இறுதியாக வெளிவந்திருக்கிற மகாவம்சத்தின் 6 வது தொகுதியானது 1978 – 2010 வரையான காலத்தைப் பற்றி பேசும் தொகுதி. இரண்டு பாகங்களும் சேர்த்து மொத்தம் ஆயிரத்துநூறு பக்கங்களுக்கு மேல் கொண்டிருக்கும் இத்தொகுதியானது 2016இல் வெளிவந்தது.
ஆட்சியாளர்களின் காலப்பகுதிகள் அரசியல், பயங்கரவாதம், சமூக நலன், கலாசாரம், சமயம், கல்வி, மருத்துவம், வெளியுறவுத்துறை போன்ற தலைப்புகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது தொகுதியைத் தவிர எந்த தொகுதியும் தமிழில் இதுவரை வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த முதலாவது தொகுதியை மாத்திரம் ஐந்து பேர் தமிழில் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவையும் கூட உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. சுருக்கிய பொழிப்புரையாகவோ அல்லது சொந்த விளக்கவுரையாகவே அமைந்துள்ளவை.
“மகாவம்சம்” தொடர்ச்சியாக 2500 வருட காலமாக எழுதப்பட்டு வருகிறது. 1956 இலிருந்து மகாவம்சத்தை சிங்கள பௌத்தக் குழுவொன்றைக் கொண்டு இலங்கை அரசே எழுதி வருகிறது.
இந்த 6வது தொகுதியானது ஜே.ஆர்.ஜயவர்தன காலம் தொடக்கம் மகிந்த ராஜபக்ச காலம் வரையானது அது. அதாவது ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து முள்ளிவாய்க்கால் முடிவு வரையிலானது.
தமிழர்களின் அரசியல் அபிலாசை, அதற்கான போராட்டம், பற்றிய அரசின் கொள்கை என்ன? வியாக்கியானம் என்ன? இதற்கு அரசு வினையாற்றிய விதம் என்பவற்றை அறிவதற்கு இந்த தொகுதியை ஆராய்வது முக்கியம். இத்தொகுதி இந்த செப்டம்பர் மாதம் தமிழில் வெளிவருகிறது.
இத்தொகுதி நூறுக்கும் மேற்பட்ட சிங்கள அறிஞர்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. அதனை பாலியில் மொழிபெயர்த்த ஐந்து பேரைக் கொண்ட அணிக்கு தலைமை தாங்கியவர் பேராசிரியர் மெதகம்பிட்டியே விஜிததம்ம தேரர்.
அவர் பௌத்த பாளி மொழி பேராசிரியர் என்பதோடு இலங்கையில் பாளி மொழி பற்றிய முதன்மையான அறிஞராக அறியப்படுபவர். சமீபத்திலும் மியான்மாரில் அவரது பாளி மொழி சேவையை கௌரவிக்குமுகமாக விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு நான் லண்டனில் பிரிட்டிஷ் நூலகத்தில் எனது ஆய்வுக்கான ஆவணங்களை தேடிக் கண்டெடுத்துக் கொண்டிருந்த நாட்களில், ஒரு நாள் பேராசிரியர் விஜித தேரரை அங்கே கண்டேன். அவர் ஒரு பழைய பாளி ஓலைச்சுவடியில் இருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார்.
அங்கே அவரோடு அறிமுகமாகிய சில நொடிகளில் அந்த ஓலைச்சுவடியை இலகுவாக பிரதிபண்ணும் தொழில்நுட்பத்தை அவருக்கு கற்றுக்கொடுத்தேன். அதிலிருந்து என்னோடு நட்புடன் பழகத் தொடங்கினார். ஆனால் அவர் தான் மகாவம்சக் குழுவில் பாளி மொழிக்கு பொறுப்பானவர் என்பதை அறிந்திருக்கவில்லை. மிக சமீபத்தில் உரையாடிக்கொண்டிருக்கும் போது தான் அவருக்கு ஊடாக அறிந்துகொண்டேன்.
அன்றே அவரிடம் மகாவம்சம் பற்றிய ஒரு நேர்காணலை கேட்டேன். ஆனால் அவர் பல நாடுகளுக்கும் பயணித்துக் கொண்டே இருப்பவர். பேராசிரியராக அவருக்கு இருக்கிற பணிச்சுமைகள் என்பவற்றின் காரணமாக இழுபறிப்பட்டு இறுதியில் அவருடன் நேர்காணலுக்கான வாய்ப்பு கிடைத்தது.
மகாவம்சம் தொடர்பில் முக்கிய சந்தேகங்களுக்கு அவரிடம் இருந்து விளக்கம் கிடைத்தன.
மகாவம்சமானது பாளி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழியாக்கம் செய்யும் மரபொன்று தொடர்ந்து வந்திருக்கிறது. தற்போது இறுதியாக வெளிவந்திருக்கும் மகாவம்சத்தின் 6வது தொகுதியானது பாளியில் எழுதப்பட்டு சிங்களத்துக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது சிங்களத்தில் இருந்து பாளிக்கு மொழிபெயர்க்கப்பட்டதா?
நான்காவது தொகுதி வரையுமான மகாவம்சம்; அதாவது யகிரல தேரரால் எழுதப்பட்டது வரை பாளியில் தான் மூல நூல் எழுதப்பட்டது. அவை அனைத்தும் அதன் பின்னர் தான் சிங்களத்திலோ, ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழிகளிலோ மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. ஐந்தாவதும் ஆறாவதும் மகாவம்சமே சிங்களத்தில் எழுதப்பட்டு பின்னர் பாளிக்கும் மொழிபெயர்க்கப்பட்டு கலாசார அமைச்சினால் வெளிக்கொணரப்பட்டது. ஐந்தாவது தொகுதி பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர அவர்களின் தலைமையிலான குழுவால் தொகுக்கப்பட்டது.
கைகரின் மொழிபெயர்ப்பே அடிப்படியான தொகுப்பாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது அல்லவா?
ஆம் ஆனால் பொல்வத்தே புத்ததத்த தேரர் கைகரின் மகாவம்சத்தை விமர்சித்து அதில் திருத்தப்படவேண்டிய பகுதிகள் பற்றி விரிவான நூல் எழுதியிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் 1959 ஆம் ஆண்டளவில் பாளி மொழி மகாவம்சத்தை சிங்கள எழுத்தில் முதல் தடவை எழுதி அவர் வெளியிட்டார்.
மகாவம்சத்தை முதற்தடவையாக மொழிபெயர்த்து வெளிக்கொணர்ந்தவர் உபாம் என்று கூறலாமா அல்லது டேர்னர் என்று கூறுவதா?
முதலாவது என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது டேர்னரின் பிரதியே. ஏனென்றால் அவர் தான் முழுமையாக மகாவம்சத்தை மொழிபெயர்த்தவர்.
முதன் முறை சிங்கள மொழிபெயர்ப்பு வெளிவந்தது எப்போது? யாரால் என்று கூற முடியுமா?
1874இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரரும், தொன் அந்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவே பண்டிதரும் முதற் தடவை சிங்களத்தில் மொழிபெயர்த்தார்கள். 1874இல் இதன் மொழிபெயர்ப்புக்கான பணிகள் இவர்களால் தொடங்கப்பட்டிருந்தன.
மகாவம்சம் என்கிற பெயரின் பின்புலம், என்ன? அதன் அர்த்தம் என்ன?
மகாவம்சத்தை எழுதிய முதல் ஆசிரியராலேயே ‘மகாவம்சம்’ என்று சூட்டப்பட்டாகிவிட்டது. புத்தரின் வம்ச கதையிலிருந்து இது ஆரம்பிக்கிறது. “அதி புனிதமான பரம்பரையில் பிறந்தவரான புத்தரை வணங்கி மிகையோ, குறையோ அன்றி சிரேஷ்ட உத்தமர்களின் வம்சாவளியைப் பற்றிய தலைமுறைகளின் கதையை, நிகழ்வுகளின் விவரங்களுடன் மகாவம்சத்தை வெளியிடுகிறேன்...” என்று தான் அதன் முதல் அத்தியாயமே தொடங்குகிறது. அதில் இருந்தே “மகாவம்சம்” என்கிற பெயர் இதற்கு சூட்டப்படுகிறது. மகா வம்சாவளி என்பதை அவர் புத்தரின் கதையுடன் தான் தொடர்புபடுத்துகிறார். அதனைத் தொடர்ந்து புத்தரின் கதைகள் தான் முதலில் தொடர்கின்றன. அதன் பின்னர் மூன்று தடவைகள் புத்தரின் இலங்கை விஜயம் பற்றிய விபரங்களுக்கு ஊடாக இலங்கையுடனான தொடர்புகள் கட்டியெழுப்பப்படுகின்றன.
இதன்போது மகாசம்மத அரசர்கள் என்போர் யார் என்றும், அவர்களின் பட்டியலும் வருகின்றன. மகாசம்மத்த என்கிற ஒரு அரசர் முன்னர் இருந்தார். அதன் பின்னர் ரோஜ, வரரோஜ, கல்யாண, வரகல்யாண, உபோசத்த போன்ற பல அரசர்களின் பெயர்ப் பட்டியல் உள்ளன. மகாமுனி எனப்படும் புத்தர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். அதில் மகாசம்மத்த என்கிற முதலாவது அரசரில் இருந்து அந்த வம்சக் கதைகள் ஆரம்பிக்கின்றன.
அப்படியென்றால் இந்த மகாசம்மத்த வம்சக் கதைகளுக்கும் இலங்கைக்கும் தொடர்பில்லை அல்லவா?
ஆம், இலங்கையுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த வம்சாவழிக் கதை அஜாசத்று என்கிற அரசர் வரை தொடர்கிறது. அதனைத் தொடர்ந்து முதலாவது தர்ம சங்கம் பற்றிய தகவல்களோடு அடுத்த ஐந்து சங்க மாநாடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. அசோக மன்னரின் ஆட்சியின் போது மூன்றாவது நடக்கின்றது. அதனைத் தொடர்ந்து மகிந்த தேரரின் இலங்கை விஜயத்தோடு இலங்கையும் இலங்கையின் வரலாறும் இணைத்துக் கொள்ளப்படுகிறது.
இலங்கைக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான உறவு மகிந்த தேரருடன் தான் ஆரம்பிக்கிறதா? அதற்கு முன்னர் இலங்கையில் இருந்த வரலாற்று மரபு, பௌத்த மரபு பற்றி உங்களால் என்ன கூறமுடியும்?
இலங்கைக்கு பௌத்தம் மகிந்த தேரருக்கு முன்னரே வரத் தொடங்கிவிட்டது. ஆனால் மகிந்த தேரரின் வருகையுடன் தான் ராஜாதந்திர ரீதியில் உத்தியோகபூர்வமாக பௌத்தம் இலங்கைக்குள் வந்ததைப் பற்றித் தான் மகாவம்சம் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு ஆப்பிரிக்காவுக்கு பல பௌத்த பிக்குமார் விஜயம் செய்ததாக பல வரலாற்று குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் அவை ராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்படாததால் தான் பெரிதாக அறியப்படாமல் போனது எனலாம்.
பௌத்த இலக்கிய மரபை நாம் அறிகையில் வினய பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது தான் மகிந்த தேரரின் பிரதான பாத்திரம். அவர் உபாலி என்கிற பௌத்த பிக்குவின் பரம்பரையுடன் தொடர்புபட்டவர். உபாலி தேரருக்கு பின்னர் தாசக, சோனக, சிக்கவ என்கிற மூன்று தேரர்கள் இருந்தார்கள். சிக்கவ தேரரின் சிஷ்யர் தான் மொக்கலிபுத்தஸ்ஸ தேரர், அவரின் சிஷ்யர் தான் மகிந்த தேரர். புத்தரின் காலத்தில் இருந்து அவ்வாறு இவர்களால் பேணப்பட்டு வந்த வினய பற்றிய பொறுப்பைத் தான் மகிந்த தேரர் இலங்கைக்கு கொண்டு வருகிறார். அவருடன் மேலும் நால்வர் விஜயம் செய்தார்கள். அவர்கள். உத்திய, சம்பல, பத்தசால, மகாநாம.
ஆக, இவர்கள் தான் புத்தரின் சூத்திர போதனைகளை இலங்கைக்கு எடுத்து வந்தார்கள். முதலாவது சங்க மாநாட்டின் போது புத்தரின் போதனைகளை தொகுத்து அவற்றை நான்கு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. தீக நிக்காய, வஜ்ஜிம, நிக்காய, சங்யுக்த நிக்காய, அங்குத்தர நிக்காய என்பவற்றை தொகுக்கும் பணிகள் அந்த நான்கு அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
நீங்கள் குறிப்பிடுவது திரிபீடகத்தையா?
அப்போது திரிபிடக என்கிற பதம் பியோகிக்கப்படவில்லை. அது பிற்காலத்தில் தான் நடக்கிறது. இலங்கைக்கு வந்த அந்த பௌத்த பிக்குமார் இந்த நான்கையும் தான் இலங்கைக்கு முதலில் கொண்டு வந்தார்கள். ‘வினய’வும், நான் முற்சொன்ன அந்த நான்கு நிக்காயக்களும் அவ்வாறு கொண்டு வரப்பட்டன. அதன்படி உத்தியோகபூர்வமாக பௌத்தத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சந்தர்ப்பமாக மகிந்தரின் வருகையை நாம் காண்கிறோம்.
சரி, திரிபீடக தொகுப்புகளில் புத்தரின் வாழ்க்கைச் சரிதம் பற்றிய விடயங்களும் அடங்கியுள்ளனவா?
புத்தர் துறவறம் கொள்வதற்கு முன்னரான வரலாறு மஜ்ஜிம நிக்காயவில், மஹா சச்சக்க சூத்திரம், போன்றவற்றில் உள்ளது. புத்தர் துறவறம் கொண்டதன் பின்னரான வாழ்க்கைச் சரிதக் கதைகள் வினய பீடத்தில், மகாவக்கபாதியில் முதலாவது சூத்திரத்தில் இருந்து காணப்படுகிறது. முழுமையான விவரணமாக அது இல்லாதபோதும் வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றியவை இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன.
அப்படி இருக்கையில் திரிபிடகத்தில் புத்தரின் இலங்கை விஜயம் பற்றிய குறிப்புகள் உள்ளனவா?
இல்லை. திரிபிடகத்தில் அப்படி எந்தக் குறிப்பும் கிடையாது. அதைப் பற்றிய மூலத் தகவல்கள் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. அதைத் தவிர வினய அட்டகத்தாவிலும் இதனைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.
அவ்வாறெனில் இலங்கைக்கு வெளியில் உள்ள பௌத்த இலக்கியங்கள் எவற்றிலாவது புத்தரின் விஜயம் பற்றிய தகவல் உள்ளனனவா?
இல்லை அப்படி ஒன்றும் கிடைத்ததில்லை. வம்சக் கதைகளிலும், அட்டகதைகளிலும் தான் இக்குறிப்புகள் எமக்கு கிடைக்கின்றன. மகாவம்சம், தீபவம்சம், அட்டகத்தா போன்றவற்றில் இருந்து தான் பின்னர் பூஜாவலியவிலும் சிங்கள இலக்கியங்களிலும் அவை இடம்பெறுகின்றன.
திரிபீடகத்தையும் மகாவம்சத்தையும் தொடர்புபடுத்தும் காரணிகள் பற்றி உங்களால் என்ன கூறமுடியும்?
இவை இரண்டுக்கும் இடையில் நேரடியான தொடர்பற்ற போதும், நமக்கு திரிபீடகம் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி மகாவம்சத்தில் விபரங்கள் உள்ளன. முன்னர் குறிப்பிட்டது போல மகிந்த தேரருக்கு ஊடாக கொண்டு வரப்பட்ட நிக்காயக்கள் பின்னர் திரிபீடகத்தில் அடங்குகின்றன.
திரிபீடகம் இலங்கைக்கு வெளியில் இருந்து கொடுவரபட்டிருக்கிற அதேவேளை இலங்கையிலும் அதன் பகுதிகள் எழுதப்பட்டிருக்கிறது அல்லவா?
இக்கருத்தை நாம் ஆய்வுபூர்வமாக அணுகுவதாயின் திரிபீடகத்தின் சில பகுதிகள் இலங்கையில் எழுதப்பட்டன என்பது குறித்து பல்வேறு ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுக்கிறது என்பது உண்மை. உதாரணத்துக்கு பரிவார்பாலிய என்பது இலங்கையில் உருவாக்கப்பட்ட திபீடகத்தின் மேலதிக இணைப்பு நூலாக கருதப்படுகிறது. ஆனால் திரிபீடக மரபைப் பொறுத்தளவில் அனைத்தும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவே நாம் எடுத்துக்கொள்கிறோம்.
வினய பீடகத்தின் கடைசிப் பகுதியான ‘பரிவார பாலிய’ என்கிற பகுதியானது இலங்கையில் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து சமீபத்தேய சில அறிஞர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் எங்களைப் போன்ற மரபார்ந்த பௌத்த தரப்பினர் அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. திரிபீடகம் முழுவதும் இந்தியாவில் எழுதப்பட்டதாகவே நம்புகிறோம். அது புத்தரின் காலத்தில் இருந்து தொடர்ந்து வருவதாக நம்புகிறோம். அப்பகுதி இலங்கையில் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தை கூறியவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் ஒலிவர் அபேநாயக்க அவர்கள்.
இலங்கைக்கு வெளியில் இருந்து தான் திரிபீடகம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதெனில் திரீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் பணிகளின் போது இலங்கைக்கு ஏன் முக்கியத்த்துவம் அளிக்கப்பட்டது? அதன் தயாரிப்பில் இலங்கைக்கு என்ன பங்கு?
அசோக மன்னனின் காலத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது தர்ம சங்க மாநாட்டைத் தொடர்ந்து இலங்கை உட்பட எட்டு நாடுகளுக்கு பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம தூதுவர்கள் அனுப்பப்பட்டனர். அவ்வாறு இலங்கைக்கு வந்த தூதுக் குழுவே மகிந்த தேரர் தலைமையான குழு. அவர்கள் தான் திரிடகத்தின் பகுதிகளை இலங்கைக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்துகிறார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் திரிபீடகத்த்தை வரைவிலக்கனப்படுத்தும் அர்த்தப்படுத்தல்களையும் தொகுதிகளையும் கொண்டு வருகிறார்கள்.
நீங்கள் அர்த்தப்படுத்துதல் என்று குறிப்பிடுவதைத்தான் ‘அத்தகத்தா’ என்று அழைக்கிறோமா?
ஆம், ‘அட்டகத்தா’ என்று இலக்கியங்களில் இவற்றைத்தான் நாம் குறிப்பிடுகிறோம். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பௌத்த சங்க மாநாடுகளின் போது பதிவுசெய்யப்பட்ட அட்டகத்தா மரபைத் தான் இலங்கைக்கு கொண்டு வந்தார்கள் என்கிறோம். அவ்வாறு கொண்டு வந்தார்கள் எனும் போது அவர்கள் அன்று நூல்களாக கொண்டு வந்தார்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. இந்து மத வேதங்கள் மனனம் செய்து பாதுகாத்தது போன்று அவர்கள் நினைவில் ஏற்றிக்கொண்டு வாய்மொழியாக இங்கு கொண்டு வந்து பரப்பினார்கள். குறு சிஷ்ய மரபாக வாய்மொழியில் கடத்தப்பட்டவை அவை. இவை அனைத்தும் மகதி மொழியில் தான் இருந்தன. மகதி மொழியில் இருந்தவை இலங்கையர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிங்கள மொழிக்கு கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு சிங்கள மொழிக்கு கொண்டு வரப்பட்டவற்றைத் தான் நாம் பிற்காலத்தில் ‘சிஹல அடக்கத்தா’ என்றும், ‘ஹெலட்டுவா’ என்றும் அழைக்கிறோம். இந்த சிஹல அட்டகத்தாவை மூலமாகக் கொண்டு தான் பின்னர் புத்தகோசர் ஐந்தாம் நூற்றாண்டில் பாளி அட்டகத்தாக்களை உருவாக்கினார்.
அப்படியென்றால் சிங்களத்தில் இருந்து தான் பாளிக்கு இவை வந்தன என்கிறீர்களா?
ஆம். முதலில் மகத மொழியில் இருந்து சிஹல மொழிக்கும், சிஹலத்தில் இருந்து பாளிக்கும் வெளிக்கொணரப்பட்டன. தற்போது நமக்கு பாலியில் வந்தவை தான் எஞ்சியுள்ளன. சிஹல மொழியில் வெளிவந்த எதுவும் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவற்றின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஈ.டபிள்யு அதிகாரம் அவர்கள் Early history of Buddhism in Ceylon என்கிற அவரின் நூலில் தொகுத்திருக்கிறார்.
அவற்றுக்கான மூலாதாரங்களாக எவற்றைச் சொல்லலாம்?
இலங்கையில் பல ஓலைச்சுவடிக் குறிப்புகளில் இத்தகவல்கள் அடங்கியுள்ளன. இதனைவிட கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து திரிபீடகம் இலங்கையில் தொகுக்கப்படத் தொடங்கியது. அதிலிருந்து திரிபீடகத்துடனான இலங்கையின் உறவு தீர்க்கமாகத் தொடங்குகிறது எனலாம். இவ்வாறு ஓலைச்சுவடியாக்கம் தொடர்கிறது. அவ்வோலைச்சுவடிகள் அழிவடையாமல் இருப்பதற்காக அவற்றை பிரதி செய்து ஏனைய இடங்களுக்கும் விநியோகித்து பாதுகாக்கும் மரபு இருந்து வந்திருக்கிறது.
இவ்வாறு தான் பல பௌத்த வணக்கஸ்தலங்களில் பாதுகாக்கப்பட்டன அல்லவா?
ஆம். அதுபோல் பிற்காலத்தில் 1868 இல் பெல்மடுவ என்கிற இடத்தில் உள்ள பன்சலையில் திரிபீடகத்தை மீட்டு தொகுத்து அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் பல இடங்களுக்கும் விநியோகிப்பதற்காக ஒரு சபை உருவாக்கப்பட்டு அப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வலானே சித்தார்த்த தேரர், ஹிக்கடுவே சுமங்கல தேரர், யாத்ராமுல்லே தர்மாராம தேரர் போன்ற பேர்பெற்ற முக்கிய பௌத்த மதத் தலைவர்களால் அந்த சபை தலைமை தாங்கப்பட்டிருக்கிறது. 1956 ஆம் ஆண்டு புத்த ஜெயந்தியைத் தொடர்ந்து திரிபீடகம் முழுவதையும் சிங்களத்துக்கு மொழிபெயர்க்கும் பணிகள் இலங்கை பௌத்த அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டன. இப்பணிகள் 1993 வரை மேற்கொள்ளப்பட்டு முழுமையாக நிறைவு செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தான் திரிபீடகம் தேசிய மரபுரிமையாகவும் பின்னர் சமீபத்தில் உலக மரபுரிமையாகவும் ஆக்கப்பட்டது.
அதாவது இலங்கை அளவுக்கு எந்த நாடும் திரிபீடகத்தை பாதுகாக்கும் முயற்சி எடுத்ததில்லை எனலாமா?
ஆம் நிச்சயமாக. இலங்கைக்கு வெளியில் தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளில் தான் திரிபீடகத்தின் முழுமையான பகுதிகள் பின்னர் கிடைக்கின்றன. ஆனால் அங்கே அவை கொண்டுசெல்லப்பட்ட விதம் பற்றி பார்க்கையில் இலங்கைக்கு இருக்கிற வரலாற்றுக் முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் எதுவும் அங்கு கிடைத்ததில்லை. சிலவேளைகளில் பத்து, பன்னிரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் திரிபீடகம் இலங்கையில் இருந்து கூட அங்கே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
இலங்கையில் இருந்து மொக்கலான மகாவம்சம் மியான்மருக்கு கொண்டு செல்லப்பட்டதைப் போல என்கிறீர்களா?
ஆம். திரிபீடகம் பற்றிய ஒரு தொடர்ச்சியான வரலாறு இலங்கைக்கு மட்டுமே உள்ளது.
இலங்கையின் மகாவம்சத்தை விட மொக்கலான மகாவம்சம் அளவில் பெரிதானது எப்படி?
மகாவம்சத்தில் காணப்படுகிற செய்யுள்கள் இரட்டை மடங்கு பெரிதாக இருக்கிறது. அவ்வளவு தான்.
அதாவது அதில் மேலதிக தகவல்கள் இல்லை என்கிறீர்களா?
பெரிதாக இல்லை.
சமீபத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்கள் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிற போது மொக்கலான மகாவம்சத்தில் ராஜாவலிய, பூஜாவலிய போன்ற இன்னும் பல இலக்கியங்களில் இருந்தும் பல தகவல்களை திரட்டி அவை பெருப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறார். நீங்கள் அக்கருத்தை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
மொக்கலான மகாவம்ச பிரதி குறித்து போதிய தேடலோ வாசிப்போ எனக்கு இல்லை. இனித் தான் தேடிப் பார்க்கவேண்டும்.
இனி, மகாவம்சத்தின் 6வது தொகுதியின் உங்கள் பாத்திரம் பற்றிய கேள்விகளுக்கு வருகிறேன். பாளி மொழியில் அதனை மொழிபெயர்ப்பதற்கான குழுவுக்கு நீங்களே தலைவர். இப்பணியின் சவால்களைப் பற்றிப் பகிருங்களேன்.
ஆம் எங்களுக்கு சிங்கள மொழிப் பிரதி ஒப்படைக்கப்பட்டது. அது இலகுவான பணியாக இருக்கவில்லை. சிங்களத்தில் உள்ளபடி அவ்வாறே பாளி மொழிக்கு கொண்டு வருவதில் உள்ள இலக்கிய சிக்கல்கள் குறித்து நாங்கள் அவர்களுக்கு விளக்கி இருந்தோம். உதாரணத்துக்கு சிங்களத்தில் ஒரு வாக்கியத்தில் இருக்கும் வசனத்தை அப்படியே பாளி செய்யுளுக்குள் சுருக்கமாக அடக்கிவிட முடியாது. செய்யுளாகவும் மாற்ற வேண்டும் அர்த்தம் பிழைக்காமலும் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் விட பாளி செய்யுள்கள் சந்த மரபில் அமைய வேண்டும். இப்படி பலவற்றை நாங்கள் கருத்திற் கொள்ள வேண்டி இருந்தது. சிங்களத்தில் பலவற்றையும் வெளிப்படுத்த வளமான பல சொற்கள் உள்ளன. சிங்களத்தில் உள்ளவை தகவல்பூர்வமானது. சகல தகவல்களையும் அவ்வாறே இடம்பெறச் செய்வது சவால் மிகுந்ததாக இருந்தது. எனவே முக்கியமான மையத் தகவல்கள் இழக்காதபடி அவற்றை தொகுக்க வேண்டியிருந்தது. மகாவம்ச உருவாக்க மரபில் முக்கிய தகவல்களை மாத்திரம் சுருக்கமாக சொல்லும் தொடர்ச்சி இருப்பதைக் காணலாம். ஒரு விடயத்தை பதிவுசெய்யும் போது மேலதிக விபரங்களை நீட்டாமல் இருக்கலாம் என்பது எங்கள் கருத்தாக இருந்தது. எனவே பல இடங்களில் செய்யுளாக்கும் பணிகளின் போது முக்கிய தகவல்களை மட்டுமே பதிவு செய்திருக்கிறோம். அதுபோல இடங்கள், பெயர்கள் என்பவற்றை பதிவு செய்யும் போது தற்போது இருக்கும் அதே பெயர்களைப் பதிவு செய்தோம். அவற்றை பாளிக்கு மொழிபெயர்க்கவில்லை. சில இடங்களில் விதிவிலக்காக மட்டும் பயன்படுத்தினோம். உதாரணத்துக்கு சிங்களத்தில் ‘ஜயவர்த்தன’ என்கிற பெயரை பாளியில் ‘ஜயவத்தன’ என்று குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் சகல பெயர்களையும் அவ்வாறு எங்களால் மாற்ற முடியவில்லை. அவ்வாறு மாற்றுவது நடைமுறைக்கு ஒவ்வாது என்று கருதினோம். பெரிய சவால் என்னவெனில் சிங்களத்தில் நிறைய விரித்திருந்தார்கள். பாலியில் அந்தளவு விரிப்பதில் நாங்கள் திருப்தியுறவில்லை.
இந்தத் தொகுதியில் அரசியல், பாதுகாப்பு போன்ற அத்தியாயங்களில் ஒரு வசனம் அறைபக்கத்துக்கும் மேற்பட்ட பந்தியாக இருப்பதை கவனித்தேன். தமிழுக்கு நான் மொழிபெயர்க்கும் போது எனக்கு அது பெரும் சவாலாக அமைந்தது. ஆனால் இலக்கியம் பற்றிய அத்தியாயம் இலகுவானதாக இருந்தது. சிறிய வசனங்கள் மொழிபெயர்ப்பை இலகுபடுத்தியது. வெவ்வேறு குழுக்களால் தொகுக்கப்பட்டதால் இது நேர்ந்திருக்கலாம். இலக்கியத்துக்கு பொறுப்பான குழுவல்ல மற்ற அத்தியாயங்களை எழுதியது என்பதை அடையாளம் காண முடிந்தது. முழு மகாவம்சத்தை ஒரே வசன அமைப்பை ஒழுங்குற பேணுவதில் அக்கறை கொண்டிருக்கலாம் என்று எனக்கு தோன்றிற்று. இதே சிக்கல் பாளி மொழிபெயர்ப்பின் போது நீங்களும் எதிர்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.
ஆம். சரியாகச் கூறினீர்கள். அந்தச் சிக்கலை நாங்களும் உணர்ந்தோம். இலக்கியப் பகுதி இலகுவானதாகவே இருந்தது. அதுபோல சில இடங்களில் திரும்பக் கூறுதல் இடம்பெற்றிருக்கிறது. பாளி மொழிபெயர்ப்பின் போது மீள வரும் இடங்களைத் தவிர்த்தோம்.
இதுவரை மகாவம்சத்தை இதுவரை தமிழில் மொழிபெயர்ப்பதில் அரசு அக்கறை காட்டாதது குறித்து உங்கள் தனிப்பட்ட கருத்தை அறிய விரும்புகிறேன்.
இலங்கை வாழ் பெருவாரி தமிழ் மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழிலும் இதனை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் கொண்டு வருவதில் என்ன சிக்கல் இருந்தது என்று தெரியவில்லை.
நன்றி - காக்கைச் சிறகினிலே - செப்டம்பர் - 2024