Headlines News :
முகப்பு » , , » JHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன்

JHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன்


இலங்கையின் பேரினவாத பரிணாம வளர்ச்சியில் தற்போதைய ஜாதிக ஹெல உறுமய (ஜா.ஹெ.உ) வந்தடைந்துள்ள பரிமாணத்தை உற்றுநோக்குவது இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த ஆய்வுகளுக்கு அத்தியாவசியமானது.

வரலாற்றில் பேரினவாத அமைப்புகள் வெவ்வேறு முகமூடிகளுடன் வந்து அரசியல் அழுத்தக்குழுக்களாக இயங்கி அரசை இனவாத தீர்மானங்கள் மேற்கொள்வதற்கும், இனவாதப் பாதையில் வழிநடத்துவதற்கும் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிரான அரசியல் தீர்மானங்கள், சட்டங்கள்,
சட்ட அமுலாக்கம், மட்டுமன்றி இதுவரை நிகழ்த்தப்பட்ட  இனக்கலவரங்களுக்கும், யுத்தத்தத்தின் பின்னணியிலும் இந்த சக்திகளின் பாத்திரம் விசாலமானது. இனத்தின் பேரால் மட்டுமல்ல கூடவே பௌத்த மதத்தையும் சமாந்தரமாக பயன்படுத்தியே அவை நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை மறந்து விடக்கூடாது.
சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த மதத் தலையீட்டை தவிர்த்து செயல்பட முடியாத நிலைமையை எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது. ஆக அதன் நீட்சியாகவே ஜா.ஹெ.உ வை கணிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல நீண்ட கால இருப்பை வரலாற்றில் தக்கவைத்திருக்கும் அமைப்பும் அது தான். பேரினவாத சாதனைகளை அதிகம் அடைந்த அமைப்பும் அது தான். கடந்த இரு தசாப்த காலமாக தோன்றிய பல பேரினவாத சக்திகளின் தோற்றத்துக்கும் அவற்றின் அரசியல் இருப்புக்கும், சித்தாந்த வழிகாட்டல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்கிய சக்தியும் அது தான். அதையொட்டியே ஜா.ஹெ.உ வின் வளர்ச்சிப் பாதையை இங்கு ஆராய்வோம்.

சம்பிக்க ரணவக்க - ரதன தேரர்
சம்பிக்க மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது 1984ஆம் ஆண்டிலிருந்து ஜேவிபியின் மாணவர் அமைப்பான “அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின்” அமைப்பாளராக செயற்பட்டவர். பின்னர் அதிலிருந்து விலகி பின்னர் நளின் டி சில்வாவின் “ஜாதிக்க சிந்தன” (தேசிய சிந்தனை) அமைப்பில் இணைந்தார். நளின் டி சில்வா சிங்கள பௌத்த பேரினவாததத்தின் சித்தாந்தவுருவாக்கத்தில் முக்கிய  பாத்திரத்தை கடந்த 3 தசாப்தங்களாக செய்து வருபவர். அது குறித்து பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

பல்கலைகழக காலத்து செயற்பாடுகளிலிருந்து சம்பிகவோடு ஒன்றாக பயணித்து வருபவர் அத்துரலியே ரதன தேரர். இவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும், மாகாணசபை முறையையும் எதிர்த்தும் போராடினார்கள். ஜே.வி.பி இலிருந்து விலகி இயங்கியதால் ஜே.வி.பி.யின் அச்சுறுத்தலும் இருந்தது. அதே வேளை  அரசாங்கமும் இவர்களை தொடர்ந்தும் ஜே.வி.பியினராகவே அடையாளம் கண்டது. ரதன தேரர் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

“ரட்டவெசி பெரமுன” (தேசத்தவர் முன்னணி) என்கிற அமைப்பை அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து ஆரம்பித்தார் சம்பிக்க.  
பிரேமதாச அரசாங்கத்தின் போது இவ்வமைப்பு ஒரு ஆபத்தான அமைப்பென்று கூறி சம்பிகவை 1989இல் கடத்தி கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் இருந்த வதைமுகாமில் இரகசியமாக அடைத்து வைத்தனர். மாதங்களுக்குப் பின்னர் விடுவித்தனர். அதன் பின்னரும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சம்பிக்க, ரதன தேரர் இருவரும் மாத்தறையில் கண்காட்சி நடத்திக்கொண்டிருந்த போது தேசவிரோத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களை விடுவிப்பதற்காக சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அப்போதைய என்.ஜி.ஓ.க்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் தான் மேற்கொண்டார்கள்.

தடுப்பு முகாமில் இருந்து விடுதலையானதன் பின்னர் 1991இல் “ஜனதா மிதுரோ” (மக்களின் நண்பர்) எனும் அமைப்பை தொடக்கினார். இந்த அமைப்பு ஆரம்பத்தில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக தொடக்கப்பட்டு இயங்கியபோதும் பின்னர் அது இனவாத செயற்திட்டங்களை படிப்படியாக மேற்கொள்ளத் தொடங்கியது. 1994இல் சந்திரிகா வெற்றிபெற ஆதரவளித்தது. இந்த காலப்பகுதியில் இவர்கள் ஆரம்பித்த “ஜாதிக சங்க சபா” (தேசிய சங்க சபை) க்கு மாதுலுவாவே சோபித்த தேரரை தலைவராக ஆக்கினார்கள். நாட்டின் சிரேஷ்ட பிக்குமார்களை பின்னின்று இயக்கி; தீர்வு யோசனைக்கு எதிரான முன்னணி அமைப்பாக பயன்படுத்தினார்கள். குறுகிய காலத்தில் நாட்டில் பிரபலமாக ஆனது. சிங்கள ஆணைக்குழுவை உருவாக்குவதில் முன்னின்றதும் இந்த அமைப்பு தான். 2001இல் ஐ.தே.க. ஆட்சியிலமர்ந்ததன் பின்னர் இவ்வமைப்பு பலவீனமுற்றது. எனவே மீண்டும் “தேசிய சங்க சம்மேளனம்” எனும் பெயரில் ஒன்றை தொடக்கி எல்லாவல தேரரை தலைவராக முன்னிறுத்தினார்கள். இனவாதத்தத்தை ஜனரஞ்சகமாக பௌத்த உபதேசங்களுடன் கலந்து பரப்பியதில் அப்போது பேர்பெற்ற கங்கொடவில சோம தேரர் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டார். அரசியலில் இறங்கும் ஆலோசனையையும் அவர் தான் வழங்கினார் என்று கடந்த ஜூலை 21 வெளியான லக்பிம பத்திரிகை பேட்டியில் ரதன தேரர் தெரிவித்திருந்தார். அதே பேட்டியில் சந்திரிகா தம்மோடு நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் அவர் விளக்குவதுடன்  லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்கும் முயற்சியை முறியடித்து மகிந்தவை பிரதமராக்குவதில் தாம் வெற்றி கண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆக அதன் பின் நிகழ்ந்த மாபெரும் தொடர் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் இவர்களின் பங்கை கணிக்கலாம்.

அதே பேட்டியில் “உங்களை அமைச்சு பதவி ஏற்கும்படி அரசாங்கத்திலிருந்து ஒரு அழைப்பு வந்ததல்லவா” என்கிற கேள்விக்கு அவர் இப்படி பதிலளிக்கிறார்.

“அமைச்சு பதவி குறித்து ஆரம்பத்திலிருந்தே எனக்கு விருப்பம் இருந்ததில்லை. நான் எப்போதும் “தேசிய இயக்க” வேலைகளுக்கு பின்புலத்திலிருந்து செயல்படுவதையே விரும்புகிறேன். பிரபல்யம் அல்லது தனித்துவமான தலைவராக ஆவதற்கு எனக்கு விருப்பமில்லை. பாராளுமன்றத்துக்கு வந்ததன் பின்னர் தான் என்னைப் பற்றி தெரியும் ஆனால் கடந்த கால் நூற்றாண்டாக நான் சலசலப்பில்லாமல் இயங்கி வந்திருக்கிறேன். எனது செயல் வடிவம் இரகசியமாக தலைமை கொடுப்பதே. மாறாக வெளித்தெரிந்த பிரபல தலைவராக அல்ல”
இந்த கருத்து இவர்களை கணிக்கும் முக்கிய அளவுகோல்.

சிங்கள வீரவிதான
வீரவிதான இயக்கம் 1995 யூலை 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஒரு இரகசிய இயக்கமாகவே ஆரம்பித்தனர் என்ற போதும் இதனை சமூக சேவைகள் திணைக்களத்தில் ”ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவே” பதிவு செய்திருந்தார்கள். பதிவு செய்வதற்காக அவர்கள் கொடுத்த கொள்கை, செயல்திட்டம், யாப்பு, என்பவை அல்ல பின் வந்த நாட்களில் அவர்கள் முன்வைத்த செயற்திட்டங்களும், கொள்கைகளும்.

90களின் ஆரம்பத்தில் இயங்கிய பல்வேறு இனவாத அமைப்புகள் உதிரி உதிரியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். நளின் டி சில்வா, குணதாச அமசேகர, மாதுலுவாவே சோபித்த ஹிமி, எஸ்.எல்.குணசேகர, பெங்கமுவே நாலக்க ஹிமி, மடிகே பஞ்ஞானசீல தேரோ போன்றோர் இவற்றை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர்கள்.

ஆனால் சம்பிக்கவின் சளைக்காத செயற்திறன், வேகம் என்பவற்றுக்கு முன்னால் அவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை. சம்பிக்க மெதுமெதுவாக இவ்வமைப்புகளில் தனது சகாக்களை ஊடுருவ வைத்தும் நேரடியாக அனைவரையும் சேர்த்து செயற்பட்டதுடன், சகல அமைப்புகளிலும் இருந்தவர்களில் பெரும்பாலானவர்களை தனது பக்கம் சேர்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களில் பெரும்பாலானோரை வீரவிதானவோடு இணைத்து அவர்களின் முன்னைய அமைப்புகளை அப்படியே தனது கட்டுப்பாட்டுக்குள் ஒரே குடையின் கீழ் கொண்டுவர சம்பிக்கவால் சாத்தியப்பட்டது.

தமிழ்-முஸ்லிம்களின் வர்த்தக-வியாபார நடவடிக்கைகளை ஒடுக்குவது ஆரம்பத்தில் அதன் பிரதான பாத்திரமாக இருந்தது. பௌத்த வங்கி, சிங்கள பௌத்தர்களுக்கான வேலைவாய்ப்பு சங்கங்களை தோற்றுவிப்பது என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

1998இல் கிரிபத்கொடவில் அப்போது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு கடையை கைவிடச்சொல்லி எச்சரித்து அவர்கள் மூடாத நிலையில் அந்த கடைக்கு குண்டெறிந்து அவர்களை அகற்றிய கதை அப்போது பிரசித்தமானது. முஸ்லிம் கடைகளில் எதுவும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்கிற விஷப் பிரச்சாரம் சிங்கள வீர விதானவால் தான் முன்னெடுக்கப்பட்டது. பிரபல இனவாதியாக கொள்ளப்படும் நளின் டி சில்வா கூட 1999மே 16இல் “திவயின” பத்திரிகையில் தனது பத்தியில் “தேசிய இயக்கத்தில் பாசிசப்போக்கு” என்று எழுதினார்.

இந்த நடவடிக்கைகள் படிப்படியாக இனவாத பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், இனவாத பத்திரிகைகள் நடத்துவது, தேசிய-சர்வதேசிய அளவில் கிளைகளை வேகமாக விஸ்தரிப்பது, முன்னணி அமைப்புகளை தோற்றுவிப்பது என குறுகிய காலத்தில் சிங்கள பௌத்த உணர்வுக்குள் பாரிய அளவினரை அணிதிரட்டினர். 1998 மார்ச் 05ஆம் திகதியன்று மருதானையில் வெடித்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து  “பயங்கரவாத எதிர்ப்பு தேசிய இயக்கம்” (NMAT-National Movement Against Terrorism) எனும் அமைப்பை தொடங்கி புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கும், அரசியல் தீர்வு யோசனைக்கும் எதிராக பாரிய அளவு பிரச்சாரங்களை முன்னெடுத்தது.

42 பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து 1996 டிசம்பரில் உருவாக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவின் தோற்றத்துக்கான நியாயங்களையும் தேவையையும் உருவாக்குவதில் இதன் பங்கு முக்கியமானது.

இந்த கால கட்டத்தில் பல இனவாத அமைப்புகள்  பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. “சிங்கள மஹா சம்மதத பூமி புத்திர பக்ஸய”, “மக்கள் ஐக்கிய முன்னணி”, சிங்கள மீட்பு முன்னணி, சிங்கள பாதுகாப்புச் சபை, தேசப்பிரேமி பிக்கு பெரமுன போன்ற அமைப்புகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இனவாத உணர்வுநிலையை சகல தளங்களிலும் தகதகவென தக்கவைப்பதற்காக தொடர் செயற்பாட்டை மேற்கொண்டதுடன். “சிவில் பாதுகாப்பு இயக்கம்” எனும் பேரில் தமது உறுப்பினர்களைக் கொண்டு தமிழர்களை கண்காணித்தனர். பொலிசாருக்கு துப்பு கொடுக்கும் ஒரு அமைப்பாகவும் தமக்கு தேவையான எவரையும் விசாரணை செய்யும் அதிகாரத்தையும் கையிலெடுத்தனர். இதனால் தமிழர்கள் எந்த சிங்களவர்களைக் கண்டாலும் பீதியுடன் உலாவும் நிலை ஏற்பட்டது.

1999ஆம் ஆண்டு யூன் மாதம் கொழும்பில் தமிழர்களின் விஸ்தரிப்பை எதிர்த்து SVV ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் இறுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) காரியாலய உடைப்பில் போய் முடிந்தது.

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் தீர்வுப்போதிக்கு எதிரான நாடளாவிய, தொடர் போராட்டத்தை பல வடிவங்களில் முன்னெடுத்தவர்கள் இவர்கள் தான். அதனை தோற்கடித்ததற்கு உரிமை கோர தகுதியானவர்கள் அவர்கள் தான். சந்திரிகா கொண்டுவர இருந்த “சமவாய்ப்பு சட்டம்” சிறுபான்மை இனங்களுக்கு சாதகமானது என்று அதனை தொடர்ச்சியாக எதிர்த்து அதனை கிடப்பில் போடச் செய்ததும் இவர்களே. சமாதானம் குறித்து பேசுவோரை தொடர்ச்சியாக தாக்கி தேசத்துரோக முத்திரை குத்தி உளரீதியில் கீழிருக்குவது வரை விடாப்பிடியாக செயற்பட்டனர். ஒரு முறை ‘அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்’ என்று பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல கூறியதற்காக அவரது சகல வர்த்தகங்களையும் சிங்கள பௌத்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

இந்த வளர்ச்சிப்போக்கு போரில் சிங்கள தரப்பு வெற்றிபெறுவதற்கு எத்தகைய பாத்திரத்தை ஆற்றியது, இன்றைய பொதுபல சேனாவும் இது போட்ட குட்டி தான் என்பதையும் அடுத்த இதழில் பார்க்கலாம்.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates