Headlines News :
முகப்பு » , » எலிப்பொறியில் பூனையும் ஒன்பது விருதுகளும் - ப.விஜயகாந்தன்

எலிப்பொறியில் பூனையும் ஒன்பது விருதுகளும் - ப.விஜயகாந்தன்

“நாம் பாக்கடிமை செய்திடோம்” என்ற ஒரு உணர்ச்சித் ததும்பும் நாடகம். பிரதான பாத்திரமேற்று நடித்துக்கொண்டிருக்கின்றான் ஒரு பதினைந்து வயது சிறுவன். சபையோரின் கைதட்டல்களும் கூக்குரல்களும் பாடசாலையின் மண்டபத்தினை அதிர வைக்கின்றன. இந்தச் சிறுவன் இலங்கையின் தேசிய நாடக விழாவில் ஒன்பது விருதுகளை வெல்வான் என்று அன்று யாரேனும் நினைத்திருப்பார்களோ தெரியாது. 

பொகவந்தலாவை லெட்சுமி தோட்டத்தில் பிறந்த தியாகராஜா சிவனேசன் எனும் அரங்கக் கலைஞனின் தயாரிப்பில் இலங்கையின் தேசிய நாடகவிழாவில் அரங்கேற்றப்பட்ட “எலிப்பொறியில் பூனை” எனும் சிறுவர் நாடகம் 2014ஆம் ஆண்டு முதலிடத்தினையும் ஒன்பது விருதுகளையும் வெற்றிக் கொண்டுள்ளது. அந்த வெற்றிக் கலைஞனின் பின்னணி என்ன?

பொகவந்தலாவ கெர்கஸ்வோல் இல.2 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர் திரு தி.சிவனேசன். பள்ளிக்காலத்தில் “புதிய பண்பாட்டு அமைப்பு” எனும் கலை இலக்கிய, மக்கள்மயப்பட்ட அமைப்புடன் அரங்கியல் தொடர்பினை பெறுகின்றான். அதன் விளைவாக திரு பொன்.பிரபாகரன் தயாரித்த “நாம் பாக்கடிமை செய்திடோம்” எனும் நாடகத்தில் தனது முதலாவது நடிப்பு திறனை வெளிக்காட்டுகின்றான். சமகாலத்தில் திரு அ.ஜெகன்தாசன் தாயரிப்பில் வெளிவந்த “எங்க ஊரு மத்துச்சண்ட” எனும் நாடகத்திலும் முக்கி பாத்திரம் ஏற்கின்றான். அன்றிலிருந்து அவ்வமைப்பின் அரங்க அறிவியல் பிரிவில் இக்கலைஞன் அரங்கச் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுக்கப்படுகின்றான். திரு பொன்.பிரபாகரன், திரு அ.ஜெகன்தாசன், திரு சு.பிரேம்குமார், திரு வீ.கதிர்காமநாதன் ஆகிய அரங்கச் செயற்பாட்டாளர்களிடம் தனது ஆரம்ப பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்றான்.

2001ஆம் இலங்கையின் கிழக்குப் பல்கலை கழகத்தின் உலக நாடக விழாவில் கலை அரங்கேற்ற நிகழ்வில் புதிய பண்பாட்டு அமைப்பின் ஊடாக பங்கெடுத்தமையானது அவனது கலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது.

இக் கலையனுபவங்கள் 2004ஆம் இக்கலைஞனை “மக்கள் களரி” எனும் இலங்கையின் முன்னணி நாடகக் குழுவில் கொண்டு சேர்க்கின்றன. இங்கிவன் தொழில் முறையான கலைஞனாகவும் முழுநேர அரங்கச் செயற்பாட்டாளனாகவும் தன் வாழ்க்கைப் பாங்கை மாற்றிக்கொள்கின்றான். இவ்வரிய பணியின் பின்னணியில் இலங்கையின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களும் மக்கள் களரியின் நிறுவனர்களுமான திரு பராக்கிரம நிரியெல்ல, திரு எச்.ஏ.பெரேரா, கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் மௌனகுரு, இங்கிலாந்து மென்ஜஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் தொம்சன், இங்கிலாந்து மென்ஜஸ்டர் பல்கலைக்கழக விரிவுரையாளர் சாலட் முதலான பலர் அமைந்திருந்து ஆற்றுப்படுத்தியமை பெருமிதமானதொன்றாகும்.

அண்மைக் காலமாக இலங்கையின் புகழ்பூத்த நாடகங்களான “எருக்களம் பூ” (2004), “மாயப்பட்டாடை”(2004), “மகரராக்ச”(2004), “சரண்தாஸ்”(2006ஆம் ஆண்டு தேசிய நாடக விழாவில் ஒன்பது விருதுகளை வென்ற நாடகம்), “மிருச்சக்கடிகம்”(2011ஆம் ஆண்டு தேசிய நாடக விழாவில் விருது பெற்ற நாடகம்), “குருடனும் நொண்டியும்”(2011ஆம் ஆண்டு தேசிய நாடகவிழாவில் பல விருதுகளை வென்ற நாடகம்), “உனுவெட்டய கத்தாவ” (ஜேர்மனிய நாடகக் கலைஞரான பேர்டொல்ஃபிரட் என்பவரின் “The Chak Circle” எனும் நாடகத்தை இலங்கையின் பிரபல நாடக நெறியாளர் பராக்கிரம நிரியெல்ல சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து அரங்கேற்றி 2013ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய நாடகவிழாவில் விருது வென்ற நாடகம்) முதலான பல நாடகங்களில் பிரதான பாத்திரமாகவும் துணைப்பாத்திரமாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கலக்கிய நாடறிந்த (நாடறிய வேண்டிய) ஒரு கலைஞன் என்று கூறி வைப்பதில் தவறிருக்காது.





இந்தியாவில் புதுடில்லி, கேரளா, தமிழநாடு பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஆரம்பக்கம், கோடம்பக்கம், புருஷை ஆகிய இடங்களிலும் கிறிகிஸ்தான் நாட்டிலும் மக்கள் களரி நாடக குழுவின் சார்பாக பல நாடகங்களில் நடிக்கின்றான். விசேடமான கிறிகிஸ்தான் நாட்டில் மலையகத்தின் பாரம்பரிய கலையம்சமான காமன் கூத்தினை ஐந்து நிமிடத்தில் அளிக்கை செய்து ஒரு விவாதத்தை தொடங்கி வைக்கின்றான். பல வெளிநாட்டவர்களுடனும் பலவித கலையனுபவம் கொண்டவர்களுடனும், இலங்கையின் பல இனத்தவர்களுடனும் கலை சார்ந்து பல மட்ட கலந்துரையாடல்களுக்கு முகம் கொடுக்கின்றான். இவை அத்தனையும் ஒன்று  திரண்டு இக்கலைஞன் மனதில் “நான் என் சமூக்திற்கு என்ன செய்தேன்?” என்ற ஒரு பெரும் வினாவினை முன்நிறுத்துகின்றது. இதன் விளைவே “எலிப்பொறியில் பூனை”யும் ஒன்பது விருது வெல்லப்பட்டமையுமாகும்.

இலங்கையின் மூத்த கல்விமான் (மிக்க அன்புடைய) பேராசிரியர் கா.சிவதம்பியின் மரண அஞ்சலி கூட்டத்தின் போது ப.திருச்செல்வம், சு.கமலதாசன் ஆகிய இரு நண்பர்களோடு ஒரு ஓரமாக நின்று பேராசிரியருக்கு அஞ்சலி தெரிவிக்க வேண்டும். அதனை ஒரு இரங்கல் கவியாக தெரிவிக்கலாம். ஆனால் அதை எந்த பெயரில் வெளியிடுவது என சம்பாசித்தப்போது தான் “சங்கு கலைக்கழகம்” எனும் சிறுபிள்ளை வெள்ளாமை உதயமானது. பேராசிரியருக்கு அஞ்சலி தெரிவித்த இக்கழகம் அடுத்து ஒன்பது விருதுகளை பெறும்வரை காத்திருந்தது.

மேலே சொன்ன பெரும் வினாவுக்கு விடை காண கலைஞம் முற்படுகின்றான். பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது ஆசானும் நண்பனுமாகிய திரு வீ.கதிர்காமநாதனுடன் இணைகின்றான். பாடசாலையின் அதிபரின் அனமதியுடன் 13மாணவர்களை கொண்ட ஒரு நாடகக் குழுவினை அமைக்கின்றான். 17.05.2014 முதல் 23.10.2014 வரை கடுமையாக உழைக்கின்றான். கலைஞனின் உழைப்புக்காக பாடசாலையின் நிர்வாகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், திரு வீ.கதிர்காமநாதனும் அவரது பாரியார் திருமதி சுகந்தாவும், கலைஞனின் பாரியார் திருமதி சாந்தினிமல்காந்தியும் இன்னும் பல நண்பர்களும் பின் நின்று ஊக்கப்படுத்தினர். நாடகம் அரங்கேற்றி முடிப்பதற்கிடையில் 170,000 ரூபாய் செலவாகின்றது (அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறு தொகையை வழங்கின).

நாடகம் எதைச் சொல்கின்றது?
ஒரு வீட்டில் எலிகளின் தொல்லை அதிகரிக்கின்றது. எலிகளின் தொல்லை தாங்காது வீட்டார் எலிகளுக்கு பொறி வைக்கின்றனர். வைக்கப்பட்ட பொறியில் அதே வீட்டின் பூனையார் மாட்டிக் கொள்கின்றார். பின்னர் எலிகளின் தயவால் பூனை உயிர் பிழைக்கின்றது.

சிறுவர் உலகத்தில் பகைமை உணர்வினை நீக்குதல், ஒற்றுமையை வளர்த்தல், சமூகம் சார்ந்த உணர்வுகளை சிறுவர்களிடம் ஏற்படுத்துதல் போன்றனவே நாடகத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. அரங்கேற்றத்தில் அத்தனையும் அம்பலமானது மட்டுமன்றி இந்நாடகம் மாணவர்களுக்கு உணவுச் சங்கிலியை போதிக்கின்றது, மாணவர்களுக்கு சுகாதார பழக்கவழக்கங்களை போதிக்கின்றது என்றெல்லாம் புகழப்பட்டு (மொத்தம் 12 விருதுகள்) ஒன்பது விருதுகள் வழங்கப்பட்டன. அவை வருமாறு:

1. சிறந்த நாடகம்
2. சிறந்த பிரதியாக்கம்
3. சிறந்த இசையமைப்பு
4. சிறந்த மேடையலங்காரம்
5. சிறந்த ஆடையலங்காரம்
6. சிறந்த நடிகை
7. சிறந்த துனை நடிகை
8. சிறந்த மேடை முகாமைத்துவம்
9. சிறந்த ஒளியமைப்பு

எலிப்பொறியில் பூனைக்கு மட்டுமல்லாது நாடக தயாரிப்பாளர் தி.சிவனேசனுக்கும் இப்போது கிராக்கி அதிகரித்துள்ளது. நண்பர்களின் தொடர்புகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் வாய்ப்புக்கள், பாடசாலைகளில் அரங்கேற்றுவதற்கான அழைப்புக்கள், யார் இவர்? சங்கு கலைக்கழகம் எங்குள்ளது? என்ற வினாக்கள் எல்லாமே அதிகரித்துள்ளது.




கலையும் அரங்கும் எல்லா வகையிலும் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates