இலங்கையின் சிங்கள கிராமங்களின் அதிருப்தியை பிரதிபலித்த மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகரான ரோஹண விஜேவீர, இலங்கையின் இடதுசாரி அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் என்று இலங்கையின் இடதுசாரி அரசியல் ஆய்வாளரான பி.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழோசைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த செவ்வியின் முழுமையான எழுத்து வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
ஜேவிபியின் ஸ்தாபகரான ரோஹண விஜேவீர பற்றி இலங்கையின் இடதுசாரி அரசியல் ஆய்வாளரான பி.ஏ.காதர்
´எனக்கு ரோஹன விஜேவீரவை தனிப்பட்ட ரீதியில் தெரியும். ஏனென்றால் நான் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணை தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில் அதன் தலைவராக இருந்த இடதுசாரி எச்.என்.பெனாண்டோவின் சகோதரியைதான் அவர் திருமணம் செய்தார். அவருடைய திருமணத்தில் கலந்து கொண்ட மிக சிலரில் நானும் ஒருவன். பல தடவைகள் நாங்கள் சந்தித்திருக்கிறோம்.
விஜேவீரவை பொறுத்தளவில் இடதுசாரி வட்டத்தில் அவர் சம்பந்தமான மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று, சிலர் அவர் ஒரு சிஐஏ ஏஜன்ட் (CIA AGENT) என்று சொல்வர். இன்னொருசாரார் அவர் ஒரு எதிர்புரட்சியாளர் என்று சொல்கிறார்கள். இன்னொருசாரார் அவர் பல தவறுகள் செய்திருந்தாலும் புரட்சியாளர்தான் என்று சொல்கிறார்கள். இதிலே நான் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவன்.
அவர் தவறுகள் செய்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த மார்க்கம் இடதுசாரி இளம்வயது கோளாறோடு தொடர்புபட்ட மார்க்கமாகும். ஆனால் அவரை எதிர்புரட்சியாளர் என்றோ சிஐஏ ஏஜன்ட் என்றோ சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் சிங்கள கிராமங்களின் அதிருப்தியை பிரதிநிதித்துவப்படுத்தியவர். இலங்கை இடதுசாரி அரசியலில் அவர் ஒரு தனித்தன்மையை கொண்டவர்.
அதுவரைக்கும் தங்களை புரட்சியாளர்கள் என காட்டிக் கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் போக்குதான் காணப்பட்டது. ஆனால் நடைமுறைக்கு அந்த பக்கத்தை தள்ளியவர் ரோஹணதான். இது அவருடைய முற்போக்கு பக்கம். அடுத்த பக்கத்தில் அவர் அது சம்பந்தமான தெளிவோடு மக்களை அணிதிரட்டி அந்த போராட்டத்தை நடத்தினாரா என்ற சந்தேகம் வரும்போதுதான் அவர் விட்ட தவறுகள் வெளியாகின்றன. சாகச பாணியிலே அமைந்த ஒரு அவசரப்பட்ட கிளர்ச்சியாகத்தான் ரோஹணவின் புரட்சி முடிந்தது. விஜேவீரவை பொறுத்த என்னுடைய மதிப்பீடு இதுதான்.´
விஜேவீர போரட்டத்திற்கு முன்வைத்த கோரிக்கைகள் பற்றி பி.ஏ.காதர்...
´ஆரம்பத்திலேயே நான் சொன்னேன் அவரிடம் ஒரு சந்தர்ப்பவாதம் இருந்தது என்று. தனிப்பட்ட முறையில் பேசும்போது பல கொள்கைகளை ஒப்புக் கொண்டார். உதாரணமாக அவரது ஐந்து வகுப்புக்களிலே ஒன்று மலையக தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கால்கள், எதிர்புரட்சியாளர்கள் அவர்கள் அந்நியர்கள். அவர்களை ஒரு தொழிலாளர் வர்க்கமாகவே அவர் பார்க்கத் தவறினார். அந்த பார்வை பிறகு நாளடைவில் மாற்றம் பெற்றது.
அதேபோல் அவர் சில விடயங்களில் சுயநிர்ணய உரிமை பிரச்சினைகளில் கூட நானும் அவரும் விவாதித்திருக்கிறோம். அவருடைய கருத்து மாற்றமடைந்து வந்தது. ஆனால் சரியானது இதுதான் என்று அவர் புரிந்து கொண்டிருந்தார். சிங்கள இனவாதத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு ஏனைய சிறுபான்மை சமூகங்கள் பற்றிப் பேசலாம் என்ற அவரசத்தன்மை அதாவது எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற அவசரத்தன்மை, இனவாதத்தையும் பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாடு அவரிடம் இருந்தது. அது தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் அவர் ஒரு இனவாதி அல்ல. இதனுடைய நடைமுறையை ஜேவிபியில் பார்க்கலாம். 83 வன்செயலில் ஜே.ஆர்., ஜேவிபியை ஒழித்துவிட முயற்சித்த போது அவருக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. நான் இது சம்பந்தமாக ஆய்வு செய்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியும் தமிழ் தகவல் நிலையம் அதனை வெளியிட்டிருக்கிறது. ஜெனீவாவிலே இந்திய பாராளுமன்றில் எல்லாம் அது வாசிக்கப்பட்டது. புள்ளிவிபரத்தோடு நான் சமர்பித்தேன்.
பல இடங்களிலே ஜேவிபினர் தமிழ் மக்களை காப்பாற்றியுள்ளனர். அவர்களை பொறுத்தளவில் அவர்களது கொள்கையில் ஒரு இனவாதம் இருக்கிறது. அவர்களின் இரண்டாவது கிளர்ச்சியில் மாற்றம் இருந்தது. மலையகத்திலே அவர்கள் வித்தியாசமாக வேலை செய்யத் தொடங்கினர். அவர்கள் கொன்றவர்களின் பட்டியலிலே தமிழர்கள் மீது கை வைத்தது குறைவு. ஏனைய சமூகங்களில் கை வைத்தது குறைவு. அதில் கொஞ்சம் கவனமாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஆகவே ஒரு இரட்டை தன்மை அவர்களிடையே காணப்படுகிறது. அவர்கள் இனவாதம் பேசுகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை துணிகரமாக, வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில் கொஞ்சம் பாதி தூரம் வந்தார்கள். ´போபகே´ வெளியிட்ட ´சுயநிர்ணய உரிமை´ புத்தகம் விஜேவீர அவர்களின் ஒப்புதலில் வெளியானது. அந்த காலத்தில் நிலைமைகளால் மெல்ல மெல்ல தள்ளப்பட்டு வந்தார். இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் கொடுத்த அழுத்தம் அதற்கு காரணம். ஆனால் அடிப்படையில் இனவாதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சகதியில் இருந்து மீளாதவராக இருந்தார். இதுதான் அவருடைய அடிப்படை பிரச்சினை.´
ரோஹண விஜேவீரவின் கட்சி தொடர்ந்து அவரது நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறதா என்ற கேள்விக்கு காதர் அளித்த பதில்...
´ஒரு பாரிய வித்தியாசம் இருக்கிறது. என்னவென்றால் விஜேவீரவின் காலத்திலே அவர் இனவாதத்தை ஒரு சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தினார். அப்பட்டமான சந்தர்ப்பமாக பயன்படுத்தினார். அதனை மன்னிக்க முடியாது. ஆனால் அதை தந்திரோபாயமாகத்தான் பயன்படுத்தினார். ஒரு கொள்கையாக அல்ல. ஆனால் இப்போது இருக்கும் ஜேவிபி அதனை ஒரு கொள்கையாகவே கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
அவர்கள் தமிழ் மக்களின் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இன்னுமொரு படி சென்று இதெல்லாம் சிஐஏ அமெரிக்காவின் தூண்டுதல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் சம்பந்தமான பிரச்சினையில் தெளிவு ஏற்படும் வரையில் அவர்களால் இன்னொரு கட்டத்திற்கு போக முடியாது என்பதை உணரவும் இல்லை. அதற்கான முயற்சியை அவர்கள் செய்யவுமில்லை.´
இலங்கையில் நடைபெற்ற கிளர்ச்சிகள் போராட்டங்களை இலங்கை அரசாங்கங்கள் எவ்வாறு கையாண்டன என்ற கேள்விக்கு காதர் அளித்த பதில்...
´எந்தவொரு போராட்டத்தையும் தொழிலாளர் வர்க்க போராட்டமாக இருந்தாலும் சரி சிறுபான்மை மக்களுடைய போராட்டங்களாக இருந்தாலும் சரி அரசாங்கம் ஒரே விதமாகத்தான் கையாண்டுள்ளது. 1970ம் ஆண்டு பிற்பகுதிக்கு முன்னர் தமிழ் மக்களின் போராட்டம் ஆயுத வடிவத்தை ஏற்கவில்லை சாத்வீக முறையில் அமைந்தது. அதையும் அவர்கள் கொடூரமாக நசுக்கிறனர்.
இதற்கு முன்னர் 1953 ஹர்த்தாலை நாங்கள் பார்க்கலாம். அதுவும் கொடூரமாகத்தான் நசுக்கப்பட்டது. அதற்கு முன்னர் தொழிலாளர்களின் எழுச்சி கந்தசாமியின் மரணம், பூண்டுலோயா கோவிந்தனின் மரணத்தில் தொடங்கப்பட்டு தொழிலாளர் வர்க்கம் எழுந்த போதேல்லாம் அவர்களை துப்பாக்கி முனையிலே அவர்களின் இரத்தித்தில் தொய்த்துதான் போராட்டத்தை நசுக்கி இருக்கிறார்கள்.
அதன்பின் தொழிலாளர்களுடைய வர்க்கப் போராட்டம் பின் தள்ளப்பட்டு தேசிய இனப்பிரச்சினை போராட்டம் மேலெழுந்த போது அதனை இன்னொரு கொடூரமான முறையிலே அடக்குவதற்கு அரசாங்க இயந்திரத்தை பயன்படுத்தினார்கள். இதிலே அரச இயந்திர்த்திற்கு வர்க்கம் தேசிய விடுதலை இரண்டுமே ஒன்றுதான். அதனை இரண்டு தலைவர்களின் கொலையை வைத்து பார்க்கலாம். இதனை ஒத்துக் கொள்வார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது.
விஜேவீர மற்றும் பிரபாகரன் ஆகியோரின் மரணம் ஒரேமாதிரியாகவே நடந்திருக்கிறது. இருவரும் ஒரேவிதமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். விஜேவீர சிங்களவர் என்பதற்காக மன்னிக்கப்படவில்லை. விஜேவீரவை ஏமாற்றிதான் கொண்டு சென்றார்கள். அவரும் குழந்தை தனமான தவறை விட்டிருக்கிறார்.
கம்பளை பகுதியிலே ஒரு தோட்ட துறைபோன்று வேடமிட்டு புரட்சியை செய்து கொண்டிருந்தார். பிரபாகரன் குறைந்தபட்சம் காட்டிலே பங்கரில் இருந்து கொண்டாவது போராட்டத்தை நடத்தினார். ஆனால் இவர் சொகுசாக இருந்துகொண்டு புரட்சியை நடத்த கிளம்பினார்.
கடைசியில் அவர் பிடிபட்டபோது கூட அரசாங்கம் அவரை தந்திரமாக.. அப்பகுதியைச் சேர்ந்தவன் நான் என்பதால் அங்கு நடந்த ஒவ்வொரு பிரச்சினையும் எனக்குத் தெரியும். அவரை தந்திரமாக நீங்கள் வாருங்கள் வந்து பிரேமதாஸவுடன் இந்த பிரச்சினையை கதையுங்கள். பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவோம் என்று ஆசையை காட்டிதான் அவரை தந்திரமாக அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்தார்கள்.
அவர் தேசிய விடுதலைக்காகப் போராடியவர் அல்ல சரியோ பிழையோ ஒரு வர்க்கத்திற்காகப் போராடியவர். அவரும் கொலை செய்யப்பட்டார். அதேபோன்றுதான் தேசிய இன விடுதலைக்காகப் போராடிய இவரும் (பிரபாகரனும்) அப்படித்தான் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.´
தகவல் - தமிழோசை
எழுத்து வடிவம் -பழனி விஜயகுமார்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...