Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சுயநிர்ணயம் வெடித்தது! (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 14) - என்.சரவணன்


1972 யாப்பு தமிழ் மக்களுக்கு ஒரு அடிமைச் சாசனம் என்று கூறிய செல்வநாயகம் அவர்கள் குறைந்தபட்ச மாற்றங்களையாவது செய்யக்கோரி கூட்டணி சார்பில் முன்வைத்த 6 அம்சக் கோரிக்கையை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது. அந்த சமயத்தில் 6 அமசக் கோரிக்கை என்பது இன்னொரு வகையிலும் பிரசித்தம் பெற்றிருந்தது. பங்களாதேசின் விடுதலைக்கு முன்னர் முஜிபுர் ரகுமான் 6 அம்ச கோரிக்கையை முன்வைத்துத் தான் அரசியலமைப்பு மாற்றத்தைக் கோரியிருந்தார் என்கிறார் ஏ.ஜே.வில்சன்.

புதிய அரசியலமைப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டிய நிலையும் தோன்றியது. “இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக இருக்கவும், இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின்படி ஒழுகுவதாகவும் சத்தியப்பிரமாணம் செய்கிறேன்.” என்று உறுதியளிக்கவேண்டும். இந்த யாப்பையே முற்றுமுழுதாக எதிர்த்தவர்களால் அந்த யாப்பின்படி ஒழுகுவதாக சத்தியப்பிரமாணம் செய்வது எப்படி என்கிற குழப்பம் தமிழர் தரப்புக்கு நேர்ந்தது. இதனை செய்யாது போனால் தேசிய அரச சபைக்கு செல்லவும் முடியாது.

தமிழரசுக் கட்சியின் இளைஞர்கள் பலரின் பலத்த எதிர்ப்பின் மத்தியில் “சத்தியப்பிரமாணம் செய்து அரச சபைக்குப் போவது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம் 04.07.1972 தமிழரசுக் கட்சியினர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். 

இந்த செயலானது இந்த யாப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வியாக்கியானப்படுத்தப்பட்டுவிடும் என்று கடும் கோபத்துக்கு உள்ளானார்கள் இளைஞர் அணியினர்.  தமிழ் மக்களின் எந்த அபிலாஷைகளையும் உள்வாங்காத இந்த அரசியலமைப்பை முற்றாக நிராகரித்து சட்டவாக்க சபையிலிருந்து வெளியேறி வெகுஜனப் போராட்டங்களை தொடங்க வேண்டும் என்று அவர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர்.

அரசாங்க தரப்பும் இந்த சூழலை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டது. தமிழ் பிரதிநிதிகள் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தது.

செல்வநாயகத்தின் இராஜினாமா
இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு பதவியேற்று மூன்றே மாதத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 03.10.1972 அன்று தேசிய அரசு சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளை அறிந்துகொள்ளும் வகையில் இதனால் வரப்போகும் இடைதேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு பதில் கொடுக்கட்டும்; தமிழ் மக்கள் தமது அபிலாசைகள் என்ன என்பதை அந்த தேர்தலின் மூலம் புரியவைப்பார்கள் என்றார் செல்வநாயகம். இதன் மூலம் காங்கேசன்துறை தொகுதியில் இடத்தேர்தலை ஏற்படுத்தினார்.
“இனி, முடிவு தமிழ் மக்களுடையதாகும். நடைபெற்ற விடயங்களைக் கருத்திற்கொள்ளும் போது, என்னுடைய கொள்கையானது, இலங்கை தமிழர்களுக்கு தாம் அடிமை இனமாக இருக்கப் போகிறார்களா, சுதந்திர மக்களாக இருக்கப் போகிறார்களா என அவர்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது. இந்த நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம், என்னோடு மோதட்டும். நான் தோற்றால் என்னுடைய கொள்கையை நான் கைவிட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோற்குமானால், அது துன்னுடைய கொள்கையையும் அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லுவதை நிறுத்த வேண்டும்” என்று அறிவித்தார். இந்த இராஜினாமா தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்த அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் செல்வநாயகம் செய்தபோது ஒரு இளைஞன் அவருக்கு இரத்தத் திலகமிட்டான்.”நாம் இந்த நாட்டிலே மரியாதையோடு வாழ வேண்டுமென்றால், நாம் இந்த அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் நாம் அடிமைகளாக வாழ வேண்டியது தான்”
என்று அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். 

எப்போதோ கிளர்ந்திருக்க வேண்டிய தமிழ் இளைஞர்களின் கட்டுப்படுத்திக் கட்டிப்போட்டவர் செல்வநாயகம் என்றே கூறவேண்டும். அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரமல்ல, எளிமையும், பொறுமையும்,  ராஜதந்திரமும் மிக்க தலைவராகவே திகழ்ந்தார். தமிழ் மக்களை ஜனநாயகப் பாதையில் வழிநடத்தியவர். ஜனநாயகப் போக்கை தனது வாழ் நாள் காலம் முழுவதும் நம்பி, நடந்து ஏமாந்தவர்.

தொண்டமான் கொடுத்த பட்டம்
தொண்டமான் ஒரு முறை கூறினார் “செல்வநாயகம் தான் தமிழ் மக்கள், தமிழ் மக்கள் தான் செல்வநாயகம்” 1974 தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழாவின் போது செல்வநாயகத்துக்கு “மூதறிஞர்” என்று பட்டமளித்தார் தொண்டமான்.
“நமது உரிமைகளை இழக்கச் செய்த இந்த புதிய அரசியலமைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோமாயின் நமது உரிமைகள் நிரந்தரமாக அழித்தொழிக்கப்பட்டுவிடும். நமது எதிர்கால சந்ததியினர் நம்மை சபிப்பார்கள்.” என்றார் தொண்டமான்.
இடைத்தேர்தலை நடாத்தி மக்கள் கருத்தை அறியத் தைரியமற்ற அரசாங்கம் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி அந்தத் தேர்தலை நடத்தாமல் இரண்டு வருடங்களாக இழுத்தடித்தது. நியமன தினத்தை பல தடவைகள் பின்போட்டுக்கொண்டே வந்தது. 1975 வரை காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்தவே இல்லை. சட்டசபையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் சாத்வீகமான உரிமைக் குரல் இந்த காலப்பகுதியில்ஒலிக்கவில்லை. அதேவேளை இந்த இடைவெளியில் தமிழர்களை நசுக்கும் வேலைத்திட்டத்தின் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் தீவிர உணர்வு வளர்ந்தெழுந்தது.

இதற்கிடையில் கவிஞர் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா, இ.போ.ச.சுப்பிரமணியம் போன்ற முக்கிய தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கைதானார்கள். தமிழர் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் தொடர்ந்தது. அதிலும் பல இளைஞர்கள் கைதானார்கள். அவர்களில் பலர் ஆண்டுக் கணக்கில் சிறையிருந்தார்கள். அவரசர கால சட்டத்தின் கீழ் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

புத்தூர், அச்சுவேலி, அளவை, கரவெட்டி போன்ற பிரதேசங்களில் இயங்கி வந்த பௌத்த – சிங்கள பாடசைகளுக்கு அரசாங்க அங்கீகாரம் கிடைக்கப்பட்ட விடயம் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். 1973 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புத்தூர் பாடசாலைக்கு சிங்களத் தலைமை ஆசிரியரை நியமித்து அங்கு தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் போதிக்க முற்பட்டது அரசாங்கம். அந்த சிங்களப் பாடசாலையின் அருகில் 06.04.1973 “சட்ட மறுப்பு பாடசாலை” திறக்கப்பட்டது.

அதன் பொறுப்பாளர்களாக செல்வநாயகம், மு.சிவசிதம்பரம், வி.தர்மலிங்கம் புத்தூர் ஆனந்தன், அமிர்தலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக சிங்களப் பாளர் வகுப்பில் இரு பிள்ளைகளே எஞ்சியிருக்க ஏனைய பிள்ளைகள் புதிய தமிழ் பாடசாலைக்கு ஓடி வந்து விட்டார்கள். இதன் விளைவாக ஓராண்டு முடிவதற்குல் தமிழ்க் குழந்தைகளுக்கு சிங்களத்தைக் திணிக்கும் முயற்சி அரசாங்கத்தால் கைவிடப்பட்டது.

சுயாட்சியே தீர்வு
தமிழரசுக் கட்சியின் 12 வது மாநாடு மல்லாகத்தில் 1973செப்டம்பர்  7,8,9ஆம் திகதிகளில் நடைபெற்றபோது அதன் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவுசெய்யப்பட்டார். தமிழர் கூட்டணியின் ஒரு அங்கமாக தமிழரசுக் கட்சி இயங்கும் என்கிற தீர்மானத்தை அங்கு நிறைவேற்றினர். அதைத் தவிர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
“இந்நாட்டுப் பெரும்பான்மைத் தேசிய இனத்தின் ஒத்துழைப்போடோ, சம்மதத்தொடோ தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியமில்லை என்று கருதி தமிழ்த் தேசிய இனம் தம் பாரம்பரியமான தாயகத்தில், தமது சுயாட்சி உரிமையை நிலை நாட்டுவதே ஒரே வழி” 
என்று தமிழர் கூட்டணி தீர்மானித்தது. அக்கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் முதன் முறையாக ஒரேமேடையில் தோன்றி உரையாற்றினார்கள். (மேலதிக தீர்மானங்களை பெட்டிச் செய்தியில் பார்க்க)

காங்கேசன்துறை இடைத்தேர்த்தலை நடத்தத் தவறிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு ஆட்சேபணைத் தெரிவிக்கும் வகையில் 2.10.1973 மாவிட்டபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களுமாக ஒருநாள் உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டார்கள்.

அந்த தேர்தல் முடிவுகள் பற்றி பின்னர் பார்ப்போம். அதற்கிடையில்  இந்த அரசியலமைப்பு நிகழ்த்திய அநியாங்களை சற்று விபரிப்போம்.

குடியேற்றங்களின் விளைவு
இந்த அரசியலமைப்பின் கீழ் இருந்த சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி “சிங்களமயம்” விரிவுபடுத்தப்பட்டது. திருகோணமலையில் ஏற்கெனவே தொட்டங்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றப் பகுதிகளில் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அங்கெல்லாம் அரச கருமங்கள் யாவும் சிங்கள மொழியில் மேற்கொள்ளத் தொடங்கின. அத்தோடு நில்லாமல் திருமலை மாவட்டத்துக்கான அரசாங்க அதிபராகவும் சிங்களவரை நியமித்தது அரசாங்கம். அதன் மூலம் இனவாத அரசின் மேலதிக வேலைத்திட்டங்களுக்கு அவரின் ஒத்துழைப்பை போதிய அளவு பெற்றுக்கொண்டது.

வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியில் நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த மலையகம், மேல்மாகாணம் போன்ற பகுதிகளில் கூட உதவி அரசாங்க பிரிவுகள் உருவாக்கப்படாத நிலையில் குடியேற்றம் நிகழ்ந்த இடங்களில் ஒரு சில ஆண்டுகளிலேயே சிங்களவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட்டன. அந்த குடியேற்றங்களை பின்னர் பலப்படுத்துவதற்காக அவ் உதவி அரசாங்க பிரிவுகளை அடிப்படையாக வைத்து பிரதேச சபைகளை உருவாக்கி குடியற்றத்திட்டங்களை மேலும் பலப்படுத்தியது அரசாங்கம்.

திருகோணமலை வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கேந்திரம் மட்டுமல்ல தமிழர் தாயகத்தினை வலுப்படுத்தும் இதயம் அது. வடகிழக்கின் தலைநகராக கொள்ளப்பட்டது. இனவாத அரச தலைவர்கள் தமது இலக்காக திருமலையை பறிப்பது, அல்லது சின்னபின்னப்படுத்துவது என்பதையே கொண்டிருந்தனர். அதனை செய்தும் காட்டினர்.

குடியேற்றங்கள் மூலம் பெருகிய சிங்கள மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து சேருவில என்கிற ஒரு புதிய தேர்தல் தொகுதியை உருவாக்கினர். எகேனவே இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூர் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட்டது. அதாவது சிங்களவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அதேவேளை, அங்கிருந்த தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதில் வெற்றிகண்டனர். சேருவில, மூதூர், பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தை இப்படித்தான் இழந்தனர். திருமலை மாவட்டத்தில் அதுவரை இரு தமிழர்களும், ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் தெரிவாகிவந்த நிலை மாறி ஒரேயொரு தமிழரே தெரிவாகும் நிலை தோன்றியது.

தேசிய அரசுப் பேரவையின் பிரதிநிதித்துவம் 151த்திலிருந்து  168ஆக அதிகரிக்கப்பட்ட போதும் அதனால் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தில் உரிய நியாயம் கிடைக்கவில்லை. 

அலங்காரமான அடிப்படை உரிமை
அரசாங்க வேலைவாய்ப்பு விடயத்திலும் இன ரீதியான பாரபட்சம் தலைதூக்கியது. அதனைத் தடுப்பதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவோ, நீதிச்சேவை ஆணைக்குழுவோ இருக்கவில்லை. புதிய அரசியலமபீன் மூலம் அந்த அதிகாரங்கள் அமைச்சரவைக்கு உரித்தாக்கப்பட்டிருந்ததால் அமைச்சர்களின் தான்தோறித்தனத்தனத்துக்கு அது வழிதிறந்துவிட்டது. ஊழலும், இனப் பாரபட்சமுமே அரசாங்கத் தொழில்களை தீர்மானித்தன. இந்த பாரபட்சங்களுக்கான நீதியை எந்த சட்டங்களும் தமிழர்களுக்கு தரவில்லை.

இப்படியான நிலைமைகளில் அடிப்படை உரிமைகள் பகுதி பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் என்று கூறியிருந்தார் கொல்வின்.ஆர்.டீ.சில்வா. ஆனால் அந்த ஆட்சிகாலம் முழுவதும் அவசரகால சட்டம் அமுலில் இருந்ததால் “அடிப்படை உரிமை” ஏற்பாடும் வலுவிழந்தே வெறும் அலங்காரமாக காணப்பட்டது. ஆக அதனாலும் நீதி வழங்க முடியவில்லை.

நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைத்து, நீதி மறு ஆய்வுக்கான அதிகாரத்தையும் மட்டுப்படுத்தி ஆங்கிலேயர்கள் இலங்கையர்களுக்கு வழங்கிவிட்டு சென்ற உரிமைகள் கூட சுதேசிகளால் உருவாக்கப்பட்ட “72” அரசியலமைப்பால் வழங்கமுடியவில்லை.

ஆக அரசியல் பிதிநிதித்துவம் குறைக்கப்படல், மொழித் திணிப்பு - பாரபட்சமும், வேலைவாய்ப்பு பறிப்பு, பல்கலைக்கழக நுழைவுக்கான கல்வித் தரப்படுத்தல் முறை, இந்திய வம்சாவழியினரை நாடுகடத்தல், தமிழர்களின் மீதான தொடர் கைது, சிறைவைப்பு, போன்ற எந்தவித அநீதியையும் எதிர்த்து நீதிகோருவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டே தமிழர் மீதான அநீதிகள் நிறைவேற்றப்பட்டன. ஜனநாயக வழிகளாலும், சாத்வீக கோரிக்கைகளாலும், பரஸ்பர சமரச உடன்பாடுகளாலும் நீதி கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியானது.

ஒரு நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் நீதி மறுக்கப்பட்டு, சட்ட வாய்ப்புக்கான வழிகள் அடைக்கப்பட்டு அதிருப்தி, விரக்தி, வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளினால் என்ன ஆகும்.மைய அரசியலில் இருந்து முழுமையாக தூக்கித் தூர  எறியப்பட்ட மக்கள் தமக்கான வாழ்வை இப்படித்தான் அமைத்துக் கொள்ள இயலும். தமக்கான தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு தள்ளப்பட்டது இப்படித்தான். தமிழர்களை வஞ்சித்த அரசியலில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வழி தேடியது இப்படித்தான்.

“சோல்பரி தொடக்கி வைத்ததை கொல்வின் முடித்து வைத்தார்” என்று இந்த இனப்பாரபட்சத்தைப் பற்றி ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது வீரகேசரி.
புதிய அரசியலமைப்பை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் தமிழர்கள் அருளம்பலம், மாட்டின், தியாகராசா, இராசன், குமாரசூரியர், சுப்பிரமணியம் ஆகியோரே.
“டொனமூர் திட்டத்தை ஆதரிக்க தம்பிமுத்து என்ற ஒரு துரோகி மட்டுமே இருந்தான். சோல்பரி அரசியல் திட்டத்தை ஆதரித்திட இராசகுலேந்திரன் என்ற துரோகி மட்டுமே இருந்தான், ஆனால் தமிழருக்கு முழுக்க குழிபறித்துள்ள புதிய அரசியல் சட்டத்தை ஆதரித்திட ஆறு துரோகிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை என்னும்போது தமிழ் இனம் இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும்...” என்று “சுதந்திரன்” பத்திரிகை எழுதியது. (04.06.72)
இனவாதத்துக்கென்று உருவான சந்தை
இனவாத அரசியலுக்கான களம் இந்த யாப்பின் மூலம் விஸ்தரிக்கப்பட்டதனால் “இனவாதம்” என்பது வாக்கு வங்கியை கைப்பற்றும் ஆயுதமானது. இனவாதத்துக்கு உருவான சந்தை அதற்கான போட்டிக் களமானது. சிங்கள சாதாரண மக்கள் எளிமையாக பகடைக்கைகளாக்கப்பட்டார்கள். அம்மக்கள் பேரினவாதமயப்படுத்தப்பட்டார்கள்.

அரசியல் தேர்தல் களம் இனவாரி, மதவாரி, சாதிவாரி, குடும்பவாரி, பிரதேசவாரி வாக்கு வங்கிகளுக்குள் சுருண்டது.

தமிழ் சமூகம் குறைந்தபட்சம் தமது வளமான வாழ்வை அமைத்துக்கொள்ள துணைநின்ற பெரும் காரணியாக இருந்தது கல்வி. அதிலும் கைவைக்கத் தவறவில்லை ஆளும் இனவாத ஆட்சியாளர்கள். முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைவுக்கு கொணர்வோம்.

1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடைபெற்ற வேளையில் அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவைப் பார்த்து “சத்தியாக்கிரகிககளின் மீது நான் இராணுவத்தை ஏவினால் என்ன செய்வீர்கள்?” என்று ஆணவமாகக் கேட்டார். அதற்கு அடக்கமாக பதிலளித்திருந்த செல்வநாயகம்.
“துப்பாக்கியுடன் தன் முன் தோன்றிய கொலைஞன் முன் உங்கள் கணவர் எந்த நிலையில் நின்றிருப்பாரோ அதே நிலையில் நாமும் நிற்கக் கூடும்.”
துரோகங்கள் தொடரும்...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மல்லாகம் மாநாட்டுத் தீர்மானம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பன்னிரண்டாவது மாநில மாநாடு – மொழியால், கலாசாரத்தால், வரலாற்றால், பிரதேசத்தால், ஒரு தனி இனமாக வாழ வேண்டுமென்ற உணர்ச்சியால், ஒரு தனித் தேசிய இனமாகக் கணிக்கப்படுவத பூரண தகுதிபெற்ற இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள்; சர்வதேச நீதிக்கிணங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை’யென்ற அடிப்படைத் தத்துவத்தின்படி, தமது பாரம்பரியமான தாயகத்தில் இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் தன்னாட்சி காண்பதே எமக்குள்ளே ஒரேயொரு வழியென்று இத்தால் தீர்மாணிக்கிறது” என்று பிரகடனம் செய்தது.
தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணியின் அங்கமாக இருப்பது
தன்னாட்சி கோரிக்கைக்கு சர்வதேச ஆதரவைத் திரட்டுவது.
தமிழ்ப் பிரதேசத்தின் பொருளாதார விருத்திக்குப் பாடுபடுவது.
சாதியொழிப்பு
சிறையிலுள்ள இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல்
காங்கேசன்துறைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்தும்படி வற்புறுத்தல்
நன்றி - தினக்குரல்


புகைப்படங்களால் இலங்கையை பதிவாக்கிய வில்லியம் ஸ்கீன் - என்.சரவணன்

(அறிந்தவர்களும் அறியாதவையும் - 9)

சென்ற தடவை லொவினா பற்றி எழுதும் போது ரொடி சாதிப் பெண்கள் தமது மார்புகளை மறைப்பதற்காக பட்ட துன்பங்கள் பற்றியும் சில அடிப்படையான குறிப்புகளை வெளியிட்டிருந்தேன்.

ரொடி மக்கள் பற்றி நாம் இணையத்தில் தேடுகிற போதும், ஏன் இலங்கை பெண்கள் பற்றி தேடுகிற போதும் மார்புகளை வெளிக்காட்டியபடியான பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் பல உடனே வந்து நிற்பதை அவதானித்து இருப்பீர்கள். நமது பெண்களை இப்படி அரைநிர்வாணமாக படங்களை அன்று எடுத்துத் தள்ளியது ஏன்? யார் இதனை செய்தார்கள். அவர்களின் நோக்கம் தான் என்ன? அன்றைய காலத்து ப்ளேபோய் வகையறாவை சேர்ந்ததா இது என்கிற சந்தேகம் கூட பல தடவை எழுந்திருக்கிறது.

அப்படி தேடும் போது தான் வில்லியம் ஸ்கீன் பற்றிய அறிய தகவல்கள் கிடைத்தன. அவர் 150 வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஐந்து நூல்களைக் கூட கண்டெடுக்க முடிந்தது.


இலங்கையின் பழமைவாய்ந்த புகைப்பட ஸ்டூடியோவாக ஸ்கீன் (W.L.H. Skeen & Co.) நிறுவனம் இருந்து வந்திருக்கிறது. இங்கிலாந்துப் பேரரசின் காலனித்துவ நாடுகளாக இருந்த இலங்கை, இந்திய  நாடுகளை புகைப்படங்களுக்கு ஊடாக பதிவு செய்தவர்கள் இவர்கள். இலங்கையின் முதன் முதல் தொழில்முறைசார் அரசாங்க அச்சகம் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். பிரித்தானிய காலனித்துவத்தின் போது இலங்கை சார் அரசாங்க வெளியீடுகள் பலவற்றை இதன் மூலம் தான் வெளியிடப்பட்டன. அன்றைய காலத்தில் மிகவும் புகழ்பெற்ற புலமைத்துவ சஞ்சிகையான “Ceylon Asiatic Society”ஐயும் இவர்களால் வெளியிடப்பட்டு வந்திருக்கிறது. அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதே பெரும் கௌரவமாக கருதப்பட்ட காலப்பகுதியில் ஸ்கீனும் அதன் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

லண்டனில் பிறந்த ஸ்கீன் (William Skeen 1822-1872) அரசாங்க அச்சகராக (Printers) இலங்கைக்கு 1849 நியமனமானார். அவரது தகப்பனார் ரொபர்ட்டும் இங்கிலாந்தில் ஒரு அச்சகர். லண்டனில் பிறந்த ஹென்றி, எட்வர்ட், ஜோர்ஜ் ஆகிய அவரது புதல்வர்கள் மூவரும் கூட அச்சகர்களாக ஆகி தகப்பனின் தொழிலையே இலங்கையில் மேற்கொண்டதுடன் அவர்களும் இலங்கை பற்றிய ஆய்வு நூல்களை வெளிக்கொணர்ந்தார்கள். வில்லிய தனக்கு உதவியாக அவரின் சகோதரர் ஹென்றியை 11.07.1852 இல் இலங்கைக்கு அழைத்துக்கொண்டார். ஆனால் ஆறே மாதத்தில் 26.12.1852 இல் ஹென்றி மரணமானார். அன்று ஆங்கிலேயர்கல் பலரைப் புதைத்த காலி முகத்திடல் மயானத்தில் அவர் புதைக்கப்பட்டார்.

லண்டனில் புகைப்படத்துறையை கற்றுக்கொண்டிருந்த வில்லியத்தின் மகன் ஹென்றியை (William Louis Henry Skeen 1847–1903) தயார்படுத்தினார். ஹென்றி இலங்கை திரும்பியதும் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த “S. Slinn & Co” என்கிற ஸ்டூடியோவை 1860 ஆம் ஆண்டு வாங்கி ஹென்றியிடம் ஒப்படைத்தார் வில்லியம். ஹென்றி ஸ்கீன் 1868இல் “W.L.H. Skeen & Co” என்று அதன் பெயரை மாற்றினார். இவர் தான் இலங்கை பற்றிய புகைப்படங்கள் பலவற்றை எடுத்தவர். தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் மாத்திரம் வில்லியம் ஸ்கீனின் 5927 புகைப்படங்கள் தொகுப்பாக இருப்பதாக அறியக் கிடைக்கிறது. (Guide to Collections of Photographs of Ceylon, circa 1850-­1915 Compiled by Benita Stambler)

இவர்களில் எட்வர்ட் (Frederick Albert Edward) 1887 வரை சகோதரனுக்கு உதவியாக இருந்து விட்டு பர்மாவுக்கு சென்று ரங்கூனில் ஒரு ஸ்டூடியோவை நடத்தினார். 1903 இல் ஹென்றியின் மரணத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய எட்வர்ட் ஸ்டூடியோவை பொறுப்பேற்று அதற்கு “F. Skeen and Co” என்று பெயரை மாற்றிக் கொண்டார். 

இவர்கள் அனைவருமே புகைப்படக் கலைத்துறையில் ஜாம்பவான்களாக இருந்திருக்கிறார்கள். அச்சகர்களாகவும், ஆய்வாளர்களாகவும் இருந்தபோதும் அவர்கள் இன்றளவிலும் புகைப்படக் கலைஞர்களாகத் தான் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்த ஸ்டூடியோ 1920கள் வரை இயங்கியிருக்கிறது.

w.l.h.-skeen-&-co.-1870
ஜோர்ஜ் (George J.A. Skeen) எழுதிய கொழும்புக்கான வழிகாட்டி (Guide to Colombo - 1898), கண்டிக்கான வழிகாட்டி (A guide to Kandy - 1903) ஆகிய நூல்களும் கூட மிகவும் சுவாரசியமான தகவல்களையும், பல அறிய புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமன்றி அவர் ஒரு அரசாங்க அச்சகராக ‘ராஜாவலிய”. “பூஜாவலிய” போன்றவற்றையும் ஆங்கிலத்தில் முதன் முதலாக வெளியிட்ட பதிப்பாளர். இலங்கையின் அச்சுத் துறை வளர்ச்சியில் ஸ்கீன் குடும்பத்தவர்களின் பங்கு அளப்பரியது என்று தான் கூற வேண்டும். ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னர் அவர்களால் பதிக்கப்பட்ட நூல்கள் பலவற்றில் விளம்பரங்களைக் கையாண்டிருக்கிற விதத்தைப் பார்த்தால் இன்றும் அதே வடிவமைப்பையே பல சஞ்சிகைகள் தொடர்கின்றன என்பதை கண்டு கொள்ள முடிகிறது. அந்த பாணியை உருவாக்கி பரவ விட்டது இவர்களாக இருக்கலாம். இந்த நூல்களெல்லாம் பல பதிப்புகளை கண்டவை என்று அறிய முடிகிறது.

இவர்களால் வெளிக்கொணரப்பட்ட புகைப்படங்களுக்கு ஊடாகத்தான் நம் மக்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. இன்று இலங்கையர் பற்றி இணையங்களில் தேடுகின்ற போது கிடைக்கின்ற பல பழைய புகைப்படங்கள் இவர்களால் எடுக்கப்பட்டது தான் அதிகமாக காணக் கிடைக்கின்றன.
கொழும்பு 1881-82 இப்புகைப்படம் பின்னர் J N Daltonஆல் (1839-1931) தொகுக்கப்பட்டு  4வது ஜோர்ஜ் அரசருக்கு பரிசளிக்கப்பட்டது. இப்புகைப்படத்தில் இந்த மரங்களை ஊடறத்து கொழும்பு துறைமுகத்தினூடே தொலைவில் கோட்டை மணிக்கூண்டு கோபுரமும் தெரிவதைக் காணலாம்
903-1906 இல் வெளியான 1533 பக்கங்களைக் கொண்ட “பெர்குசன் டிரக்டரி” (Ferguson's Ceylon Directory 1903-6) வெளியிட்ட தகவல்களின் படி இவர்கள் மேலும் சில அரசாங்க தொழில்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். உதாரணதிற்கு களஞ்சிய பொறுப்பாளர்களாகவும் (Store keeper) இருந்து வந்திருக்கிறார்கள்.
இதே 19ஆம் நூற்றாண்டில் Julia Margaret Cameron, Joseph Lawton, Charles Scowen போன்றோரும் இலங்கையை புகைப்படங்களின் மூலம் பதிவு செய்த கலைஞர்கள் என்பதை இங்கு குறிப்பிடவே வேண்டும்.

ஆங்கிலேயர்கள் பலர் நமக்கு தமது எழுத்துக்களின் மூலம் நமது வரலாற்றை மீட்டுத் தந்தார்கள் என்றால் ஸ்கீன் போன்றோர் 150 வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோரும், நமது நாடும், மக்களும், சூழலும் வாழ்க்கையும், அமைப்பும் எப்படி இருந்தன என்பதை புகைப்படமாக நமக்கு விட்டுச் சென்ற பெருமை ஸ்கீனைச் சாரும்.

19 ஆம் நூற்றாண்டில் மலையக மக்கள், அவர்கள் மேற்கொண்ட கூலி உழைப்பு, அவர்கள் ஈடுபடுத்தப்பட்ட துறைகள், ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் சுரங்கங்கள் அமைத்தல், கோப்பி பயிர்செய்கையிடுதல், என்பன பற்றி நாம் இன்று காணும் பல அரிய புகைப்படங்கள் பல கூட ஸ்கீனால் அன்று வெளியிடப்பட்டவையே.

புகைப்படத்துறையில் செய்த சாதனைக்காக 1990 இல் பாரிஸ் சர்வதேச தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். கொழும்பு சதாம் வீதியில் 41 வது இலக்கத்திலும், கண்டியில் இல.21 - வார்ட் வீதியிலும் ஸ்டூடியோவும், புகைப்படக் காட்சிக் கூடமும் நெடுங்காலமாக இயங்கி வந்துள்ளது. 

ஸ்கீன் மேலாடை மறுக்கப்பட்ட ரொடி சாதிப் பெண்களை தனது ஸ்டூடியோவுக்கு அழைத்து பலவிதமான பின்னணிகளுடன் ஏராளமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை “ரொடியோ பெண்கள்” ('Ceylon Observer', Colombo) என்கிற தலைப்பிட்டு தபால் அட்டைகளாக அச்சிட்டு விற்பனை செய்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேயர்கள் பலர் இந்த தபால் அட்டைகளை உலகெங்கிலும் தமது கடித அட்டைகளாக தபாலிட்டிருக்கின்றனர்.

“நக்கிள்ஸ் மலைத்தொடர் மேலிருந்து  கவிதை : இலங்கையில் மலை வாழ்க்கையும் கோப்பி பயிர்ச்செய்கையும்” என்கிற 186 பக்கங்களைக் கொண்ட நெடுங்கவிதைகளின் தொகுப்பொன்றை முதன் முதலில் வெளியிட்டார். தான் கண்ட அனுபவங்களையும் மலையக மக்களைப் பற்றியும் கூட கவித்துவமாக படைத்திருக்கிறார். அந்த நூலின் இறுதி 22 பக்கங்களில் வரும் பெருமதி மிக்க வரலாற்றுக் குறிப்புகளையும் பல தகவல்களையும், தரவுகளையும் உள்ளடக்கியது.

"Adam's Peak" ஆதாமின் சிகரம் (நாம் சிவனொளி பாத மலை என்று அழைக்கின்றோம்) என்கிற அவரின் நூல் அந்த மலை பற்றிய முக்கிய ஆய்வுகளின் ஒன்று. 1860இல் அவர் முதற்தடவையாக அம்மளைக்குச் சென்று அதன் சூழலில் சொக்கிப்போன அவர் அதன் பின்னர் பல தடவை அங்கு சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களைத் தான் அவர் தகவல்பூர்வமாக நூலாக்கினார். அம்மலை பற்றிய ஐதீகங்கள், வரலாறு, அமைவிடம், சுற்றுச் சூழல், அவற்றின் விளக்கப் படங்கள் என பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய 408 பக்கங்களைக் கொண்ட அந்த நூல் 1870 ஆம் ஆண்டு வெளிவந்தது. இன்றும் பல வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரமாக பயன்படுத்தும் நூல் அது. சிங்களத்தில் கொடகே பதிப்பகம் அதன் மொழிபெயர்ப்பை 2006 இல்  (ශ්‍රී පාද සමනල : ජනප්‍රවාද පුරාවෟත්ත හා ඓතිහාසික තොරතුරු) வெளியிட்டது. அம்மலையின் வரைபடத்தைக் கூட முதற்தடவையாக அந்த நூலில் வெளியிட்டிருந்தார்.

“இந்த ‘ஆதாம் மலை’ அளவுக்கு சிறப்பு வாய்ந்த ஒரு மலை உலகில் இருக்க முடியாது, இதுவரை இங்கு உலகெங்கிலும் இருந்து வந்துபோனவர்கள் இம்மலை பற்றி பதிவு செய்திருப்பது மிகமிக குறைவானதே” என்றும் அந்த நூலில் குறிப்பிடுகிறார். அதன் குறைப்பட்டையே இயன்றளவு ஸ்கீன் நிரப்ப முற்பட்டிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

வில்லியம் ஸ்கீன் எழுதிய “பண்டைய அச்சுக்கலை” (Early Typography) என்கிற நூல் 15ஆம் நூற்றாண்டு தொடக்கம் அச்சுக்கலையும், எழுத்துருவங்களும் கடந்து வந்த வரலாற்றுப் பாதை பற்றிய விளக்கங்களைக் கொண்ட 435 பக்கங்களைக் கொண்ட விரிவான நூல் 1872 இல் வெளியிட்டார். இந்த நூல்களெல்லாம் பல தடவைகள் பல நாடுகளில் பல பதிப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் கண்டவை.

புகைப்படத்துறை, ஆய்வுத்துறை, அச்சகத்துறை ஆகியன ஒன்று சேர கைவரப் பெற்றதால் இந்த முத்துறையையும் ஒன்று சேர்த்த அவர்களின் படைப்புகள் வெற்றியளித்துள்ளன. இன்று நாமும் அதனை அனுபவிக்கிறோம். ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னரே ஆயிரக்கணக்கான நம்மவர் முகங்களை உலகத்துக்கே அறியத்தந்தவர்கள்  அவர்கள். இன்று அவர்களின் முகத்தைக் கொண்ட ஒரு புகைப்படத்தைக் கூட கண்டெடுக்க முடியாதது தான் இதில் உள்ள பெரிய சோகம்.

ஆதாம் மலை (சிவனொளி பாதமலை) பற்றிய நூலை கீழே உங்களுக்காக இணைத்திருக்கிறேன்.

வில்லியம் ஸ்கீனின் மூன்று நூல்கள்
  1. Mountain Life and Coffee Cultivation in Ceylon - A Poem on the Knuckles Range, with Other Poems – 'Ceylon Observer', Colombo - 1868
  2. ADAM'S PEAK: Legendary Traditional and Historic Notices of the Samanala and Srí-Páda with a Descriptive Account of the Pilgrims' Route from Colombo to the Sacred Foot-print - W.L.H. Skeen & Company - 1870
  3. Early Typography - William Skeen – Government Printer - 1872


நிலைமாறும் மலையகம் - துரைசாமி நடராஜா


மலையக பெருந்தோட்டங்களின் நிலை தொடர்பில் இப்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றமை தெரிந்த விடயமாகும். பெருந்தோட்டங்களின் எதிர்காலம் மற்றும் தொழிலாளர்களின் இழுப்பு என்பன தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின் றது. இதற்கிடையில் பெருந்தோட்டங்களில் நிலவும் கலாசாரச் சீர்கேடுகள் மற்றும் சமூக சீரழிவுகள் தொடர்பிலும் புத்திஜீவிகள் தமது விசாலப் பார்வையினை செலுத்தியிருக் கின்றனர். இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பிலும் எடுத்து கூறியிருக்கின் றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக பெருந்தோட்டங்களுக்கும் மக்களுக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. இந்த வரலாறு மிகவும் நீண்டதாகும். தமிழக வரலாற்றின் முன்னைய கால கட் டங்களில் காணப்படாத அளவிற்கு 19 ஆம் நூற்றாண்டில் லட்சோபலட்ச தமிழ் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு மிக அண் மையில் உள்ள இலங்கையில் மட்டுமன்றி, நூற்றுக்கணக்கான அல்லது பல்லாயிரக்க ணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டதாக கலாநிதி க அருணாசலம் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு தமிழ் தொழிலா ளர்கள் குடியேற்றப்பட்ட தீவுகள், நாடுகளுள் வியட்னாம், அந்தமான், சுமத்ரா, சிங்கப்பூர், மலேஷியா, பிரெஞ்சு கயானா, சென்ட் வின்சென்ட் தென் ஆபிரிக்கா, மொரீசியஸ் என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன.

இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்கள் கொடு ரமான சுரண்டல்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். அவர்களது வரலாறு சோகம் மிகுந்து, துயரம் கசிந்து, இருள் படிந்து, குருதி நிறைந்து, வேதனைகள் மலிந்து காணப்படுவதாகவும் கலாநிதி க. அருணா சலம் வலியுறுத்தி இருக்கின்றார்.

அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்ஸிய ஆட்சியாளர்களினாலும் பின்பு சுதேச ஆட்சியாளர்களினாலும் அங் தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும் தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும் ஏனைய இந்தியர்களினாலும் வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்களாலும் கொடுரமாக சுரண்டப் பட்டனர், சுரண்டப்பட்டும் வருகின்றனர் என்று கவலை வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் மலையக பகுதி பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட தமிழ் தொழிலாளர்கள் மிக அண்மைக் காலம் வரை சூழ்நிலை நிர்ப்பந்தங் களால் இலங்கையில் காலம் காலமாக வாழ்ந்து வந்த சிங் கள தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து தனிமைப்ப டுத்தப்பட்ட அவர்களது அலட்சியத்துக்கு ஆளானவர்களாக விளங்கியதாகவும் கலாநிதி க.அருணாசலம் சுட்டிக்காட்டுகின்றார் கூலிகள், கள்ளத் தோணிகள் வடக்கத் தையார் தோட்டக் காட்டான், இந்தியக் காரர் என்று பலவாறு அழைக்கப்பட்டு அவம திக்கப்பட்டு இம்சிக்கப் பட்டனர். ஆயினும் இன்று நிலைமைகள் மிக வேகமாக மாறி கொண்டு வருகின்றன.

தமிழ் தொழிலாளர்களின் துயரங்களும் இன்னல்களும், சுரண்டல் கொடுமைகளும் தொடர்கதை யாகி கொண்டிருக்கின்ற போதிலும் கூட, தோட்டத் தொழிலாளர் மத்தியில் நாம் இது காலவரை கண்டிராத அளவிற்கு விழிப்பும் எழுச்சியும் உரிமை வேட்கையும் முன்னேற் றமும் அதிகரித்து வருவதும் கவனிக்கத் தக்கதாகும் என்றும் கலாநிதி அருணாசலம் 1994 இல் தான் எழுதிய ஒரு நூலில் கூறி பெருமைப்பட்டு கொள்கின்றார்.

கலையும், கலாசாரமும்

ஒரு சமூகத்தின் கலை, கலாசார பண் பாட்டு விழுமியங்கள் மிகவும் முக்கியத் துவம் மிக்கதாகவும் பெறுமதி வாய்ந்ததா கவும் கருதப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த எமது மூதாதையர்கள் கலை, கலாசார பண்பாட்டு விழுமி யங்களையும் கூடவே எடுத்து வந்திருக்கின் றனர். மனிதனது அனுபவ உணர்வு இரு சக் திகளாக வெளிப்படுத்துவதாக கூறுவார்கள் அதில் முதலாவது உற்பத்திக் கருவிகள் இரண்டாவது கலை வடிவங்கள் உற்பத்திக் கருவிகள் அவனது புறத்தேவைகளான உணவு, பாதுகாப்பு, உடை, வீடு, நுகர் பண்டங்கள் ஆகியவற்றை ஆக்கி மேலும் படைக்க உதவுகின்றன. கலை வடிவங்கள் அவனது அக உணர்வு தேவைகளைப் பூர்த்தி செய்து அவனது ஆக்க சக்திக்கு மேலும் உந்து சக்தியளிக்க உதவுகின்றன. மனிதர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் உள்ளது என்றும் கூறுவார்கள்.

இதேவேளை கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூ கத்துக்கு பெற்றுக் கொடுப்பதே கல்வி என்று கலாசாரத்தை முக்கியத்துவப்படுத் துகின்றதையும் நாம் கூறியாதல் வேண்டும். இந்த வகையில் இந்திய வம்சாவளி மக் களின் கலை, கலாசார விழுமியங்கள் பொருள் பொதிந்தவைகளாகவும் முக்கியத் துவம் மிக்கவைகளாகவும் விளங்குவதனை எம்மால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. எமது கலை, கலாசார விழுமி யங்களை பின்வரும் சந்ததிகள் பின்பற்றக் கூடிய வகையில் நாம் உரியவாறு வழிப்ப டுத்துதல் வேண்டும் இல்லையேல் இவை யாவும் தடமிழந்து போகின்ற ஒரு அபாயக ரமான சூழ்நிலையே உருவாகும். இந்நிலை யானது சமூக ரீதியில் பல்வேறு பாதிப்புக ளுக்கும் இட்டுச் செல்வதாக அமையும்.

சமகாலப் போக்குகள்

ஒவ்வொரு சமூகத்தினதும் கலை, கலா சாரப் பண்பாட்டு விழுமியங்கள் முக்கியத் துவம் மிக்கதென்று முன்னர் கண்டோம் எனவே இவ் விடயங்களை குறித்த சமூ கத்தினர் உரியவாறு பயன்படுத்துவ தற்கு ஏனைய சமூகத்தினர் இடையூறாக இருத்தல் கூடாது. அவ்வாறு இடையூறாக இருப்பார்களானால் அது மனிதாபிமான மாகாது. அது மாத்திரமன்றி மற்றவர்களின் சுதந்திரத்தை மீறுகின்ற செயலாகவும் இது அமையும் என்பதே உண்மை. நாம் நமது கலை கலாசாரங்களுக்கு மதிப்பளிப்பதனை போன்று ஏனையோரின் கலை, கலாசாரங்க ளுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் இவ்வாறு மதிப்பளிக்காத சந்தர்ப்பங்களில் முரண்பாட்டு சூழ்நிலைகள் மேலோங்கி காணப்படுவதனையும் நாம் குறிப்பிட் டாதல் வேண்டும்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் களின் கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமி யங்கள் அர்த்தம் பொதிந்தனவாக விளங்கு கின்றன. கதைகள் சமூகத்திற்கு ஒரு படிப் பினையாக அமைகின்றன. காமன்கூத்து, பொன்னர் சங்கர் போன்றவைகள் தோட்டத் துக்கு தோட்டம் முறையாக இடம்பெற்று வங் தன. பெரியோர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இந் நடவடிக்கைகளை மேற்கொண்டு வங் தனர். இன்று நிலைமை தலைகீழாகி இருக் கின்றது. ஏதோ அங்கொன்றும் இங்கொன் றுமாக ஒரு சில தோட்டங்களில் காமன் கூத்து நிகழ்வு இடம்பெற்று கொண்டிருக் கின்றது. இளைஞர்கள் எமது பாரம்பரியங் களை பேணுவதில் காட்டுகின்ற அக்கறை குறைவாகவே உள்ளது. சினிமா மோகம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பன பாரம்பரிய கலைகளின் மேம்பாட்டிற்கு ஒரு தடைக்கல் லாக விளங்குவதாக புத்திஜீவிகள் விசனப் பட்டு கொள்கின்றனர்

தோட்டங்களில் திருவிழா நிகழ்வுகள் இடம்பெறும் போது முன்பெல்லாம் நாட கங்கள் அரங்கேற்றப்படுவதனை நாம் பார்த்திருக்கின்றோம். இத்தகைய நாடகங்களில் நடித்தும் இருக்கின்றோம். மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததாக இந் நாடகங்கள் இருக்கும். தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் கூட நாடகங்களில் வெளிப்படும். நடிகர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து தனது பாத்திரத்தின் வெற் றிக்கு வலுசேர்ப்பார்கள். ஆனால் இன்று தோட்டங்களில் நாடகங்கள் அரங்கேற்றப் படுவது அபூர்வமாகி இருக்கின்றது. நாட கங்களின் இடத்தை சினிமாப் படங்கள் இப்போது பிடித்திருக்கின்றன. அதிலும் அடிதடி, சண்டை காட்சிகளை கொண்ட படங்களை இன்றைய இளைஞர்கள் அதி கமாக நேசிக்கின்றார்கள் சினிமா படங் களில் வருகின்ற கதாநாயகனை போன்று தன்னையும் சித்திரித்துக் கொண்டு அடிதடிகளில் ஈடுபட்டு கை, கால்களை உடைத்துக் கொள்ளும் இளைஞர் கூட் டமும் எம்மிடையே இருக்கத்தான் செய் கின்றது.

மரண வீட்டில் ஒப்பாரி இல்லை

ஒப்பாரி பாடல்கள் நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டனவாக விளங்குகின்றன. மனைவி, கணவன் இறந்த பின் பாடும் ஒப்பாரி, தந்தைக்காக மகள் பாடும் ஒப் பாரி, தாய்க்காக மகன்பாடும் ஒப்பாரி, அண்ணனுக்காக தங்கை பாடும் ஒப்பாரி என்று ஒப்பாரி பாடல்கள் பல வகையாகும் பாடலோடு தொடங்கும் மனிதனின் வாழ்க்கை பாடலோடுதான் முடிகின்றது ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என் பார்கள். இதுபோலவே ஆரம்பமாவதும் பாட்டிலேதான். ஆடி அடங்குவதும் பாட் டிலேதான் என்கிறார் டாக்டர் சு.சண்முக சுந்தரம் ஒப்பாரியின் சொற்கள் எல்லாம் சோகச் சுமையுடன் விளங்குகின்றன "தாலியின்னாத் தாலி தங்கத்தால் பொன் தாலி தாலி கழற்றி விட எந்தன் தர்மருக்கே சம்மதமோ" என்று மனைவி கணவனின் இறப்பின் போது பாடும் பாடல் நெஞ்சை வருடுவதாக அமைகின்றது. 

மலையக மரண வீடுகளில் முன்பெல்லாம் ஒப்பாரிக்கு பஞ்சமில்லை. யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் பெண்கள் மரண வீட்டிற்கு வந்து ஒப்பாரி பாடுவர். ஆனால் இப்போது மலையக மரண வீடுகளில் ஒப்பாரிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மூத்த பெண்கள் ஒப்பாரி பாட முன்வருகின்ற போதும் இளம் தலைமுறையினர் இதனை ஒரு ஒவ்வாமை யாக கருதுகின்றனர். ஒப்பாரி என்பது அவர் களுக்கு பிடிக்காத ஒரு விடயமாக உள் ளது கெளரவ குறைச்சலாகவும் இதனை சிலர் கருதுகின்றனர். இவையெல்லாம் எமது சமூகத்தின் பாரம்பரியங்களை நாமே மழுங்கடிக்க செய்கின்ற ஒரு நிலையினை ஏற்படுத்தி இருக்கின்றது. இது போன்றே தாலாட்டுப் பாடல், தெம்மாங்கு பாடல், அம்மன் குழலைப் பாடல் இவையெல்லாம் கூட மெது மெதுவாக அருகிக் கொண்டு வருவதனைக் காணலாம்

இசைக்கருவிகள்

இசைக்கருவிகள் வரிசையில் தப்பு, உடுக்கு, உறுமி என்பவற்றுக்கு எப்போ துமே ஒரு தனித்துவமான இடம் உள்ளது தப்பின் ஒலி பலரையும் ஆகர்ஷித்திருக் கின்றது. வெள்ளையர்கள் கூட தப்பின் ஒலியை மெய் மறந்து ரசித்திருப்பதனை பார்த்திருக்கின்றேன். இவர்கள் தப்பினை வியந்து பாராட்டி இருக்கின்றார்கள் எனினும் தப்பை தொடுவதே தப்பு என்கி றது மரண வீடுகள், கோயில் திருவிழாக்கள் என்பவற்றின் போதும் இன்னும் சில முக்கிய நிகழ்வுகளின் போதும் தப்பின் ஒலி எம்மை யெல்லாம் ஈர்க்கும். எனினும் இப்போது இந்த நிலை மாறி தப்பு மெது மெதுவாக மறைந்து வருவது வேதனைக்குரியதாகும் இதனைப் போன்றே உடுக்கு, உறுமி உள் ளிட்ட இன்னும் சில இசைக்கருவிகளும் சமூகத்தில் இருந்தும் மறைந்து செல்கின் றன. சமூகத்தின் பொக்கிஷங்கள் இவ்வாறு மறைந்து செல்வதென்பது ஒரு சமூகத்தின் தனித்துவம் இழக்கப்படுவதற்கு உந்து சக் தியாக அமையும்.

நாட்டுப்புற பண்பாட்டியல் என்பது கிரா மாந்திர மக்களின் அனுபவத்தின் பொக் கிஷம். மனிதனோடு மனிதனை அது நேரடியாக மட்டுமல்லாது இதயத்தோடு இதயத்தை பிணைத்து வைக்கின்றது. அவர் களுடையதனித்தன்மையைக் குலைக்காமல் ஒற்றுமையை வளர்க்கின்றது. இயற்கை யோடு இணைந்து வாழும் சமூகத்தின் ஒட்டு மொத்தமான அல்லது தனிப்பட்ட உணர்ச்சிகளை அது பிரதிபலிக்கின் றது என்கிறார் சங்கர் சென் குப்தா. குப் தாவின் கூற்றினை உன்னிப்பாக நோக் குதல் வேண்டும். எமது பொக்கிஷங்கள் அழிவடைவதற்கு நாமே காரணகர்த்தாவாக இருந்து விடுதல் கூடாது.

சமூக சீரழிவுகள்

சமூகம் என்பது திடகாத்திரமானதாக இருத்தல் வேண்டும். ஆளுமை மிக்கதாகவும் சகல துறைகளிலும் முன்னேறிச் செல்லும் போக்கினையும் கொண்டிருக்க வேண்டும் கல்வி பல எழுச்சிகளுக்கும் உந்து சக்தி யாக அமைகின்றது. இந்நிலையில் கல்வி மையச் சமூகம் தொடர்பில் இப்போது அதி கமாகவே பேசப்பட்டு வருகின்றது. திட்ட மிட்ட முன்னெடுப்புகளால் திடகாத்திரமான ஒரு சமூகத்தை வலுவிழக்கச் செய்யும் கைங்கரியங்களும் உலக வரலாறுகளில் இடம்பெறாமல் இல்லை. இனவாத சிந்த னையாளர்கள் பிழையான எண்ணங்களை சமூகத்தில் விதைத்து வேரூன்றச் செய்து சமூக இருப்பினை தகர்த்தெறியவும், வலு விழக்கச் செய்யவும் பல்வேறு நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகின்றனர் இனவாதிகளின் குரூர எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் சமூகத்தில் உள்ள புல்லுருவிகள் சிலர் நடந்து கொள்வதால் முழுச்சமூகமும் சீரழிந்து சின்னாபின்ன மாகும் நிலைமை ஏற்படுகின்றது. பிறர் சமூ கத்தைப் பார்த்து எள்ளி நகைக்கும் துர்ப் பாக்கிய நிலைமையும் உருவாகின்றது

இந்த வகையில் மலையக சமூகத்தின் சீரழிவுக்கும் இச்சமூகத்தைச் சார்ந்த சிலரே உடந்தையாக இருப்பது வெட்கக்கேடான செயற்பாடாகும். பல்துறை சார்ந்தவர்களும் இதில் உள்ளடங்குகின்றார்கள்.

லயத்து சூழல்

வீடு என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகும். தனியே வெயிலுக்கும் மழைக்கும் மட்டுமே ஒதுங்குகின்ற ஓர் ஒதுக்கிடம் அது அல்ல. அது சமூக நிறு வனமும் கூட அங்கே தான் சமூக நாகரி கத்தின் அஸ்திவாரம் இடப்படுகின்றது எனவே வீடு என்பது குறைந்தபட்ச தகு திகளையாவது கொண்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் மா. செ.மூக்கையா தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த வகையில் மலையகத்தின் வீட்டுச் சூழல் தொடர்பில் நாம் சிந்திக்கின்றபோது திருப்தி கொள்ள முடியவில்லை. பாரம்பரிய மாக லயத்து சூழலில் எமது மக்கள் முடங்கி கிடக்கின்றனர் வாழ்வதற்கு பொருத்தமில் லாது, இடிந்து விழும் அபாயத்தை லயன்கள் எதிர்நோக்கி இருக்கின்றன. இந்த லயத்து சூழல் சமூக சீரழிவுகளுக்கு வலுச் சேர்ப்ப தாக புத்திஜீவிகள் விசனப்படுகின்றனர்.

போதிய இடவசதி இன்மை, நெருக்க மாக உறுப்பினர்கள் வாழுகின்ற சூழ்நிலை போன்ற பல விடயங்கள் சமூக சீரழிவுக ளுக்கு வலுச்சேர்க்கின்றன. பொருத்தமில் லாத வயதில் திருமண பந்தத்தில் ஈடுப டுதல், கலாசார முறைமைகள் மீறப்படுதல் என்பவற்றுக்கு லயத்து வாழ்க்கை அடித்தள மாகின்றது. இவற்றோடு லயத்து வாழ்க்கை முறையின் காரணமாக சுகாதார நிலைமை களும் மோசமடைந்து காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கை களில் உரியவாறு ஈடுபடுவதற்கு தடைக் கல்லாக லயத்து சூழல் அமைவதாக ஏற்க னவே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டுள்ளமை தொடர்பிலும் நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். இத்தகைய விடயங்கள் தொடர்பில் நாம் விசாலமான பார்வையினை செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின் றது.

குடிப்பழக்கத்துக்கு அடிமை

ஒரு நாட்டை அழித்து விடுவதற்கு ஆயுதங்கள் தேவையில்லை. ஒரு நாட்டின் இளை ஞரை போதைப் பொருளில் மாட்டி விட்டால் அந்நாடு முழுவதும் திக்கற்று துன்பத்தில் அல்லல்படும். பெளதீக அழிவுகளின் சிதை வுகளில் இருந்து ஒரு நாட்டினை கட்டியெ ழுப்பலாம். ஆயின் உள ரீதியாக இளைஞர் அழிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு எவ்விதத் திலும் விமோசனம் கிடைக்க மாட்டாது என் பது ஆர்.எம்.கல்றாவின் கூற்றாகும். இக் கூற்றில் எத்துணை உண்மை இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ளுங்கள் திடகாத்திரமான ஒரு சமூ கத்தை போதைப்பொருளில் மாட்டிவிட்டு அவர்களை சகல துறைகளிலும் நிர்க்கதி யாக்கும் முனைப்பில் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமைக்கு உலக வரலா றுகள் சான்று கூறும்.

இந்த வகையில் மலையகத்தை பொறுத் தவரையில் அதிகளவிலான தொகையினர் மதுபாவனையில் ஈடுபடுவதனை அவதா னிக்க கூடியதாக உள்ளது. இளைஞர் குழாம் தீவிர சிரத்தையுடன் இதில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு பாதக விளைவுகளும் இடம்பெற்று வரு வதனையும் எம்மால் அறியக் கூடியதாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் குடும்பங் களுக்கிடையே விரிசல், நோய்கள், கல்வி பாதிப்பு, இளவயதில் மரணம் உள்ளிட்ட பல்வேறு பாதக விளைவுகளையும் எம்மால் குறிப்பிட்டு கூறுவதற்கு இயலும் போதைப் பழக்கம் பலரது பாதையை மாற்றி இருக் கின்றது. குடியினால் பல குடும்பங்கள் கண்ணிரில் தள்ளாடி வருகின்றன. பல்வேறு வளர்ச்சிப் படிகளை எட்டிப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ள மலையக சமூகத்துக்கு குடிப்பழக்கம் உகந்ததல்ல. சமூகமானது மேலும் மேலும் சீரழியும் ஒரு நிலைக்கே இது இட்டுச் செல்வதாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு

வருடாந்தம் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண் களின் தொகை கணிசமாக அதிகரித்து வரு வதனை காணலாம். இவர்களுள் மலையகப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வா றாக பெண்கள் வெளிநாடு செல்வதால் பல கணவர்கள் "சின்ன வீடு" செட்டப் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் உரிய காப்பு கணிப்பு இல்லாது துன்பப்படுகின்றனர். கல்வி உரிமையும் இதனால் பாதிக்கப்ப டுகின்றது. வெளிநாடு சென்று மனைவி அனுப்பிய பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு கணவன் ஒட்டாண்டி யாக உட்கார்ந்திருக்கின்றான். பெண்கள் வெளிநாடு செல்வது சமூகச் சீரழிவுக்கு உந்து சக்தியாகின்றது.

பேராசிரியர் சோ சந்திரசேகரனின் கருத்து

ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்களி னதும் கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமி யங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் சந்திரசேகரன் வலியுறுத்தி கூறினார். சந்திரசேகரன் இது தொடர்பில் மேலும் கூறுகையில், கலாசாரம் என்பது தனித்துவம் மிக்கதாகும். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினருக்கு உரியவையாக இது விளங்குகின்றது. இந்த வகையில் மலையக மக்களுக்கு என்று தனித்துவமான பாரம்பரியங்கள், கலைகள், மரபுகள் என பலவும் உள்ளன. ஒன்று கலந்து வாழ்தல் என்று முன்னர் ஒரு சம்பிரதாயம் இருந்தது.

எனினும் இப்போது அந்தந்த சமூகத்தினரின் சகலவித உரிமைகளையும் பாதுகாப்பதற் கான முன்னெடுப்புகள் இருந்து வருகின் றன. குறிப்பாக சிறுபான்மையினரின் கலை, கலாசாரங்கள் உள்ளிட்ட பலவற்றையும் பேணுவதற்காக அரசும் சர்வதேச நிறுவனங் களும் கூட ஆதரவு வழங்கி வருகின்றன.15 இலட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் இந்நாட்டில் வாழுகின்றனர். இவர்களுக்கென்று இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன. தமது தனித்துவத்தை பேணி முன்னேறி செல்வது என்பது முதல் தெரிவாகும். ஏனைய இனங்களுடன் கலந்து வாழுதல், அவர்களது நடவடிக்கைகளை பின் பற்றுதல் ஏனையதாகும். மலையக இளை ஞர்களிடத்தில் சிங்கள பாணி ஒன்றே தென் படுகின்றது. சிங்களவர்களின் கலாசார மரபுகளின் ஆதிக்கத்தால் எமது இளைஞர்கள் அடித்துச் செல்லப்படும் நிலை ஒன்றும் காணப்படுகின்றது. அறியாமை காரண மாக அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு போகின்ற தன்மையும் காணப்படுகின்றது.

நாம் எவ்வளவு தான் சிங்கள பாணிக்கு மாறினாலும் சிங்களவர்கள் எம்மை சிங் களவர்களாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை மலையக மக்களும் இளைஞர்களும் நன்றாக விளங்கி செயற்பட வேண்டும். சிங்களத்தில் பேசி அவர்களது பாணியை பின்பற்றுவதால் நாம் சிங்களவர் ஆகி விடமுடியாது. இந்த நிலையில் எமது தனித்துவத்தை பேணுவ தற்கு ஒரே வழி எமது பாரம்பரிய கலைகளைப் பேணி மதிப்பளிப்பதாகும். கூத் துகள், நாடகங்கள், விளையாட்டுகள், இசைக்கருவிகள், பழமொழிகள், விடுகதைகள், பாடல்கள், ஆடல்கள், நம் வழிபாடுகள், கைவினை கலைகள், புராணங்கள், கதைகள் எனப் பலவும் உரியவாறு பாதுகாக்கப்பட்டு மதிப் பளிக்கப்படுதல் வேண்டும். சுமார் இரு நூறு வருட காலமாக இந்திய வம்சாவளி மக்கள் பாரம்பரிய கலைகளைப் பேணி வந்திருக்கின்றனர். இனியும் தொடர்ச்சியாக நாம் இவற்றை பேணுவதிலேயே எமது தனித்துவம் தங்கியிருக்கின்றது.

வடக்கு, கிழக்கிலே போராட்டங்கள் இடம் பெற்றன. எதற்காக இந்த போராட்டங்கள் இடம் பெற்றன என்று சிந்திக்கின்ற போது தமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை, மரபுகளை, உரிமைகளை, பாரம்பரிய வாழ்விடத்தினை பாதுகாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்குடனேயே அவர்கள் போராட்டங்களில் குதித்தனர். இவற்றை நாம் ஒரு போதும் மறந்து விடுதல் கூடாது. நாம் யார்? எமது அடையாளம் என்ன? என்கிற கேள்வி எப்போதுமே தொக்கி நிற்கும். கலாசாரத்தை நாம் இடமாற்றம் செய்ய முடியாது. எங்களது அடிப்படையான சில அடையாளங்களை நாம் ஒரு போதும் மாற்றவே முடியாது. இதனை நாம் நன்றாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். அரசாங்க மட்டத்தில் தமிழர்களின் பண்பாடு கலைகளை பேணுபவர்களுக்கு பட்டங்களையும், விருதுகளையும் வழங்குகின்றார்கள். அரசாங்கமே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது மலையக மக்களும் அந்த உணர்வுடன் செயற்படுவது மிகவும் அவசியமல்லவா? 

கோயில்கள் கூட ஒரு கலாசார நிலையங்களேயாகும். கலாசார மையங்களாக இவை விளங்குகின்றன. கோயில்களிலும் பல கலாசார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே கோயில்களை நாம் உரியவாறு பேணுவதன் அதன் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் ஊடாகவும் கலாசாரத்தையும், தனித்து வத்தினையும் பேணுவதற்கு முடியும். பாரம்பரியங்களை மறந்து செயற்படுவதன் காரணமாக சமூக சீரழிவுகள் பலவும் இடம்பெறுகின்றன என்பதனையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். தமிழ்ப் பாரம்பரியங்களை பின்பற்றி கிரியைகள் இடம்பெறுதல் வேண்டும். எனினும் இன்று நிலைமை மாறிச் செல்வதாக பலரும் ஊடாகவும், விசனப்பட்டு கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது. கலாசாரத்தை நாம் இழந்து விடுவோமாயின் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். நாங்கள் வலிந்து சென்று எங்களது கலாசாரத்தை இழக்கின்றோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும். அவரவர்களின் கலாசாரத்தை அவரவர்கள் பின்பற்றுதல் வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தோட்டப்புறங்களில் ஸ்தாபன ரீதியான ஒழுங்கமைப்பு காணப்படுகின்றது. இந்த ஒழுங்கமைப்பினை பயன்படுத்தி மலையக மக்களின் சகலதுறை சார் எழுச்சிக்கும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படுதல் வேண்டும். புத்திஜீவிகளின் பங்களிப்பு அவசியமாகும்.

நன்றி - வீரகேசரி

அம்மா பசிக்குது - என்.சரவணன் (சத்தியக் கடுதாசி)


அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சமீபத்தில் நிகழ்ந்தது.  மட்டக்களப்பு பகுதியில் ஒரு பெண், தனக்கு முகநூலில் நிகழ்ந்த அவமானத்தால் தனது தற்கொலையை நேரடியாக வீடியோவில் வெளியிட்டு மாண்டு போனார். தனக்கு நேர்ந்த அவமானத்தால் தனது இரு தங்கைகளும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே தான் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோக் குறிப்புக் கூறியது. அந்தத்தாய், சாவதற்கான ஆயத்தங்களைச் செய்யும் தருணம், அருகில் வந்த குழந்தை, “அம்மா பசிக்குது” என்று கேட்ட காட்சி எவரையும் கண்கலங்கச் செய்யும்.

இந்தச் சம்பவம் என்னை நிம்மதி இழக்கச் செய்திருந்தது. என் தங்கை கல்யாணி தற்கொலை செய்து, இந்த வருடத்துடன் ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அவள் தன்னைத்தானே தீயிட்டு கருகிக் கொண்டிருந்தபோது அருகில் ஒரு வயதும் நிறைவுறாத அவளின் தவழும் குழந்தை கதறிக் கொண்டிருந்தது. அயலவர்கள் அக்குழந்தையைக் காப்பாற்றினார்கள்.

நோர்வே வந்திருந்த புதிதில் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இரு தடவைகள் நான் தற்கொலைக்கு முயன்று, இரண்டாவது தடவை பொலிசார் வந்து தலையிட்டுத் தடுத்து நிறுத்தினர். மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்காகச் சிலகாலம் உரிய மருத்துவத்தையும் உளவள ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டேன். இது தனிப்பட்ட விடயமாயினும் பகிர்வதற்கு நான் தயங்கவில்லை.

தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள், குறிப்பிட்ட ஒருவரையோ குழுமத்தையோ பழி தீர்க்கும் உள்நோக்கமும் கொண்டுள்ளனர் என உளவியல் சொல்கிறது. ஆனால் எனது நிலை வேறு. அசௌகரியமான நினைவுகளில் இருந்து மீள முடியாதபடி நெஞ்சு நெருப்பாக கதகதத்துக் கொண்டிருந்தது. என்னை என்னால் மீட்க முடியவில்லை. என் அமைதியின்மையை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அன்று அந்தச் சித்திரவதையை நிறுத்த எனக்குத் தெரிந்த ஒரே வழி என்னை முழுமையாக நிறுத்திக் கொள்வது.

'தற்கொலை முயற்சி' என்பது மரபியலோடு தொடர்புபட்டது எனும் கருத்துண்டு. எங்கள் குடும்பங்களில் நிகழ்ந்து முடிந்த தற்கொலைகளை மீட்டுப் பார்க்கும்போது அது உண்மை தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்போது உளவள ஆலோசனை எனக்குக் கைகொடுத்தது என்பதே உண்மை. மேற்படி பெண்ணின் தற்கொலையும் என்னைப் பாதித்தது இவ்வாறுதான்.

சமூக வலைத்தளங்கள் மூலம் மனக்காயங்களுக்கு உள்ளாவதும் அதனால் தமது கதையை முடித்துக் கொள்வதுமான சம்பவங்கள் வரவர அதிகரித்து வருகின்றன. இதில் பெண்களின் தொகையே அதிகம். சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்களின் படங்களும் வீடியோக்களும் அவதூறாக வெளிப்படுவதனால் அதிக பெண்கள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நம்பகம் இல்லாதவர்களுடன் நெருக்கமாகவோ ஆபாசமாகவோ புகைப்படங்களை எடுக்க அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கைகள் வெளியாகியபோதும், சில பெண்கள் அதன் ஆபத்தை இன்னமும் விளங்கியதாகத் தெரியவில்லை. நவீன தொழில்நுட்பங்களின் விளைவாக பள்ளிக்கூட மாணவிகளும் இப்படிச் சிக்க வைக்கப்படுகிறார்கள். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிரங்கமாகச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, தமது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் கயவர் கூட்டம் சமூகத்தில் அதிகரித்திருக்கிறது.

வேர்ல்ட் அட்லஸ் (World Atlas) என்கிற அமைப்பு (21.2.17) வெளியிட்ட இறுதி அறிக்கையில், 'உலகில் அதிகம் தற்கொலை நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருக்கிறது' என்று கூறப்பட்டது. இது பெருமையல்ல; வெட்கப்பட, வேதனைப்பட வேண்டிய அதிர்ச்சிச் செய்தி. 

யுத்தம் நிகழ்ந்த காலப்பகுதியில் இலங்கை முதலாவது இடம் பிடித்திருந்தமை தெரிந்ததே. அப்போது தற்கொலை என்பது யுத்தத்தின் அங்கமாகவும் இருந்தது. அதேவேளை, யுத்தத்தின் பக்கவிளைவாகத் தற்கொலை செய்த சம்பவங்களும் ஏராளமாக நிகழ்ந்தன. அதேசமயம் மத்தியகிழக்கு நாடுகளுக்குச் சென்ற பெண்கள், சித்திரவதை பொறுக்காமல் தற்கொலை செய்த செய்திகளையும் கவனித்து இருப்போம்.
\
காதல், பரீட்சைத் தோல்விகளில் குடும்பத் தகராறுகளில் மட்டுமன்றி, கடனடைக்க முடியாமலும் கூடத்  தற்கொலைகள் நிகழ்கின்றன. மேற்குறித்த அறிக்கை, 'இலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களில் பத்துக்கு ஏழுபேர் பெண்கள்' என்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தினர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையில் எட்டு இலட்சத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக  ஆண்டுக்கு சராசரி மூவாயிரம்பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் எட்டுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் உளவியல் நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்களில் நாற்பது வீதத்தினர் மாத்திரமே மருத்துவ உதவி பெறுகின்றனர்' என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆண்களைவிட உணர்ச்சிவசப்பட்டுச் சாவை நாடும் பெண்கள் பற்றி நம் சமூகம் எப்போது அக்கறைப்படப் போகிறது? தற்கொலைக்கு உந்துகின்ற மனச்சோர்வுக்கான தீர்வை மருந்துக் கடைகளில் பெற முடியாது.  விரக்தி, மனச்சோர்வு, மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுவிப்பதற்காக உளவள ஆலோசனைகள், வளர்ந்த நாடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் உளவியல் உதவி என்பது 'பைத்தியங்களுக்கு' வழங்கப்படும் சேவையாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.

உளவள சேவை பற்றிய விழிப்புணர்வும் நம் சமூகத்தில் கிடையாது.
பெண்கள் ஏன் அதிகளவில் தற்கொலைக்கு உந்தப்படுகிறார்கள் என்பதன் சமூகக் காரணிகளை ஆராய வேண்டிய தருணம் இது. நம் தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள், நண்பி என எவருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று நாம் வேண்டிக் கொள்வதைப்போல, அதற்குக் காரணமான அடிப்படைகளைக் கண்டுபிடித்துத் தீர்ப்பதும் நம்மெல்லோரதும் கடமையாகிறது. இத்தகைய சாவு, நாளை நம் கதவுகளை தட்டும்வரை  காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு முன்பாகச் சமூக பொறுப்புடன் தற்கொலைக் கணக்குகளைத் தீர்த்தாக வேண்டும்.

நன்றி - IBC தமிழ் பத்திரிகை

70 களின் மனித உரிமை முன்னோடி போல் கெஸ்பஸ் அடிகளார் காலமானார்


வணக்கத்துக்குரிய பிதா போல் கெஸ்பஸ் அடிகளார் ஏப்ரல் 25 காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் 28 வெள்ளி மாலை 5மணிக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை உக்கிரமம் பெற்றுக்கொண்டிருந்தபோது அதன் தீர்வுக்காக இயங்கும் நோக்கில் அவர் 1979இல் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தை (மேர்ஜ் - MIRJE - Movement for Inter-Racial Justice and Equality) ஆரம்பிப்பதில் முன்னோடியாக இருந்தார். இந்த அமைப்பின் பல்வேறு வேலைத்திட்டங்களின் ஒன்றாகத்தான் யுக்திய என்கிற சிங்கள மாற்றுப் பத்திரிகையும், தமிழில் "சரிநிகர்" மாற்றுப் பத்திரிகையும் வெளியானது.

மேர்ஜ் இயக்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் அவர் இயங்கினார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜே.ஆர்.அரசாங்கம் தமது இரும்புக் கரங்கள் கொண்டு ஒடுக்கியவேளை அதை எதிர்த்து சுதந்திர இயக்கமாக அன்று களத்தில் இயங்கியது மேர்ஜ் இயக்கம். அந்த போராட்டங்களுக்கு போல் கெஸ்பஸ் அடிகளார் தலைமை தாங்கியவேளை அவருடன் ரெஜி சிறிவர்த்தன, பாலா தம்பு, சார்ல்ஸ் அபேசேகர, சுனிலா அபேசேகர, ஜோ செனவிரத்ன போன்றோரும் ஒன்றிணைந்தனர். 

அப்போதெல்லாம் தந்திச் செய்திகள் தான் சாத்தியம். வடக்கு கிழக்கு பகுதிகளில் நேர்ந்த அரச அடக்குமுறைகளை எதிர்த்து அவர் ஜே.ஆருக்கு தந்தி மூலம் அனுப்பிய கண்டனங்கள் நூற்றுக்கணக்கானவை. அவற்றை அறிக்கைகளாக பல சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தியவர்.

1979 இல் அவரசகால சட்டத்தை அமுல்படுத்தி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட அரச அடக்குமுறைகளை எதிர்த்து போல் கெஸ்பஸ் அவர்களின் தலைமையிளான மேர்ஜ் தூதுக் குழுவினர் "1979 அவசரகாலச் சட்டம்" என்கிற ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ஜே.ஆர் அரசாங்கம் பதவி ஏற்று இரு வருடங்களிலேயே மீறிய மனித உரிமைகளை உலகுக்கு எடுத்துரைத்தது.

அந்த காலப்பகுதியில் மேர்ஜ் நிறுவனத்துக்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அலுவலகங்கள் இயங்கின. இந்த அலுவலகங்கள் தமிழ் மக்கள் தாம் எதிர்கொண்ட அடக்குமுறைகளை எடுத்துச் சொல்லும் இடமாக திகழ்ந்தன.

அந்த இயக்கத்தின் பணிகளை ஏனைய சக செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் மலையகத்தில் இயங்கத் தொடங்கினார். மலையக மக்களின் துன்பங்களை பதிவு செய்வது, வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வது அதற்கான சக்திகளை ஒன்றிணைப்பது என்று பாரிய பணியாற்றினார். தொழிற்சங்கங்கள், அரசியல கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பனவற்றை ஒன்றிணைத்து கணிசமான அளவு அவர் பணியாற்றியிருக்கிறார்.

கண்டியில் அவர் பிஷப் லியோ நாணயக்காரவுடன் சேர்ந்து 1972இல் தொடங்கிய "சத்யோதய" (Satyodaya) நிறுவனம் மலையகம் பற்றிய ஆய்வாளர்களுக்கு கைகொடுக்கும் மிகவும் முக்கியமான கேந்திர நிலையம்.

இலங்கையின் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டைப் பொறுத்தவரை 1970 களின் நடுப்பகுதியிலிருந்து ஒரு மனித உரிமை முன்னோடியாக வரலாற்றில் பதிவானவர் போல் கெஸ்பஸ் அடிகளார்.

நமது மலையகம் இணையத்தளம் நன்றியுடன் அவருக்கு அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துகிறது.

கேள்விக்குறியாகியுள்ள மொனராகலை தமிழர்களின் அரசியல் எதிர்காலம் - அருள் கார்க்கி

 
ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மலையக தமிழ் மக்கள் பரவலாக வாழ்கின்ற போதிலும் மொனராகலை மாவட்ட தமிழர்கள் அரசியல் பிரதிநிதித்துவமோ விசேட ஒதுக்கீடுகளோ இன்றி அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ள சூழலே காணப்படுகின்றது.

குறிப்பாக பதுளை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் செறிவு அதிகமாக பெருந்தோட்டங்களைத் தழுவி அமைந்துள்ள காரணத்தினால் அரசியல் கட்சிகளோ தொழிற்சங்கங்களோ அதீத அக்கறை காட்டி மக்கள் பிரச்சினைகளை விளம்பரப்படுத்தி இலாபம் தேடுகின்றன. அப்புத்தளை, பசறை, பதுளை ஆகிய தேர்தல் தொகுதிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற பிரதிநிதிகளை தமிழ் மக்கள் சார்பாக தெரிவு செய்யக்கூடிய இயலுமையுடன் காணப்படுகின்றன.

அதேபோல் உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு மக்களுடைய இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதானமாக அரசியல் பிரதிநிதித்துவம் எனப்படுவது மக்களின் இன விகிதாசாரத்துடன் தொடர்புபட்டது. அண்மையில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை மாற்றத்தினூடாக ஊவா மாகாண தமிழ் மக்கள் மோசமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்புகளில் சுட்டிக்காட்டப்படுகின்ற நிலையில் நாம் மொனராகலை மாவட்ட தமிழர்களின் அரசியல் எதிர்காலமும் இருப்பும் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை ஆராய வேண்டியது அவசியம்.

மொனராகலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் “இறப்பர்” பயிர் செய்கையே பிரதான பெருந்தோட்டப் பயிராக காணப்படுகின்றது. இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் எம்மவர்கள் சொல்லொணா துயரங்கள் பலவற்றை தொழிலுடன் சார்ந்து எதிர்கொள்கின்றனர்.

 அதிலும் குறிப்பாக இவர்கள் எதுவித தொழிற்சங்க கட்டமைப்புக்குள்ளும் உள்ளடங்கவில்லை.

மாவட்ட மொத்த சனத்தொகையில் 2.3% வீதமான மக்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் என சற்று முந்திய புள்ளி விபரம் குறிப்பிடுகின்றது. எனினும் இதனை மிகச் சரியான தரவாகக் கொண்டு எம்மால் ஆராய முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மொனராகலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பலர் பெருந்தோட்ட தொழிலைக் கைவிட்டு சேனைப்பயிர்ச் செய்கை, கட்டுமான உதவியாளர்கள், சிறு வியாபாரம், தினக் கூலி வேலைகள் போன்ற பல்வேறு நிரந்தரமற்ற தொழில்களை தெரிவு செய்து கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இவர்கள் இயக்க ரீதியற்ற சனத்தொகையில் சிறுபான்மையாக உரிமைகள் அற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 319 கிராம சேவகர் பிரிவுகளிலும் உதிரிகளாக தமிழர்களும் மெதகம, பக்கினிகாவல, பிபிலை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் இவர்கள் பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட்டு தொடர்ந்து அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மாகாணத்தை தழுவியே அனைத்து தமிழ் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் காணப்படுவதால் மொனராகலை தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். உதிரி வாக்குகளால் இலாபம் இல்லாத உண்மை அறிந்த அரசியல்வாதிகளும் இவர்களை உதாசீனப்படுத்துகின்றனர்.

இன்னொருபுறம் இவர்கள் கலாசார உள்வாங்கல்களுக்கு உட்பட்டு பெரும்பான்மை இனத்துக்குள் ஐக்கியமாகி சிங்கள மொழிக் கல்வியை தொடரும் போக்கு அண்மைக் காலமாக இடம்பெறுவது குறிப்பிட்டுக் கூறக்கூடியது. இதன் காரணமாக பெருவாரியான தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று உடையணிதல் சிங்கள மொழி மூலம் தொடர்பாடல் மேற்கொள்ளுதல் சாதாரணமாக இடம்பெறுகின்றது. கல்விச் சமூகத்தைப் பொறுத்தவரையில் “கஷ்டப் பிரதேசம்” என்று அடையாளப்படுத்த மட்டுமே மொனராகலை மாவட்டம் கவனத்தில் எடுக்கப்படுகின்றது. புறம்பாக அரச நியமனங்கள் பெற்றுக் கொள்ளும் எம்மவர்கள் தொழில் மேம்பாட்டுக்காகவும் பிள்ளைகளின் கல்வி போன்ற சுயநல தேவைக்காகவும் பதுளை, பண்டாரவளை போன்ற நகரங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். இதன் காரணமாக கற்ற இடை நிலைச் சமூகத்தின் சமூகக் கடமை இடைவெளியாக காணப்படுகின்றது.

அதே போல் தமிழ் மாணவர்களின் கல்வியும் பாரிய பின்னடைவுடன் தேக்க நிலையில் உள்ளமையை நாம் சாதாரணமாகக் கொள்ள முடியாது. காரணம் ஒரு எதிர்கால சமுதாயம் அங்கு அடிப்படை கல்வியுரிமைகளோ, சலுகைகளோ இன்றி மழுங்கடிக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த மாவட்டத்தை எடுத்து நோக்குகையில் இவர்களின் இருப்பும் கல்வி இல்லாத காரணத்தினால் அற்றுப் போய்விடும்.

சுகாதாரம், வீடமைப்பு, உள்ளக வசதி வாய்ப்புகள் என்று எடுத்து நோக்குகையில் அனைத்து மட்டத்திலும் மேம்பாடு அடையாத ஒரு போக்கே காணப்படுகின்றது. குறிப்பாக சுகாதார பிரச்சினைகள் காரணமாக மொனராகலை மாவட்டத்தில் அதிகமான தொற்று நோய்கள், சிசு மரண வீதம் அதிகரிப்பு, இளம் பிள்ளை சார்ந்த நோய்கள் போன்ற அதிகமான பாதிப்புக்களை சமீபத்தில் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

ஒரு சில பிரதேசங்களில் தமிழர்களும் சிங்களவர்களுடன் இணைத்து தனி வீட்டுத் திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்ட நிலைமை காணப்படினும் அது மிக அரிதான ஒரு விடயமே ஆகும்.

மலையக சமூகம் தொடர்பாக பேசும் அனைவரும் மொனராகலை மாவட்டம் தொடர்பாகவும் கரிசனை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். அரசியல் தொழிற்சங்க அமைப்புகளும் சிவில் அமைப்புக்களும் இது தொடர்பாக கவனம் செலுத்தி இருப்பை உறுதி செய்ய முனைய வேண்டும். மொனராகலை மாவட்ட தமிழ்க் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு உண்டு. வாக்குகள் கிடைக்கப் பெறாத மாவட்டம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு அப்பால் இன ரீதியான சமூகக் கடமையை பதுளை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் உணர வேண்டும். கல்விச் சமூகமும் பாடசாலைக்கு வெளியில் வந்து இருப்பை உறுதி செய்யும் விதத்தில் மக்களுடன் இணைந்து போராடத் தயாராக வேண்டும். காரணம் மொனராகலை மாவட்டத்தை முன்னிறுத்தி எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பாடசாலைகள் மட்டுமே ஆகும்.

நன்றி - வீரகேசரி

குப்பையை ஆளுமா "நல்லாட்சி"? - ஜீவா சதாசிவம்


குப்பைமேடு சரிந்தது. அரசியல்வாதிகள் களத்துக்குச் சென்றார்கள். தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள் உட்பட பலரும் உதவிகளை வழங்கினார்கள். இதைத்தானே   நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். 'மீதொட்டமுல்ல' விற்கும் அப்படித்தானா என எண்ணத் தோணுகிறது.  

மீரியபெத்த மண்சரிவு தந்த தாக்கத்தையும் சோகத்தையும் இப்போது மீதொட்டமுல்ல குப்பைமேட்டுச் சரிவு தந்திருக்கிறது. இந்த சரிவை பார்வையிட  பிரதமர், அமைச்சர்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அதிகாரிகள், அரச – அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் என பலரும் பார்வையிட்டு அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். பல்வேறு உதவிகளையும் வழங்கினார்கள். தற்காலிமாகவே...

இந்த சம்பவங்களே கடந்தவார செய்திகளாகவும் இருந்தது. இது யாவரும் அறிந்ததே!. 

இங்கு விஜயம் செய்தவர்கள் பலரும் சாதாரண நிலையில்  செல்ல பிரதமர் மாத்திரம் 'கிளினிக்கல் மாஸ்க்' அணிந்து சென்றதை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

'ஒரு குறிப்பிட்ட மணித்தியாலத்திற்குள் குப்பைமேட்டுப் பகுதியைப் பார்வையிடச் செல்வதற்கு அவர் அணிந்திருந்த அந்த மாஸ்க் பற்றியதான பல்வேறு கருத்துக்கள் சமூக வளைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது'. இங்கு பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் 'மாஸ்க்'  இல்லாமலேயே இதனையே சுவாசித்து வந்தனர் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. ' ஏன்   இந்த சூழலுக்கு இசைவாக்கப்படுத்தப்பட்ட மக்களாகவே இவர்கள் இருந்துள்ளனரா? 

மீரியபெத்தை, சாமசரகந்தை இயற்கையாக அமைந்த மலைகள். அவற்றின் சரிவுக்கு கூட மனிதவள பயன்பாட்டுக்காக முறையற்ற விதத்தில் இயற்கை பயன்பட்டதாக இருக்கக்கூடும். எனினும் மீதொட்டமுல்ல சரிவு என்பது நாமே தலையில் மண்ணைவாரி அள்ளிப்போட்டுக் கொண்டதற்கு ஒப்பானது. இப்போது குப்பைமேடு சரிந்து உயிர்ப்பலி ஏற்பட்டதும் முன்னைய ஆட்சியா?...இன்றைய ஆட்சியா ?  இதற்கு பொறுப்பு என்ற வாத விவாதங்களையே அதிகம் காண முடிகின்றது. யார் பொறுப்பாக இருந்தாலும் உயிர் பொதுவானதே!.

எதுவாயினும் 'ஆட்சி'கள் தான் காரணம் என்கிற பொது முடிவுக்கு வருவதற்கு இந்த விவாதங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அந்தப் புள்ளியில் இருந்தே இந்த வார 'அலசல் ' இடம்பெறுகிறது.

எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு கால ஆட்சியிலும் இந்த 'மீதொட்டமுல்ல' பிரசித்திப்பெற்ற இடமாகவே இருந்து வந்துள்ளது. இன்றும் இருந்து வருகின்றது... இதனை யாவரும் அறிவர்.  

'எனது ஆட்சிகாலத்தில் இப்பகுதிக்கு புதியதொரு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க திட்டம் கட்டியிருந்தேன். ஆனால், அதற்கிடையில்  தேர்தலில்  மக்கள் என்னை தோற்கடித்தவிட்டார்கள்' என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.  

ராஜபக்ஷக்களின் ஆட்சி காலத் திலேயே நகர அபிவிருத்தி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு 'கொழும்பு' நகர் மிகவும் சுத்தப்படுத்தப்பட்டு நகர வாசிகள் நலமுடன் வாழ வழிவந்தது. அது  மாத்திரம் அல்லாமல் நகரும் அழகுபெறச் செய்தது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நகரை அண்டிய பகுதியில் மீதொட்டமுல்லவில் மேடாக ஆக்கப்பட்டதுதான் இன்றைய மக்கள் பலிக்கு காரணமாக இருந்து விட்டதா? என எண்ணத் தோணுகிறது.

குப்பையை 'குப்பை'யாக மாத்திரம் பார்த்து விட்டதால்  மீத்தொட்டுமுல்லையில்  சுகாதாரம் முழுமையாக  மறக்கப்பட்டு விட்டது. கடந்த தேர்தலின் போது இந்த 'குப்பை மேட்டு' விவகாரம் தேர்தல் பிரசாரங்களில் ஒரு பேசுபொருளாக இருந்தது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

ஆனால், இன்று இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல் களஞ்சியசாலையில்  தற்காலிகமாக வசிப்பதற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விடத்தில் இரு விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.
மீதொட்ட முல்லையும் தற்காலிகமாக இடம்பெற்ற ஒரு சம்பவம் அல்ல. ஏனெனில் குப்பைகள் கொட்டும் இடத்தை தேடிப்போய் மக்கள் வாழ்வதில்லை. மக்கள் இருக்கும் இடத்தை நோக்கியே குப்பைகள் கொட்டப்பட்டன. இது புளுமென்டல் பகுதி மக்களை திருப்திபடுத்துவதற்காக  தற்காலிகமாக மீதொட்ட முல்லைக்கு கொண்டுச் சொல்லப்பட்டது என்பதை யாரும் மறந்து விட முடியாது. பின்னாளில் இதுவே இப்பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டு விட்டதை  மறுத்து விடவும்  முடியாது.   

கொஸ்கம பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தை சுட்டிக்காட்டலாம். ஏனெனில் அப்பிரதேசத்தில், இருந்த மரக்களஞ்சியசாலை தற்காலிமாக ஆயுதக்களஞ்சியசாலையாக மாற்றப்பட்டு அது மக்கள் வசிக்கும் பகுதியில் பின்நாளில் நிரந்தர சாலையாக ஆக்கப்பட்டுவிட்டது. இறுதியில் இந்த இடத்தில் இடம்பெற்ற கோர வெடிப்புச் சம்பவத்தில் அதன் அருகில் இருந்த குடியிருப்புக்களைச் சேர்ந்த மக்கள் பதற்றத்துக்கும் பாதிப்புக்குள்ளாகினர். 

இந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற தற்காலிக வேலைத்திட்டங்கள் குறிப்பிட்ட இடத்தில் நிரந்தரமாக்கப்படும் போதுதான் இவ்வாறான சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்து விடுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு உரிய திட்டமிடல் முறைமை இண்மையே காரணமாகவும் அமைந்த விடுகின்றது. 

தேசியத்திட்டமிடல் அமைச்சு  மக்களுக்கு எவ்வாறான திட்டமிடல் ஒன்றை செய்து வருகின்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால், இது நடக்கின்றதா? என்பதும் ஒரு கேள்விதான்.  இந்நிலையில் ஒரு சில விடயங்களை விளக்க வேண்டிய தேவையும் இங்கு இருக்கின்றது. 

கழிவகற்றல் ஒரு பொறிமுறை. உயிரினங்களில் அது இயற்கையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை ஒரு தனிநபராக, குடும்பமாக மேற்கொள்ளும்போது நாம் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சமூகமாக கூட்டாக ஏற்றுக்கொள்கிறோமா என்பதில்தான் இந்த 'கழிவு முகாமைத்துவம்' (Waste Management) பற்றி சிந்திக்க நேர்கிறது.

முகாமைத்துவம் என்றதுமே அது கோர்ட் சூட் ஆடைகளுக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகப் பார்க்கப் பழகிவிட்டோம். ஆனால், இது ஒரு விஞ்ஞானம் என்பதுவும் இயற்கையாக இடம்பெறவேண்டியதென்றும் என எண்ண மறுக்கிறோம். அன்றாடம் நாம் செய்யும் அத்தனைக் கடமைகளுக்குக்குள்ளும் முகாமைத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது.

திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல்  ஆகிய நான்கு படிமுறைகளுமே முகாமைத்துவம்.  துறைகளைப் பொருத்து வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. 

காலத்திற்கு காலம் முகாமைத்துவம் எனும் விஞ்ஞானம் பல்வேறு ஆய்வுகளையும் வளர்ச்சிகளையும் கொண்டு வருகிறது. மேலைத்தேய நாடுகளில் இந்த முகாமைத்துவ விஞ்ஞானம் ஆய்வுக்கும் பயன்பாட்டுக்கும் உள்ளாகும் அளவுக்கு தென்னாசிய நாடுகளில் இவ்வாறான நிலை இல்லை. நிதிசார் இடர் ஏற்படும்போது அதனை எதிர்கொள்ள காப்புறுதி செய்து கொள்ளும் முறைகூட ஒரு முகாமைத்துவம்தான். இதனை ஆபத்து முகாமைத்துவம் (Risk Management ) என்கின்றனர். அதுபோல இடர்கள் ஏற்படும்போது அதனைச் சமாளிப்பதற்கான முகாமைத்துவம் இடர் முகாமைத்துவம் (Disaster management) என்கின்றனர்.

நமது நாட்டில் இடர் முகாமைத்துவ அமைச்சு என்ற ஒன்றே கூட இருக்கிறது. இடர் வருவதற்கு முன்பதாக ஏதேனும் திட்டமிட்டு, ஒழுங்கமைத்து, நெறிப்படுத்தி, கட்டுப்பாடு செய்ததாக எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை. மாறாக இடர் நேர்ந்த பின்னர் என்ன நடந்தது? எப்படி நடந்தது?, எத்தனை இழப்பு ? எவ்வளவு நட்டஈடு என அறிக்கையிடும் அமைச்சாகவே இருந்து வருகிறது. 

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த குப்பைமேட்டுச் சரிவைக்கூட 'கழிவு முகாமைத்துவ' சிந்தனையுடன் ஆட்சியாளர்கள் அணுகுவதாக தெரியவில்லை. கிராண்டபாஸ்- – புளுமண்டல் பகுதியில் இருந்து மீதொட்டமுல்ல போனதுபோல் மீதொட்டமுல்லையில் இருந்து கதிரயானவுக்கும் தொம்பேக்கும் பிரச்சினையை தள்ளிப்போடும் 'ஒத்திவைப்புதான்' சிந்திக்கப்படுகின்றது.

இனப்பிரச்சினையில் இருந்து குப்பைக் பிரச்சினை வரை இந்த நாட்டில் தீர்வு நோக்கிப் போகாமல் இருப்பதற்கு காரணமே இந்த 'தள்ளிப்போடும் கலாசாரம்தான்'. 

இவ்வாறான சம்பவங்களை நோக்கும் போது இலங்கை இப்போது செல்லும் திட்டமிட்டப் பாதையில் செல்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.  அது அரசியலானாலும் சரி  குப்பையானாலும் சரி.  இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு குப்பைகளே எஞ்சுகின்றன. வெங்காயம், கிழங்கு இதில் பிரதானம். இலக்ரொனிக் பொருட்கள் அடுத்து.

ஆக, குப்பைகளைக் கொட்டுவதற்கு முன்னர் அவை எப்படி வந்து சேர்கின்றன என்கிற ஆய்வு தேவை.

ஐ.நா சபையின் 'நிலைபேறான அபிவிருத்தி' (Sustainable Development) இலக்குகளை அடையப்போவதாக அவ்வப்போது மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. இயற்கையைப் பேணி பாதுகாப்பதன் ஊடாக அதாவது வருங்கால பரம்பரைக்கு இயற்கை வளங்களை மிகுதியாக்குவதுதான் இந்த நிலை பேரான அபிவிருத்தி எண்ணக்கருவின் அடிப்படை என்பதை உணரந்தார்களோ இல்லையோ நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு ஒரு அமைச்சை உருவாக்கி விட்டார்கள். அங்கு என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மெகா பொலிஸ் அமைச்சு என ஒரு அமைச்சு. இந்த குப்பைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதற்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களே பொறுப்பு என அறிக்கை விட்டதோடு அடங்குகிறது அந்த அமைச்சு.

ஆக, தொட்டதெற்கெல்லாம் அமைச்சு உருவாக்குவதல்ல 'ஆட்சி'. ஆட்சி என்பது முகாமைத்துவம். மக்களை, மக்களால் உருவாக்கிய ஆட்சி எவ்வாறு முகாமிக்கிறது என்பதில்தான் 'ஆட்சியின்' வெற்றி தங்கியிருக்கிறது. எனவே திட்டமிடலை, அரசும் நடைமுறைப்படுத்தலை  அமைச்சும் மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் லீ குவான்யூ ஆட்சியாகட்டும், மலேசிய மாகதிர் முறை ஆட்சியாகட்டும்,  ஆராய்ந்து பார்த்தால் அடிப்படையில் அங்கு ஒரு முகாமைத்துவம் இடம்பெற்றிருக்கும்.

பிரச்சினை நமது நாட்டில் ஆட்சிகள் மாறுகின்றனவே தவிர ஆட்கள் மாறுகின்றனரே தவிர முகாமைத்துவத்தில் மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை. தென்னாசியாவில் பூட்டானிடம் கற்றுக்கொண்ட கொள்ள ஏராளம் உண்டு. மேலைநாடுகளிடம் எதை எதையோ கற்றுக்கொள்ளும் நாம் கழிவு முகாமைத்துவத்தைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை ? இனப்பிரச்சினையை தீர்க்க கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் என்று ஒரு ஆணைக்குழு இப்போது அதற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

 மேமாதம் நாடாளுமன்றம் கூடியதும் குப்பை 'நாறும்'. நல்லாட்சியில் பெரிதாக நல்லது ஒன்றும் நடந்துவிடாது என மக்கள் நம் பத்தொடங்கிவிட்டார்கள்.

குறைந்தபட்சம் 'குப்பை'  முகாமைத்துவத்தையாவது கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால் 'குப்பை' யை ஆண்ட நல்ல ஆட்சியாகவாவது வீட்டுக்கு போகலாம்.
நன்றி - வீரகேசரி

அழிவிலிருந்து பாதுகாக்கப்படவேண்டிய பெருந்தோட்டத் தொழில்துறை - துரைசாமி நடராஜா


பெருந்தோட்டங்களின் அழிவு நிலை நோக்கிய பயணம் தொடர்பில் பலரும் தமது விசனப்பார்வையினை செலுத்தி வருகின்றனர். பெருந்தோட்டங்கள் பாதுகாக்கப்படாவிட்டால் தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். சமூகச் சிதைவுகளும் ஏற்படும். இதனால் பாதக விளைவுகள் பலவும் மேலோங்கும். இச்சிக்கல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பெருந்தோட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதும் புத்திஜீவிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

பெருந்தோட்டங்கள் இந்த நாட்டில் முதுகெலும்பைப் போன்றன. நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் பெருந்தோட்டத்துறை கணிசமான ஒரு வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது. தேசிய வருமானத்தின் முக்கிய பங்குதாரர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். நாடு உயர அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் தாழ்வு நிலையிலேயே இருந்து வருவது கசப்பான ஒரு விடயமாகவே உள்ளது. இம்மக்களின் எழுச்சி கருதிய அரசில் தொழிற்சங்கவாதிகளின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியான நிலைப்பாடுகள் தொடர்ச்சியாக இருந்து வருவதும் தெரிந்த விடயமாகும். ஆட்சியிலுள்ள அரசாங்கங்களை வலியுறுத்தி மலையக அரசியல்வாதிகள் இன்னுமின்னும் இம்மக்களுக்கு என்று அதிகமான சேவையினை வழங்கி இருக்க முடியும். எனினும் உரிய சாதக விளைவுகள் பெற்றுக் கொடுக்கப்படாதது வருந்தத்தக்க விடயமாகும் என்பது பலரின் வேதனையாக உள்ளது. இந்த வேதனையின் நியாயத்தன்மை தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல், பொருளாதாரம், சமூகநிலை, கல்வி மட்டம் போன்று சகல நிலைகளிலும் மலையக மக்களின் பின் தங்கிய வெளிப்பாடுகளே அதிகமாக உள்ளன. இத்தகைய பின்தங்கிய நிலைமைகளை மாற்றியமைக்க அரசாங்கம் விசேட உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பல கோஷங்களும், கோரிக்கைகளும் கடந்த காலத்தில் எதிரொலித்தன. குறிப்பாக புதிய அரசியலமைப்பு குறித்த முன்னெடுப்புகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருந்தமை தொடர்பில் நீங்கள் நன்கறிவீர்கள். இந்த புதிய அரசிலயமைப்பில் மலைய மக்கள் பின்தங்கிய சமூகம் என கருதி அம்மக்களுக்கான விசேட சலுகைகள் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். எனினும் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்த நகர்வுகள் தற்போது முடங்கியுள்ள நிலையில் வாதப், பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பு கைகூடுமா? என்ற கேள்வி இப்போது மேலெழுந்திருக்கின்றது.

எவ்வாறெனினும் மலையக மக்களின் மேம்பாடு கருதிய விசேட உதவிகள் அரசினால் எவ்வாறேனும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

பெருந்தோட்டத் தொழிற்றுறை என்பது எமது நாட்டின் இதயமாக விளங்குகின்றபோதும் இன்று அந்த தொழிற்றுறையானது பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்து வருவது தெரிந்த விடயமாகும். பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் இன்று கணிசமாக குறைவடைந்திருக்கின்றன. பல்வேறு தேவைகளுக்காக தேயிலை விளைநிலங்களை குறிவைக்கும் கலாசாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அபிவிருத்தித் திட்டங்கள் என்னும் பெயரில் பல்லாயிரக்கணக்கான தேயிலை விளைநிலங்கள் பெருந்தோட்டங்களில் பறிபோய் இருக்கின்றன.

தேயிலை உற்பத்தி செய்யும் பரப்பு மலையகத்தில் ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேயர் மட்டுமே காணப்படுவதாக செய்திகள் வலியுறுத்துகின்றன. தேயிலை விளைநிலங்களின் படிப்படியான சுரண்டல்கள் தோட்டத் தொழிலாளர்களிடையே பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. வேலை நாட்கள் குறைக்கப்படுவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் உந்து சக்தியாக இருந்து வருவதும் புதிய விடயமல்ல. பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்படுகின்ற நிலையினை இனவாத நோக்கிலும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.தொழிலாளர்களின இருப்பினை கேள்விக்குறியாக்கும் அல்லது சமூக சிதைவினை உண்டுபண்ணும் ஒரு உள்நோக்கம் இதில் இருப்பதாகவும் சிலர் பேசிக்கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சிறு தேயிலை தோட்டங்களை ஊக்குவிக்க பல்வேறு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குகின்ற அரசாங்கம் பெருந்தோட்டங்களை மாற்றுக் கண்கொண்டே நோக்கி வருகின்றது என்கிற விமர்சனங்களும் உள்ளன. சம்பள உயர்வு, குடியிருப்பு நிலைமைகள், உற்பத்தி அதிகரிப்பு உதவிகள் என்று பலவற்றையும் நோக்குகின்றபோது அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையினை எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. சில சமயங்களில் இலங்கையர் என்கிற பொது வரையறைக்குள் மலையக மக்கள் உள்ளடக்கப்படுவது இல்லையா? என்கிற கேள்வியும் பிறக்கின்றது. புறக்கணிப்பு நிலைமைகளும் இன்று பெருந்தோட்டங்களின் இயல்பு நிலையை பாதித்து வருகின்றன.

பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டங்களை பொறுப்பேற்றபோது பல்வேறு தொழிலாளர்களின் நலன் சார்ந்த வாக்குறுதிகளையும் வழங்கி இருந்தனர். தம் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாறுதல் ஏற்படப் போவதாக தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? பட்டு வேட்டி குறித்து கனவில் இருந்த தொழிலாளர்கள் கட்டி இருந்த கோவணமும் இன்று களவாடப்பட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் குனிந்து நிமிரும் முன் அடுத்த அடி அவர்களை மீண்டும் குனிய வைக்கின்றது. நவீன அடிமை நிலையில் தொழிலாளர்ளின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலைமைக்கு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமையின்மை பிரதான காரணமாக சித்திரிக்கப்படுகின்றது. இன்று உரியவாறு பராமரிக்கப்படுவதில்லை. இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட கம்பனிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிகின்றனர். கூட்டு ஒப்பந்தம் பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டு வருகின்றது. முதலாளிமார் சம்மேளனம் சமர்ப்பிக்கின்ற புள்ளி விபரங்கள் தொடர்பில் இப்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. உண்மையான புள்ளி விபரங்களை மூடி மறைத்து முதலாளிமார் சம்மேளனத்தினர் நாடகமாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் எந்தளவு புள்ளி விபர உறுதிப்பாட்டுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றன என்பது தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்ட தொழிற்றுறையின் அழிவிற்கு தொழிலாளர்களும் சில வேளைகளில் காரணகர்த்தாக்களாக இருப்பதாகவும் சிலர் விசனப்பட்டுக் கொள்கின்றனர். சில தொழிலாளர்களிடத்தில் தொழில் ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் கரிசனை என்பன காணப்படுவதில்லை. ஏனோ? தானோ? நிலையிலேயே அவர்களின் போக்கு காணப்படுகின்றது. இது எமது இருப்பாகும் என்பதனை இத்தகையோர் மறந்து செயற்படுவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உழைப்பில் சிலரின் கவனம் குறைந்து காணப்படுகின்றது. இத்தகை நிலைமைகளும் தோட்டத்துறையின் வீழ்ச்சிக்கு வலுசேர்ப்பதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையில் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொள்வதென்பது ஒரு கனவு நிலையாகவே உள்ளது. ஊதிய அதிகரிப்பு தொடர்பில் இம்மக்கள் பல்வேறு சவால்களையும் சந்தித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கூட்டு ஒப்பந்தக் காலப் பகுதியில் தொழிலாளர்களின் போராட்டமானது தெளிவாக மெதுவாக பணிபுரியும் போராட்டம், சத்தியாக்கிரகம், பூஜை வழிபாடுகள், கொழும்புக்கு தேயிலைப் பெட்டிகள் ஏற்றிச் செல்லப்படுவதனை தடுத்து நிறுத்துதல் என்றெல்லாம் பல்வேறு வகையான முன்னெடுப்புகள் கடந்தகால கூட்டு ஒப்பந்தம் கையொப்பமிடும் காலகட்டத்தில் இடம்பெற்று வந்துள்ளன. என்னதான் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் தொழிலாளர்கள் உரிய சம்பள உயர்வினை பெற்றுக் கொள்வதென்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்திருக்கின்றது. இத்தகைய ஊதிய பற்றாக்குறை நிலைமைகளும் பெருந்தோட்டங்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்குவதாகவே இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பெருந்தோட்டத் தொழிற்றுறை என்பது தற்போது ஒரு முன்மாதிரியாக இல்லை. இத் தொழிற்றுறையின் சமகால போக்குகளை அவதானிக்கின்றவர்கள் இத்துறையில் ஈடுபடுவதற்கே அச்சப்படுகின்றனர். ஓதுங்கிக் கொள்கின்றனர். பெற்றோர் தொழிற்றுறையில் படுகின்ற துன்ப துயரங்களை பிள்ளை பார்க்கின்றபோது இயல்பாகவே பிள்ளைக்கு இத் தொழிற்றுறையின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. தொழில் நவீனத்துவப்படுத்தப்படவில்லை. பாரம்பரிய அணுகுமுறைகளே இன்னுமின்னும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது புதியவர்கள் பெருந்தோட்ட தேயிலைத் தொழிற் துறையில் ஈடுபட முன்வராதிருப்பது நியாயமானதேயாகும் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

பெருந்தோட்டங்களில் தேயிலை விளைநிலம் குறைவடைந்து வருவதனைப் போன்றே தேயிலை செடிகளும் பல சந்தர்ப்பங்களில் அழிவுக்கு உள்ளாகின்றன. தோட்டப்புறங்களில் உள்ள பெறுமதிமிக்க மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகைய பாரிய மரங்கள் தேயிலைச் செடிகளின் மீதில் விழுவதினால் பல தேயிலைச் செடிகள் நாசமாகின்றன. அநேகமான தோட்டங்களில் இந்நிலைமை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இவற்றோடு காலநிலை சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களினாலும் தேயிலைச் செடிகள் அழிவடைகின்றன. இவ்வாறாக தேயிலை செடிகளின் அழிவு நிலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றபோதும் அதற்கு மாற்றீடாக மீள் நடுகையை மேற்கொள்வதில் கம்பனியினர் உரிய கரிசனையை வெளிப்படுத்துவதாக இல்லை. இது ஒரு முக்கிய விடயமாகும். மீள் நடுகை உரியவாறு இடம்பெறாத நிலையானது உற்பத்தி குறைவு, வேலை நாள் குறைவு போன்ற பல நிலைமைகளுக்கும் இட்டுச் செல்கின்றது. பெருந்தோட்டங்கள் திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

பெருந்தோட்டங்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும். சுய இலாபங்களையும் அற்ப சலுகைகளையும் புறந் தள்ளிவிட்டு சமூக மேம்பாட்டுக்காக கைகோர்த்தல் வேண்டும். இல்லையேல் மலையக சமூகமும் தோட்டங்களும் தடமிழந்து போவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates