Headlines News :
முகப்பு » » முகம்மது சமீம் : ஒரு பண்பாட்டுப் போராளி லெனின் மதிவானம்

முகம்மது சமீம் : ஒரு பண்பாட்டுப் போராளி லெனின் மதிவானம்


முகம்மது சமீம் (1932-2013) இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுள் முக்கியமான கணிப்புக்குரிய ஒருவர். அவர் விமர்சகர், கல்வியியலாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். சமீம் முற்போக்கு இலக்கியத்தின் தலைமகன்களாக விளங்கிய பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோருடன் இணைந்து முற்போக்கு அணியில் இயங்கியவர். இலங்கை முற்போக்கு இலக்கிய வரலாற்றிலே விரல்விட்டு எண்ணக் கூடிய புருஷர்களிரொருவரான சமீம் மறைந்து ஒரு வருட நிறைவை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையில் அவர் பற்றிய அறிமுகங்கள்,  விமர்சனங்கள், மதிப்பீடுகள், நினைவுக் குறிப்புகள் அவசியமானவையாகின்றன.
இவ்வாறானதோர் சூழலில் முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினர்; பற்றி வெளியிட்ட 'முற்போக்கு இலக்கியவாதி முகம்மது சமீம் என்ற நூல் சமீம் பற்றிய தேடலுக்கான பல தகவல்களைத் தருகின்றது. நுணுக்க விபரங்களின் முக்கியத்துவத்தை இந்நூல் வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் சமீம் பொறுத்து இனிவெளிவருகின்ற எழுத்துக்கள் முற்கூறிய ஆதாரங்களையும் வாய்ப்பு நலன்களையும் ஆதாரமாகக்கொண்டு அவர் பற்றிய பன்முக ஆய்வொன்று வெளிக் கொணர முயல்வதே அறிவுக்குகந்த நடவடிக்கையாகும். அதற்கான அறிமுகத்தை வழங்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்காகும்.
சமீம் பதுளையில் ஒரு மத்தியதர வர்க்க பின்னணியில் தோன்றியவர். இவர்களின் மூதாதையர்கள் தென்னிந்தியாவில் கீழக்கரை என்ற பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். இவரது தந்தை பெயர் ஜனாப் அகமதுபிள்ளை. இவர் புகையிரத பாதைகளில் வேலை செய்த ஆங்கிலயேரிடம்; பொறியியல் தொழில் கற்று ஒப்பந்த வேலைகள் செய்தவர் (ஊழவெசயஉவள). பதுளையில் அமைந்திருக்கும் பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் இவரது கை வண்ணத்தினால் செய்யப்பட்டவை என தமது தந்தைக் குறித்து சமீம் நினைவுகூருவார். இவரது தாய் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பதையும் அறிய முடிகின்றது. அவர் பெயர் ஜனாபா நாச்சியார் உம்மா. அவரும் பதுளையில் புடவை வர்த்தகத்  தொழிலில் ஈடுப்பட்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.


இவர் தனது ஆரம்ப கல்வியை பதுளை சரஸ்வதி வித்தியாசாலையிலே (இப்போது இப்பாடசாலை சரஸ்வதி தேசிய மத்திய கல்லூரி என்று அழைக்கப்படுகின்றது) பெற்றார்.  அதன்பின் தமது இடைநிலைக் கல்வியை பதுளை தாம்ஜதூதக் கல்லூரியில் பெற்றார். 1950 ஆண்டு நடைபெற்ற எஸ். எஸ். சி, பரீட்சையில் விசேட  சித்தியடைந்து  லண்டன் சர்வ கலாசாலைக்கு சேர்வதற்கு தகுதி பெற்றார். பின் புலமைப் பரிசில் பெற்று கொழும்பு சாகிராக் கல்லூரியில் கற்றார். பின் பேராதனை பல்கலைக்கழத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.
இதன் பின் அவர் சாகிராக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து பின்னர் அக்கல்லூரியின் அதிபராக பதவி உயர்வு பெற்றார். அடுத்து வந்த காலங்களில் அவர் கல்வி அதிகாரியாகவும் , பிரதான கல்வி அதிகாரியாகவும், முதலாந்தர கல்விப் பணிப்பாளராகவும் வௌ;வேறு பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளார். தமது ஓய்வுக்கு உரிய காலத்திற்கு முன்னரே ஓய்வு பெற்ற அவர் சவூதி அரேபியாவில் தனியார் பாடசாலையொன்றில் பணிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றார். நாடு திரும்பிய பின்னரும் தமது அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு தனியார் பாடசாலையொன்றினை உருவாக்கி செயற்பட்டுள்ளார். இவர் கல்வித் துறையில் பணியாற்றிய காலங்களில் அவரால் ஆற்றப்பட்ட முக்கிய பங்களிப்புகள், செயற்பாடுகள் பற்றிக் குறித்துக்காட்ட வேண்டியதும் அவசியமானதாகும்.

சாகிராக் கல்லூரியில் அசிரியராக, உப அதிபராக, அதிபராக கடமையாற்றிய காலங்களில் பல முற்போக்கு இலக்கிய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அவர் அக்கருத்துக்களை மாணவர் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கிய கரிசனைக் காட்டியிருந்தார் என்பதை பலர் பதிவாக்கியுள்ளனர். அத்துடன் அக்கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பாக 1961 ஆண்டு அவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு உள்வாங்கப்பட்டதுடன் பின் பல நண்பர்களின் ஆவோசனைக்கிணங்கவும், குறிப்பாக மூதூரில் முதல்வராகவும் தகவல் ஒலிப்பரப்பு பிரதி அமைச்சருமான அப்துல் மஜீத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூதூர் பகுதிக்கு சேவையாற்ற அழைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. கல்வி, கலை கலாசார ரீதியாக மிகவும் பின்னடைந்திருந்த இப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றார்.
இக்காலச் சூழலில் தான் பல புதிய பாடசாலைகள் தோற்றம் பெற்றன. கட்டடிட அபிவிருத்திகள், பௌதிக வளங்கள் என்பன அதிகரிக்கப்பட்டன. அத்துடன் 'முற்போக்கு வாலிபர் மன்றம்' என்தொரு அமைப்பை உருவாக்கி கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களில் கலை இலக்கியம் சார்ந்த வளர்ச்சி ஏற்படக் காரணமாக அமைந்தார் என மஹ்ரூப் கரீம் (முற்போக்கு இலக்கிய முன்னோடி முகமது சமீம், 2009, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம். ப.34) பதிவாக்கியிருக்கின்றார். சமீம் 1969 ஆம் ஆண்டு பிரதம கல்வி அதிகாரியாக கிழக்கு மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் இங்கு கடமையாற்றிய காலங்களில் (1970-1974) பல பாடசாலைகளை தரமுயர்த்தவும் செயற்பட்டிருக்கின்றார். காத்தான்குடி அல்ஹிறா ம.வி, காங்கேயனோடை ம.வி, மகிழடித்தீவு, கிரான் ம.வி, முதலிய பாடசாலைகளைக் குறிப்பிடுவர். கிழக்கு மாகாணத்தில் சாதிய முரண்பாடுகள் பிதான முரண்பாடுகளாக இல்லாவிடினும் அதன் தாக்கங்களையும் ஒடுக்குமுறைகளையும் அங்கும் காணக் கூடியதாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பில் அவர் மேற்கொண்ட கல்விசார் செயற்பாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். பேராசிரியர் சி. மௌகுருவின் ஆலோசனையுடன் குறுமண்வெளி, பங்குடாவெளி, சந்திவெளி, படுவான்கரைப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் பல புதிய பாடசாலைகள் தோன்றுவதற்கு துணையாக நின்றுள்ளார் என்பதை மஹ்ரூப் கரீம் மேலும் நினைவுகூருவார்.
அவ்வாறே காலிப் பிரதேசத்திற்கும் (1975) சென்று சேவையாற்றியிருக்கின்றார். மிக குறுகிய காலத்தில் அப்பிரதேசம் சார்ந்த பெரும்பான்மையான சிங்கள மக்களின் கல்வி வளர்ச்சியிலும் சிறுப்பான்மையினராக தமிழ் முஸ்லிம் மக்களினதும் கல்வி வளர்ச்சிக்காக செயற்பட்டுள்ளதை ஏ. இக்பால் போன்ற இலக்கிய நண்பர்கள் நினைவுகூருவர். கிழக்கு மாகாணத்தில் அவர் ஆற்றிய பணிகளுடன் ஒப்பிடுகின்ற போது காலிப்பகுதியில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என்றே கூற வேண்டும். அன்றைய அரசியல் சூழ்நிலை அதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
1978 ஆம் ஆண்டளவில் அகில இலங்கை  கல்விப் பணிப்பாளராக பதவியுயர்த்தப்பட்ட பின்னர் கல்வி அமைச்சில் முஸ்லிம் பிரிவை உருவாக்க முயன்றுள்ளார். அவ்வாறு உருவாக்கப்பட்ட முஸ்லிம் பிரிவும் முதலாவது பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்று செயற்பட்டிருக்கின்றார். அவரது முயற்சியால் இலங்கையில் 539 ஆக இருந்த முஸ்லிம் பாடசாலைகள் 759 ஆக அதிகரித்தது என்பதை அறிய முடிகின்றது (மே.கு.நூ. ப. 36). 1989 இல் சவுதி அரேபியாவிற்கு சென்றபோது இன்டநெஷனல் இஸ்லாமிக் அகடமியில் (ஐவெநசயெவழையெட  ஐளடயஅiஉ யுஉயனநஅல ) பணிப்பாளராக கடமையாற்றி 1990 இல் இலங்கைக்கு திரும்புகின்றார். பின் ஹறோ இன்டநெஷனல் ஆங்கிலக் கல்லூரியை ஆரம்பித்து தான் இறக்கும்வரை செயற்பட்டு வந்தார். கல்வித் துறையில் செயற்படுகின்ற காலத்தில் தாம் மேற்கொண்ட தொழிலை ஏதோ ஊதியம் பெறும் ஒரு விடயமாக மட்டும் கருதாமல் மிக நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டு வந்துள்ளதையும் தனது கடினமான உழைப்பின் ஊடாகவே பல பதவி உயர்வுகளையும் பெற்றிருக்கின்றார் என்பதனையும் அறிய முடிகின்றது. அதே சமயம், தான் பல பிரதேசங்களில் பணிபுரிந்த காலங்களில் அப்பிரதேசத்தில் நடைபெறும் பண்பாட்டு இலக்கியக் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்கு பற்றி தமது பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பதை அவருடன் பழகிய இலக்கிய நண்பர்கள் இன்றும் நினைவுகூருவர்.
வரலாற்றுத் துறையில் புலமைத்துவம் பெற்றிருந்த சமீம் இலக்கிய பண்பாட்டுத்துறையிலே அதிகம் ஆர்வம் காட்டி வந்தார். தர்மதூதன் கல்லூரியில் 'தர்மதூதன்' என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்ததுடன் முகுந்தன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் ஏழுதியுள்ளதாக அறிய முடிகின்றது. இவையெல்லாம் இளமைக்காலத்து இலக்கிய முயற்சிகளாகவே காணப்படுகின்றன என சமீம் அவர்களே கூறக் கேட்டிருக்கின்றேன். காலப்போக்கில் பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி,  கவிஞர் சில்லைய+ர் செல்வராசன், திரு. இர. சிவலிங்கம், திரு. என்.கே. ரகுநாதன், திரு. செ. கணேசலிங்கன், திரு. நீர்வை பொன்னையன், திரு. எஸ்.எம். கார்மேகம், கவிஞர் எம்.ஸி.எம். ஸ{பைர், மருதூர்க்கனி, ஹனிபா, திரு. காவலூர் இராசதுரை, ஜனாப். எச்.எம்.பி. முகையதீன், கவிஞர் புரட்சிக் கமால், ஸாலிஹ், பிரேம்ஜி, அ.ஸ. அப்துஸ்ஸமது, இளங்கீரன் சுபைர், டொமினிக் ஜீவா, அண்ணல் சாலி, கவிஞர் ஏ. இக்பால் இன்னும் இது போன்ற நண்பர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளும், அவர்களுடன் இணைந்து கருத்தாடல்களும் அவரது கருத்துக்களை செழுமைப்படுத்த உதவியிருக்கின்றன. இத்தகைய சூழலே இவரை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை (இ.மு.எ.ச) நோக்கி ஆகர்சித்திருந்தது.
இ.மு.எ.ச இலங்கையின் இலக்கிய வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம் என்பனவற்றுக்கான போராட்டத்தை கோட்பாட்டடிப்படையில் முன்னெடுத்தனர். பொது மக்கள் சார்ந்த இலக்கியக் கோட்பாட்டை வலியுறுத்திய இவர்கள் நமது பண்பாட்டுச் சூழலுக்கான கோட்பாட்டுருவாக்கத்தையும் செய்தனர். மக்களுடன் இணங்கி செயற்பட்டதுடன் மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்று அம்மக்களின் நல்வாழ்வுக்காக இலக்கியம் படைத்தனர். முற்போக்கு இயக்கத்தை சார்ந்த பலர் இலக்கியக்காரர்களாக மட்டுமன்றி அரசியல் களத்திலும் செயற்பட்டவர்களாக காணப்பட்டனர். இ.மு.எ.ச முன்னோடிகளாக கே.கணேஷ், கே. ராமநாதன் (தேசாபிமானி ஆசிரியர்) அ.ந. கந்தசாமி, எம்.பி பாரதி, போன்றோர் செயற்பட்டுள்ளனர். தொடர்ந்து பிரேம்ஜி, க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, செ. கணேசலிங்கம், ஏச்.எம்.பி. மொஹிதீன், என.கே. ரகுநாதன், டானியல், சுபைர் இளங்கீரன், சில்லைய+ர் செல்வராசன், காவலூர் ராஜதுரை, எஸ். அகஸ்தியர் முதலானோர் இரண்டாவது கட்டத்தில் இணைந்து செயற்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து செ. யோகநாதன், யோ. பெனடிக்பாலன், செ. கதிர்காமநாதன், திக்குவலை கமால், எம். ஏ. நுஃமான, சாருமதி, மு. கனகராஜன் போன்றோர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக ஐம்பதுகளிலிருந்து இவ்வியக்கத்தில் செயற்பட்ட சமீம் ஸ்தாபனம் சார்ந்த முக்கியமான செயற்பாடுகள் இரண்டை பதிவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இ.மு.எ.சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினராக செயற்பட்டு வந்தவர்களிலொருவரான சமீம் இ.மு.எ.ச நடாத்திய பாரதி நூற்றாண்டு விழா, சோமசுந்தரப் புலவர் விழா, நாவலர் விழா போன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதிலும் அதனை வெற்றிகரமாக நடாத்துவதிலும் பங்களிப்பை நல்கியுள்ளார் என நீர்வை பொன்னையன் நினைவுகூருவார். (மே.கு.நூ. ப.121).

அவ்வாறே இந்தியாவிலிருந்து வந்து குவிந்துக் கொண்டிருந்த வணிக இலக்கிய படைப்புகளுக்கு இலங்கை களமாக இருக்க முடியாது என்ற வகையில் அதன் இறக்குமதிக்கு எதிராக குரல் கொடுத்த இ.மு.எ.ச எழுத்தாளர்களில் சமீம் முக்கியமானவர். அப்போது இலங்கைக்கு வருகைத் தந்திருந்த தமிழக எழுத்தாளர்- பகிரதன்; ' இலங்கை எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளரை விட பத்து ஆண்டுகள் பின் தங்கியுள்ளனர்' எனக் குறிப்பிட்டார். அதே சமகாலத்தில் இலங்கைக்கு வந்திருந்த கி.வா ஜெகநாதன் அவர்களும் இலங்கை எழுத்தாளர்களின் கதைகளுக்கு அடிக்குறிப்பு வேண்டும் எனக்; குறிப்பிட்டார். இலக்கியத்தில் உள்ளடக்கத்தை விட அழகியலே முதன்மையானது என்ற நிலைப்பாட்டில் நின்று இலக்கியத்தை சமூக யதார்த்தத்திலிருந்து பிரித்துப்பார்க்க முனைந்ததன் வெளிப்பாடாகவே அவரது கூற்று அமைந்திருந்தது. அதற்கு எதிரான தத்துவப் போராட்டத்தை முற்போக்கு அணியினர் மிக பலமாகவே முன்வைத்தனர். அவர்களில் சமீமின் பங்கு குறித்துக்காட்டத் தக்கதொன்றாகும். காலப்போக்கில் இ.மு.எ.ச சிந்தாந்த ரீதியிலும் இயக்க ரீதியிலும் சிதைவடைந்து இயங்க முடியாமல் முடங்கியபோது சமீமும் அவருடன் கருத்தொற்றுமை கொண்டிருந்த தோழர்கள் சிலரும் ஒன்றிணைந்து இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் என்றதொரு அமைப்பை உருவாக்கி செயற்பட்டனர். அவர் இறக்கும் வரை இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்தார் என்பதும் மனங்கொள்ளத்தக்கது.
சமீமின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக குறிப்பிட வேண்டியது அவர் சாஹித்திய மண்டலத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் பழமைவாதிகளுக்கும் பிற்போக்குவாதிகளுக்கு எதிரான நடத்திய போராட்டமாகும். மக்கள் இலக்கியத்தை இழிசனர் வழக்கு என புறக்கணித்த பழமைவாதிகளிடையே மக்கள் இலக்கியத்திற்கான சாஹித்திய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக சமீம் தீவிரமாக செயற்பட்டவர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாஹித்திய விழாவில் அழைப்பிதழ் இல்லாமேலே கலந்துகொண்டதுடன் முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் சார்ந்து பல கேள்விகளை முன்வைத்திருக்கின்றார் என்பதை முற்போக்காளர் பலர் நன்றியுடன் நினைவுகூருவர். யாவற்றுக்கும் மேலாக பழமைவாதிகளும் பிற்போக்காளர்களும் முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்து கூட்டத்தை நடாத்த முற்பட்டபோது அவர்களுக்கு எதிராக கூழ் முட்டை அடிக்கும் சம்பவமும் இந்நிகழ்வில் தான் இடம் பெற்றது. முற்போக்கு இலக்கிய வரலாற்றில் பிற்போக்காளர்களுக்கு அவர்களின் மொழியில் பதிலடி கொடுத்த முற்போக்காளர்களின் பங்கும் பணியும் பொன்னெழுத்துக்களால் பதிய வேண்டியவை. காலப்போக்கில் முற்போக்காளர் சிலரில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் சிதைவுகள் இந்த செயலுக்காக மன்னிப்புக் கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். சமீம் இறுதிவரை இது குறித்த தெளிவான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார். இழிசனர் வழக்கென ஒதுக்கிய மக்கள் இலக்கியம் மகுடமேற வைத்த சம்பவம் இச்சந்தர்ப்பத்தில் தான் நடந்தது. அதற்கு கதாநாயகன் எம். சமீம் அவர்கள் தான் என்பதால் முற்போக்கு இலக்கியத்தின் முடிசூடா மன்னராகின்றார் என கவிஞர் ஏ. இக்பால் குறிப்பிடுகின்றார். 


முற்போக்கு சிந்தனையாளராகிய இவர்; தமிழ் இலக்கியத்தில்  மிகுந்த ஈடுபாடுள்ளவராக இருந்தது போன்று வரலாற்றுத் துறையிலும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும்; பல நூல்களை எழுதியுள்ளார். அவரது இஸ்லாமிய கலாசாரம், இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் Pசழடிடநஅள ழக ய ஆiழெசவைல ஊழஅஅரnவைலஇ ஆயசசயைபந ஊரளவழஅள ழக வாந ஆரளடiஅள ழக ளுசi டுயமெய போன்ற நூல்கள் வெளிவந்த போதும் ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (நான்கு பாகங்களாக வெளிவந்த அரசியல், சமூக வரலாற்று நூல், 1997-1998;) என்ற நூலே  அவரது முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாக கூறப்படுகின்றது. இந்நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் தமிழ்நாட்டு கல்வியமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். விமர்சனக் கட்டுரைகள்(2005), எனது இலக்கியத் தேடல(2006);, கைலாசபதி : சில்லைய+ர் செல்வராசன் விமர்சன நோக்கு(2007) ஆகிய மூன்று நூல்களிலும் உள்ள கட்டுரைகள் இவரது பல்துறைக் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் காட்டுகின்றது.
ஒரு புறம்பான பேரினவாதம் முஸ்லிம் மக்களை எதிரியாக பார்த்ததுடன் கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமான இன வன்முறைகளை தோற்றுவித்திருந்தன. முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கென சுய நிர்ணய உரிமை உண்டு என்பதையும் மறுத்து அவர்களின் வாழ்வை சிதைப்பதாகவே அவ் அரசியல் முன்னெடுப்புகள் அமைந்திருந்தன என்பதை அவரது ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் என்ற நூல் எடுத்துக்காட்டுகின்றது. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் சிந்தித்தல் காலத்தின் தேவையாகும். முஸ்லிம் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமைக்கான முன்னெடுப்புகளானது குறுகிய இனவாதமாகவோ அல்லது ஏனைய சமூகங்களுக்கு எதிரானதாகவோ (சந்தர்ப்பவாத அரசியல் அதனையே செய்ய முனைகிறது) முன்னெடுக்கப்படாமல் இலங்கையில் ஏனைய  அடக்கப்பட்ட மக்களின் அரசியல் முன்னெடுப்புகளுடன் இணைக்கப்படல் வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். இந்தப் புள்ளியிலிருந்தே தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் புறப்பாடு செல்ல வேண்டியுள்ளது. சமீமின் ஆய்வினைப் பொறுத்தமட்டில் பேரினவாதம் எந்தளவு மக்கள் விரேதமாக செயற்பட்ட அதே சமயம் முஸ்லிம் இனவாதம் மக்கள் விரோத நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது என்பதனையும் எடுத்துக் காட்டியமை அவரது தன்முனைப்பற்ற நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து திரு. இர சிவலிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'அரசியல் தலைவர்கள் எவ்வாறு இன உறவுகளைப் பாதித்துள்ளார்கள். ஒரு நாட்டின் வரலாற்றுப் போக்கையே நிர்ணயித்துள்ளார்கள் என்பதையும் உதாரணங்களோடு நிறுவியுள்ளார். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், மதத் தலைவர்களும் எவ்வாறு மக்களின் உணர்வுகளைத் தாம் விரும்பிய வழியில் தட்டி எழுப்பி சமுதாய அலங்கோலங்களை ஏற்படுத்துகின்றனர் என்பதை இலங்கையின் தற்கால வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாக வைத்து நிலைநாட்டியுள்ளார்'(சிவல்ங்கம்.இர.1998, ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் என்ற நூலின் முன்னுரையில்).
அதே சமயம், இந்நாட்டில் குமிழிட்டு மேற்கிளம்பிய இன வன்முறையின் புதிய பரிமாணங்கள் -அதனடியாக தோன்றிய தமிழ் தேசிய இயக்கம், அவை தரிசித்திருந்த பாஸிச வழிமுறைகள், மேற்கொண்ட வன்முறைகள், மனிதவுரிமை மீறல்கள் யாவும் முஸ்லிம் மக்களின் வாழ்வை பல்வேறு விதங்களில் தாக்கியிருந்தன. இந்த வாழ்க்கை அலைக்கழிப்புகளினூடே மனிதர்கள், அவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இன்றைய இலங்கையின் நசிவுத் தரும் வடகிழக்கு சூழலில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அச்சிதைவுக்கு எதிரான, அச்சமூகங்களிலே இருக்கக்கூடிய ஆத்மார்த்த சிந்தனைகள் எப்படியாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதையெல்லாம் இந்நூல் எந்தளவு தொடுகின்றது என்பது சுவாரசியமானதோர் வினா தான்.
ஒரு புறம்பான சிங்கள பெருந்தேசியவாதமும் மறுபுறமான குறுந்தமிழ் தேசியமும் முஸ்லிம் மக்களை எதிரியாக பார்த்ததுடன் கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமான இன வன்முறைகளை தோற்றுவித்திருந்தன. முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கென சுய நிர்ணய உரிமை உண்டு என்பதையும் மறுத்து அவர்களின் வாழ்வை சிதைப்பதாகவே அவ் அரசியல் முன்னெடுப்புகள் அமைந்திருந்தன. இவ்வாறான சூழலில் தென்பகுதி முஸ்லிம் மக்கள் பற்றி சிந்தித்த சமீம் தன் காலத்தில் முனைப்புற்றிருந்த வட பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் பாஸிச சக்திகள் மேற்கொண்ட வன்முறைகள் குறித்து கவனிக்க தவறிவிட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும். அவ்வாறே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் தீவிரவாதத்தை முன்னெடுத்த ஜிஹாத் இயக்கம் குறித்த விமர்சனங்களையும் அவர் முன்வைக்கத் தவறியிருக்கின்றார் என்பது அவரது எழுத்துக்கள் மீதான விமர்சனமாகும். சமீம் அவரது பார்வைகளும் நோக்குகளும் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு முரணானது என்ற போதினும் அவர் தமது ஆய்வு நூலில் அதனனை பிரித்துப்பார்க்கத் தவறுவதாகவே படுகின்றது. கிழக்கு மாகாண முஸ்லிம் பற்றி தமது எழுத்துக்களில் பதிவு செய்திருந்தாலும் அவர் அரேபிய முஸ்லிம் அடிப்படை நிலை நின்றே  நோக்க முற்பட்டமை அவரது பார்வையின் பலவீனமாக வெளிப்பட்டது எனலாம். இன்று இஸ்லாம்-கலாசாரம் குறித்து காத்திரமான ஆய்வுகளை முன்னெடுத்து வரும் ஏ.பி. எம் இத்திரிஸ், சமீம் போன்று மார்க்சிஸ்ட்டாக இல்லாத போதினும் இஸ்லாத்தை பொதுமக்களின் நலனுடன் இணைத்துப் பார்ப்பதில் முக்கியமான ஆய்வுகளை முன் வைத்துள்ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ்விடயம் பரந்து விரிந்த ஒப்பியல் நோக்கில் ஆய்வு செய்யப் பட வேண்டியதோர் விடயமாகும். இவ்விடம் அதற்கு ஏற்றதல்ல.  
அவ்வாறே நூலாசிரியர் ஒரு தேசிய நாளிதழில் எழுதிய கட்டுரைகளே இங்கு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுரையின் பரிமாணமும், தாக்கமும் வேறுபட்டவையாகும். கட்டுரைகளை நூலாக்குவதில் இந்தக் குறைபாடு இருக்கவே செய்யும். இந்தக் குறையை நீக்கினால் இந்த நூலின் தரம் மேலும் பொலிவுறும் (சிவலிங்கம் இர. மே.கு.நூ).
பொது மக்கள் சார்ந்து ஒரு கலாசார பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த முனைவது ஜனநாயகத்திற்கு தேவையாகும். அத்தகைய பண்பாட்டு மாற்றத்தை நடைமுறையில் நிகழ்த்துபவர்களான மக்களுக்காக மக்கள் பங்கேற்கக்கூடிய வெளிகளை உருவாக்குவது முற்போக்கு சமூக செயற்பாட்டாளர்களின் கடமையாகும். ஒரு பொது நோக்கத்திற்கான இயங்கத் தயாராகவுள்ளவர்கள் அனைவரையும் சந்திக்கும் வெளிகளை உருவாக்குதன் மூலம் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலையை மாற்றி ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. மனிதாபிமானமுள்ள ஒற்றுமை நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க முனைகின்ற போராட்டத்தில் சமீம் போன்ற பண்பாட்டு செயற்பாட்டாளர்களின் வாழ்வும் வளமும் எமக்கு ஆதர்சனமாக அமைந்நிருக்கின்றது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.
முகமது சமீம் வாழ்க்கைப் பற்றியும் அவரது சமூக பங்களிப்பு பற்றியும் ஒரு சில வார்த்தைகளே இவை. எனினும் அவர் காலமும் வாழ்க்கையும் பங்களிப்பும் இன்னும் சரியான முறையில் ஆராய வேண்டிருக்கின்றது. 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates