Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

“பூசாரி; கோவிலில் மூத்திரமடிக்கக் கூட முடியும்” - என்.சரவணன்


பிக்கு ஒருவர் நையப் புடைக்கப்பட்டு அவரின் சீருடையை கழட்டி லுங்கி அணிவித்திருக்கிறார்கள் கிராமத்தவர்கள்.

கண்டி மாவட்டத்தில் பன்வில எனும் சிங்கள பிரதேசத்தில் கடந்த கடந்த 28 அன்று விகாரைக்குள் புகுந்த கிராமத்தவர்கள் அங்கிருந்த பொருட்களை உடைத்து வெளியில் எறிந்து பிக்குவையும் தாக்கி அருகிலுள்ள பஸ்  தரிப்பிடத்துக்கு கொண்டுவந்து அவரது சீருடையை கழட்டி லுங்கியை அணிவித்து தூணில் கட்டிவைதிருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 28 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நம்முடைய அவதானமெல்லாம் இது தான்.
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை தாக்குவதற்காக பொதுபல சேனாவோ, அப்பிரதேசத்தை சேர்ந்த பௌத்த சாசன சபையோ பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைக்கவோ, கூடியிருந்து தாக்கவோ இல்லை.

எந்தவொரு அமைப்பும் சுவரொட்டி அடிக்கவுமில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கவுமில்லை. 

மூன்றாவது நாளாகியும் பொது பல சேனா அங்கு இன்னும் கூட்டம் நிகழ்த்தவும் இல்லை. பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த வந்து இனவாத பாடல் பாடி எவரயும் உசுப்பெத்தவுமில்லை. வெளியிடங்களிலிருந்து சண்டியர்கள் இறக்கப்படவுமில்லை. ஞானசார கூட அன்கு வந்து தாக்கியவர்களில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் கோவிந்தா கோவிந்தா என்று மிரட்டவுமில்லை. (ஞானசார அளுத்கம கூட்டத்தில் “தாக்கியவர்களின் கடைகளுக்கும் வீடுகளுக்கும் “அப சரனை” என்றது குறிப்பிடத்தக்கது – அந்த சொல் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுக்கு நிகரானது).

பிக்குமார்களை அழைத்துக்கொண்டு முஸ்லிம் வீதிகளில் ஊர்வலம் போகவுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை அழிக்கவுமில்லை, எவரையும் கொல்லவுமில்லை.
இனி ஒரு பிக்குவுக்கு இப்படி நேர்ந்தாலும் தர்கா, நகர், அளுத்கம, பேருவல, மக்கொன அனைத்துக்கும் நாங்கள் யார் என்று காண்பிப்போம்
என்று கூறிய ஞானசார. ஒரு வீதியில் நடந்த தற்செயல் சம்பவத்தை இனவாத பக்கத்திற்கு திருப்பி பேரழிவை ஏற்படுத்திய ஞானசார; திட்டமிட்டு பலரால் நடத்தப்பட்ட இந்த சம்பவத்துக்கு என்ன சொல்லபோகிறார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு கலவரத்துக்கு எந்தவித காரணமும் தேவையில்லை. இடமும், திகதியும் மட்டுமே நிர்ணயிக்கப்படவிருந்தது. அளுத்கம வீதி தகராறு அதை நிர்ணயிக்க உடனடி வாய்ப்பைத் தந்தது அவ்வளவு தான்.

சிங்களத்தில் ஒரு பழமொழியுண்டு “பூசாரி; கோவிலில் மூத்திரமடிக்கக் கூட முடியும்”.

மக்களின் தேவைகளை மலையக அரசியல் / தொழிற்சங்கங்கள் – அருண் அருணாசலம்


முன்னெப்போதும் இல்லாத வகை யில் தற்போது மலையக மக்களுக்கான வீடமைப்பு, காணி, கல்வி அவசியம் பற்றி அனைத்துத் தரப்பினராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. வீடமைப்பு, காணி கல்வி இவை மூன்றுமே மலையக மக்களின் முக்கிய பிரச்சினைகளாக இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.

தோட்டங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மலையக மக்களிடையே ஆரம்பக் காலத்தில் தொழில் பிரச்சினை, சம்பளப்பிரச்சினை, வறுமை, நோய், மதுபான பாவனை போன்ற பிரச்சினைகளே முக்கிய இடத்தினை பெற்றிருந்தன. இந்த பிரச்சினைகளுடன் தொழிற்சங்கங்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் அதிகமாக தொடர்புபட்டிருந்தனர்.

இன்று மலையக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் என்றால் என்ன அதன் தாக்கம் எவ்வாறிருக்கும் அதன் மூலம் நாம் பெறக்கூடிய உரிமை என்ன என்பதை மலையக மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். ஒரு ஜனநாயக நாட்டுக்கே உரித்தான வாக்குரிமையின் பலத்தைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையிலேயே இன்று நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது விருப்புக்குரிய அல்லது தமது உரிமை, தேவை என்பவற்றுக்குக் குரல் கொடுக்கக்கூடிய உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்றனர்.

கல்வியில் இன்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது  ஏற்பட்டு வருகின்றது. கல்வியினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர் சமூகம் அளப்பரிய சேவை செய்து வருகின்றது. மாணவர்களும் கல்வியின் அவசியம் பற்றி உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி விட்டனர். இந்த நிலைமை தொடர வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் அயராது உழைக்க வேண்டும். அதன் மூலமே இந்தக்குறிக்கோளை எட்ட முடியும்.

அதேபோன்று இரண்டு நூற்றாண்டுகளாக லயன் காம்பிராக்களிலேயே அடைக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த மலையக சமூகம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடே லயத்து வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டு காற்றோட்டமுள்ள சுகாதாரமான வசதியுள்ள தனித்தனி வீடுகளில் வாழ வேண்டும் என்று அவர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆர்வமாகும்.

இவ்வாறு லயத்து வாழ்க்கையிலிருந்து வெளியேறத் துடிப்பதில் தவறில்லை. அது அந்த மக்களின் உரிமை. அடிப்படை உரிமைகளில் ஒன்றான வசிப்பிட உரிமையை நியாயமான முறையில் பெறுவதற்கு அவர்களுக்கு எல்லா விதமான தகுதிகளும் இருக்கின்றன. அதேயே அவர்கள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.

ஜனாதிபதி தனது வரவு – செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்காக 50 ஆயிரம் மாடி வீடுகள் அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதேபோன்று இந்திய அரசாங்கம் 5 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ளது. இவற்றையெல்லாம் விரைவுபடுத்தி பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு மலையக அரசியல் தலைவர்கள் கைகளிலேயே இருக்கிறது.

காணிப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் இந்த நாட்டில் மலையக மக்களே காணி உரிமையற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் வாழ்ந்து வரும் லயன் காம்பிராவை தவிர அவர்களுக்கு வேறேதும் இல்லை. அதாவது ஒரு துண்டு காணி கூட அவர்களுக்கு இல்லை.

அவர்கள் தற்போது வசித்துவரும் லயன் காம்பிராக்கூட தோட்ட நிர்வாகத்துக்கே சொந்தமானது. எனவே காணியற்ற அவர்களுக்கு காணியைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மலையகத்தில் கைவிடப்பட்டுள்ள தேயிலை பயிர்செய்கை மேற்கொள்ளப்படாத தரிசு காணிகளை மலையக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மத்திய மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களால் மேடைகளில் இது பற்றி முழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதுபற்றிய கதையே இல்லை. அதை மறந்து விட்டவர்களாகவே மலையகத் தலைவர்கள் காணப்படுகின்றனர்.

அரசினால் அல்லது நாட்டின் தலைவரினால் ஒரு திட்டம் அறிவிக்கப்படும்போது அதனை விடாப்பிடியாக அவ்வப்போது வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களிடமே உள்ளது. ஆனால் அவ்வாறான ஒரு திட்டத்தை மலையகத் தலைவர்கள் எவரும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. எந்தவொரு தலைவரும் இதுபற்றி பேசுவதில்லை. பேசியதுமில்லை.

மலையக இளைஞர்களுக்கு தரிசுக் காணிகளைப் பெற்றுக்கொடுத்தால் தங்களது இருப்புக்கே ஆபத்து வந்து விடும் என்று அஞ்சுகின்றனரா? அல்லது மலையகத்தில் அரசியல் செய்ய முடியாமல் போகுமென்று நினைக்கின்றனரா தெரியவில்லை.

தமது மக்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ வேண்டுமென்று நேர்மையாகவும் சமூக பற்றுடனும் சிந்திக்கும் தலைவர்கள் இதுபோன்று கிடைத்த சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவறவிடமாட்டார்கள். அரசையும் நாட்டுத் தலைவரையும் தொடர்ச்சியாக வலியுறுத்திப் பெற்றுக் கொடுத்திருப்பார்கள்.

இவ்வாறு பல முக்கிய தேவைகள் இன்று மலையக மக்களுக்கு உள்ளன. இவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த மேதினத்தில் மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உறுதி கொள்ள வேண்டும். இதுவே இன்றைய தேவையும் அவசியமுமாகும். ஆனால் மலையக சமூகத்துக்கென மத்திய மாகாணத்தில் வழங்கப்பட்டு வந்த தமிழ்க் கல்வியமைச்சு பறிக்கப்பட்டமை பெரும் அநீதியாகும். அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் குரல் கொடுக்காமல் மௌனம் சாதித்து வருவது மலையக சமூகத்துக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

இந்த தமிழ் கல்வியமைச்சைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யாதது சமூகத்தை ஏமாற்றும் செயலாகும். முதலில் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு பறிக்கப்பட்ட போதே அதற்கு எதிராக மலையக அரசியல் தலைமைகள் குரல் கொடுத்திருந்தால் மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு பறிக்கப்பட்டிருக்காது. இதனை புரிந்து கொண்டிருந்தும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் போனது ஏன்? உண்மையாக சமூகத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்க்கல்வி அமைச்சைப் பெற்றிருக்க முடியும்.

நன்றி - வீரகேசரி 04.05.2014

வட்டரக்க விஜித தேரோ : ஒரு எச்சரிக்கை! - என்.சரவணன்


"நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும் சற்று நேரங்களில் கைதுசெய்யப்படப் போகிறேன்." வட்டரக்க விஜித்த தேரர் ஜூன் 25 அன்று கைதுசெய்யப்படுவதற்கு சற்று சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் வைத்து கூறியது இது.

மிகவும் பயந்த நிலையில் பீதியுடன் அங்கும் இங்குமாக தலையைத் திருப்பி அவதானித்தபடி ஊடகங்களுடன் உரையாற்றினார். பயந்த சுபாவமுள்ள அவர் இலகுவாக பயமுறுத்தலுக்கு உள்ளாகக்கூடியவர் என்பது ஏப்ரலில் நிப்பொன் ஹோட்டலில் நடந்த சம்பவம் நமக்கு உறுதிப்படுத்தியது.

"....இந்த நேரத்தில் என்னால் எதுவும் பேச முடியாத நிலையில் உள்ளேன். நீங்கள் பல மணிநேரமாக காத்திருப்பதால் இதனைக் கூறுகிறேன். இதுவரை எந்தவித ஊடகங்களுக்கும் நான் நடந்ததைக் கூறவில்லை. அப்படியிருந்தும் சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. 
கேடுகெட்ட இனவாதிகள் ஒருபுறம் என்னிடம் இரத்தம் கேட்கும் போது இந்த ஊடகங்களும் வேறுசிலரும் மறுபுறம் என்னை கொன்றே விட்டனர். 
இது மின் ஒழுக்கு அல்லது மின்தாக்கி ஏற்பட்டதல்ல. முன்னைய காலத்தில் இரத்தப்பலி கொடுத்ததைப்போல நானும் இரத்தத்தை பூஜைக்காக கொடுக்க எந்தவித அவசியமும் இல்லை. 
அழுத்கமையில் தீவைத்து அழித்தொழிப்பு செய்து, கொலை செய்த ஞானசார தேரோ வெளியில்... அமைதி, நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும்சில நேரங்களில் கைதுசெய்யப்படப்போகிறேன்...." என்றார்.
"... தான் தாக்கப்பட்டதாக கூறிய அவர் பின்னர் தன்னைத்தானே அவ்வாறு செய்துகொண்டதாக கூறியிருக்கிறார்,.. எனவே பிழையான வாக்குமூலத்துக்காக அவரை கைதுசெய்யவிருக்கிறோம்.." என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யார் இந்த வட்டரக்க விஜித்த தேரர்
பொதுபல சேனாவினால் மட்டுமல்ல ஒட்டுமொத்த பேரினவாதத் தரப்புக்கும் சவாலாக மாறி அவர்களால் இலக்குவைக்கப்பட்டிருக்கும் விஜித்த தேரர் இன்று ஊடகங்களில் அதிகம் அறியப்பட்டிருந்தாலும் அவரின் செயற்பாடுகள் இருபது வருட பின்னணியுடயது.

1994இல் மஹியங்கன விகாரைக்கு விகாராதிபதியாக சென்றார். அங்கிருந்தபடி அவர் ஏனைய சமூகங்களுடன் நெருங்கி சர்வமத ஐக்கியத்துக்காக; அவை சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றத் தொடங்கினார். சில வருடங்களில் அப்போதைய துறைமுக அமைச்சராக இருந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு நெருக்கமானார். அதன் பின் அஷ்ரப்பின் இணைப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றினார். இதன் தொடர்ச்சியாக அஷ்ரப் அவர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னிணியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

சோம ஹிமியின் பரப்புரை
வட்டரக்க விஜித்த தேரர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக தெரிவானதிலிருந்து தான் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பு அவரை இலக்குவைத்து தாக்கத்தொடங்கியது. சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த கங்கொடவில சோம ஹிமி உரையாற்றும் ஒரு காணொளியை சமீபத்தில் காணக்கிடைத்தது. அதில் அவர் பல நூற்றுக்கனகனக்கானவர்கள் மத்தியில்  பௌத்த போதனை செய்யும் போது நீண்ட நேரம் வட்டரக்க விஜித தேரோவை மோசமாக சாடுவதை காணக்கூடியதாக இருந்தது. இந்த தசாப்த்தத்தில் பேரினவாத தலைமைக் குறியீடாக ஞானசார இருப்பதுபோல 90களில் கங்கொடவில சோம தேரோ மிகவும் பிரசித்திபெற்ற பேரினவாத பிரச்சாரகர்.

முஸ்லிம்களுக்கு எதிராக புனையப்பட்டுள்ள பல விஷக் கருத்துக்களுக்கு காரணகர்த்தா சோம தேரர்.
முஸ்லிம்கள் வேகமாக பல்கிப் பெருகுகிறார்கள்... வியாபார, வர்த்தகத்துறைகளை ஆக்கிரமிக்கிறார்கள்... கலாசார ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளுக்கு போகிறது... சிங்களவர்கள் அதிக பிள்ளைகளை பெறவேண்டும் இல்லாவிட்டால் நாடு அந்நியர்கள் கைகளுக்கு போய்விடும்...
போன்ற கருத்துக்களை அவர் சாந்த முகத்தோடும், வெளித்தெரியாத ஆத்திரத்தோடும் பௌத்த உபதேசங்களோடு கலந்து பௌத்தர்களுக்கு ஊட்டினார். அப்போது சோம தேரோவோக்கும் அஷ்ரப்புக்கும் இடையில் நடந்த பகிரங்க TNL தொலைக்காட்சி விவாதம் (27.09.1999) மிகவும் பிரசித்திபெற்றது. (இது குறித்து எனது விரிவான கட்டுரை 1999.09.30 சரிநிகரில் வெளியாகியிருக்கிறது)

வட்டரக்க விஜித தேரோ குறித்து சோம ஹிமி சாடும்போது “...ஒரு முஸ்லிம் இயக்கமொன்றுக்கு எப்படி பௌத்தர் ஒருவர் அதுவும் பௌத்த பிக்கு ஒருவர் தலைமையேற்க முடியும். இது பௌத்தர்களுக்கு செய்யும் நிந்தனை...” என்று பிரசாரப் படுத்தினார். வட்டரக்க விஜித தேரவின் மத நல்லிணக்க முயற்சிகையும் கடுமையாக சாடினார். உண்மையில் அது முஸ்லிம் ஐக்கிய முன்னணி அல்ல. அது அஷ்ரப் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியாகும். இன்றைய சிங்கள இனவாத ஊடகங்கள் பலவும் விஜித தேரரை சாடும் போது வசதியாக அவர் “முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர்”  என புனைகின்றனர்.

வட்டரக்க விஜித ஹிமி பற்றி அன்று சோம ஹிமி பரப்பிய பொய் பரப்புரைகள் இன்றும் நம்பவைக்கப்பட்டுள்ளன. அஷ்ரப் அவர்கள் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் விபத்தில் 16.09.2000 அன்று மரணித்ததன் பின்னர் ஓரளவு தனித்துப் போன விஜித தேரர் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

விஜித தேரவுக்கு “ப்ரஹ்ம தண்டனை”
மஹியங்கன தொகுதியில் பிரதேச சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றை ஏற்படுத்தி வாளி சின்னத்தில் போட்டியிட்டபோதும் அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர் மீண்டும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னையின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியையே பிரதிநித்தித்துவப்படுத்துகிறார். இன்றும் அவர் ஆளும்கட்சி பிரதேச சபை உறுப்பினர் என்பது கவனிக்கத்தக்கது.

பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் மஹியங்கன நகரில் வர்த்தக நிறுவனமொன்றின் மேல் மாடியில் நடத்தப்பட்டு வந்த கிறிஸ்தவ ஒன்றுகூடலை தாக்க முற்பட்டபோது அந்த கிறிஸ்தவர்களை பாதுகாத்தவர் விஜித தேரோ. அப்படி அவர் நடந்துகொண்டது பௌத்த விரோத செயல் என்று பௌத்தர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அது போல அவர் முஸ்லிம்களின் ரமழான் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியதையும் (பதுளை முஸ்லிம் வித்தியாலயத்தில் - 08.08.2013) சுட்டிக்காட்டி அவருக்கெதிரான குற்றப்பத்திரிகையொன்று மகியங்கனவில் பௌத்த பிக்குகளினால் விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் 12.08.2013 அன்று அவருக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி அவர் சங்க சம்மேளனத்திலிருந்து அவரை நீக்குவதாகவும் அவரை “ப்ரஹ்ம தண்டனை”க்கு உட்படுத்துமாறும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தான் ஞானசார பல கூட்டங்களிலும் விஜித தேரரை சங்க சம்மேளனம் எப்போதோ நீக்கிவிட்டதாகவும் அவர் இதற்குமேல் ஒரு சீருடை தரிக்க அருகதையற்றவர் என்றும் பிரச்சாரம் செய்துவருவதை கவனித்திருப்பீர்கள். ஆனால் பொது பல சேனாவின் கட்டுபாட்டிலுள்ள சில பௌத்த விகாரைகளை சேர்ந்த பிக்குமார்களைக் கொண்ட ஒரு சிறு அமைப்பு தான் அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.


இந்த தீர்மானத்தை நிராகரித்த விஜித தேரர் எப்போதும்போல கடமையாற்றிக்கொண்டிருந்ததை சகிக்காத பிக்குமார் கூட்டம் விஜித தேரரை நிராகரிக்காதவரை தமது விகாரைகளில் நடத்தப்படும் “தஹாம்பாசல்” எனப்படும் சிறுவர்களுக்காக நடத்தப்படும் பௌத்த வகுப்புகளை இடைநிறுத்திவைப்பதாக அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து அவர் பௌத்தர்களால் நடத்தப்படும் பல நிகழ்வுகளுக்கு அழைக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி பிரதேச சபைக்கூட்டங்களுக்கு கூட அவர் எதிர்ப்புகளின் மத்தியிலும், பொலிஸ் பாதுகாப்பு மத்தியிலும் செல்ல நேரிட்டது.

தொடர் தாக்குதல்
சென்ற 21.08.2013 அன்று விஜித தேரர் தனது தாயின் மரண நினைவு சடங்கில் (சிங்களத்தில் “பிங்கம”) கலந்துகொள்வதற்காக அவரது ஊரான வடரக்கவுக்கு புறப்பட்டவேளை அவரது வாகனத்தை முச்சக்கர வண்டிகளில் பின்தொடர்ந்த பொது பல சேனா வை சேர்ந்தவர்கள் பெராதேனிய பகுதியில் வைத்து கடுமையாக தாக்கிவிட்டு ஓடி மறைந்தார்கள். காயமடைந்த விஜித தேரர் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றார்.

ஞானசார தேரர் பல இடங்களில் விஜித தேரவை கொல்வதாக மிரட்டியிருந்தார், முஸ்லிம்களுக்காக கதைக்கும் அவர் விஜித தேரர் அல்ல... அவர் “மொஹமட் விஜித” என்றும் கேலி செய்திருந்தார். இதனை அவர்களது உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சமூக வலைத்தளங்களிலும் படங்களாக வெளியிட்டு பிரச்சாரம் செய்தனர்.


இப்படியான ஒரு சூழலில் தான் யுத்தத்தின் பின் வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு கலவரத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தது. ஞானசார தேரோ பொது பல சேனாவை சேர்ந்த பலரை திரட்டிக்கொண்டு கூட்டமாக சென்று முஸ்லிம்களை விரட்டும் பணியில் ஈடுபட்டார். பொலிசாரின் தலையீட்டில் கலவரமின்றி அது முடிந்தாலும் பொது பல சேனா அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்தது.

நிப்பொன் ஹோட்டலில் சண்டித்தனம்
இந்த நிலைமையை சரிசெய்வதற்காகத்தான்  கடந்த ஏப்ரல் 9 அன்று நிப்பொன் ஹோட்டலில் “ஜாதிக பல சேனா” என்கிற அமைப்பை வட்டரக்க விஜித தேரோ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிப்பதற்காக ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். தொடங்குவதற்கு முன்னரே அங்கு வந்த ஞானசார தலமையிலான குண்டர்கள் பொலிசாரையும் விலத்திவிட்டு; அந்த ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்து நிறுத்தியதோடு ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

“இந்த மாநாட்டை நடத்த வந்த வட்டரெக்கே விஜித தேரர் உண்மையான பௌத்தர் அல்ல காவியுடை தரித்துக்கொண்டு முஸ்லிம்களின் பணத்துக்கு விலை போனவர்.
அவ்வாறான ஒருவரை வைத்து மாநாடு நடத்துவதை இடமளிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள்.
முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம்...”

என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். பின்னர் சிறிய பிக்குவொருவரிடம் பௌத்த மதம் தொடர்பாக பௌத்த மதம் தொடர்பில் பல கேள்விகள் கேட்டு பதிலளிக்காத நிலையில் “இங்கு முஸ்லிம்களுக்கு காவியுடை போர்த்தப் பட்டுள்ளது” என்று கூறி அங்கிருந்த சில குருமார் இவர்களுக்கு சாரத்தை கொடுங்கள் என்றனர்.

பின்னர் வட்டரெக்கே விஜித தேரரை மோசமாக திட்டியபடி அடிக்க கையோங்கினார் ஞானசார. ஞானசார கை நீட்டி திட்டிக்கொண்டிருந்தபோது தன்னை தாக்கிவிடுவார் என்று அஞ்சி வட்டரக்க விஜித தேரர் அடிக்கடி கையால் தன்னை பாதுகாத்தபடி இருந்ததை அந்த கானொளியில் அனைவரும் கண்டிருப்பார்கள். செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர்; வட்டரக்க விஜித தேரவை மிரட்டினார்.

நடுங்கிய நிலையில் வட்டரக்க விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார்.
“..நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.

ஜனாதிபதி வழங்கிய உயிர் உத்தரவாதம்
இந்த சம்பவத்தோடு வெறியேறிப்போயிருந்த பொது பல சேனா தன்னை எதுவும் செய்யக்கூடுமென்று தொடர்ந்தும் தலைமறைவாக வாழ நிர்பந்திக்கப்பட்டார் விஜித தேரர். தனது உயிருக்கு உத்தரவாதம் தரும்படியும் பாதுகாப்பு தரும்படியும் ஜனாதிபதியிடம் கோரினார். ஜனாதிபதியும் அதற்கு ஒத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் விஜித தேரர் தெரிவித்திருந்தார்.

நடக்கும் அட்டூழியங்கள் அனைத்துக்கும் ஆசீர்வாதம் வழங்கிக்கொண்டிருக்கும் ஒருவரிடம்போய் பாதுகாப்பு கேட்டால் எப்படி. எனவே வட்டரக்க விஜித தேரரை வெறிகொண்டு தேடியலைந்த பொதுபல சேனா கும்பல் ஏப்ரல் 23 அன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது. குண்டர்கள் “காவியுடை” தரித்திருந்ததால் பொலிசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லையாம்.எனவே அவர்கள் அறை அறையாக சென்று தேடினார்கள். இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் தந்தது என்று அங்கிருந்த போலீசார் கேட்கவில்லை. போலீசார் காவியுடைக்குள்ளும், பிக்குகள் பொலிஸ் சீருடைக்குள்ளும் இருந்து அதிகாரம் புரிந்தார்கள். விஜித தேரோ வந்தது CCTVயில் பதிவாகியிருக்கும் எனவே அதனை தமக்கு காட்டும்படி பொலிசாரிடம் சண்டித்தனம் காட்டினர். மறுத்த பொலிசாரை பிக்குமார் தாக்கவும் முற்பட்டனர்.

காத்தலும் அழித்தலும் நாமே!


பொது பல சேனாவுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டன. தமக்கெதிரான போக்கை தடுத்து நிறுத்துவதற்காக ஞானசார தேரர், மகா சங்கத்தினரை அணுகினார். மல்வத்து பீடாதிபதியை 23 ஏப்ரல் அன்று சந்தித்த ஞானசார அவரிடம் “..புத்தரையும் பௌத்த மதத்தையும் மோசமாக நிந்திக்கிறார்கள் முஸ்லிம்கள்... நாட்டுக்கு மிகப்பெரும் நெருக்கடியை தந்திருக்கிறார்கள்... இது குறித்து உரிய இடங்களில் முறையிட்டும் எந்த தீர்வும் இல்லை. என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் குறித்து தாம் தயாரித்திருக்கிற அறிக்கையை அவரிடம் கையளித்தார். இதற்கு மேலும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாம் களத்தில் இறங்க வேண்டிவரும் என்று தயவாக எச்சரித்தார். அதற்கு பதிலளித்த மல்வத்து பீடாதிபதி சுமங்கல தேரர் இப்படி கூறுகிறார்.
“இனத்துக்காகவும் நமது மதத்துகாகவும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்... ‘எங்களால் அரசாங்கத்தை உருவாக்கவும் முடியும்... அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும்; என்று நீங்கள் உரையாற்றியதை பார்த்தேன். எதையாவது செய்யுங்கள்...”
கைகூப்பி அவரை வணங்கியபடி ஞானசார தேரர் 
“..நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்கிறோம்.. இந்த மோசடி அரசியல்வாதிகள் சொல்வதை நாங்கள் கேட்கப்போவதில்லை..” என்றார்.
இந்த ஆணை தான் அளுத்கம கலவரத்துக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என்றால் அது மிகையில்லை. அரசின் அனுசரணை உள்ளது. படையினரின் துணை இருக்கிறது. நடத்தி முடிக்க ஆளணி தயாராக இருக்கிறது. எது நடந்தாலும் தம்மை பாதுகாக்க பௌத்த உயர் பீடம் இருக்கிறது.

பௌத்த மதத்துக்கு “குடியரசு அரசியலமைப்பின்” படி வழங்கப்பட்ட சிறப்புரிமை, சிறப்பு சலுகை என்பவற்றை எந்த கொம்பனால் தான் தடுத்து நிறுத்த முடியும், எனவே பௌத்தத்தின் பேரால் நினைத்ததை சாதிக்கும் வரம் பெற்றவர்கள் அல்லவா.

ஆக... ஒரு சிறிய சம்பவத்தை சாட்டாக வைத்து நடத்தி முடித்தது தான் அளுத்கம வேட்டை. அது ஒரு வெறும் ஒத்திகை தான். பொது பல சேனா எதிர்பார்த்தபடி தமக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை, மாறாக போதிய பாதுகாப்பும், பக்கபலமும், அவர்களுக்கு கிடைத்தபடி இருக்க. மறுபக்கம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தலைமைகளுக்கு அரச யந்திரத்தின் எச்சரிக்கையும், ஆலோசனைகளும் கண்துடைப்பு நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

சுன்னத் முயற்சி
இதனால் களிப்பூட்டபட்ட இனவாத தரப்பு; முஸ்லிம்களை மேலும் சீண்டிப்பார்க்கும் நோக்கில் அங்காங்கு தமது அட்டூழியங்களை தொடர்ந்தது. அந்த களிப்பின் வெளிப்பாடு தான் (19.06.2013) தாம் சொன்னபடி வட்டரக்க விஜித தேரரை தேடிக் கண்டுபிடித்து சுன்னத் செய்ய எடுத்த முயற்சி. அடுத்த இரண்டே நாட்களில் நடந்த பாணந்துறை “No limit” (21.06.2013)அழிப்பும் அதன் தொடர்ச்சி தான்.

வட்டரக்க விஜித தேரரை பிக்குகள் சகிதம் சென்ற குழு அவரின் கை கால்களை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி சுன்னத் செய்வதாகக் கூறி அவரது ஆணுறுப்பை சேதப்படுத்தியிருக்கின்றனர். அதன் பின்னர் அவரை நிர்வாணமாக்கி நள்ளிரவில் வீதிக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட புதரில் எறிந்துவிட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை அவரை வைத்தியசாலை கொண்டுசென்று சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். நடந்ததை அவர் கூறியிருக்கிறார். ஆனால் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த அவரை; தானே தனக்கு சேதம் விளைவித்துக்கொண்டதாக வாக்குமூலம் பதிவாக்கிக்கொண்டனர் போலீசார். பொலிஸ் தரப்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் விஜித தேரர் அப்படி ஒன்றுக்குப்பின் முரணாக பேசிய குற்றச்சாட்டுக்காக 25 அன்று வைத்தியசாலையில் கைது செய்து கொண்டு சென்றனர்.

வட்டரக்க விஜித தேரர் இன்று அநாதரவான நிலையில் எந்த சக்தியினதும் ஆதரவுமின்றி தனிமைப்பட்டுப் போயுள்ளார் என்பது மிக மிக கவலைக்கிடமான விடயம்.

அன்று அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறிய நாட்டின் ஜனாதிபதி வெறும் ஜனாதிபதி மட்டுமல்ல அவரே பாதுகாப்பு அமைச்சர். அவரே முப்படைகளின் தளபதி என்பதும் குறிப்படத்தக்கது. 

இனி இவர் போன்ற எவருக்கும் இது தான் கதி என்று பேரினவாதமும் அதைக் காக்கும் அரச இயந்திரமும் இதன் மூலம் அனைவரையும் எச்சரித்துள்ளது.
பேரினவாதத்தின் தொடர்ச்சியான வெற்றியின் ஒரு படி இது.

தற்போது கண் துடைப்புக்காக மதவெறியூட்டும் கூட்டங்களுக்கு தடை விதித்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்காக பொது பல சேனா பதுங்கவில்லை. இருக்கவே இருக்கிறது இன்னொரு வடிவத்தில் “Plan-B”. ஞானசார தேரோ இதற்கெல்லாம் அஞ்சவுமில்லை, பதுங்கவுமில்லை. அரசியலமைப்பின்படி பௌத்த மதம் அரச மதம். பௌத்தத்தை கட்டிக்காப்பது அரசின் கடமை.பொது பல சேனாவின் பகிரங்க மேடைக்கூட்டங்கள் இப்போது பௌத்த விகாரைகளை அண்டிய பகுதிகளில் மத உபதேச கூட்டங்களாகவும், கருத்தரங்குகளாகவும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கண்டி தலதா மாளிகைக்கு வெளியில் 24 ஜூன் அன்று நடத்தப்பட்ட கூட்டம் ஒரு உதாரணம். இந்த கூட்டத்தில் ஒரு முக்கிய செய்தி உண்டு. அது மேலும் கிலியூட்டும் செய்தி. அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

சில தகவல் ஆதாரங்களுக்காக அவரது சிங்கள பேட்டியொன்று

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் - சாரல் நாடன்


மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் இரண்டு ஆண்டறிக்கைகளை வெளியிட்டி-ருந்தது. முதலாவது ஆண்டறிக்கை 1960க்குப் பின் என்ற தலைப்பில் பொது செயலாளராகவிருந்த எஸ்.எம். கார்மேகத்தினால் 30.-12.-1966இல் எழுதப்பட்டது.

இரண்டாவது அறிக்கை மன்றச் செயலாளர் தெளிவத்தை எஸ்.ஜோசப்பினால் 20.05.1973 இல் எழுதப்பட்டதாகும்.

முதலாம் அறிக்கை 4.2.1967 இல் அட்டன் கலை விழாவில் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் குறிஞ்சி மலர் வெளியிடப்பட்டது. 1971இல் 'கதைக்கனிகள்' தொகுப்பு வெளியிடப்பட்டது. 1973இல் கோகிலம். சுப்பையாவின் நாவலுக்கு வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதன்போது இரண்டாவது அறிக்கை வெளியானது.

உண்மையில் அதன் பிறகு பல முயற்சி கள் எடுக்கப்பட்ட போதும் ஏனோ எழுத்தா ளர் அங்கத்தினர்களிடையே தேவையான ஒத்துழைப்பு இல்லாதிருக்கிறது.

15-.12.-1980 தோற்றம் பெற்ற மலையக கலை இலக்கியப் பேரவை 1981இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் க.கைலாசபதியைக் கொண்டு சி.வி. வேலுப்பிள்ளைக்கு ''மக்கள் கவிமணி பட்டம்'' சூட்டியது. அதே ஆண்டு இலங்கையில் வெளியான தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைத் தொகுதி, என்.எம்.எஸ். இராமையாவின் சிறுகதைத் தொகுதி, மாத்தளை வாழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி ஆகியவற்றுக்கு கலாநிதி சபா. ஜெயராஜா, நாவலாசிரியர் செ. கணேசலிங்கம், தமிழகத்து கொ.மா. கோதண்டம் ஆகியோரைக் கொண்டு விமர்சனம் செய்-யப்பட்டது. அக்கரப்பத்தனை நகரில் அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் 4.12.1987 இல் பாரதி விழாவைக் கொண்டாடிய அவ்விழாவில் கவிஞர் தமிழோவி யனை கௌரவித்து நினைவுப் பரிசளித்தது. கவிஞர் தேவதாசன் ஜெயசிங் எழுதிய 'யெளவனம்' நூலை லிண்டுலை நகரில் விழா நடத்தி அமைச்சர் தொண்டமான் தலைமையில் வெளியிட்டு வைத்தது.

21.12.1986 இல் கண்டியில் எழுத்தாளர் ஒன்று கூடலை நடாத்த எஸ்.முரளிதரனின் கவிதை நூலையும், சாரல்நாடனின் சி.வி. சில சிந்தனைகளையும் வெளியிட்டு வைத்தது. 22.02.1987 இல் பூண்டுலோயா நகரில் கூடி கவிஞர் தென்னவனின் கவிதை நூலை விமர்சனம் செய்தனர். அதே ஆண்டு 10.10.1987 இல் ஹப்புத்த-ளையில் கூடி இல க்கிய விழா ஒன்றை பிரமாண்டமாக நடத்தினர்.

7.8.1988 இல் கொழும்பு நகரில் ஹோட் டல் தப்ரபேனில் கூடி அமைச்சர்கள் சௌமியமூர்த்தி தொண்டமானையும் செல்லையா இராசதுரையையும் அழைத்து ஒரே மேடையில் பேச வைத்து தேசபக்தன் கோ. நடசய்யர் நூலை வெளியிட்டு வைத்தார்.

காலப்போக்கில் இம்முயற்சிகள் எல்லாம் தடைபட்டுப்போயின. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தையும் மலையக கலை இலக்கிய பேரவையையும் ஒன்றி-ணைக்கும் முய ற்சிகள் நடைபெற்றன. அவற்றின் செயற்பாடுகள் வெவ்வேறு திசையை நோக்கியனவாக இருந்தமையால் எண்ணிய நோக்கம் நிறைவேறவில்லை.

இன்றுள்ள நிலையில் தனியொருவர் தமது படைப்புகளை புத்தகமாக வெளி-யிடுவது என்பது சிரம சாத்தியமானது என்று 1973இல் தெளிவத்தை ஜோசப் கூறியிருந்தாலும் மலையக இலக்கிய பேரவை பல புத்தகங்களை வெளியிட வைத்தி-ருக்கிறது.

அவற்றை அச்சில் வெளியிடும் முயற்சி யில் மன்றம் அக்கறை செலுத்து-மானால் அது பெரும் பணியாக அமையும் என்ற அவரின் கருத்து சீர் தூக்கிப் பார்க்கத்தக்கவையாகும்.

மன்றம் வெளியிட்ட குறிஞ்சிமலரில் மலையகத்தின் முன்னணி எழுத்தா-ளர்கள் மூவரின் குறுநாவல் வெளிவந்திருந்தன. அது பிறகு 'கொழுந்து' இதழில் வெளிவந்திருந்தது. அதுவே பின்னர் 'பிணம் தின்னும் சாத்திரங்கள்' நூலில் கடைசி குறுநாவலாக சேர்க்கப்பட்டிருந்தது.

மு.கு.ஈழக்குமார், சி.பொன்னுத்தம்பி, தமிழோவியன் வழுத்தூர் ஒளியேந்தி, வி.கந்தவனம் முதலானோர் சேர்ந்து எழுதிய காப்பியம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

தலைவர் தொண்டமான் எம்மவரின் வரலாற்று நூலை எழுத வேண்டும் என்று தன் ஆசையை தனது வாழ்த்துரையில் கூறி இருந்தார்.

தமிழ் மணங்கமழும் பிரதேசங்களில் ஒரு சிறந்த பகுதியாக விளங்கும் மலையகம் அம் மொழி வளர்ச்சிக்கு மேலும் மேலும் ஆக்கமும் ஊக்கமும் தகும் வாலிப எழுத்தாளர்களை ஊக்குவிப்பது எமது கடமை என்று தலைவர் ஜனாப் ஏ.அஸீஸ் கூறி இருந்தார்.

எஸ்.எம். கார்மேகம் தனதுரையில் தம்முடைய மனக்குறையையும் குறிப்-பிட்டிருந் தார்.

குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் தங்களுடன் ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டதுபோல இலக்கியத் துறையில் நம்மவர்கள் ஈடுபட்டு வருகின்-றார்கள். அதன் பலனாக மலையகத்தைப்பற்றி பிறர் அக்கறையுடன் எழுதும் அள-வுக்கு நாம் ஒரு சில துறைகளை விட்டு வைத்து விட்டோம். இக்குறைபாடுகளை நமது எழுத்தாளர்கள் களைந்து எறியப் போகிறார்கள் என்பதற்கு அவர்களது வேகம் நம்பிக்கையூட்டுகிறது.

இன்று நமது நினைவில் சி.வி. வேலுப்பிள்ளை, டீ.எம்.பீர் முஹம்மது ஆகி-யோர்களின் படைப்புகள் தாம் பதிந்து கிடக்கின்றன என்று கூறும் தற்கால இலக்கிய முயற்சிகள் பற்றி கருத்துக்கூறும் எம்.வாமதேவன் மலை நாட்டைப் பற்றி எழுதப்படும் நாவல் கள், மலைநாட்டவரின் போராட்டக் குரலை உயர்த்தாது, மலைநாட்டவர்களின் வாழ் க்கைப் போராட்டங்களை இரத்த உணர்வு உணர்ந்தவர்களின் அனுபவங்கள் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றுடன் நாவலாக பரி ணமித்தால் மலையகத்தின் பெருமைக்கு அதைவிட வேறொரு கருதுகோள் அவசிய மில்லை என்று எழுதி உள்ளார்.

மலையக எழுத்தாளர்கள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இது.

நன்றி - வீரகேசரி 01.06.2014

சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் (நினைவுரை) - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கை ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியம் குறிப்பாக மலையக இலக்கியம் பற்றி உரையாட முற்படும்போது யாருமே தவிர்த்துவிட்டுப் போக முடியாத ஆளுமையாக திகழ்பவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். இந்த வருடம் அவரது நூற்றாண்டு ஜனன நினைவு. இருக்கின்ற போது சிலர் நூறு வயதை கடந்துவிடுகிறார்கள். இறந்த பிறகு எல்லோருமே 100 வயதை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் மறைந்து ஒரு சில வருடங்களிலேயே பலரையும் மறந்து விடுகிறோம். நமது குடும்ப உறவுகளைக் கூட. அதே நேரம் சிலரை ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மறக்க முடிவதில்லை. அவர்களை ஏதாவது ஒரு வகையில் நினைவு கூருகிறோம்.

அந்த வரிசையிலேயே இன்று தகவம் அமைப்பினரால் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் நினைவு கூரப்படுகிறார். அவரது நினைவாக ஒரு உரையை ஆற்றுமாறு வேண்டப்பட்டுள்ளேன். எனவே சி.வி அவர்கள் பற்றிய நினைவுகளை இந்த நாளில் மீண்டும் கொண்டு வரும் முயற்சியாக எனது உரையை அமைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சி.வி.அவர்கள் இலக்கிய உலகில் ஒரு படைப்பாளியாக பெரிதும் அறியப்பட்டாலும் படைப்பு இலக்கியம் தவிர்ந்த இன்னும் பல துறைகளில் ஆளுமையாக விளங்கியவர். அதனால் எனதுரைக்கு ‘சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும்;’ என தலைப்பிட்டுக் கொண்டேன்.

சி.வி. வேலுப்பிள்ளை பற்றிய நினைவுரையை ஆற்றுவதற்கு எனக்கு வாயப்பளித்த தகவம் அமைப்பினருக்கும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும் ஆரம்பத்திலேயே நன்றி சொல்லிவிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.

 ஏனெனில் நான் வாழ்நாளில் சந்தித்திராத ஒரு ஆளுமையை அவரை சந்தித்து உறவாடிய பெருந்தகைகளின் முன்னே நினைவுப் பகிர்வது என்பது ஒரு சவாலான பணிதான். ஆனாலும் சி.வி. அவர்கள் பிறந்த அதே மடகொம்பரை மண்ணில் பிறக்கக்கிடைத்த பாக்கியமும் என் அம்மா பாக்கியம் பெயரில் பதிப்பகம் ஒன்றை நிறுவி அதன் முதல் வெளியீடாக சி.வியின் ‘இலங்கை தேயிலைத் தோட்டத்திலே’ எனும் நெடுங்கவிதைத் தொகுப்பின் ஆங்கில மூலத்தினையும் அதன் தமிழாக்கத்தினையும் ஒரேடியாக தொகுத்து பதிப்பாக்கி மறுமதிப்பாக வெளியிட்டமைக்கான வெகுமதியாகவே எனது பெயர் இந்த உரைக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
என்னைப் பொருத்தவரை சி.வி. அவர்கள் பிறந்த மடகொம்பரை மண்ணில் பிறந்திருக்காவிட்டால் இந்த இலக்கிய மேடையில் உரையாற்றும் ஒருவனாக இருந்திருக்க மாட்டேன் என திடமாக நம்புகிறேன். ஏனெனில் எனக்குள் ஒரு இலக்கிய தாகத்தை ஏற்படுத்தியது ‘ஒரு நூலகம்’ என்பதை விட ‘ஒரு கல்லறை’ என்பதே மிகப்பொருத்தமானது. 

கொழும்பில் இருந்து சுமார் 200கி.மீ தொலைவில் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை நகரில் இருந்து தவலந்தன்னை நகரை இணைக்கும் பூண்டுலோயா வழியில் பயணிக்கும் எவரும் வட்டகொடை எனும் ரயில் நிலையம் அமையும் நகருக்கு அண்மித்த ‘மடகொம்பரை’ எனும் பெருந்தோட்டத்தை கடக்காமல் பயணிக்க முடியாது. 

அவ்வாறு கடக்கும் போது வட்டகொடை நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் கடக்கும்போது ஒரு வளைவில் இடது பக்கமாக தேயிலை மலைகளுக்கு இடையே அமைந்த சிறு புல்வெளிப்பகுதியில் ஒரு கல்லறை இருக்கும். இப்போது அது பெயரிடப்பட்டு இருந்தாலும் முன்பு தனியே ஒரு கல்லறை. வட்டகொடை சிங்களப்பள்ளிக்கும் தமிழ்ப் பாடசாலைக்கும் செல்லும் போதெல்லாம் என்னை உறுத்துவது இந்த கல்லறை. சிறுவர்களாக இருந்த காலத்தில் பாதையில் அந்த வளைவு வந்ததும் பயததில் ஓடி மறைவோம். பின்னாளில் விசாரித்த போது அது ‘கங்காணி புதைகுழி’ என்றார்கள். எங்களுரில் ஏகப்பட்ட கங்காணிகள். அது என்ன ? ஒரு கங்காணிக்கு மட்டும் ‘ஸ்பெஷல்’ புதைகுழி என தேடியபோது அதில் புதைக்கப்பட்டிருப்பது ஒரு பெரியாங்கங்காணி எனத் தெரியவந்தது. பெரியாங்கங்காணி என்றாலே தோட்டத் தொழிலாளிகளுக்கு வில்லன். பின்னர் அவர்கள் பெயரில் ஏன் கல்லறை? 

இந்த பெரிய கங்காணிகள் பற்றி சி.வி.வேலுப்பிள்ளை அவர்களே ‘நாடற்றவர் கதை’ எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘தோட்டத்துரைக்கும் தோட்டத் தொழிலாளிக்கும் எவ்வித தொடர்புமில்லை. தொழிலாளி பெரிய கங்காணியின் சொத்து’. தோட்டங்களில் ஜமீன்போல் அல்ல ‘ரட்ட மாத்தியா’ போல் சுகபோக வாழ்க்கை நடாத்தினார்கள். பட்டிணங்களில் வட்டிக்கடை தாய்நாட்டில் (இந்தியாவில்) நிலம் வீடு சிறு தோட்டங்களை வாங்கினார்கள்.

 2000 பெரிய கங்காணிகள் இருந்தார்கள். இவர்கள் ஜமீன்தார்கள் போல தோட்டப்பெயர்களோடு சேர்த்து அழைக்கப்பட்டார்கள். அதாவது தெமோதர ராமநாதன், மஸ்கெலியாசெட்டியப்பன், பூச்சிக்கடை கருப்பையா, பாமஸ்டன் சண்முகம், திஸ்பனை சுப்பையா பிள்ளை, தலவாக்கலை பாண்டியன், ஊவாக்கலை தைலாம் பிள்ளை, டன்பார் ரெங்கசாமி, மடகொம்பரை குமரன், தெல்தொட்டை சங்கரன், மெய்காகொலை முனியாண்டி, நாப்பனை பொக்கு செல்லன், ஆகியோர் முக்கியஸ்தர்கள். இவர்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் சேர்த்து ஆங்கிலம் படித்தார்கள். படிப்பை முடித்துக்கொண்ட பின் தங்கள் தகப்பன்களுக்கு உதவியாய் தோட்டத்தில் கணக்கப்பிள்ளை, கண்டக்டர், டீமேக்கர், கிளார்க் வேலை செய்தனர். (நாடற்றவர் கதை பக் 43)

சி.வி. குறிப்பிடும் இந்தப்பட்டியலில் வரும் ‘மடகொம்பரை குமரன்’ எனும் பெரியாங்கங்காணியின் புதைகுழிதான் எங்கள் ஊரில் உள்ள அந்த புதைகுழி. 
பல பெரிய கங்காணிகள் வட்டிக்கடைக்காரர்களாகவும், சிறுதோட்டங்களை வாங்கி அதன் உரிமையாளராகவும் இருந்துள்ளார்கள். அது பற்றி குறிப்பிடும் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள்,

‘கடைகளை ஸ்தாபித்த கங்கானிகள் பட்டரையில் உட்கார்ந்து வியாபாரம் செய்யமாட்டார்கள். உதாரணமாக பூச்சிக்கொடை கருப்பையா கங்காணி பல வட்டிக்கடைகளை வைத்திருந்தார். அவர் எந்தக் கடையிலாவது உட்கார்ந்து வியாபாரம் செய்ததாக தெரியவில்லை. இவர் தேயிலைத் தோட்டம் வாங்கியவர்’ (பக் 45) என குறிப்பிடுகின்றார்.

இன்றும் கூட கூட பூச்சிக்கொடை கருப்பையா கங்காணியின் பல வட்டிக்கடைகள் வடிவம் மாறி மலையகப்பகுதிகளில் வியாபாரம் நடாத்திக் கொண்டிருப்பதும் இந்தியாவில் சொத்துக்கள் குவித்;திருப்பதும் பலரும் அறிந்த செய்தி.

ஆனால், 1914 ஆம் ஆண்டு செப்தெம்பர் 14ம் திகதி பிறந்த சி.வி.வேலுப்பிள்ளை அவர்களோ ஆங்கில வழிக்கல்வி கற்று ஆசிரியத் தொழிலை தெரிவு செய்கிறார். பல்வேறு உலக இலக்கியங்;களை வாசிக்கிறார். 1934 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற வங்கக் கவி தாகூர் அவர்கள் இலங்;கை வந்தபோது அவரைச் சந்தித்து தான் தாகூரின் தாக்கத்தில் படைத்த ‘விஸ்மாஜினி’ என்ற ஆங்கில கவிதை படைப்பைக் கொடுத்து ஆசிபெறுகிறார். இவர்தான் பின்னாளில் சி.வி.வேலுப்பிள்ளை எனும் மக்கள் கவிஞனாக பரிமாணம் பெறுகிறார்.

இவரது ஆரம்ப கால படைப்புகள் தாகூரின் பாதிப்புக்களில் எழுந்தவையாயினும் பின்னாளில் தன் மக்கள் குறித்த பார்வைக்குள் செல்லும் இவரது தேடல்கள் அவரை ஒரு ‘மக்கள் இலக்கிய’ படைப்பாளியாகவும் செயற்பாட்டாளராகவும் மாற்றிவிடுகிறது. இலங்கை பெரும இன வன்முறைக்கு உட்பட்டிருந்த 1983/1984 காலப்பகுதியில் கொழும்பில் நெருக்கடியான சூழ்நிலையில் காலமான (1984 -11-19) சி.வி. வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இவரின் இறுதிக்கிரியைகள் போது வெறும் ஏழு எட்டு உறுப்பினர்கள் மட்டும் இணைந்து நடாத்திய ‘பாரதி’யின் இறுதிக்கிரியையே நினைவூட்டுகிறது.

பின்னர் அவரது ‘அஸ்தி’ மடகொம்பரை மண்ணில் உள்ள அவரது குடும்ப புதைகுழியான ‘மடகொம்பரை குமரன்’ அவர்களின் ‘கங்காணி’ புதைகுழி யில் சேர்க்கப்படுகிறது. புதைகுழி புதுவடிவம் பெறுகிறது. கங்காணியின் புதைகுழி – கவிஞனின் கல்லறையாக மாற்றம் பெறுகிறது. இந்தக் கல்லறை என் போன்ற இளைய சமூகத்துக்கு ஒரு உந்துததலைத் தருகின்றது. 

அதே சிறுவனான காலத்தில் மடகொம்பரை மேற்பிரிவில் வசித்த, இப்போதும் பத்திரிகையாளராக பணியாற்றும் சி.எஸ் காந்தி அவர்களிடம் ஆங்கிலம் கற்கச் செல்வதுண்டு. அவர் வசித்த வீடு லயங்களுக்கு மத்தியில் அமைந்த தனிவீடு ‘பெரியவீடு’ என்றே அழைக்கப்பட்டது. அதுவே சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்து வாழ்ந்த வீடு.

ஒரு நாள் அரசாங்க தரப்பில் இருந்து ஐந்தாறு பேர் வருகிறார்கள். இந்த வீடு அரசாங்கத்துக்கு சொந்தமானது. நீங்கள் வெளியேற வேண்டும். இது கோர்ட்டு உத்தரவு என தமிழ் சினிமா பாணியில் அந்த வீட்டு உடமைகளை தூக்கி எறிகிறார்கள். நான் புத்தகத்தை வைத்து பாடம் எழுதும் ஒரு மரப்பெட்டியும் தூக்கி எறியப்படுகிறது. உள்ளேயிருந்து பல நூறு காகிதங்கள் காற்றில் பறக்கின்றன. கையெழுத்திலும் தட்டச்சு செய்தும் உலகின் பல பாகங்களில் இருந்தும், நாட்டில் பல பாகங்களில் இருந்தும் எழுதப்பட்டிருந்த பல்வேறு கடிதங்களும் படைப்புகளும் பொறுக்கி சேகரிக்கப்பட்டன. அவைதான் ‘மடகொம்பரை குமரன்’ பெரியாங்கங்காணியின் பரம்பரையில் (தாய்வழி பாட்டனார்) வந்த  சிவி.வேலுப்பிள்ளையின் உடமைகளாக எஞ்சின. அதனையே அவரது உறவான சி.எஸ்.காந்தி அவர்கள் பராமரித்து வந்தார்.

தூக்கியெறியப்பட்ட உடமைகளுக்கு தாங்கள் வாழும் ‘லயத்துச்சிறையில்’ ஒரு அறை ஒதுக்கிறார்கள் அந்த தோட்டத் தொழிலாளர்கள். எனக்கு சிவி பற்றிய அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது அந்த கடிதங்கள்தான். ஏன் இவ்வாறு தூக்கியெறியப்படுகிறார் என்பது அப்போது புரியவில்லை. ஆனால் சற்றே வளர்ந்த பின்னர்தான் அதன் அரசியல் தெரிய வந்தது. 

அரசாங்கத்துக்கு எங்கே தெரிந்தது எங்கோ ஒரு தோட்ட மூலையில் இருந்த தனது உடமை? அரசாங்கத்தில் பங்கு வகித்த பெரியாங்கங்காணி பரம்பரை தன் பெயர் தவிர்ந்த வேறு யார் பெயரும் மலையக வரலாற்றில் வந்துவிடக்கூடாது என்ற குரூரமான எண்ணத்துடன் ஏற்பாடு செய்த நாடகமே அது. 

 ஆனாலும் அதெ மண்ணில் அவரது கல்லறையை பார்த்து வளர்ந்தவர்கள் ஒரு பக்கம் இலக்கியத்திலும் மறுபக்கம் அரசியலிலுமாக திட்டமிட்டு மறைக்க முற்படும் சி.வியின் ஆளுமையை மீள நிறுவும் பணி போராட்டமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிவியின் பன்முக ஆளுமைகளை பின்வருமாறு பட்டியலிடலாம்.
ஆசிரியர்- அரசியல்வாதி- தொழிற்சங்கவாதி- கவிஞர்- நாவலாசிரியர்- நடைச்சித்திர படைப்பாளர்- நாட்டார் பாடல்களின் சேகரிப்பாளர்- கட்டுரையாளர் - பத்திரிகையாசிரியர்- சமூகத் தொடர்பாளர்

மேற்படி துறைகளில் ஆளுமையாளராக திகழ்ந்த சி.வி. அவர்களின் சிறப்பு அவரது கல்விப்புலமை. ஆங்கலத்தில் நேரடியாக படைப்புகளை செய்யும் பணியை 1930 களியே மலையகத்தில் மேற்கொண்டுள்ளார் என்பது பெரும் வியப்புக்குரிய செய்திதான். 

இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தபோது ஆங்கில வழிக்கல்வி சாதாரணமானதுதான் என்ற போதும் மலையகத் தோட்டம் ஒன்றிற்குள் இருந்து ஒரு இளைஞன் அந்த நாளிலேயே கொழும்பு நாலந்தா கல்லூரிக்கு கல்வி கற்க வந்துள்ளார் என்பதும் வங்கக்கவி ‘தாகூரை வாசித்து’ இலங்கையின் தாகூர் என இந்திய ஏடுகள் புகழும் இலக்கை அடைந்துள்ளார் என்பதும் அவரது கல்விப்புலமையின் ஆழத்தையே காட்டுகிறது.
சி.வி இவர்களும் தலாத்து ஓயா கே.கணேஸ் அவர்களும் சம காலத்தவர்களாக மலையக இலக்கிய பரப்பில் அடையாளம் காணப்பட்டவர்கள். இவர்கள் இருவரினதும் முக்கியத்துவம் என்னவெனில் இருவரும் ஆங்கிலப்புலமையுடன் இலக்கியப்பரப்பில் செய்றபட்டமை. கே.கணேஷ் அவர்கள் ஆங்கில புலமையூடாக தமிழுக்கு பல்வேறு உலக இலக்கியங்களை மொழிபெயர்த்துத்தர சி.வி அவர்களோ ஆங்கிலத்திலேயே தனது படைப்பகளை உலகிற்கு தந்துள்ளார். குறிப்பாக 1952ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘In Ceylon’s Tea Garden’ என்கிற நெடுங்கவிதைத் தொகுப்பு மலையக மக்கள் பற்றிய ஒரு காவியமாகவே அமைந்துவிட்டது எனலாம்.

பெரியாங்கங்காணி வழிவந்த இவர் தோட்ட உத்தியோகத்தராகவோ அல்லது வட்டிக்கடை உரிமையாளராகவோ ஆசைபடாது ஆசிரியராகவே தனது தொழிலை தொடங்குகிறார். அப்போது இருந்த போக்கிற்கு அமைவாக இந்திய தேச பக்த சிந்தனைகளுடன் ஒரு தேசியவாதியாக காந்திய சிந்தனைகள் கொண்ட அகிம்சாவாதியாகவே தனது பொதுவாழ்வை ஆரம்பிக்கிறார். அவரது அந்த நாளைய அவரது உடைகளும் தலையிலிட்ட குல்லாவும் அதனை உறுதி செய்கின்றன.

இப்படி ஆரம்பிக்கப்பட்ட பொதுவாழ்வு அவரது நண்பர் கே.இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டலுடன் அரசியல் வாழ்வுக்கு இட்டுச் செல்கின்றது. 1948 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அமர்ந்த ஏழு மலையகப்பிரதிநிதிகளில் ஒருவராக தலவாக்கலை தொகுதி உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றார். அதே காலப்பகுதியில் மலையக மக்களின் குடியுரிமையும் பறிக்கப்படுகின்றது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயமாகிறது. 

இந்நாளில் அமைக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸில் உள்வாங்கப்பட்ட சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றபோது அதன் உறுப்பினராகவும் முக்கியஸ்தராகவும் செயற்பட்டுள்ளார். தொழிலாளர்களுக்காக எனச் சொல்லப்பட்ட காங்கிரஸ் அவ்வாறு செயற்படாதபோது அதிலிருந்து காலத்திற்கு காலம் அதன் முக்கிய உறுப்பினர்கள் வெளியேறத்தொடங்கினர். அப்துல் அஸீஸ், வி.கே.வெள்ளையன், சோமசுந்தரம், கே.ராஜலிங்கம் போன்ற ஆளுமைகளின் வெளியேற்றத்தோடு தானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேற நேர்கிறது. 

1965 ஆம் ஆண்டு வி.கே. வெள்ளையன் அவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆரம்பித்த பின்னர் அதில் இணைந்துகொள்கின்ற சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் வெள்ளையன் அவர்களுக்குப் பிறகும் தலைமைப் பொறுப்பை ஒரு தொழிலாளி கையிலேயே கொடுத்து ஆலோசகராக இருந்து அதனை வழிநடாத்தியுள்ளார். இறுதிவரை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆலோசகராகவே செயற்பட்டார். அவரது கல்லறையை இன்றும் அந்த சங்கத்தினரே புனர்நிர்மாணம் செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்த ஆசிரிய, அரசியல், தொழிற்சங்க ஆளுமைக்கு அப்பால் ஒரு பத்திரிகை ஆசிரியராகவும் சி.வி. அவர்களை நோக்க முடியும். ‘கதை’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராகவும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாதாந்த இதழான ‘மாவலி’ பததிரிகையையும் ஆசிரியராக இருந்து வழிநடாத்தியுள்ளார். தவிரவும் பல்வேறு பத்திரிகைகளிலும் அவரது படைப்புகளும் எழுத்துக்களும் வெளிவந்துள்ளன.

கவிஞர் எனும் ஆளுமை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவருக்கு பெரும் புகழை ஏற்படுததியது அவரது கவிதைகள்தாம். அவரது Wishmajini, Wayferer, Tagore at A Glance, Ananda’s Dream, In Ceylon’s Tea Garden போன்ற நெடுங்கவிதைகளும் கவிதை நாடகங்களும் ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதப்பட்டவை. அவர் தமிழில் கவிதைகள் எழுதவில்லை. ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே’ எனும் கவிதைத் தொகுப்பு கவிஞர் சக்தீ பாலையா அவர்களினால் தமிழாக்கம் செய்யப்பட்டது. 

நாவல் என்று வரும்போது எல்லைப்புறம் (Borderland), வாழ்வற்ற வாழ்வு, காதல் சித்திரம், வீடற்றவன், பார்வதி, இனிப்படமாட்டேன்.. போனறன. இதில் வீடற்றவன், பார்வதி, இனிப்படமாட்டேன் போன்றன நேரடியாகவே சி.வி அவர்கள் தமிழில் எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையவை ஆங்கில மூல நாவல்கள். பொன்.கிருஸண்சாமி அவர்களினால் மொழிபெயர்க்கப்பட்டவை. 

சிறுகதை பாணியில் அமைந்த நடைச்சித்திரம் எனும் இலக்கிய வடிவத்தின் ஊடாக மலையக மாந்தர்களை ஆங்கிலத்தில் Born To Labour எனும் தலைப்பில் எழுதியவர் சி.வி.வேலுப்பி;ள்ளை அவர்கள். மலையகத் தொழிலாளர்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதில் இந்த நடைச்சித்திரம் முக்கிய பங்கு வகிப்பதாக பிரபல சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்க விதந்துரைத்துள்ளார். எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்கள் ‘தேயிலைத் தேசம்’ எனும் பெயரில் இந்த நடைச்சித்திரத்தை தமிழாக்கம் செய்துள்ளார்.

மலையக மக்களின் வரலாற்று விபரங்களையும் அரசியல் சமூக நிலைப்பாடுகளையும் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தியவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். ‘நமது கதை’ எனும் பெயரில் அவரால் எழுதப்பட்டு பின்னர் ‘நாடற்றவர் கதை’ என நூலுரு பெற்றுள்ள அவரது கட்டுரைகள் மலையக மக்களின் வரலாற்றை பேசுகின்றன. 

அந்த நூலை வெளியிட்ட மு.நித்தியானந்தன் அவர்களும் அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய இர.சிவலிங்கம் அவர்களும் ‘மலையகத்தமிழரின் இன்றைய பிரச்சினைகள்’ எனும் தலைப்பில் ஈழநாடு பத்திரிகையின் 25வது ஆண்டு மலரில் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும் சேர்த்துள்ளனர். சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் எந்தளவுக்கு மலையக மக்கள் குறித்தும் அவர்களது பிரச்சினைகள் குறித்தும் தெளிவான சிந்தனைiயைக் கொண்டிருந்தார் என்பதற்கு அந்தக் கட்டுரை ஒன்றே சான்று பகரும்.

நாட்டார் பாடல்களின் சேகரிப்பாளர் என்று வருகின்றபோது அதனைச் செய்த முதல் தனிமனிதர் என்ற வகையில் சி.வி.அவர்களின் முக்கியத்துவம் மகத்துவம் பெறுகிறது. சி.வி யின் மனித நேயத்திற்கும் தொழிலாளர் பாற்பட்ட சிந்தனைக்கும் எடுத்துக்காட்டாக அமைவன இந்த ‘நாட்டார் பாடல்களின்’ சேகரிப்பு. ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்; எனும் தொகுப்பாகவும் இது வெளிவந்துள்ளது. தோட்டத்தில் லயத்தில் ‘பெரிய வீட்டில்’ பிறந்த பிள்ளையாக சி.வி.வேலுப்பிள்ளை தமது மூதாதையின் வருகையோடு பிணைந்த வாய்மொழி இலக்கியங்களை தொகுக்கவேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவராகவே வளர்ந்துள்ளார். 

தொழிலாளர்கள் தமது உடல் உழைப்பு மீது மட்டுமே நம்பிக்கை வைத்து கடல்கடந்து பிழைப்பு தேடிவந்தபோது தங்களுடன் கூடவே கொண்டு வந்த நாட்டார் பாடல்களே. இற்றை வரைக்குமான மலையக இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்கின்றது. அந்த நாட்டார் பாடல்களை தொகுக்க வேண்டும் என்கிற சி.வியின் எண்ணம் போற்றுதற்குரியது. அவர் சாதாரணமாக மேடையில் பேசும் பொது இந்த நாட்டார் பாடல்களையும் அதன் அர்த்தங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வாராம். அதேபோல் சந்தோஸமான பொழுதுகளில் இந்த நாட்டார் பாடல்களை பாடச்சொல்லி நடனமாடி மகிழ்வாராம் என அவருடன் கூடவே நாட்களைக் கழித்த மாத்தளை ரோகிணி அய்யாத்துரை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 ‘இனிப்படமாட்டேன்… என்கிற நாவலுக்கு அவர் முன்னுரை எழுத விளைந்த போது குறிப்பிடும் சி.வி. அவர்கள் எழுதியுள்ள வரிகளை இங்கு குறிப்பிடுவது பொருந்தும் என நினைக்கிறேன்.

‘எனது இளம் பராயத்தில் மாலை வேளைகளில் எனது பாட்டியின் அருகில் இருந்தவாறே கதைகளைச் சொல்லுமாறு நச்சரிப்பது எனது வழக்கம். பாட்டியும் எனக்கு எண்ணற்ற கதைகளை மறுக்காமல் சொல்லியிருக்கிறார். இருந்தும் ஒவ்வொரு முறை கதை சொல்லும் முன்பும் அவள் மெல்ல முனகிக் கொள்வது வழக்கம்…

‘…ம்…ம்… நான் பொறந்த கதைய சொல்வேனா… இல்ல நான் பட்ட கதைய சொல்வேனா…’ எனறு.

அன்று அவளின் அந்த புலம்பலுக்கு நான் எந்த அர்த்தததையும் கண்டேனில்லை. ஆனால் இன்றோ அது அவளது குரலாக மாத்திரமின்றி ஒரு சமூகத்தின் குரலாகவும் எனக்குப் படுகின்றது.

இன்று கதை கூற வரும் நானும் பாட்டியில் இருந்து சற்று வேறுபட்டு ..இனிப்படமாட்டேன்… என்று கதை சொல்ல வருகிறேன் போல தோன்றுகிறது.

என எழுதிச் செல்கிறார் சி.வி. தனது மூதாதையர் பட்ட அவலத்தை நான் ‘இனிப்படமாட்டேன்…’ என நெஞ்சுறுதியை உருவாக்குவதாக அமைந்துள்ளது அவரது தலைப்பு.
இத்தகைய இலக்கிய நெஞ்சத்தோடு எழுந்த சி.வியின் எழுத்துக்களும் படைப்புக்களும் வேறு சமூகத்தினருக்கும் சர்வதேசத்தக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் சி.வி அவர்கள் காட்டியிருக்கும் அவரது பண்பட்ட ஆளுமையை அவரை ஒரு ‘சமூகத் தொடர்பாடலாளர்’ எனும் ஆளுமையாளராகவும் பார்க்கத் தூண்டுகிறது.

மேலே காட்டப்பட்ட பல்வேறு ஆளுமையாக தனது செயற்பாடுகளை பிற சமூகத்தக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கக்கூடிய கடிதப்பரிமாற்றங்கள் பெரும் ஆதராங்களாகவுள்ளன. 

குறிப்பாக இந்தியாவில் டெல்லி பம்பாய் கல்கத்தா போன்ற வடமாநிலங்களில் இருந்தும் சென்னையிலிருந்தும் வெளிவரும் பல்வெறு பத்திரிகைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தனது படைப்புக்களையும் அந்த படைப்பின் உள்ளடக்கம் பற்றிய ஒரு விளக்கக் கடிதத்தையும் சி.வி. அவர்கள் அனுப்பியுள்ளார். அவ்வாறு அவர் எழுதுகின்ற கடிதங்களில் தனது படைப்புகள் சுமந்துவரும் மக்கள் கூட்டத்தின் அவல வாழ்வு தொடர்பாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனும் வேண்டுகோளை அவர் முன்வைக்கத் தவறவில்லை. அத்தகைய கடிதங்களுக்கு பதிலாக அவர் பெற்ற கடிதங்களும் சி.வியின் படைப்புகள் அந்த தரப்பினரை எவ்வாறு உணரச்செய்துள்ளது என்பதை எடுத்துச் சொல்வதாக உள்ளது. 

இந்தியாவின் ஜக்மோகன் வாச்சானி பி.லால் போன்ற பத்திரிகை ஆளுமைகளுடனும் பேராசிரியர் வி.சூரிய நாராயணணன், பேராசிரியர் எஸ்.ராமகிருஸ்ணன், திருமதி.லக்ஸ்மி கிருஸ்ணமூர்த்தி போன்றோருடன் அதிகளவான கடிதப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்;.

புகழ்பெற்ற ஓவியரும் கவிஞருமான ‘ஜோர்ஜ் கீற்’ அவர்கள் நெருங்கிய நட்புடன் சி.வியுடன் கடிதப்பரிமாற்றங்களைச் செய்துள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் மார்ட்டின் விக்கரமசிங்க அவர்களுடன் தமது படைப்புகள் குறித்த அதிகம் கருத்து பரிமாறியுள்ளார். சி.வி. யின் Born To Labour தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் ‘தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்த முக்கியமான பதிவு’ என பாராட்டியுள்ளார்.

அதேபோல கலாநிதி குமாரி ஜயவர்தன, ஆன் ரணசிங்க, யெஸ்மின் குணரட்ன, போன்ற ஆளுமைகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது.

தனது படைப்புக்களை நூலுருவாக்கம் செய்வது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்த திரு. பத்நாப அய்யருடனும், மு.நித்தியானந்தனுடன் அதிகமான தொடர்புகளை மெற்கொண்டுள்ளார். இனிப்படமாட்டேன் நாவலை இந்தியாவில் வெளிக்கொணர சிதமபர ரகுநாதன் அவர்களுடாக் அந்தனி ஜீவா அவர்கள் எடுத்த முயற்சிகள் தொடர்பாக கடிதங்களில் பிரஸ்தாபித்துள்ளார். இந்தக் கடிதப்பரிமாற்றங்களின் போது the Hundredth day’ மற்றும் Human Cargo போன்ற படைப்புகள் பற்றி எழுதியுள்ளார். Human Cargo என்ற படைப்பின் ஒரு பகுதியை பேராசிரியர் கைலாசபதி அவர்களக்கு பிரசுரத்துக்கு முன்னான வாசிப்புக்காக அனுப்பியதாக ஒரு கடிதம் கூறுகிறது. 

இந்த கட்டத்தில் சி.வி. கொண்டிருந்த அரசியல் தொழிற்சங்க தத்துவார்த்தத்துடன் ஒப்பிடும்;போது மார்க்சிய முற்போக்கு சிந்தனைகளில் தீவிரமாக இருந்த பேராசிரியர் கே.கைலாசபதி அவர்களுடனான உறவு முக்கியத்தும் உடையது. அவர்களுக்கு இடையேயான உறவு மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளதை தொடர்பாடலை வைத்து புரிந்து கொள்ள முடிகின்றது. சி.வியின் பல்வேறு படைப்புகள் குறித்தும் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கருத்துக்களை பரிமாறியுள்ளமை மாத்திரமின்றி அவற்றை வெளியீடு செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை தெரியவருகின்றது. 

1981 ஆம் ஆண்டு சி.வி. அவர்களுக்கு பேராசிரியர் கைலாசபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தானும் நண்பர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்திருக்கும் சீன எழுத்தாளர் லூசுன் அவர்களின் நூற்றாண்டு நிகழ்வில் (26.09.1981) ‘நினைவுப் பேருரையாற்ற’ அழைப்பு விடுத்துள்ளார். இன்னுமொரு கடிதத்தில் சி.வி அவர்கள் விழாவுக்கு வந்து உரையாற்றியதையம் அதில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டதாகவும் சி.வியின் பதில் பதிவு செய்கின்றது. மலையகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அந்த நாளில் ‘நினைவுப் பேருரைக்காக’ சி.வி அழைக்கப்பட்டுள்ளார் என்பது சிவியின் ஆளுமையை காட்டி நிற்பதாகவுள்ளது.

அதேபோல 1982 ஜுலை 7ம் திகதி சி.வி அவர்கள் மு.நித்தியானந்தன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விழா எடுக்க சீன கொமியுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியம் என்னிடம் கூறினார். அதோடு திரு. நடன சபாபதியும் அதுபற்றி என்னிடம் கூறினார்’ என எழுதியுள்ளார். 

இந்த தொடர்பாடல்கள் மூலம்; சி.வி அவர்கள் இடதுசாரியாக இல்லாதபோதும் இடதுசாரி மாக்சிய கம்யுனிச செயற்பாட்டாளர்கள் இடையே நெருக்கமான உறவு கொண்டிருந்ததை அறிய முடிகின்றது. அவரது இலக்கிய படைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இடது சாரி தோழர்களும் உறவுகளைப் பேணியுள்ளமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மலையக மக்களின் வருகையையும் வரலாற்றையும் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ள Donovan Mouldrich அவர்கள் சி.வியின் Born to Labour தன்னை கண்ணீரில் ஆழ்த்தியாதாக குறிப்பிட்டுள்ளார். 

1988 ஆம் ஆண்டு Donovan Mouldrich அவர்கள் திருமதி வேலுப்பி;ள்ளைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
I had the privilege of knowing your husband for many years. He encouraged me in the writing of Two books about the plantation workers .

அதேநேரம் தனது நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில்
‘Mr.Vellayan who killed himself through overwork died on 2nd November 1971 at the age of 52. Mr.Velupillai died on 19 November 1984 at the age of 71. I hope this Book and its sequel on the tea workers will help to perpetuate their lifelong dedicated service to the working class movement.’ 

என கூறி தனது நூலை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். பறங்கிய இனத்தவரான டொனவன் மோல்ரிச் அவர்களை மலையக மக்கள் சார்ந்து வரலாற்று பதிவை எழுத வைத்த சக்தி சி.வியின் ஆங்கில எழுத்துக்களுக்கு இருந்துள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது.

எது எவ்வாறு அமைந்த போதும் சி.வி.அவர்களது எழுத்துக்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. ‘நாடற்றவர் கதை’ நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள இர.சிவலிங்கம் அவர்களும், ‘சி.வியின் இலக்கிய நோக்கு - காலமும் கருத்தும்’ எனும் தலைப்பில் ஆய்வாளர் லெனின் மதிவானம் அவர்கள் எழுதியுள்ள விமர்சன குறிப்பிலும் ஏறக்குறைய ஒரே விதமான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதாவது சி.வியின் எழுத்துக்கள் மலையக வாழ்வியலின் துன்பியல் அம்சங்களை முன்னிறுத்திய அளவுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த போராட்டங்களையோ முனைப்புற்ற மக்கள் எழுச்சிகளையோ அவர் பதிவு செய்யவில்லை என்பதுதான் அந்த விமர்சனமாகும்.

 இர.சிவலிங்கம் தனது விமர்சனத்துக்கு தானே சொல்லும் பதிலாக இவ்வாறு எழுதுகிறார். ‘தொழிற்சங்க வாழ்க்கையில் சுரண்டும் சக்திகளை இனம் கண்டும் அவற்றை வெல்ல முடியாமல் தாமாகவே ஒதுங்கிச் செல்லவேண்டிய அனுபவத்தைப் பெற்ற கவிஞனின் கவிதைகளில் வேதனையையும் விம்மலையும்தான் காண முடியுமே தவிர எக்காளத்தையம் அறைகூவலையும் காணமுடியாது போனதில் வியப்பில்லை’ என்கிறார்.

அதேநேரம் 1971 ஆம் ஆண்டளவில் மாத்தளையில் நடைபெற்ற பிராந்திய இலக்கிய மாநாட்டில் மலையக இலக்கியம் குறித்த கட்டுரை ஒன்றை வாசித்த சி.வி.வேலுப்பிள்ளையின் இலக்கிய பணிகள் பற்றி குறிப்பு ஒன்றை எழுதியிருக்கும் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

CV Velupillai writes for the last 35 years and yet he says that he is not a poet nor a writer, 
‘the subject I have chosen made me what I am’
சி.வி அவர்கள் தானே தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் மதிப்பீடு பற்றி எழுதியிருக்கும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதியிருக்கும் இந்தக் குறிப்பு முக்கியமானது. 

அதேநேரம்
1982 ஆண்டு துரநெ 15 ஆம் திகதி பேராசிரியர் கைலாசபதி அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில் சி.வி. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
;…… The wayfarer verses which you have read were written in 1946 when I led the famous Kneversmere Harthal of 75000 workers in Hatton Region’
‘In Ceylon’s Tea Garden was written during and after the 1952 satyagragaha performed before the prime ministers office.

எனவே அவரது நோக்கில் தானே முன்னின்று வழிநடாத்திய தொழிலாளர் ஹர்த்தால் ஒன்றை முன்னிறுத்தி எழுதிய ‘வழிப்போக்கன்’ என்கிற கவிதை நாடகம் மற்றும் குடியுரிமை பறிப்புக்கு எதிராக தான் பங்குகொண்ட பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தினையும் தான் படைப்பாக்கியுள்ளதாகவே கருதுகின்றார். அவரது பார்வையில் அவர் தனது சமூகத்திற்கான பேராட்டத்தை பதிவு செய்துள்ளதாகவே கருதுகின்றார் என்று கொள்ளலாம். 

அவரும் ஒரு தொழிற்சங்க, அரசியலைச்  சார்ந்தவர் என்றவகையில் அவர் சாராத அரசியல், தொழிற்சங்க பண்பாட்டு இயக்கங்களின் செயற்பாடுகளையோ போராட்டங்களையோ குறிப்பிடுவதில் இருந்து தன்னை தவிர்த்துக்கொண்டிருக்கலாம். இதனை ஒரு இலக்கிய நேர்மையாக கொள்வதா? அல்லது இருட்டடிப்பாகக் கொள்வதா என்பது விவாதத்துக்கு உரியது.

எவ்வாறு அமைந்தபோதும் 
சி.வி அவர்களே எழுதி வைத்ததுபோல் 
ஆழப் புதைந்த 
தேயிலைச் செடியின் 
அடியிற் புதைந்த 
அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும் 
ஏறிமிதித்து 
இங்கெவர் வாழவோ 
தன்னுயிர் தருவன்

என மலையக மக்களின் நிலைமையை அந்த அந்த கவிஞனின் கல்லறையை பார்த்து வளர்ந்த பல ஆளுமைகளை மடகொம்பரை மண் கண்டுள்ளமை சி.வியின் இனிப்படமாட்டேன்…. என்ற கனவின் பெறுபேறாகக் கொள்ளலாம்…..

சிவி வேலப்பிள்ளை அவர்களுக்குப்பின்  இ.தொ.கா வில் இருந்து எம்.எஸ். செல்லச்சாமி, ரமேஸ் போன்ற அரசியல் வாதிகளும்  மலையக மக்கள் முன்னணியில் இருந்து வி.டி.தர்மலிங்கம் எனும் கல்வி, கலை, இலக்கிய, அரசியல் ஆளுமையும் தொழிலாளர் தேசிய சங்கத்தை மீளக்கட்டியெழுப்பியதில் பங்கேற்று பாராளுமன்ற உறுப்பினராகவம் திகழும் திகாம்பரம் போன்ற அரசியல்வாதியும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் உபபீடாதிபதியான செல்வராஜா போன்ற கல்வியியல் சமூக கலை இலக்கிய ஆய்வாளர்களையும்  உருவாக்கித் தந்த மண்ணாக மடகொம்பரை மண்ணின் மைந்தர்களான எங்கெளுக்கெல்லாம் ‘ஹீரோவாக’ திகழும் சி.வி.வேலுப்பிள்ளையின் அர்ப்பணிப்பான வாழ்வும் பணியும் இன்று 100 வது ஆண்டில் நினைவு கூரப்படுவதுபோல் இன்னும் பல நூறு ஆண்டுகள் நினைவுகூரப்படுவது திண்ணம்.

(சி.வி.வேலுப்பிள்ளை நூற்றாண்டு நினைவை முன்னிட்டு – தமிழ் கதைஞர் வட்டம் நடாத்திய நிகழ்வில் ஆற்றிய நினைவுரை - 15-06-2014 கொழும்புத் தமிழ்ச் சங்கம்)

தகவத்தின் கதைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்வும் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை நினைவுரையும்


சிறுகதைகளையும் வளர்ந்துவரும் சிறுகதை எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு செயற்படும் ‘தமிழ்க் கதைஞர் வட்டத்தினரின்’ (தகவம்) பரிசளிப்பு விழா 15-06-2013 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. வருடந்தோறும் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள், இலக்கிய சஞ்சிகைகளில் வெளியாகிய சிறுகதைகளுள் சிறந்தவற்றை தெரிவு செய்து அவற்றுக்கு பரிசு வழங்குவது தகவம் அமைப்பினரின் பணி. அந்த வகையில் 2012-2013 ஆம் ஆண்டுகளில் வெளியான சிறுகதைகளை ஒவ்வொரு காலாண்டுக்குமாகத் தெரிவு செய்து கதைஞர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இம்முறையும் இடம்பெற்றது. அத்தோடு இந்த வருடம் தனது நூறாவது ஜனன தினத்தை எய்தும் மக்கள் கவிமணி அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் சிறப்புரையும் இடம்பெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களின் மங்கல விளக்கேற்றல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வுக்கு தகவம் குடும்பத்தைச் சேர்ந்த மு.தயாபரன் தலைமை வகித்தார். அமரர் இராசையா மாஸ்டர் அவர்களின் சிந்தனையில் தோற்றம் பெற்ற தகவம் ஏறக்குறைய நாலு தசாப்தங்களாக தனது பணியினை செய்து வருகிறது. தனிப்பட்டவர்களாக இருந்து செயற்படும் கதைஞர்கள் போட்டிக்காக எழுதுகின்ற போது எழுகின்ற மனநிலையை வேறு. தாமாக இயல்பாக எழுதுகின்ற போது எழுகின்ற மனநிலை வேறு. அவ்வாறு அவர்கள் இயல்பாக எழுதி பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகளை நாம் தெரிவு செய்து ஒவ்வொரு காலாண்டிலும் சிறந்த கதைகள் என கருதம் மூன்று கதைகளுக்கு பரிசு வழங்கி வருகிறோம். இதில் கதைஞரின் எழுத்து பார்க்கப்படுகின்றதே தவிர எழுத்தாளன் யார் என பார்க்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஒரு எழுத்தாளனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பரிசுகள் கிடைத்து விடுகின்றமையானது சர்ச்சைகளையும் உருவாக்கி விடுகிறது. தகவம்  நடுவர் குழு விதிமுறைகளுக்கு அமைவாகவே தங்களது பணியினைச் செய்திருக்கிறது என மு.தயாபரன் அவர்கள் தலைமையுரையில் தெரிவிததார்.
அடுத்ததாக இந்த ஆண்டு நூறாவது ஜனன தினத்தை எய்தும் மறைந்த எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. கவிஞர். சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வியார் திருமதி ஜீன் விமலசூரிய அன்னாரின் நிழற்படத்திற்கு மாலை அணிவிக்க சபையோர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தி அன்னாருக்கு கௌரவமளித்தனர்.

எழுத்தாளரும் உளவளத்துறை ஆலோசகருமான திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களது எழுத்துப்பணிகளுக்காக தகவம் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார். அவருக்கான பாராட்டுரையை வழங்கிய ஊடகவியலாளர் தெ.மதுசூதனன் அவர்கள் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் இலக்கியப்பணி மற்றும் உளவளத்துறை தொடர்பான பணிகளுக்காக அவரை கௌரவம் செய்வதில் தகவம் பெருமைகொள்கிறது என தெரிவித்தார். 

ஏற்புரை வழங்கிய திருமதி கோகிலா மகேந்திரன், பாராட்டுக்களையும் கௌரவங்களையும் தேடிச்செல்லக்கூடாதே தவிர அவை வழங்கப்படும்போது அதனை ஏற்று கௌரவப்படுத்துவது அதனை வழங்குபவர்களுக்கு செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன். குறிப்பாக தகவம் போன்ற சீரிய பணியில் சிறியதாகவேனும் தொடர்ந்து இயங்கும் அமைப்புக்கள் மீது நான் அதிகம் மதிப்பு வைத்திருக்கிறேன். அமரர் ராசையா மாஸ்டர் காலத்தில் சிறுகதைக்காக தகவத்தில் நான் பரிசும் பெற்றிருக்கிறேன். இன்று பரிசு பெறுபவர்கள் பலர் இளம் எழுத்தாளர்களாக அறியப்பட்டாலும் அவர்களின் விசிறிகளாக நாங்கள் இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டும். புதியவர்கள் புது மாதிரியாக கதைச் சொல்லும் விதத்தை நான் என்னுடைய ஆலோசனை வகுப்புகளில் மேற்கோள் காட்டுவதுண்டு. மாணவர்கள் பாடசாலை நாட்களிலேயே வாசிக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அங்கிருந்தே படைப்பாளிகள் உருவாகிறார்கள் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 2012/2013 ஆண்டுகளுக்கான ஒவ்வொரு காலாண்டிலும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகள் தொடர்பான கருத்துரையை எழுத்தாளரும் வைததியருமான எம்.கே.முருகானந்தம் அவர்கள் வழங்கினார். வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் இலங்கை எழுத்தாளர்கள் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் தாங்கள் எழுதிய சிறந்த சிறுகதைகளுக்காக பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர். பேராசிரியர் சபா ஜெயராஜா எழுத்தாளர்கள் திருமதி. கோகிலா மகேந்திரன், திரு. தெளிவத்தை ஜோசப், சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.அன்னலெட்சுமி ராஜதுரை ஆகியோர் பரிசுகளை வழங்கி வைத்தனர்.

நிறைவாக இந்த ஆண்டு நூறாவது ஜனன தினத்தை எய்தும் மறைந்த எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பற்றிய நினைவுரையை எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர் ஆற்றினார். சி.வி.வேலுப்பிள்ளை பிறந்து வளர்ந்த நுவரெலியா மாவட்டத்தின் மடகொம்பரை தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவரான மல்லியப்புசந்தி திலகர் தமது மண் பற்றிய விவரணங்களுடன் சி.வியின் வாழ்க்கை வரலாற்றை ‘சி.வி.வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும்’ எனும் தலைப்பில் சுவைபட வழங்கினார். கால ஒழுங்கிலும் கலைத்துவ வடிவிலும் சுருக்கமாகவும் சுவாரஷ்யமாகவும் சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் ஐம்பதாண்டுகால இலக்கிய மற்றும் பொதுவாழ்வுப் பணிகளையும் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவரது ஆளுமை எவ்வாறு திட்டமிடப்பட்டு மறைக்க எத்தணிக்கப்படுகிறது போன்ற விடயங்களையும் ஆதாரங்களுடன் உரையில் சேர்த்துக்கொண்டமை சபையோரை கவர்வதாக அமைந்திருந்து. சி.வி. வேலுப்பிள்ளை பற்றிய பல்வேறு தகவல்களையும் இந்த நூற்றாண்டு நினைவு நாளில் மீட்டுத்தந்த உரையாக மல்லியப்புசந்தி திலகரின் நினைவுரை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவம் குடும்பத்தைச் சேர்ந்த திரு.விஜயகுமார் முறையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  எழுத்தாளர் திருமதி. வசந்தி தயாபரன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவான நிகழ்வாக விழா நிறைவடைந்தது.                                   – ஜீவா சதாசிவம் 
நன்றி: வீரகேசரி (21/6/2014)








நூற்றாண்டை எட்டும் ஸி.வி. - சாரல் நாடன்


மலையக இலக்கியத்தின் கொடுமுடி என பலராலும் அறியப்பட்ட ஸி.வி. வேலுப்பிள்ளைக்கு இது நூற்றாண்டாகும். செப்டெம்பர் பதினான்கு அவரது பிறந்ததினம்.

ஒரு திறமையான படைப்பாளி தான் பிறந்து நூற்றாண்டு ஆனதன் பின்னாலும் வாசகனோடு பேசிக் கொண்டிருப்பான் என்று கூறப்படுவது எவ்வளவு உண்மையான வாசகம். ஸி.விக்கு இது பொருந்துமா? நிச்சயம் பொருந்தும்.

கவி அரசர் தாகூர் இலங்கை வந்த 1934ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி தன்னுடைய 'விஸ்மாஜினி' இசை நாடக நூலை அவரிடம் கையளித்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்த ஸி.வி. 1984 நவம்பர் 19இல் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் மரணமுறும் வரை ஓயாதுழைத்தார். அவரது கடும் உழைப்பில் நாவல்கள் தோன்றின கட்டுரைகள் உருவாகின. அவரது தேடுதலால் தோட்டங்களில் தொழிலாளர் நாவில் உறங்கிய பாடல்கள் ஆங்கில உருவெடுத்து அகிலத்தின் கண்களுக்கு விருந்தாகின. அவரது எழுத்தில் தெரிந்த உண்மை ஒளி பத்திரிகை வாயிலாக படித்த சிங்களவர்களையும் கற்றறிந்த தமிழர்களையும் ஒருங்கே கவர்ந்திருந்தன. பத்திரிகாசிரியர்கள் அவரின் எழுத்தைச் சிலாகித்தனர். ஆர். ஆர். குரோசட் தம்பையா, தம்பிமுத்து, ஜோர்ஜ்கீட், விக்டர் லூயிஸ், தேவர் சூர்யசேனா, எஸ்.ஏ. விஜயதிலக்க, எஸ். ஜே. கே. கிரவுத்தர் அவர்களில் சிலராவர். சிங்கள இலக்கியத்தில் அதிகம் மதிக்கப்படுகிற மார்டின் விக்கிரமசிங்கா இவரின் நூலுக்கு அணிந்துரை நல்குவதை விரும்பி மேற்கொண்டார்.

இலங்கை தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்ட க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் மலையக இலக்கியத்தின் அதோரிட்டியாக அவரையே அங்கீகாரம் செய்தனர். அவர்களின் காலத்தில் வட இலங் கையிலும் கிழக்கிலங்கையிலும் நடைபெற்ற விழாக்களில் அழைக்கப்பெற்று கெளரவம் தந்தனர்.

அவரைப்பற்றிய புரிதலும் அறி வும் தெளிவும் இன்றைய காலத்து இளம் இலக்கிய கர்த்தாக்களுக்கு இல்லாமலிருப்பதற்கு அவர் படைப்புகள் அதிகம் இல்லாதிருப்பதும் அவரைப்பற்றிய ஆக்கபூர்வமான அறிமுகங்களைத்தரும் நூல்கள் இல்லாதிருப்பதும் பிரதான காரணிகளாகும்.

ஸி.வியின் நாவல்கள் மூன்று அச்சில் வெளியாகியுள்ளன. அவை இப்போது கிடைப்பது அரிதாகி விட்டன. அவை மீள் பிரசுரம் செய்யப்படல் வேண்டும். 'மலையக மக்கள் பாடல்கள்' என்ற அவரின் நாட்டுப் பாடல்கள் தொகுப்பு நூலும் இப்போது பார்வைக்கு கிடைப்பது இல்லை. அவரது பங்களிப்புத் தெரிவதற்கு அதுவும் மீள் பிரசுரம் செய்யப்படல் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரைப் பற்றி அறிவதற்கு நூல்கள் எதுவும் கிடைப்பதில்லை. சென்ற ஆண்டு இறுதியில் இலங்கைத்தமிழர் சுடர்மணிகள் வரிசையில் அவரைப்பற்றிய குமரன் புத்தக இல்லம் வெளியிட்டிருக்கும் நூல் இது சம்பந்தமான ஒரு ஆரோக்கியமான பதிவாகும். அவரைப் பற்றிய தேவையான தகவல்களை இந்த நூலில் கண்டறிய முடியும். இத்தகவல்கள் இல்லாமல் வெறுமனே அவரைப்பற்றி விமர்சன பூர்வமான கருத்துக்களை வார்த்தை ஜாலங்கள் மூலம் பிம்பமாக்கிக் காட்டுவது ஸி.வியை வாசகனிடம் எடுத்துச் செல்ல உதவாது.

ஸி.வி. மடகொம்பறை தோட்டத்தில் பிறந்தார் என்பதற்கு அங்குள்ள நினைவுக் கல்லறை ஒன்றுதான் அத்தாட்சி. அக்கல்லறை தலங்கமையிலிருந்து மடகொம்பறைக்கு வந்தமைக்கான காரணத்தை அறிவதன் மூலம் அவரின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். வீடற்றவன் நாவல் மூலம் ஒரு சமுதாயத்தின் வரலாற்றை எழுத்தில் வடித்த ஒருவரின் வரலாறு சொந்த வீடில்லாத காரணத்தால் இவ்விதம் வீதிக்கு வந்திருப்பதை அறிந்து எவரும் விசனிக்காமல் இருக்க முடியாது.

அவரை இலங்கை 'நவஜீவன்' பத்திரிகையிலும் 'ஈழநாடு' பத்திரிகையிலும் பார்த்து படித்து மகிழ்ந்தவர்கள் இன்று அவரது நினைவுக்கூரலைக் குறித்தெழுதுவதற்கு இல்லாமற் போய்விட்டார்கள். அவரது ஆங்கில எழுத்துக்கள் கூட உரிய அங்கீகாரம் இல்லாதிருப்பதை அவதானிக்க முடிகிறது.

காலனித்துவ காலத்தில் அவர் ஆங்கில இலக்கிய உலகில் பிரகாசித்ததையும் சுதந்திர இலங்கையில் அவர் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்ததையும் குறித்து பெருமைப்படுகிற நாம் அவரின் ஆங்கில படைப்புகள் உரிய கெளரவத்தைப் பெற்று ஆவணப்படுத்தப்படாததை கவனத்தில் எடுத்தல் நலம்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு இருபதாண்டு கால இலக்கிய அனுபவத்துடன் ஒருவர் எழுதிய நூலொன்றை பார்க்க நேர்ந்தது. ஸி.வியைப் பற் றிய தவறான தகவல்கள் தரப்பட்டு பிழையான முடிவுகளை எடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. எதிர்கால இலக்கிய உலகம் இத்தகு தவறான தகவல்களை வைத்துதான் ஸி.வியை எடை போட நேரிடும்.

அவருக்கு மக்கள் கவிமணி பட்டத்தை சூட்டியவர் அமரர் கைலாசபதியாவார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 1983ஆம் ஆண்டு நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் மலையகக்கலை இலக்கிய பேரவையின் முன்னெடுப்பால் நடந்த நிகழ்ச்சியிது. இந்நிகழ்ச்சி கூட சரியாகப் பதிவாகவில்லை.

தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை நான் இப்போது உணர்ந்து வருகிறேன் என்று 1893இல் சிறையிலிருந்த போது எழுதிய மகாத்மா காந்தி தன்னுடைய சத்திய சோதனை நூலில் (பக்கம் 200) தமிழ் படிப்பதற்கு தனக்கு கிடைத்த தமிழ்ச்சுயபோதினி நூல் மிகவும் உதவியாக இருந்தது என்று கூறுகிறார். இந்த சத்யசோதனை நூல் மூலம் தான் தமிழ்ச் சுயபோதினி என்ற ஆங்கில நூலைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்.

ஒரு கட்டுரை நூலில் தரப்படுகிற தகவல்கள் சரியாக இருக்க வேண்டுமென்பதற்கு காந்தியின் சத்திய சோதனை ஓர் உதாரணம் மாத்திரமே. ஸி.வியின் ஆங்கில கவிதை ஒன்றை எடுத்தாளுகின்ற போது ஆங்கிலத்தில் இல்லாத ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் இக்கட்டுரையாசிரியர் பாவித்திருக்கிறார்.

இந்தக்கட்டுரை மூன்று வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இக்கட்டுரைகளை படிக்கும் இன்றைய இலக்கிய கர்த்தாக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? என்பதை ஸி.வியைப்பற்றி எழுதுபவர்கள் கவனித்திட வேண்டும்.

ஓர் ஆக்கபூர்வமான சிந்தனைவாதியாக நடைமுறைக்கு இணங்கிய இலட்சியவாதியாக அல்லும் பகலும் மனித ஜாதியின் மேம்பட்ட வாழ்க்கைக்காக தனது எழுத்தை பாவித்தவர் அவர்.

1947இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆறு இலங்கை இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களின் ஸி.வியின் பேச்சுகள்தான் ஹன்சார்டில் தெளிவாக இருக்கின்றன.

'நாம் அநகாரிக தர்மபாலாவைப் பற்றிய ஒரு புத்தகம் போட வேண்டும். சிங்கள மொழியில் அகராதி இல்லை. அகராதியும் வெளியிட வேண்டும்' என்ற அவரது 9.12.1947இல் பேசிய பேச்சை இப்போது படிக்கும் போது எந்தவித ஐயமுமின்றி இந்த நாட்டுக்காகச் சேவை செய்ய தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உன்னத தேச ஊழியனின் உள்ளத்தை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

ஸி.விக்கு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு அரசாங்கத்தில் விண்ணப்பம் ஒன்றை ஹட்டன் தமிழ்ச்சங்கம் செய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து வலியுறுத்திச் செயற்படுத்துவதற்கு இலங்கை நாடாளு மன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும் என்று ஸி.வியின் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறோம்.

நன்றி - வீரகேசரி 04.05.2014

மலையக சமூகத்தின் அவலத்தை போக்க அனைவரும் சிந்திக்க வேண்டும் - சிலாபம் திண்ணனூரான்


இந்த நாட்டுக்கு சுமார் பதினெட்டு தசாப்தங்களுக்கு மேலாக அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுத்த மலையக பெருந்தோட்ட சமூகம் இன்னும் முழுமையான உரிமைகளை பெறாதுள்ளது. வஞ்சிக்கப்பட்ட இந்த சமூகத்தின் அவலத்தைப் போக்க அனைவரும் சிந்திக்க வேண்டும்.

மலையக மக்கள் 1823ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்நாட்டின் பெருந்தோட்டத் தொழிற்றுறைக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டனர். 1864இல் இந் நாட் டுக்கு தனுஷ்கோடியிலிருந்து தலை மன் னாருக்கு ஆதிலெட்சுமி என்ற கப்பலில் அழைத்து வரப்படுகையில் கப்பல் கடலில் விபத்தில் சிக்கியது. அன்றைய தினம் 120 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஆதிலெட்சுமி கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 7 பயணிகள் மற்றும் 13 மாலுமிகள் மட்டுமே உயிர் தப்பினர். ஏனையோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

1912 இல் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் ஆதிலெட்சுமி கப்பல் தொடர்பிலும் ஆய்வை மேற்கொண்டால் பல இரகசியங்களை வெளிக் கொணரலாம்.

1931 ஆம் ஆண்டு காலகட்டத்தின் சனப்பரம்பல் புள்ளி விபரப்படி இந்த நாட்டில் 8,18,500 இந்தியர்கள் இருந்துள்ளனர். இவ ர்களில் தமிழ் மக்களுடன் இந்திய வியாபாரிகள், மார்வாரிகள், குஜராத் வியாபாரிகள் என பல தரப்பினர் அடங்குவர். இம்மக்களில் தோட்டத் தொழிலாளர்களாக 1931இல் 6,92,540பேர் பதிவாகியுள்ள னர். இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதில் பெருந்தோட்ட பயி ர்ச்செய்கை பெரும் பங்கு வகித்த காலம் அது.

இலங்கையை 1860ஆம் ஆண்டளவில் உலக பொருளாதார சந்தை வரை இழுத்துச் சென்றதின் பெரும் பங்கை மலையகத் தமிழர்களே வகித்திருந்தமை மறுக்க இயலாத உண்மையாகும். அன்று பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட நாட்டின் இதர துறைக ளான துறைமுகம், கட்டட நிர்மாணப் பணி கள், நகர சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மலையகத்தவர்களின் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது. ஆனாலும், மலையக சமூகத்தின் பிரச்சினைகள் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படாத நிலைமையே மேலோங்கி இருந்து வந்துள்ளது.

19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு இந்தியத் தமிழர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதை மலையக அரசியல்வாதி களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண் டும். இந்நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பிய மலையக சமூகம் எவ்வித பலனையும் அடையாத சமூகமாகும். மலையக சமூகத்துக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. காலத்துக்கு காலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஐ.தே.கட்சியின் அரசால் 1948 இல் பிரஜா உரிமை பறிக்கப்பட்டு மலையக சமூகத்தின் அங்கீகாரத்தையும் அரசியல் விடிவையும் இல்லாதொழித்தனர். 1960களுக்குப் பின் னர் பேரினவாத சக்திகளின் தூண்டுதலி னால் இந்திய அரசுடன் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோவின் தலைமையிலான அரசு இந்நாட்டில் இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. அதற்கமைய இரு ஒப்பந்தங்கள் இந்திய அரசுடன் 1964இலும் 1974இலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களும் பெரும் அரசியல் பின்னணிக்கு மத்தியிலேயே நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீ மாவோ –சாஸ்திரி ஒப்பந்தம் 30.10.1964 இல் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஒப்பந்தங்கள் இரண்டுமே மலையக மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்கவில்லை. கையிலிருந்த அற்ப சொற்ப சலுகைகளை யும் இழக்க வேண்டி ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் கீழ் 1968ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டுக்கு திரும்பிய மலையக மக்கள் தமிழகத்தின் நீலகிரியிலும் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மிகவும் துயரத்திற்கு மத்தியிலேயே இன்றும் வாழ்கின்றனர். அம்மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை. சொந்த நாட்டை நம்பிச் சென்றவர்கள் அங்கும் அந்நியர்களாக்கப்பட்டனர். அவர்கள் மீது சிலோன்காரர்கள் என்ற அவல முத்திரையும் குத்தப்பட்டது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள தேசிய இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளை சமமாக அனுபவிக்கும் உரிமையை இழந்து பெருந்தோட்ட மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்கின்றனர். இந்நாட்டின் தேசிய இனங்களின் மலையக மக்களும் ஒரு பிரிவு என்பதை எவரும் மறுக்க இயலாது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவுடன் செய்து கொண்ட இரு ஒப்பந்தங்களினதும் ஷரத்துக்கள் அனைத்தும் சிங்கள இனத்துக்கு சார்பாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மலையகத்தின் அரசியல் கட்சிகள் ஆதிக்கம் மறைய வேண்டும். மலையக கட்சிகள் இணைந்து ஒரு தலைமையின் கீழ் செயற்பட வேண்டும். இக்கூட்டணியானது மக்களை தலைமையாகக் கொண்டு அமை யவேண்டும். முதலாளித்துவம் இல்லாத தலைமையே மலையகத்திற்கு தேவையா கும். இந்திய அரசின் 4000 வீடமைப்புத் திட்டத்தை இன்று அரசியல் மயமாக்க மலையக கட்சிகள் முனைப்போடு செயல்படுகின்றன. இவ்வீடமைப்புத் திட்டம் முறையாக செயற்படுமா என்பதை காலமே சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இந்திய அரசின் நேசக்கரம் எமக்குத் தேவை. உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவின் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளி தமிழ் மக்களான மலையக மக்களின் வாழ்வில் புதியதோர் அத்தியாயத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மலையக மக்கள் தொடர்ந்து இந்நாட்டை ஆட்சி செய்தோரால் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகளும் சிதறிப் போகாது பேசப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதிகாரப்பகிர்வு பற்றி இந்தியாவின் கடந்த காலத்து அரசுகளுடன் பேசுகையில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றியே பேசப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தைகளின் போது மலையக மக்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மலையக அரசியல்வாதிகளும் ஆர்வம் செலுத்தவில்லை. தென்னிந்திய தமிழர்களை இந்நாட்டின் பெருந்தோட்டங்களுக்கு அழைத்து வந்தமைக்கு அன்றைய இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரே காரணமாகும். அவர்களும் எமது மூதாதையர்களின் உழைப்பை மட்டுமின்றி, எமது சமூகத்தின் நலனில் கருணை காட்டாது புறம் போக்கு காணியைப் போன்று தனிமைப்படுத்தி இந்நாட்டை விட்டு ஓடிவிட்டனர். இன்று எமது சமூகத்துக்கு இந்திய அரசின் தேவை அவசியமாக உள்ளது.

மலையகத் தமிழர்கள் இலங்கை – இந்தியாவுக்கிடையில் பயணம் செய்த இராமனுஜன் கப்பலின் சேவையும் 1984 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது. தூத்துக்குடி செட்டியார் ஒருவருக்கு சொந்தமான இக்கப்பல் இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தில் பதிவாகி இருந்தது. பல வரு டங்களாக பல இலட்சம் மக்களை இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு அழைத்து வந்த கப்பல் இது. 1984க்குப் பின்னர் இக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மும்பாய் வர்த்தகருக்கு விற்கப்பட்டது. இக் கப்பல் மூலமாகவே ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு மலையக சமூகத்தினர் திரும்பிச் சென்றனர்.

1984இல் நிறுத்தப்பட்ட தனுஷ்கோடி – தலைமன்னார் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இன்று இந்திய அரசின் உதவியோடு மதவாச்சியிலிருந்து மன்னார் வரையிலான ரயில்பாதை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ் வேளையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பது இலகுவானதாகும்.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்தி வம்சாவளி தமிழர்க ளான மலையக மக்களை கைவிடாது என் பது தீர்க்கமான செய்தியாகும். மலைய கத்தின் வீடமைப்புத் திட்டம், பல்கலைக் கழகம், கப்பல் சேவை, நலன்புரி விடயங் கள், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி நிலையங்கள், கணனி கூடங்கள் என்று எமது சமூகத்தின் எழுச் சிக்கான திட்டங்களை கோரிக்கையாக பிர தமர் மோடியின் அரசிடம் முன் வைக்க வேண்டும். அரசில் கலவை இல்லாத புத்திஜீவிகளால் இக்கோரிக்கை இந்திய அரசிடம் முன்வைக்கப்படல் அவசியமா கும். இந்திய அரசிடமிருந்து எமது கோரிக் கைகளை சமூகம் பெற்றுக் கொள்ள அனை வரினதும் ஒருமைப்பாடு அவசியம். இதை உரியவர்கள் உணர்ந்தால் மலையக சமூகத் தில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.


நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates