”இன்னொரு மீரியபெத்த வேண்டாம்” நியுபேர்க் தோட்ட மக்கள் செங்கொடிப் போராட்டம்
தமக்கான குடியிருப்புக்களை வழங்குமாறு கோரி பண்டாரவளை எல்ல நியூபேர்க் தோட்ட மக்கள் இன்று செங்கொடிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வந்து தமது வாழ்க்கையை பெருந்தோட்டத் துறையின் வளர்ச்சிக்காய் உழைத்த தாம் இன்று நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
எப்பொழுதும் சரிந்து வீழ்ந்து விடலாம் எனும் அபாயம் நிறைந்த மலைகளில் போதிய இட வசதியற்ற லயன் அறைகளில் வாழையடி வாழையாய் தமது வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்னொரு மீரியபெத்த வேண்டாம் என்பதை சங்கேதமாக உணர்த்தும் வண்ணம் எல்ல மண்சரிவு அபாயப் பகுதியிலுள்ள நியூபேர்க் தோட்ட மக்கள் தமது இல்லங்களில் செங்கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயப் பகுதியிலிருந்து தாம் மீட்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பான குடியிருப்புக்கள் தமக்கு நிர்மாணித்துக்கொடுக்கப்பட வேண்டுமென்பதே இந்த மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.
மக்கள் பிரதிநிதிகள் தமது செங்கொடிப் போராட்டத்திற்கு செவிசாய்த்து தமக்கான குடியிருப்புகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டுமெனவும் எல்ல நியூபேர்க் தோட்ட மக்கள் வேண்டுகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் நிரந்தர குடியிருப்பினை வேண்டி எல்ல நியூபேர்க் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செங்கொடிப் போராட்டத்திற்கு அரசியல் தலைமைகள் செவிசாய்க்குமா?
எல்ல நியூபேர்க் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த செங்கொடிப் போராட்டம் மலையக மக்களுக்கு நிரந்தர குடியிருப்பை நிர்மாணிப்பதற்கான மறுமலர்ச்சிக்கு வழிவகுக்குமா?
நன்றி - news1st
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...