Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மொழிபெயர்ப்பியல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசுப்போட்டி - 2022

காக்கைச் சிறகினிலே இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி.பி.அரவிந்தன் ஏழாவது ஆண்டு நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

'காக்கைச் சிறகினிலே' இதழின் தொடக்க கால நெறியாளர் கவிஞர் கி.பி.அரவிந்தன் கனவின் மீதியில் எழும் புதிய தடமாக இப்போட்டி அமையும். 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்கிற மாகவி பாரதியின் கனவை நனவாக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.

மொழிபெயர்ப்பியல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசுப்போட்டி - 2022

(திருவள்ளுவராண்டு - 2053)

தெரிவுக்குரிய தகுதி

இந்த நூற்றாண்டில் 2000 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரை பிறமொழியிலிருந்து முதற் பதிப்பாக தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்கள்

நூல்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.01.2022 போட்டி முடிவு: மார்ச் 2022 நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: காக்கைச் சிறகினிலே, 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 இந்தியா 16016010560 : kipian2022kaakkaicirakinile@gmail.com

நெறியாளர்:

மதிப்பிற்குரிய இ. பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)

நடுவர் குழு: 

பேராசிரியர் க. பஞ்சாங்கம் (இந்தியா)

- முனைவர் கே.எம். வேணுகோபால் (இந்தியா) -

எழுத்தாளர் என் சரவணன் (நோர்வே)

எழுத்தாளர் அமரந்த்தா (இந்தியா)


ஈழத்தின் ஆசிரிய/வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும் - என்.செல்வராஜா

லண்டனிலிருந்து 2015இல் சேனன் அவர்கள் எழுதிய நாவலின் பெயர் ‘லண்டன்காரர்”. இந்நாவல் லண்டனில் வாழும் விளிம்பு மனிதரைப் பற்றிய கதை. இக்கதை 2011 ஓகஸ்ட் 6 முதல் 11 வரை டொட்டன்ஹாமில் தொடங்கிவைக்கப்பட்ட லண்டன் கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்க் கதை என்ற சிறப்பினையும் பெறுகின்றது. தனிமனிதர்களால் உருவாக்கப்படும் கலவரங்களின் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் கட்டமைவைத் தான் நம்பும் ஒரு சித்தாந்தப் பின்னணியுடன் சேனன் அணுகியுள்ளார். இக்கட்டுரை சேனனின் நூல் பற்றியதல்ல. அதில் அவர் விபரிக்கும் ‘லண்டன் கலவரம்” பற்றிய நினைவு மீட்டலுடன் கட்டுரைக்குள் செல்லலாம். 

பீ.பீ.சீ. மற்றும் பிரித்தானிய தொலைக்காட்சி செய்திகளில் கலவரம் தொடர்பாக அடிக்கடி காட்டப்பட்ட ஒரு காட்சி மனதில் இன்னும் படிமமாக உறைந்துகிடக்கிறது. இக்கட்டுரையை வடிவமைக்கத் தொடங்கும்போது ஏனோ அது மீளவும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தது. கலவரபூமியில் உடைக்கப்பட்ட ஒரு ஆசிரியரின் கடை. அதன் உரிமையாளர் செய்வதறியாது விறைத்த பார்வையுடன் கடையினுள் நிற்கிறார். அவரது கண்களுக்கு முன்னால் அவரது பொருட்கள் போவோர் வருவோரால் சூறையாடப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அவர் சாய்ந்து நிற்கும் அலுமாரியிலிருந்து அவரை நகரச்சொல்லிவிட்டு ஒரு சிறு பெண் அதிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்கிறாள். அவரையும் தங்களில் ஒருவராகக் கருதி தான் எடுத்த பொருட்களிலொன்றை அவரின் கைகளிலேயே திணித்துவிட்டு நகர்கிறாள். 

இப்பொழுது கட்டுரையினை எழுதத் தூண்டிய கருப்பொருளுக்கு வருகிறேன். இன்று காலை சிறிதுநேரம் சமூக வலைத்தளத்தில் உலாவிக்கொண்டிருந்த வேளை எனது புதிய நூலொன்றின் வெளியீடு பற்றிய அட்டைப் படத்துடனான செய்தியினை பகிர்ந்திருந்த நண்பர் ஒருவரின் பின்னூட்டமொன்றில் ‘இதன் மின்வடிவம் எங்கு பெறலாம்?” என்று ஒருவர் கேட்டிருந்தார். ‘அறிந்து சொல்கிறேன்” என்று மற்றொருவர் பதில் எழுதியிருந்தார். நூல் வெளியிட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் அதன் இலவச ‘பீ.டீ.எப்.” களையும் ‘மின்நூல்” வடிவங்களையும் தேடித்திரியும் ஒரு புதிய வாசகர் பண்பாட்டு வெளிக்குள் நாங்கள் புகுந்துவிட்டோமே என்ற ஆதங்கமே இக்கட்டுரைக்குக் காரணம். 

ஒரு நூலை விலைகொடுத்து வாங்கும் கலாச்சாரத்திலிருந்து இலவசமாக அதனை சிரமமில்லாத நவீன தொழில்நுட்பம் தந்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி அந்நூலை ‘சுடச்சுட” வாசித்துவிட்டுக் கடந்துசெல்லும் மனப்போக்கு எம்மில் பலருக்கும் தோன்றுவதற்கு ‘ஸ்மார்ட் போன்”களும், சமூக வலைத்தளங்களும் இணையத்தில் மலினமாக்கப்பட்டுவிட்ட மின்வருடப்பெற்ற நூல்களும், இணையவழி நூலகங்களும் காரணமாகிவிட்டன. 

ஒரு நூலைத் தனது சொந்த வருவாயிலும், கடன்பட்டும் பிரசவ வலியுடன் அச்சிட்டு வெளியிட்டு, அதன் விற்பனையில் வரும் வருவாயில் அச்சகத்திற்கு செலவிட்ட பணத்தின் ஒரு பங்கையாவது செலுத்திக் கடன்பளுவிலிருந்து மீளலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இலங்கையின் ஆசிரிய வெளியீட்டாளரின் மனநிலையை இந்த சமூகத்தள வாசகர்கள் எவரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. 

இன்று இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக்கூடிய ‘ஸ்கானிங் அப்ஸ் (Scanning Apps)” கள் இல்லாத ஸ்மார்ட் போன்களை காணமுடியாதுள்ளது. எதிர்காலத்தில் போன் வாங்கும்போது, இத்தகைய Appsளகளை பில்ட் இன் அப்ஸ் (Built-in Apps)களாக ஐபோன் தயாரிப்பாளர்கள் வழங்கினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. இத்தகைய வசதிகளின் விளைபொருட்களாக இப்பொழுது எம்மவரின் அண்மைக்கால நூல்களில் பல துல்லியமான  PDF களாக  இலத்திரனியல் உலகில் வலம் வருகின்றன. இந்த PDF களை உருவாக்கிக்கொள்வது ஒருவரது ‘ஆய்வுத் தேவை” என்ற ஓட்டையின் கீழ் பதிப்புரிமைச் சட்டத்தை மீறாத செயலாக தோன்றியபோதும், அதனை இரண்டாம் நபர் ஒருவருடன் பகிர்ந்துகொள்வது அப்பட்டமான சட்டமீறலாகும்.


பதிப்புரிமைச் சட்டம் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தினால் 1911ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இது ‘British Copyright Act of 1911” எனக் குறிப்பிடப்படுகின்றது. கிழக்கிந்தியக் கம்பெனியினர், இங்கிலாந்து எழுத்தாளர்களின் நூல்களின் பிரதிகளை இந்தியாவுக்குக் கடத்தி வந்து அங்கே மீள அச்சிட்டு இந்திய உபகண்டத்தில் விற்பனை செய்யும் ‘கள்ள வேலை”களில் ஈடுபட்டுவந்ததினால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பர் வரலாற்றாசிரியர்கள். இதனை இலகுவில் கண்டறியும் நோக்கில் தான், ஒரு நாட்டில் அச்சிடப்படும் அத்தனை நூல்களை அச்சகச் சட்டத்தின்கீழ் அரசாங்க பதிவாளருக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றும், அப் பதிவாளர் தனக்குக் கிடைக்கும் நூல்களை பட்டியலிட்டு மாதாந்தம் அரசாங்க கசட் பத்திரமாக வெளியிட்டு வரவேண்டும் என்றும் ஒரு நியதியிருந்தது. அதுவே இன்று தேசிய நூலகத்தின் நூற்பட்டியலாகப் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான பதிப்புரிமைச் சட்டம் அடுத்த ஆண்டே இலங்கையில் ‘Ceylon Copyright ordinance No.20 of 1912” என்ற பெயரில் சுமார் 67 ஆண்டுகள் மாற்றமின்றி நடைமுறையில் இருந்தது. இச்சட்டம் பின்னர் 1979இல் புதியதொரு சட்டத்தின்மூலம் இற்றைப்படுத்தப்பட்டது. ‘புலமைச் சொத்துச் சட்டம்”  இல. 52: 1979” என்ற வழங்கப்படும் ‘Code of Intellectual Property Act No: 52 of 1979”  என்பதே அச்சட்டமாகும். இது இலங்கையிலுள்ள எழுத்தாளர்களினதும் பாவனையாளர்களினதும் உரிமைகளைப் பற்றி விரிவாக வலியுறுத்துவதுடன் அவர்களுக்கு நியாயமான பாதுகாப்பையும் வழங்குகின்றது. இச்சட்டம் மீண்டும் 2003இல் திருத்தங்களை உள்வாங்கி ‘2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டம்” என்ற பெயரில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் தேசிய புலமைச் சொத்துக்களுக்கான தலைமை அலுவலகம்  (The National Intellectual Property Office of Sri Lanka)  3வது மாடி, சமாகம் மெதுர, இல.400, டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, கொழும்பு-10 என்ற முகவரியில் உள்ளது. இவ்வலுவலகத்தின் தொடர்பாடலுக்கான தொலைபேசி இலக்கம் (0094) 112 689 368 என்பதாகும். உங்கள் நுலொன்று பொருளாதாரரீதியில் உங்களுக்கு நட்டமேற்படும் வகையில் தனிநபரினாலோ, அச்சகமொன்றினாலோ துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அறிந்தால், உடனடியாக இவ்வலுவலகத்துடன் தொடர்புகொண்டு வெண்டிய ஆலோசனையினைப் பெறலாம். அண்மைக் காலத்தில் இலங்கையில் சக படைப்பாளிகளுக்கு நேர்ந்த பாரபட்சம் பற்றிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும்; இவர்களது இணையத்தளத்தில் தகவல்களை காணமுடிகின்றது. பதிப்புரிமை பெறுவதற்கு எழுத்தாளர்கள் எங்கும் தமது நூலை பதிவசெய்யவேண்டியதில்லை. ஒரு நூல் விற்பனைக்காக பதிப்பகத்தை விட்டு வெளியேறிய நாளிலிருந்து அந்த நுலுக்கான பதிப்புரிமை இயல்பாகவே ஆசிரியருக்கு கிடைத்துவிடும். அவராக எழுத்துமூலம் மற்றொருவருக்கோ, நிறுவனமொன்றுக்கோ தனது உரிமையைத் தாரைவார்த்துக் கொடுத்தாலேயன்றி பதிப்புரிமை ஆசிரியருக்கானதே. இதனை ஒவ்வொரு நூலாசிரியரும் தனது நூலில் பதிவுசெய்துவைப்பது நல்லது. 

பதிப்புரிமைச் சட்டம் அல்லது புலமைச்சொத்துச் சட்டத்தில் உள்ள சிறியதொரு ஓட்டை தான் ‘நியாயமான பயன்பாடுகள்  (Fair Use)” எனப்படும் பதப்பிரயோகமாகும். உங்களது நூலை விலைகொடுத்து வாங்கும் ஒருவர் அதனை பலருக்கும் இரவல் கொடுத்துப் பெறுவதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவர் உங்கள் புத்தகத்தை ‘ஸ்மார்ட் போன்” மூலம் மின்வருடல் செய்து அதனை PDF வடிவில் பிரதியாக்கி பொதுவெளியில் மற்றவரின் பாவனைக்கு இலவசமாகவேனும் விடமுடியாது. 

ஈழத்தவரின் ஆவணங்களைப் பதிவுசெய்யும் நூலகம்.ஓர்க்  (Noolaham.Org) இணைய நூலகம் இதன் காரணமாகவே ஒரு நூலை மின்வருடல் செய்தாலும் அதனை பொது வெளியில் இலவசமாக விடுவதற்கு எழுத்தாளரின் எழுத்து மூலமான அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும். எழுத்தாளர் மறைந்து 70 ஆண்டுகள் வரை அவரது பதிப்புரிமை சட்டத்தினால் எழுத்தாளரின் சட்டபூர்வ வாரிசுகளுக்காக பாதுகாக்கப்படுகின்றது. ஆசிரியர் மறைந்து 70 ஆண்டுகளின் பின்னர் அப்படைப்பாக்கத்தை எவரும் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் தான் மதுரைத் திட்டம் சங்க இலக்கியங்களையும் பாரதியார் பாடல்களையும் பக்திப் பிரபந்தங்களையும் உள்ளடக்கிய மின்நூல் வடிவங்களை இலவசமாகத் தரவிரக்கம் செய்துகொள்ள வழியமைத்துக் கொடுக்கின்றன. நூலகம்.ஓர்க் ஈழத்தவரின் முழு நூல்களையும் ஆவணப்படுத்திப் பகிரமுனையும் தனது கனவை நனவாக்கமுடியாது உள்ளதும் இத்தகைய சட்டச்சிக்கல்களால் தான். 

இந்தக் கைங்கரியங்களை அநாமதேயங்களாக பலரும் சுதந்தரமாகப் பிரதியெடுத்துப் பகிர்ந்துகொள்ளும் தவறான ஒரு முயற்சி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கமே இக்கட்டுரையின் வரவாகும். 

லண்டனில் எனக்கு நன்கு பரிச்சயமான தீவிர வாசகர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில்  உரையாடும்போது குறித்த ஒரு புதிய நூல் பற்றிப் பேசிய சிறிது நேரத்தில் 150 பக்கம் கொண்ட அந்நூலின் பீடீஎப் பிரதியை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் படைப்பாளியையும் நான் நன்கறிவேன். அந்த நூலை வெளியிடுவதற்கு அவ்வெழுத்தாளர் பட்ட பாடும் எனக்குத் தெரிந்ததே. உடனடியாக என்னுடன் தொடர்புகொண்ட அந்த ‘நல்ல உள்ளத்தை” மீண்டும் தொலைத் தொடர்பில் இணைத்து, இந்த மின்நூல் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்றேன். அதற்கு அவர் எவ்வித மனக் கிலேசமுமின்றி, ’நான் வாங்கும் புத்தகங்களை நேரம் கிடைக்கும் போது, இப்படி பீடிஎப் ஆக்கி வைத்துக்கொள்வேன். தேவைப்படுபவர்களுக்கு தபால் செலவின்றி அனுப்பி உதவலாம் அல்லவா?” என்றார். அவரிடம் ஏறத்தாழ 70 நூல்கள் வரை மின்நூல்களாக இருக்கின்றன என்ற தகவலையும் போகிற போக்கில் போட்டுடைத்தார். அவருக்கு பதிப்புரிமைச் சட்டத்தின்  இருப்பைப் பற்றியும் அதன் தீவிரத்தையும், நண்பர் அறியாமையால் இழைத்துவரும் சட்டமீறல் பற்றியும் விளக்கமளித்தேன். அன்றிலிருந்து தனது சேகரிப்பிலுள்ள மின்நூல்களில் எதையும் அடுத்தவருக்குப் பகிர்வதை அவர் நிறுத்திக்கொண்டார்.

எம்மவரின் நூல்களை மின்நூல் வடிவில் சமூக ஊடகங்களில் தேடிப்பெற்றுப் பகிர்ந்து கொள்ளும் தமிழகத்து புத்திஜீவி ஒருவருடன் கதைத்தபோது, அவரது கருத்து என்னை சிந்திக்கவைத்தது. 

இந்திய இறக்குமதிக் கொள்கைகளின் கீழ், தனது பிராந்திய மொழிகளில் எழுதப்படும் நூல்களை இறக்குமதி செய்வதில் பலத்த கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னட தேசத்து மொழிகளுடன் தமிழ்நாட்டின் தமிழும் இந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு பாதகமான இந்தியாவின் இந்த இறக்குமதிச்; சட்டத்தினை திருத்தி எழுதுவதற்கு தமிழக சட்டசபையோ, தமிழகத்தின் தமிழ் சகோதர எழுத்தாளர்களோ இன்றுவரை முன்வராமல் கள்ளமௌனம் காப்பதற்கு, தமது பதிப்புத்துறை ஏகபோக உரிமையுடன் நாடுகடந்தும் செழிக்கவேண்டும் என்ற ‘நல்லெண்ணமே” காரணமாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகின்றது. வாசகரிடம் வேறு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும். இப்பொழுது புரிகின்றதா அன்று ஆறுமுகநாவலரும் பணம்படைத்த யாழ்ப்பாணப் பண்டிதர்களும் தமது படைப்பாக்கங்களுடன் சிதம்பரத்துக்கும், சென்னைக்கும் ஏன் கப்பலேறிப் போனார்கள் என்று?

ஏற்றுமதியைப் பொறுத்தவரை இந்தியாவின் இச்சட்டம் செல்லாது. தாங்கள் எழுதிப் பதிப்பிக்கும் எல்லாவித ‘ஆக்கங்களும்” தாராளமாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று சுதந்திரமாகப் பறந்து செல்லும். இதனால் இலங்கைத் தமிழர்களின் தமிழ் நூல்களை இந்தியாவில் அச்சிட்டாலேயன்றி இந்திய ஆய்வாளர்களுக்கு அவற்றை வாங்கிப் படிக்க வாய்ப்பில்லை. நண்பர்கள் மூலம் தபாலிலும், நேரிலும் தருவித்துக்கொள்வதே அவர்களுக்கெனத் திறக்கப்பட்டுள்ள ஒரே வழியாகக் காணப்படுகின்றது. எஸ்போவும், அ.முத்துலிங்கமும், புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளும் படைக்கும் ஆக்கங்களே பெரும்பாலும் அவர்களின் ஈழத்தவரின் தமிழ் ஆய்வுக்குப் போதுமானதாக உள்ளது. தமிழகத்தில் தனது நூலை அச்சிடும் ஒரு புகலிடத்தின் அறிமுகப் படைப்பாளியை அறிந்துகொண்டுள்ள அளவுக்கு, தமிழக வாசகருக்கு தமிழகத்தில் தமது பதிப்பகத்தைத் தேட முனையாது உள்;ர் பதிப்பகங்களுடன் நின்று தமது படைப்பாக்கங்களை வெளிக்கொண்டுவந்திருந்த ஈழத்தின் முதுபெரும் படைப்பாளிகளைக்கூட தெரியவில்லை. 

இந்நிலையில் மின்நூல்களே தமிழகத்தவருடனான புலமைத்துவ அறிவுப் பகிர்வுக்கு வழியமைக்கின்றன என்கிறார் என்னுடன் கதைத்த அந்தத் தமிழகப் புத்திஜீவி. நூலகம்.ஓர்க் இணையத்தின் நூல்களை விட மேலதிகமாக சட்டவிரோதமான மின்வருடல்களும் இலவசமாக அவர்களைச் சென்றடைகின்றன எனவும் அறியமுடிகின்றது. 

இந்நிலையில் எதிர்காலத்தில் எமது படைப்பாளிகள், ஈழத்துப் பதிப்பாளர்களை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு, தமது நூல்களை இணையத்தில் இயங்கும் நூல் வெளியீட்டு அறக்கட்டளைகளை நாடி, தமது நூல்களை (பேஜ் மேக்கிங்) வடிவமைத்துக்கொண்டு, மின்நூல் வடிவில் மாத்திரம் அவற்றைத் தயாரித்து உலகத் தமிழ் வலைத்தளங்களில் இலவசமாகப் பரவவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை போலுள்ளது. இப்பொழுதே புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் எமது படைப்பாளி இ.தியாகலிங்கம் உள்ளிட்ட பலரும் தமது நாவல்களை மின்நூல் வடிவில் வெளியிடத் தொடங்கிவிட்டனர். 

இத்தகைய குழப்பகரமான, ஈழத்தமிழ்ப் படைப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் கிட்டியுள்ள ஆரோக்கியமற்ற ஒரு விநியோகச் சூழலில் தான் இந்த பீடீஎப் வாசகர்கள் சமூகவலைத் தளங்களின் வழியாக இலவச வாசிப்புக்கான மின்நூல்களைத் தேடி அலைகின்றார்கள். இத்தகைய பகைப்புலத்தில்தான் தான் இக்கட்டுரையின் ஆரம்பப் பந்திகளில் நான் குறிப்பிட்டிருந்த லண்டன் கலவரத்தில் சிக்கியிருந்த ‘அந்தக் கடைக்காரரின் ஏக்கம் நிறைந்த முகம்” என் மனதில் ஏனோ வந்து போயிற்று. கையறு நிலையில் நின்றிருந்த அவரின் கண்களில் தெரிந்த அந்த ஏக்கப் பார்வை- எனக்கு ஏனோ எவ்வித அரச ஆதரவும் அற்று சுயம்புகளாக எழுந்து நின்று தமக்கென விதிக்கப்பட்ட பிரசுரகளத்தில் நின்று தனித்துப் போராட விடப்பட்டுள்ள எமது ஆசிரிய - வெளியீட்டாளர்களின் பார்வையையே ஒத்திருந்தது. 

(19.11.2020)

நன்றி - எங்கட புத்தகங்கள்

என்.சரவணனின் "பண்டாரநாயக்க கொலை" நூல்: ஒரு அரிய பணி (அணிந்துரை) - ந.சுசீந்திரன்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மிக உற்சாகமான இளைஞனாக, தேடித்தேடிப் புதிய தகவல்கள் பெற ஓடி உழைக்கும் ஊடகவியலாளனாக, இலங்கையில் தென்னிலங்கை அரசியல், இலக்கியச்  செயற்பாட்டாளர்களைத் தமிழ் பேசும் இனத்தவர்களுடன் இணைக்கும் பாலமாக, எழுத்தாளனாக, சஞ்சிகை ஆசிரியனாக, சிங்கள-தமிழ்  மொழிபெயர்ப்பாளனாகத்  சந்தித்த போதில்  தோழர் சரவணன் அவர்களிடம் காணப்பட்ட அதே ஆய்வுநோக்கும், ஆழநோக்கும் குன்றிவிடாது ஆர்முடுகலாகவே சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு அவரது அண்மைக்கால நூல்கள் சாட்சியங்களாகப் பரிமளிக்கின்றன. 

தலித்தியம்  இலக்கியத்திலும் அரசியல்  கலாசாரத் தளங்களிலும் தமிழுக்கு அறிமுகமான எண்பதுகளில் அதனை  இலங்கையிலும் தொடர் பேசுபொருளாக்கியவர்  சரவணன் அவர்கள்.  ’இலங்கை அரசியலில் பெண்கள்’ என்ற சுமார் இருபது வருடங்களுக்கு முன் வெளியாகிய அவரது  நூல் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழில் வெளியாகிய குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண்களின் அரசியல் வரலாற்றைப்பேசுகின்ற முன்னோடி நூல் எனவும் குறிப்பிடலாம். 

பிரபலங்களும் அரசியற் பிரமுகர்களும் அகாலமாகக் கொல்லப்படும்போது, அக் கொலை யாரால்? ஏன்? என்று உரிமைகோரப்படாதவிடத்து அக் கொலைபற்றிய வதந்திகளும், சாத்தியமான  மற்றும் சாத்தியமே இல்லாத ஊகங்களும்   தற்செயலாகவும், பலவேளைகளில்  பின் விளைவுகளை பற்றிய எண்ணமில்லாமால், பொறுப்பற்று, வெறும் பரபரப்புக்காக  எழுந்தமானமாகவும்   சிலவேளைகளில்  குறித்த விளைவுகள் ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்பில்  திட்டமிட்டும் பரப்பப்படுகின்றன. வரலாற்றின் நீண்ட பாதையில்  இவை குவிந்து கிடக்கின்றன. 

ஓலோவ் பால்மே என்பவர் , தனக்கு மெய்ப்பாதுகாப்பாளர்கள் வைத்துக்கொள்ளாத சுவீடன் நாட்டின் பிரதமாரக இருந்தவர். ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு மனைவியுடன் கால்நடையாக வீடுதிரும்பும் வேளை 1986 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். கண்கண்ட சாட்சியாக ஒரே ஒருவர் இருந்தார். அவரும் இறந்துவிட விசாரணைகள் கைவிடப்பட்டன. அன்று தென்னாபிரிக்க அப்பாதைட் நிறவெறி ஆதரவாளன் ஒருவன், யூக்கோஸ்லாவிய உளவுத்துறை, சுவீடனின் வலது தீவிரவாதி, அன்றைய சிலி நாட்டு பாசிசம், கூர்டிஸ்தான் விடுதலை அமைப்பு, அல்லது  தன்னிச்சையான தனித்த ஒரு பயங்கரவாதி போன்றோர் இக் கொலையின் பின்னணியில் இருந்திருகின்றார்கள் என்ற ஊகச் செய்திகளும் எடுகோள்களும் இன்னமும் தொடரத்தான் செய்கின்றன.

அவுஸ்திரேலியப் பிரதமராயிருந்த ஹோல்ட்  என்பவர், கடலில் சுழியோடுவதில் வல்லுனர். அவ்வாறு அவர் ஒருமுறை கடலில் சுழியோடியபோது காணமற் போய்விட்டார். அவரைச்  சீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று கடத்திச் சென்றிருக்கின்றது என்றும் மக்கள் நம்புகின்ரனர்.   

உண்மையில் இருந்து ஊகத்தினையும், சாத்தியங்களில் இருந்து சந்தேகங்களையும், முழுமையற்ற முடிவுகளில் இருந்து புனைவுகளையும் பிரிக்கமுடியாதபடியும் ஊடகப் புதின்ங்களில் இருந்து உண்மை உலகினைக்  கண்டறிய முடியாதபடியும்  சிக்கல் நிறைந்தவையாய் இருக்கின்றன மனித வாழ்வும், வாழ்வின் தூரநோக்கும்!

உலக கறுப்பின மக்களின்  ஆதர்ஷமாய் விளங்கியவர் மல்கம் எக்ஸ். 1965 இல் அவர் கொல்லப்பட்டபோது, மூன்று நபர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டும், ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று தீர்க்கப்பட்டது. யார், ஏன்  கொன்றிருக்கலாம் என்று பேச இன்றும் அக்கொலைபற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன. 

ஐக்கிய அமெரிக்காவின் தலைவராக இருந்த  ஜான் எவ். கெனடியின் கொலை 1963 இல் இருந்து உலகில் அதிகம் பேசப்பட்ட கொலையெனக் கொள்ளலாம். இக் கொலையினை காஸ்றோ விற்கு எதிரான தீவிர வலதுசாரி ஒருவன் செய்தான் என்றும், அன்றைய உப-தலைவர் ஜாண்சனே இதனைச் செய்வித்தார் என்றும், இக் கொலையின் சூத்திரதாரி சி.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவு நிறுவனம் என்றும், சோவியத் உளவு நிறுவனம் என்றும் நிரூபணத்தின் எல்லைவரை வந்துவிடுவதாகப் பாசாங்கு காட்டும் ஆய்வுகளும் ஆவணகளும்  மேலும் மேலும்  உலக சனங்களுக்குக்  கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. நாம் அறிய,  பங்களாதேஸ்  சிற்பி முஜிபுர் ரஃமான், அன்றைய பாகிஸ்தான்  இராணுவ ஆட்சித் தலைவர்  ஸியாவுல் ஹக், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி போன்றவர்களின் கொலைகள் மீது கூட ஊகங்கள் காலத்துக்குக் காலம் முன்வைக்கப்படுகின்றன.

ஜெர்மனியின் பாராளுமன்ற அங்கத்தவர் யூர்கன் மொல்லமான் என்பவர், அமைச்சராகவும்  இருந்தவர். வானவெளியில் இருந்து பரசூட்டில் குதிக்கும் இராணுவ விளையாட்டில் அனுபவம் மிக்கவர்.  பாராளுமன்றத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் பேசியவர். 2003இல் பரசூட் காற்றில் விரிந்தபின்னர் அதன் கொடியை வெட்டி நிலத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படினும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் தொடருகின்றன.

இரண்டாவது உலகப்போரின்போது பிரித்தானிய இராணுவத்தில்  நிறைய வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்த இலங்கையின் தென்பகுதியில்  போருக்குப் பின்னர் வேலையின்மை ஓர் பிரச்சினையாக உருவெடுத்தது. இதன்போது சில இந்திய எதிர்ப்பு இனவாதிகள், மலையக மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை மூர்க்கமாக மேற்கொண்டனர்.  இன்னொருபக்கத்தில்,  இடதுசாரிக் கட்சிகளின் உருவாக்கமும் மக்களின் தொழிற்சங்க ஆதரவும்  அதிகரித்தன. இந்தியாவில் காலனித்துவ எதிர்ப்பும், காந்தியின் அஹிம்சைப் போராட்டமும் சூடிபிடித்திருந்த வேளை, இலங்கையில் காலனித்துவ எதிர்ப்பும் சுதந்திரப் போராட்ட ஆதரவும் இடதுசாரிகளிலேயே  அதிகம் காணப்பட்டது. ஆனாலும் அன்று அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் காலனித்துவ நேச சக்தியாகவே காணப்பட்டனர். சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவது என்பது காலனித்துவ எதிர்ப்புக் கருவியாக இல்லாமல், அதிகாரத்தினைக் கைப்பற்றும் குறுக்குவழியாகவே இருந்திருக்கின்றது.

இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றினைத் தீர்மானிக்கும் சக்தியாக ‘மஹாவம்ச மனோநிலை’ (பேராசிரியர் க.சிவத்தம்பி) எவ்வாறு செயற்பட்டது என்பதனை  புரிந்துகொள்ளவும், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், ஏன் சிறுபான்மை இனமொன்றின் பயத்துடன், இனத்தையும் மொழியையும் , மதத்தையும் பாதுகாப்போம் என்ற முன்னெடுப்பில் பல்லின, பல்கலாசார, பன்மொழிச் , பல சமய இணக்கச் சூழலை அழித்து சகலவகைச் சிறுபான்மைகளையும் அச்சுறுதிக் கொண்டிருப்பதற்கான அடித்தளங்கள் எப்போது எங்கே போடப்பட்டவை போன்றவற்றைப் புரிந்துகொள்ளவது ஆய்வுப்பரப்பில் இன்றும் முக்கியம்பெறுகின்றது. 

1955 இல்  பிரதமர் ஜான் கொத்தலாவல அவர்களுக்கு நெடுந்தீவில்  கோலாகலமான வரவேற்பும் குறியீட்டு முடிசூட்டுவிழாவும் அவரது ஆத்ம நண்பன் ஊர்காவற்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அல்பிறட் எல். தம்பியையா அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது. அதில் மிக்க மகிழ்ச்சியடைந்த  ஜான் கொத்தலாவல,  இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக, வேண்டுமானால் சட்ட உருவாக்கத்தின் மூலம் உறுதிசெய்யப்படும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்  தெரிவித்தார். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி (இதன்  வாசிப்பு  தமிழும்  அல்ல என்பதுதான்) என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ’சாணக்கிய’ வாசகத்தை இது தென்பகுதியில் கேள்விக்குள்ளாக்கியதுடன் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று "24 மணிநேரத்தில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி" என்ற கோசத்தினை எழுப்ப ஒரு அரிய சந்தர்ப்பமாக உருவாகியது. 

பண்டாரநாயக்காவின் கொலையினை  ’பண்டா- செல்வா’ ஒப்பந்தத்துடன்  தொடர்பு படுத்தி அன்று வெளிவந்த ஊகங்கள் போலவே இன்றும்  ஊகங்கள் உருவாக்கப் படுகின்றன.  இப்படி ஒரு புனைவினை உண்மைபோலக் காட்டுவதில் சிங்கள, பௌத்த இனவெறிப் பேரினவாத சக்திகள் தமது  கொலைக் கறைகளை அழித்துவிடப் பார்க்கின்றனர். பாதை யாத்திரை, பலத்த எதிப்பு,  ஊர்வலம் ,S.W.R.D. பண்டாரநாயக்காவின் இருப்பிடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் போன்றவற்றால், நாட்டின் பிரதமரே ஒருதலைப் பட்சமாக அதைக் கிழித்துப் போட்டபின்னர் இன்னும் என்ன வேண்டியிருக்கின்றது. 

"பண்டா-செல்வா" ஒப்பந்தம்  புத்த பிக்குகள், கடும்போக்காளர்களின் வற்புறுத்தலினால்  ஒருதலைப் பட்சமாக் கிழித்தெறியப்பட்டாலும், அதன் அம்சங்களே  பின்வந்த காலங்களில், ஆட்சிமொழி, கருமமொழி, பிரதேசப் பயன்பாட்டு மொழி போன்ற விடங்களுக்குக் அடிப்படையாக அமைந்து என்பர் அரசியல் ஆய்வாளர்கள். ஆனாலும் உடனடித் தீர்வெடுக்க முடியாத பயந்தாங்கொள்ளியாகத்தான் அல்லது ஒரு அதிகார வேட்கையின் கைதியாகத்தான் எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா இருந்தார் என்பதற்கு பல உதாரணங்கள் இந் நூலில் சொல்லப்படுகின்றன. அதேவேளை சிறுபான்மை இனங்களின் அடையாளம் என்பது பற்றிய மலினமான புரிதலும் விரைவாக் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றித் தன்னை அரசியல் அதிகாரத்தில்  நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதும் அவர் போட்ட தப்புக் கணக்குகள் என்பதுவும், சிறுபானமை இனங்களை  ஏமாற்றுவதுபோல, மூர்க்கமான பேரினவாத சக்திகளையும் கையாளாலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருப்பின் அதுவும்  அவரது உயிருக்கே ஆபத்தாக அமைந்தது மட்டுமல்லாமல், அழகிய அந்த நாட்டில் நாளை வரை  தொடரப்போகும் அமைதியற்ற வாழ்வைத் தொலைத்த நிலைக்கும் பலதரப்புக் காரணிகளாய்  இருப்பதை நாம் உணர்ந்துகொண்டிருக்கின்றோம். 

பிரதேசங்களின் தன்னாட்சியை, பிரதேசங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை தன் அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலங்களில்  தன் அரசியற் தூரநோக்காக முன்மொழிந்து, முற்போக்குத் தேசியக் கட்சி ஒன்றை ஆரம்பித்தவர்   எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள். டொனமூர்  யாப்புச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குமுகமாக, அக்காலத்தில் அதிகாரத்தில் இருந்த டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் கூட்டிய   தனிச் சிங்களவர்களை மட்டுமே கொண்ட மந்திரிசபைக் கூட்டத்தில்  இருந்து  சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அங்கத்தவர்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி வெளிநடப்புச் செய்தார்.  சுதந்திர இலங்கையின் நான்காவது பிரதமராக பதவியேற்ற பின்னர், இடதுசாரிகளின் துணையுடன்,  நன்செய்நிலங்கள் சீர்த்திருத்தச் சட்டம், மற்றும் போக்குவரத்துத் துறையினை அரசுடமையாக்கியது போன்றவை அவரது துணிவினைப் பாராட்டக்கூடியவை தான்.

இத் திட்டமிட்ட கொலை,   புத்தரக்கித என்ற தனி  ஒரு மனிதனின்,  பிடிவாதமான  வியாபாரியின்,  நஸ்டமடைந்த வியாபாரத் தரகனின் கடுங் கோபத்தில் புத்தி மறந்த நிலையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு  என்று கொள்வதில் பலரும் உடன்படுகின்றனர். ஆனாலும் நிலவுகின்ற அனைத்துச் சந்தேகங்களையும் அவற்றிற்கான கிடைக்கப்பெறும் காரணங்களையும்  இந் நூலில் அலசி ஆராய்கின்றார்  தோழர் சரவணன் அவர்கள்.  எமது வரலாற்றின்  அழிந்து படும் பக்கங்களைக் காப்பாற்றி, அவற்றைத் தமிழில்  தருகின்ற அரிய பணியினை மேற்கொண்டிருக்கும் சரவணன் அவர்களுக்கு நன்றியும் எனது வாழ்த்துக்களும்.   

நடராஜா சுசீந்திரன்

பேர்லின் - ஜேர்மனி

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates