மலையகமெங்கும் இன்று ஏற்பட்டுள்ள சொந்த வீடு சொந்த காணி என்ற மக்கள் எழுச்சி போராட்டம் மீறியபெத்தை மண்ணுக்குள் புதைந்த எமது இரத்த உறவுகளின் ஒட்டுமொத்த ஆத்மசக்தியாகும். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று மலையக மக்களின் சொந்த வீடு, காணி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் மாத்திரமே மீறியபெத்தை மண்சரிவில் கொல்லப்பட்ட எமது சொந்தங்களின் ஆத்மா சாந்தியடையும்.
யார் என்ன சொன்னாலும் மலையகம் முழுக்க மக்கள் மதத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சொந்த காணி, சொந்த வீடு உணர்வு சொந்த வீடு, காணி கேட்ட குரல் கொடுத்த அனைவருக்கும் பாரிய வெற்றியை தந்துள்ளது.
இதுவரைக்கும் மௌனித்து இருந்த நமது மலையக பெற்றோர், சகோதர, சகோதரர்கள் இன்று வீதிக்கு இறங்கி போராடத் தொடங்கிவிட்டனர். ஓட்டு போட சாராயம் பணம் கேட்கிறார்கள் என்று இழிவாகப் பேசப்பட்ட நம் சமூகம் இன்று வீதிக்கு இறங்கி சொந்த வீடு சொந்த காணி வேண்டும் என உரிமை குரல் எழுப்புகிறது.
இப்படி ஒரு அலை மலையகத்தில் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே எலும்புத் துண்டுகளை வாயில் கௌவிக் கொண்டு காட்டிக் கொடுக்கும் பிரிவுகள் உரிமைக்காக குரல் கொடுக்கும் மலையக இளைஞர், யுவதிகள், வெகுசன அமைப்புக்களை நோக்கி விட்டுக் கொண்டிருக்கும் அம்புகளை எல்லாம் தகர்த்து அச்சமின்றி உரிமைக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.
அந்த குரலுக்கு மக்கள் செவிசாய்த்து இருக்கிறார்கள். மலையக மக்களிடம் தாங்கள் வந்த வரலாற்றை கூறி அவர்கள் மத்தியில் மண் பற்று ஏற்படுத்த வேண்டும் என்றே மலையக தேசிய தைப்பொங்கல் என்ற மாபெரும் வெற்றிவிழாவை 'அடையாளம்” அமைப்பு 'மலையக சமூக ஆய்வு மையம்” ஆகிய சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்தின. அதன் பின் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை தாங்களே கோர வேண்டும் தொழிலாளர் தினம் என்றால் என்ன என்பதை உணர வேண்டும் என்ற நோக்கில் மலையகத்தில் முதல் தடவையாக ஹென்போல்ட் தோட்ட திறந்த வெளியில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சதிகாரக் கும்பல் ஆகியவற்றின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 'தொழிலாளர் மே தினம்' ஒன்றை நடத்தி அடையாளம் அமைப்பு தொழிலாளர்களை விழித்தெழச் செய்தது. இந்த தொழிலாளர் தினத்தில் சொந்த வீடு சொந்த காணி உரிமையை தேசிய குரலாக எழுப்ப அச்சமின்றி ஒத்துழைப்பு வழங்கிய ஹென்போல்ட் தோட்ட தலைவர் மாயழகு மோகன் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்கள் வெற்றி கண்டுள்ளனர்.
பின்னர் மலையகத்தில் தலைதூக்கி ஆடும் மது, வெளிநாட்டு வேலை, கலசார சீர்கேடு, அடிமைத்தனம் போன்றவை தொடர்பில் மக்கள் தெளிவுபெற வேண்டும் என ஆசிரியர் அருள்செல்வம் தலைமையில் வீதி நாடகக் குழுவொன்றை ஏற்படுத்தி தோட்டம் தோட்டமாகச் சென்று களப்பணி முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு உள்ளிட்ட உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெறும் இலக்கிய, சமூக விழிப்புணர்வு கூட்டங்களில் மலையக மக்களின் வீடு, காணி உரிமைகள் பற்றிய குரல் ஓங்கி ஒலித்தது. கவிஞர் மல்லியப்பு சந்தி திலகர், எழுத்தாளர் மு.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் இதற்காக உழைத்தனர்.
எல்லா நிகழ்வுகளிலும்; முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கை மலையக மக்களுக்கு சொந்த வீடு, சொந்த காணி வேண்டும் என்பதுதான். இன்று ஒட்டுமொத்த மலையகமும் அந்ம உரிமையை கோரி வீதிக்கு இறங்கியுள்ளது. மலையக மக்களின் இந்த எழுச்சியில் எவரும் அரசியல் குளிர்காய நினைக்கக்கூடாது. இதயசுத்தியுடன் செயற்பட்டு மக்களின் எழுச்சியை உரிமை போராட்டமாக உருமாற்ற வேண்டும்.
மலையக மக்கள் மீது உண்மையாக அக்கறைகொண்ட தலைவர்கள் இந்த மக்கள் எழுச்சியை தங்களது அரசியல் ஆயுதமாக எடுத்து பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி மலையக மக்களை சொந்த வீடு சொந்த காணியில் வாழ வைக்க போராட வேண்டும்.
இவ்வாறானதொரு போராட்டத்தை ஒரே இரவில் செய்துவிட முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் மக்கள் வழங்கும் வாக்கு பலத்தை கொண்டு சலுகை அரசியல் செய்யாது உரிமை அரசியல் பக்கமாக கவனத்தை செலுத்தினால் வீடு, காணி உரிமையை பெற்றுவிடலாம். அப்படி உரிமை அரசியல் செய்து மலையக மக்களை சொந்த வீடு சொந்த காணியில் வாழவைத்து மகிழ்ச்சி காணும் தலைவர்களை உழைக்கும் வர்க்கமான மலையக மக்கள் அரசியல் கடவுளாக வணங்கவும் தயார். கட்சி, தொழிற்சங்க பேதத்தை குப்பையில் வீசி எறிந்துவிட்டு ஒட்டுமொத்த மலையக மக்களும் காணி, வீடு என உரிமை போராட்டத்திற்காக ஒன்றிணைந்துவிட்டனர். அதுபோன்று தலைவர்கள் எப்போது ஒன்றிணையப் போகிறார்கள்..?
மீறியபெத்தை மண்ணுக்குள் புதையுண்டு போன எமது இரத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய மலையக மக்களாக மலையக மண்ணுக்காக ஒன்றிணைந்து தொடர்ந்தும் போராடுவோம். ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’ என்று எட்டுத்திக்கும் கேட்க முழக்கமிடுவோம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...