இலங்கையின் இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கலைகளான காமன்கூத்து, பொன்னர் சங்கர், அர்ச்சுணன் தவசு ஆகிய மூன்று கலைகள் பற்றிய பார்வையின் பதிவாக மீரா எஸ்.ஹரீஸ் எழுதிய நூல் கொழும்;புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிறு மாலை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஊடகவியலாளரும் தர்மவாஹினி தமிழ்ப்பகுதி முகாமையாளருமான கே.பொன்னுத்துரையின் ஏற்பாட்டில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு இலங்கை கோப்பியோ நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தது.
சிறப்பு அழைப்பாளர்களின் மங்கல விளக்கேற்றல், திருமதி.வரதா யோகநாதனின் தமிழ் வாழ்த்துப்பாடல் என்பவற்றோடு விழா ஆரம்பமானது. வரவேற்புரையை கண்டி கலை இலக்கிய பேரவையின் தலைவரும் இலக்கிய செயற்பாட்டளருமான அ.இ.இராமன் வழங்கினார். தலைமையுரையாற்றிய பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எமது பாரம்பரிய கலைகள் பேணிப் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்ததோடு, ஒரு சாஸ்த்;திரிய நாட்டிய கலைஞரான ஹரீஸ் கிராமிய தோட்டப்புற கலைகளான காமன்கூத்து போன்ற கலைகளை தேடல் செய்து தோட்டங்களுக்கு சென்று தகவல் சேகரித்து எழுதியுள்ளமை பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
அடுத்ததாக நாடகக் கலைஞர் அந்தனிஜீவா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ஹரீஸ் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் தமிழ்நாட்டில் காமன்கூத்து போன்ற கலைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அங்கே சினிமா மோகமே இருக்கிறது. இலங்கை மலையகத்திலேயே காமன் கூத்து சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கோவை செம்மொழி மாநாட்டில் கூட மலையக கலைஞர்கள் காமன்கூத்தினை அரங்கேற்றி பெருமை சேர்த்தார்கள். அதற்கு வழிசமைத்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு நாம் நன்றியுடையவர்கள். மக்கள் கலையான காமன் கூத்தினை மேடைநாடக வடிவத்திற்கு நவீனப்படுத்தி நிலைபெறச்செய்த பெருமை அமரர் திருச்செந்தூரன் அவர்களையும் அவருடன் துணைநின்ற ஆளுமையான வி.டி.தர்மலிங்கம் ஆகியோரையே சாரும். மலையகப்பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்படும்போதுதான் இந்த பாரம்பரிய கலைகள் பற்றிய ஆய்வும் தேடலும் இன்னும் வலுவடையும் எனவும் தெரிவித்தார்.
வாழ்த்துரை வழங்கிய இலங்கை கோப்பியோ நிறுவனத்தின் தலைவரான கௌசிக் உதேசி , தான் தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தார். வடமாநிலங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கிருஸ்ணர் கலைகள் கொண்டாடப்படுவதுபோல் தென்னிந்திய மாநிலங்களுக்கென காமன்கூத்து, பொன்னர் சங்கர் போன்ற கலைகள் உள்ளன. அவற்றை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய வம்சாவளியினர் வாழும் இலங்கையிலும் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுவருவதும், இவ்வாறு அவை எழுத்தில் பதியப்படுவதும் பாhட்டத்தக்கது. அதனால்தான் கோப்பியோ இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க முன்வந்தது. நூலாசிரியருக்கும் ஏற்பாட்டு குழுவினருக்கும்; எனது பாராட்டுக்கள் என தெரிவத்தார். இலங்கை கோப்பியோ அமைப்பின் உப தலைவர் எம்.மாணிக்கவாசகம், கொழும்புத் தமிழ்ச்சங்க தலைவர் ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
நூல் பற்றிய அறிமுகவுரையை வீரகேசரி சங்கமம் பொறுப்பாசிரியர் செல்வி.ஜீவா சதாசிவம் வழங்கினார். இதுவரை காமன்கூத்து பற்றிய நூல்கள் எழுதிய, ஆய்வுகள் செய்துள்ள மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களையும் நினைவு கூர்ந்து, நூலாசிரியர் ஹரீஸ் மற்றும் அவரது நூலின் உள்ளடக்கம் பற்றிய அறிமுகமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது உரை அமைந்திருந்தது சிறப்பு.
நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் இலங்கை கோப்பியோ நிறுவனத்தலைவர் கௌசிக் உதேசி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இலங்கை கோப்பியோ சார்பில் நூலாசிரியருக்கு பொன்னாடை கௌரவம் வழங்கப்பட்டது.
நூலின் விமர்சனவுரையை தனது மலையக கலை, இலக்கிய பின்புலத்துடன் கவிஞர் சு.முரளிதரன் ஆற்றினார். இந்த நூல் ஒரு கலைஞனின் பார்வையாக இருக்கிறதே தவிர மலையக பாரம்பரிய கூத்துகள் பற்றிய ஆய்வு நூல் அல்ல என தெரிவித்தார். இந்த நூலில் பல மலையக கூத்து அண்ணாவிமார்கள், கூத்துகலைஞர்கள் மற்றும் கூத்து நிகழ்வுகள் பற்றிய ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பு. ஆனாலும் தகவல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது பற்றிய இணைப்பு சேர்க்கப்படாமை பெரும் குறையாகும் எனவும் தெரிவித்தார்.
கருத்துரை வழங்கிய கவிஞர் மேமன் கவி, இத்தகைய கலைகள் இடம்பெறும் சூழல் அதன் பின்புலம் இந்த கூத்துகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும் என பின்நவீனத்துவ பார்வையில் தனதுரையை வழங்கினார்.
மதிப்பீட்டுரை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.எம்.ஜெயசீலன் பலகலைக்கழக விரிவுரையாளருக்கே உரிய ஆய்வுப்பார்வையுடன் மிக ஆழமான மதிப்பீட்டுரை ஒன்றை வழங்கினார். அவரது உரையும் கூட இந்நூல் ஒரு இந்திய சாஸ்;திரிய கலைஞனின் பார்வையில் கிராமிய அல்லது தோட்டப்புற கலை பார்க்கப்பட்டுள்ள வடிவமாகவே இந்த நூலைக்கொள்ள முடியும் என்பதாகவிருந்தது. இந்த உரை தனியாக எழுத்தில் பதிவுசெய்யப்பட வேண்டிய சிறப்பு கொண்டது.
சிறப்புரையாற்றிய இலங்கை கோப்பியோ முன்னாள் தலைவர் பி.பி.தேவராஜ் இந்த நூலின் முக்கிய பணியே இந்த கலைகள் மலையகத்திலே எந்தெந்த தோட்டங்களிலே ஆடப்படுகின்றன என்கின்ற தகவலை நிழற்படங்களுடன் தந்திருப்பதாகும். இது முழுமையான ஆய்வு நூலாக அமையாதபோதும் ஒரு கலைஞனின் பார்வையில் இந்த மக்கள் கலைகளை எழுத்தில் பதிய வேண்டும் என்ற உந்துதலினால் எற்பட்டுள்ளது எனலாம். இது நமக்கு அவசியம். நம்மை பற்றிய அடையாளங்களாக எதிர்காலத்தில் அமையப்போவன இவைதான் என தெரிவித்தார்.
ஏற்புரை வழங்கிய நூலாசிரியர், தான் சாஸ்திரிய நடனக்கலைஞராக இருந்தபோதும் தனது மாணவர்களுடன் தோட்டங்களுக்கு சென்று இந்தக் கலைகளைப் பார்த்தபோது இதில் உள்ள இதிகாச பின்புலங்களை உணரக்கூடியவனாக அதனை எழுத்தில் பதிவு செய்யும் எண்ணம் வந்தது. முழுமையாக இந்த நூலை முழுமையாகக் கொண்டுவந்தால் 900 பக்கங்களைக் கொண்டதாக அது அமையும். எனவே, அறிமுக வடிவம் ஒன்றையே இங்கு தந்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் பொருளாதார உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் முழுமையான நூலாக கொண்டுவர ஆவண செய்வேன் எனவும் தெரிவித்தார்.
மலையகத் தோட்டங்களில் உள்ள காமன் பொட்டல்கள் பற்றியும் காமன் பண்டிகை காலங்களில் பிடிமண் எடுக்கப்பட்டு அந்த இடம் உயிர்ப்பிக்கப்படும் உன்னதத்ததையும் அத்தகைய முதலாவது பிடிமண் இந்தியாவில் இருந்து வந்தபொது இந்த மலையக மக்கள் கொண்டுவந்த உணர்வுகலந்தது என்ற முக்கியமான தகவலுடன் தனது நன்றியுரையைத் தந்த எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர், வழமைபோன்றே பல்வேறு தகவல்களுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...