Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இந்திய வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74' ஒப்பந்தம் - என்.சரவணன்

இந்த ஆண்டுடன் இந்திராவும் – சிறிமாவும் இந்தியத் தமிழர்களை பங்குபோட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மக்களின் எந்த விருப்பையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்தியாவும் இலங்கையும் தம் விருப்பத்துக்கு, அவர்களின் அரசியல் இலாப உள்நோக்கங்களுக்கு இம் மக்களை பலியாக்கி அரை நூற்றாண்டு நினைவே இக்கட்டுரை.

அன்றைய அரசாங்கங்கள்  ஆதிக்க பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் அபிலாஷைகளை சரிகட்ட; இந்திய வம்சாவழி மக்களை துடைத்தெறிவது, அந்நியப்படுத்துவது, தனிமைப்படுத்துவது என்கிற வழிமுறையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வந்தன. அதன் நீட்சியாகத் தான் எப்பேர்பட்டேனும் எஞ்சியிருக்கும் இந்தியத் தமிழர்களை நாடு கடத்துவது என்கிற செயல்திட்டத்தின் அடுத்த கட்டத்தை சிறிமா அரசாங்கம் நிறைவேற்றியது. 

இந்திய வம்சாவளித்  தமிழர்களை களையெடுக்கும் நடவடிக்கையை நான்குக் கட்டங்களாக காணலாம்

  • 1931 சர்வஜன வாக்குரிமையை இந்திய வம்சாவளியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தியமை
  • 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற குடியுரிமை பறிப்பு.
  • 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குரிமை பறிப்பு.
  • 1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலமும், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மூலமும் விருப்பத்திற்கு மாறாக; பலாத்காரமாக நாடு கடத்தியமை.

70 களில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையில் நல்ல உறவு வலுப்பட்டிருந்ததை அன்றைய பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக சிறிமா பதவியேற்ற ஒரு வருடத்துக்குள்ளேயே நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சியை நசுக்க நேரடியாக இந்தியப் படைகளை அனுப்பி சிறிமா அரசாங்கத்துக்கு கைகொடுத்தது இந்திராவின் அரசாங்கம்.

1970 ஆம் ஆண்டு ஆட்சியிலமர்ந்த சிறிமா அரசாங்கம் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியோடு இரு ஒப்பந்தங்களை 1974 இல் செய்து கொண்டது. 

  1. இந்திய வம்சாவழி மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவது
  2. கச்சதீவை இலங்கைக்கு விட்டுகொடுப்பது

இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினையை தமது அரசியல் விளையாட்டரங்கில் ஒரு நெடுங்காலமாக பந்தாட்டத்தைத் தான் ஆடினார்கள் இந்த இரு நாட்டுத் தலைவர்களும். எப்படி பந்தாட்டத்தின் போது ஆடப்படும் பந்துக்கு; தன்னைப் பற்றிய சுய உரிமையும், தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை இல்லையோ அதுபோல இந்திய வம்சாவளி மக்களுக்கும் தம்மைப் பற்றிய முடிவெடுக்கும் உரிமை தமக்கு இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் மீதான தீர்மானம் அவர்களுக்கு வெளியில் தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் அபிலாசைகளுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவர்களின் தலைவர்களின் கருத்துக்களை கூட செவி சாய்க்கவில்லை. இந்திய வம்சாவளி மக்கள் நாயை பிடிப்பதைப் போல பெயர்ப் பட்டியல் பார்த்து தேடித்தேடி வேட்டையாடி பலாத்காரமாக அனுப்பப்பட்டனர். இது இலங்கையின் பேரினவாத சித்தாந்தத்துக்கும், பேரினவாத சக்திகளுக்கும் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறவேண்டும். 

இந்திய – இலங்கை உறவு

இந்தியா ஒருபுறம் சீனாவுடனும் எல்லைப் போரை சந்தித்து இருந்தது. பங்களாதேசை முன்னின்று பிரித்துக் கொடுத்ததால் பாகிஸ்தானுடனான பகையை மேலும் மோசமாக்கி இருந்தது. இந்த இரண்டு நாடுகளுடனும் இலங்கை நட்பு பாராட்டி வந்தது. இந்த நிலைமையை சரிகட்ட இலங்கைக்கு சில விட்டுக்கொடுப்புகளை செய்ய முன்வந்தது இந்தியா அதன் விளைவு தான் சிறிமா – இந்திரா ஒப்பந்தம். இந்தியா இறுதியில் கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது. 

1962ம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரின் போது இலங்கை பிரதமர் சிறிமாவோ சீனாவைக் கண்டிப்பார் அல்லது இந்தியாவுக்கு அனுதாபம் தெரிவிப்பார் என்று இந்திய பிரதமர் நேரு எதிர்பார்த்தார் சிறிமாவோ அப்படி ஒன்றும் செய்யவில்லை. கூட இருந்த இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு அப்படி கண்டிக்க இடமளிக்கவுமில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியும்,  மலையகத்தில் இருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இந்தியச் சார்பு நிலையை எடுத்ததோடு சீனாவை ஆக்கிரமிப்பாளர்களெனக் கண்டித்தன.

சிறிமாவோ பண்டாரநாயக்க மீண்டும் ஆட்சியிலமர்ந்த போது  அணிசேராக் கொள்கையை கடைபிடிப்பதாக கூறிக்கொண்டார். வங்காள தேசத்தை உருவாக்கிய 1971ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்க சிறிமாவோ அனுமதித்தார். இதைவிட இதே காலத்தில் இன்னொரு நிகழ்வும் ஏற்பட்டது. 

இந்திரா காந்தி அரசாங்கம் 1974 - மே 18 ந்தேதி தார்பாலைவனத்தில் பொக்ரைன் எனுமிடத்தில் அணுகுண்டு பரிசோதனையொன்றை செய்தது. அதன் மூலம் அணுகுண்டு வெடிப்பில் 6 வது நாடாக இந்தியா ஆனது. இதனால் வெளியான உலகக் கண்டனங்களை பாகிஸ்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தியா மீது பொருளாதார தடைகள் மெதுவாக ஆரம்பமாகின. இதை பயன்படுத்தி இந்தியாவை தனிமை படுத்த நினைத்த பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டு வர முயன்றது. அப்போது ஐ.நாவின் 15 தற்காலிக உறுப்பு நாடுகளின் தலைமை பொறுப்பில் இலங்கையும் இருந்தது. இலங்கையை சரிகட்டி அத்தீர்மானத்தை முறியடித்தது இந்தியா. 

இதற்கான பிரதியுபகாரமாகத் தான் இறு நாடுகளுக்கு இடையிலான நட்பும் விட்டுக்கொடுப்புகளும் நிகழ்ந்தன. கச்சத்தீவு இலங்கைக்கு 1974 யூன் 24 தேதி உடன்படிக்கை ஒன்றின் மூலம் பேசி முடிவெடுத்து. 1974 ஜீன் 28 ந்தேதி இரண்டு நாட்டு பிரதமர்களும் தங்களது நாடுகளில் ஒரே நேரத்தில் அறிவித்தார்கள்.

பங்கு பிரித்தல்

1964ம் ஆண்டு செப்ரெம்பர் 25ம் திகதி அளவில் இந்திய வம்சாவழியினர் 9,75,000 பேர் இலங்கையில் வாழ்ந்திருந்தனர். இவர்களில் 525,000 பேருக்கு பிரஜாவுரிமை வழங்க இந்தியா சம்மதித்தது. இலங்கை 300,000 பேருக்கு பிரஜாவுரிமை வழங்க சம்மதித்தது.  மீதி 150,000 பேரின் பிரஜாவுரிமை பற்றி கைச்சாத்திடப்பட்ட சிறீமா - இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் ஆளுக்குப் பாதியாக பங்கிட்டுக் கொள்வதென தீர்மானித்துக் கொண்டனர். இதன் படி 75,000 பேர் வீதம் இரு நாடுகளும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன. 

சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் வன்மையாகக் கண்டித்தபோதும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் கணக்கில் எடுக்கவில்லை. இதனை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாகப் பார்க்காமல், மாட்டு சந்தையில்  பேரம் பேசுவதைப் போல கணக்கு முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களினுடையதோ, மக்கள் பிரதிநிதிகளினுடையதோ விருப்பங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. அம் முடிவுகள் வலுக்கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டன. இதற்காக இந்தியாவில் அமையப்போகும் புதுவாழ்வு பற்றி கவர்ச்சிகரமான பிரச்சாரங்கள் செய்யப்பட்டபோதும் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

அவலம்

அப்போது இலங்கையில் இருந்த இந்திய வம்சாவழி மக்களில் 75 வீதமானோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தனர். எஞ்சியோர் பல்வேறு பட்ட வேலைப்பிரிவினர்களாக நாடு முழுவதும் விரவியிருந்தனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில் அவர்கள் எல்லோரும் தான் அடங்கினர். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்து வந்த இந்திய வம்சாவளியினரின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரும் இப்படி வலுக்கட்டாயமாக பிடித்து அனுப்பப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய பூர்வீகத்தையோ, தமிழ் நாட்டுத் தொடர்புகளையோ கூட அறிந்திராதவர்கள்.

இலங்கையில் பிறந்தும் பலர் எந்த குடியுரிமையும் பெறாதவர்கள். பின்தங்கிய பொருளாதார நிலை. குடியுரிமை இல்லாதவர்கள் என்பதால் வாக்குரிமையோ அரசியல் உரிமையோ கூட கிடையாதவர்கள். அவ்வப்போது நடக்கும் இனவாத தாக்குதல்களால் ஏற்பட்டிருந்த பாதுகாப்பின்மை, ஏனைய இலங்கையர்களுக்கு சமமாக கல்வி வாய்ப்பை பெறமுடியாத போக்கு, உரிய சுகாதார, மருத்துவ வசதிகளைப் பெறமுடியாத நிலை போன்ற காரணிகளால் விரக்தியுற்று இந்தியாவுக்கே சென்று விடலாம் என்கிற மன நிலையை வளர்த்துக் கொண்ட இவர்களில் திரும்பி விடலாம் என்கிற முடிவுக்கு வந்தவர்களும் இருந்தனர்.

இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் வந்த மூதாதையர்களுக்குத் தான் இந்தியாவைத் தெரிந்திருந்தது. இந்தியாவுக்கு அழைத்துவரும்போது இலங்கையைப் பற்றி எப்படி ஆசை வார்த்தைகளை காட்டி  அவர்களை அழைத்து வந்தார்களோ அது போல இந்தியாவில் அமையப் போகும் புதுவாழ்வு பற்றி கவர்ச்சிகரமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த புனைவுகள் எதுவும் எடுபடவில்லை. 

ஒரு வருடம் வெளியேறுவதற்கான கால அவகாசமாக கொடுக்கப்பட்டது. அதற்கு மேல் தங்கியிருந்தவர்களை அரசாங்கம் கைது செய்து நாடுகடத்தியது. இந்த காலப்பகுதியில், நாய்களை பிடித்துச் செல்வது போல பொலீஸ் ஜீப்புக்களில் ஏற்றி, உடுத்திருந்த உடுதுணியுடன் நாடுகடத்திய சம்பவங்கள் சர்வசாதாரணமாக இடம்பெற்றிருந்தன. அந்த பயணத்தின் போது கூட பியோன் முதல் பொதி தூக்குபவர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரிகள் வரை பலர், இம் மக்களை ஏமாற்றிப் பணத்தையும், பொருட்களையும் பிடுங்கிக் கொண்டனர்.

அப்படி நாடு கடத்தப்பட்டவர்களின் பயணத்தின்போது, குடும்ப உறவுகள் துண்டிக்கப்படுவதுதான் பெரும் சோகமாக இருந்தது. பிரஜாவுரிமை முடிவுசெய்யப்பட்டபோது தந்தையுடன் சேர்த்து பிரஜாவுரிமை பெற்ற குழந்தைகள் பயணம் செய்யும் காலத்தில் 18 வயதினைக் கடந்திருந்தால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைப்பதற்கு முன்பே பெற்றோர்களுக்கு வெளியேற வேண்டிய அறிவித்தல் வந்துவிடும். இதனால் தந்தையும் பிள்ளைகளும் பிரிய நேரிட்டது. சில நேரங்களில் கணவனை மனைவி பிரியநேரிடும். ஒரே குடும்பத்தில் ஒருவர் இலங்கைப் பிரஜாவுரிமையை கொண்டிருப்பார். இன்னொருவர் இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பார். அவர்கள் பிரிய நேரிடும். அந்தப் பிரிவின் சோகங்களை, அழுகுரல்களை 1970 – 1977 காலத்தில் மலையகத்தின் புகையிரத நிலையங்களான நாணுஓயா, ஹட்டன், நாவலப்பிட்டி, பதுளை போன்றவற்றில் தினமும் காண நேர்ந்தது. 

இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்கள் ஒரே பகுதியில் குடியேற்றப்படாமல் வேறு வேறு பகுதியில் குடியேற்றப்பட்டமையினால் தம்மை நிறுவனமயப்படுத்தி, குரலெழுப்ப முடியாதவர்களாக இருந்தனர். காலநிலை வேறுபாடுகளுக்கு முகம்கொடுக்கவும் இவர்கள் சிரமப்பட்டனர்.  

தொண்டமானுடன் இந்திராவும் இந்தியத் தூதுவரும் 

இதில் உள்ள உள்ள இன்னோர் கவலை தந்த விடயம் என்னவென்றால் அதுவரை நாடுகடத்தலுக்கு எதிராக பேசி வந்த தமிழரசுக் கட்சி (அப்போது தமிழர் கூட்டணியாக ஆகியிருந்தது) இந்த ஒப்பந்தத்தை வரவேற்றது. இறுதியாக 1972 இல் மல்லாகம் மாநாட்டுத் தீர்மானத்திலும், அதன் பின்னர் அரசாங்கத்துக்கு முன்வைத்திருந்த கோரிக்கையிலும் கூட இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் நாடற்றோர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக போற்றியது தமிழர் கூட்டணி. அப்போது தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அக்கூட்டணியில் இணைந்தே இருந்தது. 


கள்ளத்தோணிகளை விரட்டு

ஒவ்வொருமுறையும் இந்தியா வம்சாவளியினர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் போது சிங்கள பேரினவாத சக்திகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு இருந்த பலம் இந்தியா வம்சாவளி மக்களுக்கு இருக்கவில்லை. பிரபல சிங்களத் தேசிய பத்திரிகையான திவய்னவில் (18.01.2010) பலர் அறிந்த எழுத்தாளரான தர்மரத்ன தென்னகோன் எழுதிய கட்டுரையில் சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் தோட்டப்புற கள்ளத்தோணிகளுக்கு குடியுரிமையையும், வாக்குரிமையையும் வழங்கி தொண்டமானைத் திருப்திபடுத்தினர் என்கிறார். அதாவது இலங்கை 75,000 பேரைக் கூட எற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்றும்  அக்கட்டுரையில் வாதிடுகிறார். இவ்வாறு கள்ளதோணிகளை விரட்டும் படி கோருகின்ற பல நூல்களும் கட்டுரைகளும் ஆயிரக்கணக்கில் காணக் கிடைக்கின்றன. அவை சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்த்து விட வாய்ப்பாகியுள்ளன.

“இலங்கையின் பொருளாதார பிரச்சினையைத் தணிப்பதற்காகவே இந்திய வம்சாவழித் தொழிலாளர்களை திரும்ப பெற்றுக்கொள்ள சம்மதித்தோம்”

என்று முன்னால் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நியாயம் கற்பித்திருந்தார்.  50 களில் தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேரு கூறியதை அவருக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.  

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழி மக்களைப் பற்றிய பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது பிரதமர் நேரு இப்படி கூறினார். (9-4-1958).

"இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தின் பிரச்னையாகும். ஏனென்றால் இந்த மக்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்லர். இவர்கள் இலங்கைக் குடிமக்களே. இது அவர்களின் பிரச்னை. நம்முடைய பிரச்னை அல்ல. இலங்கையிலேயே பிறந்து அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாதது. இதை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ, தகராறாகவோ கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதவேண்டும்.'' 

இந்தியா செய்த துரோகம்

சிறிமா – இந்திரா ஒப்பந்தமானது இந்திய வம்சாவழித் தமிழர்களின் அரசியல் பலத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும் பலவீனப்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இரண்டாவது பெரிய தேசிய இனமாக உருவெடுத்து வந்த இம் மக்களின் தொகையை இந்த நாடுகடத்தலின் மூலம் செயற்கையாக அழித்ததன் விளைவாக மூன்றாம் இடத்துக்கும் இறுதியில் சனத்தொகையில் இன்று நான்காவது இடமாகவும் அருகி. அதிலும் பெரும்பாலானோர் இன்று இலங்கைத் தமிழர்களாக தங்களைப் பதிவு செய்ததன்  மூலம் தேசிய இன அடையாளத்துக்கான தகுதியையே இழக்கும் நிலையில் உள்ளனர்.

இந்நிலமையினால் பல்வேறு வழிகளிலும் தேசிய இனத்தின் ஆதாரமாகக் கொள்கிற நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றைச் சிதைக்கக் காரணமாக அமைந்தது. குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள் இலகுவாக அமைக்கப்படுவதையும், பெருந்தோட்ட நிலங்கள் காடாக கைவிடப்படுவதையும், சிறுதோட்டக்காரர்களுக்கு நிலங்கள் பிரித்துகொடுப்பதையும் இந்த நாடுகடத்தல் மேலும் இலகுவாக்கியது. 

அந்த வகையில் இலங்கையின் பேரினவாத அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு இந்தியா துணைபோனது என்றே கூற வேண்டும்.

இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றில் இந்த நாடுகடத்தல் மிகப்பெரும் சோக நிகழ்வு. இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தினம் மலையகத் தேசம் துக்க நாளாகவோ, கருநாளாகவோ அனுஷ்டிக்க முன்வரவேண்டும். இருப்பதையும் இழக்காமல் இருக்கவும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை புதிய தலைமுறை புரிந்து கொள்ளவும் ஒரு விழிப்புணர்வு நாளாக ஆக்கப்படவேண்டும்.

நாடற்ற நிலை, குடியுரிமை பறிப்பு, நாடு கடத்தல்

  • 1926 குடித்தொகை கணக்கெடுப்பின்படி 12.7% த்தினர். இந்திய வம்சாவளியினர். அதாவது சிங்களவர்களுக்கு அடுத்ததாக சனத்தொகையில் பெரிய இனம்.
  • 1931 இல் ஐரோப்பியர் உள்ளிட்ட அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோதும் இந்திய வம்சாவளியினருக்கோ இலங்கையில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தவர்களுக்கே வாக்குரிமை என்று மட்டுபடுத்தப்பட்டது. கல்வியும், சொத்தும் வாக்குரிமைக்கான தகுதியாக இருந்ததால் ஐரோப்பியர்கள் இயல்பாகவே பெற்றனர்.
  • 1948 குடியுரிமைச் சட்டத்தின் மூலம் 700,000 இந்திய வம்சாவளி தமிழர்கள் கட்டுப்பாட்டு சட்டங்களால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 150,000 பேர் மட்டுமே 
  • 1964 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் நாடற்ற 300,000 பேருக்கு மட்டும் பிரசாவுரிமை வழங்கப்படுவதற்கும் 525,000 நபர்களை திருப்பி அனுப்பத தீர்மானிக்கப்பட்டது.
  • 1974 சிறிமா-இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் நாடற்றவர்களாக கைவிடப்பட்டிருந்த மேலதிக் 150,000 பேரில் 75,000 வீதம் இரு நாடுகளும் பிரித்துக் கொள்வதாக ஒபந்தம் செய்து கொள்ளப்பட்டது.
  • இறுதியில் இலங்கை குடியுரிமை நிராகரிக்கப்பட்ட 87,000 பேரை இந்தியா ஏற்றுக்கொண்டது.
  • இரண்டு ஒப்பந்தங்களின் கீழும் இந்தியா ஏற்றுக்கொண்ட மொத்த எண்ணிக்கை 612,000 ஐ எட்டியது.
  • 1988 இல் பாராளுமன்றம் 94,000 நாடற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.
  • 2003 இல் மீதமுள்ள நாடற்ற அனைவருக்கும் குடியுரிமை வழங்க சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் 
  • 300,000 க்கும் அதிகமானவர்களுக்கு இலங்கை குடியுரிமை சாத்தியமானது.

நன்றி - தினகரன் 30.12.2024


கொழும்பு தமிழர் பிரதிநிதித்துவத்துக்கு சங்கூதியவர்கள் யார்? - என்.சரவணன்


சுமார் ஒரு மாதகால இழுபறிகளின் பின்னர் மனோ கணேசன் தேசியப் பட்டியலின் மூலம் தெரிவாகிவிட்டார். சென்ற தடவை போல இம்முறையும் நூலிலையில் கொழும்பு தமிழர் பிரதிநிதித்துவம் தப்பியிருக்கிறது. அதுவும் இம்முறை தேசியப் பட்டியலின் தயவால். 2001 தொடக்கம் 2024 வரை மனோ கணேசன் சுமார் 18 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருக்கிறார். கொழும்பில் அதிக காலம் தமிழ் அரசியல் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருபவர் மனோகணேசன்.

அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதைப் பற்றி சூரியன் சேனலுக்கு அளித்த நேர்காணலில் “கொழும்பு தமிழ் மக்கள் பாரிய தவறிழைத்துவிட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

அவரே குறிப்பிடுவதைப் போல கொழும்பைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம்கள் (தேசியப் பட்டியல் உட்பட) தெரிவாகியிருக்கிறார்கள். கொழும்பின் சனத்தொகையில் முஸ்லிம்களை விட தமிழர்கள் அதிகம் இருந்தும் தமிழர்கள் தெரிவாகாததன் காரணம் தமிழர்களுக்கான அரசியல் தலைமை இல்லையென்பது தான். முஸ்லிம்களுக்கு குறிப்பான அரசியல் தலைமை கொழும்பில் இல்லாத போதும் அச்சமூகம் தம்மை ஒரு சமூகமாகவும், கூட்டாகவும் உணரச் செய்யும் கூட்டு மனநிலை வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

குறைந்தது மூன்று தமிழர் பிரதிநிதிகளாவது தெரிவு செய்யப்பட வேண்டிய கொழும்பில். ஒன்றுக்கே ஊசலாடும் நிலை ஏன் தோன்றியது. கொழும்பு பிரதிநிதித்துவம் தேசியப் பட்டியலில் யாசகம் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்ததன் வரலாறு எங்கு தொடங்கி எங்கு வந்தடைந்திருக்கிறது என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

2024 பொதுத் தேர்தலில் 225 ஆசனங்களுக்காக 22 மாவட்டங்களிலும் மொத்தம் 8,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பாக 5,564 பெரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 3,257 பெரும் இவ்வாறு போட்டியிட்டிருந்தனர்.

இதில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 27 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் 19 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன. ஆக தலா 21 வேட்பாளர்கள் வீதம் மொத்த 46 பட்டியலிலும் சேர்த்து மொத்தமாக 966 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதாவது நாட்டின் மொத்த வேட்பாளர்களில் 11% வீதமானோர் கொழும்பிலேயே போட்டியிட்டிருக்கின்றனர். இந்த 966 வேட்பாளர்களில் 66 வேட்பாளர்களே தமிழர்கள் என்பதை நம்ப முடிகிறதா? இது மொத்த வேட்பாளர்களில் 6.83% வீதமே. 

இதில் 19 பேர் 19 சுயேட்சைக் குழுக்களில் அடங்குபவர்கள். எஞ்சிய 47 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பாக போட்டியிட்டிருக்கிறார்கள்.

இவற்றில் கொழும்பில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரதான ஐந்து கட்சிகள்; அவர்கள் கொழும்பில் நிறுத்திய தலா 21 வேட்பாளர்களில் தமிழ் வேட்பாளர்கள் எத்தனை பேர் எனப் பார்ப்போம்.

கொழும்பின் 66 தமிழ் வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள். (அதைத் தனித்து இன்னொரு பார்ப்போம்). இன்னும் சொல்லப்போனால் கொழும்பில் மொத்த 966 வேட்பாளர்களில் 13 பேர் (1.35%) மட்டுமே தமிழ்ப் பெண்கள்.

கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும் என்பதற்கான தேவை உணரப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் பிரதான கட்சிகள் எவையும் இதன் தேவையை உணர்ந்ததாக இல்லை என்பதை மேற்படி தரவுகளில் இருந்தும் புரிந்து கொள்ளலாம். அதனை உணர்த்துவதற்கான அரசியல் சக்திகள் எதுவும் களத்திலும் இல்லை என்பது தான் அவலம்.

இலங்கையில் இனங்களாக எடுத்துக் கொண்டால், சிங்கள, தமிழ், முஸ்லிம், இந்திய வம்சாவழித் தமிழர் (இந்தியத் தமிழர்) என்கிற அடிப்படியிலேயே பதிவு பெற்ற தேசிய இனங்களாக கருத்திற் கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதில் இந்திய வம்சாவளியினரிலிருந்து, மலையகத் தமிழர்களாக பிரித்துக்கொண்டு விலகிச் செல்கிற ஒரு போக்கை சமீப காலமாக காணமுடிகிறது.

அவ்வாறு நிகழும் போது மேற்படி நான்கு இனங்களுக்குள்ளும் அடங்காத பிரிவினராக ஆக்கப்பட்டவர்கள் தான் மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்கள். இன்னும் சொல்லப்ப்போனால் வடகிழக்கும், மலையகப் பகுதிகளுக்கும் வெளியில் வாழும் லட்சோப (இந்திய வம்சாவழி) மக்கள் தமக்கான அடையாளமிழந்து நிற்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வாழ்வது மேல்மாகாணத்திலேயே.

இறுதியாக குடித்தொகை மதிப்பு எடுக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 11.5% வீதம் மட்டுமே கொழும்பின் தமிழர் சனத்தொகை என்கிறது. இதில் 1.5% வீதம் மட்டுமே இந்தியத் தமிழர் என்றும் ஏனையோர் இலங்கைத் தமிழர் என்றும் குறிப்பிடுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர் பலர் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தம்மை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்கிற பழக்கத்தைத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளலாம். அதுமட்டுமன்றி சிங்கள சமூகங்களுடன் கலந்துவிட்ட கணிசமான தமிழர் சிங்களவர்களாகக் கூட பதிவு செய்யத் தொடங்கி விட்டார்கள் என்கிற புதுப் போக்கும் அலட்சியப்படுத்துவதற்கில்லை. தற்போதைய கொழும்பின் தமிழர் சனத்தொகை நான்கு லட்சத்தை எட்டலாம் என்று ஊகிக்கலாம்.

வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திற்கும் வெளியில் அதற்கடுத்ததாக தமிழர்கள் அதிகமாக வாழும் மாகாணம் மேல் மாகாணம். அதிலும் கொழும்பில் அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் இந்திய வம்சாவளிப் பின்னணியையுடைய தமிழர்கள்.

கொழும்பைப் பொறுத்தளவில் பெருமளவு இந்திய வம்சாவளி மக்களும், வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து போருக்கு முன்னரும், போர் காலத்திலும் இடம்பெயர்ந்த தமிழர்களும், மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுமாக பெருமளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். கொழும்பு பல்லின மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுக்கிற பல தமிழ் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் உள்ள போதும். வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள சகல தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு இதுவரை காலம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் இ.தொ.க அதில் சிறிய அளவு பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது என்ற போதும் மலையகத்தில் தொழிற்சங்க அரசியலை செய்து கொண்டே அதற்கு வெளியில் இன்னொரு அரசியலையும் முன்னெடுப்பதில் வெற்றியடையவில்லை. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியில் அந்தந்த தளங்களில் அரசியலை மேற்கொண்டு வந்த சக்திகள் ஓரணி திரண்டு அப்படியான ஒரு தேவையை இனங்கண்டு அதனை ஒரு வேலைத்திட்டமாக முன்னெடுப்பதற்கான கூட்டணியை நிறுவின. அதன் விளைவே தமிழ் முற்போக்கு கூட்டணி. தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியைத் தோற்றுவித்தன. பெரும்பாலும் இந்திய வம்சாவளி பின்னணியைக் கொண்டவர்களை இலக்காகக்கொண்ட கூட்டணியாக இருந்தும் "இந்திய" அல்லது "மலையகம்" போன்ற பதங்களைக் கட்சிப் பெயரில் இணைத்துக்கொள்ளாததன் காரணம் பரந்துபட்ட அனைவரையும் இணைக்கும் நோக்கில் தான்.


மனோ கணேசன்

கொழும்பு பிரதிநிதித்துவத்துக்கான தேவை குறித்த விழிப்புணர்வும் 2000 வரை இருக்கவில்லை. இப் பிரச்சினையைச் சரியாக இனங்கண்டு அதனை ஒரு அரசியல் வேலைத்திட்டமாக முன்னெடுக்க எவருமற்ற சூழலில் தான் மனோகணேசனின் பிரவேசம் நிகழ்ந்தது. அதுவரை தமிழர்களின் வாக்கு வங்கி மோசமாகச் சிதறியே இருந்தது. பெரும்பான்மை கட்சிகளே அவர்களுக்கு இருந்த தெரிவாக இருந்தது. இ.தொ.க இந்த நிலைமையை சற்று மாற்றியிருந்தது. கண்டியைச் சேர்ந்த மனோகணேசன் கொழும்பு சூழலுக்கு புதியவரல்லர். மேல் மாகாணத்துக்கான தமிழர் அரசியல் விவகாரத்தை ஒரு கருத்தாக்கமாக விளங்கிக்கொண்டு அதற்கான இயக்கமொன்றின் தேவை குறித்தும் மனோகணேசனின் தரப்பு கருதியது.

இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் தான் மேல்மாகாண மக்கள் முன்னணி தொடக்கப்பட்டது. பின்னர் அது மேலக மக்கள் முன்னணியாக மாறியது. அதுவே அதற்குப் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியாகி இப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியோடு ஐக்கியமாகியிருக்கிறது. ஈற்றில் அக்கூட்டணி ரணிலோடும், சஜித்தோடும் கூட்டு சேர்ந்ததில் எந்த மேல்மாகாண தமிழர்களுக்கான அரசியல் இயக்கமாக ஆரம்பித்தாரோ அது கலந்து கரைந்து காணாமல் போய்விட்டது என்று கூறினால் அது மிகையல்ல.

மனோ கணேசன் 2001 இல் 54,942 விருப்பு வாக்குகளைப் பெற்று முதற் தடவை பாராளுமன்றத்துக்கு பிரவேசித்தார். 2004ஆம் ஆண்டு தேர்தலிலும் 51,508களைப் பெற்று வெற்றிபெற்றார். அதே தேர்தலில் ஐ.தே.க சார்பில் தியாகராஜா மகேஸ்வரனும் கொழும்பில் போட்டியிட்டு வெற்றியடைந்திருந்தார். 2010 தேர்தலில் மனோகணேசன் கொழும்பு மாவட்டத்தை விட்டு கண்டியில் போட்டியிட்டு 28,033 வாக்குகளை மட்டுமே பெற்று அங்கே தோல்வியடைந்தார். 

தேசியப்பட்டியலின் மூலம் ஐ.தே.க. பாராளுமன்றத்துக்கு அனுப்பும் என்கிற எதிர்பார்ப்பும் அப்போது கைகூடவில்லை. இந்த மூன்று தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான "ஐக்கிய தேசிய முன்னணி (UNF-United National Front)"யிலேயே அவர் போட்டியிட்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத இக்காலகட்டத்தில் 2011 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் மனோ கணேசனின் தலைமையில் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு 28,433 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அதே கட்சியின் சார்பில் மீண்டும் 2014 ஆம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற போதும் 28,558 வாக்குகளை மட்டுமே அவரால் பெற முடிந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டு சுமார் 69,064 வாக்குகள் பெற்று மீண்டும் பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றினார் மனோ கணேசன். இதுதான் இலங்கை வரலாற்றில் ஒரு தமிழ் வேட்பாளர் கொழும்பு மாவட்டத்தில் பெற்ற அதிகூடிய வாக்குகள். அதற்கான அரசியல் முனைப்பும், கட்சியின் திட்டமிட்ட பணிகளும் நிச்சயம் காரணமாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணங்களில் ஒன்று புதிய நல்லாட்சிக் கூட்டணியின் உருவாக்கமும் தான். இன்றைய தேசிய மக்கள் சக்தி அலைக்கு சற்று நிகரான அலை போல மகிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக எழுந்த அலையும் ந.ஐ.தே.மு.வின் வாக்குகளை அதிகரிக்கச் செய்திருந்ததையும் கணக்கில் எடுத்தல் அவசியம்.

அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக போட்டியிட்டு 62,091 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது நடந்துமுடிந்த 2024 தேர்தலில் வெறும் 19,013 வாக்குகளை மட்டுமே பெற்று கொழும்பு மாவட்டத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் அவர் இதுவரை பெற்ற வாக்குகளிலேயே குறைந்த வாக்குகள் இதுவாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பதவி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கக்கூடாது என்று பரவலான எதிர்ப்புகள் இருந்த நிலையில்; இறுதியில் அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார்.

இப்போதுள்ள கேள்வி அவர் யாரால் கைவிடப்பட்டார் என்பது தான். ஏன், எதற்காக படுதோல்வியடைந்தார். 

அகலக் கால் வைப்பு, தன் சொந்த மக்களுடன் அவர் இல்லாதது, ஊடக, சமூக வலைத்தள சுய ஊதிப்பெருப்பில் காட்டிய அக்கறையை அவரால் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கான அடித்தளத்தைப் பலப்படுத்துவதில் கிஞ்சித்தும் பணிபுரியவில்லை. நிவாரண அரசியலில் காட்டிய அக்கறை நிரந்தர அரசியலுக்கான கொள்கைவகுப்பை செய்வதிலோ, அதற்கான மக்கள் திரட்சியை ஏற்படுத்துவதற்கான மூலோபாய, தந்திரோபாய பணிகளின் மீது நிச்சயம் அவர் அக்கறை காட்டவில்லை. தனக்கடுத்த தலைமையை அவர் உருவாக்க அவர் விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டுடன் அவரை விட்டு நீங்கியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழ் முற்போக்கு முன்னணியில் மலையகத்துக்கான தனது பங்களிப்பைக் காட்டிய அளவுக்கு அதே முன்னணியின் தலைமையை கொழும்பு தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றிணைப்பதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

தமிழ் உறுப்பினர்கள்

கடந்த காலங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட மேல் மாகாண தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசையைப் புரிந்துகொள்ளாத நிலையிலேயே அரசியலில் குதித்தது. இந்திய வம்சாவளிப் பின்னணியைக் கொண்டவர்களின் வாக்கு வங்கி உண்டு என்கிற ஒற்றைப் புரிதல் மட்டுமே அவர்களிடம் இருந்தது.

கடந்த காலங்களில் கொழும்பில் தெரிவான அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐ,தே.க வின் தயவின்றி தெரிவானதில்லை என்பது கவனிக்கத்தக்கது. யானைச் சின்னத்துக்கும், பச்சை நிறத்துக்கும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் மலையக மக்கள் மாத்திரமல்ல. கொழும்பு வாழ் தமிழர்களும் தான்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்லச்சாமி 1989 ஒரு தமிழராக கொழும்பு மாவட்டத்தில் இ.தொ.க சார்பில் போட்டியிட்டுத் தெரிவானார். அதற்கு முந்திய 1977 தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார். ஆனாலும் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் உரிமை, பிரதிநிதித்துவம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் அரசியல்வாதி அவர் தான். இந்த இடைவெளியில் இ.தொ.கா.விலிருந்து பிரிந்து இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார். 1994இல் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இ.தொ.க வில் இணைந்து தேசியப் பட்டியலின் மூலம் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றம் சென்றார். ஆனால் 2001 தேர்தலில் தோற்றார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவாகி 2010 வரை அங்கம் வகித்தார்.

1994 பொதுத் தேர்தலில் கொழும்பிலிருந்து ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் கிடைத்த இரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட புலிகளின் தயவில் கிடைத்தது என வேடிக்கையாகக் கூறுவது வழக்கம். ஏனெனில் 1994 பொதுத் தேர்தல் முடிந்ததும் ஓரிரு மாதங்களில் தொட்டலங்கயில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடித்த குண்டைத் தொடர்ந்து கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற பிரதிநிதிகளான ஒஸி அபேகுணசேகர மற்றும் வீரசிங்க மல்லிமாராச்சி ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து; தேர்தலில் அவர்களுக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த பி.பி.தேவராஜ் மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் அதிருஷ்டம் கிட்டியிருந்தது. இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.

யோகராஜன் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்தார். ஆனால் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருந்த மாரிமுத்து இராஜினாமா செய்து கொண்டதால் யோகராஜனுக்கு அந்த இடம் கிடைத்தது. 2001 தேர்தலிலும் போட்டியிட்டு தோற்றுப்போனார். ஆனால் மீண்டும் அவர் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தெரிவானார். அதற்கடுத்த 2004 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2010 ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றம் சென்றார். ஆனால் 2015இல் கொழும்பு மாவட்டத்தை விட்டுவிட்டு நுவரெலியாவில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். யோகராஜன் இதுவரை எந்தவொரு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறாத ஒருவராகவே இறுதிவரை இருந்திருக்கிறார்.


சேர் பொன் அருணாச்சலத்துக்கு துரோகம்

கொழும்பு மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவ தேவை குறித்து இன்று நேற்றல்ல இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆரம்பத்தில் சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், அருணாசலம் மகாதேவா, எனத் தமிழர்கள் அன்றைய சட்டசபையில் படித்த இலங்கையரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அவர்கள் கொழும்பை மையப்படுத்தியே அரசியல் செய்தார்கள். சரவணமுத்து, நேசம் சரவணமுத்து ஆகியோரும் பிற்காலங்களில் கொழும்பில் பிரதிநிதித்துவம் வகித்தனர்.

வரலாற்றில் நேரடி தமிழ்த் தேசியக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தொடக்கம் கொழும்பு தான். இந்திய வம்சாவளியினரின் பழமையான தொழிற்சங்கங்கள் உருவானது இங்கிருந்து தான். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முதலில் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் வழக்கம் கொழும்பிலிருந்தே ஆரம்பமானது என்பதும் வரலாற்றுப் பதிவு.

1918 இல் இலங்கை தேசிய காங்கிரசை (Ceylon National Congress) அமைப்பதற்காக சேர் பொன் அருணாச்சலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இங்கு நினைவு கொள்வது அவசியம். சேர் பொன் அருணாச்சலம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றக் கூடாது என்றும் (கொழும்பை உள்ளடக்கிய) மேல் மாகாணத்துக்கென தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டில் அவ் ஒப்பந்தத்தை மீறியதுடன் 

"இலங்கை சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது" 
என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார்.

இதுவே முதலாவது தமிழர் – சிங்கள ஒப்பந்த மீறலாக பதிவு செய்யப்படுகிறது. சிங்களத் தலைவர்களிடம் முதலில் நம்பிக்கை இழந்துபோன சந்தர்ப்பமும் அது தான்.

ஆகவே நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே கொழும்புக்கான தமிழர் பிரதிநிதித்துவ கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது என்பதும், நூறாண்டுகளாக தீர்க்கப்படாத சிக்கலாக தொடர்ந்து வருவதும் நிதர்சனம்.

70களின் பின்

கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட சதி அன்று மட்டுமல்ல அதற்குப் பின்னரும் பல தடவைகள் மேற் கொள்ளப்பட்டன. சோல்பரி அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் தேர்தல் தொகுதி கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி எனத் துண்டாடப்பட்டன. 1977க்கு முன்னர் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் அமுலிலிருந்த போது சிறுபான்மை இனத்தவர்கள் பாதிக்காது இருப்பதற்காகக் கொழும்பு மத்தியானது பின்னர் பல அங்கத்தவர் தொகுதியாக (மூன்று) (Multi member contituencies) மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் அதனால் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 1947 இலிருந்து ஒரு பிரதிநிதியும் கொழும்பு மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டதில்லை.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் திட்டத்தின் மூலம் முன்னைய தொகுதிவாரி பிரதிநிதித்துவமும், பல அங்கத்தவர் தொகுதி முறையும் நீக்கப்பட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விகிதாசார முறைமை கூட இது விடயத்தில் தமிழர்களுக்கு தீர்வையளிக்கவில்லை.

இது வரை காலம் கொழும்பில் தமிழர்களது வாக்குகள் தமிழரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருப்பது தெரியாததொன்றல்ல. ஆனால் சிங்களவர்களின் வாக்குகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லை, அல்லது விதிவிலக்குகளை கணக்கிலெடுக்கவில்லை. தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தமிழர்களால் சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் மத்திய வர்க்கத்தையும், கீழ் மத்திய தரவர்க்க உழைப்பாளர்களுமாவர். அரசியல் அனாதைகளாக ஆகியுள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் தமது இன அடையாளத்தை இழந்து சிங்கள இனத்துடன் கரைந்து போகும் அவல நிலை தூரத்தில் இல்லை. அவர்களுக்கான எதிர்கால அரசியல் வேலைத்திட்டம், கொள்கை, நிகழ்ச்சிநிரல், மூலோபாயங்களை தமிழ் அரசியல் வாதிகள் தவறவிட்டுவிட்டார்கள். மனோ கணேசன் போன்றோர் ஒன்றில் தாம் இந்நிகழ்ச்சிநிரலுக்குத் தலைமை தாங்கவில்லை என்று அறிவித்து விலகிநின்று மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அல்லது வேறு நிகழ்ச்சிநிரல்களில் அகலக் கால்வைக்காமல் இதன் பாரதூரமுணர்ந்து செயற்படவேண்டும்.

கொழும்பில் தமிழர்களை ஒன்றிணைத்து பிரக்ஞையூட்டுவதற்கான  அரசியல் பணி தொடங்கிய வேகத்திலேயே முற்றுபெற்றது துயரகரமானது. ஆனால் மக்கள் மத்தியில் அந்த தேவை குறித்த போதிய விழிப்புணர்வு இன்னமும் போதியளவு ஏற்படுத்தப்படவில்லை. 

இலங்கையின் அரசியலில் இனத்துவ அரசியலும், பிரதேச அரசியலும் தவிர்க்க முடியாத அங்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களும், வேட்பாளர்களும் இந்த இன, பிரதேச அடிப்படையிலேயே வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். எனவே அரசியல் குரலுக்கான தேவையின் நிமித்தம் தமிழர்களையும் அந்த இன அடையாள அரசியலுக்குள் நிலைநிறுத்துவது தவிர்க்க இயலாததாகியுள்ளது. எனவே அந்த நுண்ணரசியலின் வழியிலேயே போய் சமகால தமக்கான அதிகார சமநிலையை வேண்ட வேண்டியிருக்கிறது.

நன்றி - தினகரன் 15.12.2024

இலங்கையில் நாடற்றவர் எதிர்காலம் ! - செ.வைத்திலிங்கம்

 

செ.வைத்திலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமன்றி ஒரு தமிழர் விடுதலைக்காக பல வழிகளிலும் தனது கருத்துக்களை உலகலாவிய ரீதியில் கொண்ட சென்ற ஒருவர். 1958 ஆம் ஆண்டு கலவரம் பற்றி அவர் எழுதிய "இலங்கையில் 16000 தமிழர் கப்பலேறிய கதை" நூல் 1966 இல் வெளியானது. அதில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றி எழுதிய பகுதி இது. பிற்காலத்தில் செ.வைத்திலிங்கம் இங்கிலாந்திலேயே குடியேறிவிட்டார். அவரைப் பற்றி தமிழ்ச் சமூகம் அவ்வளவாக பதிவு செய்தததாகத் தெரியவில்லை. ஆனால் அவரின் செயற்பாடுகளும், எழுத்துக்களும் போற்றத்தக்கவை.

இலங்கையில் நாடற்றவர்கள் எதிர்கால வாய்ப்பிலும் ஒரு துயருதவியும் இல்லை 

இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்களின் இடுக்கண் நிலை இலங்கையில் நாடற்றவர்கள் பிரச்சனையை எல்லோ ரும் தட்டிக் கழிப்பதும் தவருகக் கருதுவதும், இலங் கையில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் 62 பூர்வீகக் குடிமக்கள்! என்பதால், அஃதன்றி இன்று அல்லது பண்நெடுங்காலமாக இருப்பவர்களுடைய தந்தை தாத்தா அந்த தாத்தாலின் தாத்தாக்கள் கூட இந்திய துணைக் கண்டத்திலிருந்து சென்று குடியேறியவர்கள் தாம் அவ்வாறு இலங்கையிலுள்ள பல இலட்ச மக்களாகிய இந்திய குடிமக்கள் நிரத்தரமாக வாழ்ந்து வருபவர் எல்லாம் இலங்கையிலேயே பிறந்து-தேயிலை புதரிலும் ரப்பர் மரங்க ளிடையே வளர்ந்து வந்தவர்தாம். அத்தகையவருள் பல்லாயிரக்கணக்கானவர், அவர் தம் முன்னோர்களின் தாய அத்தைச் கண்டதுமில்லை - வந்ததுமில்லை என்பதைக்காட்டிலும், அவர்கள் கொழும்புக்கு வரும்போது (அதுவும் பண மிருக்கிறவர்களாயிருப்பின்) கடலைப் பார்க்கும் போது தான் அப்பக்கத்தில் தமது தாயகம் இருப்பதாக அறிந்திருப்பரே தவிர மற்றபடி அல்ல!

ஆனால், அவர்களுள் சிலர் சுற்றுப் பயணத்திற்கென் றும், புண்ணிய பயணம் செய்வதற்கென்றும், மதவழக்குப் படி தமது நோம்புக்காக கோயில்களுக்கு வருவதற்கென்று தென்னிந்தியாவிற்கும் வந்ததும் உண்டு அஃதும், அடை யாளச் சீட்டு அல்லது செல் சீட்டு (Pass Ports) கட்டளைப் படி--சட்டப் பிரிவுப்படி தவிர, ஆதீனம் அல்லது பண்ணை அடையாளச் சீட்டுக்கொண்டு வந்து செல்வதும்கூட ஆள் அடையாளச் சீட்டுக்கொண்டு வந்து செல்வதும் கூட தடை விதிக்கப்பட்டுவிட்டது அதன் மூலம், இலங்கை வாழ் இந்தியர்தம் மூதாதையர் காலந்தொட்டு வந்த தம் உறவுமுறை அத்துணையும் இழக்க வேண்டியதாயிற்று என்பதோடல்லாது அவர்தம் உழைப்பு முழுதையும், வாழ் நாள் இறுதிவரை இலங்கை மண் செழிப்புறவே காணிக்கை யாக்கினார்கள் என்றால் மிகையல்ல!

1949 ம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் குடிமை சட்டப்படியும், 1948-ம் ஆண்டின் குடிபுகல் - குடியேற்றம் சட்டப்படியும் இலங்கை வாழ் இந்தியர்கள் இந்தியா வுக்கும் இலங்கைக்கும் இடையே சென்று வருகின்றதை பெரிதும் தடுத்து விட்டன !

1952-ல் இந்திய பேரரசு ஆதின தொழிலாருக்கான சட்டத்தை கொண்டு வந்ததைக் கொன்டு ஆதின உரி மைச் சீட்டு பெற்று வந்ததுங்கூட இப்போது செல்லாததாகிவிட்டது. இந்தியாவுக்கு வரவேண்டுமாயிலும் 63 கொழும்பு நகரத்திலிருக்கும் இந்திய ஹைகமிஷனரிடமோ அல்லது இலங்கை குடிபுகல் கட்டுப்பாடு அதிகாரியிடமோ பயண அமைதி -உரிமைப் பத்திரம் பெறவேண்டியது அவசியமாகப்பட்டுவிட்டது அவ்வாறு பயண அனுமதி பத்திரம் வழங்குவதற்குக்கூட இலங்கை நிர்வாகத்துறை விரும்பவில்லை, ஒருகால அவ்வாறு வழங்கப்படுகின்ற பயண அனுமதி உரிமை பத்திரம் அவர்களை இலங்கை குடிமக்களுக்கு சமமாக கருத இடமளித்துவிடுமே என்ற உள்கருத்துடன்தான் அஃதும் வழங்கப்படாது மறுக்கப்பட்டன மற்றோர்புறம் இந்திய ஹைகமிஷன், தனது பாட்டாளி அல்லது அப்பாவி மக்கள் - அவர்களுடைய நியாயமான (பிரஜா) உரிமைகூட மறுக்கப்படுகின்ற நாட்டிற்கு அவர்கள் செலுத்துகின்ற - செலுத்தித்தீர வேண்டிய சுங்கத்தை தட்டிக்கழிக்க முடியாததைக் கண்டு பொறாதலால், போக மட்டுமே ஒரு வழி பயண அமைதி மட்டும் கொடுத்து வர முன் வந்தது இதன் பொருட்டே இலங்கை வாழ் இந்தியர் பெரும்பாலோர் இந்தியாவை கண்டறியாதவர் ஆயினர்.

1939 க்கு பிறகு இலங்கையில் புதிதாக வந்து குடியேறவில்லை.

மேலே குறிப்பிட்ட ஒரு துறை பயண அனுமதி சீட்டுகூட ஹை கமிஷன் கொடுக்க முன் வந்ததென்றால் இந்திய நாட்டுரிமையை வலுக கட்டாயமாக அல்லது தானாக முன்வந்து கோரியவர்களுக்கு, இந்திய நாட்டுரிமைமை பெற்றே தீரவேண்டும் என்ற முடிவு செய்துல் வதை மெய்ப்பிக்கும் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே இந்திய குடிமக்களின் கைத்திரன் பெற்றவர் மட்டும் (ஆதீனத் தொழிவாளர்) இந்திய குடியுரிமை கோரியவர்களுக்கும் இந்திய ஹைகமிஷன் ஒரு துறை பயண அனு மதிச் சீட்டு வழங்கியது. பெரும்பான்மையோர் மட்டும் உலகமெங்கிலும் [பேசப்படுகின்ற தமிழ் மக்களிடையும் தம்மிடையும் பல நூற்றண்டுகளாக வளர்ந்து உறவுகொண் டுவிட்ட பண்பாடு கலை -மதக் கோட்பாடுகள் தவிர. மற்ற தொடர்பு-உறவை துணித்துக் கொண்டு தமது வாழ்விடமாக இலங்கையை ஆக்கிக்கொண்டு நிலைத்துவிட்டனர்.

நாடற்றவர்கள் எனப்படும் இந்திய குடி மக்களுள் பெரும் பான்மையோர் குடியேற்றும் குடியுரிமை சட்டப்பிரகடனத்திற்குப் பிறகு, மேற்குறிப்பிட்ட சிறிதளவு உறவினையும் முழுக்க விடுத்தனர். மேலும், 1939-ல் திறனற்ற தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்புவதை தடை விதித்த பிறகு, புதியதாக இலங்கைக்கு வந்து குடியே றியவர்கள் யாரும் இல்லை! ஆகவே, இலங்கை தேயிலை ரப்பர் தோட்டத் தொழிலாளராகயிருக்கும் இந்திய குடி மக்கள் எல்லாம், குறைந்தது 1939 லிருந்தே தமது தாயகமாக்கிக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வருபவர்களாவர் என்பதை நாம் ஏற்றுத் தீரவேண்டும்.

மூவகை !

இலங்கைத் தீவில் குடியேறிய இந்திய குடிமக்களை பெருவாரியாக மூவகைப்படுத்தலாம். முதல் வகை இலங்கையிலேயே பிறந்து வளர்ந்து இந்தியாவுடன் தொடர்பு கொள்ளாது அங்கேயே வாழ் நாள் கழித்து வருபவர்கள் என்பதால் குடியுரிமை பெறும் தகுதி படைத்தவர்கள். இரண்டாம் வகை, இலங்கைக்கே தம்மை காணிக்கையாக்கிவிட நினையாது இருப்பவர்கள், தமக்கு குடியுரிமை பெறாதவர்கள் ! மூன்றும் வகை: கடைசிவரை இலங்கையிலேயே இருப்பதா அல்லது இந்தியா செல்வதா என்ற முடிவுக்கு வராதவர்கள்.

முதல் வகையினருள் 1949-ம் ஆண்டின், இந்திய பாக்கிஸ்தான் (தங்குகிறவர்கள்) குடியுரிமை சட்டத்தின் படி, எட்டு லட்சம் மக்களுக்குமேல் தம்மை இலங்கை குடியுரிமை பெற்றவராக ஏற்கக் கோரி மனுச் செய்துக் கொண்டதில் இரண்டு லட்சம் மக்கள் மட்டுமே இலங்கை குடியுரிமை பெற்றவராக ஏற்கப்பட்டனர். மற்றவர் நாடற்றவராக்கப்பட்டனர். இரண்டாம் வகையினருள் இரண்டு லட்ச மக்களுக்குமேல், இலங்கையிலிருந்து முடிவாக வெளியேறிலிட்டவர்கள் குத்துமதிப்பாக பார்த்தால் 60,000 லிருந்து 70,000 இந்திய குடிமக்கள் மட்டுமே இன்னும் அங்கு இருப்பவர்கள். 1948ல் கொண்டு வந்த குடிபுகல் குடியேற்றம் திட்டத்தின் கீழ், எதிர்வரும் நாளில் - அடுத்த சில ஆண்டுகளுள்- இந்த அறுபதிலிருந்து எழுபதாயிரம் பேர் மட்டுமின்றி மொத்தத்தில் 2 00,000 பேரை வெளியேற்றப்படவிருக்கின்றார்கள் ஆனால் இதற்கு இந்தியப் பேரரசு எந்த நியாய விசாரணையையும் மேற்கொள்ள முடியாது மொத்தத்தில் ஏனெனில் இந்திய பேரரசு இலங்கை அரசு விரும்பும் வரை இந்திய குடிமக்கள் அங்கே இருந்து வரலாம் என்ற இலங்கை அரசின் கோட்பாட்டுக்கு இணங்கிவிட்டது.

மூன்றாம் வகையினருள் குறைந்த சதவிகிதத்தினர் தாம் இலங்கைத் தீவில் படும் இன்னலை தாங்கொணாதபடியால் இந்திய குடியுரிமை பெற முனைந்தும் - பெற்று இந்தியாவுக்கே திரும்பவும் முயன்று வருகின்றனர் மீதமுள்ள வர்கள், குடியுரிமை பதிவு அதிகாரியினால் தமது இலங்ககை குடியுரிமை கோரிக்கையை மறுக்கப்பட்டதால் நாடற்றவர்களாக்கப்பட்டவர்கள்.

இன்றுள்ள சிக்கலான பிரச்னை எல்லாம், இலங்கையில் உள்ள இந்திய குடிமக்களுக்கு என்ன நேருமோ என் பதைக் காட்டிலும், அங்குள்ள 8,00,000 மக்கள் தம் குடியுரிமைப் பிரச்னையே ஒரு நிலையற்றதாக உள்ளதுதான். இலங்கையைப் பொறுத்தமட்டில் அவர்கள் இயற்றிய சட்டத்தினால் அங்குள்ள இந்திய குடிமக்களை நாடற்றவர்களாக்கிவிட்டது.

இந்தியாவைப் பொறுத்த மட்டில், மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசினராலேயே நாடற்றவர்கள் எனக் கருதி ஏதாவது செய்ய வேண்டுமென்பதுதான் இந்த எதிர்பார்த்தல் - இலங்கையில் நாடற்றவர்களாக்கப்பட்டவர், இந்தியக் குடியுரிமையையேனும் பெற்றளர்களாக கருதப்படாதவர்களாயினர் ஆகவே மேற்குறிப்பிட்ட மூவகை இந்திய குடிமக்கள்தாம் 'நாடற்றவர்கள்' எனப்படுபவர். இந்நிலைமை உறுவாகுமென்று இந்தியா அல்லது இலங்கையிலுள்ள யாரும் எந்த தலைவருமே எதிர்பார்த்ததில்லை பார்த்திருக்கமுடியாது! 1940-ம் ஆண்டு தொடக்கத்தில், குடியேற்ற அரசின் துணைத் தலைவரும், அரசவைத் தலைவருமாகவிருந்த காலஞ் சென்ற திரு, டி.எஸ் சேனநாயகா அவர்கள் டில்லியில் கூடி சந்தித்த குழுவிற்கு 65 தமை வகித்த சர்.கிரிஜா சங்கர் பாஜ்பாய் அவர்களுடன் தொடங்கிய பேச்சு வார்த்தையில் எடுத்த முடிவானது இலங்கையில் உள்ள இந்திய குடிமக்களுள் குறிப்பிட்ட எண்ணிக்கைவரை இலங்கை குடிமக்களாக்கிக் கொண்டு மீதமுள்ளவரை அவர்கள், பணி-தொண்டு இலங்கைக்கு தேவையில்லை என்னும்போது இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்பதாகும்! ஆனால் அந்த நிலமையை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை. காலஞ்சென்ற திரு சாலமன் டயஸ் பண்டாரநாயகாவின் 'புதிய சகாப்தம்' என்ற நூலில் 559.ம் பக்கத்தில் குறிப்பிடுள்ளார். அந்த, அந்த நோக்கம்தான் திரு. டி. எஸ். சேனநாயகாவால் 1953 மார்ச் திங்கள் 2-ம் தேதியன்று!

"எவ்வகையிலும் இலங்கையிலிருந்து நான்கைந்து லட்சம் மக்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று, இந்தியாவில் உயர் பதவிலிருந்தவர். 1940-ல் நடந்த பாஜ்பாய்-சேனநாயகா பேச்சில் கண்ட முடிவினை எடுத்துரைத்தார். காலஞ்சென்ற திரு. பண்டாரநாயகா! இந்திய துணைக் கண்டத்தில் மக்கள் தொகையுடன் இலங்கையில் நாடற்றவர்களாக கருதப்படும் மக்கள் கடலில் ஒரு துளி போன்றது எனலாம். அதே நேரத்தில் இந்தியர் திருப்பி அழைத்துக் கொள்ள மறுப்பதை மதிப்பதை போன்று இலங்கை சர்க்கார் தமிழர்களை அங்கேயே நீடிக்க வைத்திருப்பது தன் நாடு செழிப்புற! அந்த செழிப்புக்கு உழைக்க நாடற்றவர்கள் என்ற பெயரோடு மற்ற பெறவேண்டிய உரிமைகள் அனைத்தும் இழந்துவிட்டு இருக்க!

புதிய அரசியல் பண்பாட்டுப் பேரலையும்! இனிவரும் சவால்களும்! - என்.சரவணன்

 

“ஒரு மனநோயாளியின் கைகளில் இந்த நிறைவேற்று ஜனாதிபதவி கிடைத்து விட்டால் என்ன ஆவது?”

என்று அப்போது கேள்வி எழுப்பினார் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா.

சுதந்திரத்துக்குப் பின்னர் சுமார் 46 ஆண்டுகள் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் தான் நாம் வாழ்ந்திருக்கிறோம். இதற்கு முன்னர் அப்பதவியை வகித்த 8 பேரில் அப்பத்தவியை துஷ்பிரயோகம் செய்யாத ஜனாதிபதிகள் எவரும்  இல்லை. இவர்களில் ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகிய மூவரைத் தவிர ஏனைய ஐவரும் அந்த ஜனாதிபதிமுறையை நீக்குவதாக வாக்குறுதியளித்து அதற்கான மக்கள் ஆணையையும் பெற்று ஜனாதிபதியாக தெரிவான்வர்கள். ஆனால் அந்த நிறைவேற்று அதிகாரத்தில் ருசி கண்டு எவருமே அதை நீக்காமலே அதனை சுவைத்து அனுபவித்துவிட்டு ஓடிவிட்டவர்களே. அந்த மாற்றத்தை இவ்வாட்சியில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தோற்றம் பெற்றது. அடுத்த ஆண்டே அது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1951 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் 1956 ஆம் ஆண்டே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது. 2016 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜேவிபி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சுமார் 60 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

ஒருபுறம் அக்கட்சியை ஒரு கொம்யூனிசப் பேயாகவே சித்திரித்து வந்த வலதுசாரி தேசியவாத ஆட்சியாளர்கள் இரு முறை தடை செய்தார்கள். அதன் விளைவாக இரு முறை தலைமறைவு அரசியலுக்குள் தள்ளப்பட்டதுடன் இரு முறை ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

முதல் மூன்று தசாப்த காலம் அதிகார வர்க்கத்தின் நெருக்குதல்களுக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் பலியாக நேரிட்டது. அடுத்த மூன்று தசாப்தங்களாகத் தான் அரசியல் அழுத்தங்களையும் பாதுகாப்பு நெருக்கடிகளையும் எதிர்கொண்டபடி முற்றிலும் பாராளுமன்றவாதப் பாதையில் பயணித்து இறுதியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். 

தேசிய மக்கள் சக்தியின் இந்த வெற்றிக்கு அதன் கொள்கைகளும், உள்ளக வெற்றிகளும் மட்டும் காரணமில்லை. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, வீதிகளுக்கு வந்த மக்கள் பட்ட துன்பங்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அரகலய போராட்டம் என்பன இவ்வெற்றிக்கான முக்கிய உடனடிக் காரணங்கள் என்பது மறுப்பதற்கில்லை. மாறாக இலங்கையில் ஏனைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டக் கோரி இன, மத, வர்க்க, சாதிய வேறுபாடின்றி மக்கள் தந்த ஆணை என்றே இந்த அரசியல் மாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

உலக வரலாற்று சாதனை

மூன்றே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஒரேயடியில் 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான ஆட்சியை நிறுவியது. உலகில் வேறெங்கும் இப்படியான உதாரணங்கள் இல்லை.இதுவோர் பிரமாண்ட பாய்ச்சலே. இதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம். 

2/3 பெரும்பான்மை ஆபத்தா?

1977 தேர்தலில் ஜே.ஆர். அரசாங்கம் 5/6 பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது. 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தது. அந்த யாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதே விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை. இலங்கையின் வாக்களிப்பு மரபின் பிரகாரமும், இனப் பரம்பல் காரணிகளும் இனி ஆட்சியமைபவர்கள் எவரும் 2/3 பெரும்பான்மை பலத்தை பெறமுடியாதபடியான விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அந்த அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தினார். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதியொருவருக்கான உச்சபட்ச அதிகாரத்தையும் அந்த அரசியலமைப்பின் மூலம் நிறுவினார். அதன் பிரகாரம் அந்த அரசிலயமைப்பை மாற்றுவதாக இருந்தால் கூட 2/3 பெரும்பான்மை இன்றி மேற்கொள்ள முடியாது என்று ஜே.ஆர். மட்டுமல்ல பல அரசியல் வல்லுனர்களும் இதுவரை ஆரூடம் கூறி வந்திருக்கிறார்கள். அந்த ஆரூடத்தை சுக்குநூறாக்கியது தற்போது நடந்து முடிந்த 2024 தேர்தலில் தான். அந்த நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ஜே.ஆர். 1989 வரை ஆட்சி செய்தார்.

வரலாற்றில் இதுவரை 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த ஆட்சிகளின் போது தான் நாடு அதிக அராஜகத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், பல நாசங்களும் ஏற்பட்டுள்ளன. 70ஆம் ஆண்டு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த சிறிமா மேற்கொண்ட நாசங்களின் விளைவாகவே ஜே.ஆர். இலகுவாக 5/6 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடிந்தது. இந்த இருவர் ஆட்சியிலும் மேற்கொண்ட அதிகார அராஜகத்தின் விளைவாக இரு ஆயுதக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. போதாததற்கு தமிழர் பிரதேசங்களில் ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஜே.ஆரின் ஆட்சியின் போது 1980 யூலை  வேலைநிறுத்தத்தின் போது லட்சக்கணக்கானோரை அரச உத்தியோகங்களில் இருந்து நீக்கினார். பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால சட்டம் என்பவற்றை பயன்படுத்தி புதிய வடிவத்தினாலான அரச பயங்கரவாதத்துக்கு வழிவகுத்தார். 1982 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய பொதுத் தேர்தலை மேலும் ஏழு வருடங்களுக்கு தள்ளிவைத்தார். 83 யூலை படுகொலைகளை பின்னின்று புரிந்து விட்டு அதற்கு சம்பந்தமே இல்லாத மூன்று கட்சிகளைத் தடை செய்தார். தனது அராஜகங்களை மீறுவோரை இலகுவாக நீக்கும் வகையில் தனது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை முன் கூட்டியே கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டார்.

யுத்தத்தில் வென்றதை மூலதனமாக வைத்து 2010 தேர்தலில் 2/3 பெரும்பான்மை பலத்தை வென்ற மகிந்த ராஜபக்சவின் 2010 - 2015 வரையான  ஆட்சி காலப்பகுதியில் மகிந்த ஏற்படுத்திய நாசங்களின் விளைவுகளையும், ஊழல் அராஜகம், துஸ்பிரயோகம் என்பவற்றின் விலை இன்று முழு நாடும் அனுபவிக்கிறது என்பதையும் அறிவோம். அவ்வாட்சியில் மகிந்த ராஜபக்ச தனது 2/3 பலத்தைப் பயன்படுத்தி 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் தனது ஜனாதிபதி அதிகாரத்தை மேலும் அதிகரித்துக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை எதிர்த்த பிரதம நீதியரசர் ஒருவரை பதவி நீக்கியதுடன் விசேட பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஜனாதிபதி பதவிக்கான கால வரம்பையும் நீக்கியது. அவ்வாட்சியானது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சுயாதீன நிறுவனங்களையும் பலவீனப்படுத்தியது.

“இந்த நிறைவேற்று அதிகாரம் ஒரு பைத்தியக்காரனின் கரங்களுக்கு சென்றால் என்ன ஆகும்” என்று அன்றே கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா எச்சரித்திருந்தார். வரலாற்றில் அதை சகல ஜனாதிபதிகளும் மெய்ப்பித்திருக்கிறார்கள்.

தம்மிடம் 2/3 பெரும்பான்மை பலத்தைத் தந்தால் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதாகவும், நிறைவேற்றி ஜனாதிபதிமுறையை அகற்றுவதாகவும் கூறி கடந்த மூன்று தசாப்தங்களாக பல ஆட்சிகள் வந்து விட்டன. 2/3 ஐப் பெற்ற ஆட்சிகளோ அதனை செய்யவில்லை. 2/3 பெறாத ஆட்சிகளோ தம்மோடு ஏனைய கட்சிகள் சேர்ந்தால் தேசிய அரசாங்கம் அமைத்து அதனை செய்வதாக கூறின. அதுவும் நடந்ததில்லை.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மேலதிகமாகவே 2/3 ஐ விட அதிகமான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். ஒரு நெருக்கடி காலத்து அரசாங்கத்துக்கு இந்தளவு அதிகாரம் அவசியமானதே. தேசிய மக்கள் சக்தியே எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. புதிய அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருக்கிறார்கள். அது அவர்களே கூறிய “system change” க்கு எந்தளவு வாய்ப்பளிக்கப்போகிறது என்பதைத் தான் இப்போது அனைவரும் கவனித்து வருகிறார்கள்.

மறுபக்கம் எதிர்க்கட்சிகள் வலுவிழந்திருப்பது ஜனநாயக ஸ்திரத்தனமைக்கு ஆபத்தான சமிக்ஞை என்கிற கருத்தையும் பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ்?

1989 ஆம் ஆண்டு தேர்தலில் தான் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழான பாராளுமன்றத் தேர்தல் முதன் முதலில் நடத்தப்பட்டது. அதன் மூலம் தெரிவான முதலாவது ஜனாதிபதி பிரேமதாச. அதே விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் முதன் முதலில் நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலும் அவ்வாண்டு தான் நடத்தப்பட்டது.

மேற்படி விபரங்களின் பிரகாரம் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் இலங்கையில் முதன் முதலில் தனியொரு கட்சி அதிகப்படியான ஆசனங்களை வென்றது இந்த 2024 தேர்தலில் தான். 1977 இல் ஜே.ஆர். மொத்த ஆசனங்களில் 83.33 % வீதத்தை வென்றார். 2024 தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தம் 159 ஆசனங்களை (61.56% வீத ஆசனங்களை) பெற்றிருக்கிறது. 2010 (144), 2020 (145), ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியானது முறையே 144, 145 (64% வீத) ஆசனங்களைப் பெற்று கொண்ட போதிலும் அது தனியொரு கட்சி பெற்ற ஆசனங்கள் அல்ல. அது பல கூட்டணிக் கட்சிகளின் ஆசனங்களையும் உள்ளடக்கியதே.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 3% வீதத்தைப் பெற்றிருந்த அனுர குமார திசாநாயக்க ஐந்தே ஆண்டுகளில் 42% வீதத்தை தாண்டினார்.  ஒரு மாதத்தில் நடந்த பாராளுமன்றத்த் தேர்தலில் 3 ஆசனங்களில் (1.33%) இருந்து 159 ஆசனங்களை (70.67%) அடைந்தார்.  இந்தளவு குறுகிய காலத்தில் ஒரேயடியாகத் தாண்டிய எந்த ஒரு கட்சியும் உலகில் இல்லை என்றே கூறலாம். அதேவேளை சென்ற தேர்தலில் 145 ஆசனங்களைக் கொண்டு ஆட்சியமைத்திருந்த பொதுஜன பெரமுன இம்முறை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.

வாக்களிப்பு குறைந்தது ஏன்?

65.02% மக்கள் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். சுமார் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட (5,325,108) வாக்காளர்கள் வாக்களிப்பில் இருந்து தவிர்த்து இருக்கிறார்கள். அப்படியாயின் வாக்களித்தவர்கள் யார்? வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டவர்கள் யார்?

இந்தத் தேர்தலில் இதற்கு முன்னர் பிரதான கட்சிகளுக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிற அதேவேளை அவர்களில் எஞ்சிய பலரே வாக்களிப்பை தவிர்த்திருக்கிறார்கள் என்று பலர் கணிக்கிறார்கள். அதாவது இந்தப் பாரம்பரியக் கட்சிகளை வெறுத்தவர்களின் “விரக்தி வாக்குகள்” – “அதிருப்தி வாக்குகள்” – “அலட்சிய வாக்குகள்” என்றே கருத இடமுண்டு.

மேலும் இம்முறை யாரெல்லாம் தெரிவாக வேண்டும் என்பதை விட யாரெல்லாம் தெரிவாகக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருந்துள்ளனர்.

வரலாற்றில் முதலாவது இடதுசாரி அரசாங்கம்?

இலங்கையில் மிதவாத வலதுசாரி தேசிய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அதிகளவிலான கட்சிப் பிளவுகளையும், உடைவுகளையும் இடதுசாரிக் கட்சிகளில் தான் ஏற்பட்டுள்ளன. இத்தகைய இரு வேறுபட்ட பிளவுகளில் உள்ள வித்தியாசம் யாதெனில்; இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகளில் பெரும்பாலானவை கொள்கை ரீதியான வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டவையே. ஜேவிபி யும் கடந்த 60 ஆண்டுகளில் பெரிய சிறிய பிளவுகள் என பல்வேறு பிளவுகளை சந்தித்து வந்திருக்கிறது. அதையெல்லாம் தாண்டி அது தாக்குப்பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது என்றால் அது மகத்தான வரலாற்று வெற்றி என்றே கூறவேண்டும்.

மேலும் இலங்கையில் தற்போது உள்ள கட்சிகளிலேயே உயர்ந்தபட்ச கட்சி ஒழுங்கைக் கொண்டுள்ள முதன்மைக் கட்சியாக ஜேவிபியைக் குறிப்பிட முடியும். புதிய உலக ஒழுங்கின் கீழ் இடதுசாரிய மரபிலான; கறாரான கட்சி ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க முடிவதில்லை. இதனால் உலகம் முழுவதும் மரபான கட்சி விதிகள், கட்சி ஒழுக்கங்கள் என்பவற்றின் மீது தளர்வை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் சகல இடதுசாரி இயக்கங்களுக்கும் ஏற்பட்டிருப்பது உண்மையே. அந்தப் போக்குக்கு ஜேவிபியும் விதிவிலக்கில்லை. ஆட்சிகளை புரட்சியின் மூலம் கைப்பற்றுவதோ, அதனை தடையின்றி பேணுவதோ நவீன உலகில் கற்பனாவாதமாகவே நோக்கப்படுகிறது. பூர்ஷ்வா தாராளவாத முறைமைக்குள் கிடைக்கிற வெளியை தந்திரோபாய ரீதியில் கையாள்வதே இன்றைய இடதுசாரி இயக்கங்களின் முன்னால் உள்ள தெரிவாகும். அதன் மூலம் ஆட்சியமைக்க முடியும் என்று நிறுவிய முக்கிய தேர்தல் இதுவாகும். ஆனால் பூர்ஷ்வா அமைப்புடன் தற்காலிகமாக பல்வேறு சமரசங்களை தற்காலிகமாகவேனும் செய்துகொள்ள நேரிடும்.

இனப்பிரச்சினை: சமரசம்! சரணடைவு!?

அதேவேளை இத்தகைய பூர்ஷுவா அமைப்பு வெறும் வர்க்க அமைப்புடன் மாத்திரம் சமரசம் செய்துகொள்ள நிர்ப்பந்திப்பதில்லை. மாறாக பல்வேறு சமூக எற்றத்தாழ்வுகளுடனும், சமூகச் சிக்கல்களுடனும் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கும். உதாரணத்துக்கு இலங்கைச் சூழலில் மையப் பிரச்சினையாக பல தசாப்தங்களாக நீண்டு கொண்டிருக்கும் இனப் பிரச்சினையை அதே சமரசத்துக்குள் கொண்டு வைத்து விடுகின்றன. பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளை சவாலுக்கு இழுக்கும் துணிச்சல் தேசிய மக்கள் சக்திக்கு உண்டா என்றால் அது இல்லை என்றே உணர்ந்து கொள்ளலாம்.

அடிப்படை பேரினவாத கட்டமைப்புடன் மோதுண்டால் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவோ, அல்லது மீண்டும் அதிகாரத்துக்கு வரவோ முடியாது என்கிற கணிப்பை யதார்த்தமாக எவரும் உணர முடியும். பெரும்பான்மை வாக்கு என்பது சிங்கள பௌத்த தேசியவாத வாக்குகளே. அந்த சிங்க பௌத்த வாக்கு வங்கியை யார் தக்கவைத்துக் கொள்வார்களோ அவர்களாலேயே ஆட்சியைக் கைப்பட்ட முடியும் என்பதே இலங்கையின் தேர்தல் பண்பாட்டு மரபின் யதார்த்தமாக எஞ்சியுள்ளது. அவ்வாக்கு வங்கிக்கான போரை கூர்மை படுத்துவதற்காகவே பல தேசியக் கட்சிகள் தமக்குள் போட்டி போட்டு யார் சிறந்த சிங்கள பௌத்த தேசியவாதிகள் என்பதை நிறுவ முற்பட்டதன் விளைவே இலங்கையின் இனப்பிரச்சினையின் இன்றைய வடிவம்.

இன்று இலங்கை என்கிற தேசமானது சிங்கள - பௌத்த பேரினவாதமயப்பட்ட தேசமே. அரசு என்பது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பே. அதில் எந்த அரசாங்கம் பதவியேற்றாலும் அரசின் நிகழ்ச்சிநிரலையும், அதன் நீட்சி மரபையுமே பேணிக்கடக்கின்ற தற்காலிக சக்திகளே. தேசிய மக்கள் சக்தியும் அதில் விதிவிலக்காக ஆகப் போவதில்லை. ஆனால் இந்த அரசாங்கம் இதுவரை வந்த அரசாங்கங்களில் இருந்து வேறுபடும் ஒரே விடயம் கொள்கையளவில் இனவாதத்துக்கு எதிரான கொள்கைத் திட்டத்தைக் கொண்டிருகிறார்கள் என்பதும். அதற்குரிய ஒரு ஒழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தான் நமக்கு இருக்கிற ஆறுதல்.

அவர்களால் மத சார்பற்ற ஒரு அரசை நிறுவ முடியும் என்று நம்புவதற்கில்லை. சிங்கள பௌத்த தரப்பையோ, கட்டமைப்பையோ  திருப்திபடுத்தாமல் ஆட்சியை இலகுவாக கொண்டு செல்ல முடிவதில்லை. முன்னைய ஆட்சி முறைகள் கைகொண்ட சிங்கள பௌத்த ஆதரவில் இருந்து சற்று தளர்வுகளை சிலவேளைகளில் காண முடியும். பல முக்கிய அரச வைபவங்களில் மதச் சடங்குகளை தவிர்த்திருப்பதை கவனிக்க முடிகிறது. ஜனாதிபதியின் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது கூட வழமையான மத அனுஷ்டானங்கள், சடங்குகள் இருக்கவில்லை.


இன்றைய சிங்கள பௌத்த தேசியவாத வடிவம்

மக்கள் அரசாங்கத்தை மாற்றி இருக்கிறார்கள் அரசை மாற்றவில்லை. அரசுக்கு என்று சில இயல்புகள் உள்ளன. 1833 இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட அரச கட்டமைப்பு முறையானது பல யாப்பு சீர்திருத்தங்களுக்கு ஊடாகவும் நிர்வாக ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் பல மாற்றங்கள் கண்டு 1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கையர்களுக்கு கைமாற்றப்பட்டு வேறு வடிவம் பெற்று அரச கட்டமைப்பு இயங்கி வந்திருக்கிறது.

இனத்துவ, மதத்துவ, சாதிய, நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க ரீதியிலான பண்பாட்டுக் கூறுகளையும் தாங்கிக் கொண்டு தான் இந்த அரச கட்டமைப்பு தன்னை வளர்த்துக்கொண்டு வந்துள்ளது. இந்த இயல்பை முற்போக்குக் கூறுகளுடன் வளர்த்தெடுப்பது இலகுவானதல்ல. அதை மாற்றுவதற்கு நூறுவீதம் தயாராக இருக்கும் எந்த அரசாங்கத்தாலும் கூட அதனை மாற்றிவிட முடியாது. ஏனென்றால் 

அரச கட்டமைப்பின் இயல்புகளாக ஆக்கப்பட்டுள்ள அந்த நாசகர ஆதிக்க இயல்புகளோடு தன்னை வளர்த்துக்கொள்ள அதிக காலத்தையும், உழைப்பையும், சக்தியையும் செலவழித்திருக்கிறது.

அதை ஒரேயடியில் மாற்றும் மாயாஜாலர்கள் எவரும் இதுவரை நமக்கு வாய்த்ததில்லை. இனியும் வாய்க்கப் போவதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாதத்துக்கு ஒரு வடிவம் உண்டு, அதற்கு என தன்னளவில் வளர்த்து வந்த சித்தாந்தம் உண்டு. அதைக் கொண்டு இயக்க பல சிவில் அமைப்புகளும், கட்சிகளும் நிறுவனங்களும் உள்ளன. அதனை பலப்படுத்தவென சிவில் நிர்வாகத்துறை இறுக்கமாக உள்ளது. ஈற்றில் அது நிறுவனமயப்பட்ட ஒன்று என்கிறோம். அதை மாற்றுவதாயின் மீண்டும் பெரு விலை கொடுத்தே அக் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு தேசிய மக்கள் கட்சி குறைந்தபட்ச அடிப்படையையாவது ஏற்படுத்தும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். அத்தகைய ஆரம்பத்தை ஏற்படுத்துவதற்கான  பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல்.

கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியவர்கள் இதனை சரிசெய்யாமல் நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சியை  முன்நகரத்த முடியாது என்கிற உண்மையை உணர்த்த போதுமான சிங்கள சக்திகள் இல்லை. தமிழர் தரப்பும் துருவமயப்பட்டு சமரசத்துக்கு சற்றும் அருகில் நெருங்க தயாரில்லாத எதிர்ப்பரசியலை மட்டுமே செய்து வருவதை பெரும்போக்காகக் (mainstream) கொண்டிருக்கிறது. சமரசம் என்றால் சரணாகதி என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது. அரச தரப்பிடம் இருந்து சமரசத்தை எதிர்பார்ப்பது போலவே தமிழர் தரப்பிலும் விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராக வேண்டியது காலத்தி கட்டாயம். சமரசம் என்பது இரு தரப்பு நெகிழ்ச்சியையும் முன்நிபந்தனையாகக் கொண்டதே.

இனி வரும் நாட்களில் இனப்பிரச்சினை குறித்த அணுகுமுறைகளைக் கண்காணிப்பதும் அது குறித்த வினையாற்றலை செய்யும் கடமை சிறுபான்மையினருக்கு உரியது.

முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி விவகாரம்

தேசிய மக்கள் கட்சியை ஆதரித்த பல முஸ்லிம்கள் அமைச்சரவையில் முஸ்லிம் எவரும் தெரிவாகவில்லையே என்கிற அதிருப்தியை முன்வைத்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் முஸ்லிம்கள் அல்லாத அமைச்சரவை என்று விமர்சித்தனர். முஸ்லிம் ஆதரவாளர்கள் பலருடன் சந்திப்பை நடத்திய அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு பதில் அளித்த போது

“இதை வைத்து இனவாதிகளாக எங்களை விமர்சிக்க முயற்சிக்காதீர்கள். முஸ்லிம்களுக்கு நியாயம் கோரி பல தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் நாங்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பாடசாலை முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் உடைக்கான துணி வகைகளை வழங்கக் கோரி அமைச்சரவைப் பத்திரம் வழங்கியதும் சிங்கள நான் தான். முஸ்லிம் அமைச்சர்கள் அல்லர். முஸ்லிம் ஒருவர் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்றில்லை. இம்முறை  அம்பாறையில் முஸ்லிம்கள் எவரும் தெரிவாகவில்லை. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அங்கே அவசியம் என்பதற்காக தேசியப் பட்டியலின் மூலம் ஆதம் பாவா என்கிற ஒரு முஸ்லிம் உறுப்பினரை அங்கே தெரிவு செய்தோம். மேல் மாகாணத்துக்கான ஒரு கவர்னராக முஸ்லிம் ஒருவரையே தெரிவு செய்தோம்....” என்றார்.

அமைச்சரவை 25க்குள் சுருக்கப்பட்டுவிட்டதால் முக்கிய அமைச்சர்கள் கட்சியின் சிரேஷ்டர்கள், முக்கிய துறைசார் நிபுணர்கள் என்போரையே தெரிவு செய்ய நேரிட்டது என்றும் இன, மத அடிப்படையில் தெரிவான அமைச்சரவை அல்ல இதுவென்றும் இது விடயத்தில் பதிலளிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் நீண்ட கால தலைமை வகித்து வரும் பல சிரேஷ்ட தலைவர்களிடம் உங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லையே என்கிற கேள்வியை ஊடகங்கள் கேட்ட போது. எங்கள் கடமைகளை செய்ய அமைச்சுப் பதவிகள் எங்களுக்கு அவசியமில்லை. தேவைப்பட்டால் கட்சி தெரிவு செய்யும். என்றே பதில் அளித்து வருகின்றனர்.

இதேவேளை இனவிகிதாசாரம் பேணப்படவேண்டியதும் கூட சட்டப்படி அரசின் கடமையே என்பதை கடந்த கால அரசாங்கங்கள் தெரிந்தே தவிர்த்தன. இந்த அரசாங்கத்துக்கு அதை அழுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது.


"இது “சேர்” மாரின் அரசாங்கம் அல்ல. தோழர்களின் அரசாங்கம்."!

புதிய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தம்மை சேர் என்று அழைக்க வேண்டாம் என்றும் பெயர் கொண்டோ அலது தோழர் என்றோ அழையுங்கள் என்று தெரிவித்து வருகிறார்கள். சேர், மாண்புமிகு, போன்ற சொல்லாடல்களால் மேலே தூக்கி வைத்ததன விளைவே இதற்கு முந்திய ஆட்சியாளர்களை அதிகாரத்துவத்துக்கு இட்டுச் சென்றது என்று தெரிவிக்கின்றனர்.

இந்தத் தேர்தலும் புதிய ஆட்சியையும் ஒரு புதிய அரசியல் பண்பாட்டை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது என்றே பல நோக்கர்களும் தெரிவிக்கிறார்கள்.

புதிய அமைச்சரவையில் பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்து பேரைத் தவிர ஏனைய அனைவரும் அமைச்சரவைக்குப் புதியவர்கள். அந்த ஐவரும் 2004 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சியின் போது அமைச்சர்களாக சிறுது காலம் இருந்தவர்கள்.

தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் தமது சம்பளத்தை எடுப்பதில்லை என்றும், பொது நிதிக்கே அச் சம்பளத்தை வழங்குவது என்று தீர்மானித்து இருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் வசதிகள், சலுகைகள் பலவற்றை பெறுவதை தவிர்த்து இருக்கிறார்கள். இதுவரை ஒவ்வொரு உறுப்பினருக்கும், அமைச்சர்களுக்கும் என பாதுகாப்புக்கு பொலிசார், இராணுவம், உதவியாளர்கள், வீடு, பராமரிப்புக்கென ஏகப்பட்ட செலவுகள் எல்லாவற்றையும் அனுபவித்து வந்தார்கள். சேவை செய்ய வந்தவர்களுக்கு இத்தனை வசதிகள் தேவையில்லை என்பதே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை. அமைச்சர்களுக்கு கூட முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பல வசதிகள் கூட வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

கைத்தொழில் அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட அன்று சுனில் ஹந்துநெத்திக்கு வந்த ஒரு தோலைபேசி அழைப்பை தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அழைப்பென மகிழ்ச்சியுடன் நான் அமைச்சர் ஹந்துநெத்தி பேசுகிறேன் என்றபோது மறுமுனையில் கறாராக உங்கள் தொலைபேசி கட்டணப் பாக்கி 22 ஆயிரத்தைக் கடந்துவிட்டது நாளைக்குள் கட்டாவிட்டால் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்று எச்சரித்து விட்டு அப்பெண் வைத்து விட்டதாகவும். தனக்கு வந்த முதல் அழைப்பே இப்படித்தான் என்றும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி இருந்தார்.

எல் போர்ட் (L Borad) அரசாங்கம் என்று ரணில் சமீபத்தில் கேலி செய்திருந்தார். முன்னாள் தேர்தல் ஆணையார் மகிந்த தேஷப்பிரிய ஊடக மாநாட்டில் “கலியாணம் கட்டுவதற்கு முதல், அனுபவம் பெற்றுவிட்டு வரவேண்டும் என்கிறீர்களா?” என்று வினவியிருந்தார். இந்த அமைச்சர்கள் ஒரு கட்டுக்கோப்பான கட்சியின் கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவிற் கொள்வோம்.

அமைச்சரவையில் ராமலிங்கம் சந்திரசேகரனும் பிரதி அமைச்சர்களாக பதவியேற்ற பிரதீப், அருண் ஆகியோரும் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

பாராளுமன்றத்தில் 22 பெண்கள், தேசிய பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்புரிமை எல்லாம் புதிய ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டுக்கான தொடக்கம்.

இதுவரையான அரசாங்க மரபில் மாற்றமும் மறுமலர்ச்சியும், புதிய அரசியல் பண்பாடும் ஆரம்பிக்கிறது என்று உணர முடிகிறது. மக்களுக்கு இதுவோர் புதிய அனுபவம். இவ்வாறு சாத்தியமா என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இனி வருபவர்களுக்கும் ஒரு முன்மாதிரியான உதாரணமாக இந்த அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தேசிய மக்கள் சக்தியினர். 

நாம் எவரும் விரும்புகிற, நாம் எவரும் கனவு காண்கிற ஒரு ஆட்சியை எவராலும் ஏற்படுத்திவிடமுடியாது. ஒரு வித கனவு utopian மனநிலையில் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதை விட கடந்த 76 ஆண்டுகளில் காணாத முற்போக்கான - முன்னுதாரண மாற்றங்களைக் காண முடியும் என்றே ஊகிக்க முடிகிறது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் அது லேசானது அல்ல. அதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஏகாதிபத்தியம், கார்பரேட்டுகள், முதலீட்டாளர்கள், ஊழல் மாபியாக்கள் , வலதுசாரி தேசியவாத வங்குரோத்து அரசியல் எதிரிகள், இனவாதிகள், இதுவரை லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம், விரயம் என்பவற்றுக்குப் பழகிய சிவில் நிர்வாகத் துறை என ஏராளமானவற்றை எதிர்கொள்ள நேரிடும். இதுவரை இருந்த அரசாங்கங்கள் அத்தகையவற்றுக்கு சமரசம் செய்து கொண்ட -விலை போனவையாக இருந்தன.

அது இந்த அரசாங்கத்தில் நடக்காது. காரணம் இங்கே அத்தகைய நிலைமையை கண்காணித்து சரிசெய்யும் பொறிமுறை உண்டு. கடந்த காலங்களைப் போல அரசியல் லாபத்துக்காக கூட்டுக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களில் தங்கியிராத அரசாங்கம். தனிநபர்வாதம், அதிகாரத்துவம் என்பவற்றை கொண்டிராமல் கடமைக்கே முன்னுரிமை என்கிற அரசாங்கம். இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெருமளவு சலுகைகள் இராது. அவர்கள் ஊதியத்துக்கு வேலை பார்க்க வந்தவர்கள் அல்லர். கடமையை நிறைவேற்ற வந்த செயற்பாட்டாளர்கள். குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. அதனை சரி செய்வதற்கான பொறிமுறை அங்கு உண்டு என்பதே நமக்கு பேராறுதல். இந்த ஆட்சியானது ஒரு கட்டுக்கோப்பான கட்சிக்கு கட்டுப்பட்டது என்பது இலங்கை ஆட்சிமுறைக்கு புதியது என்பதை கவனிக்க வேண்டும்.

76 ஆண்டுகாலம் பொறுத்திருந்த நமக்கு இந்த ஐந்து ஆண்டுகளை சரியாக முறையாக செய்ய ஒத்துழைப்பை நாடியிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினரோ அடுத்த மாதமே வந்து ‘சொன்ன சொல் எங்கே...’ “தீர்வெங்கே...!”என்று அரசியல் செய்யத் தொடங்கி விடுவார்கள். அதற்குரிய ஒழுங்குக்கு அவகாசம் கொடுப்பதும் நமது கடமை. அதேவேளை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது நமது உரிமை. மக்கள் விரோத அரசாங்கமாக மாறினால் அதனை தூக்கியெறிவதையும் மக்களால் செய்ய முடியும் என்பதையும் இதே அரசாங்கம் தெரிவான முறைக்கு ஊடாக காட்டப்பட்ட சிறந்த உதாரணம்.

மக்கள் இதனை மறுமலர்ச்சி என்கிற வார்த்தை கொண்டு அழைக்கிறார்கள் பெருவாரி மக்கள். அந்த நம்பிக்கைக்கு நியாயம் செய்யுமா தேசிய மக்கள் கட்சி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

சில சிறப்பம்சங்கள்

  • இலங்கையின் சனத்தொகை 22 மில்லியன்கள். இதில் இம்முறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 17,140,354 அதாவது மொத்த சனத்தொகையில் 77.91%.
  • அதில் அளிக்கப்பட வாக்குகளின் எண்ணிக்கை 11,148,006. (மொத்த வாக்காளர்களில் 65.02%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 667,240. (அளிக்கப்பட்ட வாக்குகளில் 5.99%)
  • தெரிவு செய்யப்பவர்களின் கட்சிகளைச் சேர்ந்த 12 மற்றும் ஒரு சுயேச்சை குழு ஆகியவற்றுக்குமாக 10,457,009 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
  • எஞ்சிய 690,997 வாக்குகளும் தெரிவாகாத கட்சிகளுக்கும், சுயேட்சை குழுக்களும் வழங்கப்பட்டுள்ளன. இது சுமார் 6 வீத வாக்குகளாகும்.
  • 17,710 வாக்குகளைப் பெற்ற இலங்கை தொழிற்கட்சிக்குக் கூட ஒரு ஆசனம் கிடைத்திருகிறது என்றால் இப்பயன்படாத வாக்குகளின் பெறுமதியை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.
  • கடந்த 2020 தேர்தலில் இலங்கையிலேயே அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களில் முதலாவது இடம் மகிந்த ராஜபக்ச. அவர் 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இரண்டாம் இடத்தில் இருந்தவர் சரத் வீரசேகர. அவர் மொத்தம் 328,092 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.
  • மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த சரத் வீரசேகர இம்முறை முற்றிலும் குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.
  • இவ்வாறு கிட்டத்தட்ட இனவாதத்துக்கு நேரடி தலைமைத்துவத்தைக் கொடுத்து வந்த பலர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 167 பேர் இழந்துள்ளனர். புதிதாக 176 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு.
  • இலங்கையின் வரலாற்றில் முதற்தடவை அதிகளவிலான பட்டதாரிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தருணம்.
  • 1978 இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ் தனியொரு கட்சி மூன்றில் பெரும்பான்மை பெற்ற முதல் சந்தர்ப்பம்.
  • இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இடதுசாரி கட்சியொன்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
  • வரலாற்றில் முதற் தடவையாக தமிழர்களின் கோட்டையாக கருதப்படுகிற யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சியாக அல்லாத ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
  • முதற் தடவையாக 22 பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கிறார்கள்.
  • முதற் தடவையாக சானு நிமேஷா என்கிற திருனர் (இலங்கை சோசலிசக் கட்சி) தேர்தலில் பங்குபற்றியிருக்கிறார்.
  • முதற் தடவையாக பாராளுமன்றத்துக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி தமது தேசியப் பட்டியலின் மூலம் சுகத் வசந்த டி சில்வா என்கிற பார்வையற்ற பட்டதாரி ஒருவரே அவ்வாறு தெரிவு செய்தது. 

  • பொ.ஜ.மு – பொதுஜன முன்னணி
  • ஐ.ம.சு.கூ. – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
  • ஐ.தே.க – ஐக்கிய தேசியக் கட்சி
  • ஐ.ம.ச – ஐக்கிய மக்கள் சக்தி
  • ஸ்ரீ.ல.சு.க – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
  • ஸ்ரீ.ல.பொ.பெ – ஸ்ரீ லங்கா போது ஜன பெரமுன
  • ஜே.வி.பி. – மக்கள் விடுதலை முன்னணி
  • தே.ம.ச – தேசிய மக்கள் சக்தி
கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு சஞ்சிகையில் (ஒக்டோபர் 2024) விரிவாக வெளிவந்த இக்கட்டுரையின் சுருக்க வடிவம் 01.12.2024 அன்று வெளியான ஞாயிறு தினகரன் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. இரு ஊடகங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதிய அரசியல் பண்பாட்டுப் ப... by SarawananNadarasa

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates