சர்வதேசத்தின் கவனத்தை மலையக மக்கள்
மீது திருப்பிய கொஸ்லந்தை மீரியபெத்த அனர்த்தம் நிகழ்ந்து மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ளன.
கொஸ்லந்தை மக்கள் 200 வருடகாலமாக வாழ்ந்த ஒரு தேயிலைத் தோட்டமும் அங்கு அமைக்கப்பட்டிருந்த
தொடர் லயன் குடியிருப்புகளும் ஏனைய கட்டடங்களும் இருந்த சுவடு தெரியாமல் அழியுண்டுள்ளன.
அத்தோடு மலையக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதுடன், மீரியபெத்த தோட்டத்தில் வாழ்ந்த ஒரு
தொகுதி மலையக மக்களது வரலாறு மறைந்து போகும் அபாயகரமான சூழ்நிலையும் உருவாகியுள் ளது.
மண்சரிவு அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட
சோகம் மலையகத்திலிருந்து மறைவ தற்கு
முன்னரே நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில்
10 ஆயிரத்தை அண்மித்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது தொடர் லயன் குடியிருப்புகள், வாழ்விட, பிரதேசங்களில் ஏற்பட்ட மண் சரிவு அபாய நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து
பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மற்றும் பொதுக் கட்டடங்களிலும் உறவினர் வீடுகளிலும்
தஞ்சமடைந்துள்ளனர்.
மலையக மக்கள் வரலாற்றில் என்றுமில்லாதவாறு
இயற்கை அனர்த்தங்கள், தீபரவல்
போன்ற திடீர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உயிராபத்து அச்சத்துடன் வாழும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொடர் லயன் வீடுகளில் செறிந்து வாழும் இம்மக்கள்
அனர்த்தங்களின் போது ஒருசேர பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாவது வழமையான நிகழ்வாக
மாறிவிட்டது.
மலையக மக்கள் அனர்த்தங்களையும் உயிரிழப்புகளையும்
சந்தித்து வருகின்ற நிலையில், தனிவீட்டுக்
கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்ப
ட்டு வருகின்றன. தொடர் லயன் குடியிருப்பு முறை மாற்றப்பட வேண்டும், அதற் குப் பதிலீடாக தனிவீடுகள் அமைத்து
கொடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தொழிலாளர்களின் உள்ளங்களில் பதிவாகி, மக்கள் போராட்டங்கள் வலுப் பெற்று வருவது
மலையக அரசியல் தலைமைகளை சிந்திக்க வைத்துள்ளது.
தொடர் லயன் குடியிருப்பு முறைக்குப்
பதிலாக 10 பேர்ச் காணியில் தொழிலாளர் குடும்பங்களுக்கு தனிவீடுகள் அமைத்து கொடுக்கப்பட
வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊவா பிரஜைகள் ஒன்றியம், பதுளை மாவட்டத்தில் இயங்குகின்ற சிவில் அமைப்புகளையும் அரச சார்பற்ற
நிறுவனங்களையும் தொழிற்சங்கங்களையும் மற்றும் அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி
ஆர்ப்பாட்டமொன்றை பதுளை பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீரியபெத்த மண்சரிவு
அனர்த்தத்தில் உயிர்நீத்த சொந்தங்களுக்கு பதுளை மாவட்ட செயலகத்திற்கு அருகில்
அமைந்துள்ள புத்தர் சிலையருகே மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாடிவீட்டுத் திட்டம் மலையகத்திற்கு வேண்டாம், கௌரவமான தனிவீடும் 10பேர்ச் காணியும் தேவை என்பதை வலியுறுத்தி
கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், மீண்டும் பஸ்தரிப்பு நிலைய முன்றலுக்கு
வருகை தந்து கண்டனக் கூட்டமொன்றையும் நடத்தினர்.
இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரஜைகள்
ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுரேஸ் நடேசன், மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தை போன்று பாரிய மண்சரிவு அனர்த்தங்கள்
மலையகத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. மக்கள் உயிர் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மலையக மக்களின் வீட்டு முறை மாற்றப்பட வேண்டும். தனி வீடுகள்
அமைக்கப்பட 10 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும். மலையத்தில் மாடி வீடுகள் அமைக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாடிவீட்டுத் திட்டமும் லயன் குடியிருப்பு
முறையை ஒத்ததே. இத்திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம். சிவில் அமைப்புகள் மலையக மக்களுக்காகக்
குரல் கொடுக்க வந்துள்ளமையானது சாதகமான மாற்றமாகும். எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை
மாகாண முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கி தனிவீட்டு திட்டத்தை 10 பேர்ச் காணியுடன்
பெற்றுக் கொடுக்க சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்.
நிகழ்வில் கருத்து வெளியிட்ட விவசாய
தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி,
ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும்
வசிக்க வீடும், வாழ்வதற்குத்
தேவையான வசதிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் கூறுகின்றது.
1956 ஆம் ஆண்டு ஐ.நா. பிரகடனம் அனைவருக்கும் தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட
வேண்டுமெனக் கூறுகின்றது.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கம்உதாவ
உட்பட அனைத்து வீடமைப்புத் திட்டங்களிலும் மலையக மக்கள் உள்வாங்கப்படவில்லை.
அமைச்சர் விமல் வீரவன்ஸ பல்வேறு வீடமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
எனினும் அதிலும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இன்றைய அனர்த்தங்கள் தனி வீடுகளின் அவசியத்தை மலையக மக்களுக்கு உணர்த்தியுள்ளன.
மாடி வீடுகளோ தொடர்குடியிருப்புகளோ மலையத்திற்கு அவசியமில்லை, தேவை தனி வீடுகளே தேவை என்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடையே கருத்து வெளியிட்ட
லியோ மார்க்க ஆச்சிரம ஸ்தா பகர் அருட்தந்தை கீத பொன்கலன்,
மலையத்தில் ஏறத்தாழ 2 இலட்சம் குடும்பங்கள்
வாழ்கின்றன. ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச் காணி வீதம் வழங்கினால் 10 ஆயிரம் ஹெக்டேயர்
நிலப்பரப்பே தேவைப்படும். பெருந்தோட்டத் துறையில் பயிரடப்படா மல் 68.87 ஹெக்டேயர்
தரிசு நிலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
மாடிவீட்டுத் திட்டம் மலையக மக்களை
மீண்டும் லயன் குடியிருப்பு முறைக்கு தள்ளுகின்ற வியூகமாகவே பார்க்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு நிதி உதவியுடன் 2005ஆம் ஆண்டு வரை கிட்டத் தட்ட 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. இவ்வீடுகளுக்குரிய கடனை தொழிலாளர்கள்
வட்டியுடன் செலுத்தியும் அவர்களுக்கு அவ் வீடுகளுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள்
வழங்கப்படவில்லை. 2005–2012
வரை சுமார் 4200 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. இன்றைய தேவை தொழிலாளர்களுக்கு காணி
உறுதியுடன் கூடிய வீடுகளை அமை த்து கொடுப்பதாகும் என்றார்.
பதுளையில் சிவில் அமைப்புகள்
ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்ட கோரிக்கை
புதிய பரிமாணத்தை எட்ட வழி செய்துள்ளது. மலையகத் தொழிலாளர்களும் தமது கோரிக்கையை
தீவிரமாக வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் வெகு
விரைவில் மலையகம் தனிவீடுகளுடன் காட்சி தருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
(ஏ.டி.குரு)
நன்றி - வீரகேசரி 23.11.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...