பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான இயற்கை அனர்த்தம் ஏற்படாத இடங்களில் 20 பேர்ச் காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டு அதில் வாழ்வதற்கேற்ற வசதிகளுடன் கொண்ட தனி வீடு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் அல்லது வீடுகளை கட்டிக் கொள்வதற்குகேற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி கூறுவதுடன் இது மக்கள் தொழிலாளர் சங்கத்தினது கோரிக்கை மட்டுமன்றி பல தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தனிநபர்கள் அங்கம்வகிக்கும் பெருந்தோட்ட நடவடிக்கை குழுவினது கோரிக்கையுமாகும் என்பதையும் எடுத்தக் காட்டியுள்ளது.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழுவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா விடுத்துள்ள அறிக்கையிலே மேற்படி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே மேலும் குறிப்பிட்டிருந்ததாவது, கடந்த மே தினத்தில் இருந்து மலையக அமைப்புகள் பலவும் போட்டிப் போட்டுக் கொண்டு மலையக மக்களுக்கு வாழ்வதற்கேற்ற வசதிகளுடன் தனியான வீடுகள் தேவையென கோரிக்கை விடுத்து வந்த போதும் கொஸ்லந்த மீரியபெத்த தோட்ட மண் சரிவு அனர்த்தத்தையும், ஏனைய மலையகப் பகுதிகளில் ஏற்படவுள்ள மண்சரிவு அனர்த்த அபாய நிலைமைகளையும் அடுத்து மக்கள் தாமாக அணிதிரண்டு, இயற்கை அனர்த்தம் ஏற்படாத பாதுகாப்பான இடங்களில் வாழ்வதற்கேற்ற நிலையில் தனி வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது மக்களின் கவனத்தை ஈரத்துள்ள தனி வீட்டுக் கோரிக்கையானது சில தொழிற்சங்க அரசியல்வாதிகளின் இருப்பிற்கான ஊடக விளம்பரங்களுக்குள் முடக்கப்படாது வென்றெடுக்கப் வேண்டிய உரிமைக் கோரிக்கையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1970களில் மேற்கொள்ளப்பட்ட காணி சீர்திருத்தத்தின் கீழ் தோட்டக் காணிகளை அரசாங்கம் சுவீகரித்த போது ஒரு தொழிலாளர் குடியிருப்பிற்கென 20 பேர்ச் காணி ஒதுக்கப்பட உடன்பாடு காணப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட வில்லை. மாறாக தோட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற வேண்டிய நிலையே ஏற்பட்டது. 1992இல் தோட்டங்கள் தனியார் கொம்பனிகளுக்கு கையளிக்கப்பட்ட போதும் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் கம்பனிகளின் பொறுப்பில் விடப்பட்டன. அத்துடன் தோட்ட நம்பிக்கை நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கென நிரந்தர குடியிருப்புக்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை. தொழிலாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளினூடாகவும் அவற்றுக்கு மாறாகவும் வெளியேற்றப்படுகின்ற நிலை தொடர்கிறது. இவற்றுடன் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களும்கூட தொழிலாளர்களை விட்டு வைப்பதாக இல்லை.
வீடுகள் வாழ்வதற்கான அடிப்படையான வசதியாவதுடன் உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பான இடமாகவும் இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய மலையகத் தமிழ் மக்களுக்கு வீடு என்பதே இல்லை. இருக்கின்ற லயன் அறைகளும் அடிப்படை வசதிகளை கொண்டதாகவும் இல்லை. பாதுகாப்பாகவும் இல்லை.
எனவேதான் லயன்முறை ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 பேர்ச் காணியில் தனி வீடு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அல்லது அமைத்துக் கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். 20 பேர்ச் காணியில் வீடுகள் அமையும் போதே வாழ்வதற்கானதாகவும் பாதை, மின்சாரம், நீர், போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.
எந்தவொரு நீண்டகால அடிப்படை இலக்குமில்லாத தொடர் மாடி வீடுகள் வேண்டுமென்றும், 7 பேர்ச் காணி வேண்டுமென்றும் கோரிக்கை விடுப்பதை தவிர்த்து, எல்லோரும் பொது இணக்கப்பாட்டுடன் வீடமைப்பிற்கென குடும்பமொன்று 20 பேர்ச் காணியை வழங்குமாறு வழியுறுத்த வேண்டுமென்று மக்கள் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. —
மக்கள் தொழிலாளர் சங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...