Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தமிழ் பௌத்தத்தை சிங்கள சமூகத்திடம் கொண்டு சேர்த்த தருமரதன தேரோ - மயிலை சீனி வேங்கடசாமி

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களின் 4ஆம் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டது இந்தக் கட்டுரை. அவர் எழுதிய பௌத்த ஆய்வுகளுக்கு சிங்கள பௌத்த பிக்குமார் அதிகம் ஒத்துழைத்திருந்தார்கள். அவர் எழுதிய “பௌத்தமும் தமிழும்” நூலுக்கும் இலங்கைச் சேர்ந்த சிங்களப் பண்டிதர் முதலியார் ஏ.டி.எஸ்..ஜி.புஞ்சிஹேவா நிறைய ஒத்துழைத்திருந்தார். அந்த நூலின் அணிந்துரையைக் கூட அவர் தான் எழுதியிருந்தார். அது போல அவரின் தமிழ் பௌத்தம் பற்றிய ஆய்வுகளை சிங்கள ஆய்வாளர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இக்கட்டுரையை அவர் தமிழ் நாட்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரருக்கு (Pandit Hisselle Dhammaratana Mahāthera) வெள்ளிப் பதக்கம் வழங்கிக் கௌரவப்படுத்திய போது எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் உயிருடன் இருந்த போது எழுதப்பட்ட கட்டுரை இது. 04.06.1972 அன்று அவர் காலமானார். இக்கட்டுரையை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தனது 80 வது வயதில் 08.07,1980 அன்று காலமானார்.

ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர் சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவற்றை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வெளியிட்டு இன்னும் பல தமிழ்  இலக்கியங்களை சிங்களச் சமூகத்துக்கு கொண்டு போய் சேர்த்தவர்களில் முதன்மையானவர் என்று கூறலாம். இன்றும் அவரின் ஆய்வுகளின்றி சிங்களத்தில் புராதன தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேச முடிவதில்லை. தென்னிந்தியாவில் பௌத்தம் எந்தளவு செழித்திருந்தது என்பது பற்றி தீபவம்சமும், மகாவம்சமும் எதுவும் கூறாது கடந்து போயுள்ளது என அவர் தனது  “Buddhism in South India” என்கிற நூலின் நூலின் அறிமுகத்தின் முதலாவது வரியிலேயே தொடங்குகிறார்.

இலங்கையிலே கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்ஸெல்லெ என்னும் ஊரில் கருணாநாயக பதிரன்ன ஹெலாகே என்று பெயர் பெற்ற உயர்தரக் குடும்பத்தில் அருள்திரு. தருமரதன தேரோ பிறந்தார். இவருடைய தந்தையாரின் பெயர் ஹெர்மானிஸ் அப்புஹாமி என்பது; தாயார் திருமதி புஞ்சினேனா குமாரசிங்க ஹாமினே என்பவர். இவர்களுக்கு மூன்றாவது குமாரனாகப் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் தர்மபாலர் என்பது. தர்மபாலர் 1914ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே இவர் கல்வி பயில்வதில் ஆர்வமுடைய வராய்ப் பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்றார். 

இளைஞரான தர்மபாலர் தம்முடைய பதினாறாவது வயதில் பிக்ஷ்வாக எண்ணங் கொண்டு, தம்முடைய உறவினரான திரு. ஞானோதய தேரரிடஞ் சென்று அவருக்குச் சீடரானார். 1930ஆம் ஆண்டில் புத்த சங்கத்தைச் சேர்ந்து துறவியானார். பிவானவுடன் தருமரதன தேரோ என்று பெயர் பெற்றார். 

பிrவான தருமரதன தேரோ, ஞானோதய மகாதேரரால் நிறுவப்பட்ட சரஸ்வதி பிரிவேணா என்னும் கலாசாலையில் சேர்ந்து பாலி, சமஸ்கிருதம், சிங்களம் என்னும் மொழிகளையும், மற்றும் சில சாத்திரங்களையும் கற்றார். 1936ஆம் ஆண்டில் முதல் பரீட்சையிலும், 1939 ஆம் ஆண்டில் மத்திய பரீட்சையிலும் தேறிப் பின்னர் 1945ஆம் ஆண்டில் பண்டிதர் பட்டம் பெற்றார். சரஸ்வதி பிரிவேணையில் கல்வி பயின்று கொண்டிருந்தபோதே இவர், அப்பிரிவேணையின் ஆசிரியராகவும் இருந்து பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்து வந்தார். தருமரதன தேரோ அவர்கள் தமிழ் கற்ற வரலாறு குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரத்தில் ஆங்கிலம் பயில்வதற் காகத் தேரோ அவர்கள் சென்றபோது தமது சொந்த ஊராகிய ஹிஸ்ஸெல்லெ நகரத்தில் தங்கினார். அவ்வூரில் அப்போது (1945) ஆஸ்பத்திரியின் தலைவராக இருந்தவர் யாழ்ப்பாணத்துத் தமிழரான டாக்டர் ஏ. சின்னதம்பி என்பவர். சிறிதளவு சிங்களம் கற்ற டாக்டர் சின்னதம்பி சிங்கள மொழியை நன்றாகக் கற்க விரும்பி, அங்கு வந்திருந்த தருமரதன தேரோவைக் கண்டு தமக்குச் சிங்கள பாஷையைப் படிப்பிக்கும்படி கேட்டார். தேரோ அவர்கள் இந்த வாய்ப்பைத் தமக்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணி, ஒரு நிபந்தனையின்மேல் அவருக்குச் சிங்களம் கற்பிப்பதாக உடன்பட்டார். அந்த நிபந்தனை என்னவென்றால், தேரோ அவர்கள் டாக்டருக்குச் சிங்களம் கற்பிப்பதென்பதும், டாக்டர் அவர்கள் தேரோவுக்குத் தமிழ் கற்பிக்கவேண்டும் என்பது மாகும். 


தேரோ அவர்கள் விரைவில் தமிழைக் கற்றுக்கொண்ட படியால், டாக்டர் சின்னதம்பி அவர்கள் தேரோவை யாழ்ப் பாணத்துக்குப் போய் அங்கே இந்துக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படிக்குமாறு கூறினார். தேரோ அவர்கள் யாழ்ப்பாணம் சென்று, இந்துக் கல்லூரியில் தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கு பயின்றார். 1946ஆம் ஆண்டு தமிழில் பண்டித பரீட்சையில் தேறியதோடு, கொழும்பு நகரில் நடைபெற்ற 

O.S.S. தமிழ்ப் பண்டித பரீட்சையிலும் வெற்றி பெற்றார். இவ்வாறு தமிழ் கற்றுத் தேர்ந்த தேரோ அவர்கள், யாழ்ப் பாணத்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்து மாணவர்களுக்குச் சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்பித்துவந்தார். அதே சமயத்தில், இலங்கைச் சர்வகலாசாலைப் பிரவேச பரீட்சைக்கும் படித்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில்தான் இவர், தமிழ்-சிங்கள மா அகராதியின் முதல் பாகத்தை எழுதி அச்சிட்டார். 

1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைச் சர்வ கலாசாலைப் பிரவேச பரீட்சையில் தேறியவுடன், இலங்கைச் சர்வகலாசாலையில் சேர்ந்து ஏனைய பாடங்களுடன் சிங்களத்தை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாவது மொழியாகவும் பயின்று, 1953ஆம் ஆண்டு பி.ஏ. பரீட்சையில் கௌரவப் பட்டம் பெற்றார். 

பின்னர், இலங்கை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நாவலப்பிட்டியில் உள்ள கதிரேசன் கல்லூரியின் ஆசிரியராக 

அமர்ந்து, ஏறத்தாழ ஐந்து ஆண்டு கல்வி கற்பித்துவந்தார். 1957ஆம் ஆண்டு கதிரேசன் கல்லூரியைவிட்டு சஹிரா கல்லூரியில் சில காலம் ஆசிரியராகக் கல்வித் தொண்டு செய்தார். அவ்வாண்டு இறுதியில், தம்முடைய குருவாகிய மகாதேரோவின் விருப்பப்படி அக்கல்லூரியைவிட்டு சரஸ்வதி பிரிவேணைக்கு வந்து, அதன் துணை முதல்வராகக் கடமை ஏற்றுக்கொண்டு கல்வித் தொண்டினைச் சிறப்பாகச் செய்து கொண்டு வருகிறார். 

சரஸ்வதி பிரிவேணையில் தருமரதன தேரோ அவர்கள் ஆசிரியராக வந்தபிறகு அக்கல்வி நிலையத்தைப் பெரிதும் வளர்ச்சிபெறச் செய்தார். முன்பு கற்பிக்கப்பட்டுவந்த சிங்களம், சமஸ்கிருதம், பாலி, பௌத்த தருமம், சரித்திரம் முதலிய பாடங்களுடன் புதியதாக ஆங்கிலம், தமிழ், சரித்திரம், கணிதம் 

முதலிய பாடங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். S.S.C., H.S.C., U.E. (University Entrance) முதலிய வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. கல்வி பயிலும் மாணாக்கர்களின் தொகை அதிகரித்துக்கொண்டு வந்தது. ஏறத்தாழ 650 மாணாக்கர்கள் கல்வி கற்று வருகின்றனர். பல பௌத்த பிக்குகளும் இலவசக் கல்வி பயின்றுவருகிறார்கள். 1963ஆம் ஆண்டு இந்த சரஸ்வதி பிரிவேணை, வித்தியோதயப் பல்கலைக்கழகத்துடன் சேர்க்கப்பட்டு, சரஸ்வதி வித்யோதயப் பிரிவேணை என்று பெயர் பெற்றது. 

1958ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.ஏ. பரீட்சையில் தேறினார். 

இவ்வாறு பல மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராக விளங்கும் தருமரதன தேரோ அவர்கள், பேர்பெற்ற எழுத்தாளராகவும் விளங்குகிறார். இளமையிலேயே இவர் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். இப்போது இலங்கையில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். பல எழுத்தாளர் சங்கங்களிலும் இலக்கியச் சங்கங்களிலும் தலைவராகவும், துணைத் தலைவராகவும், அங்கத்தினராகவும் இருக்கிறார். 

சென்ற ஆண்டு மலாயா நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்று அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

1962ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கொழும்பு சஹிரா கல்லூரியில் கூட்டிய கூட்டத்தில் தரும ரதன தேரோவுக்கு வெள்ளி விளக்கை வழங்கிக் கௌரவப் படுத்தியது. 

1960ஆம் ஆண்டு, இலங்கையிலுள்ள பதுளை நகரத்தில் உள்ள மலையக் கலை இலக்கிய மன்றம் இவருக்கு வெள்ளிப் பதக்கம் அளித்துப் பாராட்டியது. 

இவர் எழுதியுள்ள பத்தினி தெய்யோ, தென் இந்திய பௌத்த வரலாறு முதலிய நூல்களுக்கு இலங்கை அரசாங்கமும், இலங்கை சாகித்திய மண்டலமும், யூனெஸ்கோ (Unesco) தாபனமும் பரிசுகள் வழங்கியுள்ளன. 

இப்போது சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தாராகிய நாம் இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிக் கௌரவப்படுத்தி மகிழ்கிறோம். 

பேராசிரியர் தருமரதன தேரோ அவர்கள் எழுதியுள்ள நூல்களாவன:

  • தமிழ் - சிங்கள அகராதி (முதல் பாகம்), 1948.
  • இரகுவமிசகதாமிருத அரும்பதவுரை, 1949.
  • மணிமேகலைச் சம்பு (மணிமேகலை என்னும் தமிழ்க் காவியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு), 1950.
  • பத்தினி தெய்யோ (சிலப்பதிகாரக் காவியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு), 1958. (இலங்கை அரசாங்கத்தின் ரூபாய் 1500 பரிசு பெற்றது )
  • சிங்கள மொழியில் தமிழ் மொழி செலுத்திய ஆதிக்கம் (Tamil Influence on Sinhalese Language - சிங்கள பாஷையில் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்), 1961.
  • தென் இந்தியாவில் பெளத்தமத வரலாறு (சிங்களத்தில் எழுதப்பட்ட நூல், 1964இல் இந்நூலுக்கு ஸ்ரீ லங்கா சாகித்திய மண்டலம் ஒரு பரிசையும், யூனெஸ்கோ நிலையம் ஒரு பரிசையும் வழங்கியுள்ளன)
  • தமிழ் இலக்கணம் (சிங்கள மொழியில் எழுதப்பட்டது), 1965.
  • மகாவமிசம் (தமிழ் மொழிபெயர்ப்பு. இலங்கை அரசாங் கத்தின் வேண்டுகோளின்படி பாலி பாஷையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது), 1960 (அச்சில்).
  • ஆர்திக வித்யா பிரவேசம் (சிங்களப் பொருளியல் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு; இலங்கை அரசாங்க மொழிப் பகுதியின் வேண்டுகோளின்படி எழுதப்பட்டது). 
  • சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு (அச்சில்).

பாரதி, பதினான்காவது தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ், 

தமிழ் எழுத்தாளர் சங்க மாத வெளியீடு, 1966 

மேற்படி நூல்களை விட சில நூல்களும் அதன் பின்னர் வெளிவந்தன. அவை இந்தப் பட்டியலில் இல்லை. - ஆர்.

“ஜானகிஹரண” என்கிற சிங்கள ராமாயணமும் - காளிதாசர், குமாரதாசர்; கொலை, தற்கொலையும் - என்.சரவணன்

எனது தொடர்ச்சியான சிங்கள வாசிப்பு, தேடல், அறிதல், புரிதல் என்பனவற்றைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வர முடிந்தது. சிங்கள இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள் என்பனவற்றை அத்தனை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அவர்களிடமும் வளர்ச்சிபெற்ற வளமான ஏராளமான இலக்கியங்கள் உண்டு. இதைச் சொல்லும்போது புரையோடிப்போன நமது தமிழ்மனம் சற்று கசப்பாகத் தான் எதிர்கொள்ளும் என்பதை நான் அறிவேன். ஆனால் நமது விருப்புவெறுப்புகளுக்கப்பால் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதன் அர்த்தம் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை குறைத்து மதிப்பிடுவென்பதல்ல. அதேவேளை நம்மைச் சுற்றியுள்ள தமிழ்த்தேசிய உணர்வானது கண்மூடித்தனமாகவும், வெறுப்புணர்வுடனும் இதை எடுத்த எடுப்பில் மறுக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் இனங்கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த கண்மூடித்தனமான மறுப்புணர்வு; உண்மையை இனங்காண தடையாக இருப்பதுடன், பகுத்தறிவுக்கு இழுக்கானதாகவும், ஆய்வு முறைக்கு எதிரானதாகவும் ஈற்றில் ஒரு சரியான கருத்துவாக்கத்தை எட்டத் தடையாகவும் ஆகிவிடுகிறது.

இந்த நிலைமை நமக்கு மட்டுமல்ல தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தையும், உள்ளடக்கத்தையும், அதன் வரலாற்றையும், இயல்பையும் அறியாது போயிருக்கிற சிங்களச் சூழலுக்கும் முற்றிலும் பொருந்தும்.

சிங்கள இலக்கிய பாரம்பரியத்தின் நீட்சிக்கு அந்த சிங்கள, இனம், சிங்கள மொழி என்கிற காரணிகளோடு முக்கியமாக பௌத்த மதமரபின் செல்வாக்கும் பெரும் பங்காற்றி வந்திருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக பெரும் இலக்கியங்களெல்லாம் பௌத்த விகாரைகளில் இருந்து தான் எழுதப்பட்டுள்ளன. பௌத்தத் துறவிகளால் தான் எழுதப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தளவில் ஈழத்து தமிழ் இலக்கியங்களை விட சிங்கள இலக்கியப் பாரம்பரியம் அதனால் தான் வலுவானதாகவும், அளவில் பன்மடங்காகவும் இருப்பதைக் காண முடிகிறது. பௌத்தத் துறவிகளின் பணியே விகாரைகளிலும், காடுகளிலும், குகைகளிலும் இருந்தபடி தியானிப்பதும், போதிப்பதும் அவர்களின் அன்றாட கடமைகளில் அங்கமாக இருந்தாலும் கூடவே எழுதுவதும், வாசிப்பதும் இன்னொரு முக்கிய அங்கமாக நாளாந்தம் இருந்து வந்திருக்கிறது. எனவே ஏராளமாக எழுதிக் குவித்தார்கள். ஓரிடத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி அவற்றின் முக்கியத்துவம் கருதி வேறு விகாரைகளில் மீளவும் பிரதிசெய்து, படி எடுத்து வைக்கும் மரபு இருந்தது. எனவே தான் மகாவம்சத்தின் பிரதி வேறு பல விகாரைகளிலும் கண்டெடுக்கப்பட்டன. அதுபோல பௌத்த “திரிபிடக” வின் பிரதிகள் பல நாடெங்கிலும் இருந்து கிடைத்தன.

தமிழில் சைவக் கோவில்களில் இருந்திராத பாரம்பரியம் இது. இலங்கையில், சமண, ஜைன, பௌத்த மரபில் மாத்திரமே இப்படி வாசிப்பும், எழுத்தும் அவற்றின் இன்றிமியாத மரபாக இருந்து வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இனத்துவ முறுகலால் இந்த குட்டித்தீவின் மண்ணின் மைந்தர்களான தமிழர் – சிங்களவர் இரு சாராரும் பண்பாட்டையும், நாகரிகத்தையும், வரலாற்றையும், இலக்கியங்களையும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் மரபைக் கைகொள்ளாத கூட்டங்களாக துருவமயப்பட்ட வளர்ச்சிப் போக்கை கடந்து வந்திருக்கின்றனர். இதில் விதிவிலக்குகள் இருக்க முடியும். ஆனால் இங்கு நான் குறிப்பிடுவது “போக்கு” பற்றியது. உறுதியான மரபு பற்றியது.

இத்தகைய இலக்கிய படைப்புகளின் போது இந்தியாவில் இருந்து வந்த இலக்கியங்களின் பாதிப்பும் இல்லாமல் இல்லை. வட இந்திய பௌத்த ஜாதகக் கதைகள் பல அவற்றின் மூலத்தைக் குறிப்பிடாமலே சிங்களத்தில் சிங்கள இலக்கியங்களாக பதிவாகியுள்ளன. அது மட்டுமன்றி புவியியல் ரீதியில் கிட்டிய தேசமாக தமிழகம் இருந்ததால் இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து தமிழ் மொழி இலக்கியங்களும் சிங்கள இலக்கியங்களில் கலந்திருக்கின்றன. சில இலக்கியங்கள் தமிழ் தான் இதன் மூலம் என்று குறிப்பிட்டாலும் சில தழுவல்கள் தமிழில் இருந்து பெறப்பட்டதாக குறிப்பிட்டதில்லை. பிற்காலத்தில் பன்மொழி அறிந்த அறிஞர்களால் தான் அவற்றின் மூலம் எவையென கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

மகாவம்சத்தில் எல்லாள மன்னனை மகாநாம தேரர் மிகவும் சிறந்த நீதிதவறாத மன்னனாகவும், ஒழுக்கசீலனாகவும் பதிவு செய்திருப்பதைக் காணலாம். அதற்கு சான்றாக அதில் ஒரு கதையுண்டு.

அதாவது நீதி தவறாத எல்லாள மன்னன் தன் படுக்கை அறையில் ஒரு மணியைத் தொங்கவிட்டிருந்தான்.                                 அது அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. 

மன்னனின் மகன் சென்ற தேரால் ஏற்றப்பட்டு கன்று ஒன்று கொல்லப்பட்டதாயும், நீதிவேண்டி தாய்ப்பசு மணியை ஒலித்தது. நிகழ்ந்ததை அறிந்த மன்னன் தன் மகனையும் அவ்விதமே தேரால் ஏற்றிக் கொல்லுமாறு தீர்ப்பளித்ததாகவும் மகாவம்சம் குறிப்பிடப்படுகின்றது. இதே கதை சிலப்பதிகார காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது. மனு திருவாரூரில் இருந்துகொண்டு சோழ நாட்டை ஆண்ட மன்னன். அவன் மகன் தேரில் விரைந்து சென்றபோது துள்ளியோடிய பசுக்கன்று தேர்க்காலில் சிக்கி இறந்தது. தாய்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் நிகழ்ந்தது அறிந்து பசுவுக்கு நீதி வழங்கும் அறநெறியில் கன்று இறந்தது போலவே தன் மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்றான் என்கின்றன இந்தக் காவியங்கள். மேலும் சோழ மன்னர் பெருமை கூறுகின்ற இராசராசசோழன் உலா, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது.

மகாவம்சத்தில் எல்லாளனை ஒரு சோழநாட்டில் இருந்து வந்த ஒருவனாகவே குறிப்பிடுவதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

அதுபோல சிங்கள காப்பியங்களில் ஒன்றான “பன்சிய பனஸ் ஜாதகய” (ஐநூற்று ஐம்பது ஜாதகக் கதைகள்) என்கிற நூலில் “சிபி ஜாதகய” (සිවි ජාතකය) என்கிற ஒரு கதையுண்டு. இந்தக் கதை அப்படியே தமிழில் புறநானூற்றில் உள்ளதாக தொல்லியல் துறை வல்லுனரான பேராசிரியர் ராஜ் சோமதேவ (Prof.Raj Somadeva) மே மாதம் 2021 இல் அளித்த ஒரு தொலைகாட்சி நேர்காணலில் குறிப்பிடுவதைக் கவனிக்க முடிந்தது. புறநானூறு கூறும் சிபிச் சக்கரவர்த்தியின் கதையில் ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காக பருந்துக்கு தன் உடலைத் தானமாக கொடுப்பதாகவும் சிங்களத்தில் கூறப்படும் சிபி அரசரின் கதையில் கண்களைத் தானமாகக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இப்படி பல சிங்கள இதிகாசக் கதைகளைக் கேட்கும் போது நாமறிந்த தமிழ் இதிகாசக் கதைகளை நினைவூட்டுவதைத் தவிர்க்க இயலாததாக இருக்கும். இவற்றைப் பற்றி பல ஆய்வு நூல்களை பேராசிரியர் சுனில் ஆரியரத்ன சிங்களத்தில் எழுதியிருக்கிறார்.

சிங்களத்தில் வெளியான இந்திய இதிகாசக் கதைகளில் முக்கியமாக இராமாயணத்தைப் பற்றிய விபரங்களைக் பதிவு செய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

இலங்கையில் இராமாயணம்

இராமாயணம் பற்றிய தேடல்கள் இலங்கையில் உயிர்த்த காலம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான். ஆங்கிலேய அறிஞர்களின் இலக்கிய-வரலாற்றுத் தேடல்களின் மூலம் அது நிகழ்ந்தது எனலாம். ராஜரீக ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையில் இது பற்றிய பல விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகளின் சமர்ப்பிப்புகளைக் காண முடிகிறது.

இதேவேளை இலங்கையின் பாட நூல்களில் இராமாயணம் பற்றி இந்தியாவில் நிலவுகிற அதே வான்மீகி இயற்றிய இராமாயணக் கதையின் சுருக்கத்தைத் தான் கற்பித்து வந்தார்கள். ராமனை நாயகனாகவும், சீதையை நாயகியாகவும், சீதையைக் கவர்ந்து கடத்தி வந்து சிறைவைத்து சண்டையிட்ட இராவணனை வில்லனாகவும் சித்திரிக்கிற கதை தான் நெடுங்காலமாக சிங்களப் பாடநூல்களில் இருந்தன. இராவணன் ஒரு சிங்கள வீரன் அல்லன் இராவணனுக்கு எந்த மரியாதைப் பெறுமதியும் ஆரம்பத்தில் கொடுக்கப்படவில்லை. ஒரு வகையில், மாற்றான் மனைவியைத் திருடிய திருடனாகவே இராவணன் உருவகப்படுத்தப்பட்டிருந்தான்.

இராவணின் வீரதீரச் செயல்கள் பற்றியோ, இராவணின் இராஜ்ஜியம் பற்றியோ, இராவணின் போர் முறைகள் பற்றியோ, இராவணின் பறக்கும் வானூர்தி பற்றிய கதைகளோ கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. கணக்கில்கொள்ளப்படவில்லை. ஆனால் இராவணனை சிங்களத் தலைவனாக புனையும் முயற்சிகளை சில தசாப்தங்களாக இலங்கையில் தலைதூக்கியிருப்பதைக் காணலாம். இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த நாடென உறுதிபடுத்துவதற்கும், வடக்கு கிழக்கு பகுதிகளில் இராவணன் பற்றி நிலவும் வாய்மொழி வரலாற்றையும், தொல்லியல் நம்பிக்கைகளையும் சுவீகரிக்க இராவணன் சிங்களத் தலைவனாக இன்று ஆக்கப்பட்டுள்ளான்.

இலங்கையின் பிரபல நாடகாசிரியர் ஜோன் த சில்வா 1886 இல் முதற் தடவையாக இராமாயணத்தை இலங்கையில் மேடையேற்றினார். அந்த இராமாயண நாடகத்தின் பிரதி பல ஆண்டுகளாக மேடையேற்றப்பட்டு வந்தது. அந்த பிரபலமான இராமாயணக் கதை இலங்கையின் சுயத்துக்கு இழுக்கு என்று “ஹெல ஹவுல” என்கிற இயக்கம் தீர்மானித்தது. இராமாயணத்துக்கு மாற்றாக அவர்கள் “சக்வித்தி ராவண” என்கிற ஒரு நாடகத்தை இயக்கினார்கள். அது 1946முதன் முதலில் மேடையேற்றப்பட்டது. சிங்கள சமூகத்தில் பிரசித்திபெற்ற இந்த நாடகம் இன்றும் ஆயிரக்கணக்கான தடவைகள் மேடையேற்றப்பட்டு வருகிறது.

இராமாயணத்தின் திரிபு வடிவங்கள்

பொலநறுவைக்காலத்தில் காணப்பட்ட முக்கிய உரைநடை சிங்கள இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது “ஜானகிஹரண” இது இராமாயணக் கதையின் முழுமையான பிரதியாக இல்லாவிட்டலும் அதன் தழுவலாகக் கொள்ளலாம்.

இராமாயணத்தைப் பொறுத்தளவில் வான்மீகி எழுதிய மூல இராமாயணத்தைத் தவிர அதையொட்டி தமிழில் கம்பர் எழுதிய இராமாயணத்தை கம்பராமாயணம் என்கிறோம். அதேவேளை இராமாயணமானது இதுவரை 300 க்கும் மேற்பட்ட வித்தியாசமான பிரதிகள் உலகளவில் (குறிப்பாக தென்னாசிய, தென்கிழக்காசிய பிராந்தியத்தில்) இருப்பதை இன்று காண முடிகிறது. இதைப் பற்றி பல ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுமுள்ளன. ஆக கம்பரின் இராமாயணம் என்பது அதில் ஒன்று தான்.

சோழப் பேரரசு உட்பட பல இந்திய அரசுகள்; பர்மா, திபெத், ஜாவா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வங்காளம், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம் போன்ற தென்னாசிய நாடுகள் வரை ஆக்கிரமித்து ஆட்சி செய்த வரலாற்றை நாமறிவோம். அப்படி அவர்கள் சென்ற இடமெல்லாம் கலாசார, பண்பாட்டு புகுத்தல்களையும் செய்யவே செய்தார்கள். அப்படிப்பட்ட இடங்களில் அன்று மிகவும் பிரசித்திபெற்றிருந்த இராமாயணமும் கொண்டு போய் சேர்க்கப்பட்டதில் நமக்கு ஆச்சரியமிருக்காது. அவர்கள் அங்கே கட்டிய கோவில்களில் இராமாயணக் கதைகளைச் சித்திரங்களாகச் செதுக்கினார்கள். அங்கிருந்த இலக்கிய வடிவங்கள் மூலமும் அந்தக் காவியங்களைப் பரப்பினார்கள். பாரம்பரிய நாட்டார் கதைகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும், நம்பிக்கைகளின் மூலமும் செல்வாக்கு இராமாயணம் செலுத்தி வருகிறது.  மேற்கு நாட்டு நாட்டு அறிஞர்களையும் கலைஞர்களையும் கூட ஈர்க்கிறது, ஏனெனில் இதற்கு ஒரு இலக்கியக் காவியப் பெறுமதி உண்டு என்பது உண்மை. இது மாய, மந்திர, போர், காதல், பழிவாங்குதல் மற்றும் கதாநாயக வழிபாடு என ஈர்க்கிறது.

செவிவழிக் கதைகளாகவும், ஓலைச்சுவடிகளிலும், ஓவியங்களிலும் அவை பதிவுபெற்றன. அப்படி இன்று பல இராமாயண நூல்களை அவர்களின் மொழிகளிலெல்லாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளிலும் வான்மீகியின் இராமாயணத்தில் இருந்து அங்காங்கு வித்தியாசப்படுகிறது உள்ளடக்கத்துடன் பல வெளியாகியுள்ளன.

உதாரணத்துக்கு...

  • தெலுங்கில் கோனா புத்த ரெட்டியின் ராமாயணம்,
  • தமிழில் கம்பனின் கம்பராமாயணம் (11 -12 ஆம் நூற்றாண்டு),
  • அஸ்ஸாமியில் மாதவ கண்டாலியின் சப்தகண்ட ரமாயனா (14 ஆம் நூற்றாண்டு),
  • வங்காள மொழியில் கிருத்திபாஸ் ஓஜாவின் கிருதிவாசி ரமாயனா 15 ஆம் நூற்றாண்டு),
  • மராத்தியில் ஏக்நாத்தின் பவார்த் ராமாயணா (16 ஆம் நூற்றாண்டு),
  • ஒரியாவில், பலராம் தாஸ் ’தண்டி ராமாயணா(16 ஆம் நூற்றாண்டு),
  • அவதியில், துளசிதாஸ் ராம்சரிதமனாஸ் (16 ஆம் நூற்றாண்டு)
  • மலையாளத்தில் துஞ்சத்து எழுதச்சனின் ஆத்யாத்மா ராமாயணம்.

என்பவற்றை சிறந்த உதாரணங்களாகக் குறிப்பிடலாம். (1)

இவற்றில் பல பிரதிகள் அப்படியே இராமாயணத்தை முழுமையாக ஒத்தவை அல்ல. இராமாயணக் கதையின் சாயலைக் கொண்ட கதைகளாக பல உள்ளன. உதாரணத்துக்கு இலங்கையில் “வெஸ்ஸந்தர ஜாதக” (Vessantara Jataka - වෙස්සන්තර ජාතකය), தசரத ஜாதக (Dasaratha Jataka - දසරථ ජාතකය) போன்றவற்றை குறிப்பிடலாம் இவை பாளி மொழியில் எழுத்தப்பட்டவை. அதேவேளை இலங்கை, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மா போன்ற நாடுகளில் இவை பெரும்போக்கு இலக்கியங்களாக உள்ளன. பாளியில் மட்டுமன்றி உள்ளூர் மொழிகளிலும் உள்ளன.

“தசரத ஜாதகய” நேரடியாக இராமாயணக் கதையில் இருந்து வந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். “பன்சிய பனஸ் ஜாதகய” விலும் இதனை சுருக்கமாக விளக்கியிருக்கிறார்கள். பௌத்த போதனைகளின் வாயிலாக நீள்கின்ற கதையாக இருக்கிறதும் பௌத்த பாணியில் கூறப்படும் பௌத்த இராமாயணங்களாக

  • தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
  • அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
  • தசரத கதனம் (பாலி, கி. மு. 5)
  • என்பவை காணக்கிடைக்கின்றன. அது போல ஜைன இராமாயணங்களாக,
  • விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
  • சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
  • இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
  • குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
  • சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
  • சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம் (பிராக்ருதம், கி. பி.868)
  • பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

என்பவையும் நம்மால் அடையாளம் காண முடிகிறது,

வேறு நாடுகளில் காணப்படும் இராமாயணங்களை இப்படி வரிசைப்படுத்தலாம்.

  • கம்போடியாவில் ரீம்கர்
  • தாய்லாந்தில் ராமாகீய்ன்
  • லாவோஸில் பிர லாக் பிர லாம்
  • பர்மாவில் யம ஸாட்டாவ்
  • மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
  • இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
  • பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
  • இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
  • ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
  • ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
  • சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

ஈவ்வாறு இராமாயணத்தின் பல வடிவங்களைப் பற்றிய ஆய்வுகளைத் திறந்துவிட்டதில் ராமானுஜனுக்கு (A.K. Ramanujan) முக்கிய பங்குண்டு. அவர் எழுதிய “முந்நூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்புகளின் ஐந்து உதாரணங்களும், மூன்று எண்ணக்கருக்களும்” (“Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translations”) என்கிற ஆய்வுக் கட்டுரை தான் இதைப் பற்றி ஆய்வுப்பரப்பை மேலும் விரிவுபடுத்தியது எனலாம்.

தசரத ஜாதகய

தசரத ஜாதகயவில் தசரத மன்னனுக்கு மூன்று பிள்ளைகள், இராமன், லக்குமணன், சீதை. மூத்த இராணியாரின் இறப்பை அடுத்து அடுத்த நிலையில் இருந்த இரண்டாந்தார மனைவி ஆதிக்கம் செலுத்த முற்படுகிறாள். தசரத மன்னனிடம் தனது மகன் பரதனுக்கே எதிர்காலத்தில் முடிசூட்டப்படவேண்டும் என்று பரதன் ஆறு வயதாக இருக்கும்போதே கோருகிறாள். தசரதன் அதனை மறுக்கிறான். இந்த மறுப்பின் காரணமாக தன் இளவரசர்கள் இருவரும் இராணியால் கொல்லப்படக்கூடும் என்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதையும் உணர்ந்துகொண்ட தசரதன் தான் மரணிக்கும்வரை அவர்களை அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பாக வாழும்படி பணிக்கிறான். அவர்களுடன் சகோதரி சீதாவும் வெளியேறுகிறாள். மன்னன் பன்னிரண்டுஆண்டுகள் வாழ்வார் என சோதிடர்கள் கூறியதால் பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் வனவாசம் அனுபவிக்கிறார்கள். பரதன் அவர்களைத் வேட்டையாடத் தேடிச் செல்கிறான் என்று நகர்கிறது கதை. இதில் சீதை இராமனின் மனைவியல்ல மாறாக சகோதரி மேலும் இராவணன் என்கிற பாத்திரம் இல்லை. இராமாயணத்தின் முற்பகுதி “தசரத ஜாதகய”வில் காண முடிகிறது. கதையும் அவ்வளவு பெரிய கதையல்ல.

ஆனால் இது இராமாயணத்தை வான்மீகி எழுதுவதற்கு முன்னரே வெளிவந்துவிட்டதாக உரையாடல்களும் சிங்களச் சூழலில் நடந்து வருவதைக் காண முடியும். இராமாயணத்தை விட பழமையான “சூத்திர பிடக” என்கிற பாளிமொழி பௌத்த ஜாதகக் கதையில் இது காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் சிங்கள மொழியில் இது தொடர்பில் நடக்கும் சில உரையாடல்களை இக்கட்டுரைக்காக கவனிக்க நேரிட்டது. இராமாயணமா, அல்லது “தசரத ஜாதகய”வா காலத்தால் மூத்தது என்கிற விவாதம் பலமாக நடந்து வருவதைக் காண முடிகிறது. சிலர் “தசரத ஜாதகய”விலிருந்து தான் வான்மீகி அக்கதையை விரித்திருக்கிறார் என்று வாதாடுவதைக் காண முடிகிறது. இராவணனின் பாத்திரம் அல்லாத “தசரத ஜாதகய” என்கிற இலக்கியத்தை சிங்களத் தரப்பில் ஏற்றுக்கொண்டால் இராவணன் பற்றிய புனைவுகளையும் ஏற்றுக்கொள்ளமுடியாது போய்விடும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவது நல்லது.

இராவணனும், இலங்கையும் இன்றிமையாத இராமாயணம் பற்றி ஆசிய ராஜரீகக் கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் வெளிவந்த N. B. Utgikar எழுதிய  The Story of the Dasaratha Jataka and of the Ramayana (JRAS - October 1924) என்கிற கட்டுரையும்  Gombrich, Richard  இந்த இரு காவியங்களையும் இராமாயணத்தோடு ஒப்பிட்டு 1985இல் எழுதிய  ‘The Vessantara Jataka, the Ramayana and the Dasaratha Jataka’, Journal of the American Oriental Society. கட்டுரையும் முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளாகக் கருதலாம்.

இலங்கையில் “வெஸ்ஸந்தர காவ்ய” என்கிற பெயரில் சிங்களத்தில் இருக்கிறது. இலங்கையின் பல விகாரைகளில் ஓவியங்களாக இக்கதை வரையப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் இன்றும் இறந்தவர் வீடுகளில் முதல் ஏழு நாட்களும் விழித்திருந்து ஒப்பாரிப் புராண இலக்கியங்களைப் பாடுவார்கள். குறிப்பாக ஜாதகக் கதைகள் என்று கூறக்கூடிய கதைகளாக இருக்கும். அப்படிப் பாடப்படுகின்ற நூல்களை “மலபொத்த” (இறப்புநூல்) என்பார்கள். அவ்வாறான “மலபொத்”களில் அதிக பிரசித்தம் பெற்றது இந்த “வெஸ்ஸந்தர காவ்ய” என்கிற நூல். கண்டியிலுள்ள தெகல்தொருவ என்கிற விகாரையில் உள்ள இந்தக் கதையின் சுவரோவியம் பிரசித்திபெற்றது. அந்த ஓவியம் 1973 ஆம் ஆண்டு முத்திரையாக வெளியிடப்பட்டது.

கம்போடிய இராமாயணத்தில் (Reamker) இராவணனுக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி மண்டோல்கிரிட், இரண்டாவது மனைவி அகிநட். சீதை பாத்திரமானது இராவணனின் மகளாக காணப்படுகிறது சீதையால் அழிவு வரும் என்கிற சோதிடக் கூற்றால் சீதை பானையில் வைத்துக் கடலில் விடப்படுகிறாள் என்பதாக கதை நகருகிறது.

ஜானகிஹரணய

இப்படியெல்லாம் இருக்க “ஜானகிஹரண” என்கிற நூல் தான் முக்கியமாக இராமாயணக் கதையாக பெரும்பாலும் ஒத்த கதையாக சிங்களத்தில் காணக் கிடைக்கிறது. இதன் மூலப் பிரதி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இலங்கை மன்னனும் மகாகவியுமான குமாரதாச(ர்) என்கிற அரசனால் 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாகாவியமென நூலின் முகப்பில் குறிப்பிடப்படுகிறது.(2) குமாரதாச அல்லது குமாரதாதுசேனன் என்றும் சிங்கள, பாளி இலக்கியங்களில் அழைக்கப்படுகிறார். சிங்களத்தில் “ஜானகிஹரண”வை “மகாகாவியம்” என்கிற அடைமொழியில் தான் அழைக்கிறார்கள். சிங்கள இலக்கிய நூல்களில் இலங்கையின் முதலாவது மகாகாவியம் என “ஜானகிஹரண”வை குறிப்பிடுவார்கள். 

முகலன் என்கிற அரசனின் புத்திரனான குமாரதாச ஒரு புலமைத்துவமுள்ள பண்டிதர் எனவும், காளிதாசன் என்கிற தனது நண்பனின் மரணத்தைத் தாங்காது தானும் அதே நாள் தீயில் குதித்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனான் என்று பூஜாவலியவில் குறிப்பிடப்படுகிறது. இதே கதை ராஜாவலியவிலும் கூறப்பட்டுள்ளது. கவிஞர் காளிதாசன் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கவிஞனுக்காக தற்கொலை செய்துகொண்டதாக வாய்மொழி வரலாறும் உண்டு. குமாரதாசர் மௌரிய வம்சாவளியிளிருந்து வந்தவர் என்பதை பல ஆய்வு நூல்களிலும் குறிப்பிடுகின்றன. அதாவது அவரின் முன்னோர்களான தாதுசேனன், முகலன் அனைவரும் மௌரிய வழிவந்தவர்கள் என்கின்றனர்.(3)

“பூஜாவலி”யின் பிரகாரம் தாதுசேனனின் (Dasenkeli) புதல்வர்களில் புதல்வர்கள் காசியப்பன், முகலன் (மொக்கலான) ஆகியோர். தந்தையான தாதுசேனனை கொன்றுவிட்டு ஆட்சியேறுகிறான் காசியப்பன். பட்டத்து இளவரசனான முகலன் தமிழகத்துக்கு தப்பியோடிவிடுகிறான். முகலன் அங்கிருந்து பெரும் படையைத் திரட்டிக்கொண்டு வந்து காசியப்பனை வீழ்த்திவிட்டு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனின் மகனான பண்டிதப் புலமையுள்ள குமாரதாச ஒன்பது ஆண்டுகள் (கி.பி. 513-522) சிகிரியவை ஆட்சி செய்ததாகவும், தனது நண்பனின் சிதையில் தானும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டான்” எனவும் விபரிக்கிறது. (4)

“Ejara Kiviyara pinin Jilnakiharanad maliakavbondi.

Kumaradas rada KAlidas nam kivindu liata aiya divipidi.”

தென்னிலங்கையில் மாத்தறை மாவட்டத்திலுள்ள “ஹத்போதிவத்தை” (Hatbodiwatta - ஏழு அரச மரத் தோட்டம் என்று அர்த்தம்) என்கிற இடத்தில் தான் இப்படியொரு சம்பவம் இலங்கையில் நிகழ்ந்ததாக பல நூல்களில் குறிப்பிடப்படுகின்றன.(5) ஆனால் அது பெரும்பாலும் அனுராதபுரத்துக்கு அருகில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் வேறு சில நூல்களில் குறிப்பிடப்படுகின்றன. (6)

மகாவம்சத்தில் இரண்டாவது தொகுதி கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை 38 வது அத்தியாயத்திலிருந்து 100வது அத்தியாயம் வரை பதிவுசெய்யப்பட்டிருப்பதை அறிவீர்கள். இரண்டாவது தொகுதியை தொகுதியை மகாநாம தேரர் எழுதியதல்ல என்பதையும் அறிவோம். 38, 39 வது அத்தியாயங்கள் காசியப்பன், முகலன் ஆகியோரின் ஆட்சி காலத்தைப் பற்றிப் பேசுகின்றன. 40 வது அத்தியாயத்தில் பேசப்படவேண்டிய குமாரதாசர் பற்றி அதில் இல்லை. ஆனால் 41 வது அத்தியாயத்தில் குமாரதாசர் பற்றிய விபரம் தொடங்குகிறது. ஆக 40 வது அத்தியாயத்தில் குமாரதாசர் ஆட்சிகாலம் பேசப்படாததையிட்டு பல அறிஞர்கள் விவாதத்துக்கு எடுத்திருக்கிறார்கள். குமாரதாசரின் ஒன்பதாண்டு ஆட்சி காலம் சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு பொற்காலமாக கருதப்படுகிறது. ஆனால் குமாரதாசரின் மரணம் பற்றிய விபரங்கள் அதில் இல்லை. ஆனால் “பெறகும்பா சிரித்”தவில் (Parakumbasirita)(7) 23வது கவிதையில் குமாரதாச அரசரைப் பற்றியும் அவர் தனது நண்பனுக்காக தற்கொலையானார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

 “பெறகும்பாசிரித்த” என்கிற சிங்கள இலக்கியத்திலும் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அது போல இன்னொரு சிங்கள இலக்கியமான அல்விஸ் தொகுத்த “சிதத் சங்கராவ” (Sidath Sangarawa) விலும் இதைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன என 1888 ஜனவரி மாதம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் ரைஸ் டேவிஸ் ஒரு குறிப்பை எழுதியிருந்தார்.(8)  அச்சஞ்சிகையின் மே மாத இதழில் செசில் பெண்டால் என்பவர் அதற்கு வினையாற்றி எழுதிய குறிப்பொன்றில் காளிதாஸ், ஜானகிஹரண பற்றி வெளியான சில மேலதிக ஆவணங்களைப் பதிவு செய்திருக்கிறார்.(9)

  1. The Historical Tragedy entitled Kalidas by Simon De Silva Scneviratna, Muhandrum, [Sinhalese title:] Kalidas nritya pota (pp. 22, F. Cooray, Colombo, 1887, 8vo.).
  2. Kalidas Charitaya, Hevat Kalidasa kavinduge ha Kumaradasa nirinduge da jivita-kavya (pp. 17, " Lakmini pahana" Press, Colombo, 1887, 8vo.).

மகாவம்சத்தை முதலில் மொழிபெயர்த்த வில்ஹைம் கைகர் தனது  சிங்கள மொழியும் இலக்கியமும் (Literatur und Sprache der Singhalesen) நூலிலும் காளிதாச கவிஞனுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய கவிஞ மன்னன் குமாரதாச என்கிறார். கைகர் 1929 ஆம் ஆண்டு தொகுத்த மகாம்சத்தின் இரண்டாம் தொகுப்பான சூளவம்சத்தின் முதலாம் பாகத்திலும் “ஒன்பது அரசர்கள்” என்கிற அத்தியாயத்தில் இந்தக் கதை காணக் கிடைக்கிறது. நீலகண்ட சாஸ்த்திரி உள்ளிட்ட சில வரலாற்று அறிஞர்கள் மன்னர் குமாரதசரும், கவிஞர் குமாரதாசரும் இரு வேறு நபர்கள் என்றே நம்புகிறார்கள்.(10)

குமாரதாச காஞ்சியில் வாழ்ந்த காலத்தில் தான் ஜானகிஹரணத்தை எழுதியதாக குறிப்பிடப்படுகிறது. அவரின் தந்தை முகலன் இந்தியாவுக்கு தப்பியோடி வாழ்ந்த காலத்தில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும். சமஸ்கிருதத்தையும் அங்கே அவர் கற்றுத் தேரியிருக்கலாம். ஜானகிஹரண காளிதாசனின் பார்வைக்கு சென்றடைந்ததும் அந்த வழியிலாக இருக்கலாம்.

இலங்கையில் ஜானகிஹரணய முதற் தடவையாக 1891இல் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்டு சிங்களத்தில் வெளிக்கொணரப்பட்டது. முதலாவது வெளியிடப்பட்ட அந்தப் பிரதியில் அன்றைய ஆளுநர் சேர் ஆர்தர் எளிபேங் ஹெவ்லொக் (Sir Arthur Elibank Havelock) அவர்களின் அனுமதியுடன் வெளியிடப்படுவதாக முன் பக்க வசனத்துடன் இருப்பதைக் கவனிக்க முடிகிறது.

தர்மராம தேரர்

இலங்கையில் “ஜானகிஹரண” மகாகாவியத்தின் மூலப் பிரதியை தேடிக் கண்டுபிடிக்க முடியாதுபோன நிலையில் அதன் உதிரிப் பிரதிகளைக் கொண்டு ரத்மலான தர்மராம ஹிமி அதில் இருந்த கிடைத்த சுலோகங்களைத் தொகுத்து 1891இல் மீள உருவாக்கினார்.(11) அதில் மொத்தம் பதினைந்து அத்தியாயங்களில் பதின்நான்கைத் தான் அவரால் சீரமைத்து தொகுக்க முடிந்தது. பின்னர் இதன் மூலப் பிரதி கண்டுபிடிக்கப்பட்டது. மூலப் பிரதிக்கும் ரத்மலான ஹிமியின் பிரதிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் காணப்படவில்லை என்று அறியப்படுகிறது. இராவணனுக்கு சார்பான கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் மொத்தம் பதினைந்து அத்தியாயங்களை (Sarga) உடைய ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டன. இறுதி அத்தியாயம் 25வது அத்தியாயம் என்று காணப்படுவதால் இடையில் பத்து அத்தியாயங்கள் தவரவிடப்பட்டுள்ளதை உணரமுடிந்துள்ளது.  18 அங்குலம் கொண்டதும், ஒரே ஓலையில் எட்டு வரிகளைக் கொண்டதுமான 101 பனையோலைச்சுவடிகளைக் கொண்டது அது.(12)

இதேவேளை மலபாரில் 1920 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட பிரதியில் மொத்தம் 20 அத்தியாயங்கள் சமஸ்கிருதத்திலேயே உள்ளன. அவை மொத்தமாக 54 ஓலைகளைக் கொண்டவை. அவற்றிலும் சில தவரவிடப்பட்டனவாக இருந்துள்ளன. திருவாங்கூர் வடக்கில் இருந்த ஒரு நம்பூதிரி குடும்பத்தினரின் சேகரிப்பில் மலையாள எழுத்தில் எழுதப்பட்ட இந்த சமஸ்கிருதப் பிரதி கண்டெடுக்கப்பட்டு பின்னர் மெட்ராசில் உள்ள கிழக்கத்தேய ஓலைச்சுவடி நூலகத்தில் இன்றும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜானகிஹரணய பற்றிய ஆய்வுகளைச் செய்த சீ.எஸ்.சுவாமிநாதனின் கணிப்பின் படி அது கண்டெடுக்கப்பட்ட காலத்தைவிட ஒரு நூறாண்டுகள் பழமையானதாக இருக்கும் என்கிறார். (13)

ஆங்கிலேய அறிஞரான லயனல் பார்னட் (Lionel Barnett) என்பவரிடமும் 118 ஓலைகளைக் கொண்ட “ஜானகிஹரணய”வின் மலையாள மொழிப் பிரதி இருப்பதை அறிய முடிந்தது. அதுவே 16 பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்றென கணிக்கப்பட்டுள்ளது. பார்னட்டின் கணிப்பின்படி அது சிங்களத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்கிறார். அதுவரை வெளியிடப்படாத 16வது அத்தியாயத்தையும் அவர் 1926ஆம் ஆண்டு வெளியிட்டார்.(14)

இலங்கையில் இருந்து கேரளாவுக்கு எவ்வாறு சென்றது எப்படி இது பிரபல்யம் பெற்றது என்பது பற்றி பல ஆய்வாளர்களும் வியப்புடன் பார்க்கிறார்கள். கேரளாவுக்கும், இலங்கைக்கும் (இன்னும் சொல்லப்போனால் மலையாளத்துக்கும் சிங்களத்துக்கும் இருந்த உறவு) அன்று இருந்த கலாசார உறவையும் இது எடுத்துக்காட்டுகிறது.

எப்படியோ இன்று சிங்களத்தில் முழு வடிவ நூலாக “ஜானகிஹரணய” கிடைக்கிறது. உயர்தர வகுப்புகளிலும், மேற்படிப்புகளிலும் பாடமாக இருக்கிறது.


1943 ஆம் ஆண்டு தான் இன்றைய பூரணப்படுத்தப்பட்ட ஜானகிஹரணய வெளியிடப்பட்டது. இதனை தொகுப்பதில் அதிக சிரத்தைக் காட்டியவர்கள் இலங்கையின் சிரேஷ்ட தொல்லியல் வரலாற்றாசிரியர்களான சீ.ஈ.கொடகும்புரவும், எஸ்.பரணவித்தானவும். அந்த நூலின் அறிமுகத்தில் அக்கவிதையைப் பற்றி சீ.ஈ.கொடகும்புரவும், கவிஞரைப் பற்றி எஸ்.பரணவித்தானவும் எழுதியிருந்தார்கள். இதற்காக அவர்கள் மேற்கொண்ட பின்புல உழைப்பைப் பற்றிய முக்கிய கட்டுரையொன்றை The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland இல் வெளியாகியிருந்தது.(15)

ஜானகிஹரண பற்றிய ஆய்வுகளில் இன்னொரு முக்கிய ஆய்வுக் கட்டுரையாக F.W.Thomas எழுதிய குமாரதாசரின் ஜானகிஹரண என்கிற கட்டுரையும் முக்கியமானது. அவ்வாய்வுக் கட்டுரையில் பல பக்கங்களுக்கு கலைச்சொல் விளக்கப் பட்டியலை அதில் தந்திருப்பது அக்கட்டுரையின் முக்கிய சிறப்பு.(16)

“ஜானகிஹரணய” பின்னர்  K.N.Joglrkar என்பவரால் ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1908 ஆம் ஆண்டு இந்தியாவில் பம்பாய் நகரில் வெளியிடப்பட்டது.

ஏற்கெனவே “தசரத ஜாதக” கதையை அறிந்த சிங்கள மக்களுக்கு “ஜானகிஹரண” அந்நியமாக இருந்ததில்லை. பெயரிலேயே ஜானகி இருக்கிறது. ஜானகி சீதையின் இன்னொரு பெயர். எனவே சீதையை மையப் பாத்திரமாகக் கொண்ட காவியமாக இது காணப்படுகிறது. “ஜானகிஹரணய” என்றால் “ஜானகியை சுவீகரிப்பது” (கடத்திச் செல்வது) என்று பொருள். இதில் சீதை இராவணன் கடத்திச் செல்வதைத் தான் ஜானகிஹரணய என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சம்ஸ்கிருதத்தின் பாத்திரம்

மகாவம்சம் தோற்றம்பெற்ற காலப்பகுதியில் அதிகளவான பிராமிக் கல்வெட்டுக்கள் தோன்றவில்லை ஆனால் இக்காலப்பகுதியில் பிராமணியத்தின் ‘தேவ மொழி’யாகிய சமஸ்கிருதத்தின் செல்வாக்கு இலங்கையில் தலைதூக்கியதைக் காணலாம். மகாஞான பௌத்த பிக்குகளைச் சார்ந்த அபயகிரி, ஜேதவன விகாரைகள் சமஸ்கிருத மொழிக் கல்விக்கு புகழ் பெற்றவையாக விளங்கின. இக்காலத்தில் மகாவிகாரை பாளி மொழிமூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

ஆனால் குறிப்பிட்ட சில மன்னர்கள் சமஸ்கிருதத்தினை ஆட்சி மொழியாகவும், விளம்பரங்களை மக்களுக்கு அறிவிக்கும் மொழியாகவும் பயன்படுத்தினர். உதாரணமாக மகாஞான கருத்துக்களை கூறும் குச்சவெளிக் கல்வெட்டு, திரியாய் கல்வெட்டு போன்றன சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. மேலும் அனுராதபுரத்திலுள்ள விஜயராம எனும் இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பஞ்சவிம்; சதிசஹஸ்திகா, பிரபஞ்சபாரமுதா போன்ற மகாஞான நூல்களில் உள்ள சமஸ்கிருத மொழிச் சுலோகங்களின் பகுதிகள் பொறிக்கப்பட்டள்ளன. இதே சமஸ்கிருத மொழியில் தான் சாரார்த்த சங்கிரகம், ஜாதகமாலா மட்டுமன்றி ஜானகீ ஹரணமும் சமஸ்கிருதத்தில் எழுந்தன. இலங்கைத் தீவில் சமஸ்கிருத மயமாக்களின் செல்வாக்கை தடுக்கும் நோக்கில், பல்வேறு வழிகளில், பாமர மக்களிடையேயும், பிக்குகளிடயேயும் நிலவி வந்த சுதேச மரபுகளையும் தழுவி பாளி மொழியின் இலக்கண, இலக்கிய அமைதிக்கு ஏற்ப வரலாற்றையும், பௌத்த பண்பாட்டையும் வலியுறுத்தும் ஒரு “பெறுமதியான இலக்கியம்” எழவேண்டிய சூழ்நிலை நிலவியது. அதனை மகாநாமதேரர் மகாவம்சத்தின் மூலம் நிறைவேற்றினார் என்பதை நாமறிவோம். அந்த வகையில் சமஸ்கிருதத்தில் இலங்கை மன்னரொருவரால் எழுதப்பட்டதாக அறியப்படும் ஜானகிஹரணய காவியம் இலங்கையின் இலக்கிய வரலாற்றுப் பண்பாட்டில் முக்கியதொரு இலக்கியமாக கருதப்படுகிறது.

இலங்கையில் அப்போது சமஸ்கிருதத்தை வாசித்தறியும் வாய்ப்பைப் பெற்ற குழாமினர் சிறு பகுதியினரே என்பதைச் சொல்லத் தேவையில்லை. சில பிராமணர்களும், நீதிமன்ற தரப்பினரும், சமஸ்கிருதம் கற்ற பௌத்த பிக்குகளும், அரச பரம்பரையினரில் சிலருமாகத் தான் இருந்தார்கள். (கொடகும்புர, 2014) ஆக இத்தகைய சமஸ்கிருத இலக்கியங்கள் சாமான்ய மக்களை அன்று சென்றடைந்ததில்லை. ஆனால் வாய்மொழியாக இவ்விலக்கியங்களின் சாராம்சம் ஓரளவு அறியப்பட்டிருந்ததை மறுப்பதற்கில்லை.

இலங்கையின் இலக்கியங்களில் இராமாயணத்தின் செல்வாக்கு குறித்து “ராஜரீக ஆசிய கழகம்” (Royal Asiatic Society of Sri Lanka -RASSL) நடத்திய ஒரு கருத்தரங்கில் ஆற்றப்பட்ட ஆய்வுரைகளைத் தொகுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான அதன் ஆய்வேட்டில் (Journal of the Royal Asiatic Society of Sri Lanka - Vol. 59) இராமாயண சிறப்பிதழாக வெளியிட்டது. அக்கட்டுரைகள் இதைப் பற்றிய மேலதிக தேடல்களைச் செய்பவர்களுக்கு பெரிதும் உதவும். இதில் பிரபல வரலாற்றாசிரியரான கொடகும்புர எழுதிய “இலங்கையில் இராமாயணமும், இராமாயணத்தில் இலங்கையும்” வெளியான என்கிற கட்டுரை பல விபரங்களை உள்ளடக்கியது.(17)


காளிதாச – குமாரதாச நட்பைப் போற்றும் இலக்கியங்கள்.

இந்திய வரலாற்றில் காளிதாசன் ஒரு முக்கிய கவிஞனாக போற்றப்படுகிறான். கிழக்கின் ஷேக்ஸ்பியர் என்று பல அறிஞர்கள் காளிதாசனைக் குறிப்பிடுகிறார்கள். காளிதாசனின் பூர்வீகம், வாழ்ந்தகாலம் பற்றி சற்று முன்னுக்கு பின் முரணான தகவல்கள் உண்டு. காளிதாசன் ஹிமாலயப் பகுதிக்கு அண்மித்த உஜ்ஜேனி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அதே வேளை வேறு பல நூல்களில் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்கிறது. சில நூல்களில் விக்கிரமாதித்த பேரரசனின் சபையில் பாடிவந்த புலவன் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை வாழ்ந்த காலமும் கூட சந்திரகுப்தனின் காலத்தில் (380-430) காலப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல வேறு பல மூலாதாரங்களில் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் நம்பப்படுகிறது. அதுபோல காளிதாசன் என்கிற பெயரில் இன்னும் இன்னும் சில புலவர்கள் வெவ்வேறு காலங்களில் இருந்துள்ளார்கள் என்கிற தர்க்கமும் இருக்கிறது.

காளிதாசனால் எழுதப்பட்ட சகுந்தல, மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் போன்ற படைப்புகள் காளிதாசனின் பெயரை இன்றும் நிலைக்கவைத்திருகிறது. காளிதாசன் இயற்றிய இலக்கியங்கள் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் பேசியபோதும் காளிதாசனின் முடிவு பற்றிய கதை அந்தளவு பேசுபொருளாக இருந்ததில்லை என்பதை உணர முடிகிறது. காளிதாசனின் முடிவு பற்றிய கதைகள் இலங்கையின் இலக்கியத்தோடு தொடர்புடைய ஒன்றாக இருந்ததாலோ என்னவோ இலங்கையின் இலக்கியங்களில் நிறையவே பேசப்பட்டிருக்கிறது. இலங்கை அரசனான குமாரதாசனின் மிகவும் நெருங்கிய நண்பன் என பல இலக்கியங்கள் கூறுகின்றன.

காளிதாசனின் ரகுவம்ச காவியத்தால் ஈர்க்கப்பட்டவர் மன்னர் குமாரதாச, மன்னர் குமாரதாசனின் ஜானகிஹரணத்தால் ஈர்க்கப்பட்டவர் கவிஞர் காளிதாசன். காளிதாசன் இலங்கை வந்து குமாரதாசனின் நெருங்கிய நண்பனாக ஆகிறான். இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். குமாரதாச மன்னனின் அந்தப்புர நாயகியொருத்தியும்(18) காளிதாசனும் காதலிக்கிறார்கள் என்று அரசனின் ஒற்றன் தகவல் கூறுகிறான் கையும் களவுமாக இதைப் பிடிப்பதற்காக அந்தப்புரத்து மதிலில் குமாரதாச மன்னன் கவிதை வரிகளை எழுதி அதைப் பூரணப்படுத்துவோருக்கு எடைக்கு எடை சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துச் செல்கிறான். 


அக்கவிதையின் எஞ்சிய பகுதியை காளிதாசன் பூர்த்தி செய்கிறான். அந்தப்புரத்து நாயகி சன்மானத்தை தானே கவர்வதற்காக காளிதாசனை கொன்றுவிட்டு தானே அதை பூரணப்படுத்தியதாக மன்னனிடம் அறிவிக்கிறாள். அதைப் பூரணப்படுத்தும் ஆற்றல் காளிதாசனுக்கு மட்டுமே இருப்பதை அரசன் அறிவான். நடந்ததை அறிந்து மனமுடைந்து நண்பன் காளிதாசனின் உடலை எடுத்துச் சென்று தகனம் செய்து மனம் ஆறாமல் அதே தீயில் குதித்து தற்கொலைசெய்துகொண்டு  நண்பனோடு தானும் அக்கினியில் சங்கமமாகிறான்.(19)  கூடவே அவனின் ஐந்து அரசிகளும் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.(20)

இந்தக் கதையின் பல வடிவங்கள் உண்டு. ஆனால் காளிதாசன் இறுதியில் கொல்லப்பட்டார் என்பதில் அக்கதைகளில் மாற்றம் இல்லை.

காளிதாசனின் காவியங்கள் நாடகங்களாக இன்றும் இருப்பதைப் போல காளிதாசன் கொல்லப்பட்ட சம்பவத்தையும், காளிதாசர் – குமாரதாசர் ஆகிய இருவரின் நட்பைப் போற்றியும் நாடகங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானது மீரா காந்த், மனு விக்கிரமன் ஆகியோர் எழுதிய “அறிந்தேன் ஆனால் கண்டதில்லை” (Shrooyate Na Tu Dristryate/Suna HuaAndekha or “Heard, But Never Seen”) என்கிற தலைப்பில் உருவாக்கிய நாடகப் பிரதி. “அறிந்தேன் ஆனால் கண்டதில்லை” என்பது குமாரதாச மன்னன் எழுதி முடிக்காமல்; காளிதாசன் முடிப்பதற்காக விட்டுச் சென்ற வரிகள்.(21)

சிவாஜிகணேசன் நடித்த மகாகவி காளிதாஸ்

இந்தக் கதையையொட்டி திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன. தமிழ்ச் சினிமா வரலாற்றில் முதலாவது பேசும் படம்; 1931 இல் வெளியான “காளிதாஸ்” என்கிற திரைப்படம் தான். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே காலத்தில் வெளிவந்தது அத்திரைப்படம். அதன் விளம்பரத்திலேயே (First Tamil & Telugu Talkie) என்கிற விளம்பரத்தோடு வெளியான திரைப்படம் அது. தமிழில் முதல் பாடல் இடம்பெற்ற படமும் இதுதான். அதுவும் ஐம்பது பாடல்கள் அதில் இடம்பெற்றன.(22) அன்றைய நாளில் 8000 ரூபா செலவில் உருவாக்கப்பட்டு 75,000 ரூபா வசூலை சம்பாதித்த திரைப்படம். அழிந்துபோன சினிமாப் பிரதிகளில் அதுவும் ஒன்று.

ஆனால் இந்தத் திரைப்படத்தைவிட அதிக தொழில்நுட்ப நேர்த்தியுடன் “மகாகவி காளிதாஸ்” என்கிற திரைப்படம் 1966 இல் வெளிவந்தது. அத்திரைப்படத்தில் காளிதாசனாக சிவாஜி கணேசனும், அரசன் குமாரதாசனாக முத்துராமனும் (படத்தின் படி போஜா அரசன்) நடித்திருந்தார்கள்.(23)

இந்தத் திரைப்படத்தின் கே.வி.மகாதேவனின் இசையில் அமைந்த பாடல்கள் அன்று பிரபலமாக இருந்தது போல இன்றும் கேட்க இனிமையானவை. “மலரும் வான் நிலவும்...”, “யார் தருவார் இந்த அரியாசனம்...”, “கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்...”,  “காலத்தில் அழியாத, காவியம் தரவந்த...” போன்ற பாடல்களை இங்கு நினைவுக்கு கொண்டு வரலாம்.

இந்தத் திரைப்படத்தில் காளிதாசர், குமாரதாசர் ஆகியோரின் நட்பை மிகவும் அற்புதமாக நடிப்பால் ஆக்கியிருகிறார்கள்  சிவாஜியும், முத்துராமனும்.


கதையின் படி குமாரதாசனின் மனைவியர் இருவரில் ஒருவர் மோகனாங்கியின் (எல்.விஜயலட்சுமி) காதலை ஏற்கமறுத்து புறக்கணிக்கிறார் காளிதாசன். காளிதாசனின் “சகுந்தலை” காவியம் தன்னைப் பற்றிய காவியம் தான் என நம்புகிறார் மோகனாங்கி. காளிதாசனின் காதல் மறுப்பினால் வெறுப்படைந்த மோகனாங்கி காளிதாசனுக்கும் மற்றோர் அரசிக்கும் இடையில்  கள்ளக்காதல் இருப்பதாக வெகுஜனங்கள் மத்தியில் வதந்தியைப் பரப்பிவிடுகிறார். அப்படியோர் வதந்தி உலாவுவதை மன்னர் குமாரதாசர் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லும்போது அறிந்துகொள்கிறார். அதேவேளை தனது நண்பன் காளிதாசன் அப்படிப்பட்டவன் அல்லன் என்பதையும் அறிந்துகொள்கிறார்.

ஆனால் காளிதாசனின் மனைவி அந்த வதந்தியை நம்பியதால் துவண்டுபோன காளிதாசன் மனைவியிடம் இருந்து பிரிந்து செல்கிறார். “நீ மனைவியைப் பிரியலாம், மற்றவர்களை விட்டு பிரியலாம் எப்படி நண்பா என்னை விட்டுப் பிரிய உனக்கெப்படியடா மனம் வந்தது” என்று மன்னன் துவண்டு போகிறார். நண்பனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு வழி செய்கிறான். ஒரு கவிதையை எழுதி அதன் மீதிக் கவிதையை முடிப்பவருக்கு ராஜ்ஜியத்தில் பாதியை எழுதித் தருவதாக அறிவிக்கிறார். அது காளிதாசனால் மட்டும் தான் முடியும் என நம்புகிறார். அந்தப் பரிசை கவர்வதற்காக மோகனாங்கி சதி செய்கிறாள்.

விரக்தியுற்றுத் திரிகிற காளிதாசனைக் கண்டுபிடிக்கிறாள். ஆசைகாட்டி அரசனின் கவிதையின் மிகுதி வரிகளை எழுதிப் பெறுகிறாள். அரசனிடம் வந்து அக்கவிதையை தானே பூர்த்தி செய்துவிட்டதாக காண்பித்து பாதி ராஜ்ஜியத்தைக் கேட்கிறாள். கவிதையை வாசித்த அரசனுக்கு அது காளிதாசனின் வரிகள் என்பதை உணர நேரமெடுக்கவில்லை. அதேவேளை காளிதாசன் உயிரோடு இருக்க வாய்ப்புமில்லை என்று பதைபதைக்கிறான். என்ன நேர்ந்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்து “காளிதாசன் எங்கே..? உயிரோடு வைத்திருக்கிறாயா, கொண்டுவிட்டாயா” என மோகனாங்கியை ஆவேசத்தோடு வினவுகிறான். “காளிதாசனோடு வாழத் தான் முடியவில்லை, ஆனால் இனி காளிதாசனின் கடைசி அத்தியாயத்தின் இனி என் பெயரும் இருக்கும்” என கொக்கரிக்கிறாள். காளிதாசனின் தலையைக் கொய்து கொன்றுவிட்டதையும் ஒப்புக்கொள்கிறார் மோகனாங்கி. மோகனாங்கியை  அதே இடத்தில் கொன்று விடுகிறான் குமாரதாசர். காளிதாசன் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று அழுதுபுலம்பி தானும் களிதாசனோடு மரணிக்கிறார்.

ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் துண்டிக்கப்பட்ட சிவாஜியின் தலை பேசுகின்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிற விதம் அற்புதம்.

1983 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான “கவிரத்ன காளிதாச” என்கிற திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இறந்த காளிதாசும், போஜா மன்னரும் (குமாரதாசர்) அம்மன் அருள் பெற்று மீண்டும் உயிர்பெற்று எழும்புவதாக முடியும். அதில் காளிதசனாக நடித்தவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். (பிற்காலத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட அதே ராஜ்குமார் தான்.)

ஜானகிஹரண, குமாரதாச, காளிதாசன் பற்றிய தமிழ் திறனாய்வின் அவசியத்தை இக்கட்டுரைக்கான தேடல்களின் போது அதிகம் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஜானகிஹரண பற்றிய ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மொழிகளில் இருப்பதை இக்கட்டுரைக்கானத் தேடலில் அறிந்துகொள்ள மமுடிந்தது அவற்றில் முன்னுக்குப் பின் முரணான பல்வேறு தர்க்கங்கள் முன்வைக்கப்படுவதையும் காண முடிகிறது. தமிழில் இதைப் பற்றிய போதிய ஆய்வுகள் இல்லை என்றே கூற முடியும். அந்தத் தர்க்கங்கள் தமிழில் வெளிவருவதற்கான பிராரம்பமாக இக்கட்டுரையும் அமையும் என்றே நம்புகிறேன்.

ஜானகிஹரண உள்ளிட்ட இராமாயணத்தோடு சம்பந்தப்பட்ட இலக்கியங்களின் உள்ளடக்கத்தின் ஒப்பீட்டு ஆய்வு தமிழில் கவனிக்கப்படவேண்டிய, மேற்கொள்ள வேண்டிய முக்கிய ஆய்வென்பதைப் பரிந்துரைசெய்யலாம்.

அடிக்குறிப்புகள்

  1. Susantha Goonatilake, Introduction to the Issue on the Rāmāyaṇ, Journal of the Royal Asiatic Society of Sri Lanka, Vol. 59, No. 2, Special Issue on the Ramayana (2014)
  2. Janakiharana: An Epic Poem in Sanskrit by a celebrated Sinhalese Poet Kumaradasa, King of Ceylon; restored into Metre from a Sihalese Literal Paraphrase and edited with the Revised Sanna. By K.Dharmarama Sthavira. Printed & published D.D.J.Senanayaka, Arachchi (1891)
  3. Janakiharanam of Kumaradasa, cantos I-V ; with a Sanskrit commentary by Narayan Vasudeva Nigudkar and English notes, and translation by K.M. Joglekar, The Oriental Publishing co, Bombay, 1908
  4. Ibid (Preface)
  5. Ananda W.P.Guruge, Sri Lankan attitude to the Ramayana: a Historical analysis, Indologica Taurinensia (1993-1994)
  6. L. E. Blaze, History of Ceylon, The Christian Literature society for India & Africa, Ceylon Branch, colombo, 1933
  7. “பெறகும்பாசிரித்த” 1410 - 1468 காலப்பகுதியில் ஜெயவர்தனபுரவை ஆண்ட ஆறாவது பராக்கிரமபாகுவைப் பற்றிய வரலாற்றுக் காவியம் 
  8. T. W. Rhys Davids, Kalidasa in Ceylon, Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland / Volume 20 / Issue 01 / January 1888, pp 148 - 149
  9. Cecil Bendall, Kalidas in Ceylon The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, New Series,Vol. 20, No. 3 (Jul., 1888), p. 440
  10. A History of South India, K.A.Nilakanta Sastri, pagc 344, Oxford University Press,I966
  11. C. R. Swaminathan , Janakiharana of Kumaradasa: A Study, Motilal Banarsidass (December 8, 2000)
  12. James D'Alwis, (Janakiharana Chapter p188-195) Descriptive Catalogue of Sanskrit, Pali, & Sinhalese Literary works of Ceylon, Vol I, William Sken, Government Printer, Ceylon, 1870.
  13. Ajay Kamalakaran, Column | The mystery of Kerala’s Sri Lankan Ramayana manuscripts, (https://www.onmanorama.com/lifestyle/keralaspora/2019/09/05/janakiharana-ramayana-manuscript-in-kerala.html)
  14. Bulletin of the School of Oriental Studies, University of London, Vol. 4, No. 2(1926), pp. 285-293
  15. K. T. W. SUMANASURIYA, Reviewed Work: The Janakiharana of Kumaradasa by S. Paranavitana, C. E. Godakumbura, The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland, Vol. 11 (1967)
  16. F. W. Thomas The Janakiharana of Kumaradasa, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland (Apr., 1901)
  17. C.E. Godakumbura, Ramayana in Sri lanka and Lanka of the Ramayana, Journal of the Royal Asiatic Society of Sri Lanka Vol. 59, No. 2, Special Issue on the Ramayana (2014)
  18. அந்தப்புரத்து நாயகி என்று ஓரிடத்திலும், வேலைக்காரி, இன்னொரு இராணி என வெவ்வேறு இலக்கியங்களில் கூறப்படுவதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
  19. Ratna Chanda, A Critical Study of the Janakiharana of Kumaradasa, (Thesis submitted for the Ph.D.Degree of the University of Calcutta) - 2016
  20. K. Dharmarama Sthavira, Janakiharana: An Epic Poem in Sanskrit by a celebrated Sinhalese Poet Kumaradasa, King of Ceylon; restored into Metre from a Sihalese Literal Paraphrase and edited with the Revised Sanna, Satya/samuchchaya press Peliyagoda, 1891
  21. Meera Kant and Manu Vikraman, Heard, But Never Seen, Indian Literature, Vol. 51, No. 1, Sahitya Akademi(January-February 2007)
  22. The First Tamil talking picture, RANDOR Guy remembers… on the occasion of the 75th Anniversary of the Tamil talkie, Madras musing, Vol. XVI No. 14, 2006 Nov. 
  23. காளிதாசன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிகரான கதை மைசூரில் கண்டெடுக்கப்பட்ட ஜானகிஹரணத்தில் காணப்படுகிறபோதும், அங்கே குமாரதாசனுக்குப் பதிலாக போஜா என்கிற பெயரில் மன்னரின் பெயர் காணப்படுகிறது.
நன்றி - தாய்வீடு - யூலை 2021

யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன்

ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகிவிட்டிருக்கிறது.

தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.

70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.

யார் இந்த சிறில் மெத்தியு


அந்த பாதையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தான் சிறில் மெத்தியு. இலங்கையின் வரலாற்றில் பல இனவாதிகளை உருவாக்கிய முக்கிய கோட்டையாக  அன்றிலிருந்து இன்றுவரை திகழ்வது களனி பிரதேசம். அந்தத் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் சிறில் மெத்தியு. 1977 தேர்தலில் களனி தொகுதி மக்களால் வெற்றியடையச் செய்யப்பட்டவர் சிறில் மெத்தியு. அதே தொகுதியைச் சேர்ந்தவர்தான் ஜனாதிபதி ஜே.ஆர். தான் அமைத்த அமைச்சரவையில் ஜே.ஆர் சிறில் மெத்தியுவுக்கு தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சகத்தை வழங்கினார். 1980ஆம் ஆண்டு சிறில் மெத்தியு தனது அதிகார பலத்துடன் வடக்கில் அகழ்வாராய்ச்சிகளை விஸ்தரிப்பதற்காக அதிகாரிகளை அனுப்பி தனது வழிகாட்டலின் பேரில் மேற்கொண்டார்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” என்று ஒன்றை ஆரம்பித்து திருமலையில் புல்மோட்டை – குச்சவெளி பிரதேசத்தில்  “அரிசிமலை ஆரண்ய சேனாசனய” என்கிற ஒரு பௌத்த தளத்தை  ஆரம்பித்தார். சிறில் மெத்தியு தயாரித்த அறிக்கையை அதிகாரபூர்வமாகவே இலங்கையின் கலாசார உரிமைகள் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்திடம் கையளித்து அந்த பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும் முறைப்பாடொன்றை செய்தார். அந்த அறிக்கை இன்றுவரை சிங்கள தேசியவாதிகளால் போற்றப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு சிங்களவர்களின் பூர்வீக உடமை என்கிற வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த மதமும், அதன் செல்வாக்கும் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வரலாற்றை சிங்களத்துடன் இணைத்து சிங்கள பௌத்த வரலாறாக புனையும் சிங்கள பேரினவாதம் அதை காலாகாலமாக செய்து வருகிறது. தமிழ் பௌத்தம் என்கிற ஒன்று இருந்தது என்பதையும், அதன் செல்வாக்குக்குள் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதை உறுதி செய்வதன் மூலமே சிங்கள பௌத்த புனைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும். ஆனால் யாழ் – சைவ – தம ிழ் மையவாத மரபு அதற்கு இடங்கொடுப்பதில்லை. தமிழ் பௌத்தத்தை கொண்டாட அந்த மரபு இடங்கொடுப்பதில்லை. வெகு சில ஆய்வுகளிலேயே அப்படிக் காண முடிகிறது. 

தமிழர்களுக்கு உரிமை கோருவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. அது பயங்கரவாதக் கோரிக்கைகளே என்று நிறுவும் வகையில் அவர் நூல்களை எழுதி பிரசுரித்தார். “கவுத கொட்டியா?” (புலிகள் யார்? - 1980), “சிஹளுனி! புதுசசுன  பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) என்கிற நூல்கள் மிகவும் மோசமான இனவாத நூல்கள். தன்னை தீவிர சிங்கள பௌத்தனாக ஆக்கிக்கொண்ட சிறில் மெத்தியு தமிழ் விரோத போக்கையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக்கொண்டிருந்தவர்.

யாழ் நூலக எரிப்புக்கு சிறில் மெத்தியு மட்டும் பொறுப்பில்லை. அதற்கு ஏதுவான இனவாத அலை ஏற்கெனவே வளர்தெடுக்கப்பட்டு, நிறுவனமயப்படுத்தப்பட்டுத் தான் இருந்தது. ஆனால் சிறில் மெத்தியு அந்த உடனடி நிலைமைகளுக்குத் தலைமை கொடுத்தார் என்பதே வெளிப்படை.. இந்தக் காலத்தில் சிறில் மெத்தியு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் இனவாத விசர் நாயொன்றின் கர்ஜனைகளைக் காண முடியும். சிறில் மெத்தியுவின் இந்தப் போக்கை ஐ.தே.க அரசாங்கமும் ஜே.ஆறும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை சிறில் மெத்தியுவால் சகிக்கக் கூட முடியவில்லை. எம். சிவசிதம்பரம் சிறில் மெத்தியுவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாதம் நிகழ்ந்தது. தமிழ் மாணவர்களை குறுக்குவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்காக வினாத்தாள் திருத்துனர்கள் மோசடி செய்து அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அந்த விவாதத்தில் அவரை ஆதாரத்தை முன்வைக்கக் கோரியபோதும் கையில் ஒரு கடுதாசியை வைத்துக் கொண்டு கடைசி வரை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இன்றுவரை சிங்கள நூல்களில் சிறில் மெத்தியு கூறியது உண்மை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.  

“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது... கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” என எம். சிவசிதம்பரம் ஆத்திரத்துடன் உரையாற்றினார் .

வடக்கில் எழுச்சியுற்ற தமிழர் உரிமை இயக்கங்களை எதிர்கொள்ள இப்படியான சக்திகள் சிங்களத் தரப்புக்கு குறிப்பாக அரசாங்கத்துக்குள் தேவைப்பட்டுக் கொண்டிருந்தது.

ஐ.தே.வின் மானப் பிரச்சினைக்கு விலை

70 களில் இருந்து வடக்கில் தமிழ் இளைஞர்களின் எழுச்சி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. 77 கலவரம் நிகழ்ந்து அதன் மீதான விசாரணைகளின் முடிவுகள் கூட அந்தத் தணலை தணிய வைக்கவில்லை. மாவட்ட சபைகள் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு எப்பெரும் விலையைக் கொடுத்தாவது பல ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று களம் இறங்கியது ஐ.தே.க. அருவருக்கத்தக்க தேர்தல் மோசடிகளில் இறங்கியது பற்றி பல சர்வதேச அறிக்கைகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன. வாக்குப் பேட்டிகள் சூறையாடப்பட்டன. பொலிசாரின் கெடுபிடிகள் சாமான்ய மக்கள் மேல் அதிரித்திருந்தன.

இந்த நிலையில் ஐ.தே.க நியமித்திருந்த பிரதான வேட்பாளரான தியாகராஜா தமிழ் இயக்கங்களால் குறி வைக்கப்பட்டிருந்தார். அவர் 1981 மே 24 அன்று அவர் கொல்லப்பட்டார். ஐ.தே.கவுக்கு இது பேரிடியாக இருந்தது. வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப் போவதை உணர்ந்த அவர்கள் இதனை தமக்கெதிரான சவாலாகவே பார்த்தனர்.

தேர்தல் பணிகளை நேரில் நின்று கவனிப்பதற்காக ஜே.ஆர், அமைச்சர் சிறில் மெத்தியுவையும், மெத்தியுவுக்கு நெருக்கமான அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மே 30 ஞாயிறு அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அதைவிட ஏற்கெனவே அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து 500 பொலிசாரைக் கொண்ட ஒரு பெரும்படையும் அனுப்பப்பட்டது. ஒரு பெரும் அசம்பாவிதத்துக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதை யாழ்ப்பாண மக்கள் அறிந்திருக்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள்  பரபரப்புமிக்கதாக இருந்தது.  மே.31ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த மூன்று பொலிஸார் இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். இரண்டு பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்கள்.

அரச பயங்கரவாதம்

சொற்ப நேரத்தில் அங்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது. வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்து துன்புறுத்தினர். வீதி வெறிச்சோடியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தினர். 150க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையிடப்பட்டும் தீயிடப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கத் தொடங்கினர். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர் தப்பியோடினர்.


ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் எஸ். எம். கோபாலரத்தினம் கொடூரமாக தாக்கப்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. நான்கு தமிழர்கள் வீதிக்கு இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணப் பெரிய கடையில் கட்டியெழுப்பப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஓளவையார் சிலை, சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிலைகளும் உடைத்து துவம்சம் செய்யப்பட்டன.

இந்த ஆராஜகத்தை யாழ்ப்பாண விருந்தினர் விடுதியில் இருந்தபடி இயக்கிக் கொண்டிருந்தார்கள். சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க தலைமையிலான குழு. ஏற்கெனவே இறக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காடையர்களும் தம் பங்குக்கு கொள்ளைகளிலும், நாசம் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவசரகால சட்டம், அமுலில் தான் இருந்தது. சகலதும் முடிந்த பின்னர் தான் காலம் கடந்து  ஜூன் 2 அன்று ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தது அரசாங்கம். அந்த சட்ட நடவடிக்கைகள் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாமரர்களுக்கு இழப்பையும் தான் தந்தது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரச பயங்கரவாதம் இந்த சட்டங்களின் மூலம் மேலதிக அதிகாரங்களுடனும், வசதிகளுடனும் மக்களை கட்டிப்போட்டு சூறையாடியது. அவர்களின் சொத்துக்களை அழித்து சின்னாபின்னமாக்கியது.

இரவிரவாக நடந்த இந்தக் கொடுமைகளுக்கு இடைவேளை கொடுக்கவில்லை. அவர்களின் நாசகார தாகமும் அடங்கவில்லை. மறுநாளும் தொடர்ந்தது ஜூன் 1 அவர்கள் யாழ் பொது நூலகத்துக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த 97,000க்கும் மேற்பட்ட நூல்களையும், காலங்காலமாக பாதுக்காக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகளையும், பல கையெழுத்து மூலப் பிதிகளையும் சேர்த்து கொளுத்தினார்கள். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஒரேயொரு மூலப்பிரதியும் அழிக்கப்பட்ட அரிய ஆவணங்களுக்கு ஓர் உதாரணம்.

இரவிரவாக தீயில் பொசுங்கிக் கொண்டிருந்த அந்த புலமைச் சொத்துக்களுடன், பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கிய அந்த நூலகம் எரிந்துகொண்டிருந்த யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்த 74 வயதுடைய தாவீது அடிகள் இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிர்துறந்தார்.

“தமது புலமைச் சொத்தின் ஒட்டுமொத்த அழிப்பின் அடையாளமாகவே பார்த்தார்கள். பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது" என்று குறிப்பிடுவார் பேராசிரியர் சிவத்தம்பி.

மா.க. ஈழவேந்தன் ‘தமிழினத்தின் மீதான பண்பாட்டுப் படுகொலை’ என்றார்.

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ் மொழி, கலை, பண்பாடு என்பவற்றை சிங்கள சமூகத்து கொண்டு போய் சேர்க்கும் முக்கிய சிங்கள புலமையாளர். யாழ் பல்கலைக்கழகத்திலும் கற்றவர். அவர் இப்படி குறிப்பிடுகிறார்.

“ஆயிரக்கணக்கான வரலாற்று இதிகாசங்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். மிகவும் கிடைத்தற்கரிய நூல்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம். நாங்கள் எங்களுக்குத் தேவையான நூல்களை பலகலைக் கழக நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட போதும் அதை விட மேலதிகமான தேவைகளுக்கு யாழ் பொது நூலகத்தையே நாடினோம். உலகில் எங்கும் கிடைத்திராத நூல்களும், இந்தியாவில் கூட கிடைத்திராத பல நூல்கள் ஆவணங்களும் பாதுகாப்பாக அங்கு இருந்தன.  இனி அந்த நூல்களை எந்த விலை கொடுத்தாலும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. புராண வரலாற்று தொல்லியல் சான்றுகளை எரித்து அழித்ததற்கு நிகர் இது.”

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் இப்படி கூறுகிறார்.

“காலனித்துவகாலத்து நூல்களும், யாழ்ப்பாணத்தின் கல்வி மறுமலர்ச்சி சம்பந்தப்பட்ட மூல ஆவணங்களும், ஈழத்து தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் எங்கும் கிடைத்திராத நூல்களும் கூட இங்கு சேகரிக்கப்பட்டிருந்தன.”

அங்கே அழிந்தவற்றில் இவையும் அடங்கும்

  • கலாநிதி ஆனந்த குமாரசுவாமியின் கையெழுத்துப் பிரதிகள் 
  • திரு.சி.வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார் 100 நூல்கள்)
  • திரு ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850)
  • திரு.கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
  • ஏட்டுச் சுவடித் தொகுதி
  • அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட உசாத்துணை நூற் தொகுதி

இலங்கையின் அரச பயங்கரவாதம் காலத்துக்கு காலம் கலவரங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை கொடுத்து வந்திருக்கிறது தான். இதற்கு முந்திய 1939, 1956, 1958, 1977 முக்கிய கலவரங்களின் போதும் அழிவுகளை ஒவ்வொரு கோணத்தில் கண்ணுற்றிருக்கிறோம் ஆனால் 1981 இல் அழித்தவற்றில் தலையாய இழப்பாக, மறக்கவும், மன்னிக்கவும் முடியாத இழப்பாக பதிவானது யாழ் நூலக அழிப்பு.

கணேசலிங்கத்தின் வாக்குமூலம்

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாகவும் அறியப்பட்டது அது. 


யாழ் நூலக எரிப்புக்கு காரணமான எவரும் இறுதிவரை உத்தியோகபூர்வமாக தண்டிக்கப்படவில்லை. அவர்கள் எவரும் சட்ட ரீதியாக குற்றம் சுமத்தப்படவுமில்லை. ஆனால் 1993 மார்ச் மாதம் அப்போது வெளிவந்த சரிநிகர் பத்திரிகைக்கு ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இனப்பிரச்சினை குறித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் அவர் அன்றைய கொழும்பு மேயரும், ஐ.தே.க.வின் பொருளாளருமாக இருந்த கே.கணேசலிங்கத்துடன் ஒரு உயர்ஸ்தானிகரின் வீட்டு விருந்தொன்றில் பரிமாறிக்கொண்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

“அங்கு மது பரிமாறப்பட்டிருந்தது “க” போதை நிலையில் இருந்தார். “1981 யாழ் நூலக தீவைப்புக்கு நீங்களும் மெத்தியு போன்றோருக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்களே!” என்று கேட்ட கேள்விக்கு.

கணேசலிங்கம்: “அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காகத்தான் நாங்கள் போயிருந்தோம் என்பது உண்மை.... நானோ, சிறில் மெத்தியுவோ, காமினியோ பெஸ்ரல் பெறேராவோ காரணமல்ல. அதைச் செய்தது பொலிஸ் அதிகாரி ஹெக்டர் குணவர்த்தன தான். நாங்கள் அதைத் தடுக்கவில்லை.”

ஐவன்: “83 கலவரத்தில் சிறில் மெத்தியுவுக்கு நேரடிப் பங்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா? ”

கணேசலிங்கம்:

“1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மெத்தியுவும் மட்டுமல்ல அரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள்.. தமக்கு தேவையானதை செய்துகொண்டார்கள். காமினி, லலித், மெத்தியு, பிரேமதாச அனைவரும் பாவித்தார்கள். நாங்கள் எவரும் யோசிக்கவில்லை அது இவ்வளவு சிக்கல்களைக் கொண்டு வரும் என்று. சாதாரணக் கலவரத்தைப் போல எழும்பி அடங்கி விடுமென்றே கருதியிருந்தோம்”

ஐவன்: “இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்ய தமிழனான நீங்களும் எப்படி உடந்தையாக இருந்தீர்கள்.”

“......”

பிரேமதாச அரசாங்கத்தின் போது காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி பிரேமதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது  பிரேமதாச இந்த உண்மைகளை உடைத்தார். காமினி திசாநாயக்க நூலக எரிப்பில் ஆற்றிய பாத்திரத்தைப் பற்றிய உண்மைகளை அன்றைய ஜனாதிபதி பிரேமதாச மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

புத்தளம் முஸ்லிம் கல்லூரியில் பிரேமதாச ஆற்றிய உரையின் போது;

“1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடைபெற்ற வேளையில் கட்சிக்காரர்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பலபேரைச் சேர்த்துக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். வடக்கில் நடைபெற்ற தேர்தலை நடக்க விடாமல் குழப்பம் செய்தார்கள். யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொழுத்தியவர்கள் யாரென்று அறிய விரும்பினால் எம்மை எதிர்ப்பவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும்”

என்றார்.

அன்று அவரை எதிர்த்து நின்றவர்கள் வேறு யாருமில்லை காமினி திசாநாயக்க தலைமையிலான குழுவே.

இந்தக் குற்றச்சாட்டுக்கு காமினி பூசி மெழுகி எழுதியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி பிரேமதாச மீண்டும் பதிலளித்தார். அது பற்றிய செய்தி 1991 ஒக்டோபர் 26 ஆண்டு வெளியான ஈழநாடு பத்திரிகையில் செய்தியாயும் வெளியானது, அதில்

“வடக்கு கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார். இதற்கு பிரதானமான காரணம் திரு.காமினியே பத்து வருடங்களுக்கு முன் 1981ல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு கறை படிந்த துரயரமான சம்பவமாகும். மாவட்ட அபிரிவித்து சபை முறையை பாராளுமன்றத்தில் காமினி திசாநாயக்கவே எதிர்த்தார். தேர்தலுக்கு முதல் காமினி நிறைய ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார்.

மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில் சதி நாசவேலைகள் இடம்பெற்ற பின்னர் ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுக்களால் நீதியை பெறுவதற்கே எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியை குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாத செயலில் இறங்கினார்கள்..” 

அழிப்பின் சிகரம்

கடந்த 2016 டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி யாழ் நூலக எரிப்புக்கு முதற்தடவையாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பிரதமர் ரணில்.  ஆனால் அவரது உரையில் இரட்டை அர்த்தம் தரத்தக்க விளக்கங்கள் இருந்தையும் கவனிக்கலாம்.

"யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது ஒரு கொடூரகரமான குற்றம் என்பது இரகசியமல்ல. ஒரு சிலரின் கொடூரமான செயல்களால் தேசமே அவமானப்படுத்தப்பட்டது. யாழ் நூலக எரிப்பானது தமிழ் மக்களின் இதயத்துக்கு அடிக்கப்பட்ட கடும் தாக்குதல். ஆனால் தற்போது அந்த காயம் ஆற்றப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தினால் மூட்டப்பட்ட யுத்த நெருப்புக்கு சிங்கள மக்கள் எந்தளவு அனுபவிக்க வேண்டியேற்பட்டது... அதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்காக மன்னிப்பு கேட்கப் போபவர்கள் யார்? இந்த எரிப்பைப் பற்றி அன்றைய போலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்த்தன தயாரித்த இரகசிய அறிக்கையின்படி இந்த தீமூட்டலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள். அது பிரபாகரனின் ஆணை. யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சர்வதேச அனுதாபத்தை பெறுவதற்காக செய்த காரியம் என்று அந்த அறிக்கையில் இருந்தது...”

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் அதனைத் திரும்பப் பெறும் பாணியிலான கதை என்பதை விளங்கிக்கொள்ளலாம். யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது ரணில் அதே அரசாங்கத்தின் அமைச்சர் என்பதை நாம் மறந்துவிட்டோமா என்ன?

அவர் ஆதாரம் காட்டுகின்ற அதே போலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தனவின் கதையை இன்று சிங்கள ஊடகங்கள் அனைத்தும் பரப்பி வருகின்றன. யாழ் நூலகத்தை கொழுத்தியது சிங்களத் தரப்பே என்று இதுவரை நம்பியிருந்த இனவாத சாக்திகள் கூட; எட்வர்ட் குணவர்தனவை ஆதாராம் காட்டியபடி தமது கரங்கள் தூய்மையானவை, இரத்தக் கறையற்றவை என்று சாதித்து வருவதை பார்க்க முடிகிறது. யார் இந்த எட்வர்ட் குணவர்தன அவர் எதை எங்கு இப்படி சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.


முன்னாள் பொலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தன 2013 இல் 390 பக்கங்களுடன் படங்களுடன் கூடிய ஒரு நூலை வெளியிட்டார். நூலின் பெயர் “யாழ்ப்பாண நூலக எரிப்பு உட்பட மறக்கமுடியாத குறிப்புகள்” (Memorable Tidbits Including the Jaffna Library Fire) இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு 19.01.2013 அன்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில்  நிகழ்ந்தது. பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டம் அது. அந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தவர் நாடறிந்த பிரபல பேராசிரியர் கார்லோ பொன்சேகா. அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்பதையும் கவனிக்க வேண்டும். நீண்ட காலம் தமிழ் மக்களின் நீதியான அரசியல் கோரிக்கைகளை ஆதரித்து வந்தவராக அறியப்பட்டவரும் கூட.

அங்கு அவர் ஆற்றிய உரை முக்கியமானது.

“எட்வர்ட் குணவர்த்தன குற்றவியல் நீதியியல் பற்றிய கற்கையில் உயர் பட்டம் பெற்றவர். அவர் தான் பெற்ற ஆதாரங்களை வைத்து இந்த யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரிகள் புலிகளே என்கிறார். சிங்களவர்கள் காட்டுமிராண்டிகள் என்று உலகத்துக்கு புனைவதற்காக செய்யப்பட்டது. முழு உலகமும் புலிகளின் பிரச்சாரத்தை நம்பியது. நானும் அந்த காலப்பகுதியில் கடும் அரசாங்க எதிர்ப்பாளனாக இருந்தேன். யாழ் நூலக எரிப்பின் பின்னால் இருந்த அந்த வில்லன் காமினி திசாநாயக்க என்றே நானும் உறுதியாக நம்பியிருந்தேன். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் காமினி திசாநாயக்கவுக்கு பகிரங்கமாக தாக்கிப் பேசினேன். எட்வர்ட் குணவர்த்தனவின் இந்த நூலை வாசித்தறியும் வரை யாழ் நூலகத்தை எரித்தது காமினி திசாநாயக்க என்றே நம்பிவந்தேன்.


1993 ஆம் ஆண்டு யாழ் நூலகத்தைப் பற்றிய “murder” என்கிற கவிதையை வாசித்தேன் அது Ceylon Medical Journal இல் வெளியாகியிருந்தது. அது பேராதனை பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் எம்.ஏ.நுஹ்மான் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது. (என்று கூறிவிட்டு அதன் ஆங்கில வடிவத்தை வாசிக்கிறார்.)

அக்கவிதையை நான் என் தாய் மொழியான சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தேன். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதான போட்டியாளர்களான சந்திரிகாவுக்கும் காமினி திசாநாயக்கவுக்கும் இடையிலான போட்டியில் நான் சந்திரிகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். ஏறத்தாள 30 க்கும் மேற்பட்ட கூட்டங்களில் எனது உரையின் இறுதியில் இந்தக் கவிதையை சிங்களத்தில் வாசித்து முடித்தேன். (சிங்களத்தில் அதே கவிதையை வாசிக்கிறார்). இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பான காமினி திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக ஆகக்கூடாது என்றபோது கூட்டத்தில் இருந்து “ஜயவேவா... ஜயவேவா...” கோஷம் எழும்பின.

23.10.1994  அன்று பேருவளையில் இருந்து எங்கள் பிரச்சாரங்கள் ஆரம்பமாகி பயாகல, வாதுவை, பாணந்துறை, மொரட்டுவை, கிருலப்பனை என தொடர்ந்தது. அங்கெல்லாம் அந்தக் கவிதையை வாசித்தேன். அன்று உறங்கிக்கொண்டிருந்த போது என்னை எழுப்பி, “காமினி திசாநாயக்க பேலியகொட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுவிட்டதாக”க் கூறினார்கள். நான் உண்மையில் மிகவும் நொந்துபோனேன். காமினி திசாநாயக்கவை நான் தனிப்பட அறிவேன். அவர் ஒரு கனவான். என்னை எதிர்த்து ஒரு வார்த்தையும் அவர் கூறியதில்லை. நாங்கள் அரசியல் ரீதியாக வேறுபடுகின்ற போதிலும் அவர் எப்போதும் என்னிடம் மிகவும் மரியாதையாக இருந்தார்.

எட்வர்ட் குணவர்த்தனவின் நூலை வாசித்ததன் பின்னர் எபேற்பட்ட குற்றத்தை நான் விளைவித்திருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டேன். இப்போது நான் அதற்கு பிராயச்சித்தமாக திருமதி ஸ்ரீமா திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, லங்கா திசாநாயக்க ஆகியோரிடம் நான் செய்த தவறுக்காக மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். 

திரு. நவின் திசாநாயக்க, சிலுவையில் அறையப்பட்டவர்களுக்கு இயேசு கிறிஸ்து காட்டிய கருணையை எனக்கு காட்ட முடியும். "பிதாவே, அவர் அறியாமல் செய்த பாவத்தை மன்னித்தருளும்". இப்படி ஒரு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதற்கு எனக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த எட்வர்ட் குணவர்த்தனவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...”

கார்லோ பொன்சேகா 2019 இல் மறைந்தார். ஆனால் அவர் போன்ற ஒரு முக்கியமான பிரமுகர் ஏற்படுத்திவிட்டுப் போன இத்தகைய செயலால் சிங்கள மக்கள் மத்தியில் மேலும் இந்தக் கருத்துக்கு வலுவூட்டப்பட்டது. ஒன்று குற்றவாளிகளை தப்பவைத்தது. இரண்டாவது இதை விடுதலைப் புலிகளின் மீது (தமிழர் தரப்பிடம்) பழியைப் போட்டுவிட்டது. கார்லோ பொன்சேகா இதைப் பேசிய கால கட்டத்தில் அவர் ஒரு ராஜபக்சவாதியாக ஆகியிருந்தார்.

அவரின் இந்த உரையை பல சிங்கள ஆங்கில பத்திரிகைகளும் அடுத்த நாளே முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்தன. ராஜபக்சவாதிகளால் நடத்தப்பட்ட “நேஷன்” பத்திரிகையில் “மனசாட்சியுள்ள மனிதன்” என்று ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது. ஆனால் அதேவேளை “யாழ் நூலக எரிப்பில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டட்டிருந்த ஒரு பொலிஸ் அதிகாரியொருவரே அந்த சம்பவம் பற்றி அறிக்கை எழுதுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது” என்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதியவர் தமிழர் அல்ல. மனசாட்சியுள்ள இன்னொரு ஓய்வு பெற்ற போலிஸ் அதியாரியான டாஸ்ஸி செனவிரத்ன. 

டாஸ்லி செனவிரத்னவின் கட்டுரையைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான அன்றைய போலிஸ் அதிகாரி கே.கிருஷ்ணதாசன் இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் சமீபத்தில் எட்வர்ட் குணவர்த்தனவுக்கு எழுதிய பகிரங்க கடிதம் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது. யாழ் நூலக எரிப்பு தொடர்பாக அதுவொரு முக்கியமான கடிதம்.

ஓய்வுபெற்ற பிரதிப் போலிஸ் மாஅதிபர் எட்வர்ட் குணவர்த்தன!

பதில் : யாழ் நூலக எரிப்பு!

என் பெயர் கே.கிருஷ்ணதாசன். நான் ஜூன் 1967 முதல் டிசம்பர் 1986 வரை இலங்கை போலீஸ் சேவையில் பணியாற்றினேன், நான் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து, சிட்னியில் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறேன். எனது தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு கீழ் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. எச்செலான் எசெலோன் சதுக்க பொலிஸ் பயிற்சிப் பள்ளியில் நான் பயிற்சிபெற்ற ஜூன் 1967க்கும் டிசம்பர் 1967க்கும் இடைப்பட்ட காலத்தில் எங்கள் ADT நீங்கள் பணியாற்றியிருந்தீர்கள். அதன் பின்னர் மாத்தறையில் பணியைத் தொடங்கினேன். இறுதியாக அக்டோபர் 1983 முதல் மார்ச் 1986 வரை இறுதியாக நான் மட்டக்களப்பில் பணியாற்றினேன். அதன்பிறகு நான் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர் நீங்கள் பொலிஸ் தலைமையகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய வேளை நானும் அங்கு பணியாற்றியிருந்தேன். நான் உங்களைப் போன்ற ஒரு பழைய ஜோசபியன். (ஜோசப் கல்லூரியைச் சேர்ந்தவன்)

சமீபத்தில் இலங்கை செய்தித்தாள்களில் வெளிவந்த RTD எஸ்.எஸ்.பி திரு.டாஸ்ஸி செனவிரத்னா எழுதிய கட்டுரையோடு தொடர்புடைய ஒரு விடயத்துக்கு கருத்தளிப்பதற்காக இதை எழுதுகிறேன். திரு. டாஸ்ஸி செனவிரத்ன என்னுடைய ஒரு நல்ல நண்பர், அவர் தற்போது சிட்னியில் விடுமுறையைக் கழித்து வருகிறார். யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டவேளை நானும் கண்ணால் கண்ட ஒரு  சாட்சியாக இருந்ததால், அதைப் பற்றிய உங்கள் நூல் அறிமுக நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்குமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். நூலக எரிப்பைக் கண்ணால் கண்ட நேரடி சாட்சியாக இருந்த காரணங்களால் உங்களுடன் தொடர்புபடுத்த விரும்புகிறேன்.

ஜனவரி 1980 முதல் டிசம்பர் 1982 வரை யாழ்ப்பாண குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரியாக நான் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணப் பிரிவு கண்காணிப்பு சுப்பிரிண்டன்ட்டுக்கு கீழ் நான் நேரடியாகப் பணியாற்றினேன். அப்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நான் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரியாகவும் பணியாற்றினேன். அப்போது எனது மேலதிகாரியாக லலித் குணசேகர கடமையாற்றினார்.

31 மே 1981 இரவு 7.00க்கும் 7.30க்கும் இடையில் யாழ்ப்பான போலிஸ் வளாகத்தில் பிரதிப் போலிஸ் மா அதிபர் மகேந்திரனுடன் இருந்தேன். அப்போது யாழ் நூலகப் பகுதியிலிருந்து பெரிய புகை எங்களால் காண முடிந்தது. நூலகம் தான் எரிகிறது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். உடனடியாக போலிசாரையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு போகுமாறு பொலிஸ் மாஅதிபரால் பணிக்கப்பட்டேன்.

பொலிசில்  இருந்து 250 யார் தூரம் மட்டுமே இருந்த யாழ் நூலகத்துக்கு இரு சப் இன்ஸ்பெக்டர்களுடனும், பத்து கான்ஸ்டபில்களுடனும் விரைவாக சென்றடைந்தோம். அங்கே சுமார் 20 சீருடை அணிந்த இராணுவத்தினர் உள்ளே இருந்ததைக் கண்டோம். அவர்கள் அங்கே மேலும் எண்ணெய் ஊற்றி தீயை மூட்டிக்கொண்டிருந்தார்கள். புத்தக ராக்கைகளிலிருந்த நூல்களை அள்ளி அந்தத் தீயில் போட்டு கொளுத்திக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்ட அந்த இராணுவத்தினர் சில இராணுவத்தினருடன் எங்களருகில் வந்து AK47 துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியபடி எங்களை பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிவிடுமாறு சிங்களத்தில் கத்தினர். நான் உடனடியாக போலிஸ் அதிபருடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினேன். அவரும் எங்களைத் திரும்பிவருமாறு பணித்தார். நாங்கள் பொலிஸ் நிலையம் திரும்பியவேளை முழு நூலகக் கட்டிடமும் தீப்பிழம்பாக பரவியிருந்ததைக் கண்டோம்.

போலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டார் அதில் எந்தப் பலனும் இருக்கவில்லை. அங்கிருந்த நிலைமைகளால் அந்த இராணுவத்தினருக்கு எதிராக எதையும் செய்ய இயலாதவர்களாக நாங்கள இருந்தோம். சகலவற்றையும் கண்டும் கூட கையறு நிலையில் நான் இருந்தேன். நான் கண்ட அந்த காட்சிகளை என்றும் என்னால் மறக்கவே இயலாது. என் வாழ்நாள் காலம் முழுதும் என்னோடு கூடவே இருக்கும் நினைவுகள் அவை. பொலிஸ் நிலையத்துக்கு வந்ததும் நான் ஒரு அறிக்கையை எழுதினேன். போலிஸ் மா அதிபரும் அந்தக் கோரச் சம்பவம் பற்றி ஒரு அறிக்கையை எழுதினார். 

துரதிர்ஷ்டவசமாக இன்று அந்த மகேந்திரன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் இன்று என் கருத்துக்கு துணையாக அவர் இருந்திருப்பார். ஆனால் திருமதி மகேந்திரன் இன்றும் சிட்னியில் வாழ்கிறார். அவசியப்பட்டால் அவரிடம் நீங்கள் மகேந்திரன் இதைப் பற்றி பகிர்ந்தவற்றைப் பற்றி வினவலாம்.

தயவு செய்து டாஸ்ஸி செனவிரத்ன பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையை வாசியுங்கள். யாழ் நூலகத்துக்கு எப்படி தீயிடப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அவரோடு முன்னாள் ஓய்வுபெற்ற போலிஸ் மா அதிபர் சீ.எல்.ரத்னாயக்கவின் (என்னோடு கற்றவர்)  விபரங்களையும் அறியலாம்.

நான் எதைப் பார்த்தனோ, யாரைப் பார்த்தனோ அவற்றை நான் அறிக்கையாக எழுதியிருக்கிறேன். தீ பரவிக்கொண்டிருந்தபோது தான் நான் அங்கு சென்று அவற்றைப் பார்த்தேன்.

சமீபத்தில் உங்கள் புத்தகமான ‘யாழ்ப்பாண நூலக எரிப்பு உட்பட மறக்கமுடியாத குறிப்புகள்’ என்கிற நூலைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழர்களிடையே நிலவும் சாதி மோதலும், யாழ்ப்பாணப் பொது நூலகத்தை புலிகள் எரித்ததற்கு காரணம் என்று நீங்கள் அதில் கூறியுள்ளீர்கள்.

அரசாங்கத்தையும் படையினரையும் இதில் தொடர்புபடுத்துவதற்காக விடுதலைப் புலிகள் நூலகக் கட்டிடத்திற்கு தீ வைத்திருக்க வாய்ப்பில்லை.  மேலும் யாழ் நூலகமானது தமிழருக்கு மாத்திரமல்ல நாட்டின் சகலருக்குமானதாக இருந்தது. யாழ் நூலக எரிப்பு இன்று வரலாறாகிவிட்டது. அதுபோல அதை யார் செய்தார்கள் என்பதை அறிவார்ந்த மக்கள் அறிவார்கள்

ஒரு உயர்மட்ட நீதிக் குழுவை நியமிப்பதன் மூலம், யாழ்ப்பாண பொது நூலகத்தை எரிப்பு பற்றிய உண்மையை ஆராய அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டிய முக்கியமான நேரம் இது.

சுதந்திரமாக ஆராயாதவரை உண்மையைக் கண்டறிய முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரின் பதிவுகளையும் கருத்திற் கொண்டு, அந்த உண்மைகளை சுயாதீனமாகவும் புறநிலையாகவும் மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்தவும் உண்மைகளை நிறுவவும் காலம் கடந்துபோய்விடவில்லை.

உங்கள் கருத்துக்கள் பகிரங்க வெளிக்கு வந்துவிட்டதால் பின்வரும் விபரங்களை நான் பணிவுடன் உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்.

1. பொலிஸ் கடமைகளுக்கா அல்லது அரசாங்க தேர்தல் பணிகளுக்கா நீங்கள் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் விசேட பணிக்காக அனுபப்பட்டிருந்தீர்கள்?

2. நீங்கள் பொலிஸ் கடமைகள் தொடர்பாகத் தான் அங்கு வந்திருந்தீர்களென்றால் முக்கிய பணி தொடர்பில் ஏன் நீங்கள் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்துக்கு வந்து பிரதிப் பொலிஸ் மா அதிபரையோ மற்றும் அதிகாரிகளையோ சந்திக்கவில்லை? அணுகவில்லை? விளக்கம் கொடுக்கவில்லை? அல்லது உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பணி இரகசியப் பணியா? (‘under-cover’) அங்கு மற்றவர்கள் கண்ட எதுவும் உங்கள் பார்வைக்கு எட்டாதது எப்படி? சம்பவ தினத்தன்று நான் உங்களை யாழ்ப்பாண பொலிஸ் வளாகத்தில் பார்த்ததில்லை என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

3. நீங்கள் கூறும் இன்ஸ்பெக்டர் சத்தியனைத் தவிர வேறு எவராவது உங்களோடு அப்போது பணியில் ஈடுபட்டிருந்தார்களா? அப்படி பணியாற்றியிருந்தால் அவர்கள் யார்?

4. யாழ்ப்பாண நூலகம் எரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை சந்தித்து உங்களுக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு எது தடையாக இருந்தது. ஏனெனில் அந்தக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அல்லவா அனுப்பட்டிருந்தார்கள்?

5. நீங்கள் IGP யிடம்/ஜனாதிபதியிடம் சமர்பித்ததாகக் கூறும் அறிக்கையில் உங்கள் யாழ்ப்பாண விசேடபணி தொடர்பான விடயங்களும் உள்ளனவா?

நான் ஏன் இத்தனை காலமாக காத்திருந்தேன் என்தையும் இந்த இடத்தில்  கூறியாகவேண்டும். 

DIG/NR அறிக்கையில் நான் கண்டவற்றை ஏன் இவ்வளவு காலம் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்பதை இங்கே கூறியாகவேண்டும்.

இராணுவ ஆதிக்கம்  நிறைந்த நாட்டில் இராணுவத்தை சிக்கவைக்கின்ற விபரங்களை வெளியிடுவது தற்கொலை முயற்சிக்குச் சமம். மேலும் நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தாலும் இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன். இறுதியாக  போலிஸ் 67 பேட்ச் ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக 2014 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணித்தேன்.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்தை அறிய விரும்பும் எவருக்கும் நான் கண்டதை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நிலைமை இப்போது மாறியிருக்கிறது, எனவே நான் இப்போது உங்களுக்கு எழுதுகிறேன், ஏனென்றால் இப்போது நான் நடந்ததை பகிரங்கமாகச் சொல்ல முடியும்.

நான் மிகுந்த மரியாதையுடன் எதிர்பார்க்கும் தகவலைத் தெளிவுபடுத்த நீங்கள் உதவ முடிந்தால் உங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

உங்கள் உண்மையுள்ள

க்றிஸ் கிருஷ்ணதாசன்

பகிரங்கச் சவாலாக கேட்டிருந்த இந்தக் கேள்விகள் முழுமையாக டீ.பீ.எஸ்.ஜெயராஜ் அவர்களின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. இதை அவர் எங்கிருந்து பெற்றார். அவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது வேறெங்கேயும் பதிவான ஒன்றைத் தான் பதிவிடாரா என்கிற விபரங்கள் அதில் இருக்கவில்லை. ஆனால் அந்த இணையத்தளம் இலங்கைப் பற்றிய முக்கியமான ஒரு ஆங்கில இணையத் தளம் என்பதால் பரவலாக இது சென்றடைந்திருக்கவேண்டும். அது வெளியான திகதி 23.02.2015. ஆனால் இப்போது இத்தனை ஆண்டுகள் கழிந்தும் க்றிஸ் கிருஷ்ணதாசன் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் எட்வர்ட் குணவர்த்தன தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளிவந்ததில்லை.

யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றி தமிழில் மாத்திரம் ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அதுபோல சிங்களத்திலும் வெளிவந்த இரண்டு நூல்களைக் காண முடிகிறது. அதில் ஒன்று எட்வர்ட் குனவர்தனவினுடையது. இன்னொன்று சந்தரேசி சுதுசிங்க எழுதிய “எரிந்த இறக்கைகள்” (ගිනි වැදුණු පියාපත්) என்கிற நூல். இந்த நூலில் குற்றவாளிகளாக அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் சாடுகிறது.

ஆனால் பேரினவாதம் வெகுஜனமயப்பட்ட சிங்கள சமூகத்தில் எட்வர்ட் குணவர்த்தனவின் நூல் இப்போது பெரும் செல்வாக்கு பெற்று வருகிறது. அதில் கூறியபடி இதை யாழ் நூலகம் பிரபாகரனின் ஆணையின் பேரில் விடுதலைப் புலிகளே எரித்திருக்கிறார்கள் என்கிற கருத்தும் வேகுஜனமயப்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

யாழ் நூலக எரிப்பு நாள் ஆண்டுதோறும் நினைவு கூறப்படும்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் சிங்களத்தில் நடக்கின்ற பெருமளவு விவாதங்கள் அந்த இரத்தக்கறையை குறுக்குவழியில் கழுவ முயற்சித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

அடையாள அழிப்பின் சிகரம்

இந்த எரிப்பில் சம்பந்தப்பட்ட சிறில் மெத்தியு ஒரு வீரனாகவே இனவாதிகள் மத்தியில் இன்னும் திகழ்கிறார். காமினி திசநாயக்கவையும் காப்பாற்ற பெரும் எத்தனிப்பு எடுக்கப்படுகிறது. 1981 சம்பவத்தில் சிறில் மெத்தியுவை கண்டும் காணாது இருந்ததன் விளைவு தான் 1983 கலவரத்திலும் மெத்தியு அதனை தனக்கு கிடைத்த லைசன்சாக கருதி ஆடிய ஆட்டம். பிரேமதாசா போன்றோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அவர் விலத்தப்பட்ட நாடகம் வேறொரு உபகதை. உண்மையில் சிறில் மெத்தியுவை எவரும் விலத்தத் துணியவில்லை அவர் தானாக விலகினார் என்பது தான் உண்மை.


சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் Orville H. Schell, தலைமையில் உண்மையறியும் குழுவொன்று இதனை விசாரிப்பதற்காக 1982இல் சென்றது.  Orville H. Schell சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவராகவும் விளங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பக்கசார்பில்லாத புலனாய்வுப் பிரிவை நிறுவவில்லை என்றும், சுயாதீனமான விசாரணையொன்றை மேற்கொள்ளவுமில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 1981 மே, யூனில் ஏற்பட்ட அழிவிற்கு யார் பொறுப்பாளி என்பதைக் கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

யாழ் நூலகத்தை பின்னர் புனரமைத்து தமிழர்களுக்கு தந்ததாக சிங்கள அரசு கைகழுவிக் கொண்டது. ஆனால் கைநழுவிப் போன தமிழர் நம்பிக்கையை அவர்களால் திருப்பிப் பெற முடியவில்லை. அது அடுத்து வரும் பெரிய இழப்புகளுக்கு முத்தாய்ப்பாக ஆனது. ஒரு போராட்டத்தின் விதையாக ஆனது. தமக்கான தலைவிதியை தீர்மானிக்கும் வித்தானது.

யாழ் நூலக எரிப்பு அடையாள அழிப்பின் சிகரம்.

இந்த அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன றோட்டரிக் கழக வைபவத்தில் ஆற்றிய உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

யாழ் பொது நூலகமே எனது அரசியல் வாழ்வுக்கு அத்திவாரமிட்டது. (11.06.1982 வீரகேசரி செய்தி)

கால வரிசை:

  • 1933 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு இலவச தமிழ் நூலகத்தை திறக்கவேண்டும் என்கிற சிந்தனையில் அன்றைய நீதிமன்ற காரியதரிசியாக பணிபுரிந்த க.மு.செல்லப்பா இளைஞர் முன்னேற்ற சங்கத்திடம் தெரிவித்தார். இளைஞர்களுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று நூல்கள் சேகரிக்கப்பட்டன.
  • 11.12.1933 செல்லப்பா நூலகத்தின் அவசியத்தைப் பற்றி  “A central Free Tamil Library in Jaffna” என்கிற தலைப்பில் ஒரு அறிக்கை விட்டார்.
  • 04.06.1934 யாழ் மத்திய கல்லூரியில் நீதிபதி சீ.குமாரசுவாமி தமைமையில் கூடிய புலமையாளர்கள் மற்றும் அரச உயர் உத்தியோகத்தர்கள் அனைவரும் கூடி இதற்கான ஒரு குழுவை நியமித்தார்கள்.
  • 01.08.1934 ஆஸ்பத்திரி வீதியில் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்தார்கள். பலரும் நின்றுகொண்டு குவிந்திருந்து படிக்கத் தொடங்கினார்கள். இடப்பற்றாகுறையினால் பக்கீஸ் பெட்டிகளின் மீதிருந்து படித்தார்கள்.
  • 01.01.1935 நூலகம் உத்தியோகபூர்வமாக கோலாகலமாக யாழ்ப்பாண நகர சபையிடம் கையளிக்கப்பட்டது. 844 தரமான நூல்களுடன் (இவற்றில் 694 நூல்கள் பொதுமக்களால் அன்பளிப்பு செய்யப்பட்டவை) மாநகராட்சி மன்றத்தின் மராமத்துப் பகுதி அமைந்துள்ள பகுதியில் அது இயங்கியது.
  • 1936 மழவராயர் கட்டடத்துக்கு மாறியது.
  • 16.05.1952 “யாழ்ப்பாண மத்திய நூலக சபை” என ஒரு ஆளுநர் சபை உருவாக்கப்பட்டது.
  • 23-03-1954 இல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
  • 29.05.1954 நகரபிதா வணக்கத்துக்குரிய லோங்பிதா, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செசில் செயேஸ், அமெரிக்க தூதுவர் பிலிப் குறோல், இந்திய உயர்தாநிகராலயத்தில் முதல் காரியதரிசி சித்தாந்தசாரி ஆகிய ஐவரும் சேர்ந்து வீரசிங்க - முனியப்பர் கோயில் முன்னுள்ள முற்றவெளியில் அடிக்கல் நாட்டினார்கள். ஆசிய அபிவிருத்தி நிதியம் இந்திய உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட மேலும் பலர் நிதியுதவிகளை வழங்கினர். சிறிது சிறிதாக பலரது உதவிகளும் நூலகத்துக்காக  திரட்டப்பட்டன. நிதி சேகரிப்புக்காக களியாட்ட விழாக்களும் நடத்தப்பட்டன.
  • 17-10-1958 இல் மழவராயர் கட்டிடத்தில் இயங்கிய நூலகம் பொது நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது
  • 11.10.1959 நூலகத்தின் இட நெருக்கடி தொடர்ந்தும் இருந்த நிலையில் மேல் மாடி கட்டி முடிக்குமுன்பே கீழ் மண்டபத்தை நகர பிதா அல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடத்தினார். பழம்பெரும் நூல்களின் தொகுதிகளை கோப்பாய் வன்னியசிங்கம் மற்றும் பண்டிதர் இராசையனார் நினைவாகவும் கிடைத்தன. முதலியார் குல சபாநாதனிடமிருந்து பல அரிய நூல்கள் விலைக்கு கிடைத்தன. இப்படி பல அரிய ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும், கையெழுத்து மூலப் பிரதிகளும் சேகரிக்கப்பட்டன. 
  • 03.11.1967 மேல் தளம் பூர்த்தியாக்கப்பட்டு பின்னர் சிறுவர், பகுதி, அடுக்கு அறை என்பனவும் திறக்கப்பட்டன.
  • 01.06.1981 யாழ் நூலகத்தை சிங்களக் காடையர்கள் எரித்து சாம்பலாக்கினர். 97000க்கும் மேற்பட்ட நூல்கள், அரிய ஓலைச் சுவடிகள் அனைத்தும் எரித்துப் பொசுக்கப்பட்டன. பின்னணியில் அரசாங்க அமைச்சர்கள் காமினி திசாநாயக்க, சிறில் மெத்தியு. இந்த சம்பவத்தைக் கண்ட வணக்கத்துக்குரிய சிங்கராயர் தாவீது அடிகளார் திகைத்து மாரடைப்பில் மரணமானார்.
  • 07.02.1982 புதிதாக திருத்தபோவதாக அடிக்கல் நாட்டல்
  • 10.12.1982 இடைக்கால ஒழுங்காக ஒரு பகுதி திருத்தியமைக்கப்பட்டு வாசிகசாலையின் சிறுவர் பகுதி, உடனுதவும் பகுதியும் இயங்கத் தொடங்கியது.
  • 14.07.1983 இரவல் கொடுக்கும் பகுதி மீள இயங்கத் தொடங்கியது.
  • 10.01.1984 மாநகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு மட்டமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த நூலக உறுப்புரிமை யாழ் மாவட்டத்தினர் அனைவருக்குமாக விஸ்தரிக்கப்பட்டது.
  • 05.06.1984 மீண்டும் திறக்கப்பட்டது.

உசாத்துணை

  • பொன்விழாப் பொலிவு காணும் பொதுசன நூலகம்- க.சி.குலரத்தினம் (மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் – 1984
  • யாழ்ப்பாண பொதுசன நூலகம் (எரிக்கப்பட்டு 34 ஆண்டுகள்) 01.06.2015 – தங்க முகுந்தன்
  • மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது - 1981
  • யாழ்ப்பாணப் பொது நூலகம் – ஒரு வரலாற்றுத் தொகுப்பு எ.செல்வராஜா
  • யாழ்ப்பாணப் பொது நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது – வி.எஸ்.துரைராஜா
  • Thurairajah, V.S., The Jaffna Public Library Rises From Its Ashes, (2007), pg. 28
  • Selvarajah, N. ed., Jaffna Public Library- A historic compilation (2001)
  • http://www.vikalpa.org/?p=6895
  • REPORT OF AMNESTY INTERNATIONAL MISSION TO SRI LANKA 1982
  • Orville H.Schell, Chairman of the Americas Watch Committee, and Head of the Amnesty International 1982 fact finding mission to Sri Lanka
நன்றி - காக்கைச் சிறகினிலே
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates