Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

"மன்னரின் நினைவு தினத்தை அரசாங்கம் அனுஷ்டிக்க வேண்டும்" ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் வாரிசுகள் கோரிக்கை


கண்டி தேசத்தை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கன் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்க போராடிய மாவீரன். மதுரை நாயக்கர் வழிவந்த தமிழ் அரசன். சிறந்த வீரன். இலங்கை முழுதும் தமது அதிகாரத்தை பரப்பிய ஆங்கிலேயர் கண்டி இராஜ்ஜியத்தை மட்டும் நெருங்க முடியவில்லை. அதற்கு ராஜசிங்க மன்னனின் பாது-காப்பு வியூகங்கள் முக்கிய இடத்தைப்பிடித்தன.
இம்மன்னனின் மனைவி வழி வாரிசுகள் இன்னும் அதே கம்பீரத்துடன் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்-றனர். இதில் முக்கியமானவர் வி.அசோக்ராஜா.இவர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் கொள்ளுப்பேரனாவார். இவரைக் கேசரி வார இதழுக்காக தமிழகத்தில் வைத்து சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் 186 ஆவது நினைவு தின நிழ்வுகளுக்காக அவர் தயாராகிக்கொண்டிருந்தார்.

தமிழ் மன்னனின் கொடியே இலங்கையின் தேசிய கொடி 
1962 ம் ஆண்டு வரை இலங்கை அரசு ஆங்கிலேயரிடம் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி வாரிசுகளுக்கு வழங்கி வந்த மானியம் (பென்சன்) நிறுத்தப்பட்டது. கண்டி தேசத்து தமிழ் அரசனின் ஆட்சிக் கொடியே இன்றைய இலங்கையின் தேசியக் கொடியாகும் என்றார் வி.அசோக்ராஜா.

இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக வீரப்போர் புரிந்த கண்டி தமிழ் மன்னன் எனது தாய் வழி தாத்தா-வாவார். ஆங்கிலேய படையுடன் நான்கு முறை போர்புரிந்து வெற்றி பெற்றவர் அவர்.

ஐந்தாவது முறை அரசனின் பிரதானியான எகலப்பொல, ஆட்சியை தான் கைப்பற்றும் எண்ணத்துடன் வெள்ளைக்-காரனிடம் அடிமையாகி அரசனைக் காட்டிக்கொடுத்தான். அதன் பின்னரே எனது தாத்தாவான ஸ்ரீ விக்ரமராஜசிங்-கனை வெள்ளைக்காரப் படையினர் கைது செய்தனர்.

ஸ்ரீ வீரநரேந்திரசிங்கன்(1706-1739) 1739, ல் இறந்தான். வீரநரேந்திரனது மரணத்திற்குப் பின்னர் 1739 இல் மன்னரின் மைத்துனனான ஸ்ரீ விசயராசசிங்கன் ஆட்சிக்கு வந்தார்.

இவர் எங்கள் நாயக்கர் வம்சத்தவர். முதலாம் விமலதர்மன் காலந்தொட்டு தொடர்ச்சியாக வந்த பழைய சிங்கள இராஜவம்சம் ஸ்ரீ வீரநரேந்திரசிங்க னின் மறைவுடன் மறைந்து விட்டது. நாயக்கர்களின் ஆட்சி கண்டிப்பிர தேசத்தில் தொடங்கியதும் கண்டி அரசசபையில் புதிய பழக்க வழக்கங்கள் தோன்றின. நாயக்கர்கள் மதுரையில் இருந்து கண்டிக்கு வருகைதரத் தொடங்கினர்.

ஸ்ரீ விசயராசசிங்கனின்(1739/1747) மறைவின் பின்னர் ஸ்ரீ கீர்த்தி இராசசிங்கன்(1747/1780) பின்னர் ஸ்ரீ இராசா-திராசசிங்கன் (1780/1798)ஆகியோர் சிறப்பாக ஆட்சி புரிந்தனர். இவர்கள் சிங்கள மொழிக்கும் ,சிங்கள இலக்கி-யத்திற்கும், பௌத்த மதத்திற்கும் பெரும் மதிப்பைக் கொடுத்தனர்.

கீர்த்தி ஸ்ரீயின் ஆட்சிக் காலத்தில் சிங்கள இலக்கியம் பெரிதும் வளர்ச்சியுற்றது. இலங்கையின் சரித்திர ஆய்விற்கு இன்றியமையாததொரு சாதனமாய் விளங்கும் “மகாவம்சம்” நூல் கீர்த்தி ஸ்ரீயின் கட்டளையால் எழுதப்பட்டதாகும். கங்காராம விகாரையையும் கீர்த்தி ஸ்ரீ நிர்மாணித்து பௌத்த மதத்தை வளர்த்தார். தம்புள்ள குகைகளில் காணப்படும் அழகு நிறைந்த ஓவியங்கள் கீர்த்தி ஸ்ரீயின் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வாகும் என்கின்றார் கண்டி அரசன் வாரிசான வி.அசோக்ராஜா. மேலும் தொடர்ந்த அசோகராஜா, 1798 இல் ஸ்ரீ இராசாதிராசசிங்கனின் மறைவை அடுத்து எனது தாத்தா ஸ்ரீவிக்கிரமராசசிங்கன் 1798 இல் அரசுப் பொறுப்பை ஏற்றார். கண்ணுச்சாமி என்ற இவரின் இயற்பெயர் விக்கிரமராசசிங்கன் என அரச பதவி வழியில் மாற்றம் பெறுகிறது.

இவர் ஆட்சி ஏற்ற காலம் முதல் சிங்களப் பிரதானிகள் இவருடன் முரண்பட்டனர். இலங்கையின் எல்லாப் பிரதே-சத்தையும் கைப்பற்றிய ஆங்கிலேயரால் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற முடியாது திண்டாடினர். இவரின் ஆட்-சியை அழிக்க பலரும் பலமுறை முயன்றும் தோல்வியை அடைந்தனர். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் 18.02.1815 இல் காட்டிக் கொடுக்கப்பட்ட பின்னரே ஆங்கிலப் படையிடம் சரணடைந்தார். இது பெரும் வரலா-றாகும். எனது தாத்தாவைக் காட்டிக்கொடுத்த எகலப் பொலவும், 1817 இல் கைது செய்யப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத தீவாந்திரதீவான மொறிசியஸ் தீவிற்கும் அருகேயுள்ள சிறு தீவில் தண்டனைக் கைதியாக அனுப்பப்பட்டு தனிப்பட்டு மரணமானான்.

இதன் பின்னர் எங்கள் தாத்தா விக்கிரமராஜசிங்கனுக்கும் ஆங்கிலப் பிரதானிகளுக்கும் இடையே இடம் பெற்ற உடன்படிக்கையின்படி மன்னருக்கும், பின்னரான பரம்பரையினருக்கும் இலங்கை அரசு மானியம் வழங்க வேண்-டுமென உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன்படி அரசுக்குப் பலசலுகைகளையும் ஆங்கில அரசு வழங்கியது.

ஆனால், 1962 இல் எல்லா சலுகைகளும் சிறிமாவோ அரசால் இல்லாதொழிக்கப்பட்டன. பெண் வழி வாரிசுக-ளுக்கு பென்சனை மொத்தமாக வழங்கி இல்லாதொழிக்கப் பட்டதாம். 

இதற்கு மன்னனின் வாரிசுகள் ஆட்சேபனை தெரிவித்தனர். அதற்கு உரிய பதிலாக ஸ்ரீவிக்கிரமராசசிங்கன் எங்கள் மன்னன் என்பதைத் தெரிவித்தனர். இலங்கையில் எங்களை குடியேறச் சொன்னார்கள். இலங்கையில் குடியே-றினால் அரச சலுகைகளை அனுபவிக்கலாம் இல்லாவிடின் எந்தவித சலுகைகளையும் வழங்க இயலாது என சிறி-மாவோ அரசு சொல்லியது. அதனை மன்னனின் வாரிசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கின்றார் வி.அசோக்ராஜா.

தொடர்ந்து விபரிக்கின்றார் அசோக்ராஜா, இதன் பின்னர் எங்களின் சிரேஷ்ட உறவினர்கள் அனைவரும் வழக்குத் தொடர முன்வந்தனர். சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொருளாதார சிக்கலால் வழக்கை முன்னெடுக்க இயலாது கைவிடப்பட்டது. இன்று இம் மன்னர் பரம்பரையின் இறுதி வாரிசுகளில் இருவர் மட்-டுமே உழைத்து முன்னேறியுள்ளனர் என விவரிக்கின்றார் அசோக்ராஜா.

வறுமை மனஅழுத்தம் காரணமாக மன்னரின் வாரிசுகளில் ஒருவரான என்.ஏ.துரைசாமிராஜா சென்னையில் கடலில்-பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மூன்று நாட்களின் பின்னரே இவரின் சடலம் கிடைக்கப் பெற்றது. இறு-தியில் அவரின் கழுத்தில் கிடந்த பதக்கம் மூலமே சடலம் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் கண்டி மன்னனுடன் கப்பலில் வேலூருக்கு ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட27 குடும்பமும் வறு-மையில் வாழ்ந்தனர். இவர்கள் வறுமையினால் ஸ்ரீரங்கம், மதுரை, ஆந்திரா சித்தூரில் குடியேறினர். மன்னரின் முக்-கிய பிரதானிகள் தஞ்சாவூர் அரண்மனைக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவில் நிர்மா-ணிக்கப்பட்ட “கண்டி பெலஸ்” எனப்படும் மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். இன்று இம்மாளிகையும் வேறு ஒரு கைக்கு மாறிவிட்டது. இவர்கள் அனைவரும் வறுமையின் காரணமாக இடம் பெயர்ந்து கண்டி மன்னன் என்ற அடையாளத்தை தொலைத்து வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒன்று கூடல்நிகழ்வொன்றை நடாத்தவுள்ளோம்.

இலங்கை அரசு கண்டி மன்னரின் நினைவு தினத்தை ஜனவரி 30 இல் அனுஷ்டிக்க வேண்டும். 30.01.1832 இல் கண்டி மன்னர் வேலூர் சிறையில் மரணமானார். இவ்வருடத்துடன் 186 வருடங்கள் கழிந்துவிட்டன. ஒரு வருடமாவது இலங்கை அரசு இம் மன்னனின் நினைவு தினத்தை அனுஷ்டித்ததா---? இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் விக்கிரமராசசிங்கன் என்பதையாவது அரசு நினைக்க வேண்டும். இலங்கை அரசு, அரச விழாவாக மன்னனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்.மரியாதை வழங்க வேண்டும். எனது தாத்தாவின் நினைவு தினத்தை வருடா வருடம் வேலூரில் வெகு சிறப்பாக நடத்துகிறோம் என தகவல்களை வழங்குகிறார் அசோக்ராஜா. 

சிலாபம் திண்ணனூரான்

நன்றி - வீரகேசரி


மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் அரசியல் அடையாளத்தை இழக்கும் அபாயம்


நாட்டில் இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் பின்னர் இடம் பெற்ற நிகழ்வுகள் பல்வேறு படிப்பினைகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. பல்வேறு வகையில் சிக்கல்கள் நிறைந்ததாக அந்தத் தேர்தல் முறை காணப்பட்டது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்கள் புதிய இதே முறையின் கீழ் நடைபெற்றால் மலையக இந்திய வம்சாவளியினரின் அரசியல் அடையாளம் இல்லாமல் போய்விடும். இதனை அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன. மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா உள்ளூராட்சி மன்றங்களில் இதை அவதானிக்க முடிந்தது.

ஒரு ஸ்திரமற்ற ஆட்சி நிலையே இன்று இந்நாட்டில் நிலவுகிறது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உள்ளது. நல்லிணக்கம், சகவாழ்வு என்ற பூச்சாண்டி பிரசாரத்தால் மலையக மக்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எந்தவித முன்னேற்றமும் பெற போவதுமில்லை . சிந்தையும், செயலும் ஒன்று பட்டால் மலையகத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு மணிக்கட்டுவது யார்? இன்று மலையக மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். ஒரு தேங்காயின் விலை நூறு ரூபாவைத் தாண்டி விட்டதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.

இவ்வாறான நிலையில் மலையக மக்கள் வானம் பார்த்து பூமியாகவே வாழ்கின்றனர்.

இன்று அரசியல் என்று பார்க்கும்போது அது பெரும் வருமானத்தை ஈட்டும் தொழிலாகிவிட்டது. அரசியலில் இலாபம் தேடுவதும், தேர்தலில் செலவிட்ட ரொக்கத்தை உழைப்பதும் பல அரசியல்வாதிகளினது நோக்கமாகவுள்ளது. இப்பெரும் பலவீனத்தை பேரினவாத சக்திகள் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கின்றன. இன்று எந்தவொரு அரசியல்வாதியும் வறுமை நிலையில் இல்லை. பலமும், செல்வமும் படைத்த சீமான்களாகவே உள்ளனர்.

இந்நாட்டில் இலவசக் கல்வியை அறிமுகம் செய்து வைத்த அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் சி.டபிள்யூ. டபிள்யூ கன்னங்கர தன் சொந்த ஊரான மத்துகமவில் பெரும் வறுமையில் வாழ்வதைக் கண்ணுற்ற முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, கண்கலங்கி பென்சன் வழங்கி, அவரை வாழ வைத்தார். 26.08.1959 இல் வி.தஹாநாயக்க பிரதமரானார். 1960 இல் இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீ.ல.சு கட்சி படுதோல்வி அடைந்தது. பிரதமர் பதவியை துறந்த தஹாநாயக்க, தனது உடைமைகளை அட்டைப் பெட்டியில் அடுக்கி, பொதியாக்கி எடுத்துக்கொண்டு காலிக்கு பயணமானார். அவர், அலரிமாளிகைக்கு முன்னால் இருந்து சாதாரண இ.போ.ச. பஸ்ஸில் ஏறி தன்
சொந்த ஊரான காலிக்கு புறப்பட்டார். இன்று எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வாறு செயலாற்றுவார்களா? என்பது கேள்வியாகும். இன்று அரசியலில் சுத்தம் என்பது இல்லை . இதன் காரணமாகத்தான் பதுளை கல்லூரி அதிபர் ஒருவரின் பிரச்சினை முடியாத நிலையில் தவணையில் உள்ளது. | இவ்வாறான நிலையில் மீண்டும் கல்வி அமைச்சு ஊவா மாகாண முதலமைச்சரிடமே கையளிக்கப்பட்டுள்ளது. இது மலையக அரசியலில் ஏற்பட்ட அரசியல் பலவீனமாகும்.

இவ்வாறான நிலையில், மலையக அரசியலில் பெரும்பான்மை அரசியல் சக்திகளின் ஊடுறுவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலில் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் இனவாதத்தையும் கக்கும். இதை கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்ணுற்றோம். தேசிய கட்சிகள் அனைத்தும் இனவாதத்தை மூலதனமாகக் கொண்டே செயல்படுகின்றன.

சிங்கள பேரினவாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்கள் மத்தியில் இனவாதத்தை கக்குகின்றனர். ஆனால், மலையக அரசியல்வாதிகளிடம் தங்கள் சமூகத்தினர் மத்தியில் முதலீடு செய்ய எந்தவொரு . திட்டமும் இல்லை . ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் அநாகரிக அரசியலையே பல தசாப்தங்களாக விதைத்து வருகின்றனர். மாகாண சபை தேர்தல்பற்றி வாய் திறக்காது உள்ளனர். மாகாண தேர்தல் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு புதிய முறையில் தேர்தல் நடத்துவதாயின், எல்லை நிர்ணய சபையின் அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது மிக பெரிய கஷ்டமானதாகும். மத்திய மாகாண சபையின் ஆட்சி காலம் இவ்வருடம் ஒக்டோபருடன் நிறைவடைகிறது. புதிய மாகாண சபைத் தேர்தல்கள் விதிப்படி, மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றால் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் கேள்விக் குறியாகவே காணப்படும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்துக்கு வந்த போது மலையக அரசியல்வாதிகள் மௌனம் காத்தனர்.

அரசியல்வாதிகள் அனைவரும் சிங்கள பேரினவாதிகளின் கைகளில் சிக்கி உள்ளனர். அவர்கள் தேர்தல் காலத்தில் அரசியல் முகவரியை மாற்றிக்கொள்வார்கள். பின்னர் பதவி வகித்த கட்சியையே விமர்சனம் செய்வர். இது அரசியல் வித்தை . மக்கள் உணர்வு பெற வேண்டும். அதுவரை மலையகத்தில் வசந்தம் ஏற்படாது.

சிலாபம் திண்ணனூரான்
நன்றி - வீரகேசரி

"மலையகமும் மறுவாழ்வும்" - நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

மலையகமும் மறுவாழ்வும்

நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

களம்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் - வினோதன் மண்டபம்

சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6

காலம்13.05.2018  ஞாயிறு காலை 10 மணி

நிகழ்ச்சி ஒழுங்கமைப்புமலையாக எழுத்தாளர் மன்றம்
மலையக உத்வேக அரசியலுக்கு வித்திட்ட போராளிகளை மறந்தது சரியா? - சிலாபம் திண்ணநூரான்


மலையக பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்காக இதுகாலம் வரையும் 36 பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்-ளனர். தங்களின் உரிமைகளுக்காக பல்வேறு வடிவங்களில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்கள் இடம்பெற்-றுள்ளன. ஆனால் இவை குறித்து மலையக மே தின நிகழ்வுகளில் என்றாவது பேசப்படுகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாகக்கிடைக்கும்.

முதன் முதலாக 12.01.1939 இல் ஹேவாஹெட்ட, முல்லோயா தோட்டத்தில் 16 சத சம்பள உயர்வுக்காக இடம்-பெற்ற போராட்டத்தின் போது கோவிந்தன் என்ற இளம் பாட்டாளி, சுரவீர என்ற பொலிஸ் சார்ஜண்டினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நாட்டில் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு முதன் முதலாக தன் உயிரை நீத்தவர் தியாகி கோவிந்தன் ஆவார். மலையக வரலாற்று பதிவேட்டில் கண்டி பல்லேகல தோட்டத்தைச் சேர்ந்த தோழர் பழ-னிவேல் 1979 இல் தன் உயிரைப் பறிகொடுத்த இறுதி பாட்டாளியாக பதிவாகி உள்ளார். இம் 36 தோழர்களின் தியாகம் மிகவும் இக்கட்டான காலத்தில் இடம்பெற்ற துயர நிகழ்வுகளாகும். இலங்கை அரசியலில் மலையக அர-சியலுக்கு என வரையறுக்கப்பட்ட அரசியல் வரலாறு உள்ளது. 1947 இல் இடம் பெற்ற முதலாவது பாராளு-மன்றத் தேர்தலில் இந்தியத் தமிழர்கள் பெற்ற வெற்றியின் பின்னர் இரண்டாவது பிரவேசம் 1977 இல் இடம் பெற்றமை முக்கியவிடயம். 1977 இல் இடம் பெற்ற தேர்தலில் மலையக மக்கள் ஒரு பெரும் பிரளயத்தை இந்-நாட்டில் ஏற்படுத்தினர்.

பின்னர் சிங்கள தேசியத்திற்கு பின்னால் திரிந்த மலையக அரசியலில் ஒரு தேசிய உணர்வை இத்தேர்தல் உணர்த்தி-யது. உண்மையில் அன்று மலையகத்தின் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் ஒரு விழிப்புணர்வை வெளிக்கொணர்ந்-தது. இந்த காலகட்டத்திற்கு மத்தியில் பல்வேறு போராட்டங்களில் தமது இன்னுயிரை நீத்த மலையக வீரத்தியா-கிகள் பற்றி சர்வதேச தொழிலாளர் தினத்திலாவது தற்போதுள்ள பிரதிநிதிகள் மறந்தேனும் வாய் திறந்து பேச மறுத்து வருகின்றனர். எமது மக்களும் அரசியல்வாதிகளும் சுகபோக வாழ்க்கை வாழ அங்கீகாரம் வழங்கியவர்கள் அனைவராலும் மறக்கப்பட்ட 36 தோழர்களேயாவர். மலையக மண்ணுக்காக அஹிம்சை வழியில் போராடி உயிர்-நீத்த இத் தோழர்களே நாகரிக அரசியல் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தவர்களாவர். தம் உயிர்களைக் கொடுத்து மலையகத்திற்கு அரசியல் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த எமது தோழர்களுக்கு ஒரு நினைவு மண்டபமோ அல்லது தூபிகையோ நிர்மாணிக்கவில்லை.

1977 இல் மலையக அரசியலுக்கு விலாசம் வழங்கியவர் சிவனு இலட்சுமணன் என்ற இளம் (18 வயது) போராளி-யாவார். கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் கோபுரம் கட்டவும் நிதி ஒதுக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு இத்தியாகத் தோழர்களின் நினைவு இல்லாது போனமை கவலைக்குரியதாகும்.

11.5.1977 இல் சிவனு இலட்சுமணன் மலையக மண் சுவீகரிப்பிற்கு எதிராக அரசுக்கெதிரான போராட்டத்தின் போதே பொலிஸாரினால் பத்தனை டெவனில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மரணத்தை அடுத்து கொள்கை அரசியல் மலையகத்தில் விதைக்கப்பட்டது. தேர்தல் இடம் பெற பத்து தினங்கள் இருக்கையில் தோழர் சிவனு இலட்சுமணன் மரணம் பாட்டாளி வர்க்கத்தை அரசியல் களத்தில் இறங்க வைத்தது. அக்கொலை வஞ்சிக்கப்பட்ட பாட்டாளிகளை உசுப்பிவிட்டது எனலாம்.

சிவனு இலட்சுமணன் கொலையோடு 17.05.1977 கம்பளை சங்குவாரித் தோட்டத்தில் ஆறு லயங்கள் இனவெறி-யர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இதேவேளை புசல்லாவை டெல்டா தோட்டத்தில் நூறு வீடுகளுக்கு மேல் தீ வைத்ததுடன் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த மூன்று சம்பவங்-களும் சேவல் சின்னத்தை 1977 தேர்தலில் கூவ வைத்தது எனலாம். பாட்டாளி வர்க்கம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். தன் மானத்தோடு வாழவேண்டும். தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு மே மாதம் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எழுந்தது.

மலையக வரலாற்றில் 30 வருட இடை வெளிக்குப் பின்னர் அமரர் எஸ்.தொண்டமான் வெற்றி பெறவும், பிரசா-ரத்தை மேற்கொள்ளவும் தோழர் சிவனு இலட்சுமணனின் மரணம் சங்குவாரித்தோட்ட கொள்ளைச் சம்பவம் டெல்டா தோட்ட லயன் அறை எரிப்புச் சம்பவங்கள் காரணங்களாகின.

 1977 இல் மலையக மண்ணுக்காக உயிர் துறந்த தோழர் சிவனு இலட்சுமணனின் மண்ணறையின் மீது எழுப்பப்-பட்ட கல்லறையும் பின்னர் பேரினவாதிகளால் தகர்த்தெறியப்பட்டது. இன்று தோழர் சிவனு இலட்சுமணனின் மண்ணறை மீது புல்லும், மரமும் வளர்ந்து காடாகிக் காட்சி தருகின்றது.

1961 இல் நாவலப்பிட்டி லெட்சுமி தோட்டத்தில் ஒரே நாளில் நான்கு தொழிலாளர்கள் போராட்டத்தில் உயிரை இழந்தனர். பின்னர் 1970 இல் மாத்தளை நாலந்த தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரை இழந்தனர்.

இந்த 36 தியாகிகளில் நால்வர் சகோதர சிங்கள இனத்தவர்கள் ஆவர். இவர்களில் 1953 இல் தெபுவான என்கல்-வல தோட்டத்தைச் சேர்ந்த அட்லின் நோனா என்ற பெண்ணும் அடங்குகின்றமை முக்கியமானதாகும். டயகம ரவுன்பங்களாத் தோட்டத்தைச் சேர்ந்த ஏப்ரஹாம் சிங்கோ,1959 இல் பசறை கமேவல தோட்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சில்வா,1961 இல் களுத்துறை மாவட்டம் இங்கிரிய ஹல்வத்துறை தோட்டத்தைச் சேர்ந்த விஜயசேன ஆகியோரே மற்றைய ஏனைய தியாகிகளாவர். இவர்களில் டயகம, ரவுன் பங்களாத் தோட்டத்தைச் சேர்ந்த ஏப்-ரஹாம் சிங்கோவின் வீரமரணம் நாட்டில் அரசியல் ரீதியாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். இம் மரணம் அன்றைய தொழிற்சங்கத்தின் வலிமையை வெளிப்படுத்தியது எனலாம்.

அன்றைய காலகட்டத்தில் எஸ்..தொண்டமான், ஏ.அஸிஸ் ஆகிய இரு தொழிற்சங்கத் தலைவர்களும் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்தலைவர்களாக விளங்கினர். இருவர் மத்தியிலும் ஏற்பட்ட பிணக்கால் இ.தொ.கா.1956 இல் இரண்டாக உடைந்தது. ஒரு பிரிவு இ.தொ.கா.வாக அமரர் எஸ்.தொண்டமான் தலைமையில் இயங்க, மறுபிரிவாக அமரர் ஏ.அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார்.

டப்ளியூ.ஆர்.வென்டர் கிஸ்டி என்ற ஆங்கிலேய தோட்ட உரிமையாளர் தலைமையில் ‘The Planters Association of Ceylon’ என்ற பெயரில் இயங்கிய முதலாளிமார் சம்மேளனம் ஐ.தொ.காங்கிரஸ் தொழிற் சங்-கத்தை அங்கீகரிக்க வில்லை. இவ் எதிர்ப்பை தகர்த்தெறிய ஏ.அஸீஸ் தலைமையில் திம்புள்ள கம்பனிக்கு சொந்த-மான ரவுன் பங்களா தோட்டத்தில்1956 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வேலைநிறுத்தம் ஆரம்பமாகியது. இவ் வேலை நிறுத்தமானது, திம்புள்ள கம்பனிக்குச் சொந்தமான 17 தோட்டங்களுக்குள்ளும் பரவியது.

ஆங்கில தோட்டத்துரைமாரின் அடாவடித்தனத்தோடு பொலிஸார் எட்டுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைதுசெய்து பசுமலை பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர். இதன் உச்சகட்டமாக ஆங்கில தோட்ட நிர்வாகம் தங்-களின் பாதுகாப்பு கருதி ரவுன் பங்களாத் தோட்டத்தின் சின்னத்துரை பங்களாவுக்கு பொலிஸாரை வரவழைத்தனர்.

பொலிஸாரின் ஜீப் தோட்டத்துரையின் பங்களாவுக்கு செல்ல இயலாதவகையில் பாட்டாளிகள் தோட்ட இடு காட்-டுக்கு அருகில் உள்ள பாலத்தை உடைக்க முற்பட்டனர். அதேவேளை இடுகாட்டிற்கு மேல் பகுதியின் கருப்பந்தே-யிலை தோப்பில் கூட்டமாக கூடி இருந்த பாட்டாளி தோழர்கள் பெரும் கருங்கல் பாறை ஒன்றை பொலிஸாரை நோக்கி உருட்டிவிட முற்பட்டனர்.

. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பொலிஸார் கற்பாறையை உருட்டிவிட முயன்ற பாட்டாளிகள் கூட்-டத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் ஏப்ரஹாம் சிங்கோ என்ற பெரும்பான்மையின தொழிலாளி கொல்லப்பட்டார்.

 பின்னர் ஆவேசப்பட்ட தோழர்கள் பாலத்தை தகர்த்தனர். ஆவேசத்தில் பொலிஸார் மீது கல் எறியப்பட்டது. இதனால் ஆத்திரப்பட்ட பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் எஸ்.தொண்டமான், ஏ.அஸீஸ் தொழிலாளர்களுடன் பேசியபின்பே அமைதி நிலவியது.

அன்று இன, மத தொழிற் சங்கத் தலைமை பேதமற்ற வகையில் இப்போராட்டம் அல்லது ஹர்த்தால் பாட்டாளி வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. ஏப்ரஹாம் சிங்கோவின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பாட்டாளி வர்க்கம் இணைந்து இறுதி மரியாதை செலுத்தினர். தோட்ட ஆங்கில நிர்வாகமே இந்த இறுதி ஊர்வலத்தை கண்டு அதிர்ந்து போனது. எமக்கு உரிமையை பெற்றுக்கொடுத்தவர்களை எளிதில் மறந்து விட்டு வரலாற்றையும் புறக்க-ணித்து விட்டு வாழ்ந்து வருகிறோம். அவர்களின் புகைப்படங்களைக்கூட சேகரித்துவைக்க முடியாத துரதிர்ஷ்டசா-லிகளாக இருப்பதை நினைத்து வேதனையாகத்தான் உள்ளது. 

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates