Headlines News :
முகப்பு » , » கொஸ்லாந்த மீரியபெத்த துயரத்தின் வயது ஒரு மாதம்…….?

கொஸ்லாந்த மீரியபெத்த துயரத்தின் வயது ஒரு மாதம்…….?


கடந்த மாதம் 29.10.2014 அன்று மலையக வரலாற்றில் கண்ணீராலும் மனத்துயரங்களாலும் செதுக்கப்பட்ட அத்தியாயங்கள் உருப்பெற்றன.

தேயிலை செடிக்கடியில் தமது வாழ்வை தினந்தோறும் தேடி தேடி துயரப்படும் எம் மலையக சமூக உறவுகளில் ஒரு பகுதியினர் வாழும் பதுளை மாவட்டத்திற்கு உட்பட்ட கொஸ்லந்தை மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி அநாதரவாக தமது உறவுகளை பிரிந்து கதறிய சோகம் இன்னும் அந்த மலைமுடுக்குகளில் ஓங்கி ஒழிக்கத்தான் செய்கின்றன.

இச்சோகம் இலங்கை வாழ் மக்களை மட்டுமல்ல முழு உலக மக்களினதும் அனுதாபத்தினையும், ஆதரவினையும் பெற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை புனரமைக்க இந்தியா, அமெரிக்கா உட்பட பல மேற்கு தேச அரசுகள் இம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டின. அவ்வாறு உதவிக்கரம் நீட்டிய போதும் இழந்த எம் உறவுகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் அம் மக்களின் நினைவுகளோடு மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த எம் உடன்பிறப்புகளுக்கு (29.11.2014) நாளை எமது துயரத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துகின்றோம்.

மனிதர்கள் இறந்த பின்னரே மண்ணில் புதைக்கப்படுகின்றனர் ஆனால் எம் உறவுகள் அன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டனர். இவ்வனர்த்தத்தில் 75 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் தமது பெற்றோரை இழந்து அநாதைகளாக மாற்றப்பட்டடுள்ளனர். அவர்களின் வாழ்க்கைக்கு இலங்கை அரசாங்கம் பெறுப்பேற்க வேண்டும். இந்நாளில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும், மலையகத்தின் ஏனைய அனர்த்த  பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட வேண்டும், மலையகத் தலைவர்களின் கையாலாகாதத்தனம் நீங்கி மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், எம் சமூகத்திற்கு சிறந்த கல்வி சிறப்பான சுகாதாரம், நியாயமான சம்பளம், காப்புறுதி போன்ற இன்னோரன்ன தேவைகளை வென்றெடுப்பதே எமது நோக்கமாக அமைய வேண்டும்.

அந்தவகையில் வரலாற்றில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், ஏமாற்றப்படுகின்றோம். இவற்றை உணராமையாலேயே இன்று எம் மலையக சமூகத்தின் ஒரு பகுதி சுவடுகள் இன்றி அழிக்கப்பட்டுள்ளது. இயற்கை இவர்களை அழிக்கவில்லை. திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளனர். எமது வளர்ச்சியை கண்டு மனம் பொறுக்காத தேசிய தலைவர்களால் வரலாறுகளில் நாம் அழிக்கப்பட்டோம். ஆனால் நாம் இன்று புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளோம்.

இவ்வனர்த்தம் இடம்பெற்று நாளைய தினத்துடன் ஒரு மாதம் நிறைவுறும் நேரத்தில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் உரிய வாழ்வாதார வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை. அதேவேளை இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களுக்கு குறித்த இடத்திலேயே நினைவுத்தூபிகள் அமைக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பிலிருந்தும் மலையக தலைவர்களிடமிருந்தும் வாக்குறுதிகள் வந்து குவிந்த போதும் இதுவரையில் இறந்தவர்களுக்காக ஒரு செங்கல்கூட நடப்படவில்லை. இது எமது மக்களின் மீதுள்ள அலட்சிய போக்கா? அல்லது காலத்தின் சாபமா? தெரியவில்லை.

இப்பேரனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகள் ஒரு பக்கம், அதேவேளை உயிருடன் பாதிக்கப்பட்ட மக்கள் மறுபுறமிருக்க. அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் மாற்றப்பட்டடுள்ளனர். அவர்களுக்கும் உரியதொரு விடிவு தினமாக இந்த அஞ்சலி தினம் அமைய வேண்டும்.

அனர்த்தம் ஏற்பட்டபோது குறித்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் இதுவரையில் அவ்வாறே வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அனர்த்தம் ஏற்பட்டதை அறிந்து எம் தொப்புள்கொடி உறவுகளுக்காக முழு மலையக சமூகமும் வீதியில் திரண்டது மலையக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் இனிவரும் காலங்களில் பதியப்படும்.

அத்தோடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்காக இம்மாத ஆரம்ப பகுதிகளில் பல தொழிளாலர்கள் தமது உறவுகளின் அவலத்தை ஆர்ப்பாட்ட பேரணிகள் மூலமாக உலகறியச் செய்தனர். இவ்வனர்த்தம் ஏற்பட்ட தினத்தினை மலையக வரலாற்றில் துக்க தினமாக ஒவ்வொரு வருடமும் அனுஸ்டிக்க வேண்டும். அன்றைய தினம் மலையக தியாகிகளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டும்.

உறவுகளே நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளீர்கள். அது வளர்ந்து விருட்சகமாகும் என்பது திண்ணம்.

நாளைய தினம் மலையகம் முழுவதும் மீரியபெத்த அவலத்தை நினைவு கூறும் நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவது எம்மை வாழவைத்த மலையக அன்னைக்கு செய்யும் எமது நன்றிக்கடனாக அமையும். இத்தினத்தில் ஆலயங்கள், வீடுகள், பொது இடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் கூட்டுப்பிரார்த்தனைகளில் மக்கள் ஈடுபட வேண்டும்.

அத்தோடு வீடுகளுக்கு முன்னால் விளக்குகளை ஏற்றி இறந்த எம் உடன்பிறப்புகளுக்கு எண்ணங்களால் உயிர்கொடுப்போம்.

இத்தினத்தில் எமது அடிமை வாழ்வகன்றிட, எம் கைகள் உயர்ந்திட, எஞ்சியிருக்கும் எம் சமூகம் மீட்சி பெற, இறந்து அமரத்துவம் பெற்ற உறவுகள் எம்மை ஆசிர்வதிக்கட்டும். மலையக சமூகத்திற்கு விடிவு வெகு தொலைவில் இல்லை. அடுத்த வருடம் இந்நாளில் (29.10.2015) எமக்குரிய உரிமைகளை வென்றெடுப்பதே இழந்த எம் உறவுகளுக்க செலுத்தும் காணிக்கையாகும்.

நன்றி.

துயரில் வாடும்
மலையக பேரிடர் கண்காணிப்பு குழு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates