Headlines News :
முகப்பு » , » மீரியபெத்த மாணவர்களுக்கான உளவள பயிற்சி செயலமர்வு

மீரியபெத்த மாணவர்களுக்கான உளவள பயிற்சி செயலமர்வு


கடந்த ஒக்டோபர் 29ம் திகதி பதுளை மாவட்ட கொஸ்லந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மீரியபெத்த மண்சரிவில் பாதிப்புற்ற மக்களக்காக நிவாரண உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் உலகெஙகும் இருந்து வந்து சேர்ந்த வண்ணமுள்ளன. பொருள் உதவிகள் ஒருபுறமிருக்க மனோரீதியாக பாதிப்புற்ற அந்த மக்களுக்கு ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளும் அவசியமாகவுள்ளன. குறிப்பாக பாதிப்புற்ற மக்களுள் இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களை அந்த மன நிலைக்குக் கொண்டுவருவதற்கும் பரீட்சை தொடர்பான வழிகாட்டல்களைச் செய்வதற்குமான தேவை இருக்கிறது. அத்தகையதொரு நிகழ்ச்சி கடந்த நவம்பர் 09ம் திகதி ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

'தேயிலை அன்னை' அமைப்பின் கருத்துருவாக்கத்தில், 'அடையாளம்' அமைப்பினரின் அனுசரணையுடன்;, இந்திய வம்சாவளியினர் அபிவிருத்தி அமைப்பின் இணை பங்களிப்புடன் உருவான இந்த நிகழ்ச்சியில் உளவளப் பயிற்றுவிப்பு வளவாளர்களாக எழுத்தாளரும் முகாமைத்துவ உசாத்துணைவருமான ம.திலகராஜா (மல்லியப்புசந்தி திலகர்) தலைமையில் விரிவுரையாளரும் சமூக ஆய்வாளரும் உளவளத்துறை பயிற்றுவிப்பாளருமான ஏ.பி.எம்.இத்ரிஸ், பயிற்றுவிப்பு முகாமையாளரும் ஊக்குவிப்பு உரையாளருமான எம்.முத்துக்கமார் ஆகியோர் விரிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினர்.

ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொஸ்லந்தை தமிழ் மகா வித்தியாலயம், பூணாகலை தமிழ் மகா வித்தியாலம், தம்பேத்தன தமிழ் மகா வித்தியாலய க.பொ.த சாதாரண தர மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். மண்சரிவில் நேரடியாக பாதிப்புற்ற மீரியபெத்த பாடசாலை மாணவர்கள் கொஸ்லந்த மற்றும் பூணாகலை பாடசாலைகளில் தற்போது கல்வியைத் தொடர்கின்றர். எல்லோருமாக இருநூறு மாணவர்கள் இந்த பயிற்சி செயலமர்வில் பங்கேற்றனர்.

ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருச்செல்வம் வரவேற்புரை வழங்கினார். 'தேயிலை அன்னை' அமைப்பின் நிறுவுனரும் நிகழ்ச்சியின் பிரதான ஒழுங்கமைப்பாளருமான சி.எஸ் கல்வியக ஆசிரியர் திவி தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்த செயலமர்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். மண்சரிவில் உயிர்நீத்த உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பயிற்சி செயலமர்வுக்கு தலைமைவகித்து எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர் நெறிப்படுத்தியிருந்தார். மௌனமாக அஞ்சலி செலுத்தும்போது உண்மையில் நாம் அவர்களை நினைக்கிறோமா எனும் கேள்வி எழுகிறது. எனவே அவர்களை நினைத்து ஒருமுறை மீண்டும் அஞ்;சலி செய்வோம் என தனது 'அழுதமலை' அஞ்;சலி கவிதையுடன் வாசிக்க கண்களை மூடி அஞ்சலி செய்த அனைவரும் ஒரு துளி கண்ணீருடன் உறவுகளுக்கு உருக்கமான தமது அஞ்;சலியை செலுத்தினர். 

தொடர்ச்சியாக வளவாளர்களை அறிமுகப்படுத்தியும் பாடல்கள், கவிதைகளைப்பாடியும் அதற்கான விளக்கங்களை வழங்கியும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்குவதாக உற்சாகமூட்டுவதாக செயலமர்வை நடாத்திச் சென்றார். 

'அடையாளம்' அமைப்பின் செயலாளர் பழனி விஜயகுமார் தமது அமைப்பு இத்தகைய செயலமர்வு ஒன்றினை நடாத்துவதற்கு நிதிப் பங்களிப்பு வழங்கி ஒத்துழைத்த சமூக ஆர்வலர்களான விராஜ் பிரசாந், மற்றும் நிரோஷன் உள்ளிட்ட நண்பர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அவர்களை அறிமுகப்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக அவர்கள் அன்பளிப்பு செய்த பயிற்சி புத்தகங்களை வழங்கிவைத்தார். 
நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, வருகை தந்த ஆசிரியர்கள், அதிபர்கள், வளவாளர்கள், எற்பாட்டளர்கள் அனைவரும் இணைந்து புத்தகங்களை வழங்கி உற்சாகமூட்டியமை மனதுக்கு நெகிழ்வாகவும் மாணவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது.

தெடர்ச்சியாக உளவள ஆலோசகரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு வாழைச்சேனை காகம் பதிப்பக நிறுவுனரும் எழுத்தாளருமான ஏ.பி.எம்.இத்ரிஸ் மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வை நடாத்தினார். மாணவர்கள் தமது கவலைகளை படிப்படியாக குறைக்கவும் கற்பதற்கான நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பரீட்சையில் வெற்றி கொள்ளவும் பல நுணுக்கமான விடயங்களை தனது பயிற்சியின்போது வழங்கியிருந்தார்.
அடுத்தாக பயிற்றுவிப்பு முகாமையாளரும் ஊக்குவிப்பு மேம்பாட்டு உரையாளருமான எம். முத்துக்குமார் மிகுந்த உற்சாகமான உரையொன்றை வழங்கியிருந்தார். நம் மனதில் நாம் உருவாக்கிக் கொள்ளும் 'டீபை Piஉவரசந' எனும் கனவினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அறிஞர் அப்துல் கலாம் கனவு காணுங்கள் எனும் வாக்கியத்தை வெறுமனே சொல்லவில்லை. அவர் கல்வி கற்ற திருச்சி ஜோசப் கல்லூரியில் பின்னாளில் எனக்கும் கல்விகற்கும் வாய்ப்பு கிடைத்தது. எமது கல்லூரியில் ஒரு மொடல் ரொக்கட் ஒன்று இருக்கிறது. அதற்கு முன்னால் எந்த நேரமும் அமர்ந்து அப்துல் கலாம் அவர்கள் யோசித்துக் கொண்டிரப்பாராம். 
ஒருமுறை அதிபர் வந்து நீ என்ன எந்த நேரமும் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாய் என கண்டிக்கும் பாணியில் கேட்க அதற்க பதிலளித்த அப்துல் கலாம் அவர்கள்: 'இல்லை இந்த ரொக்கட்டை பறக்க வைக்க முடியாதா என யோசிக்கிறேன்' என்றாராம். அன்றைய அவரது கனவு இந்தியாவுக்காக ரொக்கட் வடிவமைக்கும் விஞ்ஞானியாக அவரை உருவாக்கியிருந்தது. 
அதுபோல் நாமும் கனவு காண வேண்டும். இங்கே மாணவர்கள் சிலர் எதிர்காலத்தில் தாங்கள் அமைச்சராக வேண்டும் என கூறியமை வரவேற்கத்தக்கது. அரசியல் நமக்கானது. நாம் அதனை செய்யலாம். நமது மாணவர்கள் நாளை அமைச்சர்களாக வரும் கனவுதான் நாளைய நமது விமோசனத்துக்கு வழிவகுக்கும். அதேநேரம் நீங்கள் உங்களை நன்கறிந்த, உங்கள் நண்பர்கள் சகோதரர்களுக்கு வாக்களிக்கவும் பழக வேண்டும் என கலகலப்பான உரையை ஆற்றினார்.

இடையிடையே பாடல்களைப்பாடிய நெறிப்படுத்துனரான மல்லியப்புசந்தி திலகர் மாணவர்களையும் பாடல்களைப்பாட உற்சாகமூட்டினார். அதிபர் ஆசிரியர்களும் இந்த பாடல்பாடும் களத்தில் இணைந்து கொண்டனர். அனைத்து மாணவர்களும் கரகோஷம் செய்து கவலை மறந்தனர். 

தேயிலை அன்னை அமைப்பின் நிறுவுனரும் ஆசிரியருமான திவி மாணவர்களுக்காக பரீட்சை நுட்பங்களை மிகவும் காத்திரமாகவும் சுருக்கமாகவும் சுவாரஷ்யமாகவும் வழங்கினர். மாணவர்கள் மிகுந்த உற்சாகமாக இலகுவாக விடையளிப்பது தொடர்பாக கற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது. தமது தேயிலை அன்னை அமைப்பின் ஊடாகவும் ஒருபகுதி பயிற்சி நூல்களை வழங்கிவைத்தார். 

மாணவர்களுக்கான பகல் உணவுக்கான அனுசரணையை ஊவா மாகாண சபை உறுப்பினர் உருத்திரதீபன் வழங்கியிருந்ததோடு நிகழ்ச்சியின் இறுதியில் பிரசன்னம் ஆகியிருந்தார். 

மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. தமது நண்பர்கள் ஊடாக அதற்கான நிதிப்பங்களிப்பை வழங்கியிருந்த விராஜ் பிரசாந் இந்த நூல்களில் பயன்பெறுவதோடு அத்துடது வரும் மாணவர்களுக்காக இந்த நூல்களைப் பயன்படுத்த பாதுகாப்பாக வைத்திருங்கள் இது எமது உழைப்பினால் உங்களுக்காக அர்ப்பணிப்போடு வழங்கப்படும் உதவி. இதுபோல இன்னும் உதவி செய்ய காத்திருக்கிறோம் அதனை சரியாக பயன்படுத்த முன்வாருங்கள் என மாணவர்களை வேண்டிக் கொண்டார்.

பூணாகலை தமிழ் மகா வித்தியாலத்தில் இருந்து பங்குபற்றிய மாணவர்களின் போக்குவரத்து செலவுக்கான பணத்தினையும் அதிபர் மோகன் அவரிகளிடம் வழங்கிவைத்தார். பூணாகலை பாடசாலை அதிபர் மோகன் மற்றும் தம்பேத்தன பாடசாலை அதிபர் சுந்தர்ராஜ் ஆகியோர் நன்றியுரை வழங்கினர். 

இழப்பின் கவலையில் தோய்வுற்றிருந்த மாணவர்களுக்கு மீண்டும் உற்சாகமூட்டி தமது கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்க எடுக்கப்பட்ட நல்லதொரு முதல் முயற்சியாக இந்த செயலமர்வு அமைந்திருந்தது. எற்பாட்டார்களும் வளவாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். இது போன்ற காத்திரமான செயலமர்வுகள் பாதிப்புற்ற மக்களுக்கும் குழந்தைகளுக்கும் என தனித்தனியே நடாத்தப்படுவதற்கான தேவையுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

படங்களும் தகவல்களும் : யோகேஸ் - (அடையாளம்)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates