பல்வகைப்பட்ட சமூகப் பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் மனித சமூகங்களின் இருப்பிடமாக உலகம் இயங்கி வருகிறது. இதற்கு மாறாக, இந்தப் பன்மைத் தன்மைகளை நிராகரித்து குறித்தவொரு சமூகப் பண்பாட்டு விழுமியத்தை தராதரமாகக் கட்டமைப்பதும் நிகழ்ந்து வருகிறது.
ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் அல்லது ஏற்படுத்தப்பட்ட ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புபவர்கள் தங்களது சமூகப் பண்பாட்டு விழுமியங்களை “நாகரிக”மானதெனவும் ஏனையவற்றை “அநாகரிக”மானவை “காட்டுமிராண்டி”த்தனமானவை எனப் பல்வேறு முத்திரை குத்தல்கள் மூலமாக இல்லாதொழிக்க முனைந்து கொண்டிருப்பர்.
“காலனித்துவம்” என்ற கருத்தாக்கத்தை விளங்கிக் கொள்பவர்கள் மேற்படி முனைப்பினதும், முன்னெடுப்பினதும் அரசியலைப் புரிந்து கொள்வர். “காலனித்துவம்” என அழைக்கப்படுகின்ற மேலாதிக்கம் வெளியே இருந்து மட்டும் வருவதல்ல, அது உள்ளிருந்தும் இயங்கிக் கொண்டிருப்பது. இது ஒரே காலகட்டத்தில் பல்வேறு தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருப்பது.
இத்தகையொரு பின்னனியில்தான் ஆலயங்களில் மிருகபலி கொடுத்தலை “நாகரிக” மற்றதெனவும் “காட்டுமிராண்டி”த்தனம் எனவும் இலங்கையின் தெற்கிலிருந்தும், வடகிழக்கில இருந்தும் ஒருசாராரால் கிளப்பப்படும் எதிர்ப்புக்கள் பற்றி உரையாட வேண்டியிருக்கிறது.
மக்களின் வழிபாட்டு முறைகள் பல்வகைத்தன்மை வாய்ந்தவை. அவற்றில் பலியிடுதலும் அல்லது பலி வழங்குதலும் ஒன்றாக இருந்து வருகிறது. பல்வகைப்பட்ட சமயங்களதும் ஆலயங்களிலும் பலிபீடங்கள் இருப்பதும் பலிகொடுப்பதும் நிகழ்ந்து வருகிறது.
இறைச்சிக்குப் பதிலாக “சோயா மீற்” கொண்டுவரப்பட்டிருப்பது போல குறியீடாகப் பலி கொடுத்தல் என்பதும் பலியிடுதல் என்ற உணர்வைத் தோற்றவைப்பதன், தக்கவைப்பதன் தேவையை அல்லது பலியிடுதல் என்பதன் தேவையிலிருந்து விடுபட முடியாத, நிராகரிக்க முடியாமையின் நிலமையையே சுட்டுவதாக இருக்கிறது.
மேலும் நம்பிக்கைகளின் பல்வகைத் தன்மையும் அந்த நம்பிக்கைகளை நிறைவேற்றும் நடைமுறைகளின் பல்வகைத் தன்மைகளையும் விளங்கிக் கொள்வது இந்த 21ம் நூற்றாண்டில் அடிப்பாடையானது. ஏனெனில் இதுவே மதமாற்ற நடவடிக்கைகளின் காரணமாகவும் இருந்து வருகிறது.
உள்ளுர் வழிபாட்டு முறைகள், பூர்வீக குடிகளின் வழிபாட்டு முறைகள் நாகரிகமற்றவை என்ற பெயரில் இப்பொழுதுஙகூட அவர்களது வாழ்க்கை முறைகள், வழிபாட்டு முறைகள் அழித்தொழிக்கப்படுவதன் மூலமாக உலகின் பன்மைத் தன்மை வாய்ந்த் சூழலுக்கு ஒத்திசைந்த அறிவுமுறைகள், திறன்கள், வாழ்க்கை முறைகள் என்பவை இல்லாமல் ஆக்கப்படுகின்றன. இந்த இடத்தில்தான் “நாகரிகம்” “உயர்பண்பாடு “ என்று கொள்ளப்படுவது எது? அதனைக் கட்டமைப்பவர்கள் யார்? என்பதை உரையாட வேண்டி இருக்கிறது. இந்த உரையாடல் இன்றைய காலத் தேவையாகவும் இருக்கிறது.
குறித்த ஒரு விடயம் பற்றி எதிர்க்குரல் என்பது உலக நிலவரங்களை விளங்கிக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் நேபாள இந்து வழிபாட்டு முறையில் மிருகபலி தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அத்துடன் இந்து அல்லாத மக்களது வழிபாட்டு முறைகளுள் இந்த மிருகபலியிடுதல் திணிக்கப்படுவதாகவும் இருக்கிறது.
எனவே குறித்த ஒரு மதத்திலுங்கூட பல்வேறு இடங்களிலும் பல்வேறு வழிமுறைகள் இருப்பதும் யதார்த்தமானது.
மேலும் குறித்த மிருக பலியிடுதல் வணிக நோக்கத்திற்குரியது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதும் கேள்விக்குரியது. பக்திச் சுற்றுலா ஆன்மீகச் சுற்றுலா எனப் பல்வகைப்பட்ட வழிகளில் தினசரி வழி;பாட்டு முறைகளும் வழிபாட்டு இடங்களும் வணிகமயப்பட்டிருக்கும் பின்னணியில் வருடமொருமுறை நிகழும் வழிபாட்டுக்கான மிருக பலியிடுதலை மட்டும் வணிகமாகக் காணுவது எந்த வகையிலான நியாயங்களைக் கொண்டிருக்கிறது என்பது சிந்திக்கப்பட வேண்டியது.
மேலும ஓவ்வொரு தெருமுனைகளிலும் அன்றாடக் காட்சிகளாக இறைச்சிக் கோழிகளை பகிரங்கமாகக் கொன்று கூறுபோடுவது மட்டும் கண்ணில் படுவதுமில்லை, கருத்துக்கு வருவதுமில்லை. சமூகங்களின் ஒரு பகுதியினர் தங்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் உணவுத் தேவைக்காக விலங்குகளைத் தயார் செய்வதை இன்னொரு பகுதியினர் மகாபாதகம் என எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் பன்நாட்டு உணவு நிறுவனங்கள் மிகவும் கோரமான முறைகளில் கோழிகளை மற்றும் விலங்குகளை வதைத்து வியாபாரம் செய்வது பல்வேறு வழிகளிலும் அறியப்படுத்தப்பட்டாலும்;;;; அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கப்பட்ட வரலாறு பொதுவாகவும் குறிப்பாக ஆலய மிருகபலி எதிர்ப்பாளர்களிடம் இருந்தும் வந்ததில்லை.
இன்றும், ஆராய்ச்சிக்களுக்கென உயிரினங்கள் சித்திரவதை செய்யப்படுவது கண்டுகொள்ளப்படுவதே இல்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோயிலில் மிருகபலி பற்றி தெற்கிலிருந்தும் வடகிழக்கில் இருந்தும் ஒரே நேர்கோட்டில் களம்பும் எதிர்ப்பும் என்பது மிருகங்கள் மிதான கருணை, கரிசனை என்பதன் பெயரில் முன்னெடுக்கப்படும் ஆதிக்க அரசியல் என்பதை எவ்வாறு நிராகரிக்க முடியம?
போருக்குப் பின்னான காலத்தில் இளம்பெண்கள் பலர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிணறுகளிலும், பொது இடங்களில், ஆலய வளாகங்களிலும் போடப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் யார்? சுவராசியான செய்தியாக வாசித்தும் பலியான பெண்களின் மீதே பழியையும் போட்டு எதுவும் நடவாதது போல் இருப்பவர்கள் யார்? என்பது சமூகத்தின் உறைப்பான கவனத்திற்குக் கொண்டு வருவது தேவையானது.
ஆடுகளுக்காக அழுது இரங்கும் மனங்கள் கேவலமான முறைகளில் அழித்தொழிக்கப்படும் சகோதரிகளுக்காக, புதல்வியர்களுக்காக இரக்கங்கொள்ளாமைளூ அவர்கள் ஆடுகள் , கோழிகளிலும் கீழானவர்கள் என்பதலா?
குரல் கொடுப்பதற்கும், மௌனம் காப்பதற்குமான தெரிவுகளுக்கு பின்னால் உள்ள அரசியல்தான் என்ன? மேற்குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்த உரையாடல்கள் அவசியமானவை. அவற்றை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்போம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...