Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கிளீன் ஸ்ரீ லங்கா: ஆட்சியதிகார முழக்கங்களின் வரலாற்று வழித்தடம் - என்.சரவணன்

2025 புத்தாண்டு ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ முழக்கத்துடன் (Slogan) ஆரம்பித்திருக்கிறது. 

ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க அத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து அத்திட்டத்தைப் பிரகனடப்படுத்தி நீண்ட உரையையும் வழங்கினார். அந்நிகழ்வில் பல வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும், அரசாங்கத் தலைவர்களும், அதிகாரிகள் பலரும் கூட கலந்துகொண்டிருந்தனர்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயலணியொன்றும் உருவாக்கப்பட்டு, அதற்கான காரியாலயம், வேலைத்திட்டம், அனைத்தும் தொடக்கப்பட்டு வேகமாக பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

சகல வலதுசாரிக் கட்சிகளும் இவ்வாட்சியைக் கவிழ்ப்பதற்கு மறைமுகமாக அணிதிரண்டபடி நாளாந்தம் அவதூறுகளால் போர் தொடுப்பது எதிர்பாரக்காதவை அல்ல. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் தொடக்கப்பட்டு இந்த பத்து நாட்களில் முட்டையில் மயிர்பிடுங்க முயற்சிக்கும் போக்கை கவனித்தாலே நமக்கு அவர்களின் கையாலாகாத்தனமும், வங்குரோத்துத் தனமும் எளிமையாகப் புரிந்துவிடும்.


சுதந்திர காலம் தொட்டு முழக்கங்கள்!

“கிளீன் ஸ்ரீ லங்கா” என்பது இன்றைய ஆட்சியின் பிரதான முழக்கங்களில் ஒன்று. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான முழக்கங்களை (Slogans) சகல ஆட்சியிலும் கவனிக்கலாம்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு (பெயரளவில்)  ஓராண்டுக்கு முன்னரே சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடந்துவிட்டது. 1948 இல் இலங்கை சுதந்திர பிரகடனத்தின் போது முதலாவது பிரதமராக டி.எஸ். சேனநாயக்க இருந்தார். இலங்கைக்கு சுதந்திரம் கோராமல் அரசியல் சீர்திருத்தத்தை மட்டுமே கோரிக்கொண்டிருந்த “கரு வெள்ளையர்” (சிங்கள மொழியிலும் “கலு சுத்தோ” என்று இவர்களை விமர்சிக்கும் வழக்கம் உண்டு) குழாமுக்கு    தலைமை வகித்தவர்காக டீ.எஸ்.சேனநாயக்க இருந்தார். ஆனால் டி.எஸ்.சேனநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 'தேசத்தின் தந்தை' என்ற நாமத்தை சூட்டியது. அதுவே பேச்சுவழக்கில் நிலைபெற்றுவிட்டது. ஜே.ஆர். 1962 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில் “1944 இல் கூட இலங்கை தேசிய காங்கிரஸ் சுதந்திரம் கோரவில்லை” என்று ஒத்துக்கொண்டார். (12.07.1962, ஹன்சார்ட் பக்கம் 83).

டி.எஸ். சேனநாயக்கவுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக மாறிய பிரதமரான டட்லி சேனநாயக்க "அரிசி தந்த தந்தை" என்று அழைக்கப்பட்டார். அவரது அரசாங்கம் இரண்டு கொத்து அரிசியை இலவசமாக வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். டட்லிக்குப் அடுத்து பிரதமராக ஆன சேர் ஜோன் கொத்தலாவல மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் அவ்வாறான நாமமெதுவும் சூட்டப்படவில்லை.

1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 24 மணி நேரத்திற்குள் 'சிங்களத்தை' அரச மொழியாக்குவதாக உறுதியளித்ததன் மூலம் அவர் சிங்கள தேசியவாதிகளின் கதாநாயகனாக ஆனார். சிங்கள பௌத்தத் தேசியவாதமே தன்னை ஆட்சியலமர்த்தும் என்பதை உறுதிசெய்துகொண்ட பண்டாரநாயக்க “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – (மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்) என்கிற அரசியல் முழக்கத்துடன் ஆட்சியிலமர்ந்தார்.

இறுதியில் அவருக்கு ஆதரவளித்த தரப்பினராலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  பண்டாரநாயக்கவின் இறுதி நாட்களில், அரசியல் அவதானிகள் அவரை பிற்போக்குவாதிகளின் கைதி என்று விமர்சித்தனர். 1956 ஆம் ஆண்டு மக்கள் ஐக்கிய முன்னணியின் அந்த ஜனரஞ்சக முழக்கம் இறுதியில் கைவிடப்பட்டது. 1970 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கைகோர்த்து ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்ததுடன் பிரித்தானிய “டொமினியன்” பெயரைக் கொண்ட பெயரளவிலான “சுதந்திரம்” மாற்றப்பட்டு பிரித்தானிய கிரீடத்துடனான உறவை முடிவுக்கு கொண்டு வந்தார். 1972 ஆம் ஆண்டு குடியரசாக ஆக்கப்பட்டு, குடியரசு அரசியலமைப்பும் கொண்டுவரப்பட்டது.

70இல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்ட போது "எங்கள் அம்மா கிட்ட வருவார். இரண்டு கொத்து அரிசி தருவார்" (அபே அம்மா லங்க எனவா ஹால் சேறு தெக்க தெனவா) என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.  இறுதியில் சிறிமாவோ, "நான் சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டு வந்து தருவேன்” என்றார். 1976 அளவில் நாட்டின் உணவு பற்றாக்குறை உச்ச அளவுக்கு ஏறி, இறுதியில் அதுவரையான வரலாற்றில் அதிக வெறுப்பை சம்பாதித்த அரசாங்கம் என்பதை 77 தேர்தல் முடிவுகள் புலப்படுத்தின. ஆனால் 1976  உணவுப் பற்றாக்குறை காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான பேரணி நடத்தியவர்கள் இவ்வாறு கோஷமிட்டு வீதிகளில் சென்றனர்.

" மிளகாய் இன்றி கறி உண்பேன்."

அரிசி இன்றி சோறுன்பேன்.

சர்க்கரை இன்றி தேநீர் குடிப்பேன்.

மேடம் நீங்கள் சொன்னால்

புல்லைக் கூட நாங்கள் உண்போம்"

என்றனர்


1977-ல் நடந்த தேர்தலில் சிறிமாவை தோற்கடித்து ஆறில் ஐந்து பெரும்பான்மை அதிகாரத்தைக் கைப்பற்றி பிரதமராக ஆனார் ஜே.ஆர்.ஜெயவர்தன. கண்டிய ரதல தலைவர்கள் ஜே.ஆருக்கு சிங்களவர்களின் அரசன் என்று முடிசூட்ட எடுத்த முயற்சிகள் பற்றி கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டன. 

அத் தேர்தலில் ஜே ஆரின் ஜனரஞ்சக அரசியல் முழக்கமாக “தர்மிஷ்ட சமாஜய” (நீதியான சமூகம்) என்கிற வாசகத்தை பிரச்சாரம் செய்திருந்தார். ஆனால் மக்கள் தந்த பேராதரவை முறைகேடாக பயன்படுத்தி; தனி ஒருவரின் கையில் அதிகாரங்களைக் குவிக்கக் கூடியதும், அராஜங்கங்களுக்கு வழிவகுக்கக் கூடியதுமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிமுறையை உருவாக்கி அநீதியான யாப்பை உருவாக்கினார். திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டை முதலாளிகளுக்கு சுரண்டவிட்டு நாடு பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகத்தை ஏற்படுத்தக் காரணமானார்.

1982 ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய பொதுத் தேர்தலையே நடத்தாமலேயே ஆட்சியை நீடிப்பதற்காகாக குறுக்கு வழியில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியை நீடித்தார். அத்தேர்தலின் முழக்கமாக “இலங்கையை சிங்கப்பூராக ஆக்கிக் காட்டுவேன்” என்றார். அவருக்குப் பின் பிரதமர் பிரேமதாச ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.

“சமாதானம் மலரும், துயரங்கள் முடியும்” (සාමය උදාවෙයි, දුක්ගිනි නිමාවෙයි) என்கிற முழக்கத்துடன் பிரேமதாச ஆட்சியேறினார். இந்திய இராணுவத்தை விரட்டுவது, புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவது, வறுமை ஒழிப்பு, பத்து லட்சம் வீட்டுத் திட்டம் என திட்டங்கள் வகுத்தபோதும் அவற்றை நிறைவு செய்வதற்கு முன்னரே அவர் கொல்லப்பட்டார். ஜேவிபியை அடக்குவது என்கிற பேரில் ஏராளமான சிங்கள இளைஞர்களின் படுகொலைக்கு காரணமானார்.

1994 இல் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க நவீன விகார மகாதேவி என்று அழைக்கப்பட்டார். சமாதான தேவதை என அழைக்கப்பட்டார். சந்திரிகாவின் தேர்தல் முழக்கமாக “17 ஆண்டு ஐதேக ஆட்சி சாபத்தை நீக்குவது” என்பது ஒரு புறம் இருந்தாலும் அவரின் இன்னொரு பிரதான முழக்கமாக இருந்தது “சமாதானம். அதற்காகவே ‘வெண்தாமரை இயக்கம்’ போன்ற இயக்கங்களைத் தொடக்கி, அதிகாரப்பரவலாக்கம், புதிய அரசியலமைப்பு மாற்றம் என்றெல்லாம் முழங்கினாலும். இறுதியில் சமாதானமும் கைகூடவில்லை. அதிகாரப் பரவலாக்கமும் அரசியலமைப்பு முயற்சியும் காற்றில் தூக்கியெறியப்பட்டது. ஈற்றில் அடுத்த 1999 தேர்தலில் சந்திரிகா “சமாதானத்துக்கான போர்” என்கிற முழக்கத்தை தொடர்ந்தார்.

2005 தேர்தலில் மகிந்த வென்றார். அத்தேர்தலில் “ரணில் – புலி கூட்டு” என்று பிரச்சாரம் செய்த அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் “மகிந்த சிந்தனை” என்கிற முழக்கத்தையும் பிரகடனப்படுத்தினார். அவ்வாட்சியின் போது யுத்தத்த்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் என்று அவருக்கு 2010 இல் மேலும் சந்தர்ப்பம்  கொடுத்த மக்கள் அமோக வெற்றியை கொடுத்திருந்தனர். இக்காலப்பகுதியில் மகிந்தவின் ஆட்சியில் நடந்த ஊழல், துஷ்பிரயோகம், அராஜகம், அநியாயம் என்பவற்றால் நாடு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. ‘மகிந்த சிந்தனை’ முழக்கம் மகிந்தவின் குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டுமே பயன்பட்டிருந்தது. ஆனால் சிங்களத் தேசியவாதிகளால் மகிந்த மகாராஜா என்று அழைக்கப்பட்டார்.

மகிந்தவை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்காக பல தரப்பும் ஒன்றிணைந்து மைத்திரிபால சிறிசேன தலைமையில் “நல்லாட்சி” என்கிற தேர்தல் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியமைக்கப்பட்டது. “நல்லாட்சி” அரசாங்கம் என்றே அந்த ஆட்சியை அடையாளப்படுத்தும் சொல்லாடல் ஜனரஞ்சக பாவனையாக இருந்தது. “நல்லாட்சி” பாதிவழியிலேயே குழி பறிக்கப்பட்டு மகிந்தவின் கரங்களுக்கு மீண்டும் கைமாற்றப்பட்டது.

யுத்தத்தை வென்று கொடுத்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டைக் கொடுக்கவேண்டும்  என்கிற கோஷத்துடன் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற முழக்கத்துடன் 69 லட்ச வாக்குகளுடன்  அமோக வெற்றியுடன் சிங்கள பௌத்தர்கள் கோட்டபாயவை ஆட்சியில் அமர்த்தினார்கள். தன் சகோதரர்களால் சீரழிக்கப்பட்ட நாட்டை கோட்டாபயவால் சரி செய்ய வேண்டி ஏற்பட்டது. அதற்குள் நாடு குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையை எட்டியது. மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக வரலாறு காணாத அளவுக்கு வீதிகளில் வரிசைகளில் நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது கோட்டாவின் ஆட்சி.


அதன் விளைவு; “கோட்டா கோ” என்கிற முழக்கத்தை மக்கள் கையிலெடுத்து “அரகல”போராட்டத்தின் மூலம் கோட்டாவை விரட்டியடித்தனர். சிங்கள பௌத்தர்களால் துட்டகைமுனுவின் மறு அவதாரமாக கொண்டாடப்பட்ட கோட்டா இறுதியில் ஜோக்கராக வெளியேறினார். மகிந்த சாம்ராஜ்யம் அத்தோடு சரிந்தது. முடிவுக்கும் வந்தது.

பல தடவைகள் தேர்தலில் தோற்ற ரணில் விக்ரமசிங்க இலவசமாக ஜனாதிபதிப் பதவியை கோட்டாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். எஞ்சிய ஆட்சி காலத்தை நிதி வங்குரோத்து நிலைமையில் இருந்து தற்காலிகமாக நாட்டை பாதுகாப்பவராக தன்னை ஆக்கிக் கொண்டார்.

ஆனால் மக்கள் அதற்காக அவருக்கு 2024 தேர்தலில் வாய்ப்பைக் கொடுக்கவில்லை. மாறாக “மாற்றம்”, “மறுமலர்ச்சி” என்கிற முழக்கத்தையும் “நாடு அனுரவுக்கு” என்கிற முழக்கத்தையும் வரவேற்றார்கள். 76 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சி அதிகார முறைமையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் மக்கள்.

இவ்வாறான தேர்தல் முழக்கங்களுக்குப் புறம்பாக அரசாங்கங்கள் தமது வேலைத்திட்டங்களாக உப முழக்கங்களை வைப்பதுண்டு. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தமது புரட்சிகர மாற்றத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஐந்தாடுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் என்றெல்லாம் ஏற்படுத்தி மக்களை விழிப்புறச் செய்து மக்களையும் அப்பணிகளில் பங்காளிகளாக்கி அத்திட்டங்களை நிறைவேற்றிய உலக வரலாறுகளைக் கண்டிருக்கிறோம். அவை கலாசார புரட்சியாகயும், பண்பாட்டு மாற்றமாகவும் அறியப்பட்டதர்கான காரணம் அவை கட்டமைப்பு மாற்றத்துக்கான அடிப்படைகளை ஏற்படுத்தியமை தான்.

இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து இரு மாதங்களில் முன்வைத்தத் திட்டம் தான் “கிளீன் ஸ்ரீ லங்கா” என்கிற வேலைத்திட்டமும். முழக்கமும்.


லீ குவானின் “கீப் கிளீன் சிங்கப்பூர்”

உலக வரலாற்றில் இதற்கு முன்னர் இதே தலைப்பில் சில முன்னுதாரணங்கள் நமக்கு உள்ளன. சிங்கப்பூரின் சிற்பி என்று அறியப்பட்டவரான சிங்கப்பூரின் அன்றைய தலைவர் லீ குவான் "Keep Singapore Clean” (கீப் கிளீன் சிங்கப்பூர்) என்கிற முழக்கத்தின் மூலம் தான் நாட்டைக் கட்டியெழுப்பினார். அவர் 1968 ஆம் ஆண்டு அத்திட்டத்தை தொடங்கியபோது இன்றைய சிங்கப்பூரை எவரும் கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார்கள். 

லீ குவானுக்கு அன்று இலங்கை ஒரு முன்மாதிரியாக இருந்தது. இலங்கையைப் போல “சிங்கப்பூரை ஆக்கிக் காட்டுவேன்” என்று அன்று அவர் கூறியிருந்தார். ஆனால் இலங்கையோ மோசமான முன்னுதாரண நாடாக ஆக்கப்பட்டது. இனங்களின் உரிமைகளை சரிவரக் கையாளத் தவறியதே இலங்கையின் பின்னடைவுக்குக் காரணமென பிற்காலத்தில் லீ குவான் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் கிளீன்” திட்டமானது வெறும் தூய்மைத் திட்டமாக பிரகடனப்படுத்தவில்லை. மாறாக கல்வி, விழிப்புணர்வு, மக்களின் பொறுப்புணர்ச்சி பற்றிய நடத்தை மாற்றம், தொழிநுட்ப வளர்ச்சி, கழிவு முகாமைத்துவம் என்பன எல்லாமே அத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டன.  

காலப்போக்கில் உலகிலேயே தூய்மையான நாடாக அடையாளம் காணப்பட்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயர்ந்தது. இயற்கை வளம் எதுவுமற்ற சிங்கப்பூர் பிராந்தியத்தில் ஒரு வளர்ச்சியடைந்த நாடாக ஆனதை உலகே வியப்புடன் உற்று கவனித்தது. இன்று அப்பிராந்தியத்திலேயே குறைவிருத்தி நாடுகளின் மத்தியிலோர் வளர்ந்த நாடாக எழும்பியுள்ளது. அண்டைய நாடுகள் தமது நாட்டை ஒரு சிங்கப்பூராக ஆக்குவதற்கு கனவு கண்டனர்.

இறுதியில் 1970 களின் முடிவில் ஜே.ஆர். “இலங்கையை சிங்கப்பூராக ஆக்கிக் காட்டுவேன்” என்று தேர்தலில் வாக்கு கேட்கும் நிலைக்கு  இலங்கை உருவாகி இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.


மோடியின் கிளீன் இந்தியா திட்டம்

2014 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் "Swachh Bharat" சுவாச் பாரத் என்கிற கிளீன் இந்தியா திட்டத்தை ஒரு பெரிய திட்டமாகக் கொண்டு வந்தது. ஆனால் அத்திட்டமானது நேரடியாக “தூய்மை”யான இந்தியாவை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டது. இந்தியா முழுவதும் நெடுங்காலமாக நீடித்து வந்த மலசல வசதியின்மையை தீர்க்கும் திட்டம் இதில் முக்கிய அங்கமாக இருந்தது. இந்தியாவின் சனத்தொகை அதிகரிப்பும், வாழ்விட பெருக்கமும் தூய்மையற்ற ஒரு நிலைக்கு தள்ளிக்கொண்டே சென்றமையை உலக அளவில் கவனிக்கப்பட்டது. இந்தியாவை ஏளனம் செய்வதற்கான காரணியாக இந்நிலைமை வளர்ச்சியடைந்து இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கணிசமான அளவு இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது மட்டுமன்றி இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைந்தது. தூய்மை இந்தியாவின் அவசியம் பற்றிய தேவை தொடருந்தும் உணரப்படுவதற்கு இத்திட்டம் வழிகோலியது.


“கிளீன் சிறிலங்கா”

இன்றைய “தூய்மை இலங்கை” திட்டத்தின் வடிவம் மேற்படி இரு நாட்டு வடிவங்களில் இருந்து மாறுபட்டது. அதாவது வெறுமனே தூய்மைத் திட்டம் என்பதோடு மட்டுப்படாத; பறந்து விரிந்த திட்டம் இது. இன்னும் சொல்லப்போனால் லீ குவானின் திட்டத்தை விட விரிந்தது என்றே சொல்ல வேண்டும்.

தூய்மை என்பதன் அர்த்தம் விரிக்கப்பட்டு; அரசாங்கம், குடிமக்கள், சிவில் நிர்வாகத்துறை இவற்றின் நடத்தை மாற்றத்தை மைய இலக்காகக் கொண்டது கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம்.

அரசாங்கம் எத்தனை சிறந்த திட்டங்களைக் கொண்டுவந்தாலும் நடத்தை மாற்றம் (Attitude change) வளர்ச்சியுறாவிட்டால் அதில் எந்தப் பலனும் கிடையாது. எனவே தான் இதில் போலீசார், இராணுவத்தினர் மட்டுமன்றி சிவில் நிர்வாகத்துறையினர், துறைசார் வல்லுனர்கள் என்போரும் இந்த வேலைத்திட்டத்தின் இயக்குனர்களாக ஆக்கப்பட்டார்கள். நீதித்துறைக்கும் இதில் கணிசமான பொறுப்பு உண்டு.

பாதசாரிகள் முறையான கடவையில் கடக்க மாட்டார்களாயின், வீதிகளில் பொறுப்பற்று குப்பைகளை எறிவார்களாயின், வீதிகளில் பொறுப்பற்று வண்டிகளை செலுத்துவார்களாயின், அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தை நிதியையும், நேரத்தையும் துஷ்பிரயோயம் - விரயம் செய்வார்களாயின் எத்தனை சிறந்த ஆட்சியதிகாரம் இருந்தும் எதைத் தான் மாற்ற முடியும்.

தார்மீக கூட்டுப்பொறுப்பு அனைத்துப் பிரஜைக்கும் உண்டு. ஆட்சியை கட்சிகளிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அனைத்தையும் மாற்றிவிடுவார்கள் என்று கனவு காண முடியுமா. இதில் பிரஜைகளின் கடமையும் பொறுப்பும் என்ன என்பதே இன்றைய கேள்வி. பிரஜைகள் தமது கடமைகளையும், பொறுப்பையும் சரிவர செய்வதன் மூலமே உரிமைகளைக் கோருவதற்கான தார்மீக உரிமையையும் பெறுகிறார்கள்.

அது தேசத்தின் மீதான பிரக்ஞையில் இருந்தே புறப்படும். அந்த பிரக்ஞை செயற்கையாக உருவாக்கக் கூடியதல்ல. பழக்கவழக்க நடத்தைகள் சீரழிந்து போனதற்குப் பின்னால் ஒரு வரலாற்று நீட்சி உண்டு. அதுபோல சமூக, அரசிய, நிர்வாக அமைப்பு முறைக்கும் பங்குண்டு. இந்த கலாசார, பண்பாட்டுப் பரிவர்த்தனையை உருவாக்குவதற்கு படிப்படியான நடத்தை மாற்ற விழிப்புணர்வு அவசியம். உடனடியாக மாற்றிவிடமுடியாது.

கிளீன் சிறிலங்கா திட்டமானது குறைந்தபட்சம் அந்த நடத்தை மாற்ற விழிப்புணர்வுக்கான ஆரம்பத்தை தொடக்கி வைத்திருக்கிறது. அது கூட்டு உணர்வினாலும், கூட்டு முயற்சியாலும், மட்டுமே சாத்தியப்படுத்தலாம்.

தற்போது கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்கள் எதிர்க் கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளன.

”செயல் - அதுவே சிறந்த சொல்” என்பது சே குவேராவுக்குப் பிடித்த வாசகங்களில் ஒன்று. முழுநேர  தீவிர செயற்திறன் மிக்க, அர்ப்பணிப்புள்ள ‘சேகுவேரா’ இயக்கமொன்றின் ஆட்சி வேறெப்படி அமையும். இவ்வாட்சியின் மீது கொள்கை ரீதியான பல்வேறு விமர்சனங்கள் யாருக்கும் இருக்கலாம். அவ்வாறு விமர்சனங்களை இப்போது செய்யாதவர்களும் இனி வரும் காலங்களில் விமர்சனங்கள் கண்டனங்களில் இறங்கிவிடுவார்கள். அது அரசியல் நியதி. அந்த நியதிக்கு எந்த ஒரு ஆட்சியையும் விதிவிலக்கில்லை. வெறுப்பை சம்பாதிக்காத எந்த ஆட்சி தான் உலகில் நிலைத்திருக்கிறது.

ஆனால் வரலாற்றில் பல்வேறு விதத்திலும் வித்தியாசங்களைக் கொண்ட ஒரு ஆட்சியென்பது உண்மை. இவ்வாட்சி கொள்கை பிடிப்புள்ள இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கொண்ட கட்சியால் வழிநடத்தப்படுவது என்பது இலங்கையின் வரலாற்றுக்கு புதியதொன்று. இலங்கைப் பிரஜைகளுக்கு பரீட்சார்த்தமான ஒன்றும் கூட.

பிரதமர் அருணி ஜனவரி 21, 22 ஆகிய திகதிகளில் இதைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தைப் பற்றிய விரிவான விளக்கம் அதன் மூலம் எட்டும் என்று எதிர்பார்ப்போம்.

அதேவேளை அதன் மீதான நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் அத்திட்டத்தை நேர்த்தியாக்குவதும் நம் எல்லோருடையதும் கடமை.


நன்றி தினகரன் - 12.01.2025

ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை - என்.சரவணன்

“மூலோபாயமானது முழுப் போராட்டத்தின் மையமாகும்; அதற்கான பாதையின் தற்காலிக - உடனடி சமரே தந்திரோபாயமாகும்”

என்பார் லெனின் (“இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு” - நூலிலிருந்து).

இந்தியாவுடனான ஜேவிபியின் முரணையும் உறவையும் இந்தக் கோணத்தில் பார்ப்பதா என்பதே இந்த வாரம் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களாகும்.

இந்தியத் தலையீட்டு மரபு

கிறிஸ்துவுக்கு முன்னர் இருந்தே இலங்கை மீதான ஆக்கிரமிப்பு மரபு இந்தியாவுக்கு உண்டு.

இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஐதீகங்களைப் பலப்படுத்தி வந்த காரணிகளை சுறுக்கமாக இவ்விடயப் பரப்புக்குள் உள்ளடக்கலாம்.

  • தென்னிந்திய ஆக்கிரமிப்பு படையெடுப்புகள் 
  • காலனித்துவ கால இந்தியத் தமிழர்களின் குடியேற்றமும். சிங்களவர்களுக்கு அடுத்ததாக பெரும்பான்மை இனமாக அவர்கள் ஆனதும்.
  • 1920 களில் இருந்து இந்திய வம்சாவளியினர் வழியாக இந்தியத தலையீடுகளும், சிங்களத் தலைவர்களுடனான கடுத்து மோதல்களும்.
  • தென்னிந்திய திராவிட இயக்கங்களின் செல்வாக்கும், திராவிடஸ்தான் பீதியும்
  • இந்திய முதலீடுகளும், சுரண்டலும்
  • ஈழப் போராட்டமும் அதற்கான இந்திய மத்திய அரசினதும், தமிழ்நாடு அரசினதும் அனுசரணைகளும் ஆதரவும்
  • 1987 இல் இருந்து இலங்கை ஒப்பந்தமும், மாகாணசபை ஸ்தாபிப்பும்
  • விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இந்தியத் தலையீடுகள்
  • இந்திய – இலங்கை வர்த்தக ஒப்பந்தங்கள்
  • தமிழக மீனவர்களின் எல்லை மீறல்

இலங்கை மீதான தென்னிந்திய படையெடுப்புகள் பற்றி சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சத்தில் ஏராளமான கதைகள் உள்ளன. சிங்கள மக்களுக்கு இந்திய எதிர்ப்புவாத மனநிலையை நிறுவியதில் மகாவம்ச ஐதீக மரபுக்கு பெரும் பங்குண்டு.

அதேவேளை இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சியில் இந்திய பாரம்பரியங்களின் பங்கு (குறிப்பாக தென்னிந்திய வகிபாகம்) மறுக்க இயலாது. ஏறத்தாள மொழி, கலாசாரம், உணவு-உடைப் பண்பாடு, மதப் பாரம்பரியம், கலைகள் அனைத்திலும் இந்தியாவின் வகிபாகமின்றி இலங்கை வளர்ந்ததில்லை.

ஏன் சிங்கள இனத்தின் தோற்றமே இந்தியாவில் இருந்து வந்த விஜயன் மற்றும் அவனின் தோழர்களின் வழித்தோன்றல்களில் இருந்து உயிர்த்தது தான் என்பதை மகாவம்சமே விளக்குகிறது. பௌத்தம் அங்கிருந்து தான் வந்தது. சிங்கள மொழி உருவாக்கத்துக்கான அடிப்படை அங்கிருந்தே கிடைக்கிறது. எந்த சிங்கள பௌத்தத்தனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறப்படுகிறதோ அந்த சிங்களமும் பௌத்தமும் இந்திய இறக்குமதியே என்பதை எவரால் மறுக்க முடியும்?


ஜேவிபியின் இந்திய எதிர்ப்பின் பின்புலம்

இலங்கையின் வரலாற்றில் இந்தியாவை அதிகமாக எதிர்த்ததும், வெறுத்துமான சக்தியாக ஜேவிபியை துணிந்து குறிப்பிடலாம். “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்கிற கருத்தாக்கத்தை ஜேவிபி தோற்றுவித்தது 1968 ஆம் ஆண்டாகும். அதன்படி இந்திய எதிர்ப்பு இலங்கையின் அரசியலில் நேரடியாக தாக்கம் செலுத்தப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது.

இந்திய விரோதப் போக்கின் ஊற்று சீன மாவோவாத பின்னணியில் இருந்து தொடங்கியது என்று ஜேவிபியின் முதலாவது செயலாளரான லயனல் போபகே குறிப்பிடுகிறார். 

ரோகண விஜேவீரவும் ஜேவிபியின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருந்த அன்றைய இளைஞர்கள் பலரும் அதற்கு முன்னர் சண்முகதாசனின் சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். சண்முகதாசனின் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள். இந்தியாவுக்கு எதிரான சீன சார்பு பிரச்சாரங்களை உள்வாங்கியவர்கள்.

பிற்காலத்தில் சண்முகதாசன் ஈழப் போராட்ட இயக்கங்களிலேயே ஈபிஆர்எல்எப் இயக்கத்தை அதிகம் வெறுத்ததற்குக் காரணமும் கூட அவ்வியக்கத்தின் இந்திய சார்புக் கொள்கையும், இந்தியப் படையுடன் சேர்ந்து இயங்கியதும் தான். அதற்கு மாறாக  அவர் புளொட் இயக்கத்தினருடன் நெருக்கமாக இருந்தார். ஏனென்றால் ஈழப் போராட்ட இயக்கங்களிலேயே இந்திய எதிர்ப்பை அதிகம் கொண்டிருந்த இயக்கமாக புளொட் இருந்தது. “வங்கம் தந்த பாடம்” என்கிற நூலை வெளியிட்டு இந்திய எதிர்ப்பு கருத்தாக்கத்தை இயக்க உறுப்பினர்களுக்கு பாடமாக நடத்தியவர்கள்.

ஆனால் 71 கிளர்ச்சிக்குப் பின்னர் இந்திய எதிர்ப்பைக் கைவிட்டதாக குறிப்பிடுகிறார் லயனல் போபகே. ஆனால் 80 களின் அரசியல் கள நிலை மீண்டும் இந்திய எதிர்ப்பு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.


“அகண்ட பாரத” கோட்பாட்டிலிருந்து இந்தியா வெளியே வந்து விட்டதா என்றால்; இல்லை என்று கூறத் தயங்கத் தேவையில்லை. ஆனால் இந்திய காலனித்துவ அதிகாரத்தை நிறுவுவதாயின் அதனை நேரடியாக கைப்பற்றி மேற்கொள்ளவேண்டும் என்பதில்லை. புதிய உலக ஒழுங்கில் ஆக்கிரமிப்பானது ஆயுதங்களைக் கொண்டு  நிறுவது அல்ல. மாறாக பல்வேறு நுட்பமான வழிகள் இன்று வளர்ந்துவிட்டுள்ளன. நவகாலனித்துவ முறையியல் என்பது பொருளாதார, கலாசார, தகவல் தொழில்நுட்ப, செயற்கை நுண்ணறிவுப் பொறிமுறைகளால் வளர்த்தெடுக்கப்ப்பட்டுள்ளது.

முதலாளித்துவம், எகாதிபத்தியம் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் பட்டை தீட்டப்பட்டு மறுவடிவம் பெற்றுள்ளன. மறு கோட்பாட்டக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவை ஏகாதிபத்தியத்தின் தலைமையாக கருதிவந்த போக்கானது; இன்று அவ்வப்போதைய நலன்கள் சார்ந்து அடிக்கடி மாறி மாறி உருவாகிற அதிகாரத்துவ முகாம்களாக பரிமாற்றம் கண்டிருக்கிறது. அவ்வாறான ஆக்கிரமிப்பு கூட்டு நாடுகள்; அவ்வப்போது சேர்ந்தும், பிரிந்தும், புதிய கூட்டுகளை நிறுவிக் கொண்டும் பலவீனமான நாடுகளை சுரண்டும் உலகமே இன்று எஞ்சியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நிலையான - நிரந்தமான  கூட்டுகள் எதுவும் இல்லை. 

இந்தப் பார்வையில் இருந்தே இந்தியத் தலையீட்டின் பண்பையும் வடிவத்தையும், அளவையும் கணிப்பிட முடியும்.

1965 இல் ஆரம்பிக்கப்பட்டஜேவிபி 1968 ஆம் ஆண்டளவில் தமது உறுப்பினர்களை கோட்பாட்டு ரீதியில் வளர்த்தெடுப்பதற்காக  ஜே.வி.பி நடாத்திய பிரபலமான 5 வகுப்புகளில் முறையே "பொருளாதார நெருக்கடி", "சுதந்திரம்", "இந்திய விஸ்தரிப்புவாதம்". "இடதுசாரி இயக்கம்". "இலங்கையில் புரட்சிக்கான பாதை" என்பன அடங்கும்.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் அரசியல் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை தனது நான்காம் படையைப் போல பாவித்து வருகிறது என்கிற கருத்து மேற்படி கருத்தாக்கத்தின் அங்கம் தான்.

1970 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் “தேசபக்த மக்களுக்கான அறைகூவல்” என்கிற துண்டு பிரசுரத்திலும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் சுதேசிய அடுவருடிகள் ஐக்கிய தேசியக் கட்சியே என்று குறிப்பிட்டது. 

71 கிளர்ச்சி பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் முன் விஜெவேற சாட்சியமிளித்த போது எஸ்.நடேசன் இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி ஜேவிபி கொண்டிருந்த கருத்துக்களை உறுதி செய்ய பல கேள்விகளை கேட்கிறார். ஓயாமல் அதற்கு பதிலளித்த விஜேவீர.

ஒரு இடத்தில் “இந்திய முதலாளித்துவ வர்த்தகத்தின் நலன்களுக்கு இந்திய வம்சாவளியினர் சாதகமாக இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார். மேலும்

“தொழிலாள வர்க்கம் ஒரு தொழிலாள வர்க்கமாக ஒழுங்கமைக்கப்படாமல் போனால் தோட்டப்புற மக்கள் ஒரு புரட்சிகர சக்தியாக புரட்சிக்கு சேவை செய்யப்போவதில்லை. மாறாக முதலாளித்துவ வர்க்கம் அவர்களை எதிர்ப்புரட்சிக்குப் பயன்படுத்தும். நகர்ப்புறங்களிலும், சிங்கள பிரதேசங்களிலும், தமிழ் பிரதேசங்களிலும் இது தான் நிலைமை.” என்கிறார்.

71 கிளர்ச்சியை அடக்க இந்தியா

உலக ஏகாதிபத்தியங்கள் தமக்கு தேவைப்பட்டால் தனி நாடொன்றை பிரித்து கூறுபோடவும் முடியும், தேவைப்பட்டால் பிளவுபட்ட நாடுகளை இணைத்துவிடவும் முடியும் என்பதற்கு உலகில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

பங்களாதேஷ், நேபாள், பூட்டான், பாகிஸ்தான் போன்ற தனது நேரடி எல்லை நாடுகளிலும் இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட்டு மாற்றிய ஆட்சி மாற்றங்களை நாம் அறிவோம். 1988 இல் மாலைதீவைக் கைப்பற்றுவதற்காக புளொட் இயக்கம் மேற்கொண்ட சதியை இராணுவ உதவி அனுப்பி அதை முறியடித்ததையும் அறிவோம். அதுபோலவே 1971 ஜேவிபி மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் முடியடிக்க இந்தியா சகல உதவிகளையும் செய்தது.

அக்கிளர்ச்சியின் போது சிறிமா அரசாங்கம் வெருண்டு போயிருந்தது. உலக நாடுகளில் இருந்தெல்லாம் உதவி கோரியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அக்கிளர்ச்சியை நசுக்கியது.

71 ஏப்ரல் கிளர்ச்சி குறித்து வெளிவந்த பல நூல்களில் மிக முக்கியமான நூல் ஜேவிபியினரின் நியமுவா வெளியீடாக 931 பக்கங்களில் வெளிவந்த “71 ஏப்ரல் விசாரணை” என்கிற நூல்.   அதில் பல உத்தியோகபூர்வ அரச ஆவணங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை விமானப்படை தளபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிக்கையும் உள்ளங்டங்கும். அதில்

“சமர் நடந்த இடங்களில் இருந்து காயப்பட்டவர்களை கொண்டுவருவதற்காக இந்தியாவிடமிருந்தும், பாகிஸ்தானிடமிருந்தும் உதவி கோரினோம். அக்கோரிக்கையை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் 8 ஹெலிகொப்டர்களையும் 25 விமான ஓட்டிகளையும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் எமக்கு வழங்கின. அவற்றைக் கொண்டு விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கட்டுநாயக்க விமானத் தளத்தில் இவை தரித்திருந்தன.

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேலும் 150 பேர் கட்டுநாயக்க விமானத் தளத்தில் தரித்திருந்து இயங்கினார்கள்....”

80களில் இருந்து

1986 ஆம் ஆண்டு விஜேவீர எழுதிய “இனப்பிரசினைக்கோர் தீர்வு” நூலில் கூறப்பட்ட மூலோபாய சூத்திரத்துக்குள் அடக்கக்கூடியதல்ல தற்போதைய ஜேவிபியின் இந்தியா தொடர்பான மறு அவதார அணுகுமுறை.

ஆரம்பத்தில் இந்தியா என்பது ஒரு அரசியல், பண்பாட்டு, பொருளாதார ஆக்கிரமிப்பு நாடாக சித்திரித்து வந்த போதும்; மேற்படி நூலிலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா பாதுக்காக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருப்பது புலப்படுகிறது. இலங்கையை பிரித்து ஈழ நாட்டை உருவாக்கி அதை தமிழ் நாட்டுடன் காலப்போக்கில் இணைத்து; பின்னர் அண்டைய திராவிட மாநிலங்களையும் இணைத்துகொண்டு ஈற்றில் “திராவிடஸ்தான்” என்கிற நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் அடிப்படைத் திட்டமென்றும். இந்தியாவைத் துண்டாட முயற்சிக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சதியில் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து செயலாற்றுவது இரகசியமல்ல என்றும் குறிப்பிடுகிறார். (ப. 173,174)

இந்த நூலை விஜேவீர எழுதி ஓராண்டில் இந்திய விமானப்படை அத்துமீறி யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் உணவுப் பொதிகளை விமானங்களின் மூலம் போட்டமை, இந்திய மத்திய அரசின் மிரட்டல்கள், இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டம், மாகாண சபைகள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை, அப்படையின் அடாவடித்தனங்கள் எல்லாமே இந்தியா பற்றிய கண்ணோட்டத்தை மீண்டும் மாற்றியது. இந்திய ஆக்கிரமிப்பின் வடிவமே இந்தியாவின் போக்கு; என்கிற முடிவுக்கு வரவேண்டி இருந்தது.

மாகாண சபையை ஜேவிபி எதிர்த்தது இரு அடிப்படை காரணங்களால். ஒன்று அது நாட்டை பிரதேசங்களாக துண்டாடி பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால். அடுத்தது இந்தியாவின் அரசியல் தலையீட்டை இலகுவாக்குவதற்கு ஏதுவாக “வடக்கு - கிழக்கு தமிழர் சுயாட்சி” ஆகிவிடும் என்பதால்.

திருகோணமலை துறைமுகத்தின் மீதான அமெரிக்க ஆர்வத்துக்கு ஜே.ஆர் அரசாங்கம் கொடுத்த பச்சை சமிக்ஞையானது இந்தியா உடனடியாக களமிறங்கத் தூண்டியதன் காரணி என்பதை விஜேவீர அறிவார். அதேவேளை அமெரிக்காவை ஒருபோதும் இலங்கைக்குள் அனுமதிப்பதை விஜேவீர விரும்பாதபோதும்  இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் திருமலை துறைமுகத்தின் மீதான இந்தியா தனது செல்வாக்கை ஏற்படுத்தியதையும் எதிர்த்தார். இலங்கையின் இறையாண்மையின் மீதான அச்சுறுத்தலென்றும் பிரச்சாரம் செய்தார்.

87-89 காலப்பகுதியில் இந்திய எதிர்ப்பு வாதம் தலைதூக்கிய போது ஏறத்தாழ பெருவாரி சிங்கள சக்திகள் இந்தியாவை எதிர்த்து ஒன்றிணைந்தார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், பல்வேறு சிங்கள அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்தது மட்டுமன்றி அதற்குத் தலைமை தாங்கியது ஜேவிபி யின் முன்னணி அமைப்புகளின் ஒன்றான தேச மீட்பு முன்னணி.


எப்போதும் இந்திய அரசுடேன் நட்பைப் பேணி வந்த சிறிமா பண்டாரநாயக்கவும் இந்திய எதிர்ப்பில் முக்கிய பாத்திரம் வகித்தார். இந்தக் கூட்டணி சற்று பலமாக இருந்ததன் காரணம் அக்கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கிற பொதுக் கூட்டணி என்பதாகும். பத்தாண்டுகளாக ஜே ஆரின் அராஜக அரசாங்கத்தை எதிர்க்க வழி தேடிக்கொண்டிருந்த அச்சக்திகளுக்கு இந்தியாவின் அணுகுமுறையை இந்தியாவின் சண்டித்தனமாகவே  கருதியது. இலங்கையின் இறையாண்மையை ஜே.ஆர் இந்தியாவுக்கு பலியாக்கிவிட்டார் என்றே குற்றம் சுமத்தியது.

அவ்வாறு எதிர்த்த சக்திகள் 1987 க்குப் பின்னர் ஆட்சியிலமர்ந்த எந்த அரசாங்கமும் மாகாண சபை முறையை இரத்து செய்ய துணிந்ததில்லை. மாகாண சபையை தீவிரமாக எதிர்த்த முதன்மை சக்தியான ஜேவிபி கூட இறுதியில் அதனை எதிர்க்க முடியாத இடத்துக்குத் தான் வந்து சேர்ந்தது.

உள்ளூர் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி  ஆளும் கட்சிக்குள்ளிருந்தும் இந்திய எதிர்ப்புவாதம் தலை தூக்கியது. பிரதமர் பிரேமதாச, அமைச்சரவையில் இருந்த காமினி திசாநாயக்க, லிலித் அத்துலத் முதலி  உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் இந்திய எதிர்ப்புவாத அலையில் ஒன்றுபட்டனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் பிரேமதாச கலந்துகொள்வதை தவிர்த்தார். அந்த அலையின் ஒரு வடிவமாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது ரோஹித்த விஜிதமுனி என்கிற கடற்படை சிப்பாய் ஒருவரால் திடீரெனத் தாக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை பிரேமதாச விடுவித்தார்.

அரசாங்கத்துக்கும் – விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையின் போதும் இந்தியாவை பிரிவினைவாதத்துக்கு சாதகமான சக்தியாகவே ஜேவிபி பிரச்சாரம் செய்தது.

இவ்வாறான இந்திய எதிர்ப்புவாதத்துக்கு அப்போது தலைமை தாங்கிய சக்தியாக ஜேவிபி இருந்தது.

அப்பேற்பட்ட ஜேவிபி யின் மக்கள் செல்வாக்கையோ,  அரசியல் வளர்ச்சியையோ இன்றைய இந்தியா சாதகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இருதரப்பு தந்திரோபாய விட்டுக் கொடுப்புகள்

எதிர்ப்பரசியலை எங்கே செய்ய வேண்டும், சமரச அரசியலை எங்கே எப்போது, எந்த அளவுக்கு செய்ய வேண்டும் என்பதையும் NPP சரியாகவே அறிந்து வைத்திருக்கிறது. அதுவே இன்றைய தேவையும்.

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று வல்லரசுகளையும் சமமாக கையாண்டு வருவதில் இருந்து அதன் கவனமான ஆட்சிப் பயணத்தைக் கவனிக்கலாம்

மூலாபாயம் தந்திரோபாயம் பற்றிய மாக்சிய தத்துவார்த்த வழிகாட்டலை பிரயோகிப்பது எப்படி என்பதைப் பற்றி ஜேவிபி புதிதாக பாடம்  கற்க வேண்டியதில்லை.

தென்னாசியாவில் இந்தியா சண்டியர் தான். அதன் புவிசார் அரசியல் அணுகுமுறை என்பது தற்காப்பு இராஜதந்திர அணுகுமுறையோடு நின்றுவிடவில்லை.

இந்தியாவுக்கென்று அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆக்கிரமிப்பு குணம் இருக்கவே செய்கிறது. அது அரசாங்கங்களின் கொள்கையல்ல. இந்திய அரசின் நிலையான அணுகுமுறையே. இந்தியாவின் அனுசரணையின்றி அயல் நாடுகளில் எந்த ஆட்சியையும் நிறுவப்பட்டுவிடக் கூடாது இருந்து வரும் நாடு இந்தியா.

அதேவேளை இந்தியாவின் ‘அகண்ட பாரத’ முனைப்பிலிருந்து இந்தியா பின்வாங்கி விட்டது என்கிறார் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடுகையில் பிஜேபி ஆட்சியில் அப்படிப்பட்ட நெகிழ்ச்சி இருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. அகண்ட பாரத கருத்தாக்கத்துடன் இந்துத்துவ முலாமையும் பூசிக்கொண்டு ‘இந்துத்துவ ராமராஜ்ஜிய விஸ்தரிப்பு’க் கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது தற்போதைய பிஜேபி என்பதை நாமறிவோம். அந்த வகையில் இந்தியா என்பது தென்னாசிய பிராந்தியத்தில் நவகாலனித்தை பிரயோகிக்கும் நாடு என்பது பரகசியம்.

ஆனால் அளவு ரீதியில் அதற்கான முனைப்பு அத்தனை வீரியத்துடன் இல்லை என்பது ஒரு தற்காலிக ஆறுதல் எனலாம்.

எவ்வாறாயினும் “நாடுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல்” கோட்பாட்டின் பிரகாரம் அந்தந்த நாடுகள் தமக்கான பேரம்பேசும் ஆற்றலை வளர்த்து வைத்துக்கொள்வதும், பேணுவதும் அடிப்படியான தகுதிகளே. அந்தவகையில் இலங்கை என்கிற குட்டித்தீவின் பேரம் பேசும் ஆற்றலில் முதன்மையாக அதன் அமைவிடம் தகுதி பெறுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர் பிரதானமாக அமெரிக்கா, சீனா, இந்தியா,  ரஷ்யா போன்ற நாடுகளின் தலையீடுகளும், ராஜதந்திர ஈடுபாடுகளும் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். மற்ற காரணிகள் எல்லாம் அதற்கடுத்ததே.

இன்றைய இந்திய எதிர்ப்பாளர்கள்

இந்திய எதிர்ப்பை இன்றும் பேணி வரும் தரப்பு சிங்களப் பேரினவாதத் தரப்பே. ஆனால் புதிய அரசியல் நிலைமைகளின் கீழ் பலர் சற்று அடங்கி இருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்தர்களை தூண்டக் கூடிய நிகழ்வுகளுக்காக தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் தரப்பு அது. குறிப்பாக மாகாண சபை முறைமையை கலைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சக்திகளும் இதில் அடங்கும்.

இந்தியாவின் இராஜதந்திர வலைக்குள் NPP அரசாங்கம் சிக்கிவிட்டது என்கிற விமர்சனத்தையே அவர்கள் முன் வைக்கின்றனர்.

இந்தியாவுடனான NPP யின் ‘நட்பு கொள்ளும் அணுகுமுறை’ நடைமுறை அரசியலில் தவிர்க்க முடியாதது. எதில் பிடிவாதமாக இருக்கவேண்டும், எதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது நீண்டகால தேவைகளை மாத்திரம் கொண்டிருக்காது மாறாக சமகால நடைமுறை தேவைகளும் தான் வகிபாகம் செலுத்தும். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிற ஒப்பந்தங்களில் ஜேவிபி எதிர்த்து வந்த எட்கா ஒப்பந்தமும் கூட அந்த 34 ஒப்பந்தங்களில் அடங்கும்.

13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நிர்பந்திப்பது என்பது இந்தியாவின் மானப் பிரச்சினையாகவும் தொடர்கிறது. அதற்காக இந்தியா தனது பிரதமர் ஒருவரை காவு கொடுத்திருக்கிறது. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோரை இழந்திருக்கிறது. ராஜீவ் காந்தி இலங்கையில் தாக்கப்பட்டதை இலங்கைப் பெரும்பான்மை இனத்தவர்கள் பெருமிதமாகக் கருதி வருகிறார்கள். இத்தனைக்கும் பிறகும் மாகாண சபை தோல்வியுற்ற தீர்வாக தொடர்கிறது. இந்நிலையிலேயே பிரதமர் மோடியின் பேச்சில் 13வது திருத்தச் சட்டம் பற்றி அழுத்தங்களையும் கவனிக்கலாம்.

அதை விட அதிகமாக 87-89 காலப்பகுதியில் ஜேவிபி ஆயிரக்கணக்கான அதிகமான தமது தோழர்களையும் இதே காரணத்துக்காக விலைகொடுத்து இருக்கிறார்கள் என்பதையும் எளிமையாக கடக்க முடியாது.

அரசியல் களத்தின் இன்றைய வடிவம் மாறியிருக்கிறது.

ஜேவிபி யைப் போல NPPயானது இடதுசாரித் தனத்தில் தீவிரம் பேணும் இயக்கமல்ல. மாறாக சற்று தாராளவாத சக்திகளையும் இணைத்து கொள்கை நெகிழ்ச்சிப் போக்கைக் கொண்ட, இலங்கையின் இறைமையில் உறுதிகொண்ட; இலங்கைக்கான புதிய ஒழுங்கை வேண்டி நிற்கிற இயக்கமே NPP. அந்த வகையில் NPP என்பது ஜேவிபியின் கொள்கைகளில் இருந்து ஓரளவு விட்டுக்கொடுப்பையும் சமரசத்தையும் செய்து கொண்ட வடிவம் என்றால் அது மிகையில்லை.

இந்த விட்டுக்கொடுப்புகள் ஜேவிபியின் மூலோபாய – தந்திரோபாய அணுகுமுறையின்பாற் பட்டது என்று கூறமுடியும். அதே வேளை NPPயில் இருந்து கற்றுக்கொள்கிற நடைமுறைப் பாடங்கள் எதிர்கால ஜேவிபியின் மூலோபாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.


மூலோபாய – தந்திரோபாய மாற்றம்?

இந்தியா மீது ஜேவிபிக்கு இருந்த பார்வை மாறியிருப்பது போல நிச்சயமாக ஜேவிபிக்கு இந்தியா மீதிருந்த பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதற்கான  தேவை ஒருபுறம். அதைவிட இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பில் இலங்கையின் அமைவிடம் முக்கியமானது. தென்னாசிய நாடுகளுக்கு வெளியில் உள்ள நாடுகள் இலங்கையை கையாளக்கூடிய சாத்தியங்கள்; இலங்கையின் தேவைகளில் இருந்தே வழிதிறக்க இயலும். அப்படியாயின் இலங்கையின் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையானது இந்திய உபகண்டத்தின் இருப்பில் தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒன்று. அதன் நீட்சியாகவே ஒருவகையில் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணனாக தன்னை பேணிக்கொள்வதிலும், அதனை அனைவருக்கும் நினைவுறுத்துவதிலும் இந்தியா தீவிர வகிபாகத்தை செய்தாக வேண்டும். 

இதுவரை இலங்கையில் புதிதாக எவர் ஆட்சியேறினாலும் அவர்களின் முதல் ராஜதந்திர விஜயம் இந்தியாவுக்கானதாக அமைந்திருக்கிறது. அரச தலைவரின் முதல் விஜயம் இந்தியாவுக்கானதாக இருக்க வேண்டும் என்பதை ஒரு மரபாகவே பேணி வருகிறது. அது ஒரு புதிய அரச தலைவரை கௌரவிக்கும் நிகழ்வாக மாத்திரமன்றி, இந்தியாவின் ஆசீர்வாத சடங்காகவும், நல்லெண்ண சமிக்ஞைக்கான உடன்பாடுகளையும் கூடவே செய்துகொண்டு வழியனுப்பி வைப்பதையும் வழமையாகக் கொண்டுள்ளது.

மூலோபாயம் இல்லாத தந்திரோபாயம் என்பது காலப்போக்கில் தந்திரோபாயத்தையே மூலோபாயமாக மாற்றிவிடும் ஆபத்தை உருவாக்கிவிடும். அதுவே  ஈற்றில் சந்தர்ப்பவாத தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் ஆபத்து உண்டு.


இலங்கையை இந்தியாவின் அங்கமாக்கலாமா? காந்தி என்ன சொன்னார்?

மகாத்மா காந்தியிடம் எதிர்காலத்தில் இந்தியாவின் ஒரு பாகமாக இலங்கையை ஆக்குவது பற்றிய கேள்வியொன்றை ‘யங் இந்தியா’ (Young India 10.02.1927) பத்திரிகைக்காக ஒருவர் காந்தியிடம் கேள்வியைக் கேட்கிறார். காந்தி அதற்கு இப்படி பதிலளிக்கிறார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகிற நெருக்கமான இன, மொழி மற்றும் மத ஒற்றுமைகள் இருக்கும் நிலையில் எதிர்கால இந்திய சுயராஜ்ஜிய கூட்டமைப்பில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

“பிரிட்டிஷ் இந்தியா” என்பது ஒரு செயற்கையான வர்ணனையாகும். இது அந்நிய ஆதிக்கத்தை, அதாவது பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே நினைவூட்டுகிறது. ஆகவே அதன் எல்லை நம்மை அடிமைகளாக வைத்திருப்பவர்களின் விருப்பப்படி சுருங்குகிறது அல்லது விரிகிறது. மாறாக சுதந்திர இந்தியா ஒரு ஆக்கபூர்வ முழுமையாக இருக்கும். அதன் சுதந்திரக் குடிமக்களாக இருக்க விரும்புவோர் மட்டுமே அதில் சேர்க்கப்படுவார்கள். எனவே சுதந்திர இந்தியா அதன் புவியியல், இன மற்றும் கலாச்சார வரம்புகளைக் கொண்டிருக்கும். எனவே ஒரு சுதந்திர இந்தியா, பர்மியர்கள் விடயத்தில் இனம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரிக்கும், அது பர்மிய தேசத்திற்கு சக தோழர்களின் கரங்களை நீட்டி உதவும் அதே வேளையில், முழுமையான சுதந்திரத்திற்கான அவர்களின் உரிமையை அங்கீகரிக்கும், இந்தியாவின் அதிகாரத்தில் உள்ள வரையில் அதை மீண்டும் பெறவும் தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.

இலங்கையைப் பற்றி அவ்வளவு நம்பிக்கையுடன் என்னால் பேச முடியாது. நமக்கும் இலங்கைக்கும் பொதுவான கலாசாரம் இருந்தாலும், தென்னிந்தியர்கள் பெரும்பான்மையாக இலங்கையில் வசித்து வந்தாலும், அது ஒரு தனி கட்டமைப்பாகும். நான் கற்பனை செய்கிற இந்தியாவைப் பொறுத்தவரை எனக்கு ஏகாதிபத்திய அபிலாஷைகள் எதுவும் இல்லாததால், இலங்கையை ஒரு முழுமையான சுதந்திர அரசாகக் கருதுவதில் நான் திருப்தியடைவேன். ஆனால், அத்தீவின் மக்கள் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவார்களானால், இலங்கையை சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள நான் தயங்கமாட்டேன்.


இலங்கைக்கான எச்சரிக்கை சமிக்ஞைகளா இந்த ஓவியங்கள்

அனுரா குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலிலும், அவரின் தேசிய மக்கள் கட்சி பாராளுமரத் தேர்தலிலும் வெல்லும் என்பதை இந்திய உளவுத் துறையினர் கடந்த ஆண்டு இறுதியிலேயே கணித்திருந்தது உண்மை.

பெப்ரவரி மாதம் அனுரவை இந்திய மத்திய அரசாங்கம் இந்தியாவுக்கு அழைத்து பல சந்திப்புகளை மேற்கொண்டது அதன் விளைவாகத் தான்.

அந்த சந்திப்புகளின் போது வழமையான சாதாரண உடையில் அனுர பிரசன்னமளிக்கவில்லை. மாறாக கோர்ட் சூட் டையுடன் மிக மிடுக்காக அந்த சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் ஜனாதிபதியானதும் டிசம்பரில் மோடியின் அழைப்பின் பேரில் சந்தித்த வேளை கூட மிகச் சாதாரண வெள்ளை சேர்ட்டுடனேயே சந்திப்புகளின் பொது அவர் காட்சியளித்தார்.

சரி அது இருக்கட்டும் அதை விட இன்னொரு சுவாரசியமான ஒரு விடயத்தை கவனிக்க முடிந்தது. கடந்த பெப்பரவரி மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் அனுர குமார திசாநாயக்கவை அவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு அழைத்து சந்தித்த வேளை ஜெயசங்கர் அனுரவை இருத்தியிருந்த இடத்தை எத்தனை பேர் கவனித்து இருப்பீர்கள் தெரியாது.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த அந்த இருக்கைகளின் நடுவில் ஒரு ஓவியம். அந்த ஓவியம் சொல்லும் செய்தி என்ன?

இராமர் இலங்கை அரசன் இராவணனை “இராட்சசனை” வென்று திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பதனை அடையாளப்படுத்தும் ஓவியம் இது. தர்மத்தை நிலைநாட்டியதனை அர்த்தப்படுத்தும் வகையிலான குறியீடு இது.

கோட்டபாய ஜனாதிபதியாக ஆனபோது 2021 பெப்ரவரியில் டில்லிக்கு அழைக்கப்பட்ட வேளை பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இலங்கையில் ராவணனுக்கு எதிராக, ராமர் போர் புரியும் தஞ்சாவூர் ஓவியத்தை, கோத்தபய ராஜபக்சேவுக்கு காட்டியா நிகழ்வைப் பற்றி அப்போது தினமலர் பத்திரிகையும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

அதன் மூலம் நாட்டின் வலிமையையும், ஹிந்து மதத்தின் பெருமையையும், தன் ஆளுமையையும், பிரதமர் மோடி சூசகமாக அறிவித்திருந்தார் எனலாம்.

ஐதராபாத் இல்லம் என்று அழைக்கப்படும் அந்த இல்லத்தில் இரு நாடுகளின் தலைவர்கள் அமர்ந்து பேசும் அறையில், பிரபல ஓவியர் ரவிவர்மா அல்லது வட மாநில ஓவியர் வரைந்த பல ஓவியங்கள் அங்கே மாட்டப்பட்டுள்ளன. அங்கே இருந்த ராமர் பட்டாபிஷேகம் காணும் ஓவியத்தை எடுக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். பிரதமர் மோடியின் உத்தரவின்படி, ராமர், சீதை, ராவணன், அனுமர் போன்றவர்களின் படங்களும், இலங்கையை போரின் மூலம் தீக்கிரையாக்கிய படமும், ராவணனுக்கு எதிராக ராமர் போர் புரியும் காட்சியும் நிறைந்த, பெரிய தஞ்சாவூர் ஓவியம் ஒன்று, அங்கு மாட்டப்பட்டது.


கோத்தபயா ராஜபக்ச, அங்கே வரவேற்கப்பட்டபோது அந்த ஓவியங்கள் அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் இந்தியா வலிமையான நாடு என்பதை உணர்த்தும் விதமாக அந்த ஓவியம் இருந்தது என்றும் செய்தி வெளியானது. மேலும், சீதையை ராவணன், இலங்கைக்கு கடத்தி சென்றதும், அனுமர், சீதையை கடல் கடந்து காப்பாற்ற சென்ற காட்சியும், இலங்கையை தீக்கிரையாக்கிய காட்சியும், அந்த ஓவியத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த ஒரு ஓவியத்தின் வாயிலாக, இந்தியாவின் வலிமையையும், ஹிந்து மதத்தின் பெருமையையும், கோத்தபயா ராஜபக்சேவுக்கு, பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் என்றே பேசப்பட்டது.

இராமாயணக் கதைகளை அப்படியே உண்மை என்று ஏற்று அக்கதையின் நாயகன் இராமரை வழிபடுவதையும், இராம ராஜ்ஜியத்தை உருவாக்குவதே தமது இலக்கு என்று பறைசாற்றிக்கொண்டு ஆட்சியமைத்திருக்கும் ஒரு அரசாங்கம்; அந்த இராமரின் எதிரியான இராவணனின் நாட்டையும், இராவணனுக்குப் பின் வந்த அந்த நாட்டின் தலைவர்களையும் எப்படி எதிர்கொள்ளும், அவர்களுக்கு எப்படியான சமிக்ஞைகளைக் கொடுக்கும் என்பதற்கான அடையாளங்களே இவை.

மறுபுறம் இந்தியாவை ஆக்கிரமிப்பாளர்களாக சித்திரிக்கின்ற சித்தாந்தத்தைக் கட்டமைத்தவர்களும், அக்கருத்தாக்கத்துக்கு ஒரு காலத்தில் தீவிரமாக தலைமை கொடுத்தவர்க்களுமான ஜேவிபியின் தலைவர் அனுர ஜனாதிபதியாகுமுன் வரவேற்றபோது இராம பட்டாபிஷேக படத்தின் அருகில் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். ஆனால் ஜனாதிபதியான பின்னர் ஜெய்சங்கருடனான டெல்லி சந்திப்பு ஒரு ஹோட்டலில் நிகழ்ந்ததாலேயோ என்னவோ அவ்வோவியங்களுக்கு வேலை இருக்கவில்லை போலும்.

ஜெயசங்கருடனான வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான பல்வேறு சந்திப்புகள் அதே அறையில் அதே பின்னணியில் நிகழ்ந்த படங்களை இணையத்தில் காணக் கிடைத்தது. ஆனால் பின்னணிப் படங்கள் மட்டும் மாறி இருப்பதைக் கவனிக்கும் போது இலங்கைத் தலைவர்களுக்கு குறிப்பான சமிக்ஞைகளை சூசகமாக அறிவிக்கும் சந்திப்புகளும் தானா இது என்கிற கேள்வி எழாமல் இருக்குமா?

தாய்வீடு - ஜனவரி 2025


மலையகத்தின் முதல் நூல் - கோப்பிக் கிருஷிக் கும்மி - என்.சரவணன்

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்று தேடி படி எடுத்து வந்த நூல் “கோப்பிக் கிருஷிக் கும்மி”. “மலையகம் 200” நினைவு கூறப்படும் இந்த வேளை மலையகத்தின் முதலாவது நூலாக கூறப்படுகிற இந்த நூலை பரவலாக கிடைக்க செய்ய வேண்டியது நமது கடமை என உணர்ந்தோம். இதனை பற்றிய விபரங்களை சேகரிப்பது எடுத்து வருவது, தொகுப்பது, சரி பார்ப்பது, வெளியிடுவது என்கிற கட்டங்களைப் பற்றி பிரமிளாவும் நானும் அதிகம் உரையாடினோம். அதன்படி நாங்கள் தீவிரமாக இயங்கியதன் மூலம் “கோப்பிக் கிருஷிக் கும்மி’ நூலை குமரன் பதிப்பகத்துக்கு ஊடாக வெளிக்கொணர்ந்தோம்.

1869 ல் வெளியான ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ மலையகத்தின் முதல் நூல் என நமக்கு கண்டு பிடித்து கூறியவர் மு.நித்தியானந்தன் அவர்கள். “கூலித் தமிழ்” நூலில் அவர் அதைப் பற்றிய பல விபரங்களைக் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் உள்ள முதல் கட்டுரையும், பெரிய கட்டுரையும் அது தான்.

இலங்கையில் வெளியான முதல் நூல், இலங்கையின் முதலாவது தமிழ் நாவல், முதலாவது வரலாற்று நாவல், முதலாவது சிறுகதைத் தொகுப்பு முதலாவது என்பவற்றை மீள் கண்டு பிடிப்பு செய்து; அவற்றை மீள பதிப்புக்கும் முயற்சிகள் கடந்த சில தசாப்தங்களாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் மலையகத்தின் முதலாவது நூல் என கருத்தப்படுகிற ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’  (A Cummi poem on coffee planting) ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளைக் கொண்ட நூல். இதே காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் எல்லாம் ஆங்கிலத்திலும்; கூடவே அதன் மொழிபெயர்ப்பு தமிழிலும் சேர்த்தே வெளிவந்த ஒரு மரபைக் கொண்டிருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். இந்த நூலில் உள்ள 280 கும்மிப் பாடல்களும் இடது பக்கத்தில் ஆங்கிலத்திலும், வலது பக்கம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் என வெளிவந்ததைக் கவனிக்கலாம்.

இலங்கையின் மிகத் தரமான வாசனைத் திரவியங்களை அடையாளம் கண்டதாலேயே இலங்கை முதற் தடவை போர்த்துகேயரின் ஆக்கிரமிப்புக்கும், காலனித்துவ ஆட்சிக்கும் இலக்கானது. அவ்வாறு போர்த்துகேயரும் அதன் பின்னர் ஒல்லாந்தரும் பின்னர் ஆங்கிலேயரும் கூட கறுவாவை அவர்களின் வருமானத்துக்கு உரிய முக்கிய உற்பத்தியாக ஆக்கிக் கொண்டார்கள். இலங்கையின் சுதேசிய பெருந்தோட்டத்துறையாக நாம் கறுவாவைத் தான் கொள்ளமுடியும். ஆங்கிலேயர்கள் கறுவா பெருந்தோட்டத்துறையை ஒரு கட்டத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அதற்குப் பதிலாக கோப்பியும்; கோப்பியின் அழிவைத் தொடர்ந்து தேயிலை இறப்பர் ஆகியவற்றையும் உற்பத்தி செய்தார்கள். அவையே ஆங்கிலேய கால பிரதான வருவாய்க்கான உற்பத்திகளாக ஆக்கப்பட்டன. அவற்றை பலப்படுத்துவதற்காகவே இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கினர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்த மூன்று பிரதான பெருந்தோட்டப் பயிற்செய்கைக்காகவே தென்னிந்தியாவிலிருந்து தமிழ் கூலித் தொழிலாளர்களையும் குடியேற்றினர். ஆக கோப்பி, தேயிலை, இறப்பர் ஆகிய இலங்கையின்  பிரதானமான மூன்று பெருந்தோட்டப் பயிர்களும் சுதேசிய மண்ணுக்கு உரியவை அல்ல. அந்த மூன்றுமே வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து செயற்கையாக இங்கே பயிரிடப்பட்டு – நடப்பட்டு பெருந்தொட்டத்துறையாக ஆக்கப்பட்டவை. அது போல அதை உருவாக்கவும், வளர்க்கவும், பலப்படுத்தவும், பாதுகாக்கவும் கூட வெளிநாட்டில் இருந்து தான் (தமிழகத்தில் இருந்து) தொழிலாளர்களையும் கொண்டு வந்தார்கள்.

இதில் கோப்பிப் பயிர்ச்செய்கை ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனைப் பெருந்தோட்ட உற்பத்தியாக விரிவுபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே. 1860களில் கோப்பிப் பயிர்செய்கை மோசமான நோயினால் பாதிக்கப்பட்டு முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலமாகும். அப்படி முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் தான் 1869இல் ஆபிரஹாம் ஜோசப் என்பவர் இந்த நூலை வெளியிட்டார். கோப்பி இலைகளை நோய் தாக்கி அழிவடையத் தொடங்கியது இந்த நூல் வெளிவந்த அதே ஆண்டு தான். இந்தப் பின்னணியிலேயே இந்த நூலின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

1860கள் 1870களில் கோப்பி பயிர்ச்செய்கை, அதன் பராமரிப்பு, அறுவடை, தயாரிப்பு, ஏற்றுமதி என பல விபரங்கள் அடங்கிய மேலும் சில ஆவணங்களும், நூல்களும் வெளிவந்திருப்பதையும் காண முடிகிறது. இதை நோக்கும் போது; அத்துறையை மீட்டெடுக்கும் கடைசி முயற்சியாக இப்படைப்புகள் வெளிவந்தனவா என்று எண்ணத் தோன்றுகிறது. கோப்பி அழிவுக்கு உள்ளான இக்காலக்கட்டத்தில் வெளியான பின் வரும் நூல்களை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

  • The Coffee – Planter of Ceylon வில்லியம் சபோனடீர் (William Sabonadiere) 1870
  • Observations on the Enemies of the Coffee Tree in Ceylon (John Nietner) 1861
  • Coffee planting in southern India and Ceylon (Hull, Edmund C. P), 1877
  • 1877 The First Year's Work in the Opening of a Coffee Estate (T C Owen), 1877 
  • Thirty years ago" or Reminiscences of the early days of coffee planting in Ceylon, (Millie, P. D.), 1878
  • Liberian Coffee in Ceylon: The History of the Introduction and Progress of the Cultivation Up to April 1878 (G. A. Cruwell), 1878
  • Ceylon Coffee Soils and Manures. A Report to the Ceylon Coffee Planters' Association (Hughes, John), 1879
  • The Cinchona Planter's Manual (Owen, T. C), 1881


கோப்பிக் கிருஷிக் கும்மிக்கு முன்னோடி?

இவ்வாறு இதைப் பற்றிய தேடல்களின் போது கண்டெடுத்த நூல்களில் முக்கியமான இன்னும் இரண்டு நூலகளைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். 

  1. Coffee-Planting in Ceylon 
  2. Mountain Life and Coffee Cultivation in Ceylon

இலங்கையில் கோப்பிப் செய்கை (Coffee-Planting in Ceylon) என்கிற நூல் 1961 இலேயே வந்து விட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது கோப்பிக் கிருஷிக் கும்மி வெளிவருவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து விட்டது. சுமார் 44 பக்கங்களை மட்டுமே கொண்ட இந்த நூலின் ஆசிரியர் அலிகுஸ் (Aliquis) என்று காணப்படுகிறது. அது ஒரு புனை பெயர் என்று கண்டு கொள்ள முடிந்தது.

யார் இந்த Aliquis என்று தேடித் பார்த்த போது அவர் வில்லியம் ரூட் (William Rudd) என்று அறிந்துகொள்ள முடிந்தது. வில்லியம் ரூட் இலங்கைக்கு அன்றைய கவர்னர் ரோபர்ட் வில்மட் ஹோர்டன் ஆரம்பித்த ஒரு தேங்காய் எண்ணை மில்லில் இஞ்சினியராக பணியாற்றுவதற்காக 1832 இல் வந்தவர். 

இலங்கையில் முதலாவது கோப்பித் தோட்டத்தை உருவாக்கியவர் ஜோர்ஜ் பேர்ட் (George Bird) என்பதை அறிந்திருப்பீர்கள். குண்டசாலையில் இருந்த கோப்பித் தோட்டத்தில் ஜோர்ஜ் பேர்டுக்கு உதவியாளராக வில்லியம் ரூட் நியமிக்கபட்டார். இலங்கையின் பெருந்தோட்டத்துறையின் வரலாற்றில் “சின்னத்துரை” (Sinna Durai) என்று முதலாவது அழைக்கப்பட்டவர் வில்லியம் ரூட். படிப்படியாக கோப்பித் தோட்டங்களுக்கு சொந்தக் காரர் ஆனார். அவரின் அடுத்தடுத்த பரம்பரைகளும் பல்வேறு முதலீடுகளுடன் பிற்காலத்தில் இலங்கையில் பெரும் பணக்காரர்களாக ஆனார்கள்.

இது ஒரு புறம் இருக்க கோப்பிப் செய்கைக்காக கடுமையாக உழைத்து வந்த காலத்தில் தனது அனுபவங்களைத் தான் கோப்பிச் செய்கையின் வழிகாட்டியாக “Coffee-Planting in Ceylon” நூலை ஜோர்ஜ் ரூட் எழுதினார். ஆனால் அதனை அவர் ஏன் புனைப்பெயரில் எழுதி லண்டனில் பதிப்பிட்டார்.  ஆனால் அதனை அவர் கட்டுரை வடிவத்தில் எழுதவில்லை. மாறாக கவிதை வடிவில் அதனை தந்திருக்கிறார்.

மொத்தம் ஏழு சிறு அத்தியாயங்களாக அந்நூலின் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வத்தியாயங்களுக்கு அவர் “Fytte” என்கிற சொல்லைப் பயன்படுத்தியதிலிருந்து அதை அவர் பண்டைய ஆங்கிலேய இலக்கிய கலை நயத்துடன் அணுகியிருப்பதைக் கவனிக்கலாம். “Fytte the Second” என்றால் இரண்டாவது பகுதி என்று பொருள். அப்பதத்தை கவிதைகலின் அங்கங்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே பயன்படுத்தி வந்திருப்பதை கவனிக்க முடிகிறது.

அதுபோல வில்லியம் ஸ்கீன் (William Skeen) 1870 இல் 188 பக்கங்களில் வெளியிட்ட Mountain Life and Coffee Cultivation in Ceylon என்கிற நூலைக் குறிப்பிட வேண்டும். வில்லியம் ஸ்கீன் ஆங்கிலேய காலனித்துவ காலத்தில் இலங்கை பற்றிய ஏராளமான நூல்களை எழுதியவர். ஒரு பதிப்பாளரும் கூட. அதேவேளை இந்த நூலுக்கு முன்னுரை 1868 ஆம் ஆண்டே எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லபோனால் இந்த இரு நூல்களும் கோப்பிக் கிருஷிக் கும்மிக்கு முன்னரே எழுதப்பட்டிருக்கிறது.

கோப்பிச் செய்கை பற்றிய விபரங்கள் தொடங்கி தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் வரை பதிவு செய்திருப்பது;  இந்த இருவரின் நூல்களிலும் உள்ள பொதுப்பண்பாகும். அதுபோலவே இரு நூல்களும் கவிதை வடிவில் எழுதியிருப்பதைக் காண முடியும்.

ஆபிரகாம் ஜோசப் பின்னர் கோப்பிக் கிருஷிக் கும்மியை எழுதுவதற்கான சிந்தனையும், வழிகாட்டலும் இங்கிருந்தே தொடங்கியிருக்கலாம் என்று நம்மால் கணிக்க முடியும். அல்லது இந்த நூல்களின் பாதிப்பு அவரையும் எழுதத் தூண்டியிருகிறது. அப்பிரகாம் ஜோசப் இதிலிருந்து வேறுபாடும் இடம் அவர் ஒரு தமிழர் என்பதும், அதனால் ஆங்கிலேய எழுத்தாளர்கள் பதிவு செய்யாத இந்தியத் தமிழர் தரப்பு விபரங்களையும் அவர் உள்ளடக்கியிருக்கிறார் என்பது தான். அதுவும் அவர் அன்றைய இந்தியத் தமிழ் மத்தியில் கதை சொல்லி வடிவமாக இருந்த கும்மி வடிவத்தை அவர் தெரிவு செய்கிறார். அதன் பொழிப்புரையை அதே நூலில் ஆங்கிலத்திலும் வழங்குகிறார்.


ஆபிரகாம் ஜோசப்

இந்தக் காலப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பெருவாரியாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு திரும்பத் தொடங்கியிருந்தார்கள். இந்தச் சூழலில் தான் கோப்பிப் பயிற்செய்கைக்கான வழிகாட்டல் கைநூலாக கும்மி வடிவத்தில் இதனை எழுதி முடித்திருக்கிறார் ஆபிரகாம் ஜோசப்.

ஆபிரகாம் ஜோசப் ஒரு இந்தியத் தமிழர் என்கிற வகையிலும், தமிழில் எழுதப்பட்டதாலும் இதனை நாம் மலையகத்தின் முதலாவது நூல் எனக் குறிப்பிடுவது மிகவும் சரியானதே.

நூலின் முகப்பில் ஆபிரகாம் ஜோசப் ‘Conductor, Central Province, Ceylon’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் கோப்பித் தோட்டத்தில் கண்டக்டராக இருந்திருக்கிறார் என்கிற குறிப்பு இந்த நூலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்ற முக்கிய சான்றாகும். கோப்பித் தோட்ட மெனேஜர்களின் உதவியாளர்களாகவும், ஓவர்சீயர்களாகவும் இந்த கண்டக்டர்கள் பணிபுரிந்துள்ளனர். அதுமட்டுமன்றி கண்காணிகளுக்கு மேற்பட்ட நிலையில் இந்த கண்டக்டர்கள் பதவிநிலை இருந்துள்ளது.

அன்றைய சூழலில் மத்திய மலைநாட்டுப் பகுதியில் அச்சுக்கூடங்கள் இராத நிலையில் மிஷனரிமார்களின் அச்சகங்கள் இயங்கிய கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலேயோ அச்சடிக்க வேண்டியிருந்தது. இந்த நூல் யாழ்ப்பாணத்தில் Strong and Asbury Printers இல் அச்சடிக்கப்பட்டிருகிறது. இந்த அச்சகத்தில் தான் இலங்கையின் முதல் தமிழ் பத்திரிகையான உதயதாரகை, பின்னர் கிரிஸ்தோபகாரி போன்றன பதிப்பிக்கப்பட்டது.

ஆபிரகாம் ஜோசப் பற்றி மேலதிக தகவல்களை ஆராய்கிறபோது “A vocabulary English, Burmese, Hindustani & Tamil In English characters. With the Burmese also in the native letters” என்கிற நூலின் இரு ஆசிரியர்களில் ஒருவராக Abraham Joseph என்கிற பெயரும் கிடைக்கிறது. இந்த நூலும் கிட்டத்தட்ட இதே காலத்தில் அதாவது 1877 இல் வெளிவந்திருப்பதாலும், தமிழைப் பற்றி எழுதியிருப்பதாலும் இது அவராக இருக்க வாய்ப்புண்டு என்றும் சந்தேகிக்க முடிகிறது.

இதைவிட The Planters' Colloquial Tamil Guide in Tamil and Roman Characters, Or, The Art of Speaking, Reading and Writing Tamil Without a Teacher and Tamil Characters நூலும் ஆபிரகாம் ஜோசப் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இது வெளியிடப்பட்ட ஆண்டும் 1872 ஆகும். இலங்கை பற்றியும், தோட்டத் தமிழ் மக்களின் மொழி சார்ந்தும் எழுதியிருப்பதால் நிச்சயம் அவரின் தமிழ், ஆங்கிய புலமையோடு தோட்டப்புற விடயதானங்களும் இணைவதால் இந்த நூல்கள் ஆபிரகாம் ஜோசப்பால் எழுதப்பட்டிருப்பதாகக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. அப்படிப் பார்க்கும் போது அவர் ஒரு அறிஞராக இருந்திருக்கிறார். மொழி வல்லமை மட்டுமன்றி தமிழ் - ஆங்கில இலக்கிய ஆளுமை மிக்கவராகவும் இருந்திருப்பதையும் கவனிக்கலாம். இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்மி ஒன்றை படைக்க முடியுமா? அதுவும் கும்மியை அதே தரத்துடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துத் தந்திருக்க முடியுமா? ஆங்கிலத்திலும் தமிழிலும் இப்படிப்பட்ட மொழிமாற்று உள்ளடக்கத்தைக் கொண்ட இலக்கியத்துக்கு இதுவே முன்னோடி என்றும் கூற முடியும்.

அதே வேளை கோப்பிக் கிருஷிக் கும்மி மலையகத்தின் துயரப் பதிவு அல்ல. ஆபிரகாம் ஜோசப்பின் நோக்கமும் மலையக மக்களின் துயரைப் பதிவு செய்வதல்ல. அவர் “இந்தியத் தொழிலாளர்கள் தமது தாய் நாட்டில் இருப்பதை விடவும் கோப்பித் தோட்டங்களில் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள்” என்று The Overland Ceylon Observer (13.03.1969) பத்திரிகையில் எழுதியதைப் பார்க்கும் போது அவர் இந்தியத் தொழிலாளர்கள் சொந்த நாட்டில் இதைவிட துயரங்களை அனுபவித்தமையையும் பதிவு செய்திருக்கிறார் என்றும் கொள்ள முடியும். ஆனால் அடுத்ததாக அவர் “ஆகவே... தமது எசமானர்களுக்கு நன்றி விசுவாசம் கொண்டவர்களாய், நல்லபணிவோடு நடந்துகொள வேண்டும்” என்றுக் கூறுகையில் அவர் தனது எசமான விசுவாசத்தை உறுதி செய்யவே விரும்புவதை காண முடிகிறது. ஆங்கிலேயே துரைத்தனத்தையும், நலன்களையும் பாதுகாப்பதே இந்த நூலின் அடிப்படை நோக்கமாகக் கொண்டாலும் கூட இது கோப்பிப் பயிர்ச்செய்கை பற்றிய கைநூல் தான். கோப்பிப் பயிர்ச்செய்கை முறைகளை கும்மிப் பாடலாக விபரித்துச் செல்வது இந்நூலின் முக்கிய இலக்கியச் சிறப்பியல்பு எனலாம். 

அதுபோல மலையகத்தின் சிறுதெய்வ வழிபாடுகளில்ஒன்றான முனியாண்டி வழிபாட்டை கேலி செய்வதையும் காண முடிகிறது.

துரைத்தனத்தினதும், வெள்ளைத்தனத்தினதும், காலனித்துவத்தினதும், கத்தோலிக்க ஆதிக்கத்தினதும், ஆங்கிலேயத்தினதும், ஆண்டான்தனத்தினதும் கைக்கூலியாகவே ஆபிரகாம் ஜோசப் இயங்கியிருக்கிறார் என்பதையும் இந்த நூலின் மூலம் இனங்காண முடியும். 

இதனாலேயே சிலர் இது மலையக மக்களின் முதலாவது நூல் என்கிற அந்தஸ்தை கொடுக்க மறுப்பதையும் காண முடிகிறது. ஆனால் இந்த காரணங்களால் ஒரு வரலாற்று பதிவை மறைத்துவிட முடியாது. மறைக்கவும் கூடாது. அதன் மீது விமர்சனங்களை வேண்டுமென்றால் பின்னர் வைத்துக் கொள்ளலாம். காய்தல் உவத்தலின்றி இது போன்ற ஆவணங்களை அணுகினால் மட்டுமே நம்மால் சரியானதொரு வரலாற்றை மீட்டெடுக்க முடியும்.

“இந்த நூலின் மூலம் கோப்பித் தோட்டங்களில் வேலை பார்க்க எதிர்காலத்தில் இங்கு வரவிருக்கும் தொழிலாளர்களும் இதன் மூலம் இலங்கைக்கு வர மிகவும் பிரியப்படுவர்” என்று அவர் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்வதற்கான முயற்சியில் இந்த நூலின் பாத்திரத்தின் மூலம் எதிர்பார்ப்பதாகவும் கருத முடியும்.

கூலிகளுக்கு வாசித்து காட்டுவதற்காக ஒவ்வொரு கண்டக்டருக்கும் ஒவ்வொரு கங்காணிக்கும் குறைந்தது இந்நூலின் ஒரு பிரதியையாவது தோட்ட முதலாளிகள் வழங்கி உதவ வேண்டும் என்றும் கோருகிறார். ஆள் திரட்டும் பிரச்சாரக் கருவியாக இந்த நூலை உபயோகித்திருக்கிறார் என்று இதன் மூலம் தெளிவாகிறது. கோப்பி செய்கை பலவீனப்பட்டு வேலை இன்றி தாயகத்துக்கு திரும்பும் காலத்தில் இந்த கோரிக்கை எழுந்ததையும் வைத்தே இதனை நோக்க வேண்டும்.

கும்மிப் பாட்டு

தமிழ்ப பண்பாட்டில் நெடுங்காலமாக நாட்டுப்புறக் கலை மரபின் அங்கமாக கும்மி பாடுவது இருந்து வருகிறது. பல பெண்கள் இணைந்து இன்ப உணர்வைப் புலப்படுத்தும் பாங்கில் கைகொட்டிக் களித்து பல பொருள் குறித்து வரும் கதைப் பாடல்களைச் சமய சமூக விழாக்களில் சுவை ததும்ப பாடியும், கலை சிறக்க ஆடியும் பிறரை மகிழ்விப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த வடிவம் இது. 

கும்மியடித்தல், கொம்மி கொட்டுதல், கொப்பி கொட்டுதல் எனப் பல பதங்களில் இது அழைக்கப்படுகிறது. அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் கும்மி பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன. 

“புரங்கொம்மை கொட்டினார் இல்” என்கிறது பதினெண் கீழ்கணக்கில் உள்ள ஒரு பழமொழி. கொம்மை என்பது “கைகளை குவித்துக் கொட்டுதல்” என்று பொருள். இவ்வாறு பண்டைய தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றில் கும்மியின் இடம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கும்மியை தனது கதை சொல்லி வடிவமாக தெரிவு செய்திருக்கிறார் என்றால் அன்றும் பிரபல வடிவமாக கும்மி இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது. பிற்காலத்தில் மெதுவாக அது வழக்கொழிந்து அருகிவிட்டதை காண முடிகிறது.

நன்றி - தினகரன் 05.01.2024

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates