மலையகக் கல்வியாளரும் அரச உயர் பதவிகளை வகித்தவருமான எம.வாமதேவன் எழுதிய ‘மலையகம்சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த 23ஆம் திகதி ஞாயிறு மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பாக்யா பதிப்பகத்தின் ஒன்பதாவது நூலாக வெளிவந்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழா மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களின் மங்கல விளக்கேற்றலுடன், அண்மையில் மண்சரிவில் தம் உயிரை ஈந்த மீரியபெத்த மக்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமானது. வழமையான மௌன அஞ்சலியாக அல்லாமல் , நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய நூலின் பதிப்பாசிரியரும் பாக்யா பதிப்பக நிறுவுனருமான கவிஞர் மல்லியப்புசந்தி திலகரின் ;அழுதமலை’ என்ற கவிதையினை அவரே வாசிக்க சபையோர் அனைவரும் உணர்வுபூர்வமாக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் இரா.சடகோபன் வரவேற்புரை வழங்க, தலைவர் சாகித்யரத்ன தெளிவத்தை ஜோசப் தலைமையுரை ஆற்றினார்.
வாமதேவன் மலையகக் கல்வியாளர்களுள் முக்கியமானவர். அவர் வகித் அரச உயர் பதவிகள் அவருக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கினறன. அந்த அனுபவங்களின் ஊடாக மலையக மக்களின் சமத்துவ அபிவிருத்திக்கான விஞ்ஞானபூர்வமான உபாயம் தொடர்பான பல கட்டுரைகளை காலத்திற்கு காலம் எழுதியுள்ளார். அதேநேரம் இலக்கிய சுவைஞரான வாமதேவன் எழுதிய இலக்கிய கட்டுரைகளையும் இணைத்து இந்த நூல் வெளி வந்துள்ளது. அவரது கல்விப் புலமையோடும் அனுபவங்களோடும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி பற்றி இந்த நூல் பேசுவது முக்கியத்துவமுடையது. கோ.நடேசய்யர் முதல் சி.வி.வேலுப்பிள்ளை வரையானோர் தொழிற்சங்கத் துறையில் இருந்தவாறே தமது எழுத்துக்களின் ஊடாக இந்த மக்களின் வலிகளையும் வேதனைகளையும் இலக்கிய வடிவமாக்கியுள்ளனர். ஆனால், அரச நிர்வாகத்துறையில் பணியாற்றிய வாமதேவனின் நூல் கூட இலக்கிய வடிவம் பெற்று அந்த மக்களின் அபிவிருத்தி குறித்து பேசுகின்றது. அதற்காக என்ன செய்ய வேண்டும் என பேசுகின்றது. எனவே மலையக மக்களுக்காகவுள்ள தொழிற்சங்க கட்டமைப்பு இந்த புதிய வரவுகளை உள்வாங்கி தமது முன்னெடுபப்புக்களை செய்யத்தலைப்பட வேடும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என காத்திரமான கருத்துக்களை தலைமையுரையில் தெரிவித்திருந்தார்.
வெளியீட்டுரையை ஆற்றிய பேராசிரியர் தை.தனராஜ், மலையக மக்களுக்கு இன்று தேவை கூட்டுபல உபாயமே. மலையக சமூகம் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலமே அதனை அடைய முடியும். அதனால்தான் மலையக மக்களின் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி எனும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு மலையகத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால் அனைவரும் இங்கு வருகை தரவில்லை. அதேநேரம் அக்கறை உள்ளவர்கள் வருகை தந்துமுள்ளனர். மலையகக் கல்வியாளர்களும் புத்திஜீவகளும் தமது சிந்தனைகளை செயன்முறைப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முற்படுகின்ற போதும் அவை முறையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முனையாத ஒரு துரதிஸ்டம் நிகழ்ந்துவருகிறது. இந்த நூலை எழுதி வெளியிடும் வாமதேவன் தலைமையில் மலையக மக்களின் அபிவிருத்திக்காக தோட்ட உட்டமைப்பு அமைச்சுக்காக உத்தியோகபூர்வ பத்தாண்டு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. கல்வியாளர்களும் சமூகப்பிரதிநிதிகளும் இணைந்து தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த திட்ட வரைபு எவ்வித கரிசனையும் அற்று இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளமையே இன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது என அசட்டையாக பதில் கூறப்படுகின்றது. அந்த முயற்சியில் பங்கேற்ற அனைவரும் விரக்தியடைந்துள்ளனர். இந்த நூலில் ஒரு கட்டுரையில் வாமதேவன் ‘கொன்கிரீட் பாதைகள் மட்டும் அபிவிருத்தி ஆகிவிடாது’ எனக் குறிப்பிடுவது ஆயிரம் அர்த்தங்களைக்கொண்டது எனவும் தெரிவித்தார்
வாமதேவனின் ஆசிரியரான பேராசிரியர் மு.சின்னத்தம்பி நூலினை வெளியிட்டு வைக்க தொழிலதிபர்களான எம்.சுப்பிரமணியம், ஆர்.நடராஜா, ப.சிவகுரு, எல்.வேலு ஆகியோர் முதற் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், அரச உயர் பதவிகளில் உள்ளோர், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பலருக்கும் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. குறிப்பாக நூலாசிரியரின் பல்கலைக்கழக நண்பர்கள் அவர்களது ஒன்றாக பேராசிரியரான மு.சின்னத்தம்பியிடம் பிரதிகளைப்பெற்றுக்கொண்டனர். அவர்களுள் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த மலையக கல்வியாளரான பேராசிரியர் சுப்பையா முக்கியமானவர். ராகலை பிரதேசத்தில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற இவர் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் காலநிலையியல் துறையில் உலகப்புகழ்பெற்ற பேராசிரியராக விளங்குகின்றார்.
நூலின் ஆய்வுரையை கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.அனீஸ் திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டப்பின்னர் தேசிய பொருளாதாரத்தில் மலையக மக்கள் வகித்து வந்த முக்கியத்துவம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனைய துறைகள் மலையக மக்களின் பொருளாதாரத்தின் வகிபாக நிலையைப் பிடித்துள்ளது. ஆகையால் பேரினவாத அரசுகள் இம்மக்களை சமத்துவ அபிவிருத்தியில் எந்தளவு தூரம் இணைத்துக்கொள்கின்றது என்பது ஒரு பாரிய கேள்விக்குறி இன்று ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் மலையகத்தின் விடிவுக்காக இருக்கக்கூடிய ஒரேயொரு வழியாக கல்விதான். கல்விரீதியாகவே இந்த சமூகத்தை மேம்படச் செய்ய முடியும். இந்த அடிப்படையிலேயே மலையகத்திற்கு தனியான பல்கலைக்கழகம் தேவை என்ற மலையக கல்விமான்களில் கருத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது என்றார்.
ஊடகவியலாளர் பார்வையில் கருத்துரை வழங்கிய தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், மலையக மக்கள் இன்றும் பல்வேறு துன்பியல் அவலங்களுடனேயே வாழ்ந்த வருகின்றனர்.அவர்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பெற்றுக் கொடுப்பதில் தவறில்லை. அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அரசாங்கத்துடன் பேரம்பேசி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது அடுத்த தலைமுறையினர் முன்னெடுக்கும் அரச ஆதரவு நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகிறது. மீரியபெத்த மண்சரிவு அபாயத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு ஆறுதல் சொல்ல வட மாகாண அரசியல் பிரதிநிகள் வருகை தந்திருந்த போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கைவிடும் அரசியல் அநாகரீகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மலையக மக்களின் பாரம்பரியங்களை அறியாதோரை தொடர்ந்தும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளாக அங்கீகரித்துக் கொண்டிருப்பதற்காக மலையக இளைய சமூகம் அவமானப்படவேண்டும் என தெரிவித்தார்.
சமூக ஆய்வாளர் பார்வையில் கருத்துரை வழங்கிய சமூக ஆய்வாளர் பெ.முத்துலிங்கம், உலகளாவிய ரீதியில் இன்று உள்ள செல்நெறிக்கு அமைவாக தனது நூலின் தலைப்பைத் தெரிவு செய்துள்ளார். இன்று சமத்துவ அபிவிருத்தி பற்றியே அதிகம் உரையாடப்படுகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தோமஸ் ரிக்கெட்டி என்ற அறிஞர் ‘21ம் நூற்றாண்டில் மூலதனம்’ எனும் நூலை எழுதியுள்ளார். அவர் இந்த அசமத்துவ அபிவிருத்தியை பற்றியே பேசுகின்றார். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல் கொள்கைகள் அசமத்துவ அபிவிருத்தியை ஏற்படுத்தி வருகின்றமை பற்றி அவர் தெளிவாக விளக்குகின்றார். நமது மலையகக் கல்வியாளரான வாமதேவன் மலையகத்தில் நிலவக்கூடிய அசமத்துவ அபிவிருத்திபற்றி ஆய்வு செய்திருக்கிறார 1960 களில் மாணவப் பருவகாலம் முதல் இன்றைய 2014 வரை அவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு சமத்துவ அபிவிருத்தியை நோக்கி எனக்குறிப்பிட்டிருப்பது என்பது அசமத்துவ அபிவிருத்தியிலேயே மலையகம் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகவுள்ளது எனக்குறிப்பிட்டார்.
அரசியல் செயற்பாட்டாளர் பார்வையில் கருத்துரை வழங்கிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மலையக மக்கள் குறித்த கலந்துரையாடலுக்கான காத்திரமான கூட்டமாக இதைப்பார்க்கிறேன். மலையக மக்களின் சனத்தொகை அளவு தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 1960களில் இலங்கையில் இரண்டாம் நிலையில் இருந்த மலையக சனத்தொகை இன்று நான்காம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு இந்தியா திரும்பி சென்னறமை ஒரு காரணமானாலும் மலையக மக்கள் என தமது இன அடையாளத்தை உறுதிப்படுத்தாமையம் காரணமாகும். ஒன்றில் மலையக மக்கள் என்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்தி சனத்தொகைக் கணக்கெடுப்பில் பதிய வேண்டும் அல்லது தமிழர்கள் என்ற பொது அடையாளத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மலையகத்தில் மண்சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படுவதற்கு அரசாங்கம் தனியாரிடம் கம்பனிகளை ஒப்படைத்துவிட்டு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது பிரதான காரணமாகும். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்காக நாம் கடுமையாக உழைத்து வருகின்றோம். அமையப்போகும் அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.
பேராசிரியர் சோ.சந்திரசெகரன் நூலாசிரியர் வாமதேவனுக்கு வாழ்த்துரை வழங்கியதோடு கருத்துரை வழங்கிய மனோ கணேசன் மிகவிரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதாக தெரிவித்தார். அப்படி அமையும் பட்சத்தில் மனோகணேசன் முக்கிய பதவி வகிப்பார் என்பதில் ஐயமில்லை. அப்போது அவரது கருத்துரையில் குறிப்பிட்ட மலையக காணியுரிமையுடன் கூடிய தனிவீட்டுத்திட்டம் மற்றும் மலையகப் பல்கலைக்கழகம் போன்றவற்றை அமைத்துத்தருவார் என நம்புகிறோம் எனக்குறிப்பிட்டார்.
நூலாசிரியர் எம்.வாமதேவன் தமது ஏற்புரையில் இந்த நூலை எழுதி வெளியீடு செய்ததன் பின்னணி குறித்துக் கருத்துத் தெரிவித்ததோடு விழாவுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் மலையகம் மற்றும் மலையகம் சாராத ஆனால் மலையகம் குறித்த அக்கறையுள்ள பல்வெறு தரப்பினரும் கலந்து சிறப்பித்த அரசியல், சமூக. இலக்கிய நிகழ்வாக ஒழுங்கு செய்திருந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினரும் அதற்கு கால்கோளிட்ட பாக்கியா பதிப்பகத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.
நன்றி வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...