Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

“மொழிப் பயங்கரவாதம்” - என்.சரவணன்

இக்கட்டுரை ஒக்டோபர் 30 அன்று வீரகேசரியுடன் இணைப்பாக வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர்கள் “TheCatamaran” எனும் நிறுவனம். இலங்கையின் பல ஊடகவியலாளர்களை இணைத்து மும்மொழியிலும் சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணரும் இணையத்தளத்தையும் நடாத்தி வருகிறார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரையில் வந்த உரையாடல் பகுதியை மட்டும் அவர்கள் மும்மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். இக்கட்டுரையின் முடிவில் அதன் pdf பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இது வேண்டுமென்றே நிகழவில்லை. இது திட்டமிட்டும் நிகழவில்லை. தமிழ் மொழி அமுலாக்கம் விடயத்தில் நிகழும் பாரபட்சத்தில் திட்டமிட்ட ஒரு அநீதி  ஒரு போக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இனவெறுப்பும், இன மறுப்பும் மொழியை ஆயுதமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. அந்த போக்கு நிருவனமயப்பட்டுள்ளது. எனவே இது பிரச்சினை என்பதை அடக்குவோரும் சரி, அடக்கப்படுவோரும் சரியாக உணரவில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

இலங்கையில் சிங்கள பௌத்த தேசிய வாதம் என்பது நிருவனமயப்பட்டது. அந்த சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு ஒரு அரச நிறுவனம் உண்டு. சிங்கள பௌத்த தேசியவாதம் மக்கள்மயப்பட்டிருக்கிறது. அதற்கென்று ஒரு நிறுவன வடிவம் உண்டு.

இந்தப் புரிதலில் இருந்து தமிழ் மொழி அமுலாக்கத்துக்கான போராட்டதுக்கென்று ஒரு தொடர்ச்சியான வரலாறும் உண்டு என்பதையும் நாமறிவோம். இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்து ஆயுத வடிவம் பெறுவதற்கும் இந்த மொழிப் பிரச்சினையின் வகிபாகம் பாரியது. அப்படி இருந்தும் இந்த நிலைமை நீடித்து வருகின்றதென்றால் இதன் பாரதூரத்தை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை என்கிற முடிவுக்கே வர முடிகிறது. மும்மொழி அமுலாக்கம் குறித்த விடயத்தில் நிலவும் அசமத்துவமும் அது பற்றிய பிரக்ஞையின்மையும் இந்த சிக்கலை வேறொரு வடிவத்துக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு பன்மத, பன்மொழி, பல்லின நாட்டில் மைய பொறிமுறையாகவும், வேலைத்திட்டமாகவும் இருக்கவேண்டியது இவற்றை சமத்துவமாகக் கையாலும் வழிமுறை. ஆனால் இலங்கையில் அது அலட்சியமாகவே கையாளப்படுவதை நிதமும் காண முடிகிறது.

 1. அரச நிறுவனங்களில் தமிழ் தெரிந்தவர்கள் ஊழியர்களாக இல்லை. அல்லது குறைவு. இதன் காரணமாக தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் படும் இன்னல்கள் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.
 1. அரச நிறுவனங்களில் விண்ணப்பப் படிவங்கள், ஆவணங்கள் சிங்களத்தில் மட்டுமே பெரும்பாலான கந்தோர்களில் கிடைக்கின்றன. தமிழர்கள் பலர் சிங்களவர்களின் துணையுடன் தான் நிரப்புகின்றனர். சில இடங்களில் ஆங்கிலத்தில் கிடைக்கும் பட்சத்தில் அவற்றைக் கொண்டு சமாளிக்கின்றனர்.
 1. இலங்கையில் அரச நிறுவனங்களில் வழிகாட்டி ஆவணங்களும், ஏனைய அரச ஆவணங்களும் தமிழில் கிடைப்பது குறைவு.
 1. மூல ஆவணங்கள் எப்போதும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் தான் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப்படுகின்றன. மூல மொழியில் உள்ள சரளம் மொழிபெயர்ப்பில் இருப்பதில்லை என்றும் அது ஒரு அயர்ச்சியையும், சலிப்பையும் ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு அர்த்தமற்று போவதை பல வெளியீடுகளில் கவனிக்க முடிகிறது.
 1. இலங்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் மொழி, சமயம் தவிர்ந்த அனைத்து பாட நூல்களும் சிங்களத்தில் இருந்த மொழிபெயர்க்கப்படுவது தான். ஆக தமிழ் மாணவர்கள் பயன்படுத்தும் பாடநூல்கள் தமிழில் உருவாக்கப்பட்டவை அல்ல மாறாக தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. மொழிபெயர்ப்பில் இருக்கின்ற அசௌகரியங்களை சுமந்துகொண்டு தான் தமிழ் மாணவர்கள் கற்று தேர வேண்டிய கொடுமை நீண்ட காலமாகவே நிலவுகிறது. இந்த நிலைமை சிங்கள மாணவர்களுக்கு இல்லை. அதற்காக மொழிபெயர்ப்பு அனைத்தும் தவறு என்பதல்ல இதன் கருத்து. மொழிபெயர்த்து வரும் போது நிகழும் சரளம் பல இடங்களில் சிக்கலாகவே இருந்து வருகின்றன. இதைவிட கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தமிழ் பக்கங்களுக்கும் சிங்களப் பக்கங்களுக்கும் இடையில் உள்ள அசமத்துவத்தை காணுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
 1. அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் தமது சேவையை மக்களுக்கு இலகுவாக கிடைக்கச்செய்யவென உவுவாக்கியிருக்கிற பல இணையத்தளங்கள் தமிழில் இயங்குவதில்லை. ஒரு ஆய்வுக்காக இலங்கை அரச திணைக்களங்கள், அமைச்சுகள், நிறுவனங்கள் என்பவற்றின் இணையத்தளங்களுக்குச் சென்று ஆராய்ந்திருக்கிறேன். அனைத்து இணையத்தளங்களுமே மொழி விடயத்தில் பாரபட்சத்தையே கொண்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்கு நேரும் அசமத்துவத்துக்கு சிறந்த உதாரணங்களை இங்கு காண முடியும். (ஒரு ஊடகத்தில் இதனை தொடராக எழுத அனுமதியும் கூட கேட்டிருந்தேன்.)

 • இதற்கு உதாரணமாக கல்வி அமைச்சின் இணையத்தளம், பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்கள் கூட சிங்களத்தில் இருப்பவை தமிழில் கிடைப்பதில்லை. அல்லது ஆங்கிலத்திலேயே அந்த இணையத்தளங்களைப் பேணுவதன் மூலம் தப்பி விடுகின்றனர். சில உதாரணங்கள்.
 • இலங்கை ரஜரட்ட மிஹிந்தலை பல்கலைக்கழகம் (http://www.rjt.ac.lk/)

மொழிப் பிரச்சனைகளை கையாள்வதற்காக என்றே அதற்கென்று மொழிகள் அமுலாக்க அமைச்சு உண்டு, அதற்கென்று அரச மொழிகள் திணைக்களம் உண்டு, அரச மொழிகள் ஆணைக்குழு என்று கூட ஒன்று உண்டு ஆனால் இவை அனைத்தும் வெற்றுக் கண் துடைப்பா என்கிற கேள்வி சாதாரண பிரஜைகளுக்கு ஏற்படும் அதே கேள்வி எமக்கும் உண்டு.

அரச நிறுவனங்களில் எத்தனை ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அங்கு இன விகிதாசாரம் எவ்வளவு? மக்கள் தொடர்பு ஊழியர் /அதிகாரி மும்மொழியிலும் உள்ளனரா? 
இதுவரை வெளியான வெளியீடுகள் எத்தனை? அவை மும்மொழியிலும் வெளியாகியுள்ளனவா?

வேறெங்கேயும் செல்வதற்கு முன்னர் ஒரே ஒரு உதாரணத்திற்காக இந்த கட்டுரைக்கென எளிமையான ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டேன்/ அரச மொழிகள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டேன். ஒரே ஒரு தேவை தான் அங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்கள் சிங்களத்தில் கிடைப்பன தமிழில் கிடைக்கின்றனவா. நடந்த உரையாடலை நீங்களே கவனியுங்கள்


தொலைபேசி உரையாடல்

திணைக்களத்துடன் தொடர்புகொள்ளக் கூடிய ஒரேயொரு தொலைபேசி இலக்கம் தான் உண்டு. அந்த இலக்கத்துடன் ஓகஸ்ட் 7,8,9 ஆகிய மூன்று நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். 8 ஆம் திகதி இலங்கை நேரப்படி 3.50க்குத் தான் அழைப்பு கிடைத்தது. மகிழ்ச்சியுடன் கதைத்தேன் மறு முனையிலிருந்து இது “கார்ட் ரூம், அனைத்தும் மூடப்பட்டுவிட்டன நாளை தொடர்பு கொள்ளுங்கள்" என்றது அந்த பெண் காவலாளியின் குரல். சோர்வுடன் வைத்துவிட்டேன்.

பின்னர் 9ஆம் திகதி காலை ஒஸ்லோ நேரம் 8.15 இலிருந்து (இலங்கை நேரப்படி 11.45) ஒஸ்லோவிலிருந்து தொடர்புகொள்ள முயற்சித்தேன் 14வது தடவை தான் அழைப்பு கிடைத்தது அப்போது நேரம் மு.ப10.10.

மறுமுனையில் ஒரு பெண் குரல் நான் என்னைப் பத்திரிகையாளன் என்றும் எனது நிறுவனத்துக்கு தேவையான சில நூல்களை பெற வேண்டியிருக்கிறது என்றும் கூறி திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்த நூல் பட்டியலைப் பார்த்தபடி; அந்த நூல்களைப் பெற வேண்டும் என்று சிங்களத்தில் கூறினேன். "சற்று நேரம் கழித்து மீண்டும் தொலைபேசுவீர்களா" என்று சிங்களத்தில் அந்த பெண் குரல் கூறியது.

நானும் பதிலுக்கு, "தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் நேற்று பின்னேரம் கூறினீர்கள் இன்று தொடர்புகொள்ளுமாறு கூறினீர்கள். காலையிலிருந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து இப்போது தான் தொடர்பு கிடைத்தது எனவே என்னால் திருப்பி வைக்க முடியாது" என்றேன்.

"சரி பொறுங்கள்" எனக் கூறி ஒரு சில நிமிடங்களின் பின்னர் சிங்களத்தில் ஒரு ஆண் குரல் ஒலித்தது. சிங்களத்தில் மட்டுமே காணப்பட்ட நூல் பட்டியலைச் சொல்லி அவற்றின் தமிழ் பதிப்பு தேவையென்றேன். மூன்றாவது நூலைக் கூறும்போதே அவர் மேலதிகமாக தேடித் பார்த்து விட்டுத் தான் பதில் கூற முடியும் என்று உளறத் தொடங்கினார்.

இப்போது நான் "எனக்கு யாராவது தமிழில் பதிலளிக்கக் கூடிய உள்ளார்களா" என்றேன்... "சற்று பொறுங்கள்" என்று கூறி இன்னொருவருக்கு மாற்றினார்.

இந்தத் தடவை தமிழில் ஒரு ஆண் குரல். மீண்டும் என்னை அறிமுகம் செய்துகொண்டு எனது தேவையை கூறினேன். அவர் சற்று கடுமையான தொணியில் எங்களிடம் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று இருக்கிறது உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவராக ஒரு நூலைப் பற்றி அடுக்கிக் கொண்டு சென்றார்.

"ஹலோ... ஹலோ.... பொறுங்கள்... எனது தேவை என்னவென்பதைக் கூட கேட்காமல் உங்கள் தெரிவுகளைக் கூறிக்கொண்டு போகிறீர்களே..." என்று ஆரம்பத்திலிருந்து நடந்ததையும் கூறி இந்த நூல்கள் கிடைக்குமா தமிழில் என்றேன். தான் பரீட்சைப் பிரிவில் இருப்பதாகவும், புதிதாகத் தான் சேர்ந்துள்ளதாகவும் தனக்கு விற்பனை பீடத்தில் இருக்கும் விபரங்கள் தெரியாது என்றார்.

"சரி! யாரால் எனக்கு பதில் கூற முடியும். பதில் கூறக் கூடிய ஒருவருடன் தொடர்பை எற்படுத்துவீர்களா" என்றேன். பொறுங்கள் எனக் கூறி இரண்டு நிமிடத்தில் தமிழில் ஒரு பெண் குரல்.

விற்பனைப் பீடத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என்றார். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கூறி தேவையைக் கூறினேன். விற்பனைப் பீடத்திலுள்ள சிங்கள ஊழியரால் எனக்கு பதில் தர முடியவில்லை எனவே உங்களால் பதில் தர முடியாவிட்டால் பதிலளிக்கக் கூடிய ஒருவரை தொடர்புபடுத்துமாறு மீண்டும் கேட்டேன். "உங்களுடன் கதைத்தவரின் பெயர் என்ன" என்று என்னிடம் கேட்டார். "எனக்கு எப்படி தெரியும், எந்த காரியலாயத்தில் தனது பெயரைச் சொல்லி பதிலளிக்கிறார்கள். நான் தான் எனது பெயரையும் கூறி பத்திரிகையாளர் என்று அறிமுகமும் செய்துகொண்டு தேவையைக் கூறினேன்." என்றேன்.

அவரிடம் நான் பெயரைக் கேட்டிருக்க வேண்டும் என்றார் அந்தப் பெண். "சரி நீங்கள் இவ்வளவு நேரம் கதைக்கிறீர்கள் உங்களுக்கு எனது பெயரைக் கூறினேன்... உங்கள் பெயரை நீங்கள் கூறினீர்களா? அப்படி எல்லாம் காரியாலயங்களில் பெயர்களைக் கூறுவதில்லையே இது கொமன் சென்ஸ் அல்லவா" என்றேன்.

கூடவே "இந்த விடயத்தை சிக்கலாக்க எனக்கு விருப்பமில்லை, விடயம் மிகவும் எளிமையானது நான் உங்கள் பட்டியலிலுள்ள நூல்களைக் கூறுகிறேன் அவற்றின் தமிழ் பதிப்பு உண்டா இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள்" என்றேன்.

"உங்களால் சிங்களத்தில் கதைக்க முடியுமா|" என்று வினவினார் அவர். "என்னால் முடியும் ஆனால் பதில் தந்த ஊழியர் தமிழில் அவை இருக்கிறதா என்பதை அறிந்து கூறத் தடுமாறுகிறார்." என்றேன்.

"சரி உங்களுக்கு தமிழில் உரையாட வேண்டுமா சிங்களத்தில் உரையாட வேண்டுமா" என்று அபத்தமாக மீண்டும் வினவினார். நானும் "சரி... என் கேள்விக்கு தமிழில் பதிளிக்கக் கூடிய ஒருவரை ஒழுங்கு செய்யுங்கள்" என்றேன். சரி என்று கூறி அவர் தொலைபேசி அழைப்பை மீண்டும் இன்னொருவருக்கு மாற்றினார்.

மீண்டும் அதே சிங்களப் பெண் காவலாளியின் குரல்.

"ஆங்... அந்த தமிழ் நூல் பற்றி கதைத்தவர் அல்லவா பொறுங்கள்" என்று கூறி இன்னொரு அழைப்புக்கு மாற்றினார் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் அதே சிங்கள ஆண் குரல் விற்பனை பீடத்திலிருந்து... களைத்துப் போயிருந்தேன். மீண்டும் முதலில் இருந்தா.... ஐயோ!

சரி அவரிடம் திரும்பவும் சிங்களத்தில் அதே கேள்வி. இம்முறை நான் “திணைக்களம் வெளியிட்டதாக கூறும் பட்டியலில் உள்ள சிங்கள நூல்களைக் கூறுகிறேன் அவை தமிழில் உள்ளனவா என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறுங்கள் போதும்" என்றேன். சரி மாத்தையா என்றவர். நான் கேட்ட அத்தனைக்கும்...

“சின்ஹலெங் தியனவா எஹேத் தெமெலென் நே” (சிங்களத்தில் இருக்கிறது ஆனால் தமிழிலில் இல்லை) என்று நான் கேட்ட அத்தனை நூல்களுக்கும் பதிலாக வந்தது.இவை இப்போது கையிருப்பில் உள்ள சிங்கள நூல்கள் மட்டுமே. (இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருப்பவை) ஏற்கெனவே வெளியிடப்பட்டு கையிருப்பில் தற்போது இல்லாத தமிழில் மொழிபெயர்க்கப்படாத சிங்கள நூல்கள் ஏராளம். அதனை நான் நேரில் கடந்த வருடம் அந்த விற்பனை நிலையத்துக்கு சென்று பட்டியலைப் பார்த்திருக்கிறேன்.

மேலும் அவர்கள் இனி இந்த நூல்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவருமா? எப்போது வெளிவரும் என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்கள். ஏற்கெனவே வெளியான நூல்கள் பல வருடங்களுக்கு முன்னர் வெளியானவை என்பதும் குறிப்பிடத்தகது. அதாவது இத்தனை வருட காலமாக அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீடிக்கப்பட்டு வருவதும் கவனிக்கத்தகது. பல வருட காலமாக கலைசொற்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணியை அரச வெளியீட்டுத் திணைக்களமே மேற்கொண்டு வந்தது. அப்படி வெளியிடப்பட்டவையும் கூட பெரும்பாலும் சிங்களத்தில் வெளியிடப்பட்ட தலைப்புகளின் அளவுக்கு தமிழில் வெளியிடப்படவில்லை என்பது எனக்கு அனுபவபூர்வமாக தெரியும்.

மொழிப் பிரக்ஞை

அறிவிப்புப் பலகை / பெயர்ப்பலகை விடயத்தில் தனியார் மேற்கொள்ளும் பாரபட்சங்களையிட்டு நம்மால் முறைப்பாடுகளையோ ஆதங்கத்தையோ ஆத்திரத்தையோ வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் அரசு அப்படியல்ல அதற்கென்று பொறுப்புண்டு. சிங்களத்தை தமிழர்கள் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் இல்லையெனில் எதிர்காலமில்லை என்கிற கட்டாய சட்டம் மறைமுகமாக தமிழர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அளவுக்கு சிங்களம் மொழிபேசுவோருக்கு இல்லையென்பது எவரும் மறுக்க உண்மை. இலங்கையில் தமிழ் தெரிந்த சிங்களவர்களை விட சிங்களம் தெரிந்த தமிழர்களே அதிகம் என்பது இதற்கு ஒரு நிதர்சனம்.

எனது அனுபவத்தில் 25 வருடங்களுக்கு முன்னர் எனது சிங்கள நண்பர்கள் அதிலும் இடது சாரித் தோழர்கள் பலர் என்னோடு உரையாடும் போதெல்லாம், தமிழ் தெரியாததையிட்டு வேதனைப்பட்டு, தமது ஆதங்கத்தையும் மன்னிப்பையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்களின் நேர்மையையிட்டு புலங்காகிதம் அடைந்திருக்கிறேன். சிலவேளைகளில் கண்கலங்கியுமிருக்கின்றேன். ஆனால் இந்த 25 வருடங்களின் பின்னரும் அவர்கள் அதே வசனத்தைப் பேசும் போது உடைந்து போய்விட்டேன். அவர்களால் இன்னமும் ஒரு வசனத்தைக் கூட பேச முடியவில்லை. ஒரு தமிழ் வசனத்தைக் கூட புரிந்துகொள்ளக் கூட முடியவில்லை. ஆக பிரக்ஞையின் தரம் உண்மையாகவே நோந்துகொள்பவர்களிடமும் கூட இவ்வளவு தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

எனது 18 வது வயதில் நான் பத்திரிகையாளனாக ஆன போது எனக்கு சிங்களத்தில் ஒரு வசனத்தையும் முழுமையாக சரியாக பேச வராது. சிங்கள அரிச்சுவடி மாத்திரம் கற்றுக்கொண்டிருந்தேன். இனப்பிரச்சினை குறித்து எழுத வேண்டுமென்றால், இன சகோதரத்துவதுக்காக இயங்க வேண்டுமென்றால் சக சகோதர மொழியை அறியாமல் சாத்தியமில்லை என்று உணர்ந்து சிங்களம் கற்று மொழிபெயர்க்கத் தொடங்கினேன். இரு வருடத்தில் தேர்ந்த மொழிபெயர்ப்பாளனாக ஆகி பல நிறுவனங்களின் நூல்களையும், சஞ்சிகைகளையும், கட்டுரைகளையும் கூட்டங்களையும் கூட மொழிபெயர்க்க ஆரம்பித்து விட்டேன். இன்றும் எனது ஆய்வுகளுக்கு மூல நூல்களாக சிங்கள நூல்களை சரளமாக பயன்படுத்தி வருகிறேன். எனது சொந்த நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்களை விட சிங்கள நூல்களே அதிகமாக உள்ளன.

ஒரு தமிழ் பேசும் ஆய்வாளனாக (இத்தனைக்கும் சிங்களம் தெரிந்திருந்தும்) ஆய்வுத்துறை மாணவர்களும், ஊடகவியலாளர்களும் தேசிய சுவடிக் கூடத்திலும், மியூசியம் நூலகத்திலும், தேசிய நூலக சேவை சபை நூலகத்திலும் எதிர்கொள்ளும் சிக்கல்களை பல வருட காலமாக நானும் சகித்துக் கொண்டு அனுபவித்திருக்கிறேன். பல தமிழர்களுக்கு அவை எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றன. தமிழ் ஆய்வுத்துறை பலவீனமாகிப் போனமைக்கு இந்த அசமத்துவ இடைவெளி ஒரு முக்கிய காரணம் என்பதை நான் அறிவேன். இது குறித்து தனியாக விரிவான கட்டுரையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்.“தமிழ் மொழியை அமுல் படுத்து” என்கிற முகநூல் பக்கத்தை 2015 செப்டம்பர் 1ஆம் திகதியன்று நான் ஆரம்பித்தேன். எமது சுலோகமாக “பதியுங்கள், பகிருங்கள், கண்டியுங்கள்” என்று தலைப்பிலிட்டோம். முதற் பதிவில் இப்படி எழுதினோம்.

“இந்த மொழி அசமத்துவத்தை அம்பலப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வூட்டுவதற்காகவும், அழுத்தம் பிரயோகிப்பதற்காவும் உருவாக்கப்பட்ட குழு இது. இந்த பாரபட்சம் குறித்து எங்கெல்லாம் காண்கிறீர்களோ அவற்றை இங்கு ஒருசேர குவிப்போம். பதிவு செய்வோம். சுட்டிக்காட்டுவோம். கண்டிப்போம், சரிசெய்வோம்”

அன்றாடம் இந்த மொழிப் பிழையை நாம் கண்டு கடுப்பேறியிருந்தாலும் சகிப்புடன் கடந்துசெல்லும் சக பிரஜையாகவே இருந்து வந்தேன். 2015ஆம் ஆண்டு வசந்தகால விடுமுறைக்காக நான் இலங்கை வந்திருந்தபோது கொழும்பு கச்சேரிக்கு ஒரு தேவையின் நிமித்தம் சென்றிருந்தேன். அங்கு வாசலில் ஒரு முறைப்பாட்டு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தவறு என்னை திடுக்கிடச் செய்திருந்தது. அதனை இரகசியமாக கைப்பேசியால் படம் எடுத்துக் கொண்டேன். அதில் இப்படி இருந்தது


“සේවක දුක්ගැනවිලි - ஊழியர்களின் மனஅழுத்தம் – Employee grievances”

மன அழுத்தம் என்பது depresion என்கிற அர்த்தமுடையது. இதை மொழிபெயர்த்தவர் யார்? உண்மையில் தெரிந்தே தான் செய்தாரா? இதுவரை எவரும் கவனிக்கவில்லையா? இந்த முறைப்பாட்டு பேட்டியின் மீது முறைப்பாடு கொடுக்கவில்லையா? அல்லது கண்டு கொள்ளவில்லையா? அல்லது கண்டுகொண்டும் ஏன் நமகிந்த வம்பு என்று கடந்து சென்றார்களா? இதன் அர்த்தத்தையே தவறாக விளங்கிக் கொள்ளும்போது எப்படி முறைப்பாடுகள் கிடைக்கும்? இந்த கேள்விகளின் விளைவு தான் இந்த முகநூல் பக்கத்தை ஆரம்பிக்கச் செய்தது.

சகல தளங்களிலும் நிலவும் மொழி அமுலாக்கம் பற்றிய சிக்கல்களையும், பாரபட்சங்களையும் அசமத்துவங்களையும் வெளிப்படுத்தி அதற்கான தீர்வு கோருவதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் தான் ஆரம்பித்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக அது பெயர்ப்பலகை / அறிவிப்புப் பலகை விவகாரத்துடன் சுருங்கி விட்டது.

ஆனாலும் கணிசமான பலனைத் தந்தது. மொழிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தளத்தை தாம் ஒரு முறைப்பாட்டுத் தளமாக கருதி கவனித்து வருவதாக எனக்கு அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் எந்தளவு அக்கறை எடுத்தார்கள் என்பது கேள்விக்குரியதே.

ஆயிரக்கணக்கானோர் எம்முடன் இணைந்துகொண்டார்கள். பலர் நாம் இடும் செய்திகளையும் படங்களையும் இன்னும் பலருக்கு பகிர்ந்து பல்லாயிரக்கணக்கானோரிடம் கொண்டுசேர்த்தார்கள். இன்னும் பலர் தாம் காணும் மொழிப் பிழைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு சிலர் தாம் அமைச்சரின் நண்பர்கள் என்றும் தாம் பகிர்ந்தால் அது சிக்கலாகிவிடும் எனவே நீங்களே உங்கள் பக்கத்தில் பகிருங்கள் என்று கோரி உட்பெட்டியில் ஆதாரங்களை தந்து உதவினார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட பதாகைகளின் படங்களைப் பகிர்ந்துள்ளோம். அந்த புகைப்படத் தொகுப்புக்கு “மொழிப் பயங்கரவாதம்” என்றே பெயரிட்டோம்.

ஆக மொத்தத்தில் இவை எண்ணிக்கை அளவில் மிகப் பெரிய அளவில் காணும் போது தான் இதன் பாரதூரத்தத்தை தொகுத்து விளங்கிக் கொள்ள முடிறது என்றார்கள்.

இலங்கையில் பல இடங்களில் மொழி பெயர்ப்பு கிடைப்பதே முதல் பிரச்சினை. அப்படி கிடைப்பதும் கூட பிழையில்லாமல் கிடைப்பது அரிது. புரிந்துகொள்ளும்படி கிடைப்பது அரிது என்பதே நிலை.

பாதை வழிகாட்டிப் பதாகைகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள வழிகாட்டல், பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கில்லை. இட வசதி கருதி ஒரு சில உதாரணங்களை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறேன். மேலதிகமானவற்றை முகநூல் பக்கத்தில் காணலாம்.

கண்டிக்கும் அம்பாறைக்குமிடையில் போக்குவரத்தில் உள்ள அரச போக்குவரத்து பஸ் ஒன்றின் பதாகையில் நீண்டகாலமாக “குண்டி” என்றே இடம்பெற்றிருக்கிறது. எதிமலே என்கிற ஒரு பஸ் பதாகையில் “அலர்ஜி” என்று தமிழில் இடப்பட்டதன் அர்த்தமே தெரியவில்லை.

தாய்மார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அறிவித்தலில் நாயமார்களுக்கு என்று இடப்பட்டிருக்கிறது.

நிகவெரட்டிய ஆதார வைத்திய சாலை பதாகையில் “சோமகுமாரி தென்னகோன் நினைவு” (Somakumari Thennakoon Memorial) என்பதற்கு பதிலாக “சோமகுமாரி தென்னகோன் அகால மரணம்” என்கிற பதாகை பல வருடங்களாக அங்கு இருக்கிறது.

மினிபே பிரதேச சபை காரியாலயத்தின் வரவேற்பு மேசையில் “வேசை பெருனர்களான உங்களுக்காக” என்று இருக்கிறது. “சேவை” என்று அது தொடங்கியிருக்கவேண்டும்.

வயம்ப பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியொன்றில் அழகான மங்கையர்களைக் கொண்டு காண்பிக்கப்பட்ட மும்மொழி பதாகையில் உலகில் எவராலும் வாசிக்க முடியாத எழுத்துக்களின் கோர்வை தமிழின் பெயரால் இருந்தது.

இதுவெல்லாம் கூட சகித்தாலும் இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அரச கரும மொழிகள் அமைச்சே விட்ட பிழைகளை பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறோம். அதில் ஒன்று


“Sri Lankan” our identity Diversity, our strength” என்பது “இலங்கையர்” எம் அடையாளம் பன்மைத்ஆவம் எம் சக்தி” என்று ஒரு பதாகையை வெளியிட்டிருந்தார்கள். பன்மைத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் ஒரு அசிங்கமான காரியமல்லவா. அதுவும் சம்பந்தப்பட்ட அமைச்சே இதைச் செய்யலாமா?

கடந்த ஜூலை 18 அன்று அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்ட “People of Sri Lanka” என்கிற நூலை அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது அமைச்சின் மூலம் வெளியிட்டு தேசிய ஐக்கியத்துக்காக வெளியிட்டதாக குறிப்பிட்டார். ஆனால் அந்த நூல் ஆங்கிலத்தில் மட்டும் தான் வெளியிடப்பட்டது. ஏனைய மொழிகளில் பின்னர் வெளியிடப்படும் என்று வழமை போல தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிங்களத்திலும் தமிழிலும் வெளியிடுவதை நாசூக்காக, வசதியாக தப்பிச் செல்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு விட்டு கடந்து விடுவதை கவனித்திருக்கிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சரே இப்படி செய்யலாமா. வேலியே பயிரை மேயலாமா என்கிற கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது.


பல இடங்களின் பெயர்கள் திடீர் திடீரென்று தமிழ் பெயர்கள் சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் மாற்றப்பட்டு புழக்கத்துக்கு விடப்படுகின்றன. உதாரணத்திற்கு ஆண்டாண்டு காலமாக கொட்டாஞ்சேனை என்றே தமிழில் அழைக்கப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ் பதாகைகளில் “கொட்டஹென” என்று சிங்களத்தில் மாற்றப்பட்டுவிட்டன. மட்டக்குளி என்பது தமிழில் இப்போது “மட்டக்குளிய” என்பது, நீர்கொழும்பை “மீகமுவ” என்று தமிழும் காணப்படும் பதாகைகளை காண முடிகிறது. கொழும்பு புறக்கோட்டை பொதுச் சந்தையில் நான் கண்டது “Floating Market” என்பதற்கு சிங்களத்தில் கூட சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் “ப்லோடிங் மார்கெட்” என்று தான் ஒலி பெயர்க்கப்பட்டுள்ளது.


ஏன் இலங்கையின் ஆட்சியதிகார பீடமாகவும், சட்டமியற்றும் சபையாகவும் மக்கள் பிரதிநிதிகளின் கூடாரமாகவும் இருக்கும் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் வழிகாட்டும் பதாகை ஆங்கிலத்தில் “Parliament Road”  என்று இருக்கிறது அதன் சிங்கள மொழிபெயர்ப்பு கூட சரியாகத்தான் இருக்கிறது தமிழில் “பாராளுமன்றப் பாதை” என்று இடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் “பாலிமெண்ட் வீதி” என்று தான் இருக்கிறது. இதக் கடந்து தான் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஏன்  அரசகரும மொழிகள் அமைச்சரும் கூட நிதமும் பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகா வேண்டும். இது அனைத்தையும் சிங்களமயமாக்கும் போக்கின் ஒரு வடிவமாகவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.  சக சிங்கள சகோதர்களுக்கு அவர்களின் சக தமிழ் சகோதர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை விளங்கப்படுத்த வேண்டும்

இவை எல்லாம் சம்பவங்கள் அல்ல. பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக நிகழும் போக்கு. இதனை சரி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதையிட்டு நம் அரச அமைப்புமுறை வெட்கப்படவேண்டும்.

ஒரு அமைச்சு இருந்தும், திணைக்களம் இருந்தும், அதற்கு மேல் தனியான ஆணைக்குழு இருந்தும், சமீபத்தில் நல்லிணக்க ஆணைக்குழு இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை செய்திருந்தும், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்தும், பல மில்லியன்கள் நிதி ஒதுக்கிட்டிருந்தும், இந்தப பிரச்சினையை தீர்ப்பதற்காக பல மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிதியுதவிகளாக கிடைத்திருந்தும் இந்த போக்கும் அசமத்துவமும் நீடிப்பதையிட்டு வெட்கப்படத்தான் வேண்டும்.


20 ஆம் நூற்றண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி - சுப்பிரமணியம் சந்திரபோஸ்


யாழ்ப்பாணத்தில் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கல்வியைப் பெறுவதற்காக அனுபவித்த கொடுமைகளையும், பட்ட பாடுகளையும், பெற்ற அனுபவங்களையும், செய்த போராட்டங்களையும் பற்றிய அருமையான தொகுப்பு இது. எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் மகன் எஸ்.சந்திரபோஸ் 1989 இல் வெளியிட்ட “தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி” என்கிற நூலில் வெளியான ஒரு அத்தியாயம் இது.

இலங்கையின் கல்வி வரலாற்றில் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் பகுதிகளில் இடம்பெறுகின்ற புத்தெழுச்சி பெற்ற தேசிய உணர்வுக் கல்வியில் தாக்கம், கட்டாயக் கல்வி இயக்கம் கல்விக்கான வசதிகளை அதிகரித்தமை ஆங்கிலத்திற்குப் பதிலாக தேசிய மொழியே போதனா மொழிகளாக வேண்டுமென்ற கோரிக்கைகளும் நிகழ்காலக் கல்வி நிலைமைகள் பற்றியதுமான அம்சங்களும் இன்றைய கல்விமுறைக்கு பல்வேறு கல்வியமைச்சர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட முயற் சிகளும் இப்பகுதிகளுள் அடங்குகின்றன. இப்பகுதிகளுக் கிடையேதான் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிகளும், அதற்காக நடைபெற்ற போராட்டங்களும் இடம் பெறுகின்றன.

நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்புக்களில் பண் ஆன அடி மைகளாக, விவசாயக் குடிமைகளாக இருந்த நிலைமைகள் தமிழர் சமுதாயத்திலும் காணப்பட்டது. இச்சமுதாய அமைப்பு கட்டிக் காக்கப்பட்ட காலகட்டங்களில் தாழ்ந்தோர் கல்வி பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. இதனை நாம் முன்னர் பிராமண கல்வி மரபில் அவதானித்தோம். தமிழர்கள் பரவி வாழ்ந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் இந்த நிலை கள் காணப்பட்டன. தமிழருடைய பழக்க வழக்கங்கள் வைதீகக் கொள்கையின் அடிப்படையிலும், சாதிப்பிரிவின் அடிப்படையிலும் எழுத்ததாகக் காணப்பட்டது. சமூகத்தில் ஒரு சிலர் தாழ்ந்தோர் ஒரு சிலர் உயர்ந்தோர் என்பதை முன்னுள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையும், இந்து சமய முறைப்படி பிறவியிலே உயர்ந்தோர், இழிந்தோர் எனப் சாதிபாகுபாடு உண்டென்று மக்களே நம்பவைத்து தாழ்த்தவர்கள் என்று கூறப்பட்டோரின் அறியாமையைப் பயன்படுத்தித் தொடர்ந்தும் அடிமைகளாகவும், அறிவிலிகளாகவும் வைத்திருந்த நிலையும் காணப்பட்டது. இதுவே சமூக நீதி என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட வர்களும் தங்கள் அறியாமையினாலும், தங்கள் பலத்தைப் புரியாமையினாலும், சமயவாதிகள் கற்பித்த கரும வினை என்ற தன்மைகளை நம்பியதனுலும், உயர்சாதியினருக்கு சேவகம் செய்வதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டோர்கள் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தாாகள். இன்றும் இப்படியான மனப்பாங்குடைய ஒரு சிலர் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலை தமிழ்ச் சமுதாயத்தில் இலங்கையில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களிலும் தொடர்ந்தது போர்த்துக்கேயரினாலும், ஒல்லாந்தர்களினாலும், இலங்கை பின் கல்வி வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப் ட், போதிலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு எந்த விதமான கல்வி விமோசனமும் கிடைத்திருக்க முடியாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், இலங்கையில் சுதந்திர அரசு தோன்றியதன் பின்பும் இம்மக்களின் கல்வி வளர்ச்சியில் பல இடர்ப்பாடுகளும் தடைகளும், சொல்லொனாத் துன்பங்களும் இருந்தபோது இதற்கு முந்திய காலகட்டங்களில் இவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டிருக்குமென்றோ அல்லது இவர்களுக்குத்தான் கல்வி கற்பதில் ஆர்வம் இருந்திருக்குமென்றோ கூறுவதற்கில்லே.
யாழ்ப்பாணம் உடுவிலில் தொடங்கப்பட்ட மிஷனரி தேவாலயம்
கைத்தொழிற் புரட்சியின் பயனாகவும், சமதர்ம தத்துவங்களின் ஏழுச்சியினாலும், ஜனநாயக ஆட்சியின் மலர்ச்சியினாலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கத்தினாலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விளிப்பினாலும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கால்கோள் இடப்பட்டது, வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்று நாடு திரும்பிய சி. வை. தாமோதரம்பிள்ளை, ஹரோவிட், வைமன், போர்ட் துரைசாமி, கிங்ஸ்பரி போதகர் ஆகிய உயர்சாதி மக்கள் தம்முடைய சமையல் வேலை தோட்ட வேலை, ஆயா வேலைகளுக்காக அாழ்த்தப்பட்ட தமிழர்கள் சிலரை அமர்த்திக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதகுழுவினர் களைச் சேர்ந்த சில பாடசாலை நிர்வாகிகளுக்கும் மேற்கூறிய விதமான சேவகங்கள் செய்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் பிள்ளைகளுக்கு தங்கள் மத குழு பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு நட்வடிக்கைகள் எடுக்கும்படி ஆலோசனே கூறினர். இவ்வாறன வாய்ப்பினை முதன் முதல் 1803ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்த திரு. யோவல் போலும், 1903ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்த திரு. எஸ். ஆர், ஜேக்கப்பும், இதே காலத்தில் பிறந்த ஏ. பி. இராஜேந் திரா என்போரும் பெற்றனர். இவர்களின் கல்விக்கு தெல்லிப்பளை செமினரியும், வட்டுக்கோட்டை செமினரியும் யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியும் உறுதுணையாய் இருந்தன. திரு. யோவல் போல் அவர்கள் தாமே தமிழில் ஆரம்பக்கல்வி கற்று தெல்லிப்பளை செமினரியில் ஆசிரியருக் கான பயிற்சியினைப் பெற்றார். ஆயினும் இவர் ஆசிரியராகப் பணிபுரியாது சிற்பக்கலையில் சிறந்து விளங்கினார். சாமுவேல் கிறின்ஸ்வி என்ற ஆங்கிலேயரிடம் ஆங்கிலம் கற்றுத் தேறினர். திரு. எஸ். ஆர். ஜேக்கப் அவர்கள் யாழ்ப்பான கல்லூரியில் பல் வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் முதன் முதல் சேர்த்து படிக்கும் வாய்ப்புப் பெற்ற தாழ்த்தப்பட்ட தமிழ்மகனுவார். இவர் இக்கல்லூரியில் சேர்ந்த பொழுது சாதி வெறியர்கள் தம் பிள்ளைகளே அக் அல்லூரிக்கு அனுப்ப மாட்டோமென் பிடிவாதம் செய்தனர். அப்போது அங்கு அதிபராகக் கடமையாற்றிய பிக்னல் ஆங்கிலப் பாதிரியார் “யார்தான் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் ஜேக்கப் ஒருவன் கல்லூரியில் இருக்கும் வரை இக்கல்லூரியை தொடர்ந்து நடத்துவேன்” எனக் கூறி துணிவுடன் செயற்பட்டார்.

திரு. ஏ. பி. இராஜேந்திரா அவர்கள் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியில் பெற்று 1906ம் ஆண்டில் கொழும்புக்குச் சென்று கல்வி கற்று கல்வியமைச்சில் லிகிதராகவும், பிரதம லிகிதராகவும் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும், பரீட்சகராகவும், தமிழ்ப்பாட புத்தக சபையின் காரியதரிசியாகவும் கல்விப் பகுதியினரால் வெளியிடப்பட்ட பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். மகா யுத்த காலத்தில் உதவி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்து சிறப்பாக சேவையாற்றிமையால் 1941ல் 'முதலியார்" என்னும் பட்டத்தையும், பின்னர் எம். பி. ஒ. பட்டத்தையும் அரசாங்கம் இவருக்களித்து இவரை கௌரவித்தது மேற்கூறப்பட்ட மூவரது வரலாறும் கல்வி வளர்ச்சியும் தனி மனிதன் கல்வி வரலாறாவோ கொள்வதற்கில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வி வளர்ச்சியின் தொடக்கதின் வரலாறாகவே கொள்ள வேண்டும். இன்னல்களுக்கு மத்தியிலிருந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஸ்தாபன வடிவம் கொடுத்தவர் திரு. யோவேல் போலாகும். இவரால் “ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம்” உதயமாயிற்று. இவரோடு இணைந்து திரு எஸ். ஆர், ஜேக்கப் திரு, ஏ. பி. இராஜேந்திர ஆகியோர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடினர். இச்சங்கம் மூலம் அரசியல் தலைவரின் தொடர்பை ஏற்படுத்தி டொனமூர் கமிஷன், சோல்பரி கமிஷன் போன்ற அரச விசாரணைக் குழுக்கள் முன் தோன்றி தம் மக்களின் இடர்பாடுகளே இடித்துரைத்தனர். கல்விக் கொள்கையிலே கறைபடிந்திருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். அத்துடன் கல்வி, பொருளாதாரம் சமத்துவம் போன்ற உரிமைகளுக்காகவும் வாதிட்டனர். திரு. போல் அவர்கள் சர்வசன வாக்குரிமை படித்தவர்களுக்கு மட்டுத்தான் வழங்கப்பட வேண்டும் என்று சேர், பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தலைவர்களின் கூற்றினை எதிர்த்து சர்வசன வாக்குரிமை சகலருக்கும் வேண்டும் என்று வாதிட்டார். சாதிக் கொடுமைகள் பாடசாலைகளில் தீவிரமாக தலைவிரித்தாடியபோது இவர் எடுத்த நடவடிக்கைககளே சகல பாடசாலைகளிலும் சாதி, பேதம் பாராட்டக் கூடாதென்று சட்டம் ஏற்பட வழிவகுத்தது. அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக் குரலை எழுப்புவதற்காக “ஜனதர்ம போதினி' எனும் பத்திரிக்கையை வாராந்தம் வெளியிட்டு வந்தார்.
அச்சுவேலியில் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட மிஷனரி தேவாலயம்
இக் காலகட்டத்தில் ஒரே பார்வையில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுடைய கல்வி நிலையினே யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதினையும் நோக்கும்போது தாழ்த்தப்பட்ட தமிழர்களுள் ஓரளவு பொருளாதார வசதியுடையவர்களாக இருந்தவர்களும், கிறிஸ்தவர்களாக மதமாற்றம் பெற்றவர்களும், கிறிஸ்தவ பாதிரிமாரின் அனுசரணையைப் பெற்றவர்களும் கல்வி வசதிபெற வாய்ப்பளிக்கப்பட்டது. இவ் வாய்ப்புக்களும் மிஷனரிமார்களின் பாடசாலைகளிலேயே வழங்கப்பட்டன. பெரும்பாலும் கிராமப்புற மிஷனரிப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களேச் சேர்த்துக்கொண்ட போதிலுங்கூட சம ஆசன வசதிகள் அளிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பிள்ளைகள் நிலத்தில் உட்கார்ந்தோ, நின்றோ அல்லது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியாசனங்களிலிருந்தோ கற்கவேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வேறுபாடுகள் மிஷனரியின் கொள்கையல்ல. ஆயினும் அப்பாடசாலைகளில் கற்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கொள்கைகளாகவும் அப்பாடசாலை அமைந்துள்ள அவ்வூர் உயர்சாதி மக்களின் அச்சுறுத்ததலாகவும் இருந்தன. சில கிராமங்களில் தாழ்த்தப்பட்ட தமிழர்களே கூடுதலாக வசித்த பகுதிகளில் அவர்களை கிறிஸ்தவர்களாக்குவதற்காக அவர்களுக்கெனவே மிஷனரிப் பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வதிரி வடக்கு மெதடிஸ்த மிஷன் பாடசாலை, காரைதீவு மெதடிஸ்த மிஷன் பாடசாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம், கரையோரப் பகுதிகளில் அமைந்த மீனவ சமூகத்தினால் நிர்வகிக்கப்பட்ட மிஷனரிப் பாடசாலைகள் ஓரளவு, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கான கல்வியில் சம சந்தர்ப்பத்தினை அளித்தனர். இவற்றுள் சென். பெற்றிக்ஸ் கல்லுரரி யாழ்ப்பாணம். தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலை, ஆனக்கோட்டை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம் விவேகமுள்ள பிள்ளைகளை கிறிஸ்துவத்தில் சேர்த்து மதத்தைப் பரப்புவதற்கு மிஷனரிமார்கள் முயற்சி செய்தததனால் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வி கற்ற பிள்ளைகளில் விவேகமானோரை உயர் கல்விக்கான வாய்ப்பளிக்க மிஷனரி முயற்சி செய்தது. இக்காலக்கட்டதில் சைவ பரிபாலன சபையின் கீழ் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆயினும் இவை இந்து சமயப் பாரம்பரியம், தேசவழமை என்ற கோட்பாடுகளை காரணம் காட்டி அப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு கல்வியளிக்க இடந்தரவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கல்வித்துறையில் கூடிய முன்னேற்றம் உடைய மாகாணமாக இருக்கவில்லை. பண்டிதர் மயில்வாகனார் இந்தியாவிலுள்ள இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவு பூண்டு விபுலானந்த அடிகளார் எனும் பெயரினைத் தாங்கி கிழக்கு மாகாணத்தில் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளை ஆரம்பித்தார்.

1929இல் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளில் அனைவரையும் பாகுபாடின்றி சேர்த்துக்கொண்டனர், கிழக்கு மாகாணத்தில் கல்வி பிரச்சனை பற்றி 1928இல் விபுலானந்த அடிகளார் கருத்துத் தெரிவிக்கையில் கல்வி ஒரு சிலருக்கு கட்டும் சொத்தமாக இருந்தால் அக் கல்வித் தத்துவத்துக்கும் இறை தத்துவத்திற்கும் முரணாக அமையலாம். பொதுவாக தமிழ் சமுதாமுயம் சிறப்பாக இந்து சமுதாயமும் சகல மக்களுக்கும் கல்வி மூலம் விமோசனமளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வட மாகாணத்தைப் போன்று சாதிக் கொடுமைகள் கொடூரமாக இருக்கவில்லை. அதற்குக் காரணமாக கண்டி ராச்சியத்துடன் அது கொண்டிருந்த தொடர்புகள், நிலமானிய சமுதாய அமைப்பின் தன்மைகள் உறுதி பெறாத நிலையும், பல இன - மத மக்கள் கலந்து வாழ்வதாலும், சாதி அமைப்பின் கொடுமைகள் வட மாகாணத்தை ஒத்த தன்மையாக இல்லை. எனினும் இங்கு கூட சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்களுக்காக களுதாவளை என்ற கிராமத்தில் ஒரு தனியான அரசாங்கப் பாடசாலையுண்டு. இராமகிருஷ்ண மிஷனரியினால்  யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வைத்தீஸ்வர வித்தியாலயம் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காகவும் வெற்று மதத்தவரான இஸ்லாமியருக்கும் இடத்தந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி போன்றவைகளும் சிறுபான்மைத் தமிழருக்கு கல்வியளிக்க முன்வந்த ஸ்தாபனங்களாகும். நகரிலுள்ள பாடசாலைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கான கல்வி வளர்ச்சியில் சம சந்தர்ப்பங்களை அளித்தன. என்றே கூற வேண்டும். இவைகளில் பெரும்பாலானவை மிஷனரிப் பாட சாலைகளென்றால் மிகையாகாது.

இக்கால கட்டத்தில் வதிரி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓர் இந்துப் பாடசாலை நிறுவவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கிடையேயிருந்து ஒரு குரல் ஒலித்தது. இம்முயற்சியில் அல்வாய் வேலிர் சோதிடர், கரவெட்டி திரு. கா. சூரன் ஆசாரியார், வதிரி சிவசம்பு வைத்தியர் ஆகியோர் சேர்ந்து கிறிஸ்தவ மிஷனரிக்கெதிராக தங்கள் பிள்ளைகளுக்கு இந்து கலாசாரப்படி கல்வி கற்பிக்க ஒர் பாடசாலையை 1914 ஆம் ஆண்டில் நிறுவினர். இதுவே இன்று வளர்ச்சி பெற்று திகழும் தேவரையாளி இந்துக் கல்லூரியாகும். இப் பாடசாலை ஆரம்பித்த காலத்தில் அரசாங்க உதவி நன்கொடைகள் ஏனைய பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது போல் உதவி நன்கொடைகள் இப் பாட சாலைக்கு கிடைக்கவில்லை 1920 ஆம் ஆண்டு தான் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலையாக வித்தியா பகுதியினரால் பதிவு செய்யப்பட்டு அரசாங்க உதவி நன்கொடையும் வழங்கப்பட்டது, இப்பாடசாலை உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் இன்று பல்துறைகளிலும் சிறந்து சமுதாயத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்

1905 இல் ரஷ்யாவை ஆசிய நாடான ஜப்பான் வெற்றி பெற்றமையும், இந்திய தேசிய இயக்கமும், இலங்கையில். மத்திய வர்க்கத்தின் எழுச்சியும் தாழ்த்தப்பட்ட தமிழர்களிடையேயிருந்து எழுந்த சமத்துவ உரிமைப் போராட்டங்களும், முற்போக்கு சிந்தனையுடைய உயர்வகுப்பினராகக் கருதப்பட்ட சில தமிழர்களின் முயற்சிகளும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் கரிசனையை ஏற்படுத்தியது. 1926 ஆம் ஆண்டு காந்தி அடிகள் இலங்கைக்கு வந்ததனுல் தமயோசனம், சம ஆசனம் என்ற இயக்கங்கள் வலுப்பெற் 2து. 1928 ஆம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என் னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவியுடன் சகல அரசியல்வாதிகளேயும் அழைத்து திரு. யோவேல் போல் உடுவில் பெண் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். அக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக திரு. நெவின்ஸ் செல்லத்துரை, திரு. கனகரத்தினம், திரு. ஹன்டி பேரின்பநாயகம், ரெவரன் பிக்னல் பாதிரியார் வெரன் பாதர் போல் மெத்யூஸ், டொக்டர் ஜேம்ஸ், திரு. சி. பொன்னம்பலம் எஸ். டபிள்யூ மகாதேவா அக்கலத்தில் அரசாங்க அதிபரா யிருந்த திரு. காண்டோஸ் என்போரும் பெரும் ஆதரவு அளித்தனர். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணவாலிப காங்கிரஸ் காந்திய இயக்கத்தில் நம்பிக்கை வைத்து சில சமுதாயக் குறைபடுகளே சீர்திருத்த முன் வந்தது. ஆயினும் 1933ல் தனது பணிகளை செவ்வனே செயற்படுத்த முடியாது முறிவடைந்தது. ஆயினும் இவர்களின் நல்ல நோக்கங்கள் தாழ்த்தப்பட்ட தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு இருநூற்றண்டில் ஊக்கம் அளித்தது.

சர்வசன வாக்குரிமையும், அதனைத் தொடர்ந்து வந்த மரவரி முறையும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கணிசமான பகுதியினரின் வாழ்வில் ஒரளவு மாற்றத்தினைக் கொண்டு வந்தது பொருளாதாரம், கலாசாரம், சமூகநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களினால் தாம் காலூன்றி நிற்கக்கூடிய தெம்பினே தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து காந்தியக் கருத்துக்கள், சனநாயக உரிமைகள், இடதுசாரி இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள் ஆகியன இணைந்து இவர்களது விடுதலைப் போருக்கு பாசறையாயிற்று. இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி என்பது ஆங்காங்கே சில குறிகாட்டிகளாகக் காணப்பட்டனவே தவிர ஒரு முழுத்தன்மையாகச் சமுதாய அமைப்புடன் இணையவில்லை இக்கால வேளைவில் திரு. ஜி. நல்லையா, அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நல்வித்திய ஐக்கிய வாலிப சங்கம் திரு. ஜி. எம் பொன்னுத்துரை திரு. எம். சி. சுப்பிரமணியம் ஆகியோர்களால் 1941 இல் அமைக்கப்பட்ட சன் மார்க்க ஐக்கிய வாலிப சங்கம், திரு. ஆ.மீ. செல்லத்துரை பண்டிதர், செல்லையா, சைவப் புலவர் சி. வல்லிபுரம், க, முருகேசு ஆசிரியர், சாமுவேல் ஆசிரியர் ஆகியோரினால் உருவாகிய ஐக்கிய வாலிபர் சங்கமும் வடமராட்சி சமூக சேவா சங்கமும் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு சிறுபான்மைத் தமிழர் மகா சபையைஆரம்பித்தன. இதுவே தாழ்த்தப்பட்ட தமிழர்களுடைய சகல விடுதலைக்கும் களம் அமைத்துக் கொடுத்து போராட்டங்களை நடாத்தி விடுதலைக்கு வழிவகுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளின் போராட்டமே சமூகக் குறைபாடுகளே ஒழிப்பதற்கு வழிவகுத்தது. இவ்வியக்கம் தனது உரிமைகளுக்காக போராடியபோது, அதனை மழுங்கடிப்பதற்காக மிகக் கொடூரமான எதிர்த்தாக்குதல்கள் கொலைகள், கொலை முயற்சிகள், தீ வைப்புச் சம்பவங்கள், ஆலயப் பிரவேச வழக்குகள் என எத்தினையோ கொடூரங்கள் தலைவிரித்தாடின. இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஸ்தாபனத்தின் கட்டுக் கோப்பைக் குழைய விடாது தம்மின மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராட்ட வீரர்களாக திரு. யோவெல் போல், திரு. எஸ். ஆர். ஜேக்கப், தியாகி முதலி சின்னத்தம்பி ஏ. பி. இராஜேந்திரா திரு. டி. ஜேம்ஸ், திரு. ஆ. மா. செல்லத்துரை எம்.சி.சுப்பிரமணியம் திரு.ஜி.நல்லையா ஆகியோரைக் குறிப்பிடலாம். முதலியார் இராஜேந்திரா அவர்கள் டீ. எஸ். சேனநாயகாவின் ஆட்சிக் காலத்தில் செனட்டராக்கப்பட்டார். இவர் மூதவையில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் முன்னேற்றங்கள் கருதி பல பிரேரணைகள் கொண்டு வந்தார்.


1956 இல் S, W. R. D. பண்டாரநாயகாவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டபோதுதான் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி துரித கதி அடைந்தது. இக்காலத்தில் மகாசபையின் அரும் முயற்சிகளினால் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன் கந்தையா அவர்களின் ஆதரவுடனும், அந்நேரத்தில் கல்வியமைச்சராக இருந்த W தஹநாயக்கா அவர்களாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கல்விபெற வசதியற்ற கிராமங்களில் ஏறக்குறைய 15 பாடசாலைகளே நிறுவிக் கொடுத்தார். 

அப்பாடசாலைகள் வருமாறு:

பாடசாலையும் அது அமைந்துள்ள தொகுதியும்

1. குட்டியபுலம் அ.த.க.பாடசாலை - கோப்பாய்
2. கட்டுவன்புலம் அ.த.க.பாடசாலை - காங்கேசன்துறை
3. சண்டிலிப்பாய் அ.த.க.பாடசாலை - மானிப்பாய்
4. சுதுமலை அ.த.க.பாடசாலை - மானிப்பாய்
5. அச்சுவேலி அ.த.க.பாடசாலை – கோப்பாய்
6. புலோலி அ.த.க.பாடசாலை - பருத்தித்துறை
7. இமையாணன், அ.த.க.பாடசாலை - உடுப்பிட்டி
8. வசந்தபுரம் அ.த.க.பாடசாலை - காங்கேசன்துறை
9. மந்துவில் அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி
10. மட்டுவில் தெற்கு அ.த.க.பாடசாலை, - சாவகச்சேரி
11.சரசாலை அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி
12.கைதடி அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி
13, வரணி, அ.த.க.பாடசாலை - சாவகச்சேரி
14. வெள்ளாம் பொக்கட்டி அ.த.க.பாடசாலை - சாவகச்சேரி
15. பொன் கந்தையா அ.த.க.பாடசாலை – மானிப்பாய்

இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது சில பாடசாலைகள் அக்கினி தேவனுக்கு இரையாக்கப்பட்டன. தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இப்படியான பாடசாலைகள் அவசியமில்லை, என அரசாங்கத்திற்கு மூறையீடு செய்தனர். தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென பாடசாலைகள் திறப்பது மேலும் அவர்களைத் தாழ்த்தி வைப்பது போலாகும் என்று நியாயம் வேறு இதற்குக் கற்பித்தனர். அக்காலச் சூழ்நிலையிலிருந்த பாடசாலைகளில் இம்மக்களுக்கு சமத்துவமான முறையில் கல்வி கற்பித்துக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள், பாடசாலைகளில் மாணவர்களுக்கு சாதியின் பேரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு குரல் கொடுக்காத இவர்கள் இந்து பரிபாலன சபையின் ஆதிக்கத்தின் கீழிருந்த பல பாடசாலைகளில் அனுமதித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட போது அவர்களே அனுமதிப்பதற்கான  நடவடிக்கைகளை எடுக்காத இவர்கள், இச்சந்தர்ப்பத்தில் கூப்பாடு போடுவது விசித்திரமாக

இருக்கின்றது. தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென தனியான பாடசாலைகள் திறப்பது கல்விக்கொள்கைக்கும், சமத்துவ முறைமைக்கும் முரணானதே ஆயினும் அந்தக்குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்பாடசாலைகளின் தோற்றந்தான் அன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கு பூட்டு போட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் சமத்துவமான முறையில் சகலருக்கும் கல்வி பெற திறக்கப்பட்டது. இன்று தாழ்த்தப்பட்ட தமிழர்க்கென திறக்கப்பட்ட மேற்கூறப்பட்ட பாடசாலைகள் சகல மக்களும் படிக்கின்ற, படிப்பிக்கின்ற நிலைமைகள் உருவாகியுள்ளது. எனவே இந்த நிலையில் இப்பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி முழுத்தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்குமே உறுதுணையாக இருக்கின்றது. திரு டபிள்யூ. தஹநாயக்கா கல்வியமைச்சாக இருந்த காலத்தில் 23 பட்டதாரி ஆசிரியர்களுக் கான நியமனங்களே தமிழர்கள் பெற்றனர். 1956 இலிருந்து 1960 வரை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலைக்கு ஆண்டு தோறும் 30 ல் இருந்து 50 வரையிலான தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறுபான்மைத் தமிழர் மகாசபை தொண்டாற்றியதுடன் சமூக குறைபாடுகள் ஒழிக்கப்பட்டதை 1957ல் அமுலாக்கவும் 1970ம் ஆண்டு அதன் குறைகளைக் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தது. .

தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் 1962 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை தமிழர் பெளத்த சங்கம், சில தமிழ் பெளத்த பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இச்சங்கத்தின் தலைவராக (டேவிற்) எம். வைரமுத்து ஜே. பி. அவர்கள் இருந்தார். இணைச் செயலாளர்களாக கே. கனகலிங்கம், வி.மார்க்கண்டு என்போரும், உப தலைவர்களாக சின்னதம்பி, எம். பொன்னுத்துரை, எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரும், தானாதிகாரியாக எஸ். ஐயாத்துரையும் பதவிகளை வகித்தனர். இவர்களால் பின்வரும் நான்கு பெளத்த தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1) புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்2) அச்சுவேலி ஸ்ரீ விபஸ்சி வித்தியாலயம்3) கரவெட்டி ஸ்ரீ நாரதா வித்தியாலயம்4) அல்வாய் சேய்மகே வித்தியாலயம்

இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆரம்பத்தில் இப்பாடசாலைகளில் பௌத்த சமயத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட தமிழ் பிள்ளைகள் கல்வி கற்றனர். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து அரசாங்க ஆசிரியர்களாகும் வாய்ப்பு பலருக்குக் கிட்டியது. இன்று இப்பாடசாலைகள் பேரளவில் பெளத்த தமிழ்ப்பாடசாலைகளாக இருந்த போதிலும் சகலரும் சமத்துவமாக கற்க, கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .

தற்போதைய நிலையில் ஆரம்பக்கல்வி நிலையிலிருந்து பல்கலைக்கழக உயர்கல்வி வளர்ச்சிக்கும் இதற்கு மேலும் புலமைப்பரிசில்கள் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கற்கும் நிலை வரை தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தமிழர்கள் கல்வியில் உயர்நிலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையை இன்றைய இளம் சிறார்கள் எய்துவதற்காக நம்முன்னோர்பட்ட அரும்பாடுகள், சொல்லொணாத்துன்பங்கள் செய்த உயிர்த் தியாகங்கள் அனைத்தையும் நினைவு கூருவதுடன், எக்காலத்திலும், எந்த நிலையிலும் இத்தகையதொரு இன்னல்கள் எந்த சமூகத்திற்கும் வரக்கூடாதென்றும், அவ்வாறு சமத்துவமின்றி காணும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க முன்வருவோமென்று இளைஞர்கள் உறுதி பூணவேண்டும்.

இறுதியாக இலவசக் கல்வி அறிமுகம் அரசாங்கம் பாடசாலைகளேப் பொறுப்பேற்றல், இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலை, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விழிப்பும், எழுச்சியும், மழைக்குக்கூட பாடசாலையில் ஒதுங்கமுடியா திருந்த நிலைமாற்றப்பட்டு படிப்படியாக பல்வேறு போராட்டங்களைக் கடந்து இன்றைய கல்வி நிலையில் ஏனைய சமூகத்தவர்களோடு ஒத்த ஒரு நிலைக்கு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி உயர்வு பெற்றது.

பிற்குறிப்பு
 • “தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி” 1989 - யாழ்ப்பாணம் - என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை இது. நூலகம் இணையத் தளத்தில் அந்த நூலை பெற்றுக்கொண்டோம். அவர்களுக்கு எமது நன்றிகள்.
 • மிஷனரி தேவாலயங்கள் பற்றிய ஓவியங்கள் "A True and Exact Description of the Most Celebrated East-India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon" Philippus Baldaeus  - Asian Educational Services, 1703 நூலில் இருந்து எடுக்கப்பட்டவை
 • யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய தோழர்களின் மேற்படி ஓவியங்களை வரைந்தவர் மறைந்த தோழர் தங்கவடிவேல் அவர்களின் புதல்வர் சௌந்தர் அவர்கள். அவர்களுக்கு நன்றிகள்.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 34

1979 இல் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தது அரசாங்கம். நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸின் சிறைச்சாலைகளிலும் பூஸா தடுப்பு முகாமிலும் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.

பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குட்டிமணி, 1981 ஏப்ரல் ஐந்தாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.அவரோடு தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு 04.02.1982 அன்று உயர்நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

சிறையில் இருந்த குட்டிமணியை 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடச் செய்வதற்கான நிர்ப்பந்தம் எழுந்திருந்தன. கூட்டணி அதை செய்யாவிட்டாலும் திருநாவுக்கரஸின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற வெற்றிடத்துக்கு குட்டிமணியை நியமித்து ஏகமானதாக தீர்மானம் கூட கூட்டணி நிறைவேற்றியிருந்தது. வர்த்தமானிப் பத்திரிகையிலும் கூட அந்தத் தெரிவு வெளியானது. ஆனால் குட்டிமணியை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள விடவில்லை சிறைச்சாலை ஆணையாளர் பிரிய தெல்கொட. அதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதிமன்றம் தமக்கு அதற்கான அதிகாரம் இல்லையென்று தள்ளுபடி செய்தது. பின்னர் குட்டிமணி இராஜினாமா செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.


குட்டிமணி நீதிமன்ற உரை
நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் தனது கருத்தை தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் உரை தமிழ் இளைஞர்கள்  ஏன் ஆயுதமேந்த தள்ளப்பட்டார்கள் என்பதை விளக்குகின்ற ஒரு முக்கிய உரையாக அமைந்தது.

தமிழ் மக்களின் உணர்வுகளையும், போராட்டத்திற்கான நியாயங்களையும் புரிந்துகொண்ட சிங்கள ஜனநாயக சக்திகள் இந்த உரையை சிங்களத்திற்கு மொழிபெயர்த்து பரவலாக பல தேவைகள் வெளியிட்டு வந்திருகிறார்கள்.
“நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டு, நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.
இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.
இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.
வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே. இதன் விளைவே தமிழ்த் தலைவர்கள், தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறித் திட்டமிட்ட முறையில், சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடக்காதவை அல்ல; இக்காலகட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன? நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ். செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீ லங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின் வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன? காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில இலட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்” என்று சொன்ன தங்கதுரை, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த அடக்குமுறையை விளங்கப்படுத்தியிருந்தார்.

மேலும், “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை, அர்த்தசாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?” என்று கேள்வியெழுப்பிய தங்கதுரை, “பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை. ஆக்கிரமிப்புகள் வேறுபட்ட அதிகார அமைப்புகளினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம், குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று” என்று தம்முடைய விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத்தை முன்வைக்கிறார். 
மேலும், “இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது இலட்சியம் மட்டுமல்ல, இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும் தமக்கு உண்டான அரசியல், பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவார்கள். 
எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.
எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கிகரித்திருப்பின் இந்நிலை இத்தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த 35 ஆண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவிதையை ஊன்றி வளர்த்துள்ளீர்கள். 
ஆனால், சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது, தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்குத் தமிழினத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்” என்று பெரும்பான்மை மக்களிடையே இன மைய அரசியலைத் தூண்டும் இலங்கையின் அரசியல் கலாசாரம் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அத்துடன், “உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட, இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத, மீதி எந்தச் சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே” என்று தமிழ் மக்கள் வேண்டுவது விடுதலைதான் என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார்.
"நாங்கள் இனவாதிகள் அல்லர். நாம் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை. நாம் நமது போராட்டத்தில் சிங்கள மக்களை அன்புடன் நினைவுகூர்கிறோம். அவர்களின் நியாயமான போராட்டங்களின்போது நாம் நமது ஆதரவைத் தெரிவிக்கிறோம். அவ்வாறே நமது விடுதலைப் போராட்டத்துக்குச் சிங்கள மக்கள் ஆதரவு தரவேண்டும். அடுத்தவரின் சுதந்திரம் தொடர்பில் அக்கறையற்ற மனிதன் தனது சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைக்கின்றான். நமக்கு ஏற்பட்ட அதே நிலை, வேறொரு நாளில் முழு இலங்கை மக்களுக்கும் ஏற்படக்கூடும். அன்றைய தினம் ஆனையிரவு வதைமுகாம் ஹம்பந்தொட்டைக்குக் கொண்டுசெல்லப் படலாம். குருநகர் வதைமுகாம், குருணாகலைக்கு எடுத்துச் செல்லப் படலாம். இன்று அவற்றில் சித்திரவதைகளை அனுபவிக்கும் தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக அன்று சிங்கள இளைஞர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கவேண்டிவரலாம்"
நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்... எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும். ”
இதைத் தான் குட்டிமணி தனது கடைசி ஆசையாக தெரிவித்திருந்தார்.


புத்தரின் முன்னால் குவிக்கப்பட்ட சடலங்கள்
வெலிக்கடை சிறைச்சாலையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.
பல மோசமான குற்றச்செயல்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட பல சிங்களக் கைதிகளுடன் இந்த தமிழ் அரசியல் கைதிகளும் வைக்கப்பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். 

83 யூலை 24 அன்று நாடெங்கிலும் கலவரம் பரவத் தொடங்கியதும் அந்த ஆவேசம் வெலிக்கடை சிறைச்சாலையிலும் எதிரொலித்தது. 25ஆம் திகதியன்று அங்கு குற்றவாளிகளாக இருந்த சிங்கள இனவாதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். 

குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் தங்கியிருந்த பி 3 என்னும் சிறைப்பிரிவிலேயே கொலைகள் ஆரம்பித்தன.  அந்தப் பிரிவில் மரண ஓலங்கள் கேட்டதே தவிர வேறொன்றையும் எங்களால் பார்க்க முடியவில்லை என வேறு பகுதிகளில் இருந்து தப்பிய ஈழப் போராளிகள் பின்னர் கூறினர். 

வெலிக்கடை சிறைவாசலுக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது எச் மண்டபம். இம்மண்டபத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களையும் அரைகுறை உயிருடன் இருந்த இளைஞர்களின் உடல்களையும் இழுத்து வந்து புத்தர் சிலையடியில் குவிப்பதை எச் மண்டபத்தின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக ஜெயக்கொடி என்பவர் பார்த்து கொண்டிருந்தார். குட்டிமணியின் உடல் இழுத்து வரப்பட்டபோது அவரின் உடலில் அசைவுகள் இருந்ததென்றும், அப்போது அவர் அரை உயிருடன் இருந்ததாகவும் ஜெயக்கொடி என்கிற கைதி கூறுகிறார். சோமு என்றழைக்கப்படும் நடராஜா ஜெயக்கொடி ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்தவர். அவர் பின்னர் நேரில் கண்ட இந்த கொடுமைகளை ஒரு நூலாகவே வெளியிட்டிருந்தார்.


குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள் குட்டிமணியை புத்தர் சிலையடியில் இழுத்துக் கொண்டு வந்து போடப்பட்டதன் பின்னர் கண்கள் இரண்டும் கூரிய ஆயுதம் கொண்டு தோண்டியெடுத்து கால்களில் போட்டு மிதித்து அழித்தத்தை ஏனைய சிங்களக் கைதிகள் கைதட்டி ஆரவாரித்தனர்.  இன்னொரு கைதி வெறித்தனமாக குட்டிமணியின் ஆண்குறியை வெட்டி வீசினான். ஏனைய கைதிகள் அவரின் உடலை குத்தி கிழித்தனர். சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கைதிகள் குட்டிமணியின் இரத்தத்தை தமது உடலில் பூசிக் கும்மாளமடித்தனர். குவிக்கப்பட்ட உடல்கலில் உயிர்போகாமல் துடித்துக் கொண்டிருந்த உடல்களில் இரும்புக் கம்பிகளைச் செருகிக் கொன்றனர். ஏனைய தமிழ் இளைஞர்களின் தலைகள் கைகள் கால்கள் என வெட்டிப் புத்தர் சிலையடியில் குவித்தனர் என்பன போன்ற தகவல்களை ஜெயக்கொடி கூறினார். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.

இந்தப் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் சேபால ஏக்கநாயக்க என்பவர். இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வீரனாக கொண்டாடப்படுகிறார். அது இந்தப் படுகொலைகளுக்காக அல்ல. 1982 ஆம் ஆண்டு Alitaliya என்கிற இத்தாலிய விமானத்தைக் கடத்தி பிரசித்தம் பெற்ற குற்றவாளியைப் பற்றி வீரப்பிரதாப கதைகளாக பல சிங்களக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஆனால் சேபால நடத்திய இந்த மிருகத்தனம் பற்றி சிங்களத்தில் எந்தப் பதிவுகளையும் தேடிக் கண்டு பிடிக்கமுடியாது.

வெலிக்கடை சிறையின் பி 3 பிரிவிலும், டி 3 பிரிவிலும் இருந்த 35 பேர் 1983 ஜூலை 25ஆம் திகதி கொல்லப்பட்டனர். இந்தளவு கொடூரம் நிகழந்தும் சிறையதிகாரிகளால் அந்தக் கொலைஞர்கள் பாதுகாக்கப்பட்டதால் ஒரு நாள் கழித்து அதாவது 27ஆம் திகதி அடுத்த கட்ட கொலைகள் அரங்கேறின. அதில் காந்தியம் நிறுவனர் டாக்டர் இராஜூசந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 53 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இறுதியில் இராணுவம் வந்து கைதிகளுடன் மோதி கண்ணீர்புகை எரிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இல்லையென்றால் மேலும் அங்கிருந்த எஞ்சியவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.

டக்ளஸ் தேவானந்தா உட்பட 19 தமிழ் கைதிகள் மாத்திரமே இந்தப் படுகொலைகளிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பினர்.


அப்படி தப்பிய எஞ்சிய தமிழ்க் 19 கைதிகள்
1. அந்தோனிப்பிள்ளை (அழகிரி)
2. மாணிக்கம் தாசன்
3. கணேசலிங்கன்
4. ஸ்ரீதரன் 
5. டக்ளஸ் தேவானந்தா
6. தம்பாபிள்ளை மகேஸ்வரன்
7. சிவசுப்பிரமணியம்
8. ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)
9. பாபுஜி
10. டேவிட் ஐயா
11. வண .குரு சின்னராஜா
12. கோவை மகேசன்
13. ஜெயகுலராஜா
14. மு.நித்தியானந்தன்
15. ஜெயதிலக்கராஜா
16. டொக்டர் தர்மலிங்கம்
17. வண.பிதா சிங்கராயர்
18. யோகா எனப்படும் எஸ்.யோகராஜா 
19. (பெயர் ஆயியப்படவில்லை)

கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் உடல்களை அவர்களின் உறவினர்கள் எவரும் பார்ப்பதற்கு அனுமிக்கப்படவில்லை.

இன்றுவரை இந்தப் படுகொலைகளை நடத்திய சிங்களக் கைதிகளுக்கு எதிராகவோ, அதனை செய்யத் தூண்டிய, ஒத்துழைப்பு வழங்கிய சிறைப் பாதுகாவலர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்த விசாரணையும் மேற்கொண்டதில்லை இலங்கை அரசு.


வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டவர்கள்.
ஜூலை 25 அன்று கொல்லப்பட்டவர்கள்.
1. தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்
2. குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்
3. ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்
4. தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்
5. சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
6. செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
7. அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம்
8. அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
9. ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
10. சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
11. சின்னதுரை அருந்தவராசா
12. தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
13. மயில்வாகனம் சின்னையா
14. சித்திரவேல் சிவானந்தராஜா
15. கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
16. தம்பு கந்தையா
17. சின்னப்பு உதயசீலன்
18. கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
19. கிருஷ்ணபிள்ளை நாகராஜா
20. கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
21. அம்பலம் சுதாகரன்
22. இராமலிங்கம் பாலச்சந்திரன்
23. பசுபதி மகேந்திரன்
24. கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
25. குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்
26. மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்
27. ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்
28. ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
29. கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்
30. யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்
31. அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்
32. அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
33. அழகராசா ராஜன்
34. வேலுப்பிள்ளை சந்திரகுமார்
35. சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார்
ஜூலை 27 அன்று கொல்லப்பட்டவர்கள்.
1. தெய்வநாயகம் பாஸ்கரன்
2. பொன்னம்பலம் தேவகுமார்
3. பொன்னையா துரைராசா
4. குத்துக்குமார் ஸ்ரீகுமார்
5. அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்
6. செல்லச்சாமி குமார்
7. கந்தசாமி சர்வேஸ்வரன்
8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
9. சிவபாலம் நீதிராஜா
10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்
11. கந்தையா ராஜேந்திரம்
12. டாக்டர் ராஜசுந்தரம்
13. சோமசுந்தரம் மனோரஞ்சன்
14. ஆறுமுகம் சேயோன்
15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17. செல்லப்பா இராஜரட்னம்
18. குமாரசாமி கணேசலிங்கன்

குட்டிமணி பற்றிய காலவரிசைப்படி சில குறிப்புகள்
1969 இல் குட்டிமணி தங்கத்துரை தலைமையில் தமிழர் விடுதலை இயக்கம் (Tamil Liveration Organisation) ஆரம்பிக்கப்பட்டது. அதுவே பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) வாக ஆனது. அதனைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக குட்டிமணி இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டுவந்து வந்தார்.

1973 தமிழகத்துக்கு தப்பியோடியிருந்த வேளை இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க குட்டிமணி 1974இல் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியிலிருந்தது.

1975 இல் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி விசாரணையின்றி தொடர்ந்தும் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 47 கைதிகளின் பட்டியலில் குட்டிமணியின் பெயரையும் அறிவித்திருந்தது.

1977 குட்டிமணி விடுதலை செய்யப்பட்டார்.

25.03.1981 நீர்வேலி வங்கிக் கொள்ளையின் (8 மில்லியன்) பிரதான சூத்திரதாரியாக குட்டிமணியை இலங்கை அதிகாரிகள் அறிவித்தனர்.

05.04.1981 குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் தப்பிச் படகொன்றின் மூலம் தமிழகத்துக்கு தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டனர்.

13.08.1982 குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

14.10.1982 குட்டிமணியை வட்டுக்கோட்டைத் தொகுதியின் (மரணமடைந்த திருநாவுக்கரசின் வெற்றிடத்துக்கு) பாராளுமன்ற உறுப்பினராக கட்சி நியமித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தார்.

16.10.1982 குட்டிமணியை சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என சிறைச்சாலை ஆணையாளர் பிரியா தெல்கோட அறிவிப்பு

17.10.1982 குட்டிமணிக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் சட்ட ரீதியான தகுதி கிடையாதென அரச தரப்பில் சுட்டிக் காட்டல்

24.01.1983 பதவி வெற்றிடமடைந்து மூன்று மாதத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் அற்றுப் போனதால் குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிலிருந்து இராஜினாமா செய்துகொண்டார். 

04.02.1983 சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன குட்டிமணி உள்ளிட்ட சில கைதிகளுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து தனது அதிகாரத்தின் பேரில் ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

25.07.1983 குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ்க் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஏனைய சிங்களக் கைதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். தான் கொல்லப்பட்டாலும் தனது கண்களை கண்களை இழந்த ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் எதிர்கால தமிழீழத்தைப் காண வேண்டும் என்று தனது இறுதி ஆசையாக கூறியிருந்ததால் குட்டிமணியின் கண்கள் இரண்டும் குடைந்து எடுக்கப்பட்டு கால்களில் போட்டு நசுக்கி அழித்தனர் சிங்களக் கைதிகள்.ஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் கோ.நடேசய்யர் - மல்லியப்புசந்தி திலகர்

தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம்  6

'பொது ஜனங்களிடையே உணர்ச்சியைக் கிளப்ப மூவகைச் சாதனங்கள் உண்டு.பிரசுரங்கள் மூலம் உண்டாக்குவது முதலாவது. பத்திரிகைகளும், புஸ்தகங்களும், வேறு பிரசுரங்களும் ஒருவாறு பலம்கொடுக்கும் எனினும் போதிய அளவு கொடுக்கும் என எண்ணவிடமில்லை. நமது நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம். இனாமாய்த் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுப் பரப்புவதற்காகச் செலவாகும் தொகைக்குத் தக்க பலன் கிடைக்குமென்பதே சந்தேகம்.

பிரசுரங்கள் மூலம் அறிவைப் பரப்புவது இரண்டாவது ஆகும். பிரசுரங்களைவிட பிரசங்கங்கள் அதிக உணர்ச்சியை உண்டாக்குமெனினும், அதுவும் போதிய பலனைக் கொடுக்கும் என்று எண்ண இடமில்லை. மூன்றாவதாக நமக்குள்ள சாதனங்கள் நாடகம் மூலம் ஆகும்....'
இவ்வாறு 'இலங்கைத் தோட்ட இந்திய தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு' எனும் நாடகம் எழுதப்படுபவதன் நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார் கோ.நடேசய்யர். இப்படி அவர் சொன்னது 1936 ஆம் ஆண்டு. மலையக மக்கள் உணர்வுபெறவேண்டுமெனில் எவ்வாறான உத்திகளைக் கையாளவேண்டும் என அவர் விபரித்துச் செல்கின்றார்.

 நாடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த கோ.நடேசய்யர். 'கோவில் திருவிழாக்காலங்களில் பள்ளுப்பாடி காப்புக் கட்டுவது என்ற புராதன வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. புராதன முறைப்படி பள்ளு நாடகம் நடாத்தப்படாவிட்டாலும் அந்தப்பெயர் கொண்டு ஏதோ ஒரு பாட்டைப்பாடி காரியங்கள் முடிக்கும் வழக்கமிருக்கிறது. அவ்வித சந்தர்ப்பங்களில் பிறநாடுகளுக்கு சென்றவர்களின் பரிதாப நிலையை உள்ளது உள்ளபடி காட்ட கூடிய முறையில் நாடகங்கள் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யப்படுவதுடன் அவர்களுடைய செல்வ நிலையை உயர்த்துவதற்கான காரியங்களும் கைகொள்ளப்படுமானால் இந்திய கிராமவாசிகள் கூடிய சீக்கிரம் விருத்தி அடைவார்கள் என்பது திண்ணம்' என குறிப்பிடுகின்றார்.

1990 கள் வரை மலையகத் தோட்டப்பகுதிகளில் திருவிழா காலங்களில் நாடகம் போடும் கலாசாரம் இருந்து வந்தது. ஐந்து நாள் திருவிழா எனில் அதில் ஒரு நாள் இரவை நாடகத்திற்கு என ஒதுக்கிக்கொள்வார்கள். அந்த தோட்டத்தில் உள்ள கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தாமே அதனை இயக்கி விடியும் வரை மேடை நாடகம் அரங்கேறும்.  பிற பிரதேச இசைக்கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் சேர்ந்து பணியாற்றுவார்கள். சுற்றுவட்டாரங்களில் இருந்து நாடகம் பார்க்க வருவார்கள். 

தொன்னூறுகளுக்குப்பின்னான காலப்பகுதியில் இதுவே இசைக்குழுக்களின் இசைக்கச்சேரியாக மாறி சினிமாப்பாடல்களை அவர்கள் பாட கேட்டு ஆட்டம் போடும் நடைமுறையாக அது மாறிவிட்டது. இப்போது திருவிழா கால நாடகம் என்பது அறவே மலையகத்தில் இல்லை எனலாம். அதே நேரம் நாடகம் போடுவதற்கு பதிலாக நாடகம் பார்ப்பது எனும் கலாசாரம் பல்கிப்பெருகிவிட்டது. நடேசய்யர் சொல்வது போல தொழிலாளர்களின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டி அவர்களது பொருளாதார நிலையை உயரத்திக்காட்டும் முயற்சியாக இப்போதைய நாடகங்கள் இல்லை. இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் குடும்பத்தை கூறுபோடும் நாடகங்களையே பார்க்கப் பழகியிருக்கிறோம். 

நாடககக்கலை மீது அதீத நம்பிக்கைக் கொண்டிருந்த கோ.நடேசய்யர் அந்த காலத்திலேயே அதனை நூலாக்கி வெளியிடவும் முனைந்திருப்பது பாரிய ஓர் அர்ப்பணிப்பைக்காட்டுகின்றது. அந்த நூலை இன்று ஏறக்குறைய எண்பது வருடங்கள் கழிந்த நிலையில் அந்தனிஜீவா அவர்களின் முயற்சியினால் குமரன் பதிப்பகத்தின் ஊடாக மறுபதிப்பு செய்திருப்பதும் அதனை தமிழ்நாட்டில் இடம்பெற்ற மலையக இலக்கிய ஆய்வரங்கில் வெளியிட்டு வைத்தமையும் மிகுந்த பாராட்டுக்குரியது. விரைவில் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த நாடக நூல் மலையக மக்களின் இலங்கை வருகை குறித்த வரலாற்றுப்பதிவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமகாலத்தில் இடம்பெற்ற விடயத்தை அதே காலத்தில் அந்த மக்களுடன் மக்களுக்காக பணியாற்றிய தலைவர் ஒருவரால் எழுதப்பட்டது என்கின்ற அடிப்படையில் இந்த நூல் முக்கியம் பெறுகின்றது. 

இந்த நூலின் பிரதியை சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்து அந்தனிஜீவாவுக்கு பெற்றுக்கொடுத்த மாற்றுவெளி ஆய்விதழின் ஆசிரியர் அ.மங்கை தனது குறிப்பில் அரசியலில் தீவிரமாக பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சி என்று குறிப்பிடுகின்றார். இலங்கைக்குச் சென்ற இந்திய வம்சாவளியினரின் வாழ்முறை குறித்த சித்திரிப்பாக இந்நாடகம் அமைந்துள்ளது. கங்காணிகள், துரைமார் ஆகியோரின் போக்கும், இந்திய அரசு இவ்வாறு வேலைக்குச் சென்ற மக்களிடம் எடுத்துக்கூறிய சட்டங்கள், தொழிலாளர் நலத்துக்கான சங்கப்பணி ஆகியவை இதில் இடம்பெறுகின்றன என நாடக உள்ளடக்கம் பற்றி அ.மங்கை குறிப்பிடுகின்றார்.

எனவே அந்த காலத்தில் மலையக சமூகத்துக்கு எது தேவையான விடயங்களாக இருந்தனவோ அதை நாடக வடிவில் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை கோ.நடேசய்யர் முன்னெடுத்திருக்கினாறார் என்பது தெளிவாகின்றது. மேலும் 'நானறிந்த வரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றை எழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாக இந்நாடகத்தைக் காணலாம் என ஆய்வாளர் அ.மங்கை குறிப்பிடுவது நடேசய்யரின் முக்கியத்துவத்தைக் குறித்து நிற்கிறது. 

அ.மங்கையின் கூற்றுக்கு மகுடம் வைத்தாற்போல 'ஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் நடேசய்யர்' என ஆய்வாளர் மு.நித்தியானந்தன் கோ.நடேசய்யர் தொடர்பாக எழுதிய குறிப்பும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அசாம் மாநிலத் தேயிலைத் தோட்டங்களில் காட்டுத்தர்பார் நடாத்திய தோட்டத்துரைமார், தோட்டத்தொ ழிலாளர்கள் மீது மேற்கொண்ட குரூர அடக்குமுறைகளை வெளிப்படுத்தி சரண் சட்டோ பாத்யாய என்பவர் 1875 ல் மேடையேற்றிய நாடகமானது காலனித்துவத்துக்கு எதிரான வலிமை யான ஆயுதமாக நாடகங்கள் செயற்படும் அபாயச்சங்காக வெள்ளை அதிகார வர்க்கத்தினருக்கு ஒலித்தது. 

இவ்வாறு தொடர்ந்து நாடகாசிரியர்கள் வெளிப்படையாகத் தாக்குவதை சட்டவிரோதமாக்கும் வகையில் 1876 ஆம் ஆண்டு நாடக அரங்காற்றகைச் சட்டம் (Dramatic Perfomance Act of 1876) அவசர அவசரமாக அமுலாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான நாடக மேடையேற்றங்களை தடைசெய்து சட்டமியற்றி அறுபது ஆண்டுகளின் பின் தேயிலைத் தோட்டங்களில் இருந்து எதிர்க்குரல் எழுப்பும் புரட்சிகர நாடகாசிரியராக நடேசய்யரைக் காண்கிறோம் என மு.நித்தியானந்தன் தனது குறிப்பிலே தெரிவிக்கின்றார். 

இந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்திய தொழிலாளர்களின் நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டு வருபவர்கள்தானே தவிர சுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடக நூலில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான் நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும் எனவும் மு.நித்தியானந்தன் குறித்துரைக்கின்றார். 

1927, 1928, 1936 ஆகிய காலப்பகுதிகளில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த நாடக எழுத்து முயற்சிகள் அன்றைய நாடகப்போக்கினை கோடிட்டு காட்டிய போதும் அன்றாடம் உழைத்து அல்லலுறும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுரண்டப்படுவோரின் பிரச்சினைகளுக்கும் இந்த நாடகங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. நாடகங்களை இயற்றியவர்கள் தமது சைவ சித்தாந்த அறிவினையும் பா புனையும் ஆற்றலையும் வெளிப்புடுத்தும் கருவியாகவும் நாடகங்களை கருதிய நிலையில்  தோட்டத் தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு வாழ்க்கையை அவர்களின் பேச்சுவழியில் நாடகமாக்கிய நடேசய்யர் வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரலை நாடக அரங்கிற்கு எடுத்துச் செல்ல முனைந்த புரட்சியாளராகவே தென்படுகின்றார் என மு.நித்தியானந்தன், கோ.நடேசய்யரின் வகிபாகத்தை விபரிக்கின்றார். 

இந்நாடகத்தின் நோக்கம் எனும் தலைப்பில் கோ.நடேசய்யர் இந்த நூலுக்கு எழுதியுள்ள குறிப்பில், தெனனிந்தியாவில் அதிலும் நெற்களஞ்சியம் என்று பெயர்பெற்றுள்ள தஞ்சை, திருச்சி ஜில்லக்களினின்றும், குடியானவர்கள் தங்கள் தங்கள் நிலங்களையும் பயிர் செய்யாது விட்டுப் பிறநாடு சென்றுள்ளார்கள் என்பதை கவனிக்கையில் நமது நாடு எவ்வித கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்பது வெளியாகும். 

நமது நாட்டில் உள்ள நிலங்களைப் பயிர்ச்செய்ய போதிய தொழிலாளர் கிடைக்காதிருக்கையில் பிற நாடுகளில் நம்மவர்கள் கஷ்டப்பட்டு சிறுமைப்படுவதை கவனித்து, உணர்ந்து அதன் காரணத்தை நீக்க முயலவேண்டுவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமையாகும் என அன்று இந்தியருக்கு கோ.நடேசய்யர் விடுத்த வேண்டுகோள் இன்றும் பொருந்திப்போகின்றது. இந்தியாவில் விவசாய நிலங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமை விவசாய நிலங்களில் வேலை செய்யும் சூழ்நிலை இல்லாமை, அதனால் வெளிநாடு போய் வேலை செய்தல் போன்றன இந்தியாவைப் பொறுத்தவரை நூற்றாண்டு காலப் பிரச்சினையாக இருக்கின்றது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. 

பணந்தான் பெருஞ் சப்தம் உண்டாக்கக் கூடியது. பணமில்லாதவனுடைய குரல் அவனை விட்டு வெளியில் பரவாது என்பது உண்மை. அவ்வுண்மையை தோட்டத் தொழிலாளர்களுடைய நிலைமையினின்றும் அறிந்துகொள்ள க்கூடும். இந்நிலைமையை போக்கவே இந்நாடகம் எழுதப்பெற்றது. பிறநாட்டுப் பத்திரிகைகள் முதலாளிகளுக்கு கட்டுப்பட்டவை. அதிலும் தொழிலாளர் விஷயத்தை கவனிக்க அவசியமில்லாதவை. இந்தியாவில் உள்ள கிளர்ச்சி காரணமாய் இந்திய பத்திரிகைகள், இவர்களது விஷயமாய் அதிக கவலை செலுத்த முடியாதவையாயிருக்கின்றன என்பது உண்மை என இந்திய பத்திரிகைகள் மலையக மக்கள் விடயத்தை அன்றே பேச மறந்திருப்பது பற்றி குறிப்பிடுகின்றார். 

'எனவேதான் நாடகமெழுதியும் நடித்துக்காட்டியும் அவற்றின் மூலமாக இந்திய தொழிலாளர்களுக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு இந்நாடகம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த நாடகத்தில் காட்டப்பெறும் ஒவ்வொரு விஷயமும், நடைபெற்ற சம்பவங்களினின்றுமே தொகுக்கப் பெற்றவையென்பதை நாம் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே, இந்நாடகத்திற்கு ஒவ்வொரு தமிழனும், தன்னாலியன்ற முறையில் உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறான்'  என நடேசய்யர் கோரி நிற்கின்றார். 

நடேசய்யரின் இந்த நாடக நூல் காட்சிகள் விபரிக்கப்பட்டு ஒவ்வொரு கதாபாத்திரங்களினதும் ஆடை, அணிகள் ஊடாக எவ்வாறு அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் கூட கவனம் செலுத்தப்பட்டு நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த அரிய நூலை மறுபதிப்பு செய்து மலையக வரலாற்றில் மிக முக்கிய ஆவணப்பதிவைச் செய்தவராக அந்தனிஜீவா இடம் பிடிக்கின்றார். இன்றைய தலைமுறையினர் வாங்கவும் வாசிக்கவும் வரலாற்றை மீட்டிப்பார்க்கவும் உகந்த நூல் இது.  

நன்றி சூரியகாந்தி

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates