சிங்கள பௌத்த வரலாற்று நாயகர்களை முன்னிறுத்தி நினைவு நாட்களை அனுஷ்டிக்கும் பழக்கம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதை சமீபகாலமாக கவனிக்க முடிகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா...
சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வை வலுப்படுத்தவும், சிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கும், சிங்கள பௌத்த நாடு இது, மற்றவர்கள் அந்நியர்கள் என்பதை நிறுவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த நாளை ஆக்கிக்கொள்வதில் தான் ஆபத்து இருக்கிறது. புத்த ஜயந்தி தினத்தை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் கொடுமையானது.
அநகாரிக்க தர்மபாலாவின் 150வது ஜனன தினத்தையொட்டி இந்த வருடம் ஏராளமான நிகழ்வுகளை சகல இனவாத அமைப்புகளும் பெரிய மற்றும் சிறிய அளவுகளில் நாடெங்கிலும் நடத்தி வருவதை கண்டிருப்பீர்கள். தனது பேச்சாலும், போதனைகளாலும், எழுத்தாலும் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெறுக்க கற்றுக்கொடுத்தவர் அவர். அவரது அந்த உரைகளை நாடளாவிய அளவில் இனவெறுப்பை வளர்ப்பதற்காக பாவிக்கப்பட்டு வருவதை அவர்களது பிரசுரங்களில் இருந்து காணலாம். குறிப்பாக பொதுபல சேனா பல பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் சில நூல்களை அவர்களது இணையத்தளத்திலிருந்தும் தரவிறக்கிக்கொள்ளமுடியும்.
கடந்த 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாளையும் அப்படித்தான் இனவிஷம் பூசிய ஒரு நினைவு நாளாக ஆக்கியிருந்தார்கள். சிங்கள நாளிதழ்கள் அனைத்திலும் அதனை நினைவுகூரும் பல கட்டுரைகள், அறிக்கைகள் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.
வீர கெப்பட்டிபொல இலங்கையின் முதன்மை நிலையில் வைத்துப் போற்றப்படும் சிங்கள வீரன். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள பௌத்த ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக சிங்கள வரலாறுகளில் குறிக்கப்படுகிறான். ஆனால் “சிங்கள சமூக அமைப்பு” (Sinhalese social organization – Ralph Pieris) என்கிற நூலில் மலபாரிலிருந்து இலங்கை வந்த ஒரு அரசரோடு வந்த கெப்பட்டிபொலல பரம்பரையைச் சேர்ந்தவர் தான் இந்த கெப்பட்டிபொல என்று நிறுவுகிறார்.
1948இல் கெப்பட்டிபொலவின் குடும்பத்தினரால் இலங்கை திருப்பி கொணரப்பட்ட மண்டையோடு தலதா மாளிகையில் மக்கள் பாரவைக்கு வைக்கப்பட்டிருந்தபோது |
தன் சகோதரியையும் பிள்ளைகளையும் கொன்ற ஸ்ரீ விக்கிரமசிங்க அரசனுக்கு எதிராக தன் மைத்துனரான எஹெல்லபொலவுடன் சேர்ந்து கண்டி அரசரை ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்து கண்டி அரசை கவிழ்க்க உதவுகிறார்கள். ஸ்ரீ விக்கிரமசிங்க சிறைபிடிக்கப்பட்டு பின்னர் வேலூரில் இறந்துவிடுகிறார். ஏனைய பிரதானிகளின் அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் “கண்டி ஒப்பந்தம்” 1815இல் செய்துகொள்ளப்பட்டது. அதன் படி அவர்கள் ஆங்கில அரசில் பதவியும் வகித்தார்கள். பின்னர் இரு தரப்பிலும் ஏற்பட்ட பரஸ்பர அதிருப்தி காரணமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு தலைமை கொடுத்தார் கெப்பட்டிபொல. இறுதியில் கெப்பட்டிபொலவை பிடித்து 1818 நவம்பர் 26 அன்று கண்டி போகம்பர சிறைச்சாலையில் தலையை துண்டித்து கொன்றது மட்டுமன்றி பின்னர் பரிசோதனைக்கென்று கெப்பட்டிபொலவின் தலையை இங்கிலாந்துக்கு கொண்டு சென்று வைத்திருந்தது ஆங்கிலேய அரசு. பின்னர் 1948இல் அந்த மண்டையோடு மீண்டும் இலங்கை கொண்டுவரப்பட்டது என்பது தான் சாராம்சம்.
எஹெலபொல குமாரிஹாமி திரைப்படத்தில் குடிகாரனாக மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்க |
இப்போது இந்த கதையை சிறுபான்மையினருக்கு எதிராக திரித்து பயன்படுத்தி வருவதைத் தான் சமகால போக்கோடு வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. கெப்பட்டிபொல ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ந்ததற்கான இன்னொரு காரணம் ஆங்கிலேயர்கள் அதிகாரங்களை முஸ்லிம்களுக்கு கொடுத்து சிங்களவர்களுக்கு துரோகம் இழைத்தார்கள் என்பது. கெப்பட்டிபொல இருந்த இடத்தைக் காட்டி கொடுத்தது முஸ்லிம்கள் தான் என்கிற பல சிங்கள கட்டுரைகளையும் இப்போது காணக்கிடைக்கிறது.
இந்த வருடம் வெளியான “எஹெலபொல குமாரிஹாமி” என்கிற திரைப்படம் இந்த போக்குகெல்லாம் சிறந்த சாட்சி. இதுவரை கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரமசிங்கவை வணக்குத்துகுரிய ஒருவராகவே பாடப்புத்தகங்களிலும் வரலாறுகளிலும் கூறப்பட்டு வந்ததை மறுதலித்து, ஒரு குடிகாரனாகவும், ஒரு பெண்பொறுக்கியாகவும் சித்திரிக்கிறது அந்த திரைப்படம். எஹெலபொல, கெப்பட்டிபொல ஆகியோரை வீரர்களாக சித்தரிப்பதுடன் உரலில் இடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் புனைவை இறுதி கிளைமேக்ஸ் காட்சியில் உணர்ச்சிததும்ப காட்டி ஸ்ரீ விக்கிரமசிங்கவை ஒரு கொடூர கொலைகாரனாக காட்டுகிறது அந்த திரைப்படம்.
இவை எல்லாமே பேரினவாதமயப்படுத்தலின் அங்கங்களாகவே காணவேண்டியிருக்கிறது.
கெப்பட்டிபொலவின் நினைவு நாளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை சேர்ந்த பெருமளவு இளைஞர்களை கூட்டி 26 அன்று நடத்திய மாநாட்டில் பிரதான உரையாற்றியவர் விமல் வீரவங்ச. நீண்டதொரு உணர்ச்சிமிகு உரை அது. அன்றைய கெப்பட்டிபொல காலத்து காட்டிகொடுப்பையும் நடத்துமுடிந்த யுத்தத்திலும், சமகால ஜனாதிபதித் தேர்தலிலும் நிகழ்ந்த காட்டிக்கொடுப்புகளோடு ஒப்பிட்டு ஒரு வரலாற்று உரையை நிகழ்த்தியிருந்தார். துரதிஷ்டவசமாக இதுபோன்ற உரைகள் எதுவும் தமிழ் வாசகர்களுக்கு கிடைப்பதில்லை.
பொது பல சேனா
இனி இந்த வார பேரினவாத அணிகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து எடுத்த நிலைப்பாடுகளை பார்ப்போம்.
பொதுபல சேனா என்பது ஜாதிக ஹெல உறுமயவோடு ஒப்பிடுகையில் அதுவொரு சாகசவாத சக்தியாகவே தம்மை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அரசின் தொங்கு தசையாகவே மறைமுகமாக இயக்கப்பட்டதே அதற்கு அடிப்படையான காரணம். ஜாதிக ஹெல உறுமயவின் லட்சியவாத போக்குக்கு முன்னால் அதன் தள்ளாட்டம் அப்பட்டமாக தெரிகிறது. தேர்தல் சலசலப்புகள் மத்தியில் சிங்கள பௌத்த தரப்பு என்கிற வகையில் தமக்கு இருந்த செல்வாக்கு அடுத்தடுத்த நிலைக்கு தள்ளப்பட்டமை பொது பலசேனாவுக்கு பாரிய அரசியல் சங்கடத்தை கொடுத்திருகிறது.
ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தது. அதன் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் இரு சக்திகளும் நேரெதிர் நிலைபாட்டை ஒரே நாளில் ஊடக மாநாட்டின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்.
“ஜனாதிபதி தேர்தல் அறிவித்தலினால் அதிக சிக்கலுக்குள் தள்ளப்பட்டது நாங்கள் தான். சிங்களத்தில் புராண பழமொழி ஒன்று உண்டு “கெதர கியொத் அம்பு நசி! மக ரெந்துனொத் தோ நசி! (வீடு போனால் மனைவி சாவாள். தரித்து நின்றால் நீ சாவாய்). எனவே நாங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளோம்.”
என்று கூறிய ஞானசார தேரர் அரசுக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அளித்தார். அவ்வமைப்பின் அமைப்பாளர் டிலந்த விதானகே ஒரு பவர்பொய்ன்ட் அறிக்கையொன்றின் மூலம் புள்ளிவிபரங்களையும், தரவுகளையும் காட்டி ஊடகவியலாளர்களுக்கு விளக்கப்படுத்தினார். அதில் இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் பட்டியலைக் காட்டி அவர்கள் அனைவரும் நிலப்பிரபுத்துவ வம்சத்தில் வந்தவர்கள். பிரேமதாசவும் மகிந்தவும் மட்டுமே அதற்கு வெளியில் இருந்து வந்தவர்கள். ஆகவே மகிந்தவை கவிழ்ப்பது என்பது “நிலப்பிரபுத்துவ மேலாதிக்க சதி” என்றார்.
மகிந்தவும் ஒரு நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்டவர் தான் என்பதை வசதியாக மறைத்து மகிந்தவுக்கு ஆதரவு தேடும் முயற்சி இது என்பதை அறிந்தவர்கள் அறிவர்.
தமது பிரதான எதிரிகளாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியில் தான் பொதுபல சேனா இணைந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஹெல உறுமய கூட எவரையும் நிபந்தனைகளுடன் தான் ஆதரிப்போம் என்று கொள்கைப்பிடிப்புடன் அறிவித்தது. ஆனால் தமது நிபந்தனையை பிரதான தரப்புகள் எதுவும் கணக்கிலெடுக்கப்போவதில்லை என்பது பொதுபல சேனாவுக்கு நன்றாகத் தெரியும். பொதுபல சேனா எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சில செய்திகள் கடந்தவாரம் வெளியான போது எதிரணி ஆதரவாளர்கள் பலர் திடுக்கிட்டுபோனார்கள். சிறுபான்மை இனங்களின் வாக்குகளை தமக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்கான அரசாங்கத்தின் சதியாக இது இருக்கும் என்று சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டார்கள். “நன்றி... ஆனால் தேவையில்லை” (Thanks! but no thanks!) என்று அவர்கள் கூறினார்கள். இப்போது அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த போது “அப்பாடா மைத்திரிபால தப்பினார்” என்ற குரல்களை எங்கும் கேட்க முடிந்தது.
எதிர்கால அரசியல் தலைமையை தாம் தான் தீர்மானிக்கப்போவதாக அறிவித்த பொதுபல சேனா... எவருக்கும் வேண்டாத ஒரு அமைப்பாக ஆனது ஒரு அரசியல் திருப்பம் தான். இறுதியில் தனது இருப்புக்காக தாமே தமது ஆதரவை நிபந்தனையின்றி தெரிவித்து தமது இருப்பை அறிவித்துக்கொள்ளும் நிலைக்கு இன்று அது தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு அழையா விருந்தாளியாக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையும் பரிதாபத்துக்குரியது.
பௌத்த தேசிய தலைவர் தம்மிடம் இருப்பதாகவும் தகுந்த சந்தர்ப்பத்தில் அவர் யார் என்பதை வெளிப்படுத்துவதாகவும் பயமுறுத்திக்கொண்டிருந்த பொதுபல சேனாவால் இறுதிவரை அப்படியொருவரை சுட்டிக்காட்ட முடியவில்லை. அப்படியொருவரை அறிவிப்பதற்காகவே ஒரு பாரிய மாநாட்டையும் நடத்தியது. ஆனால் சகலரும் எதிர்பார்த்திருந்த அந்த “சிங்கள பௌத்த தலைவரை” அன்றும் அறிவிக்க முடியவில்லை. இன்றும் அறிவிக்கமுடியவில்லை. அது வெறும் பூச்சாண்டி அறிவித்தல் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.
மகாநாயக்கர்களினது ஆதரவையும் அவர்களால் பெறமுடியாது போய்விட்டது. கடந்தவாரம் முழுதும் சம்பிக்க தலைமையிலான ஹெல உறுமய குழுவினர் சகல மகா நாயக்கர்களையும் சந்தித்து தமது நிலைப்பாடுகளை தெரிவித்ததுடன் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கிய காணொளிகளை வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் பொதுபல சேனா கையறு நிலைக்கு தள்ளப்பட்டதேன்றே கூறவேண்டும். அதுபோல ஜாதிக ஹெல உறுமய தமது செல்வாக்கை மீண்டும் உறுதிசெய்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர்களின் சாணக்கியத்துக்கு நிகராக இலங்கையில் எந்த ஒரு அரசியல் சக்தியையும் ஒப்பிட்டு விட முடியாது.
ஜாதிக ஹெல உறுமய
சம்பிக்க, ரதன தேரர், உதய கம்மன்பில உள்ளிட்ட ஹெல உறுமய அமைப்பு தலைவர்கள் உத்தியோகபூர்வமாக தமது நிலைப்பாட்டை 27 அன்று அறிவித்தார்கள். சம்பிக்க கூறும்போது
“நிறைவேற்று ஜானாதிபதி முறையை பாவித்து யுத்ததில் வென்றதாக கூறுகிறீர்களே. ஏன் வடக்கில் சிங்களவர்களை குடியேற்ற அந்த அதிகாரமுறையைப் பாவிக்கவில்லை. மேற்கின் சதி, என்.ஜீ.ஓ சதி, புகலிட புலிகளின் சதி (டயஸ்போறா) என்று எங்களை முத்திரை குத்தி பிரச்சாரப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ‘புண்ணானால் ஈக்கள் மொய்க்கத்தானே செய்யும்’.
சந்திரிகாவை மீண்டும் பதவியில் அமர்த்தப்போகிறீர்களா என்று கேட்கிறார்கள் சிலர். சமஷ்டியை தோளில் வைத்துக்கொண்டு இருக்கும் சந்திரிகாவை ஒருபோதும் நாங்கள் பதவியில் அமர்த்தப்போவதில்லை.
சிலர் கேட்கிறார்கள் ஹகீமோடு இணையப்போகிறீர்கள் அல்லவா என்று. ஹக்கீமோடு ஒரே அமைச்சரவையில் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். பொது விடயங்களில் சேர்ந்து பணியாற்றலாம். ஆனால் ஹக்கீமோ, சம்பந்தனோ பிரிவினைவாத சதித்திட்டத்துடன் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் எப்போதும் போல அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். எந்த ஒரு அரசியல் பலமில்லாத காலத்திலேயே நாங்கள் பின்புலத்திலிருந்து சமஷ்டியை தோற்கடித்தவர்கள் நாங்கள். ஏன் எங்களால் இப்போது முடியாது.
மாகாணசபையின் அதிகாரங்களை குறைத்ததன் பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்திடம் கேட்டோம் ஆனால் அந்த தேர்தலை நடத்தி பிரிவினைவாதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்து பிரிவினைவாதத்தை சாத்தியப்படுத்த வழி திறந்து விட்டிருக்கிறார்கள்
எங்கள் இறுதி முன்மொழிவை நாங்கள் அரசாங்கத்திடம் கொடுத்தோம். எங்களுக்கு பதிலும் கிடைத்தது ஆனால் வழமைபோல அது வெறும் வழவழா மட்டும்தான். கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் அதில் இருக்கவில்லை. எங்களுக்கு “செய்யலாம்” என்கிற பதில் தேவையில்லை. அதனை நிறைவேற்றுவதற்கான காலவரையத்றை திட்டங்களை அறிவிக்கும்படி கோரியிருந்தோம். தற்காலிகமாக எங்கள் வாயை மூடுவதற்கான கைங்கரியமாக “ஆம்” என்கிற பதிலில் எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை.” என்றார்
எவரை ஆதரிப்பது என்கிற முடிவை தெளிவாக அறிவிக்காத போதும் மகிந்தவை எதிர்ப்பது என்கிற முடிவை அறிவித்திருக்கிறார்கள். கூடவே எதிரணியினரிடம் தமது கோரிக்கைகளை வைத்திருக்கிறோம் என்கிற அறிவித்தலும் எதிரணிக்கு சாதகமாக இருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதே பாணியில் தான் ஜே.வி.பி.யும் அறிவித்திருந்தது. தாம் இதுவரை எதிர்த்து வரும் ரணிலோடும், சந்திரிகாவோடும் தம்மை முடிச்சுபோட்டு தம்மை ஓரங்கட்ட முனைவார்கள் என்கிற பயம் இரண்டு கட்சிகளுக்கும் தெளிவாகவே இருக்கிறது என்றே புரிய வேண்டியிருக்கிறது. அடிப்படையில் தமது சிங்கள பௌத்த தனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்கிற பயமேயன்றி வேறில்லை.
இனி பொதுபல சேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் ஒரு பனிப்போரை எதிர்பார்க்கலாம்.
நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரல் என்பது நேரடியாகவும், திரைமறைவிலும் சிறிதாகவும், பெரிதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருபவை. நாளுக்கு நாள் அதன் பலம் அதிகரித்து வருவதுடன். ஏனைய இனங்களுடனான சகவாழ்வுக்கான வாய்ப்புகள் அரிதாகிக்கொண்டே செல்கின்றது. ஒருபுறம் சிறுபான்மை தரப்பு தமது நியாயமான அரசியல் அதிகாரங்களை வேண்டி ஜனநாயக கட்டமைப்பிற்குள் போராடிக்கொண்டிருக்கும் போது; இன்னொருபுறம்; “இருக்கும் அதிகாரங்களையும் பறி” என்கிற உயர்மட்ட அழுத்தம் பலமாக பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எடுபடவும் செய்கிறது. இதனை புரிந்து செயல்படாத எந்த சிறுபான்மை அரசியலும் கிஞ்சித்தும் அடுத்த கட்டம் நகரமுடியாது என்பது மட்டும் நிஜம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...