Headlines News :
முகப்பு » » கொஸ்லந்தையிலிருந்து - ஆர்.நிர்ஷன்

கொஸ்லந்தையிலிருந்து - ஆர்.நிர்ஷன்


நாம் எமது சொந்த பந்தங்கள், உடன்பிறப்புக்களை இழந்து தவியாய்த் தவிக்கின்றோம். மண்ணுக்குள் புதையுண்டு போன எமது சொந்தங்கள், மண்ணோடு மண்ணாவதற்குள் ஒருமுறையாவது அவர்களின் முகத்தை பார்க்க, புதையுண்டவர்களை மீட்க உதவுங்கள் என கொஸ்லந்தை மீரியபெத்த மக்கள் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

கொஸ்லந்தை மீரியபெத்தயில் கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பாரிய மண்சரிவையடுத்து பெரும் எண்ணிக்கையான மக்கள் மண்ணுள் புதையுண்டு போனார்கள். எத்தனை பேர் இவ்வாறு புதையுண்டிருக்கலாம் என்பது தொடர் பில் துல்லியமான தகவல்கள் இதுவரை இல்லாத போதி லும் 192 பேர் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

இந்த நிலையில் மழை மற்றும் மண்சரிவு அபாயங்களுக்கு மத்தியிலும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் மேலும் கூறுகையில் , "ஒன்றுமறியாத பிஞ்சுக் குழந்தை முதல் தள்ளாடும் வயதிலுள்ள முதியோர் வரை நாம் பறிகொடுத்திருக்கிறோம். சாப்பிடுவதற்கு உணவில்லை என்றாலும் கூட நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். எமது பிள்ளைகள் எல்லோரும் சிட்டுக் குருவிகள் போல சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

அந்த சந்தோஷம் ஒற்றுமை எல்லாவற்றையுமே நாம் இழந்துவிட்டோம். சிறு பறவைக் கூட்டின்மேல் இடி விழுந்தது போல நாம் சிதறிப்போய்விட்டோம். குடும்பத்தில் பலரை இழந்துவிட்ட எமக்கு இனியேது சந்தோஷம்? எமது வேண்டுகோள் ஒன்றேயொன்றுதான். நாம் இழந்த உறவுகளின் முகத்தை ஒரு தடவையேனும் பார்த்து சோகங்களை சொல்லி அழுதுவிட வேண்டும்"

எமது தோட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதை நாம் அறிந்திருந்தோம். எனினும் தோட்ட நிர்வாகம் மாற்று இடங்களை வழங்குவதில் காட்டிய தாமதமும் அசமந்தப் போக்குமே இந்த பேரழிவுக்குக் காரணமாகும். மீட்புப் பணிகளில் கூடுதலானோரை ஈடுபடுத்தி தமது உறவுகளை துரிதமாக மீட்டுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என மேலும் குறிப்பிட்டனர்.

இந்த அனர்த்தத்தில் சிக்கியோர் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நம்பப்படுவதால் மண்சரிவில் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் பெருங்கவலையுடன் காணப்படுகின்றனர்.

பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் நிலையில் கூட இல்லாமல் உயிரிழந்தோரை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என கதறி அழுகின்றனர். துயரம் தாங்கமுடியாத பலர் உணவுகளைத் தவிர்த்து ஏக்கத்துடன் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

பெற்றோரை இழந்த பிள்ளைகள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுகயீனமுற்ற சிறுவர்கள், முதியோர்கள் முகாம்களிலுள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் பண்டாரவளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மண்ணில் புதையுண்டோரின் உறவினர்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மீரியபெத்தை தோட்டத்தை நோக்கி வருகைதந்த வண்ணமுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தைச் சூழ்ந்துநின்று கண்ணீர்மல்க இரவு பகல் பாராது அவர்கள் அங்கு காத்துக் கிடக்கின்றனர்.
மண்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதிலும் மாலை வேளைகளில் தொடர்ச்சியாக பெய்கின்ற மழை மற்றும் மலைகளிலிருந்து வழிந்தோடும் நீரோடைகள் காரணமாக அப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் சுமார் 35 அடி உயரமான மண்மேடு காணப்படுவதால் உடல்கள் சிதைவடைந்திருக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவித்தனர்.

முகாம்கள்
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மீரியபெத்த மக்கள் உட்பட மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேறிய மக்கள் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயம், பூணாகலை இலக்கம் 2 தமிழ் மகா வித்தியாலயம், கொஸ்லந்தை ஸ்ரீகணேசா தமிழ் வித்தியாலயம் ஆகிய மூன்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குரிய உணவுகள் பதுளை மாவட்ட செயலகம் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வழங்கி வருகின்றனர். கழிவறை வசதிகள், சுகாதார வசதிகள் ஆகியன செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த தோட்ட மேற்பிரிவு பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். இதேவேளை பூணாகலை எல்.எல்.ஜி, ஆர்னோல், மாகந்த,  எல்ல நியூபர்க் ஆகிய தோட்டப்பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தோர்
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்து 2 ஆயிரத்து 252 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக மாவட்ட செயலாளர் ரொஹான் கீர்த்தி திசாநாயக்க கேசரிக்குத் தெரிவித்தார்.
சீரான காலநிலை நிலவும்பட்சத்தில் அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதவிகள்
முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவிகள் வழங்குவதாயின் பதுளை மாவட்ட செயலகத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலர் ரொஹான் கீர்த்தி திசாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம். உதயகுமாரவை 0773957880 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளலாம்.

அதேவேளை பொதுமக்களால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகளில் சுகாதாரத் தன்மை குறித்து அவதானமாக இருக்குமாறும் மக்கள் உபயோகித்த உடுதுணிகளை முகாம்களுக்கு கொண்டு வர வேண்டாம் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி - வீரகேசரி 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates