மூன்றாவது முறையும் மகிந்த போட்டியிடமுடியும் என்கிற உச்ச நீதிமன்ற கருத்து வெளியிட்டதும் புற்றுக்குள் இருந்த பாம்புகள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன.
சமீபகாலமாக இனவாத அமைப்புகள் தமக்குள் புகைந்துகொண்டிருந்த உட்புகைச்சல்களை போதுமான அளவு வெளித்தெரியாமலிருக்க பிரயத்தனப்பட்டது நமக்கு தெரியும். அனைத்தும் போட்டுடைக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருந்ததையும் அரசியல் சூழல் விளக்கின. இன்று அது பகிரங்கமாகவே நிகழ்ந்துவிட்டன. ஆனால் இதனால் அவர்கள் “பலமான சக்தி” என்கிற பாத்திரத்தை இழந்துவிட்டார்கள் என்று மட்டும் நாம் நினைத்துவிடக்கூடாது. அதுபோல சிங்கள பௌத்த இனவாத சக்திகள் பலவீனமுற்றுவிட்டன என்றும் நினைத்துவிடக்கூடாது. சித்தாந்த அளவில் அது முன்னெப்போதையும்விட பலம்பெற்று வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஒருபுறம் இன்று பெரும் விருட்சமாக வளர்ந்துவிட்டிருக்கிற “ஜாதிக ஹெல உறுமய” அணி, இரண்டாவது மகிந்தவின் இருப்பை பாதுகாக்க விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன போன்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள அணி. மூன்றாவது பொதுபல சேனா வின் அணி.
இந்த மூன்றுக்கும் உள்ள பொதுவான அடிப்படை “தமிழர் அரசியல் உரிமை மறுப்பு”. அதுபோல மூன்றும் பௌத்த பிக்குமார்களை தலைமையில் வைத்து நகர்த்தும் அணிகள். சிங்கள பௌத்த ராஜ்யத்தை நிறுவும் வேலைத்திட்டத்தை வலியுறுத்தும் அணிகள். “சிறுபான்மை இனங்களின் நலன்களை காத்துவிடக்கூடிய” யு.என்.பி போன்ற சக்திகள் தலைமையிலான எதுவும் ஆட்சியில் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள அணிகள்.
ஆக அடிப்படையில் ஒரே மூலோபாயத்தை கொண்டியங்கும் சக்திகள் இவை; அதனை அடையும் தந்திரோபாயங்களில் தான் வேறுபடுகிறார்கள் என்பதை சிறுபான்மை இனங்கள் உணரவேண்டும்.
சிங்கள அரசியல் போக்கானது சமீப காலமாக தமிழர் வாக்குகளை நம்புவதில் அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அதற்கொத்த வீத வாக்கு வங்கியை சிங்கள பௌத்த இனவாத சக்திகள் தம்மிடம் இருப்பதாகவும் தாமே பேரம் பேசும் சக்திகள்; ஆகவே தமது அபிப்பிராயங்களுக்கு செவிசாய்க்குமாறு அரசுக்கு இதுவரை அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.
ஆனால் தமது பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்று அரசிலிருந்து பிரிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதிமுறைமையை ஒழிப்பது, மாகாணசபை அதிகாரங்களை பறிப்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட 19வது திருத்தசட்டத்தை நிறைவேற்ற அரசு மறுத்து வருகிறது என்று குற்றம் சாட்டி அரசை பகிரங்கமாக எதிர்க்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். அதற்காக பிரதான எதிர்கட்சிகளுடனும் கூட்டணி வைத்துவிட்டார்கள். அதன் எதிரொலி தான் 12 ஆம் திகதி கொழும்பில் எதிர்கட்சிகள் பல இணைந்து நடத்திய ஜனாதிபதிமுறைமைக்கு எதிரான “மக்கள் அலை” எனும் தலைப்பிலான கூட்டம்.
ரதன தேரர் – சோபித்த அணி
இந்த கூட்டத்தை ஜாதிக ஹெலஉறுமயவின் பினாமி அமைப்பான அதுரலியே ரதன தேரர் தலைமையிலான “பிவிதுரு ஹெட்டக்” எனும் அமைப்பு ஏற்பாடு செய்தது. அதில் ஐ.தே.க, ஜே.வி.பி, ஜாதிக வியாபாறய (சோபித்த தேரர் தலைமையிலான), போன்றவை மற்றும் முன்னாள் சரத் சில்வா போன்றோர் அந்த கூட்டில் இணைந்திருந்தனர். இந்த கூட்டத்தை தடுப்பதற்காக அரசாங்கத் தரப்பினர் கொழும்பில் உள்ள பொது மைதானங்கள் மண்டபங்களை முன்பதிவு செய்து; அவை உரிய நாளில் “பிவிதுரு ஹெட்ட” வுக்கு கிடைக்காதபடி செய்தனர். இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் மோசமான செயல் என்று ரதன தேரர் கடந்த 9ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தை எங்காவது ஒரு மைதானத்தில் வலுகட்டாயமாகவேனும் நடத்தியே தீருவேன் என்று கூறிய அவர் கொழும்பு – முத்தையா மைதானத்தில் நடத்தினார்.
அந்த கூட்டத்தில் மாதுலுவாவே சோபித்த தேரரின் உரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதுசெய்வதாக மகிந்த உறுதியளித்தால் இந்த பொதுவேட்பாளர் முயற்சியையும் கைவிடுவோம். அவரையே ஆதரித்து நிற்போம் என்று ஒரு போடு போட்டார். அதாவது அவரது ஒரே பிரச்சினை அதுமட்டும் தான் என்பதையும் மற்றும்படி மகிந்தவை ஆதரிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்பதை உணர வேண்டும். ரதன தேரரும் அதே புள்ளியில் தான் இருக்கிறார். அதாவது 19 வது திருத்த சட்டத்தை ஒப்புக்கொண்டால் தாம் மகிந்தவை ஆதரிப்போம், மறுத்தால் எந்த விலை கொடுத்தேனும் மகிந்தவை தோற்கடிப்போம் என்பதே அது.
ஜனாதிபதிமுறைமை குறித்த விடயத்தில் ஒன்றுபடும் இவரோடு கூட்டுசேரும் ஏனைய கட்சிகள் மற்றைய விடயங்கள் குறித்து எப்பேர்பட்ட உடன்பாடு கண்டுள்ளனர் என்கிற கேள்வி எழுகிறது. குறிப்பாக சிறுபான்மை இனங்களுக்கு பாதகமான அம்சங்கள் உள்ள 19 வது திருத்த சட்டத்தை ஐ.தே.க, ஜே.வி.பி போன்றவை ஏற்றுக்கொண்டதா என்கிற கேள்வி எழும்புகிறது. ஜாதிக ஹெல உறுமயவின் நிகழ்ச்சிநிரலைப் பொறுத்தளவில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை தவிர்ந்த “சிறுபான்மை இனங்களின் உரிமை பறிப்பு” விடயத்தில் தற்போதைய கூட்டணியே சாதகமானது என்பதை எவரும் அறிவர்.
மேலும் இந்த கூட்டணியில் எந்தவொரு தமிழ் தரப்பும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 10ஆம் திகதி சோபித்த தேரர் தலைமையில் “சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு” ஒழுங்கு செய்திருந்த “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கான” எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய தவிர்ந்த எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது மனோகணேசன், அசாத் சாலி போன்ற சிறுபான்மை அரசியல் சக்திகளும் அதில் இணைந்திருந்தனர்.
இதனை ஏற்பாடு செய்த மாதுலுவாவே சோபித்த தேரர் அன்று மாகாண சபை முறைமைக்கு எதிராக போராடி சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பேர் பெற்ற மிகவும் முக்கியமானவர். தமிழர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தரப்புக்கு 80களில் தலைமை தாங்கியதும் அவர்தான். யுத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர். அவருடன் அரசியல் கூட்டணிகள் அமைக்கும் போது சிறுபான்மை தரப்புக்கு எத்தகைய உத்தரவாதங்கள் அவரிடமிருந்து அவரிடமிருந்து வழங்கப்பட்டன என்கிற கேள்வி எழுகிறது.
ஹெல உறுமயவோடு பேச்சுவார்த்தை நடத்தும் ஐ.தே.க, சந்திரிகா அல்லது எவராக இருந்தாலும் சிறுபான்மை நலன் காக்கும் உத்தரவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை என்பது யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட அரசியல் அழுத்தம் பிரயோகிக்கும் ஆற்றலை சிறுபான்மை தமிழ், முஸ்லிம், மலையக தலைமைகள் இழந்துவிட்டிருக்கின்றன என்பதும் கண்கூடு.
விமல்- பெங்கமுவ அணி
12 நடத்தப்பட்ட இந்த “மக்கள் அலை” என்கிற அணிசேர்ப்பை முறியடித்து மகிந்தவுக்கு ஆதரவான ஒரு சிங்கள பௌத்த அணியை உருவாக்குவதற்காகவே “ஜாதிக சங்விதான எகமுதுவ” (தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம்) என்கிற பெயரில் ஒன்றை ஆரம்பித்தார்கள்.
இந்த அமைப்பின் சார்பில் கடந்த 6ஆம் திகதி “நாட்டை காட்டிக்கொடுக்கப் போகிறீர்களா?” எனும் தலைப்பில் நடத்திய கூட்டத்தில் அதிகமாக தாக்கப்பட்டவர் ஜாதிக ஹெல உறுமய செயலாளர் ரதன தேரர். “மகிந்தவை விரட்ட நீ என்ன பெரிய பருப்பா” என்கிற அர்த்தத்தில் அங்கு அவரை தாக்கி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இவர்கள் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை கடந்த 10ம் திகதி சிங்கள நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையின் சாராம்சமாக;
“வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது, சர்வதேச போர்குற்றச்சாட்டு, பிரிவினைவாதத்தை உத்தரவாதப்படுத்தும் 13வது திருத்தச்சட்டம் போன்ற முயற்சிகளை முறியடிக்க முழு இனமும் ஒன்றிணைய வேண்டிய காலமிது. இராணுவ ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை விடுதலை செய்த ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதில் என்ன தவறு.”என்று 10 அம்சங்களை முன்வைக்கிறது. இந்த அறிக்கை தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவங்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு முன்வைப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அதில் கையெழுத்திட்டவர்கள் விமலஜோதி தேரர் (பௌத்த கலாசார நிலையத்தின் தலைவர் என்று கையெழுத்திட்டாலும் அவர் பொது பல சேனாவின் தற்போதைய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது), பெங்கமுவ நாலக்க தேரர் (தேசப்பிரேமி பிக்கு பெரமுன – இதுவரை இனவாத போராட்டங்களுக்கு முக்கிய தலைமை கொடுத்து வந்த ஒருவர், சென்ற வருடம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக பல பிக்குமார்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தியவர்), தம்மானந்த தேரர் (சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்க தலைவர் – “சிங்கள பௌத்த அரசியலமைப்பை” வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருபவர்), குணதாச அமரசேகர (தேசாபிமான தேசிய இயக்கத்தின் தலைவர் - நீண்டகாலமாக சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்த உருவாக்கத்தில் முக்கிய பாத்திரம் வகித்து வருபவர்), ரஞ்சித் சொய்சா (SPUR இயக்கத்தின் தலைவர் - அவுஸ்திரேலியாவில் தலைமையகமாக கொண்டு சர்வதேச அளவில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை கடந்த இரு தசாப்தங்களாக முன்னெடுத்துவரும் இயக்கம்)
இவர்கள் ஒன்று சேர்ந்து 12 ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் நடத்திய கூட்டத்தில் இவர்கள் அனைவரும் பேச்சாளர்களாக கலந்துகொண்டார்கள். எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டமும் இரண்டே கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரே நேரத்தில் தான் நடாத்தப்பட்டது.
இவ்வணியில் பொதுபல சேனா இணைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வீரவங்சவுக்கு ஏற்கெனவே பொதுபல சேனா வோடு உள்ள முறுகல் நிலை காரணமாக சேர்ந்து பணியாற்றுவதில் சிக்கல்கள் இருந்தன. எனவே நேரடியாக சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அது தவிர பொதுபல சேனாவை தமது மறைமுக ஆயுதமாகத்தான் அரசாங்கம் பாவித்து வருகிறது என்பது நாமறிந்ததே.
மேலும் இவர்கள் எதிர்பார்த்தபடி சம்பிக்க ரணவக்க அந்த கூட்டத்திற்கு வரவில்லை. தனக்கு ஒரு பெக்ஸ் மூலமே அழைப்பு விடுக்கப்பதாகவும் தனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன, தான் வரவில்லை என்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தார் சம்பிக்க. அந்த கூட்டம் அப்பட்டமாக தமிழர் எதிர்ப்பு கூட்டமாகத்தான் நடந்தேறியது.
“13வது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்காக எங்களை அழையுங்கள் நாங்கள் வருகிறோம்... காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாது செய்வதற்கு அழையுங்கள் நாங்கள் வருகிறோம். ஆனால் ஜனாதிபதிமுறையை ஒழிப்பதில் மாத்திரம் உங்கள் கவனம் குவிகிறது. இது மேற்கினதும், என்.ஜீ.ஓ.க்களினதும் சதி. நீங்கள் எல்லோரும் அவர்களின் கைக்கூலிகளாகிவிட்டீர்கள்....
தாம் பெற்ற விடுதலை எப்படி கிடைத்தது என்பதை மக்கள் 5 வருடங்களில் மறந்து விடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றனர். அப்படி என்றால் மக்கள்; தமது பிறப்பு குறித்தும் மறந்திருக்க வேண்டும். இந்த நாட்டுக்கு அப்படிப்பட்ட ஒரு அவமானத்தை ஏற்படுத்த விடமாட்டோம்”என்று விமல் வீரவங்ச முழங்கினார்.
மகிந்தவை ஆதரிப்பதற்கான காரணங்களை அடுக்கும்போது அதில் பெரும்பாலான காரணங்கள் தமிழர்களை வெற்றிகொண்டது, ஒடுக்கியதும், அரசியல் செல்லாக்காசாக்கியதும் குறிப்பிடப்பட்டன.
அந்த வகையில் பெங்கமுவே நாலக தேரர், தம்மானந்த தேரர் போன்றோரின் கருத்துக்கள் மிகவும் மோசமான தமிழர் விரோத போக்கைக் கொண்டவை. அவை தமிழில் பதிவு செய்யப்படவேண்டியவை.
பொது பல சேனா இந்த இரண்டு தரப்பிலும் அடங்கவில்ல, ஆனால் மகிந்தவை ஆதரித்தும் மகிந்தவை எதிர்ப்பவர்களை எதிர்த்தும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். ஞானசார தேரரின் முன்னாள் குருவான ரதன தேரரை கடுமையாக சாடுவதுடன் அவர் என்.ஜீ.ஓ மற்றும் “தமிழ் டயஸ்போரா” வலையில் விழுந்து விட்டதாக பிரசாரப்படுத்தி வருகிறார் ஞானசார தேரர். ரதன தேரருக்கு எதிரான வியூகத்தின் இன்னொரு அங்கம் அவரது முகநூல் கணக்கும், ஜீமெயில் கணக்கும் ஹெக்கர்களால் கடந்த 11 அன்று முடக்கப்பட்டது. அது உள்ளூர் எதிரிகளின் கைவரிசை தான் என்று ரதன தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
“என்னென்னவோ பெயர்களில் சிங்கள பௌத்தர்களை துண்டாட திடீர் அமைப்புகள் தோற்றம் பெற்றுள்ளன... தற்போதைய அரசியலமைப்பை தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்தமாக சிங்கள பௌத்த யாப்பை உருவாக்க வேண்டுமேயொழிய, அந்நிய ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களால் (“ஐவர் ஜென்னிங்க்ஸ்”) உருவாக்கப்பட்ட துருப்பிடித்துப்போன இந்த யாப்பில் ஓட்டை ஓடிசல்களை சரிசெய்ய முயலக்கூடாது. நிறைவேற்று ஜனாதிபதி முறையால் தான் இன்று போரையும் வெற்றி கொண்டுள்ளோம்.” என்று 11ஆம் திகதி ஊடக மாநாட்டில் தெரிவித்தார் ஞானசாரர்.
யுத்தத்தை வென்றதும், புலிகளை தோற்கடித்ததும், தமிழீழ கனவை உடைத்ததும், வடக்கு கிழக்கை பிரித்ததும், தமிழர் அரசியல் ஓர்மத்தை முறியடித்ததும் இந்த நிறைவேற்று அதிகார முறைமையால் தான் என்கிற வாதத்தை இப்போது அழுத்தமாக முன்வைத்து வருகிறார்கள்.
நிறைவேற்று ஜனாதிபதிமுறையானது போரை வெற்றி கொள்ள மட்டும் பயன்படுத்தப்படவில்லை தமிழர்களை போருக்குள் தள்ளியதிலும் அதே ஜனாதிபதி முறைமைக்கு பாரிய பங்குள்ளது என்பது ரகசியமல்ல.
இந்த இனவாத அணிகள் அனைத்தும் கடந்த காலம் ஓரணியில் இருந்தவர்களே. இன்று ஆளுக்காள் முரண்படுகிறார்கள் என்றால் அதற்கான அடிப்படை; இனவாதத்துக்கும் அதற்கு எதிராகவும் சண்டை நடக்கிறது என்பதல்ல அர்த்தம். மாறாக சிக்கள பௌத்த மேலாதிக்கத்தின் போதாமைக்காகவே தமக்குள் முரண்பட்டிருக்கிறார்கள். செயல் வடிவத்தில் உள்ள குறைகளுக்காகவே முரண்படுகிறார்கள். அதே சிங்கள பௌத்தத்தின் பேரால் தம்மோடு ஓரணியில் திரளும்படி ஆளுக்காள் கேட்டுக்கொள்கிறார்கள். ஆக இது அவர்களுக்கிடையில் நடக்கும் அரசியல் ஊடல் மட்டுமே. சிறுபான்மை இனத்தைப் பொறுத்தளவில் நிச்சயமாக இந்த போக்கு சாதகமானதல்ல. சிறுபான்மை இன அரசியல் இனி அசட்டையாக இருக்கமுடியாது.
நன்றி தினக்குரல் - 16.11.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...