Headlines News :
முகப்பு » » கவனிப்பாரற்ற நிலையில் அல்லல்படும் மலையக மக்கள்

கவனிப்பாரற்ற நிலையில் அல்லல்படும் மலையக மக்கள்


இயற்கை அனர்த்தத்தால் பாரிய மண் சரிவில் சிக்கி பெருந்தோட்ட தமிழ் மக்கள், தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.பல பிள்ளைகள் தாய் தந்தை இருவரையுமே இழந்துமுள்ளனர். 

உறவுகளை, உடைமைகளை இழந்து மன வேதனையுடன் அல்லல்படும் பல அவலங்களுக்கு முகம் கொடுத்துள்ள கொஸ்லாந்தை மக்களுக்கு உரிய உதவிகள் தடையின்றி தாமதமின்றிக் கிடைப்பதைப் பொறுப்புடன் நிறைவேற்றும் கடமை மேற்கொள்ளப்பட வேண்டும். நிகழ்ந்த அவலத்தை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் கண்ட முதலாவது அவலமாக மட்டும் ஒதுக்கி காண முடியாது.

மனித வாழ்வுக்கு பொருந்தாத பாதுகாப்பற்ற சூழலே மலையக பெருந்தோட்டக் குடியிருப்புகளை ஆராயும் போது வெளிப்படுகின்றது. ஒரு முழு அமைச்சரையும் நான்கு பிரதியமைச்சர்களையும் கொண்ட சமூகமாக இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் இனங்காட்டப்படும் நிலையில் அம்மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் காப்பாற்றப்படுவதில் அக்கறை செலுத்தப்படுவதாயில்லை.

நூற்றாண்டுகள் கடந்த ஓரறையுடன் கூடிய வரிக்குடியிருப்புகளே (லயன்கள்) மலையகப் பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகளாக பெரும்பாலும் உள்ளன. சுதந்திரத்திற்கு முந்திய பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்குடியிருப்புகள் வசதிகள் அற்றவை இடவசதியோ, மலசலகூடம் போன்ற சுகாதார வசதிகளோ, பாதை வசதிகளோ, தண்ணீர் வசதிகளோ அற்ற இக்குடியிருப்புகள் பெரும்பாலானவற்றில் கூரைகள் கூட முறையாக இன்மை காணப்படுகிறது.

மழைக் காலங்களில் மழை நீர் வீடுகளுக்கு வருவதும் அதேபோல் சூரிய ஒளியும் வீடுகளுக்கு எட்டிப் பார்ப்பதும் வழக்கமாகியுள்ளது. கூரைகளில் மண்மூடைகளையும் துண்டுத் தகரங்களையும் தாராளமாகவே காண முடிகின்றது. வீடமைப்புத் துறையில் பெரும் சாதனை படைத்து வருவதாகக் கூறப்படும் இந்நாட்டில் நாட்டின் வருமானத்தின் முழுகெலும்பாக குறைந்த கூலியில் கூடிய பணியாற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அதுவும் தமிழ்த் தொழிலாளர்களின் இருப்பிட வசதி பற்றி அக்கறையின்மை வெளிப்பட்டுள்ளது.

மாடிவீடுகள் புனரமைக்கப்படுகின்றன. புதிய வீடுகள், மாடி வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்று அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. ஆனால் எவரும் மலையக பெருந்தோட்ட தமிழ்த் தொழிலாளர்களது நிலை பற்றிச் சிந்திக்கவில்லை.

வரவு  செலவுத் திட்டத்தில் அரச அலுவலர் ஓய்வூதியக் காரர் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வேதனம் பற்றி சில பல கூறப்பட்டிருந்தாலும் மிகமிகக் குறைந்த தினக்கூலி பெறும் தோட்டத் துறை தொழிலாளர்கள் தொடர்பில் எதுவுமே கூறப்படாமை புறக்கணிப்பின் ஓரங்கம் என்பதைப் புட்டுக் காட்டுகின்றது. அதேபோன்றதே குடியிருப்புப் புறக்கணிப்பும் எனத் துணித்து வெளிப்படுத்த முடிகின்றது.

கொஸ்லந்தை மண்சரிவுக்கு முந்தியதாகப் பல மண்சரிவுகள் மலையகப் பகுதியில் இடம்பெற்று அதனால் பல தொழிலாளர்களின் குடியிருப்புகள் அழிவடைந்தன. அதேபோல் மின்சார ஒழுக்குகள், தீப்பற்றி அழிந்த தொழிலாளர் குடியிருப்புகளும் ஏராளம்.

கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களாலும் மின்சாரப் பாதிப்புகளாலும் அழிவடைந்த தொழிலாளர்  குடும்பங்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பான வீடுகள் பாதுகாப்பான இடங்களில் நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளனவா என்பதை எவரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

இவ்வாறான அவலம் பாதிப்பு ஏற்படும் போது கோயில்களிலோ, பாடசாலைகளிலோ அவர்களை தங்கச் செய்து பின் தற்காலிகக் கூடாரங்களமைத்து அவர்களைக் குடியமர்த்துவதுடன் தமது பொறுப்பு நிறைவேறுகின்றது என்று அரசியல்வாதிகளும் தொழிற்சங்கங்களும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய அரச அலுவலர்களும் எண்ணி விடுகின்றனர்.

இதே மனநிலையிலேயான செயற்பாடுகளே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பிலும் கையாளப்படுகின்றன. பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட அதை வெளியே தெரியாமல் மூடி மறைக்கும் செயல்களே நாட்டின் தமிழ் மக்கள் தொடர்பில் கையாளப்படுகின்றதோ என்ற ஐயம் இவ்வாறான செயல்களால் மேலோங்குகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தின் நிகழ்வுகளால் அநாதரவான தமிழ்ப் பிள்ளைகளின் பிரச்சினைகள், தேவைகள் இதுவரை நாகரிகமான முறையில் தீர்க்கப்படவில்லையென்பதும் யதார்த்தமானது. பண்பட்ட நாகரிக மனிதாபிமானமுள்ள, மனித குலம் வெட்கப்படும் பல அவலங்கள் தொடர்வதாக அறியமுடிகின்றது.

மனிதச் செயற்பாடுகளாலும் இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறார்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். சூழ்நிலையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட சிறார்களை மத, இன மாற்றங்களுடன் மொழி மாற்றம் பெயர் மாற்றம் என்று பல மாற்றங்கள் செய்யவும் ஏமாற்றுப் பேர்வழிகள் களத்தில் இறங்கக் கூடும். இவை பற்றிய சமூகப் பார்வை அவசியப்படுகின்றது.

இறுதியாக கொஸ்லந்தையில் இடம்பெற்ற இயற்கை சீற்றத்தால் எழுபத்தைந்து வரையான தமிழ்ப் பாடசாலை மாணவ, மாணவியர் தமது பெற்றோரை முற்றாக இழந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. அவர்களுக்கு உதவி, வழிகாட்ட வேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு சமூகப் பொறுப்பு தமிழ் மக்களுக்குள்ளது. தமிழர் சமூகம் அந்த அநாதரவான சிறார்களை சமூக ரீதியில் தத்தெடுத்து பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளது. அவர்களை மாற்றாரிடம் கையளிக்க வேண்டியதில்லை.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தங்குமிடத்துடன் கூடிய பாடசாலை வசதியையும் அதேபோல் உணவு, உடை, பாதுகாப்பு வழிகாட்டல் என்பனவற்றையும் வழங்கத் திட்டமிட்டு செயற்பட வேண்டும். பொருத்தமான பாடசாலைகளில் மாணவ, மாணவியருக்கான விடுதிகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வது நற்பயன் தரும். அவ்வாறே அப்பிள்ளைகளின் கல்வித் தேவைகள் உட்பட அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய வேண்டியது நமது சமுதாயப் பொறுப்பாகும்.

இதுகாலவரை பாதிக்கப்பட்டு அநாதரவாகவுள்ள நமது பிள்ளைகளின் நலன் தொடர்பாக சமூக நோக்கில் பேதமற்ற முறையில் தேவைகளைக் கண்டறிந்து உதவ வேண்டியது நமது பொறுப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்களுட்பட மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள இடவசதியுடன் கூடிய பொருத்தமான பாடசாலைகளில் மாணவ மாணவியருக்கான விடுதிகளை நிறுவி இயங்கச் செய்வதன் மூலம் பாடசாலை செல்லும் வயதிலும் கல்வியைப் பெற முடியாது அவதியுறும் நமது பிள்ளைகளுக்கு உதவ முடியும்.

இதன் மூலம் அவர்களின் கல்விக்கு உதவுவது மட்டுமன்றி பாதுகாப்பு உணவு, உடை உட்பட்ட பல தேவைகளையும் வழங்க வழியுள்ளது. இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் கொஸ்லந்தையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ள நிலையில் வீடிழந்தோருக்கு வீடுகளமைத்துக் கொடுப்பதுடன் நின்று விடாது விடுதி வசதியுடன் கூடிய பாடசாலைகளின் தேவையையும்  எடுத்துக் கூறிப் பெற்றுக் கொள்வது பெறுமதியானது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் உண்மையான பற்றிருந்தால் நம்மால் நம் நாட்டு அரசால் செய்ய முடியாத போதும் கிடைக்கவுள்ள வெளிநாட்டு உதவி மூலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் இன, மத, மொழி, கலாசாரங்களுக்கு பாதிப்பேற்படாத படி ஆற்ற முடியும். இவ்வாறு திட்டமிட்டு செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வு சீர்கெட்டு விடும்.

இப்போதே வீட்டு வேலைக்கு சிறுவர் சிறுமியரை பாதிப்புக்குள்ளானோர்  மத்தியிலிருந்து பிடித்து வர முடியுமா என்று எண்ணுபவர்களும் காணப்படுகின்றனர். தமது பிள்ளை கல்வி கற்று உயர்நிலை அடைய வேண்டுமென்று கனவு கண்ட பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டிய சமூகப் பொறுப்பை மறந்துவிடக்கூடாது. அந்தப் பிள்ளைகள் அநாதைகள் அல்ல எமது சமூகத்தின் ஒதுக்க முடியாத அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது இவ்வாறிருக்க, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறான இயற்கை அழிவுகளுக்கு மனிதனின் பொறுப்பற்ற ஆய்வு செய்யும் ஆற்றலற்ற செயற்பாடுகளும் காரணிகளாகின்றன. மாணிக்கக்கல் அகழ காணிகளைக் கையளிக்கும் அரசின் செயற்பாட்டை ஏற்க முடியாது. மாணிக்கக் கல் அகழ்வால் இயற்கையான மலைப் பகுதிகள் சரிவடைய வழியேற்படுகின்றது. நீரோடைகள் ஆறுகளின் வழமையான போக்கில் மாற்றம் நிகழ்கிறது. அதனால் மக்கள் குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்படுகின்றது.

அபிவிருத்தியென்று கூறிக்கொண்டு பாதைகள் அமைக்க மலைச் சரிவுகள் வெட்டப்படுகின்றன. கற்பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. கட்டிடங்கள், மாடிக் கட்டிடங்கள் நிலத்தின் தன்மை ஆராயாமல் கட்டப்படுகின்றன. நிலத்திற்கு பாதுகாப்பு வழங்கும் இயற்கை பாதுகாப்பான காடுகள் அழிக்கப்படுகின்றன.

இவ்வாறு இயற்கையுடன் மோதும் பல செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. மலையகத்தில் உருவாக்கப்படும் பாரிய நீர்த்தேக்கங்கள் காலக் கிரமத்தில் மலையகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அன்றே பல புவியியல் ஆய்வாளர்கள், நிபுணர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கூறியிருந்தமை நினைவு கூரத்தக்கது.


அண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்துவதற்காக இருபது இலட்சம் மரங்களை வெட்டி விற்கவுள்ளதாக செய்திகள் வந்தன. மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து இவ்வாறு மரங்களை வெட்டுவதால் நேரடிப் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள் பெருந்தோட்டத்  தமிழ் தொழிலாளர்களே என்பதை மறைப்பதற்கில்லை.

இந்நிலையிலேயே மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள் தொடர்பில் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பான வசதிகளைச் செய்து கொடுக்கவும் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தனியான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் பகுதி கிராம சேவை அலுவலரும் தோட்ட மக்களின் குடியிருப்பு தொடர்பான பொறுப்பு தோட்ட நிர்வாகங்களைச் சார்ந்தது என்று கூறித் தட்டிக் கழிப்பதைக் காண முடிகிறது. அரசாங்கம் பொறுப்பைத் தட்டிக் கழித்து தோட்ட நிர்வாகங்கள் மீது பழிசுமத்துவது போலும் காணப்படுகின்றது.


வாக்குரிமையைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு அதிகாரம் பெறுவதற்கு தோட்டத் தொழிலாளரின் ஆதரவு தேவை. தோட்டத் தொழிலாளரது குடியிருப்பு உட்பட சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க அரசுத்துறைக்கு அதிகாரமில்லை. விநோதமான இந்நிலை பெருந்தோட்டங்களில் மட்டுமே நிலவுகிறது.

கூர்ந்து நோக்கும் போது எத்தனை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பெற்றுக் கொண்டாலும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள் நாட்டின் அந்நிய இரண்டாம் தரக் குடிமக்களாகவே கணிக்கப்படுகின்றனர் என்பது வெளிப்படுகின்றது.
மலையக பெருந்தோட்டத் தமிழ் தொழிலாளர்களது அடிப்படை வாழ்வுரிமையை பேணிப் பாதுகாக்கவும் தேவைகளை நிறைவேற்றவும் தனி அமைச்சோ தனித் திணைக்களமோ அல்லது தனி நிறுவனமோ உருவாக்கப்படுவது அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனிக்கும் வனவிலங்குகளுக்கும் தேங்காய்க்கும் தனி அமைச்சு, திணைக்களங்கள் உள்ள நம்நாட்டில் குறைந்த கூலியில் அதிக உழைப்பை வழங்கும் மக்களது வாழ்வியல் மேம்பாட்டுக்காக தனிநிறுவனம் அமைப்பது அவசியமானது.

நன்றி - தினக்குரல் 15.11.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates