Headlines News :
முகப்பு » , » ஊவா மாகண முதலமைச்சருக்கு மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் கடிதம்

ஊவா மாகண முதலமைச்சருக்கு மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் கடிதம்


மாண்புமிகு முதலமைச்சர்
ஊவா மாகாணசபை
மாகாணசபை காரியாலயம்
பதுளை

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,

மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடு, காணி உரிமை 
மற்றும ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில்

மலையக மக்களாகிய நாம் கடந்த 200 வருடகாலமாக இலங்கையின் பிரஜைகளாக இந்நாட்டின் பொருளாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும் உழைப்பையும் உடலையும் தியாகம் செய்திருக்கிறோம்;;. நாம் இந்திய வம்சாவளியாக வந்திருப்பினும் இலங்ககை பிரஜைகளாக தொடர்ந்திருக்கவும், ஏனைய பிரஜைகளுக்கு சமமான உரிமைகளுடன் வாழ்வதையுமே எதிர்பார்க்கின்றோம்.

மீறியபெத்த பிரதேசத்தில் 100 வருடங்களுக்கு  மேலாக வாழ்ந்து வருகின்றோம். ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட  லயன் அறைகளிலேயே  எமது குடும்பத்தினர் வாழ்ந்து மரணித்துள்ளனர். எமது வாழ்வாதாரமானது தேயிலை தோட்டத்துடனும் எமது லயன்களை அண்மித்த காணித்துண்டுகளில் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பதிலும், சிறு காய்கறி பாத்திகளிலேயே பெரிதும் தங்கியிருந்தது. இலங்கையில் பொருளாதாரரீதியில் மிகவும் வறுமைப்பட்ட சமூகமாகவே நாம் இவ்வனர்த்தத்திற்கு முன்னர் இருந்தோம்.

இந்த பாரிய அனர்த்தமானது ஏற்கனவே வறுமையின் ஊசலாட்டத்தில் இருந்து எமது வாழ்வின் மேல் பேரிடியாக விழுந்துள்ளது. நாம் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, இந்நாட்டின் பிரஜைகளாக பாதிக்கப்பட்ட நிலையில் நாம் உங்களிடம் கோருவது:

1. பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு முன் மாதிரியான கிராமத்தை உருவாக்க வேண்டும். இதில் பின்வரும் அம்சங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

  • பாதுகாப்பான பிரதேசங்களில் எமது வாழ்வாதாரங்களை கொண்டு செல்வதற்கு ஏதுவான இடங்களில் போதிய அளவான காணிகள் பாதிக்கப்பட்டோருக்கு உரித்தாக்கப்பட வேண்டும்.

  • ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, காய்கறித் தோட்டம் பயிரிடல் போன்ற நடவடிக்கைகள் செய்வதற்கான வசதிகள் உள்ள போதுமானளவு காணித் துண்டுகள் உரித்தாகப்பட வேண்டும். இதற்கான உரிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.

  • கல்வி, கலாசார, சுகாதார ஏற்பாடுகளும், நீர்வசதி, போக்குவரத்து வசதி போன்றனவும்  ஏற்படுத்தப்பட வேண்டும்.

  • வீடுகள் கட்டும்போது அவற்றின் வடிவமைப்பு குறித்து எமது கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். யுத்தத்தினால் மற்றும் சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கியது போன்ற தரத்திலான அளவிலான வீடுகள் எமது பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டும்.

  • எங்கு காணிகள் வழங்கப்படும்? எப்பொழுது வீடுகள் கட்டித்தரப்படும்? யார் வீடுகள் கட்டுவதற்கு நியமிக்கப்படவுள்ளார்கள்? எவ்வளவு நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த திட்ட தகவல்கள் பகிரங்கமாக, உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். இதற்கென குறித்த கால அட்டவணை ஒன்று பகிரங்கப்படுத்த வேண்டும்.

2. இந்த பேரனர்த்தத்தினால் பாதிக்கபட்ட குடும்பங்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் வரை பின்வரும் உடனடி கோரிக்கைகளை தங்களிடம் தாழ்மையாக முன்வைக்கின்றோம்.

  • நிரந்தர வீடுகள் கட்டித்தரும் வரை எமக்கு கௌரவமான தற்காலிக ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். பாதுகாப்பான, அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒவ்வொரு குடும்பங்களுக்கும் போதுமான இடவசதியுடான வேறான ஏற்பாடுகளாக இவை இருக்க வேண்டும். உணவு, குடிநீர், மலசல கூடவசதிகள் என்பன ஏற்றுக் கொள்ளக்கூடிய தரத்தில் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான  ஏற்பாடுகள் இருக்க  வேண்டும்.
  • கல்வி மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தரப்படல் வேண்டும். குறிப்பாக 2014 டிசம்பர்    மாதம் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான சிறப்புகு வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் யாராயினும் தமது உறவினர் வீடுகளில் தற்காலிமாக   தங்குவதற்கு விருப்ப தெரிவித்தால், அவர்களுக்கும் நிவாரண உதவித்திட்டங்களை  ஏனையோருக்கானது போலவே வழங்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை அவர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.
  • காணி திருத்துதல், வீடமைத்தல், போன்ற திட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு (ஆண்ஃபெண்) வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • உயிர் மற்றும் உடமை இழந்தோர்க்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும். இவை பாதிக்கப்படடோரில் பெண்களுக்கும் சென்றடைவது உறுதி செய்யப்பட வேண்டும்.

3. இவ்வனர்த்தத்திற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களும், உயிரிழப்புக்களுக்கு தமது கவனயீனம் மற்றும் பாராமுகத்தின் காரணமானவர்களுக்குமான அரச உத்தியோகத்தர்கள், தோட்டத் தொழிலாளர் கம்பனி மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக பாதிப்பின் பாரதூரத்திற்கேற்ப ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட வேண்டும்.

  • இது தொடர்பில் ஜனாதிபதியினால் கோரப்பட்ட பொலிஸ் விசாரணையில் எமது கருத்துக்கள் முழுவதுமாக கேட்டு அறியப்பட வேண்டும். அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். 
  • இது தொடர்பில் ஆழமாக சட்ட, நீதி, சமூகப் பொருளாதார, கலாசாரம் போன்ற பல்வேறு  கோணங்களிலும் ஆய்ந்தறிய எமது சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உரிய வல்லுனர்கள் உள்ளடக்கிய  குழு ஒன்றை அமைத்து அவ்வறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
  • எமது பிரதேசம் மற்றும் எம்மை அண்டிய ஏனைய பிரதேங்களில் உள்ள அனர்த்த ஆபத்துக்கள் குறித்த தகவல்களை எமக்கு அறியத்தரவும்.
  • அனர்த்த ஆபத்துக்கள் தொடர்பில் நாம் சென்று தகவல் பெறவும், அபாயங்கள் இருப்பின் அவற்றை அறிவிப்பதற்குமான கட்டமைப்பு, நபர்கள் அவர்களுடைய தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை எமக்கு அறியத்தரவும்.

நன்றி.
இங்ஙனம்

மீறியபெத்த வாழ் தோட்ட மக்கள்

பிரதி: 1. மாண்புமிகு ஜனாதிபதி
2. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
3. கௌரவ மாகாண எதிர்கட்சி தலைவர்
4. மலையக கட்சி தலைவர்கள்

தகவல் - ப.விஜயகாந்தன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates