கொஸ்லாந்தை, மீரியபெத்தை தோட்டத்து மக்களும், வாழ்வும் மண்ணுள் புதையுண்டு ஒரு மாதமாகப் போகிறது. அந்த மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல அவர்கள் பேணிவந்த பண்பாடொன்றும் அதன் நிலைக்களனாக விளங்கிய பெரியகாண்டியம்மன் கோயிலும் மண்ணுள் புதையுண்டு போயின.
அந்தப் பண்பாட்டையும், அவர்கள் அதை நிகழ்த்திப் பாதுகாத்தவற்றையும் இவ்விடத்தில் பதிவு செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.
ஜூன் மாதத்தின் ஒரு முன்னிரவில் எனது முதுகலை மாணவர்கள் இந்திரகுமார், கோபிநாத், சுகந்தி ஆகியோர் பதுளையைச் சேர்ந்தவர்கள். கொஸ்லாந்தைத் தோட்டத்தில் பொன்னர் சங்கர் கூத்தின் இறுதி நாளான அறுபத்தொன்பதாவது படுகள நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஆய்வுக்காக வருகின்றீர்களா எனக் கேட்டனர். நான், மலையகத்தில் பொன்னர் சங்கர் கூத்தும் அதன் மீட்டுருவாக்கமும் என்ற தலைப்பில் ஆய்வொன்றை நிகழ்த்திக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியும். அந்த ஆய்வு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மானியத்தின் நன்கொடை பெற்றே நடைபெறுகின்றது. எனவே, அந்த நிகழ்ச்சியைக் கண்டு களப்பணி செய்வதற்காக நானும் என்னுடைய மாணவரும் சக விரிவுரையாளருமாகிய சுமனும் பதுளை நோக்கிப் பயணமானோம்.
இவ்விடத்தில் பொன்னர் சங்கர் கூத்துப் பற்றிய ஒரு முன்குறிப்பைப் பதிவுசெய்வது நல்லதென்று நினைக்கின்றேன்.
தமிழகத்தில் கொங்கு நாட்டிலும் மற்றும் சில பிரதேசங்களிலும் பொன்னர் சங்கர் கூத்து அல்லது அண்ணன்மார் கதை என்ற நாட்டுப்புறக்கலை வடிவமொன்று சடங்காகவும் நிகழ்த்து கலையாகவும் நடைபெற்று வருகிறது. அந்தப் பண்பாட்டின் தொடர் வளர்ச்சி இலங்கையில் மலையகத்திலும் வடமாகாணத்திலும் காணப்படுகின்றது. வடமாகாணத்தில் அண்ணன்மார் என்ற கதைமரபு கோயில்களுடன் தொடர்புபட்ட சடங்காசாரமாக நிகழ, மலையகத்தில் அது கோயில்களுடன் தொடர்புபட்ட நிகழ்த்துக் கலையாகவும், சடங்காகவும் நிலைபெற்று வருகிறது. மலையகத்தில் ஹட்டன், தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் நிகழ்த்துக் கலையாகவும், ஊவாப் பிராந்தியத்தில் இது சடங்காகவும் நிகழ்த்தப்படுகின்றது. இந்நிலையில் இவை பற்றிய சடங்கு, நிகழ்த்துகை, பனுவல்கள், கோயில்கள் என்ற சகலவற்றையும் ஒருங்கிணைத்து அவற்றின் அடியாக அதன் மூல வடிவத்தைக் கண்டறிதலுடன் அதனை அவைக்காற்று கலையாகவும் கொண்டு வருவதுமே இந்த ஆய்வின் முக்கியமான நோக்கமாக இருந்தது. எனவே, இலக்கிய ஆதாரங்கள்வழி அக்கதைமரபு தொடர்பாக அறிந்திருந்த நான், இப்பொழுது சடங்கு ஒன்றைப் பார்ப்பதற்காகச் சுமனுடன் பதுளை நோக்கிப் பயணித்தேன்.
பதுளையில் எனது மாணவர்களைச் சந்தித்ததன் பின், கொஸ்லாந்தை நோக்கிய எமது பயணம் தொடர்ந்தது. இருள் சூழ்ந்த வேளை கொஸ்லாந்தை சென்றடைந்தோம். அங்கிருந்து முச்சக்கரவண்டியொன்றில் மீரியபெத்தைத் தோட்டத்தை நோக்கிப் பயணித்தோம். அன்று அப்பிரதேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. முச்சக்கர வண்டிகளிலும் தனியார் வாகனங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக மீரியபெத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள். மிகுந்த இருள் சூழ்ந்த முன்னிரவு வேளையில் மீரியபெத்தை மதுரைவீரன் கோயிலில் நிலைகொண்டோம். கம்பீரமாகக் குதிரையிலே அச்சுறுத்தும் வகையில் ஏறியிருந்த மதுரைவீரன் கோயிலை வணங்கியபின், எமது ஏற்பாட்டாளர்களாகிய பிரகாஷின் வீட்டுக்குக் கற்படிகளில் மிகுந்த சிரமத்துடன்ஏறிச் சென்றோம். பிரகாஷ் என்ற மாணவனின் பெற்றோர்கள்தான் இந்தப் பெரிய காண்டியம்மன் கோயிலின் முக்கிய பங்கேற்பாளர்களாக இருந்தார்கள். அவர்களுக்கும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கும் தொடர்புகள் இருந்தன. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமிழகம் செல்வதும் வீரப்பூர் கிராமத்தில் நடக்கும் படுகள நிகழ்வைக் கண்டுவரும் செய்தியையும், பெரியகாண்டியம்மன், மகாமுனி கோயில்கள் பற்றிய செய்திகளையும் அவர்கள் எமக்கு விபரமாகக் கூறினார்கள்.
அந்த இருள் சூழ்ந்த வேளையிலும் மீரியபெத்தைத் தோட்டத்தின் குதூகலத்தை எங்களால் உணர முடிந்தது. தூரத்தில் காண்டியம்மன் கோயிலிருந்து சன்னமாகப் பக்திப் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. இன்னொரு பக்கத்தில் கரகம் பாலித்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அங்கே தப்புச் சத்தமும் பான்ட் ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தன. மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. ஒரு திருவிழாவுக்கான உணர்வு, நடை, உடை பாவனைகளில் தெரிந்தது.
இப்பொழுது நாங்கள் பெரியகாண்டியம்மன் கோவிலை நோக்கி நகர்கிறோம். செல்லும் வழியெல்லாம் மிட்டாய்க் கடைகளும் சிறுபொருள் விற்கும் கடைகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரியகாண்டியம்மன் கோயில் அந்த இரவுப் பொழுதிலும் மின்சார விளக்குகளின் அலங்காரத்தால் பளிச்சென்றிருந்தது. பெரியகாண்டியம்மன் கோயில் ஒரு மூலஸ்தானத்தையும் ஓர் அர்த்த மண்டபத்தையும் கொண்ட ஒரு சிறிய கட்டடம். ஆனால், அதனைச் சூழப் பெரிய பந்தல்கள் நீளமாகப் போடப்பட்டிருந்தன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாக ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
பெரியகாண்டியம்மன் மூலஸ்தானத்தில் கருணை விளங்கும் கண்களுடன் காட்சியளித்தாள். பெரியகாண்டியம்மனுக்கு முன்னால் பொன்னர் சங்கர் கதையில் வருகின்ற அக்காள், தங்காள் ஆகிய இரு பாத்திரங்களும் கதை வடிவில் காணப்படுகின்றன. அந்த மூலஸ்தானம் மிக எளிமையாகக் காட்சியளிக்கின்றது. மூலஸ்தானத்துக்கு வெளியே மண்டபத்தின் இரு மருங்கும் சில மனித உருவங்கள் காணப்பட்டன. அவற்றை இடையன் இடைச்சி என்று அங்குள்ளோர் கூறினார்கள். பெரியகாண்டியம்மனின் காவலாக அவர்கள் இருப்பதாகக் கூறினர்.
தகரக் கூரையினாலான சிறிய மண்டபத்துக்கு வெளியே சுதை வடிவில் பொன்னரும் சங்கரும் கம்பீரமாகக் குதிரையில் அமர்ந்திருந்தனர். இப்பொழுது பொதுமக்களிடையே மிகுந்த ஆரவாரம் ஏற்பட்டது. கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கான ஆரவாரமே அதுவாகும்.
ஒரு சிறிய நீர்நிலைக்கருகில் தங்காள் வேடமிடுபவர், பூசாரி, பிரதான ஏடு படிப்போர், கோயில் நிர்வாகிகள் ஆகியோர் சூழ்ந்து நின்று கரகத்தைத் தென்னம் பாளை, பூக்கள், வேப்பிலை, மாவிலை முதலியன கொண்டு அழகுற வடிவமைத்தனர். ஒரு கரகத்தை தங்காள் கரகம் எனவும் மற்றையதை அக்காள் கரகம் எனவும் குறிப்பிட்டனர். இப்போதுகரகம் புறப்படத் தயாராகி விட்டது. பூசாரி சன்னதம் கொண்டு வெறியாடி இம்முறை இப்படுகள நிகழ்ச்சி நன்றாக இடையூறின்றி நடக்க வேண்டுமென்று வாக்குச் சொல்லிக் கரகங்களை இரண்டு அடியார்களின் தலையில் வைக்கிறார். தப்பும் பான்ட் வாத்தியமும் இணைந்து அதிர்கின்றன. அந்த இரவில் தீப்பந்தங்கள் ஒளி உமிழ, கரகம் கோயிலை நோக்கி நகர்கிறது. பார்வையாளர்கள் பரவசமடைகின்றனர். நீண்ட வழியே கரகம் பயணித்துக் கோயிலை அடைகின்றபோது முழக்குகளின் அதிர்வால் ஆரவாரம் கொண்ட மக்களிடையே பக்தர்கள் பலர் உருக்கொண்டு ஆடத் தொடங்குகிறார்கள். மிக வேகமாக கோயில் மண்டபத்தை நோக்கி ஓடி வருகிறார்கள். ஆண், பெண் என்ற பேதமின்றி அவர்கள் ஆடுகிறார்கள். தரையில் கைகளால் தட்டியும் கைகளை மேலுயர்த்தியும் ஏதோவொரு விதமான தாளக்கட்டில் ஆடுகிறார்கள். இது கூத்தல்ல. இது வெறியாடல். பக்தியின் வயப்பட்ட வெறியாடல். இப்பொழுது கரகம் கோயிலுக்கு வந்துவிட்டது. மூலஸ்தானத்தில் அதை வைத்ததன் பின் பொன்னர் சங்கர் கூத்துப் பாடல்கள் உடுக்கடியின் திடும் திடும் என்ற ஓசையுடன் பாடப்படுகின்றன. பிரதான ஏடு படிப்போர் கதையென்றும் இல்லாது இசையென்றும் இல்லாது ஆனால், பக்தி மயத்துடன் பாடல்களைப் பாட, அதனைப்பிற்பாட்டுப் பாடுவோர் தொடர்ந்து இசைக்கிறார்கள்.
இந்த உடுக்கின் ஓசையும் பாடலின் ஓசையும் இணைந்து ஒருவித அதிர்வை ஏற்படுத்த பக்தர்கள் படுகளம் நடைபெறவிருக்கும் இடத்தில் ஆடத் தொடங்குகிறார்கள். ஆண்களும், பெண்களுமாக வட்டமாக அவர்கள் ஆடுகிறார்கள். கைகளை நிலத்தில் அடித்தும் தலையில் அடித்தும் தமது தேகத்தை ஒரு விதமான உளைச்சலுக்கு உட்படுத்தியும் ஆடுகிறார்கள். ஆடிக் களைத்தோர் நிலத்தில் வீழ்கிறார்கள். வீழ்ந்தவர் மீண்டும் எழுந்து ஆடுகிறார்கள். இவ்வாறு கதைப் பாடல் நிகழ நிகழ நீண்ட இரவில் அர்த்தயாமத்தைக் கடந்தும் அவர்கள் ஆடிக்கொண்டேயிருக்கிறார்கள். பசி, தாகம், உடற்களைப்பு என்பன அவர்களிடம் இல்லை. இவர்களுடன் பொன்னர் சங்கர் கூத்தின் மிகமுக்கியமான பாத்திரமான தங்காள் என்கிற பெண்ணும் ஆடுகிறாள். அவர் வருடாவருடம் நடக்கின்ற இந்தக் கூத்தின் தங்காளாக தன்னைப் பாவனை பண்ணிக்கொண்டு ஆடுகின்றமையால் திருமணமே செய்யாமல்இந்த நிகழ்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார் என்று அங்குள்ளவர்கள் கூறினார்கள். இந்த ஆட்டத்தில் ஈடுபடுபவர்களிலிருந்தே படுகள நிகழ்ச்சியில் வீழ்த்தப்படுபவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். ஆகையால் இதை ஒரு விரதம் போல மேற்கொண்டு ஆடுகிறார்கள் என்று அங்குள்ளவர்கள் குறிப்பிட்டனர்.
நேரம் அதிகாலை ஆகிவிட்டது...
இப்பொழுது பொன்னர் சங்கர் கதையின் உச்ச கட்ட நிகழ்ச்சிகள் ஏடு படிப்போரால் பாடப்படுகின்றது. உடுக்கின் ஒலி வேகம் கொள்கிறது. ஆடுபவர்களும் அப்படியே உருக்கொண்டு ஆடுகிறார்கள். படுகளம் நிகழ்கின்ற இடத்தில் கீழே வெண் துகில் விரிக்கப்படுகிறது. இப்பொழுது பொன்னர் சங்கர் அவருடைய உறவினர்கள் அவருடைய உதவியாளர்கள் என்று எழுவர் ஆடியபடியே வீழ்த்தப்பட்டு வெண்துகிலால் மூடப்படுகிறார்கள். இதனுடைய பொருள் அவர்கள் படுகளத்தில் எதிரிகளால் வீழ்த்தப்பட்டார்கள் என்பதேயாகும். இப்போது மீண்டும் ஏடுபடிப்போர் பாடத்தொடங்குகிறார்கள். ஒப்பாரித் தொனியில் சோகமாக அந்தப் பாடல் இழைகிறது. தங்காளும் அவளுடைய தோழிப் பெண்களும் மீண்டும் படுகளத்தில் வீழ்ந்தோரைச் சுற்றிச் சுற்றி தலையில், மார்பில் அடித்துக் கொண்டு ஆடுகிறார்கள்.
மூலஸ்தானத்திலிருந்து பூசாரி புனித நீருடன் வெளிவருகிறார். ஆட்டம் உக்கிரமடைகிறது. அவர் படுகளத்தில் வீழ்ந்தோரைச் சுற்றிச் சுற்றி வருகிறார். ஆட்டம் மேலும் உக்கிரமடைகிறது. பார்வையாளர்கள் பரவச நிலையை அடைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பூசாரி செம்பிலிருந்து நீரை மெல்ல அள்ளிப்படுகளத்தில் வீழ்ந்தோர் மீது தெளிக்கிறார். படுகளத்தில் வீழ்ந்தோர் எல்லோரும் ஒரு நொடிப்பொழுதிலே உயிர் பெற்றவராய் எழுகிறார்கள். எல்லோரும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியுடன் ஆடுகிறார்கள். படுகள நிகழ்வு நிறைவு பெறுகிறது.
மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட கரகங்கள் இரண்டும் வாத்தியங்கள் முழங்க கோயிலைச் சுற்றி வருகிறது. பூசாரியார் கூர்மையான கத்தியின் மீது ஏறி இறங்குகிறார். சுதை வடிவத்தில் நிற்கின்ற பொன்னர் சங்கர் முன்னால் ஊர்வலம் செல்கிறது. பின்பு மகாமுனி சன்னிதானத்தை அது அடைகிறது. மிகப் பிரமாண்டத் தோற்றத்தில் மகாமுனி காட்சியளிக்கிறார். கரகம் மூலஸ்தானத்தை மீண்டும் அடைகிறது. இவ்வருட படுகளச்சடங்கு நிறைவுறுகிறது.
இரவிரவாக இந்த நிகழ்வை பக்தியுடன் பார்த்து, ஆடி தமது நேர்த்திகளை நிறைவேற்றிய பக்தர்கள் இப்பொழுது தத்தம் இருப்பிடம் நோக்கி மீள்கிறார்கள். பெரியகாண்டியம்மன் கோயில் சூரியனின் பொற்கிரகணங்கள் பட்டு ஒளிர்கிறது. பிரமாண்டமான மகாமுனி இவற்றை அவதானித்தபடி காட்சி தருகிறார். பொன்னரும் சங்கரும் அமைதியே வடிவமாக குதிரையில் வீற்றிருக்கிறார்கள்.
ஆய்வு முடிந்து நாம் பல்கலைக்கழகம் வந்துவிட்டோம். எமது மாணவர்களுக்குப் படுகளம் என்ற தலைப்பில் காணொளியின் ஊடான விபரண அரங்கொன்றையும் செய்தோம். பெரியகாண்டியம்மன் கோயிலும் படுகளச் சடங்கும் எம்மைத் தொடர்ந்தும் ஆய்வுக்குத் தூண்டின. அதற்கான ஆயத்தங்களை செய்துகொண்டிருக்கின்ற வேளையில்தான் ஊடகங்கள் அந்த அவலச் செய்தியைக் காவி வந்தன. எங்காவது ஓரிரு இடங்களில் மண்சரிவு இடம்பெற்றிருக்கலாம் என்று நினைத்திருந்த எமக்கு, நாம் களஆய்வு செய்த பிரதான பகுதியே மண்ணில் புதையுண்ட அவலம் சிறுகச் சிறுக தெரிய வந்தது. அம்மன் கோயில், மகாமுனி கூடம், ஓங்கியுயர்ந்த மரம், சூழ இருந்த மக்கள் என அந்த மண்ணுள் புதையுண்ட அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த மண்சரிவு பற்றி அரசியல், வானியல், புவியியல் எனப் பலவிதமான ஆய்வுகளும் அறிக்கைகளும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால், அந்த மண், அந்த மனிதர், அவர்கள் பண்பாடு புதையுண்ட சோகம் வார்த்தைகளில் வடிக்க முடியாதது. அது உணர்வுடன் கலந்தது. காண்டியம்மன் குறை தீர்த்தாள். மகாமுனிஆதரவு தந்தார். மக்கள் விழாவிலும் சடங்குகளிலும் ஆழ்ந்து போயினர். என்ன அவலம்அந்த விழாவில் கலந்துகொண்டோர், பூசாரி, ஏடு படித்தோர், வாத்தியங்கள் இசைத்தோர்,வெறிகொண்டு ஆடிய ஆண்கள், பெண்கள் என்ன ஆனார்கள்? எங்கே அவர்கள்? என்று தேடுகிறோம்.
காண்டியம்மா! களத்தில் பலியானோரை மீட்டெடுத்தவளே! நின்களத்தில் நின்னையும் சேர்த்து இயற்கை களப்பலி கொண்டதென்ன! ஆனால், அம்மா நின்கோயில் வாசலிலே நிகழ்ந்த படுகளமும் அதன் பண்பாடும் புதையுண்டு போயினும் என்றோ ஒரு நாள் மீட்பர்கள் வருவர். அகழாய்வு நிகழும். அங்கே புதையுண்ட பழைய பண்பாடு ஒன்றை அவர்கள் உலகுக்குப் பறைசாற்றுவர்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...