Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அருந்ததியர்கள் தெலுங்கு பேசுவது ஏன்.....?

அருந்ததியர் (சக்கிலியர்) ஆங்கிலேயர் ஆட்சியின் போது சென்னை ஆளுநரும், 'தென்னிந்தியக் குடிகளும் குலங்களும்' என்ற நுலை எழுதியவருமான எட்கர் தர்ஸ்டன் என்பவர்....சக்கிலியர்கள் , ஆந்திரம், கஞ்சம் ஜில்லாவில் இருந்து நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் குடியேறியவர்கள் என்று கூறினார்.

அவரே அதே நூலில் > கொற்றவை என்ற பெண் தெய்வத்தை வணங்கியவர்கள் ' மாதியர் '.இவர்கள் தென்னாட்டில் அரசர்களாக ஆட்சி செய்திருக்கிறார்கள் < என்றும் எழுதியருக்கிறார். மாதியர் என்பது அருந்ததியரின் இன்னொரு பெயர். அறிஞர் தேவநேயப்பாவாணர் சொல்கிறார், "சக்கிலியர் என்னும் தெலுங்கு வகுப்பார் தமிழ் நாட்டிற்கு வந்த பின், 'பறம்பர்' என்னும் தமிழ் வகுப்பார் மறைந்தனர்".இங்கே பறம்பர் என்ற பெயர் அருந்ததியரைக் குறிப்பதாக தமிழ் கலைக் களஞ்சியம் அபிதான சிந்தாமணியும், சிலப்பதிகாரமும் சொல்கின்றன. ஆகவே நாம் 2000ஆண்டுகளுக்கு முன் உள்ள தமிழக வரலாற்றில் இருந்து அருந்ததியரின் வரலாறைத் தேடவேண்டும்..

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய பேரரசர்களுடன், வேளிர் என்ற மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த வேளிர் மரபில் சில குடிப் பிரிவுகள் இருந்தன. அதில் ஒன்று ' அதியர் குடி'. கடை எழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் அதியர் குடிவழி வந்த குறுநில மன்னன். இவன் ஆட்சி செய்த நிலப் பகுதியின் பெயர் குதிரைமலை. பின்னாளில் இது தகடூர் ஆகி, இன்று தர்மபுரியாக இருக்கிறது.  மன்னன் அதியமானும்,| புலவர் ஒளவையாரும் மிக நெருங்கிய நண்பர்களா் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் உறுதி செய்கின்றன.       ஒளவையார் அதியமானை ' அதியர் கோமான் ' என்று புகழ்ந்து பேசுகிறார் புறநாநூற்றில்.

இங்கே கோ என்பதற்கு பெரிய, சிறந்த, பெருமை வாய்ந்த என்று சிறப்புப் பெயர்கள் உண்டு. கோ என்ற ஓரெழுத்துச் சொல்லும், மா என்ற ஓரெழுத்துச் சொல்லும், இருசொல் ஒருபொருள் ஆகும். எனவே அதியர்குடியினர் சிறப்பு வாய்ந்தவர் என்பதை உணர்த்த அவர்கள் மா+அதியர் என்று அழைக்கப் பட்டனர். மாதியர் -- இதுதான் அருந்ததியரின் முதல் இனப்பெயர். அதுபோல அருமை (யான) +அதியர் என்பது அருந்ததியர் ஆயிற்று. மாதியர், அருந்ததியர் ஆகிய இவ்விரு பெயர்களும் மரபு வழியான அருந்ததியர்களின் குடிப் பெயர்களள் ஆகும்.

அடுத்து பறம்பன் என்ற பெயரைப் பார்ப்போம். 2000 அடி உயரத்திற்கு உள் இருக்கும் மலையைப் பறம்பு என்று சொல்வார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி என்று அழைக்கப்படும். எனவே பறம்பு என்பது குறிஞ்சி நிலம். குறிஞ்சியின் தலைவன் முருகன், அவனின் தாய் கொற்றவை. அதனால் கொற்றவையை வணங்கும் (தாய் வணக்கம்) பறம்பு என்ற குதிரை மலையை ஆட்சி செய்த அதியர், பறம்பர் என்றும் அழைக்கப்பட்டனர். பறம்பு என்பது நிலம் சார்ந்து வருவதால் இப் பெயர் இடவாகு பெயர் என்று இலக்கணம் சொல்கிறது. எட்கர் தர்ஸ்டன் சொன்ன, கொற்றவையை வணங்கி ஆட்சி செய்தவர் மாதியர் என்பதற்கும், தேவநேயப் பாவாணர் சொன்ன பறம்பர் என்பதற்கும் வரலாற்றுச் சான்றாய் இருக்கும் மன்னன் அதியமானின் ' அதியர் குடி ' வழி வந்த அருந்ததியர்கள் - - ஆதித் தமிழர்கள் என்பதே தமிழ் நாட்டின் வரலாறு.

அருந்ததியர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் ஏன் தெலுங்கு, கன்னடம் பேசுகிறார்கள்?

நம் முன்னோர்கள் வாழ்ந்த தகடூர் என்ற தருமபுரிக்குச் சற்று தொலைவில் கர்நாடகாவுக்குப் போக வழி அமைந்திருக்கிறது. எனவே அங்கு சென்ற அருந்ததியர்கள் குறைவு. ஆனால் தருமபுரிக்கு அண்மையில் ஆந்திராவுக்குப் போகும் வழி அமைந்திருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே நம் மக்கள் ஆந்திராவுக்குப் போய் விட்டார்கள். ஏன் போனார்கள்?

1. தருமபுரியை விட ஆந்திரா நிலவளம், நீர்வளம் மிக்க விவசாய நாடு. தருமபுரியில் அத்தகைய வளம் இல்லை. எனவே தருமபுரியின் எல்லைப் பகுதிக்குள் வாழ்க்கைக்காக வேலை தேடிச்சென்றனர் கொஞ்சம் பேர்.

2.இன்னும் கொஞ்சம் பேர்கள் வணிகம் (வியாபாரம்) காரணமாகச் சென்றுள்ளார்கள்.

அப்படிச் சென்றவர்கள் அடிக்கடி போய்வர, இன்று போல அன்று போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் சென்று தங்கும் மக்களைப், பட்டினப்பாலை - சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள் ' புலம் பெயர் மாக்கள் ' என்று சொல்கிறது.

அப்படிப் புலம் பெயர்ந்து சென்ற அருந்ததியர்கள் ஆந்திராவின் மையப் பகுதிகளுக்குச் செல்லாமல் தமிழகத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மட்டுமே தங்கினார்கள். ஆந்திர எல்லைப் பகுதிகளில் தங்கிய அருந்ததியர் ஆந்திரத் தெலங்கைப் பள்ளியில் மறையாகப் படிக்கவில்லை. எனவே நன்னயர் என்ற தெலுங்கு அறிஞரால் செப்பம் செய்யப்பட்ட தெலுங்கு அருந்ததியருக்குத் தெரியாது. அருந்ததியர் பேசுவது தெலுங்கு இல்லை. தெலுங்கு முலாம் பூசப்பட்டு, தெலுங்கு மொழியின் ஓசை - ஒலியில் தமிழைத்தான் பேசுகிறார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

எடுத்துக்காட்டு :-

1. வன்னம். இது சோறு என்பதன் தெலுங்குச சொல்.

கெஞ்சி (Gangee) -இது சோறுக்கு அருந்ததியர் சொல்லும் சொல். கஞ்சி என்ற தமிழ்ச் சொல் இப்பட மருவி இருக்கிறது.

2. குழம்புக்கு தெலுங்குப் பெயர் - பலுசு. அருந்ததியர்கள் சாறு என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுததுவார்கள்.

3.தெலுங்கில் அம்மாவை தல்லி என்றும், அப்பாவை நய்னா என்றும் அழைப்பார்கள். அருந்ததியர் அம்மாவை அம்ம என்றும், அப்பாவை ஐய (ஐயா) என்றும் தமிழால் அழைப்பார்கள்.

இப்படி ஆந்திராவுக்குத் தமிழ் நாட்டில் இருந்து பிழைப்பு தேடிச் சென்ற அருந்ததியர்கள், அங்குள்ள தெலுங்கைப் படிக்காமல், அக்கம் பக்கம் பேசும் வட்டாரத் தெலுங்கு ஒலியில், தெலுங்குச் சாயலில் தமிழைப் பேசும் அருந்ததியரை தெலுங்கர் என்று எப்படிச் சொல்ல முடியும் ? இப்பொழுதும் அருந்ததியர்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். ஓரிரு தலைமுறைகளில் மொழி, திருத்தம் ஏற்படும்.

அருந்ததியர் மக்களின் தொழில் அன்று கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக சீரழிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்னும் கூடுதலாக செல்ல வேண்டும் என்றால், தூய தமிழ் மொழி களை பேசுபவர்கள் அருந்ததியர்களே.! இன்றளவும்    கடை (அங்காடி) என்றும் வீடு என்பதற்கு (இல்லம்) என்று குழம்புக்கு (சாறு) என்றும்   பேசுபவர்கள்.

இவர்கள் பேசும் பல தமிழ் வார்த்தைகளை உலக மறை என்று சொல்லக்கூடிய திருக்குறளில்  எடுத்து கூற முடியும்.

ஏன் தமிழை மட்டும் பேச கூடிய அருந்ததியர்கள் விவசாய குடி மக்களாக இன்றும்  வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்கள் வழிப்படும் நடுகல் வழிப்பாட்டு மறபு முறைகளை இன்றளவும்  வழிபடுவது அருந்ததியர் மக்கள் மட்டுமே.     

இவர்கள் தமிழர்கள் என்று அடையாளப்பட்டு விட்டால் தங்கள் உரிமைக்கும் வாழ்வியலுக்கும் பிரச்சனை வந்து விடும் என்று நினைக்கும், இங்குள்ள தீய சக்திகளுக்கு துணை போகும்  வலது சாரி தமிழ் தேசிய வாதிகளும்,  சாதி மேலாதிக்கத்தை கடை பிடிக்கும் தலித்களும்    திட்டமிட்டு அருந்ததியர் மக்களின் வரலாற்று உண்மைகளை மறைத்தும் திரிந்தும் வருகிறார்கள்.

உண்மை எப்போதும் மறையாது   வென்றே தீரும்.

இக்கட்டுரை சமூக வலைத்தளங்கள் பலவற்றில் பகிரப்பற்றிருந்த ஒரு கட்டுரை. எழுதியவரின் பெயரை எங்கும் அறிய முடியவில்லை. எழுதியவருக்கு எமது நன்றியுடன் இதனை பகிர்கிறோம்.

இலங்கையில் சாராய உற்பத்தியும் மதுவொழிப்பு இயக்கமும் - என்.சரவணன்

மதுவொழிப்பு இயக்கம் பிரித்தானியர் ஆட்சி செய்த காலத்தில் தான் தோற்றம் பெற்றது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கள் தத்தமது தேவைக்கான மதுவை தாமே தயாரித்துக்கொண்டார்கள்.

“சிங்களவர்கள் குடிக்கு பழக்கப்பட்டவர்கள் அல்லர்” என்று ரொபர்ட் நொக்ஸ் தனது குறிப்புகளில் எழுதிவிட்டுச் சென்றார். ஆனால் 1912 ஆம் ஆண்டு இலங்கையில் கிராமம் கிராமமாக கள்ளுக்கடைகளைத் திறக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை அன்றைய அரசாங்க சபையில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்றால் எந்தளவு தூரம் அந்த இடைக்காலத்துக்குள் இலங்கை மக்கள் குடிபோதைக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை நாம் உணர முடியும்.

மகாவம்சத்தின் பிரகாரம் இலங்கையில் விஜயன் – குவேனி திருமணத்தின் போது பரிமாறப்பட்டதாக கூறப்படும் மது கள்ளாக இருந்திருக்க வேண்டும். அதுபோல மகாவம்சத்தின் பிரதான பாத்திரமான துட்டகைமுனு; எல்லாளனுடனான போரின் போது துட்டகைமுனுவின் யானை “கந்துல”வுக்கு மது கொடுக்கப்பட்டதாகவும், அது போல துட்டகைமுனுவின் படை அதிகாரிகளும் மது அருந்தியதாகவும் குறிப்பிடப்படுவதும் கள்ளாக இருக்க வாய்ப்புண்டு. இலங்கைத் தீவில் “கள்” இலகுவாக கிடைக்கும் மதுவகையாக காலாகாலமாக இருந்துவந்திருக்கிறது.

இலங்கையில் கள், சாராய உற்பத்தி ஒரு வியாபாரமாக வளர்ந்திருக்கவில்லை. போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய வேளை, இலங்கையில் தமக்கு வருமானம் தரத்தக்க துறைகளை தேடித்தேடி மேற்கொண்டார்கள். அப்படித்தான் மதுத் தயாரிப்பும் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் தென்னை உற்பத்தியும் பெருகத் தொடங்கிய காலம். தென்னம் பொருட்களின் உப உற்பத்தியில் ஒன்றாக கள்ளுற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி போர்த்துக்கேயரின் பிரதான வருமானங்களில் ஒன்றாகவும் அது பின்னர் ஆனது. போர்த்துக்கேயரை விட அதற்குப் பின் இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கள் உற்பத்தித்துறையை மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். பிரித்தானியரின் ஆட்சியில் கள் உற்பத்தி என்பதை அரச ஆட்சியின் கீழ் முக்கிய ஒரு வருமானத்துறையாக ஆக்கிக்கொண்டார்கள். மேலும் அத்துறையை விரிவுபடுத்தினார்கள்.

1817 இல் இலங்கையின் விவசாய, வர்த்தக வியாபாரத் துறையின் மீதான ஆங்கிலேயர்களின் கரிசனை பற்றிய ஒரு விரிவான பெரிய நூலை பெர்டோலசி (Anthony Bertolacci) எழுதினார். இலங்கையின் காலனித்துவ பொருளாதாரம் பற்றி ஆராய்பவர்கள் தவிர்க்காத நூல் இது என்று கூறலாம். பிரித்தானியாவுக்கான இலங்கையின் சிவில் வருமானத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் பெர்டோலசி. அவர் தனது நூலில் அப்போதைய இலங்கையின் பிரதான வருமானமாக பட்டியலிடும்போது சாராயம், கள் என்பனவற்றிலிருந்து தான் பட்டியலைத் தொடங்குகிறார். மேலும் இலங்கையில் தென்னை மரங்களின் உற்பத்தி, அவற்றின் நுணுக்கங்கள், அவற்றின் பயன்பாடுகள், எங்கெல்லாம் பரவி இருக்கிறது, அவற்றில்  இருந்து சாராய ஏற்றுமதி செய்யப்பட்ட விபரங்கள் போன்ற தகவல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். (1)

யாழ்ப்பாணத்தில் "நளவரும் பள்ளரும் உயர்சாதி இந்துக்களின் அடிமைகளாக இருந்தார்கள்" என்றும் அவர்களே கள்ளு சீவும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளதையும் இங்கே கொசுறாக சொல்லிவிட்டுக் கடக்கிறேன்.

கள், சாராயத்தின் பெருக்கம்

1834 இல் ஆங்கிலேயர்கள் மதுவரி சட்டத்தை முதற்தடவையாக அறிமுகப்படுத்துமளவுக்கு மதுவுற்பத்தி வியாபித்திருந்தது. 1844 ஆம் ஆண்டு 10ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் மேலும் இத்துறை பலமூட்டப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் கள்ளுத் தவறணைகளை தனியார் ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கள்ளுற்பத்தியும், கள்ளுத் தவறணைகளும் பெருகின. தொகையாகவும், சில்லறையாகவும் விற்பனைசெய்யப்பட்டன. அது அரச கட்டுப்பாட்டின் கீழ் பெருவருமானம் ஈட்டும் துறையாக ஆனது.(2) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டின் அரச வருமானத்தில் 10% - 15% வீதத்தை இந்த மதுவரியின் மூலம் தான் ஈட்டப்பட்டது. 

அந்தந்த பிரதேசங்களில் இத்துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்குவதற்கென்று முகவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த அனுமதிகளை அவர்கள் ஏலத்தில் விட்டார்கள். இதன் மூலம் இலங்கையில் ஒரு புதிய பணக்காரப் பிரிவினர் உருவானார்கள். அது போலவே மதுவிற்பனை நிலையங்களும் பெருகின. அந்தக் கள்ளைப் பருகும் நுகர்வோரும் பாரிய அளவில் பெருகினர். மதுபோதைக்கு அடிமையாகும் கூட்டம் நாடளாவிய ரீதியில் பெருகியதை ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. அந்த வியாபாரத்தில் ருசிகண்டு லாபமீட்டிவந்த சுதேசிகளும் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 1810-1812 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 939,112 கலன்கள் சாராயம் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாண்டு இதன் மூலம் 6260 பவுண்டுகள் திறைசேரிக்கு வருமானமாக கிடைத்திருக்கிறது.

மதுவொழிப்பு இயக்கம்

இப்படிப்பட்ட சூழலில் தான் 1911இல் "மதுவொழிப்பு, மாட்டிறைச்சி உண்ணாதீர்" என்கிற பிரச்சாரத்தை நாடு பூராவும் கொண்டு சென்றார் அநகாரிக தர்மபால. இந்த இயக்கத்தை முன்னின்று தீவிரமாக வழிநடத்திய தர்மபாலாவுக்கு ஆதரவாக பல சிங்கள தலைவர்கள் ஒன்றிணைந்தனர். இந்த ஒன்றிணைவு காலப்போக்கில் இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாவதற்கான காரணிகளில் ஒன்றாக ஆனது. அநகாரிக தர்மபாலாவின் "சிங்கள பௌத்தயா" பத்திரிகை இந்த பிரசாரத்தின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

“ஐரோப்பிய பரதேசிகள், முஸ்லிம்கள் (ஹம்ப), பொம்பாய்கார பரதேசிகள் போலவே ஐரோப்பிய போதைகளும் சிங்களவர்களுக்கு எதிரானவை”


என்று “சிங்கள பௌத்தயா”வில் முழங்கினார். இந்தப் பழக்கத்தால் சிங்களவர்கள் பல துர்நடத்தைகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், பௌத்த விழுமியங்களில் இருந்து விலகி, குடும்பங்களில் பெற்றோரும், பிள்ளைகளும், கணவர்மாரும், மனைவியரும் அவரவர் பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றத் தவறிவருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வழிதெரியாது தாம் நிலைகுலைந்து போயிருப்பதாகவும் அவர் எழுதுகிறார்.

“சிங்களவர்கள்; இயல்பில் வன்முறையற்றவர்களாக இருந்தபோதும் இந்த மதுப்பழக்கத்தின் காரணமாக கொலைகாரர்களாக ஆகியிருக்கிறார்கள்”

என்றும் அன்றைய “சரசவி சந்தரெச” பத்திரிகை எழுதியது. (3)

“ஹம்ப மறக்கல (முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிப் பதம்) காரன்கள் மது அருந்தாமல் இருக்க முடியுமென்றால் சிங்களவனால் ஏன் முடியாது?”

என்றார் அநகாரிக தர்மபால.

“ஆண்டொன்றுக்கு சிங்களவர்கள் மாசி கருவாடுக்காக முப்பது லட்சம் செலவளிக்கிறார்கள். கள்ளு, சாராயத்துக்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள். சிங்களவர்கள் மாசி கருவாட்டுக்கும், மதுவுக்கும் செலவளிப்பதை இனத்தின் வளர்ச்சிக்கு முதலிட்டால் பன்னிரெண்டே மாதங்களில் நமது தேசம் ஒரு சொர்க்கபுரிக்கு நிகராக ஆகிவிடும். மதுக்காக செலவிடுவதை சேமிக்க உறுதி பூணுவோம்!”

(சிங்கள பௌத்தயா, 1912)

தர்மபாலாவின் "மதுவை ஒழி! மாட்டிறைச்சியை உண்ணாதீர்" என்கிற பிரச்சாரம் தூய பௌத்தத்தை வலியுறுத்திய அதேவேளை அந்த பிரச்சாரம் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமன்றி ஏனைய சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிப் திருப்பப்பட்டது.

அநகாரிக தர்மபால தனது பிற்காலங்களில் ஆங்கிலேயர்களை விட அதிகமாக வெறுத்தது உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களையே. தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், பறங்கியர் என அவரின் இனவெறுப்புணர்ச்சி என்பது இனவெறுப்போடு மட்டும் நிற்கவில்லை அது மோசமான மதவெறுப்பையும் இணைத்தே இருந்தது. ஆகவே தான் அவர் "சிங்கள கிறிஸ்தவர்களுக்கு" எதிராக அதிகமாக பிரச்சாரம் செய்தார். 

"கள் குடிப்பவன்  இழிந்தவன்... மாட்டிறைச்சி உண்பவன் இழிசாதியன்"

என்பது அவரது சுலோகங்களில் ஒன்று.

“...ஆரிய தர்மத்தை பின்பற்றும் ஆரிய இனத்துக்கு உரித்தான சிங்கள பௌத்த சகோதர்களே! பௌத்த சொற்களை அன்புடன் பயன்படுத்தி... மதுபானத்தை அருந்தாதிருக்க போதியுங்கள்”

சிங்களவர்களுக்கு விஷ மதுபானத்தை அருந்தச் செய்து சிங்களவர்களை அழித்துவருகிற வெள்ளையர்களை நமது பரம்பரைப் பகைவர்களாகவே நான் கொள்கிறேன்” (4)

அநகாரிக தர்மபாலாவின் இந்தப் பிரச்சாரத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட மது வியாபார பிரமுகர்கள் ஏராளமான பணத்தை பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைக்கு நிதியாக வழங்கினார்கள். காலியில் பெரிய பௌத்த பாடசாலையை ஆரம்பிப்பதற்கு பெருமளவு நிதியைக் கொடுத்தவர் சாராய வியாபராத்தில் பேர்போன தனவந்தரான டி,டீ.அமரசூரிய. இப்படி பலரைக் குறிப்பிடலாம்.

மதுவொழிப்பு இயக்கத்தின் பிரச்சாரங்களின் போது ஆங்கிலேய அரசை விமர்சிகின்ற கண்டிக்கின்ற போக்கானது பின்னர் மெதுவாக ஆங்கிலேயர்கலின் மீதான வெறுப்புணர்ச்சியாகவும், சுதேசிய – விதேசிய சிக்கலாகவும், ஈற்றில் ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான பிரச்சாரமாகவும் ஆங்காங்கே தலை தூக்கியது. ஆங்கிலேய அரசுக்கு எதிரான பிரச்சாரக் களமாக மதுவொழிப்பு இயக்கத்தின் களம் ஆனது.

கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கு

1912 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்கச் சட்டத்திருத்தத்தின் மூலம் மேலும் இத்துறை நெகிழ்ச்சியாக்கப்பட்டது. மதுவரித் திணைக்களமும் ஆரம்பிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் இதன் மூலம் சட்டபூர்வமாகவே அனுமதிபெற்று மதுவிற்பனை நிலையங்களாக அவற்றை மாற்றிக்கொள்ள எளிமையான வழியேற்பட்டது. 1900த்தில் இருந்ததை விட நூறு மடங்கு அதிகமாக மதுவிற்பனை நிலையங்கள் உருவாகின.இந்தச் சட்டத்தின் மூலம் 1072 புதிய சாராய விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அரசாங்க சபை வழங்கியது.(5)

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே இதற்கு எதிரான குரல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதனால் பல சமூகக் குற்றங்கள் பெருகிவருவதை பல அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 1872இல் கவர்னர் வில்லியம் கிரகரி அரசாங்க சபையில் உரையாற்றும்போது மரணதண்டனைக்காக தன்னிடம் பரிந்துரைக்கப்பட்ட பலர் மதுபோதையின் விளைவாக குற்றம் இளைத்தவர்கள் என்றார்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மதுவொழிப்பு இயக்கம் என்றால் அது சிங்கள பௌத்த இயக்கமாக நமக்கு கருத்தேறி இருக்கிறது. ஆனால் மதுவொழிப்பு குரல்கள் முதலில் வெளிவந்தது கிறிஸ்தவ மிஷனரி இயக்கங்களின் மத்தியில் இருந்து தான் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 

அரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அப்படி மதுவொழிப்பு பிரச்சாரங்களில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்களில் லிஸ்போவா பின்டோ, ஜோன் மர்டோக் போன்றோர் குறிப்பிடத்தக்க்கவர்கள். மதுபான நிலையங்களைக் குறைத்து, ஞாயிறு தினங்களில் அவற்றை மூட வேண்டு என்று அவர்கள் முதலில் கோரினார்கள். மேலும் ஒரு மதுபான நிலையம் திறப்பதாயின், அல்லது இருப்பதாயின் முதலில் அந்த பிரதேச மக்களின் விருப்பைப் பெறவேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் இந்த இயக்கம் மதப் பிரிவுகளோடு மட்டுமே இந்த முயற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததால் நாடளாவிய ரீதியில் இயங்கவில்லை. எனவே காலப்போக்கில் இந்த முயற்சிகளோடு பௌத்த இயக்கங்களும் இணைந்து கொண்டதன் பின்னர் தான் மதுவொழிப்பு இயக்கம் நாடளாவிய ரீதியில் பெருகியது.“ரேந்தகாரயோ”

போர்த்துக்கேயர் இலங்கையில் முதன்முதலாக கைப்பற்றி; அதன் பின்னர் ஆங்கிலேயர் 1815இல் இலங்கையை முழுவதுமாக கைப்பற்றும்வரையிலான மூன்று நூற்றாண்டுகள் இலங்கையின் கரையோரப் பகுதிகள் மட்டுமே போர்த்துகேய, ஒல்லாந்த காலனித்துவத்தின் கீழ் இருந்தது. வரிகளை அறவிட்டு தமது வருமானத்தை ஈட்டினார்கள் அவர்கள். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் முழுவதும் அந்த வரிகளை அறவிடுவதற்கான ஆளணி அவர்களிடம் இருக்கவில்லை. எனவே அந்தப் பணிகளை உள்ளூர் பிரமுகர்களைக் கொண்டே மேற்கொண்டனர். அப்படி அறவிடும் வரிவசூலிப்பு ஊழியர்களை சிங்களத்தில் “ரேந்தகாரயோ” (Renters) என்பார்கள். இந்த சொல் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் போர்த்துகேயர் மொழியில் தான் “ரேந்த” (Renda) என்கிற சொல் இருக்கிறது. அது “வரி”யைக் குறிக்கிறது. இந்த “ரேந்த” என்கிற சொல் ஆங்கிலேயர் காலத்திலும் அப்படியே தான் தொடர்ந்தது. சிங்களத்திலும் வரியை “ரேந்த” என்றே எங்கெங்கும் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் பலவகை வரிகள் நடைமுறையில் இருந்தன. பல இடங்களில் “பாதைவரி” கூட இருந்தது. காலப்போக்கில் இப்படி வரிகள் அறவிடுபவர்கள் பெரும் செல்வாக்கும், பணபலம் மிக்கவர்க்களுமாக பின்னர் ஆனார்கள்.

சிங்கள உயர்சாதி வெள்ளாளர்களாகிய “கொவிகம” அல்லாத சாதியினர் பெரும்பாலும் இலங்கையின் ஆரம்பகால காலனித்துவ பிரதேசங்களாகிய கரையோரப் பிரதேசங்களிலேயே அதிகமாக இருந்தனர். அவர்களில் பலர் தான் இந்த புதிய செல்வாக்கு படைத்த பிரிவினராக ஆனார்கள். அவர்கள் தமது பணத்தைக் கொண்டு மது வியாபாரத்தில் முதலிட்டார்கள். அதுபோல தோட்டங்களையும், பெருமளவு நிலங்களிலும் முதலிட்டார்கள். கீழே வெள்ளை வேட்டியும், மேலே ஆங்கிலேயர்களின் கோர்ட்டுகளையும் அணிந்து திரிந்தார்கள். தமது பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு பட்டப்படிப்புக்காக அனுப்பி விட்டார்கள். மருத்துவம், நீதித்துறை, தத்துவம், அரசியல், பொருளாதாரம் போன்ற உயர்பட்டப்படிப்பை கற்று திரும்பும் பொது அவர்கள் தாம் கற்ற காலங்களில், கற்ற சூழலில்அங்குள்ள ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் கற்றுத் திரும்பினார்கள். ஏன் பலர் மாக்சியத்தையும் கற்றுத் திரும்பினார்கள். இவர்கள் தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இலங்கை அரசியலின் திசைவழியை மாற்ற அணிதிரண்டார்கள்.(6) ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இலங்கை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இவர்களுக்கு மதுவொழிப்பு இயக்கம் ஒரு முக்கிய காலமாக ஆனது.

1915ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 220 கிளைகளை ஸ்தாபித்திருந்தது மதுவொழிப்பு இயக்கம். 24033 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருந்தது.

தேசப்பற்றுக்கு வித்தாக மதுவொழிப்பு இயக்கம்


இந்த இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட தலைவர்களே 1915 கலவரத்தின் போது அதிகமாக கைது செய்யப்பட்டார்கள். சேனநாயக்க சகோதரர்கள், டீ.பி.ஜயதிலக்க, வலிசிங்க ஹரிச்சந்திர,(7)  ஆதர் வீ டயஸ், பியதாச சிறிசேன, மார்கஸ் பெர்னாண்டோ, ஜோன் கொத்தலாவல, ஜேம்ஸ் பீரிஸ், ஹென்றி அமரசூரிய போன்ற பலரை அடுக்கிக்கொண்டு போகலாம். கலவரத்தின் பின் சிங்கள பௌத்தயா பத்திரிகை தடை செய்யப்பட்டு அதன் காரியாலயத்தில் இருந்த அத்தனையையும் அள்ளிக்கொண்டு போனது ஆங்கிலேய அரசு. அநகாரிக தர்மபாலாவை சிறை வைப்பதற்கு இந்த காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையில் வெளிவந்தவற்றின் உள்ளடக்கங்களைத்தான் ஆதாரங்களாகக் காட்டினார்கள்.

மதுவொழிப்பு மற்றும் மாடுகளை அறுப்பதற்கு எதிரான பிரச்சாரம் முதன் முதலில் பெருமளவு மேற்கொள்ளப்பட்டது இந்த காலத்தில் தான். தனது இந்திய பயணங்களின் போது இந்து சமயத்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த மாட்டிறைச்சி உண்ணாமை என்பவற்றால் அவர் மேலும் கவர்ந்திருக்க வேண்டும். பௌத்தம் போற்றும் தம்மபதம் கூறும் ஐம்பெரும் குற்றங்களில் உயிர்களைக் கொல்லாமை முக்கிய அங்கம். ஆனால் அது மாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. சகல உயிர்களுமே அதில் அடக்கம்.

கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கான முயற்சிகளை ஆதரித்து இருந்தவர் ஆங்கிலேயர்களின் பரம விசுவாசியான கரைநாட்டு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சார் சாலமன் கிரிஸ்டாப்பல் ஒபயசேகர (Solomon Christoffel Obeyesekere). அவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக ஆன பண்டாரநாயக்கவின் தந்தை. 

இதற்கு நேரெதிராக ஆங்கிலேயர்களுடன் இந்த விடயத்தில் முரண்பட்டுக் கொண்டு கள்ளுத் தவறணைகளை எதிர்த்து நின்றவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்று சிங்கள நூல்கள் பல பாராட்டுவதையும் காண முடிகிறது.

பொன்னம்பலம் இராமநாதன் 1879 ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உத்தியோகபற்றற்ற உறுப்பினராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். ஆனால்  1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பரம விஞ்ஞான சங்கத்துடன் சேர்ந்து பல மாநாடுகளில் பங்குபற்றியவர். பௌத்த-இந்து உறவை பலப்படுத்தும் நோக்குடன் பௌத்த-இந்து பாடசாலைகளை அமைப்பதற்காக ஒல்கொட்டோடு சேர்ந்து பொன்னம்பலம் இராமநாதன் பணியாற்றியிருக்கிறார். இப்பேர்பட்ட உறவுகளும் பொன்.இராமநாதன் 1915 கலவரத்தின் போது சிங்கள பௌத்த தரப்பை பாதுகாக்க காரணிகளாக தொழிற்பட்டிருக்கிறது.

மதுவொழிப்பு இயக்கத்தின் “மாட்டிறைச்சித் தடை” குறித்த பிரச்சாரங்கள் காலப்போக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றாக உருமாற்றமடைந்த பின்னணி தனியாக பார்க்க வேண்டிய ஒன்று.

1915 கலவரத்தில் மதுவொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிங்களத் தலைவர்களை ஆங்கிலேய அரசு வேட்டையாட முடிவு செய்தததன் பின்னணியில் இந்த மதுபான வியாபாரத்துக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதும் காரணமாக இருக்க வாய்ப்புண்டு என்றே கணிக்க முடிகிறது.

1915 கலவரத்தின் விளைவுகளைத் தொடர்ந்து மதுவொழிப்பு இயக்கம் சற்று செயலிழந்தது. அனால் ஓரிரு வருடங்களில் மீண்டும் சிங்களத் தலைவர்கள் அதற்கு உயிர்கொடுத்து நிமிர்த்திவிட்டனர். குறிப்பாக டீ.பி.ஜயதிலக்க, உதேனி த சில்வா, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர, சீ.த.எஸ்.குலரத்ன போன்றோரும், சேனநாயக்க சகோதரர்களும் மதுவொழிப்பு இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர்களாக ஆனார்கள். இத்தனைக்கும் சேனநாயக்க சகோதர்களின் தந்தை தொன் ஸ்பேட்டர் சேனநாயக்க பிற்காலத்தின் மாணிக்கக்கல் அகழ்வு வியாபாரத்தில் பிரசித்தி பெற்றபோதும் அவர் ஒரு பிரபல சாராய விற்பனைக் குத்தகைக் காரராக (Arrack Renter) இருந்தவர் தான்.

மதுவொழிப்பு இயக்கம் பற்றிய கற்கை உயர்தர அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அநகாரிக தர்மபாலாவை அறிந்தவர்கள் இவ்வியக்கத்தை தவிர்த்துவிட்டு பார்க்க முடியாது. அதுபோல இலங்கையின் சுதந்திரத்துக்கான கோரிக்கைகளையும், அதற்காக “இலங்கை தேசிய காங்கிரஸ்” அமைத்து தம்மை தயார்படுத்திய வரலாறையும் அறிய முயல்பவர்கள் அவற்றுக்கெல்லாம் முன்னோடியான “மதுவொழிப்பு” இயக்கத்தின் வகிபாகத்தை தவறவிட முடியாது.

ஆங்கிலேயர் காலத்தில் கரையோர பிரதேசமொன்றின் வீதியில் இருந்த கள்ளுத்தவறணையொன்றைப் பற்றிய சுவாரசியமான கதையொன்று உண்டு.

ஒருமுறை ஆங்கிலேய ஆளுநர் தனது உத்தியோகபூர்வ பனியின் காரணமாக தனது மோட்டார் வாகனத்தில் கொழும்பு காலி வீதியின் வழியாக தென்பகுதியை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார். போகும் வழியில் ஆளுநர் வீதியோர கள்ளுத் தவறணை ஒன்றில் கள் அருந்தும் ஆசை ஏற்பட்டது. வாகனத்தை அதற்கருகே நிறுத்திவிட்டு தனது வேலையாளை அனுப்பி தனக்கு கள் வாங்கிவரச் செய்து சந்தோசமாக அருந்தினார். அதுவரைகாலம் அவர் அருந்திய விஸ்கி, பிரண்டி, ஜின், பியர் போன்ற மேற்கத்தேய மதுபானங்களுக்கு பழகியிருந்த அவர் வித்தியாசமான சுவையுடன் கூடிய மதுவகையாக அதை உணர்ந்தார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் அவர் மீண்டும் அதே பாதையில் தனது வாகனத்தை செலுத்தி வந்து கொண்டிருந்த போது முதல் நாள் கள்ளருந்திய அந்த தவறணையில் பெரிதாக ஆங்கில எழுத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து உறைந்துபோனார்.

 அதில் இப்படி இருந்தது

“கௌரவ ஆளுநருக்கு கள் விநியோகிப்பவர்கள்...” (“Suppliers of Toddy to his Excellency the Governor”)(8)

அடிக்குறிப்புகள்
 1. Bertolacci, A, View  of the  Agricultural,   Commercial   and   Financial   Interests of Ceylon. London. Black, Parbury  and  Allen, (1817)
 2. ආර්.එච්.ආර්.ගුණවර්ධන, අනගාරික ධර්මපාල තුමා සහ අමද්‍යප ව්‍යාපාරය. කැලණිය විශ්ව විද්‍යාලය, කැලණිය, 152nd Birth Anniversary of Srimath Anagarika Dharmapala National Summit - 2016
 3. ඩී.දිලානි නිරෝෂිනී ද සිල්වා, “අමද්‍යප ව්‍යාපාරයේ ගමන් මග සහ අනගාරික ධර්මපාල තුමා” 152nd Birth Anniversary of Srimath Anagarika Dharmapala National Summit - 2016
 4. රට දැය සසුන නැගු අභීත සිංහනාද - අනගාරික ධර්මපාල ශ්‍රීමතාණෝ - මහමෙව්නාව භාවනා අසපුව
 5. සාලිය හෙට්ටිආරච්චිඩී, බෞද්ධ ආගමික ප්‍රබෝධය, අමද්‍යප ව්‍යාපාරය සහ ශ්‍රීමත් අනගාරික ධර්මපාලතුමා. 152nd Birth Anniversary of Srimath Anagarika Dharmapala National Summit - 2016
 6. Kumari Jayawardena, Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka, Zed Books, 2002
 7. வலிசிங்க ஹரிஸ்சந்திர (09.07.1879 - 13.09.1913) பௌத்த மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர். அநகாரிக்க தர்மபாலவின் பிரதான சீடர். அநகாரிக தர்மபாலவைப் போலவே பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். மதுவொழிப்பு இயக்கத்தின் முக்கிய தலைவரான அவர் பௌத்த மதம், சிங்கள மொழி, சிங்கள பண்பாடு, உடை என்பவற்றை மக்கள்மயப்படுத்த வேண்டுமென அயராது உழைத்தவர். தொல்பொருள் ஆய்வுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன் சில Great Story of King Dutugemunu, The Significance of Jaya Sri Maha Bodhi,  Life of King Devanampiyatissa போன்ற நூல்களை எழுதியவர்.
 8. எதிர்ப்பவர்களுக்கு சிரட்டைமாலை அணிவித்த மதுவொழிப்பு இயக்கம், சிலுமின 30.05.2020
நன்றி - காக்கைச் சிறகினிலே - யூன் - 2021

முனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்

இலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆங்கில இதழ். 1869 தொடக்கம் 1871 வரையான மூன்று ஆண்டுகள் மட்டுமே வெளியானது இது. ஒரு நையாண்டி இதழுக்கு ஒரு தமிழ் பெயரை ஆங்கிலேயர் ஒருவர் இட்டதன் காரணமென்ன. “முனியாண்டி”என்கிற தமிழ்ப் பெயர் நையாண்டிக்குரியவர்களாக கருதுகின்ற ஒரு உளவியல் அன்று இருந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. மலையகத்திலும், அதற்கு வெளியிலும் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரில் இந்தப் பெயர் மிகவும் பிரபல்யம். 

இதுவொரு நகைச்சுவை சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் சஞ்சிகையாகவும் இருந்தது.

ஆரம்ப காலங்களில் வெகுஜன காட்சிப்படுத்தல் கலாசாரத்தின் ஒரு ஊடக வகையாக அறிமுகமாகி அதன் பின் வளர்ந்து வந்தது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தனிக் காட்சிக் கார்ட்டூன்களாகவும், பின்னர் சித்திரக் கதைகளாகவும், காலப்போக்கில் தொலைக்காட்சி கார்டூன்களாகவும், பின்னர் இருபரிமாண, முப்பரிமாண கார்டூன்களாகவும் வளர்ந்து இன்று யதார்த்த சினிமா காட்சியுடன் போட்டிப்போட்டுக்கொண்டு கார்டூன் திரைப்படங்கள் சந்தையில் மட்டுமன்றி வெகுஜன இரசனையிலும் கோலோச்சுமளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. 

இலங்கையில் "முனியாண்டி" என்கிற பெயர் மலையகத்தில் பிரசித்தம் பெற்றது. “முனியாண்டி”என்கிற பெயர் இந்தியவம்சாவளியினர் பயந்து “பயபக்தியோடு” வழிபடும் தெய்வம். தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு இந்திய வம்சாவளியினர் கொண்டு வரப்பட்டபோது அங்கிருந்து விழிம்பு நிலைச் சாதியினரையே பெரும்படையாக கொண்டு வந்ததை நாமறிவோம். அப்பேர்பட்ட மலையகச் சமூகத்தில் கடவுள் வழிபாடென்பது விளிம்புநிலை சிறுதெய்வ வழிபாடுகளே வெகுஜன வழிபாட்டுப் பண்பாடாக நிலைத்திருந்தது. சுடலைமாடன், முனியாண்டி, கருப்புசாமி போன்ற தெய்வங்களையே அவர்கள் வணங்கினார்கள். அதுபோல அந்த குலதெய்வங்களின் பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூடுவதை பலர் வழமையாகக் கொண்டிருந்தனர். இந்த “முனியாண்டி”போன்ற பெயர்களைக் கொண்ட மலையகத் தொழிலாளர் பலர் அடிநிலை தொழில்களில் பணிபுரிந்தார்கள். ஆக துறைமாருக்கும், பெரிய கங்காணி அல்லது எஜமானர்களுக்கு “இளக்காரமான”வர்களாக இருந்தார்கள். அவர்கள் கேலிக்கும் ஆளானார்கள். ஜோன் கெப்பர் ஒரு துட்டத்துரையும் கூட. அப்பேர்பட்டவர் தனது அரசியல் கிண்டல் கவர்ச்சிக்கு இந்தப் பெயரை சூட்டியிருப்பதன் உளவியலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

“முனியாண்டி”, ஆங்கிலத்தில் நகைச்சுவையான, விளக்கப்படங்களையும், நையாண்டி கேலிச்சித்திரங்களையும்  உள்ளடக்கிய இதழானது 1869 மூன்றே ஆண்டுகள் மட்டும் தான் தாக்குபிடித்தது. அதன் தீவிர அரச எதிர்ப்புப் போக்கின் காரணமாக ஆங்கிலேய அரசால் இறுதியில் தடை செய்யப்பட்டது. இரு வாரங்களுக்கொரு முறை பத்து பக்கங்களில் வெளியான “முனியாண்டி” ஒரு சில்லிங்குக்கு அப்போது விற்பனையானது.(1) அரசியல் நிகழ்வுகள், விவாதங்கள், துணுக்குகள், செய்திகள், சிறு கட்டுரைகள், வாசகர் கடிதம் ஆசிரியர் பதில் என பல ஆக்கங்கள் அதில் உள்ளடங்கியிருந்தது.

“முனியாண்டி”யில் இருக்கிற காலனித்துவ எதிர்ப்பையும் ஆதரவையும் பற்றி ஆராய்ந்த காஞ்சனகேசி வர்ணபால அது ஒரு முரண்நகையான போக்கென்கிறார்.

“முனியாண்டி”காலனித்துவ அதிகாரத்துவ ஆட்சியையும், அன்றைய உயர் குழாமினரின் பாசாங்குகளையும், முட்டாள்தனங்களையும் கேலி செய்து அம்பலப்படுத்தியது.

இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியான இந்த “முனியாண்டி”இதழ் Fonseka’s Press என்கிற பதிப்பகத்தில் ஜோன் கேப்பரால் வெளியிடப்பட்டிருக்கிறது.(2)  கொழும்பு சதாம் வீதியில் (Chatham Street) அப்போது அதன் காரியாலயம் இருந்திருக்கிறது. 1870 இல் வெளியான Blue Book வெளியீட்டின் தகவலின்படி 2400 பிரதிகள் அன்றைய காலத்திலேயே விநியோகிக்கப்பட்டுள்ளது.

கெப்பர் ஏற்கெனவே லண்டனில் London Globe  மற்றும் Charles Dickens’ இன் பிரபல சஞ்சிகைகளிலும் பணியாற்றிய அனுபவமுடையவர்.

இலங்கையில் அன்றைய ஊடக வளர்ச்சி

19ஆம் நூற்றாண்டில் இலங்கைச் சமூகத்தில் ஊடக கலாசாரம், வாசிப்புப் பண்பாடு எல்லாம் எப்படி இருந்தது என்பதை வைத்தே “முனியாண்டி”யின் வகிபாகத்தையும் கவனித்தல் அவசியம். ஆங்கில வெளியீடுகளைப் பொறுத்தளவில் பெரும்பாலும் மதம், ஆட்சி நிர்வாகம் என்பவை தொடர்பாகவும், மற்றும்படி இலக்கணம், சோதிடம், மருத்துவம், விவசாயம் போன்றன தொடர்பான வெளியீடுகளே பெரும்பாலும் இருந்தன. பத்திரிகைகளின் வருகை இலங்கைச் சமூகத்தில் நிச்சயம் பெரும் மாற்றங்களைக் கொண்ட வந்தது. வாசிப்பு என்பது ஒரு வர்க்கத்தோடும், சாதியோடும், அந்தஸ்தோடும், கல்வி படைத்தவர்களோடும் மட்டுப்பட்டிருந்த நிலைமை மாறி அது பாமரர்களையும் படிப்படியாக அடைந்துகொண்டிருந்த காலம். எழுத்துக்களால் மட்டுமே குவிக்கப்பட்ட ஊடகங்கள் மெதுவாக காட்சிப்படுத்தலுக்குள் நுழையத் தொடங்கியது.

புகைப்படக் கருவிகள் வந்தடைவதற்கு முன்னர், அப்புகைப்படங்களை பதிப்புத் துறையில் பயன்படுத்துவதற்கு முன்னர் ஓவியங்களே காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊடகமாக இருந்தன. அதிலும் குறிப்பாக கொட்டோவியங்களே அன்றைய ஆரம்ப தொழிநுட்ப வசதிகளுக்கு சாத்தியமாக இருந்தன. எனவே ஓவியங்களுடனான பதிப்புகளுக்கு பெரும் வரவேற்பிருந்தன. வெகுஜன காட்சிபடுத்தல் ஊடகமாக அது தான் விளங்கியது. 1737 இல் இலங்கையில் டச்சு ஆட்சியின் போது அச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறு நூல் பதிப்புகளும் பிரசுரங்களும், அரச ஆவணங்களும் பதிப்பிக்கப்பட்டலும் பத்திரிகைகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

ஆனால் ஆங்கிலேய ஆட்சியில் பத்திரிகைகளுக்கு பெரும் மவுசு வந்தது. பத்திரிகைத்துறையின் வளர்ச்சியும் அந்த இடத்துக்கு வந்தடைந்திருந்தது. கோல்புறுக் – கமரூன் அரசியல் திட்டக் காலத்தில் இலங்கையின் பத்திரிகைத்துறையின் நுழைவுக்கான அவசியத்தையும், வாய்ப்பையும் உருவாக்கியது. கோல்புறுக் – கமரூன் அரசியல் திட்டத்தினால் உருவான சிவில் நிர்வாகம், நீதித்துறை, நிதித்துறை சார் ஏற்பாடுகள் பதிவுகளின் ஆவணப்படுத்தளுக்கும், தொடர்பாடலுக்கும் அச்சுப் பதிப்புத்துறையின் பரப்பை விசாலப்படுத்தியது. அதுபோல  அந்த ஆட்சிக்கு தகவல்களை பரப்புவதற்கும், பெறுவதற்கும் பத்திரிகைகளின் தேவையும் உணரப்பட்டது. கோல்புறூக் விசாரணைக் கமிஷன் வந்திருந்தபோது இலங்கையில் அரசாங்க அச்சகத்துறை சிறிய அளவில் தொடங்கி இயக்கிக்கொண்டு தான் இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலேயர் இலங்கையை முழுவதும் கைப்பற்றுவதற்கு முன்னரே அதாவது 1802 இலேயே அரசாங்க வர்த்தமானி பத்திரிகை (Government Gazette) ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 1831 இல் Colombo Journal தனியார் இதழ் ஆளுநரின் ஆதரவோடு வெளியாகத் தொடங்கிவிட்டது.

மேலும் The Observer and Commercial, Advertiser ஆகியவை 1832இலும், The Ceylon Chronicle (1837), The Ceylon Herald (1837), The Ceylon Times (1846), The Examiner (1846). என்பவை மட்டுமன்றி முதலாவது சிங்களப் பத்திரிகையான லங்காலோகய (1860) அதன் பின்னர் லக்மினிபான(1862). என்பவை வெளிவந்ததோடு யாழ்ப்பானியாத்தில் இருந்து இலங்கையின் முதலாவது தமிழ் பத்திரிகையான உதய தாரகையும் 1841 இல் வெளிவந்தது. பாலியர் நேசன் 1859 இலும் வெளியானது.

கலாநிதி விஸ்வவர்ணபால குறிப்பிடும்போது (3) இலங்கையின் கட்சி அரசியல் முறையின் வளர்ச்சிக்கும், சுதேசிகளின் அரசியல் ஆர்வத்துக்கும் இப்பத்திரிகைகளின் வகிபாகம் பெரிதும் இருந்தது என்கிறார். இப்படியே இதன் நீட்சியாக The Observer, The Ceylon Times ஆகிய இரு போட்டிப் பத்திரிகைகள் சுமார் ஐம்பது ஆண்டுகள் இலங்கையின் பத்திரிகைத்துறையிலும், அரசியல் நடத்தையிலும் பெரும் செல்வாக்கு செலுத்தின. இவற்றில் The Observer அரசையும், அரசின் பிழையான ஆட்சியையும் கடுமையாக விமர்சிக்கின்ற பத்திரிகையாக அன்று இருந்தபோதும் பிற் காலத்தில் தனது போக்கை மாற்றிக்கொண்டதை காண முடியும். அது அரச எதிப்பு பத்திரிகையாகவே பொதுவில் அடையாளப்படுத்தப்பட்டது. இதே காலத்தில் The Examiner பத்திரிகையும் ஒரு அரச எதிர்ப்பு பத்திரிகையாகத் தான் அடையாளம் காணப்பட்டது.  அதேவேளை The Ceylon Times பத்திரிகை அரசாங்கத்துக்கும், ஆளுனருக்கும் ஆதரவான பத்திரிகையாகவே இயங்கி வந்தது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து காட்சி ஊடகமாக கோட்டோவியங்கள் கார்டூன் வடிவில் அறிமுகமானதுபோல அதே நூற்றாண்டின் இறுதியில் புகைப்படங்களும் அறிமுகமாகின.

ஆங்கிலேயர்களின் பிரதான வருமானமாக பெருந்தோட்டத்துறை இருந்த போதும் 1869 கோப்பி பயிர்செய்கையின் அழிவின் காரணமாக ஆங்கிலேய அரசு பெரும் வருமான வீழ்ச்சியை சந்தித்தது. இதை சமாளிக்க அரசு வரிகளை உயர்த்தியது. அது சமூக அரசியல் காரணிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் விளைந்த சமூக நெருக்கடிகளை பத்திரிகைகள் பதிவுசெய்தன. விமர்சித்தன. இதே காலத்தில் வெளிவந்த Ceylon Independent, Ceylon Patriot போன்ற பத்திரிகைகளும் அரசை விமர்சிப்பதற்கு களமிறங்கின. இந்த சூழலில் சிங்களப் பத்திரிகைகளின் தோற்றமும் சாமான்ய வெகுஜன தகவல் தொடர்பாடலைத் திறந்தன. காலனித்துவத்துக்கு எதிரான கூட்டு மனநிலை உருவெடுத்தது. காலனித்துவத்துக்கு எதிராக மட்டுமன்றி, கிறிஸ்தவத்துக்கு எதிராகவும் இந்த மனநிலை ஒன்றுசேர்ந்தது. பல சிங்கள சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் தோன்றி பரவின. அது ஒரு தேசிய அலையையும் சுதேசிய வாதத்தையும், தேசியவாதத்தையும், ஈற்றில் சிங்கள பௌத்த வாதத்துக்கும் இட்டுச் சென்ற வரலாறை அறிவீர்கள்.

இங்கிலாந்தில் தான் இந்த பஞ்ச் வகை இதழ்கள் முதன் முதலில் தோற்றம்பெற்றன. இங்கிலாந்தில் 1841 இல் தொடக்கப்பட்ட “Punch, or The London Charivari” என்கிற  இதழ் தான் கேலிச்சித்திர இதழ்களுக்கெல்லாம் முன்னோடி.(4)  151 வருடங்களாக லண்டனில் வெளிவந்த இந்த இதழ் 1992 இல் மூடப்பட்டது. பின் மீண்டும் 1996 இல் தொடங்கப்பட்டு 2002 இல் மீண்டும் மூடப்பட்டுவிட்டது. இந்த பஞ்ச் இதழின் பாதிப்பில் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் காலனித்துவ செல்வாக்குக்குட்பட்ட பல நாடுகளில் இதனையொத்த இதழ்கள் தொடங்கப்பட்டன.(5) சீனாவில் 1867 இல் இருந்து வெளிவரத் தொடங்கியது. இந்தியாவில் லக்னோவில் 1877 இல் அதாவது இலங்கையில் வெளிவரத் தொடங்கி எட்டு ஆண்டுகளின் பின்னர் உருது மொழியில்  “அவாத் பஞ்ச்” (Awadh Punch) என்கிற பெயரில் வெளிவரத் தொடங்கியது. அளவிலும், தோற்றத்திலும், தலைப்பிலும் கூட இவற்றுக்கிடைய சம ஒற்றுமை காணப்படுவதை இன்றும் அவற்றை நோக்கும் போது காண முடிகிறது. அவுஸ்திரேலியாவில்  “Melbourne Punch”, இந்தியாவில் “Awadh Punch” என்றெல்லாம் வெளிவந்த போது இலங்கையில் “முனியாண்டி” என்கிற பெயரில் 

பஞ்ச் இதழில் முதன்முதலாக கார்டூன் என்று அழைக்கப்படும் நகைச்சுவை கோட்டோவியங்கள் முதன்முதலில் 1943 இல் இருந்துதான் பயன்படுத்தப்பட்டன. அரசியல் கேலிச்சித்திரங்கள் அப்போது பஞ்ச் என்று தான் அழைத்தார்கள். (6)

“முனியாண்டி”யின் வருகை

இந்த சூழலில் தான் “முனியாண்டி”யின் வருகையும் நிகழ்ந்தது. இதே காலத்தில் பிரபலமாக இருந்த The Observer,  The Ceylon Times போன்றனவற்றில் கோட்டோவியங்கள் இருந்தபோதும் அவை கேலிச்சித்திரங்களாக பரிமாற்றமடையவில்லை. “முனியாண்டி”யில் வெகுஜன செய்திகள், அரசியல் வர்ணனை, அதிகாரிகளின் மோசடிகள், கிசுகிசு விடயங்கள் ஊழல்கள் என்பவற்றை எழுத்துக்களாலும், கேலிச்சித்திரங்களாலும் வெளிபடுத்தியது. அது ஒரு பெரும் வாசகர் பரப்பை பெருக்கியது. The Ceylon Times அதை ஆதரித்து பலப்படுத்தியது. “முனியாண்டி”யின் ஓராண்டு நிறைவின் போது அது பத்தாயிரம் சந்தாதாரர்களை எட்டியிருந்தது. 3.09..1870 அன்று, “முனியாண்டி” 9999 வாசகர்களை எட்டிவிட்டதாக அறிவித்தது.  சுமார் 150  ஆடுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட ஒரு நிலையை எண்ணிப்பாருங்கள். (7)

16 யூலை  1869 வெளிவந்த The Ceylon Times  பத்திரிகையில் “முனியாண்டி” இதழின் முதல் பதிப்பு தீர்ந்துவிட்டத்தையும் அதைக் கோரியவர்களுக்கு மீண்டும் கிடைக்கச் செய்வதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

The Ceylon Times  பத்திரிகைக்கும் “முனியாண்டி”க்கும் உள்ள உறவு என்னவென்பது இரகசியமல்ல. The Ceylon Times  ஐ வெளியிட்ட அதே ஜோன் கெப்பர் தான் “முனியாண்டி”யைத் தொடக்கி நடத்தி வந்தார். எனவே இதே காலத்தில் அவர் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். எனவே அரச எதிர்ப்பு விடயங்களுக்கு “முனியாண்டி”யை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.(8)  எனவே அரச ஆதரவுப் பத்திரிகையான The Observer பத்திரிகை இந்த இரண்டுக்கும் உள்ள உறவைச் சாடி விமர்சித்தது. “முனியாண்டி” லாபம் சம்பாதிக்கும் பத்திரிகை இல்லை என்றும், அது கட்சியின் நிகழ்ச்சிநிரலுக்ககாக பேனை, பென்சில் கையாளும் திறமைபடைத்த சில கனவான்களால்  சிறிய சமூகப் பிரச்சினைகளை ஊதிப்பெருப்பிக்கும் பத்திரிகை என்று The Observer சாடியது. இதற்கு 22 யூன் 1869 வெளிவந்த The Ceylon Times  பத்திரிகையில் கெப்பர் பதிலடி கொடுக்கிறார்.  இப்படிப்பட்ட கிண்டல் காட்சி வடிவத்திலான எதிர்ப்பை ஆங்கிலேய அரசு முதற் தடவை சந்திக்கிறது.

வான் டோர்ட் (J.L.K. Van Dort – 1831-98)

“முனியாண்டி”பத்திரிகையின் பிரதான ஓவியராக இயங்கியவர் வான் டோர்ட் (J.L.K. Van Dort – 1831-98) அவர் இலங்கைவாழ் பரங்கி இனத்தவர். மிகப் பெரிய ஓவியர். அவரைப் பற்றிய தனிக் கற்கை வேண்டும் எனலாம். ஓவியங்களின் மூலம் இலங்கையைப் பதிவு செய்தவர்களில் முக்கியமானவர். இலங்கை நில அளவை காரியாலயத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் அவர். அதேவேளை அவர் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றுக்கு கோட்டோவியங்களை வரைந்து கொடுப்பதையும் ஒரு பணியாகக் கொண்டிருந்தார். உதாரணத்துக்கு A.M. Ferguson இன் Souvenirs of Ceylon (1868) and Capper’s Old Ceylon (1877) போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர் லண்டனில் இருந்து வெளியாகும் ஊடகங்களுக்கும் ஓவியங்களை வரைந்து வந்தார். 

ஆங்கிலேய அரசின் மீது இருந்த விமர்சன உணர்வு அவரின் ஓவியங்களில் வெளிப்பட்டன. ஆங்கிலேய அதிகாரிகளை மட்டுமல்லாது உள்ளூர் சுதேசிய மேட்டுக்குடியினரையும் அவரின் ஓவியப் படைப்புகளின் மூலம் விமர்சித்தார். 1868 இல் Alistair MacKenzie Ferguson வெளியிட்ட Souvenirs of Ceylon என்கிற அவரின் நூலில் நீதிபதிகள், பதிவாளர்கள், ஜுரிகள், மொழிபெயர்ப்பாளர்கள், சாட்சிகள் போன்றோரை வான் டோர்ட் வரைந்திருப்பதைப் பார்ப்பவர்களுக்கு அவரின் அறச் சீற்றத்தைப் புரிந்துகொள்ள முடியும். வான் டோர்ட் வரைந்த பல ஓவியங்களில் அவரின் கையெழுத்தைக் காணமுடியாது. எனவே இன்றும் பலரும் அவரால் வரையப்பட்ட ஓவியங்களாய் அடையாளம் காண முடியாதுள்ளனர். அவர் ஒரு அரசாங்க ஊழியராக இருக்கும் நிலையில் அவை தனக்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்தும என்பதற்காகவே அவர் அவ்வாறு கையெழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை என்று பீரிஸ் குறிப்பிடுகிறார்.(9)

“முனியாண்டி”வான் டோர்ட்டுக்கு சிறந்த களமாக அமைந்தது. ஆனாலும் “முனியாண்டி”ஆங்கிலம் கற்ற படித்த ஆங்கிலேயர்களிடமும், உள்ளூர் மேட்டுக்குடி பிரமுகர்களிடமும் தான் சென்றடைந்தது. காலனித்துவ அரசை சாடும் ஒன்றாக இருந்தாலும்  அது சுதந்திரம் சுயராஜ்ஜியம் என்பவற்றை உந்தும் ஒன்றாக இருக்கவில்லை. காலனித்துவ ஆட்சிக்குள் சீர்த்திருத்த வசதி வாய்ப்புகளை பேணும் ஒன்றாகத் தான் அது இருந்தது. “முனியாண்டி”யின் விற்பனையும், விளம்பரமும் தான் அதைப் பேணி வந்தது. அதன் விளம்பரங்கள் The Ceylon Times இன் நான்காவது வாரத்திலும் வெளியாகிக்கொண்டிருந்தது.

“முனியாண்டி”யில் வெளியான வான் டோர்ட்டின் கேலிச்சித்திரங்களில் பெரும்பாலும் ஒரு குரங்கை குறியீடாக வைத்து கிண்டல் செய்வதைக் காணலாம். சில இடங்களில் அதை ஒரு அனுமாராகவும் சித்திரிக்கிறார். இதையே பேலிஸ் அப்புஹாமியின் கவட்ட கத்திகயா சஞ்சிகையிலும் காணமுடியும். அவரும் தனது முதலாவது சஞ்சிகையிலிருந்தே குரங்கைக் குறியீடாகக் கொண்ட கேலிச்சித்திரங்களை வெளியிட்டிருக்கிறார்.

“...தூர மேற்குத் திசையில் இருந்து வந்த நீங்கள் இங்கே எந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்? இந்த “காட்டுமிராண்டிகளுக்கு” (உங்கள் நாகரிகத்தை விட பழமையானது என்கிறீர்களா?) கற்பிக்க, ஐரோப்பாவில் உங்கள் மதத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்து சுத்திகரிப்பு செய்ய வந்தீர்களாக்கும்? பராக்கிரமபாகு கட்டிய பாரிய சமுத்திரத்தை விடவா உங்கள் கலையும், விஞ்ஞானமும் இலக்கியங்களும் பெரிதாகப் போகிறது. இல்லை! ஆனால் வெறுமனே உங்கள் சுயநல நோக்கங்களை இலக்காகக் கொண்டு, பணம் சம்பாதிக்கும் ஒரே இலட்சியத்துடன் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் மதம் பின்தொடர்வதற்கானது உங்கள் கடவுள் ‘சர்வ வல்லமையுள்ள ரூபாய்’, மற்றவர்கள் உங்களை பின்பற்றுவதற்காக உங்கள் சட்டம், உங்கள் லாபம் சதம் சதங்களாக. உங்கள் கொள்கை சுயநலம், மேலும் உங்கள் நம்பிக்கை பொதுவாகவே தாழ்மையானது...”

இப்படி குரங்குப் படத்துடன் உள்ள கேலிச்சித்திரத்துடன் ஒரு குறிப்பு வெளியாகியிருக்கிறது.

அந்த ஓவியத்தில் குரங்குக் கூட்டங்களுடன் உள்ள பெரிய குரங்கை “முனியாண்டி”அரசனாக சித்திரிக்கிறார் வான் டோர்ட்.

ஒரு ஜெனரல் தன் முன் மண்டியிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மார்புகளை தன் ஒரு கையால் அழுத்திக்கொண்டு மறு கையால் தன் கண்களை மூடிக்கொண்டிருப்பதாகவும் இன்னொரு பெண் அவருக்குப் பின்னால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வந்த நகைகளை கொடுப்பதற்காக காத்திருப்பது போலவும் 19 யூன் 1869 வெளியான முனியாண்டியில் ஒரு ஓவியம்  காணப்படுகிறது. அந்த ஓவியத்தில் சில பெண்கள் அழுதபடி கண்களை துடைத்தபடி செல்வதையும் காட்சிப்படுத்துகிறது. ஒரு புறம் ஊழல் இன்னொரு புறம் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றை சித்திரிக்கும் ஒரு காட்சி அன்றைய ஊடகமொன்றில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.

இந்த கேலிச்சித்திரம் அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக போட்டிப் பத்திரிகைகளான The Ceylon Times, The Observer ஆகியனவற்றுக்கு இடையில் காரசாரமான எதிர்வினைகளும் பரஸ்பரம் நிகழ்ந்திருக்கிறது.

இன்னொரு ஓவியத்தில் கண்டி கம்பளைக்கூடாக நாவலப்பிட்டி வரை இரயில்பாதையை விரிவாக்குவதற்காக மலையோன்றில் இருந்து நில அளவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒருவரையும் அவரின் எஜமான் கோர்ட்டும் தொப்பியுடனும் பெரிய பூட்ஸ் சப்பாத்துக்களை அணிந்தபடி, கைகளை கோர்ட்டின் இரு பைகலுக்குள் இட்டபடி, கால்கள் இரண்டையும் அகற்றி வைத்துக் கொண்டு கையிடுக்கில் ஒரு கைத்தடியையும் வைத்துக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்பால் கூலித் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். நில அளவையாளர் பார்த்துக்கொண்டிருக்கும் தூரக்கண்ணாடிகு முன்னாள் கீழியிருந்து ஒரு கூழித்தொழிலாளர் மண்வெட்டியைத் தூக்கி அதனை மறைத்துக்கொண்டிருப்பதாகவும் ஒரு காட்சி.

எவ்வாறிருந்தாலும் 1871 ஆம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசால் “முனியாண்டி”தடை செய்யப்பட்டது. “முனியாண்டி”ஒரு அரச எதிர்ப்பு சஞ்சிகையாகவே அது முடிவுசெய்தது. ஆங்கிலேய அரசு அப்போது பேச்சு சுதந்திரத்தின் பேரால் சகித்துவந்தாலும் ஒரு கட்டத்துக்கு பின்னர் பொறுமை தாளாமல் முனியாண்டியை நிறுத்தி தனது “கருத்துச் சுதந்திர ஜனநாயகம்” எப்பேற்பட்டது என்பதை வெளிக்காட்டியது. “முனியாண்டி”முடிவுக்கு வந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் இருந்துகொண்டு தான் இருந்தது. அதன் பாதிப்பில் “முனியாண்டி”நின்றுபோன அடுத்த ஆண்டே “கவட்ட கத்திகயா” என்கிற கேலிச்சித்திர சஞ்சிகை வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அதுபோன்ற பல சஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவந்தன.

சிரித்திரன்

தமிழில் சிரித்திரன் இதழ் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அவர் மறையும் வரை 32 ஆண்டு காலம் அவரே தொடர்ந்து ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். அவரின் மறைவோடு அதுவும் நின்று போனது.

சிரித்திரனில் சிந்தனை மிகுந்த படைப்புகளைப் போல, அதில் வெளிவந்த தனிச்சிறப்புமிக்க கேலிச் சித்திரங்களும், கருத்தோவியங்களும் சிந்தனையைத் தூண்டக்கூடியன. சிரித்திரனின் வரலாற்றுத தனிச்சிறப்பின் காரணமாக அப்படியொரு இதழின் தேவையை அதன் பின்னர் எவரும் பூர்த்தி செய்யாத நிலையில் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் 2021 சனவரி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக  வெளியிடப்பட்டு வருகின்றது.

“கவட்ட கத்திகயா”

சிரித்திரன் 32 ஆண்டுகள் ஒரே ஆசிரியரைக் கொண்டு வெளிவந்ததைப் போலவே சிங்களத்திலும் 38 ஆண்டுகள் தனி ஆசிரியரால் வெளிக்கொணரப்பட்ட ஒரு கேலிச்சித்திர இதழ் உண்டு. சிங்களத்தில் இத்தகைய கிண்டல்களை “விகட்ட” என்பார்கள். அப்படி “கவட்ட கத்திகயா” (“நையாண்டிப் பேச்சாளன்”) 1872.01.01 அன்றிலிருந்து 40 ஆண்டுகள் வெளிவந்தது. அதாவது சிங்களத்தில் முதலாவது பத்திரிகை வெளிவருவதற்கு பத்தே ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பத்திரிகை அது. அப்போது அதன் விலை 6 சதங்கள். 


“கவட்ட கத்திகயா” இதழில் அதன் ஆசிரியர் பேலியகொட G.D.பேலிஸ் அப்புஹாமியின் (27.02.1847 – 04.09.1910) நையாண்டிக் கவிதைகள், துணுக்குகள், கட்டுரை என்பவற்றின் சுவாரசியத்துக்காகவே அதிக வாசகர்களால் கவரப்பட்டு பல வருடங்களுக்கு வெளியாகிக் கொண்டிருந்தது. அப்பத்திரிகையைத் தொடங்கியபோது அவரின் வயது 25 தான்.

அன்றைய அரசியல்வாதிகள், முக்கிய அறியப்பட்ட பிரமுகர்கள் போன்றோரின் தீய செயல்களை பரிகசிக்கும் வகையிலும், தாக்கும் வகையிலும் அந்த இதழின் உள்ளடக்கம் இருந்தது. 38 ஆண்டுகள் இலங்கையில் ஒரு பத்திரிகை ஆசிரியராக நீடித்த ஒரே ஒருவராக G.D.பேலிஸ் அப்புஹாமி இருக்கக்கூடும். இலங்கையின் ஊடகத்துறையில் அதுவொரு சாதனை தான்.

தெலங்கபாத என்கிற கிராமத்தில் பிறந்த பேலிஸ் அப்புஹாமி அங்குள்ள விகாரையில் கல்விகற்று ஆளானவர். பேலிஸ் அப்புஹாமியின் முகம் தாடி, மீசையால் நிறைந்திருக்கும். அவரின் வாழ்நாள் முழுவதும் அதே வளர்ந்த தாடி மீசையுடன் தான் காணப்பட்டார். அவரின் வாழ்க்கையில் எந்நேரமும் நகைச்சுவை உணர்வோடும், யாரையாவது நையாண்டி செய்வதுமாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாள் அவரை “விகட ரஜா” (நையாண்டி மன்னன்) என்று அவரை அழைத்தார்கள். ஒருவரை கிண்டல் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவர் எப்பேர்ப்பட்டவர் என்றெல்லாம் பார்க்காமல் தன் வேலையைப் பார்த்துவிடுவார். “கவட்ட கத்திகயா” பத்திரிகையின் முகப்பில் “நையாண்டி பண்ண ஏற்பட்டால் தராதரம்  பார்ப்பதில்லை” என்று நிரந்தர சுலோகமொன்றை அவர் எப்போதும் பயன்படுத்தி வந்தார். அதையே வாழ்நாளிலும் கடைபிடித்தார்.தான் வணங்கும்; தனது மதிப்புக்கு பாத்திரமான அன்றைய பிரபல பௌத்த தேரரான ஹிக்கடுவே சுமங்கள தேரரை கிண்டல் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது அதற்கும் அவர் தயங்கவில்லை. அவரின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை சிங்கள நூல்கள் குறிப்பிடுவது வழக்கம். ஒரு முறை அரச குடும்பத்தின் குறிப்பொன்றைக் கொண்ட கைக்குட்டைகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதனைப் பார்த்த அப்புஹாமி தனது கட்டுரையொன்றில் “ஆங்கிலேய அரச குடும்பம் கோவணமாகிவிட்டது.” என்று எழுதியதற்காக அப்புஹாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்துக்கு அவர் தனது வழக்கறிஞரையும் நிராகரித்துவிட்டு தானே பதிலளிக்க ஆஜரானார் அப்புஹாமி. வழக்கை காண்பதற்காக பலர் கூடியிருந்தார்கள். தனக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பம் வந்தபோது அவர் அங்குள்ள எவரையும் பொருட்படுத்தாது, தனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அங்குள்ளவர்களை சற்று வியப்புக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார். சுதந்திரமாக தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் தனது கோவணத்தையும் கழற்றவேண்டும் என்று கூறிக்கொண்டே அவர் தனது கோவணத்தையும் கழற்ற முயற்சித்த வேளை நீதிபதி சத்தமிட்டு தடுத்தாராம். “நான் சுதந்திரமாக எனது கருத்தை வெளிப்படுத்தவே முயன்றேன் அதற்கு இடமளிக்கமாட்டீர்கள் என்று தெரிகிறது, அப்படிஎன்றால் இதோ பாருங்கள் கோவணத்துக்குள் அரச குடும்பம் என்று கூறி கோவணத்தை தூக்கிக் காட்டினாராம். “இந்தப் பைத்தியக்காரனை நீதிமன்றத்தை விட்டு விரட்டுங்கள்” என்று கூறி நீதிபதி அங்கிருந்து அவரை விரட்டச் செய்தாராம். அவர் வழக்கில் இருந்தும் விடுதலையானார். இது அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்ட கதை. அடுத்த இதழில் “அரச கோவணம் விடுதலை பெற்றது” என்கிற தலைப்பில் “கவட்ட கத்திகயா” பத்திரிகையில் ஒரு கட்டுரையையும் வெளியிட்டார்.(10)

சிங்களப் பத்திரிகைத்துறை வரலாற்றில் நகைச்சுவை இதழ்கள் என எத்தனையோ வெளிவந்து நின்று போயிருந்தாலும் “கவட்ட கத்திகயா” தனியிடத்தில் இன்றும் பார்க்கப்படுகிறது அதற்கான காரணம் அது வெளிவந்த காலம், வெளியான காலங்களின் அளவு, ஒரே ஆசிரியர், அதன் காட்டமான உள்ளடக்கம் என்பவை தான்.

G.D.பேலிஸ் அப்புஹாமி

முதலாவது நகைச்சுவைப் பத்திரிகை மாத்திரமல்ல, கேலிசித்திரம் வெளியான முதலாவது சிங்களப் பத்திரிகையும் இது தான். தேசிய விடுதலைக்கு பங்களித்தவர்கள் வரிசையில் வைத்து போற்றப்படுகிறார் அப்புஹாமி. அந்தளவு தனது பத்திரிகையை தேசிய உணர்வுக்காகவும், ஆங்கிலேய எதிர்ப்புக்காகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார். அப்புஹாமி 1910.09.04 அன்று அவர் மரணமடையும் வரை வெளியானது. 1903 ஆம் ஆண்டு பம்பாய் நகரில் நிகழ்ந்த பத்திரிகை ஆசிரியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். அவர் எழுதிய சில சிங்கள இலக்கிய நூல்களும் மிகவும் கவனத்துக்குரிய நூல்களாக திகழ்கின்றன.(11)

“கவட்ட கத்திகயா”வுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் இருந்தது நிச்சயம் “முனியாண்டி” இதழ் தான். “முனியாண்டி” நிகழ்த்தி வந்த காலனித்துவ அரச எதிர்ப்பை “கவட்ட கத்திகயா” தான் அதன்பின்முனியாண்டியின் பாணியில் முன்னெடுத்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அதைத் தவிர வேறொரு முன்னுதாரண சஞ்சிகையும் அவர் காலத்தில் இருந்திருக்கவில்லை. அப்புஹாமி மறைவுக்குப் பின்னரும் மூன்று ஆண்டுகள் அது டேவிட், ஜோர்ஜ் ஆகிய அவரின் இரு புதல்வர்களால் வெளிக்கொணரப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. அதுவும் 1913 இல்   நின்றுபோனது. அவர் வாழ்ந்த காலத்திலேயே “கவட்ட தூத்தயா” என்கிற பெயரில் சீ.என்.த.சில்வா என்பவரால் 10.07.1889 இல் ஒரு நகைச்சுவைப் பத்திரிகை வெளிக்கொணரப் பட்டபோதும் அதுவும் அத்தனை காலம் தாக்கு பிடிக்கவில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் இப்படியான இருபதுக்கும் மேற்பட்ட நையாண்டி இதழ்கள் சிங்களத்தில் மாத்திரம் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் சில உதாரணத்திற்கு;

 1. கவட்ட கத்திகயா - பேலிஸ் அப்புஹாமி -1872.01.01
 2. கவட்ட மித்றயா - பி. பொன்சேகா - 1889.04.13
 3. கவட்ட தூதயா - சி. என் டி சில்வா - 1889.07.10
 4. லங்கா கவட்ட மித்றயா - 1890.08.10
 5. கவட்ட நரேந்திறயா - டி. டி. கோட்டை - 1891.08.15
 6. கவட்ட ராலஹாமி - எம். டபிள்யூ. சி. தர்மவர்தன - 1893.09.15
 7. கவட்டயா - பீட்டர் சில்வா - 1894.09.15
 8. தெனுமெதி கவட்டயா - அ. ஜெ. பெரேரா - 1895.07.12
 9. மொரட்டு நரேந்திறயா - டபிள்யூ. எச். பெர்னாண்டோ - 1899
 10. கவட்ட றால - 1910.01
 11. சிங்கள கவட்டயா -  ஆ. எம். ப்ரீரேரா - 1912.12.14
 12. கவட்ட அங்கன - 1914
 13. கவட்ட திலக்க - டபிள்யூ. எம். பெரேரா -
 14. லங்கா கவட்டயா - 1916
 15. கவட்ட ராஜ - டி. ஈ. எஸ். ஜெயசூரியா - 1918

அவரளவுக்கு விடாப்பிடியாகவும் சுறுசுறுப்பாகவும் அப்பேர்பட்ட பத்திரிகையை வெளிக்கொணர எவரும் இருக்காததால் மற்றவை எல்லாம் தோல்வியில் முடிந்தன. அவரே இப்படி எழுதியிருக்கிறார்...

சோம்பேறிதனத்தால் உறங்குவோரே

கொச்சிமிளகாய் சற்றெடுங்கள்

அரைத்து பின்னாடி வஸ்தி செய்யுங்கள்

சோம்பேறித்தனம் ஓடிவிடும்...

என்று சிங்களத்தில் கவித்துவத்துடன் எழுதியிருந்தார்.

“முனியாண்டி” மேலும் ஆழமாக பன்முகப்பட்ட கோணங்களில் ஆராயக் கூடிய ஒரு முக்கிய இதழ். அது பல கேலிச்சித்திர இதழ்களுக்கும் ஒரு முன்னோடி இதழ் மாத்திரமன்று; அது ஏற்படுத்திய சமூக அரசியல் அதிர்வுகள் நமது ஆய்வுப்பரப்புக்குள் கொண்டுவரவேண்டிய ஒரு இதழ். இக்கட்டுரை வெறும் அறிமுகம் தான்.

ஜோன் கெப்பர்


இலங்கையின் ஊடகத்துறையின் பிதாமகன் என்று சொல்லகூடிய ஜோன் பெர்குசனின் உறவினர் தான் ஜோன் கெப்பர் (John Capper - 1814-1898). இலங்கையின் வளர்ச்சியில் பங்களிப்பைச் செலுத்திய ஆங்கிலேய காலனித்துவவாதிகளில் ஒருவர் ஜோன் கெப்பர் எனலாம். குறிப்பாக ஆங்கில மொழி ஊடகத்துறையில் அதிலும் ஒரு ஆசிரியராக (Editorship) அவர் ஒரு முன்னோடி என்று இலங்கையில் அறியப்படுபவர். பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மட்டுமன்றி, வரலாற்றுத் தகவல்களையும், குறிப்புகளையும் கொண்ட வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.

இலங்கை மட்டுமன்றி, இந்தியா, அவுஸ்திரேலியா பற்றியும் அதே வகை வெளியீடுகளை வெளியிட்டார். ஒரு அபுனைவாளனாக தனது பாத்திரத்தை ஆற்றிவந்த அவர் ஒரு கட்டத்தில் புனைவிலக்கியத்திலும் ஆர்வப்பட்டார். சார்ள்ஸ் டிக்கன்ஸ் போன்றோரது இலக்கியங்களின் பாதிப்பில் அவர் ஒரு முக்கிய பாத்திரங்களை மையமாக வைத்து இலங்கையில் ஒரு நாவலை எழுதிவந்தார். அது முடிவடையாமலே அவர் மரணமானார்.

கோப்பி தொகைவிற்பனை வியாபாரத்தில் அவர் இணைந்ததைத் தொடர்ந்து அவர்  Acland & Boyd என்கிற கம்பனியின் சார்பாக 1937 ஆம் ஆண்டு இலங்கை வந்து சேர்ந்தார். கூடவே கருவா, தேங்காய் எண்ணெய் தொழில் வளர்ச்சிக்காகவும் அனுபப்பட்டிருந்தார். புதிய கோப்பித் தோட்டங்களை நிறுவுவதற்காக அதிகளவிலான பூர்வீக தாவரங்களை அகற்றுவதை மேற்பார்வையிட்டார். அவர் இலங்கை வருவதற்கு முன்னர் நீராவி, சுரங்கவேலை என்பவற்றுடன் தொடர்புடைய ஒரு சஞ்சிகையில் ஒரு ஊடகவியலாளனாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்.

கெப்பர் The Mining and Steam Navigation Gazette இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய அனுபவமுடையவர். இலங்கையில் அவர் The Ceylon Magazine பத்திரிகையைத தொடங்கினார். அறிவார்ந்தவர்களின் படைப்புகளைக் கொண்ட ஒரு ஆய்விதழாக அது இயங்கி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் நீட்சியாகத் தான் அன்றைய இலங்கையின் புத்திஜீவிகளுடன் இணைந்து ராஜரீக ஆசிய கழகத்தின் இலங்கைக் கிளையை தொடங்கினார்கள். அதன் முதல் செயலாளராக கெப்பர் இயங்கினார். அது வெளியிட்ட “The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society” இலங்கையின் முதற்தர ஆய்விதழாக அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருவதை அறிவீர்கள். 1846 இல் அவர் Bessell ஐ ஆசிரியராகக் கொண்டு உருவான Ceylon Examiner பத்திரிகையில் முக்கிய பங்காற்றினார். இந்த இடைக்காலத்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கான நீதவானாகவும் பணியாற்றினார்.

1847 இல் இலங்கையில் கோப்பித் தொழில் பெரும் வீழ்ச்சியடைந்தது. கெப்பர் பணியாற்றிய கம்பனி இலங்கையில் தனது தொழிலைக் கைவிட்டது. கெப்பரும் லண்டனுக்கு நாடு திரும்பினார். லண்டனில் அவர் தொடர்ந்தும் எழுத்துப் பணிகளில் தீவிரமாக இயங்கினார். ஏறத்தாள பத்தாண்டுகளுக்குப் பின் கெப்பர் 1858 இல் மீண்டும் இலங்கை வந்தடைந்தார். அவர் Ceylon Times பத்திரிகையை கொள்வனவு செய்து ஆண்டுகள் அதனை நடத்தி வந்தார். அது நட்டத்தில் இயங்கவே 1874 இல் அவர் அப்பத்திரிகையை மீண்டும் விற்றுவிட்டார்.

கெப்பர் இலங்கையையும் அதன் அரசியலையும் அறிந்த பிரமுகரானார். அதன் பின்னர் அவர் அரசாங்க சபைக்கு உத்தியோகபற்றற்ற உறுப்பினராக தெரிவானார். ஆனால் அப்போது ஆங்கிலேய அரசின் சில கொள்கைகளை எதிர்த்து  15 நவம்பர் 1864 அன்று அவரும் மேலும் ஐந்து உத்தியோகபற்றற்ற உறுப்பினர்களும் (இரு ஆங்கிலேயர்களும், மூன்று இலங்கையர்களும்) ஒன்றாக இராஜினாமா செய்தார்கள். அது மட்டுமன்றி அவர்கள் சிலோன் லீக் (Ceylon League) என்கிற ஒரு அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்கள். அது அப்போது புதிதாக நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் சேர் ஹெர்குலஸ் ராபின்சனுக்கு (Sir Hercules Robinson) சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது.

இந்த காலப்பகுதியில் தான் அவர் “முனியாண்டி”இதழை நடத்தினார். “முனியாண்டி”இதழ் தனது அரசியல் பணிகளுக்கு நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். லண்டனில் மிகப் பிரபலமாக இருந்த பஞ்ச் இதழ்களின் அனுபவங்கள் அவருக்கு இலங்கைப் பத்திரிகையில் பிரயோகித்து புது ஊடக வடிவத்தை இயக்கிக் கட்டினார்.

1883 இல் அவர் கல்கத்தாவுக்குச் சென்று Handbook to the Ceylon Court,  Calcutta International Exhibition ஆகிய நூல்களைத் தொகுத்துவிட்டு இலங்கை வந்ததும் தனது இரு மகன்களான Frank Augustus Capper, Herbert Henry Capper ஆகியோரிடம் Ceylon Times பத்திரிகையை ஒப்படைத்தார். அப்பத்திரிகை The Times of Ceylon என்கிற பெயர் மாற்றம்பெற்று தினசரி மாலைநேரப் பத்திரிகையாக வெளிவந்தது. விரைவிலேயே அது இலங்கையின் முன்னணிப் பத்திரிகையாக ஆனது. அந்த இரு மகன்களே கெப்பருக்குப் பின் வெற்றிகரமாக The Times of Ceylon பத்திரிகையை நடத்தினார்கள்.(12)

கெப்பர் 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். அங்கே மிடில்செக்ஸின் புல்ஹாம் என்கிற பிரதேசத்தில் 1898 இல் தனது 83வது வயதில் இறந்தார்.

ஜோன் கெப்பரின் சில பிரபல நூல்கள்

 • Capper. John - Old Ceylon Sketches of Ceylon Life in olden times
 • Capper. John, - The Duke of Edinburgh in Ceylon.
 • Capper, John.  - Pictures from the East. 1854
 • Capper, John.  - India and Ceylon: ,The Three Presidencies of India 1853
 • Capper, John.  - A Book of Elephant and Elk Sport 1871
 • Capper, John.  - A Full Account of the Buddhist Controversy, Held at Pantura, 1873

அடிக்குறிப்புகள் 

 1.  “முனியாண்டி”இதழ்களின் மூலப் பிரதிகள் பெரதேனிய பல்கலைக்கழகத்தில் உள்ள பிரதான நூலகத்தில் Ceylon Room என்கிற பகுதியில் இன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
 2. Ceylon Blue Book for the year – 1869 – Colombo William Skeen, Government Printer, Ceylon - 1870
 3. Warnapala, W.A. Wiswa. 1975. Press and politics in Sri Lanka. Journal of Constitutional and Parliamentary Studies
 4. Marion Harry Spielmann, The History of "Punch", Cassell, limited, 1895
 5. ‘A Comic Empire: The Global Expansion of Punch as a Model Publication, 1841-1936’, International Journal of Comic Art, Volume 15, No.2, 2013
 6. "Punch, or, The London Charivari, 1841". Science in the 19th Century Periodical. Retrieved 29 September 2013
 7. 1869 இல் வெளியான Ceylon blue book இன் தகவல்களின்படி அந்த ஆண்டு ஒவ்வொரு முனியாண்டி இதழும் சராசரி 2400 இதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் யாழ்ப்பாணத்தில் உதயதாரகை சராசரி 462 பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்கிறது.
 8. இதேவேளை முனியாண்டி இதழை தொகுத்து வழங்கியவர் ஜோன் கெப்பரின் நண்பரான Lieut Edgecomb என்று 1976 இல் வெளியான Historical Essays: Primary Printed and Manuscript Sources for Sixteenth to Nineteenth Century Available in Sri Lanka என்கிற நூல்
 9. Pieris, H.O. Introduction. In Ceylon: The near past: Drawings by J.L.K. Van Dort. London: William Clowes & Sons. 1951.
 10. எஸ்.கொடகே – “ஊடகக் கலையில் நையாண்டியர்களின் வரலாறு” (පුවත්පත් කලාවේ කවටයන්ගේ ඉතිහාසය), திவயின (22.05.2013)
 11. දුනපරේවාදය, මහියංගණවර්ණාව, වල්පොළ පින්කම, කෝරළ ශාන්තිය, දශග්‍රහ ශාන්තිය
 12. John Capper: A life in old Ceylon - By Richard Boyle The Sunday Times, 21.08.2016

நன்றி - தாய்வீடு யூன் - 2021

யாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார்! பரணவிதான காப்பாற்றப்பட்டார்! - நந்தன வீரரத்ன

தமிழில் – என்.சரவணன்


நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ராவய பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் லண்டனில் பி.பி.சி சிங்கள சேவையில் பல ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்பி பல அரசியல் ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக, தமிழர், மலையக, முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்தி வந்திருக்கிறார். சிங்கள சமூக சாதியப் பிரச்சினைகளைப் பற்றி இடையறாது பதிவுகளை செய்பவராகவும் இருக்கிறார். இக்கட்டுரை யாழ் நூலக எரிப்பு தொடர்பாக அவர் சிங்களத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை. தமிழ் மக்களின் போராட்டம் பற்றி அவர் வெளியிடவிருக்கும் சிங்கள நூலில் வெளியாக இருக்கும் கட்டுரை. வாசித்ததுமே தமிழுக்கு இது முக்கியம் எனக் கருதி இக்கட்டுரையை மொழிபெயர்ப்பதற்கு முன் அவரோடு உரையாடி சில விபரங்களையும் உறுதி செய்துகொண்டேன். – என்.சரவணன்

செப்டம்பர் 1993 ஆண்டு ஒருநாள், வவுனியாவிலிருந்து மடுபள்ளி செல்லும் சாலையின் வழியாக எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்தோம்.

இரு அரசாங்கங்களின் அனுமதி பெற்று நாங்கள் செல்லாததால் இது ஒரு ஆபத்தான பயணமாகவே எங்களுக்கு இருந்தது.  இதனால் இந்த பயணத்தின் போது மடுவில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றில் நாங்கள் ஒரு வாரம் தங்கியிருக்க நேர்ந்தது. எவ்வாறாயினும் நாங்கள் இரண்டு வார காலமாக அவர்களின் பகுதிகளில் இருந்தும் குறிப்பாக அடம்பன் கிளிநொச்சி ஊடாக நாங்கள் யாழ்ப்பாண நகரத்தை அடைந்தோம். 

அப்போதெல்லாம் வடக்கிலிருந்து செய்திகள் தெற்கை வந்தடைய முடியாத காலம் இந்தப் பயணத்தின் மூலம் பல்வேறுபட்ட செய்திகளை தெற்குக்கு கொண்டுபோய் சேர்க்கும் இலக்காக நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தோம். இந்தப் பயணத்துக்காக முழு அளவில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய எங்கள் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்களையும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம். இந்தப் பயணத்தின் போது எங்களுக்கு இன்னொரு இரகசியத் திட்டமும் இருந்தது. அது தான் யாழ்ப்பாண நூலகத்துக்கு நேர்ந்ததை ஆராய்வது. நாங்கள் கற்ற கல்வி நிறுவனங்களை விட நூலகங்களே எங்களுக்கு பல்கலைக்கழகங்களாக இருந்திருக்கின்றன.

1981 மே 31 இரவு யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை; இன்று வரை குணப்படுத்த முடியாத காயமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த அநியாயத்தை எந்த தென்னிலங்கை பத்திரிகைளும் பதிவு செய்யவில்லை. தென்னிலங்கையில் அதை பதிவு  செய்த முக்கியமான பத்திரிகையாளர் அன்றைய “சட்டர்டே ரிவியு”  பத்திரிகையின் ஆசிரியர் காமினி நவரத்ன அவர்கள். அதுவும் ஒரு பெரிய கதை அதைப் பற்றி இன்னொரு தடவை எழுதுவோம். 

யாழ் நூலகத்தை எரித்ததனால் உருவான புண் தீக்காயமாகவே இருப்பதற்கு இன்னொரு காரணம் செனரத் பரணவிதான, ஆனந்த குமாரசுவாமி ஆகியோரின் நினைவு தான். இவர்கள் இருவரதும் கையெழுத்துப் பிரதிகளை யாழ்ப்பாண செல்வந்தர்கள் ஏலத்தில் வாங்கி பேணிப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். அந்த பொதுநல குணமுள்ள சிரேஷ்ட தனவந்தர்கள் ஆவற்றைப் பின்பு யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பு செய்திருக்கக் கூடும். யால் நூலகத்துக்கு ஏற்பட்ட துயரம் இலங்கையின் வரலாற்றில் அபயகிரிக்கு நேர்ந்த கதி என்று சொல்லமுடியும்.

யாழ்ப்பாணத்துக்கு சென்றடைந்த முதல் நாளிலேயே நாங்கள் யாழ் நூலகத்தைச் சென்று பார்ப்பதை இலக்காகக் கொண்டிருந்தோம். இதைப் பற்றி விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் அலட்சியமான சிரிப்பையே உதிர்த்தார்.

“அது எரிக்கப்பட்டுவிட்டது. இனி பார்ப்பதற்கு அங்கே ஒன்றுமில்லை” என்று வெறுப்புடன் கூறினார். நாங்கள் தங்கியிருந்த ஞானம் ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே யாழ் நூலகம் அமைந்திருந்தது. எனவே நாங்கள் தமிழ்ச் செல்வனிடம் மேலதிகமாக எதையும் கூறாமலேயே தீயினால் கருகிப்போயிருந்த பாழடைந்த நூலகத்தின் எச்சங்களை போய்ப் பார்க்க கஷ்டமாக இருக்கவில்லை.

அடுத்த நாள் அன்றைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரைச் சென்று சந்தித்தோம். அவரை நாங்கள் சந்தித்த போது எங்கள் முதல் கேள்வி

“பரணவிதான சேகரிப்புகளுக்கு என்ன நேர்ந்தது."

அவர் அமர்ந்திருந்த கதிரையை இறுக்கி முன்னால் இழுத்துவிட்டு மேசை ஓரத்தை ஒரு கையால் பிடித்தபடி.

“பரணவிதான இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் பத்திரமாக இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் யாழ்ப்பாண நூலகத்தில் இருக்கவில்லை. அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கியிருக்கவில்லை. அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்கே தந்திருந்தார்கள். நாளை வாருங்கள் நாங்கள் அவற்றை உங்களுக்கு காட்டுகிறோம்”

நாங்கள் மகிழ்ச்சியுடன் பெருமூச்சு விட்டோம். ஆனால் எங்கள் கேள்விகளை அத்துடன் நிறுத்திவிடத்தான் முடியுமா?

:அப்படியென்றால் ஆனந்த குமாரசுவாமி சேகரிப்புகள் எங்கே?” என்றோம்.

அவர் இறுக்கிப் பிடித்திருந்த மேசையின் விளிம்பிலிருந்து கையை விட்டுவிட்டு கதிரையில் சாய்ந்தார். உதடுகளைக் கடித்துக் கொண்டார். முகமும் இறுகிப் போனது.

“குமாரசுவாமி எரிக்கப்பட்டார்… யாழ்ப்பாண நூலகத்துடன் எரிக்கப்பட்டார். அவர் இரத்தத்தால் பாதித் தமிழராக இருந்தபோதும் அவர் இதயத்தால் ஒரு சிங்களவராக இருந்தவர்.  அவரின் பேரப்பிள்ளைகளால் அவர் எரித்து நாசமாக்கப்பட்டார்… நாங்கள் என்னதான் செய்ய முடியும்? இனி அந்த பழைய கதையில் பயனில்லை. நாளை வாருங்கள் பரணவிதானவை நாங்கள் யாழ்ப்பாணத்தில் எப்படி பாதுகாத்து வருகிறோம் என்பதைக் காட்டுகிறோம்.”

அடுத்த நாள் நாங்கள் பரனவிதானவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தக் கையெழுத்துக்கள் உயிர் பெற்று அதை எழுதியவரின் மண்ணில் இருந்து வந்திருந்த எங்களை பரிகாசமாக பார்த்துக்கொண்டிருந்தன.

யாழ்ப்பாண நூலகத்தை எரித்த அந்த அநியாயக்காரர்களை அம்பலப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற தீவிர முடிவுக்கு அன்று தான் வந்தோம். ஏனென்றால் யாழ்ப்பாண நூலகத்தில் பரணவிதான கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளில் இருந்த கண்ணாடிகளில் எங்கள் முகங்களே அந்தக் குற்றவாளிகளாகத் தெரிந்தபடியால் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்ட நாங்கள் பிரயத்தனப்பட்டோம். “சிங்களவர்களாக நாங்கள் பிறந்ததற்காக நாங்கள் இந்த மானுட விரோத கொடூர குற்றத்திற்கு நாங்கள் உடந்தையாக இல்லை" என்பதை சிங்களவர்களாகிய எங்கள் மனசாட்சியைச் சொல்ல வேண்டியிருந்தது.

அதன் பின்னர் சில வாரங்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க நேர்ந்திருந்தது. ஆனால் அரச படைகள் யாழ்தேவி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதால் எங்கள் முயற்சிகள் பாதிக்கப்பட்டன.

1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடக்கினார். சமாதான பேச்சுவார்த்தையை பதிவு செய்வதற்காக யாழ்ப்பாணம் செல்ல எங்களுக்கும் மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்கு முந்திய தடவை விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆட்சியைப் பற்றியும் எழுதும் பொது ஓரிடத்தில் புலிகளின் பாலியல் கலாசாரம்” பற்றியும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலும் அதைப் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்கள். இதனால் சமாதான பேச்சுவார்த்தையை அறிக்கையிடச் சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு வகை உயிர்ப்பயம் இருந்தது. ஆகாய வழியாக பலாலிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் ஒரு படகில் யாழ்ப்பாணக் கடல் வாயிலாக யாழ்ப்பாண மீன்பிடித் துறை ஒன்றில் இறங்கும் போது எங்களுக்கு ஒருபுறம் வெட்கமாகவும், இன்னொருபுறம் பயமாகவும் இருந்தது.

வியக்கத்தக்கவகையில் யாழ்ப்பாணத்தில் எங்களை வரவேற்க வந்திருந்தவர்களில் தயா மாஸ்டரும், எங்கள் நண்பரும் பத்திரியாளருமான நிமலராஜனும் (பின்னர் கொல்லப்பட்ட) இருந்தார்கள். கொழும்பிலிருந்து அன்று சென்றிருந்தவர்களில் அவர்கள் எங்களைத் தான் ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். அவர்கள் தந்த உற்சாகமான வரவேற்பு எங்கள் வெட்கத்தையும், பயத்தையும் காணாமல் செய்தது.

சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த தமிழ் செல்வன் எங்களைக் கண்டதும், “நீ இன்றே கிளம்பிவிட மாட்டாய் அல்லவா..?” என மிகவும் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். நாங்கள் சடுதியாக “இல்லை சில நாட்கள் இருப்போம். பின்னேரம் சந்திக்கலாம்” என்றோம்.

பின்னேரம் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் தமிழ்ச் செல்வனைச் சந்தித்த வேளை ஒரு விசேட கோரிக்கையை விடுத்தோம். 

“எங்களிடம் வீடியோ கெமரா இல்லை. ஒரே ஒரு நாளைக்கு வீடியோ கெமரா ஒன்றை குத்தகைக்கு கிடைக்குமா..?”

“எதற்காக…?”

“நாங்கள் யாழ் நூலக எரிப்பு பற்றி ஒரு ஆவணப்படத்தைச் செய்ய வேண்டும்…!”

தமிழ்ச் செல்வன் சிறுபிள்ளை போல பலத்து சிரித்தார்.

“உனக்கு போன தடவை வந்த விசர் இன்னமும் சுகமாகவில்லையா? கொழும்பில் மருந்தெதுவும் எடுக்கவில்லையா…? அதை கைவிட்டுவிடு..! அது முடிந்த கதை…”

“இல்லை அதை கைவிட்டுவிட முடியாது.. தயவு செய்து வீடியோ கேமரா ஒன்றைத் தாருங்கள் எங்களிடம் இல்லை அதற்காகத் தான் இந்தளவு கெஞ்சுகிறேன்”

தமிழ்ச் செல்வனின் முகம் சீரியஸாக ஆனது.

“சரி.. இவ்வளவு தான் எங்களால் ஆகவேண்டுமா? வேறெதுவும் வேண்டுமா என்றார். காலையில் ஹோட்டலுக்கு கேமரா ஒன்றை அனுப்புகிறேன்..”

எங்கள் உரையாடல் அத்தோடு நின்றது. அடுத்த நாள் காலை ஞானம் ஹோட்டல் அறையின் மேலாளர் கதவை தட்டிக்கொண்டிருந்தார். “உங்களைப் பார்க்க சிலர் வந்திருக்கிறார்கள்” என்றார்.

தமிழ்ச் செல்வன் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தார். நாங்கள் கேட்டது ஒரு கேமராவைத் தான். ஆனால் அவர் இரு கமராக்களை கமரா காரர்களுடன் அங்கே அனுப்பி வைத்திருந்தார். நிமலராஜனும் எங்களோடு எங்கள் பணிகளுக்கு மொழிபெயர்ப்பு உதவிக்காக இணைந்துகொண்டார். நாங்கள் எங்கள் வேலையில் இறங்கினோம்.

அன்றைய காணி, போக்குவரத்து, மகாவலி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் சிறில் மெத்தியுவும் தான் யாழ் நூலகத்தை எரிப்பதற்காக கொழும்பில் இருந்து பல சண்டியர்களை அழைத்து வந்திருந்தார்கள் என்பதை நேரில் கண்ட சாட்சிகள் சிலரையும் சந்தித்தோம். 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது வெல்வதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆணையின்படி வந்திருந்த தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இறங்கியது தொடக்கம் பல விடயங்களை சொல்லக் கூடிய சாட்சிகளைச் சந்தித்தோம். இதில் ஒரு முக்கியமான ஓர் விடயத்தையும் கவனித்தோம். யாழ் நூலகம் எரிந்துகொண்டிருந்தபோது தீயை அணைப்பதற்காக அரச கடற்படையைச் சேர்ந்த தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த குற்றச்சாட்டிலிருந்து இராணுவம் தப்பித்துக்கொண்டது என்று தான் கூறவேண்டும்.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் எழுதிய முக்கிய கட்டுரையை அடுத்த வாரமே ராவய பத்திரிகையின் ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டேன். ஆனால் அது ஒரு போதும் வெளியாகவில்லை. வீடியோவை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்திருந்தோம் அந்த வீ.எச்.எஸ் கசட் ராவய அலுவலகத்தில் எனது மேசை லாச்சில் இருந்தது. அன்று டீ.என்.எல் தொலைகாட்சி சானலில் பணிபுரிந்த சந்தன சூரிய பண்டார ஒரு நாள் அவசரமாக என்னோடு தொடர்பு கொண்டு யாழ்ப்பாண நகரத்தின் விசுவல் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டார். ஒரு போதும் ஊடக தானத்திற்கு குறைவிலாது பணியாற்றிப் பழகிய நான் அதை அவர் அனுப்பிய வண்டி ஓட்டுனரிடம் கொடுத்தனுப்பினேன். அவை ஒரு போதும் எனக்கு மீதும் திருப்பி கிடைக்கவில்லை. எங்கள் யாழ்ப்பாண நூலகத்தின் கதை அத்தோடு நின்று போனது.

“ஆனந்த குமாரசுவாமி எங்களை மன்னியுங்கள். மனிதர்களின் வாழ்நாள் காலத்தில் செய்யக் கூடியதும், செய்ய முடியாதவையும் உண்டு”


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates