Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ட்ராம் போக்குவரத்துக்கு என்ன ஆனது? - என்.சரவணன் ( கொழும்பின் கதை - 20)

இலங்கையில் பொதுப் போக்குவரத்துக்காக பஸ் வண்டிகள் வருவதற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது ட்ராம் வண்டிகள் (Tram-Cars) தான். இதற்காகவே பிரதான பொதுப்பாதைகளில் தண்டவாளங்கள் போடப்பட்டிருந்தன. மிகச் சமீப காலம் வரை அப்படியான ட்ராம் வண்டிகள் கொழும்பில் இயங்கியமைக்கான ஆதாரங்களாக கோட்டை, புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தியிலும், கிராண்ட்பாஸ் வீதியிலும் தண்டவாளங்களின் எச்சங்களைக் காணக் கூடியதாக இருந்தது.

இலங்கையில் மனிதப் போக்குவரத்துக்காக விலங்குகளையும், மனிதர்களையும், அதன் பின்னர் இயந்திர வாகனங்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறோம். குதிரை, யானை, மாட்டு வண்டில்கள் என்பன இந்திய உபகண்டத்தில் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக நெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. அதுபோல மனிதர்கள் சுமந்து செல்லும் பல்லக்குகள் அரசர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும், செல்வந்தர்களுக்காகவும், “உயர்குடி”யினருக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 1893 ஆம் ஆண்டு இலங்கையில் ரிக்சா அறிமுகப்படுத்தப்பட்டது. இரு சக்கரமுள்ள வண்டிலில் ஒருவரையோ, இருவரையோ ஏற்றிக்கொண்டு இன்னொரு மாடுகளுக்குப் பதிலாக மனிதர் இழுத்துச் செல்லும் அமைப்பைக் கொண்டிருந்தது அது. 1896 இல் அதே ரிக்சாவில் முன்னால் சைக்கிளை பொருத்தி அதை மிதித்துச் செல்லும் முறை கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1858 இல் தான் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.


1866 ஆம் ஆண்டிலேயே ட்ராம் போக்குவரத்துக்கான திட்டங்களை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதற்கான டெண்டர் ஒப்பந்தத்தை 1892 இல் தான் கோரப்பட்டது. இறுதியில் 1895 இல் பௌஸ்டீட் (Boustead Brothers) என்கிற நிறுவனம் தான் அந்த ஒப்பந்தத்தை கொழும்பு மாநகர சபையுடன் செய்துகொண்டது.

பௌஸ்டீட் நிறுவனம் பிரித்தானிய கம்பனி ஆகும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த அந்த நிறுவனம் பெருந்தோட்டத்துறையிலும் பெருமளவு தோட்டங்களில் முதலிட்டிருந்தது.

அதன் பிரகாரம் 1898 செப்டம்பர் மாதமே தொடங்கப்பட்டுவிட்டது. 1900ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி, தெற்காசியாவின் முதல் டிராம் சேவை கொழும்பில் தான் ஆரம்பமானது. யோர்க் தெருவில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலுக்கு அருகில் இருந்து தொட்டலங்க வரை (Grand pass Route) சென்றது. 1900 ஆம் ஆண்டு மட்டும் நாளாந்தம் 14,529 பேர் பயணித்திருக்கிறார்கள் என்றால் அன்றே எந்தளவு பயனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும். 

புறக்கோட்டை மின்வலுசக்தி நிலையத்தை இந்த நிறுவனம் தான் இயக்கி வந்தது. புறக்கோட்டை காஸ் வேர்க்ஸ் சந்தியில் இது இந்த நிலையம் இயங்கியது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய பீபல்ஸ் பார்க் என்று அழைக்கப்படுகிற தனியார் பஸ் வண்டிகள் நிறுத்தும் நிலையம் தான் அன்றைய ட்ராம் வண்டிகள் நிறுத்தப்படும் இடமாக இருந்தது. இந்த மின்சார நிலையம் கொழும்பு மத்திய பஸ் நிலையம் வரை அகன்று இருந்தது. சுமார் 110 வோல்ட் டி.சி சக்தியைக் கொண்டு இந்த ட்ராம் வண்டிகள் இயக்கப்பட்டன. 

மெயின் வீதி வழியாக வந்து கேஸ் வேர்க்ஸ் வீதியூடாக ஒல்கொட் வீதியை அடைந்து புறக்கோட்டை இரயில் நிலையத்தின் வழியாக சதாம் வீதிவரை சென்று, அங்கே வலது புறமாக தபால் நிலைய தலைமையகத்துக்கும்,  பின் கார்கில்ஸ் கட்டிடப் பாதையில் வந்து, இடதுபுறம் திரும்பி துறைமுக அதிகார சபையின் முன்னாள் இருக்கிற கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலின் வழியாக, கபூர் கட்டிடப் பாதை வழியில் மீண்டும் மெயின் வீதியை நோக்கிச் செல்லும்.

இன்னொரு பாதை மெயின் வீதி வழியாக டாம் வீதிக்குச் சென்று, புதிய சோனகத் தெரு, மெசேஞ்சர் வீதி, ஆர்மர் வீதி, கிராண்ட் பாஸ் வீதி, புனித ஜோசப் வீதி, நாகலகம் வீதி, கிரான்பாஸ் சந்தை வழியாக பெர்குசன் வீதிக்குச் செல்லும்.

ட்ராம் போக்குவரத்து இருந்த இன்னொரு பாதை; நொரிஸ் வீதி வழியாக இடதுபுறம் திரும்பி பழைய இரயில் நிலையத்தின் வழியாக, டெக்னிக்கல் கொலேஜ் சந்திக்கு ஊடாக வலது புறம் திரும்பி எல்பின்ஸ்டன் மண்டபம் அமைந்துள்ள மருதானை சந்தி வழியாக சின்ன பொரளை சென்று அங்கிருந்து நேராக பொரளை சென்றடையும். 

மொத்தம் 52 ட்ராம் வண்டிகள் இயங்கியுள்ளன. டிராம் சேவையின் வருகையுடன் குதிரை வண்டிகள், மாட்டு வண்டில்கள், ரிக்ஷாக்கள் என்பவற்றின் சகாப்தம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது. ட்ராம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே ரிக்ஷா தொழிலாளர்கள் அதன் மீது வெறுப்பைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ட்ராம் வண்டிகள் மீது கல்லெறி நடத்திய பல சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன. பொலிசாரும் அப்படியானவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

ட்ராம் வண்டியின் முன்னால் விழுந்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவங்களும், அப்போதே முடிச்சவிக்கிகளின் அனுபவங்களைப் பற்றியும் அன்று பணிபுரிந்தவர்கள் சிங்களத்தில் பதிவு செய்த விபரங்களை காண முடிகின்றன. 


ட்ராம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்.

ட்ராம் வண்டி ஓட்டுனர்களும், கண்டக்டர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு 1.20 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. நோய்வாய் விடுப்பு அல்லது சாதாரண விடுப்பு அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியான விடுப்புகளுக்கு பெரும் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே 25 வீத சம்பள உயர்வு, சுகயீனம் மற்றும் சாதாரண விடுமுறைகளின் போது அபராதத்தை நிறுத்தும்படியும், மேலதிக நேர வேலைக்கு சம்பளமும் மற்றும், பணிச் சீருடை இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கம் கோரிகை வைத்தது. சம்பள உயர்வை மட்டும் மறுத்துவிட்டது நிறுவனம். இதன் விளைவாக 1929 ஜனவரி 23 அன்றிலிருந்து வேலை நிறுத்தம் 13 நாட்களாக தொடர்ந்தது.

வேலை நிறுத்தத்தில் 150 தொழிலாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட போதும் ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் மிகவும் வீரியத்துடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களைக் கொண்டு பொலிசாரின் பாதுகாப்புடன் கம்பனி ட்ராம் வண்டிகளை இயக்க முற்பட்டது. தொழிலாளர்கள் ட்ராம் போக்குவரத்துப் பாதைகளை மறித்து மறியல் செய்தார்கள். இந்தப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது. மீண்டும் மாட்டு வண்டில்களையும், ரிக்ஷாக்களையும் பயன்படுத்தும் யுகத்துக்குச் சென்றனர் மக்கள். 

பௌஸ்டீட் நிறுவனத்தின் ஏனைய தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைந்து ஆதரவு தருமாறு தொழிலாளர்கள் கோரினார்கள். அதன்படி பௌஸ்டீட் நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதியுடன் சம்பந்தப்பட்ட துறைமுகத் தொழிலாளர்களும் இணைந்துகொண்டார்கள். 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். வழக்கு தொடரப்பட்டார்கள். பெப்ரவரி 5ஆம் திகதி இரயில்வே தொழிலாளர்கள் பலர் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவளித்தமைக்காக கைது செய்யப்பட்டார்கள். பலர் தாக்கப்பட்டார்கள். இந்த செய்தி வேகமாக பரவியது. மேலும் பல அரச நிறுவன தொழிலாளர்கள் தமது வேலைகளை நிறுத்தி போராட்டத்தில் கைகோர்த்தார்கள். வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஊர்வலங்களை நடத்தினார்கள். சுமார் 20,000 தொழிலாளர்கள் தொழிற்கட்சித் தலைவர் குணசிங்கவின் அலுவலகத்துக்கு வெளியில் கூடினார்கள். தனது உரையில் தான் தாக்கப்பட்டதையும் அவர் விளக்கினார். கூடியிருந்த தொழிலாளர்கள் “பொலிசாரைக் கொல்” என்று கோஷமிட்டதாக குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் குறிப்பிடுகிறார்.

நகரில் இருந்த பல அரச காரியாலயங்களின் மீது போத்தல்களாலும், தடிகளாலும் தாக்குதல் நடத்தினார்கள். வீதிகளில் இருந்த லாம்புகளை அடித்து நொறுக்கினார்கள். ஆங்காங்கு தீயிட்டார்கள். போலீசார் மூர்க்கத்தனமாக இதனை கட்டுபடுத்த முற்பட்டது. மருதானையில் துப்பாக்கிகளைக் கொண்டு பகிரங்கமாக 20 நிமிடங்கள் சூடு நடத்தினார்கள். அதில் ஐவர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர். 1920 களில் நிகழ்ந்த போராட்டங்களிலேயே உச்சப் போராட்டமாக இதனைக் கொள்ளலாம் என்கிறார் குமாரி ஜெயவர்த்தன. 

டொனமூர் ஆணைக்குழு இந்தக் காலப்பகுதியில் தான் இலங்கை வந்து விசாரணைகளை செய்துகொண்டிருந்தார்கள். இந்த நிகழ்வைப் பற்றி கே.எம்.டி.சில்வா தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.“இந்த தொழில்துறை அமைதியின்மையின் ஒரு விளைவு முதலாளிமார் சம்மேளனம் உருவானதும், இந்த அமைப்புக்கும் குணசிங்கவின் தொழிற்சங்க காங்கிரசுக்கும் இடையிலான முதலாவது கூட்டு உடன்படிக்கையில் 1929 ஜூனில் கைச்சாத்திடப்பட்டதும் ஆகும். முதல் தடவையாக, தற்போதுள்ள தொழிற்சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்களை ஒழுங்கமைப்பதற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. எவ்வாறெனினும், இலங்கையில் காலனித்துவ நிர்வாகம் போர்க்குணமிக்க தொழிற்சங்கவாதத்திற்கு அடிபணிவது குறைவு. எனவே 1927 ஆம் ஆண்டின் பிரித்தானிய வர்த்தக மற்றும் வர்த்தக பிணக்குகள் சட்டத்தின் பிரதான கட்டுப்படுத்தப்பட்ட சரத்துக்களை இலங்கையில் புகுத்த முயற்சித்தது. அரசாங்கத்தில் காலனி நாடுகளுக்கான அரசு செயலாளர் பாஸ்ஃபீல்ட் (Lord Passfield) தனது ஒப்புதலை வழங்க மறுத்துவிட்டார்.” 

இந்த போராட்டம் தந்த அதிர்ச்சியால் ட்ராம் போக்குவரத்தை தொடர்ந்து நடத்தும் எண்ணத்தை கைவிட்டது கம்பனி. 1944 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையினால் 3.6 மில்லியன் ரூபாவை Bowstad நிறுவனத்திற்கு வழங்கி  ட்ராம் சேவையை அரசு கையகப்படுத்தியது.  கொழும்பு மாநகர சபை 1953 இல் ட்ராம் வண்டிகளை மின்சார ட்ரொலி பேருந்து வண்டிகளாக (ஒரு மாடி, இரு மாடிகளைக் கொண்ட Trolly Buss) மாற்றி போக்குவரத்துக்கு விட்டது. 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க இலங்கை போக்குவரத்துச் சபையை உருவாக்கி பொதுப்போக்குவரத்தை தேசியமயப்படுத்தினார். 1964 ஆம் ஆண்டு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிகழ்ந்தது. அரசு ட்ராம் வண்டி சேவைக்கு செலவளிக்கும் வசதியைக் கொண்டிருக்கவில்லை. 1965 ஜனவரி 1ஆம் திகதி ட்ராம் போக்குவாத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. இதனால் பல விபத்துக்கள் அதிகரித்திருந்ததையும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. 

அப்படி கைவிட்டபோது அதனை அன்றைய இரும்பு வியாபாரத்தில் பேர்பெற்ற தொழிலதிபராக இருந்த A. Y. S. ஞானம்  ஒரு ட்ராம் வண்டி 100 ரூபா படி மாநகர சபையிடம் இருந்து ஏலத்தில் கொள்வனவு செய்தார்.

இன்று நம் நாட்டில் டிராம் போக்குவரத்து இல்லை, ஆனால் அவை நோர்வே, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, பெல்ஜியம், பல்கேரியா போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் நகரப் போக்குவரத்துக்காக வெற்றிகரமான முறையில் பயன்பாட்டில் உள்ளன. ட்ராம் போக்குவரத்தை நவீனமயப்படுத்தி அதே தெருக்களில் அதே தண்டவாளங்களில் பயணிக்கின்றன.

கொழும்பு டெக்னிக்கல் சந்தியில் அமைந்துள்ள இலங்கை தேசிய ரயில்வே நூதனசாலையில் இன்றும் ட்ராம் வண்டிகளும், என்ஜின்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

நன்றி - தினகரன் 27.03.2022

கோட்டை டச்சு ஆஸ்பத்திரி (கொழும்பின் கதை - 19) - என்.சரவணன்

கொழும்பில் எஞ்சியிருக்கும் பழமையான கட்டிடங்களில் “பழைய டச்சு ஹோஸ்பிடல்” (“Old Dutch Hospital”) குறிப்பிடத்தக்க ஒன்று. கொழும்பு கோட்டையின் மையப்பகுதியில் Port Hospital Laneஇல் இருக்கிறது என்றால் சிலவேளை நீங்கள் குழப்பமடையலாம். ஆனால் கோட்டை இரட்டைக் கோபுரக் கட்டிடத்துக்கு எதிரில் என்று கூறினால், அல்லது செலிங்கோ கட்டிடத்துக்கு பின்னால் என்றோ கூறினால் பிடித்துவிடுவீர்கள். கொழும்பில் இறுதியாக எஞ்சியுள்ள பழைய டச்சு கட்டிடம் இது தான். பெரிய, அகலமான சுவர்களையும், பெரிய ஜன்னல்களையும், விரிந்த வராந்தாக்களையும் கொண்ட டச்சு கட்டடக் கலையுடன் கூடிய அமைப்பு. 

1656 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடன் சண்டையிட்டு கொழும்பைக் கைப்பற்றினார்கள் ஒல்லாந்தர்கள். ஏழு மாதங்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சால் கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் சிதைந்தன. ஒல்லாந்தர்கள் கொழும்பைக் கைப்பற்றிய பின்னர் அவற்றை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை அமைத்தார்கள். போர்த்துக்கேயரின் ஒரு ஆஸ்பத்திரியும் இங்கே இருந்தது. ஆனால் டச்சு ஆஸ்பத்திரி அமைந்திருக்கும் இதே இடத்தில் அது இருந்திருக்கவில்லை. ஒல்லாந்தர்கள் கைப்பற்றியதும் இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இது கட்டப்பட்ட ஆண்டை உறுதியாகக் கூற முடியாது போனாலும் நிச்சயமாக அது 1677 ஐ விடப் பழமையானது என்பதை மட்டும் சொல்லாம். ஏனெனில் 1676 – 1682 காலப்பகுதியில் இராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக பணியாற்றிய கிறிஸ்டோபர் ஸ்வீட்சர் (Christopher Schweitzer), கிறிஸ்டோபர் பிரிக் (Christopher Fryke) ஆகியோர் 1700 இல் வெளியிட்ட “கிழக்கிந்தியப் பயணம்” (Voyages to the East Indies) என்கிற நூலில் மருத்துவமனையைப் பற்றிய பல குறிப்புகளை எழுதியுள்ளனர். அங்கே பல அடிமைகளும் பணிபுரிந்தையும் பதிவு செய்துள்ளனர். 

அவரின் அப்பதிவுகளைப் பற்றி 1803 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “An account ofthe island of Ceylon” என்கிற நூலில் விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த நூலை எழுதியவர் 1796 இல் டச்சு வசம் இருந்து ஆங்கிலேயர்கள்  கொழும்பைக் கைப்பற்றிய போது அதன் சாட்சியமாக இருந்தவரான கெப்டன் ரொபர்ட் பேர்சிவல். கடும் காயங்களுக்கு உள்ளான பல வீரர்கள் சிகிச்சைக்கு இங்கு அனுப்பப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய கொழும்பு கோட்டை சுவருக்குள் இருந்த கட்டிடங்களில் மிகப் பெரிய விஸ்தீரணத்தில் இருந்தது இந்த டச்சு ஆஸ்பத்திரி தான். அரை ஹெக்டயார் பரப்பில் அது இருந்தது. 

1732 ஆம் ஆண்டு போர்த்துகேயர் கால வரைபடம். இதில் E அடையாளம் ஆஸ்பத்திரியைக் குறிக்கிறது.

1732 இல் புரோஹியர் உருவாக்கிய வரைபடத்தில் மருத்துவமனை தெளிவாகக் குறிக்கப்பட்டது. இதைவிட முக்கியமாக அன்று டச்சு அரசாங்கத்தில் பணியாற்றிய டென்மார்க்கைச் சேர்ந்த யோஹன்னஸ் ரேச் (Johannes Rach) என்கிற ஓவியர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் 1771இல் வரைந்த டச்சு ஆஸ்பத்திரியின் ஓவியம் அதன் அமைப்பை அழகாக விளக்கியிருக்கிறது.

அன்று கோட்டைக்குள் வாழ்ந்து வந்த ஒல்லாந்தர்களுக்காகவும், டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் (VOC) அதிகாரிகளுக்காகவும், ஊழியர்களுக்ககவும் கட்டப்பட்டது இந்த ஆஸ்பத்திரி. கொழும்பு துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிய காலமும் கூட. துறைமுகத்துக்கு அண்மையில் கட்டப்பட்டதன் நோக்கம்; அப்போது கொழும்புக்கு வந்து போகும் கப்பல்களில் நோய்வாய் பட்டிருந்தவர்களுக்கும் இங்கு வைத்து உயர்தர சிகிச்சையளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ரொபர்ட் நொக்ஸ் இருபது ஆண்டுகளாக கண்டியில் சிறைபட்டுக் கிடந்தபோது 1679இல் அங்கிருந்து தப்பிவந்து டச்சுக் காரர்களிடம் வந்து சேர்ந்தார். அவரோடு சேர்ந்து தப்பி வந்த சிலர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களுக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  கண்டியை ஆண்ட மன்னன் வீர நரேந்திரசிங்கனுக்கு  (இலங்கையின் இறுதி சிங்கள அரசன்) காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை செய்வதற்காக 1739இல் டொக்டர் டேனியல்ஸ் (Dr. Danielsz) கண்டிக்கு இந்த ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தார் என்பதை அவரது பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

இன்று சுற்றுலா பயணிகள் விருந்துண்டு மகிழும் இடமாக

சுமார் 300 நோயாளர்களை வைத்து பராமரிக்கக் கூடிய அளவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்கியிருக்கிறது. டச்சு மருத்துவமனையினை முதலில் நேரில் கண்ட சாட்சி விபரமாக டச்சு அரசாங்கத்தில் 1734-1737 காலப்பகுதியில் பணியாற்றிய ஜெர்மனைச் சேர்ந்த ஹெய்ட் (Johan Wolfgang Heydt) என்பவரால் போற்றிப் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளைக் கூற முடியும்.  இலங்கையில் மட்டுமல்ல, ஒல்லாந்தர்களின் காலனி நாடுகளிலேயே நவீன வசதிகளைக் கொண்டிருந்த சிறந்த ஆஸ்பத்திரியாக அன்று இந்த ஆஸ்பத்திரி இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். மேலும் சிறந்த பரிசோதனைக் கூடமும், அதிலேயே உயர் ரக மருந்துகளை உருவாக்கக் கூடிய வசதிகளையும் கொண்டிருந்தததாகவும் அவரின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நோயாளிக்கு இரு தலையணைகளையும், இரு நேர உணவும் வழங்கப்பபட்டதாகவும், இளம் ஆண் பணியாளரால் நான்கு/ஐந்தடி நீளமுள்ள பாத்திரத்தில் அந்தந்த நோயாளியின் தேவைக்கிணங்க சிறு சிறு பாத்திரங்களில் சோறு, கறிகள் மிளகாய், உப்பு, வினாகிரி என்பன வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒல்லாந்திலிருந்து பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கே பணியாற்ற வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதுபோல அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிபுணத்துவம் இல்லாத; மருத்துவம் மட்டுமே தெரிந்தவர்களும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ரைமர் (C.F. Reimer). அவர் ஒரு இராணுவ வீரர். அவரிடம் இருந்த மருத்துவ அறிவின் காரணமாக மூன்றாம் நிலை அறுவை சிகிச்சை வைத்தியராக  அனுப்பப்பட்டார். அவர் ஒரு ஓவியரும் கூட. கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனுக்கும் டச்சு ஆளுநர் பிளாக்குக்கும் (Iman Willem Falck) இடையில் 1766 இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த நிகழ்வை பிரசித்தி பெற்ற ஓவியமாக வரைந்தவர் பிளாக்.

இந்த ஆஸ்பத்திரியைப் பற்றிய பல குறிப்புகளை எழுதியவர்களில் இன்னொரு முக்கியமானவர்; இலங்கை தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படும் போல் ஹேர்மன் (Paul Hermann).  அவர் இந்த ஆஸ்பத்திரியில் 1672 – 1679 காலப்பகுதியில் பணியாற்றியவர். முன்னாள் தொல்லியல் திணைக்கள ஆணையாளராக இருந்த  கே.டி.பரணவிதானவும் ஒரு இந்த ஆஸ்பத்திரியைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.  ஆஸ்பத்திரிக்கு தேவையான முக்கிய மருந்துகள் ஒல்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து வருவிக்கப்பட்டதாகவும், உள்ளூர் ஆயுர்வேத நாட்டு மருந்துகளும் அங்கே பயன்படுத்தப்பட்டன என்று அக்கட்டுரையில் விளக்குகிறார்.

A - தலைமை மருத்துவரின் வதிவிடம், B - மருந்தகம், C - மருந்து தயாரிப்பாளரின் வதிவிடம், D - ஆஸ்பத்திரி. E - சமையலறை, F - கால்நடைத் தொழுவம், G - சுற்றுச் சுவர்

1771 இல் வரையப்பட்ட இரண்டு நீர்-வர்ண ஓவியங்களின்படி, மருத்துவமனை கட்டிடம் மூன்று தனித்துவமான பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது முகப்பு கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாக அன்றே அமைக்கப்பட்டிருந்ததும் சிறப்பான அம்சம். இதன் முக்கியப் பகுதியான மையப் பகுதி, மருத்துவமனை வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொன்று மருத்துவமனை, ஆய்வுகூடம், அறுவை சிகிச்சை கூடம் ஆஸ்பத்திரி நிர்வாகியின் இருப்பிடம் என்பவற்றுக்காகவும், மூன்றாவது பகுதி சமையலறைக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அமைப்பைக் காண முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1796 இல் பெர்சிவல் எழுதிய குறிப்புகளின் படி, இந்த மருத்துவமனையின் அறைகள் விசாலமானவை, நன்கு காற்றோட்டமானவை. இதனால் மற்ற நோயாளிகளுக்கு நோய் பரவவில்லை. 

டச்சு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோ அடிமைகள் கொண்டுவரப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு பரவியிருந்த தொற்று நோய்களை இதே ஆஸ்பத்திரியில் தமது எஜமானர்களுக்கு அளிக்கப்பட அதே மருத்துவ வசதிகள் இவர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. 1707 ஆளுனர் யுவான் சிமோன் (Joan Simons) பின்னர் இவர்களுக்கென்று தனி ஆஸ்பத்திரியை கட்டினார்.

தற்போதைய கட்டிடம் இரண்டு முற்றங்களை மத்தியில் கொண்டுள்ளது. தற்போது சுமார் 40 x 30 அடி பரப்பளவில் புல் நடப்பட்டுள்ளது. சுமார் அரை மீற்றர் தடிமன் கொண்ட பெரிய சுவர்கள் கபுக் கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இரண்டு கூடங்களில் ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ஆஸ்பத்திரியின் பிரதான வாயில் இருந்த பகுதி ஆஸ்பத்திரி வீதி (Hospital street) என்று ஆங்கிலேயர் காலத்தில் பெயரிடப்பட்டது. இன்று இலங்கை வங்கி, உலக வர்த்தக மையம் (World Trade Centre)அமைந்திருக்கிற Bank of Ceylon Mawatha தான் அந்த வீதி.

ஆஸ்பத்திரி வீதியோடு சேர்தாற்போல படகுப் போக்குவரத்துக்காக ஒரு கால்வாயும் அன்று இருந்திருக்கிறது. ஆங்கிலேயர் கைப்பற்றியவுடன் இக்கால்வாய்களை நிரப்பி வீதிகளையும், கட்டிடங்களையும் அமைத்தார்கள். கொழும்பில் போக்குவரத்துக்காக கால்வாய்கள் பயன்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதன் எச்சங்களை இன்றும் காணலாம். 

ஆங்கிலேயர் காலத்தில் இக்கட்டிடம் சற்று விரிவாக்கப்பட்டது. மருத்துவமனையின் வடக்குப் பகுதி மட்டும் இரண்டு தளங்களாக மாற்றப்பட்டுள்ளது. பெரிய அளவிலான திடமான மற்றும் வலுவான நீளமான  மரக்கட்டைகள் கூரையின் உறுதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை இன்னும் நல்ல நிலையில் இருப்பதைக் காணலாம்.

இலங்கையின் சிவில் யுத்த காலத்தில் இந்தக் கட்டிடம் நான்காம் மாடியில் தடுத்துவிக்கப்பட்டிருந்த கைதிகளையும், சந்தேகநபர்களையும் வார இறுதியில் சந்திக்க வருபவர்களை சந்திக்க வைக்கின்ற பொலிஸ் நிலையப் பிரிவாகவும் தொழிற்பட்டது. 1980 களில் இருந்து அவ்வாறு கோட்டை பொலிசின் நடவடிக்கைகளுக்காக இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுதக் களஞ்சியமாகவும். சில சிறைக்கூடங்களையும் உள்ளே கட்டினார்கள். கட்டிடத்தின் கட்டடக்கலை மற்றும் தொல்பொருள் மதிப்பு இன்றும் முக்கியமானது. 90 களின் ஆரம்பத்தில் சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம் போன்ற மலையகத் தலைவர்கள் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பல தடவைகள் அவர்களைச் சந்திக்க வார இறுதியில் இங்கு சென்று வந்திருக்கிறேன்.

View Larger Map

1996இல் மத்திய வங்கி குண்டுவெடிப்பின் போது இக்கட்டிடமும் சேதமுற்றது. யுத்தம் முடித்தபின்னர் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச நகர அபிவிருத்தி சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து கொழும்பை அழகுபடுத்தும் திட்டங்களை மேற்கொண்டார். அந்த திட்டத்தின் கீழ் இந்த டச்சு ஆஸ்பத்திரியை நவீனமயப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2011 டிசம்பரில்; இதனை உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் உயர்தர உணவு விடுதிகளையும், உயர்ரக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் கொண்ட கட்டிடத் தொகுதியாக திறந்து வைக்கப்பட்டது. அரை ஹெக்ராயர் பரப்பில் இன்று அது இருக்கிறது.

டச்சு கால கொழும்பை நினைவுறுத்தும் மிகப் பழைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் “பழைய டச்சு ஆஸ்பத்திரி”.

நன்றி - தினகரன் - 20.03.2022கொச்சிக்கடை சிவன் கோவில் உருவான கதை - (கொழும்பின் கதை - 18) - என்.சரவணன்

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் கொழும்பின் அடையாளங்களில் ஒன்று. கொச்சிக்கடை சிவன் கோவில் என்றும் பலரால் அறியப்படுகிற இக்கோவில் வரலாற்று சிறப்பையும், கட்டிடக் கலைச் சிறப்புகளையும் கொண்ட பெரிய கோவில்.

கொழும்புக்கு வரும் இந்து சமயத்தினர் நிச்சயம் ஒரு முறையாவது இக்கோவிலுக்கு செல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகவும் முக்கிய ஈழத்து சிவாலயங்களில் ஒன்றாகவும் இருப்பதுடன் இக்கோவிலில் திராவிடச் சிற்பக் கலை இன்றும் வியப்பாக பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவிலுள்ள பிரமாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும், நாயக்க, பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பட்டது. அதே மாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களிற் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக் கோவிலைத் தம் சொந்தப் பணத்தில் கட்டினார் பொன்னம்பல முதலியார்.


இக் கட்டிடம், விஜயநகர கட்டிடக் கலையைத் தழுவிக் கட்டப்பட்டிருக்கின்றது. இவ் ஆலயத்தின் தூண்கள், சிற்பங்கள் கூரையும் கூட , கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. இக் கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சிலவற்றை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

இக்கோயிலைக் கட்டியவர் அருணாச்சலம் பொன்னம்பல முதலியார் (1814 -1887).

பருத்தித்துறையைச் சேர்ந்த கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) 1783இல் பிறந்தவர். சகோதரனின் அழைப்பின் பேரில் கொழும்பில் குடியேறி இங்கேயே கற்று பின்னர் ஆங்கிலய ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக ஆனார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி. 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் சிறைபிடிக்கப்பட்ட போது குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியிருந்தார். பின்னர் 1833 இல் சட்ட நிரூபன சபைக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு முத்துக்குமாரசுவாமி, செல்லாச்சி ஆகிய இரு பிள்ளைகள். செல்லாச்சிக்கும் பொன்னம்பலம் முதலியாருக்கும் பிறந்தவர்கள் தான் இராமநாதன் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட, குமாரசுவாமி, இராமநாதன், அருணாச்சலம்.

08.09.1854இல் செல்லாச்சி இறந்துபோனதும் பொன்னம்பலம் முதலியார் தனது பணியில் இருந்து இராஜினாமா செய்தார். அதன் பின்னர் கருங்கல்லாலான கோவிலைக் கட்டிமுடிப்பதே அவரின் எண்ணமாக இருந்தது. ஏற்கெனவே அவர் தென்னிந்திய திருத்தலங்களுக்கு அடிக்கடி யாத்திரை செய்து கோவில்களின் அமைப்புகளால் வசீகரிக்கப்பட்டவர். சோழ, பாண்டிய கோவில்களின் அமைப்பில் அவர் அதனைக் கட்ட விரும்பினார்.


அவரின் சொந்த வீட்டில் பால யந்திர பூஜை நடத்தி வந்தவர் அவர். இப்போதும் அவர் வீட்டில் வைத்திருந்த சிவகாமி அம்மன் சிலையை சிவன் கோவிலில் காணலாம்.

பொன்னம்பலம் முதலியாருக்கு கொழும்பிலும், மலையகத் தோட்டப் பகுதிகளிலும் சொத்துக்கள் இருந்தன. அது மட்டுமன்றி செட்டியார் தெருவில் வசித்து வந்த அவர் செட்டியார் தெருவில் முத்து விநாயகர் ஆலயத்தையும், ஜிந்துப்பிட்டி கதிரேசன் கோவிலும் கூட அவரால் கட்டப்பட்டது தான்.

கொழும்புக் கொச்சிக்கடைப் பகுதியில் ஐந்து ஏக்கர் காணியை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தைக் கட்டுவதற்காக 05.07.1856 இல் ஆங்கிலேய கப்டன் ஜோன் போல்ஸ்டனிடம் (Captain John Foulstone - Ceylon Rifle Regiment) இருந்து  வாங்கினார். இந்தக் காணியில் ஏற்கெனவே மிகப் பழமையான காளிகோவில் ஒன்று இருந்தது.

தென் இந்தியாவிலிருந்து கோயிற் கட்டடக் கலைஞர்களை வரவழைத்து இரண்டு வருடங்கள் இரவு பகலாக உழைத்துத் திருப்பணி வேலைகளை நிறைவு செய்து 1857ம் ஆண்டு மார்கழி மாதம் 12 ஆம் திகதிமகாகும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தினார். மூல மூர்த்தியாக 22அங்குல உயரங் கொண்ட சிவலிங்கத்தையும், போகசக்தியையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வித்தார். தன் வீட்டில் வைத்துப் பூசித்து வந்த பாலயந்திரத்தை 32 அங்குல உயரங் கொண்ட சிவகாமி அம்பாளின் பீடத்திற்கு அடியில் வைத்தும் ஸ்ரீசக்கரத்தை அதன் அருகில் வைத்தும் பிரதிஷ்டை செய்வித்து பொது மக்கள் வழிபடுவதற்கு ஒழுங்கு செய்தார்.

இக்கோவிலை தொடர்ந்து பராமரித்து  பூசைகளையும் விழாக்களையும் எதுவித தடங்கலுமின்றி தன் சந்ததியினர் செய்வதற்கான நிதி வருமான ஏற்பாட்டுக்காக நாத்தாண்டியாவில் ஒரு ஆயிரம் ஏக்கர் தென்னந் தோட்டத்தையும் கொழும்பு மாநகரில் தொடர் கடைகளையும் கட்டி ஆலயப்பராமரிப்புக்கு அவற்றிலிருந்து பணத்தைப் பெற வழிவகுத்தார். இந்தியாவிலிருந்து வரும் யாத்திரிகர்களும், ரிஷிகளும் உணவுண்டு தங்குவதற்கேற்ற முறையில் அன்னதான மடத்தையும் கட்டினார். தினமும் அங்கு வரும் ஏழைகளுக்கும் யாத்திரிகர்களுக்கும் உணவும், உடையும் அளித்தார். இக்கோவிலை தொடர்ந்து நடாத்துவதற்கு தன் சந்ததியில் வரும் மூத்த ஆண் வம்சத்திற்கு அதிகாரத்தைச் சாசன மூலம் வழங்கினார். 


1887 ஆம் ஆண்டு பொன்னம்பலம் முதலியாரின் மறைவின் பின்னர் மூத்த மகன் பொன். குமாரசுவாமி பொறுப்பேற்று 1905ம் ஆண்டு அவர் மறையும் வரை ஆலயத்தை நிர்வகித்து வந்தார். இலங்கை சைவ பரிபாலன சபையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் குமாரசுவாமியின் மகன். அச்சபையும் இங்கே தான் ஆரம்பத்தில் தலைமையகமாக இயங்கியது. குமாரசுவாமி 1889இல் அதன் தலைவராகவும் இருந்தார்.

குமாரசுவாமி காலமானதும் பொன்னம்பலம் முதலியாரின் இரண்டாம் மகனான சேர். பொன், இராமநாதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். தந்தையாரால் கல்லாலும், செங்கட்டியாலும் சுண்ணாம்புச் சாந்தாலும் கட்டிய கோவிலுக்குப் பதிலாக தற்போது உள்ள நிலையிலிருக்கும் கருங்கற் கோவிலை புதிதாகக்கட்ட 1907ஆம் ஆண்டு ஆரம்பித்தார். தென் இந்தியாவிலிருந்து சிறந்த கோயிற் கட்டட ஸ்தபதியையும், சிற்பிகளையும் வரவழைத்தார். வேயங்கொடையிலிருந்து கருங்கற்களை வருவித்தார். நூறு வருடங்களுக்கு முன்னரே இராமநாதனுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவழிந்தது.

1907 இல் ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. 21.11.1912ம் ஆண்டு முதற் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.


இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. கிழக்கு வாசலில் 65 அடி உயரங்கொண்ட ஐந்து நிலைக் கோபுரத்தைக் கொண்ட இராசகோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதையைச் சொல்லுகின்றது. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது. தெற்கு வாசலில் 35 அடி உயரங்கொண்ட மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் உள்ளது.

இந்த ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டாது, அதை, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் அப்படியே இன்றும் பேணப்பட்டு வருவதும் ஒரு சிறப்பு. உள்ளிட்ட கட்டிடத்தின் உள் வேலைகள் எல்லாம் கருங்கற்களால் அமைந்திருப்பதனால் ராஜகோபுரமும் கருங்கற்களால் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அது அப்போது முடியாத செயலாக இருந்ததினால், கல்லைப் போல் தோற்றம் அளிக்கும் வகையில் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. வர்ணம் தீட்டினால் அது மங்கி அவலட்சனமாகி விடும் என்றும், அதன் இயல்பை பேணினால் போதுமானது என்று அன்றைய நிர்வாகம் கருதியது.

இந்தப் பொன்னம்பலவானேஸ்வார் ஆலயத்தின் ராஜ கோபுரத்தை இன்னும் உயரமாகக் கட்டி எழுப்பி இருக்கலாமே என்கிற விமர்சனங்களும் உண்டு. கோபுரத்தின் உயர அகலம், கோயிலின் கர்ப்பக்கிரகம், சபாமண்டபம் ஆகியவற்றின் நீள அகலத்தில் இருந்தே கணிக்கப்பட வேண் டும் என்பதே ஆலய சாஸ்திர விதி. ஆகவே, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் எழுப்புவது ஆலய சாஸ்திர விதியை மீறும் என்கிற ஐதீகம் உண்டு.

கோபுர உச்சியிலும், கண்களுக்கே தெரியாத இடங்களிலும் சிற்பங்கள் அமைக்கப்படமைக்கு அன்றே விளக்கம் அளிக்கப்பட்டன. அதனை வடித்த சிற்பிகள்; தங்கள் கலைத்திறன் கடவுளுக்கே சொந்தம் கடவுள் காணாத இடமே கிடையாது ஆகையால் சிற்பங்களை மனிதன் காணமுடியாத இடங்களிலும் செதுக்கினார்கள்' என்று பிரபல அறிஞர் கலாயோகி ஆனந்த குமாரசாமி விளக்கியிருக்கிறார்.

ஆலயத்தின் அமைப்பு, காலத்திற்குக் காலம் வேறுபட்டு வளர்ந்திருக்கிறது. மேற்கு நுழைவாயில் அருகில் பசுமடம் உள்ளது. கோவில் காணிக்குள் நுழையும் இரு பிரதான வாயில்களில் ஒன்று கொழும்புத் துறைமுகம் அமைந்திருக்கிற கடற்கரை பக்கமாக இருக்கின்ற “இராமநாதன் வீதி”யில் மேற்கு நுழைவாயில் உள்ளது. கிழக்கு வாயிலருகில் உயரமான தேர் மண்டபம் உள்ளது. அந்த வாயில் ஜெம்பட்டா ஒழுங்கையின் பக்கமாக அமைந்திருக்கிறது.


சேர் பொன் இராமநாதன் இலங்கையின் பிரம்மஞான சங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கை முழுவதும் சுதேசிய பாடசாலைகளை நிறுவ இராமநாதன் பெருமளவு நிதிகளையும் அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறார். ஆனால் அப்பணம் சிங்கள பௌத்தப் பாடசாலைகளை மட்டும் நிறுவ பயன்படுவதைக் கண்ட அவர் ஒழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்தார். 1909ஆம் ஆண்டு அவர் பொன்னம்பலவானேஸ்வரர் தமிழ் பாடசாலை என்கிற ஒன்றையும் கோவிலோடு சேர்த்து ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அது ஒரு சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிட்டது.

27.11.1957 ஆம் ஆண்டு பொன்னம்பலம் முதலியாரின் பேரன் அருணாச்சலம் மகாதேவாவும் அவரின் மகன் சோமசுந்தரம் மகாதேவாவும் அறங்காவலர் சபையில் இருந்தபடி கோவிலின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் சிவராத்திரியன்று கூடும் மக்கள் கூட்டம் இங்கு அதிக சன நெரிசல் மிக்க ஒன்றாக இருக்கும். இரவிரவாக நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக ஏராளமானோர் கூடுவார்கள்.

ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான கால வரலாற்றைக் கொண்ட இந்த சிவன் கோவில் இலங்கையின் அடையாளங்களில் ஒன்றெனக் கூற முடியும்.

உசாத்துணை

  • V.Muttucumaraswamy, Founders of Modern Ceylon (Sri lanka) eminent Tamils, Vol I, Parts I & II, The Pioneers, The Founders. Uma siva Pathippakam, Ceylon, 1973.
  • M.K.Ealaventhan, Sir Ponnambalam Ramanthan, The Forgotten aspects of his life’s work, Colombo, 2002
  • Chelvatamby Maniccavasagar, Let your soul guide you!, Sunday Observer, 05.04.2009.
  • M.Vythilingam, “Ponnambalavaneshwarar Temple”, The Life Of Sir Ponnambalam Ramanathan. (Chapter xxxvi) Vol 1, Ramanathan Commemoration society, Colombo, 1971.
  • துரைராசா, தம்பு , ஈழத்துச் சிவாலயங்கள். தொண்டர் சபை வெளியீடு, 2009
  • பொன்னம்பலவாணேஸ்வரர் வி எஸ். துரைராஜா, மல்லிகை ஆகஸ்ட் 1971 , (இதழ் 39)


நன்றி - தினகரன் 13.03.2022


தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள சினிமாத்துறை (பவளவிழா 1947 - 2022)- என்.சரவணன்

இன்று முதலாவது சிங்கள திரைப்படமான "கடவுனு பொறந்துவ" வெளிவந்த பவளவிழா ஆண்டு (75 ஆண்டு நிறைவு) கடந்த 21 ஜனவரி 2022 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்பட்டது. அந்த நாள் சிங்கள ஊடகங்களில் எல்லாம் செய்திகளும், கட்டுரைகளும் வெளிவந்திருப்பதைக் கண்டேன். சிங்களத் திரைப்பத்தின் ஆரம்பத்துக்கு வழிகோலிய தமிழர்களையும், தமிழ்ச் சமூகத்தையும் மறந்து தான் அந்த நினைவுகள் மீட்கப்படுவதை காண முடிகிறது.

இலங்கையில் அசையும் படத்தைக் காண்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவர் அந்திரி (Adolphus William Andree). அவர் யாழ்ப்பாணத்தில் 1869இல் பிறந்தவர். தமிழ் – பறங்கி குடும்பப் பின்னணியைக் கொண்டவர். தாயார் யாழ்ப்பாணத்தையும், தந்தை ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். அந்திரி இலங்கையில் அப்போது கொழும்பு ஸ்லேவ் ஐலண்டில் (Slave Island) மிகப் பெரிய புகைப்பட ஸ்டூடியோவாக இருந்த ஹோப்டோன் ஸ்டூடியோ (Hopetoun Studio) வை சொந்தமாக நடத்தி வந்தவர். இலங்கையின் புகைப்படத்துறை வரலாற்றில் தவிர்க்கமுடியாத நபர் அவர். ஆனால் சிங்கள மொழியில் வெளிவந்த வரலாறுகளில் ஏனோ தவிர்க்கப்பட்டவர். இலங்கையர்கள் சினிமாவை பார்க்க வைத்த முன்னோடி அவர்.

Adolphus William Andree).  அந்திரியின் “Hopetoun Studio”

“கடவுனு பொறந்துவ” வின் மூலம் சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவரும் தமிழர் தான். அத்திரைப்படம் தொடங்கும் போது முதலில் எம்.எஸ்.நாயகம் தோன்றி உரையாடுவார். அதன் பின் தான் எழுத்தோட்டம் தொடரும். (பார்க்க )

பெயர் பட்டியல் காண்பிக்கப்பட்டவுடன் முதலில் பதட்டத்துடனும், கவலையுடனும் ஒரு பெண்ணின் முகம் குளோஸ் அப்பில் காட்டப்பட்டுத் தொடங்கும். (கீழே காணொளி இணைப்பில் பார்க்கலாம்) அப்பெண் தான் இலங்கை திரைப்படத்தின் முதலாவது நாயகி. ருக்மணி தேவி என்று அழைக்கப்பட்ட டேசி டேனியல். அவரும் தமிழர். தான் தோன்றிய படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடியவர். அவரோடு கதாநாயகனாக நடித்த எடி ஜயமான்னவும் ருக்மணிதேவியும் வாழ்கையிலும் இணையர்களாக ஆனார்கள்.

83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தினார்கள் இனவாதிகள். இலங்கையின் சிங்களத் திரைப்படத்துறையை (இலங்கைக்கே திரைப்படத்துறையை) உருவாக்கி அறிமுகப்படுத்தியது சிங்களவர்கள் அல்லர். தமிழர்களே. சிங்கள சினிமாத்துறையை ஆரம்பித்து வைத்தது மட்டுமன்றி அதனை ஆரம்பத்தில் வளர்ப்பதிலும் முக்கிய இடத்தை தமிழர்கள் வகித்தார்கள். இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமான “கடவுனு பொறந்துவ” (உடைந்த வாக்குறுதி) 1947 ஜனவரியில் வெளிவந்தது. அதில் நடிகர்கள் பலர் சிங்களவர்களாக இருந்தாலும் அதனை உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தி, தமிழ் திரைப்படங்களே ஆக்கிரமித்திருந்தன.

“கடவுனு பொறந்துவ” திரைப்படத்தைத் தயாரித்த எஸ்.எம்.நாயகம் (சுந்தரம் மதுரநாயகம்) மதுரையில் சோப்பு கம்பனி வைத்திருந்த வர்த்தகர். அவருக்கு தனியான திரைப்பட ஸ்டூடியோவும் திருப்பரங்குன்றத்தில் இருந்தது. அதில் அவர் ஏற்கெனவே திரைப்படங்களை உருவாக்கியிருந்தார். அவரின் தயாரிப்பில் 1946இல் உருவான “குமரகுரு” என்கிற திரைப்படத்தை இயக்கியவர் பெங்காலியரான ஜோதிஸ் சின்ஹா. அத் திரைப்படம் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஓகஸ்ட் 15 அன்று வெளியானது.

வரலாற்றுப் பின்புலம்

உலகின் முதலாவது திரைப்படம் 1895 இல் திரையிடப்பட்டது. அது பேசாத் திரைப்படமாகத்தான் (Silent movie) வெளிவந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர் தான் இலங்கையில் பேசும் பேசும் படத்தை மக்கள் கண்ணுற்றார்கள். 


ஆனால் 1925 இல் இலங்கையில் முதலாவது பேசாத் திரைப்படம் (silent movie) உருவாக்கப்பட்டது. அத்திரைப்படத்தின் பிரதான கதாநாயக பாத்திரத்தை ஏற்று நடித்தவர் என்.எம்.பெரேரா (பிற்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக ஆன அதே என்.எம்.பெரேரா). அவருக்கு அப்போது 20 வயது தான். இலங்கையின் முதலாவது திரைப்படக் கதாநாயகன் அவர் தான். “ராஜகீய விக்ரமய” (ராஜரீக சாகசம் - Royal Adventure) என்கிற தலைப்பிலான அந்தத் திரைப்படத்தை இயக்கியவரும் தமிழகத்தைச் சேர்ந்த குப்தா என்கிற தமிழர் தான். அதனைத் தயாரித்தவர் டி.ஏ.நூர்பாய் என்கிற போரா சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர். நூர்பாய் அதுவரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரைப்படங்களை தருவித்து திரையரங்குகளுக்கு விநியோகித்து வந்த வர்த்தகர். இதில் உள்ள விசித்திரம் என்னெவென்றால் இலங்கையில் உருவாக்கப்பட்ட அந்த முதல் திரைப்படம் இலங்கையர் எவரும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அத்திரைப்படத்தை கொழும்பு பம்பலப்பிட்டியில் குதிரைப் பந்தயத் திடலுக்கு அருகாமையில் இருந்த பெரிய வீடொன்றை ஸ்டூடியோவாக உருவாக்கிக்கொண்டு படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தியாவில் இருந்து வந்து இத்திரைப்படத்தில் பணியாற்றினார். அது 1925 இல் பம்பாயிலும், சிங்கப்பூரிலும் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் திரையிட கொணர்வதற்காக தயார் நிலையில் இருந்த போது வியாபார போட்டியின் காரணமாக அது பம்பாயில் எரிக்கப்பட்டுவிட்டது.

“கடவுனு பொறந்துவ”வை முதற் திரைப்படமாக அறியப்பட்டாலும் 1936 இல் “பலிகெனிம” (பழிவாங்குதல்) என்கிற ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது. அது 19. மே 1936 அன்று கொட்டாஞ்சேனை கெயிட்டி தியேட்டரில் முதலாவதாக திரையிடப்பட்டது. அதில் பிரதான கதாநாயக வேடத்தில் நடித்தவர் அன்றைய டவர் மண்டப நாடக நடிகரான என்.எம்.ஆர்.டயஸ். இதை இயக்கியவர் டவர் மண்டப இசையமைப்பாளராக இருந்த டபிள்யு,தொன் எட்வின். ஆனால் அது 30 நிமிடங்களை மட்டுமே கொண்ட ஒரு குறுந்திரைப்படமாக இருந்ததாலும் “ஊமைப் படமாக” அதாவது பின்னணிக் குரல்கள் அற்ற திரைப்படமாகவும் இருந்ததால் அதை ஒரு முழு நீள திரைப்படப் பட்டியலில் எவரும் சேர்ப்பதில்லை. ஆனால்  அதையே முதலாவது திரைப்படமாக பதிவு செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமாகவும் “கடவுனு பொறந்துவ”வைத் தான் குறிப்பிட முடியும்.

இலங்கையின் பழைய சினிமா கொட்டகை

1901இலேயே முதன்முதலாக இலங்கையில் திரைப்படம் தனிப்பட்ட ரீதியில் காண்பிக்கப்பட்டது. அன்றைய ஆளுநர் வெஸ்ட்  ரிஜ்வே மற்றும் “இரண்டாவது போவர் யுத்த” கைதிகளுக்காகவும் காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் அது. அதன் பின்னர் குறும் ஆவணப்படங்களாக போவர் யுத்த வெற்றி பற்றியும் விக்டோரியா இராணியின் மரணச்சடங்கு என்பவை இலங்கையில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களுக்காக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் சினிமாக்கொட்டகை அமைத்து “பயஸ்கோப்” காட்டும் முறை அறிமுகமானது. 1903 இலேயே நிலையான தியட்டர் “மதன் தியட்டர்” பேரில் உருவாக்கப்பட்டு இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

கெப்பிட்டல் தியேட்டரின் உரிமையாளர் அன்றைய பிரபல முஸ்லிம் வர்த்தகரான எப்.டீ.பாரூக். சிங்களத் திரைப்படமொன்றை தயாரிக்கும் நோக்கில் பாம்பே பைனியர் பில்ம்ஸ் கொம்பனி என்கிற ஒன்றை 1938இல் உருவாக்கி ஷாந்தா என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக சிங்கள மேடை நாடக நடிகர்களை  பம்பாய்க்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கிடையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.

இலங்கைக்கான பேசும் திரைப்படமொன்றை உருவாக்கும் முயற்சியில் முதலாவது ஈடுபட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.துரைசிங்கம். 1940 களின் நடுப்பகுதியில் துரைசிங்கமும், கொலின் விஜேசூரியவும் அம்முயற்சிக்காக இந்தியாவுக்கு பயணித்தார்கள். இந்தியாவில் பிரலமாக ஓடிக்கொண்டிருந்த தெலுங்கு திரைப்படமான “லைலா மஜுனு” கதையைத் தழுவி “திவ்ய பிரேமய” என்கிற ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தனர். அதற்காக படக்குழுவுடன் மெட்ராஸ் புறப்பட்டார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது இடைநடுவில் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டு அனைத்தும் ஸ்தம்பிதமானது. படக்குழுவினரும் சில நாட்களில் இலங்கை திரும்பிவிட்டனர். அத்தோடு அந்த முயற்சியும் நின்றுபோனது. அது அப்போதே வெளிவந்திருந்தால் அது தான் இலங்கையின் முதலாவது பேசும் சினிமாவாக இருந்திருக்கும். ஆனால் அது பின்னர் 1948 இல் வெளியானது.

இதற்கிடையில் எஸ்.எம்.நாயகம், சாந்திகுமார் செனவிரத்ன ஆகியோர் இணைந்து சித்திரகலா மூவிடோன் (Chitrakala Movietone)  என்கிற திரைப்பட கம்பனியொன்றை ஆரம்பித்தார்கள். அதன் மூலம் கண்டி மன்னன் “ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்” அரசனின் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அதற்கான உத்தேச செலவு அதிகமாக இருந்ததால் அதைக் கைவிட்டு “அசோகமாலா” என்கிற வரலாற்றுக் கதையை திரைப்படமாக்க முடிவு செய்தார். ஆனால் அதற்கான சரியான திரைக்கதையை உருவாக்குவதற்காக ஒரு போட்டியை அறிவித்தார். அதற்காக 500 ரூபா பரிசுத் தொகையும் அறிவித்தார்.

அந்த போட்டியில் இறுதியில் சாந்திகுமார் செனவிரத்ன எழுதிய திரைக்கதை தான் வென்றது. அவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துவிட்டு திரைக்கதையை பெறுவதற்கு எஸ்.எம்.நாயகம் முன்வந்தபோதும் சாந்திகுமார் இறுதியில் உடன்படவில்லை. அக்கதையை வைத்து திரைப்படத்தை தயாரிப்பதில் முரண்பட்ட சாந்திகுமார் ‘சித்திரகலா மூவிடோன்’ நிறுவனத்திலிருந்து விலகி சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சிற்றம்பலம் ஏ கார்டினரை சந்தித்து திரைப்படத்தை உருவாக்கும் விருப்பைத் தெரிவித்தார். அவரும் திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் உடன்பட்டார். சாந்திகுமாரே அத்திரைப்படத்தை இயக்குவதற்கும் உடன்பட்டார்.

கடவுனு பொறந்துவ - ருக்மணி தேவியும், ஜயமான்னவும்

நாயகம் இதனால் சோரவில்லை. அவர் பீ.ஏடபிள்யு ஜயமான்னவை தேடி மினர்வா நாடகக் கம்பனியின் காரியாலயத்துக்குச் சென்றார். இறுதியில் அவர் முடிவு செய்த கதை தான் “கடவுனு பொறந்துவ”. இலங்கை முழுவதும் அப்போது 800 தடவைகளுக்கும் மேல் மேடையேற்றப்பட்ட நாடகக் கதை தான் அது. முதலில் இந்த முயற்சிக்காக எந்த சம்பளமும் இன்றி தான் நடித்துத் தருவதாக ஜயமான்ன கூறினாலும், இது ஒரு வியாபாரம் என்றும், இதற்காக முழு நாடகக் குழுவையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்றும். அதற்காக முழு நாடகக் கம்பனிக்கும் 25,000 ரூபாவை சம்பளமாகவும், மேலதிக செலவுகளையும் தாம் பார்த்துக் கொள்வதாகவும் பேசி முடித்தார். அது மட்டுமன்றி திரையிடலுக்குப் பின்னர் கிடைக்கும் இலாபத்தில் நூற்றுக்கு இரண்டு வீதத்தையும் தருவதாக வாக்களித்தார். ஜயமான்ன குழுவினர் முழுமையாக உடன்பட்டு 26.06.1946 அன்று இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டனர்.

மதுரை ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கும் வேலைகள் ஆரம்பமாகின. நாடகக் கதையை திரைக்கதையாக ஆக்கினார் பீ.ஏ.டபிள்யு.ஜயமான்ன. திரைப்படத்தை ஜோதிஸ் சின்ஹாவைக் கொண்டு தான் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். ஒளிப்பதிவை கே. பிரபாகர் செய்தார்.

பேர்சி ஜயமான்ன என்கிற லேக் ஹவுஸ் நிறுவன பத்திரிகையாளர் முதலாவது திரைப்படத்தின் உருவாக்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவர் சிங்களத் திரைப்படத்தின் முதலாவது கதாநாயகனான ஜயமான்னவிடம் கண்ட பேட்டியில் ஒரு பகுதியையும் அக்கட்டுரையில் பகிர்ந்திருந்தார். 

மிகவும் சத்தமாக சிரித்துக்கொண்டு அந்தக் கதையை இப்படிக் கூறியிருக்கிறார்.

"திரைப்படம் பற்றிய எந்த அறிவும் எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. அதைப் பற்றி எங்களுக்குச் சொல்லித் தந்ததுமிலை. எனவே மேடையின் பின்னணியில் தொங்கவிடும் திரைச்சீலைகளையும், அலங்காரப் பொருட்களையும் கூட இங்கிருந்து கொண்டு சென்றோம். ஒரு நாள் எங்களை அந்த நாடகத்தை செய்து காட்டும் படி கூறினார்கள். அந்த மேடையில் ஆங்காங்கே லைட்டுகள் காணப்பட்டதால் முதலில் நாங்கள் அங்கே ஒளிப்பதிவு நடந்துகொண்டிருந்தாக நினைத்துவிட்டோம். எனவே அதற்கடுத்த நாட்களில் திரைச்சீலைகளை எல்லாம் சுருட்டிக்கொண்டு திரும்புவதற்கு ஆயத்தமாக இருந்தோம்.”

“அதன் பின்னர் தான் அவர்கள் எங்களுக்கு; ‘இதை திரைக்கதையாக்கி காட்சிகளாக பிரித்து, பிரித்து பகுதி பகுதியாகத் தான் ஒளிப்பதிவு செய்யப்படும்’ என்று தெளிவுபடுத்தினார்கள்.”

என்று சிரிப்பொலியுடன் கூறியிருக்கிறார். இன்றும் ஜயமான்ன இலங்கை சினிமாவின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.

அசோகமாலாவுக்கு நேர்ந்த கதி

இதற்கிடையில் அசோகமாலா திரைப்படத்தை எடுப்பதற்காக சாந்திகுமார் செனவிரத்னவும் இந்தியாவை சென்றடைந்திருந்தார். 1946 நவம்பரில் அவர் மெட்ராஸ் சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரைப்படப் பணிகளை ஆரம்பித்தார். ஏற்கெனவே சாந்திகுமார் இந்தியாவில் நாட்டியக் கலையைப் பயின்றவர். அதுமட்டுமன்றி ஸ்டூடியோ வேலைகளையும் அறிந்திருந்தவர். அவர் தேசிய இசை, நாடக மரபை அறிந்திருந்தவர். அவர் அந்த ஸ்டூடியோவின் கலை இயக்குனராக இருந்த டீ.ஆர்.கோபுவுடன் இணைந்து அசோகமாலா திரைப்படத்தை இயக்கினார்.

அத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக முஹமட் ஹவுஸ் என்பவரை இணைத்துக்கொண்டார். டபிள்யு.தீ.எல்பர்ட் பெரேரா (அமரதேவ), மொஹிதீன் பேக் போன்றோர் இத்திரைப்படத்துக்கு ஊடாகத் தான் இசைக்களத்துக்குள் பிரவேசித்தார்கள். சாந்திகுமார் செனவிரத்ன அத்திரைப்படத்தில் தானே கதாநாயகனாகவும் வேடமேற்று நடித்தார். ஹெர்பி செனவிரத்ன, எமிலி திம்புலான, மைக்கல் சன்னஸ் லியனகே, தொன் எட்வர்ட் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆரம்பத்தில் “திவ்ய பிரேமய” திரைப்படத்தை உருவாக்குவதற்காக துரைசிங்கம் உள்ளிட்ட குழுவினரின் முயற்சி; அதன் பிரதான பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த ஈ.சீ.பீ.விஜேசிங்க படத்தில் இருந்து நீங்கியதால் அப்பணிகள் இடைநின்று போனது. அதனால் அக்குழு அந்த இடைக்காலத்தில் இந்தியாவில் இருக்கும் காலத்திலேயே; அதில் நடிக்கவிருந்த குழுவினரைப் பயன்படுத்தி “கிரஹ பிரவேசம்” என்கிற தெலுங்கு திரைப்படத்தை “மன பிரயந்த” என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிடும் பணியில் வெற்றி பெற்றார்கள். அப்படி டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படம் 1947 மே மாதம் இலங்கையில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் துரைசிங்கம் புதிய நடிகர்களைக் கொண்டு மீண்டும் “திவ்ய பிரேமய” திரைப்படத்தை தயாரித்து முடித்தாலும் அது 1948 மே மாதம் தான் வெளிவந்தது.

ஆரம்பத்திலேயே திரைப்பட முயற்சியைத் தொடங்கியிருந்தாலும் “திவ்ய பிரேமய” இப்போட்டியில் தாமதமடைந்ததால் அசோகமாலாவும், “கடவுனு பொறந்துவ”வும் தான்; களத்தில் முதலாவது திரைப்படம் எது என்பதில் போட்டியிட்டன. இறுதியில் எஸ்.எம்.நாயகம் வெற்றிபெற்றார். 1947 ஜனவரி 21 “கடவுனு பொறந்துவ” திரையிடப்பட்டது. அதற்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்து தான் 1947 ஏப்ரல் 09 ஆம் திகதி அசோகமாலா திரைக்கு வந்தது. அது தான் இலங்கையின் இரண்டாவது பேசும் படம்.

“கடவுனு பொறந்துவ”வின் வெற்றி

“கடவுனு பொறந்துவ” முதலாவது திரைப்படமாக அறியப்பட்டதால் அத் திரைப்படத்தில் நடித்த பலர் முதலாவது என்கிற பெருமைக்கு உள்ளானார்கள். ருக்மணி தேவி இலங்கையின் முதலாவது திரைப்பட கதாநாயகி என்று அறியப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

பி.ஏ.டபிள்யூ. ஜயமான்ன, எடி ஜயமான்ன, ருக்மிணி தேவி, ஸ்டான்லி மல்லவாராச்சி, பீட்டர் பீரிஸ், ஹியூகோ பெர்னாந்து, பெர்ட்ரம் பெர்னாந்து, மரியம் ஜயமான்ன (குழந்தை நடிகை), டபிள்யூ. பாலசூரிய, ஜே.ஏ.பீ. ஜோ ஜயமான்ன, திமோதியஸ் பெரேரா, விசிடோர் பொன்சேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், சிகை அலங்காரன் வேடத்தில் நடித்த எடி யாப்பா, குறுகிய கால விடுப்பில் இலங்கை சென்று மீண்டும் திரும்ப முடியாமல் போய்விட்டது. அவரின் வேடத்தில்; பாடல் இயற்றவென அழைத்துச் செல்லப்பட்ட; நடிப்பைப் பற்றி எந்த அனுபவமுமற்ற ஹியூகோ மாஸ்டர் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஆறு பாடல்களை ருக்மணி தேவியே பாடியிருக்கிறார். மொத்தம் மூன்றே மாதங்களில் தயாரான திரைப்படம். இத்திரைப்படத்தின் பல பாடல்கள் அன்றைய இந்திப் பாடல்களின் மெட்டைப் பிரதிபண்ணியே உருவாக்கப்பட்டிருந்தன. 

திரைப்படத்திற்கு ஆர். நாரயண ஐயர் இசையமைத்திருந்தார். அவருக்கு உதவியாளராக ஆர்.முத்துசாமி பணியாற்றினார். (ஆர்.முத்துசாமி அப்சராஸ் இசைக்குழுவின் தலைவர் மோகன்ராஜின் தகப்பனாவார்.) ஆர்.முத்துசாமி பின்னர் இலங்கையில் வெளியான பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

இந்தத் திரைப்படத்தின் முதலாவது காட்சி கொட்டாஞ்சேனை கிங்ஸ்லி தியட்டரில் காண்பிக்கப்பட்டபோது அன்றைய காணி அமைச்சராகவும் பிற்காலத்தில் இலங்கையின் முதலாவது பிரதமராகவும் ஆன டீ.எஸ்.சேனநாயக்கவின் தலைமையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

கிங்ஸ்லி தியேட்டரில் அப்போது 127 நாட்கள் ஓடியது. அதுபோல ஜிந்துப்பிட்டி டோக்கீஸ் (பிற்காலத்தில் முருகன் தியட்டர் என்று பெயர் மாற்றம் பெற்றது) தியட்டரில் 42 நாட்கள் ஓடியிருக்கிறது. மைலன் தியட்டரில் 28 நாளும், மருதானை நியூ ஒலிம்பியா மற்றும் நாடெங்கிலும் அப்போது இருந்த பல தியட்டர்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

கிங்க்ஸ்லி தியட்டரில் "கடவுனு பொரொந்துவ" முதற் காட்சிக்குப் பின் எஸ்.எம்.நாயகம் அவர்களுடன் கலைஞர்கள் - 21.01.1947

இனத்துவ பாகுபாட்டுக்குள்...

சிங்கள சினிமாத்துறை நெடுங்காலமாக இந்தியாவின் தயவிலேயே இருந்துவந்தது. தொழில்நுட்பத்துறை ஸ்டூடியோ பின்னணி, இசை என அனைத்துக்கும் இந்தியாவுக்கு சென்றுதான் படத்தை முடித்துக் கொண்டுவந்தார்கள். பின்னணி இசை, இசைக்கலவை, படத்தொகுப்பு கூட அங்கேயே மேற்கொள்ளப்பட்டதால் தமிழ்நாட்டிலிருந்த பாடகர்களையே சிங்களத்தில் பாட கற்பித்து பாடவைத்தார்கள்.

முதலாவது திரைப்படம் தோன்றி முதல் 9 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்த சிங்கள சினிமாத்துறையின் போக்கை மாற்றினார் சமீபத்தில் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். 1956 இல் அவர் இயக்கிய “ரேகாவ” என்கிற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக இந்திய ஸ்டூடியோவை விட்டு விலகி இலங்கைக்கான சுதேசிய திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1956 என்பது “சுதேசியம்” என்கிற பேரில் நிகழ்ந்த இனத்துவ- மதத்துவஅரசியல் மாற்றங்களை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.

ஏற்கெனவே இலங்கையின் திரையரங்குகளில் ஆக்கிரமித்திருந்த தமிழ், இந்தி திரைப்படங்களால் கவரப்பட்டிருந்த நிலையில் தென்னிந்தியாவில் தயாரான சிங்களத் திரைப்படங்கள் சிங்கள மக்களின் இரசனையிலிருந்து அந்நியமாக இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் தமது சுயத்தை அங்கு காணவில்லை என்பதை உணரத் தொடங்கினார்கள். தமது பண்பாட்டிலிருந்து விலகியிருப்பதை கண்டுகொண்டார்கள். அப்போது அவர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தையும் அடைந்திருந்தார்கள். தமக்கான சிங்கள அரசை நிறுவிக்கொண்ட சிங்கள சமூகம் தமது கலை - பண்பாட்டு அம்சங்களை மீள்கண்டுபிடிப்புக்கும், மீளுருவாக்கத்துக்கும் உள்ளாக்கினார்கள். சிங்கள சினிமாத்துறை நிமிர்வதற்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு அனுசரணையாக இருந்தது. அது உள் நாட்டில் தமிழ் திரைப்படத்துறையொன்றின் தேவையையும் கண்டுகொள்ளவில்லை. சுதேசிய சினிமாத்துறை என்பது சிங்கள சினிமாத்துறை தான் என்கிற மனநிலை சர்வ சாதாரணமாக குடியிருந்தது.

மறுபுறம் சிங்கள சினிமாவைப் போலவே தமிழ் சினிமாத்துறைக்கான முயற்சியும் இராட்சத இந்திய சினிமாத்துறையின் உற்பத்தியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. உள்நாட்டு உற்பத்திச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு விடப்பட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது எளிமையாகவும், இலாபகரமாகவும் இருந்தது. 70களில் சிறிமா அரசாங்கத்தால் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தான் ஈழத்து தமிழ் சினிமா கூட சற்று தலைநிமிர வாய்ப்புகளைத் திறந்தன. சிங்களத் திரைப்படங்களுக்கும் தான்.

ஈழத்து தமிழ் சினிமாவுக்கான தேவையை உணர்ந்தபோது தமிழர் தரப்பில் அதற்கான பலமும், வளமும், அனுசரணையும் இருக்கவில்லை. இலங்கையின் முதலாவது சிங்கள சினிமாவை தயாரித்தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை கிறேஷன் ஜெயமான்ன என்கிற சிங்களவர் ஒருவரே இயக்கினார். 1947 இல் வெளியான  “செங்கவுனு பிலிதுரு” (மறைந்திருக்கும் விடை), என்கிற அந்த திரைப்படம் தமிழ் மொழிமாற்று திரைப்படமாக “குசுமலதா” என்கிற பெயரில் 1951இல் வெளியானது. மொழிமாற்று என்பதால் அதை முதலாவது தமிழ் திரைப்படமாக பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி” நாவலைத் தழுவி “சமுதாயம்” என்கிற பெயரில் 1962இல் வெளிவந்த திரைப்படத்தையே இலங்கையில் வெளியான முதல் தமிழ் திரைப்படமாக கொள்ளப்படுகிறது. அதை இயக்கியவரும் ஹென்றி சந்திரவன்ச என்கிற சிங்களவர் தான்.

சுதந்திரத்துக்கு முன்னர் சிங்களத்திரைப்படத்துறை தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் தங்கியிருந்தது போல பிற்காலத்தில் சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழ் திரைப்பட உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் சிங்கள சினிமாத்துறையில் தங்கிருக்கும் நிலை ஏற்பட்டது.  தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஈழத்து சினிமாவில் பெரும்பங்கு வகித்த போதும் ஈழத்து திரைப்படங்கள் எதுவும் சிங்களத் திரைப்படத்துறையினரின் தயவின்றி வெளிவரவில்லையென்றே  கூற முடியும்.

இனப்பிரச்சினை கூர்மைபெற்று தமிழர் கலைகள், பண்பாட்டு வெளிப்பாடுகள் நசுக்கப்பட்ட காணாமால் ஆக்கப்பட்டதன் வரிசையில் முக்கிய இடத்தை ஈழத்து சினிமா அடைந்தது. அதன் மீளுருவாக்கத்துக்கு எந்த நாதியும் இல்லாமல் போனபோது அதை ஒரு பொருட்டாக கருதுவதற்கு சிங்களத் திரைப்படத்துறையோ, அரசோ தயாராக இருக்கவில்லை. “இலங்கை சினிமா” என்பது இன்றும் “சிங்கள சினிமா” என்கிற கருதுகோள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த இடத்தில் சுதேசிய சினிமாவின் 75 வது ஆண்டை முன்னிட்டு பிரபல சினிமா கலைஞர் ஜாக்சன் அன்ரனி லேக்ஹவுஸ் பத்திரிகையான “சரசவிய” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறப்பட்ட விடயங்கள் கவனிக்கத்தக்கது.


“சிறிசேன விமலவீர ‘பொடிபுதா’ (சின்ன மகன்) என்கிற திரைப்படத்தை உருவாக்குவதற்காக புறக்கோட்டை அரசமரத்தடியில் ஒரு பெட்டிக்கடையொன்றைப் போல செய்து அதில் “சிங்கள நாட்டில் சிங்களவர்களால் உருவாக்கப்படும் முதலாவது திரைப்படத்துக்கு உதவி செய்யுங்கள்” என்று ஒரு பதாகையை தொங்க விட்டிருந்தார். தேவையான பணத்தை பத்து ரூபா பங்குகளையும் விற்பனையின் மூலமும் சேகரித்தார். பெருமளவானோரின் பங்களிப்புடன் தாராளமாக நிதி கிடைத்தது.

இலங்கையில் அத்திரைப்படம் பெரும் புளொக் பஸ்டர் ஆனது. வர்த்தக ரீதியில் பெரும் இலாபத்தை ஈட்டித் தந்த படம் அது. அவர் பங்குதாரர்களுக்கு இலாபத்தை பிரித்துக் கொடுக்க முற்பட்டவேளை அவர்கள் அனைவரும் ஒரு திரையரங்கை அமைக்க அந்தப் பணத்தை பயன்படுத்தும்படி ஏகோமானதாக அறிவித்தார்கள். சிறிசேன கிரிபத்கொட நகரில் “நவஜீவன” என்கிற ஒரு திரையரங்கை அமைத்தார். இந்திய கம்பனிகளின் அதிகாரத்தில் தான் அப்போது சினிமாத்துறை இருந்தது. அந்தக் கம்பனிகள் இதனால் வெகுண்டெழுந்து தாக்கத் தொடங்கினார்கள். சிறிசேனவின் படைப்புகளை அவர்களின் திரையரங்குகளில் காண்பிக்க அனுமதிக்கவில்லை. அவர் தனிமைபடுத்தப்பட்டதில் தோற்றுப்போனார். அரச ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. அந்த இந்திய கம்பனிகளில் பங்குதாரர்களாக சேனநாயக்கமார்களும் இருந்தார்கள். அதனால் பெரும் பணக்கார செல்வந்தர்களின் ஆதரவு அந்த சினிமா கம்பனிகளுக்கு இருந்தது.

இந்த நேரத்தில் தான் இலங்கையில் சினிமா நடிகர் சங்கங்கள் எல்லாம் உருவானது. அவர்கள் இந்திய கம்பனிகளை எதிர்க்கத் தொடங்கினார்கள். காமினி பொன்சேகா போன்றோர் இந்த விடயத்தில் இனவாதமாக நடந்துகொள்ளாது புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றார்.

எனவே இதில் அரசியல் புதைந்திருந்தது. இது எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், எனது நினைவில் 60களில் ராகம நியுஜெம் திரையரங்கில் எம்.ஜீ.ஆரின் படத்தை திரையிட்ட வேளை சாணி எறிந்தார்கள். கட் அவுட்டுக்கு தார் பூசினார்கள். அப்போது இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களுடன் இலங்கை தமிழ் போராட்டங்ககளை ஊக்குவிக்கும் சினிமாக்கள் வெளியாகியது இதற்குக் காரணம்...”


83 இனப்படுகொலை ஏற்படுத்திய தாக்கம்

எந்த திரைப்பட உருவாக்கமும் பல இனத்தவர்களின் பங்களிப்போடு தான் வெளிவரமுடியும் என்கிற கருத்தை இங்கு கேள்விக்குட்படுத்தவில்லை. மையப்பிரச்சினையாக இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாட்டில் இனத்துவ காரணிகள் கலக்காத எதுவும் இல்லை என்பதால் இலங்கை சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை இனத்துவ கண்ணாடிக்கூடாகக் காண்பதைத் தவிர்க்க முடியாது.

சிங்கள சினிமாத்துறைக்கு பலத்த அடி 83 கருப்பு ஜூலை சம்பவம் என்கிறார் எழுத்தாளர் நாரத நிஷ்ஷங்க. சிங்கள – தமிழ் திரைப்படங்களின் விநியோகஸ்தகராக அறியப்பட்ட காலோ பொன்னம்பலத்தின் பொரல்லை காரியாலயம் எரிக்கப்பட்டபோது நான் கையறு நிலையில் துரதிர்ஷ்டமானவனாக இருந்தேன். அந்த வீதியில் எறியப்பட்டிருந்த ஆரம்பகால அரிய சினிமா ரீல்களையும், போஸ்டர்களையும் என்னால் முடிந்த அளவு சேர்த்துக் கொடுத்தேன். சிங்கள திரைப்படத்துறையை ஆரம்பித்து, வளர்த்துவிட்டவர்கள் தமிழர்களே. ஆனால் நாடு பூராவும் உள்ள திரையரங்குகள் பல இனவாதத் தீயால் நாசமாக்கப்பட்டன. வெள்ளவத்தை சப்பாயர், தெஹிவள ட்ரியோ, நீர்கொழும்பு ராஜ், நாரஹென்பிட்டிய கல்பனா போன்ற திரையரங்குகளும் எரிக்கப்பட்டன” என்கிறார் அவர்.

இலங்கையில் பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்த சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.குணரத்தினம் தனது மகள் விஜயாவின் பெயரில் ஹெந்தலயில் நடத்தி வந்த பிரபல விஜயா தியட்டர் சிங்களத் திரைப்படங்கள் பலவற்றை காட்சிப்படுத்திய தியேட்டர். அதை தீயிட்டு அழித்தது மாத்திரமல்ல இந்தக் கலவரத்தில் அங்கே இருந்த “சங்தேசய”, “தீவரயோ”, “சண்டியா”, “சூர சௌரயா” போன்ற ரீல்கள் அழிக்கப்பட்டு இன்றைய சந்ததிக்கு மீண்டும் அதனைக் காணும் வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள். இந்தத் திரைப்படங்களில் நடித்த காமினி பொன்சேகா பின்னொருகாலத்தில் ஒரு நேர்காணலில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்ட செய்தியையும் நாம் காண்கிறோம். விஜயா திரையரங்கு எரிந்து கொண்டிருந்தபோது அங்கு விரைந்த சினிமாதுரையைச் சேர்ந்த விஜயகுமாரதுங்க, நீள் ரூபசிங்க, சரத் ரூபசிங்க, பெப்டிஸ் பெர்னாண்டோ, ரவீந்திர ரந்தெனிய போன்றோர் எஞ்சியவற்றை மீட்கப் போராடியிருக்கிறார்கள்.

மருதானை டார்லி வீதியில் இருந்த கே.குணரத்தினத்தின் “காமினி ஹோல்” சினிமா தியேட்டரும் 1983 இனக்கலவரத்தின் போது யூலை 24 ஆம் திகதி முழுமையாக தீயிட்டு அழிக்கப்பட்டது. 

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறையும் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி பல சிங்கள கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “சிரிபத்துல” என்றால் “புத்தரின் பாதச்சுவடு” பொருள்.  (சிவனொளிபாதமலைக்கு சென்று வணங்குவது புத்தரின் பாதச்சுவடு என்று நம்பப்படும் "சிரிபத்துல" வைத் தான்)

"சிரிபத்துல" என்கிற பெயரில் 1978இல் சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சிறந்த படத்தை இயக்கியவர் கே.வெங்கட். 83 கலவரத்தில் உயிருடன் கொளுத்தி கொல்லப்பட்டார். நிஷ்ஷங்க திவயின பத்திரிகையில் (19.03.2013) எழுதிய கட்டுரையில் “சக சினிமாத்துறை நண்பரான பாலித்த யசபால கே.வெங்கட்டை பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்திருந்தார். ஆனால் யசபால இல்லாத சந்தர்ப்பமொன்றில் கே.வெங்கட் வெளியே சென்ற சந்தர்ப்பத்திலேயே கொல்லப்பட்டார் என்கிறார் அவர்.

பிரபல சினிமாத்துறை அறிஞரான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “காந்தர்வ அபதான” என்கிற சிங்கள நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“1983 கலவரத்தில் ரொக்சாமி வசித்துவந்த ஹெந்தல வீட்டை சண்டியர்கள் தீயிட்டு அழித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ரொக்சாமி. சிரிபத்துல என்கிற பௌத்த திரைப்படம் உள்ளிட்ட மஹா ரே ஹமுவு ஸ்திரீய, நிலூகா, தமயந்தி, ஷீலா, கொப்பலு ஹன்ட போன்ற திரைப்பாங்களை இயக்கிய கே.வெங்கட் தெஹிவளயில் எரித்துக்கொல்லப்பட்டார். கலவரக்காரர்களிடமிருந்து உயிர்தப்பிய ரொக்சாமி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிக்கொண்டு அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்தார். அவரின் துறையைச் சேர்ந்த சிங்கள நண்பர்கள் அவரை மீட்டார்கள். சாமபலாகிப்போன அவரின் வீட்டை மீள கட்டி குடியேற்றினார்கள். ஆனால் அவர் இறக்கும்வரை அவரால் அந்த சம்பவத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை”

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன “ரொக்சாமி – முத்துசாமி” என்கிற தலைப்பில் சிங்கள நூலையும் வெளியிட்டவர்.

பல சக தமிழ் சினிமாக் கலைஞர்களை காமினி பொன்சேகா காப்பாற்றிருக்கிறார். நாடெங்கிலும் இனவாதிகளால் அழிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றை மீள மீட்கப்படவில்லை. சில திரைப்பட உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் சகலதையும் இழந்து வேதனையுடன் இறந்தே போனார்கள். சிலர் கையறு நிலையில் இந்தத் துறையில் இருந்து நீங்கினார்கள்.

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறைக்கு ஏற்படுத்திய சேதமானது சினிமா என்கிற கலைக்கு ஊடாக இணைந்திருந்த மக்களையும் பிரித்து சின்னாபின்னமாக்கியது.

சிங்கள சினிமாவின் வளர்ச்சியில் பெரும்பாற்றிய பல தமிழர்களில் என் கவனத்துக்கு வரும் முக்கிய நால்வரைப் பற்றிய சிறிய குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.

போதிமர நிழலில் எரிக்கப்பட்ட கே.வெங்கட்

அன்றைய நாள் பெரும் சலசலப்புடன் தான் ஆரம்பமானது. அவனின் வீட்டின் எதிரில் உள்ள வீதியில் இருந்தே அந்த சத்தங்கள் ஒலித்தன. எழுந்ததுமே அவனின் தாயார் வெளியில் போகவேண்டாம் என்று எச்சரித்தாள். ஆனாலும் கிட்டத்தட்ட 15 வயதையுடைய சிறுவனாக தாயாரின் சொல்லைக்கேளாமல் வீதியை நோக்கிச் சென்றான் அவன். அந்த வீதியில் பொல்லுகளையும், போத்தில்களையும் ஏந்திய மனிதக் கூட்டத்தினரை அவன் கண்டான். களுபோவிலை பகுதியைச் சேர்ந்த சண்டியர்கள் பலர் பௌத்த விகாரைக்கருகில் இருந்த அரச மர நிழலில் கூடியிருந்தார்கள். அவனது வீட்டில் இருந்து அந்த அரசமரம் கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் தான் இருக்கும். அந்த சண்டியர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்ற அனைவரையும் பரிசோதித்தார்கள். வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்தார்கள். சிலரைத் தாக்கவும் செய்தார்கள். சிலரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடியாத அளவுக்கு அங்கே சலசலப்பு மிக்க சத்தம் அந்த சூழலை நிறைத்திருந்தது.


அங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவன் அந்த அரசமரத்தினருகில் சென்றான். பலரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழராக இருந்தார் தாக்கினார்கள். வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள். சிலர் அவர்களைக் கும்பிட்டுக். கெஞ்சினார்கள். தங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். ஆனால் அப்படி வேண்டுபவர்களை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. சிறுவனான அவனுக்கு நடப்பது என்னவென்று புரிந்தது. ஆனால் கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தான்.

பின்னேரம் தெஹிவளை பக்கமிருந்து ஒரு வான் அங்கே வந்துகொண்டிருந்தது. அந்த வானில் ஒரு சாரதி மட்டுமே காணப்பட்டார். அந்த சாரதி குழப்பமடைந்திருந்தார். அந்த அரசமரத்திற்கு அருகிலுள்ள சிறு பாதைக்குள் வாகனத்தைத் திருப்பினார். அங்கேயும் சண்டியர்கள் குவிந்திருந்தனர். மீண்டும் அங்கிருந்து பிரதான பாதையை நோக்கி அவர் வாகனத்தைத் திருப்பினார். இத்தனையும் அந்த சிறுவனின் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த சாரதி ஒரு தமிழர். வெள்ளை சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அணித்திருந்தார். நெற்றியில் திருநீறும் இருந்தது. சண்டியர்கள் இறங்கினார்கள். சாரதியை வண்டியில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அந்த சாரதி நடுத்தர வயதைத் தாண்டியவர். சண்டியர்களோ இளைஞர்கள். சாரதிக்கு இனி தப்பிக்க வழியில்லை. அவரைக் காப்பாற்றவும் அங்கு எவரும் வரப்போவதில்லை. அந்த சாரதி தன்னை விட பத்து இருபது வயது சிறியவர்களிடம் மன்றாடியதைக் அருகில் இருந்து கண்டான் அந்த சிறுவன்.

அந்த சாரதி நடுங்கியபடி தன்னை அறிமுகப்படுத்தினார். தான் தான் வெங்கட் என்றும் சினிமா இயக்குனர் என்றும் கூறினார். அந்த சண்டியர்கள் எதையும் காதில் உள்வாங்கவில்லை. வெங்கட் “சிரிபத்துல” திரைப்படத்தை இயக்கியது தான் தான் என்றும் கூறினார். அந்த திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய கசட் கூட வாகனத்தில் இருக்கிறது என்றும் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அவரால் அதற்கு மேல் பேச வாய்ப்பெதுவும் இருக்கவில்லை. பெரிய கல்லொன்று அவரின் தலையை வேகமாக வந்து தாக்கியது. அவர் இரத்தவெள்ளத்துடன் அந்த போதி மரநிழலில் சுருண்டு விழுந்தார். அவரின் வெள்ளை ஆடை இரத்தத்தால் துவைந்திருந்தது. அந்தக் கொலைகாரர்கள் அவரின் மீது எண்ணெயை ஊற்றினார்கள். அது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலாக இருக்கலாம். தடிகளையும், எரியக்கூடியவற்றையும் அவரின் மேலே போட்டு  தீயிட்டார்கள்.

அந்த உடல் தீயில் வெந்து பொசுங்கிக்கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் அவரின் கைகள் வெந்த தடிகளைப் போல ஆகிக்கொண்டிருப்பதை அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவானதும் அந்த பாதகர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

தொடர்ந்தும் எரிந்துகொண்டிருந்த அந்த உடலின் அருகில் சென்ற அந்த சிறுவன் அதனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று இரவு நித்திரை வரவில்லை. தன் கண்முன்னே ஒரு உயிர் மன்றாடியதையும், துடிதுடிக்கச் சாகடிக்கப்பட்டதையும், உயிருடன் கருகி பொசுங்கியதையும் கண்டு பாதிக்கப்பட்டிருந்தான். அங்கிருந்த எவருக்கும் எந்தவித தீங்கும் இழைக்காத ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை அவனால் மறக்கவோ ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் அந்த போதி மர நிழலை நோக்கிச் சென்றான். அங்கே சாம்பலைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.  அந்த கொலைக்காக வருந்திய ஒரே ஒருவனாக அவன் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தான்.

அப்படி கொல்லப்பட்ட வெங்கட் இயக்கிய ‘சிரிபத்துல’ திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பாடல் சிங்களவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அதைப் பாடியவர் மொகிதீன் பேக். அந்த பாடல் வரிகள் இப்படி தொடங்கும்...

“மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே!”

(“மனிதனே உலகின் தெய்வமாகிறான் ... மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”)

அந்த சம்பவத்தின் நேரடி சாட்சி வேறு யாருமல்ல பிற்காலத்தில் சரிநிகர் பத்திரிகையின் கேலிச்சித்திரங்களை வரைந்தவரும், இன்று பிரபல மனித உரிமைகள் வழக்கறிஞரும், ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான டபிள்யு ஜனரஞ்சன. இந்தக் கதையை அவர் சொல்ல இன்னொரு எழுத்தாளர் எழுதி சிங்களப் பத்திரிகையில் வெளிவந்தது.


அவர் இயக்கிய இன்னொரு திரைப்படமான தமயந்தி திரைப்படத்திலும் மொஹிதீன் பேக் பாடும் அர்த்தம் நிறைந்த ஒரு பாடல் மிகப் பிரபலமான பாடல்.

"සිනහවෙන් හෝ කතාවෙන් බැහැ මනින්නට මිනිසා"

“சிரிப்பாலோ பேச்சாலோ மனிதனை அளவிட முடிவதில்லை”

கே. வெங்கட் இயக்கிய திரைப்படங்கள்.

எஸ்.எம்.நாயகம்

தமிழ்நாடு, மதுரையில் பிறந்தவர். சோப்பு, வாசனை திரவியங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை இந்தியாவிலும், இலங்கையிலும் நடத்திக் கொண்டிருந்தவர். 1940 களில் சினிமா தயாரிப்பின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது. ஸ்ரீ முருகன் நவகலா லிமிட்டட் என்கிற சினிமா கம்பனியை மதுரையில் முதலில் ஆரம்பித்து  சித்திரகலா மூவிடோன் என்கிற ஒரு ஸ்டூடியோவையும் அங்கே சொந்தமாக வைத்திருந்தார்.


எஸ்.எம்.நாயகம் 1946 இல் குமரகுரு என்கிற திரைப்படத்தை தயாரித்தார். பின்னர் 1947 “தாய் நாடு” என்கிற தேசபக்தி திரைப்படத்தை தயாரித்தார். அதை இந்திய சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இரு தமிழ்த் திரைப்படங்களும் இந்தியாவில் தான் தயாரித்தார். அதன் பின்னர் அவர் எந்தவொரு தமிழ்த் திரைப்படங்களையும் தயாரிக்கவில்லை. 1947 இல் இலங்கையின் முதலாவது திரைப்படத்தை வெளியிட்டதிலிருந்து 1960 க்குள் அவர் 9 பிரபல சிங்களப் படங்களைத் தயாரித்திருந்தார். 

கே.குணரத்தினம்

கே.குணரத்தினம் இலங்கை சினிமாவின் பிரபலமான இயக்குனர். அதுபோல பிரபல சினிமா விநியோகஸ்தர். இலங்கையின் சினிமாவை கொண்டிழுத்துப் பாதுகாத்த முக்கிய நிறுவனமான “சினிமாஸ்” கம்பனியை 1949 இல் உருவாக்கியவர் குணரத்தினம். மருதானை காமினி திரையரங்கை முதன்மையாகக் கொண்டு முதற் தடவையாக சினிமா காட்சி சபையை கட்டியெழுப்பினார் குணரத்தினம். 1953 இல் வெளியான சுஜாதா திரைப்படம் இலங்கை சினிமாவை வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. 


இல் பிற்காலத்தில் சிலோன் தியட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான எம்.செல்லமுத்துவும், சினிமாஸ் கம்பனி லிமிட்டட் உரிமையாளர் கே.குனரத்தினத்துடன் இணைந்து டவர் மண்டபத்தை சினிமா தியேட்டராக இயக்குவதற்காக “சினிமா டோக்கீஸ்” என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.   

1970 களில் சுதேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பலவற்றை தேசியமயமாக்கிய சிறிமா அரசாங்கமும் டவர் மண்டபத்தை அரசுடமையாக்க முடியவில்லை. டவர் ஹோல் தியேட்டர் மார்ச் 16, 1973 இல் “பயாஸ்கோப்” சினிமாவாகவே மாறியது. 1977 இல் பிரேமதாச பிரதமராக பதவியேற்றதும் 1978 இல் டவர் மண்டப உரிமையாளர் கே.குணரத்தினம் டவர் மண்டபத்தை இலவசமாக அரசுக்கு அளித்தார். அரசு அதனை அரசுடைமையாக பொறுப்பேற்றுக்கொண்டது. இலங்கையின் சிங்கள சினிமாத் துறைக்கும், கலைத்துறைக்கும் பெரும் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் செய்த கே.குணரத்தினம் 27.08.1989 அன்று தனது 72 வயதில் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கே.குணரத்தினம் தனது காலத்தில் ஒரு தமிழ்த் திரைப்படங்களைக் கூட தயாரித்ததில்லை அவர் தயாரித்த 21 திரைப்படங்களும் சிங்களத் திரைப்படங்கள் தான் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கே.குணரத்தினம் 1917 ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி யாழ்ப்பாணம் அத்திடியில் பிறந்தவர். அவரின் தந்தை மாணிக்கம் கனகசபை யாழ்ப்பாண வர்த்தகர். யாழ் மத்திய கல்லூரியில் கற்ற அவர் பின்னர் வியாபார ரீதியில் அவர் ஒரு தோட்ட உரிமையாளராகவும் இருந்தார். விளையாட்டில் ஈடுபாடிருந்த அவர் பல விளையாட்டுக் கழகங்களிலும் இயங்கினார். அவருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். கே.குணரத்தினத்தின் மறைவைத் தொடர்ந்து அவரின் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தியவர் அவரின் இளைய மகனான பத்மராஜா. நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகச் சமீபத்தில் வெளிவந்த “கோமாளி கிங்க்ஸ்” திரைப்படத்தை “சினிமாஸ்” கம்பனியின் பெயரில் பத்மராஜாவும் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றினார். அவரும் கடந்த 2021 மே மாதம் மறைந்தார்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட இறுதி இலங்கைத் திரைப்படம் “வீர விஜய”. அது 1960இல் வெளிவந்தது. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அத்திரைப்படத்தை தயாரித்தவர் கே.குணரத்தினம். 

கே.குணரத்தினம் சிங்களத் தயாரித்த திரைப்படங்கள்

டீ சோமசேகரன்

1953 இல் தம்பையா சோமசேகரன் திரைக்கதை எழுதிய “சுஜாதா” திரைப்படம் இலங்கையில் சக்கைபோடு போட்டது. ஒரே திரைப்படத்தில் மிகப் பெரிய பெயரைப் பெற்றார் சோமசேகரன். அதுவரை இலங்கையின் திரைப்படங்களை இந்தியப் பின்னணி கொண்ட தமிழர்களே இயக்கி வந்தார்கள். சுஜாதா திரைப்படத்தின் மூலம் இலங்கைத் தமிழரான சோமசேகரன் களத்துக்கு வந்து சேர்ந்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.குணரத்தினம். அதை இயக்கியவர் டி.ஆர்.சுந்தரம். இந்த மூன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட அத்திரைப்படம் சிங்களத் திரைப்படத்துறையின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1953 க்குப் பின்னர் சிங்களக் குக்கிராமங்கள் வரை சுஜாதா என்கிற பெயரை பெண் குழந்தைகளுக்கு சூட்டுமளவுக்கு அத்திரைப்படம் புகழடைந்திருந்தது. பிற்காலத்தில் மிகப் பிரபலமான ஜோ அபேவிக்கிரம சுஜாதா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.


சோமசேகரன் ஒரு ஆசிரியர். தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளை சரளமாக அறிந்தவர். அவரின் சுஜாதா, செடசுலன் ஆகிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியர்; இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரகோன். செடசுலன் திரைப்படத்தில் ஆனந்த சமரகோன் இயற்றிய “ஸ்ரீ லங்கா... மா ப்ரியாதர ஜயபூமி” என்கிற பாடலைப் பாடியவர் சமீபத்தில் மறைந்த லதா மங்கேஷ்கார்.

சோமசேகரனின் நெருங்கிய நண்பனாக ஆனந்த சமரகோன் இருந்தார். ஆனந்த சமரகோன் தற்கொலை செய்து இறந்த வேளை பிணவறைக்கு விரைவாக சென்று சோமசேகரன் அவ்வுடலைக் கட்டிப்பிடித்து கதறிய காட்சி குறித்து பிற்காலத்தில் ஜோ அபேவிக்கிரம நினைவு கூரியிருக்கிறார். 

டீ.சோமசேகரன் இயக்கிய திரைப்படங்கள்


நன்றி - தாய்வீடு - மார்ச் 2022


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates