Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சரவணனின் “கள்ளத்தோணி” ஆதி அந்தமாக அலசும் ஒரு நூல் யமுனா ராஜேந்திரன்

2022 யூன் 11ஆம் திகதியன்று லண்டனில் நடத்தப்பட்ட மலையக இலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட யமுனா ராஜேந்திரன் அவர்களின் கட்டுரை இது. முதற் தடவையாக புகலிடத்தில் நடத்தப்பட்ட இத்தகைய மாநாட்டில் முழு நாள் நிகழ்விலும் சுமார் முப்பது நூல்களின் மீதான அறிமுக உரைகள் நிகழ்த்தப்பட்டன. என்.சரவணன் மலையகம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்தக் “கள்ளத்தோணி” நூலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய விழாவில் இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. இந்த நூலுக்கு 2023 ஆம் ஆண்டு 2019க்கான தமிழக அரசின் சிறந்த நூலுக்கான சட்டவியல், அரசியல் வகைப்பாட்டின் கீழ் விருதும் வழங்கப்பட்டது. (நன்றி - ஜீவநதி, மே 2023)
ஐந்து இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தரப்படவேண்டும். இதுவன்றி ஒரு இலட்சத்து ஐம்பதாயிம் பேரை இந்தியாவும் இலங்கையும் சமமாகப் பிரித்துக் கொண்டு குடியுரிமை தரப்பட வேண்டும். இரத்தமும் சதையும் உணர்வுமாக, இயற்கை ஜீவிகளாக வாழ்ந்த மானுட இனம் வெறும் எண்களாக மட்டுமே எஞ்சிய துயர நாட்கள் அவை.

அவர்கள் ஒரு நூற்றாண்டின் முன்பு பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்தால் தேயிலைத் தோட்டங்களிலும் துப்புரவுத் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு, காலமாற்றத்தில் மலையக மக்கள் என அழைக்கப்பட்டவர்கள்.

காலனியவாதிகளால், இந்திய இலங்கை அரசுகளால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்.

எழுபதுகளில் இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சார்ந்த ஊட்டியிலும் தேயிலையும் காப்பியும் விளைகிற கோத்தகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களிலும் குடியமர்த்தப்படுகிறார்கள்.

இவர்களில் சிறுபகுதியினர் நான் வாழ்கிற இடத்திலிருந்து குறுந்தொலைவில் போப் காலேஜ் எனும் இடம் தாண்டி ஒதுக்குப்புறமான இடத்தில் குடியமர்கிறார்கள்.

இலங்கையில் இந்தியப் பூர்வீகத் தமிழர் என விரட்டப்பட்ட இவர்கள் தமிழகத்தில் சிலோன் தமிழர் எனும் அடையாளம் இடப்பட்டு ஊர்களின், நகர்களின் ஒதுக்குப் புறத்தில் காலனி என அழைக்கப்பட்ட இடங்களில் வாழலாயினர்.

இந்திய தமிழக சாதி அடுக்கில் காலனி என்பது தலித் மக்கள் வாழம் குடியிருப்புகள். மலையகத் தமிழர் அல்லது அல்லது சிலோன் தமிழர் அல்லது நாடு திரும்பிய பூர்வீக இந்தியத் தமிழர் இவ்வாறுதான் ஓரநிலை மக்களாக இந்திய அரசினால் நடத்தப்படலாயினர்.

பள்ளிப் படிப்பு முடித்த பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலில் ஈடுபட்ட எழுபதுகளின் நாட்களில் ஒன்றில்தான், சிலோன் தமிழர் குடியிருப்புக்குச் செல்ல சேர்ந்தது. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த எம் போன்றோர்க்கு மலையகத் தமிழர் பற்றிய எமது அறிதலின் முதல் பதிவாக பொன்விலங்கு-குறிஞ்சி மலர் போன்ற நாவல்களை எழுதிய நா பார்த்தசாரதியின் மேகங்கள் மூடிய அந்த மலைகளின் பின்னால் எனும் குறுநாவல் அமைந்தது.

எண்பதுகளின் ஈழ விடுதலைப் போராட்ட ஊழி தமிழகத்தின் சிற்றூர்கள், பெருநகர்களைப் புரட்டிப்போட்டது. இலங்கை வாழ் வட கிழக்குத் தமிழர்-மலையகத் தமிழர்-கொழும்புத் தமிழர் என மூவகைத் தமிழர்கள் பற்றிய வாசிப்பு என்பது எமக்கு அப்போதுதான் துவங்குகிறது.

ஈழப் போராட்ட இயக்கங்களில் மலையகத் தமிழர் குறித்த ஒரு முழுமையான நுாலை மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற இயக்கமான ஈரோஸ் அன்று தமிழகத்தில் போராட்டத்தின ஆதரவாளர்களிடையே விநியோகித்தது.

பிற்பாடுதான் பி.ஏ.காதரின் நுால், தமிழோவியன் கவிதைகள், ஏ.சிவானந்தனின் நாவல், மு.நித்தியானந்தனின் நுால் போன்றவற்றைப் படிக்க நேர்ந்தது. அந்த நூல்களின் தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் மலையகம் குறித்த ஆய்வு நுாலான சரவணனின் கள்ளத்தோணி.

சரவணனின் நுால் மலையகத்தின் நூற்றைம்பைது ஆண்டுகால கால வரலாற்றை ஆதி துவங்கி சமகாலம் வரை தொகுத்துத் தருகிறது.

ஒரு நூலில் வாசகனுக்கு அறிந்துகொள்ள என்ன இருக்கிறது. அதிலிருந்து அவன் என்ன கற்றான் என்பதுதான் அவனது அறுதித் தேர்வாக இருக்கும். 254 பக்கங்களில் அணிந்துரையையும் முன்னுரையையும் விட்டுவிட்டால் நுாலில் 23 கட்டுரைகள் இருக்கின்றன.

கட்டுரைகளின் அடிநாதமாக நடந்து முடிந்து சிங்கள பௌத்தப் பெருந்தேசிய அரசினால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தமிழர் போராட்டத்தில், வடகிழக்கு, மலையகம், கொழும்பு என முத்தரப்புத் தமிழரிடமும் இருந்திருக்க வேண்டிய புரிந்துணர்வு, ஒற்றுமை போன்றவற்றை அவாவும் கட்டுரைகள், அது இல்லாமல் போனதற்கான பிராந்திய, வரலாற்று. அரசியல் தனித்தன்மை சார்ந்த விஷங்களையும் அலசுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தவிர, பின்வந்த இந்திரா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி போன்றவர்கள் எவ்வாறு தமது சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்தார்கள் எனும் வரலாற்றைத் தரவுகளுடன் நிறுவுகிறது.

காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டைைமத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாக கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.

துவக்கத்தில் மைையகத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடு காட்டிய வடகிழக்குத் தமிழ்த் தலைவர்கள் எவ்வாறு பிற்காலத்தில் சிங்கள அரசின் சேவகர்களாக மாறி அவர்களைக் கைவிட்டார்கள் என்பதையும் பேசுகின்றன.
மேலே சொன்ன தரவுகள் யாவும் இன்று மலையகம் தொடர்பாக எழுதப்படும் வரலாற்று நுால்களில் இருந்து பொதுவாகவே நாம் தொகுத்துக் கொள்ள முடிகிறவைதான்.

இந்த நூலின் குறிப்பான சிறப்பம்சமாக நான் காண்பது, இனவாதம் என்பதையும் தாண்டி மலையகத் தமிழர் பிரச்சினையில் இருக்கிற சாதி சார்ந்த தரவுகளையும் அது சார்ந்த ஒப்பீட்டுரீதியிலான தமிழர் அரசியலையும் பேசும் கட்டுரைகளை இந்த நுால் கொண்டிருக்கிறது என்பதுதான்.

மலையகத் தமிழரில் 80 சதவீதமானவர்கள் தலித்துகள்தான். 20 சதவீதமானவர்கள் சமஸ்கிருதமயமாதலை வாழ்முறையாக் தேர்ந்த இடைநிலைச் சாதியினர். தமிழகச் சாதியப் படிநிலையில் நிலவுகிற முரண்கள், அதிகார மனநிலைகள அண்மைக் காலத்தில் மலையகத்தில் வேகம் பெற்றிப்பதை குறிப்பாக இந்நூல் தரவுகளுடன் சுட்டுகிறது.

ஈழத்திலும் தமிழகத்திலும் இப்போது முனைப்புப் பெற்றிருக்கும் சைவபார்ப்பனிய, இந்துத்துவ அரசியல் கூட்டுடன் இணைவைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இது.

வரலாற்றை இடதுசாரி நோக்கில் இருந்து அணுகுபவனாக, எனக்குப் புதியன கற்பதாகவும் மகிழ்வுக்கூடியதாவும் இருந்த கட்டுரைகள் நாடு, இன. மத, நிற, சாதிய மனநிலை தாண்டிய உன்னதமான சில மனிதர்கள் குறித்த கட்டுரைகள்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து இலங்கை வந்து மைையகத் தமிழர் வாழ்வு மேம்பாட்டுக்குத் தம்மை ஒப்புவித்துக் கொண்ட நடேசய்யர் தம்பதிகள், இங்கிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியா வழி மலையகம் வந்து ஒரு சாகசவாதியாக வாழ்ந்து மலையகத் தமிழரின் போராட்டங்களில் பங்கு கொண்ட மார்க் அந்தனி பர்ஸ்கேடல் போன்றவர்கள் பற்றிய கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட கட்டுரைகள்.

எந்த உரிமைப் போராட்டமும், மிகச் சாதரணமான மனிதர்களின் அசாரணமான தருணத்தில் நிகழும் உயிரீகத்தினால்தான் அதன் கொதிநிலையை அடைகின்றன. அப்படியான ஒரு மாமனிதன் பற்றிய எழுத்து மலையைகத் தொழிலாளி வரக்கத்தின் முதல் தியாகியான முல்லோயா கோவிந்தன் பற்றிய உணர்ச்சிகரமான கட்டுரை.

இறுதியாக இரண்டு பிரச்சினைகள். ஒன்று இனவாதத்தைக் கடக்க முடியாத வர்க்கப் பிரக்ஞையின் வரலாறாகவே இலங்கை இடதுசாரிகளின் வரலாறு இருக்கிறது என்பதை இடதுசாரிக் கட்சிகளின் தளும்பல்களை முன்வைத்து இந்நூல் சுட்டிச்செல்கிறது.

பிறிதொன்று, நூலின் அரசியல் தொனியின் நீட்சியாக சுய அனுபவத்தில் இருந்து தலித்தாகத் தானும் தலித் அல்லாத இடதுசாரிகளும் தமது அன்றாடத்தில் சாதிகடந்த பிரக்ஞை நோக்கி நகர்வதை மிகுந்த வலியிடன் நூலின் இறுதி மூன்று கட்டுரைகள் பேசுகின்றன.

இந்த நூலின் இருவகைப் பண்புகள் கொண்டவை.
ஒன்று ஆய்வுகளைத் தொகுத்துத் தரும் பண்பு. மலையக வரலாறு குறித்த கட்டுரைகள் அந்தப் பண்பு கொண்டன.

பிறிதொன்று நிலவும் வரலாறாக ஆய்வுகள் குறித்த மறு ஆய்வு. வரலாற்றின் பின்னிப் பிணைந்துள்ள, அதிகம் பேசப்படாத விஷயங்களை முக்கியத்துவப்படுத்தி நுணுகிச்சென்று பேசுபவை இவை. சாதியம். இடதுசாரிகள், உன்னதமான போராளிகள் பற்றியது அக்கட்டுரைகள்.

மலையகம் குறித்த பிரச்சினைகளை ஆதி அந்தமாக அலசும் ஒரு நூல் என சரவணனின் கள்ளத்தோணி நுலைச் சொல்வேன்.

நன்றி - ஜீவநதி



யாழ் நூலகத்திற்கு தீ வைத்தவரின் வாக்குமூலம்


ருவன் எம் ஜயதுங்க என்கிற மருத்துவர் எழுதிய கட்டுரையொன்று யாழ் நூலக எரிப்பு பற்றிய மிகவும் முக்கியமான விபரங்களைக் கொண்டு வந்துள்ளது. ருவன் ஜயதுங்க ஒரு உளவியலாளர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. உளவியல் சார்ந்த அவரின் சமீபத்திய சில நூல்கள் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

இலங்கையின் அரசியல் தலைவர்கள், கலை, இலக்கியம், சமூகம் அனைத்தையும் உளவியல் நோக்கில் விசாரணை செய்பவர். “ரோஹன விஜேவீர பற்றிய உளவியல் பகுப்பாய்வு” என்கிற விரிவான கட்டுரையைப் போலவே அவர் 2002 ஆம் ஆண்டு “பிரபாகரன் பற்றிய உளவியல் பகுப்பாய்வு” (ප්‍රභාකරන් සාධකය පිලිබඳ මනෝවිද්‍යාත්මක විශ්ලේෂණයක්) என்கிற தலைப்பிலும் ஒரு தனி நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் யாழ் நூலக எரிப்பு பற்றிய இந்த வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

அவர் எழுதிய விபரங்களை அப்படியே தருகிறேன்.

-என்.சரவணன்

யாழ் நூலகத்தை எரிப்பு சம்பவம் பற்றி பல வருடங்களுக்குப் பிறகு அந்த கும்பலில் இருந்த ஒருவரின் மூலம் எனக்கு தெரியவந்த கதையை இங்கே எழுதுகிறேன். 

1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் பணிபுரிந்த போது இந்த நபரை சந்தித்தேன். அவர் என்னுடைய பராமரிப்பில் இருந்த நோயாளி. ஆனால் உடல் உபாதைகளுக்கு சில மருத்துவ ஆலோசனைகளும், மாற்று மருந்தும் கொடுத்ததால் அவர் என்னுடன் நட்பாக பழகினார். இவர் என்னிடம் சொன்ன கதையை சொல்கிறேன். அதன் உண்மை – பொய் பற்றிய நம்பகத்தன்மையை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தன சமர்ப்பித்த 'உளவுத்துறை அறிக்கை'யின்படி, யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை புலிகள் அமைப்பின் செயல் என்றும். அந்நூலகத்தை சிங்களவர்களே எரித்தார்கள் என்று காட்டுவதன் மூலம் சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது என்கிறார் அவர்.)

அவரின் தொழில் நிலையைப் பற்றி நான் இங்கே குறிப்பிடப் போவதில்லை. அது சில சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும் இந்த உண்மையை ஈழத்தமிழர்கள் தங்களின் பிரச்சார யுக்திகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் தவிர்க்கிறேன். எவ்வாறாயினும் இச்சம்பவம் இடம்பெற்ற போது இந்த நபர் வடக்கில் இருந்தார்.

ஆசியாவிலேயே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையாக்கப்பட்டது. யாழ்.அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இருந்து சென்ற குண்டர்கள் யாழ்ப்பாணத்தில் இந்த அட்டூழியங்களை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் இன நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமையைக் குலைக்கவே யாழ்ப்பாண நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்துக்கு சில அரசியல்வாதிகளும் அனுசரணை வழங்கினர். இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் ‘புலிப் பயங்கரவாதிகள் தமது தாக்குதல் திட்டங்களை வகுக்க இந்த நூலகத்தைத் தான் பயன்படுத்தி வருவதாகவும்; அதனால் அவர்கள் சந்திக்கும் இடத்தை அழிக்க வேண்டும் என்றும்’ கூறப்பட்டது. அத்தோடு, தமிழர் கூட்டணியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், பணியில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயங்கரவாதக் குழுவொன்றினால் கொல்லப்பட்டமையினால், அமைதி சீர்குலைந்திருந்தது.

எரிக்கப்பட்ட பின்னர் யாழ் நூலகத்தின் தோற்றம்

இந்த நபர் தெரிவிக்கையில், அவருடன் இருந்த ஒரு குழுவினர் முதலில் பெற்றோல் மற்றும் மணல் நிரப்பப்பட்ட சாராய போத்தலில் திரியை அழுத்தி, அதில் தீ வைத்து எரித்து நூலகத்திற்குள் வீசியுள்ளனர். பாட்டிலில் சதுரமாக வெட்டப்பட்ட ரப்பர் செருப்பின் பகுதிகளையும் இணைக்கப்பட்டதன் மூலம் தீ தீவிரமாக எரிந்தது. இதற்கிடையில், ஒருவர் தீ... தீ... தீ... என்று சத்தம் போட்டார். அதே சமயம், முன் கூட்டியே தயாரான ஒரு குழுவினர், தீயை அணைக்கத் தண்ணீர் ஊற்றுவது போல்; பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் வாளிகளை தீயில் வீசினர். இதனால், தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நூலகத்தில் இருந்த புத்தகங்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் சிறிது நேரத்தில் யாழ் நூலகம் எரிந்து நாசமானது. இருண்ட வானம்; சிவப்பு நிறமாக மாறியது. தீ அதிக வெப்பத்தை உருவாக்கியதால், தீ வைத்தவர்கள் சிறிது தூரம் சென்று இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். இதற்கிடையில், யாழ்ப்பாண தமிழ் மக்கள் எரிந்துகொண்டிருக்கும் நூலகத்திற்கு அருகில் வந்து தங்கள் புலமை மரபின் ஆன்மா எரிந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட குற்றவாளிகள் மேலும் குதூகலமடைந்தனர். தீவைத்தவர்களில் சிலர் மதுப் போத்தல்களை எடுத்துச் சென்று குடித்தபடி இனவாதத்தைக் கக்குகின்ற வசைகளை வீசிக்கொண்டிருந்தனர். புலிகளுக்கு சவால்விட்டபடி கோசமெழுப்பிக்கொண்டிருந்தார்கள். பின்னர் போலீசார் வந்து மிகவும் மெதுவாக அவர்களைக் கலைத்தனர்.

மிகவும் அரிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருந்த யாழ் நூலகத்தை அழித்தது; கலாச்சார இனப்படுகொலை என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் கூறினார். யாழ்ப்பாண நூலகத்தை அழிக்க இராணுவத்தினரின் ஆதரவு இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், ஜெனரல் வஜிர விஜேரத்ன, கேணல் வைத்திய ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளும் யாழ் நூலகத்தின் வாசகர்களாக இருந்ததால் அவர்களும் அங்கே நிகழ்ந்ததை விசாரணை செய்தனர். இந்த குற்றத்திற்கு குண்டர்களை வழிநடத்திய அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், யாழ் நூலகத்துக்குத் தீ வைத்தவர்கள் குழுவில் இருந்த இந்த நபர், பின்னர் அதைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினார். பதினாறு வயதிற்கு முன்பே அவருடைய ஒரே குழந்தையும் இறந்து விட்டது. இதனால் வாழ்க்கையின் மீது பற்று ஏற்பட்டு மதுவுக்கு அடிமையானார். நான் அவரை கடைசியாக 1995 ஏப்ரலில் சந்தித்தேன். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை.


யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்குண்டா? - என்.சரவணன்

யாழ் நூலக எரிப்புக்கு யூன் 1ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் நிறைவடைக்கின்றன.

யாழ் நூலக எரிப்பில் ரணிலுக்கும் தொடர்புண்டு என தோழர் நந்தன வீரரத்ன இரு நாட்களுக்கு முன்னர் என்னுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டபோது அதிர்ந்தேன். யாழ் நூலக எரிப்பு பற்றி இது வரை வெளிவந்த கட்டுரைகள், நூல்கள் பல என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அவை எவற்றிலும் இப்படி ஒரு விபரத்தைக் கண்டதில்லை. 

யாழ் நூலக எரிப்பு பற்றி பாராளுமன்றத்தில் 1981 யூன் 09, 10 ஆகிய இரண்டு நாட்கள் விவாதங்கள் நடந்திருக்கின்றன. இதுவரை தமிழில் வெளிவந்த இதைப்பற்றிய நூல்களிலோ, கட்டுரைகளிலோ முழுமையான அந்த விவாதங்களை கவனித்து எழுதவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஹன்சாட் பிரதியை கொழும்பு மியூசியத்தில் இருந்து நேற்று எடுத்தேன். 09திகதி விவாதம் முக்கியமான விபரங்களைப் பதிவு செய்கின்றன. யாழ் நூலக எரிப்பின் சூத்திரதாரிகளாக இதுவரை காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியூ ஆகிய பெயர்களே அடிபட்டிருக்கின்றன.

அதே யூன் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்ந்த மாலை அமர்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ.பண்டாரநாயக்க ஓரிடத்தில் குறிப்பிடும் தகவல்கள் முக்கியமானது. காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியூ, பெஸ்டஸ் பெரேரா ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்கவும் தங்கியிருந்தார்கள் என்கிற விபரத்தைக் குறிப்பிடுகிறார். இந்த தகவலை அவர்கள் எவரும் மறுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த ஹன்சார்டின் பக்கமும் இங்கே இணைக்கபட்டிருக்கிறது.

“நேற்று யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின்படியே அது நடந்தது. யாழ்ப்பாணம் நாக விஹாராதிபதி தேரர், பிஷப் மற்றும் பொதுமக்கள் பலரையும் அங்கு சந்தித்தேன். அமைச்சர்களான சிறில்மதிவ், காமினி திஸாநாயக்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மாவட்ட சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் இருந்ததாக மதத் தலைவர்களும் மக்களும் தெரிவித்தனர். தேர்தல் பயிற்சி பெற்ற நூற்றைம்பது ஊழியர்களையும் 4 ஆம் திகதி காலை யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியேற இந்த அமைச்சர்கள் உத்தரவிட்டதையும் அறிந்தோம்"


ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ் நூலக எரிப்புக்கும் உண்மையில் நேரடி தொடர்பு இருந்ததா இல்லையா என்பது எவருக்கும் தெரியாது என்கிற போதும்; இந்த விடயத்தில் ரணிலின் அன்றைய கண்டனங்களையோ, விமர்சனங்களையோ கூட காணக் கிடைப்பதில்லை. ஒப்பீட்டு ரீதியில் சிறில் மெத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோரைப் போல ரணில் இனவாதியாக பேர் பெற்றதில்லை என்பது உண்மையே. ஆனால் யாழ் எரிப்பின் போது சூத்திரதாரிகளுடனான ரணிலின் பிரசன்னம் மேலதிகத் தேடலுக்கு உரியது.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தேனும் வெற்றிபெறுவது என்கிற திட்டத்துடன் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள் தான் இந்த நான்கு அமைச்சர்களும். காணி அபிவிருத்தி மற்றும் மகாவலி அமைச்சர் காமினி திஸாநாயக்க, கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, மீன்பிடி அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா, கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சர் சிரில் மெத்யூ ஆகியோரே அவர்கள்.


யாழ்ப்பாணத்தில் உள்ள கிங்ஸ் ரிசார்ட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய பேயாட்டத்திற்காக குருநாகலில் இருந்து குண்டர்களை யாழ்ப்பாணத்திற்கு பஸ்களில் அழைத்துச் சென்றனர். 39 பஸ்கள் நிரப்பப்பட்டு, அவற்றை போலீசாரின் பந்தோபஸ்துடன் கொண்டுபோய் சேர்த்தனர். மே 31, 1981 கொடுமைகளானது 1983 யூலை படுகொலைகளுக்கான முன்னோட்டமான ஒத்திகை தான்.

அன்று யாழ்ப்பாணத்தில் நூலகமும், யாழ்ப்பாண எம்.பிக்களின் வீடுகளும், கடைகளும், பத்திரிகை அலுவலகங்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் நடந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2022இல் தென்னிலங்கை அமைச்சர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன என்பது தான் வரலாற்றின் அதிசயம். அதுமட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் அவரின் பெறுமதிமிக்க நூலகமும் எரிக்கப்பட்டது. இன்று அந்த நால்வரில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே உயிருடன் இருக்கிறார். பிரதான சூத்திரதாரி காமினி திசாநாயக்க 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத்தாக்குதலில் சிதறிப்போனார்.

"ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்த நாட்டிலிருந்து விரட்டிவிடுவதற்கு வழியுண்டெனில் அதை விரும்புகிறேன். ஆனால் அதை செய்வது எப்படி"
இந்த கொடுமைகளைப் புரிந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தக் காலப்பகுதியில் காமினி திசாநாயக்க அரச ஊடகத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் இப்படித் தான் குறிப்பிட்டார். கீழ்வரும் நேர்காணலில் 5.30 நிமிடத்தில் அந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்.


தகவல் தந்துதவிய கொழும்பு மியூசியம் நூலகர் சந்தரெசிக்கு நன்றிகள்.

“கள்ளத்தோணி” மனம் பெரும் சுமையாகி கனக்கிறது! – தமிழ்க்கவி

கள்ளத்தோணி’ ‘தோட்டக்காட்டார்’ ‘புளிச்சக்கீரை’ ‘கொண்டைகட்டி’ இதெல்லாம் நாங்கள் எம்முடன் பாடசாலையில் படிக்கும் இந்திய வம்சாவழித்தமிழ் சக மாணவர்களை விளிக்கும் சொற்கள். அதன் அர்த்தம் எமக்கு தெரியாவிட்டாலும் எமது பெரியவர்களின் உரையாடல்களிலிருந்து பெற்றவைதான் அந்தச் சொற்கள். பிள்ளைகள் பிறந்தால் அவர்களது தலைமுடியை திருப்பதிக்கோ சிறீரங்கத்துக்கோ நேர்த்தி செய்து வைப்பார்கள். பெண்பிள்ளையானால் போச்சு. ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு அந்த முடியை ஒரடி ஒன்றரையடி நீளத்தில் பின்னி ரிபண் வைத்துக்கட்டி பாடசாலைக்கு விடுவார்கள். ஆறாம் ஆண்டு படிக்கும் பையன் பின்னலுடன் வருவான். அவனை நண்பர்கள் சக மாணவர்கள் கொண்டைகட்டி என்பார்கள். அப்படியும் ஏழை பணக்காரர் என்ற விதத்தில் நான் இரண்டாந்தரப்பிரசைதான். எனக்கு முதல் வாங்கு கிடைக்காது. அதிகமாக கடைசி அல்லது அதற்கு முன் எனவே என்னைப்போலவே இருக்கும் கறுத்த (வெய்யிலில்அலைவதால்) நாகரீக உடையில்லாத ஒழுங்காக எல்லாப்பாடங்களுக்கும் புத்தகம் கொப்பி இல்லாத அந்த குழுவுடன்தான் எனது சகவாசம் இருந்தது. நானும் அப்படித்தான்.

என் சரவணனின் கள்ளத்தோணியை படிக்கும் போதுதான் அதன் ஆழமும் நீளமும் புரிந்தது. பின்னொரு காலத்தில் நம்மவர்களும் கள்ளத்தோணியில் அவர்களுடைய நாட்டுக்குள் போகப்போவதை அப்போது யாரறிவார். அவர்கள் மீதான எமது அணுகுமுறைகளை இப்போதல்ல, அன்றே நான் வெறுப்பும் ஒரு வருத்தமும் கலந்தே பார்த்திருக்கிறேன். எமது கிராமத்தில் சரளமாக தெருவுக்குத்தெரு அவர்கள் கலந்திருந்தார்கள். அவர்களது விவசாய தொழில் நுட்பங்கள் துலாவில் ஓடி இறைத்த எம்மவருக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இதுபற்றி நான் எனது காடுலாவு காதையில் விபரித்துள்ளேன். எமது கிராமத்துக்கு வந்து குடியேறியோர்  பெரும்பாலும் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே மன்னார் யாழ்ப்பாணக்கரைகளில் வந்திறங்கியவர்கள். தமக்கென காணிகளைப் பெற்று வாழ்ந்தவர்களும், நிலமுள்ளவர்களின் நிலங்களை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்தவர்களும் தத்தம் குலத் தொழிலாக செருப்பு தைப்பது வளையல் விற்பது, போன்ற தொழில்களையும் பெருமளவில் துப்பரவுப்பணிகள் செய்வோரும் இருந்தனர். இன்றும் இவர்களுடைய சந்ததியினரே இந்தப்பணியில் உள்ளார்கள்

பெரியாருடைய கொள்கைகளின் வீச்சால் கவரப்படும்வரை எமது வன்னி யாழ்ப்பாணச்சமூகம் இவர்களை தம்முள் ஒருவராக நடத்தியதே இல்லை. கள்ளத்தோணி பல அரசியல் பொருளாதார சமூக நிலைகளின் அடிப்படைகளை கிளறி விட்டாலும், எனக்கு என் சிறு வயதில் அவர்களுடன் வாழ்ந்த காலமும் நாம் அறியாமலே அல்லது எமக்குப் புரியாமலே என் கண்முன் நடந்த அநேக விடயங்கள் நினைவுக்கு வந்து என் தூக்கத்தை கெடுத்தன. இப்போதுமணி இரவு பன்னிரண்டரை தூக்கம் வருவதாயில்லை.

இந்த சம்பவங்களில் எத்தனை அரசியல்வாதிகள் குளிர்காய்ந்துள்ளார்கள். இன்றைய தமிழ்தலைவர்கள் அன்றைய தமிழ் தலைவர்கள் எவராலும் கவனிக்கப்படாத ஒரு இனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பந்தாடப்பட்டதன் பின்னணியில் எவ்வளவு தில்லு முல்லுகள் சுத்துமாத்துகள். ஏவ்வளவு காலமாக மிக கஸ்டப்பட்டு அத்தனை விடயங்களையும் ஆதாரபூர்வமாக கொண்டுவந்திருக்கும் சரவணன் இதை ஒரு ஆன்மீக சுத்தியோடு மலையக மக்களின் மாவீரர்களுக்கு வழங்கியிருக்கிறார். ஏப்போதாவது ஒரு பத்திரிகையின் ஒரு மூலையில் படித்த அந்த செய்திகள் இப்போது வீரியம் பெற்று நிமிர்கின்றன.

“மன்னாருக் கோச்சியேற மனசு சரியில்ல 

 என்மனசுக்குகந்த கண்ணே உன்னை மறக்கமுடியவில்லை.- அடி 

 வாழ வந்த பொண்ணே என்ன மதிமயக்கிய கண்ணே 

 பூமரத்து சிட்டே என் புனுகு சாந்துப் பொட்டே

தேனே ஒன்ன பிரிந்து போக தேம்புதடி எம்மனசு

தேற ஒரு வழியுமில்லடி தேமதுரகிளியே

ஓன்ன அக்கரை இறக்க ஒட்டார் என்ன இக்கரை இறங்க ஒட்டார்

இது இமிக்கிரேசன் சட்டம் அது ஒனக்கும் எனக்கும் நட்டம்”

இது மலையகத்திலிருந்து வன்னிக்கு வந்து எமது தோட்டத்தில் கூலியாக வந்த ஓருவர் பாடிய பாடல்களில் ஒன்று. ஆக அரசாங்கமும் இனத்தில் பிறழ்சாதியினரும் மட்டுமல்ல ஒரே மொழியைப் பேசும் சக தமிழர்களால் வஞ்சிக்கப்பட்ட பலரை எனக்குத் தெரியும். குடியுரிமையற்றவர்களை கைது செய்து நாடுகடத்திய காலத்தில் ஒருநாள் எமது வீட்டின் முன்னே ஒருவரது வாகனத்தரிப்பிடத்தில் சிறு மறைப்படைத்து வாழ்ந்த ஒரு குடும்பம் குத்தகைநிலத்தில் மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள். திடீரென ஒரு மத்தியானப்பொழுது ஒரு பொலீஸ் வாகனம் வந்து அவர்களை குடும்பத்துடன் இழுத்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பறந்தது. அவர்கள் கள்ளக்குடியேற்றக்காறர்களாம்  என்றார்கள். நாங்கள் ஓடிப்போய் அந்த வீட்டை எட்டிப்பார்த்தோம். சாப்பிட்ட பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன. அவர்களை எச்சிக் கைகழுவக்கூட அனுமதிக்கவில்லை. முதன்முதலாக நான் கண்ட குடிப்பெயர்வு. அது என்னைக் கலக்கியது. அதன்பின் இதே போல பல. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்களது செழிப்பான பயிர்களை தமதாக்கிக் கொள்ள முனைந்த நிலச் சொந்தக்காரர்களின் மொட்டைக்கடுதாசிகளே. 

இனக்கலவரங்களின் பட்டியல் நான் அறிந்த வரையில் 1915என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கு முன்னும் நடந்த கலவரங்கள் அதன்காரணங்களோடு மிகத் துல்லியமாக தந்துள்ளது ஆச்சரியம். போராட வலுவற்ற ஒரு குழுமம் போராடியே தீர வேண்டும் என்ற அழுத்தங்களின் பின்னணியில் தன்னெழுச்சியுடன் போராடியது எனற செய்தி இதுவரை இருட்டில் கிடந்துவிட்டது. உண்மையில் கள்ளத்தோணிக்காக சரவணன் பெரும் முயற்சியை முதலீடாக்கியுள்ளார். இதற்காக மலையகம் மடடுமல்ல நாங்களும் அவருக்குத் தலைவணங்குகிறோம். 

மக்களை பங்குபோட்ட இலங்கை இந்திய அரசுகளின் பச்சோந்தித்தனத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கும் பாங்கு அருமை. ஒரு வரலாற்றை எழுதும் போது முன்பின் சாயாமல் தேதிவாரியாக நிர்ணயித்து சம்பவங்களை கோர்த்தெடுத்து வாசிப்பவர் சோர்வடையாமல் தருவது யாருக்கும் அரிதாகும். சரவணனுக்கு அது கைவந்த கலையாக படிந்திருக்கிறது. அவரிடம் தேர்ந்த அரசியற் தெளிவும் மக்களின் மீதான கரிசனமும் இதை யாருக்காக எழுதுகிறாரோ அவர்களுக்கும் புரியும் வண்ணம் இலகுநடையிலும் சொல்லியிருக்கிறார். புத்தகத்தை மூடும்போது மனம் பெரும் சுமையாகி கனக்கிறது.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates