99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 20
1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய நிலையில், அந்த செய்தியை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வேலைத்திட்டத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) தொடங்கியது. கூடவே இலங்கையின் குடியரசு தினத்தைப் பகிஸ்கரிக்கும்படி கோருகின்ற ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். யாழ்ப்பாண பஸ் நிலையத்தின் அருகில் தந்தை செல்வாவின் தலைமையில் கூடி விநியோகித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கி தாங்கிய பொலிசார் ஜீப்களில் வந்து வேகமாக பாய்ந்தனர்.
உங்களைக் கைது செய்யும்படி எங்களுக்கு உத்தரவு கிடைத்துள்ளது. எங்களுடன் பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள் என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறினார். அனைவரும் ஜீப்களில் ஏறினர். ஆனால் தந்தை செல்வநாயகத்தைப பார்த்து நீங்கள் வர வேண்டாம் என்றார் இன்ஸ்பெக்டர். என்னையும் கைது செய்யுங்கள் என்று செல்வநாயகம் கூறியபோதும். உங்களை எங்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டார் இன்ஸ்பெக்டர்.
1976 மே 22 ஆம் திகதி தேசத்துரோகத் துண்டுப்பிரசுரங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை என்ற குற்றங்களின் பேரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சாவகச்சேரித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், ஊர்காவற்றுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.பொ.ரத்தினம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரான மு.சிவசிதம்பரம், பருத்தித்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் அவ்வாறு கைது செய்யப்பட்டார்கள்.
இந்த உத்தரவைப் பிறப்பித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பீலிக்ஸ் ஆர்.டயஸ் பண்டாரநாயக்க இதன் விளைவை கொஞ்சமும் எதிர்பாத்திருக்க மாட்டார்.
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் கடுமையாக சோதனை செய்யப்பட்டன. பின்னர் இவர்கள் கொழும்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.
பின்னர் மு.சிவசிதம்பரம் விடுதலை செய்யப்பட்டாலும் மற்றைய நால்வரும் விமானம் மூலம் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்டு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் தேசத்துரோகக் குற்றத்துக்காக 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைவாசம், சொத்துப் பறிமுதல் என்றெல்லாம் அரசு அறிவித்துக்கொண்டிருந்தது.
ட்ரையல் -அட்-பார்
இந்த நால்வரின் மீதும் தேசத்துரோக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கு யூரிகள் அற்ற ட்ரயல் அற் பார் (Trial At Bar - TAB) முறையில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்களுக்கு ஆதரவாக திருவாளர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு. திருச்செல்வம், மு. சிவசிதம்பரம் உட்பட 67 தமிழ்ச்சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மாத்திரமல்ல இலங்கையின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியற்சட்ட வரலாற்றிலும் ஒரு முக்கிய பதிவாக இந்த வழக்கு அமைந்தது.
அமிர்தலிங்கத்தை அரசியலிலிருந்து அகற்றுவதற்கான திட்டமாக இருக்கலாம் என பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் 'சா.ஜே.வே.செல்வநாயகமும் இலங்கைத் தமிழ்த் தேசியமும் (S.J.V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Tamil Nationalism 1947-77) என்கிறற அவரது நூலில் குறிப்பிடுகிறார்.
அரசியல் குற்றச்சாட்டுகள் என்பதால் வழமையான ஜூரர்கள் முன்னிலையில் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. அப்படி செய்தால் தமிழ் ஜூரர்களை கோரும் உரிமை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இருந்தது. அந்த சிக்கலைத் தவிர்ப்பதற்காக மூன்று நீதிபதிகள் விசாரிக்கும் ட்ரையல்-அட்-பார் விசாரணையை நடத்த அரசாங்கம் முடிவு செய்தது. இதை மேற்கொள்வதற்காக அவரசகால சட்டத்தின் 59வது விதியையும் அவசரமாக அரசாங்கம் திருத்தியது.
இதன்படி அன்றைய சட்டமா அதிபர் சிவா பசுபதியினால் அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குறித்த வழக்கை 'ட்ரையல்-அட்-பார்' முறையில் விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஜே.எப்.ஏ. சூசா, ஆனந்த.ஜீ.டி சில்வா, அட்டர்னி ஜெனெரல் பதவி வகித்த சிவா செல்லையா ஆகியோர் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை 1976 ஜூன் 18 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் எஸ்.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.திருச்செல்வம் மற்றும் கொழும்பிலுள்ள மிகவும் பிரபலம் பெற்ற தமிழ்ச் சட்டத்தரணிகள் ஒன்றுபட்டு ஏறத்தாழ 61 சட்டத்தரணிகள் குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜராகினர். அரசர் வழக்கறிஞரான (King’s Counsel - KC) எஸ்.ஜே.வே.செல்வநாயகமும், ராணி வழக்கறிஞரான (Queen’s Counsel - QC) ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இணைந்து வழக்காடியமை முக்கிய நிகழ்வாகும். . அரசர் வழக்கறிஞர், ராணி வழக்கறிஞர் என்பது இலங்கை பிரித்தானிய முடியின் கீழிருந்த காலத்தில் ஒரு வழக்கறிஞருக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரும் கௌரவம்.
செல்வநாயகத்தின் கீழ் இந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜராவாரா என்கிற ஐயம் பலருக்கும் இருந்தது. ஆனால் இந்த விடயத்தில் எந்தவித கௌரவமும் எவரும் பார்க்காமல் ஒன்று பட்டு மிகத் திறமையாக தமது திட்டமிட்டபடி வழக்கை புது கோணத்தில் திருப்பினர்.
அருகதையற்ற நீதிமன்றம் !?
குற்றம் சாட்டப்பட்டவர் இந்நீதிமன்றுக்கு இவ்வழக்கினை விசாரிக்கும் அதிகாரமே இல்லையென்ற நிலைப்பாட்டினை எடுப்பார் என்று நீதிமன்றத்துக்கு அறிவித்தார் ஜீ.ஜீ.பொன்னம்பலம். அதன் அடிப்படையிலேயே தாம் வாதிடப்போவதாகவும் அவர்களுக்கு அறிவித்தார். இது அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
என்றாலும் நீதிமன்றத்துக்குரிய மரியாதையினை வழங்கும் முகமாக குற்றப்பத்திரிகையை ஏற்பதாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற கிளார்க் குற்றப்பத்திரிகையை வாசித்துவிட்டு உரிய பத்திரங்களைக் கையளித்தார். நால்வரும் அதனை அமைதியாக பெற்றுக் கொண்டனர். நீங்கள் குற்றவாளியா? சுற்றவாளியா என்று முதலில் அமிர்தலிங்கத்தை நோக்கி கேட்கப்பட்டது. அப்போது சில முக்கிய விடயங்களை வாதிடப்பட இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ போவதில்லை என்று குறிப்பிட்டார் ஜீ. ஜீ.பொன்னம்பலம்.
இதற்குப் பதிலளித்த சட்ட மாஅதிபர் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்களை மறுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், குற்றவாளியா, சுற்றவாளியா என்பது பற்றி சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். எதிரி தான் குற்றவாளியா சுற்றவாளியா என்று சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் இந்த நீதிமன்றம் உருவாவதற்கு அடிப்படையான அவசரகாலச் சட்டவொழுங்குகளின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குட்படுத்துவதனால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ தேவையில்லை என்றார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரான அமிர்தலிங்கம் ஏன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்ற காரணத்தை நீதிமன்றத்துக்குச் சொல்வதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் நீதிமன்றின் அனுமதியைப் பெற்றார்.
எதிரி எதையும் கூறத்தேவையில்லை. அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. என்றார். அமிர்தலிங்கமும் ஏனைய மூவரும் குற்றவாளிக் கூண்டில் ஏறியதும் அமிர்தலிங்கம் இந்த விடயங்களை முன்வைத்தார்.
- முதலில் இந்த நீதிமன்றத்தை அமைத்த அவசரகால சட்டமே செல்லுபடியாகாது.
- இந்த நீதிமன்றமே அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. முதலில் 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியற்றது;
ஆகவே எமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை குற்றவாளியா சுற்றவாளியா என்பது எமக்குத் தெரியாது என்றனர். அந்த அடிப்படையில் வாதிடப் போவதாக அறிவித்தார் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.
முதலில் அவர்களை பிணையில் விடுவிக்கும் கோரிக்கையை வென்றெடுத்தனர். நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர். ஜூலை 12 அவரசகால சட்டம் ஏன் செல்லுபடியாகது என்று வாதிட்டார்.
முதலாவது பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பிலான வாதங்களை ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்வைத்தார்.
அரசுக்கு கொடுத்த அதிர்ச்சி
நடைமுறையிலிருக்கும் அவசரகால சட்டத்தை 1972 மே 15 ஆம் திகதி கவர்னர் ஜெனரலின் பிரகடனத்திற்கேற்ப நடைமுறைக்கு வந்தது. அதாவது மே 22 குடியரசு அரசியலமைப்பு வருவதற்கு முன்னர். சோல்பரி திட்டத்தின் கீழ் அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே இருந்தது. ஆனால் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு இந்நிலையை மாற்றிவிட்டது. 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பின் கீழ் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வது பற்றி தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு மாற்றியது. பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யலாம்.
1972 மே 15 அன்று செய்யப்பட்ட அவசரகாலப் பிரகடனமானது பிரதமரின் ஆலோசனையின்படி செய்யப்படவில்லை. ஆகவே, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததும் மீண்டும் புதிதாக பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அவசரகாலநிலையைப் பிரகடனம் செய்திருக்க வேண்டும். அதற்கேற்ப அவசரகால சட்டம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை என்பதால் நடைமுறையிலுள்ள அவசரகால சட்டம் செல்லுபடியற்றதாகும்.
ஆகவே, அவசரகால நிலையின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து சட்ட ஒழுங்குகளும் கூட செல்லுபடியற்றவை என்பதுடன் எவ்வித சட்ட வலிமையும் அற்றதாகும் என்று ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாதத்தை முன்வைத்தார். அதன் அடிப்படையில் இந்நீதிமன்றமும் அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் உருவானதால், இந்நீதிமன்றமும் செல்லுபடியற்றது என்றும், அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சட்டவிரோதமானவை என்றும் வாதிட்டார் அவர்.
அடுத்தது 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பு செல்லுபடியற்றது என்கிற வாதத்தை முன்வைத்தார் எம்.திருச்செல்வம்..
சோல்பரி அரசியலமைப்பின் 49வது சரத்தையும் சுட்டிக்காட்டி அதன் பிரகாரம் அந்த யாப்பைத் திருத்துவதற்கு மட்டுமே இடமுண்டு. முற்றாக மாற்றுவதற்கு அதிகாரமில்லை. ஐக்கிய முன்னணி அரசாங்கமோ இதனை மாற்றுவதற்கு மக்கள் ஆணையை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தாலும் அப்படியொரு ஆணையை பெற்றுள்ளதா என்பது சந்தேகம் என்று வாதிட்டார். புதிய அரசியலமைப்புத் திட்டமொன்றை ஆக்கப்போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபோதும் மக்கள் மத்தியில் அதனை ஒரு பிரதான விடயமாக பிரசாரத்தின் போது கொள்ளவில்லை. அதற்கான தமிழ் மக்களின் அங்கீகாரத்தையும் அது பெறவில்லை. 1970 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் சமஷ்டியையே ஏற்றுள்ளனர் என்று வாதிட்டார் திருச்செல்வம்.
வழக்கு விசாரணையும் முடிவடைந்து, 1976 செப்டம்பர் 16 அன்று 67 பக்கங்களைக் கொண்ட அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலே எழுப்பப்பட்ட முதலாவது பூர்வாங்க ஆட்சேபனையை நீதிமன்று ஏற்றுக்கொண்டது.
அதன்படி அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்படாமையினால், அதன்கீழ் உருவான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செல்லபடியற்றது என்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த நால்வரையும் கைது செய்வதற்கு எந்த சட்டத்தைப் பயன்படுத்தியதோ அந்த அவசரகால சட்டமே செல்லுபடியற்றது என்கிற அதிரடித் தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம்.
அந்த அவரசகால சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்நீதிமன்றம் முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன். இதன் நிமித்தம் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. இரண்டாவது பூர்வாங்க ஆட்சேபனை பற்றிக் குறிப்பிட்ட நீதிமன்று, முதலாவது குடியரசு அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மை பற்றி ஆராயும் அதிகாரம் இந்நீதிமன்றுக்கு இல்லை எனத் தீர்ப்பளித்து நான்கு பேரையும் விடுவித்தது.
அந்த வகையில் நீதிமன்றமும் முறைப்படி அமைக்கப்படாமையால் இரண்டாவது வாதமான அரசியலமைப்பின் செல்லுபடியற்றத்த்தன்மை குறித்து தீர்ப்பளிக்கும் அதிகாரமும் தமக்கு இல்லை என்று என்றும் அறிவித்தனர்.
தீர்ப்பை மாற்றிச் சொல்!
இந்த தீர்ப்பு அரசாங்கத்துக்கு மிகப் பெரும் அதிர்ச்சியையும், பேரிடியையும் கொடுத்தது. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தலைமையில் இது பற்றி ஆராய ஒரு உயர்மட்ட மாநாடு ஒன்று கூட்டப்பட்டது.
அவசரகால நிலை செல்லுபடியாகாது என்ற தீர்ப்பால் ஏற்கெனவே அவசரகால சட்டவொழுங்குகளின் கீழ் பல வழக்குகள் நிலுவையிலிருந்த நிலையில், அந்த வழக்குகளும் கைவிடப்பட வேண்டி வரலாம். அவசரகால நிலை செல்லுபடியற்றது எனத் தீர்ப்பளித்தால் நீதிமன்றம் ஏற்கெனவே அச்சட்டத்தின் கீழ் வழங்கிய தீர்ப்புகளும் செல்லுபடியற்றதாகிவிடும். இது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது. சட்டமா அதிபர் சிவா பசுபதி உயர் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிய சிக்கல்களையும் நீதியரசர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்தத் தீர்ப்பை மாற்றியமைப்பதற்கான மேன்முறையீட்டை சட்ட மாஅதிபர் சுப்ரீம் கோர்ட்டுக்கு செப்டம்பர் 15 அன்று செய்தார்.
|
சட்டமா அதிபர் சிவா பசுபதி |
பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோன், நீதியரசர் ஜீ.ரீ.சமரவிக்ரம, நீதியரசர் வீ.ரீ.தாமோதரம், நீதியரசர் நொயெல் தித்தவெல, நீதியரசர் டபிள்யூ.டீ.குணசேகர ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாற்றியமைத்தது. நீதிமன்றம்; குறித்த மேன்முறையீட்டை விசாரித்து, அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது என்றும், அது செல்லுபடியானது என்றும் தீர்ப்பளித்ததுடன், மேல் நீதிமன்றமானது குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கப் பணித்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்தில் 1977 பெப்ரவரி 10 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நால்வர் மீதான வழக்கை மேற்கொண்டு தாம் நடத்தப்போவதில்லை என்று சட்ட மாஅதிபர் நீதிமன்றிற்கு அறிவித்தார். அதன்படி அமிர்தலிங்கம் உட்பட நான்கு தலைவர்களும் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க அரசு சட்ட வாய்ப்புகளைத் தேடித் தேடி பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அந்த சட்டமே முதலில் முறைகேடானது என்கிற வாதத்தை அதே நீதித்துறையைப் பயன்படுத்தி வெற்றி கொண்டனர் தமிழ்த் தலைவர்கள். ஆனால் அகிம்சா வழி அரசியல் முயற்சிகளையும், சட்ட வழியிலான முயற்சிகளையும் மேலும் சீண்டிப் பார்க்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டது. 1977 தேர்தலும், ஐ.தே.க.வின் வெற்றியும், அதனைத் தொடர்ந்த கலவரமும் அடுத்தடுத்து இந்த நாடு சந்திக்கப் போகும் விபரீதங்களுக்கு கட்டியம் கூறின.
துரோகங்கள் தொடரும்...
குறிப்பு
இந்தத் தொடர் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றைக் கூறுவதற்கான தொடர் அல்ல. அது பற்றி பல நூல்கள் வெளிவந்திருப்பதால். சில விடுபட்ட விடயங்களையும், சொல்லப்படாமல் இருக்கும் விடயங்களையும் உள்ளடக்கி “நம்பிக்கை துரோகங்களையும்”, “உடன்பாடு மீறல்களையும்”மையப்படுத்தி தொகுப்பதே இலக்கு. அப்படி கூறும்போது தவிர்க்கமுடியாதபடி பல்வேறு நிகழ்ச்சிகளையும் கோர்வையாக தாண்டியே ஆக வேண்டியிருக்கிறது. மையப் புள்ளியில் மாத்திரம் கவனத்தைக் குவித்து சுருக்கும் வகையில் இனி வரும் தொடரில் நிகழ்சிகளை காலவரிசைப்படி தொகுத்துக் கூறும் அட்டவணையுடன் வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.