞர் யுவதிகளுக்கு அவ்வாறான எந்த சலுகைகளும் இதுவரை வழங்கப்பட்டதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன. சுயதொழில்களில் ஈடுபட்டவர்களுக்கான எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நடைமுறைகள் மூலம் எம் பொருளாதாரம் ஸ்திரமற்று காணப்படுவது குறித்து எம் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். பெருந்தோட்ட கம்பனிகள் எம்மை வந்தேறு குடிகளாகவே இன்னும் வைத்திருக்க முனைவது இதன் மூலம் புலப்படும். வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய பெருந்தோட்ட நிலங்களை மீட்பதும் கடினமானது. எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
தனிவீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பிரத்தியேகமான நிலம் வழங்கப்பட வேண்டும். லயன்களை இடித்து தள்ளுவதற்கு புறம்பாக கால்நடை வளர்ப்புக்கு அவற்றை உபயோகப்படுத்தலாம். கிராம அபிவிருத்தி எண்ணக்கரு மூலம் சுயதொழில் புரியும் இளைஞர் யுவதிகளுக்கு தனியான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.
மலையகம் என்பது வெறுமனே மக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது எம் நிலத்துடனான உரிமையையும் இருப்பையும் வெளிக்காட்டுகின்றது. எம் தேவை வாழ்வதற்கு 07 பேர்ச்சஸ் நிலம் மட்டுமல்ல. எம் சொந்த நிலத்தில் நாம் சுதந்திரமாக சமூக பொருளாதார ரீதியாக ஸ்திரமான இருப்பை உறுதி செய்யும் உரிமையாகும்.
சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக கொழும்பில் சில நிகழ்வுகள் இந்த வாரம் ஏற்பாடாகியுள்ளன. அவரின் நினைவாக இந்தக் கட்டுரை
90களின் நடுப்பகுதியில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது.... திம்பிரிகஸ்யாயவிலுள்ள எமது சரிநிகர் அலுவலகமும் சுனிலாவின் இன்போர்ம் நிறுவனமும் எதிரெதிரில் அலுவலகங்கள் இருந்தன. எமது சகோதர நிறுவனமும் கூட.
சக தமிழ் பணியாளர்களின் பாதுகாப்பில் அனைத்து சிங்கள நண்பர்களும் மிகுந்த அக்கறை எடுப்பார்கள். அப்படி பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அது இருக்கட்டும். எனக்கு ஒரு நாள் நேர்ந்தத்தை பதிய வேண்டும்.
ஒரு நாள் காலியில் உள்ள ஒரு தோழர் ஒருவரை சந்திப்பதற்காக சென்ற இடத்தில் திரும்பி வர இரவு பஸ்சும் இன்றி நான் சிக்கிவிட்டேன். அது ஒரு கிராமம் அங்கிருந்து தொலைபேசியில் அறிவிக்கக் கூட வசதி இல்லை. இருட்டிய பின்னர் அவர்கள் என்னையும் வெளியில் அனுப்புவதாக இல்லை. வழமையாக நான் எங்கு சென்றாலும் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் நான் பத்திரமாக இருப்பதை வீட்டுக்குத் தெரிவித்து விடுவேன். அன்று அதற்கு வழியில்லை என்றாகிவிட்டது. விடிந்ததும் கிளம்பத் தயாராக இருந்தேன்.
சுனிலாவின் குரலில் அமைந்த பாட்டுப் பின்னணியுடன் இந்த காணொளி செய்யப்பட்டிருக்கிறது.
அன்று விடியவே அந்த கிராமத்திலிருந்து ஒரு மாட்டு வண்டிலை பிடித்து சந்திவரை வந்து இன்னொரு ட்ரக்டரில் என்னை ஏற்றிவிட்டார் தோழர். அங்கிருந்து டவுனுக்கு வந்து காத்திருந்து பஸ் பிடித்து கொழும்பு வந்து, கொழும்பில் இருந்து நேராக அலுவகத்திற்கு வந்து சேர்ந்தேன். சற்று பின்னேரமாகியிருந்து.
அங்கு அலுவலகம் அல்லோல கல்லோலமாக இருந்தது. என்னைத் தூரத்தில் கண்டவுடன் அங்கு அலுவலக பணியாளர் அதோ சரா வருகிறார் என்று சிங்களத்தில் கத்திய சத்தம் கேட்டதும் அலுவலகத்தின் உள்ளிருந்து சக நண்பர்கள் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள். அருகில் உள்ள இன்போர்ம் அலுவலகத்திலிருந்தும் நண்பர்கள் வந்து என்ன நடந்தது என்று பதட்டமாக கேட்டார்கள்.
அவர்களைப் பார்த்து நானும் பதட்டமடைந்தேன். எங்கு போயிருந்தாய் உன்னை காணவில்லை என்று ஊடக செய்திகள் வரை போய் விட்டது. நான் நடந்ததைக் கூறினேன். சுனிலா அங்கிருந்து வந்து என் மண்டையில் ஒரு அடி அடித்தார்.
“வீட்டுக்கு நீ நேற்று வரவில்லை என்று அம்மா காலையில் தொடர்பு கொண்டு கூறினார். நாங்கள் பதட்டப்பட்டு மங்களவுக்கு தெரிவித்தோம் (மங்கள சமரவீர: ஒரு சமயத்தில் நம்முடன் நட்புடன் இருந்த இன்றைய அமைச்சர், அன்றைய ஊடக அமைச்சர்). உன்னைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்ற பயத்தில் சற்று கடுமையாகவே நாங்கள் உரையாடினோம். பொலிஸ் நிலையங்களில் அப்படி ஒருவர் உள்ளே இல்லை என்றும் பொலிஸ் மா அதிபரும் கூறிவிட்டார். அப்படி கண்டு பிடித்தால் அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இங்கே நாங்கள் ஏனைய ஊடகங்களுடனும் தொடர்புகொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீ ஹாயாக வந்து இருக்கிறாய்...”
மற்ற நண்பர்கள் சூழ இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் இடைக்கிடை என்னை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். குற்றவாளியாக அதிர்ச்சியடைந்து இருந்தேன்.
ஏதாவது ஒரு வழியில் எமக்கு நீ தகவல் தந்திருக்க வேண்டும் என்பதே அனைவரது ஆத்திரத்திலும் இருந்த சாராம்சம். நான் காலி டவுனில் அதை செய்திருக்கலாம். எனது தவறை நினைத்து வெட்கித்தும், என்னிலே ஆத்திரமும் கொண்ட தருணம் அது. இவ்வளவு அசட்டையாக நான் பாதுகாப்பு விடயத்தில் பொதுவாக இருந்ததில்லை. அன்று எனக்கு பெரிய பாடம் கிடைத்தது. என்னில் அக்கறை கொண்டவர்களை நான் இப்படி பதட்டத்துக்கும், பயத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறேன். குறிப்பாக என்னை எந்த இடத்திலும் தன் தத்துப் பிள்ளையாக அறிமுகப்படுத்தும் சுனிலாவை நான் காயப்படுத்திவிட்டேன் என்று மிகுந்த வேதனைப்பட்ட நாள் அது.
சுனிலா உலகறிந்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அவரின் கருத்துக்களை அசட்டை செய்ய மாட்டார்கள். எனவே சுனிலா மீண்டும் உரிய இடங்களுக்கு நான் பத்திரமாக இருப்பதை அறிவித்தார்.
சுனிலா இறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் 2012 ஒக்டோபர் மாதம் ஒஸ்லோ வந்திருந்தார். ஒஸ்லோவில் மனித உரிமை குறித்த ஒரு கலந்துரையாடலை எனது நிறுவனத்தில் ஒழுங்கு செய்தேன். அப்போது பல இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார், ஏற்கெனவே திட்டமிட்டபடி என்னையும் அங்கெல்லாம் அழைத்துச் சென்றார். சுனிலா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது வெளியில் மழைத்தூரலும், குளிருமாக இருந்தது. நான் எப்போதும் போல எனது ஜெக்கட்டை மூடாமல் அனாயசமாக குடையை அவருக்குப் பிடித்தேன். என் தலையில் அதே குட்டு விழுந்தது.
“முதலில் ஜெக்கட் சிப்பை இழுத்து மூடு. குளிராக இருக்கிறது. விளையாடுகிறாயா... வியாதியை இழுத்துக்கொள்....”
அன்று தான் நான் அந்த இறுதிக் குட்டை வாங்கினேன். அது தான் நான் அவரை சந்திக்கும் இறுதி நாள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.
சுனிலா புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை இறுதியாக சந்தித்த வேளை தான் மிகவும் தேறிவிட்டதாகவும், ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாகவும் கூறினார். அப்போது அவர் நெதர்லாந்தில் சிறிது காலம் வாழ்ந்து வந்தார். நோயுற்று இருந்த நிலையிலும் இலங்கை திரும்பமுடியாத படி அவருக்கு உயிரச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் அக்கிரமங்களை உலகெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் மகிந்த அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்தார். அவரை கிட்ட இருந்து கவனிக்க என்று முமுதினி சாமுவேல், சேபாலி இன்னும் சில சக தோழிகள் இலங்கையில் இருந்து மாறி மாறி நெதர்லாந்து வந்து தங்கியிருந்து அவரைக் கவனித்துச் சென்றார்கள்.
“நான் ஒரு அகதியைப் போல நாட்டுக்கு நாடு திரிந்து அலைந்து என்னைத் துரத்திய எமனிடமிருந்து தப்ப முயற்சித்தேன். ஆனால் எமன் எனது உடலுக்குள்ளேயே ஒளிந்திருந்தான். என்று அவர் இன்னொரு நண்பியிடம் தெரிவித்திருந்தார்.
சுனிலாவின் வீடு புற்றுநோயாளும் வேறு உடல் உபாதைகளாலும் பாதிக்கப்பட்ட பல நட்புகளுக்கு உறைவிடமாக ஒரு காலத்தில் இருந்ததை நான் அறிவேன். பேராசிரியர் மௌனகுருவுக்கு இதய சத்திரிசிகிச்சை செய்து சுனிலாவின் வீட்டில் இருந்தபோது அவர் அங்கு தான் இருக்கிறார் என்பதை அவரின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த எங்கள் அலுவலகத்தில் எவருக்கும் தெரியாதிருந்தது. பார்க்க வருபவர்களால் அவருக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்று கவனமாக இருந்தார்.
எங்கள் சரிநிகர் பத்திரிகையை வெளியிட்ட மேர்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், நீண்ட காலமாக தன தலைவராகவும் இருந்த பிரபல மனித உரிமையாளர் சார்ள்ஸ் அபேசேகரவின் மகள் தான் சுனிலா.
இலங்கையில் அவரோடு சேர்ந்து பணியாற்றிய காலம் மிகவும் பசுமையானது. நகைச்சுவை உணர்வை எப்போதும் பேணுபவர். அவருடன் நிறைய பயணம் செய்திருக்கிறேன். பல்வேறு விடயங்களை விவாதித்து, உரையாடியிருக்கிறேன். பெண்ணியம், மனித உரிமைகள் சார்ந்த கூட்டங்கள் பலவற்றில் அவரின் மொழிபெயர்ப்பாளராக நான் இயங்கியிருக்கிறேன். எங்கும் என்னை தனது தத்துப் பிள்ளை என அறிமுகப்படுத்துவது அவரது வழக்கம்.
உயிரச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு பலரும் தப்பிப் போவதற்கு தனிப்பட்ட ரீதியில் நூற்றுக்கணக்கானோருக்கு அவர் உதவி செய்திருக்கிறார். அது மட்டுமன்றி பின்னர் அவர்கள் தஞ்சமடைந்த நாடுகளில் அகதி அந்தஸ்து பெறுவதற்கு சுனிலா காரணமாக இருந்திருக்கிறார்.
மனித நேயம் மிக்கவராக மட்டுமல்ல சிறந்த மனித உரிமையாளராகவும் உலகளவில் அறியப்பட்டிருந்தார் சுனிலா. 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறந்த மனித உரிமையாளருக்கான விருது அவருக்கு அன்றைய செயலாளர் நாயகம் கொபி அனானால் வழங்கப்பட்டது.
அவர் போன்ற ஒரு பெண் ஆளுமையை நான் இதுவரை இலங்கையில் கண்டதில்லை. 70களின் இறுதியில் புரட்சிகர மேடைகளில் அவரின் குரல் மிகவும் பிரசித்தம். ஜே.வி.பியின் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்ட அந்த காலப்பகுதியில் “விமுக்தி கீ” (விடுதலை கீதம்) என்கிற பிரச்சாரக் குழுவில் முக்கிய பாடகி. மனித உரிமையாளர், பெண்ணுரிமையாளர், தமிழர்களின் உரிமைக்காகவும் இறுதிவரை குரல்கொடுத்தவர். ஒட்டுமொத்தத்தில் சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சகல தளங்களிலும் போராடியவர் அவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னணிப் பாடகியாகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
அவர் நம்மை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 9ஆம் திகதியோடு சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நம் காலத்து நாயகி. நம் காலத்து வீராங்கனை.
பொருளாதார ரீதியாக மலையக பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்னும் பின்தங்கி இருப்பதற்கான பிரதான காரணம் அவர்களின் வாழ்வாதாரம் கொழுந்து பறித்தல் தொழிலில் மட்டும் தங்கி இருப்பதாகும். தேயிலை தொழில் துறையானது வருடந்தோறும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதன் காரணமாகவே சில மாதங்கள் அவர்களுக்கு வேலை நாட்கள் குறைவாகவும் வருமானம் கீழ் மட்டத்திலும் இருக்கின்றன. ஆகவே அவர்கள் மாற்றுத்தொழில்களில் ஈடுபாடு காட்டுவது அவசியம். அதாவது இத்தொழிலை பிரதானமாகக்கொண்டு ஏனைய உப தொழில்களில் ஈடுபடல் அவசியம். அதற்கு அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தோட்ட நிர்வாகங்களும் கைகொடுக்க வேண்டும் என்கிறார் பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான மு.சின்னத்தம்பி. கேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு.
கேள்வி: இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் மிகவும் மதிக்கப்படும் கல்வியியலாளரான உங்களைப்பற்றி…?
பதில்: நான் கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் பிறந்தேன். அங்குள்ள தோட்டப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத்தொடர்ந்தேன். தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர். 1948 ஆம் ஆண்டு குடும்பம் தலவாக்கலைக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றேன். இப்பாடசாலை தற்போதுள்ள பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கு அருகில் அமைந்திருந்தது. பின்பு 1959 இல் தெல்லிப்பளை மகஜன கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தேன். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப்பெற்றேன். 1974 இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றி வந்தேன். 1993 இல் பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2006 இல் ஓய்வு பெற்றேன்.
கேள்வி: வளங்கள் குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்தன?
பதில்: வளங்கள் குறைவு என்பது உண்மை தான் ஆனால் முயற்சி என ஒன்றுள்ளதே? நான் சிறுவயதிலிருந்தே வாசிப்பிலும் கற்றலிலும் திறமையாக விளங்கினேன். அதுவே எனது வளர்ச்சிக்குக்காரணம். பெற்றோரின் ஆதரவும் கூறப்போனால் கடவுளின் கடாட்சமும் எனக்குக் கிடைத்தது.
கேள்வி: மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றிய பல பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் ஏன் இந்த சமூகம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளது?
பதில்: பல காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக இச்சமூகத்துக்கு அனைத்தும் தாமதமாகியே கிடைத்ததைக்கூறலாம். 1980 களுக்குப்பிறகு தான் கல்வி வளர்ச்சியைப்பற்றி பேச முடியும். அதே நேரம் அரசியலிலும் குறித்த காலப்பகுதிக்குப்பின்னரே உரிமைகளைக்கேட்டுப்பெறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமரர் தொண்டமான் பெருந்தோட்டப்பகுதிகளில் பல கல்விக் கூடங்கள் உருவாக வழிவகுத்தார். இது ஆரம்ப கால வரலாறு. தற்போது வரை ஏன் இச்சமூகம் இப்படி இருக்கின்றது என்றால் இம்மக்களின் ஒரே வாழ்வாதாரத் தெரிவாக கொழுந்து பறித்தல் மட்டுமே காணப்படுவதேயாகும்.இவர்கள் ஒரே தொழிலில் மட்டும் தங்கி வாழும் குழுவாக இருக்கின்றனர். மாற்றுத்தொழில் குறித்த எவ்வித விழிப்புணர்வும் இவர்களிடையே இல்லை என்பதோடு அதை அவர்களுக்குத்தெளிவு படுத்தும் பணிகளை அரசியல் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மந்த கதியிலேயே உள்ளன. மாற்றுத்தொழில்கள் என்றால் இவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கின்றனர்.அப்படிக் கருதியதாலேயே தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
கேள்வி : என்ன மாற்றுத்தொழில்களை நீங்கள் சிபாரிசு செய்கின்றீர்கள்?
பதில்: இப்பகுதியின் புவியியல் அமைப்பின் படி கால்நடை வளர்ப்பு சிறந்த மாற்றுத்தொழிலாக இருக்கின்றது அடுத்ததாக விவசாயத்தைக்கூறலாம். இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மலைகளைத் தவிர தரிசுநிலங்கள் காணப்படுகின்றன. கால் நடை வளர்ப்புக்குரிய தோதான காலநிலை உள்ளது. பண்ணைகளை அமைத்துக் கொடுத்து தொழிலாளர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் மேலதிக வருவாயைப்பெறலாம். கால்நடைகளுக்கான உணவுத்தேவைக்கு வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. மேலும் ஒவ்வொரு மாதமும் வருவாயை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலாக இது உள்ளது. அடுத்ததாக காய்கறி செய்கை. இதற்கும் இங்கு நிலம் தாராளமாகவே உள்ளது. ஆனால் எல்லா தொழிலாளர்களும் இதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஏனெனில் இதற்கு முதலீடு அவசியம். இதற்கு இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது தோட்ட நிர்வாகங்களும் இவ்வாறான தொழில்களில் இவர்களை ஊக்குவித்து அவர்களை தன்னிறைவு அடையச்செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கால்நடை பண்ணைகளை தோட்ட நிர்வாகங்களே அமைத்துக்கொடுக்கலாம். கடன் வசதிகள் ஏற்படுத்திக்கொடுப்பது அல்லது கிடைக்கும் இலாபத்தில் ஒரு தொகையை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு சாதகமான அம்சத்தை தரும். அதாவது தொழிலாளர் வெளியேற்றத்தை இச்செயன்முறைகள் கட்டுப்படுத்தும்.
கேள்வி: தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகத்தான் தேயிலை தொழிற் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக கம்பனிகள் கூறுகின்றனவே?
பதில்: ஓரளவிற்கே அதில் உண்மையுள்ளது.
இங்கு வீழ்ச்சியடைந்திருப்பது உற்பத்தி அளவு மட்டுமே ஒரேடியாக தொழில் துறையைக்கூறமுடியாது. அதாவது ஒரு தொழிலாளி கொழுந்து பறிக்கும் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியே அது. பராமரிப்பு ,தேயிலை கன்றுகளை நடல் போன்றவற்றில் கம்பனிகள் அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக போட்டி நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையில் ஒரு தொழிலாளி பறிக்கும் கொழுந்தின் அளவு மிகக்குறைவு. கென்யாவில் 3035 கிலோவாகவும் ,இந்தியாவில் 25 கிலோவாகவும் வியட்நாமில் 30 கிலோவாகவும் இருக்கும் அதே வேளை இலங்கையில் அது 1220 கிலோவாக உள்ளது. நிலத்தினதும் ஊழியத்தினதும் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாகவே ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்தி செலவு இங்கு அதிகமாக உள்ளது. ஒரு ஹெக்டேயருக்கான தேயிலை விளைச்சல் கென்யா மற்றும் இந்தியாவில் 2300 கிலோவாக இருக்க இலங்கையில் 1688 கிலோவாகவே உள்ளது. இது தொடர்பான தகவல்களை ‘இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள் என்ற ‘எனது புதிய நூலில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நூல் இம்மாதம் 8 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
கேள்வி: அண்மையில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போதைய சூழலில் தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 1200 ரூபா வரை இருத்தல் வேண்டும் என்று கூறியிருந்தீர்களே?
பதில்: உண்மை அது தான். ஆனால் அத்தொகையை வழங்குவதற்கு கம்பனிகள் முன்வருவதில்லை. அவர்கள் நட்டக்கணக்கை காட்டுகின்றனர். தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே தவிர அத்துறை நட்டமடையவில்லை. அப்படி நட்டம் ஏற்பட்டால் கம்பனிகள் இப்படி இயங்க முடியாது. தோட்டத்தை விட்டுச் செல்ல வேண்டுமே? மேலும் ஆய்வு ரீதியான தரவுகள் கூட்டு ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கு கொண்டு செல்லப்படல் வேண்டும். அப்போது தான் வாதம் புரிய முடியும். 1984 ஆம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் பற்றிய ஒரு அறிக்கையை நாம் தயாரித்து வழங்கியிருந்தோம். அதை சிறப்பாக முன்னெடுத்தார் அவர். இறுதியில் அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டது.
கேள்வி: தற்போது ஏன் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை?
பதில்: அக்காலகட்டத்தில் தொழிற்சங்க செயற்பாடுகள் அதிகம். அதற்கு அரசாங்கமும் ஏனையோரும் பயங்கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வேகம் இருந்தது. தற்போது அரசியல் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. தொழிற்சங்க அணுகுமுறைகள் முற்றாக இல்லாது போய்விட்டன அல்லது அவை பற்றி இப்போதுள்ளவர்களுக்கு தெரிய வில்லை எனலாம்..இதை அரசாங்கமும் கம்பனிகளும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
கேள்வி: மாதச் சம்பள முறை சாத்தியமாகாதா?
பதில்: இல்லை அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரே தொகை சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகங்களால் முடியாது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி ஒரே அளவில் இருப்பதில்லை. அது தோட்ட நிர்வாகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
கேள்வி: தேசிய வருமானத்துக்கு பங்களிப்புச் செய்யும் இச்சமூகத்தை ஏன் அரசாங்கங்களும் கண்டு கொள்வதில்லை?
பதில்: முதலில் இம்மக்களின் பிரச்சினைகளை இங்குள்ள அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் கண்டு கொள்ள வேண்டும்.அதாவது அக்கறை குறைவாகவே உள்ளது. நாம் ஒரேடியாக இவர்களை பின்தங்கிய சமூகம் என்று அடையாளப்படுத்த முடியாது. மெதுவாக முன்னேறி வரும் சமூகம் எனலாம். இங்கிருந்து கல்வியியலாளர்கள் தற்போது உருவாகி வருகின்றனர். ஆனால் அரசியலில் கற்றவர்களின் செயற்பாடுகள் அவசியம். அல்லது அவ்வாறானவர்களின் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளல் மிக முக்கியம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலகட்டத்தில் இப்பணியை அவர் சிறப்பாக முன்னெடுத்திருந்தார். எனினும் இப்போது எவரையும் இவ்விடயத்தில் நான் குறை கூறவில்லை. ஏனெனில் காலமாற்றங்கள் அனைத்தையும் மாற்றுவனவாக உள்ளன. ஆனால் கல்விமான்கள் ,கொள்கை வகுப்பாளர்களை நிச்சயமாக அரசியல்வாதிகள் அரவணைத்துச் செல்லல் வேண்டும். அதற்கும் அப்பாற்பட்டு சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை என்பதை விட வேறு என்ன தான் கூற முடியும்?
கேள்வி:கல்விப் புலத்திலுள்ளோர் சமூக மாற்றத்துக்கு வித்திட முடியாதா?
பதில்: நிச்சயமாக முடியும் ஆனால் இப்போதுள்ள கல்விச் சமூகத்தினர் அனைவரும் அது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதே? தற்போதைய சூழலில் பல ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு மிகவும் குறைவாகவே உள்ளன. எல்லோரையும் இதில் அடக்க முடியாது ஆனால் ஒரு கல்விக்கூடத்தில் அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்தால் மட்டுமே பெறுபேறுகளை அடைய முடியும். இதை ஒரு வருமானம் தரும் தொழிலாக என்று இவர்கள் நினைக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து சேவை மனப்பான்மையும், சமூகத்தை வளர்க்க கல்வி அவசியம் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லாது போய்விட்டது. எமது காலத்தில் அது சாத்தியப்படலாம் இப்போது அப்படி முடியாது என்று சிலர் கூறலாம். ஆனால் அப்படியல்ல. இன்று மலையக கல்விப்புலத்திலுள்ளோர் சிலர் தனித்தனியாக அமைப்புகளை நிறுவி சமூக உயர்வுக்கு பாடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடைப்பதில்லை அல்லது கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஆதரவு கிடைக்கும் நிலைமை உள்ளது. இதுவே இங்குள்ள பிரச்சினை. இவற்றையெல்லாம் தாண்டி சில நல்ல ஆசிரியர்களும் அதிபர்களும் பாடு பட வேண்டியுள்ளது.
கேள்வி: தனி வீட்டுத்திட்டங்களை வரவேற்கின்றீர்களா?
பதில்: வரவேற்கின்றேன் ஆனால் 7 பேர்ச் காணி என்பது அவர்களுக்கு போதாது. நான் ஆரம்பத்தில் கூறியதைப்போன்று தொழிலாளர்கள் மாற்றுத்தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு அதற்கான சூழல் அமைய வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் அவர்களுக்கு மேலதிக நிலம் ஒதுக்கப்படல் வேண்டும். கால் நடை வளர்ப்புக்கு இல்லாவிட்டாலும் உப உணவுப்பயிர்ச்செய்கைகள் சிறிய அளவிலான பண்ணைகள், சிறு தொழில் முயற்சிகளுக்கு உரிய இடம் அவர்களுக்கு வேண்டுமே?
கேள்வி: பெருந்தோட்டங்களும் அங்கு வாழ்ந்து வரும் மக்களும் அபிவிருத்தியடைய அரசியல் ரீதியாக என்ன நகர்வுகளை மேற்கொள்ளலாம்?
பதில்: பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபைகளுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். இச்சபைகளுக்கு வாக்களிக்கும் மக்களாக இவர்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் நலன்புரி சேவைகள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மக்களை திருப்திப் படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதை விட இம்மக்களின் நீண்ட காலத்தேவையை கருத்திற்கொண்டு திட்டங்களை வகுப்பதில் அரசியல்வாதிகள் முனைப்போடு செயற்படல் அவசியம்.