Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

மரணப்படுக்கையில் கொலைஞனுக்கு மன்னிப்பு வழங்கச் சொன்னவரின் மகள் நான். அவர்களை விடுவியுங்கள்!


சிறையிலிருக்கும் முன்னால் போராளிகளை விடுவிக்கும் முடிவை இலங்கை அரசு எடுத்திருப்பது பற்றிய செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. சிங்கள ஊடகங்களில் இதனை கடுமையாக விமர்சிக்கின்ற வகையில் இனவாத செய்திகளும் நிறையவே வெளிவருகின்றன. இந்த நிலையில் 1999ஆம் ஆண்டு டிசம்பர் 18அன்று  ஜனாதிபதி த் தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பியபோதும் அவரின் வலது கண் நிரந்தரமாக செயலிழந்தது. தற்கொலை குண்டுதாரியை தயார்படுத்தி அனுப்பிய குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறை அனுபவித்து வருகின்றனர். அவர்களை இருபதாண்டுகளுக்குப் பின்னர் விடுப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

சந்திரிகா 1959 இல் தனது தந்தையை (பிரதமர் பண்டாரநாயக்க) துப்பாக்கி சூட்டினால் பறி கொடுத்தவர். அது போல 1988 இல் தனது கணவர்  விஜயகுமாரனதுங்கவை துப்பாக்கிச் சூட்டில் இழந்தவர்.

உங்களை கொலை செய்ய வந்தவரை விடுவிக்கும்படி நீங்கள் கூறியதாக ஒரு செய்தி வந்திருக்கிறது அது உண்மையா? 

ஆம் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னை கொலை செய்ய வந்த பெண்ணின் உடலில் அந்த குண்டுகளை கொண்ட பட்டியை கட்டிய இருவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்தவர்கள் இருவரும் கோவிலைச் சேர்ந்த பூசாரியும் அவரது மனைவியும். அவர்கள் இருவரும் இருபது வருடத்திற்கும் மேல் தண்டனை அனுபவித்து இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் சிறையில் இருப்பதால் என் கண்கள் திருப்பி கிடைக்கப் போவதுமில்லை. இந்த நாட்டில் நிலவுகிற இனப் பிரச்சனையும் தீரப் போவதில்லை. அவர்கள் சிறையில் இருக்கும்போதே அதாவது ஏழெட்டாண்டுகளிலேயே அவர்களை விடுவிக்கும்படி நான் அப்போதைய ஜனாதிபதியிடம் கோரவிருந்தேன். 

இந்த சூழலில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் விடுதலைப் போராளிகளை விடுவிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

அவரின் செயலாளர் என்னை அழைப்பில் வந்து என்னிடம் கேட்டார் மேடம் இதனை கேட்கவும் கஷ்டமாக இருக்கிறது கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவர் எதைக் கூறுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் ஏற்கனவே பத்திரிகைகளும் அதனை பார்த்து விட்டேன். எனவே அவர் தொடர்ந்து வினவு முன்னமே நான்; ஆம் நீங்கள் அதனை செய்யுங்கள் என்று கூறினேன். அதை செய்வதாயின் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் உடனடியாக செய்யுங்கள் என்றேன். அப்படி செய்வதில் எந்த சிக்கலும் கிடையாது. ஒரு பௌத்தராக மட்டுமல்ல எந்த மதப் பின்னணியை சேர்ந்திருந்தாலும் மன்னிப்பு என்பது வழங்கப்பட வேண்டிய ஒன்று. எனக்கு ஒரு கண் போனாலும் நான் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே அவர்கள் புணர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிப்பது நல்லது. அந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்ட மூன்றாவது நாள்; நான் சத்தியப் பிரமாணம் எடுக்கும் போதும் கூட எனது உரையில் நான் ஒன்றைக் கோரி இருந்தேன். 

அதாவது இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர என்னோடு கைகோருங்கள் என்று விடுதலைப் புலி இளைஞர்களிடம் கோரி இருந்தேன். உங்களை என் பிள்ளைகளைப் போல் நடத்துவேன். உங்களிடம் நான் பழிவாங்க மாட்டேன் எனக் கூறி இருந்தேன்.

அவ்வாறு நான் கூறியதற்கு பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. என் தகப்பனார் தன்னை சுட்ட பிக்குவுக்கு மன்னிப்பு வழங்கும் படி மரணப்படுக்கையில் கேட்டார். அந்தத் தகப்பனின் பிள்ளை நான்.

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு 2022

ஐரோப்பாவின் இலக்கியச் சந்திப்பு மலையக இலக்கியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. மலையகத் தமிழர்களின் நிலை, தாயகம் திரும்பிய தமிழர்களின் நிலை பற்றி பெர்லின் இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல் முக்கியமானது.

நடேசையர் நூற்றாண்டு நிறைவையொட்டி பெர்லினில் அப்பெரியார் நினைவு கூரப்பட்டமை மலையகம் பற்றிய சிந்தனையை புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உதவிற்று.

மலையகத்தின் சிறுகதைச் சிற்பியான அமரர் என்.எஸ்.எம்.ராமையா அவர்களின் 'கோயில்' என்ற சிறுகதை இலக்கியச் சந்திப்பில் கலைச்செல்வனால் வாசிக்கப்பட்டு, அக்கதை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதையும் நினைவு படுத்துவது பொருந்தும்.

பாரிசில் நிகழ்ந்த என்.எஸ்.எம்.ராமையாவின் நினைவுப்பேருரையும், 'மலையகப் பரிசுக்கதைகள்' நூல் வெளியீடும் பாரிசில் இடம்பெற்ற முக்கிய மலையக இலக்கிய நிகழ்வுகளாகும். நெதர்லாந்திலும் 'மலையகப் பரிசுக்கதைகள்' வெளியீடு நிகழ்த்தப்பட்டு , மலையக எழுத்தாளர்கள் பரந்த அறிமுகம் பெறுவதற்கான வாய்ப்பை நல்கியது.

லண்டனில் மாத்தளை சோமுவின் நூல்களை புதினம் ராஜகோபால் வெளியிட்டு, அவரது பல நூல்களை லண்டனில் அறிமுகப்படுத்த உதவியிருந்தார். மலையக இலக்கியம் பற்றிய மாத்தளை சோமு அவர்களின் இலக்கிய உரையும் பொருள் பொதிந்ததாக இருந்தது.

லண்டனில் நடைபெற்ற 'மலையகப் பரிசுக்கதைகள்' நூல் வெளியீட்டில் பேராசிரியர்.சிவசேகரம், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், நடிகர் சிலோன் சின்னையா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

'மலையகத்தின் நூற்றாண்டுத்துயர்' என்ற தொனிப்பொருளில் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் தெளிவத்தை ஜோசப், விஜயசிங்கம், வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் பங்காற்றி சிறப்புச் சேர்த்தனர்.

லண்டனில் இர.சிவலிங்கம் அவர்களின் மறைவிற்கான அஞ்சலி நிகழ்வில் எஸ்.முத்தையா, எஸ்.வி.ராஜதுரை, எம்.நேமிநாதன், என்.சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை மலையக்கல்விமான் ஒருவருக்கு புகலிட தமிழர் சமூகம் அளித்த பெருங்கௌரவமாக அமைந்தது.

நோர்வேயில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு நிகழ்வில் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50 ஆண்டு நிறைவு நிறைவு குறித்த உரையாடல் ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் வி.நடராஜா தலைமையில் சிறப்புற நிகழ்ந்தது.

லண்டனில் நடைபெற்ற 'கூலித்தமிழ்' வெளியீட்டு நிகழ்வில் அம்ஷன்குமார், வழக்கறிஞர் செ.சிறிக்கந்தராசா, இரா.ராமலிங்கம், மாதவி சிவலீலன் ஆகியோர்  கலந்து சிறப்பித்திருந்தனர். 

'மலையகத்தின் எழுச்சித்தலைவர்  பெ.சந்திரசேகரம்' என்ற நூலின் வெளியீட்டுவிழா ராம்ராஜ் அவர்களின் தலைமையில் லண்டனில் நடைபெற்றபோது, இலங்கையிலிருந்து எச்.எச்.விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மலையகம் குறித்த இந்நிகழ்வுகளின் உச்ச கட்ட வளர்ச்சியின் வெளிப்பாடாக ஜூன் மாதம் 11 ஆம் திகதி விம்பம் அமைப்பு ஒழுங்கு செய்திருக்கும் முழுநாள் மலையக இலக்கிய மாநாடு திகழ்கிறது.

காத்தாயி, கோகிலம் சுப்பையா, இர.சிவலிங்கம், சோ.சந்திரசேகரம் சி.வி.வேலுப்பிள்ளை,தமிழோவியன்,சாரல்நாடன் ஆகியோரின் நினைவரங்குகளில் மலையகம் சார்ந்த 26 நூல்கள் அறிமுகம் பெறுகின்றன. நாவல், சிறுகதை, கவிதை, கூத்து, அரசியல், சமூகவியல், சட்டம் சார்ந்த பல்துறை நூல்கள் இந்த மாநாட்டில் ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 

நோர்வே, டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து உரைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

ந.சரவணன், க.ஆதவன், கரவைதாசன், சுகன், டாக்டர்.தம்பிராஜா, யமுனா ராஜேந்திரன்,வழக்கறிஞர் செ.சிறிக்கந்தராசா, வி.சிவலிங்கம்,பால சுகுமார், ப.சந்தோஷ், எஸ்.தினேஷ்குமார்,  எம்.என்.எம்.அனஸ், எம்.பௌசர், ராகவன்,பெ.சிவஞானம் , மாதவி சிவலீலன், நவஜோதி யோகரட்னம்,தோழர் வேலு, கோகுலரூபன்,நா.சபேசன், மாஜிதா,அஞ்சனா, பாரதி சிவராஜா, வேணி சதீஸ், பூங்கோதை, மீனாள் நித்தியானந்தன் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து அணி சேர்க்கிறார்கள்.

சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' என்ற நூல் வெளியீடு இம்மாநாட்டின் பிரதான நிகழ்வாக அமைகிறது.

சாம் பிரதீபனின் 'மெய்வெளி' நாடக அரங்கின் தயாரிப்பில் 'காத்தாயி காதை' நாடகம் மாநாட்டின் முக்கிய கலை நிகழ்வாக  மேடையேறுகிறது. றஜீதா பிரதீபன் நாடகத்தில் பிரதம பாத்திரமேற்றுச் சிறப்பிக்கிறார். 

இலங்கையிலிருந்து மலையக இலக்கிய செயற்பாட்டாளர் எச்.எச்.விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பிக்கவிருக்கிறார். 

ஓவியர் கே.கே.ராஜா விம்பத்தின் சார்பில் மாநாட்டு நிகழ்சிகளை ஒருங்கிணைத்து வழங்குகிறார்.

(நன்றி - லண்டனிலிருந்து கே.கிருஷ்ணராஜா)

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு - ஹென்றி விக்கிரமசிங்க

வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை அன்று லண்டனில் மலையக இலக்கிய மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மலையகத் தமிழர்களின் வாழ்வு, கலாசாரம், கலைகள் சார்ந்து பல நிகழ்ச்சிகள் இதில் அரங்கேறவிருக்கின்றன.  

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக கோகிலம் சுப்பையா அரங்கு, இர.சிவலிங்கம் அரங்கு, சோ.சந்திரசேகரம் அரங்கு, சி.வி.வேலுப்பிள்ளை அரங்கு, தமிழோவியன் அரங்கு, சாரல்நாடன் அரங்கு, காத்தாயி அரங்கு என ஏழு அரங்குகளில் 23 மலையக நூல்கள் அறிமுகமாக இருக்கின்றன.

புனைவு இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் அல்-அஸுமத், மாத்தளை சோமு, மலரன்பன் ஆகியோரின் நாவல்களும் மு.சிவலிங்கம், பிரமீளா பிரதீபன், பதுளை சேனாதிராஜா, தங்கவேல் ஆகியோரின் சிறுகதைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அமரர்  உபாலி லீலாரட்னா எழுதிய சிங்கள நாவலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் 'தேத்தண்ணி' முக்கிய மொழிபெயர்ப்பு நாவலாக ஆய்விற்குத் தேர்வு பெற்றிருக்கிறது. எஸ்தர், வண்ணச்சிறகு (அரு.சிவானந்தன்) ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

பி.ஆர்.பெரியசாமி, ச.கீதப்பொன்கலம், ந.சரவணன், மல்லியப்புசந்தி திலகர், வரதன் கிருஷ்ணா, எம்.வாமதேவன், கந்தப்பளை தாமரை யு.யோகா  ஆகியோரின் சமூக, அரசியல் நூல்களும் இம்மாநாட்டில் முக்கிய கவனம் பெறவிருக்கின்றன. சோ.சந்திரசேகரம் , மு.நித்தியானந்தன், பொன். பிரபாகரன் ஆகியோரின்  ஆய்வுநூல்கள்  மீதான விமர்சனங்களும் உள்ளன.

மைத்ரி ஜெகதீசனின் தேநீரும் புரிந்துணர்வும் (Tea and Solidarity),  யோகேஸ்வரி விஜயபாலனின் முடிவில்லா சமத்துவமின்மை (Endless Inequality)  ஆகிய இரு ஆங்கில ஆய்வு நூல்கள் மீதான விமர்சனங்களும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளன. மெய்வெளி நாடக அரங்கிற்காக  சாம் பிரதீபன் தயாரித்தளிக்கும் 'காத்தாயி காதை' என்ற நாடகம் இம்மாநாட்டில் அரங்கேறுகிறது.

முக்கிய நிகழ்வாக   மு.நித்தியானந்தன், ஹெச்.ஹெச்.விக்ரமசிங்க தொகுத்து வழங்கும் சி.வி.வேலுப்பிள்ளையின் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' என்ற நூல் இம்மாநாட்டில் வெளியிடப்படவிருக்கிறது. பிரிட்டன், ஜெர்மனி, நோர்வே, டென்மார்க்,பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து 25 உரைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

விம்பம் அமைப்பின் சார்பில், ஓவியர் கே.கிருஷ்ணராஜா மலையக இலக்கிய மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்கிறார்.


Hendry Wickramasinghe அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.நன்றியுடன்

அரச எச்சரிக்கை "புலியை தோற்கடித்தோம்! ஒட்டகங்களே அடங்குங்கள்!"

 


 “புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் 

ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.”

அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது.

  மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தது. எப்போதும் ஒரு கெடுபிடி நிலை தொடரவே செய்யும் பகுதிகள் இவை.

அங்கு வாழும் முஸ்லிம் மக்களை எச்சரிப்பதற்காகவே இந்த “ஒட்டகங்களை அடங்கியிருக்கச் சொல்லும்” எச்சரிக்கை.

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதாக முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் அதேவேளை முஸ்லிம்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடங்கியிருக்க தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது.

அதுவும் அரச போக்குவரத்து வண்டியில் போக்குவரத்து சபையால் பொறிக்கப்பட்டிருகிறது. மதுகம டிப்போவுக்கு சொந்தமான 9532 இலக்கமுடைய பஸ்ஸிலேயே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. 

கோத்தபாய ஆட்சியமர்ந்தபின்னர் மிகவும் துணிச்சலாகவே பேரினவாத சக்திகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள அரச நிறுவனங்களை ஏனைய இனங்களுக்கு எதிராக பயன்படுத்திவருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது போன்ற விடயங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே பேரினவாதத்தின் அமுலாக்கத்துக்கு எதிராகவும், அதன் நிறுவனமயப்படுத்தலுக்கு எதிராகவும் வெகுஜன கூட்டு மனநிலையை கட்டியெழுப்ப முடியும். 

20வது திருத்தச்சட்டம் : கசிந்துவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு!

20 வது திருத்தத்திற்கு உயர் நீதிமன்றம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பை முடித்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. அந்தத் தீர்ப்பு பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அதில் உள்ள தகவல்கள் தற்போது கசிந்திருப்பதாகவும் அறியக்கிடைக்கிறது. இந்த தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

அரசாங்கம் முன்வைத்திருந்த 20வது திருத்தச்சட்ட நகலை எதிர்த்து மனித உரிமையாளர்கள், சட்ட நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என பலரால் 39 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

உயர்நீதிமன்றத்தின் "உயர்நீதிமன்றத்தின் முடிவு" என்று தலைப்பிடப்பட்ட 61 பக்க அறிக்கையில், அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில சிறிய மாற்றங்களை மாத்திரம் தவறு என்று அதில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 

  • பிரிவு 33 (1) இன் கீழ் ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குவது தவறு என்று குறிப்பிட்டிருக்கிறது. (20 இல் 3வது).
  • ஜனாதிபதிக்கு எதிராக மனித உரிமைகள் மீது வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தை நீக்குவது தவறு (20 இல் 5வது).
  • தேர்தலுக்குப் முடிந்து ஓராண்டின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவது தவறு (20 இல் 14வது).
  • தீர்மானம் 20 இன் 14) தேர்தல் ஆணையம் அளித்த அளவுகோல்களை நீக்குவது தவறு (20 இல் 20வது).
  • மற்ற அனைத்து தீர்மானங்களும் அரசியலமைப்பின் 83 வது பிரிவுக்கு உட்பட்டவை.

முறைப்பாடுகளை முன்வைத்தோர் விபரம்

சுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு! தேரர் புறக்கணிப்பு! - என்.சரவணன்

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம். நீதிமன்றத்துக்கும் போகப்போவதில்லையாம்.

அவருக்கு அவரின் மொழியில் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை இலங்கையில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா?

குறிப்பாக இத்தனை காலம் அரச நிறுவனங்களிலும் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச கடிதங்கள் அனைத்தும் தமிழில் தான் கிடைக்கின்றனவா?

ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக அவரே சமீபத்தில் கூறியிருந்தார். நிச்சயம் அதற்கான கடிதங்கள் எதுவும் அவருக்கு தமிழில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி கிடைத்திருந்தால் அவர் அப்போதே பொங்கி எழுந்திருப்பார். இப்போது இந்த விடயம் தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவின் கீழ் பல சிங்களவர்கள் கடுமையாக கொதித்தெழுந்து தமிழர்களை தூசனத்தால் திட்டித் தீர்ப்பதை அவதானிக்க முடிந்தது. சிங்கள பௌத்த நாடு இது என்பதை இவர்கள் அறிய மாட்டார்களா என்று ஆவேசமாக கருத்திட்டு வருகிறார்கள். இரண்டே மணித்தியாலத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் இதை பகிர்ந்துவிட்டார்கள்.

பௌத்தர்களே... சிங்கள பௌத்த மரபுகளை தேரர்கள் மட்டும்தான் காக்க வேண்டுமா...?

கிழக்கில் அழிக்கப்பட்டுவரும் பௌத்த மரபுகளை காக்க பாடுபடும் நமது ஆம்பிடியே தேரரை பலப்படுத்த 30 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ மங்கலாராமயவில் திறந்து தேரரைக் காத்திடுவோம்!

செப்டம்பர் 30ஆம் திகதி அவருக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சிங்கள பௌத்தர்களை அணிதிரளுமாறு போஸ்டர்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதை வைத்து சிங்கள ஊடகங்களும்ம் பேரினவாதத் தரப்பும் அடுத்த இரு வாரங்களுக்கு அரசியல் செய்யத் தான் போகின்றன. தற்போதைய பேரினவாத அரசுக்கு பெருந்தீனியாகத் தான் போகின்றன. தமிழர்களை நசுக்க இதையும் ஒரு காரணமாக கையிலெடுக்கத்தான் போகின்றன.

ஆம்பிடியே சுமணரதன தேரர் இலங்கையின் சண்டித்தனமான பிரபல தேரராக அறியப்படுபவர். கடந்த வாரம் கிழக்கில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்க முயற்சித்ததுயும் அவர்களை ஒரு கொட்டிலுக்குள் தடுத்து வைத்திருந்ததும் காணொளி செய்தியாக வெளி வந்திருந்ததை கவனித்திருப்போம். அரச அதிகாரிகள், போலீசார் என பலரை இவ்வாறு இதற்கு முன் தாக்க முனைந்தையும் அறிந்திருக்கிறோம். ஆனால் அவருக்கு எதிராக நீதித்துறை முறையாக செயற்பட்டதில்லை என்பதையே அவர் இன்னமும் சுதந்திரமாகவும், அதை அடாவடித்தனத்துடனும் நடந்துகொள்வதை வைத்து கணிக்க முடிகிறது.

கடந்த 22ஆம் திகதியன்று ஆம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க பீடாதிபதிகள் உடனடியாகப் புனர்வாழ்வளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார். 

அவரின் பௌத்த காவி உடை அவரின் அடாவடித்தனத்துக்கு வழங்கியிருக்கிற லைசன்ஸ் ஆக அவர் கருத்திக்கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதையே இவை காட்டுகிறது.

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்கிற ராஜபக்ஷ சித்தாந்தம்; சிங்களத்தையும், பௌத்தத்தையும், அராஜகத்தையும் அமுல்படுத்துவதை அல்லவா குறிக்கிறது.

நன்றி - தினக்குரல்

கடந்த தேர்தலில் 40%க்கும் குறைவாக சமூகமளித்த இன்றைய பிரதமர் வேட்பாளர்கள் இருவர்


கடந்த பாராளுமன்ற காலத்தில் 40% வீதத்துக்கும் குறைவான தடவைகள் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தவர்களில் இருவர் பிரதம மந்திரிப் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். ஒருவர் மகிந்த ராஜபக்ஷ, அடுத்தவர் சஜித். இந்த இருவருமே இம்முறை பிரதான தேசிய கட்சிகளுகளின் பிரதான போட்டியாளர்களாக காணப்படுபவர்கள்.

www.manthri.lk என்கிற இணையத்தளத்தின் கணிப்பின் பிரகாரம் மொத்த 225உறுபினர்களில்  22 உறுப்பினர்கள் 40% வீதத்துக்கும் குறைவான தடவைகளே சமூகமளித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் தெரிவான இவர்கள் கடந்த நான்காண்டுகளுக்குள் மொத்தம் 414 தடவைகள் பாராளுமன்றம் கூடியது. அதில் மகிந்த ராஜபக்ஷ 33% வீதம் தான் கலந்துகொண்டுள்ளார். சஜித் பிரேமதாச 39% வீதம் மட்டும் தான் கலந்து கொண்டுள்ளார்.

சமூகமளிப்பில் மோசமான இடத்தில் இருக்கும் இருவர் பிரேமலால் ஜயசேகர 21%, ஆறுமுகம் தொண்டமான் 22% ஆகியோரே.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வினைத்திறனை கண்காணித்து ஆய்வுத் தகவல்களை வெளியிட்டுவரும் www.manthri.lk இணையத்தளம் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக இருப்பதால் அவ்விணையத்தளம் அடிக்கடி தடைகளுக்கும், இணையத் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறது.


மன்னாரில் தமிழ்ப் பெயர்பலகை வீரவன்சவின் ஆணையால் மீண்டும் சிங்களத்துக்கு மாற்றம்

இன்று மாற்றப்பட்டிருக்கும் பலகை -
கடந்த சனிக்கிழமையன்று அமைச்சர் விமல் வீரவன்சவால் மன்னார் செல்வாரியில் பனை அபிவிருத்திச் சபையின் ‘ பனந்தும்பு உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்டது பெயர்ப்பலகையைத் தான்.

அதன் பெயர்ப்பலகை தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் இடப்பட்டிருந்தது.

அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையைக் கண்டு கடுப்பேறிய விமல் வீரவன்ச கடும் ஆவேசத்துடன் அதனை திறக்கப்பட்ட அந்த பலகையை கழற்றி எறிந்து விட்டு உடனேயே சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுததாகவும் வரும் வகையில் மாற்றும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டு அதை மாற்றியே விட்டார்.

அவ்வாறு மாற்றப்பட்டதை வெற்றிப் பெருமிதத்துடன் தான் அதை மாற்றிவிட்டதாக சிங்களவர்களுக்கு இன்று அவரின் முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார். இதை வரவேற்று சிங்களவர்கள் பலர் அவரை வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே விமல் வீரவன்ச கடந்த ஆண்டு யாழ் விமான நிலையம் தொடக்கப்பட்ட போது அங்கே பெயர்ப்பலகையில் தமிழில் முதலாவதாக எழுதியிருந்ததை கடுமயாக விமர்சித்து கூட்டங்களில் பேசியதுடன், பத்திரிகை மாநாடு நடத்தி கண்டித்ததும் நினைவிருக்கலாம்.

சிறுபான்மையினருக்கு எதிராக ஏதாவது அரச மட்டத்தில் ஏதாவது ஒரு அதிர்ச்சியை நாளாந்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சனிக்கிழமை திறந்துவைத்த நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த குறையை அந்த நேரத்திலேயே அதன் தலைவருக்கு நான் ஆனயீட்டதைத் தொடர்ந்து அது சரி செய்யப்பட்டிருக்கிறது. என்று இட்ட முகநூல் பதிவு. இதனை வெளியிட்ட இரண்டு மணித்தியாலத்தில் 3400 பேருக்கும் மேல் பகிர்ந்திருக்கிறார்கள். 1300 பேர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதை வரவேற்றே அக்கருத்துக்கள் காணப்படுகின்றன.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.

அரசியலமைப்பில்
அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.

அதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.
''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்"
என அரசியலமைப்பு கூறுகிறது. 

தென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.

மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்?


கோட்டாவின் மொட்டு கட்சியைச் சேர்ந்த ரிஷி செந்தில் ராஜ் whatsapp மூலம் கோட்டாவின் தமிழ் மொழியிலான விஞ்ஞாபனத்தைப் பகிர்கிறாராம்.
  1. ஏன் பொது இணைப்பொன்றை ஏற்படுத்தி பொதுவில் பகிர முடியாதா?
  2. சிங்களத்தில் வெளியிடும் போது அப்படித் தானே செய்தீர்கள்?
  3. அனைவரதும் தொலைபேசி இலக்கங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் என்ன?
  4. ஏன். மின்னஞ்சல் முகவரிகளைக் கேட்கவில்லை. அதில் பகிர முடியாதா?
  5. அல்லது பொது இடமொன்றில் தரவேற்றி அந்த இணைப்பைப் பகிர முடியாதா? கோட்டாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://gota.lk/ சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பகிர்ந்திருக்கிறீர்களே? பின் தமிழில் அது போல் பகிர்வதில் என்ன தடை என்ன தயக்கம்.
  6. யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய தமிழ் பகுதிகளில் தேர்தல் பிரச்சார கூட்டங்களும் முடிந்து தேர்தல் பிரச்சார முடிவுக்கு பத்தே நாள் தான் இருக்கும் நிலையில் தமிழில் வந்தென்ன வராவிட்டால் என்ன?
https://www.dropbox.com/s/lvjnrq0rkbh8zyr/Gotabaya_Tamil_Manifesto.pdf





இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல்களுக்கு ISIS இயக்கம் உரிமை கோரியிருக்கிறது (வீடியோ)


இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ISIS இயக்கம் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. இந்தச் செய்தியை முதலில் சர்வதேச ரொய்ட்டர் செய்தி நிறுவனம் அமாக் AMAQ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி வெளியிட்டிருந்தது.

அமாக் (AMAQ NEWS AGENCY - IS) செய்தி நிறுவனமானது ISIS இயக்கத்தின் மறைமுக செய்தி நிறுவனமாக கருத்தப்படுகிறது. ISIS இயக்கம் பற்றிய செய்திகள், தகவல்களைப் பெறுவதற்கு  இந்த அமாக் செய்திச் சேவையையே சர்வதேசம் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வருவது வழமை. ஏறத்தாழ அச்செய்திகள் மறைமுக உத்தியோகபூர்வ செய்திகளாக நம்பப்படுகிறது.

அவர்கள் இன்று வெளியிட்டிருக்கிற செய்தியில் இலங்கையில் 310 பேருக்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்து 600பேருக்கும் மேற்பட்டவர்களை படுகாயமடையச்செய்த கோர வெடிகுண்டுப் படுகொலைகளை தாமே மேற்கொண்டதாக உரிமை கோரியிருக்கிறார்கள். இது ஒரு உடனடி அறிவிப்பு என்கிற விததத்தில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத போதும் விரைவில் மேலதிக விளக்கங்களை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேவாலய குண்டு வெடிப்புகள்கொச்சிக்கடை - அபு ஹம்சா, நீர்கொழும்பு - அபி கலீல், மட்டக்களப்பு - அபு முஹம்மத்,
ஹோட்டல்கள்அபு உபாய்தா (சஹாறான் ஹசீம்), அபு அல் பாரா, அபு முக்தார் ஆகியோர் ஷங்க்ரிலா, சினமன் கிராண்ட், கிங்க்ஸ்பரி
தெமட்டகொட பொலிஸ் சோதனையின்போது வெடிக்கவைத்து இறந்த கொலையாளி அபு அப்துல்லா
இறுதியாக சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் போரில் சுருங்கிக்கொண்டிருந்த ISIS இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அவர்களை பலவீனப்படுத்தியிருந்தாலும் அவர்களை முழுமையாக அழித்துவிட முடியாது என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் ஒத்துக் கொள்கின்றனர். காரணம் அவர்கள் மரபு இராணுவத்தையோ, கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையோ நம்பியிருக்கும் இயக்கமல்ல. மாறாக சர்வதேச அளவில் சித்தாந்த ரீதியில் இஸ்லாமியர்கள் மத்தியில் மத அடிப்படைவாத கருத்துக்களை ஆழ ஊன்றவைத்திருக்கிறது. அவர்களின் sleeping cells உலகளாவிய ரீதியில் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு தயார் நிலையிலேயே இருக்கின்றன என்பதே சர்வதேச கணிப்பு.

இலங்கை அரசாங்கமும் எடுத்த எடுப்பில் இந்த சம்பவத்தை ISIS இயக்கத்தை குற்றம் சுமத்துவதை தவித்து வந்தததையும் உள்ளூரில் "தேசிய தவ்ஜீத் ஜமாஅத்" இயக்கத்தையே குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது நேரடியாக ISIS இயக்கத்தின் திட்டமிடலின் பேரிலேயே "தேசிய தவ்ஜீத் ஜமாஅத்" இயக்கமும் இதில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது.

முதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்


உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று இன்று 09.01.2019 பதவிப்பிரமானம் செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதிபதி பீ.ரி. சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

கடந்த 13.12.218 அன்று நீதிபதி ஈவா வனசுந்தர தனது நீதிமன்ற சேவையில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அதற்கடுத்த தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் ணீதியரசர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிதம்பரப்பிள்ளை துரைராஜா இலங்கையின் நீதியரசராக பதவி பெரும் முதலாவது மலையகத் தமிழர்.



"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் " - நோர்வேயில் "தமிழர் மூவர்" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்


தமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதாலாவது நோர்வே மொழியலமைந்த  நாவலைப் படைத்த றீற்றா பரமலிங்கம், "எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள்தன் எமது கதைகளைக் கூறுவார்கள் என்றார். இவரின் நாவலாகிய "La meg bli med deg" -உன்னோடு வரவிடு, நோர்வேஜியப் பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களிற்கான பரிசுக்கும் இவர் பரிந்துரைக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

வழமையிலும்விட இவ்வாண்டு மதிப்பளிப்பாளர்கள் கூடியிருந்த மக்களின் கவனத்தினையும் கரவொலியினையும் பெற்றனர். மாற்றுத் திறனாளியும் ஓவியருமாகிய திவ்யா கைலாசபிள்ளை தனக்கு ஊக்குவிப்புத் தருகின்ற பெற்றோரையும் நல்ல நண்பர்களையும் நன்றி கூர்ந்தார். திவ்யா கைலாசபிள்ளைக்கான மதிப்பளிப்பு வழங்கப் பட்டபோது மண்டபமே எழுந்துநின்று கரவொலி செய்தது. திவ்யா கைலாசபிள்ளையின் விடாமுயற்சியினை நடுவர்குழு முன்னிலைபடுத்தியிருந்தது.

பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள ஹம்சிக பிரேம்குமார், தமிழ் இளைஞர்கள் தமது பின்னணியினை அறியவேண்டும் என்று குறிப்பிட்டார். போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்றபோது, அவ்வாறான நிலைமகளில் வாழும் ஏனையு சமூகங்களிற்கும் உதவக் கூடியதான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்படவேண்டுமென்றார். தமிழ் இளையோர் அமைப்பில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹம்சிகா 2001ம் ஆண்டில் 8 வயதுச் சிறுமியாக நோர்வேக்கு தனது தாயாருடன் புலம்பெயர்ந்தவர். தனது தந்தையாரை போரில் இழந்த ஹம்சிகா மருத்துவத் துறையில் இரண்டாவது ஆண்டு மாணவியாக இருக்கின்றபோதும் அபிவிருத்தி சார்ந்த மேற்படிப்பையும் தொடர்கின்றார். தற்போது ஓஸ்லோ ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மாணவர் அமைப்புத் தலைவியாகவுள்ளார் ஹம்சிகா பிரேம்குமார்.

சட்டத்துறையில் தனது மேற்படிப்பைத் தொடரும் இளைய எழுத்தாளர் றீற்ரா, எழுதுவதே தனக்கு ஒரு ஆத்மதிருப்தியினைத் தருவதாகத் தெரிவித்தார். தனது பெற்றோருக்குத் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்ட போதிலும் தமிழ் இளையோர்கள் பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற மட்டும் தமது துறைகளைத் தெரியக் கூடாது என்றார். தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க உகந்த துறையினை அவர்களே திர்மானிக்கவல்லவர்களாக வளரவேண்டுமென்று பல இளையோர்யோர்களின் கைதட்டலுக்கு மத்தியில் கூறினார் அவர்.

தமிழ்3 இன் தமிழர் விருது நோர்வேயில் ஒரு அறியப்பட்ட விருது வழங்கும் வைபவமாக விளங்குகின்றது. ஒவ்வோராண்டும் நாடுமுழுவதிலுமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டு, சுயாதீனமான தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விருதுக்கான தெரிவு இடம்பெற்று வருகின்றது. இம்முறை ஊடகவியலாளர் சரவணன் நடராசா தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டுக்கான இளைய ஆளுமையாளர் மூவரைத் தெரிவுசெய்துள்ளனர்.

சரிநிகர் பத்திரிகை மூலமும் பல்வேறு நூல்கள் மூலமும் அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் நூலாசிரியருமாகிய சரவணன் நடராசா மற்றும் 2017ம் ஆண்டிற்கான தமிழர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவரும் இசைவிற்பனருமாகிய மீரா திருச்செல்வம் ஆகியோர் இவ்வாண்டு விருது வழங்கும் வைபவத்தினைத் தலைமை தாங்கி நடாத்தியிருந்தனர்.

ரீற்றா பரமலிங்கத்திற்கான விருதினை சங்கமம் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பேராசிரியர் ந.சிறிஸ்கந்தராஜாவும், ஹம்சிகா பிரேம்குமாருக்கான விருதினை மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களும்இ திவ்யா கைலாசபிள்ளைக்கான விருதினை தொழிலதிபர் மகா சிற்றம்பலம் அவர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.

இவ் விருது வழங்கும் வைபவம் பற்றி தமிழ்3 வானொலி ஒரு செய்திக் குறிப்பினை வழங்கியுள்ளது. நோர்வேயில் புலம்பெயர்ந்துள்ள முதற்தலைமுறை தமது பல்வேறு வாழ்க்கை அனுபங்களிற்கூடாக இளைய தலைமுறைக்குரிய வழியினைச் சமைத்துள்ளனர். இருந்தபோதும் பலதரப்பட்ட தளங்களில் நோர்வேயில் வாழும் இளைய சமூகம் தேடல் மிகுந்ததாகவுள்ளது. இந்தவகையில் அவர்களின் அனுபவங்களை ஏனைய இளையோருக்கு அறியவைப்பதுவும், அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவைப்பதுவுமே தமிழ்3 வானொலியானது தமிழர் மூவர் விருதினை ஆண்டு தோறும் வழங்கி வருவதன் அடிப்படை நோக்கம் என அந்தச் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நோர்வே தமிழ் இளையோர்கள் மத்தியில், முன்மாதிரியாகவும் (Role Models) உந்துதலாகவும் கொள்ளக்கூடிய இளையோர்களை அடையாளம் கண்டு மதிப்பளிக்கும் செயற்பாட்டினை 2015ஆம் ஆண்டிலிருந்து நோர்வே தமிழ் 3 வானொலி முன்னெடுத்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான இளைய ஆளுமையாளர்களுக்கான மதிப்பளிப்பு கடந்த ஞாயிறு (22.04.18) இடம்பெற்ற தமிழ் 3 இன் சங்கமம் நிகழ்வில் இடம்பெற்றது

-ராஜன் செல்லையா
படங்கள்: ரமேஸ் சிவராஜா







'மலையக மக்களும் தேசிய இனம் என்று புதிய யாப்பு அங்கீகரிக்க வேண்டும்'

இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாக பிரகடனப்படுத்தப்பட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களை கொண்டதான அதிகார அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் மலையக மக்களும் தனியான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தனித்துவத்தை பிரதிபலிக்கக் கூடியதாக அதிகார அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மலையகத்திலுள்ள சமூக அமைப்புகள் யோசனைகளை முன்வைத்துள்ளன.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக மக்களின் கருத்தறியும் குழுவிடம் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் அமர்வு இரண்டு நாட்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தனி அதிகார அலகு, தனி அடையாளம், காணி உரிமை உட்பட மலையக மக்கள் சார்ந்த பல்வேறு யோசனைகள் இந்தக் குழுவிடம் பலரும் முன்வைத்துள்ளனர்.

மலையக ஆய்வகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில், இலங்கை ஒரு பல்லின- பல்கலாசார-மதச்சார்பற்ற நாடு என்று புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தேசிய இனங்களாக சிங்களவர், வடக்கு-கிழக்கு தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம் என அரசியல் யாப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாக பிரகடனப்படுத்தப்பட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களை கொண்டதான அதிகார அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறே, மூன்று மாகாணங்களிலும் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை உள்ளடக்கி நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியதாக நிலத் தொடர்பற்ற அதிகார பகிர்வு தேவை என்றும் கோரியுள்ளதாக மலையக ஆய்வகத்தின் பிரதான செயற்பாட்டாளரான ஏ. லோறன்ஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பிராந்திய ரீதியான அதிகார பகிர்வில் பொலிஸ் அதிகாரத்தை தாங்கள் வலியுறுத்தாவிட்டாலும் காணி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பபட வேண்டும் என்றும் துனை ஜனாதிபதிகளாக மலையகத் தமிழர் உட்பட மூன்று சிறுபான்மை இனங்கள் சார்பிலும் மூன்று பேர் தெரிவாகக் கூடிய வகையில் அரசியல் யாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் லோறன்ஸ் கூறினார்.

நன்றி - BBC

ஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள்


இன்று நிகழவிருக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் “சாகித்திய விருது” வளங்கப்படுபவர்களில் இரு பெண் ஆளுமைகள் இடம்பெறுகின்றனர். இருவருமே இளம் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் “நமது மலையகம்” சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். “நமது மலையகம்” இணையத்தளத்தில் இருவரதும் தரமான படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்விருது அவர்களின் வளர்ச்சிக்கு மேலும் பலமூட்டட்டும்.


ஜீவா சதாசிவம்
மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் உதவி பயிற்சி ஆசிரியராக (Trainee Sub - Editor) அறிமுகமானவர்.  முதல் ஆறு மாதம் தினக்குரலில் பெற்ற  பயிற்சியின் பின்னர் பத்திரிகைத்துறையை தனது முழுநேர பணியாக ஆக்கிக் கொண்டவர். அதனை திறம்பட நேர்த்தியாக செயற்வதற்காக ஊடகத்துறையில் உள்ள சக நுணுக்கங்களையும் கற்றிருக்கிறார். ஊடகத்துக்கான கணினித்துறை நுட்பம், தட்டச்சு, பக்க வடிவமைப்பு, புகைப்படவியல், கிராபிக் தொழிநுட்பம், இணையத்தள வடிவமைப்பு என சகலதையும் கற்றுகொண்டார்.

தினக்குரலில் இரண்டரை வருட காலத்திற்குள் பத்திரிகைக்கு தேவையான பயிற்சி, பத்திரிகை ஆசிரியருக்கு தேவையான பயிற்சி போன்ற பலதரப்பட்ட விடயங்களை அங்குள்ள ஏனைய ஆசிரியிர்களுடன் இணைந்து கற்றுக்கொண்டதுடன் தனது தேடலை விரிவாக்கிக் கொண்டவர்.

அந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியர் (Sub - Editor), செய்தி சேகரிப்பாளர் (Reporter), பாராளுமன்ற செய்தியாளர் (Parliement Reporter) என்றவாறு செயற்பட்டதுடன் மலையக செய்திகளுக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.

ஞாயிறு தினக்குரல் பகுதிக்கு விவரணக்கட்டுரைகள் எழுதுவது, நூல் விமர்சனங்கள்  எழுதுவது, நேர்காணல்கள் செய்வது போன்ற பல விடயங்களிலும் ஈடுபட்டு வீரகேசரியில் 2009ஆம் அண்டு உதவி ஆசிரியராக இணைந்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் ஞாயிறு வீரகேசரியில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்ததுடன் மலையகத்துக்கென ஒரு இணைப்பிதழாக வெளிவரும் 'குறிஞ்சிப்பரல்கள்எனும் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார். வீரகேசரி இணையத்தளத்தில் சுமார் ஆறுமாதங்கள் கடமையாற்றியதுடன் அதற்கான செய்திகள் எழுதுதல் வீடியோ நேர்காணல்களையும் மேற்கொண்டு வந்தார்.

இப்போது வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் செய்து வரும் அதேவேளை வாராந்தம் புதன்கிழமைகளில் விஷேட அரசியல் பத்தியாக அலசல் என்கிற பத்தி எழுத்தின் மூலம் அவரின் பன்முகப் பார்வையை நிரூபித்து வருகிறார்.

வீரகேசரி நாளிதழின் கலை இலக்கிய விடயங்களை சுமந்து வாராந்தம் சனிக்கிழமைகளில் வெளியாகும் 'சங்கமம்' சிறப்பு பகுதிக்கு பொறுப்பாசிரியராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி வருகிறார்.

“சங்கமம்” பகுதி ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி பல சந்தர்ப்பங்களில் முற்போக்கான வழியில் தரமான உள்ளடக்கங்களுடன் அதனை நடத்தி வருவது அதன் முக்கிய சிறப்பு. இன்றைய தேசிய வெகுஜன பத்திரிகைச் சூழலில் அப்படி தரமான ஒரு இலக்கிய இதழாக நடத்திச் செல்வது சவால் மிகுந்த விடயமே.

கலை, இலக்கிய கட்டுரைகள் , நேர்காணல்கள் (உள்நாடு, புலம்பெயர் எழுத்தாளர்கள்) , இலக்கிய பத்தி போன்ற பலதரப்பட்ட விடயங்களை செய்துவருவதுடன் பல புதிய விடயங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராக இருந்து கொண்டு ஊடகத்துறைக்கும் தனது பரவலான கடமையை ஆற்றிவருகிறார். ஊடகத்துறை சார்ந்த பல பயிற்சிகளுக்கு இலங்கையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பயிற்சியாளராகவும் கலந்து வருகிறார்.

தனது எழுத்துக்களை பதிவு செய்வதற்காக “அலசல்” (https://lindulajeeva.blogspot.no/) என்கிற இணையத்தளத்தையும் தொடக்கி இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 6 அன்று ஜீவாவுக்கு தமிழகத்தில் “இலங்கை ஊடகத் துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமைக்கான “பூவரசி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பத்திரிகைத்துறையில் பத்தாவது வருடத்தைக் கடக்கும் ஜீவா சதாசிவம் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறையில் முக்கிய பெண் ஆளுமையாக தன்னை பலப்படுத்திவருகிறார்.


தயானி விஜயகுமார்

நுவரெலியா மாவட்டத்தில் இராகலை நகருக்கு அண்மித்த புறூக்சைட் எனும் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட தயானி விஜயகுமார் விஜயலக்ஷ்மி தம்பதிகளின் மூன்றாவது புதல்வியாவார். இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் பாடசாலையில் மிகச் சிறந்த சித்தியினை பெற்று பாடசாலையில் முதல்தர பெறுபேறினை பெற்றுள்ளதோடு க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் 4வது இடத்தை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இவர் பாடசாலை கல்வியை மேற்கொண்ட காலத்தில் குப்பி லாம்புகளோடு போராடி கற்றதோடு அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கையில் இன்னலுற்று முட்டி மோதி வெளிவந்தவர்.

2010ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து அரசறிவியல் பாடத்தை சிறப்பு கற்கையாக தெரிவு செய்து 2015 ஆம் ஆண்டு இளங்கலைமாணி பட்டத்தினை பூர்த்தி செய்துள்ளதோடு 2017ஆம் ஆண்டு அதே பாடத்தில் முதுமாணி பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கையினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற போது கண்டித் தமிழ்ச் சங்கத்தில் கவியரங்கம் ஒன்றில் பங்குபற்றியதோடு "ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு" என்ற தலைப்பில் கவிதை வாசித்து பலரின் பாராட்டை பெற்றார். பல்கலைக்கழக இதழான இளங்கதிர் இதழில் கவிதை எழுதியதோடு பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு கட்டுரையை எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தினக்குரல் பத்திரிகைக்கு அரசியல் மற்றும் சமூகம் சார் கட்டுரைகளை எழுதத் தொடங்கிய இவர் சில காலம் தமிழ்த்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றினார்.

2016 ஆம் ஆண்டு கவிதைத் துறையில் காலடி வைத்தார். இவரின் கவித்திறமையை கண்டு வியந்த தென்னிந்தியாவிலுள்ள "வளரி" கவிதை நூலின் இதழாசிரியர் அருணா சுந்தரராசன் அவர்கள் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் உதவியுடன் முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட உதவி செய்தார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37வது வெளியீடாக இராகலை தயானியின் "அக்கினியாய் வெளியே வா" கவிதைத் தொகுப்பு வெளியானது. இவரின் கவிதைத் தொகுப்பு சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டதாகவும் உயிர்ப்புள்ள,புரட்சிகரமான கவிதைகளை உள்ளடக்கியதாகவும் எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவரது கவிதைத் தொகுப்பு பற்றிய திறனாய்வு கட்டுரைகள் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி,உதய சூரியன் உதயம்போன்ற பத்திரிகைகளில் வெளியாகின.

இவரின் நேர்காணல்கள் தினக்குரல் பத்திரிகையிலும் கல்குடா நேசன் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டதுடன் வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.

தற்போது நு/ஹ/கபரகல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிவரும் தயானி தொடர்ந்தும் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார்.


திண்டுக்கல்லில் மலையக இலக்கியக் கருத்தரங்கு


மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாட்டு திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் தமிழ்துறையினர் மலையக இலக்கியம் என்ற தலைப்பில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினை செப்டெம்பர் 8ஆம், 9 ஆம் திகதிகளில் நிகழ்ந்த ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

இது தொடர்பான நிகழ்ச்சி நிரலையும், விரிவான ஏற்பாடுகளையும் மேற்படி பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பா.ஆனந்தக்குமார், அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கத் தலைவர் மாத்தளை சோமு, மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச்செயலாளர் இரா.சடகோபன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

“ஜெனீவா யோசனையை நிறைவேற்ற மாட்டோம்!” – இலங்கை அரசு


ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்திருக்கும் அறிவித்தலில் “மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டிருந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தப் போவதில்லை” என்று முதற்தடவையாக அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரதான யோசனையாக சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலான ரோம பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடவேண்டும் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களையும், மனித உரிமைகள் காரியலாயத்தையும்,  உள்ளகப் பொறிமுறைகளையும் உருவாக்கும்படி அறிவித்திருந்தது.

ஆனால் அதனை தூக்கியெறிந்துள்ளது என்று பிரபல சிங்கள நாளிதழான “திவய்ன” பத்திரிகையின் இன்றைய ஞாயிறு இதழின் முதற் பக்கத்தில் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது. தமிழ் தரப்பை இன்னமும் இந்த செய்தி போதியளவு சென்றடையவில்லை என்று தெரிவிக்கிறது.

யுத்தம் நடந்து முடிந்து 8 வருடங்களாக இலங்கை அரசு குற்றங்களில் இருந்து தப்புவதற்காக நுட்பமாக பல்வேறு ராஜதந்திர திட்டங்களை மேற்கொண்டிருந்தது. இலங்கை அரசி அந்த வகையில் பெருமளவு வெற்றியை எட்டியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

இதற்கான ராஜதந்திர நகர்வுகளை “நல்லாட்சி அரசாங்கம்” மிகவும் கைதேர்ந்த அமைச்சரான மங்கள சமரவீரவை பயன்படுத்தி பெருமளவு வெற்றியீட்டியிருந்தது.

ஒவ்வொரு வருடமும் மனித உரிமைகள் கவுன்சிலில் சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிப்பது, இழுத்தடிக்கப்படும் காலத்தில் சம்பந்தப்பட்டவர்களை சரிகட்டுவது.

தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும், இராணுவங்களை வெளியேற்றி காணிகளை மேலே ஒப்படைப்பதாகவும், அரசியல் தீர்வுக்கான வழிகளை மேற்கொண்டு வருவதாகவும் பாசாங்கு செய்து வந்தது அரசாங்கம்.

இதனை நம்பி ஜெனிவாவைல் பல நாடுகள் இலங்கை தொடர்பில் நிகில்வுப் போக்கைக் கையாண்டு வந்தன. கால அவகாசம் கேட்ட போதெல்லாம் கொடுத்து இந்த 8 ஆண்டுகளையும் இழுத்தடிக்க வழிவிட்டது.

அவற்றைக் கட்டி GSP பிளஸ் போன்ற தடைகளை நீக்குவதிலும் அரசாங்கம் வெற்றி பெற்றது. இந்த 8 வருட காலத்திற்குள் நீதி கோரிய தமிழ் மக்களின் ஆத்திரத்தையும் ஓர்மத்தின் அளவையும் குறைக்கப் பயன்படுத்தியது. அது போல சர்வதேச நாடுகள் வேறு பிரச்சினைகளில் தமது கவனத்தை திசைதிருப்பி இலங்கை பிரச்சினையின் மீதான கவனத்தின் அளவை குறைத்துக் கொண்டு வரவும் நேர்ந்தது.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் ராஜதந்திர அணுகுமுறைகள் இந்த ஒன்றரை வருடத்தில் பெரும் வெற்றியை அடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும். இப்போது மங்கள சமரவீரவை அந்த அமைச்சுப் பதவிலிருந்து மாற்றி ரவி கருணாநாயக்கவுக்கு கொடுத்ததன் பின்னணியில் இந்த விடயங்களும் சமபந்தப்பட்டிருக்கின்றன என்றே கருத முடிகிறது.

வடக்கில் மாகாணசபை சர்ச்சைக்குள் தமது முழுக் கவனத்தையும் குவித்திருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளின் கவனத்துக்கும், தமிழ் ஊடகங்களின் கவனத்துக்கும் இது செல்வது மிகவும் அவசியம்.

"ஞானசார தேரரும் சிவாஜிலிங்கமும் மச்சான்மார்" சிங்களப் பத்திரிகைக்கு மனோ கணேசன்!


"கலகொட எத்தே ஞானசார தேரரும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் மச்சான்மார் போல" என்றும் அவர்கள் இருவரும் ஒரே பணியைத்தான் மேற்கொள்கிறார்கள் என்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் “ரிவிர”வுக்கு (சிங்கள நாளிதழின் முற் பக்கத்தில்) தெரிவித்துள்ளார்.

நாளை காலை (மே22) இலங்கையில் வெளிவரவிருக்கும் "ரிவிர" பத்திரிகைக்கே இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

வடக்கில் சிவாஜிலிங்கம் இனவாதத்துடன் செயற்ப்பட்டுக்கொண்டு வேறொரு அரசியலை முன்னெடுத்துக் கொண்டு போவதாகவும் அதேவேளை தெற்கில் கலகொட எத்தே ஞானசார தேரர் இனவாதத்தைத் தூண்டிக் கொண்டு இன்னொரு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த இருவரும் இரு மச்சான்மார்களைப் போல பாதிரமாற்றி வருவதாகவும் , சிவாஜிலிங்கத்தை நோக்கும் சகல மக்களும் கலகொட எத்தே ஞானசார தேரரையும் அதே விதத்தில் பார்ப்பது அவசியம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(சிங்களத்தில் இருந்ததை எந்த மாற்றமும் இன்றி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)


70 களின் மனித உரிமை முன்னோடி போல் கெஸ்பஸ் அடிகளார் காலமானார்


வணக்கத்துக்குரிய பிதா போல் கெஸ்பஸ் அடிகளார் ஏப்ரல் 25 காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் 28 வெள்ளி மாலை 5மணிக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை உக்கிரமம் பெற்றுக்கொண்டிருந்தபோது அதன் தீர்வுக்காக இயங்கும் நோக்கில் அவர் 1979இல் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தை (மேர்ஜ் - MIRJE - Movement for Inter-Racial Justice and Equality) ஆரம்பிப்பதில் முன்னோடியாக இருந்தார். இந்த அமைப்பின் பல்வேறு வேலைத்திட்டங்களின் ஒன்றாகத்தான் யுக்திய என்கிற சிங்கள மாற்றுப் பத்திரிகையும், தமிழில் "சரிநிகர்" மாற்றுப் பத்திரிகையும் வெளியானது.

மேர்ஜ் இயக்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் அவர் இயங்கினார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜே.ஆர்.அரசாங்கம் தமது இரும்புக் கரங்கள் கொண்டு ஒடுக்கியவேளை அதை எதிர்த்து சுதந்திர இயக்கமாக அன்று களத்தில் இயங்கியது மேர்ஜ் இயக்கம். அந்த போராட்டங்களுக்கு போல் கெஸ்பஸ் அடிகளார் தலைமை தாங்கியவேளை அவருடன் ரெஜி சிறிவர்த்தன, பாலா தம்பு, சார்ல்ஸ் அபேசேகர, சுனிலா அபேசேகர, ஜோ செனவிரத்ன போன்றோரும் ஒன்றிணைந்தனர். 

அப்போதெல்லாம் தந்திச் செய்திகள் தான் சாத்தியம். வடக்கு கிழக்கு பகுதிகளில் நேர்ந்த அரச அடக்குமுறைகளை எதிர்த்து அவர் ஜே.ஆருக்கு தந்தி மூலம் அனுப்பிய கண்டனங்கள் நூற்றுக்கணக்கானவை. அவற்றை அறிக்கைகளாக பல சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தியவர்.

1979 இல் அவரசகால சட்டத்தை அமுல்படுத்தி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட அரச அடக்குமுறைகளை எதிர்த்து போல் கெஸ்பஸ் அவர்களின் தலைமையிளான மேர்ஜ் தூதுக் குழுவினர் "1979 அவசரகாலச் சட்டம்" என்கிற ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ஜே.ஆர் அரசாங்கம் பதவி ஏற்று இரு வருடங்களிலேயே மீறிய மனித உரிமைகளை உலகுக்கு எடுத்துரைத்தது.

அந்த காலப்பகுதியில் மேர்ஜ் நிறுவனத்துக்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அலுவலகங்கள் இயங்கின. இந்த அலுவலகங்கள் தமிழ் மக்கள் தாம் எதிர்கொண்ட அடக்குமுறைகளை எடுத்துச் சொல்லும் இடமாக திகழ்ந்தன.

அந்த இயக்கத்தின் பணிகளை ஏனைய சக செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் மலையகத்தில் இயங்கத் தொடங்கினார். மலையக மக்களின் துன்பங்களை பதிவு செய்வது, வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வது அதற்கான சக்திகளை ஒன்றிணைப்பது என்று பாரிய பணியாற்றினார். தொழிற்சங்கங்கள், அரசியல கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பனவற்றை ஒன்றிணைத்து கணிசமான அளவு அவர் பணியாற்றியிருக்கிறார்.

கண்டியில் அவர் பிஷப் லியோ நாணயக்காரவுடன் சேர்ந்து 1972இல் தொடங்கிய "சத்யோதய" (Satyodaya) நிறுவனம் மலையகம் பற்றிய ஆய்வாளர்களுக்கு கைகொடுக்கும் மிகவும் முக்கியமான கேந்திர நிலையம்.

இலங்கையின் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டைப் பொறுத்தவரை 1970 களின் நடுப்பகுதியிலிருந்து ஒரு மனித உரிமை முன்னோடியாக வரலாற்றில் பதிவானவர் போல் கெஸ்பஸ் அடிகளார்.

நமது மலையகம் இணையத்தளம் நன்றியுடன் அவருக்கு அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துகிறது.

மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டியது அவசியம் - ஏ. லோரன்ஸ்

ம.ம.முன்னணி செயலாளர் நாயகம் கோரிக்கை
(கொத்மலை நிருபர்)

மலையகத்தில் வறுமை நிலை அதிக மாகக் காணப்படுகின்றது. அதனைவிட அரசியல் வறுமையும் அதிகார வறுமையும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நி லையில் அரசியல் மற்றும் அதிகார வறுமை நிலை களையப்பட்டு மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுதல் வேண்டும் என்று மலையக மக்கள் முன்ன ணியின் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் இந்நாட்டில் மிக நீண்ட வரலாற்றினைக் கொண்ட ஒரு சமூ கமாக இருக்கின்றனர். எனினும் இம் மக் கள் சோக வரலாற்றுக்கு சொந்தக்காரர்க ளாகவே இருந்து வருகின்றனர். இன்னும் பல அபிவிருத்தி இலக்குகளையும் இம் மக்கள் அடைந்து கொள்ள வேண்டிய ஒரு தேவையும் காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்பிற்கென காணி வழங்கப்பட வேண்டும் என்பதும் தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப் பட வேண்டும் என்பதும் இன்று கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. எனினும் இதனை துரிதப்படுத்தி முடித்துக் கொள்வது மலையக அரசியல்வாதிகளினதும் சிவில் அமைப்பு களினதும் பொறுப்பாக உள்ளது. ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக் கொண்டு இருப் போமானால் சாதக விளைவுகள் ஏற்படாது. அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் குரல் கொடுப்பதன் ஊடாகவே சாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதை மறந்து செயற்படுதல் கூடாது. 

பெருந்தோட்டங்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றது. கம்பனிகள் தமக்கு நஷ்டம் ஏற்படு வதாக பஞ்சப்பாட்டு பாடி வருகின்றன. கம்பனிகள் சமர்ப்பிக்கும் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை தொடர்பிலும் சந்தேகம் மேலோங்கிக் காணப்படுகின்றது. இந்நிலையில் ஒரு மாற்று முறைமைக்குச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது. மாற்று முறைமையின் அடிப்படையில் சிற்றுடமையாளர்கள் என்கின்ற வகையில் இருபது பேர்ச்சஸ் காணியாவது வழங்கப்பட்டு நிலவுடமையாளர்களாக மலையக சமூகத்தினர் மாற்றப்படுதல் வேண்டும். நாட்டில் ஏனைய சமூகத்தினருக்கு நிலவு டமை காணப்படுகின்றது. இந்நிலையில் மலையக சமூகத்தினர் நிலவுடமையாளர்களாக இல்லாதிருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இதேவேளை மலையக மக்களின் வீடமைப்பிற்காக இப்போது ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனை இன்னும் அதிகரித்துக் கொள்ளவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். மலையகத் தில் வறுமை நிலை அதிகமாகக் காணப்படு கின்றது என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனைப் போன்றே அரசியல் மற்றும் அதிகாரம் என்பவற்றிலும் மலைய கத்தில் வறுமை நிலை காணப்படுகின்றது. நாம் எமது அரசியல் உரிமைகளை சரிவரப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதிகாரங்களையும் எமக்கு ரியவாறு பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இதுவேயாகும். இனப் பிரச்சினை என்பது இந்த நாட்டில் நான்கு சமூகங் களையும் சார்ந்த ஒரு பிரச்சினையாகும். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை ஏனைய இனங்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்த ளித்து அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருதல் வேண்டும். மலையக மக்கள் தொடர்ச்சியாக பல துறைகளிலும் புறக்க ணிக்கப்பட்டு வந்த வரலாறே காணப்படு கின்றது. இந்த வரலாறு இனியும் தொடர ஒரு போதும் இடமளிக்கலாகாது. ஆட்சி யில் இருந்த கடந்த கால அரசாங்கங்கள் மலையக மக்களின் பிரச்சினைகளைக் கண் டுகொள்ளவில்லை. அவற்றுக்கு உரியவாறு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முனையவும் இல்லை.

மலையக மக்களுக்கு அரசியல் மற்றும் அதிகார வறுமை இருப்பதனை அங்கீகரிக்க வேண்டும். இதனைத் தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப்படுதலும் வேண்டும். அரசியல் உரிமைகள் முதலாவதாக கரு தப்பட வேண்டும், அபிவிருத்தி என்பது இதற்கு அடுத்ததாக இடம்பெறுதல் வேண் டும் என்றார்.

நன்றி - வீரகேசரி

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு 2 - திலக்



'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை'

கடந்த வாரம் முதல் 'பாம் ஒயில்' உற்பத்தி சம்பந்தமான தகவல்கள் அடங்கியதாக ஒரு புதிய தொடரை ஆரம்பித்ததே மலையக மக்களின் வாழ்வாதார தொழில்களான 'பெருந்தோட்டக் கைத்தொழில்' நிலைமைகள் நமது நாட்டில் தளம்பலுடன் வீழ்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருப்பது தொடர்பாகவும் கவனத்தை ஈர்ப்பதும்இ அதனூடாகப் இப்போதைக்கு நமது கைவசம் உள்ள தேயிலை றப்பர் கைத்தொழில்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல் மற்றும் தேயிலைக்கு மாற்றீடாக முள்ளுத்தேங்காய் எண்ணெய் (பாம் ஒயில் ) உற்பத்தி நடைபெறும் நாடுகளில் அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது அங்கு வாழும் தொழிலாளர்களின் நிலை என்னவாக இருக்கின்றது என்பது தொடர்பாகவும் நாம் முன்கூட்டிய படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இந்த தொடர் தனியே வாசகர்களுக்குத் தகவல் தரும் இரசணைக் குறிப்பாக மாத்திரம் கொள்ளத்தக்கது அல்ல. இந்த கட்டுரைத் தொடர் நோக்கி வரும் பதிற்குறிகளையும் இணைத்துக்கொண்டு ஒரு விவாத தொடராக அமைவது பொருந்தமானது.

இந்த தொடர் குறித்த புதிர் ஒன்றை நான் முநூலில் ஆரம்பித்ததும் அதற்கு 'நமதுமலையகம்.கொம்' இணையத்தள ஆசிரியர் என்.சரவணன் எழுதியிருந்த குறிப்பை முதலாவது கவனகுவிப்பைக் குவிப்பாக நாம் கொள்ளவேண்டியுள்ளது.


'பாம் ஒயில் குறித்து என்ன கூறப்போகிறீர்கள் என்று அறிவதில் ஆவல். குறிப்பாக பாம் ஒயிலுக்கு எதிரான வெகுஜன செயற்பாட்டு இயக்கங்கள் உலக அளவில் தோன்றியிருக்கின்றன. நோர்வேயில் பிரபல கடைகளில் 'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை' என்பதை தமது விழிப்புணர்வைக் வெளிக்காட்டும் விளம்பரமாகவே வைத்துள்ளார்கள். இது குறித்த விழிப்புணர்வு இலங்கை மக்களிடம் இல்லை. மக்களின் அந்த அறியாமை தான் முதலாளிகளின் பெரு முதலீடு. உங்கள் அரசியல் நிகழ்ச்சிநிரலில் இது குறித்த அரசியல் பிரக்ஞையும் உள்ளடக்கிக் கொண்டால் மகிழ்ச்சியளிக்கும்' (முகநூல் - 4 · January 17).
சரவணன் கொழும்பைப்பிறப்பிடமாகக் கொண்ட மலையக வம்சாவளியினரான அனுபவமிக்க ஊடகவியலாளர். 2000ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இனி' மாநாட்டுக்கு இவர் சம்ர்ப்பித்த  கட்டுரை மிகுந்த முக்கியத்துவமுடையது. இப்போது நோர்வேயை தளமாக்க் கொண்டு செயற்பட்டாலும் மலையகம் குறித்த தொடர் கவனத்தையும் பதிவுகளையும் செய்துவருபவர். சர்வதேச தளத்தில் ஊடகத் தொடர்புகளையும் கொண்டிருப்பவர். நமது இலங்கையில் பாம் உற்பத்தி தொடர்பாக நான் ஆராய முற்பட்டிருக்கும் வேளை 'நோர்வே' யில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறும் அந்த விளம்பரம் உணர்த்தும் பின்னணிக்குரல் என்ன என்பது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது.


இந்த 'பாம் ஒயில்' உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதாலா அல்லது இந்த பாம் ஒயில் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டு அடிமைகள் போல் நாடாத்தப்படுவதனை எதிர்க்கும் முகமாக அந்த விளம்பரம் அமைந்திருந்தது என்று கொள்ளலாமா என்பதுதான் இங்கிருக்கின்ற கேள்வி. இங்கு உற்பத்தி செய்யப்படும் பெருந்தோட்ட உற்பத்திப் பொருட்கள் எல்லாமே வெளிநாட்டு சந்தையை இலக்காக கொண்டவை. எனவே வெளிநாடுகள் இந்த மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பொருட்களை இறக்குமதி செய்யவோ விற்பனை செய்யவோ தயங்கினால் நமது ஏற்றுமதிகளுக்கு என்ன நடக்கும். இதனை பாம் ஒயிலுடன் மாத்திரமல்லாது தேயிலையுடனும் ஒப்பிட்டுக் பார்த்தால்இ தேயிலை ஏற்றுமதி குறைந்து செல்லுவதற்கு உள்நாட்டு 'அரசியல்' நிகழ்ச்சி  நிரலுக்கு அப்பால் வெளிநாடுகளும் மனித உரிமைக் கண்ணோட்டத்தில் செயற்பட  தொடங்கினால் நமது மக்களின் வாழ்வாதார நிலை என்ன? எனும் பெரும் கேள்வியை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த கட்டத்தில் மஸ்கெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட வேலு சந்திரசேகரன் எனும் விவசாய விஞ்ஞான பட்டதாரியான நம்மவர் இது குறித்து இட்டிருக்கும் பதிவையும் வாசிப்போம்.

Veloo Chandrasegaran - இலங்கையில் தேயிலைக்கான மாற்று பொருளாதார பயிர் விளைச்சல் எனும் பதம் பல்வேறு கோணங்களில் நோக்கப்படவேண்டும். சூழல்இ வர்த்தகம்இ மண்வளக்குறைவுஇ முகாமைத்துவமின்மைஇ இதற்கும் அப்பால் நாம் அறியாமல் ஊடுருவும் சில அரசியல் நாய் நகர்த்தல்கள். சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற காலநிலை மாற்றம்இ பூலோக வெப்பமுயர்வுஇ நீர்வளப் பற்றாக்குறைஇ காபன் வர்த்தகம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு ஐ.நா வின் செயற்றிட்டங்களும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமாக இலங்கையின் காடு போர்வையை அடுத்த 5 - 10 வருடங்களில் 32 சதவீதமாக உயர்த்தும் பிரதான இலக்கும் காணப்படுகின்றது. அவ்வகையில் அதற்ககான ஒரு வழிமுறையாக இறப்பர் தோட்டங்கள் மலையகத்தில் ஊடுருவதை இப்போது பார்க்கின்றோம். அத்துடன் உயர்நிலத் தேயிலை உற்பத்தி படிப்படியாக தாழ்நிலத்திற்கு மாற்றப்பட்டு வருவதையும் தேயிலை சபையின் ஒட்டுமொத்த கவனமும் அணுசரணையும் இப்பிரதேசங்களை நோக்கி நகர்ந்து சென்று பெருந்தோட்டங்களுக்கு பதிலாக சிறு தோட்ட தேயிலை பயிர்ச்செய்கை உரிமையாளர்கள் எனும் எண்ணக்கரு முன்னெடுக்கப்படுவது பெரும்பாலானவர்கள் அறியாதது. சில கசியும் தகவல்கள் உயர்நில தேயிலை தாழ்நில பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டதாக சந்தைப்படுத்தப்படுவதன் மூலம் உயர்நில தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சியை காட்டவும் முனைவதாக தெரிகின்றது. உங்களுடைய ஆய்வுக்கு இச்சிறிய துளிகளும் உதவும் என நினைக்கின்றேன். புதிய முயற்சி வெற்றியடைவீர்கள் என்பதாக எழுதிச் செல்கிறார்.

இவர் கூறும் 'உயர் நிலத்தில் இருந்து தான் நிலம் நோக்கி தேயிலை உற்பத்தியைக் கடத்திச்' சென்று கால்நூற்றாண்டுகள் கடந்துவிட்டது. இப்போது இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் 72 சதவீதத்தை  தாழ்நில சிறுதேயிலை உற்பத்தியாளர்களிடம் இருந்தே பெறப்படுகின்றது. இதனை 'ஹிரு' தொலைக்காட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் இ தொழில் ராஜாங்க அமைச்சரும் கலந்து கொண்டிருந்த நேரலை விவாத நிகழ்ச்சியில்  நான் போட்டுடைத்திருந்தேன். அந்த நிகழ்ச்சியை  நடாத்திய சிங்கள மொழி ஊடகவியலாளரான சுதேவ என்னுடைய இந்த கருத்தின் முக்கியத்துவம் குறித்தே நாம் இனிவரும் காலங்களில் அவதானமும் செலுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவுறுத்தியே நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இந்த கட்டத்தில் வேலு சந்திரசேகர் முன்வைக்கும் மேலதிக விடயங்கள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.

ஆக நமது நாட்டிற்கு நாம் வந்து 200 வருடங்களில் பூர்த்தியாகியுள்ள நிலையில் தேயிலை வந்து 150 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அதனைக் கொண்டாட நாட்டின் ஜனாதிபதி தலவாக்கலைக்கு வந்து சென்றுள்ள நிலையில் அந்த தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆய்வுகளும்இ அபிவிருத்திகளும் எந்த தேயிலையை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றனஇ நிலைபேண் அபிவிருத்தி இலக்கு நிகழ்ச்சி  நிரலில் நாம் வகிக்கும் வகிபாகம் என்ன என்பது பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற (Sustainable Development Goals) நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகள் சம்பந்தமான செயலமர்விலும் கலந்துகொண்டு மலையகப் பகுதிகளில் காடாக்கல் குறித்த செயற்பாடுகளில் எமது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என எனது வாத்த்தை முன்வைத்திருந்தேன் (சிங்கள மொழியில்). எனது அருகில் இருந்தவர் சிரேஷ்ட அரசியல்வாதி தினேஷ் குணவர்தன. வருகை தந்திருந்த நாடு தழுவிய உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளில் பதுளையைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான சச்சிதானந்தன்  சுரேன்கண்ணாவை மாத்திரமே என்னால் நம்மவராக அடையாளம் காண முடிந்தது. ஏனையோர் இந்த உரையாடல் குறித்து கவனம் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

'ஜல்லிக்கட்டு' அலை போராட்டத்தில் அள்ளுண்டு போய்கிடக்கும் இளைஞர் கூட்டத்திடையே நாம் அள்ளுண்டு போகும் அபாயத்தை முன்வைக்கிறேன். இதற்காகவும் போராடவும் சிந்திக்கவும் தலைப்படுங்கள். தமிழன் என விரைப்போடு 'மல்லியப்புசந்தியில்' எழுவதில் வியப்பில்லை. ஆனால் அந்த வீரத்தைக் கொண்டாட அதே தமிழனின் 'இருப்பு' முக்கியமல்லவா?. எனவே நமது இருப்பு கேள்விக்குள்ளாகிவரும் நிலையில் நாம் நமது வரலாறுகளை மீட்டிப்பார்க்கும் தேவையுள்ளது...

அதற்கு தலைப்பை மீண்டும் வாசிக்க

நன்றி - சூரியகாந்தி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates