பிரிட்டிஷ்காரனால் 1826 ஆம் ஆண்டு முதலாவதாக இந்தியாவிலிருந்து 14 ஏழைக் குடும்பங்கள் அடிமைத்தொழிலாளராக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடிமைத் தொழிலாளர் இறக்குமதிப் படலம் ஆரம்பமானது. தென்னிந்தியாவிலிருந்து ஆசை வார்த்தைகள் கூறி கொத்துக்கொத்தாக பல குடும்பங்கள் இங்கு அழைத்துவரப்பட்டன. இதற்கு பிரிட்டிஷ்காரனுக்கு, இந்த மக்களிடையே இருந்த தரகர்களும் உதவினர். இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இன்ப வாழ்வை எண்ணி வந்த எத்தனையோ பேர் இடை வழியில் உயிரிழந்துமுள்ளனர்.
இவ்வாறு இங்கு அழைத்து வரப்பட்டவர்கள் 180 வருடங்களுக்கு மேலாக இன்னும் அபிவிருத்திகள் அற்ற, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தரப் பிரஜைகளாகவே பார்க்கப்படுகின்றனர். இம்மக்களின் சந்ததிகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றா இரண்டா? எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இந்த மக்களை இங்கு கொண்டுவந்துவிட்ட பிரிட்டிஷ்காரன் இந்த நாட்டை விட்டுப் போன பின்னர் இவர்கள் மீதான முழுப் பொறுப்பும் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சியாளர்களையும் தோட்ட நிர்வாகங்களையுமே சாரும்.
ஆனால் பிரிட்டிஷ்காரன் என்ன நிலைமையில் இந்த மக்களை விட்டுச் சென்றானோ அதே நிலைமையிலிருந்து மாற்றப்படாத, அபிவிருத்தியை காணாத சமூகமாகவே இவர்களை மேற் கூறிய பொறுப்பாளிகள் வைத்திருக்கின்றனர்.
150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட லயன் குடியிருப்புகளில் பாதுகாப்பற்ற வாழ்க்கை, உத்தரவாதமற்ற வாழ்க்கை, கொத்தடிமை தொழில் முறைமை, குறைந்த ஊதியம், கல்வியில் பாகுபாடு, தகுதியுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வியை தொடரமுடியாத நிலைமை, படித்த இளைஞர்கள் தோட்டத் தொழில் துறைக்குள் செல்ல வேண்டிய நிலை, அரச வேலைவாய்ப்பில் பாகுபாடு, படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு இல்லாமை, சுகாதார சீர்கேடு, பலவந்த கருத்தடை, போக்குவரத்துப் பிரச்சினை, காணி மற்றும் வீட்டு உரிமை மறுப்பு என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்நிலையில், இந்த நிலைமையில் உள்ள மக்களை அபிவிருத்திக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இந்த மக்களின் வாக்குகளால் உயர் சபைகளுக்கு செல்பவர்களுக்கு உண்டு. ஆனால் அவர்களின் செயற்பாடுகளோ இந்த மக்களுக்கு பிரச்சினைகள் ஏதும் கிடையாது என்பதைப் போன்றே உள்ளன. இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்ற போதும் மக்கள் பிரதிநிதிகள் அதில் அக்கறை காட்டாது இந்த மக்களுக்கு பிரச்சினை ஏதும் கிடையாது என்ற வகையில்தான் செயல்படுகின்றனர்.
இத்தனைகாலம் அவர்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் தவறியிருக்கலாம்.
ஆனால் இனியும் தவறவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன் மூன்று சந்ததியினர் மலையக மக்கள் சமுதாயத்திலிருந்து உருவாகிவிட்டனர். அவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை எனும் சுமையுடன் வாழ்வதை எவரும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் வந்துவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை மற்றைய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் ஏதேனும் வழியில் முயன்று தமது மக்களுக்கு எப்படியாவது உதவி செய்ய முடியுமா என முயற்சித்துப் பார்க்கின்றனர். அதற்காக ஜனாதிபதி வேட்பாளராக வருபவருக்கு நிபந்தனைகளை விதித்தே தமது ஆதரவுகளை வழங்கத் தீர்மானிக்கின்றனர்.
அவர் அந்த நிபந்தனைக்கு இணங்கும் பட்சத்தில் அவருக்கு தேர்தலில் ஆதரவை வழங்க முன்வருகின்றனர். ஆனால் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களோ அவ்வாறு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. நிபந்தனையின்றி தற்போதைய ஜனாதிபதிக்கே ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலேயே அவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.இப்போதைய அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பிரதிநிதிகள் 5 பேர் இருக்கின்றனர்.
இவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையின்றி ஆதரவை வழங்கவுள்ளனர். எனினும் இதுவரை அவரிடம் தமது மக்களுக்காக நிபந்தனை எதனையும் முன்வைத்ததாக தெரியவில்லை. மலையக மக்கள் மத்தியில் எண்ணிலடங்கா பிரச்சினைகள் காணப்படும் நிலையில் அவற்றில் எந்தவொரு பிரச்சினையையாவது தீர்க்கும் வகையில் நிபந்தனைகளை முன்வைத்து அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சித்திருக்கலாம்.
ஆனால் இந்த மக்கள் பிரதிநிதிகளோ நிபந்தனைகளற்ற ஆதரவை தெரிவித்து, மலையக மக்களுக்கு பிரச்சினைகள் எதுவும் கிடையாது; சகலதும் தீர்க்கப்பட்டுவிட்டன என்பதைப் போன்று செயற்படுகின்றனர்.
உண்மையில் ஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களை ஏதேனும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை தவறவிடும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது. ஜனாதிபதியினால் எத்தகைய பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதுடன் பல்வேறு அபிவிருத்திகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கான வாய்ப்பிருந்தும் மலையக மக்கள் பிரதிநிதிகள் அதனைத் தவறவிடுவது, தங்களை நம்பி வாக்களித்து உயர் சபைகளுக்கு அனுப்பிய மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.
அரசாங்கத்துடன் இருக்கும் 5 மலையக மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் அமைச்சர் என்பதுடன் மூவர் பிரதி அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்கள் தமது பதவிகள் தொடர்பாக மாத்திரம் கவனம் செலுத்துவது போன்றுதான் தெரிகின்றது. இந்நிலையில் அமைச்சரான ஆறுமுகன் தொண்டமான், நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்தால் மாத்திரம் கேட்பது கிடைத்து விடுமா? என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உண்மையில் நிபந்தனையை முன்வைத்து அதில் முயற்சித்துப் பார்க்காது இவ்வாறான கருத்துகளைக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
தற்போது மலையகமெங்கும் காணியுடன் வீடு வேண்டும் என்ற போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்தை செலுத்தச் செய்து மலையகத்தில் புதிய வீடமைப்புத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை துரிதப்படுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவர்கள் செயற்பட்டிருக்கலாம். ஆனால் எதனையும் செய்யாது நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாகக் கூறுவது எந்த வகையில் நியாயமாக அமையும்? பாராளுமன்றத்தில் தான் மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதில்லை. அப்படி முன்வைத்தால்தான் தீர்வு கிடைத்துவிடுமா என கூறுகின்றார்கள். அப்படியாயின் மற்றைய சந்தர்ப்பங்களையாவது அவர்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை. இது ஏன் எனப் புரியவில்லை. மலையக மக்களின் வாக்குகளால் உயர் சபைகளுக்கு சென்ற பிரதிநிதிகளே இந்த விடயம் தொடர்பாக நீங்கள் சிந்திக்க வேண்டும். அழுத்தம், கொடுக்காது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வையோ, எந்த அபிவிருத்தியையோ பெறமுடியாது. ஜனாதிபதித் தேர்தல் சிறந்த சந்தர்ப்பமாகும். அதனை மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்துங்கள்.
அற்ப சலுகைகளுக்காக உங்களை உயர் பீடத்திற்கு அனுப்பிய மக்களை மறந்துவிட வேண்டாம். அப்படி மறந்து செயற்பட்டால் அது அந்த மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
நன்றி - தினக்குரல் 22.11.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...