வரலாறு நெடுகிலும் உரிமை மறுப்புகளுக்கும் பாரபட்சங்களுக்கும் உள்ளாகி வந்துள்ள மலையக மக்கள், 21ஆம் நூற்றாண்டிலும் முகவரியற்ற மனிதர்களாக வாழும் துர்ப்பாக்கிய நிலை தொடர்கிறது. இன்னும் தோட்டங்களில் வாழ்பவர்கள் இப்பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். காணி உரிமை இன்மை, வீட்டு உரிமை இன்மை முதலான காரணங்களால் சொந்தமான முகவரியற்றவர்களாக இரு நூற்றாண்டைக் கடந்து வந்துள்ளார்கள்.
சொந்த முகவரி இன்மையால் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வந்துள்ளன. திடீரெனப் பேசப்படுவதும் பின்னர் எவ்விதத் தீர்வும் இன்றி அப்படியே அமிழ்ந்துபோவதும் வழமையாக இடம்பெற்றுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்கள் சில, மலையக மக்களுக்குக் குறிப்பிட்ட பகுதிகளில் நிரந்தர முகவரியைப் பெற்றுத்தரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் அம்முயற்சிகளால் முகவரி பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. மலையக மக்களின் முகவரி பிரச்சினையானது வீட்டு இலக்கம் வழங்குதல், தெருவுக்குப் பெயரிடுதல் என்றளவில் மட்டும் சுருங்கியதில்லை. அது நில உரிமையோடும் பெருந்தோட்டக் கட்டமைப்போடும் தொடர்புடையதாக விளங்குகிறது. அதனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்த செயற்பாடுகளால் முழுமையான தீர்வுகளை எட்டமுடியவில்லை.
மலையகம் 200 ஐ ஒட்டி இடம்பெற்ற நிகழ்வுகளால் அம்மக்களின் முகவரி பிரச்சினை மீண்டும் பேசுபொருளானது. சமூக அக்கறைமிக்க செயற்பாட்டாளரான ஜீவரத்தினம் சுரேஷ்குமார் பொதுநல வழக்கின் மூலம் நீதிமன்றம் வரை இப்பிரச்சினையைக் கொண்டு சென்றார். அதனால் மலையகத் தமிழரின் முகவரி பிரச்சினை பொதுவெளியில் பரவலான கவனிப்பைப் பெற்றது. பலரும் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் தேவையை வெவ்வேறு தளங்களில் எடுத்துரைத்தனர் – எடுத்தரைத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எவ்விதத் தீர்வுகளும் வழங்கப்படவில்லை.
தோட்டங்களில் வாழ்பவர்களுக்குத் தனியான முகவரி கிடையாது. லய அறைகளுக்கெனத் தனியான இலக்கங்களோ தோட்டங்களுக்குள் தெருக்களின் பெயர்களோ பயன்பாட்டில் இல்லை. தோட்டத்தின் பொது முகவரியே எல்லோருக்குமான முகவரியாக விளங்குகிறது. ஆட்பெயர் மட்டுமே வேறுபடும். நான் பிறந்து வளர்ந்த தோட்டமான நிவ்டிவிசனை எடுத்துக்கொண்டால் ரங்கலை, நிவ்டிவிசன் என்பதே அங்குள்ள அனைவருக்குமான முகவரியாகும். ரங்கலை பெருந்தோட்டத்தின் ஒரு பிரிவாக நிவ்டிவிசன் விளங்குகிறது. ரங்கலை, பூடல்கொல்ல (பொடவகொல), நிவ்டிவிசன், கிளவர் டிவிசன் (கிழவன் தோட்டம்), பெரு டிவிசன், கல்டூரியா எனும் ஆறு பிரிவுகளை ரங்கலை பெருந்தோட்டம் கொண்டுள்ளது. அதனால் என் தோட்டத்திலுள்ளவர்களின் முகவரியில் தோட்டத்தின் பெயரும் அதன் பிரதான நிர்வாகத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளன. காலனியக் காலத்தில் பெருந்தோட்ட அமைப்பு தனி ராஜ்ஜியமாக இயங்கியதன் வெளிப்பாடாகவே இம்முறைமை அமைகிறது.
பெருந்தோட்டங்கள் நீண்டகாலமாக அரச தலையீடுகளுக்கு அப்பால் சுயாதீன அமைப்பாக இயங்கியுள்ளன. தோட்ட நிலத்தைப் போலவே தோட்டங்களில் கூலி வேலை செய்தவர்களும் தோட்ட உரிமையாளரின் உடைமையாகக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்தொழிலாளர்களின் சகல நடவடிக்கைகளும் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்துள்ளன. அவர்கள் சுதந்திரமான அசைவற்றவர்களாகவும் தோட்ட நிர்வாகத்துடன் பிணைக்கப்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களுக்குத் தோட்டங்களில் எவ்வித உடைமையும் இருக்கவில்லை. தோட்ட உடைமையாளர் சர்வ வல்லமை கொண்டவராக விளங்கியுள்ளார். அவர் நினைத்தால் ஒரு தொழிலாளியைத் தொழிலில் அமர்த்திக்கொள்ளலாம் அல்லது தொழிலிலிருந்து நீக்கி, தோட்டத்தைவிட்டே வெளியேற்றலாம். இந்நிலை தொழிலாளர்களுக்கான தனி முகவரி என்பதை அழித்து, தோட்டத்தையே – தோட்ட நிர்வாக அமைப்பையே அம்மக்களின் முகவரியாக்கியுள்ளது.
காலனிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலைபெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும், வெள்ளைத் துரைகள் யாவரும் நாட்டைவிட்டுச் சென்ற பின்பும் காலனியக் காலப் பெருந்தோட்டக் கட்டமைப்பு இன்னும் மாற்றம்பெறவில்லை. அதன் தொடர்ச்சி வெவ்வேறு தளங்களில் பேணப்பட்டு வருகிறது. தோட்டங்களில் வழக்கில் உள்ள பொது முகவரி அதன் ஒரு வெளிப்பாடாகும்.
முகவரி பிரச்சினையால் கடிதங்கள் கிடைக்கப்பெறாமை, உரிய நேரத்தில் கடிதங்கள் கிடைக்கப்பெறாமை ஆகியன இடம்பெற்றுவருகின்றன. அத்துடன் சொந்த முகவரி இன்மை கௌரவ சிக்கலையும் தோற்றுவிக்கிறது. இவை வெளிப்படையான சிக்கல்களாகும். இவற்றுக்கு அப்பால் மலையக மக்களின் இருப்பற்ற நிலையின், வீடு, காணி முதலியன உரித்தற்ற நிலையின் வெளிப்பாடாகவும் இலங்கையின் முழுமையான பிரஜையாக இன்னும் உள்வாங்கப்படாமையின் குறியீடாகவும் இப்பிரச்சினை விளங்கிவருகிறது. அதனால் சொந்த முகவரியானது மலையக மக்களின் இருப்பினதும் அவர்கள் இலங்கையின் முழுமையான பிரஜையாதலினதும் வெளிப்பாடாக அமைகிறது.
எங்கள் பகுதியில் 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் கடிதங்கள் யாவும் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து நேரே தோட்டத்தின் பிரதான காரியாலயத்துக்குக் (ரங்கலை) கொண்டுசெல்லப்பட்டன. அங்கிருந்து ஒவ்வொரு தோட்டப் பிரிவுக்கும் (மேலே சுட்டிக்காட்டிய ஆறு பிரிவுகள்) அனுப்பப்பட்டன. ஒவ்வொரு தோட்டங்களில் இருந்தும் பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்தினைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்பவர் (சாக்குக்காரர் - சாக்கு) அல்லது கொழுந்து லொறியின் சாரதி கடிதங்களைத் தோட்டங்களின் கணக்கப்பிள்ளையிடம் வழங்குவார். சில தோட்டங்களில் தபாலுக்குப் பொறுப்பாக ஒருவரைத் தோட்டமே வைத்திருக்கும். பிரதான காரியாலயத்தில் இருந்து தோட்டத்துக்குக் கடிதங்கள் கொண்டுவரப்பட்டதும் கணக்கப்பிள்ளை ஒவ்வொரு நாளும் பெரட்டில் வைத்து (தொழிலாளர்களுக்கான வேலைகளைக் காலையில் பங்கிட்டுக் கொடுத்தல்) கடிதங்களை வழங்குவார் அல்லது கடிதங்கள் கிடைக்கப்பெற்ற அன்றே மாலையில் கொழுந்து நிறுக்கும்போது வழங்குவார்.
கடிதங்களைத் தொழிலாளர்களுக்குக் கையளிப்பதில் மேற்படி நடைமுறையைத் தோட்டங்கள் பொதுவாக பின்பற்றிவருகின்றன. நீண்ட காலமாக இம்முறையே வழக்கிலிருந்து வருகிறது. அதனால் கடிதங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். ஒரு தோட்டம் பல பிரிவுகளைக் கொண்டிருப்பதால் கடிதங்கள் வேறு தோட்டப் பிரிவுகளுக்கு வழங்கப்படுதல் அடிக்கடி இடம்பெறும். வீட்டு இலக்கம் இன்மையால் ஒரே பெயரைக்கொண்ட நபர்கள் ஒரு தோட்டத்தில் இருந்தால் கடிதங்கள் யாருக்குரியவை என்பதைக் கண்டறிய முடியாது. கணக்கப்பிள்ளை அல்லது தபால்காரர் கடிதம் யாருக்குரியது என ஊகிக்கிறாரோ அவருக்குக் கடிதத்தை முதலில் வழங்குவார். அவர் அதனை உடைத்துப் பார்த்து, தனக்குரியது இல்லை என்றால் மீளக் கையளிப்பார் அல்லது உரிய நபருக்கு வழங்குவார். சிலவேளைகளில் அவ்வாறு மாறி கொடுக்கப்படும் கடிதங்கள் உரிய நபரின் கரங்களை எட்டுவதுமில்லை. இவை கடிதம் கொண்டிருக்கும் இரகசியத் தன்மையைப் பேணுவதிலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.
அவசரக் கடிதங்களும் தாமதமாகவே கிடைத்தன. பதிவுத் தபாலில் வருகின்ற கடிதங்கள் மிகுந்த தாமதத்துக்கும் சிரமத்துக்கும் பின்னரே பெற்றுக்கொள்ளப்பட்டன. பதிவுத் தபால் வந்திருந்தால் அச்செய்தியை அஞ்சல் அலுவலர் துண்டுச் சீட்டில் குறிப்பிட்டு, தோட்டத்தின் பிரதான காரியாலயத்துக்கு அனுப்புவார். வழமையாகக் கடிதங்கள் அனுப்பப்படும் செயன்முறையில் அத்துண்டு வந்துசேரும். அதனைப் பெற்றுக்கொண்ட நபர் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அதனைக் கொடுத்து, தனக்கான பதிவுத் தபாலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தோட்டத்தில் வேலை செய்பவர் ஒருநாட் கூலியைத் தியாகம் செய்தால் தான், ரங்கலை நகரிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் தபாலைப் பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையால் அவசரமாக அனுப்பப்படும் தகவல்கள் தாமதமாகவே கிடைக்கப்பெற்றன. நேர்முகத் தேர்வுகளுக்காகக் காத்திருப்பவர்கள் நேரடியாகத் தோட்டக் காரியாலயத்துக்குச் சென்று தமக்கான கடிதங்கள் வந்துள்ளனவா என அடிக்கடி பரீட்சித்துக்கொள்வர். இந்நடைமுறையால் சிலர் தமக்கான அரிய வாய்ப்புகளை இழந்துள்ளனர். நான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில், புலமைப் பரிசில் ஒன்றுக்காக எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் அவ்வாறு காலதாமதமாகி, அப்புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு முடிவடைந்த பின்பே கிடைத்தது.
கடிதம் வழங்குதலில் 2008ஆம் ஆண்டில் தான் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. எங்கள் தோட்டத்துக் கடிதங்களை நேரடியாக வழங்குவதற்குத் தபால் உத்தியோகத்தர் ஒருவர் அரசால் நியமிக்கப்பட்டார். பெருந்தோட்டப் பகுதிகளில் வதியும் மக்களின் வீடுகளுக்குச் சென்று கடிதங்களை ஒப்படைக்கும் புதிய முறையை ஏற்படுத்துவதற்காகக் கடித ஒப்படைப்புச் செய்யும் (தோட்டப்பகுதி அஞ்சலர்களை) இணைத்துக் கொள்ளல் என்ற திட்டத்தை அரசு கொண்டுவந்தது. எம்.எஸ். செல்லசாமி அதன்போது தபால் துறைக்கான பிரதி அமைச்சராக இருந்தார். 400 தோட்டப்பகுதி அஞ்சலர்களை உள்வாங்குவதாக இருந்து முதலில் 386 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. மலையக வரலாற்றில் – மலையக மக்களின் முகவரி பிரச்சினையைத் தீர்க்கும் செயன்முறையில் இதுவொரு முக்கியமான அடைவெனலாம். தமக்கான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள பெருந்தோட்ட நிர்வாக அமைப்புக்குள் தங்கியிருந்த மக்களை இத்திட்டமே முதன்முதல் அந்நிலையிலிருந்து விடுவித்து, கடிதங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள வழிசமைத்தது. இதன்மூலம் காலதாமதமாதல் தவிர்க்கப்பட்டாலும் சொந்த முகவரி இன்மையால் ஏற்பட்ட ஏனைய பாதிப்புகள் எவையும் நீங்கவில்லை. தோட்டங்களுக்குள் கடிதங்களை ஒப்படைக்கும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாத தோட்டங்கள் பலவும் உள்ளன. அவை கடிதங்களை வழங்குவதில் மரபார்ந்த முறையையே பின்பற்றி வருகின்றன.
தற்காலத்தில் பெரும் நெருக்கடியைத் தந்துவரும் இம்முகவரி பிரச்சினை, கடிதங்களை உரிய நபருக்கு, உரிய காலத்தில் வழங்குவதில் உள்ள மட்டுப்பாடுகள் முதலானவை குறித்த காலனியக் கால ஆவணங்களை அவதானிக்கும்போது அவை மிகுந்த நெருடலையும் அயர்ச்சியையும் தருகின்றன.
இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் இலங்கை அஞ்சல் அலுவலக அதிபர் தோட்டத்துரைமார் சங்கத்துக்கு அனுப்பிய தகவலில், முழுமையான முகவரி – சரியான முகவரி இன்மையால் 1922 ஆம் ஆண்டு 20 572 கடிதங்களும் 1923 ஆம் ஆண்டு 26 484 கடிதங்களும் தோட்டத் தொழிலாளர்களிடத்தில் கையளிக்க முடியாது இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சாதாரணமானதல்ல. 1921ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி 6 06 921 இந்தியத் தமிழர் இலங்கையில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் 87.4 வீதத்தினர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். அவர்களுக்கு (ஏறக்குறைய ஐந்து லட்சம்) வந்த கடிதங்களுள் 26 000 கடிதங்கள் மீள இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
உரிய நபருக்குக் கையளிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்ட கடிதங்கள் எத்தகைய செய்திகளைச் சுமந்திருக்கும், அவற்றுள் துயரச் செய்திகள் எத்தனை, மகிழ்ச்சியான செய்திகள் எத்தனை, யார் யாருக்கு எழுதிய கடிதங்கள் அவை, கடிதங்களுக்குப் பதில் இன்மையும் கடிதங்கள் மீள இந்தியாவுக்கே அனுப்பப்படுதலும் கடிதங்களை அனுப்பியவருக்கு எத்தகைய உணர்ச்சி மோதல்களைத் தோற்றுவித்திருக்கும், அனுப்பப்படும் கடிதங்களுக்குப் பதில் கடிதமோ தமிழக உறவுகளிடமிருந்து வேறு கடிதங்களோ கிடைக்கப்பெறாதபோது நாடுவிட்டு நாடுவந்து உழைப்பே வாழ்வாகக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தகைய உள நெருக்கடிகள் தோன்றியிருக்கும், கடிதப் பரிமாற்றத்தில் நிலவிய சிக்கல்களால் எத்தனை உறவுகளின் தொடர்புகள் அறுந்திருக்கும் என்பனவற்றையெல்லாம் நினைக்கும்போது எம்மூதாதையரின் துயரம் நெஞ்சை அடைக்கிறது.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அஞ்சல் அதிபர் தோட்டங்களை அண்மித்த அஞ்சல் அலுவலகத்திற்குத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு வழங்காதவிடத்து தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற பெயர், முழுமையான முகவரி ஆகியவற்றைக் கடிதங்களில் இடம்பெற செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
நீண்டகாலமாகக் கடிதங்களைக் கையளிப்பதில் ஏற்பட்டு வந்த சிக்கல்களும் கையளிக்க முடியாத கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் அஞ்சல் அதிபரின் இந்நடவடிக்கைக்குக் காரணமெனலாம். இத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறியமுடியவில்லை. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை எனலாம். அதனாலேயே அஞ்சல் அதிபர், “தோட்டங்கள் ஒவ்வொரு தொழிலாளருக்கும் அச்சிடப்பட்ட முகவரி கொண்ட கடித உறைகளை வழங்கி, அவற்றைக் கடிதங்களுடன் வைத்து இந்தியாவுக்கு அனுப்பி, பதில் கடிதங்களை அவற்றில் பெறலாம்” என்ற மார்க்கத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழிமுறை ‘ஒன்றிணைந்த மலேசியாவில்’ முன்வைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ள அஞ்சல் அதிபர், மலேசிய அறிக்கையில் இடம்பெறும் அப்பகுதியையும் இணைத்துள்ளார். அப்பதிவில் “உரிய நபருக்குக் கையளிக்க முடியாமல் திருப்பி அனுப்பப்படும் கடிதங்களுள் 50 வீதமானவை இந்தியத் தொழிலாளர்களுக்கு உரியவை என்றும் 1923ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 20 000 கடிதங்கள் இந்தியத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே, பெருந்தோட்டத் தொழிலுக்காகப் புலம்பெயர்ந்த நாடுகள் யாவற்றிலும் இம்முகவரி பிரச்சினையும் கடிதங்களைக் கையளிக்க முடியாத நிலையும் இருந்துள்ளன. அவற்றால் புலம்பெயர்ந்து தோட்டத்தொழிலில் ஈடுபட்டவர்களும் இந்தியாவிலிருந்த அவர்களது உறவுகளும் மிகுந்த நெருக்கடிகளுக்கும் உணர்ச்சி மோதல்களுக்கும் உள்ளாகியிருப்பர் என்பது வெளிப்படை யதார்த்தமாகும்.
தோட்டத்துரைமாரும் அஞ்சல் அதிபரும் கடிதங்கள் கிடைக்கப்பெறாத தொழிலாளர் நிலையில் இருந்து இப்பிரச்சினையை அணுகுவதற்கு முனையவில்லை என்பதை அவர்களின் கருத்துக்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. கடிதங்களைக் கையளிக்க முடியாமையும் மீள இந்தியாவுக்கே அனுப்புவதும் அஞ்சல் திணைக்களத்துக்குச் சுமையாக இருந்துள்ளன. அதனாலேயே தோட்டத்துரைமார் சங்கத்தின் மூலம் அப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண அஞ்சல் அதிபர் முயற்சி செய்துள்ளார். ஆனால், தோட்டத்துரைமார் அப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. அவர்களின் கருத்துக்கள் தமக்கான கடிதங்களைத் காலதாமதமின்றிப் பெற்றுக்கொள்வதிலேயே மையங்கொண்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை கொழும்பை வந்தடையும் ஆங்கிலக் கடிதங்கள் வழமையாகத் திங்கட்கிழமை மாலை கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. அக்காலதாமதத்தை விரும்பாத தோட்டத்துரைமார், திங்கட்கிழமை காலையிலேயே அக்கடிதங்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவ்வாறு அனுப்புவது செலவினை அதிகரிக்கும் என அஞ்சல் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தோட்டத்துரைமார் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கடிதங்களைத் தாமதமின்றி அனுப்புவதற்குத் தேவையான நிதியினை ஒதுக்குமாறு கேட்கவேண்டும் என முடிவு செய்துள்ளனர். தமக்குரிய கடிதங்கள் சிறிய கால தாமதமாவதையே ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், தொழிலாளர்களின் கடிதங்கள் கால தாமதமாவதையோ உரிய முகவரி இன்மையால் கடிதங்கள் திருப்பி அனுப்பப்படுவதையோ கவனத்தில் கொள்ளவில்லை. அவர்களைப் போலவே சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் அரச மற்றும் தனியார் தோட்ட நிர்வாகிகளும் அம்மக்களின் முகவரி பிரச்சினையைத் தீர்ப்பதில் கரிசனை கொள்ளவில்லை.
மலையக மக்கள் இலங்கையில் குடியேறிய காலம் முதல் இந்த முகவரி பிரச்சினையை எதிர்கொண்டு வந்துள்ளனர் என்பதை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இப்பிரச்சினையினால் ஏற்படுகின்ற நிர்வாகம் சார்ந்த இடர்பாடுகள் மட்டும் உணரப்பட்டுள்ள போதிலும் அப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலான உரிய தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. இன்று அம்மக்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டுகள் கடந்த பின்பும் அப்பிரச்சினை தீர்க்கப்படாது தொடர்கிறது.
உலக அரங்கில் இலங்கைத் தேயிலை - சிலோன் டீ மூலம் இலங்கைக்கான அடையாளத்தை - முகவரியைப் பெற்றுத்தந்த அம்மக்கள், தமக்கெனச் சொந்த முகவரி அற்று வாழும் அவலம் நீடிக்கிறது. இந்த அநீதி இலங்கையின் ஆட்சியாளர்களதும் தோட்ட நிர்வாகிகளதும் மனங்களை இன்னும் அசைக்கவில்லை; இலங்கையின் ஏனைய இனங்கள், மலையக மக்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முகவரியற்ற வாழ்வையோ அதனால் அவர்கள் முகங்கொள்கின்ற நெருக்கடிகளையோ இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை; இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடரும் பிற்படுத்தப்பட்ட இவ்வாழ்க்கை நிலைமை மனிதஉரிமை காவலர்களது கண்களை இன்னும் உறுத்தவில்லை. இவற்றையிட்டு மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆளுந் தரப்புகளும் மலையக மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்ட - சொல்லிக் கொள்ளும் அரசியல் வாதிகளும் முதலில் வெட்கப்பட வேண்டும். மூன்றாவது நூற்றாண்டின் விடியலில் கால்பதித்துள்ள அம்மக்கள் இந்நூற்றாண்டிலேனும் இப்பிரச்சினையிலிருந்து விடுபட்டு, இலங்கையின் முழுப் பிரஜையாக வாழ்வதை உறுதிப்படுத்தல் அவசியமானதாகும்.
நன்றி - வையம் நவம்பர். 2024