குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் எத்தனிப்புகள் புதிய அரசாங்கத்தின் லட்சணத்தை அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றது. இலங்கையில் இதற்கு முன்னர் இதுபோன்ற நாடு கடத்தல் நாடகம் நடந்தேறியதில்லை.
ஜனவரி 1 அன்று இலங்கை வந்த குமார் குணரத்தினம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் அது சட்ட விரோதமானது என்கிற ஒரு வாதம் உண்டு. பிரசித்திபெற்ற 'ப்ரஸ்கேர்டல் சம்பவத்தை” இந்த இடத்தில் உதாரணமாக முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. அவுஸ்திரேலிய பிரஜையான ப்ரஸ்கேர்டல் 04.04.1936இல் கப்பல் மூலம் இலங்கை வந்து காலனித்துவத்துக்கு எதிராக இலங்கையின் இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டார். சாதாரண வீசாவை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டமைக்காக அவரை நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் தலைமறைவாக இருந்துகொண்டு தொழிலாளர் போராட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கினார். அவரை நாடுகடத்துவதற்கு எதிராக கொல்வின் ஆர் டி சில்வா தலைமையிலான அன்றைய போராட்டம் பிரசித்திபெற்றது. பின்னர் சமசமாஜக் கட்சி காரியாலயத்தில் வைத்து ப்ரஸ்கேர்டல் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்படவிருந்த சூழலில் அந்த உத்தரவை எதிர்த்து சமசமாஜிகள் வழக்கு தொடர்ந்தனர். 18.05.1937 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி தேசாதிபதியின் உத்தரவு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மனச்சாட்சியின் சுதந்திரம் என்பதனை தேச எல்லை இடையூறு செய்ய முடியாதென கூறிய நீதிமன்றம், கருத்து கூறும் சுதந்திரத்தை தடுக்கும் விதத்தில் ப்ரஸ்கேர்டலுக்கு தீர்ப்பு வழங்காததோடு, அவரை குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தது.
சம சமாஜ கட்சி தலைவர்களுடன் ப்ரஸ்கேர்டல் |
அன்று எந்த காலனித்துவம் தன்னை நாடுகடத்த முற்பட்டதோ அதே இங்கிலாந்துக்கு போய் அங்குள்ள கொம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடினார் ப்ரஸ்கேர்டல்.
அந்த சம்பவம் நிகழ்ந்து 78 ஆண்டுகள் கழிந்து அதே அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த குறுகியகாலம் அந்நாட்டு குடியுரிமையை அனுபவித்த இலங்கை பூர்விகத்தைக் கொண்ட ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது. அன்று சுதேசிகள் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்து அவுஸ்திரேலிய பிரஜையை காப்பாற்றினார்கள். இன்றோ சுதேச ஆட்சியாளர்களால் சுதேசி ஒருவரின் விசாவும் நிராகரிக்கப்பட்டு, மீள குடியேறும் விண்ணப்பமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குழப்படிகளை சரிகட்டுதல்
பாடசாலைகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை மாணவத் தலைவராக ஆக்குவது போல மோசமாக கற்கும் பின்வரிசை குழப்படி மாணவர்களையும் சிலவேளை மாணவத் தலைவர்களாக ஆக்கிவிடுவார்கள் எங்கள் பள்ளிக்கூடங்களில். அவர்கள் அடங்கி ஏனைய குழப்படிகாரர்களை அடக்குபவர்களாக மாறி காட்டிக்கொடுக்கவும் ஆரம்பித்துவிடுவர்.
இந்த நல்லாட்சி அப்படிப்பட்ட “குழப்படிகாரர்கள்” என்று பேர்பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது. கடந்தகாலங்களில் அப்படிப்பட்ட “குழப்படி” அரசியல் வாதிகளாக பேர்பெற்றவர்களின் கூட்டே புதிய “நல்லாட்சி” அரசாங்கம். முன்னாள் “குழப்படிகாரர்களின் ஏகபோக கூட்டாக” ஆகியிருக்கும் இன்றைய “நல்லாட்சி” தமக்கு வெளியில் எந்தவொரு குழப்படிகாரர்களும் இருக்கக்கூடாது என்று புலம்புகிறது. அப்படி தம்மோடு சமரசத்துக்கு வராவிட்டால் அவர்களை சரிகட்டும் வழிகளைத் தேடுகிறது.
இன்றைய நிலையில் அப்படி சரிகட்ட முடியாத, சமரசமற்ற உறுதியான எதிர்ப்பியக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது முன்னிலை சோஷலிச கட்சி. சமகாலத்தில் வெகுஜன அரசியலை களத்தில் முன்னெடுப்பதிலும் அரசாங்கத்துக்கு சவாலாகவும், தலையிடியை கொடுக்கும் கட்சியாகவும் அது ஆகியிருப்பது தான் இன்றைய அரசாங்கத்தின் பீதி. அதன் பலம் அறிந்துதான் அன்றே அதனை ஒடுக்குவதற்காக மகிந்த அரசாங்கம் கூட அதன் தலைமையில் கை வைத்தது. அக்கட்சி தம்மை பிரகடனப்படுத்தவிருந்த தருவாயில் அதற்கு குமார் குணரத்தினம் தலைமை தாங்கக் கூடும் என்பதை அறிந்த மகிந்த அரசு குமாருக்கு அந்நிய நாட்டு குடியுரிமையை காரணம் காட்டி கைது செய்ய தயாராக இருந்தது. அதனால் கட்சியை அவர் இன்றியே மாநாடு நடத்தி பிரகடனப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு புரட்சிகர கட்சி என்கிற வகையில் குமார் குணரத்தினம் ஒரு பகிரங்க தலைவராக இருக்க வேண்டியதில்லை என்றாலும் கட்சிக்கு அது ஒரு இடையூறாகவே இருந்து வந்தது. குமார் குணரத்தினத்துக்கு தலைமறைவு தலைமை பாத்திரம் புதியதும் அல்ல. ஏற்கெனவே ஜேவிபியில் நீண்ட காலம் அவரின் பெயரே வெளித்தெரியாதபடி தலைமைப் பாத்திரம் ஆற்றிய அனுபவம் அவருக்குண்டு.
முன்னிலை சோஷலிச கட்சி பல வெகுஜன இயக்கங்களை இணைத்துக்கொண்டு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் அனைத்து இனங்களையும் இணைத்துக்கொண்டு முன்னெடுத்த சமவுரிமை இயக்கம் இன்று அக்கட்சியை பாதுகாக்கும் அரணாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முன்னிலை சோஷலிச கட்சிக்குள்ளும் ஏற்பட்ட உடைவுகளும், ஸ்தம்பிதமும் அதன் பலத்தை கணிசமான அளவு பாதிக்கவே செய்திருந்தன. ஆனால் “நல்லாட்சி” அலையில் அடித்துச் செல்லாத கட்சியாக தாக்குபிடித்ததனால் இன்றும் அது ஒரு மக்கள் எதிர்ப்பியக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதை காணமுடிகிறது. இலங்கையில் பெரிய மாணவர் இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இருக்கிறது.
இந்த பலம் தான் புதிய நல்லாட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிய முடிகிறது. அவர்களின் கடந்தகால அரசியல் மற்றும் தற்போதைய வேலைத்திட்டம் என்பன குறித்த அரசியல் விவாதத்துக்கு அப்பால் பலவீனமான எதிர்க்கட்சியைக் கொண்ட இன்றைய அரசியல் சூழலில் ஒரு அரசியல் அழுத்தக் குழு என்கிற ரீதியில் அக்கட்சி முக்கியத்துவம் பெறுகிறது.
அக்கட்சியின் தலைமையை பலவீனப்படுத்தி கட்சியின் நிகழ்ச்சிநிரலை வேறுபக்கம் திசைதிருப்பும் கைங்கரியமாகவே இன்றைய குமார் குணரத்தினத்தின் மீதான மோசமான கெடுபிடிகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
குமாருக்காக ஓரணியில்
குமார் குணரத்தினம் ஜனவரி 1 அன்று நாட்டுக்குள் பிரவேசித்தபோது அவருக்கு 30 நாள் வீசாவே வழங்கப்பட்டது. இடைக்காலத்தில் நீடிப்பதற்காக விண்ணப்பிக்க முடியும். அதன்படி ஜனவரி 27 அன்று விண்ணப்பித்தபோது அது நிராகரிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்த நாட்கள் குடிவரவு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வீசாவும் நிராகரிக்கப்பட்டு, குடியுரிமை விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பெப்ரவரி 18வரை அது விசாரிக்கப்பட்டு அவ்வாறு அடிப்படை உரிமை மீறப்படவில்லை என்று கூறி மேலதிக விசாரணைக்கு அந்த வழக்கு எடுக்கப்படவில்லை. இதனை தீர்க்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு கிடையாது அமைச்சரவைக்கே உள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் மீண்டும் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களை நாடினால் அவர்கள் தம்மிடம் அதிகாரம் இல்லை நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உள்ளது என்று மாறி மாறி பந்தாடி வருகின்றனர். இந்த இழுபறிகளுக்குள் சட்டபூர்வமற்ற முறையிலேயே நாட்டில் தங்கியிருந்து நீதிக்காக காத்துக்கிடக்க நேரிட்டது. அதுவே குமார் சட்டவிரோதமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்ட அரசாங்கத்துக்கு எளிமையாகிவிடுகிறது.
மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட பல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு இது குறித்து கோரிக்கையும் கூட விடுக்கப்பட்டது. குமார் குணரத்தினத்தின் பக்கம் உள்ள நியாயத்துக்காக இன்று பலர் குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது போல அரசாங்கமும் பகிரங்கமாக அம்பலப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரை சேர்ந்த அர்ஜூன் மகேந்திரனுக்கு இந்த நாட்டின் மத்தியவங்கி தலைமைப் பதவியை வழங்குவதற்காக 24 மணிநேரத்தில் இலங்கை பிரஜாவுரிமை வழங்கமுடியுமென்றால், சட்டவிரோதமாக ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருந்ததால் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை பிரதமரே நேரடியாக தலையிட்டு குடிவரவு திணைக்களத்துக்கு ஊடாக ஓரிரு மணித்தியாலங்களில் பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால். அதே அரசியல் அதிகாரம் ஒரு நியாயமான பிரச்சினையை தீர்க்க பின் நிற்பது எதற்காக.
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 8, 20, 21 பிரிவுகளின்படி குடியுரிமை தொடர்பில் ஏற்பது / மறுப்பது தொடர்பிலான முழு அதிகாரம் பிரதமருக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கமோ நீதிமன்றமே தீர்ப்பு வழங்கவேண்டும் என்கிறது.
ஜேவிபியே வெளியேற்றியது
மகிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியமைத்தபோது அந்த ஆட்சியில் பங்கெடுக்கக்கூடாது என்கிற வாதத்தை ஜேவிபிக்குள் குமார் குணரத்தினம் முன்வைத்த போது அந்த தகவல்கள் வெளியில் கசிந்தன. பத்திரிகைகளிலும் அவை வெளியாகின. குமார் குணரத்தினம் கொல்லப்பட இருப்பதாக இரகசிய தகவல்கள் ஜேவிபிக்கு கிடைத்தன. மேலும் இந்த இரகசிய உரையாடல் விமல் வீரவன்சவுக்கு ஊடாக கசிந்ததாக நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜேவிபி தான் குமார் நாட்டுக்கு வெளியே செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வெளியேற்றியது. இன்று மீண்டும் நாட்டுக்கு மீள திரும்புவதற்கான போராட்டத்தை பல இடதுசாரிக்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் முன்னெடுத்தபோதும் இந்த நிலைமையை சரி செய்வதற்கான தார்மீக பங்களிப்பை ஜேவிபி செய்யவில்லை. மாறாக ஒரு பூர்ஷ்வா இயக்கத்தை பழிதீர்ப்பதைப்போல குமாரையும் பழிவாங்குகிறது.
இப்படியான நிகழ்வுகளில் வீதியிறங்கி போராடும் மனோகணேசன் போன்றோரும் இன்று இதற்கு குரல்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தரும் சத்தமின்றி இருக்கிறார். குழப்படிகாரர்களுக்கு பதவி கொடுத்து வாயடைத்தது போலாகிவிட்டது.
மரபுவழி குடியுரிமை
குமார் குணரத்தினம் இந்த நாட்டில் பாதுகாப்பற்ற கெடுபிடிமிக்க சூழலில் இன்னொரு நாட்டில் அரசியல் தஞ்சம் பெறவேண்டி ஏற்பட்டது. ஆனால் அரசியல் சூழல் மாறியபோது மகிந்த அரசின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசியல் நடவடிக்கைகளுக்கு மீண்டும் தலைமை தாங்க நாடு திரும்பியவர். ஆனால் மகிந்த அரசு அவரை கடத்தி சித்திரவதை செய்து நாடு கடத்தியது.
நாட்டுக்கு வெளியில் இருந்து அரசியல் வேலைகளை புரியுமாறு தீர்மானம் எடுத்து நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேவிபியோ குமார் தமது கட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அதே குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கத்துக்கு ஜேவிபி துப்பு கொடுத்ததாக கோத்தபாய சமீபத்தில் ஒப்புக்கொண்டது பலரும் அறிந்ததே.
இன்று வெளிநாடுகளில் இருந்து கொண்டு இரட்டைக்குடியுரிமை பெற்றுக்கொண்டு இலங்கையில் அரசியலிலும் அரசாங்கத்திலும் பங்கெடுத்த பலரைக் கண்டிருக்கிறோம். பசில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் அப்படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.
ஆனால் குமார் குணரத்தினம் அவ்வாறு இரட்டைக் குடியுரிமையைக் கோரவில்லை. அவர் மீண்டும் தானும் தனது பாட்டன் முப்பாட்டன்களும் பிறந்து வாழ்ந்த தனது சொந்த நாட்டில் குடியேறுவதற்காகவே தனது மரபுவழி குடியுரிமையைக் கோரி வருகிறார். குடியுரிமை சட்டத்தில் அதற்கான வழிகளும் உண்டு. அவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை இருக்கிறது என்கிறது குடிவரவு குடியகல்வு திணைக்களம். ஆனால் அவரின் அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யவேண்டுமென்றால் இன்னொரு நாட்டில் அவர் குடியுரிமை பெற்று விட்டார் என்பதை உறுதிசெய்யவேண்டும் என்பது சட்டம். ஜெனீவா பிரகடனத்தின் படி நாடற்றவர் என்று இனி எவரும் இருக்க முடியாது என்கிறது. முதலில் ஒரு நாட்டின் குடியுரிமையை பெறுங்கள் இந்த நாட்டின் குடியுரிமையை விலக்கலாம் என்கிறது அவுஸ்திரேலிய அரசாங்கம். எனவே அவுஸ்திரேலிய குடியுரிமையை அவர் தன்னிச்சையாக இழக்க முடியாத நிலை. ஆனால் குடிவரவு திணைக்களம் இன்றுவரை அவரது விண்ணப்பத்துக்கு பதில் அளிக்காமல் இழுத்தடித்துக்கொண்டு வருகிறது. அவரது கடவுச்சீட்டில் அவரது சொந்தப் பெயர் இல்லை என்பதும் அதில் டஸ்கொன் முடியான்சலாகே தயாலால் நோயெல் முதலிகே என்று இருப்பதையும் காரணம் காட்டியிருக்கிறது. தேவையேற்படின் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றிக்கொள்வது அவ்வளவு கடினமில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாட்டில் வதிவுரிமை பெற்றபோது குமாரும் அவ்வாறே சட்டங்களுக்கு இணங்க மாற்றிக்கொண்டுள்ளார். அது குடிவரவு திணைக்களத்திற்கும் தெரியும்.
குமார் குணரத்தினத்தின் குடியுரிமை சர்ச்சையானது குடிவரவு, குடியகல்வு தொடர்பில் புதிய சட்டத் திருத்தங்களின் தேவையையும் உணர்த்தியிருக்கிறது. பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விடயத்தில் உடன்படுகின்றன.
புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் கடந்த காலங்களில் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றவர்கள் அனைவரும் மீண்டும் நாட்டுக்கு திரும்புங்கள் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஊடக மாநாட்டில் அறிவித்தார். கடந்தவாரம் வெளிநாடுகளில் வாழும் 2000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் வைபவம் கூட பெரிதாக நடந்தது.
அந்தந்த நாடுகளில் சட்டபூர்வமான விசாவை பெற்றுக்கொண்டு புரட்சிசெய்ய புறப்படுவது புரட்சிகர வழிமுறை அல்ல. சேகுவேரா உள்ளிட்ட பல போராட்டத் தலைவர்கள் அனுமதி பெற்றுக்கொண்டு அந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால் குமார் குணரத்தினம் விடயத்தில் சொந்த நாட்டில் மீள குடியேறுவதற்கான உரிமை மறுக்கப்படுவது நிச்சயம் அரசியல் பழிவாங்கலாலேயே. எந்த நேரத்திலும் அவர் நாடு கடத்தப்படலாம் என்கிற அச்சம் அவர் சார்ந்தவர்களுக்கு அதிகம் இருக்கிறது. குமார் குணரத்தினத்துக்கு நியாயமான நீதி வழங்கபடாதபட்சத்தில் அது வரலாற்றில் பிழையான முன்னுதாரணமாக பதியப்படும் என்பது நிச்சயம்.
18.11.1965
|
கேகாலையில் பிறந்தார்.
|
1982
|
கற்றுக்கொண்டிருக்கும் போதே ஜே.விபியில் இணைவு
|
1985
|
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் துறையில்
கற்றபோதும் நிறைவுசெய்யவில்லை
|
ஜன 1990
|
ஜேவிபியில் இருந்த சகோதரன் ரஞ்சிதம் கடத்திக்
கொலைசெய்யப்பட்டார்
|
87/89
|
தேசபக்த மக்கள் இயக்கத்தில் இயங்கிய காலத்தில்
பல தடவைகள் கைது, சிறைப்படுத்தல்
|
15.04.1987
|
பல்லேகெல இராணுவமுகாம் தாக்குதலில் ஈடுபடல்
|
23.05.1987
|
கலகெதர பொலிசாரால் கைது
|
13.12.1988
|
ஜேவிபி மகசின் சிறையை தாக்கி குமாரை
தப்பவைத்தனர்
|
25.07.1989
|
முள்ளிபதானையில் வைக்கப்பட்ட கண்ணிவெடியில்
ட்ரக்வண்டி சிக்கி 14 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் திட்டமிடல் குமாரால்
மேற்கொள்ளப்பட்டது என்கிறது ரிவிர பத்திரிகை
|
24.09.1989
|
இராணுவத்தினரால் கைது
|
1993
|
விடுதலை, ஜேவிபியை மீள கட்டியெழுப்புதலில்
தீவிரம்
|
2004, 2005
|
ஜேவிபி அரசுடன் இணைவதற்கு எதிராக உட்கட்சி
போராட்டம்
|
2006
|
குமாரின் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு
வெளியில் அனுப்ப கட்சி தீர்மானித்ததில் அவுஸ்திரேலியாவில் புகலிடமடைகிறார்
|
2011
|
குமார் தலைமையில் ஜேவிபியிலிருந்து “மக்கள்
போராட்ட இயக்கம்” என்கிற
பெயரில் வெளியேறினர்
|
09.04.2012
|
முன்னிலை சோஷலிச கட்சி தொடங்கப்பட்டது.
|
07.04.2012
|
கட்சி உறுப்பினர் திமுது ஆட்டிகலவுடன் சேர்த்து
கடத்தப்பட்டு சித்திரவதை
|
09.04.2012
|
உள்ளூர்/சர்வதேச அரசியல் நிர்பந்தத்தை
தொடர்ந்து தெமட்டகொட போலிஸ் அருகாமையில் கண் கட்டப்பட்ட நிலையில் கைவிட்டு
சென்றனர் கடத்தியவர்கள்.
|
10.04.2012
|
அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
|
01.01.2015
|
புதிய அரசியல் சூழலில் நம்பிக்கை கொண்டு மீண்டும்
இலங்கை வருகை
|
04.11.2015
|
கேகாலயிலுள்ள தாயாரின் வீட்டில் கைது
|
18.11.2015
|
கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு
மீண்டும் விளக்க மறியலில் வைக்கும்படி தீர்மானிக்கப்பட்ட நாள் அவரது 50வது பிறந்த
நாள்
|