மலையகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக பல்வேறுபட்ட சமூக, அரசியல், கல்வி ஸ்தாபனங்களால் முன் வைக்கப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். மலையக சமூக நலனில் அக்கறை கொண்ட பேராசிரியர்கள், புத்திஜீவிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதன் விளைவாக புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்ட முன்மொழிவிலும் மலையக பல்கலைக்கழகத்திற்கான முக்கியத்துவம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மலையகப் பல்கலைக்கழகம் பொறுத்து இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளும் நோக்கங்களும் வெவ்வேறானவையாகவே காணப்படுகின்றன. மலையகப் பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவம் குறித்து இவ்விடயத்தில் அதிகமான அக்கறை செலுத்தி வருகின்ற பேராசிரியர் சோ. சந்திரசேகரன் இவ்வாறு குறிப்பிடுகின்றார் -
மலையகத்தில் கல்வி அபிவிருத்தி ஏற்படும்வரை பல்கலைக்கழகத்திற்காக நாம் காத்திருக்க முடியாது. பல்கலைக்கழகம் உருவானால் மாணவர்கள் உருவாகுவார்கள். நாம் நமக்கென்று உள்ள சமூக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு பல்கலைக்கழகம் தேவை.
மலையகத்தின் சமூக நிலைமைகளையும் அதன் அபிவிருத்தி குன்றிய நிலைமைகளையும் நோக்குகின்றபோது பின் தங்கிய மாணவர்களுக்குக் குறைந்த தகைமையில் அனுமதி என்பது முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையாகவே காணப்படுகின்றது. ஆனால் இவ்வாறாக அமையும் ஒரு பல்கலைக்கழகத்தில் இங்கு உருவாக்கப் போகின்ற துறைகளில் திறமை கொண்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படாது பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும். மலையக சமூக அமைப்பின் தனித்துவத்தையும் சிறப்பினையும் உள்ளடக்கியிருக்க வேண்டிய இந்நிறுவனம் தேசிய உணர்வுகளுக்கும் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வழிகோலுவனவற்றுள் ஒன்றாகவும் அமைய வேண்டும்.பல்கலைக்கழகம் என்பது ஒரு நாட்டின் சமூக பொருளாதார தேவைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதுடன் அமைவிடத்திற்கு ஏற்ற வகையிலான தனித்துவத் தன்மைகளையும் பெற்று விளங்கும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதோர் விடயமாகும்.பேராதனைப் பல்கலைகழகத்தில் விஞ்ஞானத்துறையிலான பட்டப்படிப்புகளும்; பொறியியல், மருத்துவம், பல் வைத்தியம், மிருக வைத்தியம், விவசாயம் போன்ற கற்கை நெறிகளும் காணப்படுகின்றன. பொறியியல் கற்பதற்கு பொறியியல் கூட வசதிகள் அங்கு காணப்படுகின்றன. அவ்வாறே இலங்கையிலுள்ள பிரதானமான பல் வைத்தியசாலையும் பேராதனையில் காணப்படுகின்றது. அத்துடன் விவசாயத்தைக் கற்பிப்பதற்கும் அத்துறை சார்ந்த தகவல்களைப் பெறவும் விவசாயத் திணைக்களம்> பேராதனைப் பூங்கா என்பன பல்கலைக்கழகச் சூழலில் அமைந்துள்ளதால் இக்கற்கைநெறிகளை இலகுவாகப் போதிக்கக் கூடியதாக இருக்கின்றன.அவ்வாறே கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலை, விஞ்ஞானப்பட்ட கற்கை நெறிகளும். வைத்தியம் திட்டமிடல், கல்வி முகாமைத்துவம், சட்டம் ஆகிய துறைகளும் போதிக்கப்படுகின்றன. இவை தொடர்பான திணைக்களங்கள், அமைச்சுகள், செயற்பாடுகள் என்பன கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கி;ன்றமையினால் இக் கற்கை நெறிகளை இலகுவாக போதிக்கக் கூடியதாக உள்ளன.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியன உருவாக்கப்பட்ட பின்னர் அச்சமூகத்தினர் கல்விபெறக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறித்த பிரதேச மக்கள் குழுமத்தினரின் சமூக பெயர்ச்சியில் சமூகத்தின் முன்னேற்றத்தி;ல் அச்சமூகம் குறித்த ஆய்வுகள் அதிகரிக்கவும் இப்பல்கலைக்கழகங்கள் துணைபுரிகின்றன. இதனைப் பல்கலைக்கழகங்கள் எந்தளவு சாதித்தன எனும் விடயம் விமர்சனத்திற்குள்ளாக்கப்படக் கூடிய ஒன்று என்ற போதும், இத்துறை சார்ந்து சில நம்பகமான ஆய்வுகள் வெளிவந்தமையும் இவ்விடத்தில் நினைவு கூறத் தக்கதொன்றாகும். உருவாகப் போகின்ற மலையகப் பல்கலைக்கழகமும் இத்தகைய ஆய்வுகளை வெளிக்கொணர்வதற்குத் துணைபுரியும் என்ற எதிர்பார்ப்பும் நியாயமானதாகும்.
இவ்வாறாக நோக்குகின்றபோது மலையகப் பல்கலைக்கழகமும் பொதுமையான தன்மைகளையும் அதே சமயம் தனித்துவமான சிறப்பியல்புகளையும் கொண்டதாகவே அமைய வேண்டும். எவ்வளவுது}ரம் அதன் தனித்துவமும் சிறப்பியல்புகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை நம்மால் கூற முடியாது என்ற போதிலும் அவற்றினைக் கூறி வைப்பதும் முக்கியமானதொன்றாகும்.மலையக சமூக, பொருளாதார அமைப்பானது தேயிலை இறப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை அடிப்படையாகக் கொண்டது. இச்சமூகவமைப்பின் உற்பத்தி முறைகளும் உற்பத்தி உறவுகளும் தனித்துவமானவை. அவை தோற்றுவிக்கக்கூடிய கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியங்களும் தனித்துவமானவை. இவ்வகையில் இத்துறை சார்ந்த ஆராய்ச்சி செய்வதற்கும் நடைமுறையில் ஈடுபடுவதற்கான சகல வசதிகளும் இங்குண்டு. மலையகப் பல்கலைக்கழகம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். இந்த விவசாய முறைகளை விருத்தி செய்வதுடன் மட்டுமல்ல அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான பட்டதாரிகளையும் உருவாக்க வேண்டியுள்ளது. இங்கு சிறுகைத்தொழில்கள், விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. அவற்றினை விருத்தி செய்யவும் வேண்டும். மேலும் ஒரு சமூக அமைப்பின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில், சமூக பெயர்ச்சியை ஏற்படுத்துவதில் கல்வி நிறுவனங்கள் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன.
மலையகத்தில் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை, ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி என்பன நிறுவப்பட்டதன் பின்னர் மலையகத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் நியமனங்களும் தொழில்சார் பயிற்சிகளும் வழங்கப்பட்டமை மலையக கல்வி வளர்ச்சியில் முழுமையான பங்களிப்பை நல்காவிடினும் ஒரு பகுதியளவிலான பங்களிப்பினை நல்கியுள்ளது எனலாம். அவ்வாறே ஹட்டன் பொஸ்கோ உயர் கல்வி நிறுவனம் (அமரர் எஸ். ஜோன்சன், கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டவை) மூலம் மலையக ஆசிரியர்கள் பலர் பட்டதாரிகளாக உருவாவதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்நிறுவனத்தின் மூலமாக பட்டதாரிகளான பலர் இன்று முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், அவர்களில் சிலர் கல்வி நிர்வாக சேவையிலும் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இன்று கல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சியின் பின்னணியில்; உருவாகியுள்ள தனியார் பாடசாலைகள், தனியார் பல்கலைக்கழகங்களும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் அதனுள் பிரவேசிக்கவே முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. தனியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக ஒருவர் வைத்தியராக வரவேண்டுமாயின் ஒரு கோடி ரூபா பணத்தை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. மலையக சமூகத்தைச் சேர்ந்த அல்லது பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் இத்தகைய கற்கை நெறிகளில் பங்கு பற்ற முடியும்? அத்தொகையை முதலீடு செய்து வைத்தியராகின்ற ஒருவர் அத்தொகையை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க முற்படுகின்றபோது மக்களின் நிலைமை என்ன? என்பன குறித்து நோக்குகின்ற போது அரசாங்க பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக உள்ளது.அந்தவகையில் மலையகப் பல்கலைக்கழகம் என்பது மலையகத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் நாட்டிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும். இதற்கு மாறாக மலையகப் பல்கலைக்கழகம் என்பது மலையக மாணவர்களுக்கான அகதி முகாம்களாகவோ அல்லது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு மாணவர்களை கூலிப் பட்டாளங்களாக தயார்ப்படுத்தும் நிறுவனமாகவோ அமைந்துவிடக் கூடாது.
இதற்கு அப்பால் மலையகப் பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவம் கருதி அதனை மலையக சமூக அபிவிருத்திக்காக பயன்படுத்துகின்ற வகையில் மலையக சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்ட புத்திஜீவிகள், மாணவர்கள், தொழிலாளர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஸ்தாபனமாக உருவாக வேண்டிய தேவை உள்ளது. அதற்கான சூழலும் இன்று மலையகத்தில் உருவாகியுள்ளது.
நன்றி- புகழி.கொம்.2008
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...